14.06.1998 அன்று குரு மொழி கேட்க பெரு வழி கிட்டும் என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்தீசாய நம 
     அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     இந்த துறைக்கு நாம் வந்ததே சுவடி மூலம்தான். சுவடிகள் எனக்கு ஆசானாகவும், வழிகாட்டும் குருவாகவும் இருக்கின்றன. எனது தவவாழ்க்கையை சுவடிகளின் வழிகாட்டலின்படிதான் மேற்கொண்டு வந்துள்ளேன்.
     ஒரு பொருள் தோன்றுவதற்கு ஒருவனுடைய அறிவு வேண்டும். அந்தக் காலத்தில் கற்களை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறான். ஒரு பொருளை கூர்மைப்படுத்தியிருக்கிறான். அதை பயன்படுத்தித்தான் நிலத்தை உழுதிருக்கிறான் என்று யூகிக்கிறோம்.
     உலோக காலத்தில் இரும்பைக் கொண்டு சில கருவிகளை செய்திருக்கிறான். ஆக தன்னுடைய அறிவிற்கேற்ப கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் நாட்டுக்கு பயன்படுகிறது.
     மின்விசிறி, டேப் ரெக்கார்டர், டி.வி, டெக் போன்ற அறிவியல் அற்புதங்களெல்லாம் இருக்கிறது. தனது அறிவினால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை மனிதவர்க்கத்திற்கு வெளிப்படுத்துகிறான். அப்படி வெளிப்படுத்தும்போது, அந்தப் பொருளை உற்பத்தி செய்தவனுக்கு ஒரு மகிழ்ச்சி. தனக்கு  மட்டும் பயன்படவில்லை, தனது அறிவில் தோன்றிய இந்தப் பொருள் நாட்டு மக்களுக்கும் பயன்படுகிறது என்று மகிழ்ச்சி அடைகிறான்.
     நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மனிதனுடைய அறிவினால் தோன்றியாதாகும். நாம் காண்கின்ற பிளாஸ்டிக் பொருட்கள், நவலோகங்கள், உலோகாதிகள் என்கிற வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் போன்ற எல்லா பொருட்களும் மனிதனுடைய அறிவிற்கு தோன்றிய பொருட்களாகும். அது நாளடைவில் விரிவடையும்.
     ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது, ஆரம்பத்தில் பார்ப்பதற்கு பொலிவில்லாமல் இருக்கும். மேலும் மேலும் அதை அபிவிருத்தி செய்வார்கள். அபிவிருத்தி செய்யும்போது, அந்தப் பொருள் மேலும் மேலும் புதுமை பெறும். அதே பொருள் சிலகாலத்திற்கு பிறகு பழமைப்பட்டிருக்கும். அதே பொருள் காலப்போக்கில் புதுமை பெற்று எல்லோருக்கும் பொலிவை தரக்கூடியதாக இருக்கும்.
     எந்த பொருளும் தோன்றும்போது, ஒரு தன்மையாக இருந்தாலும் காலப்போக்கில் மனிதனுடைய அறிவிற்கேற்றாற்போல் அதை விரிவு செய்கிறான். விரிவு செய்து விரிவு செய்து அதை அபிவிருத்தி செய்வான். அதை மேலும் மேலும் பொலிவு செய்து வருவான். “அந்தப் பொருளா இது?” என்று கேட்கின்ற அளவிற்கு வியப்பிற்கு உரியதாக அந்தப்பொருள் இருக்கும்.
     இப்படி மனித வர்க்கத்திற்கு, தன்னுடைய அறிவில் தோன்றியதை வெளிப்படுத்திக் காட்டுவான். ஒரு பொருளை கண்டுபிடித்தவனுடைய மகிழ்ச்சி, அதை பொதுமக்கள் பயன்படுத்தும்போது மேலும் அளவில்லா மகிழ்ச்சியை அவனுக்குத் தரக்கூடியதாகவும் இருக்கும்.
     செம்பு, பித்தளை பாத்திரங்களில் குழம்பு, சாம்பார் போன்ற உணவுப்பொருட்களை, புளி, உப்பு கலந்த பொருளை வைத்தால் கச்சிப்போகும். புளி, உப்பு கலந்த பொருட்களை எவர்சில்வர் பாத்திரம், வெண்கலப் பாத்திரங்களில் வைத்தால் கச்சிப்போகாது. இதையெல்லாம் அந்தக் காலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள். இதேபோன்று ஈயம் பூசுகின்ற முறையையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
     செப்புப்பாத்திரம் அல்லது பித்தளைப்பாத்திரத்தில் புளி உப்பு கலந்த பொருளை வைத்த பிறகு, கச்சிப்போகிறதே, இதற்கு ஒரு மாற்று கண்டுபிடித்து அதில் ஈயம் பூசினானா? இல்லை கச்சிப்போவதற்கு முன்னே ஈயம் பூசினானா? பிறகுதான் ஈயம் பூசினானா என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஆகவே இந்த ஈயம் பூசியதன் நோக்கம் உணவுப் பொருள் கச்சிப்போகாமல் இருப்பதற்காக இப்படி செய்திருக்கிறான்.
     ஈயத்தை கண்டுபிடித்தவனும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறான். ஈயத்தைப் பூயயவனும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறான்.
     ஒவ்வொரு பொருளும் தோன்றும்போதே அதற்கு ஒரு மாற்றுப்பொருள் கண்டுபிடித்திருக்கிறான். இதுநாள்வரை கண்டுபிடிக்கப்பட்ட பொருள் எத்தனை? எத்தனை? எத்தனை? என்று கணக்கெடுக்க முடியவில்லை. எல்லா பொருட்களும் மனித சமுதாயத்திற்கு பயன்பட்டு வந்திருக்கின்றன. மேலும் பயன்படப்போகின்றன. இன்னும் மனித வர்க்கம் எனென்ன பொருள் கண்டுபிடிக்கப் போகின்றது என்பது தெரியாது. கண்டுபிடித்த பின்தான் நமக்குத் தெரியும்.
     ஒரு பொருள் கண்டுபிடிப்பதற்கு முன்பு மனிதன் தன் அறிவின் துணைகொண்டு, அதை எந்த அளவிற்கு பார்க்கிறான்? எந்த அளவிற்கு கற்பனை செய்கிறான்? அவன் கற்பனை செய்த அதே அளவிற்கு அந்தப் பொருள் வெளிப்படுகிறதா? என்றால் சில சந்தர்ப்பங்களிலே கற்பனை செய்ததற்கு ஒருபடி மேலேயும் அந்தப் பொருள் வெளிப்படும்.
     கற்பனைக்கு அகப்படாமலேயே ஒரு பொருள் வெளிப்பட்டு, மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியதாக இருக்கும் அல்லது கற்பனைக்கு அகப்படாமலேயே கற்பனைக்கு உட்பட்டு இருக்கும்.
     உலோகத்தை ஒன்றோடு ஒன்று சேர்ப்பதற்குரிய மார்க்கத்தை அவன் கண்டுபிடித்தான். ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தொடு வெல்ட்(weld) செய்து சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கும்போது அந்தப் பொருட்கள் வெடித்துவிடுவதையும் பார்த்திருக்கிறோம். அப்படி வெல்ட் பண்ணுகின்ற முறையை அவன் கண்டுபிடித்திருக்கிறான்.
     இப்படியெல்லாம் ஒரு பொருளை சேர்த்தல், பிரித்தல், வகுத்தல், தொகுத்தல் என்றெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டே போகிறார்கள், பொருள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. மனிதவர்கத்திற்கு இன்னும் எட்டாத எத்தனையோ பொருட்கள் உற்பத்தியாகிறது. அது விண்கலத்திலிருந்து, விமானம் வரையிலும், கப்பலிலிருந்து படகு வரையிலும் உற்பத்தியாகிறது. அதெல்லாம் அவர்கள் கற்பனையிலிருந்து வந்தது.
கடலில் ஒரு கப்பல் போகிறது என்றால், அது மனிதனுடைய  கண்டுபிடிப்பு. அவன் கற்பனையில் தோன்றிய ஒன்று, அவன் அறிவில் உதித்து கப்பலை கண்டுபிடித்தான். அவனுடைய கற்பனை அந்தக் கப்பலாக போய்க்கொண்டு இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் பாய்மரக் கப்பலாக இருந்து, விசைப்படகாக மாறி, விசைப்படகிலிருந்து கப்பலாக மாறி, இன்று அதுவே யுத்தக் கப்பலாகவும், விமானம் தாங்கிக் கப்பலாகவும் மாறியிருக்கின்றது. இப்படிப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பல்வேறு பொருட்களாக மாறி இன்று சமுதாயத்தை அழிப்பதற்கும் ஆக்குவதற்கும் துணையாக இருக்கிறது.
இப்படியெல்லாம் மனிதவர்க்கம் இதுவரை கண்டுபிடித்திருக்கிறது, இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு பொருளை முதன்முதலில் பார்க்கும்போது, புதுமையாக பார்க்கிறான். இரண்டு வருடத்திற்கு முன்னமே இந்தப்பொருள் வந்தது என்கிறான். புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருளை நவீனம் என்று சொல்கிறான், Latest ஆக வந்தது என்று சொல்கிறான். அதை தொன்மையாக வந்தது என்று சொல்கிறான்.
தமிழ்மொழி மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. ஒரு மொழி என்பது ஒரு கருத்தை மற்றவனுக்குச் சொல்வது. இது ஜக், அது பாட்டில், அது டம்ளர் என்று பொருளைப்பற்றி பேசுகிறான். பொருளை வெளிப்படுத்துவதற்காக பேசப்படுவது மொழி. தம் கருத்தை மற்றவர்களுக்குச் சொல்லி புரிய வைப்பது, மற்றவர்களுக்கு தன் கருத்தை சொல்வதற்காக ஆக்கப்பட்டது மொழிகள்.
முன்னே சைகையில் பேசி வந்த மனிதன், இப்போது தன் கருத்தை மொழியின் மூலமாக சொல்கிறான். இப்போது எழுத்கோல், பேனா என்று தன் கருத்தை சொல்வதற்கு வந்துவிட்டது.
நம் காணுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறான். நமக்கே புதுமையாக இருக்கிறது, ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி பெயர் வைத்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டியதில்லை. ஆனால் மூலிகைக்கெல்லாம் பெயர் வைத்திருப்பதை பார்த்துதான், நாம் பெருமைப்பட வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மூலிகைகள் தோன்றியிருக்கிறது. இவன் தோன்றுவதற்கு பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மூலிகைகள் தோன்றியிருக்கிறது.
இவன் இப்போதுதான் தோன்றியிருக்கிறான். ஆனால் குப்பைமேனி என்றும், அவரி என்றும், துவரை என்றும், பரங்கி என்றும், பூசணி என்றும் பெயர் வைத்திருக்கிறான். ஒவ்வொரு வகையான காய்கறிகளுக்கும், மூலிகை வகைகளுக்கும் குணாதிசயத்தை கண்டுபிடித்திருக்கிறான்.
குணாதிசயத்தைக் கண்டுபிடித்தது நமது ஆசான் அகத்தியர். ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குணாதிசயங்களை ஆசான்தான் வகுத்துத் தந்தார். பூசணிக்காய் இன்ன தன்மை, பரங்கிக்காய் இன்ன தன்மை, பாகற்காய் இன்ன தன்மை, முருங்கைக்காய், கத்தரிக்காய், வாழைக்காய் இவைகளுக்கு இன்ன தன்மை, இன்ன குணாதிசயம் என்று வகுத்து வைத்திருக்கிறார்.
இப்படியெல்லாம் ஆசான் எழுதி வைத்திருப்பது, நம் மனித வர்க்கத்திற்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். தோன்றிய பொருளை தோன்றியவாறு காணாமல், அதனுடைய குணங்களைப் பற்றியெல்லாம் ஆசானும் ஞானிகளும் எழுதியிருப்பார்கள். இவைகள் வியப்பிற்குரியது. நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
இதையெல்லாம் ஆராய்ச்சி செய்யும்போதுதான் முன்னோர்கள் நமக்கு செய்த ஒரு தொண்டு என்பது தெரியும்.
ஒரு பொருள் தோன்றுவதற்கு ஆசான் இருக்க வேண்டும். அது மனிதனுடைய கற்பனையில் தோன்றி இருக்க வேண்டும்.
தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அவன் சொல்கிறான். அது ஒரு பண்பு. தானறிந்த பொருளின் தன்மையைப் பற்றியும், செய்முறைப் பயிற்சியையும் சொல்லித் தருவான். இப்படிச் செய்தால் இந்த பொருள் இப்படி இருக்கும் என்பான்.
கணிப்பொறியை கண்டுபிடித்தவனுடைய அறிவு மிகச்சிறந்த அறிவு. இந்த கணிப்பொறி இன்றைய நாட்டு மக்களுக்கு அது ஓர் இன்றியமையாத ஒரு வரப்பிரசாதமாக, சமுதாயத்திற்கு அது ஒரு முதுகெலும்பு போன்று, கண் போன்று இருக்கிறது.
பொருளைக் கண்டுபிடித்தவன், அந்தப் பொருளில் ஒரு பழுது ஏற்பட்டால், அதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறான். அப்படி கண்டுபிடித்தவனுடைய அறிவு மிகவும் பாராட்டுக்குரியதுதான். அதற்கெல்லாம் ஆசான் இருக்கிறார். கம்ப்யூட்டருக்கு ஆசான் இருக்கிறார். அதற்கடுத்து சூப்பர் கம்ப்யூட்டர் என்கிறார்கள். இப்படி ஏதேதோ செய்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் வியப்பாக இருக்கிறது.
வியப்பிற்குரிய பொருளை கண்டுபிடித்தவனுக்கு இன்னும் வியப்பு அடங்கவில்லை. அதைப் பார்க்கின்றவர்கள் என்ன வியப்பு? என்ன வியப்பு? என்கிறார்கள். ஒரு பொருளைச் செய்தவனைக் கேட்டால், ஏதோ செய்தேன், அது அமைந்துவிட்டது என்பான்.
ஒவ்வொரு பொருள் தோன்றும்போதும், இது போன்ற நவீன பொருட்கள், அதிநவீனப் பொருட்கள், தொன்மையான பொருட்கள் தோன்றும்போதெல்லாம், அந்தப் பொருட்கள் ஒரு புதுமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது.
எப்படி இருந்தபோதிலும் அவற்றிற்கு ஓர் ஆசான் உண்டு.
ஞானத்திற்கு ஆசான் இருக்கிறானா? அப்படியானால் ஞானம் என்றால் என்ன? யாரைத் துணை கொள்வது?
என்ன படித்தாலும் குரு இல்லாச் சீடன்
என்ன பிரயோசனமாம் அலைந்து சாவான்
என்று ஆசான் அகத்தியர் சொல்வார்.
     சொன்னபடி இன்னமொரு சேதி சொல்வேன்
            சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு
      என்ன படித்தலும் குரு இல்லாச் சீடன்
என்ன பிரயோசனமாம் அலைந்து சாவான்
      பொன்னதனைக் கம்மாளர் உருக்கினார்போல்
                  புருவனடுத் தமர் திறக்க இருக்கான் பூட்டு
      கொன்றுவிடும் கருவியெல்லாம் சனத்தில் மாளும்
                  கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாயக்கானே
      -மகான் அகத்தியர் அருளிய ஞானசைத்தண்யம் 51ல் கவி எண் 4
      தேறினார் தெளிந்த பின்பு முறை தப்பாக
            செய்ததனால் மனமிழந்து செத்தார் கோடி
    சித்தர் பாடல்கள்
என்றார். ஞானத்துறைக்கு குருநாதர் துணை வேண்டும். சட்டையை உருவாக்க வேண்டுமானால், அதை தைக்க வேண்டுமானால் அதற்கு ஓர் ஆசான் இருக்க வேண்டும். அந்தப் பொருள் தோன்றுவதற்கு அவனுடைய கற்பனையே ஆசானாக இருக்கும். அவன் கற்பனை செய்து, செய்முறைப் பயிற்சியில் ஈடுபடுகிறான்.
இந்த உடம்பிற்கு சட்டை தைக்க இத்தனை அங்குலம் (இஞ்ச்) 42 , 40, 38 போன்ற அளவுகளை சொல்கிறான். இந்த உடம்பிற்கு சட்டை தைக்க இவ்வளவு துணி வேண்டுமென்று கணக்கெடுக்கிறான். அப்படி கணக்கெடுத்த பின் உருவாக்கிறான். அதை தைத்தபின் அவனுக்கும் மன நிறைவு தருகிறது. மற்றவர்களுக்கும் மன நிறைவு தருகிறது.
ஒரு பானை செய்கிறான். அது எத்தனை படி பிடிக்கும்? என்று பானை செய்தவனைக் கேட்டால் ஒன்றரை படி பிடிக்கும் என்று சொல்வான். இது ஒரு அளவு.
இதை எப்படி கணக்கு எடுத்தாய்? என்று கேட்பான்.
என் மனைவி தினம் இது போன்ற பானையில்தான் சோறு சமைக்கிறாள் என்றான்.
முதலில் கணக்கு வந்ததா? கற்பனை வந்ததா? என்று கேட்டான்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
திருக்குறள் – கல்வி – குறள் 392
                எண் என்னும் கணக்குதான் முன்பு வந்தது.
     முதலில் கணக்கு வந்ததா? எழுத்து வந்ததா?
முதலில் கணக்குதான் தோன்றி இருக்க வேண்டும். கணக்குதான் வந்தது. ஒரு அணிற்பிள்ளை ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவுவதற்கு தனக்கு சக்தி இருக்கிறதா என்று தன் வலிமையையும், தாவக்கூடிய தூரத்தையும் முதலில் கணக்கு எடுக்கும். பிறகுதான் தாண்டும்.
     அதேபோன்று வானரமும் அப்படிதான். ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவுவதற்கு வலிமை இருக்கிறதா? அதற்குரிய வயசு இருக்கிறதா? இல்லை விழுந்துவிடுவோமா? என்று பார்க்கும். அப்படி தாவும்போது கீழே விழுந்தாள் மற்ற வானரங்களெல்லாம் சேர்ந்து அதை கொன்று விடும்.
     மாடு வாய்க்காலைத் தாண்டும்போது நம்மால் தாண்ட முடியுமா என்று பார்த்துதான் தாண்டும்.
     இதையெல்லாம் பார்த்துவிட்டு, கணக்குதான் முன்னே வந்தது என்று மகான் திருவள்ளுவர் கூறுகிறார்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
திருக்குறள் – கல்வி – குறள் 392
     கணக்கு முதலில் வந்ததா? எழுத்து முதலில் வந்ததா? என்றால் கணக்குதான் முன்னே வந்தது என்பது மகான் திருவள்ளுவருடைய கருத்தாகும்.
      எல்லாவகையான கணக்குகளுக்கும் எல்லா வகையான எழுத்துகளுக்கும் ஓர் ஆசான் இருந்திருக்க வேண்டும். தோற்றுவிக்கப்பட்ட பொருட்களும் இனிமேல் தோன்றும் பொருட்களும் ஒருவனுடைய கற்பனையால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டதுதான்.
     உலகத்தில் நாம் காண்கின்ற அத்தனை பொருட்களும் ஒருவனுடைய கற்பனையில் தோன்றியதாகும். கற்பனையில் தோன்றி, பிறகு பொருளாக வெளிப்பட்டு, தனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தருவதைக் கண்டு, மகிழ்ச்சியடைந்திருக்கிறான். அதற்கு அவனுடைய அறிவே ஆசானாக இருந்து உதவி செய்திருக்கிறது.
     ஞானத்துறை அப்படிப்பட்டது அல்ல. ஒருவன் துணை வேண்டும். ஏனென்றால் சிக்கலான பிரச்சனை இது. சிந்தனைக்கும், செயலுக்கும் எட்டாத ஒன்று. இப்படித்தான் என்று சுட்டிக்காட்ட முடியாது.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே.
மகான் சிவவாக்கியர் – கவி எண் 94
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததைஇலக்கணமே இல்லாத பொருள் ஞானம். எல்லாவற்றிற்கும் ஓர் இலக்கணம் உண்டு. ஒரு பொருளை தயாரிக்க ஒரு முறை இருக்கிறது என்று சொல்லி, அந்த முறைப்படி அதை செய்து காட்டுவான். அப்படி செய்து காட்டியபின், அதை வரி வடிவம் செய்து விடுவான். இப்படி செய்தால் நன்மை என்று எழுதி வைத்துவிடுவான். அது பொருத்தமாக அமைந்துவிடும். செய்பவனைப் பொறுத்து அது அமையும்.
ஞானத்திற்கு இலக்கணம் இல்லையே, எப்படி முன்னேறுவது? என்று கேட்டான்.
ஞானிகள் தம் அனுபவத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்.
காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டுங் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் 2937
                காட்டுங் குறியும் கடந்தவக் காரணம் என்பதை காரணம் கட்டும் குறியும் என்று குறிப்பாகச் சொல்லியிருப்பார்கள். தன் அனுபவத்தை சுவடி மூலமாக, எழுத்து மூலமாக சொல்லி வைத்திருப்பார்கள் அல்லது வேதமாகச் சொல்லியிருப்பார்கள். தமது அனுபவத்தை வேதமாக சொல்லியிருந்தாலும், அதை படித்து அறியமுடியாது.
     நூல்களை படித்து நான் ஞானத்தில் வெற்றி பெற்றேன் என்று இதுவரை யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஏட்டுக்கு அடங்காத பொருள். இலக்கணம் இல்லாத ஒன்றை எப்படி இலக்கணப்படுத்துவது? ஆகவேதான் காட்டுங் குறியும் கடந்தவக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் என்றார்.
கூட்டுங் குருநந்தி கூட்டிடின் அல்லது – தலைவனாகப் பார்த்து அதை கூட்டினால் அன்றி, முடியாது.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
“பக்திதான். பக்தி செலுத்த வேண்டும்” என்றார்.
யார் மீது பக்தி செலுத்த வேண்டும்?
ஆசான் திருமூலதேவர், ஆசான் நந்தீசர், ஆசான் அகத்தியர், ஆசான் அருணகிரிநாதர், மகான் ராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகள் திருவடியைப் பற்றி பூஜை செய்து பக்தி செலுத்தினால் உணர்த்தப்படும் என்றார்.
இது உணர்த்தக்கூடிய ஒன்றே தவிர, சுட்டிக்காட்ட முடியாது. அப்பேர்ப்பட்ட பொருளைப்பற்றி நாங்களும் கற்பனை செய்திருந்தோம்.
தலைவன் எங்கே இருக்கிறார்? யாரை நோக்கி நாம் தவம் செய்வது? தலைவன் எங்கிருப்பார்? இமயமலையில் இருப்பார். தலையெல்லாம் விரிகோலமாக இருக்கும், விரிசடையோனாக இருப்பான். கையிலே அக்னி சட்டி ஏந்தியிருப்பான். ஈசன் அங்கேதான் இருப்பான் என்று நினைத்திருந்தோம்.
டென்சிங் இமயமலை மீதி ஏறினான். “அங்கே ஐஸ்கட்டிதான் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
எங்கேயோ கடவுள் இருப்பார் என்று கற்பனை செய்திருந்தோம். அப்படிப்பட்ட கற்பனைகளை அங்கு சென்று பார்த்தவர்கள் “இல்லை” என்று சொல்லிவிட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் இதுதான் ஞானமார்க்கம் என்று கற்பனை செய்திருந்தோம். பட்டினி கிடக்க வேண்டும். இரவில் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கற்பனையில் தூங்காமல் இருந்திருக்கிறோம், பட்டினி கிடந்திருக்கிறோம்.
“இது அல்ல மார்க்கம். நீ போகின்ற பாதை சரியில்லை” என்று எனக்கு தலைவன் உணர்த்தினார். இதை நேரடியாக வந்து சொல்லவில்லை.
“ஐயனே! நான் முன்னேற வேண்டும். இந்தத் துறையில் முன்னேற வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள்” என்று கேட்டோம். துறையூரில் ஒருவர் சுவடி படிப்பதாக அறிந்து கொண்டோம். அந்தசமயத்தில் அன்பரும் நானும் சேர்ந்து சென்று, சுவடியைப் பார்த்தோம்.
ஆசான் சுவடி மூலமாக, “உனக்கு ஞானம் சித்திக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சில இடையூறுகள் வரத்தான் செய்யும்” என்று சொன்னார். எல்லாத் துறைக்கும் உள்ள இயல்புதான். அதை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னோம். 1974ம் ஆண்டு அந்த சுவடியை பார்த்தோம்.
எங்களுக்கு சுவடியே ஆசானாக இருந்து வழிகாட்டியது. இதுவரை ஆயிரக்கணக்கான சுவடி பார்த்து அதன்படிதான் செயல்பட்டோம். இன்று செந்தண்ணீர்புரத்தில் சுவடி பார்த்து அதன்படி நடந்து வருகிறோம்.
செந்தண்ணீர்புரத்தில் இன்று “நாம் எந்த உணவை மேற்கொள்வது?” என்று கேட்டோம். இப்போது நான்கு மாதமாக கனிவகைகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறோம். பன்னிரண்டு மணி நேரம் பட்டினி கிடக்க வேண்டும் என்று ஆசான் அகத்தியர் சொன்னார்.
    
     காலையில் கனியும், இடையில் பன்னிரண்டு மணி நேரம் ஓய்வும், பிறகு காலையில் கனியும் சாப்பிட வேண்டுமென்று சொன்னார். அந்த உணவு எனக்குப் பொருந்தவில்லை. உடம்பெல்லாம் நொந்து விட்டது. அதை உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
     பிறகு மறுபடியும் சுவடி பார்த்தோம். “என்னால் அந்த உணவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடம்பெல்லாம் நொந்துவிட்டது. ஏதாவது மாற்றும் உண்டா, சொல்ல முடியுமா?” என்று ஆசானை கேட்டேன்.
     “மாற்று இருக்கிறது. நாழிகைக்கு ஒரு முறை சாப்பிடலாம். மா, பலா, வாழை, கொய்யாப்பழம்” என்று ஆசான் சொன்னார்.
     மா, பலா, வாழை, கொய்யா என்று சொல்லும்போது, ஒரு நாழிகைக்கு ஒரு முறை சாப்பிடலாம் என்று சொன்னார். அதன்படியே சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், உணவின் மேல் இருக்கும் நாட்டத்தை விட்டொழிக்கவில்லை.
     “இப்போது நான் கடைப்பிடிக்கும் இந்த உணவு முறை நியாயமா? அல்லது தவத்திற்கு இடையூறு வருமா?” என்று கேட்டேன். ஏனென்றால்,
தேறினார் தெளிந்த பின்பு முறை தப்பாக
செய்ததனால் மனமிழந்து செத்தார் கோடி என்பார்.
22 ஆண்டுகள் உப்பில்லா உணவு மேற்கொண்டு, இரவும் பகலும் பாதுகாத்து வந்த தவ வாழ்க்கை இந்த உணவால் கெட்டுவிடுமோ? என்று அஞ்சி இன்று நூல் பார்த்தோம். அந்த நூலை படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மகான் அகத்தீசர் அறிவுரை ஆசி நூல்
நாள் – 14.06.1998      
1.       இறையருளே பரம்பொருளே அரங்கா போற்றி
இவ்வுலகை ஆள வந்த அரசா போற்றி
அறுமுகனே சரவணனே தேசிகா போற்றி
அவதார கல்கியே போற்றி போற்றி
2.       போற்றியே வெகுதான்ய விடையின் திங்கள்
புகன்றிடுவேன் கும்பன் யான் ஆசி பாகம்
பற்றறுத்த துறையூர் வாழ் துறவியே வாழ்க
பாருலகில் வெகுதான்ய ஆண்டு தீட்சை விழா
3.       தீட்சைவிழா சிறப்பாக நடைபெறும் அப்பா
தேவர்களும் முனிவர்களும் நவகோடி சித்தர்
தீட்சைவிழா கலந்துமே ஆசி அளிப்பார்
தெரிவிக்க அறுமுகனும் உன்னுள் கலந்து
4.       கலந்துமே அருளாசி மக்களுக்கு அளிப்பார்
கலியுகத்தின் கல்கியே வாழ்க வாழ்க
கோலமதாய் மலேய நாட்டு அன்பர் யாவும்
குவலயத்தில் தீட்சைவிழா கலந்து கொண்டு
5.       கொண்டுமே அருள் பெறவே ஆசி அளிப்பேன்
குவலயத்தில் பயண பாதுகாப்பு ஆசி
உண்டான கும்பன் யான் வழங்கி நிற்பேன்
ஓங்கார இறையருளே அரங்கா வாழ்க
6.       வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க
வையகத்தில் ஊழ்வினையை அகற்ற வந்த
ஊழ் நீக்கும் பரம்பொருளே வாழ்க வாழ்க
உன் ஆக்கை சிறப்படைய வாழ்க வாழ்க
7.       உணவுதான் புசித்திட ஆசி அளித்தோம்
உலகத்த்ல் கோதுமை கஞ்சி உணவு
உணவுதான் புசித்திட ஆசி உண்டு
உப்பு நீக்கி மதிய வேளை புசிக்க நன்று
8.       நன்றுபெற மற்ற வேளை கனி உணவு
நானிலத்தில் புசித்திட குறைகள் ஏது?
நன்றுபெற திடகாத்திர ஆக்கை பெற்று
நானிலத்தில் அகிலமதை ஆட்சி செய்வாய்
9.       ஆட்சி செய்வாய் அகமகிழ்ந்து ஆசி அளிப்போம்
அகிலமதில் இறையருளே வாழ்க வாழ்க
தீட்சைவிழா சிறப்படைய ஆசி உண்டு
தெரிவித்த ஆசிநூல் இப்பாகம் முற்றும் முற்றே.
-சுபம்-
அன்பர் இன்று வந்த சுவடியைப் படித்தார். அந்த சுவடியில் கனிவர்க்க உணவுதான் சொல்லப்பட்டது. முடிந்தால் உப்பு நீக்கிய கோதுமைக்கஞ்சியை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் சர்க்கரை சேர்த்து, உப்பு நீக்கி என்று சொல்லவில்லை. சர்க்கரையை சேர்த்து உப்பு நீக்கி என்று சொல்லியிருந்தால், சாப்பிடலாம். ரொம்ப கஷ்டமான உணவுதான். இருந்தாலும் தலைவன் சொல்லியிருக்கிறார். காரணமில்லாமல் இருக்காது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.
எந்த காரியத்திற்கும் ஓர் ஆசான் வேண்டும். அதுவும் இந்த ஞானத்துறையில் தானாகவே எதையும் செய்ய முடியாது. இது பார்த்து செய்வதல்ல. பார்த்தோ, படித்தோ, அனுபவத்தைக் கொண்டோ அல்லது தம் உணர்வாலோ செய்ய முடியாத ஒன்று இந்த ஞானத்துறை.
நாம் ஆரம்பத்திலிருந்தே சுவடி கேட்டே பழகியிருக்கிறோம். சுவடி கேட்டுத்தான் பின்பற்றி செய்திருக்கிறோம். வருகின்ற தீட்சை விழா சிறப்பாக நடக்குமென்று ஆசான் சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு அன்பர்கள் கிட்டத்தட்ட முப்பத்தைந்து பேர் வருவார்கள். சென்ற சித்ரா பௌர்ணமியின்போது எழுபத்தெட்டு அன்பர்கள் வந்தார்கள். நாற்பத்தியொரு பெண்களும், முப்பத்தியேழு ஆண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் விழாவிற்கு வந்திருந்தார்கள். விழாவிற்கு மலேசிய அன்பர்கள் இங்கே வந்து பக்தி செலுத்தி, தொண்டு செய்து ஆசி பெற்றிருக்கிறார்கள்.
தீட்சை விழாவிற்கும் அவர்கள் வருவார்கள். அவர்களுக்கும் ஆசி உண்டு. தீட்சை விழாவும் சிறப்பாக அமையும்.
ஒரு விழா என்பது கடவுளின் பெருமையை பேசுவதாகும். இந்த தீட்சைவிழா என்பது நான் தவத்தை மேற்கொண்ட ஆண்டைக் குறித்து விழா எடுப்பதாகும். 17.09.1976 அன்று நான் தவத்தை மேற்கொண்டேன்.
தவம் என்பது கடவுளை அடைவதற்கு முயற்சிக்கின்ற ஒரு பாதை என்று அர்த்தம். ஆரம்பத்தில் உப்பில்லா உணவு மேற்கொண்டோம். இடையில் அந்த முறையை மாற்றினார்கள். அதையும் பின்பற்றி வந்தோம். இன்றோடு நூற்றி பதினாறு நாட்கள் ஆகிறது. இந்த நூற்றி பதினாறு நாட்களும் அன்னம் ஒரு பருக்கை கூட சாப்பிடவில்லை. ஆரம்பகாலத்தில் நூற்றிபத்து நாட்கள் வரையிலும் வாழைப்பழங்களை சாப்பிட்டோம்.
இப்போதுதான் மா, பலா, வாழை என்று சொன்னார். நான்கைந்து நாட்களாக மாம்பழம் சாப்பிடுகிறோம், பலாப்பழம் சாப்பிடுகிறோம், கொய்யாப்பழம் சாப்பிடுகிறோம், வாழைப்பழம் சாப்பிடுகிறோம்.
எந்த கனி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொன்னார். அதன்படி சாப்பிடுகிறோம். அடிப்படை இந்த உணவுதான் தவத்திற்கு ஏற்ற உணவு, அப்போதுதான் உடம்பு நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்.
“நீ விரும்பினால் கோதுமைக்கஞ்சி சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்” என்று ஆசான் சொல்லிவிட்டார். அது ஒரு முக்கிய உணவு இல்லை என்று சொல்லிவிட்டார்.
தவம் என்பதே உடம்பை மையமாகக் கொண்டதுதான். ஒரு மனிதன் முன்னேற்றம் அடைவதற்கு, உடம்புதான் முக்கியம்.
இந்த உடம்பை ஏன் பக்குவப்படுத்த வேண்டும்? இந்த உடம்புதான் காமதேகம். இந்த தேகம் காமதேகம்தான். இதுதான் உண்மை. அதே சமயத்தில் அறிந்தவர்களுக்கு காமதேகம் அல்ல.
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!
மகான் அழுகணிச்சித்தர் – கவி எண் 8
                இந்த தேகம் ஊற்றைச் சடலம்தான். தேகத்தை அறிந்தவர்க்கு, ஊற்றைச் சடலமில்லை. சடலம் என்பது உடம்பு. இது உப்பிருந்த பாண்டம்தான். இந்த உடம்பைப் பற்றி புரிந்து கொண்டவர்கள்.
                மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
திருமந்திரம் – பிண்டலிங்கம் – கவி எண் 1726
               
                இந்த தேகம் அவ்வளவு பெரிய அற்புதமா? என்றான்.
     அறிந்தவனுக்கு, புரிந்தவனுக்கு, உணர்ந்தவனுக்கு தேகம் சிவலிங்கம்.
      மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – அறிந்தவனுக்கு சிவலிங்கம், அறியாதவர்க்கு அவலிங்கம் என்றார். அவளிங்கம் என்றால் வீண் என்று அர்த்தம். யாரால் ஐயா சிவலிங்கம் ஆக்கிக் கொள்ள முடியும்.
      மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
திருமந்திரம் – பிண்டலிங்கம் – கவி எண் 1726
     அற்புத திருக்கூத்து உள்ள உடம்பு இது. எங்கள் நோக்கம் இந்த உடம்பைப் பக்குவப்படுத்துவதுதான். எங்கள் நோக்கம் மட்டுமல்ல, சித்தர்கள் மரபே இதுதான்.
     சித்தர்கள் என்று சொன்னாலே, உடம்பைப் பற்றி அறிந்தவராகத்தான் இருக்க வேண்டும். உடம்பைப் பற்றி அறியாதவன் சித்தனாக இருக்க முடியாது, செத்தவனாகதான் இருக்கலாம்.
     இந்த அறிவு எப்போது வரும்?
     மகான் திருமூலதேவர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர்முனிவர் போன்ற ஞானிகளை வணங்கினாலன்றி ஒருவனுக்கு இந்த அறிவு வராது.
     தன்னை அறிந்தவன் யார்?
     நாம் தான் கடவுள் என்று அறிகின்றவனுடைய அறிவுதான் தன்னை அறியும் அறிவு. இவனே தன்னை அறிந்தவன். மகான் திருமூலதேவரை, ஆசான் அகத்தியரை பூஜை செய்யும் மக்களுக்குத்தான் இந்த உடம்பு சிவலிங்கமாக வெளிப்படுத்திக் காட்டும், இல்லையென்றால் அவலிங்கமாகப் போய்விடும்.
     இந்த தேகம் மிகுந்த அற்புதமானது என்பதை ஆசான் அகத்தியரை பூஜை செய்பவர் அறிந்துகொள்கிறார். இந்த உடம்பை சாதாரண உடம்பு என்று நினைக்காதே.
     சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து என்பதெல்லாம் இந்த உடம்பு.
     இது ஏன் மற்றவர்களுக்கெல்லாம் புலப்படவில்லை? அவர்கள் தேகத்தை வெறும் காமத்திற்கு மட்டும் ஏன் பயன்படுத்துகிறார்கள்?
     “தக்க ஆசான் கிடைத்தும், அவரைப் பின்பற்றி நடக்கவில்லை. அதனால் வந்த கேடு” என்று நாங்கள் சொன்னோம்.
     தக்க ஆசான் நான் இருக்கிறேன். இந்த உடம்பைப் பற்றி அறிந்தவன். இந்த உடம்பை எப்படி பக்குவப்படுத்தி வருகிறேன் என்பது என்னுடன் இருக்கும் அன்பர்களுக்குத் தெரியும்.
     இந்த உடம்பைத் தூங்க வைப்பதா? உண்ண வைப்பதா? உறங்க வைப்பதா? படுக்க வைப்பதா? ஓட வைப்பதா? என்பது எங்களுக்கு தெரியும். நித்திய கடமையை செம்மையாகச் செய்ய வேண்டும்.
     நித்தியா கடமை எது?
     காலையில் எழுந்து, காலைக்கடன்களை முடிக்க வேண்டும். பிறகு குளித்துவிட்டு பத்து நிமிடம் நாமஜெபம் சொல்ல வேண்டும்.
     காலையில் எழுந்தோம், நித்திய கடன் முடித்து, குளித்தோம். பத்து நிமிடம் உட்கார்ந்து நாமத்தைச் சொன்னோம். யார் நாமத்தைச் சொன்னோம்? உடம்பை அறிந்து உடம்பை வெற்றி கண்டவனுடைய திருவடியை வணங்கி, அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா, கருவூர்தேவா! என்று கனிவுடன் அழைக்கின்றோம்.
     அவர்களெல்லாம் உடம்பைப் பக்குவப்படுத்தி, சிதம்பரமாகவும், திருக்கூத்தாகவும் பார்த்தவர்கள். அவர்களை அழைத்து, அடியேன் இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள அருள் செய்ய வேண்டுமென்று கேட்போம். ஆசான் அருள் செய்தார். அதைப் பின்பற்றி நடந்து வருகிறோம்.
     எந்த உடம்பைக் காப்பாற்றுவது? இந்த ஊன உடம்பைக் காப்பாற்றுவதற்கு என்ன உணவு என்று தெரியாது. தன் இஷ்டத்திற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஆசான் ஒன்றும் சொல்லாமல் அப்படியே பார்த்துக்கொண்டே போய்விடுவார்.
     நாங்கள் ரொம்ப நிதாப்போம்.
     ஒன்று கிடக்க ஒன்று ஆகி விடக்கூடாதப்பா. எனக்குத் தெரியாது என்போம்.
     சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
          துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
     ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
          றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
     போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
          பொருந்திய காரசா ரஞ்சேர்
     சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
          தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
திருஅருட்பா ஆறாம் திருமுறை – அவா அறுத்தல் – கவி எண் 2
                சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
          துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
     ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
என்றார்.
    
     இந்த வார்த்தை ரொம்ப லகுவாக இருக்கும். ஆனால் உள்ளே செல்ல முடியாது. அவர் யார்? அவர் எமனைப் பொடியாக்கிய ஆசான் இராமலிங்கசுவாமிகள்.
     கட்டுப்பாடாக இருந்தால் என்ன? ஆனால் எது எது கட்டுப்பாடோ, அது அவரிடம் இருந்தது.
அவர் என்ன செய்தார், சோற்றிலே விருப்பம் வைக்கவில்லை. சொன்னதைச் சொன்னபடி செய்தார். ஆசான் இராமலிங்கசுவாமிகளுக்கு மௌனகுருதான் துணையாக இருந்தார்.
ஆகவே, ஒரு மனிதன் கடவுள் ஆவதற்கு என்ன வேண்டும்?
வைராக்கியம்
என்ன வைராக்கியம் வேண்டும்?
அறுசுவையை தொடவே கூடாது.
எவ்வளவு நாளைக்கு?
இந்த உடம்பு என்றைக்கு சித்தி பெறுகிறதோ அது வரை தொடாதே.
     விரைந்து விரைந்து படிகடந்தேன்
மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக்
கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மனம்பொங்க
மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரிந்து நெகிழ்ந்த தோலுடம்பும்
செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
திருஅருட்பா – ஆறாம் திருமறை
சோற்றிலே விருப்பம் இருக்கக் கூடாது. அதுதான் தவவாழ்க்கை.
அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
     நான்கு மாதம் ஆகிவிட்டது. நாங்கள் அன்னத்தை சாப்பிடவில்லை. இந்த உடம்பு அன்னத்தால் ஆன உடம்புதான். அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்பார்கள்.
     இந்த உடம்பு அன்னத்தால் ஆனது. இதை அன்னசாரம் என்பார்கள். இந்த உடம்பே அன்னத்தால் வந்த ஊட்டச்சத்து. நான்கு மாதம் அன்னத்தால் கிடைத்த அந்த ஊட்டச்சத்தை விட்டுவிட்டு வெறும் கனிகளை மட்டும் உண்டு வருகிறோம்.
     இந்த நான்கு மாதமும் வேறு உணவில்லை. எங்களுக்கு பால், டீ என்று வேறு எதுவும் கிடையாது. பழங்களை மட்டும் உண்ணுகிறோம், இளநீர் கிடையாது. உப்பிலாத கோதுமைகஞ்சியும் இல்லை.
     அன்னத்தால் எடுத்த இந்த தேகம், இன்று நாற்பது கிலோவிற்கு வந்துவிட்டது. மீதம் எங்கே போனது என்று தெரியவில்லை.
ஒருவன் எழுபது கிலோ எடை இருக்கிறான் என்றால், எத்தனை கிலோ அரிசி சாப்பிடிருக்கிறான் என்று கணக்கெடுக்க முடியாது. இவன் குடித்த காபிக்கும், டீக்கும் பயன்படுத்திய காப்பித்தூள், டீத்தூள், சர்க்கரை போன்றவற்றை எவ்வளவு என்று கணக்கெடுக்க முடியவில்லை.
நீ சாப்பிட்ட உணவை சமைக்க இதுவரை பயன்படுத்திய நெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய், விளக்கெண்ணெய் எத்தனை லிட்டர் என்று தெரியவில்லை. நீ சாப்பிட்ட அரிசியைத்தான் கணக்கெடுக்க முடியுமா? என்றால் அதையும் கணக்கெடுக்க முடியாது.
அரிசி, பருப்பு, கோதுமை போன்ற எல்லா பருப்பு வகைகளையும், தானிய வகைகளையும் கணக்கெடுக்க முடியவில்லை. இவ்வளவும் சாப்பிட்டு என்ன எடை இருக்கிறது என்றால் அறுபது கிலோதான் இருக்கிறது. அவ்வளவுதான் இந்த அன்னசத்து.
அன்னத்தால் எடுத்த இந்த தேகம், பின்னமாகவும் காப்பாற்றிக் கொள்வதுதான் ஞானமார்க்கம். இதற்கு ஓர் ஆசானுடைய துணையிருக்க வேண்டும். ஆசான் இல்லையென்றால், ஒன்றும் அசைக்க முடியாது.
ஆசானாக இருந்து அருள் செய்வது ஒரு முறை. ஆனால் எங்களுக்கு நேரடியாக வராமல், சுவடி மூலமாக நேரடியாக வந்தது போல் வந்து அருள் செய்கிறார்.
உணவின் மீது நாட்டம் இருக்கிறதே? இதை விட்டு விட்டு வெற்றி பெற நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் கஞ்சமலைச்சித்தரையும் மகான் கருவூர்முனிவரையும் கேட்டோம்.
“உன் திருவடியைப் பற்றுவதற்கு எனக்கு வாய்ப்பில்லாமல் ஏன் செய்தீர்கள்?” என்று கேட்டோம்.
“பயப்படாதே, இது முன் செய்த வினை” என்றார் தலைவன்.
நாங்கள், அவர்கள் சொன்னதைச் செய்வோம். கனி வர்க்கம் உண்ணலாம். கோதுமைக் கஞ்சிதான் உணவு என்றார். முடிந்தால் சாப்பிடு, இல்லையென்றால் விட்டுவிடு என்பார்கள். கனிகளை சாப்பிட்டு வந்திருக்கிறோம்.
கனிவர்க்கம்தான் இந்த உடம்பிற்கு, இந்த தவ வாழ்க்கைக்கு, தவ உடம்பிற்கு உற்ற துணையாக இருக்கிறது. வேறு வகையான உணவு சேர்த்தால் இந்த தவ வாழ்க்கைக்கு பயன்படாது.
தீனியிலே ஆசைகொண்டு திரிந்துநீயும்
செத்திறந்து செத்திறந்து ஜெனியாதேகேள்.
-அகத்தியர் துறையறி விளக்கம் – கவி எண் 8
                தீனியின்மேல் நாட்டம் இருக்கக்கூடாது. தீனியின்மேல் நாட்டம் இருக்கிறதென்றால் வினை இருக்கிறது என்று அர்த்தம். திருவருள் துணை கொண்டு அந்த வினையை வெல்ல வேண்டும்.
     எந்த ஒரு உணவுப் பொருள்மீதும் நாட்டம் இருக்கக்கூடாது. அதுதான் சிறப்பறிவு. அதைச் சாப்பிடவேண்டும், இதைச் சாப்பிடவேண்டும் என்று நினைக்கின்றவன் நிச்சயமாக இந்தத் துறைக்கு வரமுடியாது, வந்தாலும், வெற்றி காண முடியாது.
                நாக்கின் சுவை அவனை ஏன் ஆட்டிப்படைக்கிறது?” என்று கேட்டான். எவ்வளவு நேரம் இந்த நாக்கில் சுவை இருக்கும்? உணவு உள்ளே போகும்வரை சுவை இருக்கும். இவ்வளவு ஆற்றல் பொருந்திய இந்த சுவையை வெல்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. தலைவன் ஆசி இருக்க வேண்டும். தலைவனின் ஆசியோடு நாம் தவம் செய்து வந்திருக்கிறோம். மேலும் தவம் செய்வதற்கு ஆசான் துணையை கேட்டு வந்து கொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நீங்களும் அடைய வேண்டுமென்றுதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். தற்பெருமையாக பேசவில்லை. என்னுடைய அனுபவத்தைப் பேசி வந்திருக்கிறேன்.
     அனுபூதிமான்கள் என்று எங்களை சொல்வார்கள். ஆகவே, எங்கள் அனுபவத்தைச் சொல்வதன் நோக்கம், நீங்களும் இந்தத் துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம்.
     நீங்களும் முன்னேற வேண்டும். உடம்பை காயசித்தி செய்ய வேண்டும்.
     காயசித்தி என்பது சின்ன விசயமல்ல.
     காயசித்தி செய்து கொண்ட ஞானிகளுக்கு ஜெனனமில்லை மரணமில்லை.
     காயசித்தி என்பதற்கு என்ன விளக்கம்?
     இந்த உடமைப் பக்குவப்படுத்திக் கொள்வது காயசித்தி.
     யார் தயவோடு செய்ய வேண்டும்?
     தலைவன் ஆசியோடும், தயவோடும்தான் செய்ய வேண்டும்.
     தலைவனுடைய ஆசியில்லாமல் காயசித்தி பெற முடியுமா? முடியாது. இப்படிப்பட்ட உணவுதான் சேர்க்க வேண்டுமென்று தலைவன் சொன்னால், அதைத்தான் சேர்க்க வேண்டும்.
     முதலில் நாவை கட்ட வேண்டுமல்லவா? அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டுமென்ற நினைப்பு வந்தால் என்னாகும்?
      தீனியிலே ஆசைகொண்டு திரிந்துநீயும்
      செத்திறந்து செத்திறந்து ஜெனியாதேகேள்.
அகத்தியர் துறையறி விளக்கம் – கவி எண் 8
                உணவின் மேல் நாட்டம் இருக்கக்கூடாது. அது குப்பை. அது நமக்கு ஆகாது. அது நமக்குக் கூற்றுவனாக இருக்கும்.
     பல்வேறு சுவையாக உள்ள உணவுப்பொருட்கள் நமக்குக் கூற்றுவனாக மாறி விடும். அதை வேண்டாமென்று சொல்ல வேண்டும். அதற்கு முனிவர்கள் ஆசி இருக்க வேண்டும். இல்லாவிடில், சாப்பிட்டு விடுவான்.
     இது மற்றவர்களுக்காக சாப்பிடுவதில்லை. தன் தேகத்தினை காப்பாற்ற விரும்பும் மக்கள் உப்பில்லாமல் சாப்பிட்டுதான் ஆக வேண்டும்.
     “எத்தனை மாதம் ஆகும்” என்று கேட்டேன்.
     “எத்தனை மாதமானால் என்ன? உனக்கு என்ன நட்டமா? என்றைக்கு அருள் செய்கிறோமோ அன்றுவரை சாப்பிடு” என்பார்கள்.
     நாங்கள் மா, பலா இப்போது சிறிதளவு சாப்பிடுகிறோம். தலைவன் எங்களுக்கு சொன்ன உணவை உண்டு பிழைத்துக் கொண்டிருக்கிறோம். சிறது கோதுமைக்கஞ்சி குடித்துப் பார்ப்போம். இல்லையேல் விட்டு விட்டுப் போய்விடுவோம்.
     நாங்கள் இதுநாள் வரையிலும் தவ வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டுதான் இந்த உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். வெறும் பழங்களை சாப்பிடுகிறோம்.
     இதற்கு முன்னர் உணவாக, பால், அரிசி சோறு சாப்பிட்டோம். இப்பொழுது நாம் ஆசானைக் கேட்டுத்தான் உணவை சாப்பிட்டு வந்திருக்கிறோம். அதைப்பற்றிதான் அன்பர் சுவடி படித்தார். நீங்களும் அதை கேட்டீர்கள்.
     நீங்களும் இந்த உடம்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக சொல்கிறோம்.
     இந்த உடம்பு புலால் உணவு உண்டு வளர்த்த உடம்பா? வெறும் காய்கறிகளை உண்டு வளர்த்த உடம்பா? அல்லது கோதுமை, பருப்பு, அரிசி தானியங்கள் போன்றவற்றால் வளர்த்த உடம்பா?
     எந்த உணவால் இந்த உடம்பை வளர்த்திருக்கிறோம்? இந்த உடம்பு அறுபது கிலோ இருக்கிறது. அறுபது கிலோ எடையுள்ள இந்த உடம்பு எந்தெந்த உணவால் வளர்ந்த உடம்பு என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
     எந்தெந்த உணவு சேர்ந்து இந்த உடம்பு வளர்ந்திருக்கிறது என்பது உங்களுக்கு புரியாது.
     எங்களைக் கேட்டால், இந்த நான்கு மாதமும் கனிவர்க்கத்தை உண்டதால் வந்த உடம்பு என்று சொல்வோம்.
     எங்களுக்கு புருவப்பூட்டு திறந்தால் அறுசுவை சாப்பிடுவோம். அன்று ஆசான் சொல்ல வேண்டும். நீங்களும் இந்த வாய்ப்பை பெற வேண்டும்.
     எந்த தேகத்தின் துணை கொண்டு அங்கே போகலாம்?
     இப்போது இருக்கும் தேகத்தைக் கொண்டு அங்கே போகமுடியுமா?
     இந்த தேகத்தை வைத்துக்கொண்டு அங்கே போக முடியாது.
                மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே !
மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் 59
மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான். என் அப்பன் சிவபெருமான் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான். மானார் விழியைக் கடந்தேறி என்பது பெண்களுடைய கண்களுக்குத் தப்பியவன் என்று அர்த்தம்.
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை – எனக்குத் தலைவனாக இருந்து, அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியிலே என்னை ஏற்றுக் கொண்டான்.
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண் ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே – இந்த உடம்போடு இருக்கக் கூடாது என்றார். அப்ப வேறு உடம்பு ஒன்று இருக்கல்லவா? இந்த உடம்பை விட்டு விட்டு அந்த உடம்பை எடுக்க வேண்டும்.
மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்புகொண்டு
வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
பார்த்தா லுலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே.
             – மகான் பட்டினத்தார் பாடல் பொது கவி எண் 19
பற்று அற்றவரே என்னும் வார்த்தை பெரிய வார்த்தை. தேகத்தை விட்டு விட்டான் என்று அர்த்தம். எந்த தேகம் தன்னை வஞ்சிக்கிறதோ, அந்த உடம்பை விட்டு விட்டான்.
பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.
திருக்குறள் – துறவு – குறள் எண் 349
                    
                அற்றது பற்றெனின் உற்றது வீடு என்றார் மகான் ஔவையார். அப்படியெல்லாம் ஞானிகள் சொல்லிக்கொண்டே போவார்கள்.
    
     பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
      பற்றி விடாஅ தவர்க்கு.
திருக்குறள் – துறவு – குறள் எண்  347
     பார்ப்பதற்கு இந்த கவிகள் இலகுவாகத் தெரியும். ஆனால் உள்ளே புகுந்து பார்த்தால் கஷ்டமாக இருக்கும்.
     சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
      சார்தரா சார்தரும் நோய்.
திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 359
                    
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின்ஆண் பெண் சேர்ந்ததனால் மனிதன் தோன்றியிருக்கிறான் என்பது தெரியும்.
இந்த உடம்பு அன்னத்தால் எடுத்த உடம்பு. பலவகையான பின்னத்தால் எடுத்த உடம்பு. சரி, அன்னத்தால் எடுத்த உடம்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன். பின்னம் என்றால் என்ன? தேவையில்லாத உணவைச் சேர்த்து உடம்பை வளர்த்து வைத்திருக்கிறான் என்று அர்த்தம். தேவையில்லாத உடம்பு என்பது அவனுக்கே தெரியாது.
நச்சுத்தன்மையான உணவையெல்லாம் உண்டு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறான். இந்த உடம்பு அன்னத்தால் வந்தது மட்டுமல்ல, இதில் பின்னமும் சேர்ந்திருக்கிறது.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்கனம் ஆளும் அருள்.
திருக்குறள் – புலால் மறுத்தல் – குறள் எண் 251   
                புலால் உணவைச் சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருப்பான். புலால் உணவு ஊட்டச் சத்து தருகிறது என்று நினைத்திருப்பான். தன்னுடைய சுகபோகங்களுக்கு அந்த உணவு துணையாக இருக்கிறது என்று நினைத்து கொண்டிருப்பான்.
     இவன் சுகபோகத்தை அனுபவிக்கிறானா? இல்லை! சாப்பிட்ட உணவு அனுபவிக்கிறது.
     நான் கூடினேன், போனேன், வந்தேன் என்று இவன் சும்மா கதை விட்டுக் கொண்டிருப்பான்.
     அவ்வளவு பெரிய மனிதனா நீ? அவ்வளவு பெரிய ரகசியத்தை கண்டுபிடித்து விட்டாயா?
     நீ அனுபவித்து இன்பத்தை யார் கொடுத்தது? உணவுதான்.
     நீ சாப்பிட்ட உணவுதான் உனக்கு இன்பத்தை தந்திருக்கிறது. உணவை நிறுத்தினால் உண்மை தெரியும்.
     அன்னத்தால் ஆன உடம்பையும், பின்னத்தால் ஆன உடம்பையும் பற்றி நாங்கள் அறிந்தோம். ஆக, தெரிந்ததனால்தான் இதிலிருந்து விடுபட முடிகிறது.
     சார்புஉணர்ந்து சார்பு கெட ஒழுக வேண்டும்.
மனித வர்க்கம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வந்த வரலாறு என்ன என்பதை அறிய வேண்டும். எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான்?
அவனா வாழ்ந்து கொண்டிருக்கிறான்?
        
சத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறதா?
சித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறதா?
சத்து வாழ்கிறதா? சித்து வாழ்கிறதா?
ஆனந்தம் வாழ்கிறதா? என்று கேட்டான்.
சத்து சித்து ஆனந்தம் என்றார்.
                                     
     அப்போது சார்பு உணர வேண்டும். யாராக இருந்தாலும் உணர வேண்டும் நாம் யார் என்று உணர வேண்டும்.
தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே – ஓர்
தந்திரநீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே.
திருஅருட்பா – இரண்டாவது திருமுறை – கவி எண் 1842
என்று மகான் ராமலிங்கசுவாமிகள் சொல்கிறார்கள். தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே என்றார். தன்னை அறிய வேண்டும்.
     இந்த உடம்பு அறுபது கிலோ இருக்கிறது என்றால், என்னென்ன உணவை இந்த தேகம் உண்டதால் வந்தது என்று நமக்கே தெரியாது. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.
நாம் அனுபவிக்கும் இன்பம் எந்த உடம்பினுடையது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்ன உடம்பா? பின்ன உடம்பா?
அன்னமும் பின்னமும் சேர்ந்துதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, மனித வர்க்கம் இதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் பற்றி அறிவதுதான் ஞானம். சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுக வேண்டும்.
எல்லா உயிர்க்கும் சார்பாக இருப்பது பசியா? உணவா? காமமா?
பசிதான் எல்லா உயிர்க்கும் சார்பாக இருக்கிறது.
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுவது எப்படி? ஒன்று பசியை ஒழிப்பதா? அல்லது உணவுப்பொருளை ஒழிப்பதா?
உணவுப்பொருள் எந்த காலத்திலும் இருக்கும். சாப்பிட்டவன்தான் காணாமல் போய்விடுவான். ஆக, இந்த உணவுப்பொருளைப் பற்றி அறிந்தவன் தன்னைப் பற்றி அறிந்தவன் ஆவான். இதை உணர வேண்டும்.
 சார்புஉணர்ந்து சார்பு கெட ஒழுக வேண்டும். சார்பு – சார்ந்து, சார்பு உணர்ந்து – சார்ந்திருப்பதை அறிந்து, கெட ஒழுகுதல் என்று அர்த்தம்.
சார்புஉணர்ந்து சார்பு கெட ஒழுகுதல் – பசிக்கு ஏற்ற உணவைச் சாப்பிடுகிறான்.
ஆனால் அவனை இதுநாள் வரையிலும் காப்பாற்றியது உணவா? உணர்வா? பசியா?
இது நாள் வரை காப்பாற்றியது பசிதான். பசி இல்லாவிடில் செத்திருப்பான். இதுதான் சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் – கெட ஒழுகுதல் என்று அர்த்தம்.
பசி கெட ஒழுகுபவன், நிச்சயம் உணவு கெட ஒழுகுவான். அவனுக்குத் தெரியும் வாழ்க்கை ரகசியம்.
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 359
                என்றார் மகான் திருவள்ளுவர். அவர் யோகி அல்லவா?
     அவர் சார்பை உணர்ந்து சார்பை கெட செய்தவர்.
     அதற்குரிய அறிவையும், ஆற்றலையும் எடுத்துக் கொண்டவர்.
     தனக்கு வரும் துன்பத்தை தடுத்துக் கொண்டவர்.
     திருவருள் துணை கொண்டு தேடிக் கொண்டவர்.
      ஆகவே, மகான் திருவள்ளுவப்பெருமான் ஆசான் அகத்தியரை பூஜை செய்து அந்த வாய்ப்பைப் பெற்றார், சார்பை உணர்ந்து விட்டார், சார்பு உணர்ந்து சார்பு கெட பழகிக்கொண்டார், வெற்றி கண்டார்.
      வெற்றி கண்டதனால் விவேகமுள்ள ஒரு நூலை நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். திருக்குறள் நமக்கு ஆசான். ஆகவே, அதை உணர்ந்து நாம் முன்னேற வேண்டும். சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுக வேண்டும். அதற்குத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுகிறோம்.
     இதுநாள் வரை நம்மை வஞ்சித்தது பசியா? உணவா? அறிவா? ஆசையா?
     இதுநாள் வரை நம்மை வஞ்சித்தது பசிதான்!
     உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
      இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
திருக்குறள் – பொறை உடைமை – குறள் எண் 160
                பெரியோர் யார் என்றால், சாப்பிடாமல் இருப்பவன் தான் பெரியோன்.
     ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
      மாற்றுவார் ஆற்றலின் பின்.
திருக்குறள் – ஈகை – குறள் எண் 225
                அது ஒரு சிறந்த ஆற்றல்தான். ஆற்றல் எது? பசியைக் காப்பாற்றிக் கொள்வதுதான் ஆற்றல் என்று மகான் திருவள்ளுவப்பெருமான் அந்த பெருமையைப் பற்றி பேசுவார். உண்ணாது நோற்பார் பெரியர் – சாப்பிடாது இருந்தால் பெரியோன் என்றார். யாராக இருந்தாலும் பெரியோன்தான் என்றார்.
     சார்பு உணர்ந்து – ஒவ்வொரு உயிரும் வாழ்வது பசியால்தான். பசியால்தான் மனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பசியை வெல்லும் வல்லமை யாருக்கு இருக்கிறதோ, அவன்தான் கடவுள் ஆவான்.
     பசியை வென்றவன் நிச்சயம் உணவுப்பொருளை வெல்வான். அது இயல்புதானே?
     காட்சி தேவை இல்லையென்றால் அப்புறம் கண்கள் அவசியம் இல்லை.
     கருத்து மீது நாட்டமில்லை. டி.வி பார்க்க ஒருவனுக்கு விருப்பமில்லை. ஒருவனுக்கு அயர்ந்து தூக்கம் வருகிறது என்றால் டி.வியைப் பற்றி கவலைப்பட மாட்டான். அதில் நாட்டம் அவனுக்கு இல்லை என்று அர்த்தம் அல்லது பார்க்க முடியாத சூழ்நிலை வந்தது என்று அர்த்தம்.
     உணவுப்பொருள் மீது நாட்டம் இருக்கிறது என்றால் வினைப்பயன் இருக்கிறது என்று அர்த்தம். நாட்டம் நீங்கியது என்றால் வினை நீங்கியது என்று அர்த்தம். தலைவன் ஆசி இருந்தால் அது நீங்கி விடும். ஆசானிடம் கேட்டு இந்த வாய்ப்பை பெற வேண்டும்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
 லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
 கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
 ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே
பட்டினத்தார் பாடல் – பொது 21
    
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புமகான் பட்டினத்தாரையும், மகான் அருணகிரிநாதரையும் நம்பினால், நாட்டம் வந்துவிடும். வேறு எந்தப் பொருள்மீதும் நாட்டம் இருக்காது.
    
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு என்றார். சற்குரு பட்டினத்தார், சற்குரு அருணகிரிநாதராக இருந்து நமக்கு அருள் செய்தால் உணவுப்பொருள் மீது நாட்டம் இருக்காது. பசி அற்றுப்போகும்.
பசி அற்றாலே அந்த இடத்திற்கு வந்து விட்டான் என்று பொருள்.
பசி அற்றாலே காமம் அற்றது.
பசி அற்றாலே கபம் அற்றது.
பசி அற்றாலே விகாரங்கள் அடங்கிவிட்டது.
ஆக, பசி அற்றுவிட்டது.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
மகான் பட்டினத்தார் பாடல் நெஞ்சொடு புலம்பல் கவி எண் 12
அற்புதமா யிந்தஉடல் – இந்த உடல் அற்புதம். அறிந்தவனுக்குதான் இந்த உடல் அற்புதம். அறியாதவனுக்கு அற்பம். நீங்களெல்லாம் அற்பமாகப் போகக்கூடாது என்பதற்காக, இருப்பத்தியிரண்டு ஆண்டுகளாக நாங்கள் பேசிக் கொண்டு வந்திருக்கிறோம்.
பூஜை செய்யுங்கள், மகான் புஜண்டமகரிஷியை! பூஜை செய்து ஆசி பெறுங்கள்!! அற்று விடுவீர் பற்றை! பற்றற்றுப் போவதற்கு மகான் புஜண்டமகரிஷியையும், பற்றற்றுப் போவதற்கு மகான் திருமூலதேவரையும் பூஜை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறோம்.
ஞானிகளை பூஜை செய்தால் இந்த உடம்பு அற்புதம் ஆகும்.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே- சாவதற்கு முன்னே என்று சொன்னார்.
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல் – சத் குரு அவர்களெல்லாம் சத் குரு. நமது உடம்பு அசத்தாக இருக்கிறது. சத் குருவாக இருக்க வேண்டும். சத் குரு என்பது பெரிய வார்த்தை.
அசத்தாக இருக்கக்கூடிய உடம்பை மாற்றி, சத் குருவாக மாற்ற வேண்டும். இந்த உடலில் உமியும் கலந்திருக்கும். தனி அரிசியாக இருந்தால் சத் குருவாக இருப்பான்.
ஞானிகள் தனி உடம்பு பெற்றவர்கள். அந்த உடம்பைப் பெற்றதனால்தான் சத் குருவாக மாறினார்கள்.
     சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல் – மகான் திருமூலதேவரையோ, ஆசான் அகத்தியரையோ பூஜை செய்து தவம் பெற்று வாழாமல்,
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
என்றார் மகான் பட்டினத்தார்.
     மகான் பட்டினத்தாரையும், மகான் அருணகிரிநாதரையும் பூஜை செய்தவர்களுக்கு இந்த ரகசியம் தெரியும். சார்பு உணர்து சார்பு கெட ஒழுகுவான் அவன்.
     கெட ஒழுகுதல் – செயல்படுதல். தாய் தந்தையால் எடுத்த தேகத்தை நீத்து, தனி உடம்பாகிய பொன் தேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொன்னுடம்பாக மாற வேண்டும்.
     அப்படிப்பட்ட பொன்னுடம்பைப் பெற்றவன்தான் ஞானி. அவன் அறிவான்.
    
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
திருஅருட்பா – ஆறாம் திருமுறை – உறுதி கூறல் – கவி எண் 7
                நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே என்று சொல்லியதை கவனிக்க வேண்டும்.
     நற்குலத்தார் – அவர்தான் நல்ல குலத்தைச் சேர்ந்தவர். அவர்தான் உயர்ந்த சாதி.
     மகான் ராமளிங்கசுவாமிகளிடம் “நீர் என்ன சாதி?” என்றான்.
     ஏன் சிரிக்கின்றீர்கள்?
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
     என்னடா உயர்ந்தவன் தாழ்ந்தவன்? இரண்டு பெரும் செத்துத்தான் போகின்றான். செத்தவனெல்லாம் ஒன்றாக கிடக்கின்றான். நான் உங்களை ஏசுகின்றேன் என்று எண்ணாதே. எங்களுடைய ஆசி பெறுவதற்காகத்தான் உங்களை ஏசுகின்றேன்.
     உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்று ஏன் நீ சொல்கின்றாய், இரண்டுபேரும் சாகின்றீர்கள். பாமரனும் சாகின்றான். படித்தவனும் சாகின்றான். சாகாது இருப்பவன்தான் உயர்ந்தவன் என்றார்.
                சாவதற்கே கல்வியெல்லாம் கற்றவன் வீண்” என்றார். சாவதற்கே தேகத்தை எடுத்தாய்?” என்பார்.
    
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.
திருமந்திரம் – கேடு கண்டிரங்கல் – கவி எண் 2090
                அற்புத தேகத்தைப் பெற்ற இவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் – அதைச் செய்தால் அது மீண்டும் உன்னைத் தொடராது என்றார்.
பசியை ஒழிப்பதா? உணவை ஒழிப்பதா?
பசி மீது உள்ள நாட்டத்தை ஒழிப்பதா?
நாட்டம் ஒழிந்தால் போதுமா? சாகாமல் இருப்பானா? நாட்டத்தை எல்லாம் ஒழித்து விடலாம். பேசாமல் இருப்பதற்கு பயிற்சி கொடுத்தால், பேசாமல் இருந்து விடலாம்.
கிட மனமே! பட்டினி கிட! என்றைக்கோ சாவதைவிட, இன்றே சாகலாம் என்று சொல்லலாம்.
உணவையும் சாப்பிட வேண்டும், உயிரையும் விடக்கூடாது.
அது என்ன, அப்படி ஒரு மர்மம் இருக்கா என்ன?
“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”
திருமந்திரம் – சரீரே சித்தி உபாயம் – கவி எண் 725
                உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
                திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
                உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
                உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 
திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724
                அடிப்படையில் ஒரு மர்மம் இருக்கிறது. இந்த உடம்பை வளர்க்கும் உபாயம் ஒன்று இருக்கிறது. ஒரு நயமான வழிமுறைகள் உள்ளன. ஞானிகள் உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிந்து கொண்டார்கள்.
     மகான் அகத்தியர் உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர். ஆசான் அகத்தியரை பூஜை செய்து நாமும் அந்த வாய்ப்பைப் பெறலாம்.
     இன்று ஒரு மணி நேரம் பேசுகின்றீர்? எதற்கையா பேசுகிறீர்? என்று கேட்டான்.
     ஐயா! பெரியவர்களைப் பெருமைப்படுத்திப் பேசி, அவர்களுடைய திருவடிகளைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்காக பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குத்தான் ஆசான் எனக்கு வழி தந்தார். அதற்குத்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
               
உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்
உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னான் ஐயன்
சட்டைமுனி முன் ஞானம் 100 – கவி எண் 55
                உரைப்பதற்கே வைத்திருகின்றான் இந்த வாய்ப்பை. நாங்கள் அறிந்த ரகசியத்தை மக்களிடம் சொல்லி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம்.
     இவ்வளவு ஆண்டுகள் நாங்கள் உப்பில்லா உணவை உண்டோம், தவ வாழ்க்கையை மேற்கொண்டோம். இவையெல்லாம் எங்களது லாபத்திற்காக அல்ல, நாடுமக்களுக்காகத்தான்.
உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்
உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னான் ஐயன்
சட்டைமுனி முன் ஞானம் 100 – கவி எண் 55
     ஆகவே, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களின் பெருமையைப் பேசி ஒவ்வொருவரையும் ஞானிகளின் திருவடியைப் பற்ற வைக்க வேண்டும்.
     முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
      சார்புஇலார்க்கு இல்லை நிலை.
திருக்குறள் – பெரியாரைத் துணைக்கோடல் – குறள் எண் 449
     ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால் திருவடி துணை இருக்க வேண்டும். திருவடியைப் பிடித்துக் கொண்டுதான் அங்கு போக வேண்டும்.
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 138
                பெரியோர்களான மகான் திருமூலதேவர், ஆசான் அகத்தியர் போன்ற மகான்களை பூஜை செய்து ஆசி பெற்றால்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம்.
இந்த சங்கத்தில் என்ன லாபம் பெற்றீர்? என்று கேட்டான்.
ஐயா, இன்றுவரை இந்த தேகத்தை தவறாகப் பயன்படுத்தி உணவு தந்தேன், வளர்த்தேன், உறங்க வைத்தேன், குளிப்பாட்டினேன் என்பதுதான் நான் அறிந்து கொண்ட உண்மை, லாபம் என்ன? சாப்பிடுவதையும், தூங்குவதையும் இதுநாள் வரை பெற்ற அனுபவம் என்று அறிந்து கொண்டேன், வேறொன்றும் அறியவில்லை. ஆனால் ஓங்காரக்குடிலுக்கு சென்றேன்.
“இந்த தேகம் அற்புத தேகம். இதை தக்கவாறு பயன்படுத்தினால், தேகத்தை திருகூத்தாக ஆக்கிக்கொள்ளலாம்” என்று ஆசான் சுட்டிக்காட்டினார்.
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்காகத்தான் ஓங்காரக்குடிலை சார்ந்திருக்கிறேன்.
ஆனால் நான் பெறுதற்கரிய ஒன்றைப் பெறுவதற்காக சென்று வந்து கொண்டிருக்கறேன். ஆசான் வழிகாட்டி இருக்கிறார், பின்பற்றி நடக்கிறேன். ஆசான் துணை கொண்டு வெற்றி காண விரும்புகிறேன்.
பல அன்பர்கள் இங்கே ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத்தான்  வந்திருக்கிறார்கள். ஏதோ நான்கு வார்த்தை நல்ல வார்த்தை பேசிக்கொண்டிருப்பதை காதால் கேட்டுப்போவதற்காக அல்ல. சொன்னதை கேட்டு கடைப்பிடிப்பதற்காகத்தான் வருகிறார்கள்.
ஆகவே, அன்பர்களுக்கு எங்கள் அனுபவத்தை சொல்லுகிறோம். ஆசான் பெருமையைப் பேசி அவரவர்களும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு பொருள் தோன்றுவதற்கு கண்டுபிடித்தவனுடையை அறிவு திறம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்தத் துறை இலக்கணம் இல்லாத ஒன்றாக இருப்பதனாலே, என் அனுபவத்தைச் சொல்கிறேன். அவரவர்களும் பின்பற்றி நடக்கலாம்.
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.                                                                                                                                                 திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
                நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றார் மகான் திருமூலதேவர். இந்த உலகமே நான் பெற்ற இன்பத்தை அடையவேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்றார்.
     ஐயோ இவ்வளவு நல்ல மனிதர். திடீரென்று எப்படிய்யா இது உதித்தது? என்று கேட்டானாம்.
      “அது ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்றார்.
    
ஓகோ! உடம்பைப்பற்றி அறிந்த மந்திரமா? என்றான்.
     நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றார். உலக மக்கள் எல்லாம் நான் பெற்ற இன்பத்தைப் பெற வேண்டும் என்றார். எப்படி?
     அது ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார். நான் உடம்பைப் பற்றி அறிந்து கொண்ட ரகசியம் என்றார்.
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.                
தான்பற்ற என்று சொல்லாமல்,பற்றப் பற்ற என்று சொன்னார். தலைப்படும் தானே என்றார். தலைப்படுதல் – முற்படுதல், முயற்சித்தல்.
இந்த உடம்பைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் இந்த ரகசியம் புலப்படும். உலக மக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இதை சொன்னார்.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.            
மகான் தாயுமானசுவாமிகள் – பராபரக்கண்ணி – கவி எண் 221
                பண்புகளை வளர்த்துக் கொள்ளலாம். ஒருவன் கடவுளை அடைய வேண்டுமென்றால் அதற்குரிய பண்புகள் வேண்டும்.
     என்ன பண்புகள் வேண்டும்?
     என்ன பண்புகளை கண்டுபிடித்தீர்? அதற்கு எந்த நூலை படிக்க வேண்டும்? என்று கேட்டான்.
     “அது அனுபவத்தால் வருவது” என்றார் தலைவன்.
     “அனுபவம் எப்படி ஐயா?”
     மகான் திருமூலதேவரை அழைத்து, “ஞானத்திற்குரிய அறிவும், பரிபக்குவமும் எனக்கு தாருங்கள்” என்று கேட்க வேண்டும்.
     “ஞானத்திற்குரிய அறிவும் பரிபக்குவமும் எது? பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத பேரறிவு. அடுத்து விகாரம் அற்ற தேகம். இரண்டும் வேண்டுமென்று ஆசானிடம் கேட்பான்.
     ஏ அப்பா! பெரிய விசயமாயிற்றே!
     ஒரு பயிற்சி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். நான் பொருளை விரும்பேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அது ஒரு சிறப்பறிவுதான்.
     நான் பொருளை விரும்பேன், நான் சேகரிக்க விரும்பமாட்டேன் என்பதே சிறப்பறிவுதான். தலைவனுடைய ஆசியினாலும் பொருளை விரும்பாத பண்பை பெறலாம்.
     “விகாரமற்று இருப்பேன்” என்றான்.
     “எப்படி பேச்சளவிலா?” என்பார் ஆசான்.
     உடம்பே அணு அணுவான விகாரம்தானே. இதில் என்ன விகாரமற்று இருப்பேன் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறாய்? மற்ற இடத்தில் கதை விட்டுக்கொண்டு இருக்கலாம். நாங்கள் உடற்கூறு தெரிந்தவர்கள். எங்களிடம் இப்படி கதை விட முடியாது.
     இந்த பரிபக்குவத்தை பெற ஆசானிடம் கேட்க வேண்டும். அதற்கு அனுபவத்தை பெற வேண்டும்.
     குணக்கேடு எப்படி இருக்கிறது? இந்த குணக்கேடு செயற்கையா? இயற்கையா?
     பொறாமை, சூது, வஞ்சனை, சினம் என பல்வேறு வகையான குணக்கேடுகள் என்னிடம் இருக்கிறது.
     அது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னமே பொறாமை, வஞ்சனை, சூது இதெல்லாம் உண்டு. திருக்குறளில் மகான் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்.
     அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
      இழுக்கா இயன்றது அறம்.
திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 35
                இந்த குணக்கேடெல்லாம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது. அதை நீக்கிக் கொண்டவன் மேல் நோக்கிப் போகிறான், கடவுள் ஆகிறான். இல்லையென்றால் அவன் கீழ் நோக்கிப் போகிறான்.
     குணப்பண்புகளை சொல்லி சொல்லிப் பார்த்தான். எல்லா அறிஞனும் சொன்னான், மனிதனுக்கு குணப்பண்புகள் எங்கேயிருந்து வந்தது? இவனுக்கா வந்தது? அது முன்பே வந்து விட்டது.
     பொறாமை, ஆசை, கடுஞ்சொற்கள், கோபம் என்ற நான்கும் மனிதனை மாசுபடுத்தக்கூடியவை என்று சொல்லிவிட்டார். பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த குணக்கேடு இருக்கிறது.
     இதை எப்படி வெல்வது? என்று கேட்டான். தலைவன் ஆசியால்தான் இதை வெல்ல முடியும். ஒரு மனிதனுக்கு குணக்கேடு வந்ததையும், அதற்குரிய காரணத்தையும் அறிந்தவர்கள் ஞானிகள்.
     “நீங்கள் வந்த நோக்கம் என்ன?” என்றான்.
     “மக்களை பக்குவப்படுத்த வேண்டும்” என்பதற்காகத்தான் வந்திருக்கிறோம்.
நாம் பக்குவவாதியாக வேண்டும். நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பக்குவபடுத்துவதற்கு முயற்சி வேண்டும்.
இதற்கு “திருவடி துணையைத்தவிர வேறு வழியே இல்லை” என்றார் ஆசான்.
ஆசானென்றால் மகான் திருவள்ளுவராகவும், மகான் அருணகிரிநாதராகவும், மகான் ராமலிங்கசுவாமிகளாகவும், மகான் மாணிக்கவாசகராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஞானிகளை வணங்கினால், குணக்கேடுகள் நீங்கி, குணப்பண்புகள் வரும்.
ஞானத்திற்கு என்ன துணை?
    
குணப்பண்புகள்தான் துணை.  அங்கே குணக்கேடுகள் இருக்கவே முடியாது.
குணக்கேடுகளை வைத்துக் கொண்டு கடவுள் ஆக முடியாது. குணக்கேடு இல்லாதது போல் நடித்துக் கொண்டிருக்கலாம். காவி கட்டினால் மட்டும் குணப்பண்பு வந்து விடுமா? இல்லை, பட்டினி கிடந்தால் குணப்பண்பு வருமா?
அசைவத்தால், சைவத்தால், கணிவர்கத்தால் அல்லது வேறு வகையால் குணப்பண்பு வருமா? என்று கேட்டான்.
தொடர்பயிற்சிதான் வேண்டும். தவத்திற்குரிய அறிவும், பரிபக்குவமும் நீர் தந்தருள வேண்டுமென்று ஆசான் அகத்தியரை வணங்கி கேட்க வேண்டும். அப்படி கேட்டு ஆசானிடம் குணப்பன்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் காலம்காலமாக தவம் செய்து பெற்ற பேரனுபவம், தவவலிமை, வைராக்கியம் உள்ளவர்கள்.
உயர்ந்த பொருளை நான் விரும்ப மாட்டேன் என்பது வைராக்கியம்.
எந்த உணவுப்பொருளையும் நான் தொடமாட்டேன் என்பது வைராக்கியம்.
அதற்கு ஆசான் ஆசி வேண்டுமல்லவா? தவத்திற்குரிய அறிவும், பரிபக்குவமும் வேண்டும். அதற்கேற்ற உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இதுதான் உணவு என்றால், விதிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு தன்னை கடைத்தேற்றிக் கொள்வதுதான் வைராக்கியம். திருவருள் துணை இல்லாமல் இது முடியாது. திருவருள் துணை கொண்டுதான் அதை சாதிக்க முடியும்.
எங்களுடைய அனுபவத்தைச் சொல்லியிருக்கிறோம். நீங்களெல்லாம் இதை கேட்டு முன்னேற வேண்டுமென்று விரும்புகிறேன்.
19.02.1998 அன்று முதல் கனி உணவை மேற்கொள்ள வேண்டுமென்று ஆசான் சொன்னார். காலை 6 மணிக்கு சிறிது பழமும், மாலை 6 மணிக்கு சிறிது பழமும் சாப்பிட்டோம். இப்படி 110 நாட்கள் வெறும் கனிகளை உணவாக உண்டு வந்தோம். பன்னிரண்டு மணி நேரம் வெறும் பட்டினி கிடந்து வந்தோம். இந்த கனி உணவு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் வரை இருக்கலாம் அல்லது படிப்படியாக மாற்றம் வரலாம்.
ஏதோ ஒரு மாற்று இருக்குமா? என்று ஏங்கி இருந்தேன். ஆசான் மனமகிழ்ந்து அருள் செய்தார். நாழிகைக்கு ஒரு முறை மா, பலா, கொய்யா சாப்பிடு என்று சொன்னார்.
“ஐயா! கொய்யாப்பழம் போதும்” என்று சொன்னோம். சாப்பிட்டதற்கு அப்புறம்தான் முடிவெடுத்தோம். இது போதும் என்று. ஆக மாம்பழம், பலாப்பழம் சாப்பிடுகிறோம்.
ஆகவே, நான்கு மாதங்கள் கடந்து ஓடி விட்டன. இன்னும் எத்தனை மாதங்கள் என்று எனக்குத் தேராது. கடவுளுக்குத் தான் தெரியும்.
சித்திரை ஆனி சிறந்திடு வைகாசி
அத்திரை சரக்கில் அளந்தது லயப்பட
முத்திரை குருவாம் மூதண்ட வேதையாம்
பத்திர குருவிற்கு பாங்கான காலம்.
    சித்தர் பாடல்
    
சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதமும் ஒரு பகுதி. அடுத்து ஒரு மூன்று மாதம் இருக்கிறது. அந்த மூன்று மாதமும் இதே உணவாக இருக்கலாம் அல்லது மாற்று உணவு வரலாம்.
எப்படி இருந்தாலும் தலைவன் சொன்ன உணவைத்தான் நான் சாப்பிட்டாக வேண்டும். இல்லையென்றால் அங்கே போகும் பாதை சரிப்படாது. அவைகளை சாப்பிட்டால் ஆக்கைக்கு நல்லது. ஆக்கை என்றால் உடம்பு.
இந்த உணவை சாப்பிட்டால் தவத்திற்கு நல்லது என்றால் அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். அதை மறுபரிசீலனை செய்யக் கூடாது. முருங்கம்பிஞ்சு, பாகற்காய், வெண்டைக்காய் சாப்பிடலாம் என்றால் அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். பரங்கிக்காய் சாப்பிடலாமா? என்று கேட்கக்கூடாது.
“சாப்பிட்டால் சாப்பிட்டுப்போ!” என்று சொல்லிவிடுவார் ஆசான்.
“பேசிக்கொண்டிருக்க நேரம் ஏது?” என்பார். இது சாப்பிட்டால் நல்லது. அவ்வளவுதான் என்று சொல்லிவிடுவார்.
“சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாமா? நீர் சொல்லும்போது உப்பை நீக்கு என்று சொன்னாயே? சர்க்கரை சேர்த்து உப்பை நீக்கு” என்று ஏன் சொல்லக் கூடாது? என்றால், “உன் இஷ்டம், நீ ஏதோ சாப்பிட்டுப்போ” என்று சொல்வார். அவர்கள் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு வைத்து கதை வைத்துக் கொண்டிருக்க நேரம் இருக்காது.
ஆகவே, பெரியவர்களுக்கு இப்படி பேசினால் பிடிக்காது.
“சொன்னதை செய். போ!” என்று சொல்லி விடுவார்கள். சொன்னதை செய் என்று சொல்லிய பிறகு பேச்சே இருக்காது. நாமும் வேறு பேச்சே பேசக்கூடாது.
“செய்! இல்லை சாவு” என்று சொல்வார். ஆகவே, இந்தத் துறை அப்பேர்ப்பட்ட கடினமான ஒரு துறை. சொன்னதைச் செய்! இல்லாவிட்டால் போ! என்று சொல்வார்.
கோதுமைக்கஞ்சி சாப்பிடச் சொன்னீரே, அதில் உப்பு போடக்கூடாது என்றீர். சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாமா? என்றால் அது உன் இஷ்டமென்று சொல்லிவிடுவார்.
ஏன் என்னுடைய இஷ்டம் என்கிறீர்கள்?
“நான் உனக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். உன்னிடம் விளக்கம் சொல்ல என்ன அவசியம்?” என்று சொல்வார்.
“இப்படிச் செய்தால் நல்லது” என்பார் ஆசான்.
ஆசான் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆசானுடைய ஆசியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஐயா! நீர் சொன்ன கருத்துகளையும் தவத்திற்குரிய உணவையும், தவத்திற்கு விதிக்கப்பட்டதையும் நான் சிரம் மீது கொண்டு நடக்க நீர் எனக்கு அருள் செய வேண்டுமென்று ஆசானிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். ஆசான் கிடைத்திருக்கிறார். ஒரு பொருள் தோன்றுவதற்கு ஒரு தலைவன் வேண்டும். அந்த பொருளைத் தோற்றுவிப்பதற்கு ஒரு ஆசான் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஞானத்துறைக்கு மட்டும் ஆசான் இல்லை. நாங்கள் அனுபவப்பட்டவர்கள் சொல்கிறோம். எங்களை அனுபூதிமான்கள் என்று சொல்வார்கள்.
நாங்கள் எங்கள் அனுபவத்தைச் சொல்வோம். இப்படி இருக்கிறது இந்தத் துறை. திருவருள் துணை இல்லாமல் ஒருவன் உடம்பை திருக்கூத்து ஆக்கிக் கொள்ள முடியாது. இல்லையென்றால் தெருக்கூத்து போன்று பார்த்துக் கொண்டுத்தான் இருக்கலாம்.
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
திருமந்திரம் – பிண்டலிங்கம் – கவி எண் 1726
               
இந்த உடம்பை திருக்கூத்து ஆக்கிக் கொள்வது என்பது சின்ன விஷயம் அல்ல. சிறப்பறிவு உள்ள மக்கள்தான் அதை செய்து கொள்வார்கள். அந்த வாய்ப்பு இருந்தும் மக்கள் அந்த லட்சியத்தை அடையாமல் தடுமாறுவதற்கு என்ன காரணம்?
வினை சூழ்ந்து கொண்டால் விபரீத புத்தி வந்து விடும், சொன்னதைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். இந்தத் துறையில் மறுபரிசீலனைக்கு இடமில்லைல். சொன்னதைச் செய்து விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
“நீர் என்ன சொல்கிறீரோ அதை செய்கிறேன் ஐயா! எனக்கு என்ன அறிவு இருக்கிறது” என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, “சொல்லுங்கள் நானும் சிந்திக்கிறேன் என்றால், “நீ சிந்தித்துக் கொண்டே இரு!” என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். பெரியவர்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். “நேரமில்லை” என்று சொல்லிவிடுவார்கள்.
நாங்கள் காலை எழும்போதே ஓம் அகத்திசாய நம! என்று ஐந்து நிமிடம் நாமத்தைச் சொல்லி, “அடியேனுக்கு தவம் சித்திக்க வேண்டும். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் நீர் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொள்வோம். அப்படி கேட்டு வந்தால் நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள்.
இறந்து பிறப்பதே வேலை என்றால், இனி பிறவாதிருப்பதற்கு வழி ஒன்று இருக்கிறது அல்லவா?
பிறவாதிருக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. இனி நான் பிறக்க மாட்டேன்.
சில பேர் இனி நான் சாகமாட்டேன். எனக்கு இனி பிறவி இல்லை என்பான்.
“ஆமாம், இவன் இஷ்டத்திற்கு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று இவர் இங்கே கண்டு பிடித்து வைத்திருக்கிறார்” என்று நினைத்து அப்படியே அவனை பார்ப்போம்.
யாரும் இதை ஒன்றும் செய்ய முடியாது. அது இஷ்டத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர் இஷ்டத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை. அது ஒரு சட்டம். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது அவனுக்கே தெரியாது, சமுதாயத்திற்கு தெரியாது.
எனக்கு பிறவி இல்லையென்று ஜோசியர் சொன்னார் என்றான்.
முதலில் ஜோசியர் உயிரோடு இருக்கானா என்று விசாரித்துப் பார் என்றேன். ஜோசியரை பார்த்துவிட்டு வந்து, “ஆள் இல்லை” என்று என்னிடம் சொன்னான்.
“அவனுக்கு என்ன ஆனதோ, அப்படித்தான் உன் கதியும் இருக்கும்” என்றேன்.
“உனக்கு ஜோசியம் சொன்னான் அல்லவா? அவன் ஊருக்குப் போய்விட்டான். நீ எப்போது போகப்போகிறாய்?” என்றேன்.
அடிப்படை எப்படி இருக்கிறது, சமுதாயத்திலே இந்த தத்துவம் பரவ வேண்டும். உண்மை ஆன்மிகம் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.
உண்மை ஆன்மீகம் எது?
ஒன்றே ஒன்று தானம், அடுத்து தியானம். மற்றதை சிந்திக்காதே.
இன்று நீ என்ன செய்தாய்?
இன்று நான் பிற உயிருக்கு மகிழ்ச்சியானதைச் செய்தேன்.
சோறு போட்ட மனைவியிடம் “நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டேன்.
“தாய் தந்தைக்கு சாப்பாடு போட்டாயா?” என்று கேட்டேன்.
“பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டாய?” என்று கேட்டேன். இதுதான் தானம்.
வீட்டை விட்டு வெளியே வருகிறான். வெளியே திண்ணையில் ஒருவன் இருக்கிறான். முடமான தம்பி. “ஏம்மா, இவனுக்கு சாப்பாடு போட்டாயா?” என்று கேட்கிறான். அது தானம்.
திரும்பி பார்க்கிறான், வாசலில் வேலை செய்பவன் நிற்கிறான். “ஏம்மா, இவனுக்கு சாப்பாடு போட்டாயா? நேற்றே இவன் ரொம்ப சோர்வாக இருந்தானே” என்று கேட்டான். இவன் தானம் செய்து விட்டான். காலையிலேயே தானம் செய்து விட்டான்.
சாக்கடை தள்ளுபவன் அங்கே நிற்கிறான். “அவனுக்கு சாப்பாடு போட்டு அனுப்பு” என்கிறான். இதுதான் தானம்.
அம்மா அப்பாவை “சாப்பிட்டீர்களா?” என்று கேட்பதும், “ஏன் உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறது” என்று மனைவியிடம் கேட்பதும் தானம்தான். பிள்ளைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தால் தானம்.
பள்ளிக் கூடத்திற்கு போகிறான். தான் கற்ற கல்வியை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறான். அது ஒரு வகை தானம். தான் கற்ற கல்வியை மாணவர்களுக்கு மனதில் பதியுமாறு சொல்லித்தருகிறான். இப்படி தான தமம் செய்கிறான்.
அதில் ஒரு மாணவன் பசியோடு இருக்கிறான். “ஏன் வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லையா?” என்று கேட்டான்.
“ஆமாம் ஐயா, வீட்டில் ரொம்ப கஷ்டமான சூழ்நிலை”
“எதிர் கடைக்கு சென்று வெளியில் சொல்லாமல் போய் சாப்பிட்டு வா” என்று பணம் கொடுத்தான். அது ஒரு வகை தானம்.
கல்வி தானம் செய்தான்.
வீட்டில் மனைவியிடம் சாப்பிட்டாயா என்றான்.
பிள்ளைகளுக்கு, தாய் தந்தைக்கு, முடமான தம்பிக்கு, சாக்கடை தள்ளுபவன் என்று சாப்பாடு கொடுக்க சொன்னான்.
“வரும் வழியில் ஐயா! ஏதாவது கொடுங்கள்” என்று ஒருவன் கேட்டான். தனது பாக்கெட்டில் பணம் இருக்கிறதா என்று பார்த்தான். உடனே ஹோட்டலுக்குப் போனான் நான்கு இட்லி வாங்கி கொடுத்து விட்டு வந்தான். இது தானம்.
அவன் அறிவு பயன்படுகிறது. இது தானம். கல்வி தானம். பொருளையும் தானம் செய்கிறான்.
உடம்பாலும், உணர்வாலும் தானம் செய்கிறான்.
காலையில் பத்து நிமிடம் ஆசான் அகத்தியரை பூஜை செய்தான்.
“அகத்தீஸ்வரா! அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். நான் மனைவி மக்களோடு இருந்து கொண்டு இருக்கிறேன். வேறு யாரும் எனக்கு துணை இல்லை. நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஆசானிடம் கேட்டு வர வேண்டும்.
இப்படி தானமும், தியானமும் செய்து கொண்டிருக்கிறான். இப்படித்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டு போகவேண்டும்.
“எத்தனை ஆண்டு இப்படியே போக வேண்டும்?” என்று கேட்டான்.
போய்க் கொண்டே இருக்க வேண்டியதான். வேறென்ன செய்ய முடியும்? அது நெடும் பாதை என்றார்.
இப்படியெல்லாம் மனிதவர்க்கம் முன்னேறுவதற்கு நாங்கள் வகுத்துத் தருகின்ற பாதையை பின்பற்றி நடக்க வேண்டும். மறுபரிசீலனை செய்வதற்கு இங்கு நேரமில்லை. மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
மனித வர்க்கம் இப்படித்தான் முன்னேற வேண்டும், ஆண்டுகள் பல கடக்கலாம்.
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
திருமந்திரம் – இளமை நிலையாமை – கவி எண் 176
ஆண்டு பல கடந்திருக்கிறது. அறுபத்தைந்து வயதாகிறது. என்ன செய்வது? என்று கேட்டான்? இவனுக்கே தெரியாது.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
திருமந்திரம் – அறிவுதயம் – கவி எண் 2355
    
அவன் தன்னை அறிய வேண்டும். அவன் கடந்த வாழ்க்கை என்ன? இனி நடந்த வாழ்க்கை என்ன? என்று பார்க்க வேண்டும்.
இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆசானைக் கேட்க வேண்டும்.
நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும் ஐயா! கடந்த காலத்தில் கிடைத்த அனுபவம் இருக்கிறது. இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எனக்கே தெரியவில்லை. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஆசானைக் கேட்டு வருபவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
ஆசானால் விதிக்கப்பட்ட உணவை உண்டும், ஆசானால் வகுக்கப்பட்ட பூஜாவிதியை செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இன்று நாம் பேசி இருக்கிறோம்.
சுவடி மூலமாக வந்த கருத்தை அன்பர் படித்தார். அதற்கு விளக்கம் தந்திருக்கிறோம்.
இனி நாட்களை வீணடிக்க முடியாது. நாட்களை வீண் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.
பொருள் தோன்றுவதற்குரிய காரணத்தைப் பற்றி சில கருத்துகளை சொல்லி இருக்கிறேன். அவரவர்கள் முடிந்த அளவிற்கு தானமும், தியானமும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேறிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
ஓம் அகத்திசாய நம
    
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171985
Visit Today : 227
Total Visit : 171985

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories