பட்டினத்தாரின் யோகமும் ஞானமும்
19.08.1988 என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை 

ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்
நாம் மகான் பட்டினத்தார், “அன்னையே! ஆருயிரே! அன்பே! என்னிரு கண்மணியே! மௌன தேசிகனே! நான் செய்த பாவங்களோ கணக்கிலடங்காதது. எல்லா பாவத்தையும் மன்னித்து எனக்கு நல்லறிவு தரக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு, நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மகான் பட்டினத்தாரிடம் கண்ணீர் விட்டு வேடியதாலே அவர் அருள் செய்தார். இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் மகான் பட்டினத்தாரிடம் வீழ்ந்து வணங்கி கேட்க வேண்டும். மகான் பட்டினத்தாரை ஏன் வணங்க வேண்டும்? மகான் பட்டினத்தார் தன்னை அறிந்தவர். ஒருவன் ஞானியாகிறான் என்றால் அவன் இடகலை பின்கலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மகான் பத்ரகிரியார் சொல்கிறார்,
காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்
வாசி தனிலேறி வருவதினி யெக்காலம்.
மகான் பத்ரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல் – கவி எண் 93
பொருளை அறியாத தன்மையால், உண்மை பொருள் தெரியும் வரையில் ஒவ்வொரு தளமாக சுற்றுவான். பின்பு உண்மைப்பொருள் தெரிந்த பின் ஒரே இடத்தில் அமைதியாக இருப்பான். ஊர் ஊராக கோவில் கோவிலாக சுற்றி கால் ஓய்ந்து போகக்கூடாது என்று மகான் பத்ரகிரியார் சொல்கிறார்,
     காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல் வாசி தனிலேறி வருவதினி யெக்காலம் – ஞானிகள் வாசி என்னும் மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்த மக்கள். அதுமட்டுமல்ல, அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது,
காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை – காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம்.
    மகான் பட்டினத்தார் – ஞானம் 100 – கவி எண் 84
ஒன்றான காரணம் எப்போது வரும் என்று கேட்டார். காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை – இந்த வாய்ப்பை அவர் பெறுவதற்கு சாட்சாத் பரப்பிரம்ம சொரூபியாகிய ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்றினார். ஞானிகள் எல்லோரும் ஆசான் அகத்தீசரின் பாதத்தைப் பற்றி வந்த மக்கள்தான். ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்றினால்தான் இடகலை பின்கலைப் பற்றிய இரகசியத்தை அறிய முடியும். இதத்தான் ஆசான் பட்டினத்தார் சொல்கிறார், காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை காண்மனமே மாலயனுங் காணரிதை – இந்த இரகசியத்தை பிரம்மா, விஷ்ணு காண முடியாது. ஏனென்றால் அவர்களெல்லாம் காலத்தால் அழியக்கூடிய மக்கள். காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை – இடகலையும், பின்கலையும் சேர்ந்து ஒன்றானால் அன்றி, ஒருவன் பிறவித் துன்பத்தைப் பொடியாக்க முடியாது. இங்கே இருப்பவர் பிறவித் துன்பத்தைப் பொடியாக்கிய மாபெரும் யோகி, எமனைப் புறமுதுகிடச் செய்தவர், மாபெரும் யோகி ஆசான் பட்டினத்தார் அவர்கள்,
காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை – காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம்.
    மகான் பட்டினத்தார் – ஞானம் 100 – கவி எண் 84
அம்பலம் என்பது புருவமத்தி. இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஞானிகள் அருளிய நூல்களையும் படிக்க வேண்டும். அதனால் நாம் வணங்கக் கூடிய மகன் பட்டினத்தார் சாதாரணமாக நினைக்க வேண்டாம். அவர் மாபெரும் யோகி.
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
– திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் – 80
                        மகான் திருமூலர் அப்படி சொல்லும்போது, இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி – மனிதன் ஒரு குறிப்பிட்ட காலம்தான் நோயில்லாமல், நரைதிரையில்லாமல் இருக்க முடியும். வினாடிக்கு வினாடி மாற்றம் அடையக்கூடிய இந்த உடம்பை அப்படியே நிறுத்தி வைக்கக் கூடிய ஆற்றல் யோகிகளுக்கு உண்டு. அவன் யார் என்று கேட்டான். ஒரு மனிதன் நூறு ஆண்டுகள் அல்லது நூற்றியிருபது ஆண்டுகள் வாழ முடியும், நோயற்ற வாழ்வு அல்லது நரைதிரை அற்ற வாழ்வு. இடகலையையும் பின்கலையையும் புருவமத்தியில் செலுத்திய அந்த வினாடியில் இருந்து, அந்த ஆற்றலைப் பெறுகிறான்.
     இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி – யோகிகள் இடகலையையும், பின்கலையையும் சேர்த்து இந்த உடம்பை நிலைபெறச் செய்வார்கள். வினாடிக்கு வினாடி மாற்றம் அடையக் கூடிய பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட இந்த உடம்பை ஞானிகள் நிலைபெறச் செய்வார்கள். அப்படியே சூனியப் பொருளாக இருக்கக் கூடிய ஒன்றிற்கும் சேர்த்து முடி போடுகின்ற மக்கள் யோகிகள். இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே – எப்போது இரவு பகல் அற்ற இடம் என்று கேட்டான். இந்த சுவாசம் இப்படித்தான் (கீழே) வந்து செல்லும் இதற்கு (நாசிக்கு) மேலே செல்ல முடியாது. இராப்பகல் அற்ற இடத்தே என்றார். அவர்கள் வாழ்ந்த இடம், இரவு, பகல் என்ற இடகலையும், பின்கலையும் செல்ல முடியாத இடம் என்றார். அங்கே நாங்கள் வாழ்ந்தோம்.
மகான் பட்டினத்தார் இராப்பகல் அற்ற இடத்தில் வாழ்ந்தார். அதனால்தான் அவரால் மரணமிலாப்பெருவாழ்வு பெற முடிந்தது. என்றைக்கு இடகலையும், பின்கலையும் புருவமத்தியில் ஒடுங்குகின்றதோ, அந்த வினாடியில் இருந்து கபம் அற்றுப் போச்சு.
சாய்க்கச் சாய்க்கச் சரிந்திடுங் கோழையும்
வாய்க்க வாய்க்க வழலையு மற்றது
தேய்க்கத் தேய்க்கத் செனித்திடுஞ் சேத்துமந்
தோயக்கத் தோயக்கத் சுழிமுனை காணுமே.
                –மகான் திருவள்ளுவர் – ஞானவெட்டியான் – கவி எண் – 1270
                ஞானிகளெல்லாம் நம்மை வஞ்சிக்கக் கூடிய, நமக்கு எமனாக இருக்கக் கூடிய கோழை என்று சொல்லப்பட்ட கபத்தை வேரோடு அருத்து எறிந்தவர்கள் இராப்பகல் அற்ற இடம் என்றார்.
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
      இந்த வாய்ப்பை நான் பெறுவதற்கு எனது ஆசான் நந்தீசன் என்பர் சொல்லப்பட்ட மும்மலம் வென்ற முதல்வன், கேட்பதெல்லாம் தரக்கூடிய ஆற்றல் பெற்றவன் பாதத்தைப் பற்றியதால் எனக்கு இந்த ஆற்றல் கிடைத்தது என்று சொல்வார் மகான் திருமூலதேவர். அதே கருத்தை இவர் சொல்வார்.
      எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரமிவை
      அத்தனையு மண் தின்ப தல்லவா – வித்தகனார்
      காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
      மேலைக் குடியிருப்போ மே.
                                மகான் பட்டினத்தார் பாடல்கள் – பொது – கவி எண் –  24
      எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரமிவைஇதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆடு மாடு என்று நினைக்காதே! முந்நூறு நாள் கருப்பையில் இருந்து, அணு அணுவாக மாறும். மனிதன் முதலில் ஆரம்பத்தில் எப்படி இருப்பான். ஒரு பெண்ணுடன் ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தான். உடலுறவு கொள்ளும்போது சிந்தனையாக இருந்து முயற்சியில் ஈடுபட்டான். அப்போது சிந்தனை மாற்றமடைந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு பிறகு சுரோணித சுக்கிலமாக மாறும். சிந்தனையாக இருந்தது. உடலுறவுக்குப் பின் சுரோணித சுக்கிலமாக  மாறியது. அந்த வினாடியிலிருந்து, வினாடிக்கு வினாடி மாற்றம் அடையும். சிந்தனையாக இருந்தபோது, மனிதன் சிந்தனையாக அரூப வடிவில் இருந்தான், பிறகு கூட்டுறவானான், இப்படியே வினாடிக்கு வினாடி மாற்றமடையும்.
     வினாடிக்கு வினாடி மாற்றமடைவது எப்போது நிற்கும்? என்றான். என்றைக்கு இந்த சுவாசம் நின்று விடுகிறதோ, அன்று பரிணாம வளர்ச்சிக்கு உட்படாது இந்த தேகம். அப்போது பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபடுகிறான்.
     எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரம் – ஒரு நாளா? இரு நாளா? முன்னூறு நாட்கள் வினாடிக்கு வினாடி மாற்றம் அடையக் கூடியது. சிந்தனையாக இருந்த ஒன்று,  பிறகு கூட்டுறவால், வினாடிக்கு வினாடி மாற்றமடைந்து, பிறகு ஒரு குறிப்பிட்ட ஆண்டு, என்பது, எண்பத்தைந்து ஆண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் உயிரோடு இருப்பான். பிறகு அந்த வளர்ச்சி அப்படியே நின்று விடும். நின்றால் அவனுக்கு மரணம். அனால் யோகி என்ன செய்கிறான், இந்த வளர்ச்சிக்கும், வளர்ச்சி அல்லாத ஒன்றாகிய சூட்சுமத்திற்கும் முடிச்சு போடுவான்.
     அதாவது தூலத்திற்கும் சூட்சுமத்திற்கும் முடிச்சு போடுவான். தூலத்தையும் சூட்சுமத்தையும் இணைக்கிறான் யோகி. இது சின்ன விசயமல்ல. தூலத்திற்கும், சூட்சுமத்திற்கும் முடிச்சு போடுகிறான் யோகி. அது சின்ன விசயமோ? இல்லை. அது கல்வியால் முடியாது. கல்வி யான் கற்றேன் என்று சொன்னால் அவன் இதைக் கற்று இருக்க வேண்டும். “சாகாத கல்வியே கல்வி ஒன்று சிவம், தான்என அறிந்த அறிவே தகும்அறிவு” என்பார் ஆசான் இராமலிங்கசுவாமிகள்.
     எது கல்வி? எவன் தன்னை வென்றானோ, எவன் மரணத்திலிருந்து விடுபடுகின்றானோ, எவன் எமனைப் பொடி பொடி ஆக்குகின்றானோ, எமனைப் புறமுதுகிட செய்கின்றானோ, அவன் தான் கற்றவனாக மதிக்கப்படுவான். அவர்கள்தான் யோகிகள்.
      எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரமிவை அத்தனையு மண் தின்ப தல்லவா – அவன் இதை எப்படி கற்றான். வித்தகனார் காலைப்பிடித்து மெள்ளக் – செத்தவனை அல்ல! யோகிகள் அத்தனைபேரும் வித்தகன் காலைப் பிடித்தவர்கள். சதுர்ப்பாடு உடையவன் என்று சொல்வான். அவரல்லவா யோகி! மகான் பட்டினத்தார் வித்தகன் பாதத்தைப் பற்றியவர்.
   செத்துப் பிறக்கின்ற தேவரைத் துதிப்போர்க்கு
   முத்திதான் இல்லையடி – குதம்பாய்
   முத்திதான் இல்லையடி.
         – மகான் குதம்பைச்சித்தர்
     மகான் பட்டினத்தார், எமனை வென்ற மாபெரும் யோகி ஆசான் அகத்தீசரை வழிபட்டதனால் வித்தகனை ஆனார்.
     காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
     மேலைப் குடியிருப்போ  மே.
     அப்போது மேலைக் குடியிருப்போமே என்றார். அப்போது நாம் வழிபடுகின்ற மாபெரும் யோகி யார் என்று கேட்டான்.
     வித்தகனார் காலைப் பிடித்துமெள்ள – மெல்ல ஆனால் ரொம்ப இலகுவாக. இந்த துறை இலகுவான துறை அல்ல, கடினமான துறை. காரணம் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் உப்பில்லா உணவு மேற்கொண்டு தினம் உள்ளம் உருகப் பூசிக்க வேண்டும். எப்படி பூசிக்க வேண்டுமென்றால்,
     “அன்னையே! நான் செய்த பாவமோ கணக்கிலடங்கா! எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் சரி, நீயோ யார் எதைக் கேட்டாலும் கொடுக்கும் தகைமை உள்ளவர். மகான் பட்டினத்தார் அவர்களே! இந்த பாவியின்பால் கருணை காட்டுங்கள்!” என்று கேட்டால், “அஞ்சேல்! இந்த பாவியின்பால் ஆதரிக்கக்கூடிய பெருந்தகையாளனே! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! என்று பூஜை செய்ய வேண்டும். இப்படி உள்ளம் உருக பூஜித்தாலன்றி மகான் பட்டினத்தார் ஆசியைப் பெற முடியாது. இந்த செயலுக்கு பெரிய கல்வி அறிவு தேவை இல்லை. சாதாரண கல்வி போதும். காலை எழுந்திருக்க வேண்டும். தீபம் ஏற்றி “ஆசான் பட்டினத்தார் அவர்களே! இந்த பாவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி, “என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உனக்கே அர்ப்பணம் செய்கிறேன். இந்த பாவியை ஏற்றுக் கொண்டு நீ என்னென்ன பெற்றாயோ, நீ என்னென்ன கற்றாயோ, நீ பெற்றது அனைத்தும் நான் பெற வேண்டும். நீ கற்றது அனைத்தும் நான் கற்க வேண்டும். நீ பெற்றதெல்லாம் நான் பூரணமாகப் பெற்று விட்டு, உன்னை வெறும் கையாக அனுப்ப வேண்டும்! அதற்கு நீயே அருள் செய்ய வேண்டும்!”
     “நீ பெற்றது அனைத்தையும் நான் பெற வேண்டும். நீ பெற்ற தவம், நீ பெற்ற கல்வி, நீ செய்த தவம், தர்மம் அத்தனையும் நான் பூரணமாக உன்னிடம் கொள்ளையடிக்க வேண்டும். உன்னை வெறும் ஆளாக அனுப்ப வேண்டும்! அதற்கு நீயே அருள் செய்ய வேண்டும்!” என்று கேட்க வேண்டும். “என்னப்பா! நான் எத்தனை பேருக்கு ஆசி தந்து என்னுடைய அருள் கடாட்சத்தால் ஞானியாக்கி இருக்கிறேன். நீ என்னிடம் இருக்கின்ற அத்தனை அருளையும் கொள்ளையடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாய்! உண்மையே! ஆனால் ஒரே ஒரு உபாயம். வீண் ஆரவாரம் இல்லாது அந்தரங்க பூஜை செய்தால், என் சக்தி அனைத்தையும் நீ கொள்ளையடிக்க முடியும். என் சக்தி அனைத்தையும் நீ கொள்ளையடிக்க உன்னால் முடியும். “வித்தகனார் காலைப் பிடித்துமெள்ளக் என்றார்.
     எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரமிவை
      அத்தனையு மண் தின்ப தல்லவா – வித்தகனார்
      காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
      மேலைக் குடியிருப்போ மே.
                                மகான் பட்டினத்தார் பாடல்கள் – பொது – கவி எண் –  24
     யோகிகள் இடகலையையும், பின்கலையையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தி விடுவார்கள். இந்த இரகசியத்தை அவன் சொன்னாலன்றி முடியாது. அதைப் புரிந்து கொல்லாமல் வீண் ஆரவார பூஜை செய்தால் என்ன ஆகும்,இதை திருமூலதேவரே சொல்கிறார்,
     சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
     அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்றில்லை
     அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
     குருவை வழிபடின் கூடலும் ஆமே.
                 – திருமந்திரம் கவி – 2119.
     சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் – தேவர் என்றால் எங்கேயோ ஆகாசத்திலிருந்து வருகிறார் என்று நினைக்க வேண்டாம். தலைவன் ஒருவன் இருக்கிறான் என்று எவன் ஒருவன் நம்புகின்றானோ, அன்று அவன் தேவன்! தலைவனைப் பற்றி சிறிதும் நினைக்காதவன் மனிதன். தலைவனே இல்லை என்று சொல்பவன் நரன், அசுரன். தெய்வம் ஒன்று இருக்கிறது என்று நம்பினாலே அவன் தேவன் தான். இதை சொல்கிறார்,
    
     சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
     அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்றில்லை
     அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
     குருவை வழிபடின் கூடலும் ஆமே.
                 – திருமந்திரம் கவி – 2119.
     மகான் திருமூலதேவர், “ஏ! தேவர்களே! நீங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டு, ஈசனை பூஜை செய்கிறீர்கள். ஆனால் உங்களால் ஒன்றும் பெற முடியாது என்கிறார். காரணம் வழிபடுகின்ற முறை உங்களுக்கு தெரியாது. மணியடித்து செய்வது பூஜையல்ல! வெறும் பொங்கல், புளியோதரை வைத்து செய்வது பூஜையல்ல! இதை உலகத்தார்கள் செய்வார்கள். உலகத்தார் செய்வதெல்லாம் இதுதான்.
     சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் – எண்ணிடலடங்காதவர்
வழிபட்டார்கள். கோடான கோடிக்கணக்கான மக்கள், கல்வி அறிவு உள்ள மக்கள், சந்தமுள்ள  மக்கள், சிறப்புள்ள மக்கள் வழிபட்டார்கள். எண்ணிலா தேவர். அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்றில்லை – அவனை வழிபட்டு எந்த விதமான ஆக்கமும் இல்லை. அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே – குருவை வழிபடா விட்டால் உனக்கு ஞானவாழ்வே கிடையாது. அப்போது சிவனை வழிபடுகின்றவன் யாதொரு நன்மை அடையவில்லை என்று சொல்கிறான். காரணம் என்னவென்று கேட்டாம். நீ சிவனை அணுக வேண்டும் என்றால் ஆசான் தயவு இருக்க வேண்டும். ஆசானை சுட்டிக் காட்டுகிறோம், அவரை யாரோ என்று நினைக்காதே!
     குருவே சிவமெனக் கூறினன் நந்தி
     குருவே சிவமென் பதுகுறித் தோரார்
     குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
     குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
                                              திருமந்திரம் – சிவகுரு தரிசனம் – கவி எண் – 150
              சாதரணமாய் நினைக்காதே! குருவே சிவமெனக் கூறினன் நந்தி – சிவன் வேறு, அவன் வேறு என்று நினைக்காதே! காரணம், நீ வணங்கக்  கூடிய சிவனும் மும்மலம் வென்றவன், முதல்வன்தான். மும்மலம் வென்ற முதல்வன். ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழில் செய்யும் வல்லவன். இங்கிருக்கும் மகான் பட்டினத்தாரும் அந்த ஆற்றல் உள்ளாவர்தான்.இங்கிருக்கும் மகான் பட்டினத்தாரும் அந்த ஆற்றல் உள்ளவர்தான். இங்கிருக்கும் மகான் பட்டினத்தார் மாபெரும் யோகி! தாயினும் இனிய தயவுடைய பட்டினத்தாரும் அவரும் ஒன்று. குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் – இங்கிருக்கும் மகான் பட்டினத்தாரும், ஆதிசிவனும் ஒன்று என்று நினைக்க வேண்டும். சிறப்பறிவு உள்ள மக்கள்தான் இப்பிட் செயல்பட முடியும். குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் – அவனே சிவனுமாய் இருப்பான், கோன் என்ற தலைவனாகவும் இருப்பான். குருவே யுரையுணர் வற்றதோர் கோவே – அவனே சிந்தையிலும்,உரையிலும் அகப்பட மாட்டான். ஆக, இவர்கள் அத்தனைபேரும் வாசி வசப்பட்ட மக்கள். இவர்கள் அத்தனைபேரும் அந்தரங்க பூஜை செய்த மக்கள். இவர்கள் அத்தனைபேரும் உயிர்கள்பால் கருணை உள்ள மக்கள். உயிர்கள்பால் கருணை வேண்டும்.
     இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
     உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
     கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
     மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே
              – திருமந்திரம் – அன்புசெய்வாரை அறிவன் சிவன் – கவி எண் – 280
              இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் நீ எந்த அளவுக்கு மக்கள்பால் கருணை காட்டுகிறாயோ, அந்த அளவிற்கு ஈசன் அருள் செய்வான். உயிர்கள்பால் கருணையில்லாது மற்ற உயிர்களுக்கு நீ துன்பம் தந்தால், ஈசன் ஆசியை பெற முடியாது என்பான். இப்படி போதிப்பவர் மகான் பட்டினத்தார் திருவிடைமருதூரில்,
உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணை உண்டுணவிங்கு
அடகோ யிலையுண் டருந்தத்தண் ணீருண் டருந்துணைக்கே
விடையேறும்ஈசர் திருநாம முன்டிந்த மேதினியில்
வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.
   – மகான் பட்டினத்தார் பாடல்கள் – பொது – கவி எண் – 1
             
              என்று சொன்னவர் மகான் பட்டினத்தார். அவர் மாபெரும் யோகி.
இருக்க மிடந்தேடி யென்பசிக்கே யன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தா லுண்பேன் – பெருக
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தலும் போகேன் இனி.
                              – மகான் பட்டினத்தார் பாடல்கள் – பொது – கவி எண் 9
              என்று சொன்ன மாபெரும் யோகி. திடமான மகான்! ஒருவன் வந்து விருந்துக்கு விரும்பி அழைத்தால் கூட, அதை துச்சமான ஒதுக்கும் ஆற்றல் உள்ளவர். நாம் வணங்குகின்ற தலைவனுக்கு உண்டு! இப்பேர்ப்பட்ட மகான் இந்த ஊரில் இருக்கிறார். அன்பர்கள் யாரும்கவனிக்கவில்லை என்று நான் வருந்துகின்றேன். காரணம் என்ன? வருங்காலம் ஞானசித்தர் காலம். இனி தாமதிப்பதற்கு வாய்ப்பில்லை.
     வருங்காலம் ஞானசித்தர்க்காலம். திடமான மகான். இங்கு வந்து தான் அன்பர்கள் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்து ஆசி பெற வேண்டும். மகான் பட்டினத்தார் கோவணம் கட்டிக்கொண்டு திருவிடைமருதூரில் அமர்ந்திருக்கும்போது, அங்கே ஒரு மடாதிபதி இருந்தானாம்.
     கமண்டலம் தரித்து, நெற்றியில் பட்டை இட்டுக்கொண்டு, பார்த்தால் சாட்சாத் பரப்பிரம்ம சொரூபி போல இருந்தானாம், ஈசன் போன்று இருந்தானாம். இவர் சும்மா சாதாரணமாக கோவணம் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
    
     உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணை உண்டு என்று திருவிடைமருதூரில் அமர்ந்திருந்தார். சும்மா சாதரணமாக இருந்தாராம். அங்கே இருந்த மடாதிபதியைக் காண்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றார்கள்.
     மகான் பட்டினத்தார் சாதாரணமாக பத்து அன்பர்களுடன் உட்கார்ந்திருந்தார். உண்மை தெரிந்த மகான் அல்லவா! அதனால் அப்படி இருந்தார். அங்கே மடாதிபதியிடம் வந்தவர்களில், ஒருவன் என்ன செய்தான்? “இவனா ஞானி? பிச்சைக்காரன் போலிருக்கிறது, இவனிடம் போய் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறீர்கள்!” என்றான். அவர் அப்படியே பார்த்தார்! அங்கே அமர்ந்திருந்த அன்பர்களுக்கெல்லாம் கோபம். அந்த அன்பர்கள் “என்னய்யா, ஐயனே! உங்களை இவனோ பிச்சைக்காரன். உங்களைப் பார்ப்பதற்கு அவசியமில்லை என்று சொல்கிறான்” என்று சொன்னார்கள்.
    
     அதற்கு மகான் பட்டினத்தார், “அவன் மீது குற்றமில்லை! அவன் செய்த வினைப்பயன்! என்னைத் தெரிந்து கொள்வதற்கு அவனுக்குத் தகுதி இல்லை!” என்றார். அவர் சொல்லும்போது,
              பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
     அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
     வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
     எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
– மகான் பட்டினத்தார் பாடல்கள் – திருவேகம்ப மாலை – கவி எண் – 17
              பொல்லா இருளகற் றுங்கதிர்உலகத்திலுள்ள எல்லா இருளையும் இருட்டையும் நீக்கக் கூடிய கதிரவன் வரவை எல்லா உயிர்களும் மிக்க ஆவலோடு எதிர்பார்க்கும். ஆனால் கோட்டான், ஆந்தை மட்டும் அதைக் கண்டான் வெறுக்கும். பொல்லா இருளகற் றுங்கதிர் – எல்லா உயிர்களும் அன்போடும், ஆர்வத்தோடும் எதிர்பார்க்கக் கூடிய சூரிய உதயத்தை ஆந்தையும், கோட்டானும் வெறுக்கும் என்று சொன்னார். பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு அல்லா யிருந்திடும் ஆறொக்கு மே – அதற்கு மட்டும் அது வெறுப்பாக இருக்கும். கோட்டானுக்கு எப்படி இருக்கும், கதிரவன் தோற்றம் வெறுப்பாக இருக்கும். வல்லார் அறிவார் – என்னை யார் அறிவார் என்றால் வல்லார் அறிவார்.
     “அறியார் தமக்கு மயக்கங் கண்டாய் எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே” என்றார். “என்னைஅறியக்கூடிய தகுதி இவனுக்கு ஏது? இப்படி அறியாதவனை கோட்டான்” என்று ஆசான் பட்டினத்தார் சொன்னார். வல்லார் அறிவார் என்னை! யார் அறிவான் என்றால், என்னை வல்லவன்தான் அறிவான். ஆக இப்படி கோட்டான் என்று சாடுவது எதனால் என்றால், வருங்காலம் ஞானசித்தர் காலம். அதனால் மகான் பட்டினத்தாரை நாமெல்லாம் பூஜித்து ஆசி பெற வேண்டும். இப்படி நாங்கள் பேசுவதற்கு அடிப்படைக் காரணம் வருங்காலம் ஞானச்சித்தர் காலம்.  இனி தாமதிக்க முடியாது. இங்கே மாபெரும் யோகி பட்டினத்தார் இருக்கிறார். அவரை நாமெல்லாம் வணங்கி பூஜித்து அவருடைய ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் தத்துவத்தை அறிந்து இடகலையையும், பின்கலையையும் சேர்த்தவர். இடகலையையும், பின்கலையையும் சேர்த்ததால்தான் இந்த வாய்ப்பினைப் பெற்றார். அவர் எப்படி பூஜை செய்து இப்படிப்பட்ட ஆசியை பெற்றார்? இதை தனது பாடலில் மகான் பட்டினத்தார் சொல்வார்,
உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவதுள் இண்மையென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே.
                               – மகான் பட்டினத்தார் பாடல்கள் – பொது – கவி எண் – 61
              யார் அவர்? யோகி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உளியிட்ட கல்லையும் – இங்கே இருக்கும் சிற்பங்கள் அத்தனையும், ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான இலட்சக்கணக்கான முறை சுத்தியால் அடி வாங்கப்பட்ட சிற்பங்கள். இப்படி சொல்வதால் ஆசான் பட்டினத்தாரை நாத்திகவாதி என்று நினைக்க வேண்டாம். இதெல்லாம் சரியை, கிரியையோடு நின்றுவிட வேண்டும். இந்த வழிபாடெல்லாம் சரியை, கிரியையோடு நின்று விட வேண்டும், கோவில் வழிபாடெல்லாம். அடுத்து அவனுக்கு ஒரு வழிபாடு ஒன்று உண்டு. அது எது என்று கேட்டான்.
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரன்டை யுத்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.
                                              – மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் –21
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ
              உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேன்ஆயிரக்கணக்கான, பல ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான முறை சுத்தியலால் அடிபட்ட சிற்பத்தை நான் வணங்கவில்லை! ஒப்பிட்ட சாந்தை என்று சொல்கிறார். சுதையால் செய்யப்பட்ட சாமியை நான் வணங்கவில்லை. அப்படி வணங்கினேன் ஒரு காலத்தில், புரியாத காலத்தில். ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் – ஒவ்வொரு ஆண்டும், ஒரு கல் தொட்டியில் புலியை ஊற வைத்து, இந்த செப்புச் சிலைகளையெல்லாம் அதிலிட்டு கழுவுவான்.
     உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே – இந்த பொன்னல்ல! ஆயிரம் மாற்று தங்கம் உள்ள பொன்னாகிய இடகலையையும், பின்கலையையும், உள்ளே யிருத்துவ துண்மையென்று, வெளியிட்ட டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே. அப்படிப்பட்ட ஆசான் அவர். இந்த நிலை எப்படி வந்தது என்று கேட்டான். ஆசான் அகத்தீசர் பாதம் பற்றியதனாலே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, இல்லையென்றால் முடியாது. ஏன் என்று கேட்டான். இடகலையையும், பின்கலையையும் நம்மால் சேர்க்க முடியாது. அது சின்ன விசயமல்ல.
     நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
              தலைக்குள்ளாக தமர் கொண்டு இருத்திடில்
     மலைக்குமோ சும்மா மனக்குரங்கு ஐயா
     கலைக்கும் பொழுதில் கனல் பிறவாதே.
                                              – நந்தீசர் நிகண்டு – சூத்திரம் 30ல் கவி எண் 17
              இதெல்லாம் யோகிகள் கேட்க வேண்டியது. யோகிகளுக்கு மத்தியில் இரகசியமாகப் பேசக்கூடிய வார்த்தை, ஆனாலும் கேட்டு வைப்போம். நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை – மூலாதாரம், காற்றை இழுப்பான். அந்த காற்று அங்கேயே நின்று விடும்.
     நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
              தலைக்குள்ளாக தமர் கொண்டு இருத்திடில்
     மலைக்குமோ சும்மா மனக்குரங்கு ஐயா
     கலைக்கும் பொழுதில் கனல் பிறவாதே.
                                              – நந்தீசர் நிகண்டு – சூத்திரம் 30ல் கவி எண் 17
     ஆனாலும் இப்படி சொல்லியிருக்கிறார். ஏட்டில் ஆயிரக்கணக்கில், பல ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பாடல்கள் இருந்த போதிலும், ஆசான் தயவு வேண்டுமென்று சொல்வார்,
              காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்
              ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
              கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
              ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
                              – திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் – 2937
              காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்  என்று மகான் திருமூலதேவர் இங்கே சொல்கிறார்.
     ஆசான் பட்டினத்தார் உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் என்று இங்கே சொல்கிறார். இப்படி சொல்லும்போது இதை நான் முன்னே போற்றினேன் என்று ஒரு பொருள் வரும். சரியை, கிரியை வழிபாடு மக்களுக்கு வேண்டும். மனைவியிடம் அன்பு காட்டுதல், நம்மைச் சார்ந்தவர்களிடம் அன்பு பாராட்டுதல், விருந்தை உபசரித்தல், இனிமையாக நடந்து கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பிறருக்கு தொண்டு செய்தல், இது போன்று வேறு நல்ல பல காரியங்கள் செய்தல். ஆனால் இவையெல்லாம் பிறவித் துன்பத்திற்கு மருந்தல்ல. இதெல்லாம் சரியை, கிரியை. ஆனால் இந்த “ஒளியிட்ட தாளிரண்டுள்ளே யிருத்துவது” என்பது யோகமும் ஞானமும். இதை ஏட்டில் எழுதி வைத்திருப்பார்கள், எல்லா யோகிகளும். அந்த ஏட்டில் எழுதி வைக்கக் கூடிய கருத்துகளை கூட்டுங் குருநந்தி என்று சொன்னான். அவன் கூட்டி வைக்க வேண்டும்.
     காட்டுங் குறியும் கடந்தவக் காரணம் – கடந்தவர் காரணம் காட்ட முடியுமென்ன செய்வான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஏட்டில் எழுதி வைத்திருப்பான். தனக்கு ஏற்பட்ட ஞான அனுபவத்தை, இரகசியத்தை ஏட்டில் எழுதி வைத்திருப்பான். ஆனால் அதை படித்து அறிய முடியாது.
     காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்
              ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
              கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
     ஆசான் கூட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும், ‘ஆசான் பட்டினத்தார் அவர்களே!  மகான் போகமகாரிஷி அவர்களே! மகான் இராமலிங்கசுவாமிகள் அவர்களே! மகான் அருணகிரிநாதர் அவர்களே! மகான் திருமூலதேவர் அவர்களே!’ இப்படி, மகான் போகமகாரிஷி, மகான் காலாங்கிநாதர், மகான் திருமூலதேவர் இப்படி மாபெரும் யோகிகளை அழைத்து “அடியேன் வாசியோடு வாசியாக கலந்து எனக்கு ஆசி தர வேண்டுமென்று கேட்டு, அடியேன் வாசியோடு வாசியாக கலந்து எனக்கு ஆசி தர வேண்டும், இந்த பாவியை மன்னித்து, எத்தனை கோடி பாவம் செய்திருந்தாலும் என்னை மன்னித்து, என்னை ஏற்றுக் கொண்டு எனக்கும் ஞானவாழ்வு தர வேண்டும். உங்களால் தான் தர முடியும் என்று உள்ளம் உருகி எவன் பூசிக்கின்றானோ, அப்போதுதான் அவன்
     கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
              ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
     அதுவரை உனக்கு அருள் செய்ய மாட்டான். சின்ன விசயமல்ல. அவன் தம்மிடம் எதிர்பார்க்கக் கூடியது எதுவுமல்ல. நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். ஏனென்றால் உணவுக்கும்,உடைக்கும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இல்லை அவனுக்கு, இருக்கும் போதும் தேவை இல்லை, இப்போதும் தேவை இல்லை. அவன் விரும்புவது ஒன்றே ஒன்று உள்ளம் உருக பூசிப்பதுதான். கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது – அப்போதுதான் இடகலை, பிங்கலை இரண்டையும் சேர்த்து வைப்பான். இல்லையென்றால் அந்த ரகசியம் நமக்குத் தெரியாது.
     அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
     விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
     தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
     எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
                                              – திருமந்திரம் – ஆகமச்சிறப்பு – கவி எண் 60
              அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது – தேவர்களுக்கே புலப்படாது, மனிதனுக்கு எங்கே தெரியப் போகிறது. தலைவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அமுது போன்ற இனிமையான ஆகமமாக ஆக்குகிறான். அது தேவர்களுக்கே புலப்படாது என்றான்.
     விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
     தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
     எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
     அத்தனையும் குப்பை என்றான். எப்போது இது புலப்படும் என்றான். ஆசான் தயவால்தான் அது கிடைக்கும். இப்படி இருக்கிறது இந்த துறை. ஆகவே இங்கே அன்பர்கள் வந்து மகான் பட்டினத்தாரைப் பற்றி அன்பர்கள் பேச வேண்டும் என்றார்கள்.
     நாம் வணங்கக் கூடிய மகான் பட்டினத்தார், அழுகிய தொழு நோய் உள்ளவனுக்கும் ஆசி தந்து வாசி நடத்திக் கொடுக்கக்கூடிய மாபெரும் யோகி பட்டினத்தார். தொழுநோய் பிடித்தவனை கண்டாலே அருவெறுப்பாக நமக்கு இருக்கும். நாம் ஒதுங்கி போவோம். உள்ளம் உருகப் பூசித்தால் அவனையும் ஆரத் தழுவக் கூடியவர் பட்டினத்தார்! புரிந்து கொள்ள வேண்டும். அன்புணர்ச்சி! அன்பு மிகுதியானவர் அவர்.
     உயிர்கள்பால் காட்டுகின்ற அன்பே ஈசன் பால் காட்டுகின்ற அன்பு. பிற உயிரை நீ வஞ்சித்தால் ஈசனை நீ வஞ்சிக்கிறாய் என்று உணர வேண்டும். நுணுக்கமான வார்த்தை. உயிர்களை நீ அன்புடன் நேசித்தால் நீ ஈசனை நேசிக்கிறாய். உயிர்களை நீ வருத்தினால், அவற்றிற்கு நீ துன்பம் செய்தால் ஈசனுக்கு நீ துன்பம் செய்கிறாய் என்ற உணர்வு வர வேண்டும். அது எப்போது வரும் என்று கேட்டான்.
     தானே யறியும் வினைகள் அழிந்தபின்
     நானே யறிகிலன் நந்தி யறியுங்கொல்
     ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின்
     தேனே யனையனந் தேவர் பிரானே.
                                              – திருமந்திரம் – திருவருள் வைப்பு – கவி எண் – 1796
              ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின்ஆசான் தயவு இல்லாமல் இந்த உணர்வு வராது. நம்மால் யாருக்கேனும் இடையூறு உண்டா என்கின்ற பரிபக்குவம் ஆசான் தயவாலே. மாதம் ஒரு முறை அனைவரும் இங்கு கூட வேண்டும். நான் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருவேன். காரணம், நாளைக்கு திருமந்திரம் சொற்பொழிவு – தக்கர் பாபா வித்யாலயா, ஸ்ரீ தியாகராய நகர் அங்கு பேசுவதெல்லாம் யோகக் கருத்துக்கள். இதுதான் இப்படித்தான் இருக்கும் அங்கு பேசுவோம்.
     ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
      உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று றொன்றுண்டு
      மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
      பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.
                                                – திருமந்திரம் – பிராணாயமம் – கவி எண் – 564
              ஐவர்க்கு நாயகன் ஐவர் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களுக்கும் நாயகனாக இருக்கக் கூடியது அதுதான் மனம். அவ்வூர்த் தலைமகன் என்று சொன்னான். ஊர் என்று சொன்னாலே உடம்புக்குள்ளே தொநூற்றாறு தத்துவங்கள் உள்ள ஒரு உடம்பு. அதற்கு தலைமகனாக இருப்பது ஆன்மா. அந்த ஆன்மா அங்கு மனமாக இருக்கும்.
     அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று றொன்றுண்டு – இந்த குதிரை அல்ல.
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
     காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
     காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
     கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                              – திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் – 571
     அதுவல்லவா ஆற்றல், கூற்றைப் பொடியாக்கக் கூடிய அந்த ஆற்றல், கூற்றைப் புற முதுகு காட்டி ஓடச் செய்கின்ற ஆற்றல், அந்த காற்றை கணக்காக பிடிக்கக் கூடிய ஆற்றல். அது ஆசான் தயவால்தான் முடியும். சுட்டிக்காட்ட முடியாது. ‘காற்றைப் பிடிக்கும் கணக்கு சரியா தவறா என்று சொல்ல வேண்டும்’ என்று கேட்கிறார் அன்பர். அது சொல்லக் கூடாது! காற்றைப் பிடிப்பது எது என்று கேட்டான்.
     வாசிப் பழக்க மரியவே ணுமற்று
           மண்டல வீடுகள் கட்டவேணும்
      நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும்
           நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
              – மகான் கொங்கண நாயனார் – வாலைக்கும்மி – கவி எண் – 27
              முதலில் அந்த வாசி என்கின்ற இரகசியத்தை நீங்கள் ஆசான் மூலமாக, அகத்தீசனை வழிபட்டோ, அல்லது பட்டினத்தாரை வழிபட்டோ அவர்கள் மூலமாக செய்ய வேண்டும்.
     வாசிப் பழக்க மரியவே ணுமற்று மண்டல வீடுகள் கட்டவேணும் – அப்ப மண்டல வீடுகள் கட்ட வேண்டுமானால் இந்த மூலாதாரம் இருப்பது ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் இந்த மூன்று மண்டலத்தையும் சேர்த்து காற்று தங்கி விட வேண்டும். அது எப்படி, புருவமத்தியில் காற்று ஒடுங்கினாலன்றி இந்த மூன்று மண்டலத்திலும் சேர்த்து காற்று போய் தங்கி இருக்க முடியாது. அது சின்ன விசயமல்ல!
     வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
     பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
     தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
     வளியனும் வெட்ட வெளியனு மாமே.
                                              – திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 569
              அன்பர் கேட்கிறார், ‘நான் காற்றை பிடித்து அடக்குவது சரியா? தவறா? (Practical) ஆக நடைமுறைக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று. இப்படிப் பேசுவதே அல்ல! இப்படி பேசுவதே அல்ல! Practical என்கிற பேச்சுக்கே இங்கே இடமில்லை! இந்த பயிற்சி நோயை உண்டாக்கும்.  ஒருவனை வாசிப்பயிற்சி செய் என்று சொன்னால், அவன், அவனை வெகு விரைவில் நோய்வாய்ப்படுத்தப் போகிறான் என்று அர்த்தம். நிச்சயமாக அவனுக்கு நோய் வந்து விடும். நிச்சயமாக! காரணம் ஆசான் தயவு இல்லாமல் வாசி பார்க்கக்கூடிய மக்கள் வெகு விரைவில் நோய் வந்து இறந்து போகிறார்கள். ஒருவனுக்கு நோய் வந்து கிராணி வந்தும், குன்ம நோய் அணுகியும், வயிறு வீங்கியும், இப்படி அல்லற்பட்டு செத்துப் போகிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும், அவனுக்கு என்ன சொல்ல வேண்டும்? முதலில் நாம் என்ன செய்ய வேண்டும், அவனுக்கு என்ன சொல்ல வேண்டும்? முதலில் ஆசானே வழி காட்ட வேண்டும். “இவன் தான் ஞானி” என்று அவர் பாதத்தை சுட்டிக் காண்பித்து அவரை வணங்குகின்ற முறையை சொல்ல வேண்டும்.  
              அந்த முறை சொல்லி அவன் ஆசி பெற்றுதான் வாசி வசப்படுத்த வேண்டும். ஒன்று கிடக்க ஒன்று செய்து மிக விரைவில் செத்து விடுவான்.
     ஒருவன் பிராணாயாமம் செய்ய முயற்சிக்கிறான் என்றால் விரைவில் அவன் எமனை கை தட்டி அழைத்துக் கூப்பிடுகிறான் என்று அர்த்தம். வெகு விரைவில் அவன் சாகப்போகிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும். வெகுவிரைவில் அவன் சாகப்போகிறான். ஆசி இல்லாமல் வாசி பார்க்கக் கூடிய மனிதன் வெகு விரைவில் சாகப்போகிறான். காரணம் அவருடைய தயவால்தான் வரும்.
     என்று சொல்வார் மகான் சட்ட முனிவர் கவியில்,
    
    
     அற்பமா மூட ரறியாமல் யோகம்
     சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
     கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
     அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
     – மகான் சடமுனிவர் அருளிய குரு சூஸ்த்திரம் 21 – கவி எண் 17
              பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
              காத்தே அடைத்து கனயோகி என்று
              சேர்த்தே சீசரைச் செய்து உபதேசம்
              கூத்திது ஆகும் கூடாது முத்தியே
              – மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 – கவி எண் 18
              பாடுகிறார் அற்பமாம் மூடர் அறியாமல் யோகம். காரணம் என்ன? இந்த காற்றை வயிற்றில் நிறுத்தி விட்டால் யோகி ஆகிவிட முடியுமா? அதற்கு என்ன முறை தெரியுமா? உனக்கு,
     மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
     திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
     விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
     எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
                              – திருமந்திரம் – யாக்கை நிலையாமை – கவி எண் 143
              இந்த உடம்புக்குள்ளே சூட்சும தேகம் ஒன்று இருக்கிறது. அந்த சூட்சும தேகத்தைத் தட்டி எழுப்பக் கூடிய வாசல் புருவமத்தியாகும். அந்த வாசல் வழியே செல்ல வேண்டுமென்றால் நீ ஆசானுடைய ஆசியை பெற்றிருக்க வேண்டும். இதை சாதாரணமானவர்கள் செய்ய முடியாது. ஆசான் பட்டினத்தார் தான், இதை செய்து காட்ட வேண்டும். இந்த வாய்ப்பு! சின்ன விசயமல்ல!
     மகான் பட்டினத்தார் தவில்லாமல் ஒன்றும் ஆகாது. “அஞ்சேல் மகனே!” என்று ஆதரிக்கக் கூடிய மகான் பட்டினத்தார் தயவு இல்லாமல், ஒருவன் வாசி செய்யக் கூடாது! ஐந்து ஆண்டுகளாவது இங்கே வந்து பூஜை செய்ய வேண்டும். இங்கே கூட்டம் மிகுதியாக இருந்தால், வீட்டிலேயே இருந்து பூஜை செய்யலாம்.
         
  அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகாள்
 பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
 விண்டவேதப் பொருனையன்றி வேறுகூற வகையிலா
 கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே
                                              – மகான் சிவவாக்கியர் – கவி எண் – 30
அடிப்படை, இங்கே கூட்டத்தோடு கூட்டமாக நாமும் வழிபாடு செய்தோம் என்று வழிபாடு செய்கின்ற மக்கள் நிச்சயமாக பூரண ஆசிய பெற முடியாது. வீட்டிலே இரகசியமாக தீபம் ஏற்ற வேண்டும். ஒரு சுத்தமான தட்டு இருக்க வேண்டும். தட்டில் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீர். என்ன செய்ய வேண்டும், தீபத்தை ஏற்றி வைத்து, சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும். இந்தப் பாவியை நீ ஏற்றுக் கொண்டு, நீர் பெற்றது அனைத்தையும் நான் பெற வேண்டும். எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கண்ணீர் விட வேண்டும். அப்படி சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, மானசீகமாக அவரை நினைக்க வேண்டும்.
     சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
                சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
                வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
                புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
                                                – மகான் சிவவாக்கியர் – கவி எண் 30
     மானசீகமாக ஆசானை கேட்க வேண்டும். மகன் பட்டினத்தார் என்றால், எனக்கு குண்டலினி சக்தியை எழுப்பிக் கொடு என்று கேட்கும்போது, “மகனே! அதெல்லாம் தப்பு வழியப்பா! ஒரு ஆசான் தயவால் கிடைக்கக்  கூடிய ஒன்று. இதற்கு காசு பேசுவது கூடாது. பணத்துக்கு ஏற்றுவதல்ல குண்டலினி! என் மகனே! ஒன்று என் பாதத்தை பற்று அல்லது என் ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்று! மாபெரும் யோகி மகன் திருமூலதேவர் பாதத்தைப் பற்று! ஆசான் நந்தீசர் பாதத்தைப் பற்று! உலகத்திற்கே தலைவன் ஞானபண்டிதன், ஞானத்திற்குத் தலைவனாக இருக்கக் கூடிய ஆசான் சுப்பிரமணியர் பாதத்தைப் பற்றப்பா! இதுதான் முறை. அப்படி குண்டலினியை ஒருவன் ஏற்றுவது இறக்குவது அல்ல! அது தப்பு வழி” என்று சொல்வார்.
     இதற்கு ஆசான் தயவு இருக்க வேண்டும். ஒழி படரக்கூடிய குண்டலினியை அவனே சிந்தித்து எழுப்ப வேண்டும். ஆகவே, இந்த யோக மார்க்கம் என்பது, செயல்படுவது அல்ல!
வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
                  வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை உருவாண்டி – அவன்
                  அற்புத தளமலர் ஏத்துங்கடி.
    திருஅருட்பா ஐந்தாம் திருமறை – சண்முகர் கொம்மி – 2987
என்று தனது கவியில் கூறுகிறார் ஆசான் இராமலிங்கசுவாமிகள். வாசி நடத்தித் தருவார். உலகத்திலேயே ஆதித்தலைவன், இந்த தத்துவத்தைக் கண்ட முதல் மகான், மூத்தமகன், முற்றுப்பெற்ற மாபெரும் யோகி சுப்பிரமணியர், அவர் என்ன செய்வார், அவர்தான் வாசி நடத்தித் தர வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள் இதை சொல்கிறார். நீங்கள் அவரை கைநாட்டு என்று நினைத்து விடாதீர்கள்! கைநாட்டுதான்! உலகக் கல்விக்கு அவர் கைநாட்டு. ஆனால் கடல் போன்ற கல்வி உள்ள மகான் சொல்கிறார், மூத்தமகன், ஞானமுதல்வன் சொல்கிறார். வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு வாசியில் இங்கே வருவாண்டி – நீ நினைக்கும்போது, ஆசான் சுப்பிரமணியரை நினைக்கும்போது, ஒரு வினாடி இந்த மூச்சுக்காற்று வாசி வெளியே வந்து போவதற்குள் வந்து விடுவான். ஆசில் கருணை உருவாண்டி – அவன் குற்றமற்ற தலைவன், குற்றமன்ற உரு உள்ளவன் அவன் என்று அர்த்தம்.
    
ஆக, குற்றம் எது? மும்மலமே குற்றம். வாசி வசப்பட்டு அந்த மும்மலத்தை வென்ற மக்கள்தான் ஞானிகள். அவர்கள் பாதத்தைப் பற்றி பூஜை செய்தால் எல்லாம் சித்திக்கும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0181558
Visit Today : 78
Total Visit : 181558

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories