கலிகால இடர் வெல்ல உபாயம்
21.09.1997 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை

ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும், வணக்கம்.

     இன்று 21 ஆம் ஆண்டு தீட்சை நிறைவு விழா மற்றும் சங்க ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழா சிறப்பாக நடைபெற அன்பர்கள் கடமையாக உழைத்தனர். அவரவர்கள் இந்த விழாவை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சி போல் எண்ணி தொண்டு செய்தார்கள். எல்லா அன்பர்களுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
     இந்த நிகழ்ச்சிக்கு பொருளுதவி செய்த அன்பர்கள் அனைவருக்கும் ஞானிகள் அருளும் ஆசியும் உண்டு.
     ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தீட்சை நிறைவு விழா நடைபெறும். ஆக தவம் துவங்கிய தேதி 17.09.1976. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெற்று வருகிறது.
     இப்படி 21  ஆண்டுகளும் தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. அதே போன்று சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களை ஞானிகள் ஆசியோடு நடத்தி வருகிறோம்.
     தலைவன் ஆசியில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. அது எங்களுக்குத் தெரியும். இது முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். நாமாக எதுவும் செய்து செய்துமுடிக்க முடியாது. முன் செய்த நல்வினை காரணமாக ஞானிகளை வழிபாடு செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
     நாம் ஞானிகளை வணங்காமல் எதுவும் நடக்காது. நல்வினை காரணமாக ஆசான் அகத்தீசரை பூஜை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நான் ஆரம்ப காலத்தில் மகான் சுப்பிரமணியரை பூஜை செய்தேன், அம்பாள் பூஜையும் செய்திருக்கிறேன், ஈசனையும் பூஜை செய்தேன்.
     ஆசான் அகத்தீசர் பெரிய மகான் என்றும், அவரை பூஜை செய்தால் நல்லது நடக்கும், நன்மை நடக்குமென்று சொன்னார். எனவே ஆசான் அகத்தீசர் நாமத்தை சொன்னோம்.
     எனக்கு வயது பதிமூன்று இருக்கும். அப்போதே ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஆசான் அகத்தீசர் நாமத்தை சொன்னோம், தெளிவான அறிவு வந்தது.
     இந்த துறைக்கு அறிவுதான் வேண்டும். அந்த அறிவு மாசற்ற அறிவாக, தெளிந்த அறிவாக, தூய்மையான அறிவாக இருக்க வேண்டும். அந்த அறிவும் ஞானிகள் கொடுக்க வேண்டும். ஞானிகளை பூஜை செய்தோம், உண்மைப் பொருள் தெரிந்தது. அந்த உண்மைப்பொருள் பற்றற்றது.
     பொருளாதாரம், பிரச்சனை தீர்க்கும் ஒரு கருவியே தவிர, அந்த பொருள் மரணமிலாப் பெருவாழ்வை தராது. இந்த அறிவு எந்த மனிதனுக்கும் அவ்வளவு இலகுவாக வராது, புத்தி பேதலித்தவனுக்கு வரும், குழந்தைக்கு பொருள் பற்று வராது.
     எல்லா மனிதனும் “நமக்குப் பொருள் வேண்டும். எப்படியாவது பொருளை திரட்ட வேண்டும்” என்று நினைப்பான்.
     ஆனால் நாங்கள் ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்லி பூஜை செய்ததனால் பொருள் தேவையில்லை, அது மோட்ச லாபத்தைத் தராது என்ற அறிவு வந்தது. ஆனாலும் தேவை, அதைக் கொண்டு நல்ல காரியம் செய்யலாம் என்ற அறிவும் வந்தது. அதுவும் ஆசான் கொடுத்த அறிவுதான்.
     நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இந்த சித்த தத்துவத்தையும், ஞானிகள் வழிபாட்டினையும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற அறிவும் ஆசான் கொடுத்தது.
     ஆரம்ப காலத்தில் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனையே இல்லை. திரவியத்தின் பயனதனை எண்ணவே மாட்டான் என்பார் மகான் பிரம்மமுனிவர். திரவியத்தின் பயனதனை அடையவே எண்ண மாட்டான் என்பது பெரிய பாக்கியம், அது சிறந்த அறிவு.
     தலைவன் யார்? எப்படி அணுக வேண்டும்? எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்ற அறிவும் வந்தது. ஆக இந்த அறிவு அவர்கள் கொடுத்தது. அந்த அறிவு இன்றைக்கு நாட்டுக்குப் பயன்படுகிறது.
     அந்த அறிவைக் கொண்டு, இருபது வருடங்களாக மக்களிடம் பேசியிருக்கிறோம். ஆசான் அகத்தீசர் பெரிய மகான். அவரை பூஜை செய்யுங்கள், அவர் பெரிய மகான். மகான் இராமலிங்கசுவாமிகளையும், மகான் அருணகிரிநாதரையும், மகான் திருமூலதேவரையும் பூஜை செய்யுங்கள் என்று சொன்னோம்.
     ஆக இது போன்ற ஒரு அறிவு ஞானிகள் கொடுத்தது. அதை மக்களுக்குச் சொன்னோம். ஆரம்பத்தில் ஒரு நபருக்குத்தான் சொன்னோம்.
     இன்று ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் ஞானிகள் வழிபாடு செய்கிறார்கள். அது ஞானிகள் கொடுத்த அறிவுதான். பொருள் மீது பற்றற்ற தன்மையை உண்டாக்கியது. அது பெரும் பாக்கியம்.
     காமவிகாரம் மனிதனை மடையனாக்கும், நரகத்தில் தள்ளுவது காம விகாரம். அதை ஆசான் உடைத்தெறிந்து விட்டார். இந்த ஒரு சிறுமை குணம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது, அது நரகத்தில் தள்ளுமென்ற ஒரு அறிவு இருந்ததனாலும், தினம் பூஜை செய்ததனால்தான், அத்தனை கொடிய காமவிகாரத்தை ஆசான் உடைத்தெறிந்து விட்டார்.
     பூஜை செய்ய செய்ய பலகீனங்கள் மனித வர்க்கத்தை ஆட்டிப்படைப்பது எப்படி என்று அறிந்தோம். ஆட்டிப்படைப்பதை அறிந்து அதை வெல்லுகின்ற வல்லமையும் பெற்றோம். இல்லையென்றால் இந்த சங்கம் இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியுமா? உயராது. இது ஆசான் கொடுத்த ஆற்றல்.
     பொருள் பற்றற்று, காசு வெறி இல்லாமல், காம வெறி இல்லாமல், ஜாதி வெறி இல்லாமல், யான் என்ற கர்வம் இல்லாமல், தன்னடக்கத்தோடு இருக்கக்கூடிய அறிவைத் தந்தார். இதை ஆசான் கொடுத்த ஆற்றல்.
     தினம் பூஜை செய்தோம், பூஜை செய்ய செய்யத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. நாங்களும் பூஜை செய்தோம், மற்றவர்களுக்கும் சொன்னோம்.
     அவரவர்கள் நிலை உயர்ந்திருக்கிறார்கள், செல்வநிலை பெருகி இருக்கிறது, அறியாமை தீர்ந்தது, வறுமை தீர்ந்தது. அதே சமயத்தில் நோயும் தீரிந்திருக்கிறது.
     இந்த கருத்துக்களை நான் அறிந்ததனாலும், உணர்ந்ததனாலும்தான் சொல்ல முடிந்தது, இல்லையென்றால் முடியாது.
     ஆக ஒரு மனிதன் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. எப்போது பார்த்தாலும் காமம் ஆட்டிப்படைக்கிறது, நான் என்ன செய்யட்டும்? என்பான். “உன்னால் ஒன்றும் அசைக்க முடியாது, உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்.
     அதுபோன்ற காம அணுக்களை உன்னால் என்ன செய்ய முடியும்? போராடிக்கொண்டு இருக்காதே!
     ஆசானிடம், “என்னப்பா, என்னால் தாங்க முடியவில்லை. என்னை ஆட்டிப் படைக்குது. நான் என்ன செய்யட்டும்?” என்று நீ கேட்க வேண்டும்.
     ஆசானை உருகிக் கேட்டால் அருள் செய்வார்கள். ஆசானை உருகிக் கேட்கக் கேட்கத்தான் அருள் செய்வார்கள். முன்னமே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. போராடிக் கொண்டிருந்தால் தாங்கவே முடியாது. என்னதான் நீங்கள் பாடுபட்டாலும், அருவியிலே குளித்தாலும் சரி, ஒன்றும் செய்ய முடியாது.
     தலைவன் ஆசியிருந்தால் தவிர, அப்பேர்ப்பட்ட காமவிகாரத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஆசான் திருவள்ளுவர் இதை சொல்கிறார்.
     பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு.
                                                 – திருக்குறள் – துறவு – குறள் எண் 350
                பற்றுக பற்றற்றான் – ஞானிகள் பற்றுக்களையெல்லாம் வென்றவர்கள் அவர்கள் எப்படி வென்றார்கள்? தினம் பூஜை செய்தார்கள்.
     எப்படி பூஜை செய்தார்கள்? “நான் காமவிகாரமற்றவனாக இருக்க வேண்டும். காமதேகம் என்னை ஆட்டிப்படைக்கிறது. என்னை பாவியாக்கப் பார்க்கிறது.
     எத்தனையோ பேர் காமவிகாரத்தால் கொடும் பாவச்செயல் செய்திருக்கிறான், என்றால் தாள முடியாது. அந்த பாவச்செயல் அவன் அறியாமலேயே நடக்கும்.
     இது போன்ற கொடுமையை ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்டு பூஜை செய்தார்கள்.
     கொடுமை என்று சொல்கிறீரே ஐயா! இதற்கு வழியே இல்லையா? என்றான். “வேறு வழியே இல்லை” பட்டினி போட்டால் செத்துப் போய்விடுவாய், சாப்பிட்டால் காமவிகாரம் வரும், அது உன்னை நரகத்தில் தள்ளும்.
     ஆகவே இதிலிருந்து விடுபட ஆசானைக் கேட்க வேண்டும். கேட்டு கேட்டுத்தான் பெற வேண்டும். வேறு வழியே இல்லை என்றார்.
     எல்லா ஞானிகளும் ஆசானைக் கேட்டுத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆசான் ஞானபண்டிதனை வணங்கியதாலே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதெல்லாம் சின்ன விசயமல்ல. ஆசானைக் கேட்டு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
     இந்த காமவிகாரம் ஒரு கொடிய பாவி, கொடிய காம பாவியை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அந்த காமதேகம்தான் ஞானத்திற்கு காரணமாக இருக்கிறது. எந்த அளவிற்கு நம்மை நரகத்தில் தள்ள முயற்சிக்கிறதோ, அந்தளவிற்கு அதே உடம்பு ஞானம் அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.
     தேகத்தின் மீது குறையில்லை. அந்த தேகம் நமக்கு துணையாக இருப்பதனாலே, ஆசான் காமவிகாரத்தை நீக்கி விட்டான். இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொன்னார்,
      பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு.
                                                 – திருக்குறள் – துறவு – குறள் எண் 350
     தலைவன் பற்றற்றவர்கள். ஞானிகளை இலகுவாக நினைக்காதீர்கள், காமவிகாரத்தைப் பற்றி அறிந்தவர்கள்.
     நம்மை அணு அணுவாக சித்திரவதை செய்த காமத்தை, நாம் சுட்டிக்காட்டும் ஞானிகள் அத்தனை பேரும் வென்றவர்கள்.
     மகான் அருணகிரிநாதராக இருந்தாலும் சரி, மகான் இராமலிங்கசுவாமிகளாக இருந்தாலும் சரி, மகான் மாணிக்கவாசகராக இருந்தாலும் சரி, ஞானிகள் அனைவரும் காமத்தை வென்று, வெற்றி கண்டிருக்கிறார்கள்.
     நாம் ஞானிகளை கேட்கிறோம், பெரியோர்களை கேட்கிறோம், “நீங்களெல்லாம் பெரியவர்கள், தப்பித்து விட்டீர்கள், நீங்கள் வென்று விட்டீர்கள், எங்களையும் ஒரு பார்வை பாருங்கள்” என்று கேட்க வேண்டும்.
     அப்படி ஞானிகளை கேட்டால் மனசாந்தம் உண்டாகும், அறிவு தெளிவடையும். இவைகளை ஆசானிடம் கேட்க வேண்டும்.
     காமம் என்னை நரகத்தில் தள்ள பார்க்கிறது. இது நான் செய்த பாவம், வேறு யார் செய்த பாவமும் இல்லை. இயற்கையே இப்படி அமைத்திருக்கிறது.
     என்னை நரகத்தில் தள்ளக் கூடிய தேகமே, என்னை சொர்க்கத்தில் தள்ளுவதற்கு, நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     ஆக தலைவனுக்கு பொருள் வெறியில்லை, இது ஆசி. தலைவனுக்கு காமவெறி இல்லை, இது ஆசி. அதே சமயத்தில் சிறுமை குணமும் இல்லை, இதுவும் ஆசி.
     இந்த ஸ்தாபனம் 21 ஆண்டுகள் தலை நிமிர்ந்து இருப்பதற்கு என்ன காரணம்? பொருள் பற்று அற்று, காமவிகாரம் அற்று, ஜாதி வெறி அற்று, எல்லோரையும் அரவணைத்து செல்லக் கூடிய ஆசியை தலைவன் தந்திருக்கிறார்.
     இது ஆசான் கொடுத்த அறிவு. இதை மற்றவர்கள் கடைப்பிடித்தாலன்றி நாட்டுக்குத் தொண்டு செய்ய முடியாது.
     வஞ்சனை நம்மை வஞ்சிக்கும். தலைவன் வள்ளுவப்பெருமானே பற்று அற்றவன் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று சொன்னார். பற்றற்றவன் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கு, நாம் தான் பாடுபட வேண்டும்.
     ஆக இதெல்லாம் சாதாரண விசயமல்ல. இதற்கு பெரியோர்கள் ஆசி இருக்க வேண்டும். இதற்கு எந்த முறையை எப்படி கையாள்வது? இதற்கு வேறு வழியே இல்லையா? என்றால் “இதற்கு வேறு வழியே இல்லை ஐயா!” என்பார்.
     தினம் தினம் பூஜை செய்து, ஆசானைக் கேட்க வேண்டும். வேறு ஒன்றும் கேட்கக் கூடாது. இதை மகான் வள்ளுவப்பெருமான் சொல்வார்.
     வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றஅது
      வேண்டாமை வேண்ட வரும்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண்  – 362
                நீ விரும்பினால் பிறவாமையை விரும்ப வேண்டும். பிறவாமை வேண்டுமென்றால் காமவிகாரத்தை ஒழிக்க வேண்டும். காமவிகாரம் உள்ளவனை உள்ளுக்கு விட மாட்டார்கள்.
     ஆக காமவிகாரத்தை ஒழிக்காமல், ஒன்றும் செய்ய முடியாது. இந்த காமவிகாரத்தை தலைவன்தான் ஒழிக்க வேண்டும்.
     ஆக காமவிகாரம் நீங்காமல் பெருந்தன்மை வராது. காமவிகாரம் ஒழியாமல் வஞ்சனை நீங்காது. இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொன்னார்,
    
                அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
                வஞ்சிப்பது ஓரும் அவா.
                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் – 366
                அஞ்சுவது அறம். வஞ்சிப்பது அவா. ஆக வஞ்சிக்க கூடிய காமவிகாரத்தை, காமத்தைத் தலைவன் ஆசியோடுதான் சரிப்படுத்த முடியும். காமவிகாரமற்றவர்கள்தான் தலை நிமிர்ந்து பேச முடியும்.
     இல்லையென்றால் யாரும் பேச முடியாது. என்ன காரணம்? அவன் எந்த நேரத்திலாவது தவறு செய்து விடுவான்.
     ஆக தவம் செய்கிறான், உடம்பில் கனல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மூலக்கனல் ஏற வேண்டும். மூலக்கனல் ஏற ஏற ஏற நம்மை வஞ்சிக்கக் கூடிய காம உடம்பு நீங்கும், கபம் அற்றுப் போகும், காமதேகம் நீங்கிப்போகும்.
     இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றான். இதற்கும் ஆசானே வழி சொல்வார்.
     வஞ்சிப்பது அவா – நம்மை வஞ்சிக்கும். சரி, வஞ்சிக்கும்போது அதோடு போராடாதே! தலைவனைக் கூப்பிடு. “என்னய்யா, நான் உன் திருவடியைப் பற்றினேன், எனக்கு பூஜை செய்யாதிருக்கும்போதுகீழ்த்தரமான எண்ணங்கள் வரலாம். ஆனால் நான் பூஜை செய்து கொண்டிருக்கும்போதே கீழ்த்தரமான கொடுமையான எண்ணங்கள் வருகிறது என்றான்.
     அது அப்படித்தான் இருக்கும் என்பார் ஆசான். ஆக எல்லாவற்றையும் தலைவனைக் கேட்டுத்தான் பெற வேண்டும். ஆக ஒரு ஸ்தாபனம் தலை நிமிர்ந்து இருக்க வேண்டுமென்றால் நம்மை வஞ்சிக்கக் கூடியதை நீக்க வேண்டும்.
     வஞ்சிக்கக் கூடியது யார்? அல்லது எது?
     யார் நமக்கு வஞ்சகனாக இருக்கிறான்?
     ஒன்று பேராசையா? அல்லது பொருள் பற்றா? அல்லது காமனா? என்று அறிந்து தலைவன் ஆசியோடுதான், நம்மை வஞ்சிப்பதை நீக்க வேண்டும்.
     அஞ்சுதல் வேண்டும் – பயப்பட வேண்டும். அஞ்சுவது அறன் – காமத்திற்கு, ஆசைக்கு நீ அஞ்சினால் அது அறம். கொஞ்சம் ஏமாந்தால் அவைகள் உன்னை வஞ்சிக்கும் என்றார்.
     வஞ்சிக்கக் கூடிய காமத்தை, தலைவன் ஆசியால்தான் வெல்ல முடியும். ஏனய்யா இவ்வளவு போராட்டமாக இருக்கிறது என்றான்.
     “பிறவி அற்றுப்போக நீ விரும்புகிறாயா?” என்று கேட்டதற்கு ஆமாம் என்றான்.
      வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றஅது
       வேண்டாமை வேண்ட வரும்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண்  – 362
        உனக்கு பிறவி அற்றுப் போக வேண்டுமென நினைத்தால், உன்னிடம் காமவிகாரம் இருக்கக் கூடாது. இதத்தான் ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொன்னார்,
        அற்றவர் என்பர் அவாஅற்றார் மற்றையார்  
      அற்றாக அற்றது இலர்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 365
                அற்றவர் என்றார். பல கோடி ஜென்மங்களாக நம்மைப் பற்றி  வந்த காமத்தை அற்றுப் போக செய்ய வேண்டுமென்றார். அற்றுப் போகா விட்டால் நிச்சயமாக மறுபடியும் கருப்பைக்குத்தான் போக வேண்டும்.
     மறுபடி கருப்பைக்குப் போகாமல் இருப்பதற்கு நாம் வழி கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு பூஜை செய்ய வேண்டும் என்றார்.
     அற்றவர் என்பர் அவாஅற்றார் – பொருள் பற்று இல்லாமல் இருப்பது. பொருள் பற்று இருக்கலாம், பொருளை வேண்டாமென்று தூக்கி எறியலாம்.
      இதைக்கூட பயிற்சி கொடுத்தால் தூக்கி எறிந்துவிட்டுப் போகலாம். பொருளை விரும்பாதே. வேண்டாம், பொருளை நான் தொடவில்லை, நியாயம்தான்.
     காமவிகாரம்? இந்த விகாரத்தை என்ன செய்வாய் நீ? அற்றவர் – காம தேகத்தை நீக்கி வென்றவன். இது ஆசான் ஆசி இல்லாமல் முடியாது. ஒரு சிறிது இருந்தாலும் சரி, உன்னை மறுபடி நரகத்தில் தள்ளிவிடும். ஆக, இதெல்லாம் பெரிய விசயங்கள். “அற்றது பற்றெனின் உற்றது வீடு” என்பார்.
      அற்றவர் என்பர் அவாஅற்றார் மற்றையார்  
      அற்றாக அற்றது இலர்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 365
     மற்றையார் அற்றாக அற்றது இலர் – காமவிகார தேகம் நீங்கியது. காமவிகாரம் தேகம் நீங்காமல் கடவுளை அடைய முடியாது. ஆக மனித வர்க்கத்திற்கு இந்த வாய்ப்பு இருக்கிறது. தலைவன் ஆசியோடு மூலக்கனலை ஏற்றுகிறோம்.
     தலைவன் ஆசியோடு அறிவை பெறுகிறோம். அறிவின் முதிர்ச்சிதான் மூலக்கனலை எழுப்புவது. மூலக்கனலை எழுப்பினால் காமதேகம் நீங்கி விடும்.
     காமதேகம் நீங்கினால் சிந்தனை தெளிவடையும். சிந்தனை தெளிவடைவதற்கு தினமும் ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். இங்கு நான் பேசுவது நுட்பமான வார்த்தைதான்.
    
     அற்றது பற்றெனின் உற்றது வீடு – எது அற்றது? தேகம் நீங்கி விட்டது தாய் தந்தையால் எடுத்த காமதேகம் நீங்கி விட்டது, உள்ளம் தெளிவடைந்தது, வஞ்சனை அற்றது.
     ஆக தாய் தந்தையால் எடுத்த காமதேகம் நீங்காமல் வஞ்சனை தீராது.  அற்றது பற்றெனின் உற்றது வீடு என்றார்.
     மக்கள் அடையக்கூடியது மோட்ச லாபம், மரணமில்லாப் பெருவாழ்வு, ஞானிகள் ஒன்பது கோடி பேர் இருக்கிறார்கள், உண்மைதான்.
    
     சின்ன விசயமல்ல. அத்தனை பேரும் பாடுபட்டிருக்கிறார்கள். எப்படி பாடுபட்டார்கள்? நீ என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னால் தாங்கமுடியவில்லை, என்னை வஞ்சிக்கிறது. அப்பா! என்னைப் போட்டு ஆட்டிப் படைக்குதையா! நான் பட்டினி கிடப்பதா? பட்டினி கிடந்தால் செத்துப் போய்விடுவான், உணவு கொடுத்தால் காமம் வந்துவிடும்.
     நான் என்ன செய்யட்டும்? நான் முன்னேற வேண்டும். இப்படி தலைவனிடம் கேட்டு பூரணமாக ஆசி பெற்றார்கள்.
     பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
      பற்றி விடாஅ தவர்க்கு.
                                                – திருக்குறள் – துறவு – குறள் எண் – 347
                பற்று என்பது கஷ்டமான வார்த்தை, உடம்பு நலிகிறது, கபம் கட்டுகிறது, உடம்பு நொந்து போகிறது என்று நினைத்து விட்டுவிடாதே.
      பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு – இந்த உடம்பைப் பற்றி அறிந்து கொல்லாமல், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.
     ஆக இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நுட்பமான வார்த்தை.
     நாம் ஏன் அன்னதானம் செய்கிறோம்? அற்றது பற்றெனின் உற்றது வீடு என்பதை பெற வேண்டுமென்பதற்காக. அற்றது பற்று – இதை புரிந்து கொள்ள வேண்டும். தலைவன் ஆசி இல்லாமல் புரியவே புரியாது.
     நமது தொண்டு, நமது பேச்சு, நமது திறமை, எல்லாம் இந்த பற்றினை உடைத்தெறிவதற்காக இருக்க வேண்டும்.
     இதற்கு என்ன செய்ய வேண்டும்? விடாது பூஜை செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும், இதைப் பற்றி மக்களிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
     ஆக எடுத்த ஜென்மத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட லட்சியத்தை அடைய இந்த ஜென்மத்திலேயே முயற்சி செய்யணும்.
     யார் உன்னை வேண்டாம் என்கிறார்கள். மனைவி மக்களா வேண்டாம் என்கிறார்கள். மனைவி மக்கள் உன் கையைப் பிடித்துக்கொண்டார்களா என்ன?
                உன்னை நீ புரிந்து கொள்வதற்கு யாரும் தடை இல்லை. யாரும் தடையாக இருக்க மாட்டார்கள்.
                ஆக நமக்கு எதிரி யார்? நம் மனைவியா? மக்களா? இல்லை! இயற்கையா? செயற்கையா? பெண்ணா? ஆணா? யாரும் எதிரி இல்லை.
     நமக்கு எதிரி நம் உடம்புதான். நாம் இந்த உடம்பை புரிந்து, அதனுள்ளே கனல் ஏற்ற கற்றுக்கொள்ள வேண்டும். ஞானிகளை பூஜை செய்து கனலை ஏற்ற வேண்டும். அப்படி பூஜை செய்தால்தான் கனல் ஏறும்.
     பூஜை செய்ய வினை உன்னை விடாதே! நான் பூஜை செய்யப் பார்க்கிறேன். ஆனால் முடியவில்லை. என்னுடைய வினை என்னை ஆட்டிப் படைக்கிறது.
     ஆக பூஜையை நிறுத்தவும் முடியாது, உணவையும் நிறுத்த முடியாது, உலகிலிருந்தும் விடுபட முடியாது. இங்கேயேதான் இருக்க வேண்டும்.
     மனைவி மக்களோடுதான் இருக்க வேண்டும். வேலைக்கும் சென்று சம்பாதிக்க வேண்டும். போராடிக்கொண்டு இருக்க வேண்டும். இந்த போராட்டம் அடங்கும் வரையில் விடக்கூடாது.
     அக இந்த வாய்ப்பை மனித வர்க்கம் அடைய வேண்டும். ஒன்பது கோடி பேர் ஞானத்தை அடைந்தார்கள். அந்த ஒன்பது கோடி பேரும் இவ்வாறுதான் போராடியிருக்கிறார்கள். வீட்டில்தான் இருந்தார்கள்.
     இதற்காக காட்டிற்கா போக முடியும்? அறிந்தவன் இங்கேயே இருப்பான், மனைவி மக்களிடம் பேசுவான், வியாபாரம் செய்வான், ஆட்சி செய்வான், எல்லாம் செய்வான். அக்கினி மிகுந்து கொண்டே இருக்கும்.
     ஆக உலக மக்களோடு இருந்து கொள்ள வேண்டும். நாம் எதற்காக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
     இந்த உலக மக்களை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மனைவி, மக்கள், வீடு, வாசல், பொருளாதாரம் இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி பயன்படுத்தி அதன் போக்கிலேயே போக வேண்டும்.
     இதுதான் அதில் உள்ள இரகசியம். போக்கிலேயே போகாமல் சோர்வடையக் கூடாது. பூஜை செய்ய விடாது, தூங்க விடாது, போட்டு புரட்டிக் கொண்டு இருக்கும்.
     ஆனால் அதன் கூடவே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை. அப்படியே போய்த்தான் பிடிக்க வேண்டும். இப்படி பேசுவதே மனித வர்க்கத்திற்கே ஒரு வரப்பிரசாதம் தானய்யா.
     ஆக மக்கள் இந்த காலத்தில் போராடிக்கொண்டே இருக்கின்றனர். காமம் என்னை வாட்டுகிறது என்பான். உன்னால் என்ன செய்ய முடியும்? நீ உணவைக் குறைத்தால் செத்துப் போவாய். உணவு சாப்பிட்டால் காமம் வந்து விடும். யோகி சோற்றை சுருக்க மாட்டான், சோற்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பான்.
     சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய் தானிருந்து ஏற்றி இருகாலும் இன்பமாய் – இந்த இடகலை பிங்கலை இரண்டையும் ஏற்றி இன்பமாய், என்றார்.
     சோற்றையும் சுக்கக்கூடாது, மனம் போராடிக்கொண்டிருக்கும், விட்டுவிடக்கூடாது. லட்சியத்திற்கு வந்தவர்களுக்கு, மனைவி மக்கள் இருந்தால் அதன் போக்கிலேயே போகவேண்டும். அதற்கு பல ஆண்டுகள் ஆகம்.
      சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய் தானிருந்து
      ஏற்றி இருகாலும் இன்பமாய்
      காற்றின் வழியே ககனமாய் நுழைந்தார்க்கு
      அழியாது காயம் அறி.
                          – மகான் திருவள்ளுவர்
        சோற்றையும் சுருக்க மாட்டான். ஆசானிடம் கேட்பான். “அடியேனுக்கு வாசி வசப்பட வேண்டுமென்று கேட்பான்” தினம் தினம பூஜை செய்வான். இதிலேயே இருப்பான்.
    
     சிந்தனை வேறு எங்கும் இருக்கக் கூடாது. சான்றோர்கள் தொடர்பு இருக்க வேண்டும். நூல் படிக்க வேண்டும். அதே சிந்தனையும் இருக்க வேண்டும். உலக மக்கள் தொடர்பு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் நடக்கும்.
    
சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய் தானிருக்க வேண்டுமென்றார். இதை விட்டு விட்டு போகக் கூடாது. நரகத்திற்கு போகாமல் இருப்பதற்கு நமக்கு நரக சொர்க்கம் தெரியாதையா. நரகம் எது? சொர்க்கம் எது? என்பதை ஆசானிடம் கேட்க வேண்டும்.
     எது நரகம்? எது சொர்க்கம்? என்பதெல்லாம், உனக்கு தெரிய வேண்டாம். நீ பூஜை செய், பூஜை செயது கொண்டே வா, மக்களுக்கு தொண்டு செய்கிறாய், பசி ஆற்றுகிறாய், மக்களுக்கு ஆன்மீகத்தை சொல்கிறாய், தினம் தியானம் செய்கிறாய்.
     தூய்மையாய் தானிருந்து – தூய்மையை தலைவன்தான் தரவேண்டும். உனக்கு என்ன தெரியும்? உனக்கு நரகமும் தெரியாது. சொர்க்கமும் தெரியாது. ஆண் தெரியாது. பெண் தெரியாது. முதுமை வருவது தெரியாது. மல ஜலம் தெரியாது. என்ன செய்வது என்று தெரியாது. தூய்மை பற்றி தெரியாது.
     தூய்மையாய் தானிருந்து ஏற்றி இருகாலும் இன்பமாய் – இடகலையையும், பின் கலையையும் ஏற்ற வேண்டும். இது சின்ன விசயமல்ல. தலைவன் ஆசி இருக்க வேண்டும். ஆக நாம் போகும் பாதை அந்த இடத்திற்குதான். ஞானசித்தர்காலம் வந்ததனால் பேசுகிறோம். நமது நோக்கம் அந்த இடத்திற்குத்தான் போக வேண்டும். இதை விட வேண்டும். இதை ஒழித்தே விட வேண்டும்.
    
     ஆக பெண்களும் ஆண்களும் பாடுபடுகின்றோம். பெண்களும் ஆசி பெறலாம். அப்படியே ஆசானை பூஜை செய்து, அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய கடமையை தொடர்ந்து செய்யுங்கள். அன்னதானம் செய்வதற்கு பொருளுதவி செய்.
     வரும் போதும் போகும் போதும் “அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! என்று சொல்லிக் கொண்டே இரு என்போம். இந்த பூஜையை ஆசான் ஏற்றுக்கொள்கிறார். ஆசானிடம் தொண்டும் செய்ய வேண்டும்.
     அதே சமயத்தில் உன் ஆசியையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்க வேண்டும். புருவமத்தியாகிய பத்தாம் வாசலுக்குள் நாங்கள் சென்றோம். அந்த இரகசியத்தை நீங்களெல்லாம் அறிய வேண்டும்.
     மேலும் ஆசானிடம் நீங்கள் எனக்கு எப்போது அருள் செய்வீர்கள் என்று தெரியாது. நான் போராடிக்கொண்டிருக்கிறேன் என்று பெண்களும் ஆண்களும் கேட்டாலும், ஒன்றும் நட்டமில்லை. கேட்டுக் கொண்டே இருக்கலாம். கேட்டு கேட்டு கேட்டு பெறலாம். வேறு வழி இல்லை.
     இப்படி சொல்வது உலகமக்களுக்கு அறைகூவல் போல் இருக்கும். நீ இதை விட்டு போகமுடியாது. காட்டுக்கு போக முடியாது, பட்டினி கிடக்க முடியாது, எது சாப்பிட்டாலும் உன்னை விடாதய்யா! நீ தப்பித்து கொள்வதற்கு இதுதான் பாதை.
    
     ஆக உணவையும் குறைக்கக் கூடாது, நன்றாக தூங்கிக் கொள்ள வேண்டும், நன்றாக பூஜை செய்ய வேண்டும். காலையில் பத்து நிமிடம் மாலையில் பத்து நிமிடம், நினைக்கும்போதெல்லாம் ஆசான் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
     இப்படி இருந்தால் அந்த பக்குவம் வந்தவுடன் சொல்வார். சரி, நேரம் வந்ததடா! எந்த நேரம் என்று கேட்டான். அந்த நேரம் வது விட்டது என்று சொல்வோம்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லி ஒரு பெண் கேட்கிறார், “ஏனய்யா, நீங்களெல்லாம் பெரியவங்க. மகான் ஔவையாருக்கெல்லாம் அருள் செய்திருக்கிறீர்கள். மகான் காரைக்கால் அம்மையாருக்கு அருள் செய்திருக்கிறீர்கள்.
    
     மகான் ஆண்டாளுக்கு, மகான் திலோத்தம்மையாருக்கெல்லாம் அருள் செய்திருக்கிறீர்கள். ஏனய்யா, என்னையும் ஒரு பார்வை பார்க்கக் கூடாதா? நீங்களெல்லாம் பெரியவர்கள்தானே? நான் என்ன அவ்வளவு பெரிய பாவியா? எனக்கு அருள் செய்யக்கூடாதா என்றார்கள்.
     நானும் பாவிதானய்யா! என்னை ஒரு பார்வை பார்த்து எனக்கு அருள் செய்யக் கூடாதா?” என்று கேட்டு நாமஜெபம் செய்து கொண்டே இருக்கிறேன்.
     ஆசான் நம்மை பார்க்கிறார். ஆசான் நம்மை பார்க்க பார்க்க பார்க்க நமது மனம் தெளிவடைகிறது.
     நம்மைப் பற்றி உணர்கிறோம். மனம் தெளிவடைகிறது.இப்படி கேட்க வேண்டும். பெண்களும் கேட்கலாம். ஆண்களும் கேட்கலாம். கேட்டு காமவிகாரத்தை உடைத்தெறிய வேண்டும். இது சின்ன விசயமில்லை.
     ஆக சோற்றையும் சுருக்கக் கூடாது. தூய்மையாய் இருக்க வேண்டும். தூய்மை என்பது உன்னுடைய அறிவிற்கு எட்டாது. நிலையில்லாததை நிலை என்று நினைப்பது மனிதனுடைய பலகீனம். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
        பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
      மருளானாம் மாணாப் பிறப்பு.
                                                                திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் குறள் எண் 351
                சொன்னவர் ஆசான் திருவள்ளுவர். அவர் பெரிய மகான். இது சாதாரன் விசயமில்லை.
     பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் – இந்த உடம்பு நிலையானது என்றும், நாம் சேகரிக்கும் பொருள் எல்லாம் நிலையானது என்றும், நாம் கற்ற கல்வி நிலையானது என்றும் நினைத்துக் கொண்டே இருப்பான்.
        இதற்கு விளக்கம் சொல்வார் மகான் திருவள்ளுவர். ஐயோ! இந்த பாடலை நான் படிக்கும்போது, அப்பப்பா! மகான் திருவள்ளுவர் நேரில் இருந்தால் அவருடைய திருவடியை பிடித்துக்கொண்டு நான் விடவே மாட்டேன் என்றார்.
        என்னய்யா, மகான் திருவள்ளுவரைக் கூப்பிட்டு “நான் எதை பொருள் என்று நினைக்கிறேன்? எது பொருள்? எது பொருள் இல்லை என்று தெரிவியல்லை எனக்கு. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும்.
     மருள் என்பது அறியாமை. ஆக, மகான் வள்ளுவப்பெருமான் சொல்வார், “ஏ! மனித வர்க்கமே! நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்குகிறாய். அதுதான் மருளான் ஆம் மானாப்பிறப்பு” என்றார்.
     அறியாமை சூழ்ந்த பிறவியடா என்றார். “அப்பா, எனக்கு தெரியவில்லை ஐயா. இப்பேர்ப்பட்ட வார்த்தையை சொல்கிறாய்.
    
     நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
      புல்லறி வாண்மை கடை.
                                                                – திருக்குறள் – நிலையாமை – குறள் எண் – 331
                நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்கி அதிலேயே விழுந்து கிடக்கிறாயே? ஏ புல்லரிவாளனே!” என்றார்.
     புல்லறிவு என்றால் சிற்றறிவு. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்கிறார்,
     பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
      மருளானாம் மாணாப் பிறப்பு.
      நிலையில்லாததை நிலை என்று மயங்குவதால்தானடா இந்த இழிந்த பிறப்பு வந்தது.
     மானாப்பிறப்பு என்றால் துன்பமான பிறவி, இழிந்த பிறவி.
     “என்னய்யா, எங்களை இப்படி தாக்கிப் பேசுகிறீர்?” என்றால், “உன்மேல் கருணை இருப்பால்தான் பேசுகிறேன்.
     உன்மேல் கருணை இல்லாவிட்டால் பேசுவேனா? பெரியோர்கள் நான்கள், பிள்ளைகள் வரவேண்டுமென்று விரும்புகிறோமையா. பிள்ளைகள் எல்லாம் வர வேண்டும்.
     நீங்களெல்லாம் நாங்கள் அடைந்த பேரின்பத்தை அடைய வேண்டும், மரணமில்லாப் பெருவாழ்வை பெற வேண்டும்.
     மீண்டும் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து, பிறந்து, நோயும் நொடியுமாக வறுமை சூழ்ந்து அல்லற்பட்டு, தொழுநோய்க்கு ஆட்பட்டு, புற்று நோய்க்கு ஆட்பட்டு, அங்ககீனத்திற்கு ஆட்பட்டு, விகாரமான கொடுமைக்குட்பட்டு சாகிறீர்கள்! நீங்கள் எங்கள் திருவடியைப் பற்றிக் கொள்ளுங்கள்” என்றார்.
     “நான் என்னய்யா செய்யட்டும்? நிலையில்லாததை நிலை என்று எண்ணுகின்ற மயக்கம் தெளிய வேண்டும். நீயே அருள் செய்யப்பா” என்று கேட்டான். “ அப்படிக் கேளடா மகனே! என்பார்.
     “நீங்கள் மருளான்ஆம் மாணாப்பிறப்பு என்கிறீர்கள். மருள் என்றால் அறியாமை. அறியாமை காரணமாக இழிந்த பிறவி வரும் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு எது நல்லது? எது கெட்டது என்று தெரியவில்லை.
     ஐயா! நீங்களெல்லாம் பெரியவங்க. ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றதனால்தான் இந்த வார்த்தையை உம்மால் சொல் முடிந்தது. நிலையில்லாத பொருளை நிலை என்று மயங்குகிறாய் என்றும், பொருளல்லவற்றை  பொருள் என்று மயங்குகிறாய் என்றும் சொல்லியுள்ளீர்கள்.
     எனக்குத் தெரியவில்லை ஐயா! நீங்களெல்லாம் பெரியவங்க. நீங்கள் எனக்கு அருள் செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்களெல்லாம் பாவியாவோம்.
     உங்கள் நூலை படிப்பதற்கே எனக்கு அறிவில்லை. அப்படியே படித்தாலும் அதில் உள்ள நுட்பம் எனக்குத் தெரியவில்லை. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்.
      நீங்களெல்லாம் பெரியவர்கள். உங்கள் நாமத்தை சொன்னாலே தெளிவான அறிவு வரும். தெளிவான அறிவை பெறாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.
           நான் காட்டுக்கா போக முடியும்? என்ன எனக்குத் தெரியும்? நான் துறவு மேற்கொள்வதா என்றான். உண்மைப்பொருள் தெரியாமல் துறவு மேற்கொண்டு என்ன செய்வாய் என்றார் ஆசான்.
     “நீ நல்ல பிள்ளையப்பா! நாங்களெல்லாம் பெரியவங்கதான். நீ என்னை கேள். நான் உன்னை இகழ்ந்து பேசி விட்டேன், நான் வருத்தப்படுகிறேன்.
     பொருலள்ளவற்றை பொருள் என்று மயங்குகின்ற மயக்கத்தில் இருக்கிறீர்கள். இது துன்பமான பிறவி என்று சொல்கிறோம். ஊரெங்கும் ஞானிகள் இருக்கிறோம். எங்கே கூப்பிட்டாலும், அழித்தாலும் நாங்கள் போவோம்.
     நாங்கள் அறிந்த இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றுதான் உங்களிடம் சொல்லுகிறோம்.
     நாங்கள்தான் பலமுறை இதை சொல்லியிருக்கிறோம். பற்றுக பற்றற்றான் என்று சொன்னோம். இந்த இரகசியத்தையெல்லாம் யார் அறிவார்கள்? ஞானிகள் நாங்கள் சொன்ன இந்த நூல் முழுவதும் ஞான நூலப்பா.
     பதிமூன்று அதிகாரம் ஞானத்தைப் பற்றி மகான் திருவள்ளுவராகிய நான் சொல்லியிருக்கிறேன்.
     நீங்கள் எனது நூலை படிக்கிறீர்கள் தவிர படித்த நூலின் சாரத்தை அடியேன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்கிறாயா? படிக்கிறாய், படித்தால் தெரியும், என்ன படித்து என்ன யார்?
     ஆக, நாம் செய்த பாவம் படித்த நூல்களைப் பற்றி உணரமுடியாமல் இருக்கிறது. ஆகவே, நிலையில்லாததை நிலையென்று மயங்குதல், பொருள் இல்லாததை பொருள் என்று மயங்குவதனாலே இழிந்த பிறவி வருமென்று சொன்னார்.
     நீங்கள் தலைவனிடம் “நீர்தானப்பா அருள் செய்ய வேண்டும்” என்று கேட்கணும்.
     நான் செய்த பாவம், எந்த நூலை படித்தாலும் புரியவில்லை. நான் என்ன செய்யட்டும்? நூல்களைப் படிக்கிறேன். படித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை.
     எனக்கு அந்த அறிவு வரவில்லையே என்று சுவற்றில் முட்டிக் கொள்வதா? யாரிடம் போய் கேட்பேன் நான்? இதை அப்படி செய்யணும், இப்படி செய்யணும் என்று திட்டம் போட்டு உலக மக்களெல்லாம் அலைகிறான். ஒன்றும் இல்லாமல் திட்டம் போடுகிறான்.
     இப்படி இருக்கும்போது நான் அந்த ஆசானை கேட்பேன்? யாரிடம் விளக்கம் பெறுவேன்? பாடலை படித்தால் புரியாது. என்ன செய்வது? அதற்கு மகான் திருவள்ளுவர், நீ முட்டினாலும் முடியாது, மோதினாலும் முடியாது. என் திருவடியைப் பற்றிக் கொள் என்றார். இப்பேர்ப்பட்ட பெரிய வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
     நான் உங்கள் திருவடியைப் பற்ற வேண்டும். நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டோம்.
     இப்படி ஒவ்வொரு ஞானிகளிடம் கேட்டு கேட்டு ஆசான் ஆசியோடும், அவருடைய துணை கொண்டும் இந்த உலகம் நிலையில்லாததுதான், நாமும் நிலையில்லாதவர்கள்தான் என்பதை அறிந்தோம். உள்ளே ஒன்று இருக்கிறது. அந்த உள்ளே ஒன்று இருப்பதை அறிந்து கொள்வதற்கு நாம் பாடுபடவேண்டும்.
     ஆக பெரியோர்களுடைய ஆசிதான் இதற்கு முக்கியம் என்றும், மகான் திருவள்ளுவப்பெருமான் நம்மை சாடுவது போல் கருணை காட்டியிருக்கிறார்.
     ஆக மகான் திருவள்ளுவருடைய ஆசி பெறாமல் இதை ஒழிக்க முடியாது என்பதையும் அறிய வேண்டும்.
     ஆக நம்மைப் பார்த்து சாடுவது போல, மருளான் ஆம் மாணாப்பிறப்பு இழிந்த பிறப்பு என்று மகான் திருவள்ளுவப்பெருமான் சொன்னார்.
     “உலக மக்களே! நீங்களெல்லாம் இழிந்த பிறவி எடுத்துள்ளீர்கள் நாங்கள் உங்களை பார்த்து கருணை காட்டுகிறோம்.
     ஞானிகள் நாங்கள் நேரில் வர முடியவில்லை. நாங்கள் ஒழி உடம்பை பெற்றிருக்கிறோம். உங்களிடம் பேச முடியவில்லை பிள்ளைகளா! நான் உங்களிடம் என்ன சொல்வது? நான் ஒழி உடம்பு வைத்துக் கொண்டு எப்படி வருவது?” என்பார்.
     “நீர் ஒழி உடம்பைப் பெற்றிருப்பதால் நான் என்ன செய்ய முடியும்? ஒளி உடம்பு எனக்குத் தெரியவில்லை” என்றான்.
     “யாராவது ஒருவன் சொற்குரு வருவான். அவனைக் கேட்டுக்கொள். அவனைக் கேட்டால் உனக்கு சொல்வான். அவர்கள் நினைத்தால் உடனே வரக்கூடியவர்” என்பார்.
     அவனிடம் சொல்ல வேண்டும். ஒளி உடம்பை பெற்றவர்கள் சொல்ல வேண்டும். இப்ப மகான் திருமூலதேவர் கூட, நம்மை சாடுவது போன்று சொல்வார். எப்படி இருக்கும்?
     பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
      பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்
      பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.
                                                                – திருமந்திரம் – கவி எண் – 2090
                பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்இந்த பிறவி பெறுதற்கரிய பிரவியப்பா! ஆறாவது அறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கும் இந்த பிறவி, அரிய பிறவி என்பார்.
     பெறுதற்கரிய பிறவி என்றால் இதற்கு ஈடான பிறவியே இல்லை. வேறு எந்த பிறவிக்கும் இல்லை இந்த வாய்ப்பு.
     பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார் – யார் அந்த பிரான்? நான் தான் என்றார் ஆசான் திருமூலதேவர். நாங்களெல்லாம் அத்தனை பேரும் ஆசான் ஞானபண்டிதன் ஆசியைப் பெற்ற மக்கள் என்றார்.
      ஆசான் திருமூலதேவர், மகான் அகத்தீசரும் தலைவன் ஆசி பெற்றவர், ஆசான் நந்தீசரும் தலைவன் ஆசி பெற்றவர், நாங்கள் இரண்டற கலந்திருக்கிறோம். இது தலைவன் ஆணை.
    
      பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார் – பிரான் என்றால் தலைவன், மகான் திருமூலதேவனான நானே பிரான். என்னை நீ வணங்கலாம். நான் உனக்கு அருள் செய்வேன். அருள் செய்வதென்றால் எப்படி அருள் செய்வேன்? உன்னால் பூஜை செய்யவே உட்கார முடியவில்லையே, அப்படி உட்கார்ந்தால் ஐந்து நிமிடத்திற்கு மேல் உன் மனது செம்மைப்படவில்லை.
    
     ஐந்து நிமிடத்திற்கு மேல் மனம் லயப்படவில்லை. உன் மனம் இப்படி இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?
     பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார் – பெறுதற்கரிய பிரான் அடி என்பது சாதாரண விசயமில்லை. மகான் திருமூலதேவருடைய நாமத்தை சொல்வது என்பதே சாதாரண விசயமில்லை. பெரிய விசயம். இந்த நாவு “திருமூலதேவா” என்று சொல்லவே நூறாண்டு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட தலைவன் மகான் திருமூலதேவர். பெறுதற்கரிய பிரான் அவர். அப்பேர்ப்பட்ட அவரின் நாமத்தை சொல்லவே வெகு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரே சொல்வார். நாங்களே பிரான் – தலைவன் என்று சொல்வார்.
     பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் – நம்மை பிராணி என்று சொல்லிவிட்டார். என்ன காரணம்? ஞானிகளுடைய நாமத்தை சொல்லாதவர்கள் எல்லாம் பிராணிகள் என்றார். பிராணிகள், மூர்க்கத்தனமாக இருக்கும். அதுபோன்று இவனும் மூர்க்கத்தனமாக இருப்பான். நாய் போன்ற பிராணிகள் நன்றாக சாப்பிடும், இன விருத்தி செய்யும் சாவும். அதுபோன்று இவனும் இருப்பான். இவனுக்கும் மிருகத்திருக்கும் வித்தியாசமே இல்லை.
     ஆக இரண்டு பேரும் ஒன்று என்றார். அதுவும் இவனும் ஒன்றுதான். அதனால்தான் பிராணிகள் என்றான். ஏனய்யா, என்னை பிராணி என்றீர் என்றால், “நீ மட்டுமல்ல நாய், பன்றி போன்ற பிராணிகள் நன்றாக சாப்பிடுகிறது, இனவிருத்தி செய்கிறது, சாகிறது. நீயும் தான் சாகிறாய். அதற்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” என்பார்.
     “நான் உனக்கு நேரடியாக சொல்ல முடியாது. நான் பாடல்களை எழுதி வைத்திருக்கிறேன். நீ படித்துப் பார்த்து தெரிந்துகொள்” என்று ஆசான் திருமூலதேவர் சொல்வார். இப்படி சொல்லும்போது என்ன சொல்வார்,
     பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
      பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்
      பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
      பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.
                                                                – திருமந்திரம் – கவி எண் – 2090
     பேறு என்றால் என்ன? சாகாதவன் பெற்றதே பேறு. அவன் பெருமைக்குரிய பேறு உள்ளவன், சாகாமல் இருக்கிறான். அதற்கரிய அறிவு வந்து விட்டது. அதுதான் பேறு. மற்றவன் பெற்ற பேறு எல்லாம் குப்பை! எவ்வளவு பேறு இருந்து எதற்காவது? என்றான். எத்தனை கல்வி இருந்தும்? எத்தனை அறிவு இருந்தும்? விஞ்ஞானம், மருத்துவம் எதுவாக இருந்தாலும் அவ்வளவும் குப்பை என்றார்.
     ஒரு சிறந்த பேறு எதுவென்றால் நான் சாக மாட்டேன். மறுபடி ஒரு கருப்பைக்கு செல்ல மாட்டேனென்று ஒரு பேறு. அதுதான் பெருமைக்குரிய பேறு. அந்த பேறு அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
     வேறு வழியே இல்லை. ஞானிகள் நம்மை சாடுவது போன்று இருக்கும். ஞானிகள் நாமத்தைச் சொல்ல வேண்டும்.
     உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
      உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
                                                திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 725
               
ஆக பெறுதற்கு அறிய பிரான் அடி பேணார், பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம், பெறுதற்கு அறிய பேறு இழந்தாரே” என்றார். மகான் திருமூலதேவர், மகான் காலாங்கிநாதர், மகான் போகமகாரிஷி போன்ற பெரியோர்களை பூஜை செய்து நாம் கேட்கணும். அப்போதுதான் அவர்கள் சொல்வார்கள்.
     இப்பொழுது உடம்பை காமத்திற்கு மட்டும் பயன்படுத்துவதா? போராடிக் கொண்டிருக்கிறேன் என்பான். நீ என்ன செய்வாய்? தாண்டி குதித்து விடுவாயா? வேண்டுமென்றால் சுவற்றில் முட்டிப்பார் என்பார் ஆசான் என்னய்யா செய்வது என்றான். ஒன்றும் செய்ய முடியாது. நீ உழன்று கொண்டிருக்காதே! உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இது சாதாரண விசயமல்ல. ரொம்ப நுட்பமான வார்த்தை. ஒன்றும் உன்னால் செய்ய முடியாது என்றார். அப்போது என்னதான் செய்வது? என்று கேட்டான்.
     அதற்கு “பேசாதே! எதிர்த்து பேசாதே! நான் சொல்வதை மறுபரிசீலனை செய்யாதே! தினம் பத்து நிமிடம் பூஜை செய். கீழே புத்தி போய்க் கொண்டே இருக்கிறது. அதன் போக்கிலேயே போய்க்கொண்டே இருக்கட்டும். மறுபடி மலையில் பத்து நிமிடம் பூஜை செய்கிறாய். பூஜையில் “எனக்கு ஞானம் சித்திக்க அருள் செய்ய வேண்டும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும். முன் வைத்த காலை பின் வைக்காத தீரம் வேண்டும்.
     நான் உலக நடையில் இருந்து கொண்டே இருக்கிறேன். நான் இந்த உலகத்தை நம்பக் கூடாது. மகான் வள்ளுவர் சொன்னது போல், மருளான் ஆம் மாணாப்பிறப்பு. இழிந்த பிறவி என்று சொன்னார்.
      நிலையில்லாததை நிலை என்று மயங்கும் மயக்கம். இந்த உலகத்தை நான் விட முடியாது. இதற்கெல்லாம் நீங்கள் அருள்செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்டுத்தான் பெற முடியும். வேறு வழி இல்லை. ஆசான் என்ன சொல்கிறார், இந்த உடம்புதான் உண்மையான உடம்பு என்கிறார்.
      உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் – எப்போது? தெளிவில்லாத காலத்திலே. ஆசான் உபதேசம் இல்லாத காலத்திலேயே. நாம் சொல்லாத வரையிலும் அப்படி இருந்திருக்கலாம். என்னய்யா எப்போது பார்த்தாலும் சாப்பிடுகிறோம், எப்போது பார்த்தாலும் காம விகாரத்தால் தடுமாறி கொண்டிருக்கிறோம், பசி எடுக்கிறது, சாப்பிடுகிறோம். மலஜலம் கழித்து கொண்டிருக்கிறோம்.
                உடம்பு நாறுகிறது என்றான். “இந்த தேகத்தை விடாதே! உனக்கு வரப்பிரசாதம் இது. இந்த அண்டத்தை பொடியாக்கும் வல்லமை இந்த உடம்பிற்கு உண்டு.
     அது மட்டுமல்ல. தன்னை மறைத்து கொள்ளலாம். என் திருவடியைப் பற்றுகின்றவர்களுக்கெல்லாம் ஞானத்தைத் தரலாம். அப்பேர்ப்பட்ட தலைவன் உடம்புள்ளே இருக்கிறான்” என்றார்.
     உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் – இந்த நிலை எப்போது வரும்? மகான் நந்தீசர் ஆசி இல்லாமல் வராது.
      போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை, போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினர் என்றார். பாவம் என்ன செய்யும் அறியாமையை உண்டு பண்ணும். இந்த உடம்பை பெரிது என்று நினைக்காதே அறியாமை என்றார்.
     ஆக, இந்த உடம்பு கீழ்த்தரமானது என்று நினைத்ததும் அறிவுதான். இந்த உடம்பு நலியும், மெலியும், கீழ்த்தரமானது என்று நினைக்கக் கூடிய அறிவு வந்தாலே, சிறப்பு என்று சொல்வார்.
     இந்த உடம்பை நீ பாராட்டிக் கொண்டிருந்தாய், ஆனால் ஞானிகள் இதை பாராட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
     உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன், உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் – உறுதிப்பொருளாகிய மெய்ப்பொருள் இந்த உடம்புக்குள் இருக்கிறது என்று நினைப்பதற்கே நூறு ஜென்மம் எடுக்க வேண்டும். எத்தனை நூல்களை படித்தாலும் தெரியாது.
     ஆக உடம்பு குற்றமானது. உறுதிப்பொருளாகிய மெய்ப்பொருள் இந்த உடம்புக்குள்ளே இருக்கிறது என்று அறிவதற்கே மகான் திருமூலதேவர் ஆசி இருக்க வேண்டும், மகான் காலாங்கிநாதர் ஆசி இருக்க வேண்டும், மகான் கருவூர்முனிவர் ஆசி இருக்க வேண்டும், மகான் அருணகிரிநாதர் ஆசி இருக்க வேண்டும், ஆசான் அகத்தீசர் ஆசி இருக்க வேண்டும்.
     உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் – இந்த உடம்பை நான் இழுக்கு என்று நினைத்தேன். நான் நேற்றுவரை இப்படித்தான் எண்ணியிருந்தேன்.
     அதற்கப்புறம் “இதை நான் பாராட்டவில்லை. இந்த உடம்பு தொடர்ந்து இருக்கும், கடைசி வரையிலும் இது துணையாக இருக்கும், என்றும் நாம் அழியாது இருப்போம் என்று நினைப்பதே சுத்த மடத்தனம்” என்றான்.
     மடத்தனம் அல்ல. சுத்த மடத்தனம்! அப்ப இந்த உடம்பு அழியக்கூடியது, இழுக்கானது என்று நினைப்பதே ஒரு புண்ணியம் தான். அந்த அறிவு வந்ததால்தான் உறுதிப்பொருள் ஆகிய மெய்ப்பொருள் இருக்கும் என்றான்.
     உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் – ஆசான் திருமூலதேவரை பூஜை செய்தான். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தான். அப்போதுதான் உத்தமன் ஆனான், சிந்தை தெளிவடைந்தது, தெளிந்த அறிவு வந்தது.
     ஆக தேகத்தில் உறுபொருளை கண்டான். முன்பு வஞ்சகன் இருந்தான், இப்போது போய்விட்டான். வஞ்சகன் யாரால் போனான்? வஞ்சகத்தை வென்றவன் ஆசி பெற்றதனாலே, வஞ்சகம் தீர்ந்தது. வஞ்சகம் என்பது மும்மல சேட்டைகள். வஞ்சகம் என்பது களிம்பு, அசுத்த தேகம். அசுத்த தேகம் நீங்கியது. ஆக வஞ்சனை நீங்கியது. வஞ்சனை நீங்கியதனாலே சுத்த தேகம் வந்தது. இதைதான், உடம்பினுக்கு உள்ளே உரு பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே என்றார். 
    
     ஆக நச்சுத்தன்மையாக இருந்த கொடும் பாவி நீங்கினான், உத்தமன் வந்து விட்டான். உத்தமன் என்பதே நல்ல தேகம், காம விகாரம் அற்ற தேகம் சிறந்த அறிவு, பேராற்றல். பேரறிவு துணை வந்தது வென்று விட்டான். இதெல்லாம் நுட்பமான வார்த்தை.
     ஆகவே இப்பேர்ப்பட்ட உறுதிப்பொருளாகிய மெய்ப்பொருள் இந்த உடம்புக்குள்ளே இருக்கிறது என்று அறிகின்ற அறிவும் ஆசான்தான் கொடுக்க வேண்டும்.
     உடம்புக்குள்ளே அயோக்கியன் இருந்தான். நச்சுத்தன்மையான நம்மை வஞ்சிக்க கூடிய பாவி உடம்பில் இருந்து நீங்கினான். உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்றார். உள்ளே தலைவன் குடி கொண்டு விட்டான். உள்ளே மும்மலம் அற்ற, விகாரம் அற்ற ஒரு பேரறிவு, விகாரமற்ற ஜோதியாக உள்ள தலைவன் வந்தான். அப்போது உடம்பினுக்கு உள்ளே உறு பொருள்கண்டேன் என்றார்.
         
     உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
      எப்போது உத்தமன் கோவில் கொண்டான்? யார்? எந்த நேரத்தில் கோவில் கொண்டான்? அதற்கு எத்தனை ஆண்டுகளாகும்? எத்தனை முறை நாக்கு தழும்பேறும்படி பூஜை செய்து மகான் திருமூலதேவரையும், மகான் காலாங்கிநாதரையும், மகான் போகமகாரிஷியையும், மகான் அருணகிரிநாதரையும் அழைத்திருக்குஅ வேண்டும்.
     அப்படி கூப்பிடாமல் எப்படி உத்தமன் வருவான்? அயோக்கியன் எப்படி வெளியே போவான்? உத்தமன் உடம்பிற்குள் தங்குகிறான் என்றால், யார் தங்கினார்கள்? மகான் திருமூலதேவரா? மகான் அருணகிரிநாதரா? அல்லது ஆசான் அகத்தீசரா? தலைவன் தங்கி விட்டான்.
     உருகி தியானம் செய்ததனால் அயோக்கியன் போனான், உத்தமன் தங்கினான். அப்படி தங்கினால் என்ன ஆகும்? மரணமில்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.
     அப்படிப்பட்ட வாய்ப்பை பெற்றவன் இந்த உலகம் அழிந்தாலும் அழிய மாட்டான். ஆக, இதைப் போற்ற வேண்டும். எதைப் போற்ற வேண்டும் என்றான்.
     உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
      இந்த உடம்பை போற்றினான். உடம்பில் உத்தமன் இருந்தால்தானே போற்ற முடியும்? அயோக்கியனை வைத்துக் கொண்டு செய்ய முடியுமா? அயோக்கியனை வைத்துக் கொண்டு பாதுகாக்க முடியாது. தலைவனை பாதுகாக்கலாம்.
     ஆக பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு லட்சியம் வேண்டும். மலேசியப் பெண்கள் கல்வி அறிவு உள்ள மக்கள், கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
     அவர்கள் சாதாரண மக்களை சந்தித்து அன்னதானத்திற்கு இரண்டு வெள்ளி வாங்குகிறார்கள். “நாங்கள் ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றோம். இரண்டு வெள்ளி கொடுங்கள்” என்று அன்னதானத்திற்கு கேட்டால் கிண்டல் செய்கிறான், ஏதோ சொல்கிறான். இப்படியெல்லாம் அல்லல்பட்டு வசூல் செய்கிறார்கள்.
     ஏன் வசூல் செய்ய வேண்டும்? ஏழை மக்களுக்கு பசியாற்றுவிக்கத்தான். நாம் இங்கே அந்த நல்ல காரியத்தை செய்தால், அங்கே பசியாறுவார்கள். ஆக அறப்பணி செய்யும்போது புண்ணியம் பெருகும். புண்ணியம் பெருகும்போது ஞானியர்கள் ஆசி கிடைக்கும். அதற்காக நான் ஏழை எளிய மக்களுக்காக அன்னதானத்திற்கு வசூல் செய்கிறோம். இரவும் பகலும் இதைப் பற்றியே சிந்திக்கிறோம், வசூல் செய்கிறோம்.
     இங்கே வருகின்ற பொருள், முறைப்படுத்தப்பட்டு ஏழை மக்களுக்கு போய் சேர்கிறது.இந்த உழைப்பு வீண் போகாது.
     இந்த புனிதமான காரியத்திற்கு நான் வசூல் செய்து அனுப்புகிறேன். ஒரு புனிதமான காரியம் செய்து புண்ணியத்தை பெற்று ஞானிகள் ஆசி பெற்று செய்யும்போது ஆசான் பார்க்கிறார். “ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறோம் அம்மா, நீங்களெல்லாம் ஒரு வெள்ளி, இரண்டு வெள்ளி முடிந்த அளவு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களும் முடிந்ததை கொடுக்கிறார்கள். இதை ஆசான் பார்க்கிறார். அங்கு ஏதாவது பிரச்சனை என்றால், ஆசான் நானிருக்கிறேன் என்பார். இங்கே கவனிக்க வேண்டும். அங்கே வசூல் செய்யும்போது, ஏதாவது பிரச்சனை வந்தால், பயப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்பார் ஆசான்.
    
     ஆக நோக்கம் புண்ணியம் செய்ய வேண்டும். புண்ணியத்தை பெறுவதற்கு, புண்ணிய காரியம் நடப்பதற்கு துணையாக இருக்கிறோம். ஏன் துணையாக இருக்கிறோம் என்று சொன்னால், ஆசான் ஆசி பெறுவதற்கு நாம் துணையாக இருக்கிறோம்.
     ஆக புண்ணியத்தை செய்து ஆசியை பெற்றுக் கொள்கிறோம். ஞானிகளை வணங்குகிறோம். முடிவு என்ன என்று சொன்னால் இந்த புண்ணிய செயல் நமக்கு சிறந்த அறிவை உண்டாகும், நீடிய ஆயுளை உண்டாக்கும், ஆசான் ஆசி பெறுவதற்கு துணையாக இருக்கும். இங்கே தமிழ்நாட்டில்  தமிழக மக்களும் பொருளுதவி செய்கிறார்கள்.
     ஆக இந்த புண்ணிய செயலுக்கு தொண்டு செய்ய, தொண்டு செய்ய ஞானிகளுடைய ஆற்றல் கிடைக்கும். ஆக திருவடி துணை கொண்டு உத்தமன் உள்ளே தங்க வேண்டும். நம்மை ஆட்டிப் படிக்கக் கூடிய காமவிகாரம் நீங்கி உள்ளம் தெளிவாகி ஜோதி வடிவான ஒரு தலைவன் உள்ளே தங்க வேண்டும்.
     அப்படி தங்கினால் ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். நம்மை வஞ்சிக்கக் கூடிய இந்த கபம் அற்றுப் போகும், கபத்தை அறுத்தே விடுவான், கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தே விடுவான். கபம் அற்றுப் போகும், காமவிகாரம் அற்றுப் போகும், தெளிந்த அறிவு வரும், நச்சுத்தன்மை இருக்காது, நரகத்திற்குப் போக மாட்டோம், சொர்க்கத்திற்கு போவோம்.
     இப்படி நாங்கள் சொன்னபோதிலும்,இந்த கருத்துகள் எவ்வளவு நேரம் நிற்குநிற்கும்? தொடர்ந்து பூஜை செய்தால் நிற்கும்.இதை மகான் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்வார்,
    
                கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
      வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
     ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
         ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே.
                                                                                                கந்தரலங்காரம் – கவி எண் 20
                உங்கள் வினைகள் உங்களை சிந்திக்க ஒட்டாது என்று சொன்னார். ஆக அவரும் சாடித்தான் பேசுகிறார். தலைவன் நாமத்தைச் சொல்லாமல் என்ன சிய போகிறாய்?
     கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது – ஆக வினைகள் உங்களை சிந்திக்க ஒட்டாமல் செய்துவிடும், சிந்திக்க ஒட்டாது என்றார். ஆசான் அருணகிரிநாதரை கூப்பிட்டு அய்யா என்னுடைய வினை என்னை சிந்திக்க விடாது என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா?
      சிந்திப்பதற்கு நீர் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும். “இப்படி யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை மகனே! இப்படி யாரும் என்னைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் மகான் அருணகிரிநாதர்.
      “உங்கள் ஊழ்வினை உங்களை சிந்திக்க விடாது என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? நீர் எனக்கு அருள் செய்யக் கூடாதா?” என்றால், “யாரம்மா என்னை கேட்கிறார்கள்?” ஆசான் அருணகிரிநாதரான நான் முதுபெரும் தலைவன். ஆசான் ஞானபண்டிதருடைய ஆசி பெற்ற மகன். நான் முதுபெரும் தலைவன். ஆசான் ஞானபண்டிதருடைய ஆசி பெற்ற மகன். நீ என்னை ஏன் கூப்பிடவில்லை? உன்னை சாடிப்பேசுகிறேன். உன் மீது உள்ள கருணையினால் வல்வினை உன்னை சிந்திக்க விடாது என்று சொல்கிறேன். ஏன் என்னை கூப்பிடவில்லை? நான் அருள் செய்கிறேன் அம்மா!” என்பார்.
     நாம் செய்யக் கூடிய அறப்பணிகளும், ஞானிகளை வணங்கி செய்யக்கூடிய பூஜையும், மரணமிலாப்பெருவாழ்வு பெறவே ஆகும். இனி மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு உலக மக்கள் அத்தனைபேருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை பெண்களும் ஆண்களும் அடைய வேண்டும்.
     ஞானசித்தர்காலம் வந்ததனாலே ஊரெங்கும், உலகெங்கும் உண்மைப் பொருளை நாடி, உண்மைப்பொருளை அறிந்து அவரவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
     தலைவனை அடையக்கூடிய விசயத்தை சொல்லி இருக்கிறேன். நான் அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறேன், சத்தியமாக பெற்றிருக்கிறேன். என்னை
வஞ்சிக்கக் க் கூடிய காமத்தை ஆசான் பொடியாக்கியிருக்கிறார். என்னை வஞ்சித்த காமதேகமும், பொருள் வெறியும் பொடிப் பொடியானது.
     அதே சமயத்திலே ஜாதி வெறி அற்றுப் போனது, மத வெறியும் அற்றுப் போனது, யான் என்ற அகந்தை அற்றுப் போனது, தெளிவான அறிவு வந்தது, ஆசானுடைய ஆசியால் சிறந்த அறிவை பெற்றிருக்கிறேன்.
     அதனால் தான் இந்த சங்கம் இருபத்தொரு ஆண்டுகள் இடைவிடாது வளர்ந்து கொண்டே இருக்கிறது, ஆண்டுக்கு ஆண்டு வளர்கிறது.
     இந்த சங்கத்தை தாங்கக் கூடியவன் சிந்தையில் மகான் நந்தீசரும், மகான் திருமூலதேவரும், மகான் அருணகிரிநாதரும் தங்கி இருப்பதனால்தான் காமவிகாரமற்ற தேகம் வந்தது. காமவிகாரமில்லை! வஞ்சனை இல்லை! சிறுமை குணம் இல்லை! சங்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது! இந்த சங்கம் உலகமக்களுக்கு தாய் போன்று இருக்கிறது.
     உலகமக்களுக்கு தாய் போன்று இருந்து அரவணைத்து, நாட்டு மக்களை முன்னேற செய்ய வேண்டி இருப்பதனால், ஒவ்வொரு ஆண்டும் மலேசிய அன்பர்களும் தீட்சை விழாவிற்கும், சித்ரா பௌர்ணமிக்கும் வந்து இங்கே தொண்டு செய்கிறீர்கள், தமிழக அன்பர்களும் வந்து தொண்டு செய்கிறார்கள்.
     தொண்டு செய்வதன் நோக்கம் என்ன? “எனக்குத் தெரியவில்லை ஐயா! ஒரு பக்கம் பிரச்சனை, ஒரு பக்கம் வறுமை, ஒரு பக்கம் மனைவிக்கு நோய், பகைமை போன்ற பிரச்சனைகள் போட்டு என்னை வாட்டுகிறது ஐயா நான் என்ன செய்வது?” என்பான்.
     உன்னை மட்டுமா வாட்டுகிறது? ஊரையே வாட்டுகிறது இதற்கிடையேதான் உள்ளே புகுந்து செயல்பட வேண்டும். அன்பர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும், அதைத் தாங்கி தினம் தினமும் ஆசான் நாமத்தை எங்கு சென்றாலும் “அகத்தீசா! அகத்தீசா!” “திருமூலதேவா” என்று சொல்லுங்கள்.
     நவகோடி சித்தர்களின் நாமங்களில் யார் நாமத்தை சொன்னாலும், எல்லாம் ஒன்றுதான். நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். போராடி போராடி வெற்றி பெற வேண்டும்.
     பெண்களும் ஆண்களுமாக ஆசான் நாமத்தை சொல்லி ஆசான் சுப்பிரமணியர் ஆசியையும், ஆசான் அகத்தீசர் ஆசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். உலகத்திற்கு நாம்தான் வழி காட்ட வேண்டும்.
     சாதரணமாக எதற்கோ வந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். தினம் அன்னதானம் செய்ய வேண்டும். மக்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த உலகத்தை எப்படி மாற்றுவார்கள்? அந்த வல்லமை இருக்கிறதா இவர்களுக்கு? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
     முதுபெரும் ஞானிகள் அடித்தால், சும்மா அப்படி தட்டினால் அண்டம் கிடுகிடு என்று நடுங்கும். அப்பேர்ப்பட்ட ஆசான் புஜண்ட மகரிஷியும், மகான் போகமகாரிஷியும், மகான் சட்டமுனியும், மகான் சண்டீசரும், ஆசான் அகத்தீசரும்தான் அற்புதம் செய்யப் போகிறார்கள்.
     இவர்கள் துணையில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நம்மிடம் பக்குவம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். பொருளாதாரம் கொடுத்தால் ஏதாவது செய்வானா அல்லது நல்லபடியாக செய்வானா. சரி, வேறுவகை காமவிகாரமிருக்கிறதா? என்று பார்ப்பார்கள். காமவிகாரம் இருந்தால் ஒழித்தே விடுவார்க்ள.
     ஆக, இப்பேர்ப்பட்ட தொண்டர்களை கொண்டுதான் நல்லதை செய்வார்கள், செய்யவும் முடியும். நாம் அதற்குத்தான் வந்திருக்கிறோம். நாம் ஒரு இலட்சியத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். வெறும் ஆரவாரமில்லை, அடக்கமாக செய்து கொண்டிருக்கிறோம். நம்மை நம்பி ஞானிகள் இருப்பதனாலே ஆசானை இப்படி கேட்க வேண்டும். வருகின்ற ஞானசித்தர் காலத்தில் அடியேன் தொண்டு செய்வதற்கு நீர் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கேட்க வேண்டும்.
     என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தொண்டு செய்ய நீர் ஆசி வழங்க வேண்டுமென்று கேட்க வேண்டும். தொண்டு செய்ய அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால்தான் அருள் செய்வார்கள்.
     காலத்தை வீணாக்க முடியாது. காலை மாலை பூஜை செய்யும் பொது கேட்க வேண்டும். தினம் தினம் பூஜை செய்தால் எல்லாம் தானே நடக்கும்.
    
     அதே சமயம் பொருள் சேர்ப்பதனால், பொருள் சேர்க்கக்கூடிய எண்ணத்தினால் நான் பாவியாகக் கூடாது. காமத்தின் காரணமாக நான் பாவியாகக் கூடாது. ஜாதி வெறி காரணமாக, மத வெறி காரணமாக நான் பாவியாகக் கூடாது.
     எந்தெந்த வகையில் நான் பாவியாவேனோ, எந்தெந்த வகையில் என்னை குணக்கேடுகள் நரகத்தில் தள்ளுமோ, அவற்றையெல்லாம் உணர்த்தி நீக்கிக் கொள்ள அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     இந்த கருத்துகள் சற்று உங்களுக்கு கசப்பாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் வேறு வழியே இல்லை நீங்களும் முன்னேற வேண்டும். உலகமக்கள் முன்னேற வேண்டும்.
     இது நேரம் வரையிலும், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும், தொண்டு செய்த அன்பர்களுக்கும் உலகமக்களுக்கும் நன்றியையும், வாழ்த்தையும் சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171983
Visit Today : 225
Total Visit : 171983

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories