உயிருக்கு மருத்துவம்

என்ற தலைப்பில் 04.07.1997 அன்று மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய அருளுரை

ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள சன்மார்க்க சங்க அன்பர்களே வணக்கம்

     மனித வர்க்கத்திற்கே உரிய நெறிகளை, ஞானிகள் வகுத்து வைத்திருக்கிறார்கள். பல ஞானிகளும் உருவாக்கியிருக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள பெரிய மேதைகளும், சில கருத்துகளை சொல்லியிருப்பார்கள். ஆனால் அவைகள் எல்லாம் உலக நடைக்குத்தான் ஆகுமே தவிர, ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு உதவாது. அங்கே விஞ்ஞானிகள் இருக்கலாம், மருத்துவர்கள் இருக்கலாம். ஆனால் உண்மையான மருத்துவத்தை இங்கே நமது ஞானிகள்தான் உருவாக்கியிருக்கிறார்கள். மனிதனுக்கு வாத, பித்த, சிலேத்துமம் இருக்கிறது என்பதை ஆசான் வள்ளுவப்பெருமான்,
     மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
      வளிமுதலா எண்ணிய மூன்று.
                                                – திருக்குறள் – மருந்து – குறள் எண் – 941
என்பார். ஆக இந்த வாத, பித்த, சிலேத்துமம் மூன்றும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும் என்பார். வாதம் என்பது காற்று. அதை காலையில்தான் கண்டுபிக்க முடியும். பித்தம் என்பது அக்கினி. அதை உச்சி நேரத்தில் கண்டுபிடிக்கலாம். சிலேத்துமம் அல்லது சீதளம் இதை மாலை நேரத்தில் கண்டுபிடிக்கலாம். ஆக ஞானிகள் இப்படியெல்லாம் அறிந்திருக்கிறார்கள். ஆனால் நாம் உடலிற்கு மருந்து கொடுக்கின்றோமோ? அல்லது உயிருக்கு மருந்து கொடுக்கின்றோமா? ஆக உயிருக்கு மருந்தா? உடலுக்கு மருந்தா? வெளிநாட்டினர் கண்டுபிடித்தது உயிருக்கு மருந்தா? உடலுக்கு மருந்தா? உடம்பிற்கு நோய் வந்தால் மருத்துவம் செய்து கொள்ளலாம். உயிருக்கு மருத்துவம் இல்லை. உடம்பைக் காப்பாற்றினால் உயிர் காப்பாற்றப்படும் என்று சொல்லலாம். வெளிநாட்டு மருத்துவ முறைகள் மிக நுட்பமாக உள்ளது. அது பாராட்ட வேண்டியதுதான். அதை யாரும் மறுக்க முடியாது. நம்மிடம் சித்த மருத்துவம் உள்ளது. சித்த மருத்துவத்தில் எல்லா நோய்க்கும் மருந்து கொடுப்பார்க்ள. சித்த மருத்துவத்தால் புற்று நோய் தீரும். ஆனால் கை, கால் முறிந்து விட்டால் எலும்பையெல்லாம் பிரித்து அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். அதை போல இதயத்தில் பிரச்சனை இருந்தாலும் இதயத்தை கிழித்து அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆக இவையெல்லாம் அற்புதமான வேலை.
     ஆனால் சித்த  வைத்திய முறையில் அப்படி செய்ய முடியாது. ஏனென்றால் அதற்குரிய நடைமுறைகள் அங்கு இல்லை. அந்த காலத்தில் ஞானிகள் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அந்த காலத்தில் ஒருவனுக்கு எலும்பு முறிந்து இருந்தாலும் அல்லது உடலில் அடிபட்டு இருந்தாலும் அப்பொழுது அவனுக்கு மயக்க மருந்து கொடுக்க முடியாது. ஆனால் இப்பொழுது மயக்க மருந்து கொடுக்கலாம். ஆக, எல்லா காலங்களிலும் நோய்களுக்கு சிகிச்சை முறை உள்ளது. இப்பொழுது மருத்துவத் துறையில் நவீன முறைகளெல்லாம் வந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்யாமலே உடம்பினுள்ளே இருக்கிற கட்டிகள், சிறுநீரகத்தில் இருக்கிற கட்டிகள் போன்றவைகளை அறுவை சிகிச்சை இல்லாமலே உடைத்து விடுகிறான். ஆக அந்த அளவிற்கு உடம்பினுள்ளே இருக்கின்ற கட்டிகளை பார்க்கின்ற அளவிற்கு கருவிகள் உள்ளது. இதை பாராட்ட வேண்டும். நமது நோயைப் பற்றி நாமே தெரிந்து கொள்கின்ற அறிவு இருக்கிறது. அப்படிப்பட்ட அறிவு உள்நாட்டிலும் இருக்கலாம், வெளிநாட்டிலும் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இப்படி இருந்தாலும், உயிருக்கு மருத்துவமா? உடலுக்கு  மருத்துவமா? என்று பார்த்தால் உடம்புக்குத்தான் மருத்துவம் செய்கிறார்கள்.
     உயிருக்கு மருத்துவம் வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உயிருக்கு போகும், உடம்பும் போகும். உடம்பைக் காப்பாற்றி கொண்டான். உடம்பிற்கு மருத்துவம் செய்தான். அப்படி செய்தும் உயிர் போய்விட்டது. அப்படியென்றால் உயிருக்கு மருத்துவம் இல்லையோ? இல்லை.
     உயிருக்கு என்ன மருத்துவம்? உடலுக்கு மருத்துவம் செய்ய தெரிந்து கொண்டான். வெளிநாட்டவர்கள் உடம்பிற்கு வரும் நோய்களுக்கெல்லாம் மருத்துவத்தை அறிந்து, அந்த நோய்களுக்கு மருந்தையும் கண்டுபிடித்து விட்டார்கள். ஏய்ட்ஸ் நோயைத் தவிர. ஆனால் ஞானிகள் மட்டும் ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பார்கள், அதைப் பற்றி எங்களுக்கு தெரியும், பிற்காலத்தில் வெளிப்படும் என்று நினைக்கின்றோம். சில நேரத்தில் உடம்பில் ஒரு பகுதி அழுகி போகும், புற்று நோய் கூட இருக்கும். ஆனால் அவற்றை அறுவை சிகிச்சை செய்து அறுத்து எடுத்து விடலாம். அறுவை சிகிச்சை செய்யாமலும் குணப்படுத்தலாம்.
     உயிருக்கு மருத்துவம் என்பது ஞானிகளால்தான் சொல்ல முடியும். அப்படி அவர்கள் சொல்வதுதான் உண்மையான மருத்துவம். உயிருக்கு என்ன மருத்துவம்? உயிருக்கு ஆக்கம் தேடிக் கொள்வதே உயிருக்கு செய்யும் மருத்துவம். உயிருக்கு ஆக்கம் எப்படி தேடுவது? பிற உயிர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளே நமது உயிருக்கு ஆக்கம் தரும் என்பார்கள் ஞானிகள். பிறருக்கு பசியாற்றுவிக்க வேண்டும். பிறருடைய பசி என்ற நோயை தீர்த்தால் நமது ஆன்மாவிற்கு பசி அடங்குகிறது. இப்படி செய்வது ஆன்மா ஆக்கம் பெறுவதாக அர்த்தம். ஆக பசியாற்றுவித்தல் என்பது ரொம்ப நுட்பமான வார்த்தை. பசியாற்றுவித்தல்  மட்டும் போதுமா? பசியாற்றுவித்தல் நியாயம்தான். அதே சமயத்தில் மருத்துவமும் செய்யலாம், மானத்தை காக்க துணியும் தரலாம், கல்வியும்தரலாம், உணவும் தரலாம், இனிமையாகவும் பேசலாம். இதைவிட ஒரு சிறந்த உதவி ஒரு தருமம் உள்ளது. அதை வாசாகைங்கரியம் என்று சொல்ல்வார்கள். நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு சொல்லுதல் என்பதும் ஒரு தானம்தான். அதை வாசாகைங்கரிய தானம் என்போம். கற்றவர்கள் தாம் கற்றதை பிறருக்கு சொல்லத்தான் வேண்டும். ஆக, இவையெல்லாம் பிறருக்கு செய்யக்கூடிய நற்செயல்கள்.
     பிறரை வெறுத்தல், பிறருக்கு இடையூர் செய்தல், பிறர் மனதைப் புண்படுத்துதல் போன்ற செயல்கள் எல்லாம் ஆன்மாவை மாசுபடுத்தும் என்பார். இந்த செயல்கள் ஆன்மாவிற்கு நோயை உண்டுபண்ணும். இனிமையாகப் பழகுதல், மலர்ந்த முகமாக இருத்தல், உணவு தருதல், உடை தருதல், மருத்துவம் செய்தல், கல்வி தருதல், வேறு வகையான எந்த உதவிகளாயிருந்தாலும் செய்தல், பொருளும் தருதல், மனித வர்க்கத்திற்கு உண்டாகும் பிரச்சனைகளை தீர்த்தல் போன்றவைகளை ஒருவன் செய்கிறான். அப்படி அவன் ஏன் செய்கிறான்? அதற்கு அவன், நான் உயிருக்கு மருத்துவம் செய்கிறேன் என்றான். உயிருக்கு மருத்துவம் செய்கிறேன், அதனால் உயிருக்கு ஆக்கம் தேடிக் கொள்கிறேன் என்றான்.
     உயிருக்கு மருத்துவமா? பிற உயிர்களுக்கு செய்யும் ஆக்கமே, நம் உயிருக்கு செய்யும் மருத்துவம் ஆகும். ஆக பிற உயிர்களுக்கு ஆக்கம் செய்யும் போது, பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியான காரியம் செய்யும்போது, நமது ஆன்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி உருவாகும், ஆன்மாவிற்கு விழிப்புணர்ச்சி வரும், ஆன்மா மெருகேறும். அதே சமயத்தில் ஆன்மாவிற்கு ஆற்றல் வரும். பிற உயிர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகள் நமது ஆன்மாவிற்கு ஆக்கத்தை உண்டுபண்ணும் என்ற இரகசியத்தை அறிந்தவர்கள் ஞானிகள். உயிர்களுக்கு நன்மை செய்வது எப்படி? அதை அற்றார் அழிபசி தீர்த்தல் என்பார். ஆக, உயிருக்கு ஆக்கம் தேடிக் கொள்வது பற்றி சொன்னோம். இனிமையாகப் பழக வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறோம். இனிமையாக பழகுவதே தூய மனது. தூய மனது உள்ளவர்களால்தான் இவற்றையெல்லாம் செய்ய முடியும். தூய மனது என்பதை ஆசான் வள்ளுவப்பெருமான்.
     அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
      அற்றாக அற்றது இலர்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் – 365
என்பார். மேலும் தூய்மை என்பது அவாவின்மை என்பார். தூய மனது உள்ள இடத்தில் வஞ்சனை இருக்க முடியாது. தூய  மனது உள்ள இடத்தில் சுயநலம் இருக்க முடியாது. தூய மனது உள்ள இடத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இருக்காது. தூய மனது உள்ள இடத்தில் தன்னை அர்ப்பணிக்கும் இதயம் இருக்கும். ஆக தூய்மை என்பது அவாவின்மை. எதையும் தூய மனதோடு செய்ய வேண்டும். மனிதன்தானே நாம். தூய மனது எப்படி ஐயா வரும்? பொருள் வந்தால் ஆசை வருமே. அப்படி பொருள் மீது ஆசை வந்தால் என்ன ஐயா செய்வது? ஆனால் ஆசான் வள்ளுவப்பெருமானோ தூய்மை என்பது அவாவின்மை என்றார். இதை,
      தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றஅது
      வாஅய்மை வேண்ட வரும்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 364
                என்பார். ஒருவன் விரும்பினால் உண்மையை விரும்ப வேண்டும். கடவுளெல்லாம் உண்மையானவர்கள். அவர்கள் சாகமாட்டார்கள். சாகின்றவன் உண்மை இல்லாதவன் என்று அர்த்தம். ஞானிகள் உண்மையானவர்கள். அவர்கள் புற உடம்பை நீக்கி ஜோதி உடம்பு ஆனவர்கள். இப்படிப்பட்ட ஜோதி இருக்கிறது. சூரியன் பகலில் தோன்றி இரவில் மறையும். ஆனால் ஞானிகள் எல்லோரும் தம்முள் ஜோதியைக் கண்டவர்கள். அப்படி ஜோதியைக் கண்டவர்கள்தான் உண்மையானவர்கள். எனவே அவர்கள் வேண்டினதெல்லாம் கிடைக்கும் என்பார். இதை மற்றது வாய்மை வேண்டவரும் என்றார். தலைவனிடம் வேண்டினால் தீமை வருமா? ஒரு நாளும் வராது.
     உண்மை என்பது தூய்மை, மெய்ம்மை என்றார். மேலும் வாய்மை, தூய்மை உண்மை எல்லாம் ஒன்றுதான். தலைவன் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு தூய்மை வராது. முன் செய்த நல்வினை இருந்தால் அப்படி ஒரு ஆற்றல் இருக்கும். மகாத்மா காந்தி மிகப் பெரிய பட்டதாரி ஆவார், எல்லாவற்றையும் நாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். பொருளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவருடைய செயல்பாடெல்லாம் தூய்மையாக இருந்தது. இதற்கு காரணம் முன் செய்த வினைதான், அவர் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான ரூபாய் அல்ல பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை குவித்திருக்க முடியும். ஆனால் தூக்கியெரிந்தார். இது சாதாரண அறிவல்ல.
     பொருளை விரும்பாத அறிவு, பொறாமை இல்லாத அறிவு வஞ்சனையில்லாத அறிவு, எல்லோரையும் அரவணைக்கின்ற அறிவு, தியாக சிந்தை போன்ற குணங்கள் எல்லாம் எப்பொழுது வரும்? தலைவன் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு இந்த குணப்பண்புகள் வராது, இப்படிப்பட்ட வாய்ப்பு தலைவன் ஆசியால்தான் கிடைக்கும். ஆக அவா இல்லாததுதான் தூய்மையானது. அப்படிப்பட்ட வாய்ப்பை பெற வேண்டும் என்பார்.
     தூய்மை என்பதே அவாவின்மை. ஆசை இல்லாததே தூய்மை என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். இவற்றையெல்லாம் எதற்கு சொல்ல வேண்டும்? உயிருக்கு ஆக்கம் தேடிக் கொள்ள வேண்டும் அல்லவா. அதற்காக இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆக பிற உயிர்களுக்கு செய்யக்கூடிய நன்மையால்தான் ஆன்மாவிற்கு ஆக்கம் வரும். ஆசான் வள்ளுவப்பெருமான்
      ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
      ஊதியம் இல்லை உயிர்க்கு.
                                                                – திருக்குறள் – புகழ் – குறள் எண் – 231
                என்பார். ஈதல் – கொடுத்தல், இசை – புகழ், இசைபட வாழ்தல் – புகழ்பட வாழ்தல், அதுஅல்லது – அதைத்தவிர, ஊதியம் இல்லை உயிர்க்கு – அதைவிட ஆன்மாவுக்கு இலாபம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆக கொடுப்பதினாலும் புகழ் உண்டாகும். ஆன்மாவிற்கு இலாபம் என்பதே ஆன்மாவிற்கு ஆதாயம் தேடக் கொள்வதாகும். ஆக ஆன்மாவிற்கு ஆதாயம் தேடினால் அதனுடைய விளைவு எப்படி இருக்கும்? ஆன்மாவிற்கு ஆதாயம் தேடினால் அறிவு விளக்கம் பெரும்.  எனவே ஆன்மாவிற்கு ஆக்கம் தேடிக் கொண்டால் சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவுதான் புண்ணியமா? சிறப்பறிவு உள்ளவன்தான் ஆன்மாவைப் பற்றி அறிய முடியும். ஆக ஆன்ம வளர்ச்சியா? அறிவு வளர்ச்சியா? என்று கேட்டான். ஆன்ம வளர்ச்சியே அறிவு வளர்ச்சி. அறிவின் வளர்ச்சியே ஆன்ம வளர்ச்சி என்றார்.
     உயிருக்கு ஆதாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். உயிருக்கு ஆதாயம் தேடிக் கொண்டான் என்றால் அறிவிற்கு ஆதாயம் தேடிக் கொண்டான் என்று அர்த்தம். இங்கு அறிவு ஆக்கம் பெற்றதா? உயிர் ஆக்கம் பெற்றதா? என்றால், உயிரும் ஆக்கம் பெற்றது, அறிவும் ஆக்கம் பெற்றது என்பார். அறிவு தெளிந்த அறிவு, தெளிந்த ஆன்மா. ஆக தெளிந்த அறிவு எப்படி வந்தது? தலைவன் ஆசி பெற்றால் வந்தது. புண்ணியத்தால் சிறப்பறிவு வந்தது. புண்ணியத்தால் கிடைத்த சிறப்பறிவு கொண்டுதான் ஆன்மாவைப் பற்றி அறிய முடியும்.
     ஆன்மாவைப் பற்றி அறிகின்றவன் அறிவுள்ளவன். அவன் ஆன்மாவிற்கு ஆக்கம் அல்லது இலாபம் தேடிக் கொண்டான். அப்படி ஆக்கம் அறிவிற்கு தேடிக் கொண்டானா? என்றால் இல்லை. ஆன்மாவிற்குதான் ஆக்கம் தேடிக் கொண்டான். ஆமாம் அறிவிற்கும் தேடிக் கொண்டான். சிறப்பறிவு உள்ள மக்கள்தான் ஆன்மாவிற்கு அக்கம் தேடிக் கொள்வார்கள். சிறப்பறிவு இல்லாத மக்கள் ஆன்மாவை மாசுபடுத்திக் கொள்வார்கள்.
     சிறப்பறிவு இல்லாதவர்கள் ஆன்மாவை மாசுபடுத்திக் கொள்வார்கள், சிறப்பறிவு உள்ளவர்கள் ஆன்மாவிற்கு ஆக்கம் தேடிக் கொள்வார்கள். ஆன்மாவிற்கு எப்படி ஐயா, ஆக்கம் தேடிக்கொள்வது? ஈதல் இசைபட வாழ்தல் என்பார். கொடுப்பதால்தான் ஆக்கம் தேடிக் கொள்ள முடியும். எதைக் கொடுப்பது? கல்வியை கொடுக்கிறோம், அறிவை கொடுக்கிறோம், பிறருக்கு பசியாற்றுவிக்கிறோம், உணவு தருகிறோம். இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட செயல்களால் புண்ணியம் சேருகின்றது. இதை நம்முடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறோம்.
     புண்ணியத்தால் அறிவு தெளிவடைகிறது. அறிவு தெளிவடைந்தால் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெற்றதால் அறிவு ஆக்கம் பெற்றது. அறிவு ஆக்கம் பெற்றதின் காரணமாக ஆன்மாவைப் பற்றி அறிய முடிகிறது. இப்பொழுது ஆன்மா மாசுபட்டிருக்கிறது என்பதை அறிந்தான்.  ஆன்மா மாசுபட்டுள்ளது அல்லது அழுக்காக உள்ளது. ஆக அழுக்குள்ள ஆன்மாவை அறிந்தான். அறிவிற்கு அழுக்கு வந்ததா? அல்லது ஆன்மாவிற்கு அழுக்கு வந்ததா? அறிவிற்கும் அழுக்கு வந்தது. அறிவும் மாசுபட்டுவிட்டது. ஆக அறிவு அழுக்காக அல்லது மாசுள்ளதாக இருக்கிறது. அதன் காரணமாக ஆன்மா மாசுபட்டுள்ளது. அறிவு தெளிவடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஞானிகளின் திருவடியை பூஜித்தால் அன்றி ஒருவனுக்கு அறிவு தெளிவடையாது. இதுதான் ஒரே வழி. நாம் வணங்கக்கூடியவன் தலைவனாக எப்படி ஆனான்? அவனுக்கு ஆன்ம மாசு நீங்கியதா? அல்லது அறிவு மாசு நீங்கியதா? ஆன்ம மாசு நீங்கியது. அதனால் அறிவு மாசு நீங்கியது. ஆக தெளிந்த அறிவே மாசற்ற கொள்கை என்றார். மாசற்ற கொள்கை என்பதே தெளிந்த அறிவுதான் என்பார்.  
     தெளிந்த அறிவுதான் ஆன்மாவை பற்றியுள்ள மாசு நீங்குவதற்கு துணையாக இருக்கும். ஆக, மாசற்ற ஆன்மா, மாசற்ற அறிவு என்பதை அறியலாம். ஞானிகள் எல்லோரும் மாசற்ற அறிவு உள்ளவர்களா அல்லது மாசற்ற ஆன்மா உள்ளவர்களா என்றால் மாசற்ற அறிவுள்ளவர்கள். ஆகவே மாசற்ற ஆன்மா பெற்றிருக்கிறார்கள். அறிவை மாசுபடுத்துவது உடம்பா? உயிரா? அறிவை மாசுபடுத்துவதற்கு உயிருக்கு யோக்கியதையே இல்லை. அறிவை மாசுபடுத்துவது அல்லது மழுங்கச் செய்வது உடம்புதான். அப்படி அறிவு மாசுபடாமல் இருப்பதற்கு உடம்பை என்ன செய்ய வேண்டும்? அது காயசித்தியால்தான் முடியும் என்று சொல்லிவிட்டார்கள். காயசித்தி என்பது உடல் மாசு நீங்குதல் என்று அர்த்தம் உடல் மாசு நீங்கினால் காயசித்தி ஆகும்.
     உடல் மாசு நீங்கியதால் உயிர் மாசு நீங்கியது. உடல் மாசைப் பற்றி அறிகின்றது அறிவா? அல்லது ஆன்மாவா? என்று கேட்டால், இது பிரச்சனைக்குரிய வார்த்தை. மேலும் சிக்கல்படுத்தக் கூடாது. ஆன்மா மாசுபட்டுள்ளது அதனால் உடல்  மாசுபட்டுள்ளது. உடல் மாசுபட்டுள்ளதா? அல்லது உயிர் மாசுபட்டுள்ளதா? என்றால் இரண்டும் இல்லை. அறிவுதான் மாசுபட்டுள்ளது. அறிவிற்கு ஏன் மாசு வந்தது. அது முன் செய்த வினை என்றார். தக்க ஆசான் இல்லாததனால் அறிவு மாசுபட்டுப் போனது. கருணையுள்ள ஆசான் உரைக்காத காரணத்தால் ஆன்மா மாசுபட்டுவிட்டது.
     அறிவிற்கு மாசு வந்ததும் சரி, உடலிற்கு மாசு வந்ததும் சரி, இப்படிப்பட்ட மாசு என்னுடைய செயலால் வந்ததா? அல்லது கடவுளின் செயலால் வந்ததா? கடவுள் படிக்கும்போதே உடலை மாசோடுதான் படித்திருக்கிறேன். ஏன் ஐயா, கடவுளுக்கு அப்படி ஒரு வஞ்சனை என்றான். அது அப்படி இல்லையப்பா. இப்படி படிக்காவிட்டால் உள்ளே இருக்கக்கூடிய ஆன்மாவை தட்டியெழுப்ப முடியாது. நீ உள்ளே இருக்கக்கூடிய ஆன்மாவை தட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக, நான் மாசுள்ள உடம்பைப் படித்துள்ளேன். ஆக அழுக்குள்ள உடம்பை நான் அமைத்ததே, உள்ளே உள்ள ஜோதியை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இந்த உடம்பு இல்லையென்று சொன்னால் நிச்சயமாக ஒளி உடம்பை நீ பெற முடியாது. ஆகவே நீங்களெல்லாம் முன்னேற வேண்டும் என்பதற்காக இப்படி படைத்துள்ளோம். ஆரம்பத்திலேயே ஜோதி உடம்பை நாங்கள் படைக்க முடியாது. உமி உள்ள, தவிடு உள்ள, மாசுள்ள, காமத்தாலான, மும்மலமான, அசூசையான உடம்பை கொடுத்திருக்கின்றேன். எதற்கு என்றால் உள்ளே இருக்கக்கூடிய அந்த சுடரை, பையபைய, பையபைய அந்த சுடர் ஒளியை இந்த உடம்பில் உள்ள கசடு தீர தீர, அந்த ஒளி தோன்றும். ஆக, அகல் இல்லையென்றாலும் தீபம் எரியாது, திரி இல்லையென்றாலும் தீபம் எரியாது.
     இந்த உடம்பில் ஒரு அற்புத சக்தி உள்ளது. மானுட தேகம் பெருதர்கரியது. இந்த தேகத்தை கொடுத்ததே, உள் உடம்பாகிய ஜோதி உடம்பை அறிந்து கொள்வதற்குத்தான். எந்த அளவிற்கு உடம்பு மாசு தீருகின்றதோ, அந்த அளவிற்கு ஜோதி தெரியும் என்பார். முதலிலேயே ஜோதி உடம்பை பெற வாய்ப்பே இல்லை என்பார்கள். இது கடவுள் கொடுத்த பெரும் பாக்கியம். ஆக கடவுள் கொடுத்த அந்த பெரும் பாக்கியமான உடம்பை அறிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதற்குரிய வழிமுறைகளை நம்முடைய ஞானிகள்தான் செய்ய வேண்டும். இதற்கு மாசுள்ள உடம்பைதான் கொடுத்தான், இது நியாயம்தான்.
     இதற்கு வேறு வழியே இல்லையா என்று கேட்டான். மாசுள்ள உடம்பைதான், காமதேகத்தை, துர்நாற்றமுள்ள தேகத்தைத்தான் கொடுத்திருக்கிறேன் வேறு வழி எனக்கு இல்லை. அப்படி கொடுத்த உடம்புதான் இது. ஆனால் துர்நாற்றமுள்ள உடம்பைக் கொடுத்த போதிலும் அதற்குள்ளே ஒரு ஒளி உடம்பு உள்ளது அதை தக்க ஆசான் மூலமாக தெரிந்து கொள். இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த மாசுள்ள உடம்பை தாங்கிதான் அந்த உடம்பை பெற முடியும்.
     ஆக அது போன்ற முழு ஜோதி உடம்பை பெற்றவர்களால் செயல்பட முடியாது. ஆனால் இந்த உடம்பு கரைய, கரைய அந்த உடம்பு ஆக்கம் பெரும் என்ற இரகசியத்தை நமது தமிழன்தான் முதன் முதலில் அறிந்திருக்கின்றான். இதுதான் முழு மருத்துவம் என்று சொல்லியிருப்பார்கள். ஆக, மாசுள்ள தேகத்தை கடவுள் அல்லது இயற்கை அன்னை கொடுத்திருக்கிறாள். அதே சமயத்தில் மாசற்ற தேகத்தை அறிந்து கொள்வதற்கு வழியும் வகுத்திருக்கிறார்கள் ஞானிகள். இதை மகான் கொங்கணேஸ்வரர்
                ஊத்தை சடலமென் றெண்ணா தேயிதை
                உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
                பார்த்த பேருகே ஊத்தையில் லையிதைப்
                பார்த்துக் கொள் உன்றனு உடலுக்குள்ளே
                                மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 23
என்பார். இந்த உடம்பை பற்றி ஆராய்ந்து பார்த்தவர்கள், அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் இவர்கள் எல்லோருக்கும் இந்த தேகம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். மிகப்பெரிய ஒரு சஞ்சீவி மருந்து. ஆன்மாவிற்கு சிறந்த மருத்துவத்தை, உன்னுடைய வாழ்வை உயர்த்துவதற்கு இனி அழியாத பெரும் வாய்ப்பை பெறுவதற்குத்தான் இந்த உடம்பை கொடுத்திருக்கின்றனர். ஆக பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதை என்றார். பார்த்த பார்வை எது? அவர்கள் பார்த்தது அகப்பார்வை, ஞானிகள் உபதேசம் பெற்றவர்களுக்கு, ஞானிகள் ஆசி பெற்று பார்த்தவர்களுக்கு, உண்மை அறிந்து ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு உண்மையை அறிந்து பார்த்தவர்களுக்கு ஊத்தை இல்லை. ஊத்தை என்பது அசுத்தமான உடம்பு என்று அர்த்தம்.
     ஆக இந்த உடம்பு அசுத்தமான உடம்புதான். மாயையை உண்டுபண்ணும் மாயையை உண்டுபண்ணக்கூடிய காமத்தை அல்லது அறியாமையை உண்டுபண்ணக்கூடிய இந்த உடம்பிற்குள்ளே சுடர் இருப்பதை அறிந்து, அதை எப்படி தட்டியெழுப்புவது என்று கேட்டான். அப்படி தட்டியெழுப்புவதை எவன் அறிந்தானோ அவனை விடக்கூடாது. ஆக இந்த உடம்புதான் காமத்தை உண்டுபண்ணுகிறது, ஆசையை உண்டுபண்ணுகிறது. எனவே இந்த உடம்பு ஆசையை உண்டுபண்ணுகிறது என்பதனால் அதை தூக்கியெறிய முடியுமா? அப்படி தூக்கியெறிய முடியாது. ஆனால் அதை என்ன செய்கிறான், ஞானிக ஆசியோடு பற்றுக பற்றற்றான் என்பார். ஆக அவன் என்ன செய்தான், ஞானிகள் ஆசியோடு உடம்பு என்று சொல்லப்பட்ட காமத்தை, தேகத்தை பற்று அற்றான் கேளும் பற்றுக பற்றற்றான் என்பார்.


     நம்மை தொடர்ந்து வஞ்சிக்கக்கூடிய உடம்பை அறுத்தவன்தான் பற்றற்றான் என்றார். அற்றது பற்றெனின் உற்றது வீடு என்பார். உடம்பு என்று சொல்லப்பட்ட அந்த மும்மலமான சேற்றை அறுத்தவன் பற்றற்றவன். ஆக, அற்றது பற்றெனின் உற்றது வீடு என்பார். ஆகவே ஆசை இல்லாமல் இருக்கலாமா என்று கேட்டான். அது உங்களாலும் முடியாது, உங்கள் பாட்டனாலும் முடியாது. நீங்கள் வந்ததே ஆசையால்தான். எதை ஆசை என்றோ, எதை கேவலமேன்றோ, எதை நச்சுத்தன்மை என்றோ, எதை மோசமானது என்றோ, எதை கொடுமை என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதுவே உங்களுக்கு துணையாக உள்ளது என்று அறிகின்ற அறிவே ஞானிகள் கொடுத்ததுதான். ஆக அதை அறிந்து கொள்ள வேண்டும். அதை அறிந்து கொள்வதற்கு ஞானிகள் ஆசி வேண்டும். ஆசான் வள்ளுவப்பெருமான்.
      பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு.
                                                                திருக்குறள் – துறவு – எண்  350
                என்பார். இப்படியெல்லாம் ஞானிகள் கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் அற்புதமாக படைத்திருக்கிறான். இது ஒரு அற்புத செயல். ஆசான் திருமூலர்,
      பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
      பெறுதற் கரிய பிரானடி பேணார்
      பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
      பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
                                                திருமந்திரம் – கேடு கண்டிரங்கல் – கவி எண் – 2090
      என்பார். ஆக இதை பெறுதற்கரிய பிறவி என்பார். ஆக ஒரு மனிதன் பெறுதற்கரிய அற்புத உடலை பெற்று இருந்தும் பெறுதற்கரிய பிரானடி பேணார் என்பார்.
     ஆக, ஒரு அற்புதமான உடம்பை கொடுத்திருந்தாலும் உண்மைப் பொருளை அறியவில்லை என்றால் அவனை பிராணி என்று சொல்லிவிட்டார். என்ன ஐயா, எங்களை திட்டுகின்றீர்களா என்றான். நான் உங்களை திட்டவில்லை. நாங்கள் அறிந்திருக்கின்றோம், அறிந்ததை எல்லா நூல்களிலும் சொல்லியிருக்கின்றோம்.நல்ல மனதோடு சொல்லி இருக்கின்றோம். நீங்கள் பெறுதற்கரிய தேகம் பெற்றுள்ளீர்கள்,நாங்களும் பெற்றோம். ஆனால் நாங்கள் தலைவனின் திருவடியைப் பற்றி முன்னேறினோம். நீங்கள் அப்படி தலைவனின் திருவடியைப் பற்ற முயற்சிக்கவில்லை. நாள் முழுவதும் வேறு வேறு கதைகளைப் பேசிக் கொண்டும், வேறு வேறு வகையான கருத்துகளையும், வேறு வேறு வகையான சடங்குகளையும் செய்து, உண்மைப் பொருளை அறியாது இருக்கின்றீர்கள். அதனால்தான் உங்களை பிராணிகள் என்று சொன்னோம். ஆனால் பெறுதற்கரிய பிறவி கிடைத்துள்ளது. அதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஆசானின் ஆசி பெற்றோம்.
     எங்களுக்கு துரோகம் செய்த, வஞ்சனை செய்த, கொடுமை செய்த தேகம் என்று சொன்னாலும் இந்த தேகத்தை நான்கள் புரிந்து கொண்டோம். இந்த தேகத்தை கடவுள் கொடுத்திருக்கிறான், இப்படிப்பட்ட அற்புத தேகத்தை தந்திருக்கிறான். ஆகவே, இதன் துணை கொண்டு நாம் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஆக, அப்பேர்ப்பட்ட ஒரு தேகத்தை பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். இது நமது அறிவுக்கு எட்டாது. இது சின்ன விஷயமல்ல. நம் அறிவுக்கு எட்டாத ஒரு சக்தி, எட்டாத ஒரு வல்லமை, எட்டாத ஒரு பெரும் ஆற்றல் உள்ளவர்களிடம் போகிறோம். அவர்களை அடைந்து, அவர்களின் திருவடியைப் பற்ற வேண்டும். அப்படி அவர்களின் திருவடியைப் பற்றும்போது, நமக்கு விரோதமான கொடுமை செய்யக்கூடிய இந்த உடம்பை அவர்கள் அறுத்து விடுவார்கள். இதற்கு முதலின் தலைவனின் ஆசியை பெற வேண்டும். தலைவனின் ஆசியை பெற வேண்டுமென்றால், நீ பேராசைக்காரனாக இருக்கக் கூடாது, பொறாமைக்காரனாக இருக்கக் கூடாது, வஞ்சகனாக இருக்கக் கூடாது. தினம் தினம் தியானம் செய்ய வேண்டும். உன்னுடைய செயல்பாடுகளினால் பிற உயிர்கள் வருந்தினால் நிச்சயமாக உனக்குக் கேடு வரும். இதை ஆசான் வள்ளுவப்பெருமான்,
      நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
      நோயின்மை வேண்டு பவர்.
                                                – திருக்குறள் இன்னா செய்யாமை – குறள் எண் 320
என்பார். நமக்கு வந்துள்ள நோயெல்லாம் நாம் பிறருக்கு செய்த துன்பம்தான். எனவே பிறருக்கு கேடு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும். நம்மிடம் பொறாமை இருக்கின்றது. பொறாமை என்பது உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறது. பெரிய பெரிய மேதைகளாக இருப்பார்கள். யாராகயிருந்தாலும் சரி அவர்களிடம் பொறாமை வஞ்சனை இருக்கும். ஆக, இந்த பொறாமை இருக்க கூடாது, வஞ்சனை இருக்க கூடாது என்று சொல்லலாமே தவிர, நம்மிடம் பொறாமை உள்ளதா, வஞ்சனை உள்ளதா என்று உணர முடியாது. இந்த தீய குணங்கள் நம்மிடம் உள்ளதா என்பதை உணர்வது சாதாரண விஷயமல்ல. ஆசான் வள்ளுவப்பெருமான்,
                ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
                தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
                                                – திருக்குறள் – புறங்கூறாமை – குறள் எண் 190
என்பார். அடுத்தவர்கள், அயலார்கள், பகைவர்கள் இவர்களின் குற்றத்தை அறியக்கூடிய அறிவு இருப்பதுபோல் தம்முடைய குற்றத்தையும் பார்த்து அறிந்து கொண்டவன் நிச்சயமாக தீதில்லாத நிலைப்பெற்ற வாழ்வு வாழ்வான் என்பார். அவனுடைய உயிர், நிலைபெற்று என்பார். ஆகவே, நம்மிடம் உள்ள பலகீனங்களை ஆசானிடம் சொல்ல வேண்டும். அப்படி ஆசானிடம் சொன்னால்தான் நமக்கு எதிராகிய கபத்தை அறுத்து விடுவார். ஆக எல்லா வகையான குணக்கேடுகளும் தீரும். ஒரு மனிதனை கடைசி வரையில் வஞ்சிப்பது கபம். அதை ஞானிகள் அறு, அறு என்று அறுத்து விடுவார்கள். இது யோகிகளுக்குத்தான் தெரியும்.
     சாய்க்கச் சாய்க்கச் சரித்திடுங் கோழையும்
      வாய்க்க வாய்க்க வழலையு மற்றது
      தேய்க்கத் தேய்க்கத் செனித்திடுஞ் சேத்துமந்
      தோயக்கத் தோய்க்கச் சுழிமுனை காணுமே.
               – மகான் திருவள்ளுவர் ஞானவெட்டியான் கவி எண் 1270
     கபத்தை அறுப்பதே தவத்தினுடைய இயல்பு. நமக்கு விரோதமாகிய உடம்பை, விரோதமாகிய காமத்தை, விரோதியாகிய கபத்தை, விரோதியாகிய எண்ணங்களை இவற்றை எல்லாம் பொடியாக்காமல் எதுவும் முடியாது. ஆக மனித வர்க்கத்திற்குத்தான் இந்த வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால் மனித வர்க்கம் தன அறிவு கொண்டு செய்ய முடியுமா என்றால் செய்ய முடியாது. ஆசான் துணை வேண்டும். இதை ஆசான் திருமூலர்,
     களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
      களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
      களிம்பணு காத கதிரொளி காட்டிப்
      பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 114
என்பார். களிபறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி மிகப்பெரிய வார்த்தை. இதெல்லாம் சரி, ஆசான் திருமூலர் யாருடைய ஆசியை பெற வேண்டும் என்று சொல்கிறார். எவன் களிம்பறுத்தானோ, எவன் உடல் மாசை நீக்கினானோ, எவன் பொறாமையற்றவனோ, எவன் வஞ்சனையற்றவனோ, எவன் சாந்தமே வடிவானவனோ அவனுடைய ஆசியைப் பெற வேண்டும் என்பார். அவர்களின் ஆசியை பெறாமல் ஒன்றும் முடியாது. அப்படிப்பட்ட வல்லமை உள்ள ஞானிகள் யாருக்கு அருள் செய்வார்கள்? பண்புள்ள மக்களுக்குத்தான் அருள் செய்வார்கள். பண்பில்லாத மக்களுக்கு அருள்செய்ய மாட்டார்கள். பாவிகளுக்கு அருள் செய்வதே இல்லை, சரி ஐயா, நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் எங்களுக்கு வேறு வழியில்லையா என்றான். நேற்று வரையிலும் நீ பாவிதான். அதனால் ஒன்றும் குற்றமில்லை. கொடிய பாவியாக இருந்தாலும் சரி, என் திருவடியைப் பிடித்து விட்டால் போதும் என்பார்கள் ஞானிகள். மகான் கொங்கணமகரிஷி தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் என்பார். மகான் கொங்கணமகரிஷி அருளிய பாடல்,
     தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
            தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
      ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
            உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
      கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
            கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
      நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
            நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
                                                                – மகான் கொங்கண மகரிஷி – கவி எண் – 12
என்பார். பாவம் என்று சொல்லாமல் கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் என்றும் தர்மத்தின் வழி சொல்லி கருணை வைப்பான் என்று சொல்லியுள்ளார். ஆக, பாவத்தை பொடியாக்க வேண்டும். அப்படி செய்து களிம்பறுத்தான் என்பார். வஞ்சனை உள்ளவர்களுக்கும் ஞானிகள் அருள் செய்வார்கள். எனவே அவர்களை அறவாழி அந்தணன் என்றும் ஆதிபராபரன் என்றும் சொல்லுங்கள்.
கருணையே வடிவானவர்கள் ஞானிகள். ஞானிகளின் திருவடியைப் பற்றவே பாவிகளை அனுமதிக்க மாட்டார்கள். நான் பாவிதான் என்று சொல்லி ஞானிகளின் திருவடியைப் பற்ற வாய்ப்பு கிடைத்தாலே அவனுக்கு ஆசி வந்துவிட்டது, எல்லா பாவமும் பொடியாகப் போய்விடும் என்பது அர்த்தம். ஆக, பாவத்தை நீக்க வேண்டும். அதற்கு தலைவன் ஆசி வேண்டும்.
     களிம்பறுத் தானெங்கள் கண்ணுதல் நந்தி – கண் இமை போன்றவன் களிம்பறுத்தான். நமக்கு விரோதியாக இருப்பது இரண்டுதான். ஒன்று கபம். மற்றொன்று உடல் மாசு. இதை ஞானிகள் அறுத்தே விடுவார்கள். அவர்கள் கண் இமை போன்றவர்கள், கருணையே வடிவானவர்கள். அவர்களால்தான் இந்த வேலையை செய்ய முடியும். அவர்களின் கருணையில்லாமல் ஒன்றும் முடியாது. ஞானிகளின் ஆசி வேண்டும். தினம் தியானம் செய்ய வேண்டும். யாரை தியானம் செய்ய வேண்டும் என்பதை நமது சங்கம்தான் சொல்லும். நாம் அறிமுகப்படுத்தக்கூடிய அத்தனை ஞானிகளும் அடியாருடைய இடரை தீர்த்து, அவனுடைய பாவத்தைப் பொடியாக்கி, அவனை வஞ்சிக்கக்கூடிய தேகத்தையெல்லாம் நீக்கி, அவனை வஞ்சிக்கக்கூடிய கபத்தையெல்லாம்அறுத்து வெற்றி காணச் செய்வார். ஆக இப்படிப்பட்டவர்களின் திருவடியைப் பற்றினால்தான் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் முடியாது என்பார். ஆசான் திருமூலர்,
     வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
      கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
      தாயினும் மும்மலம் மாற்றித் தயா 1 என்னுந்
      தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
                                                              திருமந்திரம் – உபதேசம் – கவி எண் – 116
                என்பார். மலையில் உள்ள மூங்கில் புதர்கள் ஒன்றோடொன்று உராயும் போது கனல் பற்றுவது போல ஆசான் என்ற ஜோதி உடம்பு, நம்முடைய தேகமாகிய காமதேகத்தோடு உராயும், அப்படி உராய்ந்து ஒன்று சேர்ந்து ஒரு வேதியியல் நடத்தும் என்பார். அவ்விதம் தலைவன் என்ன செய்கிறார், வேயின் எழுங்கனல் போலேஇல் மெய்யெனுங், கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி – இந்த உடம்பு என்று சொல்லப்பட்ட கோயிலில் அவன் தங்கியிருப்பான். தங்கி என்ன செய்வான், எப்படி மூங்கில் புதர்கள் உராய்வதால் அனல் பற்றுகிறதோ அது போல ஆசானை இவன் வணங்கி, வணங்கி ஆசானின் ஆசி பெற்று அவரின் நாமத்தை சொல்ல, நாமத்தை சொல்ல அப்படி சொல்லி ஆசி பெற, ஆசி பெற இவனை சார்ந்து இவன் உடம்புக்குள்ளிருந்து தலைவன் அனலை எழுப்புவான்.
     கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி  – இந்த உடம்பு என்று சொல்லப்பட்ட கோயிலுக்குள் இருந்து அருள் செய்வான். மேலும் தாயினும் மும்மலம் மாற்றி என்றும், அறவாழி அந்தணம் ஆதிபராபரன் என்றும் சொன்னார். இவையெல்லாம் மிகப் பெரிய வார்த்தை . என்ன ஐயா காரணம், உங்களுக்கு என் மீது ஏன் இவ்வளவு அக்கறை  என்று ஞானிகளைப் பார்த்து கேட்டான். நாங்கள் அதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்றார்கள். எங்களை அறவாழி அந்தணன் ஆதிபராபரன் என்பார்கள். நாங்கள் எல்லாம் கருணையே வடிவான மக்கள். உடம்பிற்குள்ளே இப்படி ஒரு சுடர் இருக்கிறது. இதை உலக மக்கள் எல்லாம் அறியாமல் ஐயோ மாண்டு போகிறார்கள். அகார்களுக்கு நாங்கள் கருணை காட்ட வேண்டும். ஆகவே, நாங்கள் அதற்குத்தான் வந்திருக்கிறோம். எங்கள் ஞானிகள் வர்க்கமெல்லாம் ஞானத்தைத்தான் வந்திருக்கிறோம். எங்கள் ஞானிகள் வர்க்கமெல்லாம் ஞானத்தைதான் மையக்கருத்தாக கொண்டிருப்போம். யார் விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம் அப்பா என்பார்கள். இதை தாயினும் மும்மலம் மாற்றி என்பார். தாயை  விட தயவு மிக்கவர்கள் ஞானிகள்.
     தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே என்றும், களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் நாம் பெற வேண்டும். அதற்கு என்ன உபாயம்? ஆசான் திருமூலதேவர் ஆசி இருக்க வேண்டும், ஆசான் நந்தீசர் ஆசி இருக்க வேண்டும், ஆசான் அகத்தீசர் ஆசி இருக்க வேண்டும், ஆசான் அருணகிரிநாதர் ஆசி இருக்க வேண்டும், ஆசி பட்டினத்தார் ஆசி இருக்க வேண்டும், ஆசான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகளின் ஆசி இருக்க வேண்டும்.
     ஞானிகளின் ஆசியை பெற பெற ஆசை அற்றுப் போகும், அறிவு தெளிவடையும், அறியாமை நீங்கும், அகந்தை நீங்கும், தன்னடக்கம் வரும் என்பார். அப்படிப்பட்ட ஞானிகளின் திருவடியைப் பற்ற மனித வர்க்கத்தை, மக்களை நாம் தூண்டவில்லை என்று சொன்னால் நாம் கற்ற கல்வியே பயனில்லாமல் போகும். நாம் வந்ததே, இந்த சங்கம் வந்ததே, ஞானிகளின் திருவடியைப் பற்ற வேண்டும் என்று மக்களிடம் சொல்லுவதற்குதான் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இன்று உலகமெங்கும் எங்கு பார்த்தாலும் ஆன்மீகவாதிகள் ஏதாவது கிடைக்குமா என்று அலைகிறார்கள். அடையக்கூடிய லட்சியம், அதை அடையக்கூடிய வாய்ப்பு, அதைப் பற்றி யாராவது சொல்லுவார்களா என்று இந்த உலகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கெங்கோ அகப்பட்டு, பொருளை எல்லாம் இழந்து, காலத்தையும் இழந்து அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
     நாம்தான் சொல்லுவோம், நமது ஆசான் மகான் அகத்தீசர்தான், நமது ஆசான் மகான் திருமூலதேவர்தான், நமது ஆசான் மகான் புஜண்டமகரிஷிதான், நமது ஆசான் மகான் போகமகாரிஷிதான் என்போம். இவர்களையெல்லாம் ஏன் அறிமுகப்படுத்துகிறோம்? இவர்கள் எல்லோரும் ஆதி தலைவன் ஞானபண்டிதன் மகான் சுப்பிரமணியரிடம் ஆசி பெற்ற மக்கள், ஆசான் அகத்தீசரிடம் ஆசி பெற்ற மக்கள். ஆசான் அகத்தீசரிடம் ஆசி பெற்றுதான் இப்படிப்பட்ட அறிவை பெற்றிருக்கிறார்கள்.
     ஆக ஞானிகளின் ஆசி பெற பெற அறிவு மிளிருகின்றது, அறிவு தெளிவடைகிறது. அறிவு தெளிய தெளிய தெளிய மன மாசு நீங்குகின்றது. ஆக அறிவு அல்லது ஆன்மாவில் உள்ள மாசு நீங்குகிறது. இந்த கருத்துக்களை யார் படித்தாலும் சரி அவன் பஞ்சமாபாவியாக இருந்தாலும் சரி, அவனுக்கு இந்த கருத்துக்களை கேட்கின்ற வாய்ப்பு கிடைத்து, பயபக்தி, விசுவாசத்தோடு பணிந்து இந்த கருத்துகளை கேட்டால், ஆன்மாவை தட்டியெழுப்பக்கூடிய வாய்ப்பு அவனுக்கு கிடைக்கும் என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறேன். இதை நான் பேசவில்லை, ஆசான் பேசிக்கொண்டு இருக்கிறார், ஆசான் ஞானபண்டிதர் பேசிக்கொண்டு இருக்கிறார், ஆசான் அகத்தியர் பேசிக்கொண்டு இருக்கிறார். நான் பேசுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம்.
     ஆசான் திருமூலர், தாயினும் மும்மலம் மாற்றி என்றார். இப்படி யாருக்கு மும்மலத்தை மாற்றுவார்கள். யார் ஒருவர் ஞானிகளின் திருவடியே கதி என்று வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஞானியின் பெருமை பேசுதல், ஞானியை வணங்குதல் போன்ற செயல்களை மேற்கொண்டும், வேறு வகையான கருத்துகள் அல்லது வேறு வகையான சிந்தனைகள் இல்லாது ஞானிகளைப் பற்றியே சிந்திக்கின்ற மக்களுக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆக இப்படி இருப்பதால் தலைவனுக்கும், இவனுக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கும்.  ஞானிகளை நினைக்க நினைக்க அவர்கள் நம்முள்ளே இருப்பார்கள். உள்ளே இருந்து நமக்கு அருள் செய்வார்கள் என்பார், ஆசான் திருமூலர்,
     நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
      சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
      தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங்
      கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.
                                                திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் – 2667
                என்றார். ஆக நாம் நினைப்பது என்றால் யாரை நினைக்க வேண்டும்? ஞானிகள் யாரை நினைத்தாலும் சரி எல்லாம் ஒன்றுதான். நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்- யாரை நினைத்தலும் சரி, மகான் போகமகாரிஷியை நினைத்தாலும் சரி, ஆசான் அகத்தீசரை நினைத்தாலும் சரி அவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆக யார் திருவடியைப் பற்றினாலும் சரி, ஒருமுறை ஆசான் போகமகாரிஷி என்று சொன்னால் ஒன்பது கோடி ஞானிகளும் வந்து விடுவார்கள். அவர்கள் அவ்வளவு கருணை உள்ள மக்கள் இப்படிப்பட்ட உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டுமென்று எல்லா ஞானிகளும் விரும்புகிறார்கள். இந்த உண்மையை உலக மக்களில் யார் அறிந்தாலும் அவர்கள் மூலமாக சொல்ல வைப்பார்கள். அப்படி சொல்லி விட்டு மக்களையெல்லாம் தெளிவடைய வைப்பார்கள்.
     இந்த ஜென்மத்தில் ஒருவனுக்கு அந்த வாய்ப்பு இல்லையென்றாலும் வருங்காலத்தில் அந்த வாய்ப்பை அவன் பெறுவான். சொட்டாய் தொட்டு ஒரு சொட்டாய் தொட்டது நல்லவர் நல்லவர் நானும் நல்லவர் என்றார். ஒரு நொடிப்பொழுது ஞானிகளின் ஆசி பெற்றாலும் சரி, அந்த ஜென்மத்திற்கு ஆன்மாவை அது தட்டியெழுப்பும் என்பார். எனவே தாயினும் மும்மலம் மாற்றி என்றார். தாயைவிட கருணை கொண்டு மும்மலத்தை மாற்றினார்.
     மும்மலத்தாலான உடம்பு இது. இது புறசுவர் போன்றது. ஆக நெல் அதன் மேலே உள்ள உமியும், தவிடும் இருப்பதால்தான் உள்ளே முளைக்கின்றது. அது போல இந்த புற உடம்பின் பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் உள்ளுடம்பு ஆக்கம் பெறாது. இது கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்பு. உள்ளுடம்பு ஆக்கம் பெருவதற்காகத்தானே ஐயா, இந்த புற உடம்பை கொடுத்தேன் என்றார் கடவுள். புற உடம்பு இல்லை என்று சொன்னால் உன்னால் வாழ முடியாது, கடவுளை அடைய முடியாது, நீ கடவுளாக முடியாது.
     தாயினும் மும்மலம் மாற்றி – தாயைவிட கனிவு கொண்டு உன்னுடன் சார்ந்திருந்து உணர்த்துவார். அப்படி உணர்த்தி உணர்த்தி உணர்த்தி அறுக்க வேண்டியதெல்லாம் அறுத்தே விடுவார்கள். இதுதான் ஞானிகளுடைய செயல். ஆக “தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே” என்றார். தோயம் – தண்ணீர். கருணைக் கடலுக்குள் சூரிய ஒளி போன்று இருக்கும். அதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இப்படிப்பட்ட வாய்ப்பு தலைவனின் ஆசி பெற்ற மக்களுக்கே கிடைக்கும். இவற்றையெல்லாம் நாம் அறிந்தோம், உணர்ந்தோம். இந்த கருத்துகள் உலக மக்களுக்குப் போய் சேர வேண்டும். உலக மக்கள் எல்லோரும் இப்படிப்பட்ட கருத்துகளை, யாராவது சொல்வார்களா, அப்படி சொல்பவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நல்வினை இருந்தால், கடவுள் ஆசி இருந்தால் இந்த கருத்துகள் அடங்கிய பதிவு நாடா அவர்கள் கையில் கிடைக்கும். புண்ணியவான்களுக்கும் கிடைக்கும். கிடைத்தவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள். ஆக உலக மக்களுக்கு இந்த செய்தி பரவ வேண்டும். உலகமெல்லாம் உண்மை ஆன்மிகம் பரவ வேண்டும். 
     ஞானிகள் நமக்கு தெளிவான அறிவை கொடுப்பார்கள். ஆக, நாம் இனிமேல் உலக மக்களுக்கு ஆன்மாவை ஆக்கம் பெற செய்ய வேண்டிய கருத்துகளை போதிக்க வேண்டும். ஆசான் வள்ளுவப்பெருமான்,
     பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
      வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
                                                                – திருக்குறள் – இல்வாழ்கை – குறள் எண் – 44
     என்பார். ஆக, பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சி சேர்க்க வேண்டும். ஒருவன் பொருள் சேர்ப்பதில்தான் இருக்கிறது, அவனுக்கு ஏற்படக்கூடிய நன்மையும், தீமையும். அப்படியாவது பொருள் சேர்த்து பிற்காலத்திற்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அனேக சாதுசங்கங்களும் பொருளை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நமக்கு பணம் இருந்தால்தான் தவத்தை முடிக்க முடியும் என்று நினைத்து, எப்படியாவது பொருள் சேர்க்கிறார்கள். ஆக ஆரம்பமே தவறாக போய்விட்டது. உனக்கு எதற்கு ஐயா பொருள்? பொருள் சேர்க்கும்போதே அது மற்றவன் உழைப்பு என்ற எண்ணம் வர வேண்டும். பிறரை ஏமாற்றி, பொய் சொல்லி ஏன் பொருளை வாங்குகின்றாய். பொய் சொன்னாலே நிச்சயம் ஆன்மா கடைத்தேற முடியாதே. காசாசை உள்ளவருக்கு ஞானமில்லை என்று சொல்லுவார்கள். ஞானிகள் ஆசி இருந்தால் அவனுக்குக் பொருள் தானே வரும். ஆக, பொருளை சேர்க்கும்போது முறையோடு சேர்க்க வேண்டும். யார் ஒருவன், பொருள் சேர்ப்பதை முறையோடு அறிந்தானோ, பொருளை இப்படித்தான் சேர்க்க வேண்டும் என்று அறிகின்றானோ, அப்படி அறிந்தவன்தான் கடவுளாகலாம். பொருளை பொய் சொல்லி ஏமாற்றி வாங்கினால் பெரும் பாவம் வந்து சேரும். ஆக, பொருளை பொய் சொல்லி வாங்குகின்றவனுக்கு அருள் இல்லாமல் போய்விடும்.
     ஆக பழியஞ்சிப் பாத்தூண் – பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சியும் வந்துற்ற பொருளை பகுத்துண்டு வாழும் பண்புள்ள மக்களுக்கு வாழ்க்கையில் தடையே இல்லை. வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் – வாழ்க்கையில் எந்தத் தடையும் இல்லை என்று அர்த்தம். ஆகவே, பொருளை சேர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி சேர்க்க வேண்டும்? முறையோடு வகையோடு சேர்க்கக் கற்று கொள்ள வேண்டும். வகை, தொகையோடு சேர்த்த பொருள்தான் நம்முடைய ஆன்மாவிற்கு ஆக்கம் தரும். இதை ஆசான் வள்ளுவப்பெருமான்,
      அருளோடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
      புல்லார் புரள விடல்.
                                                – திருக்குறள் – பொருள் செயல்வகை –குறள் எண் – 755
                என்பார். அன்போடும் அருளோடும் வந்த பொருள்தான் நமக்கு பொருந்த வேண்டும் இல்லையென்றால் அந்த பொருள் பொருந்தக்கூடாது என்பார். ஆக, இப்படியெல்லாம் ஞானிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இந்த அறிவு நமக்கு எப்பொழுது வரும்? தினமும் ஞானிகளை தியானம் செய்தால்தான் இந்த அறிவு வரும். இல்லையென்று சொன்னால் எப்படியும் பொருளை சேர்க்கலாம் என்ற புத்தி வந்துவிடும். ஆக இவன் அப்படி பொருள் சேர்த்து பாவியாகி விடுவான். ஆக உண்மையை அறிந்து கொள்வதற்கு தலைவன் ஆசி வேண்டும்.
    
     நமது அன்பர்கள் சிறந்த முயற்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வருவாய், நம்முடைய உணவு, நம்முடைய உடை, நம்முடைய சுகபோகமேல்லாம் நம்முடைய உழைப்பில் இருக்க வேண்டும். இதை முதன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆக இங்கு தொண்டு செய்ய வேண்டும். நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
     நாட்டுக்கு அர்ப்பணிப்பவர்களுக்கு பொருளுதவி செய்தால் அது ஆண்டவனுக்கு செய்த உதவியாகும். அடியார்க்கு செய்யும் உதவி ஆண்டவனுக்கு செய்யும் உதவியாகும். ஆண்டவன் நேரடியாக வந்து ஒரு காரியத்தை சொல்ல மாட்டான். ஆண்டவனா வந்து இப்படி உங்களிடம் பேசுவான்? பேசமாட்டான். எங்கள் மூலமாகத்தான் பேசுவான். எங்களுக்கு செய்யக்கூடிய உதவி, கடவுளுக்கு செய்யக்கூடிய உதவியாகும். அடியார்க்கு செய்கிற உதவிகள் ஆண்டவனுக்கு செய்யக்கூடிய உதவியாகும். ஆக தகுதி உள்ள மக்களாக இருந்து அவர்களுக்கெல்லாம் பொருளுதவி செய்து, அவர்களை காப்பாற்றி, அவர்களை உற்சாகப்படுத்தினால் மேலும் நாட்டிற்கு தொண்டு செய்வார்கள். ஆசான் வள்ளுவப்பெருமான்,
    
      தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு     
      வேளாண்மை செய்தற் பொருட்டு.
                                                – திருக்குறள் – ஒப்புரவு அறிதல் – குறள் எண் 212
                என்பார். சிறந்த முயற்சியால் தேடிய பொருட்கள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்யும் பொருட்டுதான் என்பார். இவையெல்லாம் மிகப் பெரிய வார்த்தைகள்.
     ஆக, பொருளை ஈட்டும்போது நெறிக்கு உட்பட்டு ஈட்ட வேண்டும். ஞானிகளை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்தால்தான் அவனுக்கு அறிவு தெளிவடையும். காலை, மாலை கட்டாயமாக ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். காலை, மாலை கட்டாயமாக ஞானிகளை பூஜை செய்கிறவனுக்கு நிச்சயம் ஆசி கிடைக்கும். இதை விட்டால் வேறு வழியே இல்லை.
      இந்த சங்கம் ஒரு தெளிந்த உண்மை இரகசியத்தை அறிந்த சங்கமாகும். உண்மைப் பொருள் அறிந்த சங்கம். உண்மைப் பொருள் அறியா விட்டால் இப்படி பேச முடியாது. செல்வத்தை எங்கள் பேரில் வைத்துக் கொள்ளவில்லை.எங்களுக்கு வந்த பொருளை நாட்டு மக்களுக்கு வீசியெறிந்து இருக்கிறோம். பொருள் மீது பற்றற்ற தன்மை வந்திருக்கிறது.
     உயிரைப் பற்றி அறிகின்ற தன்மை, உடலைப் பற்றி அறிகின்ற தன்மை, மாசற்ற கொள்கை, தெளிந்த அறிவு இப்படிப்பட்ட குணப்பண்புகளை ஆசான் கொடுத்திருக்கிறார். ஏன் ஆசான் கொடுத்திருக்கிறார்? உலக மக்களுக்கு இந்த கருத்துகள் போய் சேர வேண்டும் என்பதற்காக கடவுள் கொடுத்திருக்கிறார். ஆக, எங்கள் கடமையை நாங்கள் செம்மையாக செய்து கொண்டு வருகிறோம். மிக உயர்ந்த கருத்துகளைப் பேசியிருக்கிறோம். அது எங்களுக்குத்தான் தெரியும். அவ்வளவு விஷயத்தை நல்ல மனதோடு அள்ளிக் கொட்டியிருக்கிறோம், இதை நான் சொல்லவில்லை ஆசான்தான் சொல்லியிருக்கிறார்.
     நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. உலக மக்கள் தெளிவடைய வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும். நமக்கெல்லாம் அருள் செய்யக்கூடிய ஆசான் அகத்தீசரை வணங்கி, எங்கெல்லாம் ஆன்மீகவாதிகள் இருக்கின்றார்களோ அவர்கள் இந்த கருத்துகளை பயபக்த்தியோடு கேட்டால், அவர்கள் ஞானிகளின் ஆசி பெறுவார்கள் என்று சத்தியமாக சொல்லி முடிக்கிறேன். நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0154268
Visit Today : 55
Total Visit : 154268

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories