31.05.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 2) என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம
அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்!
     அன்பர்கள் கோளறு பதிகத்தை பாராயணம் செய்தார்கள். நாமும் பாராயணம் செய்தோம். ஞானிகளிலேயே ஆசான் திருஞானசம்பந்தர் மிகப்பெரிய வல்லமை உள்ள ஆசான், மிகப்பெரிய தவசி. அத்தகைய மகான் அருளிய பாராயண நூலை நாம் கேட்பதே புண்ணியம். அவர் புண்ணியவான். மகான் திருஞானசம்பந்தர் புண்ணியவான்.
     புண்ணியம் செய்யாமல் ஒருவன் உண்மையை அறிய முடியாது. பாவம் செய்துவிட்டு யாரும் உண்மையை அறியமுடியாது. புண்ணியம் செய்துதான் உண்மையை அறிய முடியும். புண்ணியமும் பூஜையும் செய்தவர்கள் ஞானிகள். அதில் முதன்மையானவர் மகான் திருஞானசம்பந்தர். அவர் உலக இயற்கையை பிரித்துப் பேசுகின்றார். பெண்மையும் ஆண்மையுமாக உள்ளது உலகம் என்கிறார் ஆசான் வள்ளுவப்பெருமான்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 1
என்பார். ஆதி என்று சொல்லப்பட்ட பெண்மையும், பகவன் என்று சொல்லப்பட்ட ஆண்பாலும் சேர்ந்ததுதான் இந்த உலகம். மகான் திருஞானசம்பந்தரும் அதைத்தான் சொல்வார். எல்லாமே இரண்டு இரண்டாக உள்ளது.
இதை ஆசான் வள்ளுவப்பெருமான், இருமை வகைதெரிந்து என்பார். ஆக இரவாகவும், பகலாகவும் உலகம் இருக்கும். இரவாகவே இருந்தால் உயிர்கள் நடமாட முடியாது. எங்கும் குளிர் இருக்கும்.
பிராணனுக்கு தேவையான வெப்பம் இல்லாமல் பிராணன் போய்விடும். பகலாகவே இருந்தாலும் எல்லா உயிரும் போய்விடும். பகலாகவே இருந்தாலும் ஆபத்துதான், இரவாகவே இருந்தாலும் ஆபத்துதான்.
ஆக இந்த உடம்பில் குளிர்ச்சியும், வெப்பமும் சமமாக இருக்கவேண்டும். இந்த உண்மையை குளிர்ச்சியை சக்தி என்றும், வெப்பத்தை சிவம் என்றும் சொல்வது ஞானிகள் வழக்கம்.
அதே சமயத்தில் நமது உடம்பில் இடது பக்கம் வருகின்ற காற்றிற்கு சக்தி என்றும், அதுவே சந்திரகலை என்றும், வலது பக்கம் வருகின்ற காற்றிற்கு சூரியகலை அல்லது சிவம் என்றும் இதை சிவசக்தி என்று சொல்வார்கள்.
ஆக நமது உடம்பில் பாதி பெண்மையின் கூறு. இதை அர்த்தநாரி என்பார்கள். பெண்மையும் ஆண்மையும் சேர்ந்ததே இந்த உடம்பு. இதே மாதிரி பெண் உடம்பும், பெண்மையும் ஆண்மையும் சேர்ந்தேதான் இருக்கும் தனித்து இருக்க முடியாது.
ஆக இரண்டு இரண்டாக சேர்ந்து இருக்கவேண்டும். நரகமும் சொர்க்கமும் இருப்பதுபோல, இரண்டாகத்தான் இருக்கும்.
ஆக ஞானத்துறையும் இப்படித்தான் இரண்டு இரண்டாக இருக்கிறது. தூல உடம்பு, சூட்சும உடம்பு, புற உடம்பு, அக உடம்பு என்பார்கள். அந்த இரண்டை சிவத்தின் கூறாகவும், சக்தியின் கூறாகவும் பேசுவார்கள்.
சக்தி, சிவம் அல்லது வெப்பம், குளிர்ச்சி அல்லது ஆண், பெண் அல்லது நரகம் சுவர்க்கம் அல்லது தூலம் சூட்சுமம் அல்லது இரவு பகல் என்று இரண்டு இரண்டாக உள்ளதை மகான் திருஞானசம்பந்தர் தம்முடைய நூலில்
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
·         கோளறு பதிகம் – கவி எண் 3
ஞானிகளின் உடம்பு, சிவபெருமானின் உடம்பைப்போல் பவளம் போன்று செந்நிறமாக சிவந்த உடம்பாக இருக்கும். அந்த சிவந்த நிறத்தை உருவளர் பவளமேனி என்று சொன்னார். ஞானிகள் என்ன செய்தார்கள்? அமிழ்த பானம் உண்ண உண்ண உடம்பு நிறம் மாறிக்கொண்டே இருக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்று சொல்வதற்கு இணங்க அப்படியே நிறம் மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கும். கடைசி நேரத்தில் அந்தி செவ்வானம் போன்று எல்லா ஞானிகளும் இருப்பார்கள்.
ஆசான் திருஞானசம்பந்தர், உருவளர் பவளமேனி – சிவபெருமானுடைய மேனி அழகு மிகுகின்ற அல்லது அழகு மென்மேலும் உடைய, மென்மேலும் அழகுண்டாகும், அப்படிப்பட்ட பவளம் போன்ற மேனி உடையவன் என்றார்.
எல்லா ஞானிகளும் அப்படித்தான் இருப்பார்கள். எந்த ஞானியை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் இளம் சூரியன் போன்று இருப்பார்கள். ஞானியர்கள் அத்தனைபேரும் சிவத்தின் கூறுதான். என்ன காரணம்? நமக்கு ஏன் அப்படி வரவில்லை?
அவர்கள் தவம் செய்தார்கள். பிராணயாமம் செய்தார்கள். உடம்பில் ஒரு கணக்கான வெப்பத்தை (வாத, பித்த, சிலேத்துமம்) கணக்கான வெப்பத்தை சமப்படுத்தி வைத்தார்கள், வேதியியல் செய்தார்கள். குளிர்ச்சிக்கும் வெப்பத்திற்கும் ஒரு வேதியியல் செய்தார்கள்.
அந்த வேதியியல் எப்படி என்றால் வீட்டில் உப்பு, புளி, மிளகாய் சேர்த்து ஒரு வேதியியல் செய்தால் அது சாம்பாராகும். இங்கே நமது உடம்பில் குளிர்ச்சியும் வெப்பமும் இருக்கும். நமது தேகத்தில் 98.4 டிகிரி வெப்பம் இருக்கும்.
இதை ஞானிகள் என்ன செய்கிறார்கள். குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சேர்த்து ஒரு வேதியியல் செய்வார்கள். அப்படி வேதியியல் செய்யும்போது இந்த உடம்பிலிருக்கும் கசடுகள் நீங்கும். அந்த கசடுகள் நீங்க நீங்க தேகம் மாறும். வினாடிக்கு வினாடி நிறம் மாற்றம் அடைந்து கொண்டே வரும். நிறம் மாற்றமடைந்து கடைசியில் அந்தி செவ்வானம் போன்று சிவந்த நிறத்தில் என்றும் இருப்பார்கள்.
சுத்த செம்பு (தாமிர உலோகம்) பளிச்சென்று இருக்கும். அதுபோன்ற உடம்பு ஈசனுக்கு இருக்கிறது என்றார். அப்படி என்றால் ஆசான் திருஞானசம்பந்தருக்கு இல்லையோ? அவருக்கும் இருக்கிறது. எல்லா ஞானிகளுக்கும் இருக்கிறது.
     ஆசான் திருஞானசம்பந்தருக்கும், மகான் மாணிக்கவாசகருக்கும் அந்த உடம்பு உண்டு. காரணம் பக்தியா? பயிற்சியா? புண்ணியத்தால் சான்றோர் தொடர்பால் அந்த மாற்றத்தை அடைவார்கள்.
     ஞானிகள் செய்யக்கூடிய வேதியியல் பாலை காய்ச்சுவது போல் இருக்கும். பால் காயவைக்கின்ற பெண்களுக்கு கவனம் முழுவதும் பாலை காயச்சுவதிலேயே இருக்கும்.  கொஞ்சம் ஏமாந்தால் பால் பொங்கி ஊற்றிவிடும்.
     அனலும் சரியாக இருக்கவேண்டும், மிகுதியாக அனல் இருக்கும்போது பொங்கி ஊற்றிவிடும். ஆக பால் காய்ச்சுவது போன்ற ஒரு வேதியியலை ஞானிகள் செய்கின்றார்கள். அந்த அறிவை தலைவன் கொடுக்கவேண்டும். இது ஒரு விஞ்ஞானம்.
     இந்த துறையே ஒரு விஞ்ஞானம். ஆனால் இதில் மெய்ஞானம் இருக்கும். அந்த வேதியியல் செய்ததால்தான் இந்த மாற்றம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வேதியியல் நமக்கு தெரியாது. திருவருள் துணை இல்லாமல் அந்த வேதியியலை செய்யமுடியாது. இதற்கு திருவருள் துணை வேண்டும்.
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து – தலைவனுடைய தோற்றம் அழகு மிக்கதாக, பவளம் போன்ற செந்நிறமான உடம்பாக இருக்கிறது. பவளம் செந்நிறமாக இருக்கும்.
ஒளிநீ றணிந்து – அவன் தேகமே பவளம் போன்று செந்நிறமாக இருக்கின்றது, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அது வளரக்கூடிய அழகு. மென்மேலும் மிகும். அழகு மிகும். அப்படிப்பட்ட மேனியில் திருநீறணிந்தவன்,ஒளிநீ றணிந்து – பிரகாசமான திருநீற்றை பூசியவன், உடம்பெல்லாம் பூசியவன்.
      உமையோடும் வெள்ளை விடைமேல் – உமை என்றால் சக்தி. நமக்கும் உடம்பில் சக்தி இல்லாமல் இல்லை. இரண்டும் சேர்ந்ததுதான் நமது உடம்பில் இருக்கும். பெண்மை எப்படி இருக்கிறது? அவள் நம்மை நரகத்திற்குள் தள்ளப்போகிறாள், தள்ளிக்கொண்டே இருப்பாள்.
     காம உணர்ச்சியை உண்டு பண்ணுவாள், பெண்ணுறவை தருவாள். மேலும் மேலும் மேலும் பெண்ணுறவை பெறச்செய்வாள். கடைசியில் கொண்டுபோய் சுடுகாட்டில் போட்டுவிட்டு போய்விடுவாள். அதுதான் அவள் வேலை. அவளை மோகினி என்றும் காமாந்தகாரி என்றும் அழைப்பார்கள். அவ்வளவு மோசமான வேலையை செய்வாள். என்ன காரணம்? வேதியியல் செய்யவில்லை அல்லது பக்தி செலுத்தவில்லை.
     மூலக்கனல் கொண்டு எழுப்ப எழுப்ப அந்த விகாரமான கொடுமைக்காரி, மோகினி தாயாக மாறுவாள். அவள் மோகினியாக இருந்து நமக்கு தீமையே செய்வாள். ஏனம்மா உனக்கு இந்த புத்தி? நீ என்றைக்கு என்னை உணர்கிறாயோ, அன்று உனக்கு நான் தாயாக மாறுவேன் என்றாள்.
     நான் எப்படி அம்மா உணர்வது என்றான். என்னை உணர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், ஆசான் திருஞானசம்பந்தர், ஆசான் திருநாவுக்கரசர் இவர்களின் திருவடியைப்பற்றி, திருவடி பூஜை செய்ததால், நான் உனக்கு கொடுமை செய்யமாட்டேன் என்பாள்.
     உன் உடம்பில் காமமாக இருப்பதும் நான்தான், அறியாமையும் நான்தான், முன்கோபமாக இருப்பதும் நான்தான், உன்னை நரகத்திற்குள் தள்ளுவதும் நான்தான், மும்மலமாக இருப்பதும் நான்தான், அங்கே பெண்ணாக இருப்பதும் நான்தான், ஆணாக இருப்பதும் நான்தான், எல்லா உயிராக இருப்பதும் நான்தான்.
     என்னை புரிந்து கொள்வதற்கு உன்னிடமுள்ள அறிவு போதாது. என்னை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஆசான் திருஞானசம்பந்தரை பூஜை செய். ஆசான் திருஞானசம்பதரை பூஜை செய்தால், என்னை பற்றி புரிந்து கொள்வாய். அதே சமயத்தில் என்னுடைய கருணையும், அதற்கு முன் நான் செய்த கொடுமையும் உனக்கு தெரியும்.
     நான் கருணை உள்ளவன் என்பதை புரிந்து கொண்டால், நான் கருணை உள்ளவன்தான். இப்போது இந்த உடம்பைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். எந்த பெண்ணையும் பற்றி பேசவில்லை. என்னை புரிந்து கொண்டால், நான் உனக்கு தாயாக இருப்பேன். என்னை புரிந்து கொள்ளாவிட்டால் நானே உனக்கு பேயாக இருப்பேன் என்றாள்.
     நானே தாய், நானே பேய் அப்பொழுது இதை அறிவதற்கு என்ன உபாயம்?
     உபாயம் பக்திதான்.
     நான் உன்னோடு நேராக பேசமுடியுமா?
     முடியாது.
     நான்தான் உன்னோடு கலந்திருக்கிறேனே. உடம்பாகவும் உயிராகவும் இருக்கின்றேன். ஆக அவள் ஆசி, பெரியவர்கள் ஆசி தலைவனை உருவாக்கி இருக்கிறது. ஆதிதலைவன் ஆசான் சுப்ரமணியரை உருவாக்கி இருக்கிறேன். நான் அருள் செய்கின்றேன் என்னை புரிந்து கொள்.
                நான் காமத்தை உண்டு பண்ணுபவள், அறியாமையை உண்டு பண்ணுபவள், நரகத்தில் தள்ளுபவள். அப்படிப்பட்டவள் உனக்கு அருள் செய்கிறேன். புண்ணியம் செய்திருக்கின்றாய் எனவே உனக்கு அருள் செய்கின்றேன்.
     நீ என்னை புரிந்து கொள்! என்று தாயே மனமிரங்கி அருள் செய்திருக்கின்றாள். அப்படி செய்ததனால்தான் இன்று சித்தர்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள். இல்லை என்றால் சித்தர்கள் வந்திருக்க முடியாது.
     நாம் என்ன செய்யவேண்டும்?
     பெரியோர்களிடம் பக்தி செலுத்த வேண்டும்.
     அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, காரணம் பெண்மைக்குள்ளேயே ஆண்மை இருக்கும். ஆணுள் பெண்ணும், பெண்ணுள் ஆணும் இருக்கும். யாரும் அதை ஒன்றும் செய்யமுடியாது. எப்போது பார்த்தாலும் அந்த சிந்தனை இருக்கத்தான் செய்யும்.
     ஆக ஆசான் திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார்?
     ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் – உமை என்பது சக்தி. உமாதேவியாக இருப்பது சான்றோர்களுக்கும், ஞானிகளுக்கும்தான். நமக்கு அவள் எப்படி இருக்கின்றாள்? விகாரமாக இருக்கின்றாள்.
    
     ஆசான் திருஞானசம்பந்தர் இப்பொழுது தலைவனைப் பற்றி பேசுகிறார், அவனுடைய ஆசியைப் பெறவேண்டும். தலைவன் செந்நிறமானவன், பவளம் போன்றவன். அவனை உமாதேவியாக பார்க்கின்றான். எல்லாம்வல்ல சக்தியாக பார்க்கின்றான். இந்த உடம்புக்குள் இருக்கும் அமிழ்தபானத்தை உண்டுபண்ணி என்றும் அழியாத வாழ்வை சக்தி தருவாள்.
     இதே உடம்பில் இருக்கும் இந்த சக்தியை புரிந்து கொள்ளாவிட்டால் மென்மேலும் காமத்தை தந்து, நரை திரையை தந்து, பரிணாம வளர்ச்சிக்கு உட்படச்செய்து, பார்க்க அருவருப்பான தோற்றத்தை தருவாள்.
     என்ன ஆச்சரியம்! முதுமையாக இருக்கும் இவன் இந்த புகைப்படத்தில் அழகான வாலிபனாக காட்சியளிக்கிறான். அங்கே உள்ள அந்த பெண் தேவர்களும் கண்டு மயங்கத்தக்க அளவில் அழகுடையவளாக இருக்கின்றாள். இன்று கை, கால் குறுகி பல் விழுந்து விகாரமாக இருக்கின்றாள். அன்று பார்த்த அன்னவளா இன்னவள்? ஏன் இப்படி? நான்தான் இப்படி செய்திருக்கிறேன் என்பாள் உமாதேவியாகிய சக்தி.
     என்ன வியப்பு? புரிந்து கொண்டால் நான் அருள் செய்வேன். இல்லையென்றால் இப்படித்தான். அன்று கம்பீரமாக இருந்த அப்பேர்ப்பட்ட வாலிபன் இப்போது முதுமை அடைந்து விட்டான். ஆம் அப்படித்தான் நிலைமை.
     ஆக உலக மக்களில் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். புரிந்து கொண்டால்? என்னை புரிந்து கொள்ளவேண்டும். என்னை புரிந்து கொண்டால் அருள் செய்வேன்.
     புரிந்து கொண்டவர்களுக்கு உமாதேவியாக இருக்கின்றேன். பராசக்தியாக இருந்து அமிழ்தபானத்தை ஊட்டும் தாயாக, கருணையே வடிவாக கருணைக்கடலாக இருக்கிறேன்.
     புரிந்து கொள்ளாதவர்களுக்கு விகாரமான கொடுமைக்காரியாக, மோகினியாக இருக்கிறேன். அறியாமையை உண்டு பண்ணி இருக்கின்றேன். ஆக உலகமே என் இயக்கம்தான் என்று சொல்வாள்.
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
     நான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். சிவபெருமான் உமாதேவியோடு காளை வாகனத்தில் வந்தார் என்றார்.
     காளை வாகனம்தானா, ஏன் வேறு வாகனமே இல்லையா?
     மூச்சுக்காற்றிற்கு காளை என்று ஒரு பெயர் உண்டு.
     கட்டாத காளையைக் கட்டவேணும் ஆசை
வெட்ட வேணும் வாசி ஒட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவேணும் காயம்
என்றைக்கி ருக்குமோ வாலைப்பெண்ணே!
·         கொங்கணர் வாலைக்கும்மி – கவி எண் 42
இந்த மூச்சுக்காற்றிற்கு காளை என்றும், குதிரை என்றும், பறவை என்றும், கருஞ்சாரை, வெஞ்சாரை (பாம்பு) என்றும் பெயருண்டு. ஆக சிவபெருமான் காளை வாகனத்தில் வந்தார், என்றார் மகான் திருஞானசம்பந்தர்.
ஆக எல்லாம்வல்ல சிவபெருமான் உமாதேவியோடு காளை வாகனத்தில் வந்து என் உள்ளத்தில் புகுந்து கொண்டார் என்பார் மகான் திருஞானசம்பந்தர்.
மகான் திருஞானசம்பந்தர் தலைவனை பூஜை செய்தார். எல்லாம் வல்ல இயற்கை என்கிற சக்தியைப் பற்றி பேசுவதாகும். அங்கே சிவபெருமானுக்கும் சக்திக்கும் வேலையில்லை.
சிவபெருமான் என்பது பரப்பிரம்மம். அவன் பிள்ளைக்குட்டியை வைத்துக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டான். கொஞ்சிக்கொண்டிருந்தால் சுடுகாட்டிற்குத்தான் போகவேண்டும். அவன் வெற்றிகரமாக முடித்தவன். வெற்றி வெற்றி வெற்றி என்றான். வெற்றிகண்டவர்கள், எமனை வென்றவர்கள்.
வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து – மறுபடியும் சிவபெருமானை சொல்கிறார். எண்சீர் வரவேண்டுமல்லவா? சிவபெருமானை பார்த்தாராம் ஆசான் திருஞானசம்பந்தர். தலையில் என்ன? கொன்றை மலர். மற்றொன்று? மூன்றாம் பிறை. மூன்றாம் பிறை சந்திரனையும், கொன்றை மலரையும் தலையில் சூடியிருக்கிறான்.
அங்கே தலையில் சூட்டியது மட்டுமல்லாமல் உமாதேவியோடு காளை வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறான், வந்து என் உள்ளத்தில் புகுந்து கொண்டான்.
கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – என் சிந்தையில் குடிகொண்டுவிட்டான். என்ன காரணம்? புரிந்து கொண்டு பூஜை செய்தார்.
ஆக மகான் திருஞானசம்பந்தர் புரிந்து கொண்டு பூஜை செய்தார். எப்படி பூஜை செய்தார்? சற்குருநாதா, ஞானபன்டிதா, நந்தீசா, அகத்தீசா, திருமூலதேவா, நீங்களெல்லாம் பெரியவர்கள் ஐயா, எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டதால், தலைவனை புரிந்து கொண்டதால், புரிந்து கொண்டு பூஜை செய்ததால், அருள் பெற்றார். இல்லையென்றால், புரிந்து கொள்ளாவிட்டால் முடியுமா? ஆக புரிந்து கொண்டதனால், தலைவன் உள்ளே வந்துவிட்டான்.
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
உள்ளத்தில் புகுந்துவிட்டான். உள்ளத்தில் மட்டுமா புகுந்தான்? உணர்வில் புகுந்தான். நாடி நரம்பில் புகுந்தான். சிந்தையில் புகுந்தான். செய்கையில் புகுந்தான். எல்லாவற்றிலும் புகுந்துவிட்டான். அவன் நம் உள்ளத்தில் புகுந்தால் மீண்டும் வரவே முடியாது.
புகுந்த அதனால் – அவனாக வந்து புகுந்துவிட்டான். நான் அழைக்கவில்லை, நான் பூஜை செய்தேன். அவன் புகுந்துவிட்டான். புகுந்துவிட்டால் மீண்டும் வெளியே வரமாட்டான். இதயத்தில் தங்கிவிட்டான், புகுந்துவிட்டான்.
ஆக பெரியோர்களை பூஜை செய்துதான் இந்த வாய்ப்பை பெற்றிருக்கின்றார்கள். எல்லாம் வல்ல பரம்பொருள், ஞானிகள், சிந்தையில் தங்கிவிட்டால் என்ன நன்மை ஏற்படும்?
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
ஒரு மனிதனுக்கு பெரிய வாய்ப்புகள் உள்ளது. இந்தக் கருத்துக்கள் அதற்கு துணை செய்யும். திருமகள் செல்வத்திற்கு அதிபதி. இலட்சுமி, திருமகள் எல்லாம் ஒருவரே.
கலைய தூர்தி – கலைமகள் அல்லது சரஸ்வதி. கல்விக்கு அதிபதி. ஆக எல்லாம் பெண்பாலாக இருக்கும்.
சயமாது பூமி – அற்புதமான கருத்துக்கள். ஒரு ஆற்றல் உள்ளவன், ஞானிகளுடைய பெரியோர்களுடைய ஆசி பெற்றால் என்ன ஏற்படும்? திருமகள் வாசலிலே வந்து, கேட்டதெல்லாம் தருவாள். எதைக்கேட்டாலும் தருவாள்.
அவள் என்ன செய்வாள்? இரண்டு போரையும் வாசலிலே நிறுத்திவிடுவாள். சங்கநிதி, பத்மநிதி ஆகிய இருவரையும் வாசலில் நிறுத்திவிடுவாள். கேட்டதை கொடு என்று சொல்வாள்.
ஞானிகள் அருட்கடாட்சம் இருந்தால், திருமகள் கடாட்சம் இருக்கும். வறுமை என்ற பேச்சே இருக்காது.
கலைய தூர்தி – கல்விக் கடல் போன்று இருக்கும். சயமாது – வீர உணர்ச்சி இருக்கும். அதை கொற்றவை என்பார்கள். ஆக ஒரு ஆற்றல் பொருந்திய வல்லமை கிடைக்கும்.
முன்னர் வஞ்சித்தவள், கொஞ்சம்கூட கருணை காட்டாது நம்மை நரகத்தில் தள்ள நினைத்தவள் இன்று தவவலிமையால் ஒரு வீர உணர்ச்சி ஏற்பட்டதனால், எதையும் தாங்கிக்கொள்ளும் அச்சமில்லாத வாழ்க்கை கிடைத்தது.
சயமாது – கொற்றவை அல்லது துர்க்கை. கொற்றவை என்பவள் சக்தி. வீரத்தை தரக்கூடியவள். ஆக திருமகள், கலைமகள், சயமாது வீரத்தை தரக்கூடியவள். எல்லாமாகவும் இருப்பார்கள்.
 பூமாதேவி – எதையும் தாங்கிக்கொள்ளும் வல்லமையைக் காட்டும். ஆக திருமகள் கடாட்சம், சரஸ்வதி கடாட்சம், கல்வியின் அருள், ஆற்றல், வல்லமை, எதையும் தாங்கிக்கொள்ளும் வல்லமை பூமாதேவி. ஆக திருமகள், கலைமகள், சயமாது, பூமாதேவி ஆக நான்கும் பெண்மை.
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி – இத்தனையும் இருந்தால் அவன் என்ன சாதாரண மனிதனா? எதையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல், தைரியம், வீரம் உள்ளவன், அச்சம் என்பது இல்லாதவன், எமனையே பொடியாக்கக்கூடியவன்.
ஆக இப்படிப்பட்ட வாய்ப்பு உண்டு. சயமாது என்பது எமனை வெல்வதற்கு. உன்னை வஞ்சித்தவள்தானே இவள். என்னை வஞ்சித்த பாவி இவள். இன்று எனக்கு வெற்றிக்கு துணையாக இருக்கிறாள்.
இவளை சயமாது என்பார் ஆசான் திருஞானசம்பந்தர். சயமாது – செயம் என்றால் வெற்றி, சயமாதுபூமி – தாங்கும் சக்தி உள்ளவளாக இருக்கிறாள், வீர உணர்ச்சி உள்ளவளாக இருக்கிறாள், செல்வத்தை தருகிறாள், கல்வியைத் தருகிறாள், இத்தனையும் யாரால்? பெரியவர்கள் ஆசியால், புண்ணியத்தால், திருவருள் கடாட்சத்தால், அந்த நான்கு வாய்ப்பு நமக்கு கிடைத்தது.
தாங்கிக்கொள்ளும் சக்தி, தளராத மனம், உலகத்தில் எது நடந்தாலும் சரி, உலகமே தலைகீழாக நடந்தாலும் சரி, அப்படியே அசையாது இமயமலை போன்று இருப்பான். அந்த வல்லமையை பெறுவதற்குத்தான் ஆசான் திருஞானசம்பந்தர் இந்த வார்த்தையை சொல்கிறார்.
பிடித்துக் கொள்ளுங்கள் என் திருவடியை. பிள்ளைகளே, பிழைத்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளுங்கள், பிழைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே என்று அழைப்பது போன்று இருக்கும்.
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
எட்டு திசைக்கும் தலைவர்கள். அட்டதிக்கு பாலகர்கள் அழைத்தால் வருவார்கள். என்ன வேண்டும் மகனே? என்ன வேண்டும் கேள் என்பார்கள்.
கலைமகள் – கலைச்செல்வம் உள்ளது. செல்வம் இருக்கிறது. தாங்கும் சக்தி இருக்கிறது. வீர உணர்ச்சி இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை யாரால் வந்தது? தலைவன் உள்ளே தங்கியதால் எல்லாம் வல்ல தலைவன் உள்ளே புகுந்துவிட்டதால், தங்கிவிட்டதால், அருள் செய்ததால், அந்த அருட்கடாட்சத்தால், இந்த வாய்ப்பினை பெற்றேன். இதுதான்  கோளாறு பதிகம் மூன்றாவது பாடலின் விளக்கம்.
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே –`அடியவர்களுக்கு எல்லா நன்மையையும் உண்டாக்கும். ஆசான் திருஞானசம்பந்தர் திருவடியை பூஜை செய்த மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். திருவடியை பூஜை செய்தால்தான் கிடைக்கும்.
     எல்லோரும்தான் பூஜை செய்கின்றார்கள். எப்படி பூஜை செய்கிறார்கள்?
     பொங்கல் புளியோதரை வைத்து செய்யும் இந்த பூஜைக்கா அவர் அருள் செய்வார்?
     ஆசான் திருஞானசம்பந்தரை உருகி தியானிக்கவேண்டும். ஆசான் திருஞானசம்பந்தர், ஆசான் திருநாவுக்கரசர், மகான் பதஞ்சலியார், மகான் அருணகிரிநாதர் இப்படிப்பட்ட மகான்களை பூஜை செய்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
      எந்த வாய்ப்பு? அட்டத்திக்கு பாலகர்கள் கேட்டதை தருவார்கள், அழைக்கும்போதே வருவார்கள். எல்லா உதவியும் கிடைக்கும். திருவருள் துணை இருந்தால், பூஜை செய்யும் முறையோடு பூஜை செய்தால் கிடைக்கும்.
     ஆக புண்ணியம் செய்வதற்கு அருள் சேரவேண்டும் அல்லவா? ஞானிகள் நாமத்தை சொன்னால்? சயமாது பூமி என்பது சின்ன விசயமா? வெற்றிமேல் வெற்றி ஐயா, அதுமட்டுமல்ல, இந்த வாய்ப்பு பெற்றவரிடம் எமனே கிட்ட நெருங்க முடியாது.
     ஆசான் அருணகிரிநாதர், “வாராதே அந்தகா வந்தால் உயிரை வாங்குவேன்” என்பார், ஏ எமனே! என்னிடம் நெருங்காதே, வந்தால் உன் உயிரை வாங்குவேன் என்பார். வாராதே அந்தகா (அந்தகன் என்றால் எமன்)
     வாராதே அந்தகா, வந்தால் உயிரை வாங்குவேன் என்றார். என்னடா? அவர் நம்மைப் பார்த்து இந்தளவுக்கு மிரட்டுகிறார்? என்றார் எமன்.
     யார் துணை எனக்கு இருக்கு தெரியுமா? சக்கரவர்த்தி மிகப்பெரிய ஆசான் ஞானபண்டிதரின் ஆசி பெற்ற மகன். என்னை நெருங்கமுடியாது, நெருங்காதே, நெருங்கினால் எரித்துவிடுவேன். நெருங்காதே கண்டம்துண்டமாக வெட்டிவிடுவேன். நெருங்காதே நரகத்தில் உன்னை தள்ளிவிடுவேன். “வாராதே அந்தகா, வந்தால் உயிரை வாங்குவேன்” என்பார்.
    
     ஆசான் திருமூலதேவர்,
     நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே.
§  திருமந்திரம் – அணைந்தோர் தன்மை – கவி எண் 2968
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் – எமன் வந்தால் ஞானவாள் கொண்டு வெட்டிவிடுவேன் என்றார். வீசி எறிவேன், எறிவேன், வீசுவேன். எமன் வந்தால் ஞானவாள் கொண்டு தாக்கிவிடுவேன், சிவபெருமான் வந்தால் அவருடன் நான் போய்விடுவேன்.
     ஆக பெரியவர்கள், எமனையும் வெல்வார்கள், எவனையும் வெல்வார்கள். அதற்காக வீரதீரத்தை காட்ட மாட்டார்கள். இப்படி போவது எல்லாம் வீர உணர்ச்சி என்று சொன்னாலும் கூட, உடனே இடறிவிட மாட்டார்கள். நெஞ்சத்திலே அச்சம் இருக்காது. அச்சம் இல்லாத வாழ்க்கைக்குத்தான் இப்படி சொல்வார்கள்.
     இதுதான் இந்த பாடலுடைய சாரம். அடியவர்களுக்கு பக்திமான்களுக்கு ஞானிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். இதுதான் இந்த மூன்றாவது பாடலின் சாரம்.
     அடுத்து நான்காவது பாடல்,
     மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
            மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
            உளமே புகுந்த அதனால்
கொதியறு காலன் அங்கி நமனொடு தூதர்
      கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
 அடியா ரவர்க்கு மிகவே.
    மகான் திருஞானசம்பந்தர் – கோளறு பதிகம் – கவி எண் 4
மதிநுதல் மங்கை யோடுவிளக்கம் முன்னமே சொல்லியிருக்கிறோம். மதிநுதல் – நெற்றி மூன்றாம் பிறை போன்று இருக்கும். ஆக தலைவனே அப்படி சொல்கிறார்.
     மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் – எங்கள் பரமன் என்றால், எங்கள் தலைவன். அவன் சிவபெருமான். அவன் எப்படி இருக்கிறான்? அவன் மூன்றாம் பிறை போன்ற நெற்றியையுடைய அழகுடைய உமாதேவியோடு இருக்கிறான்.
வடபால் இருந்து – வடதிசையிலிருந்து வேதங்களை ஓதினான். முன்னமே காளை வாகனத்தில் வந்தான் என்று சொன்னார். இந்த இடத்தில் காளை வாகனம் இல்லை, இருந்தாலும் குற்றமில்லை.
ஆக வடதிசையில் உமாதேவியோடு இருந்து, வேதங்களை சொன்னான்.
வேதம் என்பதே உடம்பையும் உயிரையும் பற்றி அறிவது.
வேதம் என்பதே நல்வினை தீவினை பற்றி அறிவது.
வேதம் என்பதே பகுத்தறிந்து உண்மையை அறிந்து கொள்ளுதல்.
வேதம் என்பது மும்மலத்தை அறிந்து கொள்வது.
வேதம் என்பதே பசி ஏன் வந்தது?
காமம் ஏன் வந்தது?
ஏன் நரை திரை மூப்பு வந்தது?
ஏன் சாகவேண்டும்? என்று கேட்பதுதான் வேதம்.
ஆக உலகத்தை இரண்டு இரண்டாக பார்ப்பது வேதம். பெண்ணும் ஆணுமாக, நரகம் சொர்க்கமாக, இடகலை பிங்கலையாக, இரவு பகலாக என்று பார்ப்பது வேதம். முக்கியமாக உடம்பைப்பற்றி பேசுவதுதான் வேதம்.
அதை சிவபெருமான் வடதிசையிலிருந்து சொன்னான் என்று சொன்னார். வடதிசையிலிருந்து தலைவன் இதை சொல்லியிருக்கின்றான். ஆக அதுதான் வேதம்.
மற்ற வேதம் எல்லாம் பயன்படாது. வேதம் என்றாலே, வினையைப் பற்றி அறிந்து கொள்வது. வினையை வெல்ல வேண்டும் என்பதே வேதம்.
வினையை வென்றுவிட்டான் என்றால், வேதத்தை வென்றுவிட்டான் என்று பொருள். அதைத்தான் அவன் ஓதினான். வடதிசையிலிருந்து ஓதினான். வடதிசையிலிருந்து சொன்னான். என்ன சொன்னான்? வினையைப் பற்றி அறிந்து கொள்வதே வேதம்.
வினையை வெல்வதற்குரிய மார்க்கத்தை அறிந்து கொள்வதே வேதம். வினையை வென்றுவிட்டான் என்றால், வேலை முடிந்தது என்று அர்த்தம். வடதிசையிலிருந்து இதைத்தான் பேசியிருக்கிறான்.
நான்கு வேதம் சொன்னான் என்பான். எத்தனை வேதம் சொன்னாலும் இதுதான் நடக்கும். மனிதனைப் பற்றித்தானே சொல்ல வேண்டும். வேதங்கள் எல்லாம் மனிதனைப் பற்றித்தான் சொல்லும், மிருகங்களைப் பற்றி சொல்லாது.
மனிதனைப் பற்றித்தான் சொல்ல வேண்டும். அதனால் அது சாத்திரம். உடம்புக்கு சாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. உடம்புக்கு வேதம் என்று பொருள் இருக்கிறது. ஆக அந்த வேதத்தை அறிந்து கொண்டால் வெற்றி. வடதிசையிலிருந்து தலைவன் சொன்னான்.
 மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
            மறைஓதும் எங்கள் பரமன்
வடதிசையிலிருந்து தலைவன் சொன்னான். மறை என்றாலும் சாத்திரம் என்றாலும் வேதம் என்று பொருள்படும். இதை மறை ஓதும் எங்கள் பரமன் என்று சொல்வார். பரமன் என்றால் தலைவன் என்று பொருள்.
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
            உளமே புகுந்த அதனால்
நதி – ஞானிகளுக்கு உச்சியிலிருந்து அமிழ்த பானம் சிந்தும்.
உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரத் தானெடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என்கண்ணம்மா வகைமோச மானேன்டி.
·         மகான் அழுகண்ணிச்சித்தர் – கவி எண் 14
ஆடிய கூத்தினைப் போற்றி – அருள்
ஆனந்தஞ் சேரர்க்கு அருளினிற் றோற்றி
ஓடிய காற்றினை யேற்றி – அதில்
உருகியொழுகும மிர்தத்தைத் தேற்றி.
    மகான் மஸ்தான் சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 13
இங்கே நதியொடு கொன்றை மாலை என்பார். ஆக நதி என்பது இதுதான். தண்ணீரை தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் – சிவபெருமான் கங்காதேவியையும், இளம் சந்திரனையும் முடிமேல் அணிந்திருக்கிறார்.
சிவபெருமான் கொன்றை மாலையை சூடியுள்ளார் என்பார். கொன்றை மலர் பார்ப்பதற்கு சரம் சரம் சரமாய் அழகாக இருக்கும். சிவனுக்கு உகந்த மலர்.
அந்த மலரை சிவபெருமான் விரும்பியிருக்கிறார். கொன்றை மலரையும் கங்கை நீரையும் தலையில் சுமந்திருக்கின்றார். ஆக இது கவி நயம். எண் சீராக சொல்லவேண்டுமல்லவா? அதற்காக அப்படி சொல்லியிருக்கிறார்.
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
            உளமே புகுந்த அதனால்
என் உள்ளத்தில் புகுந்துவிட்டான். உருகி தியானித்தேன் வந்து புகந்து விட்டான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே உருகி தியானித்தால் எல்லோரும் நம்மை நோக்கி வருவார்.
ஆக பூஜை செய்யும் முறையை சொல்ல வேண்டும். தலைவன் உள்ளத்தே புகுந்து விட்டான். உளமே புகுந்த அதனால் – அதனால் என்ன இலாபம்? தலைவன் உள்ளே புண்ணியம் செய்யாமல் வருவானா? வரமாட்டான். தலைவன் உள்ளே வந்துவிட்டான், தலைவன் உள்ளே வந்து தங்கினால் என்ன ஏற்படும்?
கொதியுறு காலன் அங்கி – கொதிக்கக்கூடியவன்  எமன் கொதிப்படைந்து வந்தான். அவனை பிடி என்றார்.
ஏய்! என்னை யாரென்று நினைத்தாய்? நான் எல்லாம்வல்ல ஆசான் சிவபெருமான் ஆசி பெற்றவன், நெருங்காதே, நெருங்கினால் எரித்துவிடுவேன்.
முன்பு, மார்க்கண்டேயரைப் பிடிக்கப்போய் உதை வாங்கி கொண்டு வந்திருக்கிறாய். சக்கரவர்த்தி வீர தீர பராக்கிரமங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பான்.
மூச்சி விட்டால் ஓடி போவான். அவனிடம்போய் உன் வேலையை காட்டு. நான் ஞானிகள் ஆசி பெற்றவன், நெருங்காதே என்னிடம். உன்னுடைய கொடூரமான கோபத்தை என்னிடம் காட்டாதே.
எமன் வந்தான், பெரிய கண்களோடு, எருமைக்கிடாவின் மேலேறி, அப்படியே முறைத்துப் பார்த்தான். ஒவ்வொரு பக்க மீசையிலும் நாலு யானை நிற்கிறது. அப்படியே மீசையை முறுக்குகிறான். ஞானிகள் ஆசிபெற்ற என்னிடமா மீசையை முறுக்குகிறாய்? முடித்துவிடுவேன் முடித்து.
முன்னமே மார்க்கண்டேயனை பிடிக்கப்போய், உதை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய். நான் எல்லாம்வல்ல சிவபெருமான் ஆசிபெற்றவன். என் சிந்தையில் அவன் குடிகொண்டிருக்கிறான். நெருங்காதே, நெருங்கினால் நசுக்கிவிடுவேன் நசுக்கி.
யார் அவன்? நம்மை பார்த்து நசுக்கி விடுவேன் என்று சொல்பவனை எமன் பார்த்தான், மறுபடியும் மிரட்டினான்.
கொதியுறு காலன் அங்கி – நான் உனக்கும் பயப்பட மாட்டேன். மூண்டெரியும் அக்னிக்கும் பயப்பட மாட்டேன் என்றான். (அங்கி என்றால் அக்னி என்று அர்த்தம்) ஞானிகள் ஆசி பெற்ற இவன் எமனைப் பார்த்து உன்னைக் கண்டு பயப்பட மாட்டேன் என்றான்.
இந்த வல்லமை உனக்கு எப்படி வந்தது? என்றான் எமன். பூஜை செய்தேன், புண்ணியம் செய்கிறேன், மக்கள் மனம் உவந்து கொடுக்கும் பொருளாதாரத்தை கண்டு மயங்க மாட்டேன்.
இந்தப்பொருளைப் பற்றி எனக்கு அவசியமில்லை. வந்த பொருளையெல்லாம் ஏழை எளியவர்க்கு கொடுத்து, புண்ணியத்தை தேடி வைத்திருக்கின்றேன். மலை போன்று புண்ணியம் குவிந்து கிடக்கு.
உருகி தியானம் செய்ததால், அருள் பலம் உள்ளவன் நான். அருள்பலமும், புண்ணியபலமும் உள்ளவரிடம் நீ என்ன செய்ய முடியும். மறுபடியும் சொல்கிறேன், நிற்காதே இங்கே, உன்னை எரித்தேவிடுவேன் என்றார்.
கொதியுறு காலன் அங்கி – அங்கி என்றால் அக்கினி, ஆக அக்கினி இருக்கு. அக்கினியில் மூழ்கி வருபவன் நான். அக்கினியில் மூழ்கி வெற்றி கண்டவன் நான். உன்னுடைய சீற்றத்திற்கு நான் அகப்படமாட்டேன். அக்கினிக்கும் அஞ்சமாட்டேன்.
உன் கண்களில் அனலை கக்குகின்றாய். கண்கள் பனங்காய் போன்று பெரியதாய் இருக்கிறது. அப்படியே உருட்டி பார்கிறான். அந்த எருமைக்கிடாவும் முறைத்துப் பார்க்கிறது.
ஆக எமன் மலை மேகம் போன்று, கருமேகம் போல சூழ்ந்திருக்கின்றான். கருமேகம் போல வானத்திற்கும் பூமிக்குமாய் நிற்கின்றான். அப்படியே எமன் உருட்டி பார்க்கின்றான். உன் உருட்டலுக்கு மிரட்டலுக்கு நான் ஆளில்லையடா, பொடியா போடா என்றான். அக்கினிக்கே பயப்படாதவன், யாருக்கும் அஞ்சமாட்டோம், ஓடிப்போ என்றான்.
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் – எமனாக இருந்தாலும் சரி, உன்னுடைய தூதுவனாக இருந்தாலும் சரி, இல்லை உலகத்தில் எவ்வளவு பெரிய போக்கிரியாக இருந்தாலும் சரி, அவன் கராத்தே தெரிந்திருந்தாலும் சரி, கழுத்தை வெட்டுபவனாக இருந்தாலும் சரி, அவன் எவ்வளவு பெரிய யானை பலம் உடையவனாக இருந்தாலும் சரி, அவனை நசுக்கிவிடுவேன் நசுக்கி.
என்ன ஆற்றல், யானை பலம் உள்ளவனையே நசுக்கிவிடுவேன் என்று சொல்லுகின்ற ஆற்றல், அப்பேர்ப்பட்ட வல்லவன்தான் நான். தலைவன் என் உள்ளத்தில் இருக்கிறான். உன் பார்வை பார்த்து அஞ்சுகின்றவன் நான் அல்ல. நீ உருட்டி பார்த்தால், நானும் உருட்டிப் பார்ப்பேன். நீ பார்த்தால் நான் தாங்கிக்கொள்வேன், ஆனால் நான் பார்த்தால் நீ எரிந்துபோவாய். ஓடிப்போ என்றான்.
என்ன ஆச்சரியம்? ஆச்சரியம் இல்லையடா தம்பி, உன்னை போன்று எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். எங்கள் சித்த கணங்கள் எப்படிப்பட்டது என்று தெரியுமா? எமனை வென்றவன், எவனையும் வெல்லுவார்.
உலகத்தில் உள்ள எல்லா போக்கிரிகளையும் தூள்படுத்திவிட்டு போவான். எங்களுக்கு அரசன் எறும்பு, அவன் படையோ துரும்பு. யாரை கண்டும் பயப்பட மாட்டோம் நாங்கள்,
யானேதும் பிறப்பஞ்சேன்
இறப்பு அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன்
மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள்பெறும் நாள்
என்று என்றே வருந்துவனே.
மகான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – திருச்சதகம் – கவி எண் 12
                மண்ணாளும் சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி, அவனை நான் மதிக்கமாட்டேன். என்னை மதித்தால் நான் மதிப்பேன். நான் உன்னை கண்டு அஞ்சவேண்டிய அவசியமில்லை.
     மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்    
     முன்னீரில் இருக்கினும் மூச்சடக்குவோம்
     ஆக அக்கினிக்கும் அஞ்சேன், எமனுக்கும் அஞ்சேன், எவனுக்கும் அஞ்சேன். அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு உண்டு.
     என்ன காரணம்? என்னை தொடர்ந்து வந்த காமத்தை, வஞ்சித்து வந்த காமத்தை நான் வஞ்சித்துவிட்டேன். என்னை தொடர்ந்து வந்த பேராசையை ஒழித்துவிட்டேன். என்னை தொடர்ந்து வஞ்சித்து வந்த பொறாமையை பொடியாக்கிவிட்டேன். அதனால் உன்னை  கண்டு நான் பயப்பட மாட்டேன். இவைகள்தானே நமக்கு எமனாக இருக்கிறது.
     பொல்லாத காமம் எமன்
பொருள் வெறியே எமன்
ஜாதி வெறியே எமன்
யான் என்ற கர்வமே எமன்
தன்னைப்பற்றிய அறியாமையே எமன்
ஆகவே எமனாகிய நீ விஸ்வரூபம் எடுத்திருகின்றாய் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கின்றாய். உன்னை கடுகாக்கி விடுவேன். உன்னுடைய சீற்றத்தை குறைத்து விடுவேன்.
என்னிடம் பேராசை இல்லை. பொருள்பற்று இல்லை, நீ என்னை செய்யமுடியும் என்னை? காமவெறி இல்லை என்ன செய்துவிடுவாய் என்னை.


     என்னிடம் ஜாதிவெறி இல்லை. உன்னால் என்ன செய்யமுடியும் என்னை? லோபித்தனம் இல்லை.
     என்னை நீ என்ன செய்யமுடியும்? நான் பொருளாதாரத்தை நாளைக்கு வேண்டும் என்று சேகரிக்கமாட்டேன். அதனால் நீ என்னை என்ன செய்ய முடியும்? குணக்கேடுகள் என்னிடம் இல்லை.
     நீ குணக்கேடுகளின் வடிவாகத்தானே நிற்கின்றாய்? நீ கூற்றுவனாகிய எமன், பொறாமை என்று சொல்லப்பட்ட எமன், பேராசை என்று சொல்லப்பட்ட எமன், கொடிய கோபம் என்ற எமன், நீதான் எமனாயிருக்கின்றாய்.
     ஆகவே உன்னுடைய தோற்றம் எனக்கு நன்றாக தெரியும், எமன் என்று சொல்லப்பட்ட நீ பொறாமையாகவும், பேராசையாகவும், வன்சொற்களாகவும், சினமாகவும் இந்த நான்கு வடிவமாக எமனே நீ நிற்கின்றாய். அப்படியே கண்ணை உருட்டி என்னை பார்க்கின்றாய்..  
     அஞ்சேல் நான் தப்பித்துவிட்டேன். பெரியோர்கள் ஆசியால் நான் தப்பித்துவிட்டேன். ஆகவே உன் சீற்றத்தை நான் வென்றுவிட்டேன். இதுவே இந்த ஆற்றல்.
     மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
அவன் என் உள்ளத்தில் தங்கியிருக்கிறான். அவன் சும்மா தாங்குவானா? புலால் உண்டால் தாங்குவானா? புலால் உண்டால் விட்டு விலகிவிடுவான். உயிர்கொலை செய்தால்? கோயிலுக்குப்போய் ஆடு கோழி வெட்டினால், அங்கே நிற்கவே மாட்டான்.
ஆடு கோழி வெட்டுவதை பார்த்தாலே அவனுக்கு உடல் நடுங்கும். அய்யோ, உயிர்கொலை செய்கின்றானே என்று மனம் வெதும்புவான். அவன் புலால் உண்ணமாட்டான், உயிர்கொலை செய்யமாட்டான், பொய் சொல்லமாட்டான், வஞ்சனை இல்லாதவன், அப்படிப்பட்ட தலைவன் என் உள்ளத்தில் தங்கியிருக்கிறான். அவன் தங்கினால் அங்கே குணக்கேடு இருக்காது, தலைவன் தங்கியிருக்கிறான். அதனால்,
 கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
      அங்கி – அக்கினி என்னை ஒன்றும் செய்ய முடியாது. இத்தனையும் கண்டு நான் அஞ்ச மாட்டேன். கொடுநோய்கள் ஆன பலவும் –புற்றுநோய் இருக்கும், கைகால் ஊனம் இருக்கு, தொழுநோய் இருக்கு, தீர்க்க முடியாத நோய்களெல்லாம் இருக்கு. கொடு நோய்கள் ஆன பலவும், எல்லா நோய்களும்,
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
     ஆக எமனுக்கும் அஞ்சேன், எவனுக்கும் அஞ்சேன், எம தூதருக்கும் அஞ்சேன், கொடிய நோயும் எங்களை பாதிக்காது, திருவருள் இருக்கும்போது எங்களை நோய் என்ன செய்யும்?
     திருவருள் துணையுள்ள மக்களை காலனாகிய எமன் என்ன செய்வான்? திருவருள் துணையுள்ள மக்களை அக்னி என்ன செய்யும்? திருவருள் துணையுள்ளவர்களை எம தூதர் என்ன செய்யமுடியும்? உலகத்தில் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஆக,
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
    
     மிக நன்மை தரும். எமனும் நன்மை தருவான். எவனும் நன்மை தருவான். பிரச்சனையே இல்லை. ஆகவே பெரியோர்களின் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
     அவர்கள் நமக்கு எப்போது அருள் செய்வார்? நான் உருகி தியானிக்க நினைக்கின்றேன் முடியவில்லை, புண்ணியமும் செய்யவில்லை.
     புண்ணியம் செய்யச் சொன்னால் செய்ய மாட்டேன். நான் புண்ணியம் செய்து கொண்டேதானே இருந்தேன் என்பேன். என்றைக்கு நீ புண்ணியம் செய்தாய்? என்றைக்கு உன்னை இந்த பாவி மனது புண்ணியம் செய்யவிட்டது. லோபித்தனத்தை என்று விட்டாய்?
     ஆக கன்னங்கரேலென்று மீசையை முறுக்கிக் கொண்டு பெரிய கண்களோடு பயங்கரமாக உருட்டிப் பார்க்கிறது. அது என்னய்யா? அது லோபி என்று சொல்லப்பட்ட எமன். அவனா என்னை மிரட்டுகின்றான்? அவன்தான் எமனாக இருக்கின்றான்.
     என்ன அறியாமை? பூஜை செய்யமுடியவில்லை, அப்படி சொல்வதே எமன். லோபித்தனமே எமன். சந்தேகப்படுவதே எமன். மனைவி மீது சந்தேகப்படுவதே எமன். மனைவி கணவன் மீது சந்தேகப்படுவதே எமன்.
     நமக்கு வேறு யாரும் எமனில்லை. வெகு குடும்பத்தில் இந்த எமன் உள்ளேயே இருக்கின்றான்.
     ஆக இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ளவேண்டும். நீ பூஜை செய்தால், புண்ணியம் செய்தால் அறியலாம். யாராவது செய்கிறார்களா? எத்தனையோ முறை நாம் சொல்லியிருக்கிறோம். புலால் உண்ணாதீர், விஷ உணவு அது. இதை யாரேனும் கேட்டார்களா?
     இந்த உடலே காமதேகம். உள்ளே விகாரி, மோகினி இருக்கிறாள். உள்ளே பேய் இருக்கிறாள். அவளுக்கு உணவு கொடுக்காதீர்கள். புலால் உணவு, மாமிச உணவு கொடுத்தால் பேய்க்கு வலு வந்துவிடும். அவளுக்கு ஆக்கம் தரவேண்டாம். அவள் அதை விரும்பி சாப்பிடுவாள்.
     உடம்பு என்று சொல்லப்பட்ட பேய், மாமிச உணவை விரும்பி சாப்பிடுவாள். உடம்பு என்று சொல்லப்பட்ட மோகினிக்கும், காமந்தகாரிக்கும், இந்த உணவைக் கொடுக்காதே. சைவ உணவாக கொடுத்தால் சாந்தமடைவாள்.
     ஆக அந்த உணவு வேண்டாம். உயிர்க்கொலை செய்யாதே. உயிர்கொலை செய்யச்செய்ய அறியாமை உண்டாகும். தெளிவு இருக்க முடியாது. ஆகவே உயிர்க்கொலை செய்யாதே. புலால் உண்ணாதே, பொய் பேசாதே.
     இவ்வளவு வல்லமை உனக்கு எப்பொழுது வரும். அந்த வல்லமை உள்ளவர் ஆசான் திருஞானசம்பந்தர். ஆசான் திருஞானசம்பந்தர் அவர்களைப் பார்த்து “திருஞானசம்பந்தர் ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா நீங்கள் எல்லாம் பெரியோர் ஐயா, எனக்கும் அருள் செய்யவேண்டும். நீங்கள் எல்லாம் மிகப்பெரிய தவசி” என்று கேட்க வேண்டும்.
      வெம்பந்தம் தீர்த்து உலகாள் வேந்தன் என்பார் மகான் தாயுமானவர். வெம்பந்தம் – கொடுமை பொருந்திய இந்த பாசபந்தத்தை, வெம்பந்தம் என்றால் தொடர்பு என்று அர்த்தம். ஆக கொடுமையான பாசத்தை பொடிப்பொடியாக்கியவர். வெம்பந்தம் தீர்த்து உலகாள் வேந்தர் என்பார்.
    
வெம்பந்தம் தீர்த்து உலகாள் வேந்தன் திருஞான
சம்பந்தனை அருளால் சாரும்நாள் எந்நாளோ?
·         மகான் தாயுமானவர்
அப்பேர்ப்பட்ட ஆசான் திருஞானசம்பந்தர் பெயர் சொல்லி வாய்மூடுவதற்கு முன்னே ஈரேழு பதினான்கு உலகமும் நடுங்கும். என்ன செய்யவேண்டும். குறை இருந்தால் சொல். என்ன குறை? என்று கேட்பார். இந்த சொல்லைக் கேட்டாலே எமன் நடுங்குவான்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொன்னால் பொறாமை என்று சொல்லப்படும் கொடும் பாவி நம்மை விட்டு ஓடிவிடுவான்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொல்லிவிட்டால், லோபித்தனம் நம்மை விட்டு நீங்கிவிடும்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொன்னாலே பொல்லாத வறுமை தீரும்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொன்னாலே அறியாமை தீரும்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொன்னாலே ஞானம் வரும்.
ஆசான் திருஞானசம்பதர் என்று சொன்னாலே வீர உணர்ச்சி வரும்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொன்னாலே செல்வம் பெருகும்.
ஆசான் திருஞானசம்பந்தர் என்று சொல்லச்சொல்ல எல்லா நன்மையையும் உண்டாகும்.
ஆக ஆசான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகப்பாடலுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறோம். கோளறு என்றால், நவகோள்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போகும்.
எமனுக்கும் இவனுக்கும் தொடர்பு அற்றாலன்றி, கூற்றுவனுக்கும் நமக்கும் தொடர்பு அற்றாலன்றி, காமத்திற்கும் நமக்கும் தொடர்பு அற்றாலன்றி, அந்த நவகோளுக்கும் நமக்கும் தொடர்பு அற்றுபோகாது.
பசியில்லை, உணவுக்கு வேலையில்லை. காமமில்லை அங்கே பெண்ணுறவுக்கு வேலையில்லை. விகாரமில்லை அங்கே பந்தபாசமில்லை.
ஆக நவகோளுக்கும் நமக்கும் தொடர்பு அற்றுப்போகவேண்டும். திருவருள் தொடர்பு இல்லாமல் தொடர்பு அற்றுப்போகாது.
மூச்சுக்காற்று இயங்கினால்தானே வெளிக்காற்று நமக்கு தேவை? மூச்சுக்காற்று உள்ளுக்குள் அடங்கிவிடுகிறது. பேச்சே இல்லை. பசியில்லை, காமமில்லை, வஞ்சனையில்லை, பொறாமை இல்லை, ஜாதிவெறி இல்லை, நிசப்தமாக நிர்மலமாகிவிட்டது. எங்கும் எல்லாம் ஒரே மயம்.
எல்லாம் சிவமயம்
எல்லாம் ஆனந்த மயம்
எல்லாம் ஆனந்த மயம்
எல்லாம் ஆனந்த மயம்
என்றார்.
வெற்றி வெற்றி திருவருள் துணையால் வெற்றி.
தினமும் பூஜை செய்கிறோம், நாங்கள் வெற்றி பெருகிறோமென்று ஆசான் திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
நாமும் பூஜை செய்வோம். காலத்தை வீணாக்கக்கூடாது. காலத்தை வீணாக்குபவனைப் பார்த்து ஆசான் வள்ளுவப்பெருமான் சொல்வார்.
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
o   திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 334
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
o   திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 336
                அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க,மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   
o   திருக்குறள் – அறன்வலியுறுத்தல் – குறள் எண் 36
என்றெல்லாம் சொல்வார். காலத்தை வீணாக்கக் கூடாது. காலத்தை வீணாக்குகின்றவன் பிறகு சிந்தித்து என்ன பயன்? நீ பிறகு சிந்தித்து என்ன செய்யப்போகிறாய்?
காலம் உள்ளபோதே அதை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்கள். எதை தூற்றிக் கொள்வது? நெல்லைய்யா? முன் வினையை தீர்த்துக்கொள் என்பார்.
ஞானிகள் திருவடிகளை பிடித்துக் கொள்ளுங்கள். இதுதான் அவரவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கு ஒரே வழி. எந்த சடங்குகளுக்கும் இங்கே வேலையில்லை. பால் அபிஷேகம் இல்லை. பாத யாத்திரை அவசியமில்லை, ஆடு கோழி வெட்டவேண்டிய அவசியமில்லை எந்த சடங்குகளுக்கும் அவசியமில்லை.
திருஞானசம்பந்தர் ஐயா, மாணிக்கவாசகர் ஐயா, இராமலிங்கசுவாமிகள் ஐயா, தாயுமானசுவாமிகள் ஐயா, பட்டினத்தார் ஐயா, பத்ரகிரியார் ஐயா, திருநாவுக்கரசர் ஐயா, பதஞ்சலிதேவர் ஐயா, அருணகிரிநாதர் ஐயா, அத்திரிமகரிஷி ஐயா என்று அப்படியே ஞானிகள் நாமத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.
போகிறப்போக்கில் அருள் பெறலாம். இதற்காக தனி இடம் அவசியமில்லை. இப்படி எப்போது சொன்னாலும் அருள் செய்வார்கள். அவர்களுக்கு தெரியும்.
ஆனால் நம்மை விடுமா பாவி மனம்?
செய்கிற பாவம் நம்மை விடுமா?
செய்த பாவத்தால் மனதை ஒருமைப்பட செய்யுமா?
செய்த பாவத்தால், பொல்லாத வறுமை சூழ்ந்தால் என்ன செய்வது?
பொல்லாத வறுமை சூழ்ந்தால் என்ன செய்ய முடியும் உன்னால்?
வறுமை சூழ்ந்துவிடும், கடன் சுமை வந்துவிடும், மனப்போராட்டம் இருக்கும். எப்போது உன் ஆசியை பெறுவது? இந்த துன்பங்களுக்கிடையே ஞானிகளை வணங்க வேண்டும்.
உறங்கி எழும்போதே அகத்தீசா, நந்தீசா என்று சொல்லி எழுந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் சொல்லித்தான் நாங்கள் தேறியிருக்கின்றோம். நீங்களும் தேறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சொல்லியிருக்கிறேன்.
ஆக  கோளறு பதிகத்திற்கு விளக்கம் சிறிதளவு சொல்லியிருக்கிறேன். எத்தனையோ வேலை இருந்தாலும் இங்கு வந்திருக்கின்றீர்கள், அவ்வளவு வேலைகளுக்கிடையிலும், இங்கு வந்து இந்த கருத்துகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு உள்ளீர்கள். நீங்கள் நீடு வாழவேண்டும். நீங்கள் மேற்கொள்கின்ற காரியங்கள் தடையில்லாமல் நடக்கவேண்டும் என்று ஆசான் அகத்தீசரை வேண்டிக்கொள்கிறேன்.
இங்கே உள்ள அன்பர்கள் எல்லாம், மிகப்பெரிய தொண்டு செய்தவர்கள். புண்ணியவான்கள், ஆண்களுமாக பெண்களுமாக புண்ணியம் செய்து, கை உரம் ஏறியிருக்கிறது.
அவர்கள் கையால் உண்பதே புண்ணியம். அவர்களைப் பார்ப்பதே புண்ணியம். அவர்கள் நம்வீட்டில் ஒரு வேளை சாப்பிட பாக்கியம் கிடைத்தால் அது மிகப்பெரிய புண்ணியம்.
ஆகவே நீடு வாழவேண்டும். நீங்களும் நீடு வாழவேண்டும். எல்லா நன்மையையும் உண்டாகவேண்டும், உலகெலாம் செழிக்கவேண்டும் என்று சொல்லி இத்துடன் முடிக்கிறேன் வணக்கம்.
    
    
    
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0154270
Visit Today : 57
Total Visit : 154270

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories