இயற்கையும் ஞானிகளும்

இயற்கையும் ஞானிகளும் 

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை – 26.07.1998

ஓம் அகத்தீசாய நம
     நாங்கள் ஞாயிறு தோறும் ஆன்மீகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரே மையக்கருத்தை வைத்துதான் பேசமுடியும்.
ஒரு அம்பு விட்டால் ஏழு மரத்தை துளைத்துக் கொடு போனது என்று சொல்லலாம். அதேபோன்று பாரதத்தில் பாண்டவர்கள் ஐந்து பேர், கௌரவர்கள் நூறு பேர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மகான் வியாச பகவான் பெயர் வைத்திருக்கிறார். பஞ்சபாண்டவர்களை பஞ்சபூதமாகவும், மற்ற நூறு பேரை தத்துவங்களாகவும் அமைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இதுவே யூகம்தான்.
     மகான் வால்மீகி இராமாயணத்தை வடமொழியில் எழுதினார். அதை புலவர் கம்பர் பன்னிரண்டாயிரம் பாடல்களில் மிகப்பெரிய காவியத்தையே எழுதினார். பன்னிரண்டாயிரம் பாடல்களும் இலக்கணத்துக்கு உட்பட்டு இருக்கும். அதே நேரத்தில் சொல்ல வந்த கருத்தையும் சொல்ல வேண்டும். ஆனால் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை எல்லாம் மக்கள் விரும்புமாறு பேசலாம்.
     புலவர் கம்பர் மிகப்பெரிய வல்லமை உள்ளவர், ராமர் மூலமாக தன கருத்தை சொல்லுவார்கள். ஒவ்வொருவரும் இப்படி கதை மூலமாக அவர்களது கருத்தை சொல்வார்கள். அதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் மையக்கருத்து ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும்.
     நாம் சொல்லும் கருத்தை கேட்டால் ஆன்ம இலாபம் பெறலாம். ஆன்ம ஜெயம் பெறுவதற்கு நம் கருத்துகள் பயன்படும். ஆனால் அதில் சொல் அலங்காரம் இருக்காது. அறம், பொருள், இன்பம், வீடு அல்லது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று இருக்கும்.
     இந்தக் காலத்தில் உதவி செய்தல், தானதர்மங்களை செய்தல் மிகமிக குறைந்து வருகிறது. நூற்றுக்கு ஒருவர் கூட தயைசிந்தை உள்ளவராக இல்லை, தான தர்மங்கள் செய்யுங்கள் என்று நாம் ஒரு கருத்தைச் சொல்கிறோம். ஆனால் இதை ஆசான் திருமூலர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
     ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்
      பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்
      வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
      காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.
                                                திருமந்திரம் – தானச்சிறப்பு – கவி எண் 250
                இவ்வாறு தனது பாடலில் ஆசான் திருமூலதேவர் சொல்வார்.
     ஆசான் திருமூலதேவர் யாராக இருந்தாலும் கொடுங்கள் என்றார். கொடுத்தல் என்பது மனிதவர்க்கத்திற்கே உரியது. வேறு எந்த ஜீவராசிக்கும் கிடையாது.
     மாடு பால் கொடுப்பது இயற்கையான ஒன்றாகும். மாடு தானே ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் வந்து, “உங்கள் பிள்ளை பசியாக இருக்கிறதா, கொஞ்சம் பால் கறந்து கொள்ளுங்கள்” என்று எந்த மாடும் சொல்லாது.
     ஒரு தென்னம்பிள்ளைக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான். “எனக்கு கிழங்கு வகைகளையும், தானிய வகைகளையும் மனித வர்க்கத்திற்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் கொடுக்கிறது. இயற்கை அன்னை நமக்கு நெல் கொடுத்தாள், மாட்டிற்கு புல் கொடுத்தாள் . தானிய வகைகளை இயற்கை கொடுத்தாலும் அது ஒரு எல்லைக்கு உட்பட்டதே. பருவமழை பருவ காலத்தில் மட்டும்தான் பெய்யும். அது ஒரு பருவம் அவ்வளவுதான். அதுபோல தென்னை மறம் தேங்காயை ஒரு குறிப்பிட்ட காலம்வரை தரும் அல்லது தொடர்ந்தும் தரலாம். ஆக இதெல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டது, உணர்ச்சி இல்லாதது.
     ஆனால் இயற்கை அன்னை சமுதாயத்திற்கு பசுவாக இருந்து பால் தந்தாள், தென்னையாக இருந்து தேங்காய் தருவாள், மாமரமாக இருந்து மாங்கனி, காய் தருவாள். வாழையாக இருந்து வாழைக்கனி தருவாள். இயற்கை மனித வர்க்கத்திற்கு தேவையான கனிவர்க்கங்களையும், காய்களையும், மணம்உள்ளல பூ வர்க்கங்களையும், வாசனைத் திரவியங்களையும், நவரத்தினங்களையும் அள்ளிஅள்ளி தந்திருக்கிறாள். இயற்கை அள்ளி அள்ளி தந்ததை யாராலும் குறைக்க முடியவில்லை.
     எத்தனையோ வகையான தானியங்களையும் கிழங்குகளையும் இயற்கை அன்னை படைத்தாள். பூமிக்கு கீழ்நோக்கி மிகுதியாக இருப்பதெல்லாம் கிழங்கு வகை. கர=கருணைக்கிழங்கு உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இப்படி எத்தனையோ வகையான  கிழங்குகள் உள்ளன. ஆனால் விதி விலக்கு, நிலக்கடலை பூமிக்கு கீழே இருந்தான் வரும். இது ஒரு அற்புதம். இது ஒரு ஆற்றல்.
     அடுத்து மேல்நோக்கி உற்பத்தி செய்தலைப் பார்ப்போம். தானியங்கள் எல்லாம் மேல்நோக்கி இருக்கும். நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் எல்லாம் பூமிக்குமேல் நோக்கி இருக்கும். எல்லாம்வல்ல இயற்கை அன்னை இவையெல்லாம் மக்களுக்கு மட்டுமல்ல, மற்ற ஜீவராசிகளும் பயனடைய வேண்டுமென்று அள்ளித் தந்திருக்கிறாள். இதை மகான் இராமலிங்கசுவாமிகள்,
      வித்தாகி முளையாகி விளைவ தாகி
            விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
      கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
            குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
      சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
            சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
      முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
            முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே….!
                                                      – திருஅருட்பா முதல் திருமுறை – மகாதேவ மாலை – கவி எண் 115
                குறைவாகி நிறைவாகிக் குறைவிலாத என்பார். மேலும் வித்தாகி முளையாகி விளைவதாகி என்பார். இதுதான் இயற்கையின் அமைப்பு. இந்த மனிதவர்க்கத்திற்கும் ஜீவராசிகளுக்கும் குறையவே குறையாத செல்வத்தை இயற்கை அன்னை கொடுத்திருக்கிறாள்.
     இதை ஏழுவகை தோற்றம் நான்குவகை யோனி என்று சொல்வார். முட்டை வாயிலாக (அண்டஜம்), கருப்பை வாயிலாக, வெப்பம், வியர்வை காரணமாக இந்த நான்கு வகை யோனிகள் மூலமாக பிறவி வரும் என்பார்.
     இப்படியெல்லாம் உயிரனங்களும், உலகமும் தோன்றி பல லட்சம் கோடி வருடமானது. பலலட்சம் கோடி வருடங்களாக உயிரினங்கள் சாப்பிடுகிறது. இன்னும் குறையவே இல்லை.
     இவ்வளவு செல்வத்தையும் இயற்கை அன்னை அள்ளித் தந்திருக்கிறாள். உலகம் இன்னும் பலகோடி வருடமிருக்கும். நாம் எழுபது
வயது வரை இருக்கலாம். நம் வாழும் வாழ்க்கை கடுகு போன்றது. இன்னும் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும், கணக்கெடுக்க முடியாத அளவிற்கு, இயற்கை அன்னை இவ்வுலகில் அள்ளித் தந்திருக்கிறாள். அவள் கொடுத்ததைக் குறைத்துப் பார்க்கிறார்கள், முடியவில்லை. 
     “குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத” என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள். ஓர் ஆண்டுக்கு ஒரு நிலத்தில் ஒரு மூட்டைநெல் போடுவான். குறைவது போலிருக்கும், ஆனால் அது முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது மூட்டையாக வரும்படி குவித்து தருவாள் இயற்கை அன்னை.
     “ஏ! உலக உயிரினங்களே! நீங்கள் சாப்பிட்டு குறைத்து பாருங்கள். ஒரு நெல்லுக்கு நூறு நெல் தருவேன், ஒரு மான்கொட்டையைப் போட்டால் ஓர் ஆயிரக்கணக்கான மாங்கனிகளைக் கொடுப்பேன். நீ குறைத்துப் பார்” என்று இயற்கை அன்னை சொன்னாள்.
     நவரத்தினங்களாகவும், வைரக்கற்களாகவும், மரகதக்கற்களாகவும்
என்னை ரசித்துப்பார். சுவையுள்ள கனிகளை சுவைத்துப் பார், ரசித்துப் பார். எப்படி வேண்டுமானாலும் என்னை ரசித்துப் பாரி, என்பாள் இயற்கை அன்னை.
     அவளே ஒரு பக்கம் அந்தி செவ்வானமாக இருந்து காட்சி தருவாள். அந்த செவ்வானத்திலே கொக்கும், கிளிகளும், பறவையினங்களும் பறந்து செல்வதை கண்டு ரசித்துப்பார். அதற்குத்தான் உனக்கு கண்களை தந்தேன் என்றாள், இயற்கை அன்னை. இப்படி பல்வேறு வடிவமாகவும், பல்வேறு வண்ணங்களிலும் இயற்கை காட்சி தந்து நம்மை ரசிக்க சொல்வாள்.
     தமிழகத்தில் கொடைக்கானலில் மலர் கண்காட்சி வைப்பார்கள். பலவகையான வண்ணத்துப்பூக்கள் இருக்கும். பாரடா மனிதா! இயற்கையாகிய என்னால் கொடுக்கப்பட்ட இந்த மலர்க்கூட்டத்தை கண்டு ரித்து பார், என்னால் கொடுக்கப்பட்ட கனிகளை சுவைத்துப் பார், ருசித்துப் பார் என்றாள் இயற்கை அன்னை. இவற்றையெல்லாம் ஏன் தந்திருக்கிறாய்? என்று கேட்டான். “ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்” என்றார் மகான் திருமூலர்.
     இயற்கை அன்னை கொடுத்ததை பிறருக்கு கொடுத்துவிடு. உனக்கு ஒன்றும் நட்டமில்லை. இயற்கையாகிய நான் உனக்கு ஒன்றுக்கு நூறாக தருகிறேன். ஒன்றுக்கு ஆயிரமாக, ஒன்றுக்கு இலட்சகணக்காகத் தருவேன். மேலும் தந்து கொண்டே இருப்பேன். உனக்கு நான் தந்ததின் நோக்கம், நீ பகுத்தறிவு உள்ளவன், என்னைப் புரிந்து கொள். இன்னும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறேன் என்றாள் இயற்கை அன்னை.
உனது ஆயுள் சிறியது. உன்னுடைய ஆயுள் கடுகளவுதான். இயற்கையாகிய என்னுடைய ஆயுள் கணக்கிலடங்காது. எண்ணிலா ஆண்டுகள்! எண்ணிலா ஆண்டுகள் இருப்பேன்! என்கிறாள் இயற்கை அன்னை. என்னால் கொடுக்கப்பட்ட செல்வங்களும் இயற்கைச் செல்வங்களும் கணக்கிலடங்கா. ஆக குறைக்கவே முடியாது.
      “கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகி” ஒரு நிலக்கடலை செடியில் ஐம்பது, அறுபது கடலை இருக்கும்.
     கொத்தாகி பயனாகி – அந்தக் கடலைகளில் பயனாகி, யார் அந்தக் கடலையின் பயனை அனுபவிக்கின்றான் என்று கேட்டான். “பயனை அனுபவிப்பதும் நான்தான்” என்று சொன்னாளாம் இயற்கை அன்னை. “நீ என்ன அனுபவிக்கிறாய், நானே அனுபவிக்கிறேன், நீயும் நானும் ஒன்று” என்றாள் இயற்கை அன்னை.
     “அங்கே உணவுப் பொருளை உற்பத்தி செய்வதும் நான்தான். ஒன்றுக்கு நூறாக கொத்துக் கொத்தாக இருப்பதும் நான்தான். அதில் பயனடைவது நீ என்று நினைக்காதே, நானே பயனடைகிறேன்” என்றாள் இயற்கை அன்னை. என்ன ஆச்சர்யம்! உன்னுள் இருப்பதும் நான்தான், உன்னுள் பசியாக இருப்பதும் நான்தான், பசிக்குத் தேவையான உணவுப் பொருளை சேகரித்துத் தருவதும் நான்தான்.
     “நானே சுவைக்கிறேன். நானே ரசிக்கிறேன். நானே முழுமையாகிறேன், நானே சாகிறேன்” என்றாளாம் இயற்கை அன்னை. “என்னை அறிந்து கொண்டவன், புரிந்து கொண்டவன் சாகமாட்டான்” என்றாளாம் இயற்கை அன்னை. “ஏ அன்னையே! நீ என்னுள்ளிருந்து ஆட்டிப் படைத்து எனக்கு நரை திரை, மூப்பையும் தந்து, என்னை நரகத்தில் ஏன் தள்ளுகிறாய்?” என்று இயற்கையை கேட்கிறாள் மனிதன்.
     “என் மகனே உன்னை நான் நரகத்தில் தள்ள விரும்பவில்லை எத்தனையோ ஞானிகளை நான் உருவாக்கியிருக்கிறேன். அவர்கள் திருவடியை பற்றி நீ தெளிவு கொள். உன்னை நான் காப்பாற்றுகிறேன்” என்று இயற்கை அன்னை சொல்கிறாள்.
     “உனக்கு காமமாக இருப்பதும் நான்தான். உனக்கு வாமமாகவும் இருப்பது நான்தான்” என்றாள். “வாமம் என்றால் என்னவென்று” கேட்டானாம். வ்”வாமம் என்றால் அமிழ்தபானம். அந்த அமிழ்தபானமாகவும் இருப்பது நான்தான்” என்றாள்.
     “உனக்கு காமமாகவும் இருப்பவளும் நான்தான். உனக்கு தாயாக இருப்பவளும் நான்தான். உனக்குத் தந்தையாகவும், பிள்ளையாகவும், தங்கையாகவும் இருப்பதும் நான்தான். உனக்கு மனைவியாக இருப்பதும் நான்தான்” என்றாளாம் இயற்கை அன்னை. “என்னம்மா இப்படி பேசுகின்றாய், இத்தனை திருக்கூத்து ஆடிவிட்டு என்னை ஏன் நரகத்தில் தள்ளுகிறாய்” என்றான்.
     “ஞானிகளை அறிமுகப்படுத்துகிறேன், புரிந்து கொள்” என்றாள். உலக உயிரினங்கள் உய்ய வேண்டும் என்பதற்காக ஒரு முதுபெரும் தலைவன் ஆசான் ஞானபண்டிதன் முருகப்பெருமானை உருவாக்கியிருக்கின்றேன். அவன்தான் இயற்கையாகிய என்னை முழுமையாக அறிந்து கொண்டான். அவன் என்னுடைய திருவிளையாடள்களை எல்லாம் புரிந்து கொண்டான்.
     “நானே மோகினியாக இருக்கிறேன். உன்னை மயக்கக்கூடிய வல்லமை எனக்கு உண்டு. என்னை புரிந்து கொண்டால் நானே தாயாக இருந்து அமிழ்தபானம் தருவேன். ஆகவே மனித வர்க்கமும், உலக உயிரினங்களும் என்னை புரிந்து கொள்ள வேண்டும். இத்தனையும் செய்துவிட்டு, உனக்கு காமத்தையும் தந்து, உனக்கு துணையாக ஒரு பெண்ணையும் தந்து உன்னை நரகத்தில் தள்ளுவதும் நான்தான்” என்றாள் இயற்கை அன்னை.
     “ஆகவே தலைவனை புரிந்து கொள். உலகம் மேம்படும் பொருட்டு ஆசானை உருவாக்கியிருக்கிறேன். உலகம் உய்யும் பொருட்டு அனுப்பப்பட்டவன், ஆசான் ஞானபண்டிதன். அவனை நானே அனுப்பியிருக்கிறேன். காமமாக இருந்த என்னை அவன் புரிந்து கொண்டான். அமிழ்தமாகிய வாமத்தை உண்டான், சோம பானத்தை உண்டான். அப்படி உண்டானதனால் இன்று என்னை வென்று விட்டான். என்னை அவன் வென்றிருப்பதால் அவனை நன்கு புரிந்து கொள் என்றாள் இயற்கை அன்னை.
     மகான் திருவள்ளுவரும் சொல்வார்,
                ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
                பேரா இயற்கை தரும்.
                           – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370
            இயற்கை என்றும் நிரப்பப்படாதது. அந்நிலையே பேரா இயற்கை தரும் என்றார் திருவள்ளுவப்பெருமான். இயற்கையை புரிந்து கொண்டவர் மகான் திருவள்ளுவப்பெருமான். “நமக்கு பலகீனத்தை தந்தது யார்?” என்று கேட்டார்.   
     அவள் சிரித்தாள் “நீ என்ன பலகீனமாக இருப்பது? நானே பலகீனம் என்றாள் இயற்கை அன்னை.
     “எனக்கு வல்லமை தந்தது யார்?” என்றார்.
     “அதுவும் நான்தான்”என்றாளாம்.
     “எப்பம்மா இதெல்லாம் எனக்கு புரியும்” என்றார்.
     “என் மகன் சுப்பிரமணியன் இருக்கிறான். அவன் ஞானபண்டிதன். அவனை கேட்டு தெரிந்துகொள்” என்றாள். உனக்கு இந்த வாய்ப்பை புரிந்து கொள்வதர்காகதானே தந்திருக்கிறேன். கேட்டுப் பார் அவனை. அவனுடைய ஆசியால் ஆசான் அகத்தீசரும், மகான் திருமூலதேவரும், நால்வர்களும் வந்திருக்கிறார்கள்.
     அதுமட்டுமல்ல, இன்னும் ஒன்பது கோடி பெரும் என் மகன் கருணையால் வந்திருக்கிறார்கள். ஆசான் இராமலிங்க சுவாமிகளாக, ஆசான் பட்டினத்தாராக, ஆசான் மாணிக்கவாசகராக அமைந்திருக்கிறார்கள். தமிழன்தான் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறான். தமிழ்நாட்டில் பிறந்தவன், முதுபெரும் ஞானி ஆசான் ஞானபண்டிதன் என் மகன். என் சொந்த மகன், வந்த மகன்.
     ஆண் என்னைத் தெரிந்து கொண்டு என்னை வெற்றி கொண்ட தலைவன். அவன் சொல்வதும், ஆசான் இராமலிங்கசுவாமிகள் சொல்வதும் ஒன்றே! ஆண் சொல்வதும் ஆசான் அருணகிரிநாதர் சொல்வதும் ஒன்றே. ஆசான் அருணகிரிநாதர் சொல்கிறார்,
      யாமோதிய கல்வியும் எம்மறிவுந்
       தாமேபெறவேலவர் தந்ததனாற்
       பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
             நாமேல் நடவீர் நடவீர் இனியே!
                                                                                              –                                                                                                   கந்தரநுபூதி கவி எண் 17
      யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் – என்னுடைய கல்வி, என்னுடைய அறிவு எல்லாம் மீண்டும் அவனைப் பெறுவதற்கு என்பார். அவனைப் பெறுவது எப்படி? உமியை நீக்கி அரிசியை பெற்றுக் கொள்வது போல் என்றார்.
     வேலவர் தந்ததனால் பூ மேல்மயல் போயர மெய்ப்புணர்வீர் – பூ என்றால் பூமி. மையல் என்றால் மயக்கம். அறமெய்ப் [புணர்வீர் என்றால் உண்மையை சுத்தமாக உணர்ந்து கொள்வீர்.
     நாமேல் நடவீர் நடவீர் இனியே – அதில் வீர் நடை இருக்கும். உண்மைப் பொருள் அறிந்த மக்கள் அத்தனைபேரும் ஆசான் ஆசியைப் பெற்ற மக்கள், எல்லாம்வல்ல இயற்கை இந்த அளவிற்கு அள்ளித் தந்தது மட்டுமல்லாமல், நம்முள் இருந்து அமிழ்த பானமாக ஊரச்செய்கிறாள். விந்துவாக இருந்து விவேகமற்ற தன்மையை தருவாள். அவளே நச்சுத்தன்மையுள்ள விந்துவாகவும் இருப்பாள். ஆசான் அருணகிரிநாதர் இதை சொல்வார்.
     ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
            ஆதவனின் வெம்மைஒளிமீ
      தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
            றமைந்தன்ப ருக்கு முற்றா
      மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
            முடித்திந்தி ரர்க்கு மெட்டா
      முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
            மூதண்ட மும்புகழும் வேல்
      ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
            மின்பணைக ளுமிழு முத்தும்
      இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
            இலவங்க நறவமாருந்
      தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
            தருவநிதை மகிழ்நன் ஐயன்
      தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
            சரவணக் குமரன் வேலே.
                                                                              வேல் விருத்தம் – கவி எண் – 5
                இப்படியெல்லாம் இயற்கை அன்னை, எந்த நாட்டிலும் இல்லாத ஞானிகளின் பெருங்கூட்டத்தை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறாள். ஒன்பது கோடி பேரை உருவாக்கியிருக்கிறாள். இன்னும் கணக்கிலடங்காத கோடி ஞானிகள் உருவாவார்கள். எப்போது யாரால் கணக்கில் அடங்கா ஞானிகள் உருவாவார்கள்? இதை மகான் அருணகிரிநாதர் சொல்வார்,
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ வெனவே
முது சூருர மேல் விடும்வேலா
திருமால் பிரமா அறியா தவர் சீர்
சிறுவா திருமால் மருகோனே
செழு மா மதில்சேர் அழகார் பொழில்சூழ்
திருவீழியில் வாழ் பெருமாளே.
                                   – மகான் அருணகிரிநாதர் – திருப்புகழ் – திருவிழிமிழலை – கவி எண் 857
        ஒருமுறை “ஓம் சரவண பவ” அல்லது “முருகா” என்று சொன்னால் போதும். முடிமேல் இணைதாள் அருள்வோனே. இணை என்றால் பொருத்தமான, இரண்டும் சேர்ந்த என்று பொருள். இடகலையையும் பிங்கலையையும் சிரம்மீது ஆசான் சேர்த்து வைப்பான். இது தலைவனுடைய கருணை, இயற்கை தாய் தந்த பெருங்கருணை.
     ஆகவே இயற்கை அன்னை, இப்படியெல்லாம் கனி வர்க்கத்தையும் தானியங்களையும் கொடுத்த அதே சமயத்தில், அறிவுடையவனை உருவாக்கி அவனுடைய ஆசியில்லாமல் எதையும் அறிந்து கொள்ள முடியாது என்றால்.
     “நீ செய்கின்ற பூஜையெல்லாம் பயனற்றது. நீ பூஜையை முறையறிந்து செய்யவில்லை. என்னால் உருவாக்கப்பட்ட அவன் சொல்லுவான், கேட்டுக் கொள் அல்லது அவனால் அனுப்பப்பட்டவன் சொல்லுவான், கேட்டுக்கொள்” என்றாள் இயற்கை அன்னை.
     இதை ஆசான் இராமலிங்கசுவாமிகள் “எல்லாம் வல்ல தலைவன் என்னை அனுப்பியிருக்கிறான், அறிந்து கொள்” என்று சொன்னாராம். எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். ஆக ஒருவன்தான் அறிந்து கொள்வான்.
        தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
      யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
      ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
      ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.
                                                                   – திருமந்திரம் – கேள்வி கேட்டமைதல் – கவி எண் – 301
                ஆசான் திருமூலதேவர், “தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார்” என்றார். எல்லோரும் அறிய முடியாது. அந்த ஒருவர் அறிந்தால் அவர் சொல்லுவதை “ஓதுமின், கேள்மின், உணர்மின்” என்றார். ஆக, தேவர்களுக்கெல்லாம் தலைவன்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
     தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை – இனிமை பொருந்தியவன், அமுதம் போன்றவன். மிக அமுதம் போன்றவன்தான் கடவுள்.
     இதை எல்லோரும் அறிய முடியுமா? எல்லோரும் அறிந்து என்ன செய்கிறான்? வெள்ளி, செவ்வாய் அன்று பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கிறான். ஐநூறு, ஆயிரம் காய் அன்று செலவாகிறது.
     நம்மிடம் கொடுத்தாள் சாம்பாருக்கு பயன்படுத்துவோம். ஞானிகளை வணங்குகிறோம் பூசணிக்காயை உடைத்து திருஷ்டி கழிப்பானா? மாட்டான். சிதறுகாய் உடைக்கிறான், எதற்கு சிதறுகாய் உடைக்கிறாய்? என்றால் திருஷ்டி கழிப்பதற்கு என்றான். ஏனடா இதிலெல்லாம் திருஷ்டி கழியறதா இருந்தால் உலகம் முன்னேயே முன்னேறி இருக்கும்.
     எல்லாம்வல்ல இயற்கை அன்னை “தம்பி! நீ உடைக்கிற பூசணிக்காயும் நாந்தானடா” என்றாள். பூசணிக்காய் உடைத்தால் மட்டும் திருஷ்டி கழிந்து விடுமா/ இன்னும் சிலபேர் சாமிக்கே திருஷ்டி சுத்துகிறான்.
     எல்லாம் வல்ல தலைவனை சுற்றிவந்து பூசணிக்காயை ரோட்டில் உடைக்கிறான். சாமிக்கே திருஷ்டி கழிக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய மனிதரா நாம்? ஒரு சாதாரண மனிதன், இன்றிருப்பான் நாளைக்கு இருக்க மாட்டான், இவன் கடவுளுக்கு பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைக்கிறான் என்றால், அவனைப் பற்றி என்ன சொல்வது? ரோட்டில் தேங்காய் உடைத்து அல்லது பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பது எல்லாம் ஞானசித்தர் காலத்தில் இருக்காது. தேங்காயை குழம்பி போடு என்று சொல்வார்கள்.
     நம்மைக் கேட்டால் இவற்றையெல்லாம் நம்ப வேண்டாம் என்று சொல்வோம். “பொறந்த குறைக்கு பொங்கல் வைத்தால் தீருமா” என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ரொம்ப இலகுவாக இதை சொல்லுவார்கள். கை கால் ஊனமுள்ள ஒரு குழந்தை பிறந்ததாம். அந்த குறை தீர்வதற்கு குலதெய்வ கோயிலுக்கு போய் பொங்கல் வைத்தான், புளியோதரை செய்தான், ஆடு கோழி வெட்டினான்.
     இவனுக்கு முன்செய்த வினையே மிகுதியாக இருக்கிறது. முன்செய்த பாவம்தான் கூடைகூடையாக மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் ஆடு, கோழி வெட்டி மறுபடியும் பாவத்தை செய்வான். அந்தக் குழந்தையின் ஊனம் சரியாகுமோ? இப்படி செய்யச் சொல்வார்களா ஞானிகள்? ஆசான் ஞானபண்டிதன் சொல்வாரா இந்தக் கருத்தை? ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வாரா இந்தக் கருத்தை? சொல்லியிருக்க மாட்டார்.
     ஆசான் நாமத்தை சொன்னாலே போதும். ஆசான் ஞானபண்டிதா, ஆசான் அகத்தீசா, ஆசான் திருமூலதேவா, ஆசான் போகமகாரிஷி ஐயா, ஆசான் அருணகிரிநாதர் என்றாலே போதும். அப்பேர்ப்பட்ட ஆசான் இவர்களெல்லாம். இவர்கள் அத்தனைபேரும் எல்லாம்வல்ல பரம்பொருள் ஆவார்கள். இவர்கள் உலக மக்களுடைய திருஷ்டியை ஒன்றுமில்லாமல் செய்வார்கள்.
     நமது வினையால் துன்பம்  வந்தால் நாம் அனுபவித்துக் கொள்ள வேண்டும். “முன்னை வினை வரின் முன் உண்டே நீங்குவார்”.
     “பின்னை வினைவரின் பிடித்துப் பிசைவார்” என்றார் மகான் திருமூலர். வினை இருந்தால் அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்பார், பரிகாரம் தேடமாட்டார். ஒரு உயிரைக் கொன்று அதன் மூலம் பரிகாரம் தேடமாட்டான்.
     நமது அன்பர்கள், சன்மார்க்க தொண்டர்கள் ஆசான் ஞானபண்டிதன் ஆசியைப் பெற்ற மக்கள் அப்படி செய்வார்களா? இதை செய்ய மாட்டார்கள், செய்பவர்களைப் பற்றி நமக்கு அவசியமில்லை யாரோ செய்கிறார்கள். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று.
     அவன் ஆடு, கோழி வெட்டுகிறான், சாப்பிடுகிறான், போகிறான். வினையாகிய பாவம் சூழும்  என்பது எங்களுக்த் தெரியும். ஆனால் அவனுக்கு தெரியாது. அவன் கடவுள் ஆசியைப் பெறுவதற்காக செய்யும் செயல் தன குடும்பத்தையே பாதிக்கும் என்று அவனுக்குத் தெரியாது. இதை குடிலில் மட்டும்தான் பேசுவோம், வெளியில் பேசமாட்டோம்.
     ஆசாம் இராமலிங்க சுவாமிகள் சொல்வாரா இந்தக் கருத்தை திருஅருட்பாவில் உள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் எந்த இடத்திலேயாவது உன் பிரச்சனை தீர ஆடு, கோழி வெட்டு என்று சொல்லியிருந்தால் அது அருட்பாவாக இருக்க முடியாது.
     உன் பிரச்சனை தீருவதற்கு இதை செய், அதை செய். இந்த கோழியை அறுத்து பலியிடு, ஆட்டினை வெட்டி பலியிடு என்று சொல்லியிருந்தால் அது அருட்பாவாக இருக்க முடியுமா? அல்லது மகான் திருமூலர்தான் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறாரா? திருமந்திரத்திலோ, திருக்குறளிலோ பூசணிக்காய் உடைத்தால் உன் திருஷ்டி கழியுமென்று சொல்லியிருந்தால் அந்த நூலை முன்னமே எரித்திருப்பான். சிதறுகாய் உடைத்தால் உன் பிரச்சனை தீருமென்று சொல்லியிருந்தால் முன்னமே அந்த நூலையெல்லாம் அழித்திருப்ப்பான்.
     ஞானிகள் இப்படி சொல்வார்களா? என்ன சொல்லியிருப்பார் என்று கேட்டால்? “ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்” என்றார் ஆசான் திருமூலதேவர். இதையே ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
     அற்றார் அழிபசி தீர்த்தல் அக்துதொருவன்
      பெற்றான் பொருள்வைப் புழி
                                                   -திருக்குறள் – ஈகை – குறள் 228
                ஞானிகள் கூட்டம், ஏழைகளின் பசியாற்றுங்கள்,வேறு ஒன்றாலும் நன்மை நடக்காது என்பார்கள்.
     பசியாற்றுங்கள் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றுங்கள், பஞ்சபராரிகள் பசியை தீர்த்து வையுங்கள். எந்த யாகம் செய்தாலும் முடியாது. பசியாற்றுவதால் மட்டுமே ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியும் என்று எல்லா ஞானிகளும் சொல்வார்கள். இதையே மகான் ஔவையாரும் சொல்வார்,
      தானமும் தவமும் தான் செய்வாராகில்
      வானவர்நாடு வழி திறந்திடுமே.
                             – மகான் ஔவையார்
        பசியாற்றுவதால் ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். நமது அன்பர்கள், ஆடு வெட்ட மாட்டார்கள், கோழி அறுக்க மாட்டார்கள், பன்றியை குத்த மாட்டார்கள். இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். அது நமக்கு தேவையில்லை என்பார்கள். “தன்உயிர் நீப்பினும் செய்யற்க” என்று சொன்னது மகான் திருவள்ளுவப்பெருமான். 
     முதுபெரும் தலைவன் மகான் திருவள்ளுவப்பெருமான். எமனை காலால் எட்டி உதைத்தவர் மகான் திருவள்ளுவப்பெருமான். மகான் திருவள்ளுவப்பெருமான் என்று வாயாரச் சொன்னால் “அஞ்சேல் மகனே!” என்று அக்கணமே வரக்கூடிய ஆற்றல் பெற்றவர் ஆசன திருவள்ளுவப்பெருமான். அவர் சொல்கிறார்,
     தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
      இன்னுயிர் நீக்கும் வினை
                                               – திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 327
                நீ முன்செய்த வினையின் காரணமாக இடர் வந்திருக்கலாம். அதற்காக பிற உயிரைக் கொல்வதா? இது சரியில்லை என்பார். உன் உயிரை எப்படி நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றாயே, அதேபோன்றுதான் ஒவ்வொரு உயிரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும். ஆகவே நீ அதைக் கொன்றுவிட்டு நன்று பெறலாம் என்று நினைக்காதே. கொன்றுவிட்டு நன்று பெறமுடியாது, நன்மை பெற முடியாது. இப்படியெல்லாம் பெரியோர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கிறார்கள்.
     திருக்குறளில் செய்யுங்கள் என்பர் சொல்லியிருக்கிறது? திருக்குறளில் பூசணிக்காய் உடைத்தால் திருஷ்டி கழியும் என்று சொல்லியிருக்கிறதா? திருக்குறளில் முடி எடுத்தால் மூவுலகையும் ஆளலாம் என்பர் சொல்லியிருக்கிறதா? அல்லது பாலபிஷேகம் செய்தால் ஜெனமத்தைக் கடைத்தேற்றி கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறதா? என்றால் இல்லை. இவைகளெல்லாம் திருக்குறளில் சொல்லாத கருத்து.
     இந்தக் குளத்தில் குளித்தால் புண்ணியம், ராமேஸ்வரத்தில் குளித்தால் புண்ணியம், காசியில் குளித்தால் புண்ணியம் என்று ஆசான் திருவள்ளுவர் சொல்லியிருக்க மாட்டார். அப்படி சொல்லியிருந்தால் அது நூலாக இருந்திருக்க முடியாது. இல்லை அருட்பாவில்தான் காசி, இராமேஸ்வரத்தில் மூழ்கினால் புண்ணியம் என்பர் சொல்லியிருக்கிறாரா?
     கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
            கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
      வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
            வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
      பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
            பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
      தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
            தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.  
                                              -மகான் இராமலிங்க சுவாமிகள்
என்று மகான் இராமலிங்க சுவாமிகள் கூறுகிறார்.
       உயிர்களிடத்து தயை வேண்டுமென்று மகான் இராமலிங்கசுவாமிகள் சொன்னார். ஞானிகளும் இதைத்தான் சொல்வார்கள். தயவுதான், ஜீவதயவுதான் வேண்டுமென்று சொன்னார்கள். “ஜீவகாருண்யம்தான் ஞானவீட்டின் திறவுகோல்” என்று சொன்னார்.
    
     சொன்னவர் யார்? ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டவர். மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர், காமத்தை வென்று கண்ணியமாக வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட மகான் தயவுதான் முக்கியம் என்றும், மற்ற எந்த சடங்குகளும் பயன்படாது என்பர் சொல்லியிருக்கிறார்.
     தேவர் பிராணை திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் – அவரைக் கேட்டு தெரிந்துகொண்டு “ஓதுமின் கேள்மின் உணர்மின்” என்றார்.
     “திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார்” என்றார். எத்தனையோபேர் முயற்சிக்கிறார்கள்.கோடான கோடிபேர் முயற்சிக்கிறார்கள்,ஓடிஓடி அலைகிறான், கடவுளை தேடி அலைகிறான், பாதயாத்திரையாக செல்கிறான், அங்கம் புரளுகிறான், அழகு குத்திக் கொகிறான், மொட்டை அடித்துக் கொள்கிறான், பால் குடம் எடுக்கிறான், பல ஊர்களுக்கு சென்று ஆற்றிலும் குளங்களிலும் குளிக்கிறான். இப்படியெல்லாம் செய்து கடவுளை அடைய முயற்சிக்கிறான்.
     இப்படியெல்லாம் செய்வதில் பயனில்லை என்பர் ஞானிகள்தான் சொல்லுவார்கள். “கடவுளை அடைவதற்கும், அவர் ஆசி கிட்டுவதற்கும் நீ மூடத்தனமான காரியத்தை செய்கிறாய்” என்று உனக்குத் தெரியாது என்பதை நாம் இங்கே குடிலில்தான் சொல்வோம்.
     ஞானிகள் ஆசி பெற்ற இந்தக் கூடம் சொல்லுமா? சொல்லாது. இந்தக் கூட்டம், ஒன்றே ஒன்றைத்தான் சொல்லும், பசியாற்றுங்கள் என்பர் சொல்லும்.
     ஆசான் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறாரா? ஆண்டுதோறும் தந்தைக்கு தெவசம் கொட்க்கவேண்டுமென்று?
    
     ஆசான் திருமூலதேவர் சொல்லியிருக்கிறாரா? குளத்தில் மூழ்கினால் புண்ணியமென்று?
     இப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார்கள். தாய் தந்தை இருக்கும்போதே அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செயஹ்டு கொள் என்பார்கள்.
     உன்னைப் பெற்ற தாய் தந்தை உனக்கு நல்ல கல்வி தந்திருக்கிறார்கள். நீ நல்லபடியாக நடமாடுவதற்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போதே அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து கொள்.
 இறந்தபின் திதி, விரதம் என்று செய்பவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இப்படி இருக்க மாட்டோம்.
     தாய் தந்தை இருக்கும்போதே அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்வோம். “தேவர் பிரானை திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார்” மகான் இராமலிங்கசுவாமிகள் அறிந்தார், மகான் மாணிக்கவாசகர் அறிந்தார், ஆசான் அருணகிரிநாதர் அறிந்திருக்கிறார், அதனால்தான் ஆசான் அருணகிரிநாதர் சொல்கிறார்,
    யாமோதிய கல்வியும் எம்மறிவுந்
    தாமேபெறவேலவர் தந்ததனாற்
    பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
    நாமேல் நடவீர் நடவீர் இனியே!
                                                           – கந்தரனுபூதி – கவி எண் 17
                என் நூலை சாதாரணமாக நினைத்துவிடாதே. கடவுளால் பெற்ற கல்வி, கடவுளால் பெற்ற அறிவு, கடவுளால் பெற்ற அனுபவம், கடவுளால் பெற்ற ஆசி, கடவுளால் பெற்ற வரம், கடவுளால் பெற்ற ஆற்றல், ஆசான் ஞானபண்டிதனால் பெற்ற அறிவு இது.
     ஆசான் ஞானபண்டிதன் அறிவைத் தந்தான், கல்வியைத் தந்தான், ஆற்றலைத் தந்தான், மரணத்தை வெல்லும் ஆற்றலைத் தந்தான். எமன் என்னைக் கண்டு நடுநடுங்கும்படி செய்திருக்கிறான். ஆகவே என் நூல், ஆசான் அருணகிரிநாதர் நூல், ஆசான் ஞானபண்டிதன் ஆச பெற்ற நூல், அருட்புகழ், திருப்புகழ் என்றும், பெருமைக்குரிய அடைமொழிக்குரிய நூல் திருப்புகழ். நீ அதைப் படித்தால் தெரியும்.
        யாமோதிய கல்வியும் எம் மறிவும், தாமே பெற வேலவர் தந்ததனால் – அவன் மீண்டும் என்னை சேர்த்துக் கொண்டான். அவனும் நானும் ஒன்றாகி விட்டோம். கல்வி தந்து, அறிவு தந்து அனுபவத்தை தந்து, மரணத்தை வெல்லுகின்ற வாய்ப்பைத் தந்து, நானும் அவனும் ஒன்றாயிருக்கிறோம்.
     என் நூலைப் படித்தால்,
      தாமேபெறவேலவர் தந்ததனாற்
      பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
      என்பதை உணரலாம். மயக்கத்தை உண்டாக்குகின்ற இயற்கையை நீக்கினான் என்பதை, என்னுடைய நூலை படித்தால் தெரியும், மகான் அருணகிரிநாதராகிய என் நாமத்தைச் சொன்னாலும் என் திருவடியைப் பற்றினாலும் உனக்குத் தெரியும். என்னை யாரோ என்று நினைத்துவிடாதே, ஞானபண்டிதனும் நானும் ஒன்றடா மகனே. ஆசான் திருமூலதேவரும் நானும் ஒன்று. ஆகவே என் திருவடியைப் பற்றிப் பார்.
     மகான் அருணகிரிநாதா என்று சொல்லிப் பார். “அஞ்சேல்” என்று அக்கணமே அருள் செய்வேன். நானும் அவனும் ஒன்றுதான். “தாமே பெற வேலவர் தந்ததனால்” அவனைப் பெறுவதற்காக என்னை வருவித்திருக்கிறான்.
     பூ மேல்மயல் போயர மெய்ப்புணர்வீர் – இந்த பூமியில், உலகத்தில் இருக்கிற மயக்கத்தை தீர்ப்பதற்காக இதை நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். மயக்கத்தை தீர்த்தவன் நான். எந்த இயற்கை எனக்கு பலகீனமான அறிவை தந்ததோ, ஆசான் ஞானபண்டிதன் ஆசியால் அந்த இயற்கையை நான் புரிந்து கொண்டு வென்றவன். ஆகவே நீ உண்மையை தெளிவாப் புரிந்து கொள்.
     திருப்புகழ் ஓர் உன்னதமான நூல். கடின நடைதான். அது என்னவென்று கற்றவர்க்குத் தெரியும். அவர் சொல்வார்.
     காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
      வீட்டிற் புகுதன் மிகவெளிதே
                                                                             -கந்தர் அலங்காரம் கவி எண் 85
                பிரான் பதத்தே கருத்தைப் புகட்டில் – பதம் என்றால் திருவடி. அவன் திருவடியில் உன் கருத்தைச் செலுத்து. கருத்தை புகட்டில் வீட்டில் புகுவது மிக எளிதே – எளிது என்று சொல்லவில்லை, மிக எளிதே என்றார்.
     ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்தாலும் சரி, ஆசான் அருணகிரிநாதனை பூஜை செய்தாலும் சரி, ஆசான் திருமூலதேவரையோ அல்லது ஆசான் அகத்தீசரையோ பூஜை செய்தாலும் சரி, எல்லா பூஜையும்  ஆசான் ஞானபண்டிதனையே சேரும். ஒன்பது கோடி ஞானிகளும் ஒரே தன்மையானவர்கள். ஞானிகள் எல்லாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செம்மையாக செய்திடுவார்கள்.
     ஜெனமத்தை கடைத்தேற்றிக் கொள், ஜெனமத்தைக் கடைத்தேற்றிக் க்கள் என்பர் சொல்வார்கள். எப்படி ஐயா என்று கேட்டால், இதோ ஒன்பது கோடி ஞானிகள் இருக்கிறார்கள், ஆர்கள் திருவடியைப் பூஜித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்பார்கள். மகான் திருமூலதேவர்,
      என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
             எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
      சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
             சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
      இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
             ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
      முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
             முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
                                                                -திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
                மகான் திருமூலதேவர் நாங்களெல்லாம் ஒன்றுதான் என்கிறார்.
      இன்னபேர் இன்னகுறி எண்ணவேண்டாம் – நாங்கள் அத்தனை பெரும் எமனை பலகாரமாய் செய்து வழங்கியவர்கள். மகான் திருமூலதேவரானாலும் சரி, மகான் அருணகிரிநாதராக இருந்தாலும் சரி, அத்தனைபேரும் வாசி வசப்பட்டவர்கள். எமன் எங்களைக் கண்டு நடுங்குவான். முதுமை எங்களைக் கண்டு முனிவு (வெறுப்பு) கொள்ளும். நாங்களே இவ்வுலகத்தைப் படித்திருக்கிறோம். இந்த உலகம் எங்கள் ஆட்சிக்குட்பட்டது. நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம்.
     இதோ எங்கள் வல்லபம் “எழுகடலையும் குடித்து ஏப்பம் விடுவோம்” என்று மகான் பாம்பாட்டிச் சித்தர் சொல்வார். மேலும் “இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்” என்பார்.
      தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்
      துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
      ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்
      ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே.
                                         -மகான் பாம்பாட்டிச்சித்தர் பாடல் – சித்தர் வல்லபம் – கவி எண் 27
                என்று மகான் பாம்பாட்டிச்சித்தர் கூறுகிறார். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. நாம் செய்ய முடியாத ஒன்றை ஞானிகள் செய்வார்கள். ஆகவே என்னைக் கூப்பிட்டுப் பார் என்று ஆசான் திருமூலதேவர் கருணை கொண்டு சொன்னார்.
     “என்னவே நீயழைக்க எனக்கு முன்னே எதிரேறி முன்வருவாள் ஆத்தாள் வாலை” என்றார். ஆத்தாள் என்றால் தாய் என்று அர்த்தம். மகான் திருமூலதேவா என்றால் எல்லாம்வல்ல இயற்கை அன்னை உனக்கு உதவி செய்ய ஆரம்பித்து விடுவாள். இப்போது உனக்கு பந்தபாசத்தை தந்திருக்கிறாள், காம ரூபியாக மோகினியாக இருக்கிறாள்.
     உனக்கு அறியாமை உண்டாக்கித் கொண்டிருக்கிறாள். உலகத்தில் எதுவெல்லாம் அழியக்கூடியதோ, அதை நீ உறுதியாக பற்றுவதற்கு காரணமாக இருக்கிறாள்.
     காண்பது மழிந்துபோகும்; காயமு மழிந்து போகும்
      ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்;
      பொன்மணி நாக நாதர் பொற்பதம் அழியாதென்று
      வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிப்பார் நெஞ்சே.
                                            – மகான் கனபதிதாசர் – நெஞ்செரி விளக்கம் – கவி எண் 3
                எவையெல்லாம் அழிந்து போகுமோ, அதையெல்லாம் நீ உடும்புபிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறாய். இதிலிருந்து விடுபட நீ கூப்பிட்டுப் பார். “என்னவே நீயழைக்க எனக்கு முன்னே எதிரேறி முன்வருவாள் ஆத்தாள் வாலை” என்றார்.
     ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் – இந்த உடம்பு இப்போது உனக்கு நஞ்சாக இருக்கிறது. ஞானிகளுக்கு இந்த உடம்பு அமிழ்தமாகும். அறியாத மக்களுக்கு இதே உடம்பு நரகமாகவும் விஷமாகவும் இருக்கிறது.
     ஆத்தாள் வாலை உனக்கு வஞ்சமாக இருக்கிறாள். அவளே உனக்கு பிள்ளைகளாகவும், மும்மலமாகவும் முதுமையாகவும், பசியாகவும், காமமாகவும் நச்சுத்தன்மையாகவும் இருக்கிறாள். அப்படி உள்ள உனக்கு, தாயாக இருந்து அருள் செய்யக்கூடிய ஆற்றல் எனக்கு உண்டு.
     ஆசானே திருமூலதேவா என்று நீ நினைத்தால் போதும், தாயாக அவளே வந்து இறங்கி அருள் செய்வாள். நச்சுத்தன்மையாக, காம குரோதமாக, மல ஜல சுக்கிலமாக, பல்வேறு காட்சிகளாக, காணச் செய்வதும், பின் பார்வை இழக்கச் செய்வதும் அவள்தான். கண்களாக கண்மணியாக இருந்த பல்வேறு காட்சிகளைத் தருவாள். பிறகு எல்லாவற்றையும் நசிந்து போகச் செய்வாள். அப்படியெல்லாம் நச்சுத் தன்மையாக இருந்த அவளை, உனக்கு தாயாக மாற்றிக் காட்டுகிறேன், என்னை நீ அழைத்துப் பார் என்பார் ஆசான் திருமூலதேவர்.
     எதிரேறி முன்வருவாள் ஆத்தாள் வாலை – என்னை அழைத்துப் பார். உனக்கு உண்மை தெரியும். அவள் உனக்கு நச்சுத்தன்மையாக இருக்கிறாள். பிறகு அவளை தாயாக மாறி அருள் செய்ய தூண்டுகிறேன்.
     இன்னபேர் இன்னகுறி என்றெண்ண வேண்டாம் – சரி நீ என்னை கூப்பிட வேண்டாம். மகான் சட்டமுனிவர் என்று கூப்பிட்டுப் பார், மகான் சண்டிகேசர் ஐயா என்று கூப்பிட்டுப் பார், மகான் கருவூர் முனிவரையோ, மகான் சிவவாக்கியரையோ, மகான் கொங்கன மகரிஷியையோ, மகான் இடைக்காடரையோ, இப்படி யாரை வேண்டுமானாலும் அழைத்துப் பார்.
     நாங்களெல்லாம் ஒரே தன்மையானவர்கள்.அவளை வென்றிருக்கிறோம். அந்த தாயை, வாலைத்தேவியை, எல்லாம்வல்ல இயற்கை அன்னையை வென்றிருக்கிறோம். ஆகவே நீ என்னை அழைத்துப்பார். உனக்கு அருள் செய்ய சொல்லுகிறேன். சூட்சுமம் இதை உனக்காகச் சொன்னோமப்பா. ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்பினால் நான் சொன்ன கருத்தைக் கேட்டுக் கொள். சூட்சுமம் என்றால் ரகசியத்தை சொல்லியிருக்கிறேன்.
     இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம் – மகான் சட்டமுனி என்று நீ கூப்பிட்டாலும் எங்களுக்குத் தெரியும். எனது சீடர்களான மகான் காலங்கிநாதர், மகான் கருவூர்முனிவர், மகான் போகமகாரிஷி, உலகமெல்லாம் போற்றி வணங்கும் மகான் கொங்கணமகரிஷி என இவர்கள் அத்தனை பேரும் என் சீடர்கள்தான். இவர்களை அழைத்தாலும் எங்களுக்குத்  தெரியும். நாம் சொல்லுகின்ற கருத்துகளுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான சான்றுகளை பல நூல்களிலிருந்து காட்டலாம். நாங்கள் சொல்லுகின்ற கருத்துதான் உண்மை. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
     நம்முடைய இந்தக் கூட்டம், ஞானக்கூட்டம். பிற சடங்குகளில் ஈடுபட மாட்டோம். ஜென்மத்தைக் கடைத்தேற்ற ஆசான் திருமூலதேவரையோ, ஆசான் அகத்தீசரையோ, மகான் போகமகரிஷியையோ, மகான் காலங்கி முனிவரையோ, ஆசான் கருவூர்முனிவரையோ பூஜை செய்வோம், இதை நாம் மட்டும் சொல்லவில்லை. எல்லா ஞானிகளும் சொல்லியிருக்கிறார்கள்.
    
     நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
      சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
      தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங்
      கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.
                                                                          -திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2667
லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகின்றேன் ஆத்தாளே நந்தி திருமூலரையும்
லபிக்கக்காலங்கியையும் ஆத்தாளே நாதாந்த போகரையும்
சத்தி சிதம்பரமும் ஆத்தாளே  சட்ட முனி பூசை செய்வாய்
உத்தம கொங்கணரை உசிதமாய் பூசை செய்வாய்
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழி தெரிந்தோர்
ஒரு நெறியாய் இவர்களையும்  ஆத்தாளே உண்மையுடன் பூசை செய்தால்
சண்டாளன் ஆனாலும்  ஆத்தாளே தான் வேதை காண்பானே
கண்ட சேதி சொன்னேன் ஆத்தாளே  
                                        மகான் அழுக்கண்ணர்
        ஏ பிள்ளைகளே! பிழைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அத்தனை பேரும் பூரணத்தை அறிந்தவர்கள். நீங்கள் எல்லாம் அரைகுறையாக முழுமையில்லாததை அறிந்தவர்கள். அவர்கள் பூரணத்தை, முழுமையானதை அறிந்தவர்கள்.
     பூரணம் என்றால் நமக்கு பூரண கொழுக்கட்டைதான் தெரியும். உள்ளே பாசிப்பயறு, வெள்ளம், எள், ஏலக்காய் போட்டு உள்ளே வைத்து மேலே மூடியிருப்பார்கள். மேலே மூடி வைத்து அடுப்பில் வேகவைப்பார்கள். கொழுக்கட்டையின் உள்ளே இனிப்பாக இருக்கும். உள்ளே இருந்தால் பூரணம் என்று பெயர். நாங்களும் சாப்பிட்டிருக்கிறோம். நீங்களும் சாப்பிடலாம். ஒன்றும் குற்றமில்லை. கொழுக்கட்டை பூரனத்தைத்தான் நாம் அறிந்திருப்போம். சாப்பிட்டிருக்கிறோம்.
     ஞானிகளிடம் பூரணம் எதுவென்று கேட்டால், புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்று வெளியே வராது. அதுதான் பூரணம் என்பார்கள்.
     தலைவன்தான் இதை செய்ய வேண்டும், ஒன்று கிடக்க ஒன்று செய்ய முடியாது.
     லபிக்கவழி சொல்லுகின்றேன்
      ஆத்தாளே நந்திதிருமூலரையும்
      “காப்பான கருவூரார் போகநாதர்” எதற்காக இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் என்றால், உலக மக்கள் உய்யும் பொருட்டு சொல்லியிருக்கிறோம், புரிந்து கொள்ளுங்கள்.
     சாவதற்கே பிறந்திருக்கிறான்  மனிதன். வாழ பிறக்க வேண்டியவன், சாக பிறந்திருக்கிறான். நாங்கள் எல்லாம் வாழக் கற்றுக்கொண்டு உள்ளோம்.   மகான் இராமலிங்க சுவாமிகள்,
     இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
            இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
      மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
            மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
      சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
            சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
      பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
            பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே
                                                                                -திருஅருட்பா ஆறாம் திருமுறை – கவி எண் – 1554
     என்றார் மகான் இராமலிங்கசுவாமிகள். செத்தவனை எடுக்கும்போது போராடுகிறீர்கள். நீங்கள் ஏன் வாழ்வதைப்பற்றி அறியவில்லை என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள். ஆசான் இராமலிங்கசுவாமிகள் வசிவசப்பட்டவர்.
      “வாசி நடத்தித் தருவாண்டி ஒரு வாசியில் இங்கே வருவாண்டி” என்பார். இவர்கள் அத்தனைபேரும் பூரணத்தை அறிந்தவர்கள். நாம் அத்தனைபேரும் பூரண கொழுக்கட்டையை அறிந்திருக்கிறோம்.
     “தேவர்பிரானைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார்”
     எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் தலைவனை அறிந்து கொண்டோம், புரிந்து கொண்டோம், திருவடியைப் பற்றி கொண்டோம். கேட்கின்ற வரத்தை எல்லாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகவே நாங்கள் சொல்கிறோம் உங்களுக்கும் வாய்ப்பு இருக்கு. ஞானிகளை பூஜை செய்யுங்கள் ஆசி பெறுங்கள்.
     இதை நான் மட்டும் சொல்லவில்லை. மகான் அழுகணிச்சித்தர் “லபிக்கவழி சொல்லுகின்றேன் ஆத்தாளே நந்தி திருமூலரையும்” என்பார். அடுத்து மகான் ரோமரிஷி,
      காப்பான கருவூரார் போகநாதர்
      கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
      மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
      முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
      கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
      கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
      வாப்பன வாதத்திற்கு ஆதியான
      வாசமுனி கமலமுனி காப்புத் தானே.
                                                -ரோமரிஷி பூஜாவிதி 7ல் கவி எண் 2
இதெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வதற்காக சொல்லி இருக்கிறோம், உலகமக்கள் யாராவது எங்களை அழைப்பார்களா என்று ஆசான் சுப்ரமணியரும் அவர்வழி வந்த ஞானிகள் அனைவரும் ஏங்குவார்கள்.
     ஆசான் சுப்ரமணியர்தான் நம்மையும் ஆசான் அகத்தீசரையும், மற்ற ஞானிகளையும் உருவாக்கி இருக்கிறார். உலக மக்கள், சடங்குகளை விட்டுவிட்டு ஞானிகளை கூப்பிட வேண்டும். கோபுரத்தில் தண்ணீர் விடுவதைப் பார்த்து உனக்கு என்ன ஆகிறது? கும்பாபிஷேகத்தைப் பார்த்து நீ என்ன செய்வாய்? நூறு கும்பாபிஷேகம் பார்ப்பது எதற்காகவும்? ஒன்றுக்கும் ஆகாது.
     ஆனால் எரிகிற கும்பிக்கு (வயிற்றுக்கு) உணவு தரவேண்டும். கும்பியாகிய (கும்பம்) வயிற்றுக்கு அபிஷேகம்தான் (உணவு தருவதால்) கும்பாபிஷேகம். பசிக்கு உணவு தருவதே உண்மையான கும்பாபிஷேகம். நாங்களும் மகான் போகமகாரிஷியிடம் போகிறோம். பழனிக்கு சென்று வருவோம். திருப்பரங்குன்றம் சென்று வருவோம். சுவாமிமலைக்கு சென்று வருவோம். அது நியாயம்.
     மகான் ஔவையார் ஆலயம் தொழுவது சாலவும் (மிகவும்) நன்று என்றார். ஆலயம் தொழுவது அவசியம்தான். அதை குறை சொல்லவில்லை. ஆனால் அன்னதானம் போன்ற புண்ணிய காரியங்கள் தர்மங்கள் செய்யாமல், அதிலேயே நின்று விடக்கூடாது என்கிறோம்.
     ஆசான் அருணகிரிநாதரையோ, ஆசான் திருமூலதேவரையோ பூஜை செய், பசியாற்று, ஏழை எளிய மக்களுக்கு பசியாற்று. ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு பயன்படுகின்றவனாக வாழ். மற்றவர்களை கசக்கி பிழிந்து வாழாதே.
      பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
      வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
                                                                                -திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண்  44
                பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சி சேர்க்க வேண்டுமென்று ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்கிறார். பொருள் ஈட்டும்போது பாவி என்று பெயர் எடுக்காதே என்றார்.
     பழிக்கு அஞ்சி சேர்த்து வைத்த பொருளை பகுத்துண்டு வாழ்வதற்கு பயிற்சி வேண்டுமென்றார். அப்படி உள்ள வழியை நமக்கு மகான் திருவள்ளுவர் சொன்னார். பொருள் ஈட்டும் போது பழிக்கு அஞ்சியும், ஈட்டிய பொருளை பகுத்துண்டு வாழுகின்ற பண்பும் ஒருவனுக்கு இருக்குமேயானால், அவனது வாழ்க்கையில் என்ன குறை? என்று கேட்டார்.
     ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்கள் தினமும் காலை, மாலை “ஓம் அகத்தீசாய நம” என்று ஐந்து நிமிடம் நாமத்தை சொல்லிவர வேண்டும். அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கு நீர் அருள்செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை, ஆசான் இராமளிங்கசுவமிகளை, மகான் மாணிக்கவாசகரை, மகான் பட்டினத்தாரை, மகான் தாயுமான சுவாமிகளை மனமுருகி கேற்க வேண்டும். இவர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையானவர்கள். ஆக பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஐந்து நிமிடம் நாமத்தைச் சொல்லுங்கள். ஞானிகளை வணங்குங்கள், ஆசி பெற்றுக் கொள்ளுங்கள். இல்லறத்தைச் செம்மையாக நடத்திக் கொள்ளுங்கள். பேராசைக்காரன், கொடும்பாவி என்று பெயரெடுக்காதீர்கள். ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
                 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்கும் துய்தல் அரிது
                        -திருக்குறள் – ஊழ் – குறள் எண்   377
                பல கோடிக்கணக்கான பொருளை சேர்த்து நீ என்ன செய்வாய்? அதை சேர்க்கும் பொருட்டு நெறிதவரியதால் உண்டான பாவத்தை என்ன செய்வது? அந்த பாவத்தை நீதான் சாப்பிட வேண்டுமில்லையா? ஆக பாவி என்று பெயரெடுக்காதே என்றார் மகான் திருவள்ளுவப்பெருமான்.
     நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்கக் கடுக்கொள்ள வேண்டும். இதற்கு தலைவன் ஆசியிருக்க வேண்டும். அடியேன் நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
     பொருளாதாரம்தான் ஒருவனை விரைவில் நரகத்தில் தள்ளும். ஏதோ ஒருவகையில் மிகுதியாக காமதேகம் பெற்றவர்கள், தவறு செய்வார்கள். அதிலும் வினை சூழும். அதிலிருந்து தப்பிக்க வேண்டும். அடுத்து புலால் உணவை மறுக்க வேண்டும். புலால் உணவை மறுப்பது மிகமிக சாலச்சிறந்தது, ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு இந்தக் கருத்து மிகவும் இன்றியமையாததாகும்.
     புலால் மறுத்தல் பொய் சொல்லாதிருத்தல், மற்றவர்களிடம் பாவிஎன்று பெயரெடுக்காதிருத்தல், தினமும் காலை, மாலை தியானம் செய்தல், மனைவி மக்களிடம் அன்பு காட்டுதல், பொருள் வெறி இல்லாதிருத்தல், விருந்தை உபசரித்தல், தாய் தந்தையிடம் அன்பு காட்டுதல். மூடப்பழக்கங்களுக்கு ஆட்படாது இருத்தல். உலக மக்களிடம் போராடாது எவனோ எப்படியோ போகிறான் என்று இருத்தல் போன்ற பண்புகள் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு துணையாக இருக்கும்.
     ஆசான் சுப்பிரமணியர், உலக மக்களோடு போராடாதே, குறை சொல்லாதே. கேட்டல் சொல். கேட்டால் பாதை தெரியுமென்று சொல், இல்லையென்றால் நீ போய்க்கொண்டு இரு என்று சொல்லிவிட வேண்டுமென்பார். அதாவது கருத்தை உலக மக்களிடம் திணிக்காதே, விரும்பி கேட்டால் சொல்ல வேண்டுமென்பார்.
     இப்படியெல்லாம் பெரியவர்கள் எழுதியும், சொல்லியும் வைத்திருக்கிறார்கள். ஓம் அகத்தீசா என்று சொல், அகத்தீசா என்றால் உடனே வருகிறார். “என் மகனே” என்று கேட்டார். “உலகம் உய்யும் பொருட்டு என்னை நீ அனுப்பியிருக்கிறாய். என் கருத்தை நான் சொகிறேன். இங்கு குடிலில் மட்டும்தான் பேசுகிறேன், பசியாற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். பூசணிக்காய் உடைக்காதே, சிதறுகாய் உடைக்காதே, அழகு குத்திக் கொள்ளாதே, அங்கம் புரளாதே. இதையெல்லாம் செய்வது ரொம்ப இலகுவாக இருக்கும். ஆனால் இவைகள் ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை புரியுமா? புரியாது.
     அப்படி செய்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம், பூரணத்தை அடையலாம், மோனநிலை அல்லது ஞானநிலை அடையலாம், மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம், செல்வத்தைப் பெருக்கலாம். அச்சமில்லா வாழ்வைப் பெறலாம் எட்ன்ர வாய்ப்பு இருக்குமானால் நாங்களும் மொட்டையடித்துக் கொள்கிறோம் என்போம்.
     ஒரு மனிதன் தன குடும்பி நல்லபடியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?      ஒரு மனிதன் கடவுள் ஆவதற்கு மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். தயிர் சாதம், புளி சாதம் கொடுக்கலாம். இல்லையென்றால் ஆளுக்கு ஐந்து இட்லி வைத்து, பொட்டலாம் போட்டு எங்காவது உள்ள ஏழை எளியவர்களுக்கு கொடு.
    
     தினம் தியானம் செய். ஆசான் அகத்தீசரை தினம்தினம் பூஜை செய்தும் மாதம் இருவருக்கு அன்னதானம் செய்தும், தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரை அன்போடு உபசரித்தல் போன்ற பண்புகளை கடைப்பிடித்தாலே செல்வம் பெருகும். விருதை உபசரித்தாலே செல்வம் பெருகுமேன்றார். அவ்வளவு பெரிய வாய்ப்பிருக்கிறது. விருந்தை உபசரிப்பதால் வறுமையில்லா வாழ்வு உண்டாகும்.
           வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
            மிச்சில் மிசைவான் புலம்?
                                                -திருக்குறள் – விருந்தோம்பல் – குறள் எண் –  85
                விருந்தை உபசரிப்பதனால் பல நன்மைகள் உண்டாகும். புண்ணியவான் வாழட்டும், நாம் போகும் போதெல்லாம் அந்த புண்ணியவதி அன்போடு வரவேற்று இருக்கக்கூடிய உணவை நமக்கு தந்தாள். அந்த குடும்பம் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துவானாம் பயனடைன்தவன். அவனுடைய வாழ்த்துதலே இவனுடைய வறுமையை போக்கும். எல்லா நன்மைகளையும் முன்னேற இப்படி பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதவர்க்கம் முன்னேற இப்படி பேசியிருக்கிறேன், சுத்த ஆன்மீகத்தை பேசியிருக்கிறேன்.
     நமது அன்பர்களாவதுதெளிவடைந்து தினம்தினம் ஞானிகளை வணங்கி, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். நச்சுத்தன்மையுள்ள இந்த உடம்பை நீக்கி ஞான உடம்பு பெறவேண்டும், பானஉடம்பு பெற வேண்டும், சோம உடம்பு பெற வேண்டும், சோமபானம் உண்ண வேண்டும், வாமபானம் உண்ண வேண்டும், ஞானபானம் உண்ண வேண்டும். நீங்களெல்லாம் இந்த வாய்ப்பைப் பெற வேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
     முப்பாலில் நாற்பால் மொழிந்த வள்ளுவனை
     தப்பாமல் போற்றிட தானவனாமே.
     அறம் பொருள் இன்பம் வீடுபேறு அறிய
     திறம்பட திருக்குறள் கற்றிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208391
Visit Today : 483
Total Visit : 208391

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories