சான்றோர்கள் தொடர்பு, சன்மார்க்க சங்க அன்பர்கள் தொடர்பு, திருமூலர் மற்றும் ஞானிகள் நூல் படித்தல், அன்னதானம் செய்தல், நாமஜெபம் செய்தல் இதுதான் உபாயம்
“என்னையா பெருங்கடல் என்று சொன்னால் எத்தனை மைல் என்று கேட்டான்“. “நீ எந்த அளவிற்கு திருவடியைப் பிடித்துக் கொண்டு நீந்துகின்றாயோ, அந்த அளவிற்குப் பெறலாம்” என்று சொன்னார். நீந்திதானே போக வேண்டும்? நீந்து என்று தானே சொன்னான். வேறு வழியே இல்லையா! திருவடி துணை கொண்டு நீந்தித்தான் செல்ல வேண்டும். பெருங்கடல் நீந்த வேண்டும். ஓய்வு இல்லாமல், சளைக்காமல், களைக்காமல், ஒரு பக்கம் அன்னதானம், ஒரு பக்கம் திருவடி துணை இப்படியே போக வேண்டும் என்று சொல்லி விட்டான்.
வள்ளுவன் தன்னை அறிந்தவன். வள்ளுவப்பெருமான் அறிந்தவன். உணர்ந்தவன். அதனால்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான்.
இதற்கு நிறையச் சொல்ல வேண்டும். நீந்துதல் என்பதற்கு துணையோடு, விடாது, கை ஓயாமல் நீந்த வேண்டும். கை ஓய்ந்தால் என்ன ஆகும்? முன்னூறு அடி ஆழத்திற்குக் கீழே போய் விடுவான். அதனால் ஓயாமல் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். இது பெரிய வார்த்தை. அப்ப நீந்துகின்றவனுக்குச் சோர்வு வருமே என்றான். சோர்வு வந்தால் உள்ளே போய் விடுவாய் ஐயா! சோர்வடைய நியாயமில்லை. எப்படி? நீந்துதற்கு என்ன கற்க வேண்டும்? என்றான். சான்றோர்கள், பக்தர்கள் இவர்களோடு தொடர்பு கொள். அவன் அடிக்கடி முட்டுக் கொடுப்பான். விடாதே பிடி! விடாதே பிடி! திருமந்திரம் படி! அருட்பா படி! தாயுமானசுவாமிகள் படி! மாணிக்கவாசகனை படி! இப்படி படி படி என்று சொல்வதெல்லாம் நீந்துவதற்குத் துணையாக இருக்கும்.
அதே சமயத்தில் உற்சாகமுள்ள தொண்டர்கள் இருந்தால், சான்றோர்கள் சாது சங்கம், சன்மார்க்கம் என்று சொல்வார்கள். அவர்கள் பத்து பேர் சேர்வான். சேரும்போது, உற்சாகம் வரும் . மறுபடியும் பாடுபடலாம். இப்படியே தளர்ச்சி வரும்போது இப்படியே இருக்கணும். சரி, நாமஜெபம் செய்கிறோம். நாமஜெபம் செய்யும்போது மேலும் உற்சாகம் வருகிறது. மறுபடியும் பத்து கிலோமீட்டர் போகிறோம். இப்படியே போகிறோம். என்னையா, பெருங்கடல் என்றால் எவ்வளவு தூரம்? என்று கேட்டான். வேறு வழியே இல்லை. பெருங்கடல் என்று சொல்லிவிட்டான் வள்ளுவன். சிறு கடல் என்று ஒரு 500 கி.மீ, 600 கி.மீ என்று சொல்லவில்லை ஐயா. பசிபிக் சமுத்திரத்திலேயாவது கரை சேர்ந்து விடலாம் ஐயா. ஆனால் இது என்னையா, வார்த்தை? பெருங்கடல் என்று ஏனையா சொன்னீர்? என்றால், எந்த அளவிற்கு நீ முயற்சிக்கின்றாயோ, அந்த அளவிற்கு நீ விரைவாகப் போகலாம். இல்லையென்றால் அது உனக்கு புரியவே புரியாது.
பெருங்கடல் என்ற வார்த்தையைப் பயன் படுத்திவிட்டான். ஆக, சான்றோர்கள் தொடர்பு, சன்மார்க்க சங்க அன்பர்கள் தொடர்பு, திருமூலர் மற்றும் ஞானிகள் நூல் படித்தல், அன்னதானம் செய்தல், நாமஜெபம் செய்தல் இதுதான் உபாயம். நீந்திக் கொண்டே போய்க் கொண்டிருக்கலாம். சோர்வு இல்லாமல் போய்க்கொண்டிருக்கலாம். ஒன்று அன்னதானம் மாதம் இரண்டு பேருக்குச் செய்ய வேண்டும். அது உனக்கு உற்சாகமாக துணையாக இருக்கும். அல்லது நாமஜெபம் செய்கிறோம். அது உற்சாகமாக இருக்கும். நூல்களைப் படித்தோம். அது உற்சாகமாக இருக்கும். ஆக நீச்சல் அடிப்பதை நிறுத்தி விட்டால் உள்ளே போய் விடுவோம் என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான் வள்ளுவப் பெருமான்.