01.03.2001 – மகான் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்திற்கு மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை

      

      அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்! வாரந்தோறும் நடைப்பெறுகின்ற பாராயணத்தில் ஆசான் அகத்தீசர் கட்டளைப்படி மகான் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை அன்பர் படித்தார். சிவபுராணத்தை மட்டும் ஒவ்வொரு பகுதியாக படிக்க வேண்டுமென்று ஆசான் அகத்தீசர் அருளியுள்ளார். காரணம் வேகமாக படித்தால் புரியாது. எதிலுமே அவசரப்படக்கூடாது. ஆனால் மனிதர்களுடைய இயல்பு விரைவாக முன்னேற வேண்டுமென்றே இருக்கும். ஆனால், நமது வினை அந்த அளவிற்கு ஒத்துழைக்காது. ஞானிகள் எல்லாம் சிற்றெறும்பு ஊறையிலே கற்குழிந்தாப்போல் என்பார்கள்.
சீசனாம் எனத்தேர்ந்தால் மௌனம்சொல்வார்
            சிற்றெறும்பு ஊறையிலே கற்குழிந்தாப்போலே
பாசமங்கே வைக்கவைக்கப் பாவமெல்லாம்
            பர்வதம்போல் பஞ்சுவைத்து அணுவளவுதீயை
நேசமுடன் வைத்தகதை போலேயாச்சு
            நிலைத்து நின்ற குருவுக்கு மனங்கோணலாகா
வேசைமனம் போலாகி அலையாதே நீ
            வேதாந்த குருபதத்தை மேவுமேவே.
    மகான் கொங்கண மகரிஷி அருளிய கடைக்காண்டம் – 270
நாம் செய்த பாவம் அரியாமையாக இருக்கும். விட்டுக்கொடுத்தல், மனிதாபிமானம் போன்ற பண்புகள் திருவருள் துணையில்லாமல் வராது. பல ஜென்மங்களில் செய்த பாவமே நமக்கு வன்மனமாகவும், வறுமையாகவும், நோயாகவும், மனக்குழப்பங்களாகவும் இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமையிருக்காது. புத்திரபாக்கியம் இருக்காது. அப்படியே பிள்ளைகள் இருந்தாலும் நல்லபடியாக படிக்கமாட்டார்கள்.  இப்படி மனஉளைச்சல் இருக்கும்.
சொல்லோன்னாத பிரச்சனைகள் வாட்டி வதைக்கும். செல்வம் இருந்தால் அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற பிரச்சனையிருக்கும். செல்வம் இல்லையென்றால் வறுமையே ஒரு பிரச்சனையாக இருக்கும். இப்படி குழப்பங்களுக்கு மேல் குழப்பமாக வாட்டிக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் ஞானிகள் அருளிய பாடல்களை அவசரப்படாமல் மெதுவாக படிக்க வேண்டும். அதில் மிகப்பெரிய கருத்துக்கள் இருக்கிறது. இன்று நாம் பாராயணம் செய்த சிவபுராணம் மிகப்பெரிய வல்லமையுள்ள ஆசான் மாணிக்கவாசகர் அருளியதாகும். அதில் முதல் வரி
“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!”
நமச்சிவாய வாழ்க என்றால் தலைவன் ஒருவன்தான். ஆனால் நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்படியென்றால் தலைவன் இரண்டு பேரா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மகான் திருமூலர் சொல்வார். தலைவன் ஒருவன்தான்.
ஆனால் மகான் மாணிக்கவாசகரோ “நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்படியென்றால் தலைவன் இரண்டு பேரா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மகான் திருமூலர் சொல்வார்.
ஆனால் மகான் மாணிக்கவாசகரோ நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று சொன்னார். அப்படியென்றால் நமசிவாயம் வேறு, நாதன் வேறு என்று சொன்னால் பிரச்சனை வரும் அல்லவா? எனவே கடவுளை ஒன்று என்று சொல்லுவதா? மகான் திருமூலதேவர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார். மேலும் மகான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ஏகன், அநேகன் என்றார். அப்படியென்றால் நமச்சிவாய வாழ்க என்று சொல்லுவதற்கு என்ன காரணம்? நமசிவாய என்றால் பஞ்சபூதம் என்று பொருள்படும்.
ந – என்றால் மண், ம – என்றால் தண்ணீர், உலகம் என்பது தரையாக இருப்பது அது ந”.
“ம” என்பது தண்ணீராக இருக்கிறது. இதை அப்பு என்றும் கடல் என்றும் சொல்லுவார்கள். “சி” என்பது அக்னி, சூரியன். “வ” என்பது காற்று, “ய” என்பது ஆகாயம். ஆகவே நமசிவாய வாழ்க என்றார். அவைகள் நல்லபடியாக வாழ வேண்டும். நமசிவாய அல்லது பஞ்சபூதங்கள் தோன்றி பல லட்சம் கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பஞ்சபூதங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கு கோபம் வரக்கூடாது.
குஜராத்தில் மண்ணிற்கு கோபம் வந்தது. அதற்கு (26.01.2001, அன்று குஜராத்தில் கடுமையான நிலநடுக்க ஏற்பட்டது). மண்ணிற்கு கோபம் வந்தது சுமார் ஐந்நூறு நிமிடம் ஒரு குலுக்கு குலுக்கியது. கிட்டத்தட்ட 28, 000 வீடுகள் தூள், தூளாகியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கலாம். இன்னும் மிகுதியாகவும் இருக்கலாம். கணக்கு தெரியவில்லை. ஆனால் மண் வாழ வேண்டும். அமைதியாக வாழ வேண்டும். நிலநடுக்கம் வரக்கூடாது. பூகம்பம், எரிமலை இவையெல்லாம் வரக்கூடாது. அது நல்லபடியாக வாழ வேண்டும். அமைதியாக சாந்தமாக இருக்க வேண்டும்.
அமைதியாக வாழ வேண்டுமென்று சொன்னாலே அங்கே சாந்தம் இருக்கிறது என்று அர்த்தம். நிலநடுக்கம் கூடாது. நிலத்தில்தான் தண்ணீர் இருக்கிறது. புயல் அடிக்கிறது. பெருமழை பெய்கிறது. இப்பொழுது ஒரிசாவில் பல்லாயிரம் மக்கள் இறந்துவிட்டார்கள். பலலட்சம் கால்நடைகள் இறந்துவிட்டது. அங்கே ஒரிசாவில் கடலுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் பெரும் புயல் ஏற்பட்டது. ஆசான் மாணிக்கவாசகர் அவை வாழ வேண்டுமென்று சொல்கிறார். வாழவேண்டுமென்று சொன்னால் சாந்தம் ஏற்பட வேண்டுமென்று பொருள். எப்பொழுதும் உலகத்தை வாழ வைப்பது பஞ்சபூதங்கள்தான். பஞ்சபூதத்தை உருவாக்கியவன் தலைவன்.
நமசிவாய என்பார் மகான் மாணிக்கவாசகர். சி – என்றால் அக்னி. அக்னியே சூரியன் ஆகும். இந்த சூரியன் தோன்றி பலலட்சம்கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரியனைப்பற்றி மகான் திருமூலர்,
ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.
    திருமந்திரம் – அவையடக்கம் – கவி எண் 95
     அண்ணல் என்றால் தலைவன் என்று அர்த்தம்.
     ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை ஆரறி வார்இந்த அகலமும் நீளமும் – இந்த உலகத்தின் அகலமும் நீளமும் தெரியவில்லை. தனக்கே தெரியவில்லை என்று மகான் திருமூலர் சொல்கிறார். எனக்கும் தெரியவில்லை. ஞானிகளுக்கு சுழிமுனை கதவு திறந்தபின் தங்கள் பார்வையை பூமிக்கு கீழே செலுத்துவார்கள். பலலட்சம் கோடி மைல் உள்ளேபோய் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி போகபோக ஏதோ தள்ளுவது போன்ற ஒரு பயஉணர்வு வந்துவிடுகிறது. புருவமத்தியில் ஜோதி தரிசனம் கண்டவர்கள், சுழிமுனை கதவு திரதவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஞானதிருஷ்டியை செலுத்தலாம். பார்வையை எங்கு செலுத்தியும் பார்க்கலாம். அப்பொழுது பூமிக்கு அடியில் பார்வை செலுத்தினார். பலலட்சம் கோடி மைல் போய்க்கொண்டே இருந்தது. ஒரே ஆழம் சரி பிரச்சனை வருமென்று சொல்லி மேலே ஆகாயத்தை நோக்கினார். ஒரு வினாடிக்கு பலலட்சம் கோடி மைல் பார்வையை செலுத்தி பார்க்கிறார். அங்கும் எல்லை என்பதே இல்லை. எந்த திசையிலும் எல்லையில்லை.
 ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையைதலைவன் பெருமையை அறிய முடியவில்லை. அவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தையெல்லாம் யாரறிவார் இந்த அகலமும் நீளமும் என்றார். இந்த உலகத்தின் அகலம் எவ்வளவு இருக்கிறது? நீளம் எவ்வளவு இருக்கிறது? என்று தெரியவில்லை என்றார். அதை கண்டு பிடிக்க முடியாது. தலைவன் பெருமையை உணர முடியவில்லை. இதன் அகலமும் நீளமும் தெரியவில்லை. சரி இதுதான் புரியவில்லை என்றால் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதான் – பேரே அறியமுடியவில்லை. இந்த சூரியனுக்கு என்ன பெயர்? ஒருவன் சன் என்கிறார். ஒருவன் சூரியன் என்கிறான். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொன்று சொல்கிறான்.
வேரறி யாமை விளம்புகின் றேனே – இந்த சூரியனே ஒரு பகுதிதான்.
     அகரந்தான் பரவெளியி லொளிவுண்டாச்சு
            அதில்நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
      இகரந்தான் தண்ணீர்மண் தோன்றலாச்சு
            இதில்நின்றே ஜீவாத்மா தோன்றலாச்சு
      உகரந்தான் பூமிபரு வதமாச்சு
            உகந்ததொரு நான்குவித யோனியாச்சு
      ஒகரசுழி வட்டமெழு தோற்றமாச்சு
            உண்மைபரா பரத்தினுட செயல்தானாதி.
         அருள்மிகு சுப்பிரமணியர் ஞானசைதன்யம் கவி எண் 83
     அகரம்தான் பரவெளியில் ஒளி உண்டாச்சு – இந்த சூரியன் விட்டம் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் மைல். சூரியனுக்கும் பூமிக்கும் 93 மில்லியன், அதாவது ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல். சூரியனுக்கும் பூமிக்கும் 93 மில்லியன், அதாவது ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல். சூரியன் பெரிய ஒளி பந்து. பூமியைப் போன்று பலமடங்கு லட்சக்கணக்கான ஒளி உள்ளது. அந்த சிதறல் சூரியனாக இருக்கிறது. இது எப்படி வந்தது? அந்த ஒளி எப்படி வந்தது? என்று எனக்கு தெரியவில்லை என்கிறார் மகான் திருமூலர்.
ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.
    திருமந்திரம் – அவையடக்கம் – கவி எண் 95
     வேர் என்றால் மூலம். இதற்கு யார் மூலம். ஏன் சூரியன் வந்தது? இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உடலில் வெப்பமாக இருப்பது சூரியன்தான். ஆக நமசிவாய வாழ்க என்று மகான் மாணிக்கவாசகர் சொல்லியது மிகப்பெரிய விஷயம். ஏன் சூரியன் வாழ வேண்டுமென்று சொன்னால் நமக்கு போதிய உஷ்ணத்தை தருவது சூரியன்தான். நமக்கு பசியைத் தரும், காமத்தை தரும். அதேசமயத்தில் பரிணாம வளர்ச்சியை உண்டாக்கும். இவையெல்லாவற்றிற்கும் சூரியனே காரணம்.
     அதனால்தான் சூரியனை பூஜை செய்வார்கள். நாம் கும்பிடமாட்டோம். சூரியன் ஒரு எரிபந்தம். அது வாழ வேண்டும். தண்ணீர் வாழ வேண்டும். அதற்கு கோபம் வரக்கூடாது. கடலுக்கு கோபம் வந்து புயலாக மாறக்கூடாது. பெருமழை பெய்யக்கூடாது. அது அமைதியாக இருக்க வேண்டும். மழை பெய்யலாம். அளவோடு பெய்ய வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம். மண்ணில் எரிமலை வரக்கூடாது. நிலநடுக்கம் வரக்கூடாது. அதற்கு கோபம் வந்தால், இப்படித்தான் லட்சக்கணக்கான மக்கள் இறந்து விடுவார்கள். அது வாழ வேண்டும். அது சாந்தமாக வாழ வேண்டும்.
     கடல் நீரே சாந்தமாக வாழ வேண்டும். நிலமே சாந்தமாக இருக்க வேண்டும். கதிரவனே நீ சாந்தமாக வாழ வேண்டும். உன்னுடைய கொடுமையை எங்களால் தாங்க முடியாது. 9 கோடியே 30 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருந்தே இவ்வளவு கொடுமையாக வெப்பம் தருகின்ற நீ, உனக்கு கோபம் வந்தால், எங்களால் ஒரு நொடி கூட தாங்க முடியாது. சூரியன் ஒரு நேர்கோட்டிற்கு வந்து நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெயில் அடித்தால் போதும், முதலில் கடல் சுண்டும், கடல் தண்ணீரெல்லாம் ஆவியாகிவிடும்.
     பிறகு மேலும் நான்கு நாட்களுக்கு வெயில் அடித்தால் பூமியெல்லாம் தலபுலவென கொதிக்க ஆரம்பித்து விடும். இப்படி கொதிக்க ஆரம்பித்து கடைசியில் பூமியும் சூரியனில் போய் ஒடுங்கிவிடும். அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது. சூரியன் இரவு, பகலாக மாறி மாறி இருந்ட்னு எங்களை வாழ வைக்க வேண்டும். இரவாகவும், பகலாகவும் நீ வாழ வேண்டும். இல்லையென்றால் நாங்களும் வாழ முடியாது. நமசிவாய வாழ்க என்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறது.
     ஆக ந” என்பது உந்திகமலத்திற்கு கீழ்ப்பகுதி. அது மண்ணின்  ஸ்தானம். பிரிதிவியின் கூறு என்பார்கள். ஆக உந்திகமலத்தின் கீழ்பகுதி பிரிதிவியின் கூறு, மண்ணின் கூறு. அடுத்து உந்திக்கமலம் அப்பின் கூறு. 72 ஆயிரம் நாடி நரம்புகளும், இந்த உந்திக்கமலத்தில்தான் இருக்கும். இது அப்பின் கூறு, தண்ணீரின் கூறு. உந்திக்கமலத்தில் இருந்து கண்டஸ்தானம் வரையிலும் தேயுவின் கூறு. அது சூரியன் கூறு. கண்டஸ்தானத்திலிருந்து உச்சி வரையிலும் வாயுவின் கூறு வ”. அதாவது வ” காற்று.  
அடுத்து
ந என்பது மண்.
ம என்பது தண்ணீர்
சி என்பது அக்னி
வ என்பது காற்று
ய என்பது ஆகாயம்.
காற்று எல்லா இடத்திலும் இருக்கிறது. அது வாழ வேண்டும். அது சாந்தமாக வாழ வேண்டும். புயலாக மாறி எங்களை அழித்துவிடக்கூடாது. சாந்தமாக வாழ வேண்டும். நிலமே வாழ்க! தண்ணீரே வாழ்க! அக்னியே வாழ்க! சூரியனே வாழ்க! காற்றே வாழ்கா! சீற்றம் கொள்ளாது காற்று வாழ வேண்டும். இதுபோல் ஆகாயமும் வாழ வேண்டும். இந்த பூதங்களெல்லாம் வாழ வேண்டும்.
பூதமென்றால் பெரியது என்று அர்த்தம். இவற்றையெல்லாம் தாங்கி நிற்பதுதான் ஆகாயம். இந்த உலகம் என்பதே பஞ்சபூதங்கள்தான். பஞ்சபூதங்களில் நான்குதான் தோற்றமாகக்கூடியது. மண், தண்ணீர், அக்னி, காற்று ஆக இந்த நான்கும் தோற்றமாகக்கூடியது. ஆகாயம் வெட்டவெளி. அதுவும் வாழ வேண்டும். அது ஏன் வாழ வேண்டும்? இவையெல்லாம் ஆகர்ஷன சக்தி. ஒன்றோடு ஒன்று கோர்த்திருக்கும். சரி அய்யா! இப்பொழுது தத்துவத்தை பார்ப்போம். உந்திகமலத்திற்கு கீழ்பகுதி மண்ணின் கூறு “ந”ஆகும். உந்திக்கமலம் “ம” அப்புஸ்தானம். தண்ணீர் ஆகும். சிகாரஸ்தானம் அக்னி “சி”ஆகும். கண்டஸ்தானம் “வ” காற்று ஆகும். புருவமத்தி ஆகாயம் “ய” ஆகும். இந்த பூதங்களெல்லாம் சேர்ந்ததுதான். எனவேதான் நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்றார்.
நமசிவாய வேறு நாதன் வேறு அல்ல. இத்தனையும் உருவாக்கியவர் கடவுள். அவர் நாதன். நாதன் என்றால் தலைவன் என்று அர்த்தம். தலைவன் இல்லாமல் இவ்வளவும் செய்திருக்க முடியாது. குழந்தை இருக்கிறது என்றால் தாய்தந்தை இருக்க வேண்டும். ஆக தலைவன் ஒருவன் இருக்க வேண்டும்.
      அது ஒரு இனம்புரியாத சக்தி. அது வாழ வேண்டுமென்றார். இப்ப நாம் எப்படி இருக்கிறோம்? நமக்கு அளவுக்கு அதிகமான உஷ்ணம் வந்தால் என்ன ஏற்படும்? காய்ச்சல் ஏற்படும். அது ஒரு சீற்றம். காய்ச்சல் அக்னியின் கூறு. தலைவலி வரும். நம் உடம்பில் வாத, பித்த, சிலேத்துமம் இருக்கிறது. வாதம் என்பது காற்றின் கூறு. வாதம் 16 கலையாக உள்ளது. யாராக இருந்தாலும் சரி முதல் நாடியில் 16 துடிப்பு காலையில் இருக்கும். இதை கோழி நடை என்று சொல்லுவார்கள். இது வாதம், காற்றின் கூறு.
     பகல் 12 மணிக்கு பித்தம். இது 12 கலை உள்ளது. அது இப்படி தட்டும். உச்சிப்பொழுதில் கைவைத்து பார்க்கும் பொழுது இது இப்படி தட்டும். இதற்கு 12 கலை. இது அக்னியின் கூறு. உச்சிப்பொழுது சூரியன். இதை வாத, பித்த, சிலேத்துமம் என்பார்கள். நம் உடம்பில் காற்று, அக்னி, தண்ணீர் உள்ளே சமமாக இருக்க வேண்டும். இது சமமாக இருந்தால்தான் நாம் வாழலாம். அதனால்தான் நமச்சிவாய வாழ்க! என்றார்.
     கடல் நீர் கொந்தளிக்கக் கூடாது. சீற்றம் கொள்ளக்கூடாது. நிலநடுக்கம் இருக்கக் கூடாது. கதிரவன் அதிக கொடுமை செய்யக்கூடாது. புயல் வரக்கூடாது. ஆகாயத்திற்கு பேச்சேயில்லை. பஞ்சபூதங்களும் வாழ வேண்டும், நாமும் வாழ வேண்டும்.
     எனவே உடம்பின் வெப்பத்தை (உஷ்ணத்தையும் குளிர்ச்சியையும்) சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாத, பித்த, சிலேத்துமம் சமமாக இருக்க வேண்டும்.. சரி ஐயா வாதம் இருக்கு. காற்று மிகுதியாக இருக்கு. இப்படி இருக்கும்போது என்ன சாப்பிட்டால் பிரச்சனை வரும். உருளைக்கிழங்கு, வாழைக்காய் சாப்பிட்டால் சிலருக்கு வாய்வுக்கோளாறு வரும். சாப்பிடும் உணவைப்போருத்தே தெரிந்து கொள்ளலாம்.
     இதற்கு யோகிகள் என்ன செய்வார்கள்? மாற்றிக் கொள்வார்கள். அப்படி ஒரு அமைப்பை வைத்திருப்பார்கள். அதிக தூக்கம் முழிக்கும்போதும் மனஉளைச்சல் இருக்கும்போதும் உஷ்ணம் அதிகம் வந்துவிடும். அப்போது பித்தம் அதிகமாக இருக்கும். அப்போது எண்ணை ஸ்தானம் செய்வார்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் சாந்தம் செய்து கொள்வார்கள்.
     அப்புறம் சிலேத்துமம். இது மிகுதியாகி நோய் வந்தால் வாதமும் பித்தமும் அடங்கி சிலேத்துமம் பிடிக்கும். இதற்கு எட்டு கலை. இது தண்ணீரின் கூறு. பாம்பு மாதிரி நெளிந்து கொண்டிருக்கும். அதிகமாக நெளிந்தாள் பிரச்சனை.
     ஆக நம்முடம்பில் அக்னி, காற்று, குளிர்ச்சி வாழ வேண்டும். ஆக இது நம்முடம்பில் எப்படி இருக்கிறது? இந்த மண்ணின் தன்மை எலும்பு, நரம்பு, தோல் தசையாக இருக்கும். இது மண்ணின் கூறு. நாம் மண்ணில் விளையக்கூடிய உணவுகளை உண்ணுகிறோம். அது காய்கரியாகவும், கீரையாகவும், கனிகளாகவும், தானியங்களாகவும் இருக்கிறது.
     பிறகு தண்ணீரைக் கொண்டு உண்ணுகிறோம். தண்ணீரைக் கொண்டு சமைக்கின்றோம். உதிரமாகவும், மூளை, மஞ்சை போன்ற மென்மையான திரவப்பொருள்களாக இருப்பது தண்ணீரின் கூறு.
     உள்ளே அக்னியாக இருப்பது சூரியன் கூறு. உள்ளே ஓடுகின்ற காற்று வாயுவின் கூறு. நாம் எப்படி வந்திருக்கிறோம்? உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? உலகம் இயங்குவதற்கான காரணம் இந்த பஞ்சபூதங்கள்தான்.
     பஞ்சபூதத்திற்கு காரணம் தலைவன். அவனைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அவன் அன்பு வடிவாக இருக்கிறான். அப்படி அன்பு வடிவாக இருக்கிறான் என்றால் அவனைப் பற்றி நமக்கு புரியவில்லை. ஞானிகள் அவனை அறிந்து கொண்டார்கள். ஞானிகள் பஞ்ச பூதத்தின் இயக்கத்தை தெரிந்து கொண்டார்கள்.
     பஞ்ச பூதங்களில் இயக்கம் நமக்கு மூச்சுக்காற்றாக இருக்கிறது. மூச்சுக்காற்று ஒரு நாளைக்கு 21,600 முறை வந்துபோகும். இந்த மூச்சுக்காற்றின் அசைவுக்கு காரணம் இந்த பஞ்சபூதங்கள். ஆன்மா ஒரு அணுவைப்போல உடம்பின் உள்ளே இருக்கும். உள்ளே இருக்கின்ற ஆன்மா இப்படி மூச்சுக்காற்றை இயக்கிக் கொண்டிருக்கும். இந்த மூச்சுக்காற்றின் இயக்கத்தை ஞானிகள் அறிந்து கொண்டார்கள்.
     நாம் வாழ்க்கையை இப்பொழுது நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஞானிகளுக்கு மட்டும்தான் “ஆன்மாதான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது” என்பதை தெரிந்து கொண்டார்கள். மூச்சுக்காற்றின் இயக்கம்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது. காற்றின் இயக்கம் நின்றுவிட்டால் பிணம். அது ஏன் நிற்க வேண்டும். நாம் நடமாடிக் கொண்டிருக்கிறோம். மனைவி, மக்களோடு இருக்கிறோம். வியாபாரம் செய்து பொருள் சம்பாதிக்கிறோம். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கிறோம்.
     நாம் எதை செய்து கொண்டிருந்தாலும் மூச்சுக்காற்று இயங்கிக் கொண்டுதான் இருக்கவேண்டும். எங்கும் வியாபித்த காற்றுதான் மூச்சுக்காற்று. எங்கும் வியாபித்த காற்றுக்கு பரமாத்மா என்றும், அதன் ஒரு பகுதியாக நம்முள்ளே வந்து போகும் மூச்சுக்காற்றிற்கு ஜீவாத்மா என்றும் பெயர்.
     சரி ஏன் சாக வேண்டும். அவ்வாறு சாவது உயிர் மீது குற்றமா? அல்லது உடல்மீது குற்றமா? அல்லது நம்முடைய செயல் மீது குற்றமா? அல்லது இயற்கையின் மீது குற்றமா? அல்லது கடவுள் மீது குற்றமா? என்ன காரணத்திற்காக நான் சாக வேண்டும்? ஏன் என்னை பிறக்க வைத்தாய். ஏன் என்னை வாழவைக்கின்றாய்? ஏன் எனக்கு காமம் தந்தாய்? ஏன் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் மாற்றிமாற்றி தருகின்றாய்? வாழ்வதற்கு என்ன காரணம்? ஏன் நரை திரை வந்தது? ஏன் ஈளை இருமல் வந்தது? ஏன் தளர்ந்து போனேன்? குழந்தையாக இருந்தேன். பத்து வயது பையனாக இருந்தேன். முப்பது வயதில் திடமாக இருந்தேன். முதுமை வந்து ஏன் சாக வேண்டும். இது எல்லாம் புரியாத புதிர்.
     நான் வாழ்கின்றேனோ? அல்லது எல்லாம்வல்ல இயற்கை அன்னை வாழவைக்கின்றதோ? அப்படி நான் வாழ்வதாக இருந்தால் நூறு ஆண்டுகள் அல்லது இருநூறு ஆண்டுகள் அல்லவா வாழ வேண்டும். நான் வாழ்கின்றேனா? அல்லது என்னை நீ வாழவைக்கின்றாயா? நான் வாழ்வதாக நினைப்பது மூடத்தனமா? அல்லது என்னை நீ வாழவைப்பதாக நினைப்பது மூடத்தனமா? ஆக பஞ்சபூதங்களே நீ என்னை வாழவைக்கின்றாய்.
     ஏ பஞ்சபூதங்களே! நீங்கள் வாழ வேண்டும். நமசிவாய வாழ்க! நீ வாழ வேண்டும். நானும் வாழ வேண்டும். நீ இருக்கும் வரையில் நானும் வாழ வேண்டும். நீ என்றும் இருப்பாய். இன்னும் பல லட்சம் கோடி ஆண்டுகள் இருக்கப்போகின்றாய். ஆனால் உன்னால் படைக்கப்பட்ட நான் நரை, திரை, மூப்பு வந்து இறக்கப்போகின்றேன். ஏன் எனக்கு இந்த இழிநிலை வரவேண்டும். நானும் வாழ வேண்டும். உன்னை நான் வாழ்த்துகின்றேன்.
     நமசிவாய வாழ்க என்று வாழ்த்துகின்றேன். மண், தண்ணீர், காற்று, அக்னி, ஆகாயம் என நீ வாழ்கின்றாய். ஆனால் உன்னால் படைக்கப்பட்ட நான் வாழவில்லை. ஏன் என்னை கொள்ள வேண்டும். நான் சாக விரும்புகின்றேனோ? அல்லது நீ என்னை கொல்கிறாயா?
     நான் சாப்பிட விரும்புகின்றேனோ? அல்லது நீ பசியை தருகின்றாயா? உணவுப்பொருளை நான் உருவாக்கினேனா? அல்லது நீ உண்டாக்கினாயா? சுவையை அறிகின்ற நாக்கு நீ கொடுத்ததா? கனிகளில் சர்க்கரை, தேன் இவற்றில் சுவை உண்டா? இல்லை என் நாக்கில் சுவை உண்டா? பொருளில் சுவை இருக்கிறதா? அல்லது நாக்கில் சுவை இருக்கிறதா?
     பொருளில் சுவை தந்தது நீயே. சர்க்கரை தேன் போன்ற பொருள்களுக்கு சுவையை நீ தருகின்றாய். சுவைக்கக்கூடிய நாக்கும் தந்திருக்கின்றாய். நீ வெளியில் சுவைக்கக்கூடிய கனி வர்க்கமாகவும் இருக்கின்றாய். எவ்வளவு கனிகளாக இருந்தாலும் காய்களாக இருந்தாலும் இவற்றையெல்லாம் சுவைக்கக்கூடிய அறிவை தந்திருக்கின்றாய். அதை சுவைக்க நாக்கையும் தந்திருக்கின்றாய். இவ்வளவு பெரிய வாய்ப்பை தந்தாய். அவைகளை நான் சுவைக்கின்றேன்.
     ஆக காய்கறிகளாகவும், கனிகளாகவும், தானியங்களாகவும், தேனாகவும், சர்க்கரையாகவும் அள்ளி கொடுத்திருக்கின்றாய். இப்படி எல்லாம்வல்ல இயற்கை அன்னை அற்புத உணவுகளை கொடுத்து நீங்கள் வாழுங்கள் பிள்ளைகளே! மகனே! என்று சொல்கிறாள்.
     ஆனால் இவற்றை விட்டு விட்டு ஆடு, கோழி அறுத்து அதன் புலாலை உண்ணுகிறேன். ஏன் புலால் உணவை உண்ணுகிறேன்? ஏன் இப்படி மூர்க்கத்தனமான எண்ணம் வந்தது? இதற்கு எல்லாம் ஆசான் பதில் சொல்ல மாட்டார்.
     ஆக இவ்வளவு பொருட்களையும் கொடுத்த கடவுளே என்னை வாழ வைக்க வேண்டும். அதற்காக உன்னை மனதார வாழ்த்துகிறேன். நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உன்னை நான் மனமார வாழ்த்துகிறேன். என்ன காரணம்? நீ வாழ்வாய் என்பது தெரியும். ஆனால் சீற்றம் மட்டும் வரக்கூடாது. நிலநடுக்கமோ, புயலோ, கடும் வெப்பமோ வராமல் சாந்தமுடன் வாழ வேண்டும். நீங்கள் வாழ வேண்டும். இப்படி ஞானிகள் எல்லோரும் இயற்கையை புரிந்து கொண்டார்கள். மகான் மாநிக்கவாச்கராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அவர்கள் இயற்கையை உணர்ந்தவர்கள்.
     பசிக்கு காரணம் என்ன? காமத்திற்கு காரணம் என்ன? நான் இந்த இயற்கையை செய்தேனா? அல்லது இயற்கை தானாக அமைந்ததா? பெண்ணையும் ஆணையும் படைத்தாய், அவர்களுக்கு காமத்தை தந்தாய், உடலுறவு தந்தாய். புத்திர பாக்கியம் கொடுத்தாய். அதிலே நான் கிடக்கின்றேன். ஆக இவ்வளவும் நீ கொடுத்தது என்று அறிந்து கொண்டேன். ஆக இவ்வளவு கருணை பொருந்திய நீ ஏன் என்னை சாகடிக்கின்றாய்? என்று கேட்டவர்கள் எல்லாம் ஞானிகள். என்னை சாகடிக்க வேண்டிய காரணம் என்ன?
     அப்படி அவர்கள் நினைத்தது தான் அதை மகான் மாணிக்கவாசகர் நாதன் தாள் வாழ்க! என்றார். உலகமே வாழ்க! பஞ்சபூதமே வாழ்க! என்று இதற்கு பொருள். உலகமே நீடூழி வாழ வேண்டுமென்று சொன்னார். நீ நல்லபடியாக நீடூழி வாழ்ந்தால் நானும் வாழ்வேன் என்பார்.
     தலைவன் எல்லாம் வல்ல பரம்பொருள், அவனை அழைத்து உனக்கு மட்டும் முதுமை வரவில்லை. உனக்கு முதுமை இல்லை, பேராசை இல்லை, வஞ்சனை இல்லை, நரை, திரை இல்லை, நீ சாகவில்லை ஏன்? அதற்கு தலைவன் சொன்னார், “நான் பற்றற்றவன், வேண்டுதல், வேண்டாமை இலான். நான் ஒன்றை விரும்ப மாட்டேன், வெறுக்கவும் மாட்டேன், எனக்கு போட்டியில்லை, பொறாமையில்லை, வஞ்சனையில்லை. நான் சாகாமல் இருக்கிறேன். நான் அரூபமாக இருக்கிறேன். அதனால் மரணமில்லாமல் இருக்கிறேன்” என்றார்.
     ஆனால் நீயோ ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டதால் நாத விந்துவால், விந்து சுக்கிலத்தின் சேர்க்கையால்தான் உனக்கு இந்த குணக்கேடு வந்தது. நீ தோற்றமாக இருக்கிறாய். ரூபமாக இருக்கிறாய். உன்னுடைய உடல், தோற்றமாகக் கூடிய பரு உடம்பு, பருப்பொருளாக இருக்கிறாய். ஆனால் நானோ நுண்ணுடம்பாக இருக்கிறேன். அரூபமாக இருக்கிறேன். நீ என்னைப் போல் ஆக வேண்டும். அப்படியிருந்தால் உனக்கு மரணமில்லை.
     அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அன்புதான் வழி என்றார். நான் அன்புக் கடலாக இருக்கின்றேன். நான் இந்த உலக மக்களுக்கு தானியங்களைக் கொடுத்திருக்கிறேன். நெல், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்திருக்கிறேன். காய்கறிகளாக, கனிகளாக, பாலாக கொடுத்திருக்கிறேன். இந்த உலக மக்கள் இதுவரை சாப்பிட்டிருக்கிறார்கள். உலக மக்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளும் சாப்பிட்டு, சாப்பிட்டு அழிக்கப் பார்க்கின்றது. ஆனால் தானியங்களோ மற்ற காய்கறிகளோ இதுவரை அழியவே இல்லை.
உலக மக்களே, சாப்பிட்டுப் பாருங்கள், உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் அழித்துப் பாருங்கள். பலலட்சம் கோடி ஆண்டுகளாக தானியங்களும், காய்கறிகளும், கனிகளும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் இவற்றை அழிக்க முடியவில்லை. இவ்வளவையும் நான் கருணை கொண்டு செய்திருக்கிறேன். நன்றாக சாப்பிடுங்கள். ஆனால் உங்களால் அழிக்க முடியவில்லை.
இப்போது நீங்கள் எண்ணை புரிந்து கொள்ள வேண்டும். என்னால் படைக்கப்பட்ட ஒரு நெல்லுக்கு நூறு நெல் வரும். நூறுக்கு ஆயிரம் வரும். ஒரு மாங்கொட்டையை நட்டு வைத்தால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கைகளையும், கனிகளையும் தந்துவிடும். அதை அழிக்க முடியாது. ஆனால் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் திறமையை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு தன்மை  உள்ளவன், இவ்வளவு ஆற்றல் உள்ளவன் எதை வேண்டுமானாலும் செய்வோம். யாருக்கும் செய்வோம். எல்லா வல்லமையும் எங்களுக்கு உண்டு. பெண்ணை ஆனாக்குவோம், ஆணை பென்னாக்குவோம்.
இப்படி வல்லமையுள்ள நீங்கள், ஏன் கொடுமையான காமதேகத்தைக் கொடுத்தீர்கள்? இந்த கொடிய காம தேகத்தை கொடுத்த நோக்கம் என்ன? இந்த கொடிய காமதேகத்தைக் கொடுத்ததே அதற்குள் உள்ள அற்புதத்தை காண வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஜோதி உடம்பை பெற வேண்டுமென்றால் இந்த காமதேகம் அவசியம். காமதேகம் இருந்தால் குணக்கேடு வரும். குணக்கேட்டை எப்படி நீக்குவது? அந்த குணகேட்டை நீக்கவும் எங்களுக்குத் தெரியும்.
ஜோதி உடம்பிற்கு மேலே இருக்கும் அந்த உடம்பிற்கு குணக்கேடு வரத்தான் செய்யும். பெரியவர்கள் துணையிருக்கு அல்லவா? மகான் மாணிக்கவாசகர் இருக்கிறார், அவரை அழைக்கின்றோம். எப்படி ஐயா நீங்கள் இந்த வாய்ப்பை பெற்றீர்கள்? இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம்வல்ல தலைவன் அரூபமாக இருக்கின்றான். நானும் அரூபமாக இருக்கின்றேன் என்றார்.
எல்லாம்வல்ல தலைவன் மூன்று செயல் செய்வான் அல்லது அதே எல்லாம் வல்ல இயற்கை கடவுளும் மூன்று செயல்தான் செய்யும். ஆக்கல் – உயிரினங்களை உண்டாக்குதல், காத்தல், அழித்தல். இப்படி மூன்றுதான் செய்யும். அதற்கு அவ்வளவு தான் சக்தி. ஆனால் ஞானிகளாகிய நாங்களோ ஐந்தொழில் செய்கிறோம். ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் போன்ற ஐந்தையும் செய்வோம்.
நாங்கள் இயற்கையை அறிந்து இந்த தேகத்தை புரிந்து இந்த உடம்புக்குள்ளேயே உள்ள சக்தியை தட்டி எழுப்பினோம். எழுப்பியதால், ஐந்தொழில் செய்கிறோம். மகான் மாணிக்கவாசகர் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ஐந்தொழில் செய்யும் வல்லமை பெற்றவர். அவரைக் கேட்டால் நீ என்னைக் கேள் என்பார். எல்லாம்வல்ல இயற்கையை உன்னால் அறிய முடியாது.
எந்த இயற்கை ஆணையும், பெண்ணையும் தோற்றுவித்தது அல்லவா, யார் காமதேகத்தை தோற்றுவித்து காமத்தை உண்டாக்கினானோ? அவனைப் பிடிக்க வேண்டும். ஆனால் அவனை இயற்கைக் கடவுளை நேராக பார்க்க முடியவில்லை. என்ன செய்வது? நீ என்ன அவனைப் பார்க்கிறாய். எங்களைப் பார் என்பார் மகான் மாணிக்கவாசகர்.
 ஞானிகளாகிய நாங்களெல்லாம் இயற்கையின் அமைப்பையும் அதனுடைய இயல்புகள், அதனுடைய சித்து விளையாட்டுக்களை எல்லாம் அறிவோம். எங்களுக்கு தெரியும், நீ என்னைப் பிடித்துக் கொள். எப்படி ஐயா உங்களைப் பிடிக்க முடியும். இதற்க பெரிய மந்திரம் வேண்டுவதில்லை. மகான் மாணிக்கவாசகர் ஐயா, மனம் போராடிக் கொண்டிருக்கிறது அப்பா, நீங்கள் அடைந்த அந்த பேரின்பத்தை, அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அடைய விரும்புகின்றேன்.
நீங்கள் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று என்னை நீங்கள் கேட்கலாம் அல்லவா என்பார் மகான் மாணிக்கவாசகர். இப்படி நீ என்னைக் கேட்டால் நான் அருள் செய்கிறேன் என்பார். அப்போதுதான் உனக்கு புரியும். நாம் யார்? எப்படி வந்திருக்கிறோம்? ஏன் நரை திரை வந்தது? ஏன் காமம் வந்தது? ஏன் பந்தபாசம் வந்தது? ஏன் நரகம் வந்தது? ஏன் சொர்க்கம் வந்தது?
நரகம் சொர்க்கம் இரண்டும் நம் உடம்புக்குள்ளே இருக்கிறது. தெளிந்த அறிவு உள்ளவனுக்கு இந்த உடம்பே சொர்க்கம். தெரியாத மடையர்களுக்கு இது நரகமாக இருக்கும். பெரியோர்கள் நரக சொர்க்கத்தை கடந்தவர்கள். நரக சொர்க்கம் வேறு ஒன்றுமில்லை. நரகம் என்பது இந்த உடம்பு. சொர்க்கம் என்பது இந்த உடம்பின் உள்ளே இருக்கும் ஜோதி.
இதை அறிவதற்கும் அடைவதற்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? மகான் மாணிக்கவாசகரை ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி என்று வணங்குகிறோம். ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி என்று வணங்குகிறோம். அவர்களை வணங்குவதின் நோக்கமென்ன என்று கேட்பார்கள்.
ஐயா எனக்கு எதை கேட்க வேண்டுமென்றே தெரியவில்லை. என்னுடைய வறுமையை ஒழிக்க கேட்பதா, என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்லையே அதை தீர்க்க வேண்டுமென்று கேட்பதா, பொல்லாத நோய் இருக்கிறதே அதை போக்க கேட்பதா அல்லது இதையெல்லாம் தீர்ப்பதற்காக உன்னை கேட்பதா? உங்களிடம் எதை கேட்பதென்றே எனக்கு தெரியவில்லை.
அன்றாட பிரச்சனைகளில் எவற்றிலெல்லாம் நமக்கு மனச்சுமை வருகிறதோ? நமக்கு எவைகளெல்லாம் கவலையை உண்டாக்குகின்றதோ அதிலிருந்து முதலில் விடுபட கேட்க வேண்டும். மகான் மாணிக்கவாசகரையோ மகான் அகத்தீசரையோ வறுமை தீர வேண்டுமென்று கேட்கலாம். நாளைக்கு என்ன செய்வோம்? என்ன ஏற்படுமோ? இந்த பொல்லா வறுமை தீர வேண்டுமென்று கேட்பது நியாயம் என்பார்கள்.
அவர்கள் அருளால் பொல்லாத வறுமை தீர்ந்தது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை ஐயா? சந்தேகம் என்ற நோய் இருக்கிறது. என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. உலகம் தோன்றும்போதே சந்தேகத்தை உருவாக்கி வைத்திருக்கிறாய். இந்த காமதேகத்தின் காரணமாக சந்தேகம் வந்தது. காமதேகத்தின் காரணமாக அறியாமை வந்தது. இந்த உடம்பின் தன்மையே அறியாமை என்ற இருட்டில்தான் இருக்கும். சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தில் குழப்பம் வந்தது.
புத்திரபாக்கியம் இல்லை என்பான். பிறகு புத்திரபாக்கியம் கிடைத்தது. பிறந்த குழந்தைக்கு கையில்லை, கை ஊனமாக இருக்கிறது. அவ்வளவுதான் இதை பார்த்து பார்த்து தாய் தந்தை மனம் நொந்து போவார்கள். அது அவர்கள் வினைப்பயன். பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை. பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டுமென்று சிந்திப்பான். பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்பான். பிறகு அவர்களுக்கு குழந்தை இல்லை என்பான். இவனைப் பார்த்து ஞானிகளெல்லாம் சிரிப்பார்கள். பிள்ளைகள் இல்லையா ஒன்றும் பேச மாட்டார்கள். உனக்காக வேண்டிக் கொள்கிறேன் என்பார்கள்.
குழந்தை பிறந்த பின்பு அதிலேயே தேனில் விழுந்த ஈ போல உழன்று கிடப்பான். அதை அப்படி செய்ய வேண்டும், இதை இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பான். அதிலும் தாய்மார்கள் குழந்தைகள் விரைவாக வளர வேண்டுமென்பார்கள். பிள்ளைகள் கொஞ்சமாகத்தான் சாப்பிடும். தாய்மார்கள் விரைவாக வளர வேண்டுமென்பதற்காக குழந்தையின் வாயில் உணவை வைத்து திணித்து திணித்து அதிகமாக சாப்பிட வைப்பார்கள். அதனால் வயிற்றுபோக்கு வந்துவிடும். அந்த குழந்தையை நோயாளியாக்கும் வரை விடமாட்டார்கள். இது தாயின் கருணை, தாய்மை அல்லவா.
பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும். காப்பாற்ற வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும். பிள்ளைகள் படிப்பதற்கு முன்பே பிள்ளைகள் திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டுமென்பான். பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்பான். பிறகு மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்பான். உனக்குத்தான் குழந்தை இல்லையென்றாய், குழந்தை பிறந்தது. இப்போது மகளுக்கு குழந்தை இல்லை. மகனுக்கு குழந்தை இல்லையென்ற கவலை.
ஆக இப்படியே கவலைப்பட்டு கவலைப்பட்டு கடைசிவரையிலும் தன்னைப் பற்றி அறியமுடியாமலேயே போய்விடும். சரி இதற்கென்ன காரணம். உயிர் காரணமா? உடம்பு காரணமா? இயற்கை காரணமா? அல்லது அவனுடைய அறியாமை காரணமா? இப்படி அவன் கடைசி வரையிலும் சிந்தித்து சிந்தித்து சிந்தித்து குறையோடுதான் இறப்பான். காமத்தால் தோன்றி காமத்தால் வாழ்ந்து காமத்தால் இறப்பான்.
இதற்கிடையில் இருக்கும் இவனுடைய திட்டங்கள் கணக்கில் அடங்காதது. கணக்கில் அடங்காத கற்பனைகளை செய்வான். விரிந்து விரிந்து விரிந்து மனம் விரிந்து கொண்டே கற்பனையில் இருக்கும். சரி இவ்வளவு கற்பனைகளும் செய்தாயே, நாளைக்கு மரணம் வருமே என்ன செய்வாய்? இதை சிந்திக்க சொல்வதுதான் இந்த சங்கத்தின் வேலை.
மரணம் வரும். வாழ்வு வருமென்று நினைக்காதே. மரணம் வரத்தான் செய்யும், விபத்து நடக்கத்தான் செய்யும். நோய் வரத்தான் செய்யும். நீ இதிலிருந்து தப்பிக்க காவி கட்டிக்கொண்டு ஊருக்கு போவதா? நீ எங்கே போனாலும் உன்னை விடாது. நீ மலையேறினாலும் விடாது. தரையில் படுத்தாலும் விடாது. பட்டினி கிடந்தாலும் விடாது. அதற்கென்னதான் செய்வது. இதற்குள்ளேதான் இருக்க வேண்டும்.
ஞானிகள் என்ன செய்வார்கள்? இல்லறத்திலேயே இருப்பான். நடப்பது நடக்கட்டும் என்று போவான். வியாபாரம் செய்வான். எல்லாம் அப்படித்தான் இருக்கும். நீ இந்த பொழுதை நல்ல பொழுதாக பயன்படுத்திக் கொள். வியாபாராம் செய்கிறாய். வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும்.
பிள்ளைகளுக்கு குழந்தை இல்லையா கவலைப்பட மாட்டான். பிள்ளைகள் படிக்கவில்லையா கவலைப்பட மாட்டான். என்னய்யா பிள்ளைகள் பற்றி கவலைப்படவில்லை என்று கேட்டால், நீ கவலைப்பட்டு என்ன சாதித்தாய்? சில பெண்கள் முப்பது, முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதானாலும் திருமணம் கைகூடாது. தாய்தந்தை மூலையில் உட்கார்ந்து அழுவார்கள். நீ அழுது பார் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது.
கவலைப்படுவதால் ஒன்றும் ஆகாது. புண்ணியம் செய்தவன்தான் கவலைப்பட வேண்டும். புண்ணியம் செய்தவன் நினைத்தால் நடக்கும். புண்ணியவான்கள் ஐயோ பிள்ளைகளுக்கு பதினெட்டு, இருபது வயதாகிவிட்டதே நம் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லையே என்று அவன் நினைக்க வேண்டும். அதை விட்டு நீ கவலைப்பட்டுக் கொண்டு அழுதால் என்ன நடக்கும்? பிள்ளைகளுக்கு முப்பது, முப்பத்தைந்து, நாற்பது வயதாகிவிட்டது. பெண் கிழவியாகிவிட்டாள். அவளை என்ன செய்வாய்? உட்கார்ந்து அழுது பார். முடமான பிள்ளையை கண்டு அழுதிருக்கிறாய். அப்படி ஒரு பிள்ளை உனக்கு இருக்கிறது. உன் பெண்ணுக்கு முப்பதைந்து நாற்பது வயது ஆகிறது. திருமணம் செய்து வைக்க யோக்கியதை இல்லை. என்னடா புண்ணியம் செய்திருக்கிறாய் நீ. என்ன புண்ணியம் செய்துவிட்டு எந்த உரிமையில் கேட்கிறாய்?
நீ கவலைப்படலாம். நீ கவலைப்படதான் முடியுமே தவிர பிரச்சனைகளை உன்னால் தீர்க்க முடியுமா? உன் பிரச்னையை மகான் மாணிக்கவாசகர்தான் தீர்த்து வைப்பார். மாணிக்கவாசகர் ஐயா “என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. பிள்ளைக்கு இருபத்தைந்து, முப்பது வயதாகிவிட்டது. பெண்ணிற்கு திருமணத்திற்கு வழியில்லை.” இப்படி சொல்லும்போது ஞானிகள் அவனை உற்று பார்ப்பார்கள். என்ன புண்ணியம் செய்தாய் நீ? மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டாயா? என்றைக்கு என் திருவடியைப் பூஜை செய்தாய்?
உன் ஆயுள் முழுவதும் அது இல்லை அது இல்லை என்று கற்பனை செய்து அழுது கொண்டிருந்தாய். உன்னால் அழுது கொண்டிருக்கத்தான் முடியும். பிரச்னைக்கு தீர்வு காண முடியுமா? உன்னால் ஏழை எளிய மக்களுக்கு மனம் உவந்து அன்னதானம் செய்ய முடியுமா? அன்னதானம் செய்திருக்கின்றாயா? அப்படிப்பட்ட நினைப்பு எப்போதாவது உனக்கு வந்ததா? இல்லையே, இப்படி இருக்கும்போது எப்படி உன் குடும்பத்திற்கு விமோசனம் வரும்? எப்படி உன் குடும்பம் விளங்கும்? உன் குடும்பத்தில் என்ன சுபகாரியம் நடக்கப்போகிறது.
அகீர் பகீர் என்று அஞ்சி அஞ்சி நடுங்குகின்ற மனிதா என்றாவது புண்ணியபலத்தை தேடிக்கொள்ள நினைத்தாயா? நாங்களெல்லாம் இருக்கின்றோம் அல்லவா? எதைக் கேட்டாலும் தருவதற்கு நாங்கள் இருக்கின்றோம் அல்லவா? மகான் மாணிக்கவாசகா என்றாயா? மகான் அகத்தீசா என்றாயா? மகான் நந்தீசா என்றாயா? மகான் இராமலிங்கசுவாமிகளே என்றாயா? சரி இப்படித்தான் கேட்கவில்லை. யாராவது சொன்னாலும் இப்படி கேட்பாயா நீ? கேட்கத்தான் உன் வினை விடுமா? நயமாக கேட்கத்தான் உன்னை விடுமா?
அதுதான் போகட்டும், உன்னை பொல்லாத காமம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதே, இருபது, இருபத்தைந்து வயதிலிருந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காமவெறி, ஒரு பக்கம் மனஉளைச்சல், இது இல்லை, அது இல்லை என்ற தடுமாற்றம் இப்படியெல்லாம் இருக்கிறது.
என்றைக்கு ஐயா நீ புண்ணியம் செய்தாய்? யாரும் எனக்கு சொல்லவில்லை ஐயா என்றால், சொல்லி என்றைக்கு ஐயா நீ கேட்டாய்?  நீ என்றைக்கு கேட்டாய்? அன்னதானம் செய்ய வேண்டுமென்று எத்தனை முறை சொல்கிறோம், நம்முடைய முன்னோர்கள் மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற பெரியோர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்றைக்கு நீ புண்ணியம் செய்தாய்? செய்ய மனது வந்ததா உனக்கு? செய்யத்தான் அந்த பாவம் விடுமா? அந்த பாவம்தான் லோபித்தனமாக இருக்கின்றது? இப்படி லோபித்தனமாக இருப்பதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்றான். நீ செய்த பாவம்தான் உனக்கு லோபித்தனத்தை உண்டு பண்ணியது.
அறியாமை என்பது எமனா? ஆம் அறியாமை என்பது எமன்தான். அப்ப அந்த அறியாமையை எப்படி நீக்குவது? அறிந்தவன், தெரிந்தவன் சொல்ல வேண்டும். பெரியோர்களைக் கேட்டால்தான் இதைப்பற்றி தெரியும். இல்லையென்றால் தெரியாது.
ஆக இப்படியெல்லாம் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வர வேண்டும். அறியாமைதான் லோபித்தனத்திற்கு காரணம். இந்த லோபித்தனம் என்ற கொடிய பாவியை எப்படி வெல்வது? தயைசிந்தை உள்ள ஞானிகளை வணங்கி பூஜை செய்தால் வெல்லலாம். கருணையே வடிவான மகான் இராமலிங்கசுவாமிகளை பூஜை செய்து பார், தயைசிந்தை வரும். மகான் மாணிக்கவாசகரை பூஜை செய்து பார். நல்ல மனம் வரும்.
அப்பொழுது, படைக்கும் பொழுதே நல்ல மனசோடு சேர்த்தே படைக்கக்கூடாதா? படைக்கும்போதே நல்ல மனமும், தீய மனமும் சேர்ந்தே இருக்கும்.
சேர்க்கை இருக்கல்லவா? சேர்க்கை சரியில்லை ஐயா! இரண்டும் கசடு. சுக்கிலமும், சுரோணிதமும் கசடு. ஒரு கடுகளவு எடையுள்ள ஆண் சுக்கிலம்தான் கருத்தரிப்பதற்கு காரணம். இரண்டே முக்கால் கிலோ எடை உள்ள குழந்தை தாயின் சரீரத்தில் இருந்து வருகிறது. தாயின் பத்து மாத தீட்டு வெளியாகாமல் சேர்த்து வைத்த உடம்பு.
இதற்கு என்ன யோக்கியதை இருக்கும்? கடுகளவு சுக்கிலத்தை கொண்ட கர்ப்பத்தில் இரண்டே முக்கால் அல்லது இரண்டரை கிலோ எடை உள்ள குழந்தை பிறந்தது. அது பத்து மாத தீட்டில் சேர்ந்தது. பிறகு அதற்கு என்ன குணம் இருக்கும்.
     அதை தலைவன் அப்படித்தான் அமைத்திருக்கிறான். பெரியவர்கள் என்ன செய்தார்கள்? புரிந்து கொண்டார்கள். அந்த சேர்க்கையை புரிந்து கொண்டார்கள். சேர்க்கையை புரிந்து கொண்டு அதனுள்ளேயே இருந்து மெதுவாக நல்லோர்கள் பெரியவர்கள் பேச்சைக் கேட்டு தினம் தியானம் செய்து அன்னதானம் செய்து இப்படியே வந்தால் அந்த சீற்றம் குறையும்.
     அது எந்த சீற்றம்? அந்த காமத்தால் வந்த கேடுகள் மாறும். காமம் செயற்கையா? இல்லை இயற்கை. ஆக காமமும் இயற்கை, லோபித்தனமும் இயற்கை, வஞ்சகமும் இயற்கை.
     இப்படி தோற்றுவிக்கப்பட்டு வந்ததை ஞானிகள் என்ன செய்கிறார்கள்? பூஜை செய்து தயை சிந்தை வேண்டுமென்று ஆசானை கேட்பார்கள். அப்படி கேட்டு தப்பித்துக் கொண்டேன். எனக்கு தயை சிந்தை வேண்டும், செல்வம் வேண்டும், வறுமை தீர வேண்டும், நோய் தீர வேண்டும், புத்திரபாக்கியம் வேண்டும், சொந்த வீடு வேண்டும் இப்படியெல்லாம் கேட்டிருக்கிறேன். கேட்டதெல்லாம் எனக்கு கொடுத்திருக்கிறாய்.
     ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் கையில் மறைத்து வைத்திருக்கிறாய் என்றான். நான் எதையும் மறைக்க மாட்டேன் மகனே நீ கேட்கவில்லை. இத்தனை செல்வத்தையும் கேட்டாய் தந்தேன். நீ விரும்பியதையெல்லாம் அள்ளி கொடுத்தேன். ஒன்றே ஒன்றை கேட்கவில்லை. எனக்கு தயைசிந்தை வேண்டும்.
                தயைசிந்தை இல்லையென்றால் உன் திருவடியை பூஜை செய்ய முடியாது. அப்ப தயை சிந்தையை நீ கொடுக்க வேண்டுமென கேட்டிருக்க வேண்டும். இப்படி யாரை கேட்க வேண்டுமென்று சொல்லிக் கொடுக்க வேண்டும்? மகான் மாணிக்கவாசகர், “நீ கேட்டதையெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறேன் மகனே! தயைசிந்தை வேண்டுமென்று கேள்” என்றார்.
     தயைசிந்தை இல்லையென்றால் ஞானத்திற்கு வர முடியாது. ஞானத்தை பெறுவதற்கு தயைசிந்தைதான் மூலதனம். அந்த தயைசிந்தையை ஞானிகள்தான் தருவார்கள். அறிவுக்கடலாக இருக்க கூடியவர்கள் ஞானிகள் சிறந்த அன்பின் வடிவாக இருக்கிறார்கள். அன்பின் வடிவாக இருக்கக்கூடிய ஞானிகளை அவன் கேட்பானா? மகனே நீ இவ்வளவையும் நீ கேட்டிருக்கிறாய்.
    
     ஆனால் உன்னிடம் இருக்கும் குணக்கேட்டை நீ சொல்லவேயில்லையே. உன்னிடம் உள்ள குணக்கேட்டைப் பற்றி தெரியுமா உனக்கு. என்றைக்கு உனக்கு குணக்கேடு தெரிந்தது. இந்த குணக்கேட்டைப் பற்றி யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. சாகும் வரையில் நம்மிடம் என்ன பண்பு இருக்கிறது. பொறாமை உள்ளவனா? வஞ்சனை உள்ளவனா? கொடிய கோபம் உள்ளவனா? என்ன குணக்கேடு உள்ளது என்று கடைசிவரையில் தெரியாமலேயே எண்ணை பிணமாக்கி விட்டாயே!
     இப்படி ஏன் என்னை அநியாயமாக கொன்றாய். ஏன் இப்படி குணக்கேடு வந்தது? இதற்கு தலைவன் சொல்வான், குணக்கேடு பற்றி புரிந்த நான்தான் சொல்ல வேண்டும். உன்னிடம் பொறாமை இருக்கிறது, வஞ்சனை இருக்கிறது, பழிவாங்கும் உணர்ச்சி இருக்கிறது, புலால் உண்ணும் பழக்கம் இருக்கிறது. இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் நீ, உன்னிடமுள்ள குணக்கேடுகளைப்பற்றி எனக்கு தெரியவேண்டுமென்று என்னை நீ கேட்கவேண்டும்.
     உன்னிடம் உள்ள குணக்கேடுகள் உனக்கு தெரியாமல் இருக்க காரணம், நீ செய்த குற்றமா? நான் செய்த குற்றமா? என்றால் அது நீயும் செய்யவில்லை நானும் செய்யவில்லை என்பான் தலைவன். அது இயல்பு. அதை நீ புரிந்து கேட்க வேண்டும். என்னிடமுள்ள குணக்கேடுகளை புரிந்து கொள்ளவும் நீக்கிக்கொள்ளவும் நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். ஞானிகள் எல்லோரும் அப்படித்தான் கேட்கிறார்கள். எனக்கு சாந்தம் வேண்டும். தயைசிந்தை வேண்டும். எப்போதும் இப்படிப்பட்ட ஆர்வம் வேண்டுமென்று கேட்கிறார்கள்.
     ஆனால் தீமை செய்வதற்கு உனக்கு ஆர்வம் உண்டு. டிவி பார்க்கிறாய். தொடர்ந்து டிவி பார்க்கிறாய். பத்து நிமிடம் உட்கார்ந்து தியானம் செய்யமுடியவில்லை. கேட்டால் நேரமில்லை என்கிறான். இருபத்துநான்கு மணிநேரமும் நீ உலகநடையில் இருக்கின்றாய். மனைவி, மக்கள் என்று தடுமாறிக் கொண்டிருக்கிறாய். இவையெல்லாம் நிலையில்லாதது என்று அறிந்தவர்கள் ஞானிகள்.
     இதில் கவனம் செலுத்துகின்ற நீ ஒரு பத்து நிமிடமாவது திருவாசகத்தை படித்து மகான் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி என்று சொன்னாயா? திருவாசகத்தை படித்தாயா? என்றைக்கு கேட்டாலும் நேரமில்லை என்பாய்.
     இப்பொழுது நேரம் வந்துவிட்டது என்பார்கள் ஞானிகள். எமன் வந்து பிடரியில் அடித்து கொண்டு போவான். சக்கரவர்த்தியையே தூள்படுத்திவிட்டு போவான். கிட்டத்தட்ட எண்பது வயது வரையிலும் வாழ்ந்திருக்கிறாய் அல்லவா? என்றைக்காவது தியானம் செய்வதற்கு நேரம் கிடைத்ததா? இதுதானா? இப்படிதானா ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்.
     நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளே பிழைத்துக் கொள்ளுங்கள். முற்றுபெற்ற முனிவர் இராமலிங்க சுவாமிகள் இருக்கிறார். அவர் திருவடியை பூஜை செய்யுங்கள்.
     ஆனால் இராமலிங்கசுவாமிகளிடம் “அடியேன் தயை சிந்தை உள்ளவனாக இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற அருள் செய்ய வேண்டும். அடியேன் புண்ணியவான் ஆவதற்கு அருள் செய்ய வேண்டும். அதற்குரிய பண்புகளையும் பரிபக்குவத்தையும் தரவேண்டும்” என்று கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து கேட்க வேண்டும். ஓரிரு நாட்களில் கேட்டு பெற முடியாது.
     அதற்காகத்தான் நம்மை சிவபுராணத்தை மெதுவாக படிக்கச் சொன்னார். நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! எனவே பஞ்ச பூதங்களும் வாழவேண்டும். நாமும் வாழ வேண்டும். நாமும் பஞ்சபூதம்தான். பஞ்சபூதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நீ எவ்வளவு நாள் இருப்பாய்? அது வாழும் நாமும் வாழ வேண்டும்.
     ஆக பஞ்சபூதங்களும் வாழ வேண்டும். அதனால் படைக்கப்பட்ட நாமும் வாழ வேண்டும். பஞ்சபூதத்திற்கு காரணகர்த்தா வாழ வேண்டும். இந்த பஞ்சபூதம் எப்படி இருக்கும்? இந்த பஞ்சபூதத்தின் இயல்பு என்ன?
     அவன்அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
      தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
     -மகான் மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதம் முதல் சூத்திரம் 
     இந்த பஞ்சபூதங்கள் எப்படி இருக்கும்? அவனாக ஆண்பாலாகவும் அவளாக பெண்பாலாகவும், அது என்று அக்றிணையாகவும் இருக்கும். மற்ற ஜீவராசிகளெல்லாம் மனித வர்க்கமல்ல. அவன் அவள் என்பது ஆறறிவு உள்ள மனிதவர்க்கம். இது உயர்திணை. அது என்றால் மற்ற ஜீவராசிகள். இவை ஓரறிவு முதல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள். ஆக தொல்காப்பியத்தில், “ஓர் அறிவதுவே உற்றறிவு” என்று சொல்வார். ஆறறிவு உள்ள மனிதவர்க்கம் உயர்திணை. அதாவது ஆறறிவு உள்ளவன், பகுத்தறிவு உள்ளவன். அது என்பது ஜடப்பொருள் நீங்கலாக உள்ள ஜீவராசிகள்.
     அவன் அவள் அது எனும் – பஞ்சபூதத்தின் இயல்பை நமசிவாய வாழ்க என்று சொன்னார். அதனுடைய தன்மையை புரிந்து அதை எப்படி கொள்ள வேண்டும். வாழ்கின்றது நமசிவாய என்று சொல்லப்பட்ட பஞ்சபூதங்கள். அவள் என்னும் பெண்பாலாகவும், அவன் என்னும் ஆண்பாலாகவும் எப்படி வாழ்கின்றது என்பதை அறிய வேண்டும். அது என்று சொல்லப்பட்ட ஓரறிவு முதல் ஐந்து அறிவு உள்ள மற்ற ஜீவராசிகளாக இருக்கிறது.
     அவை மூவினைமையின் – தோன்றுதல், வாழ்தல், வீழ்தல் (சாதல்) இவை மூன்று வினைச்செயல் என்பார். தோற்றுவித்தல், வாழ்வித்தல், அழிவித்தல். இதை யாரும் மறுக்கவே முடியாது. அவை மூவினையின் – இப்பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பற்ற தன்மை. தூல, சூட்சுமம், அரூபம். மூன்று தொழிலாக இருக்கும். அந்த மூன்று வாத, பித்த, சிலேத்துமம் ஆக மூன்றாக இருக்கும். அதே சமயத்தில் மும்மலம் ஆணவம், கன்மம், மாயை. மல, ஜல, சுக்கிலம். மூன்று மூன்றாக இருக்கும். மூவினையாக இருக்கும். இந்த மூன்று வினை நடந்து கொண்டிருக்கும்.
      அவன்அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
      தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
     -மகான் மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதம் முதல் சூத்திரம்
                என்று புலவர்கள் சொல்வார்கள் என்றார். இந்த உலகத்தை தோற்றுவித்த எல்லாம்வல்ல இயற்கை தோற்றுவித்தது மட்டுமல்லாமல் நம்மை வாழ்விக்கின்றது. பிறகு அதே இயற்கை நம்மை அழிவிக்கின்றது.
     இந்த இயற்கை உயிரினங்களை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், இந்த உடம்பையே சார்ந்திருக்கின்றது என்றார். இந்த உடம்பிலேயே சார்ந்திருக்கின்ற பஞ்ச பூதங்கள் என்றார். “அவன்அவள் அதுஎனும் அவைமூ வினையின் தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்”
     ஆக எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அதுவே நம்முடலில் இருக்கிறது. அந்தம் ஆதி என்மனார் புலவர் – ஆதி அந்தமாக இருக்கக்கூடியது. ஆதி என்றால் தொடக்கம். அந்தம் என்றால் முடிவு. தொடக்கமும் முடிவுமாக இருக்கக்கூடிய ஒன்றை இந்த இயற்கை செய்து கொண்டே இருக்கிறது, செய்து கொண்டே இருக்கும்.
     இது வாழ வேண்டும். நமசிவாய வாழ்க! உலகம் வாழ வேண்டுமென்று அர்த்தம். இந்த பஞ்சபூத இயற்கை இதுவரையிலும் எத்தனை உயிர்களை தோற்றுவித்தது? எத்தனை உயிர்களை அநியாயமாக கொன்றது? (ஞானிகளை தவிர). இதை புரிந்து கொண்டான். ஏ இயற்கையே! நீதான் எனக்கு துரோகம் செய்கின்றாய் என்றார். ஆனால் இயற்கையோ இல்லை மகனே! இல்லை என்று சொல்லி நீ என்றைக்கு என்னை புரிந்து கொண்டாயோ, அன்றுதான் நான் உனக்கு துணையாக இருப்பேன். நான் தாய். எல்லாம்வல்ல இயற்கை தாய் நானே. என்னை புரிந்து கொண்டால் நான் தாயாக இருப்பேன். இல்லையென்றால் நான் காமக்காளியாக மாறிடுவேன். உனக்கு காளி போன்ற காமவிகாரத்தை தருவேன்.  
     ஆனால் நான் சாந்தமுள்ளவள்தான். என்னை நீ புரிந்து கொள்ள வேண்டும். ஆக உன்னுள் இருக்கக்கூடிய நான் மும்மலத்தை சார்ந்திருக்கிறேன். உனக்கு பசியாக இருப்பதும், காமமாக இருப்பதும், நரை, திரை வருவதற்கு காரணமாக இருப்பதும். பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இருப்பதும் நான்தான். நானே உன்னுள் இருக்கிறேன். நானே சுவைக்கிறேன். நானே நடக்கின்றேன். நான் சிரிக்கின்றேன். நானே வாழ்கின்றேன். நான் சாகின்றேன்.
     இயற்கையே நீ கூட என்னுடன் சாகிறாயா? என்றான். நான் ஏன் சாகிறேன்? உன்னோடு சார்ந்திருப்பேன். உன்னோடு மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் சார்ந்திருப்பேன். ஆனால் மூச்சுக்காற்று நின்றுவிட்டால் நான் வெளியே போவேன். மூச்சுக்காற்று அசைவு இருந்தால் நான் உள்ளே இருப்பேன்.
     என் இயக்கத்தினால் நீ இயங்கிக் கொண்டுள்ளாய். உன்னை இயக்கச் செய்கிறேன். உனக்கு நரை, திரை, மூப்பு தந்தேன். உனக்கு ஈளை, இருமலை தந்தேன். பிறகு உன்னை கொன்றேன். உன்னை கொன்று விட்டு வெற்றிகரமாக சிரிக்கின்றேன்.
     இது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஏனம்மா நீ காளியாக மாறினாய்? முன்பு சாந்தமாகதானே இருந்தாய். பின்பு ஏன் நீ இப்படி மாறினாய் என்றான். அதற்கு இயற்கை முன்பு தனித்தனியாக இருந்தபோது சாந்தமாகத்தான் இருந்தேன் மகனே? சேர்க்கையின் காரணமாக காளியாக மாறிவிட்டேன். ஆண், பெண் சேர்க்கையின் காரணமாக நான் காளியாக மாறிவிட்டேன்.
     இயற்கையாகிய என்னை நீ புரிந்து கொண்டால் நான் மீண்டும் சாந்தமாக மாறுவேன். இயற்கையாகிய நானேதான் உடம்பு. இந்த காளியாக இருப்பதும் நான்தான். உடம்பே உனக்கு காளியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டால் அறிந்து கொண்டால் நான் சாந்தமான தாயாக மாறி உனக்கு அமிழ்தபானம் ஊட்டுவேன்.
     ஆக இப்படியெல்லாம் உலகத்தில் இயற்கை சாந்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது ஞானிகள் இவற்றையெல்லாம் புரிந்து கொள்கிறார்கள். ஆக ஆதி அந்தமாக இருக்கக்கூடிய இயற்கை நமக்கு பக்குவத்தை தர வேண்டும். எல்லாம்வல்ல பக்குவத்தை அது தருமா? அல்லது அதை நாமாக பெறுவதா? ஏ இயற்கையே! எனக்கு சாந்தம் தருவாயா? எனக்கு பண்பை தருகின்றாயா? அல்லது பண்பை நான் தேடிப்பெறுவதா? என்றான்.
     என்றைக்கடா நான் பண்பை கொடுத்தேன். உன்னுள் இரண்டையும் சேர்த்துதானே வைத்திருக்கிறேன். எந்த அளவுக்கு உனக்கு மூர்க்கத்தனம் இருக்கின்றதோ? அந்த அளவிற்கு சாந்தத்தினையும் நான் தந்திருக்கிறேன்.
     ஆக இந்த பண்புகளை படைக்கும்போதே நீ ஏன் தரக்கூடாது என்கிறான். வாய்ப்பே இல்லையடா மகனே! என்றான் இயற்கை அன்னை. தேனில் இனிப்பு இருக்கத்தான் செய்யும். வேம்பில் கசப்பு இருக்கத்தான் செய்யும். உடம்பில் காமம் இருக்கத்தான் செய்யும். ஆகவே சாந்தத்தை பெற நீ தேடிப்போக வேண்டும். யாரிடம் போவது என்றான்.
     அதற்கு இயற்கை என்பிள்ளைகள் ஒன்பது கோடி பேர்கள் இருக்கிறார்கள். பாரடா இங்கே! இவர்களெல்லாம் என் பிள்ளைகள். என்னை அறிந்தவர்களல்ல, தன்னை அறிந்தவர்கள். ஆக இப்படி தன்னை அறிந்த இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பிடித்துக் கொள். அவர்களை கேட்டுப்பார். அவர்களைத்தான் கேட்டுத்தான் இயற்கையின் சீற்றத்தை வெல்ல வேண்டும். இயற்கையின் பெருமையும், அதன் கொடுமையும் அறிந்து கொள்ள வேண்டும். கொடுமையை அறிந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
     நான் தேடி வரட்டுமா உன்னிடம்? நீ என்று என்னை தேடுகின்றாயோ? அன்று நான் உன்னிடம் இருப்பேன் என்றாள். என்று என்னை நீ விரும்புகின்றாயோ? அன்று நான் அங்கே இருப்பேன் என்றான். நீ விரும்பவில்லை அதனால் நான் வரவில்லை. ஆனால் உன்னைவிட்டு நீங்கவும் இல்லை.
     உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
      உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
      உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
      உள்ளம் அவனை உருவறி யாதே.
    திருமந்திரம் – திரோபவம்(மறைத்தல்) – கவி எண் 431
    
     உள்ளத்து ஒருவனை – மனதில் இருக்கின்றான். இதை,
     அவன்அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
      தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்.
     -மகான் மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதம் முதல் சூத்திரம்
     என்பார் மகான் மெய்கண்ட தேவர்.
     உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை – அவன் மனதை விட்டு ஓரடி கூட விலகமாட்டான்.
     உள்ளமுந் தானும் உடனே இருக்கினும், உள்ளம் அவனை உருவறி யாதே – இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம். அவனும் இருக்கின்றான். நானும் இருக்கின்றேன். ஆனால் அவனை அறியமுடியாது. என்ன காரணம்? உபதேசிக்க ஆளில்லை.
     அவனை உரு அறிய முடியாது. நானும், அவனும் கலந்துதான் இருக்கிறோம். அது ஆதிபந்தம். தோற்றுவித்த இயற்கை அன்னை, தோற்றுவித்தது மட்டுமல்லாமல் நம்மோடு சார்ந்திருக்கிறாள்.
     ஆக அவளை அறிய முடியாது. அவளை அறிந்து கொள்வதற்கு என்ன உபாயம்? அறிந்தவன் திருவடியை பிடித்துக் கொள். திருமூலதேவா என்று அழைத்துப்பார். திருமூலதேவா என்றால் அருள் செய்வார். அப்போது எவ்வாறு காண்பது? எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை. இப்படியெல்லாம் உள்ளது எவ்வாறு காண்பான்?
     தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
      தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
      தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
      தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
    திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 129
               
                தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே என்றும், எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை.
     உள்ளமும் தானும் உடனே இருப்பினும், உள்ளம் அவனை உருவ றியாதே என்றும், தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம், அந்தம் ஆதி என்மனார் புலவர். ஆக ஆதியும், அந்தமும் தோற்றுவித்த மலத்துள்ளே இருக்கின்றது என்பார்.
     இப்படியெல்லாம் தோற்றமும் முடிவாகவும் இருக்கக்கூடிய இயற்கை சக்தி மும்மலத்தொடு சேர்ந்திருக்கின்றது என்றார். இப்படி உள்ளதை அறிந்து ஞானிகள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தினம் தினம் தியானம் செய்கிறார்கள். ஞானிகள் எல்லோரும் பெரியவர்கள். பெரியவர்களை வணங்கினால் நிச்சயம் தயை சிந்தை வரத்தான் செய்யும். தயைசிந்தை வேண்டுமென்று கேட்க வேண்டும். தயை சிந்தை இல்லாதவருக்கும் அன்பு இல்லாதவர்களுக்கும் அங்கே இடமில்லை.
    
     அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
      என்புதோல் போர்த்த உடம்பு.
    திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் 80
               
                என்றார் மகான் திருவள்ளுவர். அன்பில்லாதவர்க்கு இங்கு என்ன வேலை? உன்னை கவனிப்பானா? அவன். நீ என்ன புண்ணியம் செய்திருக்கிறாய் என்று கேட்பான். தியானம் செய்கின்றாய், எல்லாவற்றையும் வேண்டுமென்று விரும்பி கேட்டாய் அல்லவா? நானும் கடவுளும் ஒன்றுதானே!
     நீ என்னை என்ன கேட்க வேண்டும்? அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்டாயா? அப்படி கேட்டாலல்லவா அவன் தருவான். நீ அது வேண்டும், இது வேண்டுமென்று கேட்டாய். அவன் அள்ளிக் கொடுத்துவிட்டு போய்விட்டான்.
     ஒருவன் மகான் மாணிக்கவாசகரை அழைக்கின்றான். மகான் திருவள்ளுவப்பெருமானை அழைக்கிறான். மகான் இராமலிங்க சுவாமிகளை அழைக்கின்றான். அவர்கள் என்ன வேண்டுமென்று கேட்டார்கள். செல்வம் வேண்டுமென்று கேட்டான். இதோ வைத்துக் கொள் என்பார்கள்.
     செல்வம் வேண்டும், வீடு வேண்டும், வாழ்வு வேண்டும், மனைவி மக்கள் வேண்டும். ஆனால் இவையெல்லாவற்றையும் விட மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டும். இப்படி கேட்க அவர்கள் நேராக வந்து சொல்வார்களா? இதை மகான் திருவள்ளூர் சொல்வார்,
     வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
      வேண்டாமை வேண்ட வரும்.
    திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362
                நீ விரும்பினால் வேண்டினால் மீண்டும் பிறவாதிருக்க அருள்     செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொல்வார். நீ கடவுளை என்ன கேட்க வேண்டும்? நான் மீண்டும் பிறக்கக்கூடாதென்று கேட்க வேண்டும். அப்படி பிறக்கக்கூடாதென்றால் இறக்கக்கூடாது என்று அர்த்தம்.
     இறப்பதற்கு நான் விரும்புகின்றேனா? நீ விரும்ப வேண்டாம். ஆனால் எமன் பிடறியில் அடித்துகொண்டு போவான். அப்போது ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும். ஞானிகளை, யோகிகளை வணங்க வேண்டும். அவர்கள் இறக்க மாட்டார்கள். ஞானிகளுக்கு யோகிகளுக்கு நரைதிரை இல்லை.
     உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
      கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
      விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
      அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே.
    மகான் சிவவாக்கியர் – யோகநிலை – கவி எண் 5
                விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்இது எப்போது வரும்.உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை – உருத்தரித்த நாடி என்பது பிரம்ம நாடி. அதற்குள்ளே காற்று ஒடுங்க வேண்டும்.
     விருத்தரும் பாலராவர் – முதுமை நீங்கி பாலனாவான். மேனியுஞ் சிவந்திடும் அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே – கடவுள் மீது ஆணையிட்டு சொல்கிறேன் என்கிறார். ஞானிகள் இப்படியெல்லாம் சொல்கிறார்கள். யார் கேட்டார்கள்? இதற்கெல்லாம் பெரியவர்கள் அருள் இருக்க வேண்டும்.
     அஞ்சு என்பது பஞ்ச பூதங்கள். அவை மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஆகாயம். மூன்று இடகலை, பிங்கலை, சுழிமுனை. ஆக அஞ்சு மூன்றும் எட்டு. இதுவும் இயற்கைதான். அதுவும் இயற்கைதான்.
     அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
      நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல்
      பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
      பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.   
·         மகான் சிவவாக்கியர் – கவி எண் 18
                நீங்கள் அதை நினைக்க வேண்டும். நீங்கள் மகான் சிவவாக்கியரை நினைத்து பூஜை செய்தால் அந்த வாய்ப்பு கிடைக்கும்.அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம் – பஞ்ச பூதங்களும் அநாதி. அவர்களுக்கு யார் தாய் தந்தை?
     பஞ்சபூதங்களுக்குதான் தாய் தந்தை இல்லை. மூச்சுக்காற்றிற்காவது இருக்கிறதா? இதற்கும் தாய் தந்தை இல்லை. இதுவும் இயற்கை. உலகம் தோன்றும்போதே, மூச்சுக்காற்று ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்திருக்கிறது.
     இப்படியெல்லாம் கடவுள் ஒரு அமைப்பை வைத்திருக்கிறார். இதையெல்லாம் ஞானிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நமசிவாய வாழ்க! பஞ்சபூதங்கள் வாழ்க என்று சொல்கிறார்கள். அவைகள் வாழ்வுதான் நமக்கு துணை. அதனுடைய இயக்கத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
     ஆக யோகிகள் அந்த காற்றை வசப்படுத்துகிறார்கள். எப்படி வசப்படுத்துகிறார்கள்?  உயிர்கள் மீது அன்பு செலுத்தி புண்ணியத்தை செய்து அந்த மூச்சுக்காற்றை ஒரு முறையோடு புருவமத்தியில் செலுத்துகிறார்கள். இதை திருமந்திரத்தில்,
     புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
      உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
                                                திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 575
                புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவைவந்து போகின்ற காற்று நெறிப்பட உள்ளே நின்மலமாக்க வேண்டும். பெரியோர்கள் பேசாமல் இருப்பார்கள். ஆசான் திருமூலதேவரை அழைக்க வேண்டும். நெறிப்பட வுள்ளே நின்மலமாக்க வேண்டும் – ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும். நின்மலமாக்கில்,
     உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
     உறுப்பு என்றால் உடம்பு. ஆக இப்படியெல்லாம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆக இவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கிறதல்லவா? இது ஞானசித்தர் காலம் அல்லவா? அதனால் சொல்ல வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆக இந்த உலகின் அமைப்பு இப்படி தான் இருக்கின்றது. யோகிகள் இப்படியெல்லாம் ஓடுகின்ற காற்றை நிறுத்தி வைக்கின்றார்கள். அதை எப்படிதான் சொல்லுவது? அது இலக்கணம் இல்லாதது.
     எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
      அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
      ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
      செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.
    திருமந்திரம் – உபதேச பகுதி 18 – கவி எண் 130
     எவ்வாறு காண்பான் – எப்படி புரிந்து கொண்டான் என்பது பொருள். அவ்வாறு அருள் செய்வான். அவன் மொழியிலே பேசுவான். அவரவர் அனுபவத்திற்கு ஏற்றவாறு அருள் செய்வான் ஆதி அரன் என்பான். இங்கே எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை மாணிக்கம் என்று குறித்தார். ஆக இப்படிப்பட்ட எல்லாம்வல்ல இயற்கையை நம்முள் அடக்க வேண்டும். இந்த ஒன்பது வாசல் வழியாக போகின்ற காற்றை ஞானிகள் புருவமத்தியில் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தினால் காற்று அங்கேயே தங்கிவிடும், தங்கி நிர்மலமாகும். இதற்கு தலைவன் ஆசி இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டால் ஞானிகளின் ஆசியை பெறுவார்கள். இப்படிப்பட்ட ஒன்றிற்கு என்னய்யா இலக்கணம் இருக்கிறது?
     என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
      பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
      மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
      என்னகத்துள் ஈசனும் யானுமல்லது இல்லையே.
    திருமந்திரம் – உபதேச பகுதி 18 – கவி எண் 130
      என்னவென்று சொல்லுவேன் இலக்கணமிலாததைப் – இதை எப்படி சொல்லித் தருவது. அதற்கு என்ன இலக்கணம்? ஒரு கட்டிடம் கட்டுவதற்கு இலக்கணம் இருக்கிறது. ஒரு கோவில் கட்டுவதற்கு இலக்கணம் உண்டு. ஆக இப்படி, இப்படி இருக்க வேண்டும். ஒரு கோவில் கட்டுவதற்கு இலக்கணம் உண்டு. இதை சிந்தையாலும், அவரவர் அனுபவத்தாலும் புரிந்து கொள்ள வேண்டும்.
     என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
      பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
     செந்தமிழுக்கு அகப்படாதது என்பார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழ் இலக்கணத்தில் உண்டு. இது தொல்காப்பிய இலக்கணம். ஆக அவன் சிந்தைக்கு எட்டாதவன்.
     அவனை எப்படி பிடிப்பது? மகான் திருமூலதேவா என்று அழைத்து ஐயா நீங்கள் எல்லாம் பெரியவங்க, எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால், வா மகனே! அவர்கள் என்ன செய்வார்? தாய், தந்தையால் எடுத்த காமதேகத்தை அறுத்தே விடுவார்கள்.
     களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
      களிம்பறுத்தான் அருள் கண் விழிப்பித்து
     
      களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார். உன்னால் அறுக்க முடியுமா? உடம்பை பட்டினி போட்டால் செத்துப்போய் விடுவாய். உணவு கொடுத்தால் காமம் வந்துவிடும். இதற்கிடையில் புகுந்து களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி – கண் இமை போன்றவன். தொடர்ந்து வருகின்ற பிறவிக்குக் காரணம் உடம்பா? உயிரா? என்றால் உடம்புதான்.
      இந்த உடம்பு தான் உன்னை வஞ்சிக்கின்றது. அதை நான் அறுத்து விடுகிறேன். கொள்ளாமல் கொல்கிறேன். களிம்பு என்பது செம்பு பாத்திரத்தின் மேல் இருக்கும். ஆக அதைப்போல நம்மிடம் உள்ள களிம்பையும் அறுத்து விடுவான். இதை திருவருள் துணையில்லாமல் அறுக்க முடியாது.
     காயசித்தியானது கரும வினை போக்கியபின்
      மாயசித்தி மூல சுழி வாய்க்குமே.
     
     என்பார். பக்தியில்லாமல் காயசித்தி செய்ய முடியாது. உடம்பை பட்டினியும் போடக்கூடாது. ஊரைவிட்டு போகவும் கூடாது. இங்கேயே இருக்க வேண்டும். சமுதாயத்திலே இருக்க வேண்டும். நாம் யார் என்று பிறர் தெரிந்து கொள்ளக் கூடாது.
     ஆக இந்த துறை புரிந்து கொள்ள முடியாத ஒன்று. ஆக களிம்பு என்றால் என்ன? களிம்பு என்றால் அசுத்தம். அசுத்தம் என்றால் என்ன? நீ சாப்பிடுகின்றாய் அல்லவா? அதிலிருந்து வந்தது தான் அசுத்தம். மூச்சுக்காற்று அசைகின்றது.
     மூச்சுக்காற்றின் அசைவு காரணமாக உள்ளே கருவி கரணங்கள் அசைகின்றது. உள்ளே கருவி கரணங்கள் அசைவதால் பசி வந்தது. பசி சாப்பிட்டது. நீ சாப்பிடவில்லை. பசி சாப்பிட்டதால் உனக்கு சக்தி வந்தது. சத்துதான் உனக்கு இப்போது பிரச்சனை. சத்து, அசத்து என இரண்டு இருக்கும்.
     களிம்பறுத்தான் – அந்த களிம்பை அவன் அறுத்து விடுகிறான். இதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஒரு முறையோடு போக வேண்டும். களிம்பறுத்தான் அருள் கண் விழிப்பித்து – உனக்கு தெளிந்த அறிவை, சிறப்பு அறிவை தருகின்றான். அருள் கண் விழிப்பித்து என்றால் உனக்கு புரிய வைக்கின்றான் என்று பொருள்.
     காமவிகாரம் தான் மனிதனை கொல்கிறது. அது நம்மை கொல்லப்பார்க்கும். காமம் என்ற பாம்பு நம்மை கொத்திவிடும். அதனுடைய பல்லை பிடுங்க வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள் “என்னை கடித்த பாம்பை அடித்து விட்டேன்” என்றார். இவ்வளவு பெரிய மகான் இராமலிங்கசுவாமிகள் பாம்பை அடிக்கலாமா என்று கேட்பார்கள்? அவர் இந்த பாம்பை அடிக்கவில்லை.
     ஜென்ம, ஜென்மங்களாக பல இலட்சம் கோடி ஆண்டுகளாக என்னை வஞ்சித்த காமவிகாரம் என்ற பாம்பை, காமப்பேய் என்ற நாகப்பாம்பை, நஞ்சுப்பாம்பை கொன்றுவிட்டேன் என்பார். ஆக காமதேகத்தை கொன்றுவிட்டார் என்று பொருள். ஞானிகளை சார்ந்திருந்து பூஜை செய்தால் இந்த கமதேகத்தை அறுத்துவிடுவார்கள்.
     காமதேகம்தான் நரை, திரையை உண்டு பண்ணுகிறது. காமதேகம்தான் அறியாமையை உண்டு பண்ணுகிறது. காமதேகம்தான் லோபித்தனத்தை உண்டு பண்ணுகிறது. காமதேகம்தான் நமக்கு எமனாக இருக்கிறது. அதைக் கொல்ல வேண்டும். ஆனால் பட்டினி போடக்கூடாது. அதன் வழியிலேயே செல்ல வேண்டும். ஆசான் அகத்தீசரையும், நந்தீசரையும் துணையாகக் கொள். நீ அவர்களை கேட்டால் சொல்வார்கள்.
     ஆக, ஆசான் அகத்தீசர் இன்றைய தினம் சிவபுராணத்தைப் பற்றி சொல்லச் சொன்னார். ஞானிகள் இன்று அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!என்ற ஒரு வரிக்குத்தான் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
     ஞானிகளெல்லாம் இப்படி பாடியிருந்தாலும், நாங்கள்தான் உங்களுக்கு சொல்ல வேண்டும். இன்று பூஜை என்ற பெயரில் எவ்வளவோ கொடுமை நடக்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டும். உயிர்கொலை செய்ய மாட்டேன். நான் எவ்வுயிர்க்கும் இடையூறு செய்யாதிருக்க அருள் செய்ய வேண்டும். இப்படி கேட்பதற்கும் ஆசி வேண்டும்.
     என்னால் பிறர் மனம் புண்படாது இருக்க வேண்டுமென்று கேட்டேன். இப்படி கேட்பதற்கும் ஆசி வேண்டும். பிறர் மனம் புண்பட பேசினால் அறியாமை வந்துவிடும். மனைவி பயந்த சுபாவம் உள்ளவளாக இருப்பாள். அவன் அவனை பேசியே கொன்றுவிடுவான். இயற்கை என்ற காளி பார்ப்பாள். இதுவரை சாந்தமாக இருந்த அவள் விகாரமாக மாறிவிடுவாள். இதுநாள் வரை மகனே! என்று சொன்ன அவள், மடையனே என்று சொல்வாள்.
                அவள் மனம் நொந்து போகப்போக அவனுக்கு மூடத்தனம் (கணவனுக்கு) வந்துவிடும். சில இடத்தில் கணவன் சாந்தமாக இருப்பான். அவன் வருவாய் இல்லாதவனாகவும், ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவனாகவும் மான உணர்ச்சி உள்ளவனாகவும் இருப்பான். அவன் மனைவி, அவனை பேசிப் பேசியே மனம் நொந்து போகும்படி செய்துவிடுவாள்.
     மகளே! இதுவரை மகளாக இருந்தாய், இன்றைக்குத் காளியாக மாறிவிட்டாய். நான் உன்னையும் புரிந்து கொண்டேன் என்பாள். நீ இப்படி உன் கணவனை பேசப்பேச உனக்கு அடுத்த ஜென்மத்தில் அற்ப ஆயுசு உள்ள கணவனாக பிறக்க வேண்டும். இல்லையென்றால் குடிப்பழக்கம் உள்ளவனாக பிறப்பான். இல்லையென்றால் நோய் சூழ்ந்த கணவனாக இருப்பான்.
    
     நீ நன்றாக உடம்பு திடமாக இருப்பாய். நோய் சூழ்ந்த கணவனாக இருப்பான், புரிந்து கொள். உன்னுடைய செயல்படிதான் உன் வாழ்க்கை இருக்கும். சரி ஐயா, எனக்கு நல்லபடி உடம்பு இருக்கு. என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதிலிருந்து ஊசியும், மருந்துமாக இருக்கிறது. என்னய்யா செய்வது என்றான்? கடவுள் சிரித்தான். எத்தனைப் பெண்களை கெடுத்து ஏமாற்றி இருக்கிறாய்? எத்தனைப் பெண்களை கர்ப்பமுற்ற பின் உனக்கு எத்தனை பேரோ என்று சொல்லியிருக்கிறாய் அல்லவா? அதனால்தான் இப்படி நோய். நசிந்து போ என்றான் கடவுள்.
     ஆக உலகமே இப்படித்தான் இருக்குமா? சொல்லிக் கொடுக்கும்வரை அப்படித்தான் இருக்கும். அந்த காலத்தில் பாவபுண்ணியத்தைப் பற்றி தெரியவில்லை. பேசுவதாலேயே பாவம் வரும். மனைவி மனது நோகாமல் இருக்கும்படி பேச வேண்டும். பொருள் சேர்க்கும்போதே நீதிக்கு உட்பட்டு பொருள் சேர்க்க வேண்டுமென்று நினைப்பதே புண்ணியம்தான்.
     இதற்கெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி நீதிக்குட்பட்டு பிழைப்பவனை, இவன் பிழைக்கத் தெரியாதவன் என்பான். சரி நீ, பிழைக்கத் தெரிந்தவன்தானே! ஏன் ஐயா, இப்படி கட்டிலில் கிடந்து சாகிறாய் என்பான். தலைவனை புரிந்து கொள்ள வேண்டும். அவன் தர்மத்திற்கு தலைவனாக இருக்கின்றான். அன்பின் கடலாக இருக்கின்றான். அன்பின் தோற்றமாக இருக்கின்றான். அவனை நீ புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்கிருந்தாலும் உனக்கு புண்ணியம் வராது. புண்ணியஸ்தலம் எது என்றான். இதயத்தை புண்ணியமாக்கிக் கொள்.
     உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்
      வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
      தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
      ஐம்புலன்களும் காளா மணிவிளக்கு .
·         திருமந்திரம்  – கவி எண் 1823
                உள்ளம் – மனதே கோவில். உடம்பு ஆலயம் – தெரிந்தவர்களுக்கு.வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் – கோபுரவாசல் என்பது வாய். உள்ளம் பெருங்கோவில்தான் ஐயா. அதில் என்ன இருக்கிறது. சாந்தமே வடிவான மனமிருக்கிறது. சாந்தமே வடிவான மனமிருந்தால் உள்ளம் பெருங்கோவில். கோவில் என்று சொல்லாமல் ஏன் பெருங்கோவில் என்று சொன்னார்? அங்கே பெருந்தன்மை இருக்கிறது.
     ஆக மக்கள் இந்த காலத்தில் அவரவர் முன்னேற வேண்டும். நோய் இல்லாது வாழ வேண்டும். பிறந்தால் மோட்சகதி அடைய வேண்டும். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுகின்ற வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட வாய்ப்பிருந்தும் அதை யாரும் சொல்லவில்லை. ஞானசித்தர் காலம் வந்துவிட்டது. அவரவர்களும் மனிதாபிமானம் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்தல் வேண்டும். மனிதாபிமானம் உள்ளவன் நிச்சயம் விட்டுக் கொடுப்பான். இல்லையென்றால் வெறிப்பிடித்தவனாக அலைவான்.
     பெரியவர்கள் ஆசி பெற வேண்டும். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இன்று முதல் புலால் உணவை உண்ண மாட்டப். புலால் உணவு மிருகாதி உணவு. அது பேய்க்குணம், மூர்க்கத்தனத்தை உருவாக்கும்.
     இயற்கைக் கடவுள் தானியத்தையும், காய்கறிகளையும் அள்ளித் தந்திருக்கிறான். நம்முடைய குடலமைப்பு புலால் உணவை ஜீரணம் செய்ய முடியாது. புலால் உணவை உண்பவர்கள் வெகுவிரைவில் நோய்வாய்ப்படுவார்கள்.
    
     ஆகவே இன்று முதல் உயிர்க்கொலை செய்ய மாட்டேன் என்றும், புலால் உணவை உண்ண மாட்டேன் என்றும், பொய் சொல்ல மாட்டேன் என்றும், பண்புடன் நடந்து கொள்வேன் என்றும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
     நான் உணவு உண்டே நரகத்திற்கு போகிறேன். நான் பேசியே நரகத்திற்கு போகிறேன். புலால் உணவை சாப்பிட்டே நரகத்திற்கு போகிறேன். பொய் பேசியே நரகத்திற்கு போகிறேன். லோபித்தனத்தாலேயே நரகத்திற்கு போகிறேன். பழிவாங்கும் உணர்ச்சியை கொண்டே நரகத்திற்கு போகிறேன்.
     அவன் இந்த சாதி, இவன் இந்த சாதி, அவனுக்கு என்ன யோக்கியதை? இப்படி பேசியே நரகத்திற்கு போகிறேன். அவன் இவன் என்று மத துவேசம் செய்தே நரகத்திற்கு போகிறேன். ஆக நாம் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் அதற்குரிய பண்பை தர வேண்டுமென்று ஆசான் மாணிக்கவாசகரையும், ஆசான் அகத்தீசரையும், ஆசான் இராமலிங்கசுவாமிகளையும் பூஜை செய்து கேட்டுப்பெற வேண்டும்.
     நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும். நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், யாரையும் அனுசரித்து பேசுகின்ற சங்கம் அல்ல. இதுதான் மார்க்கம் விரும்பினால் பின்பற்றுங்கள். ஆகவே, கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்களை வீணாக்கக் கூடாது. ஓடுகின்றனன் கதிரவன், அவன்பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்றார். ஆசான் திருவள்ளுவர்,
           வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
            வாழ்நாள் வழியடைக்கும் கல்
    திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 38
                வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் நல்லபடி செயல்பட வேண்டும். அப்படி செய்தால் வாழ்நாள் வழியடைக்குங் கல் என்று சொன்னார். வீழ்நாள் படா அமை – நாளை வீணாக்காமல் பூஜை செய்து வந்தால் அது வாழ்நாள் வழியடைக்கும் கல். சுழிமுனை கதவு திறந்து காற்று உள்ளே போய் அடங்கி விடும்.
     இது மிகப்பெரிய வார்த்தை. பூஜை செய்தால்தான் கிடைக்கும். ஆசான் திருவள்ளுவப்பெருமானை கேட்டேன். அதற்கு ஆசான் திருவள்ளுவர் “இப்படியெல்லாம் இருக்கையா. என்னை கேள் அப்பா, நான் அருள் செய்கிறேன்” என்றார்.
     வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் – புருவமத்தியில் ஒடுங்கினால் அந்தக் காற்று வெளியே வராது. வயிற்றில் என்னதான் காற்றை அடைத்து வைத்தாலும் அது வெளியே போய்விடும்.
      ஆகவே, உங்களுக்கு எல்லாம் கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுபோன்று வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கின்ற பாராயணத்தில் கலந்து கொண்டு வருகிறீர்கள். கோடிக்கணக்கான மக்கள் பசியாறிய மகான் புஜண்டர் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.
     எங்கள் அன்பர் உங்களுக்கு அவர்கள் கையால் உணவு தரப் போகிறார்கள். அன்னதானம் செய்து, அன்னதானம் செய்து அவர்கள் கைகள் புண்ணியம் என்ற உரம் ஏறியிருக்கிறது. அவர்களை நீங்கள் பார்ப்பதே புண்ணியம்.
     இங்கே ஆண்களும், பெண்களுமாக இரவு, பகல் பாராமல் தொண்டு செய்கிறார்கள். அவர்களை பார்ப்பதே புண்ணியம். அவர்களுக்கு ஒருவேளை சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தால் இன்னும் புண்ணியம்.
     ஆசான் ஞானபண்டிதனையும், ஆசான் அகத்தீசரையும் பூஜை செய்து உணவை அவர்கள் தருவார்கள். அந்த உணவை சாப்பிட்டு, நீங்களெல்லாம் எல்லா நலமும், வளமும் பெற வேடுமென்று மனமார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0185270
Visit Today : 70
Total Visit : 185270

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories