கேள்விச் செல்வம்
என்ற தலைப்பில் 07.02.1988 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
                திருவடி ஞானம் சிவமாக்கு விக்குந்
                திருவடி ஞானம் சிவலோகஞ் சேர்க்கும்ந்
                திருவடி ஞானம் சிறைமல மீட்கும்
                திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
                                                திருமந்திரம் – திருவடி பேறு கவி எண் 1598
                அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
     ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மிக நுணுக்கமான ஒரு பொருளைப் பற்றி சொல்லுகின்ற சங்கம் என்பது உங்களுக்குத் தெரியும். உலகத்தை தோற்றுவித்த இயற்கை, அந்த இயற்கையால் தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்கள், உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற நலிவு, இழிவு, ஆக்கம், கேடு இதையெல்லாம் பற்றி சொல்லுகின்ற சங்கம் ஆகும்.
     ஞானிகள் எல்லோரும் வாசிப்பழக்கத்தை அறிய வேண்டுமென்று சொல்வார்கள். வாசிப்பழக்கம் என்றால், மூச்சுக்காற்றை ஸ்தம்பிப்பது, நிறுத்துவது.
     வாசி வசப்பட்டால் மட்டும் போதாது, மூச்சுக்காற்று வசப்பட்டால் மட்டும் போதாது. மூச்சுக்காற்றும் வசப்படுவதற்கு ஞானிகள் துணை வேண்டும். அந்த மூச்சுக்காற்று வசப்படுவதற்கு, வசப்பட்டு சித்தி பெறுவதற்கு ஞானிகள் துணை வேண்டும்.
    
     ஒவ்வொருவரும் கற்றால் மட்டும் போதாது, கேட்க வேண்டும். ஏனென்றால், நீ கற்றது உண்மைப் பொருளா? அல்லது குற்றமானதா? உண்மையா? அல்லாததா? என்று அறிவதற்கு இன்னொரு மனிதன், முற்றும் உணர்ந்தவன், அவன் கற்று அனுபவத்தில் உணர்ந்ததை சொல்லும்போது கேட்க வேண்டும். இல்லையென்றால் அறிவு தெளிவு பெறாது.
     அப்போது மனிதனுக்கு எத்தனை ஆற்றல் இருந்தாலும், எத்தனை வகையான கல்வி அறிவு இருந்தாலும், அவனாக சிந்திக்க முடியாது. ஆனால் மற்ற உலக நடை படிப்பு படிக்கலாம், அறியலாம்.
     ஆனால் ஞானம் என்பது உண்மைப்பொருள் உணர்ந்த மக்கள் சொன்னாலன்றி தெரியாது. அதனால் என்ன செய்தார் மகான் திருவள்ளுவர், கேள்விச்செல்வத்தை 42வது அதிகாரமாக வைத்தார்.
     கேள்வி – ஒரு மனிதனுக்கு செவியால் வரும் ஆதாயம், கல்வி. இப்போது இந்த கழுத்துக்கு மேல் வாய், மூக்கு, கண், செவி இந்த நான்கும் இருக்கிறது. மற்ற கருவிகள் இரண்டு இரண்டாக இருக்கும். மூக்கு துளை இரண்டு, கண் இரண்டு, செவி இரண்டு, வாய் ஒன்று. இதில் நாக்கு உலகத்தில் உள்ள எல்லா சுவையையும் சுவைக்கும் ஆற்றல் உள்ளது.
     ஆறு வகை சுவை இருக்கும். அந்த ஒவ்வொரு சுவையையும் இன்ன தன்மை என்று உணரக்கூடிய ஆற்றல் நாவுக்கு உள்ளது.
     அது ஏன் ஒரு வாயை வைத்தான், மற்றதெல்லாம் இரண்டு இரண்டாக இருக்கும்போது? மூக்கு துளை இரண்டு, கண் இரண்டு, காது இரண்டு, ஆனால் வாய் மட்டும் ஒன்று. இதற்கே உணவு போட்டு கட்டாது! அப்போது ஒவ்வொரு சுவையையும் அறியக்கூடிய ஆற்றல் நாக்குக்கு உண்டு. ஆனால் ஒரு அங்குலம்தான் நாக்கு இருக்கிறது.
     மூக்குக்கு உலகத்தில் உள்ள எல்லா வாசனையையும் அறியும் ஆற்றல் உண்டு. அதே போல கண். கண் உலகத்தில் உள்ள எல்லா பொருளையும் ஆராயும். எல்லாப் பொருளையும் காட்சியை பார்க்கக் கூடிய ஆற்றல் கண்ணுக்கு உண்டு.
     உலகத்தில் உள்ள இனிய சொற்களாக இருந்தாலும் சரி, கடும் சொற்களாக இருந்தாலும் சரி, அதையும் செவிகள் கேட்கும். இந்த நான்கு வகை ஆற்றல். சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல். தொடு உணர்வு ஸ்பரிச உணர்வு. இதில் தலை சிறந்தது எது என்று கேட்டான். செவி தான்! இந்த ஐந்து செல்வங்களில் தலை சிறந்தது எது என்று கேட்டான். கேள்விச் செல்வம். மகான் திருவள்ளுவர் வாயைப் பற்றி சொல்லவில்லை. கண்ணோட்டம் பற்றி சொல்லியிருக்கிறார்.
     செவிக்கு மட்டும் தனித்தன்மை கொடுத்து ஒரு அதிகாரமே கொடுக்கக் காரணமென்ன? கேட்டு அறிய வேண்டும். எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் என்ன முயற்சி எடுத்தாளும் ஒன்றைப் பற்றி அறிய முடியாது. ஏன் கேட்க வேண்டும்? நாமாக படித்து உணரக் கூடாதா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது, மகான் திருமூலதேவர் சொல்வார்,
      அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
      அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
      கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
      அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே
                                                – திருமந்திரம் – கால சக்கரம் – கவி எண் 766
      இப்படி ஆறும் என்றாலே கற்றவனாக இருந்தாலும் சரி, கல்லாதவனாக இருந்தாலும் சரி, கவிஞனாக இருந்தாலும் சரி, அவன் எத்தனை சொல்வன்மை வாய்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் அளவில்லாத அறிவ உள்ளவனாக இருந்தாலும் சரி அவனாலும் முடியாது என்றார்.
     ஆரும் அறிகிலார் என்று சொல்லும்போது, அங்கே விதி விலக்கே இல்லை.
      அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
      அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
      கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
      அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே
                                                – திருமந்திரம் – கால சக்கரம் – கவி எண் 766
      காணின் – கண்டால். கவனிக்க வேண்டும். ஆய்ந்து கொள்ளுதல் என்பது, யாரும் அறிய முடியாத ஒன்றை இன்னொருவர் சொல்ல வேண்டும்.
     ஆரும் அறிகிலார் என்று சொல்லும்போது, அறிந்தவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அதனால்தான்
      செவி உணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
      ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 413
                செவி உணவு, அவி உணவு என்றார். செவி உணவு – செவியால் பெறுகின்ற உணவு. செவியால் உண்ணுகின்ற உணவு. அது கேள்விச்செல்வமாகும்.
     இங்கே ஆய்ந்து கொள்வார்களுக்கு என்றார். அப்படி ஆய்ந்து கொள்கின்ற மக்களுக்கு, அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் என்றார்.
      ஆய்ந்து கொள்கின்ற மக்களுக்கு தலைமையாகிய மெய்ப்பொருள் அழியாது உள்ளே அமர்ந்துவிடும் என்றார்.
     மகான் மாணிக்கவாசகர் இந்த ஆய்ந்து என்பதற்கு,
      அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே!
                  அன்பினில் விளைந்த ஆரமுதே!
      பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
            புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
      செம்மையே ஆய சிவபதம் அளித்த
            செல்வமே! சிவபெருமானே
      இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
            எங்கெழுந்து அருளுவது இனியே.
                                                                – திருவாசகம் – பிடித்தபத்து – கவி எண் 3
                அமுது என்று சொல்லாமல் ஆரமுது என்றார். அங்கேஅண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு என்றார். இங்கே செம்மையே ஆய சிவபதம் அளித்த என்றார். அப்போது மெய்ப்பொருளை ஆய்ந்து கொள்வதற்கு, தலைவன் அருள் வேண்டும்.
     செம்மையே ஆய சிவபதம் அளித்த – ஆய்வதற்கு அவன் அருள் வேண்டும். சிவபதமாகிய மெய்ப்பொருளை அறிவதற்கு அவன் அருள் வேண்டும். அப்போதுதான் நாம் அறிந்து கொள்ள முடியும். இதை ஆசான்தான் சுட்டிக் காட்ட வேண்டும். ஆசான் சுட்டிக்காட்டாவிட்டால் நிச்சயமாக அந்த வாய்ப்பு கிடைக்காது. இதையெல்லாம் மகான்கள்தான் உணர்த்துவார்கள். மகான்கள் உணர முடியாத ஒன்றை உணர்த்துவார்கள். இது போன்ற கருத்துகளை, யாரும் அறிய முடியாத ஒன்றை உணர்த்துவார்கள். இது போன்ற கருத்துகளை, யாரும் அறிய முடியாத ஒன்றை நாம் அறியலாம். இதை மகான் திருமூலதேவர் அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் என்று
சொன்னார். கற்றவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தாலும் சரி, இதை அறிய முடியாது என்று சொன்னார். ஆனால் ஒருவன் அறிவான் என்று சொன்னார்,
இந்த பாடலில்,
      தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
      யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
      ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
      ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
                                                – திருமந்திரம் – கேள்வி கேட்டமைதல் – கவி எண் 301
      தேவர் பிரான் – எல்லா தேவர்களுக்கும் தலைவன்,
      திவ்விய மூர்த்தி – இனிமை பொருந்தியவன், மிக மிக பெரிதும் இனிமையும் பொருந்தியவன்.
     யாவர் ஒருவர் அறிவார் – எல்லோரும் அறிய முடியாதல்லவா? ஆனால் மகிமை உள்ளவன் தான், மிக இனிமை உள்ளவன் தான், தேவர்க்கெல்லாம் தலைவன் தான், எல்லா உயிர்க்கும் தலைவன் தான், ஆனால் யாவர் ஒருவர் அறிவார்? யார்? உண்மைப்பொருள் அறிந்தவர் அறிவார். அப்படி அறிந்தபின்,
                ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
      ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
               
                அறிய முடியாத ஒன்று இது. யாரோ கோடியில் ஒருவன் அறிவான். அவன் சொல்வதைக் கேட்டால், அவன் மனிதனே ஆனாலும், தேவனாக மதிக்கப்படுவான்.
      செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
      ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 413
                அவி உணவு – சில குறிப்பிட்ட மக்கள் யாக குண்டம், தீ, வேள்வி வளர்ப்பார்கள். நான்கு வேதங்கள் என்பார்கள். அதில் வேள்விக்கே, யாகத்திற்கே ரிக் வேதம்தான் அதிகம் பயன்படுகிறது. நடுவில் தீ குண்டம் இருக்கும். வேள்வி குண்டம், யாக குண்டம் இருக்கும். சுற்றி பலபேர் உட்கார்ந்து ஏதோ சொல்லி ஒவ்வொரு பொருளாக யாகத்தில் இடுவார்கள். என்ன செய்வார்கள், ஒவ்வொரு வேதமாக, மந்திரத்தை சொல்லி, சொல்லி உணவுப்பொருளை அதில் போடுவார்கள். அந்த பொருட்கள் தேவர்களுக்குப் போய் சேர்வதாக அவர்கள் சொல்வார்கள். இது போன்று செய்துவிட்டு, தேவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பார்கள். இங்கே மகான் திருவள்ளுவர் என்ன சொல்கிறார், அதில் நம்பிக்கை இல்லை என்றார். வேள்வியை நம்ப மாட்டார். அவர் சொல்வார்,
      அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
      உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
                                                – திருக்குறள் – புலால் மறுத்தல் – குறள் எண் 259
                ஆயிரம் வேள்வி வளர்ப்பதை விட, ஒரு உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றான்.
     ஆனால் மகான் திருவள்ளுவர் அந்த வேள்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவி சொரிந்து – அவி என்றால் நெய் மற்ற உணவுப் பொருட்களை இட்டு. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. அதுதான் உண்மை! பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே வேள்வி. இதுவே உண்மையான வேள்வி என்பார்.
      செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
      ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 413
      அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார். செவியுணவிற் கேள்வி உடையார் – உணவு என்பது இரண்டு வகை. இப்போது வாயால் உண்பது, செவியால் உண்பது. ஏன் செவி உணவு என்று சொன்னார் என்றால், வாயால் உண்கின்ற உணவு உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். கேள்விச் செல்வம், எதையும் கேட்கின்ற உணர்வு, அது செவியால் உண்கின்ற உணவு. செவியால் உண்கின்ற உணவு அது ஆயுள் வரை உற்ற துணையாக இருக்கும்.
     யாரும் அறிய முடியாத ஒன்றை, அறிந்து சொல்வதைக் கேட்டால் அவன் மண்ணுலகத்தில் இருந்தாலும், தேவனாக மதிக்கப்படுகின்றான்.
இங்கே சொல்லும் போது,
      செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
      ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 413
      அவிஉணவினை உண்கின்றவன் தேவர்க்கு ஒப்பானவன். என்ன காரணம்? நாம் கேட்கின்ற பொருள் உறுதிப்பொருள். நாம் கேட்கின்ற பொருள் உண்மைப் பொருளாகிய மெய்ப்பொருளை கேட்க வேண்டும். இல்லையென்றால், யாராலும் சொல்ல முடியாது, யாராலும் அறிய முடியாது. அறியமுடியாத ஒன்றை சொல்ல வேண்டும். ஆசான் சொல்லாமல் இது புலப்படாது. அப்படி சொன்னால், மண்ணுலகத்தில் வாழுகின்ற மனிதனாலும், விண்ணுலகத்திற்கு ஒப்பானவன் என்றார். சமுதாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதை கேள்வி கேட்கின்ற மக்கள், எதையும் கேட்டு உணர்கிட்ன்ர மக்கள் எப்படி தேவராக மதிக்கப்படுவர்? கேட்கப்படக்கூடிய பொருளின் தன்மையால் தேவராக மதிக்கப்படுவார் என்று சொல்வார்.
     அரசியல்வாதிகள் பேசுகின்றார்கள். மற்றமற்ற கதாகலாட்சேபம் சொல்பவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். அதைக் கேட்டால் தேவராக முடியுமா? என்றால், முடியவே முடியாது! ஆசான் திருவள்ளுவர் அப்படி சொல்லியிருக்க முடியாது. கதாகலாட்சேபங்கள் அல்லது மற்ற மற்ற புராணங்கள் பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. புராணங்களை கேட்டா ஒருவன் இந்த ஆற்றலைப் பெற முடியும்? பெற முடியாது. அதை யாராலும் சிந்திக்க முடியாது. அதை உணர்ந்தவன் சொல்கின்ற சொல்லைக் கேட்டால், அவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவனாக மதிக்கப்படுவான்.
      ஆசான் திருவள்ளுவர் சொன்னது அதுதான். இங்கே ஒவ்வொருவரும், இதைக் கேட்டு அறிய வேண்டுமென்று சொன்னோம். மெய்ப்பொருள் உணர்ந்து அனுபவத்தில் வந்த மக்களிடம் கேட்க வேண்டும். சிலர் மெய்ப்பொருள் உணரலாம் ஆனால் அனுபவத்தில் வர முடியாது.
     மெய்பொருள் உணர்ந்து அனுபவத்தில் வந்த மக்கள் சொல்வதைக் கேட்டால், அவனுக்கு இந்த ஆற்றல் வரும். தேவனாக ஆகலாம்! என்று சொன்னார். இங்கே நல்ல மனம் கொண்டு, கேள்வி என்கின்ற அதிகாரத்தை மகான் திருவள்ளுவர் வைத்த நோக்கமே எல்லோரும் கேட்டு அறிய வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் ஆசான் சொல்லாமல் தானே உணர முடியாது.
      அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
      விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
      தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
      எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
                                                – திருமந்திரம் – ஆகமச் சிறப்பு – கவி எண் 60
                காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்
                ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
                கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
                ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
                                                – திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் 2937
மகான் திருமூலர் நம்மீது கனிவு கொண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.
      அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது – தேவர்களுக்கே புலப்படாது. மனிதருக்கு எப்படி புலப்படும்? அ[அப்படியே அவன் உணர்ந்தால், அப்படி உணர்ந்தவன் சொன்னதை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி கேட்டால் உங்களுக்குப் பயன் என்று அந்த பத்து பாடல்களில் கருணை கொண்டு நமக்கு  சொல்லியிருக்கிறார்கள். நாமே நூல் படிக்கலாமா என்றால், படிக்கலாம் ஆனால் புலப்படாது. தாமச குணத்தில் இருக்கும்போது, படிக்கலாமே தவிர, நிச்சயமாக உணர முடியாது, அதை உணர்கின்ற அறிவு நமக்கு இல்லை. ஏனென்றால், ஊழ்வினை அப்படி இருக்கிறது. முன் ஜென்மத்தில் மகான் அகத்தீசர் பாதத்தையோ, மகான் திருமூலதேவர் பாதத்தையோ உள்ளம் உருகி பூசித்தாலன்றி, நல்வினை இருந்தாலன்றி உண்மைப் பொருளை உணர் முடியாது.
     நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
     உண்மை யறிவே மிகும்.
                                                                – திருக்குறள் – ஊழ் – குறள் எண் 373
                நூல் கற்றிருக்கலாம். அதிலுள்ள உண்மைப்பொருளை அறிவதற்கு நல்வினை வேண்டும். அப்போது நல ஊழ், நல்ல வினை செய்த மக்கள், நல்வினை உள்ள மக்கள், அனுபவப்பட்ட மக்கள், அனுபவத்தோடு உணர்ந்த மக்கள் சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆக, மனிதன் எதையும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் நல்லதாக இருக்க வேண்டும். மகான் திருவள்ளுவர் சிறியதாக இருந்தாலும் நல்லவற்றை கேட்க வேண்டுமென்றார் ஓரிடத்தில்.
      எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
      ஆன்ற பெருமை தரும்.
                                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 416
                எனைத்தானும் – சிறியதாக இருந்தாலும் சரி, சிரிதாகினும், நல்லவை கேட்க. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – நிறைந்த பெருமையை தரும். மனிதவர்க்கம் மட்டுமல்லாது, மற்ற உயிரினங்களுக்கு கேட்கும் திறன் இருந்தாலும், ஆனால் கேட்கின்றதன் பொருளை உணர்கின்ற ஆற்றல் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. சுவைத்துப் பார்த்தல், நுகர்தல் – வாசனை அறிதல், மோப்பம் – நுகர்ந்து அறிதல். ஒரு மைலுக்கு அப்பால் உள்ள ஜீவராசியைப் பற்றி அறிகின்ற ஆற்றல் மற்ற ஜீவராசிகளுக்கு உண்டு. ஆனால் மனிதனுக்கு கிடையாது. ஆக, காதால் கேட்பது, அதைக் கேட்கின்ற போதே சிந்திக்கின்ற ஆற்றல் மனிதனுக்குத்தான் உண்டு. அதனால்தான் இந்த கேள்விச்செல்வம் மிருகாதிகளுக்கு எழுதவில்லை. மனிதர்களுக்குத்தான் மிகவும் கனிவு கொண்டு எழுதிருக்கிறார்.
      எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – சிறிதளவாக இருந்தாலும் நல்லதைக் கேட்டு வையுங்கள். ஏனென்றால் அறிவு என்பது, ஒரே நாளில் சேகரிக்கக் கூடியது அல்ல. அது துளி துளி துளியாக சேகரித்து, மிகப் பெரிய அறிவாற்றல் பெறுவது. அது மழைத்துளி போல் சேர வேண்டும். மழைத்துளி போல் சேர்த்து, பெறு வெள்ளமாக ஆக வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளம் என்று சொல்வார்கள். அப்போது சிறிது சிறிதாக கேட்டல், சிறிது சிறிதாக படித்தல். இப்படி தினம் படித்துக் கொண்டிருக்க வேண்டும், படிப்பதை விட கேட்பது நல்லது. ஆனால் எதைக் கேட்க வேண்டுமென்றால், உண்மைப்பொருளை உணர்ந்து மெய்ப்பொருளாகிய உறுதிப்பொருளை உணர்ந்து சொல்கின்றவர் கருத்தைக் கேட்டால், அவன் அன்றே தேவனாகிறான். ஏனென்றால், சொல்கின்றவன் கடவுள் தன்மையை பூரணமாக உணர்ந்தவன். அப்படி உணர்ந்தவன் சொல்லைக் கேட்டால் கேட்டவனின் தரம் உயர்கிறது. அன்றிலிருந்து உயர்கிறது என்று சொல்வான். இங்கே,
     செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
      வயிற்றுக்கும் ஈயப் படும்.
                                              – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 412
                செவிக்குணவு இல்லாத போழ்துஇல்லாத போதும், இருக்கும் போதும் என்பான். அப்போது கவனிக்க வேண்டும். எல்லா மனிதனும் கேட்டு அறிய வேண்டும். எதையாவது கேட்பது கேள்வி அல்ல! இதைத்தான் கேட்க வேண்டும். ஆனால், மற்றதைக் கேட்கக் கூடாது என்பதல்ல! அப்படி கேட்பதை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அது பயன்படா ஒன்று. ஆசான் திருவள்ளுவர் சமுதாயத்தின் மீது எந்த அளவு கருணை வைத்திருக்க வேண்டும்? நாமெல்லாம் கேட்டால் என்ன? கேட்காவிட்டால் என்ன?
     “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பார் மகான் ஔவையார். நீ கந்தையை கசக்கிக் கட்டாவிட்டால் அவருக்கு என்ன நட்டமா? அப்போது அவர்கள் சமுதாயத்தின் மீது எந்த அளவிற்கு கருணை வைத்திருக்கிறார்கள்? மகான் ஔவையார் மாபெரும் யோகி. எல்லோரும் அறிய முடியாது. யோகிகளை அறிவது சின்ன விசயமல்ல. பார்த்தால் சமுதாயத்தை ஒட்டியே இருப்பார்கள். கண்டுபிடிக்க முடியாது. மிக ஆரவாரமான செயல்பாடுகள் இருக்காது. ஆக அவர்கள் தோற்றத்தைக் கண்டு முடிவெடுக்கக் கூடாது. அவர் செயலைக் கண்டுதான் முடிவெடுக்க வேண்டும். அறியாமை என்று சொல்லப்பட்ட நோய்க்கு மருந்தாக அவர்களுடைய சொற்கள் இருக்கும்.
     மகான் ஔவையார் மாபெரும் யோகி. ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவன் மகான் ஔவையாருக்கு உணவு தந்தான். அவருக்கு விருந்தளிக்கும் வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது. ஆனால் அவனோ வறுமை உள்ளவன். மகான் ஒளவையாருக்கு உணவு கொடுக்க வேண்டுமென்று பேராவல் கொண்டவன். வெகுநாளாக ஆசைப்பட்டான். “மகான் ஔவையார் மாபெரும் யோகியாச்சே! அவருக்கு நம் வீட்டில் உணவு கொடுக்க வாய்ப்பு கிடைக்குமா?” என்று ஈசனை வேண்டினான். ஈசனை வேண்டி, இது போன்ற மாபெரும் யோகியாகிய மகான் ஒளவையாருக்கு உணவு தர ஆசைப்படுகிறேன். எனக்கு நீ அருள் செய்ய வேண்டுமென்று ஈசனைக் கேட்டான். இந்த உணர்வு மகான் ஒளவையாருக்கு தோற்றமானது. ஒரு சாதாரண ஏழைப் பிள்ளை. நமக்கு சோறு போட வேண்டுமென்று நினைக்கிறான். அந்த பிள்ளை வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லி அங்கே சென்றார். அவர் வாழ்ந்த ஊர் உறையூர்.
     வேளூர் என்று சொல்லப்பட்ட அந்த சின்ன கிராமத்தில் பூதன் என்ற அந்த விவசாயி இருந்தான். அவன் மகான் ஒளவையாருக்கு உணவு கொடுக்க ஆசைப்பட்டான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற மகான் ஔவையாரும் வந்தார். வேளூர் என்று சொல்லப்பட்ட அந்த கிராமத்திற்கு உணவு சாப்பிட மகான் ஔவையார் வந்தார். அவன் வீட்டில் இருந்தது வரகரிசி சோறு. அந்த வரகரிசி சோற்றை சிலர்தான் சாப்பிடுவார்கள், நான் சாப்பிட்டிருக்கிறேன். அந்த வரகரிசி சோறுக்கும், புளிச்சகீரைக்கும் பொருத்தமாக இருக்கும். அந்த சோற்றைத்தான் மகான் ஒளவையாருக்கு கொடுத்தான்.
     ஆனால் மகான் ஔவையார் அரசனுக்கு உற்ற துணையாக இருந்தவர். பல பெரிய பெரிய வீட்டில் எல்லாம் அறுசுவையாக சாப்பிட்டவர். ஆனால் அங்கெல்லாம் அவர் ரசித்து சாப்பிடவில்லை, அதையெல்லாம் புகழவில்லை அவர். மகான் ஔவையார் எதையெல்லாம் விரும்புகிறாரோ, அதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று ஆர்வம் உள்ளவர்கள் வீட்டில் எல்லாம் அறுசுவை உணவு சாப்பிட்டார்.
     ஆனால் அந்த உணவிற்கெல்லாம் அந்த மதிப்பில்லை. அந்த உணவைப் பற்றி அவர் புகழவில்லை. அறுசுவை புகழாமல், வரகரிசி சோரையும் மோரையும், கத்தரிக்காய் கூட்டையும் பற்றி ஏன் புகழ்ந்தார் என்று கேட்டான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஞானிகள் பெருமையை பேச வேண்டும். செவிக்கு உணவு என்பதற்காக சொல்கிறேன். மகான் ஔவையார் கவியைப் பற்றி சிலவற்றை பேசுவது நல்லது என்று பேசுகிறேன். மகான் ஔவையார் பெருமையை இங்கே பேசுவதன் நோக்கம், மகான் ஔவையார் ஞானி. அவர் பெருமையை பேச வேண்டும்.
     பூதன் என்று சொல்லப்பட்ட அந்த விவசாயி, தன வீட்டில் மகான் ஒளவையாருக்கு உணவு தந்தான். ஆனால், வரகரிசி சோறு, கத்தரிக்காய்(வழுதுணங்காய்) துவட்டல். புளிச்சமோரை மகான் ஔவையார் உண்பதற்காக கொடுத்தான். அந்த மோரைக் கூட மூன்றாவது வீட்டில் இருந்து கடனாக வாங்கி வந்திருக்கிறான். அந்த மோரையும், கத்தரிக்காய் துவட்டலையும், வரகரிசி சோறையும் “உலகமே பெரும்! உலகத்திற்கு ஈடில்லை! என்று கவி பாடும்போது, நோக்கம் நீங்கள் கவனிக்க வேண்டும். அந்த விருந்து இட்டவனின் பெருமை என்ன? அவர் சொகிறார்,
    
      வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
      முரமுரெனவே வேயினித்த மோரும் – திறமுடனே
      புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபுரிந் திட்டசோ(று)
      எல்லா உலகும் பெறும்.
                                                – ஔவையார் தனிப்பாடல் திரட்டு – கவி எண் 32
                நீங்கள் கவனிக்க வேண்டும். புரிந்து கொண்டு மகான் ஒளவையாருக்கு விருந்து இட்டான். ஞானியென புரிந்து, மகான் ஔவையார் மேம்பட்ட ஞானி என உணர்ந்து, அவன் மகான் ஔவையாரிடம் அளவில்லாத அன்பு கொண்டு அந்த உணவைத் தந்தான்.
      வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
      முரமுரெனவே வேயினித்த மோரும் – திறமுடனே
      அப்போது மூன்று நாளைக்கு முன்னே வைத்திருந்த மோர். அது வாயில் வைத்தால் அதன் புளிப்பு சகிக்கவில்லை, இருந்தாலும் அவன் இடுகின்ற உணவு அப்படிப்பட்டது. அவனுடைய அன்புணர்ச்சி காரணமாக கத்தரிக்காய் துவட்டலுக்கும், மோருக்கும் இவ்வளவு புகழ்ந்து பேசுகிறார் என்றால்,
      பூதன் புகழ்ந்துபுரிந் திட்டசோ(று)
      எல்லா உலகும் பெறும்.
     இதையெல்லாம் கேட்க வேண்டும். புரிந்து என்ற சொல்லை கேட்க வேண்டும். ஞானியர்களுக்கு இன்ன இன்ன தகுதி உள்ளவனுக்கு விருந்து இட வேண்டும்.
     அந்த விருந்து யார் யாருக்கு இட வேண்டும் என்பதை நீ செவிக்கு உணவு இல்லாதபோழ்து அதையெல்லாம் கேட்க வேண்டும், உணர்ந்து செயல்பட வேண்டு, உணர்ந்து உணவளிக்க வேண்டும். நான் சொல்லி நீ கேட்பதற்காக அதனால்தான் செவிக்கு உணவு இல்லாதபோழ்து என்று சொல்கிறார். இருக்கும்போது? அது சிறிது வயிற்ருக்கும் ஈயப்படும் என்றார். கொடுப்பது வேறு, ஈயப்படுவது வேறு!
     ரொம்பநேரமாக ஒருவன் கத்திக்கொண்டு இருக்கிறான், இரண்டு சோறு போட்டு அனுப்பு என்பான். அது கொடுப்பதல்ல, அது ஈயப்படும் என்று சொன்னார். இங்கு ஈயப்படுவது இழிவு போன்றது என்று சொன்னார் மகான் திருவள்ளுவர். இதை கேட்டுக் கொண்டே செய்ய வேண்டும்.
     அறிவு என்பது, தொடர்ந்து சேகரிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மனித சமுதாயத்தில் யார் எதை சொன்னலும் சரி, கேட்டுக் கொண்டே போக வேண்டும்.
     சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் – கவனிக்க வேண்டும். மகான் திருவள்ளுவருடைய நோக்க என்ன? சிறிது என்று ஏன் சொன்னார்?
     மிகுதியாக உண்டால் என்னாகும்? பெரியவளுடைய அனுக்கிரகம் உங்களுக்குக் கிடைக்கும். பெரியவள் யார்? தெரியும் அன்பர்களுக்குத் தெரியும்! இளையவள் லட்சுமி, முதியவள் மூதேவி.
     பெரியவள் யார்? முதியவள்! அதிகமாக உண்டால் முதியவளுடைய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். அந்த அனுக்கிரகத்தை நீங்கள் பெறக் கூடாது. இளையவள் அனுக்கிரகம் பெற வேண்டும். சிறிது உண்ணுங்கள்! என்று சொன்னார். மிகுதியாக உண்டால் சோம்பலும் தூக்கம் வரும். சோம்பல் வரும்.
      செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
      வயிற்றுக்கும் ஈயப் படும்.
     என்று சொல்லும்போது, கொடுத்தவனின் பெருமை ஈயப்படும் என்றார்.
     ஏதோ வயிற்றுக்கு கொஞ்சமாக சாப்பிடு என்றார். இதனால் உடல் வளர்ச்சி காணும். உடல் வளர்ச்சி என்பது மிருகங்களுக்கெல்லாம் உடல் வளர்ச்சி. அறிவு வளர்ச்சியை மையமாகக் கொண்டதே மனித வர்க்கம்.
     ஏனென்றால் இங்கே,
     அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
      அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
      கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
      அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.
                                                – திருமந்திரம் – கால சக்கரம் – கவி எண் 766
    
                அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்ஆய்ந்து கொள்வார்க்கு அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும். ஆய்ந்து கொள்ளாவிட்டால்? அந்தப் பொருள் அழிந்து விடும். இவன் அழியும்போதே பொருளும் அழிந்து விடும். ஒவ்வொரு மனிதனுள்ளும் உண்மைப்பொருள் உண்டு. அந்த உண்மைப்பொருளை தக்க ஆசான் இப்படித்தான், இதுதான் என்று சுட்டிகாட்டிய அந்த வினாடியே, அந்தப் பொருள் அழியாமல் நின்று விடும். இவன் அழியாது இருந்தால்தான் அந்தப் பொருள் அழியாது இருக்கும். இவன் அழிந்து விட்டால் அந்தப் பொருள் அழிந்து விடும். அதனால்தான் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் என்றார்.
     அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே. அப்போது இந்தப் பொருளை கற்காவிட்டால்?
      கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
      ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 414
      கற்றிலன் – கற்க வேண்டும். அப்படி கற்காவிட்டாலும், கேட்க வேண்டும். அஃது ஒருவற்கு – அப்படி உள்ள ஒருவனுக்கு
     ஒற்கத்தின் ஊற்றாம் துணை – அது ஊன்றுகோல் போன்றது என்றான். எப்போதும் மனிதவர்க்கம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிக் கற்காவிட்டால், கற்று உணர்ந்தவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால், அது தளர்ச்சி வந்த காலத்தில், மனம் தடுமாறுகின்ற காலத்தில், ஊன்றுகோல் போன்று துணையிருக்கும். பல்வேறு காரணங்களால் மனம் தடுமாறும். ஏனென்றால் இது காமதேகம். காமதேகம் உள்ள மக்களுக்கு சலனங்கள் இருக்கத்தான் செய்யும். அதை பூஜை விதி ஒன்றால்தான் ஒழிக்க முடியும். சின்ன விசயமல்ல! காவி கட்டுவதாலோ, நெற்றியில் பட்டை போடுவதாலோ முடியாது.
      நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே
      மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
      ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திர மென்ன கண்டாய்
      ஆற்றிற் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே.
                                                – மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் 40
                நீரில் குளித்தாலும் ஒன்றும் ஆகாது. கற்க வேண்டும், அந்த விவகாரத்தை வெல்லுதற்கு. அப்படி கற்பதற்கு ஆசான் துணைவேண்டும். அதை கற்றறிய வேண்டும் என்று சொல்வார். அன்பர்களுக்கு இப்போது பேசுவது, மனதில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும். 
     ஒற்கம் என்பது தளர்ச்சி வந்த காலத்திலே, ஒற்கம் என்பது சிலர் நரகம் என்று சொல்வார்கள். தளர்ச்சி வந்த களத்திலே, தடுமாறுகின்ற நேரத்திலே என்றுதான் பொருள்படும். மனம் தடுமாறுகின்ற நேரத்திலே, எல்லா மனிதனையும் வஞ்சிப்பது காமவிகாரம். அது ஞானியையே சற்று தொட்டுப்பார்க்கும். அடிக்கடி பூஜை செய்யும்போது, “அடியேன் காமவிகாரத்திலிருந்து விடுபட வேண்டும், மனம் சலனப்படுகிறது, சலனத்திலிருந்து நீக்க வேண்டும், சலனத்திலிருந்து என்னை காக்க வேண்டும்” என்று சொல்வார். ஏனென்றால், ஞானிகள் சலனத்திளிருந்தும், காம விகாரத்திலிருந்தும் கடந்த மக்கள். கடந்த மக்கள் பாதத்தைப் பற்றினாலன்றி அந்த வாய்ப்பு கிடைக்காது. இதை கற்றுணர்ந்து சொல்லி, இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லாவிட்டால், உங்களுக்கு அந்த உணர்வு வராது. நீங்களெல்லாம் எப்படி எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று நாங்கள்தான் சொல்ல வேண்டும். அதுதான் ஒற்கத்தின் ஊற்றாம் துணை. தளர்ச்சி வந்த போது, மனம் தடுமாறும் போது, அதற்கு உற்ற துணையாக இருக்கும் என்று சொல்வார். அதற்கு மட்டுமல்ல,   
     இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
      ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 415
                இழுக்கல் உடையுழி – சேறு நிறைந்த வழுக்கல் பகுதி உள்ள இடத்தை கடக்க வேண்டுமென்றால், வெறும் காலோடு நடந்தால் முடியாது. அப்போது அதற்கு ஊன்று கோல் வேண்டும். அப்போதுதான் அந்த பாதையை கடக்க முடியும். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு உண்டு. எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒருவகைத் தடுமாற்றம் இருக்கலாம். அப்போது ஏன் வழுக்கல் நிலத்தை சுட்டிக்காட்டினார் என்றால், வழுக்கல் நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் மிக முக்கியம், இல்லையென்றால் கடக்க முடியாது. இல்லை, நின்றுவிட வேண்டும். நீ கடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், இந்த வழுக்கல் நிலத்தில் ஒரு கிலோ மீட்டர் கடக்க வேண்டுமென்றால், நீ ஊன்று கொள் வைத்துக் கொண்டால் நிலையாகப் போகலாம். இல்லையென்றால் விழுந்து விடுவாய். அதைப்போல் ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் என்றார். இங்கே ஒழுக்கம் என்பது சிலபேர் நன்றாக படித்திருப்பார்கள், கட்டுப்பாடு இல்லாத மக்களாக இருப்பார்கள்.
     இவன் குடிகாரன், இவன் பேச்சை யார் கேட்பார்கள் என்பார். அப்போது கற்று இருந்தாலும், அவன் ஒழுக்கத்தோடு இருந்தால் அன்றி அவன் பேச்சு எடுபடாது. இவன் பேச்சு தேவையில்லை என்பார்.
     அப்போது ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு உள்ள மக்கள்தான், இந்த கட்டுப்பாடு உள்ள மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொல்வார்.
      கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
      ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 414
என்றும்,
      இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
      ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 415
      இங்கே உண்மைப்பொருள் உணர்ந்த மக்கள் நிச்சயமாக தப்பான கருத்தை சொல்ல மாட்டார்கள்.
     பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லா இழைத்துணர்ந்து
      ஈண்டிய கேள்வி யவர்.
     
      தப்பாக உணர்தல், பிழைபட உணர்தல் ஆகியவற்றை பேதைமை என்று சொன்னார்.
     ஒரு பொருளை நன்றாக உணராமல் பிறருக்கு அறியாமையை உண்டாக்குகின்ற சொல்லை சொல்லமாட்டார்கள். யார்? இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர் – நன்றாக, நுண்ணிய கேள்விச்செல்வம் உள்ள மக்கள். தான் கற்றது அனைத்தையும் உண்மை என்று உணரக்கூடிய உணர்வு இருக்குமேயானால் அவன் பேதையாக்கப்படுவான். அதுமட்டுமல்ல அவன் சொல்வது பேதைமையாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரண மக்களுக்குப் பேசப்பட்டதல்ல, கற்காமலேயே அனைத்தையும் உணரலாம். யார் பாதத்தைத்  தொட்டால்? ஆசான் அகத்தீசர் பாதத்தைத் தொட்டால். ஆசான் அகத்தீசர் பாதத்தை உள்ளம் உருக பூசித்தால் உலகத்தில் மற்றவர்களால், கற்றறிந்தவர்களால் முடியாத ஒன்று, உங்களுக்கு உணர்த்தப்படும். இதுதான் இந்த கவிக்கு விளக்கம்.
      பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் – தப்பாக உணர்ந்து பிறர்க்கு அறியாமையை உண்டாக்கக் கூடிய பொய்யான பொருளை, மெய்யான பொருள் என்று மற்றவர்களுக்கு சொல்ல மாட்டார்கள்.
     இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்நுண்ணிய கேள்விச்செல்வம் உள்ள மக்கள். அவர்கள் எல்லா மக்களும் அறியமுடியாத ஒன்றை அறிவார்.
      அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
      அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள் வார்களுக்கு
      ஆய்ந்து கொள்கின்ற மக்கள் கேட்க வேண்டியதில்லை. உடனுக்குடனே அங்கே பதில் வரும் என்றான். அவர்கள் சொல்லை அல்லவா நாம் கேட்க வேண்டும். இல்லையென்றால் பயனில்லை என்று சொல்லுவார். இங்கே இன்னொரு இடத்தில்,
      நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய
      வாயினர் ஆதல், அரிது.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 419
      இது உலக நடைக்கு பொது. ஒவ்வொரு மனிதனும் உண்மைப்பொருள் உணர்ந்த மக்களிடம் கேட்க வேண்டும். அன்பர்கள் இங்கே கூடுகிறார்கள், வாராவாரம் கூடுகிறார்கள். முதலில் மகான் விளையாட்டுச்சித்தர் பாடல்கள் பற்றி சொன்னோம். அதற்கு அடுத்த வாரம் மகான் தாயுமானவ சுவாமிகள் பற்றி சொன்னோம். சென்ற வாரம் அருட்பா பற்றி பேசினோம். இந்த வாரம் கேள்விச் செல்வத்தைப் பற்றி பேசுகிறோம்.
      கேள்விக் செல்வம் – செவிச் செல்வம். மக்களிடத்தில் உள்ள எல்லா செல்வத்தை விட தலைசிறந்த செல்வம் கேள்விச்செல்வம். மற்ற எல்லா செல்வங்களும் அழிந்து விடும், தோற்றப்படக்கூடியவை.
     ஆனால் அறிவு தோற்றப்படுவதல்ல, சிந்தனை வளரும், அறிவு சிந்தனை வளரும். எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். செவிச்செல்வத்தால் பெறப்படும் அறிவு மட்டும் அழியாது. இந்த நான்கு கருவிகளில் செவிச்செல்வத்தை மட்டும் மையமாக சொல்வதன் நோக்கம், இது அழியாதது. மற்ற ஏனைய செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும்.
     செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
      செல்வத்துள் எல்லாம் தலை.
                                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் – 411
                செவியால் வரும் செல்வம் எல்லா செல்வத்தை விட பெரிய செல்வம். ஏனென்று கேட்டால், அது எல்லா விசயத்தையும் கேட்கும் தன்மை உள்ளது.
    
     உண்மைப்பொருளை உணரமுடியாது, உணரமுடியாத ஒன்றை கேட்பது, உபதேசம். தேசம் – உப தேசம். அதை உணர்ந்தவன் சொல்லாமல் தெளிவாக உணர முடியாது.
     அதனால் மகான் திருவள்ளுவர் சொன்னார், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்றார்.
      அன்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இது கதாகலாட்சேபமல்ல. இசையோடு பாடல் கேட்க வரவில்லை. ஒவ்வொரு சொற்களையும் கேட்டு மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், உங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளுங்கள்.
     பிறவியை உயர்த்திக் கொள்வதற்கு பூஜை செய்ய வேண்டும். “அடியேன் பாவி! என்னை சார்ந்து கொண்டு என்னைக் காத்தருள வேண்டும். கள்ளமில்லாத வாழ்வு வேண்டும். வறுமை இல்லாத வாழ்வு வேண்டும். வறுமை இல்லாத வாழ்வு வேண்டும். உண்மைப் பொருள் உணர வேண்டும். பண்புள்ள மக்கள் நட்பு வேண்டும். பண்புள்ள நூலை படிக்க வேண்டும். படித்ததை உணர வேண்டும். உணர்ந்தபடி செயல்பட வேண்டும். இப்படி கேட்க வேண்டும். இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும்.
     எல்லோரும் பொறிகள் ஐந்தையும் பயன்படுத்தவில்லை. செவிப்புலனால், செவியால் பெறப்படுகின்ற இந்த செல்வம் சிறப்பானது. ஏனென்றால் நீங்கள் உணரமுடியாதது.
      பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
      தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
      அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
      இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
                                – மகான் பட்டினத்தார் – திருவேகம்பமாலை – கவி எண் 15
                மகான் பட்டினத்தார் இருளறு சொல்லை அறிந்து கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். யாரேனும் நின்று கேட்க வேண்டும்.
      செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
      ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
     
      செவி உணவு ஒன்றுதான் இதற்கு முக்கியமானது. செவி உணவு உள்ள மக்கள் அவி உணவுள்ள மக்களாக ஆக்கப்படுவார்கள். அவி உணவு பெறுகின்றவர்கள் தேவர்கள். செவி உணவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்ற மக்கள் தேவர்களாக ஆக்கப்படுவார்கள். இதுதான் இதன் மையக் கருத்து. அடுத்தது திருவாசகத்திற்கு வருவோம்.
      இதுநாள் வரையிலும் உண்மைப்பொருளை நீங்கள் கற்காவிட்டாலும், கற்று உணர்ந்தவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அது தளர்ச்சி வந்த காலத்திலே, ஊன்றுகோல் போல் உதவும் என்று ஒரு கவியும், வழுக்கல் நிலத்தில் நடப்பவர்களுக்கு ஊன்றுகோல் போல் உற்ற துணையாக இருக்கும் என்பதற்கு ஒரு கவியும், அடுத்தது சிறியதாக இருந்தாலும் அதைக் கேட்டு வையுங்கள், அது பெரும் பயன் தரும் என்று கவியும் பார்த்தோம்.
      எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
      ஆன்ற பெருமை தரும்.
                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 416
                என்று சொன்னதும்,
     பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
      ஈண்டிய கேள்வி யவர்.
                                – திருக்குறள் – கேள்வி – குறள் எண் 417
                என்று சொன்னதும், இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் இந்த செவியாக, கேள்வியால் வருகின்ற ஆதாயத்தை சொல்வார்.
      மகான் மாணிக்கவாசகர் சொல்கிறார்,
      யானேதும் பிறப்பஞ்சேன்
            இறப்புஅதனுக்கு என் கடவேன்
      வானேயும் பெறில் வேண்டேன்
            மண்ணாள்வான் மதித்து இரேன்
      தேனேயும் மலர்க்கொன்றைச்
             சிவனே எம்பெருமான் எம்மானே
      யுன் அருள்பெறும் நான்
            என்று என்றே வருந்துவனே.
                                                                – திருவாசகம் – திருச்சதகம் – கவி எண் 12
                யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன்  – பிறவி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.  மகான் மாணிக்கவாசகர் இதைச் சொல்கிறார். மாபெரும் யோகி மாணிக்கவாசகர் என்று சொன்னாலே இங்கு வந்து விடுவார். ஈசனால் உருவாக்கப்பட்டவர். அவர் பாடல் அத்தனையும் யோகமும் உண்டு, ஞானகருத்துகளும் உண்டு, யோகக்கருத்தும் உண்டு, பக்தி இலக்கியமும் உண்டு.
     ஆனால் மகான் மாணிக்கவாசகர் சொன்ன கருத்துகள் எப்படி இருக்கிறது என்றால், யானேதும் பிறப்பஞ்சேன் இறப்புஅதனுக்கு என் கடவேன் – பிறவி மகிழ்ச்சிக்கு உரியது. ஏனென்றால், எல்லா உயிர்களிலும் பிறப்பதற்கு முன்னே, ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியாக உடலுறவு கொள்வார்கள். மகிழ்ச்சியாக உடலுறவு கொண்ட காரணத்தினால்தான் உயரினங்கள் தோன்றுகின்றன.
     “வாழ்வதும் மகிழ்ச்சிக்கு உரியதே! ஆனால் இறப்பு வந்து விடுமே? எப்படி நான் அதை கடப்பேன்?” என்றார். எப்படி கடப்பது?
      யானேதும் பிறப்பஞ்சேன் – பிறப்பதற்கு நான் அச்சப்படவில்லையப்பா! இறப்பு வருமே? எப்படி கடப்பது? என்று கேட்பார்.
      யானேதும் பிறப்பஞ்சேன் இறப்புஅதனுக்கு என் கடவேன் – இறப்பு வருமே! எப்படி நான் கடப்பேன்? என்றார்.
     
      வானேயும் பெறில் வேண்டேன்
            மண்ணாள்வான் மதித்து இரேன்
      தேனேயும் மலர்க்கொன்றைச்
             சிவனே எம்பெருமான் எம்மானே
      யுன் அருள்பெறும் நான்
            என்று என்றே வருந்துவனே.
     
      காலையில் அன்பர் இன்று திருவாசகம் பேசப்படும் என்று சொன்னதால் இதை எடுத்துச் சொல்கின்றேன். இன்று காலைதான் தெரிந்தது, இன்று பேசப்படுவது திருவாசகம் என்ற கருத்து இன்றுதான் புலப்பட்டது. அதற்கு முன்னே இந்த கவியை எடுத்து படித்திருக்கின்றேன்.
     வானேயும் பெறில் வேண்டேன் – இந்திரபதவி கிடைத்தாலும் அதை நான் விரும்பவில்லை. எடுத்த வரி ரொம்ப முக்கியமானது. மண்ணாள்வான் மதித்து இரேன் – ஏகச்சக்கரவர்த்தியை நான் மதிக்க மாட்டேன் என்று சொன்னார். என்ன காரணம்? அவனும் ஒரு காலத்தில் அழிந்து விடுவான்.
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றேயறிவா ரில்லையே.
                                                – மகான் பட்டினத்தார் – திருத்தில்லை – கவி எண் 7
                முடிசார்ந்த மன்னரும்முடி உடைய மன்னரும் என்று சொல்லவில்லை. முடி சார்ந்த மன்னரும், பல்வேறு அரசர்கள், சிற்றரசர்களுக்கெல்லாம் பேரரசராக இருக்கக் கூடியவர். முடி உடைய மன்னர் என்று சொல்லவில்லை மகான் பட்டினத்தார்.
     முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய் – மற்றும் உள்ளோரும், நீங்கள் கவனிக்க வேண்டும். ஏகச்சக்கரவர்த்தியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரிதான்.
     மற்றுமுள்ளோரும் – அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் கவிஞனாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய, அறிவாற்றல் இருந்தாலும் சரி, முடிவிலொரு பிடிசாம்ப ராய் – ஒரு பிடி மண்ணாவது, ஒரு பிடி சாம்பலாக ஆகிவிடுவான்.
     இங்கே மண்ணாள்வான் மதித்தும் இரேன் – இவர்களை நான் மதிக்கவில்லை! அப்போது கவனிக்க வேண்டும். அப்பது எதை விரும்புகிறார் மகான் மாணிக்கவாசகர்? மாபெரும் யோகி மாணிக்கவாசகர்!
      வானேயும் பெறில் வேண்டேன்
            மண்ணாள்வான் மதித்து இரேன்
      தேனேயும் மலர்க்கொன்றைச்
             சிவனே எம்பெருமான் எம்மானே
      யுன் அருள்பெறும் நான்
            என்று என்றே வருந்துவனே.
      அப்போது அவர் வருந்துகிறேன் என்று சொல்கிறார். நான் எதைக் கண்டு வருந்துகிறேன் என்றால், இந்த பிறவியில் இதெல்லாம் அநித்தியமானது, தேவர்கள் தலைவன் பதவியும் அநித்தியமானது, மண்ணாள்வானும் நித்தியமில்லை. நித்திய பொருளை நான் விரும்புகிறேன். அதற்கு நீ அருள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் மகான் மாணிக்கவாசகர்.
      பிறவி என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இறப்பதற்கு என்ன செய்வது? அவர் சொல்லும்போது,
      பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்.
                                                – திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 10
                பெருங்கடல் – கடல் என்று சொல்லவில்லை, பெருங்கடல் என்றார். கடல் என்று சொல்லியிருந்தால் நாம் பார்க்கும் இந்த கடல் என்று சொல்லி விடலாம். பெருங்கடல் என்பது கணக்கில் அடங்கா ஒன்று.
      பெறுகின்றவர் நீந்துவர். பெறாதவர் நீந்தமாட்டார்.இதற்கு என்ன உபாயம் என்றான். எதைக் கடக்க வேண்டும்? பிறவியாகிய பெருங்கடலை ஏற்கனவே இவர் சொன்னார், பிறப்பெனும் பேதைமை நீங்க என்று சொன்னார். அதை எப்படி கடப்பது? அதற்கு என்ன உபாயம்? என்று சொல்லும்போது உன்னுடைய பாதம் தான் எனக்கு உபாயம் என்று சொல்வார். நமக்கு சிரசு இருந்தால் அது ஈசன் பாதத்தை வணங்குவதற்குத்தான் என்பார். அவர்களல்லவா பிறவிப்பெருங்கடலை நீந்த முடியும்?
      ஆயன நந்தி யடிக்கென் றலைபெற்றேன்
      வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன்
      காயன தந்தியைக் கானவென் கண்பெற்றேன்
      சேயன தந்திக்கென் சிந்தைபெற் றேனே.
            – திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2658
     என் தலையே ஆசான் நந்தீசன் பாதத்தை வணங்குவதற்காகத்தான் பெற்றேன். வேறெதற்காகவும் நான் பெறவில்லை என்றார்.
     வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன் – அதற்காகப் பெற்றேன். அவர்களல்லவா பிறவித் துன்பத்தைக் கடக்க முடியும்? வேறு எதற்காகவும் அவர் இதை பயன்படுத்த மாட்டார். “அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! நந்தீஸ்வரா! திருமூலதேவா! போகதேவா! கருவூர்தேவா! மாணிக்கவாசகதேவா!” இதைச் சொல்வதற்குத்தான். இதைத்தவிர வேறு எதையும் கேட்பதற்கு பயன்படுத்த மாட்டேன். அவர்கள்தான் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க முடியும்.
      எழுகடல் மணலை அளவிடல் அதிகம் எனதிடர் பிறவி – கணக்கில் அடங்காத ஒன்று பிறவி.
     பெருங்கடல் என்று சொன்னதனாலே, இந்த கடலைக் கடப்பதற்கு ஒரு உபாயம்தான் சொன்னார். இதைக் கேட்டு தெரிந்து கொள்ளனும். செவி படைத்த அத்தனைபேரும் கேட்டுத் தெரிந்து கொள்ளணும்.
     இந்த ஆயன, வாயன, காயன, சேயன இதெல்லாம் எதுகைக்காக சொல்லப்பட்டது. பொருள் இருக்கிறது. சில சமயம் பொருள் இருக்காது. எதுகை மோனைக்காகசொல்லியிருப்பார்.
     வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன் – அவரைப் புகழ்ந்து பேசுவதற்கே நான் வாயைப் பெற்றேன். அவருடைய பாதத்தை வணங்குவதற்கே சிரசைப் பெற்றேன்.
      காயன தந்தியைக் கானவென் கண்பெற்றேன்
      சேயன தந்திக்கென் சிந்தைபெற் றேனே.
      அப்போது சிந்தை பெற்றதே அவர் பெருமையைப் பேசவும், அவரை சிந்திப்பதற்காகத்தான் என் சிந்தையைப் பெற்றேன். இவர்கள்தான் பிறவித் துன்பத்தை ஒழிக்க முடியும். இப்படியெல்லாம் பூஜை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் மகான்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இப்படி இருந்தால்தான் பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியும்.
     அப்போது தினம் தொடர்ந்து கேட்க வேண்டும். எப்பொழுதெல்லாம் நல்லதைக் கேட்க வேண்டுமோ, அப்போதெல்லாம் கேட்க வேண்டும். நல்ல சொற்கள் சொல்வதைக் கேட்டு அல்லது படிக்க வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக உண்மைப்பொருள் அறிய முடியாது. மகான் மெய்கண்டதேவர் மாபெரும் யோகி! பன்னிரண்டு சூத்திரங்கள். சைவ சிந்தாந்தத்தின் கீழ் இவ்வளவு சுருக்கமாக, சிக்கனமாக சொற்களைப் பயன்படுத்தி, உயர்ந்த பொருட்களை சொல்ல முடியாது. அவ்வளவு மாபெரும் யோகி மகான் மெய்கண்டதேவர். அவர் எப்படிச் சொல்கிறார், பிறவித்துன்பத்தை ஒழிப்பதற்கு? அன்பு செலுத்துகின்ற மக்களின் உள்ளத்தை தொட்டுப் பார்த்துவிட்டு சொல்வார்கள். பிறவித்துன்பத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்வார்.
     காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
      காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின்
      அயரா வன்பி னரன்கழல் செலுமே.
                – மகான் மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம் – பதினோறாம் சூத்திரம்
      காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போல் – கண்கள் பார்க்கும். கண்கள் பார்த்த ஒன்றை, மனம் சுட்டிக் காட்ட வேண்டும். இன்னார் இன்னார் என்று கண்கள் பார்த்தாலும், இந்த ஐந்து அறிவின் தன்மையை அந்த கண்ணுக்கு, சுட்டிக் காட்டுவது மனம்தான்!
      விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்
      களந்தறிந் தறியா வாங்கவை போலத்
      தாந்த முணர்வின் றமியருள்
      காந்தங் கண்ட பசாசத் தவையே.
            – மகான் மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம் – ஐந்தாம் சூத்திரம்
        மகான் மெய்கண்டதேவரை நினைக்கும்போதே உள்ளம் நடுங்கும் புலவர்களுக்கெல்லாம். எங்களுக்கு நடுங்காது! ஆசான் அரு பெற்றவர்கள் நாங்கள் எல்லாம்.
     இவையெல்லாம் ஒவ்வொன்றும் அணுகுண்டு! அப்போது, மனமும் இந்த ஐந்து பேரை, மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பேருடைய செயலை, அளந்து பார்க்கும் ஆற்றல் மனதுக்கு உண்டு.
     ஆனால் ஒருவருக்கும் மனதைப் பற்றி தெரியாது! இவர்களுடைய தன்மை எல்லாம் தெரியும். மூக்கின் தன்மை என்ன? நாக்கின் தன்மை என்ன? கண் தன்மை என்ன? செவியின் தன்மை என்ன? எல்லோருடைய செயலையும், அளந்து அளந்து, அறிந்து பார்க்கும் தன்மை மனதிற்குத் தெரியும்.
     ஆனால் மனதைப் பற்றி இந்த ஐவர்க்கும் தெரியாது. இங்கே சொல்கிறார், காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போல் – பிறவிக்கடலைக் கடப்பதற்கு இனி விளக்கம் சொல்ல வேண்டும்.
      காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
      காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின்
      அயரா வன்பி னரன்கழல் செலுமே.
                – மகான் மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம் – பதினோறாம் சூத்திரம்
        அப்போது கண் பார்த்தாலும், இன்னார் என்று சுட்டிக்காட்டுவது மனம்தான். அப்ப மனம் தான் எல்லாவற்றையும் பதிவு செய்து கொள்ளும். ஆனால் கண்களைப் பயன்படுத்திதான் செய்ய முடியும். கண் பார்க்காவிட்டால் மனம் நினைத்து உணர முடியாது. அதே போல், மெய்ப்பொருளை உணர்ந்த மக்களுக்கு உள்ளே உள்ள மனதைப் பற்றி தெரியும். நீ கேட்கிறாய், “அடியேனுக்கு பிறவித்துன்பம் இல்லாது இருக்க வேண்டும். மரணமிலா பெருவாழ்வு கிடைக்க வேண்டும். பாவத்திலிருந்து விடுபட வேண்டும். அதே சமயத்தில் அறிய முடியாத ஒன்றை அறிய வேண்டும். நூறு கோடி ஆண்டு நொடிப்பொழுதாக வாழ்கின்ற ஆற்றல் நான் பெற வேண்டும். அதற்கு நீ அருள் செய்ய வேண்டும். உன் பாதத்தைப் பற்றி நான் தினமும் பூசிக்க வேண்டும். தினம் உள்ளம் உருக பூசிக்க வேண்டும். சோர்வு அடையாது பூசிக்க வேண்டும். சலிக்காமல் பூசிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்க வேண்டும்.
     இப்படியெல்லாம் கேட்டால், உன் உள்ளத்தை அவர் தொட்டுப் பார்ப்பார். கண் கண்டாலும், மனம் தான் சுட்டிக்காட்ட முடியும். அதேபோல் நீ எதை மையமாகக் கொண்டு ஞானியர்களை பூஜை செய்திருக்கிறாய்? பூஜையில் ஆசானிடம் நித்தியா பொருள் கேட்டாயா? அநித்திய பொருள் கேட்டாயா?
     நல்ல மனைவி வேண்டுமென்று கேட்டால் ஆசான் அருள் செய்வார்,
     நல்ல செல்வம் வேண்டுமென்று கேட்டால் ஆசான் அருள் செய்வார்,
     நல்ல பண்புள்ள பிள்ளைகள் வேண்டுமென்று கேட்டால் ஆசான் அருள் செய்வார்,
     நல்ல நட்பு வேண்டுமென்று கேட்டால் ஆசான் அருள் செய்வார்,
     இப்படி கேட்டுக்கொண்டே வந்தால் ஆசான் அருள் செய்வார். ஆனால் இதெல்லாம் அநித்தியமானது. இதையெல்லாம் உண்மைப் பொருள் உணர்ந்தவர்கள் கேட்க மாட்டார்கள்.
     உண்மைப்பொருள் உணர்ந்த மக்கள் “அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் என்று கேள் என்பார்கள்.
     ஆசானிடம், “எனக்கு நல்ல மனைவியும் வேண்டும். பண்புள்ள பிள்ளைகள் வேண்டும், நல்ல நட்பு வேண்டும், வறுமை இல்லாத வாழ்வு வேண்டுமென்று கேட்க வேண்டும். அதே சமயத்தில் அடியேன் மெய்ப்பொருளை உணர்ந்தும், மரணமிலாப் பெருவாழ்வு, மோட்சலாபமும், பெற வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். இதையெல்லாம் கேட்க சொல்லிக் கொடுப்பார்கள். அப்போதுதான் உள்ளத்தை அவன் தொட்டுப் பார்ப்பான். சரியான இடத்திற்கு வந்து விட்டான் இவன்! ஆசானால் உபதேசிக்கப்பட்டு இருக்கிறான்.
     இந்த கேள்விச்செல்வத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறான். இவன் கேட்பதில் நியாயம் உண்டு. மக்கள் நன்றாக இருக்கணும், பண்புள்ள மனைவி, பண்புள்ள பிள்ளைகள் வேண்டுமென்று கேட்கணும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது அறியாமை. நல்ல வீடு வேண்டுமென்று கேட்டான். நோயில்லாத உடல் வேண்டுமென்று கேட்டான். மற்றவர்கள் அத்தனையும் கேட்டால், “அடியேனுக்கு ஞானவாழ்வு சித்திக்க வேண்டும் என்று கேள்” என்று சொல்வதுதான், உற்ற ஆசான் துணை. அதுபோன்று கேட்டால், அப்போதுதான் உள்ளத்தை தொட்டு,
      காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
      காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின்
      அயரா வன்பி னரன்கழல் செலுமே.
                – மகான் மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம் – பதினோறாம் சூத்திரம்
        இவன் மனம் அவனுக்குத் தெரியும். நீ கேட்டால், இவனுக்கு ஆற்றல் இருக்கிறது. அந்தப் பொருளை அனுபவிப்பதற்கு, மெய்ப்பொருளை உறுதிப்பொருளை இவன் கேட்கிறான். மரணமிலாப் பெருவாழ்வை கேட்கிறாய். இவனுக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா? என்று உள்ளத்தை தொட்டு காட்டல், இது இரண்டும் ஒன்றை சொல்லுவதாகும். நீ கேட்கலாம். அதற்கு என்ன உபாயம்?

        அயரா வன்பி னரன்கழல் செலுமே.
     நீ கேட்கலாம், ஒன்றும் நட்டமில்லை. எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள். ஆனால் கேட்பதற்கு தரம் இருக்கணும். அவன் தன்னுடைய ஊழ்வினைக்கு ஏற்றவாறுதான் இறைவனை கேட்பான். இறை வழிபாட்டில், அவன் எதைக் கேட்கிறான் என்பதை வைத்தே அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், இவன் இன்ன திராம் உடையவன் என்பதை அறியலாம்.
     அந்த தரத்தைச் சொல்லுகின்ற இடம் இதுதான். அதற்குத்தான் கேள்விச் செல்வம் முக்கியம். அதனை மையக்கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும். கேட்டுக் கொள்வது, கேள்விச் செல்வத்தை மையமாக வைத்துக் கொள்ள வேண்டும். காதால் உங்களுக்கு ஏற்படும் லாபம் என்ன? எதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும்? எதையெல்லாம் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்? என்பதற்காக சொல்லியிருக்கிறேன். உள்ளே போய் தொட்டுப் பார்க்க வேண்டும்.
      அயரா வன்பி னரன்கழல் செலுமே.
      அயரா – இந்த துறையில் வருகின்ற மக்களுக்கு ஊழ்வினை காரணமாக சலிப்பு ஏற்படும். பூஜை செய்ய முடியாது, தடை ஏற்படும். நோய் வரும். உள்ளம் உருக பூசிக்க வேண்டுமென்று வருவான். அதற்குள்ளேயே சோர்வு வரும். அதற்காக சோர்வு அடையக்கூடாது. மகான் திருவள்ளுவர் சொல்வார்,மகான் திருமூலதேவர் சொல்வார்,
      செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை
                வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
                இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
                நல்ல வரனெறி நாடுமி னீரே.
                                                – திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2103
                எந்த அளவுக்கு முடிகிறதோ அந்த அளவிற்கு பூஜை செய்யணும். போகும்போதும், வரும்போதும், சாப்பிடும்போதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இது என்ன ஆகும் ஒருகாலத்தில்? மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்? இயல்பாகவே பூஜை செய்யும் சூழ்நிலை அவனுக்கு வந்து விடும். பூஜை செய்வதற்குரிய இடமும் வரும், பூஜை செய்ய ஆசைப்படலாம், சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும், பூஜை செய்ய ஆசைப்படலாம், இடம் இல்லாமல் இருக்கும், இடம் அமைய வேண்டும், இடம் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இடம் உனக்கு அமைய வேண்டுமல்லவா? இடமும் நேரமும் அமைந்தாலும் உணர்வு வர வேண்டுமல்லவா? அந்த உணர்வை நீ பெற வேண்டும். அப்படியெல்லாம் பெற்றால், உன் உள்ளத்தை தொட்டுப் பார்ப்பான்.
      காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின்
      அப்போதுதான்
     யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலின்
      சத்தே யறியா தசத்தில் தறியா
      திருதிற னறிவுள திரண்டலா வான்மா.
                – மகான் மெய்கண்டதேவர் – சிவஞானபோதம் – ஏழாம் சூத்திரம்
        இதெல்லாம் சொன்னது மகான் மெய்கண்டதேவர். முன்னே சொன்னதும் அவர்தான். இது உபதேசம். உபதேசம் என்பது நன்றாக மனதில் பதிய வேண்டும் என்பதற்காக கருணை கொண்டு சொல்வது. யாரும் திரும்ப திரும்பச் சொல்வதாக நினைக்க வேண்டாம்.
     மெய்ப்பொருள் உணர்ந்த, உண்மைப்பொருள் உணர்ந்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் பிறவித் துன்பத்திற்கு நல்ல மருந்தாக இருக்கும். பிறவித்துன்பத்தைப் பற்றியும், பிறவிதுன்பத்தைப் பற்றி உணர்ந்து தெளிந்த மக்கள் சொல்வதைக் கேட்டபோதிலும், தினம் பூஜை செய்ய சொல்லியிருக்கிறேன்.
           அயரா வன்பி னரன்கழல் செலுமே – அயரா என்பது தொடர்ந்து அன்பு செலுத்த வேண்டும். தொடர்ந்து அன்பு செலுத்தினாலன்றி, அரன் கழல் செல்ல முடியாது.
     அரன் என்பது ஈசன், ஈசன்  கழல் பற்றினாலன்றி முடியாது. அப்படி பற்றுவதற்கு தளர்ச்சி, சோர்வு இல்லாமல் பூஜை செய்யவேண்டும்.
     அன்பு இருக்கின்றதோ இல்லையோ, “அகத்தீஸ்வரா” என்று பூஜை செய்து வா!
     அப்படிச் சொல்ல சொல்ல என்ன ஆகும், இயல்பாகவே ஞானிகள் பார்வை பட்டுக்கொண்டே இருக்கும்.
     ஞானிகள் பார்வை பட பட பட, இயல்பாகவே உங்களுக்கு மெய்யுணர்வு மிகுதியாகும்.
     மெய்யுணர்வு மிகுதி ஆக ஆக என்னாகும். மேலும் ஆர்வம் வரும். நாட்டம் வரும்.
     ஆர்வம் வர, ஆர்வம் வர என்னாகும்? மெய்ப்பொருளை உணர்கின்ற பக்குவம் வரும்.
     பரிபக்குவம் வர வர என்னாகும்? உடம்பைப் பற்றி, உயிரைப்பற்றி அறிகின்ற ஆற்றல் வரும்.
     உடம்பைப்பற்றி, உயிரைப்பற்றி அறிகின்ற ஆற்றல் பெற்றால், உயிரையும், உடம்பையும் பிரித்துப் பார்க்கின்ற தன்மை கிடைக்கும்.
     உடம்பையும், உயிரையும் பிரித்துப் பார்க்கின்ற தன்மை பெற்றால், பூட்டுகின்ற தன்மை கிடைக்கும்.
     பிரித்து பார்க்கின்ற தன்மை அறிந்தால், பூட்டிப் பார்க்கின்ற தன்மை கிடைக்கும்.
     பூட்டுகின்ற தன்மைக்கு உங்களுக்கு கேள்விச்செல்வம் வேண்டும், நூல்களை படிக்க வேண்டும், அயராது பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
     நான் சொன்னது மகான்களின் அருள்வாக்கு. இது சாதாரண கல்வித்தரத்தால் சொல்வதல்ல. அருள்பலத்தால், அமுதவாக்கால் சொன்னது. மரணமிலாப் பெருவாழ்வு பெற்று அமிழ்தபானம் சாப்பிடணும்.
     உள்ளே ஊறுகின்ற அமிழ்தத்தை உண்டு, அமிழ்தபானத்தை உண்டு அதனால் எழுந்த கவிகள் இவை எல்லாம்.
     அந்த கவிகளைக் கேட்டாலே, ஒவ்வொரு மனிதனுக்கும், பிறவியைப் பற்றி உணருகின்ற பரிபக்குவம் கிடைக்கும். இது புண்ணியவான் நூல்கள்.
                போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
                போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினர்
                நாதன் நடத்தால் நயனங் களிகூர
                வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
                                                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
               
                அயரா வன்பி னரன்கழல் செலுமே தொடர்ந்து அன்பு செலுத்தினாலன்றி ஈசனுடைய பாதத்தை பொருந்த முடியாது.
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் – மகான் அகத்தீசர் பாத்ததை அன்பு கொள்ள கொள்ள, புண்ணிய நந்தியைப்போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினர் – புண்ணியன் ஆவதற்கு அதுதான் காரணம். வேறு எந்த வகையிலும் புண்ணியன் ஆக முடியாது. ஆனால் புண்ணியன் ஆகலாம். விருந்தினரை உபசரித்தல், ஏழைகளுக்குத் தொண்டு செய்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல். இப்படி பல்வேறு வகையால் புண்ணியத்தைத் தேடலாம். ஞானியர்களை நினைத்தாலே புண்ணியவான் ஆகலாம்.
     போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
                போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினர்
                நாதன் நடத்தால் நயனங் களிகூர
                வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
                                                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
               
     அன்பு அளவு கடந்து செலுத்த செலுத்த, உடம்பையும், உயிரையும் பிரித்துப் பார்க்கின்ற ஆற்றல் வரும். பிரித்துப் பார்க்கின்ற ஆற்றல் வரும்போது, கூட்டுகின்ற ஆற்றல் வரும். கூட்டுகின்ற ஆற்றல் வரும்போது அன்றே, தச நாதம் காதில் கேட்கும். இதெல்லாம் சின்ன விசயமல்ல. இதை கேட்டு வைக்க வேண்டும். இது அருள் வாக்கு. இந்த சொற்களை செவியில் கேட்டு வைத்தால் ஒரு காலத்தில் பயனுடையதாக இருக்கும். இந்த கவியெல்லாம் அழியாத செல்வம்.
                ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                எழுமையும் ஏமாப்பு உடைத்து.
                                – திருக்குறள் – கல்வி – குறள் எண் 398
                இந்த கவி சாகக்கல்வி. இந்த கூட்டுதல் பிரித்தல் என்பது இரகசியம். ஆசான் சுட்டிக்காட்ட வேண்டும். இதை ஏன் சுட்டிக் காட்டுகின்றேன் என்றால், இப்படியெல்லாம் தினமும், ஒவ்வொரு வாரமும் ஓதி, ஓதி அவர்களை பண்படுத்தி, அவர்களுக்கு பக்தியினை உண்டாக்கி, “பூஜை செய்யுங்கள், விடாது பூஜை செய்யுங்கள்” என்று தொடர்ந்து சொல்லச் சொல்ல, அவர் பூஜை செய்வதற்கு முன், நான் உள்ளபடி பூஜை செய்ய ஆசைப்படுகிறேன். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும், வழி முறையும் கேட்கிறேன் என்று இப்படியெல்லாம் கேட்டு கேட்டு, நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பக்குவம் வந்த பின், கூட்டுவதும், பிரிப்பதும் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். அதுதான் உபதேசம். அதை சுட்டிக்காட்டுவது. சுட்டிக்காட்டாவிட்டால் சுட்டுப்போட்டாலும் வராது. அதை பிறகு நாங்கள் சொகிறோம். பூஜை செய்வது முதல் கடமை. சரி, வாரத்திற்கு ஒரு முறை இந்த கருத்துகளை சொல்கிறீர்கள என்றால், உங்களுடைய உறவுகள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனநிலை மாறும். ஆக வாரம் ஒரு முறை வரும்போது, மேலும் மேலும் கேட்கலாம். பண்படுத்துவதற்காக இந்த கருத்தை நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
     அன்பர்கள் வருகின்ற ஞாயிற்றுகிழமை அருள்மிகு அகத்தீசன் கட்டளைப்படி, அன்பர்களுடைய முயற்சியில் விழா நடைபெறுகிறது. ஒரு ஆண்டு அடயோக மௌன நிறைவு விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் என் உடம்பில் சார்ந்து பல முனிவர்கள், மாபெரும் யோகியர்கள் என் உடம்பில் சார்ந்து ஆசி வழங்குவதாக அவர்கள் வாக்கு தந்திருக்கிறார்கள். அப்போது எல்லா மகான்களும் அங்கே வந்து விடுவார்கள். நானும் அங்கே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறேன். அன்பர்கள் வருகின்ற 14.02.1988 அன்று காலை, அது சம்பந்தமாக அன்பர்கள் விழாவை கட்டுக்கோப்பாக ஏற்பாடு செய்கிறார்கள். அந்த விழாவில் பங்கேற்க வேண்டும். நல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி அதி முக்கிய நிகழ்ச்சி. அந்த விழாவில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தால் அது மிக மிக மிக முக்கியமான நிகழ்ச்சி! அபூர்வமான அற்புதமான நிகழ்ச்சி! அன்று எனது கையால் விபூதி பெறுவது, மிகப்புண்ணியம். அவ்வளவு வாய்ப்புள்ள ஒரு நேரம். அந்த நேரத்தில் ஆசான் அகத்தீசன், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர் போன்ற மாபெரும் யோகிகள் என்னை சார்ந்திருப்பார்கள். அன்று சொன்னதை செய்வேன், மாபெரும் யோகி அகத்தீசர், ஆசான் நந்தீசர், மகான் திருமூலதேவரை நினைத்து நான் விபூதி தருவேன். அப்போது என்னுடைய விபூதியில் அவர்களுடைய அருள் இருக்கும். அதை மிகப்பெரிய செயலாகக் கொண்டு, அதில் பங்குபெற வேண்டும். மிகப்பெரிய ஒரு தத்துவ நூல் அகத்தீசன் தத்துவப் புகழுரை, நூல் 136 கவிகள் கொண்டது, 131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு, அகத்தீசன் தத்துவப் புகழுரை. அதில் முதல் 10 பக்கங்களில் ஆசான் அகத்தீசன் தத்துவமும், பெருமையையும் பேசியிருக்கிறோம். மகான் கஞ்சமலைச்சித்தர் அனுக்கிரகத்தால் என்னால் பாடப்பெற்ற கஞ்சமலைச்சித்தர் புகழ் வெண்பா 5 கவிகளும், மகான் கருவூர்முனிவர் கருணையால் பாடிய 10 பாடல்களும், அந்த புத்தகத்தில் உள்ளது. அந்த புத்தகம் அன்று வெளியிடப் போகிறோம். அன்று அந்த விழாவில் பங்கு பெறுவதற்கு நீங்கள் வர வேண்டும், அந்த புத்தகத்தை வாங்கி நீங்கள் படிக்க வேண்டும். ஒவ்வொருவரும், 5 அல்லது 10 புத்தகத்தை கொண்டு சென்று, அதை அன்பர்களுக்கு விற்பனை செய்யவும். அது வீட்டில் இருந்தாலே புண்ணியம். ஏனென்றால் 131 மகான்களுடைய போற்றித்தொகுப்பு, அகத்தீசனுடைய தயவு கொண்டு எழுதிய அகத்தீசன் தத்துவ புகழுரை, அதில்
     அறிஞர் அறியாமோன மளிப்போய் வருக வருக
     என்ற ஒரு கவி உள்ளது. அறிஞர்களே அறிய முடியாத மோனத்தை அவர்கள் தருவார்கள். மோனம் என்பது, இடது பக்கம் வருகின்ற சுவாசத்தையும் (இடகலையையும்), வலது பக்கம் வருகின்ற சுவாசத்தையும் (பின்கலையையும்) புருவ மத்தியில் செலுத்திவிட்டால் அது மோன நிலை. அது சும்மா இருக்கின்ற இரகசியம். எனது அனுபவத்தில் அந்த இரகசியங்கள் அனைத்தையும், 136 கவிகளாக சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்த 136 கவிகளை படிக்கும்போதே நான் மோன நிலை பெற்றவன் என்பது உங்களுக்கு புரியும். பல மகான்கள் என் உடம்பில் சார்ந்திருந்து, அருளாசி தருவதற்கு அதுதான் காரணம். நான் முன் ஜென்மத்தில் உண்மைப்பொருள் உணர்ந்து பூஜை செய்திருக்கிறேன்.
     மந்திரங்கள் போன்ற வெறும் ஆரவார பூஜை நான் செய்யவில்லை!
    
     கும்பாபிஷேகம் பார்த்து நான் அருள் பெறவில்லை.
     புனித நீராடி நான் இந்த அருளைப் பெறவில்லை.
     தங்கரதம், வெள்ளிரதத்தை இழுத்து நான் இந்த அருளைப் பெறவில்லை!
     அங்கம் புரண்டோ, அலகு குத்திக் கொண்டோ, புற்றுக்கு முட்டை வைத்தோ நான் இந்த அருளைப் பெறவில்லை!
     பாலாபிஷேகம், தேனபிஷேகம் செய்து நான் இந்த அருளைப் பெறவில்லை!
     காரணம் உள்ளம் உருக ஞானிகளை பூசித்த காரணத்தினால்தான் நான் இந்த அருளைப் பெற்றிருக்கிறேன்.
     நான் இப்படிச் செய்ததால் இந்த ஆற்றலைப் பெற்றிருக்கிறேன். நீங்களும் அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
     ஆக அன்பர்கள் அந்தரங்க பூஜை செய்து இந்த அருளைப் பெறுங்கள். பல்வேறு கிளைகளில் இருந்து அன்பர்கள் விழாவிலே பங்கு கொள்ள வருகிறார்கள்.
     நீங்களும் விழாவில் கலந்து கொண்டு மிகப்பெரிய வாய்ப்பினைப் பெறுங்கள். இப்போது பேசியதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது ஐயப்பாடு இருந்தால் கேட்கலாம். அதற்கு விளக்கம் சொல்கிறோம்.
     கங்கை, காவிரியிலே மூழ்கி விட்டு மிகப்பெரிய புண்ணியம் செய்து விட்டதாக நினைத்து நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். இதனால் எந்த பயனும் இல்லை. கண்ணுக்கு கவர்ச்சியாக இந்த பாலாபிஷேகம், தேனபிஷேகம் இருக்கலாம். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறாயே? அதனால் என்ன அருள் வந்துவிடப்போகிறது? இது ஆத்ம திருப்தி உண்டுபண்ணுமா? ஏதோ மனதுக்கு ஆறுதல். அதனால் அருள் இல்லை!
     அந்த காசை ஏழைகளுக்குக் கொடுங்கள். அவன் “ஐயா! மூன்று நாளாக உணவில்லாமல் பசியாகக் கிடந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள். நீர் புண்ணியவான் நீடு வாழ வேண்டும்!” என்று சொல்வான். அவன் வேட்டியில் ஒரு துணியை ஒட்டு போட்டு கட்டியிருப்பான். தன் மானத்தைக் காப்பதற்காக, கிழிந்த துணியை வைத்து வேட்டியில் ஒட்டு போட்டிருப்பான். அவனுக்கு வேட்டி கொடுத்தால் அதல்லவா புண்ணியம்? அவனுக்கு சோறு போட்டால் அதல்லவா புண்ணியம்!
     நான் பேசியது சிலருக்கு கசப்பாக இருக்கும். உங்கள் மனதை புண்படுத்துவதற்காக நான் அப்படி பேசவில்லை. பூஜை செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு வாய்ப்பு தரும். வணக்கம்.                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175079
Visit Today : 219
Total Visit : 175079

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories