மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை – 22.02.1998
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்
ஒங்காரகுடில் அன்பர்கள் குருநாதர் திருவடியை பணிந்து “ஐயா, ஆசான் பெருமையை எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.
ஆசான் பெருமையை அளவிட முடியாது. ஆசான் பெருமையை அறிந்து கொள்வதென்பது சின்ன விசயமல்ல. ஆசான் பெருமை மிகப்பெரிய பெருமைக்குரிய ஒன்று.
மகான் திருவள்ளுவரே சொல்வார்,
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் 22
துறவு மேற்கொள்வது என்பது சாதாரன் விசயமல்ல. இந்த உடம்பு காமத்தால் வந்தது. உடம்பில் உள்ள பல லட்சம் கோடி அணுக்கள் அனைத்திலும் காமம்தான் இருக்கிறது. . இந்த உடம்பு முழுவதுமே காமம். இப்படிப்பட்ட காம தேகத்தில் இருக்கின்ற நாம், ஆசன பெருமையை எப்படி அறிய முடியும்?
மனிதனுக்குதானே துறவு? ஆமாம். துறவு என்பது பெண்ணுக்கு உரிமையா? அல்லது ஆணுக்கு உரிமையா? என்றால் இரண்டு பேருக்கும் உரிமைதான். இதை யாரும் மறுக்க முடியாது.
ஆசான் பெருமையை அறிந்தவர்கள்தான் துறவு மேற்கொள்ள முடியும். ஆசான் பெருமையை துறந்தார் பெருமை துணைக்கூறின் என்று திருவள்ளுவப்பெருமானே சொல்கிறார்.
துணைக்கூறின் என்றால் இணையானது என்று அர்த்தம்.
துணைக்கூறின் – பேசுதல், ஞானிகளின் பெருமையைப் பற்றி பேசுதல்.
வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று – இது நாள் வரையிலும் பிறந்து இறந்தவர்களை கணக்கு எடுத்தார் போலும் என்றார். அப்பப்பா! அவர்கள் பெருமையை பேசவே முடியாது. அவ்வளவு பெருமையா? பேசவோன்னாப் பெருமைக்குரியவர்கள் அவர்கள்.
பாலில் நெய் இருக்கிறது என்பதை பார்த்தால் தெரியுமா? தெரியாது.
பாலில் எப்படி நெய் இருக்கிறது? அதைக் காய்ச்சி, உறைக்கு ஊற்றி, பிறகு கடைந்து, வெண்ணையை எடுக்க வேண்டும். அப்படி எடுத்த வெண்ணையை உருக்கினால் அது நெய் ஆகும்.
மனிதனுக்குள்ளேயே, ஒரு அதிஅற்புத சக்தி இருக்கிறது. இந்த அற்புத சக்தியை எப்படி பிரித்து எடுப்பது? அதுதான் பெருமை.
உடம்பு என்று சொல்லப்பட்ட தூலதேகம் பால் போன்றது. அதனுள் சூட்சும தேகம் என்பது நெய் போன்று இருக்கிறது. பாலைக் காய்ச்சி, உரைக்கு ஊற்றி, கடைந்தால் வெண்ணை வருகிறது. அந்த வெண்ணையை உருக்கினால் நெய் வரும். இப்படி பிரித்து எடுத்துவிடலாம்.
இந்த புற உடம்பு என்பது பால் போன்றது. புற உடம்பிலிருந்து. உள்ளுடம்பை பிரித்தால்தானே உள்ளுடம்பாகிய நெய் கிடைக்கும்.
காலையில் கறந்த பால், மத்தியானத்திற்குள் கெட்டுப்போகிறது. பாலை காய்ச்சி உரைக்கு ஊற்றி வைத்தால், மறுநாள் வரைக்கும் நன்றாக இருக்கும், கெட்டுப்போகாது. கொஞ்சம் புளிப்பு இருக்கும். அதை கடைந்து வெண்ணையாக எடுத்து வைத்தால், பத்து நாளைக்கு கெடாமல் இருக்கும், வெண்ணையை காய்ச்சி உருக்கி, நெய்யாக்கினால் ஒரு வருடத்திற்கு இருக்கும். இது எவ்வளவு பெரிய மாற்றம்?
நமது தேகம் பால் போன்றது, கெட்டுவிடும். இதை யோகிகள் பிரிக்கிறார்கள். ஓயதற்கு தலைவனுடைய ஆசி இருக்க வேண்டும், புருவமத்தியாகிய ரகசியத்தை அறிந்த மக்கள்தான் பிரிப்பார்கள். அவர்களுக்குதான் பிரிக்கும் வல்லமை உண்டு. இதை மகான் திருமூலர் சொல்வார்,
காயப்பை ஒன்று சரக்கு பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
-திருமந்திரம் – உடலில் பஞ்சபூதம் – கவி எண் 2122
சரக்கு எவ்வளவு உள்ளது என்று கேட்டார். எழுபத்திரண்டாயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன. நரம்பு, எலும்பு, தோல், தசை இப்படியெல்லாம் இருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
தூல தேகத்தையும், சூதகம தேகத்தையும் சேர்த்துதான் எல்லாம்வல்ல இயற்கை அன்னை படித்திருக்கிறாள். ஞானிகள் தூலதேகத்தையும் சூட்சும தேகத்தையும் பிரித்துவிட்டார்கள்.
காயப்பை ஒன்று சரக்கு பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
மாயப்பை என்பது இந்த புறஉடம்பு, தூலதேகம், மற்றுமோர் பை என்பது சூட்சும தேகம். புற உடம்பாகிய தூல தேகத்தில் கள்வன் இருக்கிறான், வஞ்சகன் இருக்கிறான். அவன்தன காமுகன், அவன் புறப்பட வேண்டுமல்லவா? எப்படி? யார் தயவு கொண்டு புறப்படுவது?
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
மாயப்பை மயங்கியது. கள்வன் புறப்பட்டான்.
கள்வன் என்பது அசுத்த தேகம். அசுத்த தேகத்தைப் பற்றி அறிந்து, அதை ஆசான் தயவோடு நீக்கினால், அந்த அழுக்கை நீக்கினால். மாயப்பை மண்ணா மயங்கியவாறே என்றார்.
இன்றுவரை துறவு மேற்கொண்டவர்களில் ஞானிகள் மட்டும்தான் தப்பித்தார்கள்.
துறவு மேற்கொண்ட மற்றவர்கள், பக்தி செலுத்தியிருப்பார்கள். ஆனால தப்பிக்க முடியாது.
பக்தி அவசியம்தான். அந்த கள்வன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நிறைய ஆராய்ச்சி வேண்டும். இதை தலைவன்தான் இவனுக்கு சொல்லித் தர வேண்டும். இது உணர்த்தக்கூடிய ஒன்று. கள்வனை அறிய ஞானிகள் திருவடியைப் பற்ற வேண்டும்.
யார் திருவடியை பற்றுவது?
பற்றினால் அது ஞானிகளின் திருவடியாக இருக்க வேண்டும்.
துறவு மேற்கொண்டு வெற்றி கண்ட ஞானிகளின் திருவடியைப் பற்றி அவர்களது ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருமந்திரம் அருளிய மகான் திருமூலதேவர் போன்ற பெரிய மகான்களின் திருவடிகளைப் பற்றி பூஜை செய்து அவர்களது ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறோம்.
இந்த உடம்பைக் கொண்டே நான் கடவுளை அடைவேன் என்று உடம்பையும் உயிரையும் அறிந்து துறவு மேற்கொள்ளுதலே துரத்தல் ஆகும். இவனே உடம்பையும், உயிரையும் அறிந்து துறவு மேற்கொண்டவன்.
எது துறவின் நோக்கம்? இந்த தேகத்தைக் கொண்டே, ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது.
இதற்கு என்ன உணவு? உப்பில்ல உணவு, இது சாதாரன விசயமல்ல! விகாரமற்ற தேகத்தைப் பெற வேண்டும். இதுவும் சாதாரண விசயமல்ல.
முதலில் அறுசுவையை துறக்க வேண்டும், அறுசுவையை ஒழிக்க வேண்டும். அறுசுவையை சாப்பிட்டால் உடம்பு கெட்டுப்போகும். அறுசுவையை ஒழித்தபிறகு எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்.
இந்த இரண்டையும் ஒழிக்க வேண்டும். அதற்குத்தான் துறவு மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் தலைவன்தான் செய்ய வேண்டும். யார் கற்றவரோ, யார் உண்மையை அறிந்தவரோ, அவருடைய ஆசியப் பெற வேண்டும். அவருடைய ஆசியைப் பெற்றால்தான் இந்த வாய்ப்பைப் பெற முடியும். இதை மகான் திருவள்ளுவர் சொன்னார்,
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்று பற்று விடற்கு.
-திருக்குறள் – துறவு – குறள் எண் 350
மகான் ராமலிங்கசுவாமிகளும் துறவு மேற்கொண்டவர்களுடைய பாதத்தைப் பற்றி கொள்ள வேண்டுமென்பார். இதை நமது சங்கம்தான் சுத்திக்காட்டும். நமது சங்கம் சுட்டிக்காட்ட கூடியவர்களுடைய திருவடிகளைப் பற்றினால்தான் நாம் அந்த நிலையை அடைய முடியும். அவர்கள்தான் பெருமைக்குரிய ஆசான். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களே மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவர்கள் ஆவார்கள்.
இனி பிறவாத ரகசியத்தை அறிந்தவர்கள்தான் பெருமைக்குரியவர்கள், அவர்களே பெரியோர்கள் ஆவார்கள். அவர்களை புரிந்து கொண்டு நாம் பூஜை செய்ய வேண்டும். இதை மகான் ராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்க முடியாதே
சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்திய மீதேன் மொழி கொண்டுலகீர்
பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்டருளும்
பலப்பற்றே பற்றுமினோ என்றும் இரவீரே.
-திருஅருட்பா ஆறாம் திருமுறை – ஞான சரியை – கவி எண் 24
துறவு மேற்கொண்டவர்கள் சொல்லக்கூடிய கருத்துகளையும், ஞானிகளுடைய, பெரியோர்களுடைய பெரயுமையையும் பேசிக்கொண்டிருக்கிறோம். மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் என்பார்.
ஆனால் மகான் திருவள்ளுவர் சொல்லும்போது கூட,
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை
-திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 36
அங்கே, மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ என்றார். சிறிது என்று சொல்வதால், பிறகு என்று நினைக்காதே. இளமையாக இருக்கும்போதே ஒவ்வொரு நாளும் முயற்ச்சிக்க வேண்டும். இதையே மகான் திருவள்ளுவப்பெருமானும் சொல்வார்,
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அக்தொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 38
ஆற்றுதல் – நன்றாற்றுதல்
இந்த கருத்துகள் அனைத்தும் முற்றுப்பெற்ற முனிவர்கள் சொன்னது. பெரியோர்கள் தங்களுடைய அனுபவத்தை சொல்லியுள்ளார்கள். இங்கே, மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ என்றார். மரணம் வரும், காலதாமதம் செய்யக் கூடாது, பிறகு என்ற நினைபிற்கே இங்கே இடமில்லை.
தொடர்ந்து பூஜை செய்ய வேண்டுமா? என்றால் ஆமாம், பூஜை செய்துதான் ஆக வேண்டும். வேறு வகையான கவனம் இருக்க முடியாது. எப்போதும் இறைபணியில் நிற்க என்பார்.
தினமும் காலையில் பூஜை செய்ய வேண்டும் என்பது சட்டம். நாளை என்னும் பேச்சே இருக்கக் கூடாது என்பார். மகான் ராமலிங்கசுவாமிகள் தனது அருட்பாவில் மற்றறிவோம் என்று சொல்வார். அங்கே மகான் திருவள்ளுவப்பெருமான் வீழ்நாள் படாஅமை என்று தனது திருக்குறளில் கூறுகிறார்.
பிறகு என்ற பேச்சே இருக்கக்கூடாது. அவர் வீழ்நாள் படாஅமை என்றார். வீழ்நாள் படாஅமை என்றால் எதை ஐயா நோக்குவது? என்றான்.
எதை நோக்கிப் போவது? யார் ஒருவர் பாலை நன்றாகக் காய்ச்சி, அதை உரைக்கு ஊற்றி, பிறகு கடைந்து வெண்ணையாக்கி நெய்யாக உருக்கினாரோ அவரை நோக்கிப் போக வேண்டும் என்றார்.
அவர் யார்? அவர்கள் ஞானிகள்தான். அவர்கள் பிரித்தவர்கள். நெய்யை ஓராண்டு வைத்துக் கொள்ளலாம், பிரச்சனை இல்லை, இரண்டு ஆண்டும் வைத்துக் கொள்ளலாம். என்ன லேசாக வாடை அடிக்கும், ஆனால், பாலை காலையில் காய்ச்சி, மதிய வரை வைக்க முடியாது அல்லவா?
மேலான ஞானிகள் திருவடிகளை பிடித்து நாம் கரையேறிக்கொள்ள வேண்டும். அவற்றை நோக்கிப் போக வேண்டும். பிறகு என்ற பேச்சே இருக்கக் கூடாது. மகான் ராமலிங்கசுவாமிகளும், மகான் திருவள்ளுவரும் இடையே சொல்கிறார்கள்.
தினமும் பூஜை செய்கிறோம். யாரை நோக்கி?
அறுசுவையை வென்றவர்.
காமத்தை வென்றவர்.
இயற்கையை வென்றவர்.
பொறாமையை, வஞ்சனையை வென்றவர்.
பேராசைக் கொடுமையை வென்றவர்.
அவரைநோக்கி பூஜை செய்கிறோம்.
எவ்வளவு நேரம் பூஜை செய்வது?
ஒரு நாழிகை, 24 நிமிடம் பூஜை செய்யலாம். “ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம” என்று பூஜை செய்ய வேண்டும். ஞானிகளெல்லாம் வென்றவர்கள். ஓம் அகத்தீசாய நம என்றோ, ஓம் திருமூலதேவாய நம என்றோ, ஓம் நந்தீசாய நம என்றோ, ஓம் அருணகிரிநாதா என்றோ சொல்லலாம். காலையில் 24 நிமிடம் சொல்கிறோம். மனம் லயப்படுகிறதோ இல்லையோ என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறோம், ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முற்றுப்பெற்ற முனிவர்களி தினமும் காலையில் பூஜை செய்ய வேண்டும் என்ற சட்டத்திற்கு உட்பட வேண்டும். மகான் ராமலிங்கசுவாமிகள் மற்றறிவோம் எனச்சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால் என்றார். “சிறிது என்று சொல்லியிருக்கிறார், பெரிது என்று சொல்லவில்லை. நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் என்று நினைக்காதே.
தினமும் பெரியோர்களாகிய மகான் ராமலிங்கசுவாமிகளையோ, மகான் மாணிக்கவாசகரையோ, மகான் அருணகிரிநாதரையோ, மகான் பட்டினத்தாரையோ பூஜை செய்ய வேண்டும். அப்படி தினமும் பூஜை செய்தால் அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள். பாலில் நெய்யை பிரிப்பது போன்று, பிரித்து விடுவார்கள். குணக்கேடுகள் முதலில் பிரியும்.
ஆசான் அகத்தீசர், மகான் திருமூலதேவர், மகான் காலாங்கிநாதர், மகான் நந்தீசர் போன்றவர்கள் மிகப் பெரியவர்கள். அவர்களுடைய நாமத்தைச் சொல்கிறோம், அவர்கள் பெரியோர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நாமத்தை சொல்ல வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு வர வேண்டும். அந்த உறுதிப்பாடு தினமும் இருக்க வேண்டும்.
காலை, மாலை நிச்சயமாக ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். உச்சிக்காலம், இரவு பன்னிரண்டு மணி முதல் ஒரு மணிக்குள் பூஜை செய்தே ஆக வேண்டும். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது என்பதை “எனச்சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால்” என்று மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார். இப்படி சொல்வதைப் பார்த்தே, மகான் ராமலிங்கசுவாமிகள் எப்படி பூஜை செய்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இருபத்துநான்கு மணி நேரமும் பிராணயாமம் செய்ய வேண்டுமா? அப்படிச் செய்ய வேண்டுமென்று யார் சொன்னது? செத்துப்போய் விடுவான். பூஜை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம்.
சிலபேர் மணிக்கணக்காக பூஜை செய்துவிட்டு, விரைவாக பலனை எதிர்பார்ப்பான். விரைவாக எதிர்பார்த்தாலும் ஆபத்து, அதிக நேரம் பிராணயாமம் செய்தால் அதுவும் ஆபத்து.
மனம் லயப்பட வேண்டும். மனதில் சாந்தமில்லையா? கொஞ்சம் வெளியே சென்று வர வேண்டும். அப்போது மனம் லயப்படும். அந்த ஐந்து நிமிடம் செய்கின்ற நாமஜெபம்தான் காலத்தால் செய்யக்கூடிய பூஜைகள் ஆகும். இவைகள் எங்கள் அனுபவத்தில் உள்ளது.’
தொடர்ந்து பிராணாயாமம் செய்பவர்கள், தொடர்ந்து மணிக்கணக்கில் பூஜை செய்பவர்களெல்லாம் விரகத்தி அடைந்து தோற்றுப்போவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகையால் மூச்சைக் கட்டக் கூடாது, மூச்சை கட்ட வேண்டும் என்று ஒருவன் சொன்னால்? அவனிடம் பேச்சே வைத்துக் கொள்ளாதே.
மனது லயப்படவில்லையா? மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டு ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்? ஏன் காலத்தை வீணாக்குகிறாய்? ஏன் மனதை குழப்பிக் கொண்டிருக்கிறாய் என்பதும் ஆசான் ஆசி இருந்தால் உணர்த்தப்படும்.
கால் வலிக்கிறதா? எழுந்து போ! உட்கார்வதற்கு நல்ல சமமான இடமாக இருக்க வேண்டும். வெண் துகில் (வெள்ளை துணி) இருக்க வேண்டும். அங்கே கொசு, மூட்டைப்பூச்சி இருக்கக்கூடாது, துர்நாற்றம் இருக்கக்கூடாது, புகை இருக்கக்கூடாது, அமைதியான இடமாக இருக்க வேண்டும், பத்து நிமிடம் உட்கார்ந்து நாமத்தைச் சொல்.
ஓம் அகத்தீசாய நாம என்று சொல். ஓம் திருமூலதேவாய நம என்று சொல். பத்து நிமிடம் உட்கார்ந்து நாமத்தை சொன்னால் மனம் லயப்படுகிறதா என்று பார். லயப்படாவிட்டால் வெளியே சென்று வா! இல்லை, பசியா? டீ சாப்பிட்டுக்கொள். இரண்டு பழம் சாப்பிட்டுக்கொள். இப்படி இருக்க வேண்டும். ஒரு குறையும் இருக்கக்கூடாது. கால் வலி இருந்தால் எழுந்து போய்விட வேண்டும் என்பது எங்களின் அனுபவம்.
பத்மாசனத்தில் உட்கார்ந்தபின், எழும்போது காலை எடுப்பதற்கு பக்கத்தில் உள்ளவனை கூப்பிடுவதாக இருந்தால் என்னாகும்? இவன் பூஜையா செய்கிறான்? பூஜை செய்யவில்லை. ஆக அனுபவப்பட்டவன் சொல்ல வேண்டும்.
ஆசான் திருவள்ளுவப்பெருமான் வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் என்று சொல்கிறாரே என்றால்? ஆமாம் சொன்னார்தான். எதற்காக சொல்லியிருக்கிறார்? நீ குற்றாலம், கொடைக்கானல், ராமேஸ்வரம், காசி என்று ஊர் ஊராக சுற்றிவிட்டு வரலாம் என்று நினைக்கிறாய்? காசிக்கு போனாலும், இராமேஸ்வரம் போனாலும் ஒன்றுக்கும் ஆகாது. ஏதோ மன ஆறுதலுக்கு சென்று வரலாம். அதற்காக நான் போகக்கூடாது என்று சொல்லவில்லை. ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். ஆனால் நாட்களை வீணாக்காமல் அங்கேயும் உட்கார்ந்து பத்து நிமிடம் நாமத்தை சொல்ல வேண்டும்.
நாங்களும் பழனிக்கு சென்றிருக்கிறோம். பழனிக்கு சென்று அங்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே பத்து நிமிடம் “ஓம் சரவண பவ”, ஓம் அகத்தீசாய நம” என்று ஞானிகள் நாமத்தை சொல்லுங்கள். பழனிக்கு சென்று வந்தது போன்றும் இருக்கும், அங்கே பூஜை செய்த பலனும் இருக்கும்.
இருபத்துநான்கு மணி நேரமும் பூஜை செய் முடியாது. மன ஆறுதலுக்காக ஸ்தலங்களை சுற்றிப் பார்க்கலாம். பழனி, திருப்பதி போன்ற ஸ்தலங்களுக்கு மன ஆறுதலுக்காக போகலாம். நடந்தே கோவிலுக்கு போகின்றவர்கள் இன்னும் கஷ்டப்படுவார்கள். சொகுசு வண்டியில் கோவிலுக்கு போகலாம்.
திருப்பதி, பழனிக்கு சென்றிக்கிறோம். அங்கேயும் உட்கார்ந்து பத்து நிமிடம் தியானம் செய்திருக்கிறோம். கோவில்களுக்கு சென்ற அந்த நாட்களையும் வீணாக்கவில்லை, அங்கே காட்சிகளையும் கண்டோம், நாமஜெபமும் செய்தோம். திருப்பதியில் சிறந்த காட்சிகள் உண்டு. எல்லாம் இயற்கைக் காட்சிகள் இருக்கிறது, பார்த்துவிட்டு வருகிறோம்.
குற்றாலத்திற்கும் சென்றிக்கிறோம், அங்கே கோவிலில் உட்கார்ந்து பத்து நிமிடம் நாமத்தை சொல்லியிருக்கிறோம். எங்கே சென்றாலும் காட்சிகளையும் காணலாம், கருத்தையும் ஊன்றிப் பார்க்கலாம்.
தீர்த்தகிரி என்ற மலைக்கு சென்றோம். அங்கு ஒரு மறைவான இடத்தில் உட்கார்ந்து ஐந்து நிமிடம் நாமத்தை சொன்னோம். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளையும் கண்டோம். அதே சமயத்தில் அங்கே உட்கார்ந்து நாமத்தையும் சொன்னோம். அங்கே நேரத்தை நங்கள் வீணாக்கவில்லை, காட்சியையும் கண்டோம், கருத்தையும் செலுத்தினோம்.
நாட்களை வீணாக்கக் கூடாது என்று மகான் திருவள்ளுவர், மகான் ராமலிங்கசுவாமிகள் சொன்னதற்கேற்ப பத்து நிமிடம் நாமத்தைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். அதே சமயத்தில் புறவழிபாடுகள் எல்லாம், ஒரு ஆறுதலுக்காக தவிர, கடவுளை அடைய துணையாக இருக்காது.
ஞானிகள் தூலத்தின் துணைக்கொண்டு சூட்சுமத்தை ஆக்கம் பெறச்செய்திருக்கிறார்கள். புறஉடம்பாகிய இருள்தேகத்தை, மருள்தேகத்தைக் கொண்டு அருள் தேகத்தைப் பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பெரியோர்கள்.
வாசி வசப்படுதல், உடம்பைப் பிரித்தல், தூல தேகம் துணையில்லாமல் சூட்சுமதேகம் ஆக்கம் பெறாது என்பதை அறிந்து, தூலதேகத்தையும் சூட்சும தேகத்தையும் பிரிக்க வேண்டும். இந்த உடம்பைக் கொண்டுதான் அந்த உடம்பை ஆக்கம் பெறச்செய்ய வேண்டும். பெரியோர்களின் பெருமை இப்படித்தான் இருக்கிறது. தூலதேகம் துணையில்லாமல் நிச்சயமாக சூட்சுமதேகம் ஆக்கம் பெறாது.
ஞானிகளுடைய நாமத்தை சொல்ல நாம் தாமதிக்கக்கூடாது. மகான் ராமலிங்கசுவாமிகளும், மகான் திருவள்ளுவப்பெருமானும் இதையே சொல்கிறார்கள். “பிறகு அல்லது நாளை என்று நினைக்காதே, செய்ய வேண்டிய அறப்பணிகளையும், செய்யக்கூடிய பூஜையையும் செய், அறப்பணி செய்வதற்கு நாளை என்ற பேச்சே இருக்கக்கூடாது” என்று ஞானிகள் சொல்வார்கள். இதுதான் பெரியோர்களுடைய இயல்பு
ஆசான் திருவள்ளுவர்,
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 36
இப்பொழுது இளமையாக இருக்கிறோம், குழந்தைகள் எல்லாம் சிறு பிள்ளைகளாக இருக்கிறது, முதுமை வந்தபின் பார்க்கலாம் என்று நினைக்காதே. முதுமை வந்தால் செயல்படமுடியாமல் போகும்.
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.
நாளை என்று நினைக்காதே, இப்பொழுதே செய்து கொள் என்று ஞானிகள் சொல்வார்கள். இதெல்லாம் பெரியோர்களுடைய கருத்துகள்.
பொன்றும்கால் பொன்றாத் துணை – நாம் நலிந்து போவோம், நமக்கு முதுமை வரத்தான் செய்யும், சாவு வரத்தான் செய்யும். நாம் செய்த புண்ணியம் நமக்கு துணையாக இருக்குமென்று சொல்வார்கள். இது பெரியவர்களுடைய சொல்.
நீ செய்த புண்ணியம் உனக்குத் துணையாக இருக்கும். பிறகு என்று நினைக்காதே. என்ன காரணம்? நேற்று நல்லபடி இருந்தான். இன்று செத்துப்போய் விட்டான் என்பார்கள்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
திருக்குறள் – நிலையாமை– குறள் எண் 336
நேற்று நல்லபடி இருந்தான், இன்று இறந்துவிட்டான் என்பது உலக நடையாக இருக்கும், நிலையில்லாத வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். இத்தனைஆண்டுகள் இருப்பேனென்று யாரும் சொல்லமுடியாது. நிலையில்லாத வாழ்க்கையைப் பெற்ற நாம் நிலையான ஒன்றை செய்து கொள்ள வேண்டும்.
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333
நிலையில்லாத செல்வத்தைப் பெற்றிருக்கிறாய். ஆகவே நிலையான காரியத்தை செய்துகொள் என்று முதுபெரும் தலைவன் மகான் வள்ளுவப்பெருமான் தனது குறளில் சொல்லியிருக்கிறார். இதுதான் பெரியோருடைய இயல்பு. இதுதான் அவர்களுடைய சொற்கள்.
அறப்பணியும் செய்ய வேண்டும், அதே சமயத்தில் பூஜையும் செய்ய வேண்டும். அறப்பணி செய்ய மனம் வரவில்லையே? என்றான். கையில் பணம் இருக்கிறது. ஆனால் அறப்பணி செய்ய மனம் வரவேண்டுமல்லவா? கையில் பணம் வந்ததே புண்ணியத்தால்தான். முன் செய்த நல்வினையின் காரணமாக செல்வம் வந்திருக்கிறது. செலவு செய்ய வேண்டுமல்லவா? பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பான். பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு வேண்டுமென்று அறியாமை உள்ளவர்கள் எண்ணுவார்கள்.
பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறாயே? நாளைக்கு நீ மூச்சை விட்டுவிட்டால் உன்னால் ஒன்றுமே செய்யமுடியாது. இவன் இறந்துவிடுவான், இவனுடைய பிள்ளைகள் அவரவர்கள் வினைக்கு ஏற்றாற்போல் இருப்பார்கள். இப்படியெல்லாம் பெரியோர்கள் சொல்வார்கள்.
நீ அறப்பணி செய்தால் உன் சந்ததிக்கே பயன்படும். பிள்ளைகளுக்கு சேர்க்கக்கூடியது பொருளா? அல்லது புண்ணியமா? புண்ணியம் செய்பவர்களை நிச்சயம் அவர்களுடைய பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்பது ஞானிகளுக்கு தெரியும்.
பெரியோர்கள் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். பிள்ளைகளுக்கு சேர்ப்பது புண்ணியம். அந்த புண்ணியம் சந்ததிகளுக்கே நன்மை தரும் என்றார். வெறும் பொருளை மட்டும் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் வீணாகப்போகும். அதனால் பெரியோர்கள் புண்ணியத்தை செய்தார்கள். அது நிச்சயம் செல்வத்தை உண்டாக்கும். புண்ணியத்தினால் உடல் ஆரோக்கியத்துடனும், தெளிவான அறிவுடனும், நோயில்லாதும் இருக்கிறார்கள்.
சந்ததிகளுக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறது என்றார். இவைகளெல்லாம் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள் சொன்ன கருத்துகள். “நீ செய்யக்கூடிய புண்ணியம் நிச்சயம் உன் பிள்ளைகளுக்கும் துணை இருக்கும்” என்றார். இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள், இருக்கும்போதே அறப்பணி செய்துகொள்வார்கள்.
ஏன் அறப்பணி செய்ய வேண்டும்? பிள்ளைகளுக்காகதான் செய்கிறேன் என்றான். ஓகோ! பிள்ளைகளுக்காகவே செய்யும் அறப்பணியா? ஆமாம்! எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பயன்படும் என்பதால்இதைச் செய்கிறேன் என்றான்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
திருக்குறள் – நடுவு நிலைமை – குறள் எண் 114
தகுதி உள்ள மக்களா இல்லையா என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். புண்ணியவான்களுடைய பிள்ளைகளுக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டு லட்சம் அல்லது நான்கு லட்சம் சேர்க்க வேண்டுமென்று நினைக்கும்போது, அவனைப் பார்த்து பெரியோர்கள் சிரிப்பார்கள். எத்தனை ஆனது நீ அவர்களை காப்பாற்ற முடியும்? என்று எள்ளி நகைப்பார்கள் பெரியோர்கள்.
ஞானிகளுடைய ஆசியைப் பெற்ற மக்களுக்கு செல்வம் குறையவே குறையாது,குறைவதற்கு நியாமே இல்லை. புண்ணியவான்களுக்கு பொருளும் அருளும் சேரும். அதே சமயத்தில் சந்ததிகளும் புண்ணியம் பெரும். அவர்களுடைய செல்வம் குறையவே குறையாது.
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே .
திருமந்திரம் – சிவ பூசை – கவி எண் 828
தலைவன் ஆசி இருக்கிறது. செல்வநிலை பெருகவேண்டும். புண்ணியத்தால் செல்வம் பெருகுகிறது. செல்வம் குறையவே குறையாது. பூஜை செய்தால் இவனுக்கும் இவனுடைய சந்ததிகளுக்கும் நன்மை உண்டு என்றார்.
பூஜை செய்தால் ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். பெரியோராகிய ஆசான் அகத்தீசரையோ, மகான் நந்தீசரையோ பூஜை செய்ய வேண்டும்.
“பிள்ளைகளெல்லாம் சின்னஞ்சிறுசாக இருக்கிறது ஐயா! என்னிடம் இருந்த பணத்தையெல்லாம் நான் அறப்பணிக்கு செலவு செய்திருக்கிறேன். நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஆசானிடம் கேட்கிறான்.
“நான் உன்னையும் காப்பாற்றுவேன். உன் பிள்ளைகளையும் காப்பாற்றுவேன். அவன் பேரப்பிள்ளைகளையும், உன்னுடைய சந்ததிகளையே காப்பாற்றுவேன்” என்று ஆசான் சொல்வார்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
-தனிப்பாடல்
நெஞ்சார – ஓம் அகத்தீசா, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீஸ்வரா, ஓம் அகத்தீஸ்வர” என்று எவன் ஒருவன் மனமார, மனம் பொருந்தி தியானம் செய்கிறானோ, அவன் ஆசானுடைய ஆசியை பெறுகிறான்.
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை – நீ அறப்பணிக்கு செலவு செய்வது வீண்போகாது, நீ செய்த பூஜை வீண்போகாது என்றார். இதுதான் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்கின்ற கருத்து. பெரியோராகிய மகான் அகத்தியரை பூஜை செய்தால், செல்வம் பெருகும், சந்ததிகளுக்கும் நன்மை உண்டாகும், அருள் பலமும் உண்டாகும். ஆகவே அருள் பலமும், புண்ணிய பலமும் உன்னுடைய சந்ததிகளுக்கு கிடைப்பதற்கு தடையே இல்லை.
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை – இவனுக்கு மட்டுமல்ல, இவனைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கும், அவர்களுடைய இருபத்தொரு தலைமுறைக்கும் ஞானிகள் துணை இருப்பார்கள் இந்த உண்மையை அறிகின்ற அறிவுதான் சிறப்பறிவு.
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட் குருவை அகத்துள் வைப்பாம்
அவர் யுக யுகமாக இருக்கக்கூடியவர். யுக யுகம் என்றால் ஒரு யுகமல்ல. யுகம் யுகமாக இருக்கக்கூடியவர் ஆசான் அகத்தியர். யுக யுகமாக – எண்ணிலடங்கா கோடி யுகங்கள் எப்போதும் நிலைத்து நின்று அருள் புரியக்கூடியவர் ஆசான் அகத்தியர்.
இந்த ஜென்மத்தில் ஆசான் அகத்தியரை பூஜை செய்து, “அடியேனுக்கு செல்வநிலை பெருக வேண்டும், அடியேன் உங்களது ஆசியைப் பெற வேண்டும். என் சந்ததிகளுக்கு நீரே துணையாக இருக்க வேண்டும், அடியேனுக்கு மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்க வேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்” என்று
ஆசானை வணங்கி கேட்டு இருபத்துநான்கு நிமிடம் நாமத்தைச் சொன்னால் ஒன்பது கோடி சித்தர்களும் பார்ப்பார்கள்.
“அன்புச்சீடன்! எனது அன்பு மகன்!” என்று ஒன்பது கோடி ஞானிகளும் பார்க்கிறார்கள். ஆசான் அகத்தீசருடைய நாமத்தைச் சொல்கின்ற மக்களை, ஒன்பது கோடி ஞானிகளும் மகனாக, அன்புச்சீடனாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு அந்த சீடனுக்கு அல்லது தொண்டனுக்கு இருக்கிறது.
ஆகவே ஆசான் அகத்தியர் நாமத்தைச் சொல்லிய யாரும் வீண்போக மாட்டார்கள். அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும், சொல்லிக் கொடுத்தால்தான் புரியும். நீ பூஜை செய்வது வீண் போகாது. கையில் உள்ள பணத்தை இழந்துவிடுவோமென்று நினைக்காதே. பணத்தை இழந்ததுபோல் நீ பிரம்மை கொள்கிறாய். நீ இழக்கவே இல்லை, நிச்சயம் நன்மை தரும்.
“நீ பூஜை செய்தால் வீண் போகாது, சந்ததிகளுக்கும் துணை இருக்கும்” என்று பெரியோன் சொல்ல வேண்டும், பெரியோர்களிடம் அணுகும் முறையை இப்படி சொல்ல வேண்டும். இதுதான் பெரியோர்கள் செயல்.
எப்படி பூஜை செய்வது? என்று கேட்க வேண்டும்.
யாரை பூஜை செய்வது? என்று சொல்ல வேண்டும்.
பூஜை செய்தால், ஆசான் திருமூலதேவரை, மகான் புஜண்டமகரிஷியை, மகான் காலங்கிநாதரை, மகான் போகமகாரிஷியை, மகாஞ் கருவூர்முனிவரை பூஜை செய்ய வேண்டும்.
மகான் திருமூலதேவர் நடந்தாலே மலையெல்லாம் பொடிபடும் என்று சொல்வார் மகான் போகமகாரிஷி. ஆசான் அகத்தியர் முதல் அனைத்து ஞானிகளும் வல்லமையுள்ளவர்கள். அனைவரும் பெரியோர்கள். அனைவரும் பாலிலிருந்து எடுத்த வெண்ணையை கடைந்து நெய்யைப் பிரித்தவர்கள். என்றைக்கும் கெடாத தன்மை உள்ளவர்கள் ஞானிகள்.
என்ன காரணம்?
உடம்பிலுள்ள அசுத்தத்தை நீக்கியவர்கள். அசுத்தத்தை நீக்கியதால் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள்தான் பெரியோர்கள். ஆகவே, அவர்கள் நமாத்தைச் சொல்லி தினமும் அவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். அவர்களிடம் என்ன வேண்டுகோள் வைக்க வேண்டும்?
அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேனுக்கு செல்வநிலையும் பெருக வேண்டும். என் சந்ததிகளும் நல்லபடி இருக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். இதுதான் வேண்டுகோள். ஆனாலும் நீ கேட்க வேண்டாம், அவர்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார் அல்லவா? உன்னுடைய குழைந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து உன்னை மகிழும்படியாக செய்துவிட்டு, “மீண்டும் என்னை அழைத்ததின் நோக்க என்ன? என்று கேட்பார்.
பெரியோருடைய இயல்பு எப்படி இருக்கும்? என்று கேட்டான்.
ஒருவன் “என்ன விரும்பிகிறான்?” என்று கேட்டு அவன் விரும்பியவற்றை செய்வார். இதுதான் பெரியோர்களுடைய இயல்பு.
ஒரு சக்கரவர்த்தி “என்ன வேண்டும்?” என்று ஒரு ஏழையிடம் கேட்டான்.
அந்த ஏழை கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்துவிடுவான். இதுபோன்ற ஆயிரம் கோடி சக்கரவர்த்திகளுக்குத் தலைவன் ஆசான் அகத்தியர்.
பிறகு “என்ன வேண்டும்?” என்பார்.
பிள்ளைகளுக்கு நல்லபடி திருமணம் ஆக வேண்டு, கல்வி வேண்டும். என்னிடம் போதிய வசதி இல்லை. இப்போதெல்லாம் இருபது, முப்பது பவுன் நகை கேட்கிறார்கள். என்னிடம் வசதி இல்லை” என்று ஆசானிடம் கேட்டல், “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பார்.
சொந்த வீடு வேண்டும்,
அதை நாங்கள் கட்டித் தருகிறோம்.
கௌரவமான வாழ்கை வேண்டும்,
அதை நான்கள் தருகிறோம்.
எப்போது பார்த்தலும் ஊசி, மருந்தாக இருக்கிறோம் என்று ஆசானிடம் சொன்னால், நோயில்லாமல் இருப்பதற்கு ஆசான் ஆசி தருவார்.
எப்போதும் உன் திருவடியை பற்ற வாய்ப்பு வேண்டுமென்று கேட்டான்.
அதையும் நான் தருகிறேன். நீ என்னைக் கேட்டால்தான் தருவேன் என்று சொல்வார்.
எப்போதும் உன் திருவடியைப் பற்றுகின்ற வாய்ப்பு மட்டும் எனக்கு
கொடுக்க வேண்டுமென்று கேட்டான். ஓம் அகத்தீசாய நம என்று உங்களது நாமத்தைச் சொல்ல வாய்ப்பு வேண்டுமென்று கேட்டான்.
உன் நாமத்தைச் சொல்லி உன் திருவடியைப் பற்ற எனக்கு வாய்ப்பு வேண்டுமென்று ஆசான் கேட்டால், இந்த அண்டத்தை அசைத்துக் காட்டுகிறேன் என்பார்.
இப்படியெல்லாம் கேட்பதற்கு பெரியோர்கள் சொல்லித் தார் வேண்டும். என்ன கேற்பது? அதை எப்படி கேற்க வேண்டும். யாரை கேட்க வேண்டுமென்று சொல்லித்தர வேண்டும், எக்காலத்திலும் அருள் செய்யக்கூடிய ஆசான் அகத்தியரிடம் கேட்டு, ஆசி பெற வேண்டுமென்று, நாங்கள் சொல்லித்தர வேண்டும். இப்படியெல்லாம் பேசி விளக்கம் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.
பெரியோர்களின் பெருமையை நாங்கள்தான் பேசலாம். என்ன காரணம்? நான் ஆசி பெற்றவன். ஆசி பெற்றதனால் அப்படி சொல்கிறோம். ஞானிகளை பூஜை செய்யும்போது பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படியே மௌனமாக இருப்பார்கள். அவர்கள் பெரியவர்கள், அவர்களுடைய இயல்பு நமக்குத் தெரியாது. அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். “ஓம் அகத்தீசா” என்றால் மகான் புஜண்டமகரிஷியும், மகான் திருமூலதேவரும், மகான் போகமகாரிஷியும் பார்ப்பார்கள். தினம் தினம் நமது பூஜையை பார்த்து அருள் செய்யக்கூடியவர்கள் ஞானிகள்.
நிலை உயர்ந்தவர்கள் பெரியோர்கள். ஒரு ஜென்மத்தில் ஒரு நாள் பூஜை செய்தாலும் சரி, ஞானிகள் பார்ப்பார்கள்.
ஒருவன் என்பது வயது வரை வாழ்ந்தாலும் அவன் இறந்தவனே. என்ன காரணம்? தெளிவில்லாமல் இறந்திருப்பான்.
என்பது வயது வரை வாழ்ந்த அவன் ஒரு நாளாவது, “அகத்தீசா” என்று சொல்லியிருந்தால், அந்த வேண்டுகோள், ஒரு நாள் அவர் நாமத்தை சொன்னாலும் சரி, அவனை கடைசி வரையிலும் பார்ப்பார். அப்படி ஒரு பார்வை பார்ப்பார். தொடர்ந்து நாமத்தைச் சொல்கின்ற வாய்ப்பு இருந்தால், ஒரு முறை “அகத்தீசா” என்று நாமத்தை சொல்கின்ற வாய்ப்பு கிடைத்தால், ஆன்ம தட்டி எழுப்பப்படும் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
பெரியோர்கள் பெருமையை நானும் பேசமுடியாது, யாராலும் பேசமுடியாது. என்ன காரணம்? ஒரு பெருமை என்று இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட காலம்தான் அந்த பெருமை இருக்கலாம். ஒரு பொருள் தோன்றும். அது அந்தக் குறிப்பிட்ட காலத்தில்தான் பெருமையாக இருக்கும், பிறகு இன்னொரு பொருள் தோன்றும். அது பழமையாகி இந்தப் பொருள் பெருமையாக இருக்கும்.
ஒரு இயற்கைக் காட்சி, இங்கே கொல்லிமலையில் அருவி இருக்கிறது. அந்த காட்சிகளை பார்த்துவிட்டு குற்றாலம் சென்றால் இது பெருமையாக இருக்கும். ஒரு காட்சி பெருமையாக இருந்து அந்த காட்சிக்கு மாற்றமாக ஒரு காட்சி, மற்றொரு பொருள், புதிய இயல்பு அல்லது பரிணாம மாற்றம் ஏற்பட்டால், அது பெருமையாக இருக்கும். பிறகு அது வீழ்ச்சியடைந்துவிடும்.
உலகத்தில் இருக்கும் எந்த பொருளும், அது எந்த இசைக்கருவியாக இருந்தாலும் சரி, எத்தனைப் பாடலாக இருந்தாலும் சரி, எத்தனை அழகாக இருந்தாலும் சரி, ஒன்று தோன்றினால் அது அந்தக் குறிப்பிட்ட கலாத்தில் பெருமையாக இருக்கும், அடுத்த காலத்தில் வீழ்ந்துவிடும்.
என்றும் அழியாதவர்கள் ஞானிகள். மகான் வள்ளுவர் சொன்னார்,
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் – துறந்தவர்கள் பெருமையை ஒப்பிட்டுப் பேசுவது; துணை என்று சொன்னால், ஒப்பிட்டுப் பேசுவது.
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று – இறந்து பிறந்தவர்களை கணக்கு எடுக்க முடியாது போல, இந்த உலகத்தில் எத்தனையோ காட்சிகள், உலக அதிசயங்கள் உள்ளது. சீனப்பெருஞ்சுவர், மாஸ்கோ மணி போன்றவற்றை பெரிய பெரிய அதிசயம் என்பார்கள்.
இப்போது பார்த்தால், இது என்ன அதிசயம்? என்பான். இதைவிட அற்புதங்கள் தோன்றி இருக்கலாம். அற்புதங்கள் தோன்றத் தோன்ற, அவையெல்லாம் பழமையாகி இருக்கும்.
பெருமை என்றால் பெரியோர்களுடைய பெருமைதான் என்பார். காண்கின்ற காட்சிகள் அத்தனையும், பெருமைக்குரியதல்ல. சூரியன் பெருமைக்குரியதுதான். என்ன காரணம்? இந்த சூரியன்தான் நமக்கு 98.4 டிகிரி வெப்பமாக இருக்கிறது, பெருமைதான். ஆனால் இந்த சூரியனுக்கு எத்தனை கோடி ஆண்டுகள்? சூரியனும் காலத்தால் அழிந்து போகும். இதுவே பல லட்சம் கோடி ஆண்டுகளுக்குப் பின் அழிந்து போகும். அனால் ஞானிகள் அழியமாட்டார்கள். அதுதான் பெரும. அழியாத ஒன்றை அறிந்தவர்கள் பெரியவர்கள். இதை நாம் அறிந்து கொண்டோம்.
பெருமையானது எது? என்று கேட்டான். பெரியோரைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டு நமக்கு சொல்வார்கள். அவர்கள் புரிந்து கொண்டதை சொல்வதை நாம் பின்பற்ற வேண்டும், பெரியோர்களையும் அறிமுகப்படுத்துவார்கள் ஞானிகள்.
லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
– மகான் அழுக்கன்னர் – 6
இப்படியெல்லாம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. உலகமக்கள் அத்தனை பெரும் ஏதோ வழிபாடு என்னும் பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். பெரியோனாகிய ஆசான் அகத்தியர் போன்ற, ஞானிகளை வணங்கி, பேற்றை பெற வேண்டும் என்று நமது சங்கம்தான் சொல்கிறது. அதுதான் பேரு. அந்த பேற்றை பெறுவதற்கு நாமெல்லாம் ஆசான் அகத்தியரையும், மகான் திருமூலதேவரையும், மகான் நன்தீசரையும் பூஜை செய்து, ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஓம் அகத்தீசாய நம