27.02.1998 கருணையுள்ள மகான் அகத்தியர் பெருமை – Gnanathiruvadi – December 2016

  



கருணையுள்ள மகான் அகத்தியர் பெருமை

என்ற தலைப்பில் 27.02.1998 அன்று அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்.
     மகான் ராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் பட்டினத்தார், மகான் புஜண்டமகரிஷி, மகான் திருமூலர் போன்ற ஞானிகள் மிகப்பெரிய வல்லமை உள்ள ஆசான்கள்.
     “எனது பாட்டன் நடந்தால் மலை பொடிபடும்” என்றார் மகான் போகமகாரிஷி. அவர் மகான் காலாங்கிநாதருடைய சீடர். மகான் சட்டமுனி “என்னைக் கூப்பிடு” என்பார். இப்படி பெரிய பெரிய மகான்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஆசான் அகத்தீசருடைய சீடர்கள். ஆசான் அகத்தீசருடைய நாமத்தைச் சொல்லாமல் ஒருவன் ஞானியாக முடியாது. ஆசான் அகத்தீசர் அந்த அளவிற்கு கருணை உள்ளவர்.
     ஞானிகள் அனைவருக்கும் கருணை இருக்கிறது. மகான் சுப்பிரமணியருடைய முதல் சீடர் அகத்தியர். அதனால் அவருடைய நாமத்தைச் சொல்லாமல் ஒருவன் கடவுளை அடைய முடியாது. அப்பேர்பட்ட பெருமையுடையவர் ஆசான் அகத்தீசர்.
     திருஅருட்பா அருளிய ராமலிங்கசுவாமிகள் சன்மார்க்க சங்கம் உலகெங்கும் இருக்கிறது.
     மகான் ராமலிங்கசுவாமிகளின்சன்மார்க்க சங்கம் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, ஏன் நீங்கள் மட்டும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் என்று வைத்திருக்கிறீர்கள்? என்று ஒரு அன்பர் கேட்டார்.
     ஆசான் அகத்தீசர் வேறல்ல, மகான் ராமலிங்கசுவாமிகள் வேறல்லேன்பது அவருக்குத் தெரியாது, இருவரும் ஒன்றுதான். ஆசான் அகத்தீசருக்கும் வாசி வசபட்டிருக்கிறது. ஆசான் ராமலிங்கசுவாமிகளுக்கும் வாசி வசப்பட்டிருக்கிறது. வாசி வசப்படாமல் இந்தத் துறைக்கு வரமுடியாது.
    
     புருவமத்தியில் மூச்சுக்காற்று ஒடுங்குவதை வாசி வசப்படுதல் என்பார்கள். அப்படி ஒடுங்கிய காற்று அங்கேயே தங்கி இருக்க வேண்டும். அதுதான் ம் நிலை என்றும் மௌன நிலை என்றும், சும்மாயிருத்தல் சுகம் என்று சொல்வார்.
     மகான் ராமலிங்கசுவாமிகளும் சும்மாயிருக்கும் சுகம் என்று சொல்லுவார்.
     எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
                எல்லாம் வல்லான் தனியே ஏத்து
திருவருட்பா ஆறாம் திருமுறை – கவி எண் 1
                இன்று வருமோ நாளைக்கே வருமோ
                மற்று என்று வருமோ அறியேனே என் கோவே
                துன்று மல வெம்மாயை யற்று
                வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்
                              திருவருட்பா ஐந்தாம் திருமுறை – கவி எண் 1
                சும்மாயிருத்தல் என்பது மிகப்பெரிய ரகசியம். இதை நொடிப்பொழுது வாசியை செலுத்தக்கூடிய வாய்ப்பு என்று சொல்வார்கள்.
     இந்த வாய்ப்பு யார் யாருக்கு கிடைக்கும்?
     வாசி வசப்படுதல் என்பது அவரவர் திறமையா?
     மகான் ராமலிங்கசுவாமிகளாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அவர்களுடைய திறமை இல்லை.
    
     நாமென்ற சொல்லற்று யோக ஞானம் என்பார் மகான் புஜண்டமகரிஷி. நாம்தான் யோகத்தை செய்கிறோம், ஞானத்தில் ஈடுபடுகிறோம் என்று நினைக்கக்கூடாது. அவர்கள்தான் நடத்தித் தர வேண்டும்.
    
     ஞானிகளுக்கு தொண்டு செய்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளை வழிபாடு செய்ய வேண்டும், வழிபாடு செய்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
    
     வாசி வசப்படுதல் என்றால் மூச்சுக்காற்று லயப்படுதல் என்று அர்த்தம்.
     மூச்சுக்காற்று லயப்படாமல் ஒருவன் எந்தத் துறையிலும் முன்னேற முடியாது.
     காமதேகத்தை நீக்குவதற்கு, மூச்சுக்காற்று வசப்பட வேண்டும். காமதேகம் நீங்காமல் ஒருவன் என்னதான் முயற்சி செய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. எமன் பிடரியில் அடித்துக் கொண்டு போவான். என்ன திறமை இருந்து என்ன பயன்?
     என்ன படித்தாலும் குரு இல்லாச் சீடன்
      என்ன பிரயோசனமாம் அலைந்து சாவான்.
என்பார் மகான் அகத்தியர்.
     சொன்னபடி இன்னமொரு சேதி சொல்வேன்
            சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு
      என்ன படித்தலும் குரு இல்லாச் சீடன்
            பொன்னதனைக் கம்மாளர் உருக்கினார்போல்
      புருவனடுத் தமர் திறக்க இருக்கான் பூட்டு
            கொன்றுவிடும் கருவியெல்லாம் சனத்தில் மாளும்
      கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாயக்கானே
                                                -மகான் அகத்தியர் அருளிய ஞானசைத்தண்யம் 51ல் – கவி எண் 4
                என்ன படித்தென்ன எமவாதைக்கு என்பார்கள். என்ன படித்து என்ன செய்வது? எமன் வருவானே? அவனை எப்படி வெல்வது? கல்வியின் துணை கொண்டு எமனை வெல்ல முடியாது.
       எமனை வெல்லுகின்ற உபாயம் ஒன்றுண்டு. மனிதனுக்குள்ளேயே பத்தாம் வாசலாகிய புருவமத்தி என்று சொல்லப்பட்ட ரகசியத்தை அறிந்து, அவ்வழியே காற்றை செலுத்துகின்ற அன்பர்களுக்த்தான் மரணமிலாப் பெருவாழ்வு கைகூடும் அல்லது காமதேகம் நீங்கும். காமதேகம் நீங்காமல் எவ்வளவுதான் கற்றாலும் பயனில்லை.
     ஞானிகளுடைய ஆசி இல்லாமல் ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. ஆசான் அகத்தீசர் போன்ற ஞானிகள் அனைவரும் குருபக்தி செலுத்தியிருக்கிறார்கள். எந்த ஞானிகளிடத்து குருபக்தி செலுத்தினாலும் அந்த பக்தி ஆசான் அகத்தீசரையே சாரும். மகான் சுப்ரமணியரிடத்து குருபக்தி செலுத்தினாலும், ஆசான் அகத்தீசரிடம் குருபக்தி செலுத்தினாலும், வேறெந்த ஞானிகளிடத்து குருபக்தி செலுத்தினாலும் அந்த பக்தி ஆசான் சுப்ரமணியரைச் சாரும், மகான் அகத்தீசர்ச் சாரும்.
     பக்தி செலுத்தித்தான் இந்த வாய்ப்பைப் பெற முடியும்.
    
     எப்படி பக்தி செலுத்துவது?
          
     எதை நோக்கி பக்தி செலுத்துவது?
     ஆசான் அகத்தீசரை பூஜை செய்யும்போதே, மரணமிலாப் பெருவாழ்வு ஒன்று இருக்கிறது, இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள அடியேனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.இப்படிக் கேட்டால், ஞானிகள் அருள் செய்வார்கள். நோக்கம் மேலானதாக இருக்க வேண்டும், இதற்காக ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறோம்.
     ஞானிகள் நேரடியாக வந்து நம்மிடம் சொல்ல மாட்டார்கள். நாங்கள்தான் சொல்ல வேனுட்ம். நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும், அதுதான் எங்கள் வேலை. இதுதான் எங்களுக்கு இட்ட கட்டளை. நான் வாசி வசப்பட்டவன். நாங்கள் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். வாசி வசப்பட்டால்தான் எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாசி வசப்பட்டால் எல்லா நன்மையும் உண்டாகும்.
     மற்றவர்கள் சாதிக்க முடியாது ஒன்றை சாதிக்கலாம்.
      வெளியோடு வெளி சேர்ந்தாள் வச்த்துவாச்சு
      விரோத சத்ருக்களெல்லாம் விருதாவாச்சு
    மகான் சட்டைமுனிவர்
        வாசிவசப்பட்ட மக்கள் காமம் அற்றவர்கள், பேராசை அற்றவர்கள், பொறாமை அற்றவர்கள், வஞ்சனை அற்றவர்கள், கவலை அற்றவர்கள். பகைவர்களால் இடையூர் வராது. அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
     வாசி வசப்பட்டதனாலே கவலை இருக்காது, சஞ்சலம் இருக்காது.
      வஞ்சகமற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
            சஞ்சல மேதுக்கடி – குதம்பாய்
            சஞ்சல மேதுக்கடி
                                   -மகான் குதம்பைச் சித்தர்
        வஞ்சகம் அற்றவர்கள் ஞானிகள். ஞானிகளிடம் பொறாமை இருக்காது, வஞ்சனை இருக்காது, பேராசை இருக்காது, குணக்கேடு இருக்காது. ஞானிகள் ஆசி பெற்றதனாலே, வாசி வசப்பட்டிருக்கிறது. வாசி வசப்பட்டதனால்தான் வஞ்சகம் அற்றுவிட்டது.
     வஞ்சகம் என்பது நமக்கே தெரியாமல் நம்மை வஞ்சித்துக் கொண்டிருக்கும். அது இயற்கையா? செயற்கையா?
     நம்மை வஞ்சிப்பது இயற்கையா? செயற்கையா? அல்லது நமது அறியாமையா? நம்மை வஞ்சித்துக் கொண்டிருப்பது நமது தேகம்தான். சிறிது நேரம் கூட ஓய்வு கொடுக்காமல், தொடர்ந்து சிந்திக்கும். தூங்கும்போது கவனமாக வந்து வஞ்சனை செய்யும் அல்லது தூக்கம் இல்லாமல் செய்யும் அல்லது நோயை உண்டாக்கும். இப்படி எல்லா வேலையையும் செய்யும்.
     நோயை உண்டாக்குவது நாம் செய்த பாவம்தான. அதுதான் நமக்கு வஞ்சனை செய்யும். வஞ்சகமற்று – வஞ்சனை, வஞ்சகம் அற்றுப் போக வேண்டும்.
உலகம் தோன்றும்போதே வஞ்சனையும் சேர்ந்தே தோன்றியது. உலகம் தொன்றுபோதே பொறாமையும், கொடும் எண்ணங்களும் தோன்றியிருக்கிறது. இப்படி மனிதன் தோன்றும்போதே, குணக்கேடுகளும் தோன்றியது. எல்லா வகையான குணக்கேடுகளோடுதான் பிறந்திருக்கிறான்.
     வஞ்சகமற்று வழிதன்னைக் கண்டோர்க்கு – வழி என்றால் புருவமத்தி. வஞ்சனை நீங்காமல், ஒன்றும் செய்ய முடியாது.
     வஞ்சனை எது? உடம்பா அல்லது உயிரா?
          
     உடம்புதான்.
    
    
     உடம்பாகிய வஞ்சனை தீர வேண்டும். இல்லையென்றால் என்னதான் முயன்றாலும் முடியாது.
     ஞானிகளுடைய ஆசியைப் பெற்று வஞ்சனையை வென்றார்கள். வஞ்சனை என்பது பசியா? உணவா? காமமா? இறப்பா? பிறப்பா? என்றால், நம்மை வஞ்சிப்பது பசிதான்.
     பசிக்கு உணவு தரலாமா? பசிக்கு உணவு தரலாம். பசிக்கு உணவு தரலாம். பசிக்கு உணவு தந்தால் வஞ்சனை வரும். உணவு கொடுக்காவிட்டால் நம்மை வஞ்சித்து விடும், உயிரே போய்விடும். ஆக, இப்படி ஒரு வஞ்சனை..
               
    
      வஞ்சகமற்று வழிதன்னைக் கண்டோர்க்கு என்றார். சஞ்சலம் அற்றுப்போக வேனுட்ம், வஞ்சகம் அற்றுப்போக வேண்டுமென்று ஞானிகள்தான் சொல்வார்கள். வஞ்சனை செய்வது எது? அது பொறாமையா? பேராசையா? பொருள்பற்றா? பழி வாங்கும் எண்ணமா?
    
     ஒரு வினாடி கூட மனதை சாந்தமாக வைத்திருக்காது. இதுதான் வஞ்சனை.
     வஞ்சகமற்று வழிதன்னைக் கண்டோர்க்கு என்றார்.
     வஞ்சகம் என்பது செயற்கையா? இயற்கையா?
     எல்லா உயிர்களும் தோன்றும்போதே, வஞ்சகத்தையும்  சேர்த்து இயற்கை அன்னை வைத்திருக்கிறாள். அவள் வஞ்சகத்தொடு தான் நம்மைப் பிறக்க வைத்திருக்கிறாள், வஞ்சகத்தொடு வாழச் செய்கிறாள், வஞ்சகத்தொடு வீழ்த்தி விடுகிறாள். பிறவி என்பது இப்படி இருக்கிறது.
     இதை புரிந்து கொண்டவர்கள் ஞானிகள். இதைச் சொன்னது மகான் குதம்பைச்சித்தர்,
     வஞ்சகமற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
            சஞ்சல மேதுக்கடி – குதம்பாய்
            சஞ்சல மேதுக்கடி
                                   -மகான் குதம்பைச் சித்தர் – கவி எண் 4
        நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
            வாட்டாங்க ளேதுக்கடி – குதம்பாய்
             வாட்டாங்களேதுக்கடி
                                                                -மகான் குதம்பைச் சித்தர் பாடல் – கவி எண் 9
                நாட்டத்தைப் பற்றி நடுவணைச் சேர்வோர் என்றார். அங்கே வழிதனை என்றார். இங்கே நடுவணை சேர்ந்தோர் என்றார்.
     புருவ மத்தியாகிய சுழிமுனையில் வாசி வசப்படும்.      நாட்டத்தைப் பற்றி – நாட்டம் என்பதற்கு விருப்பம் என்றொரு பொருள் உண்டு. கூர் பார்வை செலுத்துவது என்றும் ஒரு பொருள் உண்டு.
      நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
            வாட்டாங்க ளேதுக்கடி – குதம்பாய்
             வாட்டாங்களேதுக்கடி
                                                                -மகான் குதம்பைச் சித்தர் பாடல் – கவி எண் 9
     நாட்டம் என்பது கண்கள். புருவமத்தியில் கூர் பார்வையை செலுத்துவதை வாசி வசப்பட்ட மக்கள்தான் செய்ய முடியும்.
    
     நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு – நடுவணை என்பது புருவமத்தி, சுழிமுனைக்கதவு.
     அங்கே சஞ்சலம் ஏதுக்கடி? என்றார். இங்கே வாட்டங்கள் ஏதுக்கடி? என்றார். வாட்டமில்லை அவர்களுக்கு. என்ன காரணம்? பெரியோர்கள் ஆசி இருப்பதினாலே அவரகளுக்கு வாட்டமில்லை.
     வாட்டம் – என்ன முகம் வாட்டமாக இருக்கிறது என்பார்கள். மனவாட்டத்தை வெளிப்படுத்துவது முகவாட்டம்.
     புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்றுக்கு பூரணம் என்று பொருள் உண்டு.
     பூரணம் கண்டோர் இப்பூமியிலே வரக்
            காரணம் இல்லையடி – குதம்பாய்
            காரணம் இல்லையடி
                        மகான் குதம்பைச் சித்தர் பாடல்
        பூரணம் என்பது புர்வமத்தி. புருவமத்தி ரகசியத்தை அறிந்த மக்கள் மீண்டும் பிறக்க வேண்டிய அவசியமில்லை.
     அவன் ஏன் மீண்டும் வர வேண்டும்? அவசியமே இல்லை. இந்த வாய்ப்பை எப்போது ஒருவன் பெறுவான்?
          
     நீங்களெல்லாம் பெற்ற இந்த வாய்ப்பு. எங்களுக்கெல்லாம் இல்லையா? என்று கேட்டான். உங்களுக்கும் இந்த வாய்ப்பு உண்டு. நாங்கள் எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறோம்.
     ரோமரிஷி முதுபெரும் ஞானி. அவரே சொல்கிறார்.
                காப்பான கருவூரார் போகநாதர்
                                கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
                முப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர்
                                முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
                கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
                                கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
                வாப்பான வாதத்திற்கு ஆதியான
                                வாசமுனி கமலமுனி காப்புதானே
                                                                   மகான் ரோமரிஷி பூஜாவிதி 7ல் கவி எண் 2
               
        இந்த துறையே அடிபணிந்து வருவதாகும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஞானிகள் ஆசி பெறாமல் வர முடியாது.
     நான் முற்றுப் பெற்றிருக்கிறேன். முற்றுபெற்ற மகான் ரோமரிஷியாகிய நான், நீங்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறோம். என்னுடைய சீடர்தான் மகான் கருவூர்முனிவர். நான் அவர் தோன்றுவதற்கு முன்பே இதை பாடி வைத்திருக்கிறேன்.
     இந்தப் பாடலை பாடியதன் நோக்கமே, நீங்களும் நாட்டத்தைப் பற்ற வேண்டும், நடுவணையை சேர வேண்டும், வஞ்சகம் அற்று இருக்க வேண்டும், சஞ்சலம் அடையக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லியிருக்கிறோம்.
     பூரணம் கண்டோர் இப்போமியிலே வரக்
            காரணம் இல்லையடி
     என்று சொன்னது போல, நீங்களெல்லாம் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான், காப்பான கருவூரார் என்ற இப்பாடலை பாடியிருக்கிறேன் என்பார் மகான் ரோமரிஷி.
     ஏன் எடுத்தவுடன் காப்பு என்று சொல்லியிருக்கிறீர்கள்? என்றான்.
     காப்பு என்றால் பாதுகாப்பு. அதில் முதல் பகுதியாக வருவது, முதல் தலைவனாக வருவது மகான் கருவூர்முனிவர்தான். தஞ்சை பெரியகோவிலை ஸ்தாபித்த மாமுனிவன் கருவூர்முனிவர். அதனால்தான் காப்பான கருவூரார் என்று சொன்னான்.
     சரி, மற்றவர்கள் அருள் செய்யமாட்டார்களா? என்றால், எல்லோரும் அருள் செய்வார்கள், நீ மகான் கருவூர்முனிவர் என்று சொன்னால், மகான் குதம்பைமகரிஷிக்குத் தெரியும். நீ மகான் கருவூர்முனிவர் என்று சொன்னால், மகான் சட்டைமுனிவருக்குத் தெரியும். உலக மக்கள் முன்னேற வேண்டுமென்பதற்காகத்தான் இந்தப் பாடல்களை இலகுவாக பாடியிருக்கிறோம். மூன்றாம் வகுப்பு மாணவனும் படிக்கக் கூடிய வகையில் இந்தப் பாடல் எளிதாக உள்ளது. மகான் கருவூராரும், மகான் போகமகாரிஷயும் முதன்மையானவர்.
     எடுத்ததும் மகான் கருவூர்முனிவர் என்று ஏன் சொன்னார்? என்று கேட்டான். அவருடைய காலத்தில்தான் வெகு முனிவர்கள் உருவாகியிருக்கிறார்கள். நல்ல மனதோடு சொல்லியிருக்கிறார். இப்படி சொல்ல வேண்டும். சட்டம் அது.
     காப்பான கருவூரார் போகநாதர் என்று ரோமரிஷி சொன்னதன் நோக்கம், ஏ மனிதவர்க்கமே! நீ ஏதேதோ கற்றுக் கொண்டு, மிகுதியாக கற்றதாக நினைக்கின்றாய். உன்னுடைய கல்வி பயன்படாது. ஆகவே, உனக்கு ஒரு பாதுகாப்பு சொல்கிறேன் கேட்டுக் கொள்.
     முதல் தலைவன், முதுப்பெரும் தலைவன் மகான் கருவூர்முனிவர். உனக்கு பாதுகாப்பாக எப்போதும் இருப்பார், ஆசான் கருவூர்தேவா என்று அழைத்தால், “கலங்காதே மகனே!” என்று சொல்லும் வல்லமை ஆசான் கருவூர்முனிவருக்கு உண்டு. ஆகவே, முதல் முறையாக, முதலாக உனக்கு பாதுகாப்பு சொல்லியிருக்கிறேன்”
      காப்பான கருவூரார் போகநாதர் – மகான் போகநாதர் முதுபெரும் ஞானி. அவருடைய ஆற்றலுக்கு எல்லையே கிடையாது. காலம்காலமாக, எந்த காலத்திலும் அவருடைய ஆற்றலுக்கு நிகரே கிடையாது. பழனியில் கோவிலை ஸ்தாபித்து, அவர் அங்கேயே அடங்கியிருக்கிறார். அங்கே யார் சென்றாலும் அருள் செய்யக் கூடியவர்தான் மகான் போகமகரிஷி. எந்த நேரத்தில் அழைத்தாலும் அருள் செய்யக்கூடிய ஆசான் போகமகாரிஷி. அவருடைய சொந்த பெயர் ஜோதிரிஷி என்று சொல்வார்கள். அவர் ஒளி உடம்பை பெற்றிருக்கிறார். பழி உடம்பை நீக்கினால் ஒளி உடம்பு வரும்.
     வஞ்சனை என்பது பழி. இந்த உடம்பு நம்மை வஞ்சிக்கக்கூடியது. பழி உடம்பிலிருந்து வஞ்சனையை நீக்கினால் ஜோதி உடம்பாகும். ஜோதி உடம்பை நமக்குள் அறியக்கூடியது வாய்ப்பு இருந்தும் யாரும் முயற்சிக்கவில்லை.
     பழி செய்யக்கூடிய உடம்பு இது. கொஞ்சம் கூட கருணை காட்டாது. முதுமை வந்து கொண்டே இருக்கும். ஈளை, இருமல் வந்து கொண்டே இருக்கும். எல்லா நோய்க்கும் காரணமாக இருக்கும். நம்மை அநியாயமாக கொன்று விடும். ஆக, இது பழி செய்யும் உடம்பு. இதை ஒளி உடம்பாக்குவது என்பது சின்ன விசயமல்ல.
     இதற்குத்தான் மகான் ரோமரிஷி, அடுத்து இறந்து ஞானிகளை அறிமுகப்படுத்தி சொல்கிறார்.
     காப்பான கருவூரார் போகநாதர், அடுத்து கருணையுள்ள அகத்தீசர் என்றார்/
     நமது சங்கம் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம். ஞானிகள் எல்லோரும் ஒரே தன்மை உள்ளவர்கள்தான். யாரை வணங்கினாலும் அது ஆசான் அகத்தீசரைத்தான் சேரும். அவர் கருணை உள்ளவர் என்று சொன்னார், என்ன காரணம்? சமுதாய மக்களுக்கு தொண்டு செய்தவர்களிலே மிக அதிகமாக தொண்டு செய்தவர் ஆசான் அகத்தியர் ஆவார். ஊர் ஊராக சென்று, சோர்வாகாமல், சோம்பல் இல்லாமல் தொண்டு செய்திருக்கிறார். பெருவாரியான மக்களை நிலை உயர்த்தி ஞானிகளாக்கினார்.
    
     கூவுவது அகத்தீசா என்று கூவு என்றார். கூவினால் என் நாமத்தைச் சொல் என்றார். நீ வேறு எங்கும் போக வேண்டாம். என் நாமத்தைச் சொல் என்றார். அதனால்தான் கருணையுள்ள அகத்தீசர் என்றார். மகான் சட்டமுணியும் இதை சொல்வார். இப்படி ஒவ்வொரு இடத்திலும், கூவுவது அகத்தீசா என்று கூவு என்றார். என் நாமத்தைச் சொல் என்றார்.
      என்னுடைய பேர்சொல்லில் கூட்டிக்கொண்டு
            இசைவான பொதிகையிலே ஏறுவார் பார்
      உன்னுடைய திறம்கண்ட போதுதானே
            உறுதியுள்ள சித்தனென்று பேருமீய்வேன்
      மின்னுடைய வொளிகாட்டி அறுதலமும்காட்டி
            மெய்ஞ்ஞான வீடுபெற நிலையும்காட்டி
      பன்னுடைய சிதம்பரமும் மேருபூசைப்
            பாலிப்பொம் அஷ்டாங்கம் பரிந்துகாணே.
                                                       மகான் அகத்தியர் அருளிய பூரண சூத்திரம் – கவி எண் 98
        பொதிகை என்பது புருவமத்தி. இசைவான பொதிகை அதுதான்.
     என் நாமத்தைச் சொல். என்னைக் கூப்பிடு என்று சொன்னால்தான் கருணையுள்ள அகத்தீசர் என்றார்.
     இந்த காலகட்டத்தில் கல்வியறிவு மிகுதியாக இருக்கிறது. இந்த வழிபாடு ஊரெங்கும், உலகெங்கும் பரவுவதாலும் இந்த காலகட்டத்திலே ஞானிகள் மிகுதியாக வருவார்கள் என்பதனாலே கருணையுள்ள அகத்தீசர் என்றார்.
      அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
            அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
      அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
            அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
      அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
            அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
      அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
            அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.
                                                 – மகான் புஜண்டமகரிஷி பெருநூல் காவியம் – கவி எண் 142
                ஆசான் புஜண்டமகரிஷி நாமத்தைச் சொன்னாலே, ஈரேழு பதினான்கு லோகமும் கிடுகிடுவென நடுங்கும். அப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள ஆசான் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
     ஆசான் அகத்தீசர் பெரியோர், கருணை உள்ளவர், சமுதாயத்தில் தொண்டர்களுக்கெல்லாம் ஞானம் உண்டாக வேண்டுமென்று நினைத்தவர். அதனால்தான் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் என்றார். மகான் சட்டைமுனியும் மிகப் பெரியவர். பல பேருக்கு பக்தியை போதித்துள்ளார்கள்.
     ஞானிகள் மூசுக்காற்றைப் பற்றி சொல்வாரா? மூச்சுக்கற்றைப் பற்றி சொன்னால் என்னாகும்? அவன் முறையாக செய்யாமல் செத்துப் போவான். பக்தி நெறியை போதிப்பதே ஞானிகளுடைய நோக்கம், பக்தி இல்லையென்றால் இந்த இடத்திற்கு வரவே முடியாது.
     ஆசான் அகத்தீசர் கருணை உள்ளவர் என்றும், மகான் கருவூர்முனிவர்தான் காப்பு என்றும், நமக்கு பாதுகாப்பாய் இருப்பவர் என்றும் சொன்னார். மேலும் மகான் போகமகாரிஷியின் அருள் பெற வேண்டுமென்றும், கருணை உள்ளவர் அகத்தியர் என்றும் மகான் ரோமரிஷி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
     ஆசான் புஜண்டமகரிஷி சொல்வதுபோல, அகத்தியரே தம்மை கூவு என்று சொல்கிறார்.
     மகான் சாட்டமுனியும் மிகப்பெரிய வல்லமை உள்ள ஆசான். நான் பெரிய “மம்மா” என்னைக் கூப்பிடு! என்று ஆசான் சட்டமுனியும் சொல்வார்.
           
      ஆச்சென்று சொன்னதை நீ அறிவதெப்போ
            தடிமுடிவும் நடுவணையைப் பெருவதென்றோ
      மாச்சலென்ன ஒரு மூச்சாய் என்னைப் பாரு
            மம்மாவோ இன்னாபா ரெண்னைத் தானே
      தீச்சுட்ட புண்ணானால் ஆறும் பாரு
            தீராது என் நாவாற் சுட்ட புண்ணு
      ஆச்செண்ட்ர் சட்டைமுனி சொன்ன பேச்சை
            அறிந்து பாருன்னை அறிந்தென்னைத் தானே
                                                                 – மகான் சட்டைமுனிவர் அருளிய ஞானவிளக்கம் – கவி எண் 24
   என்னை கூப்பிடு, என்னை “மம்மா” வா? என்று கேட்டாதே. நான் மம்மாதான். மம்மா என்றால் பெரிய பயில்வான் என்று அர்த்தம். “நான் ஒரு மம்மாதான்” என்றார் மகான் சட்டமுனிவர்.
     என்னை நீ எந்த நேரத்தில் அழைத்தாலும் சரி, அது இரவு நேரமாக இருந்தாலும் சரி, பகல் நேரமாக இருந்தாலும் சரி அல்லது செல்கின்ற வழியில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அது பகையாக இருந்தாலும் சரி, வறுமையாக இருந்தாலும் சரி, என்னை நீ கூப்பிடு என்பார்.
    
     அந்த அளவிற்கு நீர் வல்லமை உள்ளவரா என்றால், ஆமாம் அவர் மட்டுமல்ல, ஞானிகள் அனைவரும் மிக்க வல்லமை உள்ளவர்கள். எனவே, கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர், கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் என்பார். இவர்கள் எல்லோரும் மிகப் பெரிய ஞானிகள். மகான் கொங்கனமகரிஷியும் மிகப் பெரிய மகான்.
     மகான் கொங்கனமகரிஷி ஐநூற்று பதினேழு பேரை நிலை உயர்ச் செய்திருக்கிறார். இவர்களெல்லாம் மூச்சுக்காற்றை பற்றி சொல்லமாட்டார்கள். மூச்சுக்காற்று தலைவனால் நடத்தித் தரப்பட வேண்டும். நமது விருப்பத்திற்கு செய்தால் பிரச்சனை வந்துவிடும்.
     அவரவர்கள் முன்னேற வேண்டும், ஜெனமத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்று ஞானிகள் சொல்கிறார்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது என்பது சாதாரண விசயமல்ல. ஐயே! மெத்த கடினம் என்பார்கள்.
         
      காப்பான கருவூரார் போகநாதர்
                                கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
                முப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர்
                                முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
                கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
                                கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
                வாப்பான வாதத்திற்கு ஆதியான
                                வாசமுனி கமலமுனி காப்புதானே
                                                                   மகான் ரோமரிஷி பூஜாவிதி 7ல் கவி எண் 2
இந்தப் பாடலில் சொல்லப்பட்ட பதினான்கு ஞானிகள், நினைத்தால் இந்த உலகத்தை பொடியாக்குவார்கள். அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தை உண்டாக்குவார்கள். அவ்வளவு வல்லமை இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
     இப்பேர்ப்பட்ட ஞானிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதை நாம் திட்டமிட்டு செய்தோமா? இல்லை ஞானியர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். நம் திட்டமில்லை. இப்படி ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டுமென்று ஞானிகளே உருவாகியிருக்கின்றார்கள்.
    
     மகான் ராமலிங்கசுவாமிகள் ஞானியர்களை அறிமுகப்படுத்தாமல், எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சொன்னார். இப்படி இருக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. இந்தக் காலம் ஞானசித்தர் காலம் என்பதனாலே, ஞானிகளை அறிமுகப்படுத்தி, திருவடியைப் பற்ற நாம் தூண்டுகின்றோம், நாங்களும் திருவடியைப் பற்றுகிறோம். நீங்களும் ஞானிகளின் திருவடிகளைப் பற்றி வணங்கி வருகிறீர்கள்.
    
     எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் பக்தி நெறிதான் முக்கியம். ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்ற மக்கள் பக்த்தியை கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தவிர வேறு வழியில்லை. மகான் கொங்கனமகரிஷி பக்திநெறியின் மூலம்தான் ஐநூற்று பதினேழு சாதாரன மனிதர்களை கடவுள் ஆக்கியவர்.
     கடவுள் யார்?
     விகாரமற்றவர் கடவுள்.
     காமம் அற்றவர் கடவுள்.
     பசியற்றவர் கடவுள்.
     பேராசை அற்றவர் கடவுள்.
     பொறாமை அற்றவர் கடவுள்.
     கவலை இல்லாதவர் கடவுள்.
     முதுமை இல்லாதவர் கடவுள்.
     இவர்கள்தான் கடவுள் இப்பேர்ப்பட்ட ஒரு வாய்ப்பை நாம் அடைவதற்கு எல்லாம்வல்ல ஞானிகளை பூஜை செய்ய வேண்டுமென்று சொல்கிறோம். மகான் கொங்கனமகரிஷியும் இதைத்தான் சொல்வார்.
      அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
            அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
      அகத்தியரே காஷாய வேட மீவார்
            அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
      அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
            யாருக்குந் தடையில்லை அரசே என்பார்
      அகத்தியர் தாம் எக்கியதில் பிறந்த யோகி
            ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே
                                                                                      -மகான் கொங்கணர் கடைக்காண்டம் – கவி எண் 76
                ஒரு மனிதன் தொண்ணூறு வயதில் இறந்து கிடக்கிறான், அவன் எதையாவது வென்றிருக்கிறானா?
     எத்தனை வயது வரை வாழ்ந்தான்? என்று கேட்டான்.
     அவர் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னான்.
     தொண்ணூறு வயது வரை வாழ்ந்து என்ன சாதித்தான்? என்று கேட்டான்.
     இவன் என்ன தொண்ணூறு வயது வரை வாழ்வது? அந்த புளிய மரத்தைப் பார். இரண்டாயிரம் வருடமாக இருக்கிறது. சிலபேர் எனக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது என்பான். இவனுக்கு எண்பத்தைந்து வயது. ஆனால் இங்கிருக்கும் புளியமரத்திற்கு இரண்டாயிரம் வயதாகிவிட்டது என்போம். இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்ல மாட்டோம்.
     எண்பத்தைந்து வயது வரையிலும், என்ன செய்தாய்? என்று கேட்டோம்.
     என்ன செய்ய வேண்டுமென்று யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னான்.
     அப்படியே சொன்னாலும் நீ கேட்பாயா? உன்னுடைய வினை இருக்கிறதே. வினை இருந்தால் கேட்கமாட்டான்.
     மரணம், வெல்ல முடியாத ஒன்று. அதை வெல்ல வேண்டும். அதற்குத்தான் மகான் கொங்கணமகரிஷி, அகத்திய மாரிஷி நமா என்றென்றோது அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் என்று சொல்வார்.
     அஷ்டமா சித்தி என்பது சின்ன விசயமல்ல. புருவமத்தியில்  ஒடுங்குகின்ற காற்றுக்கு “எட்டு” என்று பொருள் உண்டு. வாசி வசப்படாமால் அட்டமா சித்தியும் வசப்பட்டதாக அர்த்தம். தச தீட்சை என்ற ஒரு பொருள் உண்டு.
     தினந்தினம் ஆசான் அகத்தியரை பூஜை செய்தால் வாசி வசப்படும்.
    
     அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் – குளிகை என்பது ஒரு நொடிப்பொழுது. நொடிப்பொழுது வாசியை செலுத்தக்கூடிய வாய்ப்பு, ஆசான் அகத்தீசர் இந்த வாய்ப்பை தர வேண்டும். இல்லையென்றால் என்ன பாடுப்பட்டாலும் பயன்படாது.
      அகத்தியரே காஷாய வேட மீவார் – காஷாய வேடம் என்பது காவி உடை. இதை ஞானிகள்தான் தருவார்கள். காவி உடை கொடுத்து விட்டால், அவ்வளவுதான் அதற்கு ஈடு இணையே கிடையாது.
     அவன் மனது செம்மையானது. இனிமேல் தேறிக் கொள்வான் என்று சொல்வார்கள். முதுபெரும் தலைவர் ஆசான் அகத்தீசர் காவி கொடுத்த அந்த நாளிலிருந்து, எல்லா சித்தர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.
     செம்மைப்பட்ட மனிதன். செம்மைப்பட்ட மனிதனுக்குத்தான் வாழ்க்கை செம்மையாகும். இனி மரணமிலாப்பெருவாழ்வு இவனுக்கு அமையப் போகிறது. ஆகவே, செம்மைப்பட்டவன், தெளிந்தவன். முன் செய்த புண்ணியத்தால் அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. ஆசான் மனம் மகிழ்ந்து காவி உடை தந்திருக்கிறார். இன்று முதல் நீ காவி கட்டு என்று ஆசான் அகத்தீசர் சொன்ன பின், அதைத் தடுக்கவோ, நிறுத்தி வைக்கவோ, யாராலும் முடியாது. அவனை ஞானிகள் சூழ்ந்து கொள்வார்கள்.
     அகத்தியரே காஷாய வேட மீவார் என்பார். காஷாயம் என்பது காவி உடை. வேடம் என்பது உடை அல்லது அந்த தோற்றம்.
      அகத்தியரே காஷாய வேட மீவார்
            அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
      ஏன் குடிலாசானுக்கு இந்த வாய்ப்பை ஞானிகள் கொடுத்தார்கள்?
     ஒங்காரக்குடிலாசான் பல ஞானிகளுக்குத் தொண்டு செய்திருக்கிறார். புண்ணியவான். ஞானிகளுக்குத் தொண்டு செய்து ஆசி பெற்றிருக்கிறார். ஆகவே, அவருக்கு நான் காவி கொடுக்கப் போகிறேன் என்றார்.
     செம்மைப்பட்ட தேகம், செழுமையான அறிவு, தன்னடக்கமான தன்மைகள், பொருள் பற்றற்ற புண்ணிய சிந்தனை, பொருள் பற்றற்ற புண்ணியவான், விகாரமற்றவர், விவேகி, உயர்ந்து மகான் இப்பேர்ப்பட்ட தன்மையுடையவர் ஒங்காரக்குடிலாசான்.
     முன் ஜென்மத்திலே மகான் கருவூர்முனிவருக்கு தொண்டு செய்திருக்கிறார். அவருடைய ஆசியைப் பெற்று அளவிலா மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மகான் கருவூர் முனிவருடைய ஆசி பெற்றதனாலே, ஓங்காரகுடிலாசானுக்கு வாசி நடத்திக் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார்.
     வாசி நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் இன்று முதல் செம்மையான வாழ்கை வாழப்போகிறார் என்பதற்காக பாப் காவி தந்திருக்கிறேன். இனி அந்தப் பிள்ளையை உங்கள் பிள்ளையாக ஏற்று அருள் செய்ய வேண்டுமென்று முருகப்பெருமானிடம் எல்லா ஞானிகளும் கேட்பார்கள்.
     அந்தக்கணமே, எல்லா ஞானிகளும் சூழ்ந்து கொண்டு அருள் செய்வார்கள். அந்த தொண்டன் எஹ்டை விரும்புகின்றானோ, அதை நிறைவேற்றுவார்கள்.
      அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் – காஷாயமாகிய காவி உடையை ஆசான் தந்தால், சித்தர்களும், ஞானிகளும் சூழ்ந்திருந்து அவரை கடைத்தேற்ற வேண்டியது, கரை ஏற்ற வேண்டியது ஞானிகளுடைய கடமை ஆகும்.
      அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
            அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
      அகத்தியரே காஷாய வேட மீவார்
            அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
      அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
            யாருக்குந் தடையில்லை அரசே என்பார்
      அகத்தியர் தாம் எக்கியதில் பிறந்த யோகி
            ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே
                                                                                      -மகான் கொங்கணர் கடைக்காண்டம் – கவி எண் 76
       
      அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல – மேரு என்பதற்கு மலை என்ற பொருள் உண்டு. ஆசான் அகத்தீசரை தெண்டனிடுதல் என்பது, ஆசான் அகத்தீசரை வணங்கி, மேரு செல்ல வேண்டும் என்பதாகும். மேரு என்பது பொதிகை மலையா? என்று கேட்டான். பொதிகை மலைக்கு வந்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டார்.
     மேரு என்றால் புருவமத்தி என்று அர்த்தம். சொல்லவொணாப்பெருமை தரக்கூடிய இடம் புருவமத்தி. அங்கே ஜோதியை காண்கின்ற மக்கள் மாமேருவாக மாறுவார்கள்.
      யாருக்குந் தடையில்லை அரசே என்பார் – யாருக்கும் தடையில்லை. ஆசான் திருவடியை தெண்டனிட்டு வணங்கி பூஜை செய்த மக்களுக்குத் மேருவாகிய புருவமத்தி என்று சொல்லப்பட்ட மலைவாசலுக்குள் நுழையலாம் என்றார்.
     அகத்தியர் தாம் எக்கியதில் பிறந்த யோகி – எக்கியம் என்பது யாகம்
யாகம் என்பது, மூலாதாரத்தில் கனலை எழுப்ப வேண்டும். மூலாதாரத்தில் கனலை எழுப்புவதை, அதற்கு வேள்வி வளர்க்கப்படுகின்றது என்று பொருள். ஆசான்தான் வேள்வியை வளர்க்க வேண்டும். நாம் வளர்க்க முடியாது. எப்போது சாப்பிட வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எப்போது நிறுத்த வேண்டும்? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. கனல் ஏறிக்கொண்டே இருக்கும். உடம்புக்குள் கனல் ஏறிக்கொண்டே இருக்கும்.
      எக்கியதில் பிறந்த யோகி – மகான் அகத்தீசருடைய மூலாதாரத்தில் ஆசான் சுப்பிரமணியர் தங்கியிருந்து, கனலை எழுப்பினார். அந்தக் கனல் ஏற ஏற ஏற உடம்பில் இருக்கின்ற மாசு நீங்கும். மாசு நீங்கியதால் அதுவே ஒளி உண்டாகும்.
      எக்கியதில் பிறந்த யோகி – ஆசான் சுப்பிரமணியருடைய முழுமையான ஆசியைப் பெற்று, ஆசானே அகத்தீசருடைய புருவமத்தியில் ஒடுங்கி, குண்டலி என்று சொல்லப்பட்ட மூலாதாரத்தில் தங்கி, உடல் மாசை நீக்கி, உடம்பெல்லாம் கனலைப் பற்றச்செய்து, அதன் மூலமாக அமிழ்தத்தை ஓட்டினால். ஆசான் சுப்பிரமணியர் அமிழ்தபானத்தை மகான் அகத்தீசருக்கு ஊட்டி, புறஉடம்பாகிய காமதேகத்தை நீக்கி, ஞான உடம்பாக ஒளி உடம்பாகச் செய்தார். இப்பேர்ப்பட்ட வாய்ப்பை ஆசான் தந்தருளினார்.
                எனது உண்மைச் சீடனே! குறுமுனியே! உனக்கு குரு முனி என்று பட்டம் தருகிறேன். உலக மக்களுக்கு இந்த உண்மையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். உனக்கே இந்த வாய்ப்பு தருகிறேன். நான் இனி பேச முடியாது. ஏனென்றால் எனக்கு ஒளி உடம்பாகிவிட்டது. என்னால் கீழே நிற்க முடியாது. இந்த தேகம் எடையற்று விட்டது. எடையற்ற தேகத்தில் நான் இருப்பதினாலே, இந்த தத்துவங்களை நீ இந்த சமுதாயத்திற்குச் சொல். உனக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதென்று ஆசான் சுப்பிரமணியர் மகான் அகத்தீசருக்கு உபதேசித்தார்.
     ஆசான் அகத்தீசருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்து, தவத்தை தந்து, கல்வியைத் தந்து, கருணைமிக்க வாழ்வைத் தந்து, சிறந்த சொல்வன்மையைத் தந்து, உலக மக்கள் உய்யும் பொருட்டு புறப்படு புறப்படு! “விரைவாகச் சென்று உலக மக்களுக்கு வழி காட்டு” என்று ஆசான் அகத்தீசரிடம் சொன்னார் மகான் சுப்பிரமணியர்.
     அதனால்தான் மகான் அகத்தியரை எக்கியத்தில் பிறந்த யோகி என்றார். அதனால்தான் அவருடைய நாமத்தைச் சொல்லி நாம் சங்கம் வைத்திருக்கிறோம்.
      அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
            ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
      ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால், இந்த அண்டம் மட்டுமல்ல எவ்வுலகமாக இருந்தாலும் சரி, அது நரகலோகமாக இருந்தாலும் சரி, அசுரலோகமாக இருந்தாலும் சரி, இந்திரலோகமாக இருந்தாலும் சரி, இன்னும் எத்தனை அண்டமாக இருந்தாலும் சரி, ஆசானுடைய கட்டளைக்கு எல்லா அண்டகளும் தலை வணங்கும். ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால், ஆயிரத்தெட்டு அண்டங்களும் கிடுகிடுவென நடுங்கும் என்றார். அவர் எமனை வெல்லுகின்ற வல்லமை உள்ளவர்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் எமனை வெல்வான்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் பொறாமை அற்று இருப்பான்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் பேராசை அற்று இருப்பான்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் ஜாதி வெறி அற்று இருப்பான்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் சினம் அற்று இருப்பான்.
      ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் தாய்மை போன்று இருப்பான்.
     ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்பவன் வெற்றி பெறுவான் என்பார்.
     இப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவன்த்தான் ஆசான் சுப்பிரமணியர் உலகமக்கள் உய்யும் பொருட்டு, “புறப்படு புறப்படு”  என்று சொல்லி அனுப்பினார்.
     இப்பேர்ப்பட்ட ஆசான், அவர் நாமத்தைச் சொன்னால் ஆயிரத்தெட்டு அண்டங்களும் அடிபணியும் என்று மகான் கொங்கனமகரிஷி சொன்னதனாலே, நாமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்வோம்.
      தயாபரமே உம்மை நம்பினபேர்க்கு ஒரு தாழ்ச்சியுண்டோ    
     
      மயாபரமே என் பிறவிக்கடலின் மருந்து சொல்லும்
      தியாபரமே உன்னிருதாள்வணங்கத் திருவருளும்
      செயாபரமே உந்தன் சேவடியே நம்பிச் சேவிப்பேனே
                                 – மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான சைதன்யம் 108ல் கவி எண் 20
ஆசான் சுப்ரமணியரைப் பார்த்து, அந்த பிரம்மாண்டமான ஒளிச்சுடரை காண, நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே! என்று மகான் அருணகிரிநாதர் சொன்னார்.
     ஆசான் ஞானபண்டிதனைக் காணும் காலத்தில் அந்த இளம் சூரியனைப் போன்று, புன்முறுவல் பூத்து, தேகமெல்லாம் தகதகவென மின்னும் என்றார்.
     ஆசான் சுப்பிரமணியர், தாபரமே உம்மை நம்பினபேர்க்கு ஒரு தாழ்ச்சியுண்டோ என்று சொன்னார்.
     ஓம் சரவண பவ என்று மட்டும் நம்பி சொல்லிவிட்டால், ஒரு முறை உன் நாமத்தைச் சொன்னால் அதற்கு ஈடு இருக்கிறதா என்று கேட்டாராம்.
     அப்படி சொல்லும்போதே உடம்பெல்லாம் சிலிர்த்து கண்களில் கண்ணீர் கொட்டியது என்றார். அது ஆனந்தக் கண்ணீர் என்றார்.
           தயாபரமே உம்மை நம்பினபேர்க்கு ஒரு தாழ்ச்சியுண்டோ – உன்னை நம்பிய மக்களுக்கு ஒரு தாழ்வு வருமோ? என்றார்.
     நீ எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவன் எந்த மொழியில் பேசினாலும் சரி, எந்த பாஷையில் சொன்னாலும் சரி, நீ அருள் செய்யக் கூடியவன்.
     ஆகவே, உன்னை நம்பின பேர்க்கு தாழ்வு வருமோ? தாழ்வு வரவே வராது என்றார்.
     தாபரமே என்றால் ரொம்ப கருணை பொருந்தியவன் என்று அர்த்தம். கருணை பொருந்தியவன், உன் திருவடியை நம்பி பூஜை செய்த மக்களுக்கு தாழ்வு வருமோ? வராது என்று ஆசான் அகத்தீசர் சொல்கிறார்.
      தயாபரமே உம்மை நம்பினபேர்க்கு ஒரு தாழ்ச்சியுண்டோ    
     
      மயாபரமே என் பிறவிக்கடலின் மருந்து சொல்லும்
     உன்னை வணங்கியவர்களுக்கு தாழ்வு வருமோ? வராது என்றார். மயாபரமே என்று இங்கே எதுகைக்காக சொல்வது. தயாபரம், மயாபரம் என்றார்.
     மயாபரமே என் பிறவிக்கடலின் மருந்து சொல்லும் – என்னுடைய பிறவிக்கடலை நான் கடக்க வேண்டும். நான் எத்தனை ஜென்மம் எடுத்தேனோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில்தான் உன் நாமத்தை சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் இந்த பிறவிக்கடலைக் கடக்க வேண்டுமென்று சொன்னார்.
     நீ தயாபரம்தான், தாய் போன்றவன்தான். தயாபரம் என்றால் தாய் போன்றவன். தாயினும் கருணை மிக்க கருணையுடையவர் ஆசான் சுப்பிரமணியர். நான் இந்த பிறவிக்கடலைக் காக்க வேண்டும். நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டார்.
     மயாபரமே என் பிறவிக்கடலின் மருந்து சொல்லும் – நான் பிறவிக்கடலைக் கடக்க வேண்டும். அதற்கு ஒரு மருந்து சொல் என்றார்.
      தியாபரமே உன்னிருதாள்வணங்கத் திருவருளும் – பிறவிக்கடலைக் கடப்பதற்கு, உன்னுடைய திருவடிதான் எனக்கு வேனுட்ம் என்றார். உம்முடைய திருவருள் இல்லாமல், உமது ஆசி இல்லாமல் உங்களுடைய திருவடியைப் பற்றி என்னால் முடியாது.
      ஆகவே நீ தயாபரம் ஆனவன் – தாயினும் மிக்க கருணை பொருந்தியவர், பிறவிக்கடலை கடப்பதற்கு மருந்து சொல்கின்றவர். அதே சமயத்தில் உன் திருவடியைப் பற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு தர வேண்டும்.
      தியாபரமே உன்னிருதாள் வணங்கத் திருவருளும் – உங்களுடைய நாமத்தைச் சொல்லவே எந்த தகுதியும் இல்லாத எனக்கு, உங்களுடைய நாமத்தைச் சொல்வதற்கு வாய்ப்பு தர வேண்டும். பூஜை செய்யும்போதே, உங்களுடைய திருவடியைப் பற்றுவதற்கும், உங்களுடைய திருவடியை வணங்குவதற்கும் நீரே அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால்தான் அருள் செய்வார்கள்.
     தியாபரமே உன்னிருதாள் வணங்கத் திருவருளும் – உன்னுடைய சேவடியாகிய, உன் திருவடியைப் பற்றி பூஜை செய்தாலும், உன் நாமத்தைச் சொல்லுதலும்தான் எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம்.
      செயாபரம் – வெற்றி பெறுவது. வெற்றி என்று அர்த்தம். ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னாலும் சரி, ஆசான் சுப்பிரமணியர் நாமத்தைச் சொன்னாலும் சரி, வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். தோல்வி என்னும் பேச்சே இருக்காது. அவர்களுக்கு தோல்வி இல்லை. காரணம் அவர்கள் மற்றவர்களை தோற்கடிக்க மாட்டார்கள். இதில் உள்ள பெரிய மர்மம் என்னவென்றால், நாம் ஒருவன் மீது வழக்கு போடுகிறோம். அந்த வழக்கில் நாம் வெற்றி பெறுகிறோம். அப்படி வழக்கில் வெற்றி பெற்றால், நிச்சயமாக தோற்றவனுக்கு மனச்சோர்வு இருக்கும். அதை ஞானிகள் விரும்பவே மாட்டார்கள். வெற்றி எது? என்று கேட்டான். நான் தோற்றுப் போவதே வெற்றி என்றான். இன்று வரையில் வெற்றி பெறுவதை மகிழ்ச்சி என்றுதானே சொல்வார்கள்.
     இல்லை! நான் ஜெயித்தால், நிச்சயம் அவன் மனம் சோர்வடையும். ஆகவே, நான் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என்றான். அது மிகப்பெரிய அறிவாற்றல் இது சாதாரண விசயமல்ல.
     மகான் திருவள்ளுவர் சொல்வார்,
     சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
      துலையல்லார் கண்ணும் கொளல்.
                                                       திருக்குறள் – சான்றாண்மை – குறள் எண் 986
        ஜெயம் எஹ்டு என்று கேட்டார்? மற்றவனிடம் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல். அதுதான் வெற்றியா? ஆமாம் அதுதான் வெற்றி. மற்றவரிடம் தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
     ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்றான்.
     நான் வெற்றி பெற்றால் நிச்சயம், அவன் மனம் சோர்வு அடையும். அவனுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால் எனக்கு நன்மை கடுகளவும் ஏற்படாது. எனவே நான் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். அதுவே வெற்றி என்றான்.
     ஜெயம் எது? என்று கேட்டான். ஒருவன் மற்றவனை வெல்லுதல் என்பது பொதுவாக உலகநடையாக இருந்தாலும், ஞானத்துறைக்கு அது ஆகாது.
        சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
      துலையல்லார் கண்ணும் கொளல்.
                                                       திருக்குறள் – சான்றாண்மை – குறள் எண் 986
        சான்றோர் என்பதற்கு என்ன இலக்கணம்? என்று கேட்டார்.
     சாதாரண மக்களிடமும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றார். மிகப்பெரிய அறிவாற்றல், மிகப்பெரிய வல்லமை உள்ளவனிடம் தோல்வியை ஏற்றுக் கொள்ளலாம். சராசரி மக்களிடமும், தோல்வியை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீரே? என்றான். அதுதான் வெற்றி.
     எது வெற்றி? என்றான். சாதாரண மக்களிடம் தோல்வியை ஏற்றுக்கொண்டு அவனுடைய மனதை நிறைவுப்படுத்துவது எதுவோ அதுவே வெற்றி என்றார்.
     இது நடைமுறைக்கு ஒவ்வுமா? என்றால், மிகப்பெரிய பண்புள்ள மக்கள் இதைச் சொல்வார்கள். மகான் திருவள்ளுவர் சொல்லியுள்ளார். இந்தளவிற்கு மிகப்பெரிய அறிவு எங்களுக்கு ஏது? அந்த அறிவு எப்படி எங்களுக்கு வருமென்று ஆசான் திருவள்ளுவப்பெருமானிடம் கேட்டார். போகப்போக தானே வரும். இது என்ன ஒரே நாளில் முடியுமா? என்று சொன்னார்.
     ஞானம் என்பது என்ன? எழுபது கிலோ எடையுள்ள உடம்பு இருக்க வேண்டுமென்று சொன்னால், நீ கிட்டத்தட்ட அறுபது டன் பால் =, தயிர் குடித்திருப்பாய், சர்க்கரை, தேன், பருப்பு எல்லாம் சாப்பிட்டது முப்பது டன்னாவது இருக்கும். முப்பது டன் எடை உள்ள பொருளையெல்லாம் சாப்பிட்டுத்தான் நீ எண்பது கிலோ இருக்கிறாய். அதுபோல இந்த துறை பிரம்மாண்டமான நீண்ட பாதை, பெரும் பாதை என்று சொல்வார்.
     பேரின்பம் அல்லது பெரும் பாதை. இந்த பாதையைக் கடப்பதற்கு நாட்கள் அதிகமாகும். ஆசானை கேட்டுக்கொண்டே, வணங்கிக்கொண்டே போவோம். தினமும் நாமத்தை சொல்லிக் கொண்டே போவோம்.
     ஞானிகள் அனைவரும் ஒரே மையக்கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி. அந்த பக்த்தியும், யாரிடம் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். சிறுதெய்வ வழிப்பாட்டில் ஈடுபட்டால், ஜெனம்த்தைக் கடைத்தேற்ற முடியாது.
     ஆசான் சுப்பிரமணியர் ஆசி பெற்றால், ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மற்றவனுக்கு தோல்வியை உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெறுவதை வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஞானிகள்.
     வெற்றி எது?
     வறுமை இல்லாத வாழ்க்கை
     கடன் சுமை இல்லாத வாழ்க்கை
     சஞ்சலமில்லாத வாழ்க்கை
     நோயில்லாத வாழ்க்கை
     நட்பைப் பெருக்கிக் கொள்ளுதல்
     பகை இல்லாத வாழ்வு
     அறியாமையை உடைத்தெறிதல்
     மரணமிலாப் பெருவாழ்வு
    
     இவையே வெற்றி என்றார். மற்றவனை தோல்வியடையச் செய்து பின்பு வெற்றி பெறுவது என்பது ஞனாநிலைக்கு ஆகாது என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.
     ஓம் அகத்தீசாய நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208474
Visit Today : 566
Total Visit : 208474

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories