சுப்பிரமணியர் கடவுளானது எப்படி


மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை – 25.01.1998
ஓம் அகத்தீசாய நம
     அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     மனிதனுக்குத்தான் கடவுளை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. கடவுள் யாரென்று கேட்டால், எல்லாம்வல்ல இயற்கைதான் கடவுள்.
     அந்த இயற்கையின் கூறுதான் மனிதனும் மற்ற ஜீவராசிகளும். மனிதன் கடவுளை அடைகிறான் என்பது இயற்கையை வெல்லுகிறான் என்பதுதான் அர்த்தம்.
     இயற்கையை வென்றவன் கடவுளாகிறான். இங்கு இயற்கைதான் எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.
     ஏன் பிறந்தான்? எப்படி வந்தான் என்பது இவர்களுக்கே தெரியாது. இயற்கை, மனித வர்க்கத்தினையும், மற்ற ஜீவராசிகளையும் தோற்றுவிக்கிறது.
     அந்த இயற்கை இவனை பிறப்பிப்பதும் வாழ்விப்பதும், அழ்விப்பதுமாக இருக்கிறது. இப்படியாக இருந்து கொண்டிருக்கிறது.
     இதை ஞானிகள், அதுவும் இந்தியாவின் தென்பகுதியில், தமிழ்நாட்டில்தான் இதைப்பற்றி சிந்தித்து முடிவெடுத்தான். தென்னாட்டில்தான் இப்படி ஒரு அற்புதம் இருக்குதய்யா!
     மனித உடம்பின் உள்ளே ஒரு அமைப்பு வைத்திருக்கிறான். நாம் உண்ணும் உணவு ஜீரணமாகி, சத்து அசத்தை பிரித்து சத்தை உடம்பு பெற்றுக் கொண்டு அசத்தை வெளியேற்றுகிறது. கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்திருக்கிறான். கரு தோன்றுவதற்கு காரணமாக ஆண் இருக்கிறான். பெண்ணிற்கு கருப்பை வைத்திருக்கிறான். இப்படியெல்லாம் செய்திருக்கிறான்.
     ஆனால் ஏன் சாகிறான்? என்று ஒரு கேள்வி கேட்டான். இவ்வளவு அற்புதமான செயலைப் படைத்துவிட்டு, ஜீவராசிகளுக்கு பசியையும் தந்து அதே சமயத்தில் தேவையான உணவும் கொடுத்து, இவ்வளவு பக்குவமாக வளர்க்கக் கூடிய இயற்கை அன்னை, பின் ஏன் சாகடிக்க வேண்டும்? ஏன் நம்மை சாகடிக்கிறது? சாவது நாமா? அல்லது இயற்கையா? என்றான்.
     பிறப்பதைப் பற்றித் தெரிந்தாலல்லவா சாவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இவனா சாகிறான்? இவனா பிறக்கிறான்? இவன் பிறப்பதற்கும் காரணமில்லை, வாழ்வதற்கும் காரணமில்லை, சாவதற்கும் காரணமில்லை.
     அப்ப ஏன் சாகனும்? சாவதற்கு இவனா காரணம்? சாகடிக்கிறது, இவனாக சாகவில்லை. பிறப்பதற்கு இவனா காரணம்? பிறப்பிக்கிறது, இவனாக பிறக்கவில்லை. வாழ்வதற்கு இவனா காரணம்? வாழ்விக்கிறது, இவனாக வாழவில்லை. ஆக இது ஒரு செயல். இந்த செய்யல தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த செயலை அறிந்தவர்கள், அதன் தொடர்ச்சியை தடுத்து நிறுத்திக் கொள்கிறான். இதை முன்னமே சொல்லியிருக்கிறோம்.
     அவன் அவள் அதுஎனும் அவை மூவினைமையின்    
      தோற்றிய திதியே ஒடுங்கி மலைத்துஉளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
              – மகான் மெய்கண்டதேவர் – சிவஞானபோதம் – முதல் சூத்திரம்
       இப்படி தோற்றுவித்த இயற்கை ஆணாகவும், பெண்ணாகவும், மற்ற அது என்று சொல்லப்பட்ட அஃறிணையாகவும் இருக்கிறது, அது தோற்றுவித்தது மட்டுமல்லாமல், மும்மலத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்வார்.
     தோற்றிய திதியே ஒடுங்கிமலத் உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
      ஆதி அந்தமாய் இருக்கக்கூடிய ஒன்று, ஆதி அந்தமாய் இருக்கக் கூடிய இயற்கை, உயிரனங்களைப் பிறபிப்பது மட்டுமல்லாமல் வாழ்விப்பதும், அழிவிப்பதுமாக இருந்து கொண்டே, மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயையாகிய இந்த உடம்புக்குள்ளே இருக்கிறது என்று சொல்கிறார். இதை பிரிப்பது எப்படி? பிரித்தவன் ஞானியாகிறான். அதை என்ன செய்கிறான்? இந்த உடம்புதானையா, இந்த உடம்புக்குள்ளே, அந்த எல்லாம்வல்ல இயற்கை அன்னை ஒளிந்து நிற்கிறாள். அப்படியே மறைந்திருக்கிறாள்.
மும்மலந்தான்,
      தோற்றிய திதியே ஒடுங்கிமலத் உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
      தோற்றிய திதி என்பது, வளர்பிறை, தேய்பிறை. எந்த திதி நம்மை தோற்றுவித்ததோ அதுவே நம்மை அழிவிக்கிறது. ஆக மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் அல்லது மல, ஜல, சுரோணிதமாகிய இதிலே ஒடுங்கி நிற்கிறது. சரிய்யா! இதற்கு என்ன செய்றது என்று கேட்டால், பட்டினிபோட்டு உடம்பை கொல்லலாமா? பட்டினிபோட்டு கொன்றால் செத்துப்போவான். உணவு தந்தால் காமவிகாரம் வருகிறது. பட்டினியும் போடா முடியாது, சாகவும் கூடாது, சாகாமல் சாவது என்று இதை ஞானியர்கள் சொல்வார்கள். ஆதித்தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான் இந்த இரகசியத்தை அறிந்தார். அவருடைய கருத்தைத்தான், மெய்கண்ட தேவரும் சொல்கிறார்.
                அவன் அவள் அதுஎனும் அவை மூவினைமையின்    
      தோற்றிய திதியே ஒடுங்கி மலைத்துஉளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
                ஆதி அந்தமாய் இருக்கக் கூடிய இயற்கை, உயிரனங்களை தோற்றுவித்தது மட்டுமல்லாது, மும்மலமாகிய உடம்பில் சார்ந்திருக்கிறது. ஆக சார்ந்திருக்கிற அதை எப்படி பிரிப்பது? யார் துணைகொண்டு பிரிப்பது? பட்டினியும் போடக்கூடாது, பட்டினி போட்டால் செத்துப் போவான், உணவும் தரக்கூடாது, உணவு தந்தால் காமவிகாரம் வரும், நரைதிரை வரும். இது மாதிரி ஒரு அமைப்பு நம் உடம்பில் இருக்கிறது.
    
     இதை யோகிகள், முதல் தலைவன் ஆசான் சுப்பிரமணியர் என்ன செய்தார்? பிறந்த உயிரினங்கள் ஏன் சாக வேண்டும்? என்ற கேள்வி அவருள் எழுந்து, ஆராய்ச்சியில் முழுக்கவனம் செலுத்தினார். இந்த சிந்தனை உயர்ந்த சிந்தனை. ஏன் சாக வேண்டும்? இதை எப்படி நிறுத்துவது? சாவது என்பது மூச்சுக்காற்று வெளியே போனால் செத்துப் போகிறான்.
     மூச்சுக்காற்று உள்ளே வந்து போனால் உயிரோடு இருக்கிறான். மூக்கில் கை வைத்துப் பார்க்கும்போது மூச்சுக்காற்று உள்ளே வந்து போகுது, சரி! சாகவில்லை. மூக்கில் கை வைத்துப் பார்க்கும்போது மூச்சுக்காற்று இல்லை, உயிர் போய்விட்டது.
    
     ஆக மூச்சு ஓடிக் கொண்டிருக்கிறது, உயிருடன் இருக்கிறான். இப்படி உள்ளே வந்து போகின்ற மூச்சுக்காற்று வெளியே போய்விட்டால் செத்துப் போகிறான். இதைப்பற்றி ஆசான் சுப்பிரமணியர் ஆராய்ந்து வந்தார். இப்படி ஆராயும்போது அவருக்கே மனதில் பட்டது.
     உள்ளே வந்து போகின்ற மூச்சுக்காற்றை, உள்ளே நிறுத்தி வைத்தால் சாகமாட்டான் அல்லவா? அந்த நேரம் அவருக்கு ஒரு மாற்றம் கிடைத்தது. எப்போதும் உள்ளே வந்து போகின்ற இந்த காற்று மூக்கால் அல்லது வாயால் வரும்.
     ஆனால் எப்போதும் இந்த காற்று உள்ளே வந்து போகின்ற பாதை, ஒன்று வாய் வழி, மற்றொன்று மூக்கு வழி. இதை நிறுத்தினால், வாய் வழி, மூக்கு வழி வந்து போகின்ற காற்றை உள்ளே நிறுத்தினால் மரணம் வராது. இந்த சிந்தனை ஆசான் சுப்பிரமணியருக்கு வந்தது.
     ஆக சிந்தித்த அந்த மனிதன் வினையில்லாதவன், பாவமில்லாதவன். பாவமில்லாததனால் நல்ல சிந்தனை வந்தது. பாவம் மிகுதி ஆக ஆக, அறிவு வேலை செய்யாது. துஷ்டத்தனமான எண்ணம்தான் இருக்கும்.
     புலால் உண்ணுதல், ஆடு கோழி அறுத்து சாப்பிடுவது அல்லது பொருளுக்காக பொய் சொல்லுதல் அல்லது வஞ்சனை இதுபோன்ற குணக்கேடு, மற்ற உயிர்களெல்லாம் பாவியென்று சொன்னால், மற்ற உயிர்கள் கொடும்பாவியென்று சொன்னால், அதனுடைய விளைவுகள் அறிவு வேலை செய்யாமல் மழுங்கலாகவே இருக்கும், மூர்க்கத்தனமான அறிவுதான் இருக்கும். ஏனய்யா! அவனுக்கு மட்டும் மூர்க்கத்தனமான அறிவிருக்கிறது. கொஞ்சம் கூட கருணையே காட்ட மாட்டான் என்கிறானே, மற்றவன் இரக்கம் காட்டுகிறான்.
    
     அவன் ஏன் இரக்கம் காட்டவில்லை? என்று கேட்கிறார்.இரக்கம் காட்டாத அறிவு, இரக்கம் காட்டாத இதயம் இருந்தால் அங்கே பாவம் மிகுதியாக இருக்கிறதென்று அர்த்தம். அதிகமான பாவச்சுமை.
     ஆசான் சுப்பிரமணியருக்கு பாவச்சுமையில்லை. அது ஒரு நல்ல சூழ்நிலை. நாம் செய்த புண்ணியம் அது. ஆசான் இயற்கையிலே தோன்றி, நல்ல அருவி, ஒரு பக்குவமான இடத்திலே ஆசான் தோன்றி, எந்த தீமையும் செய்யாது, ஜீவதயவை மையமாகக் கொண்டு இருந்ததனால்தான் அவரது சிந்தனை உயர்ந்திருக்கிறது. அவருடைய சிந்தனை உயர்ந்திருந்தது, காரணம் அவருடைய அந்த கருணை.
     ஆதியாகிய எல்லாம்வல்ல தலைவி அல்லது இயற்கை அவருக்காகவே அந்த கருணையை கொடுத்திருக்கிறது. இந்த தூய சிந்தை இருந்தால்தான் இந்த இடத்திற்கு வரலாம். இல்லையென்றால் ஆன்மா மாசுபட்டிருக்கும்.
     ஆன்மா மாசுபடுவதற்கு காரணம் ஒன்று பேராசை அல்லது கொடிய செயல்பாடுகள். பிற உயிரை வதைத்தல், பேராசை, பொறாமை, வஞ்சனை போன்ற குணக்கேடுகள்தான் மனிதனை வாட்டி வதைக்கிறது. இதுவே ஒரு மனிதனுக்கு நல்ல அறிவு வராததற்கு காரணம்.
     சரி! ஆனால் ஆசான் சுப்பிரமணியருக்கு நல்ல அறிவு எப்படி வந்தது? அதுதான் நாம் செய்த புண்ணியம். உயர்ந்த நல்ல சிந்தனை இருந்ததனால்தான் நல்ல நுட்பமான அறிவு வந்தது.
     கரடுமுரடான அறிவு நீங்கி நல்ல நுட்பமான அறிவு வருவதற்கு காரணம் நல்ல சிந்தனை. அந்த நல்ல சிந்தனை அல்லது புண்ணியம். ஏதோ ஒரு புண்ணியம்தான நல்ல சிந்தனை வந்தது. இந்த சிந்தனைதான் இயற்கையைப் பற்றி அறியக்கூடிய அறிவை தந்தது.
     இப்படி இயற்கையைப் பற்றி அறியும் பொது, ஓடுகின்ற காற்று எப்படி செயல்படுகின்றது என்கின்ற அறிவு வந்தது. ஓடுகின்ற காற்றை நிறுத்தி வைத்தால் நல்லது என்கின்ற அறிவு வந்தது. அதன் காரணமாக அந்த காற்றை நிறுத்திய இடத்தில் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த காற்று புருவமத்தியில் ஒடுங்கியது.
     அப்படி புருவ மத்தியில் ஒடுங்கியதன் காரணமாக என்ன ஆயிற்று? எல்லாம்வல்ல இயற்கை, ஆசான் சுப்பிரமணியருள் செயல்பட ஆரம்பித்து விட்டது. எல்லாம்வல்ல இயற்கை செயல்பட ஆரம்பித்தது, மனம் செம்மையானது.
     அப்போ மனம் இயற்கையா செயற்கையா என்றால், மனம் அல்லது அறிவு இயற்கைதான். மனம் அல்லது அறிவு என்பது உயிரா என்றால், உயிர்தான்.
     அறிவு என்பது உயிர்தான். தனி உடம்பிற்கு அறிவு இருக்க முடியாது. அப்பா சேர்ந்துதான் இருக்கணும். நல்ல சிந்தனை புண்ணியத்தால் வந்தது. புண்ணியத்தால் வந்த நல்ல சிந்தனையால் மென்மையான அறிவு வந்தது, மென்மையான அறிவு வந்ததன் காரணமாக தன்னைப்பற்றி அறிந்திருக்கிறான். ஆக புண்ணியம்தான் நல்ல அறிவு, நல்ல உணர்வு.
     இயற்கை என்பது உடம்பும் உயிரும் சேர்ந்ததுதான். அறிவு என்பது ஆன்மா, ஆன்மாதான் அறிவு. பல ஜென்மங்களில் மாசுப்பட்டிருந்த அறிவு, மழுங்கலான அறிவாகத்தான் இருக்கும், சிந்தனைக்கு எட்டாது.
     இந்த துறை எப்படி இருக்கிறதென்றால், புண்ணியவான்கள் மட்டும்தான் நெருங்க முடிகிறது. புண்ணியவான்கள் மட்டும்தான் உள்ளே நுழைய முடிகிறது. புண்ணியவான்கள் சிந்திக்கிறான். ஜீவதயவு உள்ளவன்தான் அதைப்பற்றி சிந்திக்கிறான். ஜீவதயவுதான் நுட்பத்தை தந்தது. அந்த நுட்பத்தின் துணை கொண்டுதான் ஆன்மாவைப் பற்றி அறியலாம். ஆன்மாவை நிறுத்தி வைத்தால் நல்லது என்ற அந்த நுட்பம் சிந்திக்க வைத்தது.
     முதுபெரும் தலைவனாக இருந்த ஆசான் சுப்பிரமணியர்தான் இதைப் பற்றி அறிந்து, அதை இலயப்படுத்தினார். அப்போ இலயப்பட்டது அறிவா, ஆன்மாவா, புண்ணியமா என்றால், புண்ணியம்தான் இலயப்பட்டிருக்கிறது. புண்ணியம் பெருகபெருக அறிவு வேலை செய்தது. அறிவு வேலை செய்ததனால் ஆன்மா தெளிவடைந்தது. ஆன்மாவின் தெளிவு, அறிவு தெளிவாயிற்று. அறிவு தெளிவு நுட்பத்தைப் பற்றி அறிந்தது.
     ஞானிகள் புண்ணியத்தை தேடிக் கொள்கிறார்கள். புண்ணியம் இல்லையென்றால் அறிவு வேலை செய்யாது என்று பலமுறை சொல்லியிருக்கிறோம்.
     புண்ணியவான்களுக்கு அறிவு வேலை செய்யும். புண்ணியவான்களுக்கு குணக்கேடு இருக்காது. புண்ணியவான்களுக்கு காமவெறி மிகுதியாக இருக்காது. புண்ணியவான்களுக்கு ஜாதி வெறி இருக்காது. புண்ணியவான்கள் மற்ற உயிர்களை வதைத்து அதைக் கண்டு இரசிக்க மாட்டான். அதுதான் புண்ணியத்தின் இயல்பு.
     புண்ணியவான்கள் எப்படி புண்ணியத்தை தேடுவது? அது புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுகிறது. ஆதித்தலைவன் புண்ணியவான், அதனால் இது புலப்பட்டது. ஆசான் ஞானபண்டிதனுக்கு புலப்பட்டது, உணர்த்தப்பட்டது. இயற்கை அவருக்கு முதலில் தானே உணர்த்தியது. ஆமாம், தலைவன் இயக்கினான்.
     எல்லாம்வல்ல இயற்கை எங்கே வெளிப்படுகிறது? புண்ணியவாங்களுக்குத்தான் வெளிப்படுகிறது. சரி! புண்ணியவான்களுக்கு வெளிப்படும்போது அவன் தன்னை அறிகிறான். தன்னை அறியும்போது தன்னிடம் இருக்கும் மாசை அறிகிறான். தன் உடம்பு மாசாக இருக்கிறது, களிம்பாக இருக்கிறது என்றான். அவர்களுக்கு மட்டும் புண்ணியவான்களுக்கு மட்டும் இது உணர்த்தப்படுகிறது. அவன் இந்த உடம்பில் இருக்கும் மாசசைப் பற்றி அறிகிறான். எல்லாம்வல்ல இயற்கை தோற்றுவிக்கும்போதே இப்படி இருக்கிறது.இதை எப்படி வெல்வது? அதே இயற்கை வெல்வதற்கு அவனுக்குத் துணையாக இருக்கிறது.
     இந்த உடம்பில் கடவுள் இருக்கிறானா? இருக்கிறான். அப்போ நாம் ஏன் கடவுளை அடைய முடியவில்லை? புண்ணியம் மிகுந்தால் அறிவு வேலை செய்யும். அறிவு வேலை செய்தால் உடல் மாசைப்பற்றி அறிவான். உடம்பு மாசுள்ள காமதேகம், அழுக்கு தேகம், புற அழுக்கை நீக்கி விடலாம், அக அழுக்கை நீக்கமுடியாது. அக அழுக்கை நீக்குபவன் புண்ணியவானாக இருக்கிறான்.
     அக அழுக்கு என்பது மன அழுக்கு. மன அழுக்குக்கு காரணம் உடம்பு. உடம்பை இயற்கை தோற்றுவித்திருக்கிறது. ஏனய்யா! தோற்றுவிக்கும்போதே நல்ல உடம்பைத் தரக்கூடாதா? இல்லை ஐயா! அதில் ஒரு மர்மம் இருக்கிறது. அழுக்கான உடம்பு நீங்காமல், உள்ளுடம்பு வரவே வராது. இதைத்தான் புண்ணியவான் பார்த்தான். அழுக்கு உடம்பு துணையில்லாமல் ஒழி உடம்பு வரவே வராது.
     சரி! அழுக்கு உடம்பு நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? தவமுயற்சி வேண்டும். அழுக்கு உடம்பு நீங்குவதற்கு தவமுயற்சி வேண்டும்.
     தவமுயற்சிக்கு யார் துணையாக இருப்பாரென்றால், அதே இயற்கை அவனுக்கு துணையாக இருக்கும். அடேயப்பா! என்ன ரொம்ப மர்மமாக இருக்கிறதென்றால், ஒன்றும் மர்மமே இல்லை. அதே இயற்கை உனக்குத் துணையாக இருக்க வேண்டும். வினையாக இருக்கக்கூடிய இயற்கையை துணையாக்கி கொள்வதற்கு, தவ முயற்சி தேவை. தவம் என்பதை புண்ணியவான்களாகிய தலைவன் ஆசியோடு செய்ய வேண்டும். இந்த துறையை தமிழ்நாட்டில் தமிழன் மட்டும்தான் அறிந்திருக்கிறான்.
     நம்மையெல்லாம் இயற்கை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், அது நம் உடம்பில் மும்மலத்தில் சார்ந்திருக்கிறது என்று சொன்னார் மகான் மெய்கண்டதேவர். எல்லா ஞானிகளும் அதைத்தான் சொல்வார்கள். நாமென்ன செய்கிறோம், புண்ணியவான் ஆகிறோம்.
     பாவம் மிகுந்தால் லோபித்தனம் வருமென்று முன்னமே சொன்னோம். பாவம் மிகுந்தால் பொறாமை வருமென்று சொன்னோம். பாவம் மிகுந்தால் அறிவு வேலை செய்யாது.
     இந்த துறை புண்ணியவான்களுக்கு மட்டும்தான் சொந்தமா? ஆமாம் புண்ணியவான்களுக்கு மட்டும்தான் சொந்தம்.
     எங்களுக்கு அந்த வாய்ப்பில்லையா?
     நிச்சயம் இருக்கிறது. நாம் புண்ணியவான் ஆக வேண்டும். புண்ணியவான் ஆக வேண்டுமென்றால், அன்னதானம் செய்ய வேண்டும். அதை முடிந்தால் செய்யலாம்.
     ஆசான் திருமூலர் திருமந்திரத்தில் என்ன சொல்வார்?
     போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
                                                             -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
                ஆசான் திருமூலர் சொன்ன திருமந்திரமாக இருந்தாலும் சொன்னது யாரென்றால், சுப்பிரமணியர்தான்.
    
     போதம் என்பது ஞானம். உனக்கு ஞானத்தை தருவது ஆசான்தான். இப்ப ஆசானை வணங்குகிறோம். ஏனய்யா, எனக்கு மட்டும் கையில் நிறைய பணம் இருக்கிறது. ஏன் எனக்கு லோபித்தனம் இருக்கிறது? என்றான். அது நீ செய்த குற்றமல்ல. நீ செய்த பாவம் உனக்கு லோபித்தனத்தை தந்தது. நீ செய்த பாவம் கருணையில்லாத வாழ்வைத் தந்தது.
     ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், அது இயல்புதான்ய்யா. எல்லோருக்கும் உள்ளத்தான். ஆறறிவு உள்ளவனுக்கெல்லாம் இப்படி ஒரு குணக்கேடு இருக்கத்தான் செய்யும். லோபித்தனம் இருக்கும், கொடுக்கவே மாட்டான். கொடுத்து அதன் மூலம் புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவு வராது.
     நமக்கு அறிவில்லை. கையில் காசு இருக்கிறது, கொடுக்க மனம் வரவில்லை. கொடுக்கிற மனம் எப்போது வரும்? புண்ணியவான்கள் ஆசி இருந்தால் வரும். சான்றோர்கள் தொடர்பு இருக்க வேண்டும். சான்றோனுக்கு சான்றோனாக இருப்பது சுப்பிரமணியர்தான்.
     அப்படி சான்றோனுக்கு சான்றோனாக இருக்கக்கூடிய ஆசான் சுப்பிரமணியர் என்ன செய்தார்? தன் சந்ததிகளுக்கு சொன்னார். நீ அன்பாக நடந்து கொள். இனிமையாக நடந்து கொள். பிற உயிரகளுக்கு நன்மை செய். பிற உயிர்களுக்கு நன்மை செய்தால் அந்த ஆன்மாக்கள் உன்னை வாழ்த்தும். அந்த ஆன்மாக்கள் வாழ்த்தும்போது உன் ஆன்மாவுக்கு அது துணையாக இருக்கும். உன் ஆன்மாவுக்கு துணையாக இருக்கும்போது நல்லறிவு வரும். நல்ல சிறப்பறிவு வரும். சிறப்பறிவு துணை கொண்டு மேலும் மேலும் முன்னேறலாம். முன்னேற்றம் என்பது சிறப்பறிவு இருந்தால்தான் முடியும். சிறப்பறிவு இல்லையென்றால் முன்னேற்றல் வராது.
     இந்த சிறப்பறிவு எப்படி வரும் என்றான்? அறிவு முதிர்ச்சி. மிகப்பெரிய அறிவாற்றல் உள்ளவர்கள் ஞானிகள். மிகப்பெரிய அறிவாற்றல் அவர்களுக்கு எப்படி வந்ததென்றால், அது எல்லாம்வல்ல இயற்கை அன்னை கொடுத்த அறிவு. எல்லாம்வல்ல இயற்கை அன்னை கொடுத்த அறிவு கொண்டு அவர்களுடைய ஆசி பெறுகிறான். அப்ப என்ன சொகிறார்? இந்த துறை எப்படி இருக்கிறதென்றால், ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்றார்.
     ஜீவகாருண்யம் – ஜீவதயவு. ஜீவதயவை மேற்கொள்ளும்பொது வன்மனம் தீர்கிறது, கொடுமை நீங்குகின்றது, கொடுங்கோபம், பொறாமை போன்ற குணக்கேடுகள் நீங்குகிறது. வன்மனம்நீங்காமல் குணக்கேடு நீங்காது.
     ஆக இப்பேர்ப்பட்ட இதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. நமக்கு நிலை உயர வேண்டுமென்ற ஆசை இருக்கிறதய்யா.
     நிலை உயர வேண்டுமென ஆசையிருந்தால் எதன் துணை கொண்டு உயர்வது? உடம்பின் துணை கொண்டு உயர்வதா? அல்லது உயிரின் துணை கொண்டு உயர்வதா? அல்லது ஆசான் துணை கொண்டு உயர்வதா? அல்லது இயற்கை துணை கொண்டு உயர்வதா? அல்லது பொருள் வளத்தின் துணை கொண்டு உயர்வதா? என்று கேட்டான்.
     உயர வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால் எது நம்மை பிடித்து ஆட்டிப் படைக்கிறது? ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். நாமும் கடவுளாக நினைக்கிறோம்.
     நாம் நிலை உயர இந்த உடம்பு துணை கொண்டுதான் போக வேண்டும். இந்த தேகம் காமதேகம், காமகுணக்கேடு உள்ள உடம்பாயிற்றே? என்னை முன்னேற விடமாட்டான் என்கிறதே? என்றார். இல்லையில்லை இதே உடம்புதான் உனக்குத் துணையாக இருக்கும் என்பார் ஆசான்.
     சரி! இந்த உடம்பை விட முடியாது. இந்த உடம்பின் துணைகொண்டுதான் முன்னேற முடியும். உடம்புக்குக் குணக்கேடு இருக்கிறதா? உயிருக்குக் குணக்கேடு இருக்கிறதா? இது சிக்கலான கேள்வி.
     எனக்கு வந்த இந்த பொறாமை, வஞ்சனை, சினம் கொடுமையெல்லாம் உடம்புக்கு வந்த கேடா? அல்லது உயிருக்கு வந்த கேடா? என்றால் சிக்கலானதுதான். ஆமாம் உயிருக்கு ஏதய்யா காமம்? உயிருக்கு ஏதய்யா பொறாமை? உயிருக்கு ஏதய்யா வஞ்சனை? அப்ப உடம்புக்கு வஞ்சனை இருக்கிறதா? இல்லை. ஆன்மா தூய்மையாகத்தான் இருந்தது. பல ஜென்மங்கள் எடுத்து அறியாமை காரணமாக, காமத்தின் காரணமாக, பொறாமை காரணமாக, கொடுஞ்செயல்கள் காரணமாக, உடம்பு பின் சேர்ந்தது.
     உயிருக்கு தனியாக யார் மீதும் குறையிருக்காது. யாரையும் இடையூறு செய்யாது. அந்த ஆன்மா உடம்பு தாங்கியதால், அந்த உடம்பும் உயிரும் சேர்ந்து செய்த பாவத்தால், அதுதான் இப்படி இருக்கிறது என்றான். சரி! அப்ப உடம்பும் உயிரும் சேர்ந்த காரணத்தால் ஒரு மூர்க்கத்தனம் இருக்கிறது, லோபித்தனம் இருக்கிறது, தயை சிந்தை இல்லை என்றான்.
     தயைசிந்தை இல்லாதிருப்பதற்கு உடம்பு காரணமா? உயிர் காரணமா? சிக்கல்படுத்தாதே என்னை, எல்லாம்வல்ல இயற்கை அன்னையே அல்லது கடவுளே! என்னை சிக்கல் படுத்தாதே! குணக்கேடு வந்தது உயிருக்கா? உடம்புக்கா? என்றான். சிக்கல் படுத்தாதே எனக்கு புரியவில்லை.
     உயிருக்குத்தான் குணக்கேடு வந்தது என்று சொன்னால், ஏன் உடம்பு சேர்ந்தது என்றான். இருவரும் சேர்ந்தே செய்திருக்கிறீர்கள், உங்களுக்குள்ள பாவங்களெல்லாம்தான் இதுநாள் வரை பலகோடி ஜென்மங்கள் எடுத்த, இந்த உடம்புதான் ஆன்மாவை தேர்ந்தெடுத்ததா? அல்லது உயிர்தான் உடம்பைத் தேர்ந்தெடுத்ததா? பிரச்சனை பண்ணாதே? சிக்கல் வரும். ஆன்மாவும் உடம்பும் இருவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள்.
     ஆரம்ப காலத்தில் ஒரு மனிதன் தோன்றியிருக்கிறான். பல லட்சம் ஆண்டுகள் அல்லது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னே, உயிர் வந்திருக்கிறது. தனி உயிர் வந்ததா? உடம்பு வந்ததா? என்று கேட்டான். தோன்றும் போதே இரண்டும் சேர்ந்துதான் தோன்றியிருக்கிறது. யார் குறையுமில்லை. அப்ப உடம்பு வந்து ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்ததா? அல்லது உயிர் உடம்பைத் தேர்ந்தெடுத்ததா? இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கும்.
     ஆக ஆரம்பத்தில் எல்லாம்வல்ல இயற்கை அன்னை ஒரு ஆன்மாவைத் தோற்றுவிக்கும். இல்லை, தனி ஆன்மாவை தோற்றுவிக்க முடியாது. ஒரு ஜீவனைத் தோற்றுவித்தது. ஏன் ஜீவன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் என்றான். ஜீவன் இல்லாமல், ஆன்மா இல்லாமல் ஒரு உடம்பு வந்திருக்காது. அப்ப இரண்டும் சேர்ந்துதான் செய்ததா? ஆமாம் சேர்ந்துதான் எடுத்தது. இரண்டும் சேர்ந்து எடுத்த ஆன்மா, இருவரும் சேர்ந்துதானே செய்தீரிகள்? குற்றம் புரிந்தது உடம்பா? உயிரா? என்றான். மறுபடி சிக்கல் படுத்தாதே.
     குற்றம் செய்தது உடம்பா? உயிரா? இருவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறீர்கள். சரிய்யா, இதற்கு விமோசனம்? இதுதான். இந்த குற்றம் செய்வது, குற்றம் என்று அறிகின்ற அறிவு, உயிருக்கும் இல்லை, உடம்புக்கும் இல்லை. அப்ப யார் சொன்னார்? யாரேனும் ஒருவன் உணர்ந்திருந்த வேண்டும். எல்லாம்வல்ல இயற்கை அன்னையால் உருவாக்கப்பட்ட ஆசான் ஞானபண்டிதன் சுப்பிரமணியர்தான் ஆராய்ந்தார். குற்றம் செய்தது உடம்பா? உயிரா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது, இருவரும் சேர்ந்துதான் செயந்திருக்கிரார்கள். தனி ஆன்மாவும் தவறு தவறு செய்ய முடியாது. தனி உடம்பும் தவறு செய்ய முடியாது.
     உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
      உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
      உடபுயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
      உடம்புமெய்ம் மறந்து கண்டுணர்ந்தஞான மோதுமே.
     உடம்பு உயிரை எடுத்ததா? உடம்பு ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்தால், அப்ப உருவம் அதற்கு ஏது? தனி உடம்புக்குப் பிணம் என்றுதானே பெயர். அது எப்படி ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்?
      உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
      உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
      உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
      உடம்புமெய்ம் மறந்து கண்டுணர்ந்தஞான மோதுமே
                                                                                -மகான் சிவவாக்கியர் – கவி எண் – 91
                உடம்பு உயிரை எடுத்ததா? உடம்பு ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்தால், அப்ப உருவம் அதற்கு ஏது? தனி உடம்புக்குப் பிணம் என்றுதானே பெயர். அது எப்படி ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்?
     உடம்புயி ரெடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ? ஆசான் சொல்வார் உடம்பு ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுத்த உயிர் ஏன் நம்மைவிட்டுப் போகணும்? ஆமாம் பிரச்சனைதான். உயிர் உடம்பெடுத்ததோ, உயிர் உடம்பைத் தேர்ந்தெடுத்ததா? அந்த மாதிரி தேர்ந்தெடுக்கும்போது பிணத்தில் எப்படி இருக்கும் உயிர்? என்றார்.
     உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே – சரி, ஒரு உடம்பு வந்து ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்து. ஆனால் உயிர் போகும்போது உருவமேது? அப்ப என்ன விளக்கம் சொல்கிறார் என்றால், இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தனர் ஞானிகள். ஆசான் சுப்பிரமணியர், “சேர்ந்துதான்” என்று கண்டுபிடித்தார். எந்த விஞ்ஞானத்திற்கும் இது அகப்படாது.
     அப்ப வெளிநாட்டுக்காரன் பார்க்கிறான். எப்படிய்யா இது இயக்கம்? தமிழகத்தில் வந்து இப்படி ஒரு அற்புதம் செய்திருக்கிறான். எந்த உடம்பு நமக்குப் பாதகமாக இருக்கிறதோ, அதே உடம்பு அவனுக்கு சாதகமாக இருக்கிறது. எந்த நாட்டிலும் இருக்கும் எல்லா விஞ்ஞானிகளும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான். அவன் எப்படி, இப்படி பல கோடி வருடம் இருக்கிறான்? ஏன் நம்மால் முடியவில்லை? நம் அறிவுக்கு ஏன் அது எட்டவில்லை? அதுதானய்யா தமிழன் செய்த புண்ணியம். ஆசான் சுப்பிரமணியர் செய்த புண்ணியம்.
     ஆக உடம்பும் உயிரும் சேர்ந்து செய்த பாவம், ஒரு மனிதன். மனிதன் என்ற சொல் உயிருக்கு வந்ததா? உடலுக்கு வந்ததா? என்று கேட்டான். மனிதன் என்ற சொல் இரண்டிற்கும் சேர்த்துதான். உயிர் இருந்தால்தானே மனிதன்? உயிர் போனபின் பிணம்தானே? பிணத்திற்கு ஏதய்யா அறிவு?
     மற்ற நாட்டில் படைக்கப்பட்டவனுக்கு இது தெரியவில்லை. நம் தமிழகத்தில் இருப்பவனுக்கு இது தெரிந்திருக்கிறது. தமிழகத்தில் முதுபெரும் தலைவன் ஆசான் சுப்பிரமணியர் என்ன செய்திருக்கிறார்?
     தோற்றுவிக்கும்போதே இப்படி ஒரு அமைப்பை வைத்து, உள்ளே ஒரு நரகத்துக்குக் காரணமான அல்லது துர்நாற்றத்திற்குக் காரணமான அல்லது எப்போதும் பசியும், பிணியும், மூப்பும் பிரச்சனைக்குள்ள உடம்புக்குள்ளே ஒரு ஒளிச்சுடர் ஒன்று இருக்கிறது என்பதை அவன் அறிந்தான். ஆசான் சுப்பிரமணியர் அறிந்தார். இந்த அறிவு இயற்கைக் கொடுத்ததா? அல்லது அவருக்கே இயல்பாய் வந்ததா?
     இப்பேர்ப்பட்ட உடம்புக்குள் எப்போதும் துர்நாற்றமும், பசியும், பிரச்சனையும், முதுமையும், நோயும், நொடியும் உள்ள உடம்புக்குள் ஒரு அற்புதம். ஒரு ஜோதியை அல்லது சொர்க்கத்தை வைத்திருக்கிறான் என்பது ஆசானுக்கு இயற்கை அன்னை தந்தாளா? அன்னையின் ஆசியால் அவர் பெற்றாரா? ஒரு புதிரான புதிர், அன்னையின் ஆசி, எல்லாம்வல்ல இயற்கையின் ஆசி. அவள் என்ன செய்தால்? இப்பேர்ப்பட்ட ஒரு அற்புதத்தை நான், உன் உடம்புக்குள் செய்து வைத்திருக்கிறேன் என்றாள்.
     ஆனால் இப்போது நீ காணுகின்ற சூரியன் ஒரு பங்குதான், நான் உள்ளேயிருந்து வெளிப்படும்போது சதகோடி (நூறு கோடி) சூரியனாக இருந்து வெளிப்படுகிறேன் என்று தாய் சொன்னாள். சரி அந்த தாய் குளிர்ச்சி பொருந்தியவளா? அல்லது வெப்பம் மிகுந்தவளா? என்றான். வெளியில் இருக்கும்போது அவள் குளிரச்சி பொருந்தியவளாகவோ அல்லது வெப்பம் மிகுந்தவளாகவோ தனித்தனியாக இருக்கிறாள். அங்கே கடல் நீராக இருப்பாள். அங்கே காற்றாக இருப்பாள். அங்கே நிலமாக இருக்கிறாள். அங்கே சூரியனாக இருப்பாள். அவள் வெட்ட வெளியாக இருக்கிறாள்.
     இங்கே எப்படி இருக்கிறாள் என்றான். குளிர்ச்சியும் வெப்பமும் மிகுந்ததாக இருக்கிறாள். நம் உடம்புக்குள் குளிர்ச்சியும் இருக்கிறது, வெப்பமும் இருக்கிறது. வெளியே தனித்தனியாக இருக்கிறது. மண், தண்ணீர், காற்று, சூரியன், ஆகாயம் என்று வெளியில் தனித்தனியாக இருக்கக்கூடிய அவள் இங்கே ஒன்றுபட்டு இருக்கிறாள்.
     நம் உடம்புக்குள் மண் சக்தி இருக்கும். பிருதிவியின் கூறாக மண் சக்தி, சதைப் பிண்டமாக இருக்கும். அதே சமயத்தில் உள்ளே ஓடுகின்ற உதிரம், திரவப்பொருள் பூராவும் தண்ணீரின் கூறாக இருக்கும். திடப்பொருள் இந்த உடம்பில் எலும்பு, நரம்பு, தசை பூராவும் பூதாதிகளாக இருக்கும், சேர்ந்துதான் இருக்கும்.
     ஓடுகின்ற காற்று வாயுவின் கூறு. உள்ளே ஒழுகக் கூடிய சுக்கிலம், சுரோணிதம் தண்ணீரின் கூறு. சத்துப்பொருளாக இருப்பதெல்லாம், அக்கினியின் கூறும், மண்ணின் கூறும் ஆகும். ஆக பஞ்ச பூதாதிகள் ஒன்றுபட்டுள்ளது. ஆனால் இங்கே அவள் என்ன செய்தாள்? குளிர்ச்சி பொருந்திய வெப்பமாக மாறினாள்? குளிர்ச்சி பொருந்திய வெப்பம். அப்ப எப்படி அமைந்திருக்கிறதென்றால், வெளியே உள்ள வெப்பம் உடம்புக்குக் கேடு செய்யும்.
     வெயிலில் இருந்தால் வியர்க்கும். ஆனால் உள்ளே நீர் கலந்த நெருப்பாக இருக்கிறாள். நீர் கலந்த நெருப்பாக இருக்கும்போதுதான் நூறு கோடி சூரிய ஒளியாக மாறுகிறாள். யாரைய்யா செய்தான்? தாய்  செய்திருக்கிறாள். எல்லாம்வல்ல இயற்கை அன்னை இப்படி செய்திருக்கிறாள். நரகத்திற்குக் காரணமான உடம்புக்குள்ளேயே நரகத்திற்குக் காரணமான அவள் என்ன செய்திருக்கிறாள், அவளே நரகமாயிருக்கிறாள். சிக்கலான கேள்வி, அவளே நரகம்? ஆமாம் அவளே நரகமாக இருக்கிறாள். பின்னே? அவளே சொர்க்கமாக இருக்கிறாள். இப்படி ஒரு சிக்கலான வாய்ப்பு உலகத்தைத் தோற்றுவிக்கும் போதே இப்படி ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கிறாள். அவளே நரகத்திற்கும் காரணம். அவளே சொர்க்கத்திற்கும் காரணம். இதைத்தான் நமது ஆள் அறிந்திருக்கிறான். அதுதான் சொன்னார். அதுதான் சொன்னார்.
     அவன் அவள் அதுஎனும் அவை மூவினைமையின்    
      தோற்றிய திதியே ஒடுங்கி மலைத்துஉளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
     ஆக தோற்றுவிக்கும்போதே பூதாதிகள், பஞ்சபூதங்கள் தனித்தனியாக இருக்கும்போது அவற்றின் சக்தி வெளிப்படவில்லை. நம்மோடு சார்ந்திருந்து பஞ்சபூதம் ஒன்றுபட்ட இந்த உடம்புக்குள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நரகமும் சொர்க்கமும் வெளியே இருந்தாலும், உள்ளே இரண்டும் சேர்ந்திருக்கிறது. தவ முயற்சியால் முடியுது. இப்பேர்ப்பட்ட ஒரு அமைப்பை, எல்லாம்வல்ல இயற்கை அன்னை அமைத்தாலும், அவர்கள் வெளிபடுத்த முடியாததனாலே பலகோடி வருடங்கள் தடுமாறி, பலகோடி வருடம் முடியாமல், ஒரே ஒரு நல்ல சிந்தனையுள்ள ஆசான், தூயமனதுள்ளவனிடம், தூயமனது எங்கே இருந்ததோ அங்கே வெளிப்பட்டாள்.
     அங்கே வஞ்சனை இருக்கமுடியாது. தூய மனது எப்படின்னா? எல்லாம்வல்ல தலைவன் ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் கிடைத்தது அந்த அறிவு. அந்த புண்ணியத்தால் கிடைத்த அறிவு என்ன செய்தது? அங்கே தாய் வெளிப்படுவதற்குக் காரணமாக இருந்தது.
     ஆதித்தலைவன் என்ன செய்தான்? புண்ணியத்தைப் பெற்றான். புண்ணியத்தை செய்து கொள்ள நினைத்தானா? புண்ணியத்தை செய்து கொள்ள நினைத்தால், நிச்சயமாக அவன் மோட்ச இலாபத்தை விரும்பியிருக்க வேண்டும். மோட்ச இலாபத்தை விரும்பி அவன் புண்ணியம் செய்தானா? என்ன காரணத்திற்காக அவன் புண்ணியம் செய்தான்? ஒரு சில புண்ணியம் செய்திருக்கலாம் அல்லது அவன் சாப்பிடும்போது, ஏதேனும் சிந்தியிருக்கலாம். பச்சை கம்பு சாப்பிடுகிறான். அது சாப்பிடும்போது கீழே சிந்தியிருக்கலாம். அந்த கம்பு, அதைப் பல ஜீவராசிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஏதேனும் ஒரு வகையிலே அந்த புண்ணியம் அணுஅணுவாகச் சேர்ந்திருக்கிறது.
     சாப்பிட்டு மிஞ்சிய உணவை எரிந்திருக்கலாம். எறிந்ததன் காரணமாக சில ஜீவராசிகள் சாப்பிட்டிருக்கலாம். அதன் காரணமாக புண்ணியம் பெருகியிருக்கலாம். அந்த புண்ணியம் நாளுக்கு நாள் வளரவளர அறிவு தெளிவடைந்தது. அறிவு தெளிவடைந்தவுடன் தாய் வெளிப்பட்டிருக்கிறாள். தாய் வெளிப்பட்டதன் காரணம், புன்னியத்தினால்தான்.
     ஆக இப்படி ஒருவன் படிப்படியாக புண்ணியம் மிகுதியாக, ஆக ஆக அறிவு வெளிப்பட்டிருக்கிறது. அறிவு வெளிப்பட்டது, தாய் வெளிப்பட்டாள். தாய் வெளிப்பட்டாளா? அல்லது அறிவு வெளிப்பட்டதா?
     அறிவு வெளிப்பட்டது புண்ணியத்தால், புண்ணியம் மிகுதியானதனாலே அறிவு தெளிவடைந்தது. தெளிவடைந்ததற்குப் பின் தன்னை பற்றி அறிந்தான். தன்னைப்பற்றி அறியும் அறிவை அவள்தான் கொடுத்திருக்கிறாள்.
     இப்பேர்ப்பட்ட அற்புதத்தை பல லட்சம் கோடி வருடங்களாக தெரியாமல் இருந்ததனாலே ஒருவனுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சொர்க்கத்தை அவன் அறிந்தான். நரகத்திற்குள் சொர்க்கத்தை அறிந்தான்.
     நரகத்திற்குள் சொர்க்கத்தை அறிந்து அவன் வெளிப்படுத்தியதால், இப்ப நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உன்னால் ஒன்றும் முடியாது. தோற்றுவிக்கும்போதே சேர்த்துதான் வைத்திருக்கிறாள். தாய் தோற்றுவிக்கும்போதே நரகத்தையும், சொர்க்கத்தையும் சேர்த்து வைத்திருக்கிறாள். இதில் புண்ணியவான்கள் மட்டும், நரகத்தை நீக்கி சொர்க்கத்தை தேடிக் கொள்கிறான். புண்ணியவான்கள் மட்டும் நரகத்தை நீக்கி சொர்க்கத்தை சேர்த்து கொள்கிறான்.
     அப்போ புண்ணியவான்கள் என்ன செய்கிறான்? அவர்கள் அனுபவத்தை சொன்னான். இப்படி உனக்குள்ளே நரகமிருக்கு, சொர்க்கமிருக்கு. அங்கே மூடத்தனம் இருக்கு, தெளிவும் இருக்கு.
     அப்போ புண்ணியவான்கள் என்ன செய்கிறான்? அவர்கள் அனுபவத்தை சொன்னான். இப்படி உனக்குள்ளே நரகமிருக்கு, சொர்க்கமிருக்கு. அங்கே மூடத்தனமும் இருக்கு, தெளிவும் இருக்கும்.
     ஆக புண்ணியமும் பாவமும் சேர்த்து வைத்திருக்கிறான். சேர்த்து வைத்த ஒன்றை தலைவன் ஆசியோடு, அந்த நரகத்தை நீக்கி சொர்க்கத்தை வைத்துக் கொள். உமியை நீக்கி அரிசியை வைத்துக் கொள். பாவத்தை நீக்கி புண்ணியத்தை வைத்துக் கொள். இருளை நீக்கி ஒளியை வைத்துக்கொள் என்று சொன்னான்.
     அவர்கள் என்ன செய்தார்கள். இப்படிப்பட்ட அற்புதம் உடம்புக்குள்ளே இருக்கிறது. இந்த அற்புதத்தை நீங்களெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
      வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
      ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
      தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
                                                -திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
     மறைப்பொருள் எது என்று கேட்டான்? அது, ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார் ஆசான் திருமூலதேவர்.
     நீங்களெல்லாம் இந்த உடம்பைப் பற்றி அறிய முடியவில்லை. நான் அறிந்தேன் என்றார். இந்த உடம்புக்குள்ளேயே சொர்க்கம் இருக்கிறது. ஊன் என்ற இரண்டு சுழி “ன்” போட்டிருக்கும். உடம்பு என்று அர்த்தம். அது ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.
     தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே என்றார். இப்ப நாங்களெல்லாம் அடைந்த இன்பம் எது? நீ பார்க்கக்கூடிய உடம்பை இதுநாள் வரை நீ நம்பியிருப்பாய், நம்பி போற்றி வருகிறாய். நாங்களும் போற்றி வருகிறோம். ஆனால் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. நரைதிரைக்கு உட்பட்டு, நோய்க்கும் பிரச்சனைக்கும் உட்பட்ட உடம்பாக இருக்கும். நாங்கள் என்ன செய்தோம்? உள்ளே ஒரு ஒளிச்சுடரை அறிந்து, நோய்க்கும், பிரச்சனைக்கும், பசிக்கும், பிணிக்கும் காரணமான உடம்பை நீக்கி, என்றும் அழியாத ஒளி
உடம்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதை உங்களுக்கு சொல்கிறோம். நீங்களும் அறிந்து கொள்ளலாம். அதைத்தான் சொல்கிறார்.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
      வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
      ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
      தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
                                                -திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
                இதை நீங்களெல்லாம் அறிந்துகொள்ள முடியாத ஒன்று, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுபற்றி ஒன்றுமே அறியாமல், வெறும் ஆரவார பூஜை சடங்குகளில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். முதுபெரும் தலைவன் சொன்னார். உன்னால் அறிந்து கொள்ள முடியாது.
     உன்னுடைய அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. எங்கள் அறிவு எல்லை கடந்தது. ஈரேழு பதினான்கு உலகமும் சென்று வரக்கூடிய வல்லமை உள்ள அறிவு நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த அறிவு எல்லாம்வல்ல இயற்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறாள். தாய்தான் தந்திருக்கிறாள். ஆகவே நீங்களும் அதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஞானிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறாள்.
     இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் என்ன செய்யப்போகிறது? உடம்பு, நரகமும் சொர்க்கமுமாக இருக்கக் கூடியது. அதற்கு பசி இருக்கும். பரிணாம வளர்ச்சி இருக்கும். காமம் இருக்கும். எல்லாவகையான குணக்கேடும் இருக்கும். அந்த நரகத்தை நீக்கி சொர்க்கத்தை அடைவதற்காக நம் இப்போது பிரச்சாரம் செய்கிறோம்.
     இந்த சங்கம் என்ன செய்கிறது? நம்முள் ஜோதி இருக்கிறது. நம்முள் எல்லாம்வல்ல தலைவன் அல்லது தலைவி இருக்கிறாள். அந்த தலைவன் அல்லது தலைவி அல்லது ஜோதியை தட்டி எழுப்ப வேண்டும். அந்த ஜோதி வெளிப்பட வேண்டும். அது சூட்சுமதேகம் என்றும், ஒளி உடம்பு என்றும், அருள் உடம்பு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நாம் அறிதுகொள்ள வேண்டும்.
     அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த சடங்குகள் பயன்படாது. நீ இதுநாள்வரை கடைப்பிடித்த சடங்குகள் பயன்படாது. நீ எந்த குளத்தில் குளித்தாலும் சரி! அது முடியாது உன்னால், அது எந்த சடங்குக்கும் அகப்படாது. வியாசபகவான் வைத்த செயல்பாடுகள், அந்த குளத்தில் குளித்தால் புண்ணியம், இந்த குளத்தில் குளித்தால் புண்ணியம், இவர்கள் அதை நம்ப மாட்டார்கள். என்ன காரணம்? வினை தீர்வதற்கு தண்ணீரில் குளித்தால் மட்டும் போதாது. அப்ப மகான் கடுவெளிச்சித்தர் சொல்லும் போது,
                காசிக்கோ டில்வினைபோமோ – அந்தக்
            கங்கையோ டில்கதி தானுமுண் டாமோ
      பேசுமுன் கன்கண்கள் சாமோ – பல
            பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
                                -மகான் கடுவெளிச்சித்தர் பாடல்
        ஆக காசிக்குப் போனாலும் தீராது, இராமேஸ்வரம் போனாலும் தீராது.யாரிடம் போவது? உலகமக்கள் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் போகிறான். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நமது சங்கம் தத்துவ ஆராய்ச்சி சங்கம், உன்னதமான உயர்ந்த சங்கம்.
     தத்துவம் எது? ஒன்றில் ஒன்றை அறிந்து கொள்வதே நமது தத்துவம் உயிரில் அறிவதா? உடம்பில் அறிவதா? ஒன்றில் ஒன்றை அறிந்து கொள்வது.
      இந்த சங்கத்தின் வேலை என்ன? ஒன்றில் ஒன்றை அறிவது. இருப்பது ஒன்றுதானே ஐயா! அப்புறம் என்ன இன்னொன்று? இருக்கு, ஒன்றில் ஒன்று இருக்கு. அந்த ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். அது எந்த அறிவு? அதுதான் சிறப்பறிவு அல்லது பக்தி அல்லது வைராக்கியம் அல்லது சான்றோர்கள் நட்பு.
     ஒன்றில் ஒன்று இருக்கு. இது உண்மைதான். நிலக்கடலை மேலே உள்ள தொலை உரித்தால் நிலக்கடலை பருப்பு என்று பெயர். நெல்லின் மீதுள்ள உமியை நீக்கினால் அரிசி என்று பெயர். ஆக ஒன்றில் ஒன்று இருப்பதை நாம் அறிய வேண்டும்.
     ஆக வினை தீர்வதற்கு ஒரே வழி, நான் மட்டும் சொன்னதல்ல, எல்லா ஞானிகளும், இராமலிங்கசுவாமிகளும் அதைத்தான் சொல்வார். ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்றார். ஜீவதயவை மையமாகக் கொண்டாலன்றி, இந்த ஒன்றில் ஒன்றை அறிய முடியாது. ஒன்றில் ஒன்று இருக்கிறது. அதை அறியணும். இதுதான் ஜீவகாருண்யம்.
     ஜீவகாருண்யம் என்றால், உயிர்கள்பால் கருணை காட்டுவதாகும். உயிர்கள்பால் கருணை காட்டுவதற்கு என்னுடைய அறிவு வேலை செய்யவில்லை என்றான். உயிர்கள்பால் கருணை காட்ட நினைக்கிறேன், எனக்கு அந்த வாய்ப்பில்லை என்றான். சரி நானே பசி, பட்டினியாக இருக்கும்போது, நான் எப்படி அன்னதானம் செய்வது?
     தலைவன் இருக்கிறான், ஆசான் ஞானபண்டிதனும், மகான் அருணகிரிநாதரும், மகான் பட்டினத்தாரும் இருக்கிறார்கள். பெரியோர்களை நீ பூஜை செய். பெரியோர்களை பூஜை செய்யும்போது பொல்லாத வ௧றுமையிலிருந்து விடுபட வேண்டுமென்று நீ கேட்கிறாய். சரி! செல்வம் வந்ததையா.அறிவு வறுமையாக இருக்கிறதே, அறிவே இல்லை. ஏதோ நடமாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறப்பறிவு எனக்கு வேண்டுமல்லவா? அறிவுச்செல்வம் வேண்டும். அறிவுச் செல்வம் இருந்தால், நிச்சயம் பொருட்செல்வமும் வரத்தான் செய்யும். அறிவுச்செல்வத்தை கடவுள் கொடுத்தான். பொருட்செல்வம் வேண்டுமல்லவா? அதையும் அவனையே கேட்கிறாய், ஆசான் அகத்தீசர் இருக்கிறார்.  
     எனக்கு அறிவு வேண்டும். எந்த அறிவு வேண்டும்? நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற அறிவு வேண்டும். சரி என்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற அறிவு என்றால், அப்ப ஆன்மாவை, உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்ற அறிவு. என்னை என்பது உடம்பைப் பற்றியா? உயிரைப் பற்றியா? என்னய்யா உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறாயே? உயிரையும் உடம்பையும் சேர்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
     அதுதான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்போ உடம்பையும் உயிரையும் சேர்த்து வாழ வைக்க வேண்டுமல்லவா? உயிரக் காப்பாற்றிக் கொள்வதா? உடம்பைக் காப்பாற்றிக் கொள்வதா? உடம்பைக் காப்பாற்றிக் கொண்டவன் நிச்சயம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான்.
     அப்போ அவன் ஒன்றில் அறிந்து கொண்டான்.
     தலைவனை பூஜை செய்கிறோம், பொல்லாத வறுமை தீர்கிறது.
     தலைவனை பூஜை செய்கிறோம், லோபித்தனம் தீர்கிறது.
     தலைவனை பூஜை செய்கிறோம், தயை குணம் வந்தது.
     தலைவனை பூஜை செய்கிறோம், உடல் மாசைப்பற்றி அறிகிறோம்.
     தலைவனை பூஜை செய்கிறோம், தன்னையே அறிந்து கொள்கிறோம்.
     ஆக ஞானிகளை பூஜை செய்து, தினம்தினம் ஆசான் அகத்தீசரைப் பூஜை செய்து என்ன கேட்க வேண்டும்?
     நான் என்னை அறிந்து கொள்ள வேண்டும், என்னை நான் உயர்த்திக் கொள்ள வேண்டும். என்னை நான் உயர்த்தி கொள்ள நினைத்தபோதே, என்னை நீ சார்ந்து கொள்கிறாய். இந்த அறிவு நீதான் தந்திருக்கிறாய். உன் திருவடியைப் பற்றியதால் தினந்தினம் உன் ஆசியைப் பெற்றிருக்கிறேன். அந்த ஆசியின் காரணமாக உன் ஆசியைப் பெற்றேன். அந்த ஆசியின் காரணமாக என்னை நான் உயர்த்திக் கொள்ள நினைத்தேன்.
     நான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பும் நீ கொடுத்த பிச்சைதான் என்றான். என்னைப்பற்றி அறிகின்ற அறிவு ஓர் கடுகாக இருந்தாலும் சரி, என்னைப் பற்றி அறிகின்ற அறிவு நீ கொடுத்ததாகும். நீ கொடுத்த அறிவு துணை கொண்டே நான் என்னை உயர்த்திக் கொண்டேன்.
     ஆக நான் உயர்ந்தேனா? நீ உயர்ந்தாயா? நீயும் உயர்ந்தாய், நானும் உயர்ந்தேன். உன் திருவடியை பற்றியதால் நான் உயர்ந்தேன். தானும் வாழ்ந்தேன், தலைவனும் வாழ்ந்தான், ஆசி வந்தது, அறிவு வளர்ந்தது, ஆசியால் அறிவு வந்தது. அறிவால் தன்னை அறிந்தான். தன்னை உயர்த்திக் கொண்டான். தன்னை உயர்த்திக் கொள்வது என்பது, தலைவன் ஆசிதான்.
     தினம் ஆசான் ஞானபண்டிதனையோ, ஆசான் அகத்தீசரையோ பூஜை செய்கிறோம். பூஜை செய்ய செய்ய பொல்லாத வினைகள் தீர்கிறது, வினை தீராமல் ஒருவனுக்கு சிறப்பறிவு வரவே வராது. அதுதான்,
     போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில் வைத்துப் புண்ணியராயினர்
அறியக்கூடிய அறிவு இல்லையென்றால் அது சிறப்பறிவாக ஏற்றுக்கொள்ள மாட்டான், தூக்கி எறிந்துவிட்டு போவான். ஆக அடிப்படை, பெரியோர்களை வணங்குவோம். வேறு எந்த சடங்குகளுக்கும் ஆட்பட மாட்டோம்.
     ஆசான் திருமூலதேவரையோ, மகான் சுந்தாரானந்தரையோ, மகான் போகமகாரிஷியையோ பூஜை செய்வோம், ஆசான் அகத்தீசரை பூஜை செய்வோம்.
     பூஜை செய்யும்போது என்ன கேட்க வேண்டும்? பொல்லாத வறுமை தீர வேண்டும். அறிவு வறுமை தீர வேண்டும். எங்களுக்கு போதிய கல்வியறிவு இல்லை, ஆறறிவு என்று சொல்கிறான். ஆறறிவு இருக்கிறது.
     ஆனால் ஆராயக்கூடிய அறிவு எனக்கு இல்லை. ஆராயக்கூடிய அறிவு நீர் தர வேண்டும். இருக்கக்கூடிய அறிவை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும்.
     ஆக இப்ப இருக்கக் கூடிய அறிவு, துன்பம் வந்தால்தான் சிந்திக்கிறான். ஆசான் ஆசியிருந்தால் துன்பம் வருவதற்கு முன்னே அறிவான். அதுதான் சொன்னார். அறிவுடையார் ஆவதறிவர் என்றார். பெரிய வார்த்தை இது.
      அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
      அக்துஅறி கல்லா தவர்.
                                                  -திருக்குறள்  – அறிவு உடைமை – குறள் எண் 427
                ஆவது அறிவது, அழிவது அறிவது என்றார். ஆவது அறிபவன், நிச்சயம் அழிவது அறிவான். ஞானிகள் வார்த்தை ஒரு நுட்பமான வார்த்தை. மதி நுட்பம் உள்ளவன். ஆவது அறிபவன், அறிவுடையார் ஆவது அறிவார். ஏனய்யா ஆவது என்றான்.
     அழிவதைப் பற்றி அறியக்கூடியவன் ஆவதைப் பற்றி அறிவான். பெரிய வார்த்தை இது.
     சொன்னது ஞானிகள் அல்லவா, மகான் வள்ளுவப்பெருமான் ஞானி அல்லவா, மிகப்பெரிய நுட்பமான ஆசான் வள்ளுவப்பெருமான்.
     ஆக்கத்தைப் பற்றி அறிபவன் நிச்சயம் அழிவைப்பற்றி அறிவான். இதெல்லாம் பெரியவங்க பேசுவது, இதை பெரிய வல்லமை உள்ள ஆசான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்.
     அறிவுடையார் ஆக்கத்தை அறிவான் என்றார். ஆக்கத்தை அறிபவன் அழிவை அறிவான் அல்லவா.
     நம்மிடம் இருக்கும் அறிவின் துணைக்கொண்டு என்ன செய்ய வேண்டும்? தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன்னை வளர்த்துக் கொள்வது உடம்பையா? உயிரையா?
     தன்னை வளர்த்துக் கொள்வது என்பது உடம்பையும் உயிரையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். நரகத்தைத் தள்ளுவதா, சொர்க்கத்தை வைத்துக் கொள்வதா என்றான்.
     தன்னை வளர்த்துக் கொள்பவன் நிச்சயமாக நரகத்தை நீக்கிக் கொள்வான்.
     ஞானிகள் அத்தனைபேரும் நரகத்தை நீக்கி சொர்க்கத்தை வைத்திருக்கிறான்.
     உமியை நீக்கி அரிசியை வைத்திருக்கிறான். கிழங்கின் மேல் தொலை நீக்கி கிழங்கை வைத்திருக்கிறான். இதுதான் அவன்.
     ஆக அவனுடைய ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அறிந்தால் மட்டும் போதுமா? அப்படியானால் அவர்களெல்லாம் இப்படி நூல் எழுதி வைத்திருப்பார்களா?
     அறிவுடையார் ஆவதரிவார் என்று சொல்லும்போது எந்த அறிவு என்று கேட்டான். தன்னைப் பற்றி அறியும் அறிவுதான் தகைமை அறிவு. மற்ற அறிவெல்லாம் பயன்படாது. சரிய்யா யாரை வணங்குவது? பெரியோரை வணங்கி கேட்க வேண்டும்.
     என்னை நான் அறிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை அறிந்து கொள்ள வேண்டும். உன்னை அறிந்து கொண்ட அன்றே நான் என்னை அறிந்து கொள்வேன் என்றான். அவன் யார்? காமவிகாரமற்றவன், சாந்தமானவன், தன்னடக்கம் உள்ளவன், ஜீவகாருண்யம் உள்ளவன், உயர்ந்தவன். அவனைப் பற்றி அறிகின்ற அறிவு என்று வந்ததோ, அன்றே நம்மைப் பற்றி அறிகிறோம்.
     ஆக தினம் நாமத்தைச் சொல்லாமல், தினந்தினம் நாமஜெபம் செய்யாமல் நிச்சயமாக அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து பூஜை செய்வோம்.
     பூஜை செய்து பூஜை செய்து அறிவைப் பெறுவோம். அறிவைப் பெற்று பெற்று தன்னைப் பற்றி அறிவோம். தன்னைப் பற்றி அறிந்து மாசை நீக்குவோம்.
    
     மாசு நீக்கக் கற்று கொள்வோம். மாசு நீங்க நீங்க சிறப்பறிவு வரும்.
    
     ஆக ஒன்றே ஒன்று சடங்குகளை விட்டு, மாதந்தோறும் அன்னதானம் செய்தலும், தினம் தியானம் செய்தலுமாகிய ஒன்றை செய்தால், நிச்சயமாக ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம், நாமும் உயரலாம், நாட்டையும் உயர்த்தலாம்.
     இந்த சங்கம் தெளிவான பாதையை அறிந்த சங்கமாகும். என்ன காரணம் நாம் வணங்கியவர்கள் அத்தனை பெரும் ஞானிகள்தான்.
     எந்த காரணத்தை முன்னிட்டும் செத்தவனை வணங்க மாட்டோம். எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த ஆரவார சடங்குகளில் ஈடுபட மாட்டோம்.
     இவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள், மரணத்தை வென்றவர்கள், எமனை வென்றவர்கள். ஆசான் அருணகிரிநாதர், மகான் பட்டினத்தார் போன்ற ஞானிகளை வணங்க வேண்டும், நாங்கள் ஆசி பெற்றுக் கொண்டுள்ளோம்.
     நாம் சொகின்ற கருத்தை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ, எந்த சங்கத்திற்குமே முடியாது. மற்றவர்களைப்பற்றி நமக்கு சிந்திக்க நேரமில்லை.
     நாம் நிலை உயர்ந்திருக்கிறோம், நாட்டை உயர்த்துவோம்.உண்மை ஆன்மீகத்தை நாடெங்கும் பரப்புவோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பாடுபடுவோம் என்று கூறி முடிக்கிறேன் வணக்கம்.
     அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
      முன்னோனைக் காட்டி விடும்.
                                                                ஔவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 10
                பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
      தரமாறிற் றோன்றும் பிறப்பு.
                                                        ஔவைக்குறள் – பிறப்பின் நிலைமை – குறள் எண் 2
        இங்கு கூறப்பட்டுள்ள கருத்துகள் ஔவைக்குறளின் சாரமாகவும் உள்ளதையும் அறியலாம்.
     ஆகவே இங்கு கூறப்பட்ட கருத்துக்களின் சாரம், ஒன்றில் ஒன்றை அறிவதே ஆகும்.
     இதுவரை நான் பேசிய கருத்துகள் எல்லாம் யாம் பேசியது அல்ல.
     எனது ஆசான் ஞானத்தலைவன் முருகப்பெருமானே எனது வேண்டுகோளுக்கு இணங்கி, எம்மை சார்ந்து எம்முள் இருந்து பேசிய கருத்துகளாகும் என்பதை அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
     இங்கு இதை நான் பேசியதாக எண்ணக் கூடாது பரப்பிரம்மம் முருகப்பெருமானே பேசியதாக அர்த்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0154268
Visit Today : 55
Total Visit : 154268

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories