பக்தியே தவமாகும் | Devotion is penance | என்ற தலைப்பில் 08.11.1987 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை



பக்தியே தவமாகும்


என்ற தலைப்பில் 08.11.1987 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம


அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஸ்ரீ அகத்தியர் சனமார்க்க சங்கம் மற்ற சங்கங்களைப் போல் வெறும் ஆரவாரச் சடங்குகளையோ அல்லது வெறும் யோகநெறியையோ சொல்லுகின்ற சங்கம் அல்ல! மூச்சுக்காற்றைப் பற்றியோ அல்லது உடலை அப்படி வளைக்க வேண்டும், இப்படி வளைக்க வேண்டும் என்று யோகசாசனத்தைப் பற்றி சொல்லுகின்ற சங்கம அல்ல! ஆனாலும் யோகாசாசனத்தைப் பற்றிச் சொல்லுகின்ற சங்கம்தான்.
     எப்படி யோகம் செய்ய வேண்டும்? யார் தயவை கொண்டு யோகம் செய்ய வேண்டும்? எந்தெந்த முறையைப் பின்பற்றினால், யோகத்தினால் பயன் ஏற்படும்? என்றெல்லாம் ஆராய்ந்து சொல்லுகின்ற சங்கம் ஆகும். வெறும் மூச்சுக்காற்றைப் பற்றி சொல்லுகின்ற சங்கத்தின் முடிவு என்ன
பாதிப்பான்.
     நாம் சொல்லுவது, சொல்லுகின்றவனும் வாழ வேண்டும், சொல்லக் கேட்டவரும் வாழ வேண்டும். ஆகவே இந்த வழி, ஞானிகள் துணை கொண்டு சொல்லுகின்ற ஒரு நெறி முறை ஆகும். ஞானிகள் துணை கொண்டு சொல்லுகின்ற நெறிமுறையின் காரணமாகத்தான் சொன்னவும் வாழ்வான், சொல்லக் கேட்டவனும் வாழ்வான்.
     ஆக இது ஒரு நுணுக்கமான, மிக மிக நுணுக்கமான தத்துவத்தை ஆராய்ந்து சொல்லுகின்ற சங்கம் ஆகும். யோகத்தைப் பற்றி, நாம் சொல்லுவதற்கும், மற்ற சங்கத்தார் சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், நமது மையக்கருத்து ஞானிகளின் பெருமைகளைச் சொல்லி, அவர்கள் பாதத்தைப் பற்றி, அன்பு கொண்டு, அவர் துணை கொண்டுதான் யோகம் செய்ய வேண்டுமென்று நாம் சொல்கிறோம். மற்றவர்கள் அதை விட்டு விட்டு, ஏதோ இடகலை, பின்கலை என்றும், குண்டலினி என்றும், அனுபவம் இல்லாமல் பல்வேறு சாத்திரத்தில் உள்ள சில கருத்துகளைப் படித்து அதை மக்களுக்குப் போதிக்கிறார்கள்.
     நாம் சொல்வது அநுபூதி. அனுபூதி என்பது படித்தது மட்டுமலல், படித்ததை உணர்ந்து தெளிந்து நாம் அனுபவத்தில் வந்ததன் காரணமாக நாம்  சொல்லுவதற்கும், மற்றவர்கள் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கும்.
     பக்தி – அன்பு உணர்ச்சி. அன்பு உணர்ச்சியின் காரணமாக நுண்ணறிவு மிகுதியாகி, நுண்ணறிவு மிகுதியானதன் காரணமாக இந்த யோக நெறி அவனுக்கு உணர்த்தப்பட்டது. எல்லா ஞானிகளும் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அன்பு உணர்ச்சியைப் பற்றி மகான் திருமூலர், மகான் திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அன்பு உணர்ச்சி பற்றி மகான் திருவள்ளுவர் அன்புடைமை என்று தனி அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார். அது இல்லறத்திற்குச் சொன்னபோதிலும், அது துறவறத்திற்கும் பொருந்தும். அது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
     அன்பு இருந்தால் மாறுபாடு உள்ளவனையும் வசப்படுத்தலாம். அதுதான் அன்பு. நம்மீது அளவு கடந்த கோபத்தோடு இருப்பவனிடம் அன்பு காட்டினால் அவனுடைய பகை நீங்குவதற்கும் அது பயன்படும். அதேபோல் இந்தத் துறையில், ஞானியர்களிடத்து அன்பு கொண்டால், அவர்கள் நம் மீது பற்று கொண்டு நமக்கு எல்லா வகையிலும் உணர்த்துவது அன்பு. இதை பக்தி என்று சொல்கிறார்கள். அன்புதான் பக்தி, பக்திதான் அன்பு. இரண்டுக்குமே அறிவு வேண்டும்.
     ஒரு பொருளை முழுமையாக உணர்ந்து, அதை அன்பு அல்லது பக்தி கொண்டு, அதை அடைய வேண்டுமென நினைப்பது உண்மையான பக்தி. பொருளே இன்னதென்று அறியாமல் கொள்வது மூடபக்தி. அதுவும் பக்தி. இதுவும் பக்தி. அது மூடபக்தி, இது உண்மையான பக்தி.
     உண்மைப்பொருளை உணர்து, அதை அடைய வேண்டுமென ஆசை கொண்டு அதற்கு முயற்சிப்பது உண்மையான பக்தி. பொருளே இன்னதென்று தெரியாமல், கண்மூடித்தனமான கொள்கையைப் பற்றி, கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள், சடங்குகளில் கவனம் செலுத்தி, அதை அடைய வேண்டுமென நினைப்பது மூடபக்தி. எது மூடத்தனம்? எது உண்மை? பொய் எது? என்று ஆராய்ந்து பார்த்து, இதுதான் உண்மை, இதை ஆராய்ந்து உணர்ந்த மக்கள் ஞானிகள். அவர்கள் பாதத்தைப் பற்றுங்கள், ஞானிகளிடம் விடாது அன்பு செலுத்துங்கள் என்று சொலி நாம் வழி வகை காட்டுகின்றோம்.
     நாம் காட்டுகின்ற பக்தி அன்பு கலந்த பக்தி பொருள் கலந்த பக்தி ! உண்மை கலந்த பக்தி! தெளிவான பக்தி! திண்மையான பக்தி! உண்மையான பக்தி! ஞானிகள் இந்தக் கருத்தை எப்படிச் சொல்கிறார்கள்? உலகத்திலேயே சிறந்தது எது? என்றால், உலகத்திலேயே சிறந்தது எத்தனையோ விசயங்கள் இருக்கலாம். எத்தனையோ பெரும் பெரும் ஆற்றல் பெற்ற வீரர்கள் இருக்கலாம். அதையெல்லாம் உயர்த்திப் பேசவில்லை. உலகத்தில் ஏழு அதிசயங்கள் இருக்கலாம். சீனப்பெருஞ்சுவர் மற்று தாஜ்மகால் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் உயர்வாகச் சொல்லவில்லை. மகான் கடுவெளிச்சித்தர் எதை உயர்வாகச் சொல்லுகிறார் என்றால்,
     பாரி லுயர்ந்தது பத்தி(பக்தி) அதைப்
      பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
                        – மகான் கடுவெளிச்சித்தர்
      பாரி லுயர்ந்தது பக்தி(பக்தி) – உலகத்தில், உயர்ந்தது பக்தி என்றார். வேறு எதையுமே உயர்வாக அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, கவிஞனை ஏற்றுக் கொள்ளவில்லை, கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ ஆற்றல் இருக்கலாம், அதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
      அதைப் பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி என்றார். உயர்ந்தது எது என்று கேட்டால்அது பக்திதான். பொருள் அறிந்து அதன் மீது பக்தி செலுத்துவது தான் உண்மையான பக்தி. பொருள் இல்லாத பக்தி மூட பக்தி என்று சொன்னோம்.
      அதைப் பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி – ஏன் வருமே முக்தி என்றார்? உண்டு, வருமே என்று உறுதியிட்டு, பின் வருமே முக்தி என்று சொன்னார். அதுபோல் அன்பு செலுத்துகிற மக்களுக்கு,“சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி(பக்தி)”. சிவன் என்பவன் ஆதித்தலைவன். இந்தத் தத்துவத்தை நன்கு உணர்ந்தவன். அணு அணுவாக உணர்ந்து, சித்தி பெற்றவன் சிவன், ஆதித்தலைவன் சிவன்.
      அவனுடைய பாதத்தைப் பற்றாமல்எந்த பக்தி செலுத்தினாலும் ஒத்து வராது. யாராக இருந்தாலும் சரி, ஆதித்தலைவன் சிவனை வணங்காத மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. அட்டமா சித்தி என்பது மிகப்பெரிய ரகசியம். அட்டம் என்றால் எட்டு, எண்வகை சித்தி என்று சொல்வார்கள். இங்கே எட்டு என்பது அகாரம். அகாரம் என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்று, உகாரம் என்பது கண்டஸ்தானத்து காற்று.
     புருவமத்தியில் யாருக்கு காற்று ஒடுங்கியதோ, அதை அட்டமா சித்தி என்றார்கள். எட்டு வகையான சித்தி என்று சொல்வார்கள்.
     சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி(பக்தி) – இந்த அட்டமா சித்தி அன்பின் காரணமாக ஏற்படும். பக்த்தியின் காரணமாகத்தான் அட்டமாசித்தி ஏற்படும். அகாரம் என்று சொல்லப்பட்ட அட்டமா சித்தி, பக்தி இல்லாதவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்காது. இந்தச் சித்தி கிடைப்பதற்கு, சிவன் செயலினால் பத்தி என்றார். அப்ப சிவன் யார்? சிவம் – சிவன். சிவம் என்பது மோனப்பொருள். அதனால் வந்தவன் சிவன். இந்தத் தத்துவத்தை, உணர்ந்து தெளிந்த மக்கள்தான் இப்படி பேச முடியும். இப்போது சொல்வதெல்லாம் புலப்படாது. இருந்தாலும், சீரில் உயர் அட்ட சித்தி என்பது யோகிகளுக்காக வகுக்கப்பட்டது. இதே கருத்தை அன்பு இல்லாத மக்கள் எத்தனை ஆரவாரம் செய்த போதிலும் கிடைக்காது.
      ஆனால் ஒருவன் எதைச் செய்ய வேண்டும்? வீட்டில் இருந்து, அல்லற்படாமல்,உடலை வருத்தாமல், சாத்வீகமான முறையில், தீபமேற்றி, அந்தத் தீபத்தின் முன்னே அமர்ந்து, உள்ளம் உருக அன்பு செலுத்தினால், அந்தத் தெய்வத்தை உள்ளம் உருகிப் பூஜித்தால், பூஜிக்கக்கூடிய தெய்வம் உண்மையாக இருந்தால் அவனுக்கு அருள் செய்யும். அப்போது, அறுபது நாள் அல்லது தொண்ணூறு நாள் தன்னை வருத்திக் கொண்டு, அல்லற்பட்டு, அவன் அடைவது எது? என்று கேட்டான். அந்தத் துன்பத்தை தான் அவன் அனுபவித்திருக்கிறான். அது நாள் வரையில் அந்தச் சடங்கில்தான் கவனம் செலுத்தினானே தவிர, ஒரு நிமிடமாவது அவன் அன்பு செலுத்தினானா அல்ல! ஒரு நிமிடமாவது அன்பு செலுத்துகின்ற வாய்ப்பை அவன் பெறவில்லை. இதுதான் உண்மை! இதனை மகான் திருவள்ளுவரும் மற்றும் எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.

      என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
      பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
      அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
      என்போல் மணியினை எய்தஒண் ணாதே.
                                                – திருமந்திரம் – அன்புடைமை – கவி எண் –
272

                என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்உடம்பையும் எலும்பையும் அறுத்து எடுத்து, எல்லாச் சதையையும் எடுத்து வந்து எலும்பையே விறகாய் வைத்தான், சதையெல்லாம் அதில் போட்டு வருத்தான். என்பே – உடபில் இருக்கும் எல்லா எலும்பையும் எடுத்து விறகாகக் கொண்டு, மேலே இருக்கும் சதையையெல்லாம் அதில் போட்டு, பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் – பொன்னை உருக்குவது போல அந்தச் சதையை எல்லாம் உருக்கிய போதிலும், அப்படியே வைத்து உருக்கிய போதிலும், அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றிஎன்போல் மணியினை எய்தஒண் ணாதே.
     அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி – அன்பு உணர்ச்சியால் அகம் குழைய வேண்டும். உள்ளம் குழந்தாலன்றி இவன் எடுத்த காரியம் பயன்படாது.
      என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
      பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
      அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
      என்போல் மணியினை எய்தஒண் ணாதே.
                                                – திருமந்திரம் – அன்புடைமை – கவி எண் – 272
     ஆசான் திருமூலர் என்னைப் போன்றவன்தான் தலைவன் என்றார். அடிப்படை இவர்கள் அத்தனைப்பேரும், அன்பின் மிகுதியால், அறிவின் முதிர்ச்சியால், தெளிவாக இருந்து தேடிய பொருளை, இதைத்தான் மகான் கடுவெளிச்சித்தர் சொல்வார்,
      பாரி லுயர்ந்தது பத்தி(பக்தி) அதைப்
      பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
                        – மகான் கடுவெளிச்சித்தர்
    
     சிவன் செயல் என்று சொன்னார். அன்பெனும் நன்மார்த் தூவி – எந்த மலரைத் தூவ வேண்டும். எந்த மலரும் வாடி விடும். ஆனால் அன்பு என்று சொல்லப்பட்ட மலர் மட்டும் என்றும்  மலரும்; என்றும் அன்று மலர்ந்தது போன்று இருக்கும். அன்பு என்று சொல்லப்பட்ட மலரைத் தூவினால், அந்த மலர் வாடாது. உண்மையான பக்தி உள்ளவன் நிச்சயமாக மலர்த் தூவ மாட்டான். காரணம் அதன் மூலமாக சில பாவம் வரும். பூக்களைக் கொல்கிறான். இது திருமந்திரத்தில் இருக்கும். நல்ல உண்மையான குரு பக்தி உள்ளவன் எந்த உயிர்க்கும் தீமை செய்ய மாட்டான். பூவைக் கொல்வதும் கொடும்பாவம். இந்த மருவு, மருக்கொழுந்தைகைப்பச்சை என்பர் சொல்வார், இதையெல்லாம் பச்சையாகவே கிள்ளும்போது, நிச்சயமாக அது துன்பப்படும். அதையும் விரும்ப மாட்டார்கள் ஞானிகள்.

     அன்பெனும் நன்மலர் தூவிப் – பர
      மானந்தத் தேவியின் அடியிணை மேவி
      இன்பொடும் உன்னுட லாவி – நாளும்
      ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.
                        – மகான் கடுவெளிச்சித்தர்

      அன்பு நறுமணமாக இருக்கும், என்றும் அன்று மலர்ந்த மலர்ப் போன்று இருக்கும், என்றும் பசுமையாக இருக்கின்ற அன்பு என்ற மலரைத் தூவி இறைவனை அர்ச்சிக்க வேண்டும்.
     ஆக உலகத்தில் எத்தனை வகையான மலர்கள் இருந்தாலும், காலையில் மலரும், மாலையில் வாடி விடும். ஆனால், இந்த அன்பு எனும் நல் மலர் வாடாது. அதனால்தான் அன்பெனும் நன்மலர் தூவி என்றார். மலர் என்று சொல்லாமல் நன் மலர் என்று சொன்னார்.
     இறைவனை அர்ச்சிப்பதற்கு எந்த மலர் வேண்டும் என்றான்?அன்பு என்று சொல்லப்பட்ட நல மலர்.
     
      பரமானந்தத் தேவியின் அடியிணை மேவி – ஆனந்தத்தற்கு உரியவன். பேரானந்தத்திற்கு உரியவன் யாரென்றால் தலைவன். அடியினை மேவி என்றால் சார்ந்து என்று அர்த்தம்.
     இன்பொடும் உன்னுட லாவி – நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி – ஏன் இரண்டையும் போற்றச் சொன்னார். உடலைப் போற்றுவதா? உயிரைப் போற்றுவதா? இரண்டையும் போற்ற வேண்டுமென்று சொன்னார். ஒன்றைப் போற்றினால் ஒன்று வீழ்ந்து போகும்.

      உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
      உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
                                                – திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724

     
                சிலபேர் என்ன செய்வார்கள், உடம்புக்கு உணவு தரமாட்டான், உப்பில்லாமல் சாப்பிடுவான், பட்டினி கிடப்பான். உடம்பை வளர்ப்பதா? என்று இருப்பான். ஒரு சாமியார் அறுபது நாட்கள் பட்டினியாக கிடந்தார், செத்துப் போய்விட்டார். அவன் என்ன நினைத்தான், உடம்பினை வருத்தினால், உயிர் மோட்சம் போகும் என்று நினைத்தான். விசயம் தெரிந்தவன் அவனை மடையனென்று சொல்வான்.
     ஆனால் இவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள், இங்கே இவர்களெல்லாம், உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே, உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் என்பார்கள். எவன் உடம்பை சரியாக பாதுகாக்கவில்லையோ, அவன் இந்தத் துறைக்கு அருகதை அற்றவன்.
          
      இன்பொடும் உன்னுட லாவி – நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி என்றார். உடம்பையும் உயிரையும் சேர்த்துப் பாதுகாத்துக்கொள் என்றார். அறிவுள்ள மக்கள் இதைத்தான் செய்வார்கள்.
     ஆகையால் ஒன்றை விட்டால் ஒன்று அழிந்து போகும். உயிரைப் பாதுகாத்தால், உடம்பு அழியும், உடம்பைப் பாதுகாத்தால் உயிர் அழியும். ஆகையால் இரண்டையும் போற்ற வேண்டும்.
     சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய் தானிருந்து
      ஏற்றி இருகாலும் இன்பமாய்
      காற்றின் வழியே ககனமாய் நுழைந்தார்க்கு
      அழியாது காயம் அறி.
                  – மகான் திருவள்ளுவர்
      சோற்றைச் சுருக்காமல் – எழுகின்ற அக்கினிக்கு தேவையான உணவை யோகி கொடுப்பான். சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய்த் தானிருந்து – உணவு கொடுக்கும்போதும், காமவிகாரம் அவனைத் தூண்டும். அதை என்ன செய்வான், ஞானிகள் துணை கொண்டு, தூள்படுத்தி விடுவான்.
     ஆக சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய் தானிருந்து – தூய்மையாய் இருந்து, ஏற்றி இருகாலும் இன்பமாய் – இடகலையையும், பின்கலையையும் ஏற்ற வேண்டிய இடம் புருவமத்தி.
காற்றின் வழியே ககனமாய் நுழைந்தார்க்கு – ககனம் என்பது ஆகாயம். ஆகாயத்திற்கு போகக் கூடிய இடம் காற்று. இந்த வழியோடே போக வேண்டும். இந்த வழியோடு போவது சின்ன விசயமல்ல! ஞானிகள் துணை கொண்டு போவார்கள்.
     இன்பொடும் உன்னுடலாவி நாளும் ஈடேற்ற தேடாய்நீ இங்கே குலாவி – இங்கே உடல் – மதி கலை, உயிர் – கதிர் கலை, மதி – உடம்பு, கதிர் – உயிர். இரண்டையுமே சேர்த்து புருவமத்தியில் செலுத்தி விட்டால், அவன் உயிரையும், உடம்பையும் பாதுகாத்துக் கொண்டான். இரண்டும் ஒடுங்கினாலன்றி, உடம்பையும், உயிரையும் சேர்த்து பாதுகாக்க முடியாது.
     இதை அறியாத மக்கள் பட்டினி கிடப்பார்கள். உடம்பினை வளர்த்தால் காமம் மிகுதியாகும். உயிர், உடல் இரண்டையம் சேர்த்து வளர்க்கின்ற மக்கள் சிறப்பறிவு உள்ளவர்கள். அது மிக மிகப் பெரியது. சின்ன விசயமல்ல! அதற்கு மிகப்பெரிய ஆற்றல் வேண்டும். தவ ஆற்றல், தவ வல்லமை உள்ள மக்கள் இவரால். இங்கே, ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் என்று சொன்னவர் மகான் கடுவெளிச்சித்தர்.
      ஆன்மாவால் ஆடிடும் ஆட்டந் – தேகக்
      தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
      வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்
      வையில் உனக்கு வருமே கொண்டாட்டம்.
                              – மகான் கடுவெளிச்சித்தர்
      ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் – ஒருவன் நடமாடுகின்றான், பேசுகிறான், பல்வேறு வகையான ஆற்றல் பொருந்தியவனாக இருக்கிறான், நல்ல சிறந்த வித்துவானாக இருப்பான். சிறந்த பேச்சாளனாக இருப்பான், சிறந்த கவிஞனாக இருப்பான், நல்ல விளையாட்டு வீரனாக இருப்பான். அப்படி அவனா செயல்படுகிறான், ஒருவன் செயல்படுகிறான் என்றால், அவன் செயல்படுகின்றானா இல்லை அவனது ஆன்மா செயல்படுகிறதா? என்றால், உயிர் இருந்ததனால் அத்தனை சிறப்பு இருந்தது.
    
     ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் – ஒருவன் நடமாடுகின்றான் என்றால், ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான், நடமாடிக் கொண்டிருக்கிறான்.
      ஆன்மாவால் ஆடிடும் ஆட்டந் – தேகக்
      தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
      வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்
      வையில் உனக்கு வருமே கொண்டாட்டம்.
                              – மகான் கடுவெளிச்சித்தர்
     அடிப்படை, உயிர் என்ற ஒன்று இல்லாவிட்டால், அவன் எந்தச் செயலும் செய்ய முடியாது. அந்த ஆன்மா இருக்கின்ற காரணத்தினால் தான், இத்தனை ஆட்டம் போடுகின்றான்.
    
     இல்லையென்றால் அவன் வீழ்ந்து போவான் என்று ஞானிகள் உணர்வார்கள். என்ன செய்கிறான், இந்த ஆன்மாவை தன்வயப்படுத்துவதற்கு முயற்சிக்கிறான். ஆன்மாவை தன்வயப்படுத்தாமல், தான் விரும்புகின்ற காரியத்தை செய முடியாது.
     கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
      ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
                                                – திருக்குறள் – தவம் – குறள் எண் 269
                கூற்றத்தை வெல்லுகின்ற ஆற்றல் எங்கிருக்கிறது என்றால், ஆன்மாவை அறிந்து, அதை தன்வயப்படுத்துவதில் இருக்கிறது. அப்படி தன்வயப்படுத்துகின்ற ஆற்றல் இருக்குமேயானால், அவன் எமனை வெல்லுகின்ற சக்தியையும், சித்து விளையாடுகின்ற சக்தியையும் பெறுவான். அதிகமாக துள்ளிக் கொண்டிருக்கின்றான், அதிகமாக துள்ளுகின்றானே என்றால், அவனா துள்ளுகின்றான், அவனுள்ளே ஆன்மா துள்ளிக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் துள்ளிக் கொண்டிருக்கிறான்.
         
     எவ்வளவு காலம் வரை இது நீடிக்கும் என்றால், ஒரு காலக்கட்டம் வரைதான் ஆன்மா நீடிக்கும். காலக்கட்டம் முடிந்து வீழ்ந்தால், அவன் ஆட்டபாட்டம் அடங்கி விடும்.
    
     இது போன்று எல்லா உயிரும், பல்வேறு வகையான செயல்களில் ஈடுபடுவதற்கு, ஆரவாரம் செய்வதற்கும் அடிப்படை காரணம் என்ன? மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் எப்படி இயங்குகின்றன? எப்படியெல்லாம் விளையாடுகின்றன என்று பார்! ஆனால் அந்த ஆன்மா என்று சொல்லப்பட்ட இரகசியத்தை, ஆன்மா என்று சொல்லப்பட்ட செல்வம், தங்கியிருக்கின்ற காரணத்தாலே இத்தனை ஆரவாரம்.
     இதை ஞானியர்கள், “இன்ஹ்ட உடம்பு என்னடா ஆட்டம், “ஆன்மாவால் ஆடிடும் ஆட்டந் – தேகக்தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்” என்பார்கள்.
      உடம்பில் இருக்கும் உயிர் நீங்கி விட்டால், உடம்புக்கு வாட்டம். இது சமுதாய நடமாட்டம், சமுதாய நெறிமுறைகள். உயிர் இருந்தால் மக்கள் நடமாடுகின்றார்கள், கொஞ்சிக் குலாவுகின்றார்கள்.
      ஏதோ பல்வேறு முயற்சி செய்கிறார்கள். எண்ணியதெல்லாம் செய்கிறார்கள். ஆனால், ஆன்மா நீங்கி விட்டால், பிணம் என்ற பெயர் எடுக்கிறார்கள். இதற்கு என்ன உபாயம் என்று கேட்டான்.
      இதைச் சொல்லும்போது, வான்கதி மீதிலே நாட்டம் – நாளும் வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் என்பார். வான்கதி மீதிலே நாட்டம் – மேலான கதி ஒன்று இருக்கிறது. அது உயிரையும், உடம்பையும் பாதுகாக்கும் என்றான்.
      ஆன்மாவால் ஆடிடும் ஆட்டந் – தேகக்தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம் வான்கதி மீதிலே நாட்டம் – இதுதான் உலக மக்களின் செயல்பாடு. ஆன்மா இருக்கும் வரையில் பல்வேறு ஆட்டபாட்டங்கள் செய்வார்கள், பல ஆரவாரம் செய்வார்கள், ஆனால் உயிர் போன பின்னே உடம்பு வாடிப் போய்விடும்.
     வான்கதி மீதிலே நாட்டம் – வான்கதி என்றால் மேலான கதி. மேலான கதியிலே, மேலான நெறியிலே, மேலான பொருள் மேல் ஒரு ஆக்கத்திலே நாட்டம் இருக்கிறது. மேற்கதி அடைய, தன்னை உயர்த்திக் கொள்ள, மேலான கதிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள நாட்டம்.
    
     நாளும் வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – ஒருநாள் முயற்சித்தால் இது முடியாது. பல நாளும் முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சிதான் அன்பு உணர்ச்சி.
     அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
      என்புதோல் போர்த்த உடம்பு.
                                                – திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் – 80
                அது எல்லாவற்றிற்கும் பொருந்தும். இதையே அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்று மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார். இதையே மகான் திருமூலர் சொல்வார்,
      ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
      பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
      காதலில் அண்ணலைக் காண இனியவர்
      நாதன் இருந்த நகரறி வாரே .
                               – திருமந்திரம் – அட்டமாசித்தி (வசித்துவம்) – கவி எண் 707
                அன்பு உணர்ச்சி இல்லாத மக்கள் எந்தக் கடலில் மூழ்கி என்ன பயனை அடையப்போகிறார்கள்.
     ஓதம் ஒலிக்கும் – ஓதம் என்றால் அலை. அலைகள் ஒலிக்கக் கூடிய கடல். கடல் எங்கேயெல்லாம் இருக்கிறதோ, எங்கேயெல்லாம் கடல் உண்டோ, அங்கெல்லாம் கடலில் மூழ்கினால் புண்ணியம் கிடைக்காது என்பார்கள்.
     காசிக்கோ டில் வினை போமோ – அந்தக்
      கங்கையாடில் கதி தானுமுண் டாமோ  
      பேசுமுன் கன்மங்கள் சாமோ  – பல
      பேதம் பிறப்பது போற்றினும் போமோ.  
                        – மகான் கடுவெளிச்சித்தர்
     காசியில் மூழ்கினாலும் கர்மம் போகாது என்பார் மகான் கடுவெளிச்சித்தர்.
      காசிக்கோ டில் வினை போமோ – போகாது, எந்தக் கடலில் குளித்தாலும் அது உப்புநீர்தான். கடலில் குளித்துவிட்டு நல்ல தண்ணீரிலும் குளித்துதான் ஆக வேண்டும். இராமேஸ்வரத்தில் மூழ்கினால் என்ன? அல்லது வேதாரண்யத்தில் மூழ்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
     ஆக, அடிப்படை, இப்படி செய்துவிட்டு, மிகப்பெரிய காரியம் செய்ததாக நினைப்பதெல்லாம் மூடபக்தி என்று சான்றோர்கள் சொல்வார்கள்.
     அன்புதான் உண்மை என்று மூதறிவு உள்ள சான்றோர்கள் சொல்வார்கள்.
     இங்கே சொல்லும்போது, காசிக்கோடில் வினை போமோ என்றும், அங்கே சொல்லும்போது ஓதம் ஒலிக்கும் உலகை வளம் வந்து என்று சொல்வார். கடல் சூழ்ந்த உலகை வளம் வந்து அதன் மூலமாக நமக்கு பெரும் ஆன்மலாபம் கிடைக்கும் என்று எண்ணுவது மூடபக்தி.
     பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை – அது மட்டுமல்ல ஆன்ம இலாபம் பெற பாதங்கள் நோக நடந்தே செல்வதில் பயனில்லை.
      பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே – அன்பு உணர்ச்சியால்தான் இறைவனை அடைய முடியும். அன்பே வளர்ச்சியாகும். அதற்கு மிகப்பெரிய அறிவாற்றல் வேண்டும்.
    
     அந்த அறிவு, என்று நாளுக்கு நாள் விரிவடைகிறதோ, அன்றே அன்பு உணர்ச்சி மிகுதியாகும். ஆகையால் மிகப்பெரிய நுணுக்கமான அறிவாற்றல் உள்ள மக்களுக்குத்தான் அன்பு உணர்ச்சி மிகுதியாகும்.
     காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவாரே – நாதன் என்கின்ற தலைவன் இருக்கின்ற இடத்தை அறிகின்ற மக்கள், காதலில் அண்ணலைக் காண இனியவர் என்றார். இல்லையென்றால் முடியாது.
     அதற்கு விளக்கம் சொல்லும்போது, வான்கதி மீதிலே நாட்டம் நாளும் வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – என்று உலக இயல்பைப் பற்றி சொல்லிவிட்டார். இது போன்று எது உண்மை, எது பொய் என்றும் ஆராய்ந்து, நமக்கு எதிரியாக இருப்பது மும்மலம்தான் என்பார்.
                மும்மலத்திற்கு உற்ற துணையாக இருப்பது பசி என்றார். பசிக்கு உற்ற துணையாக இருப்பது மூச்சுக்காற்று என்றார். மூச்சுக்காற்றுக்கு உற்ற துணையாக இருப்பது பஞ்சபூதம் என்றார். பஞ்சப்பூதாதிகளுக்கு உற்ற துணையாக இருப்பது எங்கும் வியாபித்த பரம்போரும் என்றார்.
     பரமாய சத்தியுள் பஞ்சமாபூதம்
      தரமாரில் தோன்றும் பிறப்பு.
                                              ஔவைக்குறள் – பிறப்பினிலைமை – குறள் எண் 2
                நம்முள்ளே நமக்கு எதிரியாக இருப்பது மும்மலம்தான். மும்மலம் என்பது மல, ஜல, சுக்கிலம். மல, ஜல, சுக்கிலத்திற்கு காரணமானது பசி என்றால் பசிக்கு உற்ற துணையாக இருப்பது மூச்சுக்காற்று என்றான். மூச்சுக்காற்றுக்கு உற்ற துணையாக இருப்பது பஞ்சபூதம் என்றான். பஞ்சபூதத்திற்கு உற்ற துணையாக இருப்பது பஞ்சமாபூதம். எங்கும் பரமாய சக்தியாக இருப்பது இந்த பஞ்சமாபூதம்.
     ஒரு பெரும் சக்தி இருந்தது. அது திடீரென ஒரு வினாடிக்குள் எல்லாவற்றையும் தோற்றுவித்தது. எல்லா உயிரையும் ஒரே சமயத்தில் தோற்றுவித்தது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லுவான். ஏனென்றால் குரங்கு சேட்டை செய்வது போல சேட்டை செய்தவனைப் பார்த்துவிட்டு இப்படி குரங்கிலிருந்து வந்தான் என்று திட்டினான்.
     எனவே குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன் என்றான். எவ்வளவோ உயிரைத் தோற்றுவித்தவன் மனிதனைத் தோற்றுவிக்க மாட்டானா? இதை ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? ஆறறிவு உள்ள ஆற்றல் மனிதனுக்குத்தான் உண்டு. ஓர் உயிர் வளர்ச்சி அடைவது உள்ள ஆற்றல் மனிதனுக்குத்தான் உண்டு. ஓர் உயிர் வளர்ச்சி அடைவது நிச்சயமாக முடியாது. அதற்கு உள்ள குணம் இருக்கத்தான் செய்யும். அது யாராக இருந்தாலும் சரி.
     குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பான். நம்மை திட்ட வேண்டுமென்று ஆசை வைத்துச் சொன்ன வார்த்தை இது. நம்மையெல்லாம் குரங்கு என்று சொல்ல ஆசைப்பட்டதனால் வந்த வார்த்தை. வல்லவன் பேச்சு! அப்ப பகை! மனிதன் முயற்சியால் சில மாற்றங்கள் செய்யலாமே தவிர, அதற்குள்ள புத்தி இருக்கத்தான் செய்யும். ஒன்றும் செய்ய முடியாது. குரங்கை மனிதனாகத் திருத்துவதற்கு மார்க்கமே இல்லை. ஏனென்றால், நிச்சயமாக மார்க்கம் இல்லை. நாங்கள் சொன்னால் சொன்னதுதான்! காரணம் ஞானிகள் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.
     எல்லா உயிரும் பஞ்சபூதங்களில் இருந்து தோன்றியது. ஒரு சக்தி நம்மை எல்லாம் தோற்றுவித்தது. தோற்றுவித்த உயிர்களிலேயே மனிதன்தான் உயர்ந்தவன். அவனுக்கு எதிரியாக இருந்தது மும்மலம் என்று சொன்னான். அதை அறுக்க வேண்டும்.
     ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்
            கான வழியை அறிந்துநீ கொண்டு
      சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
            சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு.
                               – மகான் கடுவெளிச்சித்தர்
      இந்தக் கவி கொஞ்சம் கடினமான கவி. ஞானிகள் துணை கொண்டு உங்களுக்குச் சொல்கிறோம். எதையும் உண்மை உணர்ந்து செயல்பட்டு செயல்பட்டு நன்னெறி அடைய வேண்டும், மேலான கதி அடைய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள்.
     அனால் மேலான கதி அடைய வேண்டுமென்று நினைத்து என்ன்ன செய்வான்? வெறும் சடங்கிலேயே நின்று விடுவான். ஆனால் அது சடங்காகத்தான் முடியுமே தவிர, நிச்சயமாக ஆடு உயர்வு தராது.
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு – மனிதன் செயல்பட்டால், தனக்கு எதிரியாகிய, தம்மை அணு அணுவாக வஞ்சிக்கக் கூடிய, நம்மை கொஞ்சமேனும் கருணை காட்டாது வஞ்சிக்கக்கூடிய, நச்சுத்தன்மை உடைய மும்மலத்தை வெல்ல வேண்டும்.
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – மும்மலம் என்று சொல்லப்பட்ட ஒன்றை வெல்லுகின்ற முயற்சியை எவன் எடுக்கின்றானோ, அதைத்தான் வீடு ஏற்றம் கண்டு என்பார். அதுதான் ஆற்றல், செயல் எனப்படும். மனிதன் வீட்டில் பிறப்பான், காட்டுக்குப் போவான். வீட்டில் பிறந்து மேலான வீட்டிற்கு வர வேண்டும். பிறக்கும்போது கூரை வீடு இருக்கும். சிலபேர் தன்னுடைய மூலதனத்தை வைத்து, தன முயற்சியால் மாடி வீடு கட்டுவான். இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டிற்குத்தான் போவான். எந்த வீட்டிற்குப் போனாலும், காட்டிற்குப் போகக் கூடாது.
     ஆனால் வீட்டில் பிறந்து வீட்டிற்குப் போவது என்னும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும்? இந்த உடல் ஒரு வீடு, இந்த வீட்டிற்குள்ளேயே, ஒரு வீடு இருக்கிறது என்றான். அது சின்ன வீடு அல்ல! அது கூடு விட்டுக் கூடு பாய்வது என்றான். இதை மகான் திருமூலர் சொல்வார்.
     மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரந்
      திண்ணென் றிருந்தது தீயினச் சேர்ந்தது
      விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணாவபோல்
      எண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே.
                                     – திருமந்திரம் – யாக்கை நிலையாமை – கவி என்ன 143
                மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரந்இரு வகை பாத்திரம். உடம்பு, ஓர் வகை மண்ணால் செய்கிறான். ஆனால் இரண்டு வகை பாத்திரம். ஒரு வகை பாத்திரம் கரையும். ஒரு வகை பாத்திரம் கரையாது. ஒரு மண்பாண்டம் செய்வான். அந்த மண்பாண்டத்தைச் சுட்டுவிட்டால், கரையாது.
     மண்பாண்டத் தொழில் செய்பவர்கள், மண்பாண்டத்தை சூளையில் வைத்துச் சுட்டு விட்டால், அதை மழை நீர் ஒன்றும் செய்யாது. காரணம், கனல் கொண்டு சுட்டதால் அதைக் கரைக்க முடியாது.
      பாத்திரம், மண்ணும் தண்ணீரும் சேர்த்துச் செய்த பாண்டம். அதை சூளையில் வைக்காமல் இருந்ததால் மழை பெய்து தண்ணீர் பட்டு கரைந்துவிட்டது.
     பாண்டத்தை சூளையில் வைத்து நெருப்பில் வேக வைத்து விட்டால் கரையாது, அந்தப் பாத்திரம் உறுதிப்படும். அதேபோல இரண்டு வகைப் பாத்திரம் உடம்புக்குள்ளே உண்டு. இந்த உடம்பின் துணை கொண்டு அந்த பாத்திரத்தினை மூலக்கனல் கொண்டு, சுட்டுவிட்டால் அந்த உடம்பு வீணாகப்போகாது.
     ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – உடம்பு என்பது மேலான வீடு என்று சொன்னோம், இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வருகிறோம். மேலான வீட்டை அடைய மார்க்கம் சொன்னோம். உடம்பில் இரண்டு உடம்பு என்று சொன்னோம்.
     மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரந் திண்ணென் றிருந்தது தீயினச் சேர்ந்தது – இந்த உடம்பை உறுதியாக நம்பியதால் வந்த கேடு என்றான். இந்த உடம்பு நீடித்திருக்கும். இந்த உடம்பை உறுதியாக நம்பினான்.
     ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் – இந்த உடம்பை உறுதி என்று நம்பாதே! நிச்சயம் வஞ்சிக்கும். அது எப்படி என்றால், எப்படி மண்பாண்டம் செய்கின்ற தொழிலாளி சூளையில் மண்பாண்டத்தை வைத்து வேக வைத்தால், அது மழையில் கரையாதது போல, மூலக்கனல் கொண்டு எழுப்பி, இந்தச் சூட்சும தேகத்தைச் சுட்டு, இந்த உடம்பை சுட்டு அப்படி இரண்டு வகை உடம்பை சுட்டால்தான் ஒரு வகை உடம்பு மீதப்படும் என்றான்.
     தூல உடம்பில் ஏற்பட்ட அக்கினியை, மேலும், மேலும் மேலும் வளர்க்க, வளர்க்க, வளர்க்க தூல உடம்பு அழிந்து விடும். சூட்சும உடம்பு மேல்நிலைக்கு வரும். இந்த உடம்பின் துணை கொண்டுதான், அதைச் செய்ய முடியும். எழுகின்ற அக்கினியைக் கொண்டு, அந்த உடம்பைக் காப்பாற்ற வேண்டும்.
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – வீடு என்பது எப்படி என்று கேட்டான். கரையாமல் இருப்பதற்கு சூளையில் வைப்பது போல், உடம்பு அழியாது இருப்பதற்கு மூலக்கனல் தேவை
     . வீடேற்றறுங் கண்டு – மூலக்கனலை எழுப்புகின்ற மக்கள் உயர்வதற்குரிய மார்க்கத்தை காண்பார்கள்.
      அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு – என்ன செய்தால் இந்த உடம்பை பாதுகாக்க முடியும். என்ன செய்து இந்த உடம்பை காப்பது?
     எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
            எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் – சேர்ந்து
      வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
            வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
                        – மகான் கடுவெளிச்சித்தர்
      அழியக்கூடிய இந்த உடம்பை, நச்சுத் தன்மையுள்ள இந்த உடம்பை, அழியாமல் மாற்ற வேண்டும்.
     இதற்கான வழியை அறிந்து கொள்ள வேண்டும். அதை அடைய எந்த வழியை சார்வது என்று கேட்டான்.
     எட்டு மிரண்டையும் ஓர்ந்து – அகார உகாரம் என்று சொல்லப்பட்ட இரகசியத்தை அறிய வேண்டும். இதை யாராலும் அறிய முடியாது. இது சின்ன விசயமல்ல. அகார உகாரம் என்பது இரண்டும் பொருந்துகின்ற காற்று. ஆக அக்கினியையும், அகார உகாரத்தையும் அறிந்தாலன்றி அறிய முடியாது.
     அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு – எட்டும் இரண்டும் என்கின்ற இரகசியத்தை ஆராய வேண்டுமென்பார். அக்கினியை அறிந்த மக்கள்தான் உண்மையை நிச்சயமாக அறிவார்கள்.
     எந்த அக்கினி முன்னமே கவனிக்க வேண்டும். சூளையில் வைக்கப்பட்ட பாத்திரம் கரையாது. நெருப்புக்கும், நீருக்கும் தாங்குவது போல, இங்கே இந்தக் கணக்கை அறிந்த மக்கள் சொல்கிறார், ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல அது ஒரு கருவி.ஆறு மரியார் அளக்கின்ற வன்னியை – இந்த எட்டும் இரண்டும் என்று சொல்லப்பட்ட அகார உகாரத்தை அறிந்த மக்கள்தான், இந்த ரகசியத்தை அறிவார்கள்.
     ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
      ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
      ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
      ஆரு மறியா அறிவறிந் தேனே.
                                                – திருமந்திரம் – ஆயுள் பரிட்சை – கவி எண் 786
இங்கே,
     
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்
            கான வழியை அறிந்துநீ கொண்டு
      சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
            சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு.
                               – மகான் கடுவெளிச்சித்தர்
      ஆன வழி என்பதற்குத்தான் விளக்கம் சொல்கிறோம். இங்கு ஆன வழி என்று சொன்னாரே? அது எந்த வழி? அங்கே சொல்லும்போது, ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை – வன்னி என்பது அக்கினி. அக்கினியுடைய கணக்கை அறியமாட்டான். மனிதர்கள் உடம்பில் 98.4 சராசரி வெப்பம் இருக்கும்.
     மூலக்கனலை, எந்த அளவிற்கு கனலை எழுப்ப வேண்டுமென்று கணக்கு எங்களுக்குத்தான் தெரியும், கனலை அளக்க வேண்டும்.
      ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
      ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
      என்றார். வாயுவை அளந்து பார்க்கின்றவன், வன்னியை அளப்பான், வாயுவின் அளவு தெரிந்த மக்கள்,
      ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
     காற்றை பிடிக்குங் கணக்கறி வாரில்லை.
காற்றைப்பிடிக்கும் கணக்கரிவாளர் யார்?
      ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை – எந்த அளவிற்கு உடம்பில் அக்கினி வைத்திருக்க வேண்டும்? எவ்வளவு நீக்க வேண்டும்? என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இங்கு சொல்லும்போது,
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்
            கான வழியை அறிந்துநீ கொண்டு
      சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
            சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு.
                               – மகான் கடுவெளிச்சித்தர்
      அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு என்பதற்குத்தான் விளக்கத்தைச் சொல்லி வருகிறோம். அது எந்த வழி? அது எந்த வழியைப் பின்பற்றி அந்த மக்கள் செய்திருக்கிறார்கள்?
      ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை – வன்னியினுடைய கணக்கு, அக்கினியின் கணக்கு, எந்த அக்கினியைக் கொண்டு எப்படிக் காய்ச்சுவது?
    
     பால் காய்ச்சுகின்ற ஒரு பெண் என்ன செய்வாள்? அடுப்பிலே பால் வைத்திருப்பாள், காய வைத்திருப்பாள். வெளியே பேசிக்கொண்டிருப்பாள். பால் சரியாக காய்ந்திருக்கும். இனி நாம் தவறினால் பால் பொங்கிவிடும் என்பது அவளுக்குத் தெரியும்.
     பாத்திரத்தில் எவ்வளவு பால் இருக்கிறதோ, அதற்கு சரியாக அடுப்பில் அனல் இருக்கிறது. இந்த அனல் மிகுந்தால் பால் பொங்கப் போகிறது என்று வெளியே இருப்பவள் கணக்கு வைத்திருப்பாள்.  
     அதேபோல் இந்த உடம்பில் அக்கினி இவ்வளவுதான் இருக்க வேண்டும், மிகுந்தால் குறைந்தால் நோய் ஏற்படும் என்பது யோகிக்குத் தெரியும்.
     பாலையும் காய வைக்க வேண்டும், சுவையாகவும் காய வைக்க வேண்டும், அக்கினியும் இருக்க வேண்டும். பாலை காய்ச்சி எடுப்பதுபோல் இருக்க வேண்டும். அக்கினி மிகுந்தால், பால் பொங்கி விடும். அக்கினி குறைந்தால் பால் சுவை குறைந்து விடும்.
     இதைத்தான், ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை என்றார்.
     பாலை காய்ச்சுகின்ற எல்லாப் பெண்களும் அக்கினியை அறிவார்கள். இது உலக நடை. இது உலக வாழ்க்கைக்குப் பயன்படும். ஆனால் யோகா வாழ்க்கைக்குத் தனி அக்கினி உண்டு.
      வாசியால் மூலக்கனலை வீசியே கழன்றவர்  என்பார்.
      இங்கே சொல்லும்போது,
      காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே
      ஓமக் கனல்வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம்.
                   – மகான் பத்திரக்கிரியார் – மெயஞானப்புலம்பல் – கவி எண் 146

                      காமக் கடல் கடந்து போவதற்கு ஓமக்கனல் வளர்க்க வேண்டும். எந்த அளவிற்கு ஓமக்கனல் வளர்க்க வேண்டும் என்பதைத்தான், ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை என்றார். எந்த அளவிற்கு வளர்க்க வேண்டும் என்பதை ஆசான் துணையில்லாமல் அறிய முடியாது.
     பாரி லுயர்ந்தது பத்தி(பக்தி) அதைப்
            பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
     என்று ஆசான் சொன்னார். பக்தி வேண்டும், பக்திக்குரிய அறிவு வேண்டும், அறிவிற்குரிய முன் வினைப்பயன் வேண்டும், ஆசான் வேண்டும், இல்லையென்றால் முடியாது.
    
    
      அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு – இதற்குத்தான் இந்த விளக்கம் சொல்லி வருகிறோம். பாலை காய்ச்சி எடுப்பதுபோல், இந்த அக்கினியின் அளவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அக்கினியின் அளவு பக்தியின் காரணமாகத்தான் வரும்.
     அன்பெனும் நன்மலர் தூவிப் – பர
      மானந்தத் தேவியின் அடியிணை மேவி
     அன்பெனும் நன் மலர் தூவினால் அன்றி இந்த கருத்தை உங்களால் அறிய முடியாது. அந்த கணக்கை அறிவது சின்ன விசயமல்ல.
     ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
      காற்று அரை அங்குலம் அளவு உந்தியில் தங்குகிறது. இந்தக் காற்று என்ன செய்கிறது? அந்த அனலை உண்டாக்குவது அந்த சிறு காற்று. அவனை அறியாமலேயே அணு அணு அணுவாக அனல் ஏறும்.
     கையருவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
            கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
      ஐயர்மிக உய்யும்வகை அப்பர்வினை யாட்டு
            ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

     சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
            தேவர்களும் மூவர்கும் பேசுவதேன் பேச்சு
      இச்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
            என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
                                – திருஅருட்பா  ஆறாம் திருமுறை – கண்புருவப் பூட்டு – கவி எண் 2242, 2243
               
                கையருவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஒரு அங்குல கணக்காக இருக்கின்ற வாயுவை அறிந்ததால், அவன் வன்னி என்கிற அக்கினியை அறிந்தான்.
      அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு – ஆன வழியை அறிந்து நீ கொள்ள வேண்டும் என்பதற்குத்தான், இவ்வளவு விளக்கம் சொல்லியிருக்கிறோம். என்ன வழி அது?
     
      ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
      வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
      தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
      ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.
                                                – திருமந்திரம் – அட்டமாசித்தி – கவி எண் 659
                தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே  – அதற்கு ஆன வழியை அறிந்து கொண்டு என்ற அந்த ஓர் வரிக்குத்தான் விளக்கம் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம்.
      ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல – ஓங்கிய அங்கி என்பது அக்கினி, வளருகின்ற அக்கினி.
      தினமும் அணுஅணுவாக வளர்கின்ற வன்னி. இதுதான்அதற்கான வழி என்பதற்கு பொருள்.
      ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல – அந்தக் காற்று, சுழிமுனை வழியாகச் சென்றால், அதனால் ஏற்பட்ட அனல் அணு அணுவாக ஏறும். கடுகு கடுகாக காய மேன்மை என்றார் ஆசான் சுப்பிரமணியர்.
      அணு அணுவாக எழுகின்ற அக்கினியால், உடம்பில் இருக்கும் நச்சுத்தன்மை எல்லாம் பொடிபடும். அதற்கு அன்பு உணர்ச்சி வேண்டும். ஓங்குகின்ற கனலை அறிய வேண்டும்.
      அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு என்கின்ற அந்த ஒரு வரிக்குத்தான் இவ்வளவு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
     ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
      வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
      தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
     உடம்பையும் வாயுவையும் யோகிகள் அறிந்தார்கள். அதன் காரணமாக கணக்காக வன்னியை அறிந்தான். கணக்கான உடம்பை அறிந்தான். எல்லாவற்றிற்குமே கணக்கு உண்டு. எது எதற்கு என்ன செய்ய வேண்டுமென்ற கணக்கு உண்டு. அந்த கணக்கை அறிந்தவன்தான் யோகி. இவன் எல்லாவற்றிற்கும் உள்ள கணக்கை அறிந்து, அதற்கான வழியை அறிந்து கொண்டான். காற்றின் அளவை அறிந்தான். அக்கினியின் அளவை அறிந்தான். உடம்பிலுள்ள வாத பித்த சிலேத்துமத்தின் அளவை அறிந்தான். எல்லாமே கணக்கு. அந்தக் கணக்கை அறிந்தவன்தான் இங்கே பிணக்கு அற்று இருப்பான். இல்லையென்றால், பிணக்கு என்று சொல்லப்பட்ட வஞ்சனை சூழ்ந்து விடும்.
     ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
      வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
      தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
     எங்கே வாங்குவது? வாங்குகின்ற முறையோடு வாங்கினால் அது புருவ மத்திக்குச் செல்லும். ஒண்சுழு முனை – என்றால் திண்மையான சுழிமுனை என்று அர்த்தம். ஒண்சுழு முனைச்செல்ல – திண்மையான பாதை அது. எது பாதை?
     வாங்கி இரவி மதிவழி ஓடிடத் – எந்த வழி ஓடிட வேண்டும். புருவமத்தி வழியே ஓடிட வேண்டும். வாசியின் கணக்கறிந்த மக்கள், புருவ மத்தியில் வாசியைச் செலுத்துவதை, அறிவார்கள். வாசியின் கணக்கறிந்தால் அன்றி, புருவமத்தியில் வாசி ஒடுங்காது. புருவமத்தியில் வாசி ஒடுங்கும் போது, திருகு கள்ளி போல் உள்ளே போய் அடைபட்டு விடும். அந்த காற்று வெளியே வராது. இதை அடையோகம் என்று சொல்வார்கள்.
     சிலபேர் அடினாக்கை அறுத்து, நாக்கை மேலே கொண்டுபோய் அண்ணாவிலே செலுத்திவிட்டு, இதை அடையோகம் என்று சொல்வார்கள். அது மாபெரும் அபத்தமாகும். யான் என்ற கர்வம் கொண்ட மக்கள், நாக்கை மேலே அழுத்திவிட்டு, மேலே அடைய வைத்து விட்டு, அதை அடையோகம் என்று சொல்வார்கள். அது அடையோகமல்ல! அது அவனை, அவனே கொன்று அழித்து கொள்வது. அடையோகம் என்பது, சென்ற காற்று திரும்ப வராத இடம். அதுதான் மோனநிலை. கூடு விட்டுக் கூடு பாயுகின்ற பழக்கம் அது. கீழ் ஓடுகின்ற காற்றை புருவ மத்தியில் செலுத்தி விட்டால், அந்தக் கூட்டுக்கு வந்து விட்டான் அவன்! மேலான வாழ்க்கையை அவன் தேடி விட்டான். அது மோன வாழ்க்கை.
      வாங்கி இரவி மதிவழி ஓடிடத் – எங்கே, ஓடியது புருவ மத்தியில்.
      தாங்கி உலகங்கள் ஏழுந் திரித்திட – இதுபோன்ற முறையைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு நாளுக்கு நாள் அக்கினி மிகுதியாகும். இந்த நச்சுத்தன்மையை உண்டாக்கக் கூடியவைகளை மூலப்புளி, அமுரி என்று சொல்வார்கள். மூலப்புளி என்பது மலம். அமுரி என்பது ஜலம். சுக்கிலம் என்பது மாய்கை, அது மும்மலம். அனல் ஏற ஏற மூலப்புளி, அமுரி என்று சொல்லப்பட்ட மல ஜாலம் பொசுங்கி மேலே போய்விடும். அவன் தான் மூலப்புளி அமுரி உண்டவன். உண்டேன் மூலப்புளி அமுரி என்றார் மகான் திருவள்ளுவர். ஆனால் இவன் வெளியில் இருக்கும் நரகப்பொருளை, கழிவுப்பொருளை சாப்பிட ஆரம்பித்தான்.
     யோகிக்கு அந்த அனல் ஏறி, எல்லாம் கொதித்து ஆகாயத்திற்கு, புருவ மத்திக்கு, உச்சிக்கு வரும். உச்சிக்கு வருகின்ற காலத்தில் எல்லாமே அவனுக்கு உணவாகப் போய்விடும். இவன் உடம்பே இவனுக்கு உணவாகப் போய்விடும். முன்னே இவனுக்கு உற்ற துணையாக இருந்த உடம்பே அனல் ஏறி, இந்த உடம்பே ஒழுகி அமிழ்தபானமாக மாறும். அதை சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். இவன் உடம்பை இவனே சாப்பிட்டு விடுவான். அதனால் உடம்பு தக்கை போன்று ஆகும். அணுவாக ஒடுங்கும்.
     இங்கே இருந்து கொண்டே, ஏழு உலகத்திலும் எங்கே வேண்டுமேனாலும் பிறக்கலாம்! எங்கே வேண்டுமானாலும் கலக்கலாம்! வினாடிக்குள் வருவான்! எடு வேண்டுமானாலும் செய்வான்! ஆனால் அவன் கண்ணுக்குப் புலப்படாத அணுவாக மாறுவான்! விரிந்தால் அண்டமாக விரிவான்! ஒரு சுண்டு விரலால் தூக்குகின்ற அளவிற்கு லேசாக இருப்பான்! அதே சமயத்தில் ஆயிரம் யானைகளாலும் தூக்க முடியாத அளவிற்கு கனமாக ஆவான்! அந்த ஆற்றல் அவனுக்கு உண்டு.
     உலகங்க ஏழுந் தரித்திட – உலகம் எல்லாம் தரிப்பான் அவன். எங்கே வேண்டுமானாலும் பிறப்பான். எங்கே வேண்டுமானாலும் தோன்றுவான். எங்கே வேண்டுமானாலும் தோன்றுவதைத்தான் தரித்தான் என்று பொருள்படும்.
      தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே – இதெல்லாம் யாருக்குச் சொன்னோம்? இங்கே அருவழி யோர்க்கே – நல்வழியில் உள்ள மக்கள். நன்னெறியாளர்க்குத்தான் இது வரும். மகான் திருமூலதேவர், நன்னெறியைப் பின்பற்றுவதற்கு என்ன சொன்னார். உலகமக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்து பார்த்தார். ஆசான் துணையில்லாமல் இந்தத் தத்துவத்தை உணர முடியாது என்பதை  ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே என்று சொன்னார். நன்னெறியைக் கடைப்பிடிப்பவர்க்கு என்று சொன்னார்.
     இங்கே,
      ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்
            கான வழியை அறிந்துநீ கொண்டு
      சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
            சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு.
                                    – மகான் கடுவெளிச்சித்தர்.
என்பார். அன்பு உணர்ச்சி உள்ள மக்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. உலக உயிர்கள் அத்தனையும், மனித உயிர்களும், மற்ற உயிர்களும், ஊர்வன, நடப்பன, பறப்பன, நீர்வாழ்வன என்று எல்லா உயிர்களும், எப்படி வாழ்கிறது என்றால், மழை என்று சொல்லப்பட்ட வருவாய் காரணமாக வாழ்கிறது.
      வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
      தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
      ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
      நானின் றழைப்பது ஞானங் கருதியே.
                                                – திருமந்திரம் – கடவுள் வாழ்த்து – கவி எண் 30
                வானின் றழைக்கும் மழைபோல்சந்தேகப்படாதீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சாட்சிப்பொருளை நான் காட்டுகிறேன். மழை பெய்கின்ற காரணத்தினால்தான் இத்தனை உயிர்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் தோன்றி எத்தனை காலங்கள் ஆகியது என்று யாரும் கணக்கெடுக்க முடியாது. ஆனால், உயிர்கள் அத்தனையும் வாழ்வதற்கு அடிப்படை காரணம் ஏதோ சில மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு மழையாவது அன்போடு பெய்கிறது. அதன் காரணமாகத்தான் நிலத்தடி நீர் அல்லது மேகத்தின் நீரைக் கொண்டு, உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இதை ஆசான் வள்ளுவப்பெருமான்.
     வான்நின்று உலகம் வழங்கி வருவதால்
      தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
                                                – திருக்குறள் – வான் சிறப்பு – குறள் எண் 20
               
                நீர் இல்லாவிடில் உயிரினங்கள் வாழ முடியாதது போல், இந்த உயிரினங்கள் வாழ்வதற்கு காரணம், மழை நிலைத்து நின்று பெய்கின்றது
      இறைவனும் தானின் றழைக்குங்கொல். அதே போல, நீ அன்பு செலுத்தினால், நிச்சயமாக உனக்கு உற்ற துணையாக இருந்து உன்னை வாழ வைப்பான். இது எடுத்துக்காட்டு.
     மழை பெய்து உயிரினங்களை வாழ்விப்பது போல, என் ஆசான் நந்தீசர், அவர் கடவுள், அவர்மீது அன்பு கொண்டிருந்தால் நிச்சயமாக நமக்கு அருள் செய்வார். இப்பவும் அருள் செய்கிறார். இது ஒரு எடுத்துக்காட்டு. மழை பெய்து உயிர்களை வாழ்விப்பது போல, நிச்சயமாக ஆசான் நந்தீசர் நமக்கு அருள் செய்து காப்பாற்றுவார். எனவே ஆசானை நம்புங்கள்.
      என்று தயங்குவார் – அப்படிச் சொல்லி ஏன் தயங்குகிறீர்கள்?
     ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே – சிலர் கன்று குட்டியை என்ன செய்வான், கையில் வைத்துக் கொண்டு போவான். பையில் வைத்துக் கொண்டு போவான்! அது பாலும் குடிக்காது! ஒன்றும் குடிக்காது! அப்படியே கையில் வைத்திருப்பான். அப்படியே இருக்கும். அது கூப்பிடவே கூப்பிடாது! சில கன்றுகுட்டி, வளராது! தேயாது! குளிப்பாட்ட வேண்டாம்; ஒன்றும் செய்ய வேண்டாம்! என்றைக்கும் சிலை மாதிரி. இதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதே கன்று ஜீவனாக உயிராக இருந்தால், என்ன செய்யும் நேரமானால் கத்தும். தனக்கு பால் தேவைப்படும்.
     ஆனால் அதிகமாக பால் சாப்பிட்டால் கன்று கெட்டுவிடும்! ஆகையால், அதற்குள்ளே பிடித்து இழுத்து விடுவார்கள். ஆனால் வருத்தி அழைத்து என்ன பயன்? இது உலக நடை. கன்று தாயை அழைக்கும். ‘எனக்குப் பசி’ என்று தாயை அழைக்கும். இது மறுக்கப்படும்.கன்று பால் சாப்பிட வேடுமென்று ஆசைப்பட்டு, அழைக்கும். இடையில் இருப்பவன் என்ன செய்வான், அதைத் தடுத்து விடுவான். இங்கே அந்தத் தடையே இல்லை! என்றார்.
     ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே – பசு மறக்கலாம் கன்றுக்குப் பாலூட்டாது இருக்க. ஆனால் கன்று மறக்குமோ? காரணம் அதற்குப் பசி. அங்கே உலக் நடையில் சொல்லும்போது, கன்றுக்கும் பசுவிற்கும் இருக்கும் பிணைப்பு போன்றது. இங்கே ஆசானுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு என்றார்.
     உலக நடையில் பார்க்கும்போது,கன்று தாயை அழைக்கிறது. தனக்குப் பசி வந்து விட்டது என்று அழைக்கிறது. ‘எனக்கு பால் கொடு’ என்று அழைக்கிறது. மிகக் கருணை கொண்டு, கன்று வாயை வைத்து நாவால் மடியை அப்படியே நக்கும், உடனே பால் சுரக்கும். காரணம், பால் ஊட்ட வேண்டுமென்ற உணர்வு பசுவிற்கு இருக்கும்.
      ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே – கன்று தாயிடம் பால் குடிக்க ஆசைப்படலாம், பசியும் இருக்கலாம். ஆனால் இடையில் இருப்பவன் அதைத் தடுப்பான். ஆனால் தடை இல்லாமல் அருள் செய்வார் என் ஆசான் நந்தீசர் என்றார் மகான் திருமூலர்.
      ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே – அங்கே தடைபடும். ஆனால் விரும்பினால் அவன் அருள் செய்வான்.
     காரணம், கன்றுக்குப் பசி வந்தால், பசுவை நாடுவது போல், நான் ஞான வாழ்வை விரும்புகின்றேன். அதற்காக நான் ஆசான் நந்தீசரை விரும்பி அழைக்கிறேன் என்றார்.
      ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே – ஞான வாழ்வை நான் விரும்புகிறேன். மழை நிலைத்து நின்று உயிரின்களை வாழ வைப்பது போல, இறைவன் அருள் செய்வார் என்று சொன்னார்.
      பிறகு கன்றையும், பசுவையும் நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார். அது தடைபடலாம், தடைபடாதும் இருக்கலாம்.
     ஆனால் இது தடைபடவே படாது என்றார். ஏனென்றால் கன்றும் அநித்தியமானது, பசுவும் அநித்தியமானது. இரண்டிற்கும் நோய் வந்து வீழ்ந்து போகலாம்.
    
     ஆனால் ஆசான் நந்தீசர் என்றும் நிலைத்து நிற்பவர், நிலையானவர், யார் எதைக் கேட்டாலும் கொடுக்கும் தகைமை உள்ளவரோ, அவரை ஞானம் கருதி அழைக்கிறேன், என்று இந்தத் தத்துவத்தையெல்லாம் மகான் திருமூலர் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் நித்தியமான பொருளை உணர்ந்தவர்கள்.
     ஆனால் மகான் திருமூலதேவர் வணங்குகின்ற ஆசான் நந்தீசர் என்றும் நிலையானவர். அவர் அநித்தியமல்ல! நித்தியமானவர் அவர். நித்தியமானவர் என்பதினாலே அவர் நித்தியமான பொருளை தருவார். அவர் நித்தியமானவர், அழிவில்லாதவர். ஆனால் ஆர் பாதத்தைப் பற்றுவதற்கும், சிறப்பறிவு இருக்க வேண்டும். அது போன்ற அறிவு இருக்குமேயானால் நிச்சயம் அது கைகூடும்.
      வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
      ஈண்டு முயலப் படும்.
                                                                – திருக்குறள் – தவம் – குறள் எண் 265
                விரும்பியதை எல்லாம் விரும்பியவாறு அடையலாம். இதை பொருளறிந்து செய்ய வேண்டும். பொருளறிந்து செய்தால் நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்குமென்று சொல்வார்கள்.
      பாரி லுயர்ந்தது பத்தி(பக்தி) அதைப்
            பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ்
            சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
                        – மகான் கடுவெளிச்சித்தர்
      இந்த பாடலை பலமுறை ஏற்கனவே சொன்னோம். இரு பகுதியாக பேசி வந்தோம். ஒரு பகுதியாக பக்தியின் அடிப்படையாகச் சொன்னோம். அதன் காரணமாக, பக்தியின் முதிர்ச்சியின் காரணமாக, பக்தியினுடைய உயர்வைச் சொன்னோம். அந்தப் பக்தியையும் பொருளறிந்துதான் பக்தி செலுத்த வேண்டும். அதுதான் உண்மையான பக்தி என்றும், பொருளறியாது கண்மூடித்தனமான பழக்கவழக்கத்தில் ஈடுபட்டுச் செய்வதெல்லாம் பக்தி அல்ல, மூடபக்த்தியாகும்.
     எட்டு மிரண்டையும் ஓர்ந்து – அதே சமயத்தில் மகான்கள் ஞானியின் பாதத்தைப் பற்றுவார்கள், இடகலை, பிங்கலை என்று சொல்லப்பட்ட ரகசியத்தை அறிவார்கள்.
     எனவே அடிப்படையான காரணத்தை உணர்ந்து, பக்தி கலந்த யோகமும், யோகத்தில் ஏற்பட்ட பயன் விளக்கம் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம்.
     இதற்கு முன்னே சொல்லும்போது அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு என்று சொன்னார்.
     சீற்றமில் லாமலே தொண்டு, ஆதி சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு – சீற்றம் என்பது சோர்வு. எத்தனை ஆண்டு பாடுபடுவது என்ற சோர்வு வரும்.
     மகான் ஔவையார், எண்ணற்கரிய அருந்தவத்தாலன்றே நண்னப்படும் உணர்வுதான் என்று சொன்னார்.
     எண்ணற்கரிய அருந்தவத்தால் – பல கோடி ஜென்மங்கள் பாடுபட வேண்டும். ஊழிதோர் ஊழி பாடுபட்டாலன்றி இது கிடைக்காது. ஊழிதோர் ஊழி பாடுபட்டு கிடைக்கின்ற இந்தப் பொருளை ஒரு சிலர் நான்கு ஆண்டு அல்லது ஆறு ஆண்டு அல்லது பத்து ஆண்டு என பாடுபட்டுவிட்டு, சோர்வடைவான். இந்தச் சோர்வுதான் எடுத்துக் கொண்ட கொள்கையில் நம்பிகை அற்றுப்போகச் செய்துவிடும்.
     ஒரு ஆசான், அங்கிருக்கும் பிள்ளையார் சிலைக்கு ஆயிரம் குடம் தண்ணீர் ஊற்று என்று சொன்னாராம். ஆயிரம் குடம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தால் உனக்கு இறைவன் காட்சி தருவான் என்று சொன்னாராம். அந்த காலம் வெயில் காலம். இவன் என்ன செய்தான், ஊர் ஊராக அலைந்து, தண்ணீர் கொண்டு வந்தான். கிட்டத்தட்ட மூன்று நாள் ஆனது, அந்தத் தண்ணீர் கொண்டு சேர்க்க மூன்று நாளும் அப்படியே இருந்தது பேசாமல். கொஞ்சம் கூட மாற்றமில்லை. 999 குடம் வரை மாற்றமில்லை. 999 குடம் ஊற்றும் வரம் மாற்றமில்லை. அப்படியே சிரித்துக் கொண்டு இருந்தது.
     இது என்ன ஏளனச் சிரிப்பா? என்று கேட்டான். அதற்கும் சிரித்தது. இல்லை, அன்போடு சிரிக்கிறாயா என்று கேட்டான். அதற்கும் சிரித்தது. நீ என்ன கல்லா என்று கேட்டான். அதற்கும் சிரித்தது. மண்ணா என்று கேட்டான், சிரித்தது. நீ உண்மையிலே காய சித்தி அடைந்தாயா என்று கேட்டான். அப்பவும் சிரித்தது. சரி, இது ஏளனம் என்று முடிவெடுத்து விட்டான். 1000வது குடத்தைக் கொண்டு வந்து திடீரென தலையில் போட்டு விட்டான்! உடைத்ததும், அப்போதுதான் அந்தச் சாமி எழுந்திருந்து, இந்தத் துறைக்கு கொஞ்சம் பொறுமை வேண்டுமெனச் சொல்லி மேலும் கொஞ்சம் நிதானித்துப் போக வேண்டும் என்று சொல்லியது.
     இதை இங்கே சொல்லும்போது, அதற்கான வழியை அறிந்துநீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு –கொஞ்சம் கூட சோர்வு படாமல், உணர்ச்சி வசப்படாமல் தொண்டு செய் என்றார்.
      அதற்கான வழியை அறிந்த்ணீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு, ஆதி சிவனுக்குச் செய்திடில் சேர்ந்திடுங் கொண்டு – கோபம் கொள்ளக் கூடாது, சிலருக்கு நல்வினை காரணமாக அவன் தொட்டதெல்லாம் துலங்கும். அவன் அளவு கடந்து தவம் செய்தான் என்று யாரும் ஏமாற வேண்டாம்.
     முன் செய்த தவம், முன் செய்த நல் வினைப்பயன். அவனிடம் கையெழுத்து போடச் சொல்லி பேனா கொடுத்தால், என்னாகும், பேணா முள்ளை உடைத்துத் தருவான். ஆனால் அவன் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்கின்ற ஆற்றல் இருக்கும். அவன் தொட்டதெல்லாம் தடைபடும். அதற்கு அடிப்படை காரணம் அவன் செய்த வினைபயன்.
     சீற்றமில் லாமலே தொண்டு – கோபம் கொள்ளாமல், முதலில் நாம் செய்ய வேண்டிய கடமையை செய்வோம். யோகிகள் என்ன செய்வார்கள், செய்ய வேண்டிய கடமையை செய்து கொண்டே இருப்பார்கள்.
     மனைவி மக்களோடு வாழ்வார்கள், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை எல்லாம் செய்வார்கள், பிள்ளைகளை படிக்க வைப்பான், திருமணம் செய்து வைப்பான், பார்த்தால் உலக மக்களோடு சேர்ந்தே இருப்பான், மனம் மட்டும் தனித்திருக்கும். அவனை உண்மையான யோகி என்று சொல்வார்கள். இதை மகான் பட்டினத்தார் சொல்வார்,
     காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
      ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்குவிண்ணோர்
      நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
      வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
                                – மகான் பட்டினத்தார் பாடல்கள் – திருவிடைமருதூர் – கவி எண் 1
                பொருள் அறியாதவன் என்ன செய்வது? சீற்றமில் லாமலே தொண்டு செய் என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கனம் தனத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் ஏற்படும். ஆகவே, உணர்ச்சிவசப்படாமல், வருகின்ற சோதனையை, வேதனையை சாதனையால் வென்று இதுபோன்ற சீற்றங்களையெல்லாம் தூள்படுத்த வேண்டும். இப்போது நாம் வகுத்து சொன்ன மார்க்கம், பக்தி மார்க்கம். அதைப் பின்பற்றினால், வருவது யோகா மார்க்கம். அதைப் பின்பற்றினால் வருவது இலாபமான முக்தி மார்க்கம்.
     இதையெல்லாம் அறிவதற்கு ஞானிகள் துணை வேண்டும். நாங்கள் எதைச் சொன்னபோதிலும், ஒரு மையக்கருத்துக்கு வருவோம்.
     பக்தியோடு சேர்ந்த யோகம் என்பது, மையக்கருத்து. உங்கள் மனதில் நன்றாக பசுமரத்தாணி பதிவதுபோல் தத்துவங்களையும் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் இதைப்பற்றி பேசி வருகிறோம்.
    

     இன்று நாம் மகான் கடுவெளிச்சித்தர் பாடல்களையும் திருமந்திர பாடல்களையும் சேர்த்துப் பேசியிருக்கிறோம். இதுநேரம் வரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்! வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0209328
Visit Today : 594
Total Visit : 209328

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories