விருந்தே வேள்வியாகும்


விருந்தே வேள்வியாகும்
ஓம் அகத்திசாய நம
     அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்.
     “ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ” என்ற நாமத்தைச் சொல்லி ஆசான் சுப்பிரமணியரை வணங்கி ஆசி பெற வேண்டும். ஆசான் சுப்பிரமணியரை வணங்கி வந்தால், என்னிடமிருந்த பொறாமை, ஆசை போன்ற குணக்கேடுகளை ஆசான் சுப்பிரமணியர் நீக்கினார்.
     ஆசான் ஞானபண்டிதரின் ஆசியைப் பெற்றால்தான், மகான் அகத்தீசருக்கு அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற தீய குணங்கள் நீங்கியது.
     அழுக்காறு – பொறாமை, அவா – பேராசை, வெகுளி – சினம், வன்சொற்கள் – எப்போதும் கடுமையாக பேசுதல்.
     இந்த நான்கு குணக்கேடுகளும் ஆசான் சுப்பிரமணிருடைய ஆசியால், மகான் அகத்தீசருக்கு நீங்கியது. இந்த நான்கு தீய குணங்கள் நீங்கியதால், மகான் அகத்தீசர் ஞானியானார்.
     இந்த நான்கு தீயகுணங்களையும் எப்படி நீங்குவது? நாம் ஆசான் அகத்தீசரை வணங்குகிறோம். மகான் அகத்தீசர், ஆசான் ஞானபண்டிதரின் ஆசியைப் பெற்றதால், இந்த நான்கு குணக்கேடுகளும் நீங்கி கடவுளானார். இந்த நான்கு குனக்கேடும் உள்ளவர்களுக்கு கடவுளின் ஆசி இருக்காது.
     பொறாமை, பேராசை, கோபம், வன்சொற்கள் ஆகிய இந்த நான்கு குணக்கேடுகளை நீக்குவதற்கு ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். “ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபம் செய்ய வேண்டும். நாங்களும் அப்படித்தான் நாமஜெபம் செய்திருக்கிறோம். ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி, ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி, ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி” என்று ஞானிகளின் நாமத்தை சொல்ல சொல்ல, நம்மிடமுள்ள குணக்கேடுகள் நீங்கும்.
     நம்மிடமுள்ள குணப்பண்புகளை வளர்த்துக்கொண்டு பூஜை செய்யலாமா? என்று கேட்டார்கள். எல்லா வகையான குணப்பன்புகளையும் வளர்த்துக் கொண்டுதான் ஞானிகள் திருவடியை போஊஜை செய்ய வேண்டும்னென்று நினைத்தால் நாம் நூறு  ஜென்மம் எடுத்தாலும், ஞானிகளின் திருவடியைப் பற்றவே முடியாது. “இந்த மனம் செம்மையாவது எப்போது, நாம் உய்வது எப்போது” என்பார்கள் ஞானிகள்.
     எல்லா வகையான குணப்பண்புகளையும் பெற்றுக் கொண்டுதான் ஞானிகளின் திருவடியை பூஜை செய்ய வேண்டுமென்று நினைத்தால், அதற்கு நூறு ஜென்மம் ஆகும். நாம் ஞானிகள் மீது கொண்டுள்ள பக்தி விசுவாசத்தின் மூலமாக நம்முடைய குணக்கேடுகளை நீக்கலாம். ஞானிகளின் திருவடியை பூஜை செய்வதற்கு காலை எழுந்தவுடன், “ஓம் அகத்தீசாய நம” என்று பன்னிரண்டு முறை சொல்ல வேண்டும். ஆசான் அகத்தீசர் குணக்கடல், குணப்பண்பாளர், நிர்க்குணமானவர். ஞானிகள் சாந்தமே வடிவானவர்கள், அருளே வடிவான மக்கள், ஆற்றல் நிறைந்த மக்கள், அன்பே வடிவான மக்கள். இப்படிப்பட்ட ஞானிகளின் நாமத்தை சொல்லி வணங்க வணங்கதான் நம்மிடமுள்ள பலகீனங்கள் நமக்கு தெரிந்து. அதை நீக்கி, குணப்பன்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
     ஆசான் திருமூலதேவர் மிகவும் வல்லமை உள்ள ஆசான். “திருமூலதேவா” என்றால் அண்டம் கிடுகிடுவென்று நடுங்கும், எமன் நடுங்குவான். எமனே நடுங்குவான் என்றால், நீங்கள் ஆசான் திருமூலதேவரின் வல்லமையை புரிந்து கொள்ள வேண்டும். வருங்காலம் ஞானசித்தர் காலம். ஆசான் நந்தீசர், ஆசான் அகத்தீசர், அசான் திருமூலதேவர், ஆசான் காலாங்கிநாதர், ஆசான் போகர், ஆசான் கருவூர்முனிவர் போன்ற மிகப்பெரிய மகான்களெல்லாம் இறங்கி சேவை செய்யப் போகிறார்கள்.
     ஆசான் திருமூலதேவர், முதலில் திருமந்திரத்தை 8000 பாடல்களாக இயற்றினார். இதுவே முதல் நூல். அடுத்ததாக 3000 பாடலை எழுதினார். அதில் ஒரு பாடலில் ஆசான் திருமூலர் சொல்வார்,
மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.
    திருமந்திரம் – திருவடிப்பேறு – கவி எண் 604
ஞானிகளின் திருவடியை தினமும் பற்ற வேண்டும். தினமும் ஞானிகளின் நாமத்தை, “ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம” என்று சொல்ல சொல்ல, இதுவே தூயநெறி என்பது நமக்குப் புரியும். நாம் போகின்ற பாதையைப் பற்றி அறியலாம். பேராசை உள்ளவனா, பொருள் பற்று உள்ளவனா, வஞ்சகம் உள்ளவனா, பிறரை ஏமாற்றுபவனா, இல்லை நன்றி மறந்தவனா, பிறருக்கு உதவி செய்பவனா என்பதையெல்லாம் நமக்கு ஞானிகள்தான் உணர்த்துவார்கள்.
      சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும், எந்தை பிரான்தன் இணையடி தானே என்பார். இணையடி என்றால் திருவடி என்று அர்த்தம். ஞானிகளின் திருவடியைப் பற்ற பற்றதான் நாம் போகின்ற பாதை தெளிவானதா, அதில் வஞ்சனை இருக்கின்றதா, பாவம் இருக்கின்றதா என்பது தெரியும். இல்லையென்றால் நமக்குத் தெரியவே தெரியாது. ஞானிகளை பூஜை செய்து, நல்ல சிந்தனையைப் பெறுவோம், பூஜை செய்வோம், உடல் ஆரோக்கியம் பெறுவோம், ஞானிகளை பூஜை செய்வோம், தன்னம்பிக்கையோடு வாழ்வோம்.
     பூஜை செய்தால்தான், நாம் செய்கின்ற செயல் நல்லதா அல்லது கெட்டதா என்பது புரியும். பூஜை என்கிற பெயரில் ஒருவன் இரண்டாயிரத்தி ஐந்நூறு மாடுகளை உயிர்வதை செய்து பலியிட்டுள்ளான் என்பதை கேள்விப்பட்டோம். ஏன் இப்படி உயிர்வதை செய்கிறாய்? என்று கேட்டால், கடவுளுடைய ஆசியைப் பெறுவதற்காக என்பான். ஆசான் இராமலிங்கசுவாமிகளும், ஆசான் மாணிக்கவாசகரும், ஆசான் தாயுமான சுவாமிகளும், ஆசான் அருணகிரிநாதரும், ஆசான் பட்டினத்தாரும் இப்படிப்பட்ட செயலை ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்ட செயலை செய்வதற்கு, கடவுளே சம்மதிக்க மாட்டார்.
     கடவுளின் ஆசியைப் பெறுவதற்காகவே ஆடு, கோழி வெட்டுவது குற்றம் என்று உணர்கின்ற அறிவை ஆசான்தான் தரவேண்டும், இல்லையென்றால் அந்த அறிவு நமக்கு வராது. நாம் ஞானிகளின் நாமத்தைச் சொல்ல வேண்டும். ஆசானிடம், அகத்தீசா எனக்கு நல்ல சிந்தனை வேண்டும், நல்ல அறிவு வேண்டும், அன்பு உணர்ச்சி வேண்டும், வறுமை இல்லாத வாழ்வு வேண்டும். குடும்பம் செழிக்க     வேண்டும், எங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், பிள்ளைகள் நல்லபடியாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமென்று ஞானிகளிடம் தொடர்ந்து கேட்க வேண்டும். இப்படியே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஞானிகளிடம் எதை கேட்கின்றோமோ, அவர்கள் அதை கொடுப்பார்கள். இதை மகான் மாணிக்கவாசகர் சொல்வார்,
      வேண்டத் தக்க தறிவோய்நீ
      வேண்ட முழுதுந் தருவோய்நீ.
    திருவாசகம் – குழைத்தபத்து – கவி எண் 6
ஆசான் வள்ளுவப்பெருமான் தனது குறளில் சொல்வார்
     வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
    திருக்குறள் – தவம் – குறள் எண் 265
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.
    திருஅருட்பா – ஆறாம் திருமுறை – பரசிவ வணக்கம்
மகான் இராமலிங்கசுவாமிகள் எல்லாம் செயல்கூடும் என்றார். ஆசான் திருவள்ளுவப் பெருமான், விரும்பியதெல்லாம் கைகூடும் என்பார்.
ஒருவன் வீடு கட்ட ஆரம்பிப்பான். அவனால் அந்த வீட்டை கட்டி முடிக்க முடியாது. சில பேர் வீட்டை கட்டி முடிப்பான், ஆனால் குடி போக முடியாது. அப்படியே புதிய வீட்டிற்கு குடி போனாலும் அவனுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடியாது. ஆனாலும் சிலபேர் அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்வார்கள். இப்படித்தான் உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி காரியங்களை தொடங்கியவர்கள் எத்தனை பேர், முடித்தவர்கள் எத்தனை பேர், மனநிறைவு கொண்டவர்கள் எத்தனை பேர். இதையெல்லாம் நீங்கள் பார்க்கவேண்டும். என்னுடைய பழக்கம், யார் யாரெல்லாம், அரைகுறையாக வீடு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். இவன் வீடு கட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் வீட்டை கட்டி முடிக்க முடியாமல் அப்படியே கிடக்கிறது. ஆனால் ஒருவன் கட்டிடத்தை கட்டியே முடித்து விட்டான். இவன் நன்றாக வீடு கட்டி, வீட்டில் குடியர் விட்டான்.
தொடங்கிய காரியத்தை முடிப்பதற்கு பணபலம் வேண்டுமா? ஆள்பலம் வேண்டுமா? கல்விபலம் வேண்டுமா? என்றால் இம்மூன்றுமே உதவாது. நீ பெரிய கல்வியாளன், ஆனால் உன்னால் ஏன் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க முடியவில்லை என்று கேட்டதற்கு, அவன் ஏனோ என்னால் முடியவில்லை என்றான். உன் அறிவையும், கல்வியையும் ஒரு ஓரத்தில் மூட்டைக் கட்டி வைத்துவிடு என்பார்கள் ஞானிகள். இதுவரையில் நீ செய்த புண்ணியத்தால், எடுத்துக்கொண்ட காரியத்தை வெற்றிகரமாய் முடித்திருக்கின்றாய். உன்னுடைய புண்ணியம் தீர்ந்து விட்டதால் காரியம் தடைபட்டு விட்டது. ஒருவன் எடுத்துக்கொண்ட காரியத்தை தடையில்லாமல் முடிக்க வேண்டுமென்றால் ஒன்று அருள் பலம் வேண்டும் அல்லது புண்ணிய பலம் வேண்டும் என்பார்கள் ஞானிகள்.
நம்முடைய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள் எல்லோரும் எடுத்துக்கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். என்ன காரணம்? அவர்களிடம் பெரிய ஆள்படை உள்ளதா? பணபலம் இருக்கிறதா? என்றால், இல்லை. அவர்களிடம் புண்ணியபலம் உள்ளது. அவர்கள் அன்னதானம் செய்வார்கள், இல்லாவிட்டால் அன்னதானத்திற்கு தொண்டு செய்வார்கள். புண்ணிய பலத்தையும், அருள் பலத்தையும் பெற்றிருக்கிறார்கள். எங்கள் சங்க அன்பர்கள் எடுத்துக்கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்கள். நாங்கள் 108 இலவச திருமணங்கள் என்று அறிவித்து 531 திருமணங்கள் நடத்தி வைத்தோம். இது எப்படி முடிந்தது? ஆள்பலம், உத்தியோகபலம், பதவி, பணபலம், ஆள்படை இவற்றைக் கொண்டா இதை செய்தோம். இல்லை புண்ணியத்தைக் கொண்டும், ஆசான் அகத்தீசரின் திருவடியைப் பற்றியும் வணங்கியும் இந்த செயலை நல்லபடியாக செய்தோம்.
வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு 508 ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் செய்ய வேண்டும். அதற்கு தேவையான பொருளதவி தடையில்லாது கிடைக்க நீங்கள்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் மூன்று மாதத்திற்கு முன்பே கேட்டு கேட்டு பெறுகிறோம். விளம்பரப்படுத்தியது 508 திருமணங்கள், ஆனால் செய்து வைத்தது 531 திருமணங்கள். இப்படிப்பட்ட செயல்களையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெரிய வல்லமை எப்படி வந்தது? எங்களிடம் ஆள்படை இல்லை, பணபலம் இல்லை. ஆசான் அகத்தீசரை பார்த்து, “எனது தாயே, தந்தையே நீங்கள்தான் அருள் செய்ய வேண்டும்” என்றோம். ஆசான் அகத்தீசரை தாய் என்றுதான் நாங்கள் அழைப்போம். ஆசான் அகத்தீசரை வணங்கி வணங்கி எல்லா காரியத்தையும் செய்கிறோம். இப்படி ஆசான் அகத்தீசரை வணங்கியதால், காரியங்கள் சிறப்பாக நடைப்பெருகிறது.
நமது சங்கத்தில் தினமும் ஐந்தாயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். தினமும் ஆயிரம் பேருக்கு கம்மஞ்சோறு, நீர்மோர் கொடுக்கிறோம்.  ஐந்தாயிரம் பேருக்கு இலவச குடிநீர் கொடுக்கிறோம். தினமும் பத்தாயிரம் பேர் தடியில்லாமல் பயனடைகிறார்கள். கதிரவன் தோன்றுவதற்கு தாமதமானாலும் ஆகலாம். ஆனால் தினமும் குடில் காரியம் தடையில்லாமல் நடக்கும்.
நாங்கள் குடில் தொண்டனை மதிக்க கற்றுக் கொண்டோம். குடில் தொண்டர்கள் நீடு வாழ வேண்டுமென்று நாங்கள் வாழ்த்துவோம். ஆசான் ஞானபண்டிதரும், மகான் திருமூலதேவரும், ஆசான் அகத்தீசரும் நடமாடுகின்ற இடம் இந்த ஓங்காரகுடில். நமக்கு ஞானிகளுடைய ஆசி இருக்கிறது. இங்கே தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை பெரும் பாக்கியமாக தொண்டர்கள் கருதுவார்கள். அவர்கள் அப்படி கருதினாலும் கருதாவிட்டாலும் எங்கள் ஆசி அவர்களுக்கு உண்டு. இங்கு எல்லா காரியங்களும் ஞானிகள் ஆசியோடும், தொண்டர்கள் உதவியோடும் இங்கே நடந்து வருகிறது. மேலும் தொண்டர்களுக்கு ஞானிகள் ஆசி வழங்குகிறார்கள்.
வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரத்தெட்டு இலவச திருமணங்கள் செய்து வைக்க உள்ளோம். இது சின்ன விசயமல்ல. ஒரு திருமணம் செய்வதற்கே ஒரு ஆண்டு முழுவதும் சிந்தித்து, அப்படி சிந்தித்து செய்தாலும் எடுத்துக்கொண்ட காரியம் தடைபட்டு போகின்ற இந்த காலத்தில், ஆயிரத்தெட்டு திருமணம் ஞானிகள் ஆசி கொண்டு தடையின்றி செய்வோம்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு நீங்கள் துணையாகயிருந்து, எங்களை நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தினால், அந்த வாழ்த்து எங்களுக்கு துணையாக இருக்கும். நீங்கள் எங்களை வாழ்த்துகிறீர்கள், உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும். ஆசான் அகத்தீசர் ஆசி வேண்டும். ஆசான் திருமூலதேவர் ஆசி வேண்டும். ஆசான் அருனரகிரினாதர் ஆசி வேண்டும். உலகத்திற்கே முதுபெரும் தலைவன் ஆசான் சுப்பிரமணியர் ஆசி வேண்டும்.
முருகா, ஞானபண்டிதா, ஆறுமுகப்பெருமான் என்று முருகன் நாமத்தை ஒருவன் சொன்னால், அவன் முழு வெற்றி பெறுவான். ஆகவே எல்லா செயல்களுக்கும் ஆசான் ஆசி வேண்டும். அவர் ஆசி எங்களுக்கு இருக்கிறது. ஆகவே நீங்கள் எல்லாம் எங்களை வாழ்த்த வேண்டும். நாங்களும் அறப்பணிகள் செம்மையாக நடக்க ஆசி வேண்டும் என்று ஆசானிடம் கேட்டுக் கொள்கிறோம். ஞானிகள் ஆசியும் நமக்கு உள்ளது.
ஆயிரத்தெட்டு இலவச திருமணம் இங்கு செய்வதற்கு ஞானிகள் ஆசியும், உங்கள் ஆசியும் வேண்டும். அதற்கு நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். இங்கு வந்து பூஜையில் கலந்து கொண்ட உங்களுக்கு ஞானிகள் ஆசி இருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளும் காரியம் எதுவாக இருந்தாலும் சரி, தடைபடாமல் நடப்பதற்கு ஞானிகள் ஆசி உண்டு.
நீங்கள் மேற்கொள்கின்ற காரியங்கள் தடைபடாமல் நடப்பதற்காக, மற்ற சிறு தெய்வங்களை நாடி செல்லாதீர்கள். அங்கே சென்று ஆடு, கோழியை வெட்டாதீர்கள். அப்படி செய்து நீங்கள் எதையும் பெற முடியாது. அந்த இடத்தில் ஆடு, கோழிகளை அறுத்து அறுத்து, உயிர்களை துடிக்க துடிக்க, பலியிடுவார்கள். அப்படி செய்வதால் அங்கே அருள் பலம் இல்லாமல் போகும். இது யாருக்கும் தெரியாது. எங்களுக்கு தெரியும். ஞானிகளுக்கும் தெரியும். மகான் இராமலிங்கசுவாமிகள் தனது பாடலில் சொல்வார்,
நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிக் குக்குடங்கள் பலிகடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகாலத்தும் பயந்தேன் .
திருஅருட்பா ஆறாம் திருமுறை – பிள்ளைப்பெரு விண்ணப்பம் – கவி எண் 275
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகாலத்தும் பயந்தேன் – இப்படி தன் உள்ளம் நடுங்கியது என்று மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்.
ஓங்காரகுடிலில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. என்னவென்று கேட்டால், நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும் என்போம். வருகின்ற நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் வாழ்த்த வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொண்ட மக்களுக்கு ஞானிகளின் ஆசி இருக்கிறது. நீங்கள் எல்லாம் ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி பூஜை செய்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ஞானிகள் ஆசி கிடைக்கும். தீட்டு என்று சொல்வதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். பெண்களாகிய நீங்கள் நம்ப வேண்டிய தேவையில்லை.
பெண்களை மதிக்க வேண்டும். ஆனால் இந்த சமுதாயத்தில் இப்படியில்லை. என்னுடைய வயதிற்கு ஒப்பான பெண்களை சகோதரிகளாகவும், மேலானவர்களை தாயாகவும், சிறு வயது பெண்களை எனது பிள்ளைகளாகவும் பார்க்கின்ற தகுதி எனக்கு உண்டு.
“ஓம் அகத்தீசாய நம” என்று பன்னிரண்டு முறை சொல்லி பூஜை செய்யுங்கள். இப்படி பன்னிரண்டு முறை சொல்லி முடித்தவுடன், முதல் வேண்டுகோளாக ஆசான் அகத்தீசரிடம், என்னை நான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டும். பிறகு நான் பேசும் போது இனிமையாக பேச வேண்டும், எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும், பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம் அமைய வேண்டும், பண்புள்ள கணவனாக அமைய வேண்டும், சொந்த வீடு வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும்.
பெண்களுக்கு ஞானம் உண்டாக வேண்டும் என்று ஞானிகள் சொல்லியுள்ளார்கள். பெண்களும் ஞானியாவார்கள். வருங்காலம் ஞான சித்தர்காலம். ஞானிகள் ஆசி கிடைக்க வேண்டும். உங்களுக்கும் ஞானம் சித்திக்கும். நீங்கள் எல்லோரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்யும் போது எங்களுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று பெண்களாகிய நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு யாரும் ஞானத்தைப் பற்றி சொல்வதில்லை. ஆனால் இந்த சங்கம் மட்டும் அவர்களுக்கு சொல்லும்.
ஞானம் என்பது தன்னை பற்றி அறியக்கூடிய அறிவுதான். அப்படி அறிவதற்கு ஆசான் ஆசியிருக்க வேண்டும். இங்க பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜையும், நித்தியமாக மகேஷ்வர பூஜையும் நடந்து வருகிறது. மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு ஞானிகளுடைய ஆசியை பெறுகிறார்கள்.
நித்தியமும் மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. மகேஸ்வர பூஜை என்றால் என்ன? மகேஸ்வர பூஜை என்றால் எரிகிற கும்பிக்கு (வயிற்றுக்கு) உணவு தருவதுதான். எத்தனை பெரியவனாக இருந்தாலும் சரி, அவன் ஈரேழு உலகமும் ஆட்சி செய்பவனாக இருந்தாலும் சரி, அவனுக்கும் பசி வரும். பசி வந்தால் அவன் சாப்பிடத்தான் வேண்டும். ஆண்டி முதல் அரசன் வரை சாப்பிட்டு பசியாற வேண்டும்.
இங்கே மகேஸ்வர பூஜை நடக்கின்றது. நித்தமும் பசியாறுகிறார்கள். மற்ற இடத்தில் எல்லாம் இப்படி இருக்க முடியாது. இங்கே தினமும் மகேஸ்வர பூஜை நடக்கிறது. இப்படி பேசுவது தற்பெருமை இல்லை. நான் செய்கிறேன் என்று சொல்வதுதான் தற்பெருமை. நாங்கள் செய்கிறோம், எங்கள் திறமையை பாருங்கள், எங்களுடைய செயல்பாட்டை பாருங்கள் என்பது தற்பெருமை அல்ல. நாங்கள் செய்யக்கூடிய செயலை உங்களுக்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
எந்த செயலையும் அவரவர்கள் புண்ணியம் இருக்கும் வரையில் சிறப்பாக செய்வார்கள். புண்ணியம் தீர்ந்து போனால், டீசல் இல்லாத வண்டி எப்படி நின்று விடுமோ, அதுபோல் செயல்கள் அனைத்தும் நின்றுவிடும். ஆனால் நாம் இந்த செயல்களை, இருபத்தொரு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இப்படி செய்வதில் ஒரு மர்மம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி ஒன்றுமில்லை, ஆசான் அகத்தீசரை, ஆசான் நந்தீசரை, ஆசான் திருமூலதேவரை, ஆசான் இராமலிங்கசுவாமிகளை, அசான் அருணகிரிநாதரை தினமும் வணங்கி, பூஜை செய்கிறோம். நித்திய அறப்பணிகளும் தர்மகாரியங்களும் தடைபடாது நடக்க நீங்கள் அருள் செய்ய வேண்டுமென்று அவர்களிடம் பூஜையில் கேட்கிறோம்.
நாங்கள் செய்கின்ற தர்ம காரியங்கள் பஞ்சபராரிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். நித்தமும் அன்னதானம் செய்கிறோம். ஆக, பிறர் நலனை மையமாக வைத்து செயல்படுகிறோம். பயனுள்ள வாழ்க்கை அல்லது ஆன்மீகம் எது? வெறும் லைட் அலங்காரம், பந்தல் அலங்காரம், யாக சாலை பூஜை இவைகளெல்லாம் ஆன்மீகமாக இருக்க முடியாது.
யாகம் வளர்ப்பது எங்கள் வேலையில்லை. ஒரே வளர்ப்பு நித்தம் நித்தம் நல்ல சிந்தனையை வளர்க்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும் என்ற ஒரே சிந்தனையைதான் வேள்வி போல் வளர்க்கிறோம். அதுதான் எங்கள் வேள்வி.
எங்களுடைய வேள்வி எது என்று கேட்டால் நித்தம் நித்தம் மக்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற சிறப்பறிவு எங்களிடம் இருக்கிறது அல்லவா, அப்படிப்பட்ட எண்ணம் வளர்கின்றது அல்லவா, அதுதான் வேள்வி. அப்படிப்பட்ட எண்ணம், ஒரு செயல் நல்லபடி நடக்க வேண்டுமென்ற சிந்தனையைத்தான் வேள்வி என்று சொல்லுவார்கள். ஆசான் வள்ளுவப்பெருமான் சொல்வார்,
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
    திருக்குறள் – விருந்தோம்பல் – குறள் எண் 88
மகான் திருவள்ளுவர் விருந்தே வேள்வி என்பார். தினம் தினமும் விருந்தை போற்றுவதே வேள்வி என்று கண்டவர் ஆசான் வள்ளுவப்பெருமான்.
இங்கு எல்லா செயல்களும் நல்லபடியாக நடக்கிறது. இந்த சங்கம் செய்கின்ற செயல்கள் எல்லாம் வேள்வி வளர்த்தல் ஆகும். யாக குண்டத்தில் தீ வளர்ப்பதும், அதற்குரிய மந்திரங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில இடத்தில் நூற்றைம்பது அல்லது இருநூறு யாக குண்டங்கள் வளர்க்கிறார்கள். அதில் பட்டு சேலையை நெய்யில் நினைத்து நெருப்பிலே போடுகிறான். இந்த நாட்டில் மானத்தை காக்க துணியில்லாத இந்த காலத்தில், யாக குண்டத்தில் நெருப்பிலே போடுகிறான். இப்படி செய்தால் கடவுளின் ஆசியை பெற முடியும் என்று சொல்லுகிறான். ஆனால் எங்களை போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறர் ஏற்றுக் கொள்வதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இதுவல்ல வேள்வி. அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாங்கள் வளர்க்கிறோம். பசியாற்றக்கூடிய எண்ணத்தை வளர்த்தோம், அந்த சிந்தனையை வளர்த்தோம். நாம் பிறர் பசியோடு இருப்பதை கண்டு இறக்கம் காட்டுகிறோம். இரக்கத்தை வேண்டுகிறோம், இறக்க சிந்தை என்ற வேள்வி வளர வேண்டும் என்று கேட்கிறோம். அந்த யாக குண்டத்தில், யாகம் வளர்க்கின்ற இடத்தில், ஐயா எனக்கு பசி என்று ஒருவன் கெஞ்சி கேட்கிறான். அவனது அந்த கேள்வியை, அந்த ஓசையை, அந்த இரக்கத்தை, அந்த அலைக்குரலை கேட்டு கனிவு காட்டாதவன் வளர்க்கக்கூடிய வேள்வியை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
நாங்கள் அப்படி செய்யவில்லை. இங்கே வாசலுக்கு அருகில் ஒருவன் வருவான். ஐயா, பசி என்பான். உடனே அன்பர்கள் அல்லது அங்குள்ள தொண்டர்கள் அவனை அழைத்து போய் வீட்டில் இருக்கின்ற சாதத்தில் சிறிது ரசம் ஊற்றி அவனிடம் கொடுப்பார்கள். பசியால் வாடியவன் அந்த சாதத்தை உண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைவான். இப்படிப்பட்ட எண்ணத்தைத்தான் வளர்க்கிறோம்.
 பசியாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை வளர்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம். எங்களிடம் வந்து, எங்களுக்கு உடுத்த மாற்றுத் துணி இல்லை என்று சொன்னால் அவர்களுக்கு ஆடை கொடுத்து உதவி செய்கிறோம். ஏதோ எங்களால் முடிந்ததை செய்கிறோம், பிள்ளைகளுக்கு துணிமணி தருகிறோம், பசியாற்றுகிறோம். இப்படி பசியாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை நாங்கள் வளர்க்கிறோம். இதையும் ஆசானிடம் கேட்கிறோம்.
தொட்டால் நெருங்க முடியாத அக்கினியை நாங்கள் வளர்க்கவில்லை. எரியும் கும்பிக்கு உணவு தர விரும்புகிறோம். இதை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம். எதை வளர்க்க வேண்டும் என்று ஆசான் திருவள்ளுவப்பெருமானிடம் கேட்டால், தினம் தினமும் விருந்தை உபசரிக்கக்கூடிய அந்த பண்பை வளர்க்க வேண்டும் என்பார். இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
    திருக்குறள் – விருந்தோம்பல் – குறள் எண் 88
வேள்வி என்பது வளர்த்தல், விருந்தை உபசரித்தல், பசியாற்றுவித்தல் ஆகும். மனைவியின் முகத்தைப் பார்த்து அவள் நல்லபடி வாழ வேண்டும், அவள் குறிப்பறிந்து, அவள் மீது அன்பு காட்டக்கூடிய கணவன் வேள்வி வளர்க்கிறான். கணவனுக்கு செய்ய வேண்டிய கடமையை செம்மையாக செய்கின்ற மனைவி வேள்வி வளர்க்கிறாள்.
சீடனுக்கு ஆசான் நல்வழி காட்ட வேண்டும், அவன் நீடு வாழ வேண்டும், அவனும் நாம் அடைந்த இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்க்கிறோம் இதுதான் வேள்வி. ஆசான் நமக்கு நல்வழி காட்டுகிறார். ஆசான் மேற்கொண்ட பணிகளை செம்மையாக நாம் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்ற சீடன் வேள்வியை வளர்க்கிறான். ஒருவருக்கு ஒருவர் காட்டுகின்ற பண்பே வேள்வியாகும். ஒருவருக்கு ஒருவர் செய்யக்கூடிய உதவியே வேள்வியாகும். ஒருவன் தான் கற்ற கல்வியை மற்றவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்று எண்ணுகின்ற எண்ணமே வேள்வியாகும். இந்த வேள்வியே எங்கள் வேள்வி.
 நாங்கள் உங்களை வேள்வி வளர்க்க சொல்கிறோம்.  மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமையை செம்மையாக செய்ய வேண்டும், கணவனை பெற்ற தாய், தந்தை, மாமன், மாமி இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதை செம்மையாக செய்ய வேண்டும். மேலும், இன்று முதல் வீட்டில் நான் ஒரு ஆட்டையோ, கோழியையோ அறுக்க மாட்டேன் என்று சொல்லுகின்ற என்னத்தை வளர்க்க வேண்டும். இது ஒரு வேள்வி.
குடும்பத்தில் அமைதி வேண்டும். செல்வம் பெருக வேண்டும். பெண்கள் என் கணவன் சம்பாதிப்பதையெல்லாம், தினம் தினம் குடிப்பழக்கத்தில் செலவு செய்துவிடுகிறான். அதிலிருந்து அவன் விடுபட வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் தினமும் பூஜையில் கேட்க வேண்டும். இப்படி கேட்பது வேள்வி. இப்படி உங்களுக்கு சொல்வதற்கு காரணம், எல்லா இடத்திலும் மது பழக்கம் மிகுதியாகி விட்டது. உலகத்திற்கே வினை சூழ்ந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் வினை மிகுதியாகிவிட்டது.
ஒருவனுக்கு தீயவினை மிகுதியாகிவிட்டால் குடிப்பழக்கம் இருக்கும். தீயவினை மிகுந்தால் சூதாடும் பழக்கம், தீயவினை மிகுந்தால் வீண் ஆர்வார செலவு, தீயவினை மிகுந்தால் சோம்பல், தீயவினை மிகுந்தால் ஜாதி வெறி, தீயவினை மிகுந்தால் மதவெறி போன்றவை எல்லாம் இருக்கும்.
உலகம் அமைதியாக இருக்க வேண்டுமென்றால் நல்ல பண்புகள் வளர வேண்டும். பண்பு, பெருந்தன்மை, ஜீவகாருண்யம், மனிதாபிமானம் இப்படிப்பட்ட குணப்பண்புகள் வளர வேண்டும். இப்படிப்பட்ட குணப்பண்புகள் வளரவேண்டுமென்றால் ஆசான் அகத்தீசரை பூஜை செய்ய வேண்டும்.
ஆசான் அகத்தீசர் போன்ற ஞானிகள் எல்லோரும் நிலைப்பெற்ற நல்ல பண்பை வளர்த்தவர்கள், நிறைய சிறந்த பண்பை வளர்த்தவர்கள், நிறைய அருள் செல்வத்தை வளர்த்தவர்கள். ஞானிகளெல்லாம் ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்தார்கள், ஆசி பெற்றார்கள், அருளை வளர்த்தார்கள். தினமும் பூஜை செய்ய செய்ய அருள் பலம் வளர்கிறது. அது வேள்வி வளர்ப்பது போன்றது.
சடங்குகள் எங்களுக்குத் தேவையில்லை, ஞானிகளை வணங்கி ஆசி பெற்றுக் கொள்வோம். ஒரு காலத்தில் உங்களுக்கும் தேவையில்லை. நாங்கள் இப்பொழுது எந்த வேள்வியை வளர்த்து இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்திருக்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறோம். அந்த வேள்வியை நாங்கள் வளர்க்க மாட்டோம். யாரேனும் பசியென்று கேட்டால், அந்த அவலக்குரல் கேட்ட அக்கணமே இதயத்தில் ஈட்டி போல் பாய வேண்டும். எங்கள் இதயத்தில் ஈட்டி போல் பாயும். அப்படி பாய்ந்தால் நாங்கள் செம்மையான வாழ்க்கை நடத்துகின்றோம் என்று பொருள். இப்படித்தான் நாங்கள் வேள்வி வளர்த்தோம். அந்த அவலக்குரலை கேட்டு இறக்கம் காட்டாதவர்கள் நடத்தக்கூடிய வேள்வி பயனற்றது என்று சொல்லக்கூடிய ஒரே இடம் ஓங்காரக்குடில்தான்.
இந்த சடங்குகள் எல்லாம் குப்பை. இதை தூக்கி ஏறிய வேண்டும். கடவுளின் ஆசியை பெற வேண்டுமென்று நீ விரும்புகின்றாயா? அப்படி விரும்பினால், அம்மா பசிக்கின்றது என்ற அவலக்குரல் உன் வீட்டின் முன்பு கேட்டால், அவனை பார்த்த உடனேயே உன்னிடம் உள்ள உணவை அவனுக்கும் வயிறார கொடுக்க வேண்டும். அந்த எண்ணம் வளர்ந்தால் கடவுளை அடையலாம். வேறு எந்த சடங்குகளாலும் கடவுளை அடைய முடியாது என்பதே நாங்கள் அறிந்த உண்மை. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. எல்லா ஞானிகளும் இதைத்தான் சொல்லுவார்கள்.
சில இடத்தில் உள்ள கோவில்களில் ஆடு, கோழி தினமும் வெட்டி பலியிடுவார்கள். வெளியே ஒரு சாமி இருக்கும். அதற்கும் ஆடு, கோழி வெட்டுவான். உள்ளே உள்ள தெய்வத்தை சுத்த தெய்வம் என்பான். இப்படிப்பட்ட செயலை ஆசான் திருவள்ளுவப்பெருமான் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆசான் திருவள்ளுவப்பெருமான் முக்காலத்தையும் உணர்ந்த முனிவர், எமனையும் வெல்லும் வல்லமை படைத்தவர். இப்பொழுது மட்டுமல்ல, எந்த காலத்திலேயும் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய திருக்குறளை இயற்றியவர் ஆசான் திருவள்ளுவப்பெருமான்.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் – நீ ஒரு உயிரைக் கொன்று அதன் மூலம் இந்திரப்பதவி கிடைக்கும் என்றாலும், சான்றோர்க்குத் கொன்றாகும் அக்கம் கடை – சான்றோர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பார்.
ஒரு உயிரைக் கொன்று அதன் மூலமாக இந்திரப்பதவி கிடைக்கும் என்று சொன்னால், அப்படி சொல்கின்றவன் மடையன், கேட்கிறவன் சுத்த மடையன் என்பார். மீண்டும் குறளை பார்ப்போம்.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 328
சான்றோர்கள் இப்படிப்பட்ட ஆக்கத்தை இழிந்த நிலை, இழிந்த செயல் என்பார்கள்.
இந்த சங்கத்தால் போற்றிக் காக்கப்பட வேண்டிய கொள்கை, மேற்கொண்ட சிறந்த கொள்கை பசியாற்றுங்கள் என்பதே முதலாவதாக இருக்கும். இரண்டாவதாக இல்லறத்தில் அறமும் தர்மமும் நிலைக்க வேண்டும் என்போம். இல்லறத்தில் எது தர்மம்? மனைவியை புரிந்துகொண்டு, கணவன் நடந்து கொள்ள வேண்டும், கணவனை புரிந்து கொண்டு மனைவி நடந்து கொள்ள வேண்டும்.
தாய், தந்தை, மாமன், மாமி இவர்களை மையமாக வைத்து நாம் ஒரு புதிய கொள்கையை உருவாக்குகிறோம். மனைவியின் தாய் தந்தையை கணவன் கவனிக்க வேண்டும். என்ன ஐயா, இது நாள் வரையில் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றார்கள். இதுநாள் வரை நான் சொல்லவில்லை ஆனால் இன்று சொல்கிறேன். கணவன், தன் மனைவியின் தாய் தந்தையை அன்பு காட்டி இரட்சிக்க வேண்டும். அவர்களுக்கு துணையாக இருப்பதே அறம் என்று இப்பொழுது சொல்கிறோம்.
இப்படியெல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது. இப்பொழுது மனைவியின் தாய் தந்தைக்கும் நான் உதவி செய்வேன் என்று சொல்லுகின்ற கணவன் கடவுளை அடைவான். அவன் இவனுக்கு பெண்ணை கொடுத்தான், அப்படி கொடுத்தவன் எங்கேயோ போகட்டும் என்று நினைக்கின்ற கணவன் கடவுளை அடைய முடியாது. ஆக பெண்ணுடைய தாய் தந்தைக்கும் ஆதரவு காட்ட வேண்டும்.
அதேபோல் மனைவி, கணவனுடைய தாய் தந்தைக்கும் ஆதரவு காட்ட வேண்டும். வயதான அவர்களுக்கு உதவியாக இருப்பதே அறம் என்பார். குடும்பத்தில் உள்ளவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று மனைவி, ஒரு குடும்பத்தலைவி நினைத்தால் அங்கே கடவுள் இருப்பார். குடும்பத்தலைவன் நம்முடைய மனைவி, அவள் தாய் தந்தை, நம் தாய் தந்தை எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அங்கே கடவுள் இருப்பார். ஆக இதுதான் ஆன்மிகம்.
இங்கிருக்கின்ற பெண்கள் அனைவரும் பூஜை செய்தீர்கள், ஆசான் ஞானபண்டிதரையும், ஆசான் அகத்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் கருவூர்முனிவரையும் பூஜை செய்திருக்கிறீர்கள். இவர்கள் அனைவரும் முதுபெரும் ஞானிகள். இவர்களின் நாமம் ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இவர்கள் நாமமே மந்திரம். இந்த மந்திரத்தை சொல்லித்தான் நாங்கள் சித்தி பெற்றிருக்கிறோம், எல்லா காரியத்தையும் செய்திருக்கிறோம்.
சென்ற சித்ராபௌர்ணமி அன்று ஐநூற்றி முப்பத்தொரு திருமணம் செய்திருக்கிறோம். ஆட்படை கொண்டா, பணபலம் கொண்டா, அதிகாரபலம் கொண்டா செய்துள்ளோம்? இல்லை, ஒன்றே ஒன்று ஞானிகளின் துணையோடுதான் செய்திருக்கிறோம். ஆசான் ஞானபன்டிதர், ஆசான் அகத்தீசர், ஆசான் திருமூலதேவர் இவர்களின் ஆசியைப் பெற்று இந்த காரியத்தை செய்திருக்கிறோம். ஞானிகள் ஆசியோடு வருகின்ற சித்ராபௌர்ணமி அன்று ஆயிரத்தெட்டு திருமணம் செய்யப் போகிறோம். ஆயிரத்தெட்டு திருமணம் செய்வதற்கு இப்பொழுதே ஆசானிடம் கேட்டு வருகிறோம். வருகின்ற சித்ராபௌர்ணமி அன்று திருமணம் தடைபடாது நடந்திட நீங்கள்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்கிறோம். நீங்களும் கேட்க வேண்டும், நாங்களும் கேட்கிறோம்.
இல்லறத்தில் உள்ளவர்கள் ஞானிகளிடம் என்ன கேட்க வேண்டும்? திருமணமாகாத பெண்ணிற்கு தகுதியுள்ள கணவன் அமைய வேண்டுமென்றும், திருமணமாகாத பையனுக்கு தகுதியுள்ள மனைவி அமைய வேண்டுமென்றும் கேட்க வேண்டும். ஆக எதையும் ஆசானிடம் கேட்டுத்தான் பெற வேண்டும்.
பெண்களுக்கு ஞானம் உண்டு என்று ஆசான் நந்தீசர் சொல்லியிருக்கின்றார். பெண்களுக்கும் ஞானம் உண்டு. உங்களுக்கு கருணை காட்ட ஒரு ஆசான் வேண்டும். உங்களை என் பிள்ளைகளாக நினைத்து சொல்கின்றேன், என்னுடைய தாயாக, சகோதரியாக நினைத்து சொல்கின்றேன் நீங்கள், காலையில் பன்னிரண்டு முறை “ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி, ஆசானிடம், “உன்னுடைய சேவகிக்கு, உன்னுடைய மகளுக்கு ஞானம் சித்திக்க நீங்கள் அருள் செய்ய வேண்டும்” என்ற ஒரே ஒரு வார்த்தை பெண்களாகிய நீங்கள் கேட்க வேண்டும்.
ஆண்கள் அடியேனுக்கு என்று சொல்ல வேண்டும். நாங்கள் அடியேன், சேவகன் என்று சொல்வோம். சேவகன் என்றால் தொண்டு செய்கிறவன் என்று அர்த்தம். நிச்சயம் இப்படி கேட்ட வேண்டுகோள் உங்களுக்கு கைகொடுக்கும். பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் இந்த வார்த்தையை சொன்னால் ஒருவன் ஞானியாவான். இப்படி பெண்களும் கேட்டால், ஞானியாகலாம்.
ஞானசித்தி பெற்ற மகான் ஔவையார், மகான் காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் எல்லாம் ஞானியாகி உள்ளார்கள். ஆனால் அதிகமில்லை. ஆண்கள்தான் அதிகமாக ஞானியாகி உள்ளார்கள்.
வருங்காலத்தில் பெண்களும் ஞானியாக வாய்ப்பிருக்கிறது என்று சத்தியவாக்காக சொல்கிறேன். ஆசான் ஞானபன்டிதர் மீது ஆணையிட்டு சொல்கிறேன்.
பெண்களும் ஞானியாவார்கள். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் நீங்கள் பெற போகிறீர்கள். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம்.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் எதை நினைத்து பூஜை செய்தாலும் ஒரு குறிக்கோள் வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு, அவர்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும், திருமணமாகாதவரும் திருமணமாகும், புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு புத்திரபாக்கியம் அமையும், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள கணவனாகவும், எல்லா வகையான பண்புள்ள கணவனாகவும் அமைவான்.
நாங்களும் பூஜை செய்கிறோம். வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு ஆயிரத்தெட்டு திருமணம் செய்ய அருள் செய்ய வேண்டுமென்று கேட்கிறோம்.
     பெண்கள் ஆசான் அகத்தீசரிடம், பூஜையில் என்ன கேட்க வேண்டும்? தங்களிடம் உள்ள குறைகளை சொல்ல வேண்டும். அப்படி தங்களுடைய குறைகளை சொல்லி, தினம்தினம் நாமஜெபம் செய்தால் குறை நிவர்த்திக்கு அருள் செய்வார்கள். குறை நிச்சயமாக தீரும் என்று சொல்லி உங்களுக்கெல்லாம் எல்லாம்வல்ல ஆசான் ஞானபண்டிதன், ஆசான் அருணகிரிநாதர், ஆசான் திருமூலதேவர், ஆசான் அகத்தீசர் ஆசியும் இருக்கும் என்று சொல்லி உங்களை வாழ்த்துகிறோம்.
அதே சமயத்தில் இங்கு கூடியுள்ள உங்கள் ஆசியும் எங்களுக்கு வேண்டும். ஏன் ஐயா, அப்படி சொல்கிறீர்கள் என்றார்கள். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு உங்களுடைய ஆசி வேண்டும், நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும், மேலும் மேலும் வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே மாதந்தோறும் நடைபெறுகின்ற இந்த திருவிளக்கு பூஜை, ஆசான் நந்தீசர் அவர்கள் கட்டளையிட்டதன் காரணமாக இதை செய்கிறோம். பெண்களும் ஆசி பெற வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தையும் செய்வதன் நோக்கம் மக்களிடையே உண்மை ஆன்மிகம் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். நாங்கள் செய்யவில்லை, செய்ய தூண்டுகிறோம். ஆசான் ஆசியால் செய்கின்றோம். திருவிளக்கு பூஜை செய்கின்ற பெண்களுக்கு நோயில்லாத வாழ்வும், அதே சமயத்தில் வறுமை இல்லாத வாழ்வும் அமையும்.
பெரும்பாலும் எல்லா குடும்பத்திலும், வீட்டில் மூன்று பெண்கள் திருமணம் ஆகாமல் இருக்கின்றார்கள். பெற்றோர்கள், என் பெண்ணுக்கு வயது இருபத்து மூன்று, இருபத்து நான்கு ஆகி விட்டது இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் தடைப்படுகிறது என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். முதல் பெண்ணின் திருமணத்திற்கு இருபத்தைந்து பவுன் போட்டேன், அதே போல் அடுத்த பெண்ணுக்கும் இருபத்தைந்து பவுன் போட்டேன். ஆனால் இந்த பெண்ணுக்கும் இருபத்தைந்து பவுன் கேட்கிறார்கள். முன்பு வீடு, காடு எல்லாம் இருந்தது, அதை விற்று இரண்டு பெண்களுக்கும் பவுன் போட்டோம். இப்பொழுது விற்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை, நான் என்ன செய்வது என்றார்.
மூன்று பெண்களில் முதல் பெண்ணிற்கும், அடுத்த பெண்ணிற்கும் இருபத்தைந்து பவுன் போட்டு திருமணம் செய்தார்கள். கடைசி பெண்ணிற்கு திருமணம் செய்வதற்கு காசு இல்லை. இது ஒரு பெரிய பலகீனம். நான் மலேசியாவில் உள்ள அன்பர்களிடம், உங்கள் ஊரில் திருமணம் செய்ய வேண்டுமென்றால் பெண்ணுக்கு எத்தனை பவுன் போடா வேண்டுமென்று கேட்டேன். அப்படி பவுன் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படுவோம் என்று அந்த மலேசிய அன்பர் சொன்னார். ஏனென்றால் நான் சம்பாதிக்கிறேன், நான் சாப்பிடுகிறேன், அதனால் பெண் வீட்டாரிடம் போய் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆனால் இங்கு பெண்ணுக்கு எத்தனை பவுன் போடுவாய், கட்டில் மெத்தை தருவாயா, பீரோ தருவாயா, மோட்டார் சைக்கிள் தருவாயா என்று கேட்கிறான். இப்படியெல்லாம் கேட்டுத்தான் திருமணம் செய்கிறான். ஆனால் அங்கே உள்ளவன் தன்னம்பிக்கை உள்ளவன். அவன், பெண் நன்றாக படித்துள்ளவரா, குணம் உள்ளவரா என்று கேட்கிறான். அப்படித்தான் அவன் கேட்பான். இங்கே எத்தனை பவுன் போடுகிறாய் என்று கேட்கிறான்.
கிராமத்தில் உள்ள வீடுகளில் மாடு இருக்கும், எத்தனை படி பால் கறக்கும் என்று கேட்பார்கள். நான்கு படி கறக்கும், ஆறு படி கறக்கும், இரண்டு பக்கா கறக்கும், மூன்று பக்கா கறக்கும் என்பார்கள். ஆக, பால் கறப்பதற்கு ஏற்ற மாதிரி அந்த மாட்டை விலைக்கு கேட்பார்கள். ஆனால் இவன் என்ன செய்கிறான்? இருபத்தைந்து பவுன் போடு, முப்பது பவுன் போடு என்று கேட்கிறான். இப்படி கேட்பவனை ஆண்மகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவன் தன்னம்பிக்கை இல்லாதவன். உன் பெண்ணைக் கொடுங்கள். நான் வைத்து வாழ்கின்றேன் என்று சொல்ல வேண்டும்.
எவ்வளவு பவுன் போடுவாய் என்று கேட்கிறவன் தன்னம்பிக்கை இல்லாதவன். நான் அவனை ஆண்மகனாகவே நினைக்கவில்லை. இஷ்டம் இருந்து கொடுத்தால் வாங்கிக்கொள். எத்தனை பவுன் போடுவீர்கள் என்று ஒருவன் கேட்டால், அவனைப் பற்றி லேசாக சிந்திப்பேன். அவனுக்கு மீசை இருக்கின்றாதா? இல்லை அவன் ஆண் வேடம் போட்டிருக்கின்றானா என்று நினைப்பேன். அவன் வேட்டி கட்டுபவனா அல்லது சேலை கட்டுபவனா என்று கேட்பேன். அதே சமயத்தில் திருமணம் செய்த பின், பெண் வீட்டிலிருந்து விரும்பி கொடுத்தால் வாங்கிக்கொள். அது வேண்டும், இது வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதே. தலைவன் ஆசி இல்லாமல் ஒன்றும் நடக்காது.
பெண்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன் கேளுங்கள். பெண்கள் வயதுக்கு வந்த பின்பு தகுதியுள்ள கணவனாக அமைய வேண்டும், என்னை விலை பேசுபவனாக இருக்கக்கூடாது என்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். பெண்கள் பத்து அல்லது பன்னிரண்டு வயது ஆனபோழுதே இப்படி ஆசானிடம் கேட்க வேண்டும். இப்படி ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், ஒரு சிறந்த ஆண்மை உள்ளவன், வீர உணர்ச்சி உள்ளவன், தன்னம்பிக்கை உள்ளவனே கணவனாக அமைவான். இதற்கு தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால் போதும்.
அதேசமயத்தில் தாயும் தந்தையும் பூஜை செய்ய வேண்டும். பெண்ணை பெற்ற உடனேயே அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆசான் அகத்தீசரை பூஜை செய்ய வேண்டும். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், தகுதியுள்ள கணவனாக அமைவான், பேரம் பேசமாட்டான்.
இன்று சமுதாயத்தில் வசதி உள்ளவர்கள் செய்கிறார்கள், இல்லாதவர்கள் அதைக்  கண்டு நொந்து போகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். நீங்களெல்லாம் ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வறுமையில்லாத வாழ்வும், எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய திறமையும், அச்சமில்லாத வாழ்வும், தளர்ச்சியில்லாத வாழ்வும் நீங்கள் பெற வேண்டும். வீட்டில் வயதுக்கு வந்த பெண்கள் இருந்தால், ஆசானிடம், என்னுடைய பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.
ஞானிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் ஆணை பெண்ணாக்குவார்கள், பெண்ணை ஆணாக்குவார்கள் அவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட வல்லமை உள்ளவர்கள். எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆசான் ஆசி இருந்தால் எதையும் செய்யலாம்.
பெண் பிள்ளை வயதுக்கு வந்த உடனேயே, தாயும் தந்தையும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல கணவனாக அமைய வேண்டும். அதற்கு நீங்கள்தானப்பா அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் கடைசியில்தான் பிள்ளைகள் திருமணத்தைப் பற்றி சிந்திகிறீர்கள். யாரை கேட்டால் பிரச்சனை தீரும் என்று நீங்கள் சிந்திக்கவில்லை.
பெண் வயதுக்கு வந்த போதே, என் மகளுக்கு நல்லபடியாக திருமணமாக வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். அதே போல மகனுக்கும் நல்ல பெண்ணாக அமைய வேண்டுமென்று ஆசானிடம் தொடர்ந்து கேட்க வேண்டும். இப்படி கேட்டு வந்தால் அவர்கள் நமக்கு அருள் செய்வார்கள்.
ஒரு வீட்டில் மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மூன்று பெண்ணுக்கும் சேர்த்துக் மொத்தமாக எழுபத்தைந்து பவுன் போட்டார்கள். அதே சமயத்தில் ஒரே பெண், ஒரு பையன் இருப்பான் அவன் என்ன கேட்கிறான் என்றால் அவர்கள் மூன்று பெண்களுக்கும் மொத்தமாக எழுபத்தைந்து பவுன் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவன் இந்த ஒரு பெண்ணிடம் இருந்தே நூறு பவுன் வாங்க நினைக்கிறான். இப்படியெல்லாம் சமுதாயத்தில் உள்ளது. இதெல்லாம் மிகப் பெரிய கொடுமை.
அதிகமாக வரதட்சணை கேட்பது ஆண்மகனா, மாமனரா, மாமியாரா என்றால், மாமியார்தான் அதிகமாக கேட்டு கொடுமை செய்வாள். அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாமியாரும் பெண், இவளும் பெண். ஆகவே இது போன்ற குணக்கேடுகள் தீர வேண்டும். ஒருவரை ஒருவர் எப்படியாவது கசக்கி பிழிந்து வாங்க வேண்டும் என்ற பலகீனம் மிகவும் கொடுமையானது. தயவுதான் முக்கியம். தயவு இருந்தால் குணக்கேடுகள் இருக்காது. ஞானிகளின் நாமஜெபம் செய்யும் மக்களுக்கு இது போன்ற குணக்கேடுகள் இருக்காது.
ஒருவன் தன் மனைவியை அடிப்பான். அவளை தன் அம்மா வீட்டிற்கு சென்று ஐந்தாயிரம் ருபாய் பணம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லுவான். மனைவியும் தாய் வீட்டிற்கு சென்று, எனது கணவர் ரொம்ப கோபமாக இருக்கின்றார் என்று சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் பணம் தாயிடம் கேட்டு வாங்கி கொண்டு வருவாள். இதை பார்த்த அந்த பெண்ணின் மாமியார் மகனிடம் இன்னும் இவளை அடிக்க, அடிக்க காசு வரும் என்பாள். அவ்வளவுதான் அவளின் கணவன், நான்கு அடி அடித்து ஐயாயிரம் ரூபாய் கிடைத்தது மேலும் இன்னும் அடித்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சொல்லுவான். இப்படி தன் மனைவியை கசக்கி பிழிந்து காசு வாங்குவான். ஆகவே, நாம் இப்படிப்பட்ட கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு ஞானிகளின் ஆசியைப் பெற வேண்டும்.
ஞானிகளின் ஆசியைப் பெறுவதற்கு தினமும் நாமஜெபம் செய்ய வேண்டும். நம்மிடம் பேராசை இருக்கக் கூடாது. பலகீனங்கள் இருக்கக் கூடாது. இந்த பண்புகள் எல்லாம் தலைவனின் ஆசியில்லாமல் வராது.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் சேர்ந்து மாதத்திற்கு இருபதாயிரம் ரூபாய் வருவாய் வருகிறது. அவர்கள் தன் பையனுக்கு திருமணம் செய்ய பெண் வீட்டாரிடம் முப்பத்தைந்து பவுன் கேட்கிறார்கள். அவன்தான் மடையன். நீங்கள் இருவரும் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள், நல்ல வருவாய் வருகிறது, இந்த பையனை வைத்து இன்னும் எவ்வளவு கொள்ளை அடிக்க போகிறாய்? விஷயம் தெரிந்தவர்கள் இவனை காட்டுமிராண்டி என்று சொல்லுவார்கள். இதற்கு என்ன காரணம்? அவனுடைய கல்வி, அவனுடைய உத்தியோகம் அதனால் வந்த பேராசை.
படிக்காத ஒருவன் தன் மகனுக்கு முப்பத்தைந்து பவுன் போடு, ஐம்பது பவுன் போடு என்று கேட்க மாட்டான். ஆனால் படித்தவன் கேட்பான். இவன் கற்ற கல்வி அசட்டுக் கல்வி. இவனை குணப்பண்புள்ளவனாக மாற்ற வேண்டும். இதற்கு ஆசான் ஆசி இருக்க வேண்டும். ஆசான் அகத்தீசரை தினமும் வணங்கினால்தான் நல்ல குணப்பண்புகள் வரும்.
என் பையனுக்கு நீ விரும்பியவற்றை கொடு என்று ஆசானுடைய ஆசியைப் பெற்றவன் சொல்லுவான். இவ்வளவுதான் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றவன் நிச்சயமாக படிக்காதவன். அவன் எவ்வளவு நீளமாக பட்டம் வாங்கி வைத்திருக்கிறான், அவனை படிக்காதவன் என்று சொல்கிறீர்கள் என்ன காரணம்? அவனுக்கு வருவாய் வருகிறது. உத்தியோகம் இருக்கிறது. எவ்வளவோ படித்திருக்கிறான். அப்படி படித்துள்ள அவன் இவ்வளவு பவுன் போடு என்று சொன்னால், அவனை படிக்காத மடையன் என்று சொல்லாமல் வேறு யாரை மடையன் என்று சொல்லுவார்கள். இது போன்ற சூழ்நிலை அதிகமான பேராசையால் வந்தது.
நீங்களெல்லாம் பண்புள்ள மக்களாக வாழ வேண்டும். பேராசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்ல சொல்ல இது போன்ற குணக்கேடுகள் நீங்கி, நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் எல்லோரும் சாந்தமும், தன்னடக்கமும், தயையும், கருணையும் கொண்டு பண்புள்ள மக்களாக வாழ்ந்து, கடவுளை அடைய வேண்டும் என்று வாழ்த்தி முடிக்கிறேன்.
தொடர்ந்து இங்கு வந்து பூஜையில் கலந்து கொள்கின்ற மக்களுக்கு எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது சத்தியம். இதை ஆசான் ஞானபண்டிதர் மீது ஆணையிட்டு சொல்கிறேன். இந்த வார்த்தையை ஆசான்தான் சொல்கிறார் என்று நினைக்க வேண்டும்.
ஆகவே இங்கு வருகின்ற அத்தனை பெண்களுக்கும் ஞானிகளின் ஆசி இருக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்கும், நல்ல பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும், வேண்டியது எல்லாம் கைகூடும். நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். சென்ற முறை ஐநூற்றி முப்பத்தொன்று திருமணம், ஆசான் ஆசியோடும், உங்கள் ஆசியோடும் செய்திருக்கின்றோம். இந்த நிகழ்ச்சிக்கு தொண்டர்கள் உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் நீடு வாழ வேண்டும். நீங்களும் உதவி செய்திருக்கிறீர்கள். நீங்களும் நீடு வாழ வேண்டும். வருகின்ற சித்ராபௌர்ணமி அன்று ஆயிரத்தெட்டு திருமணங்கள் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். அதற்கு உங்கள் ஆசி வேண்டுமென்றும், ஞானிகள் ஆசி வேண்டுமென்றும், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும், நீங்கள் எங்களை மனமார வாழ்த்த வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
ஓம் அகத்திசாய நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208372
Visit Today : 464
Total Visit : 208372

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories