முருகன் அருளே சாபவிமோசனமும் பாவவிமோசனமும்

08.09.1995 – என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை

ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! குழந்தைகளே! வணக்கம்.
     நமது சங்கத்தில் மாதந்தோறும் 131 மகான்கள் நாமங்களைச் சொல்லி, அர்ச்சனை செய்து, அன்பர்களின் துணை கொண்டு, சித்தர்கள் பூஜையை நடத்துகிறோம். நமக்கு வரும் துன்பங்களை ஞானியர்களிடம் சொல்லி அதிலிருந்து விடுபடுவதுதான், இந்தப் பூஜையின் அடிப்படை நோக்கம்.
     மகான் மாணிக்கவாசகர், மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் தாயுமானசுவாமிகள், மகான் அருணகிரிநாதர், மகான் பட்டினத்தார், மகான் திருமூலர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர் போன்ற ஞானிகளுக்கெல்லாம் ஆசான் அகத்தீசர்தான் தலைவர்.
     மகான் புஜண்டமகரிஷி என்றாலே உலகமெல்லாம் நடுங்கும். அப்பேர்பட்ட ஆசானும் மகான் அகத்தீசருடைய சீடர்தான். மகான் நந்தீசரும், மகான் திருமூலதேவரும் ஆசான் அகத்தீசருடைய சீடர்கள்தான். ஆக ஒன்பது கோடி ஞானிகளும் ஆசான் அகத்தீசருடைய சீடர்கள்தான். இவர்களெல்லாம் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். இவர்களை வணங்குவதே நமது அடிப்படை நோக்கம்.
     இப்போது சில இடத்தில் வயதானவர்கள் இறந்து போனால், அங்கே இறந்தவரின் உறவினர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் கிடந்தது மட்டுமல்லாது, அந்த நபரால் அந்த வீட்டில் ஒரே துர்நாற்றம். இந்தத் துன்பத்திலிருந்து என்றைக்கு விடுபட முடியும்? எப்போது இந்த வாய்ப்பு கிடைக்கும்? என்று அவனுடைய உறவினர்கள் கடவுளை கேட்பார்கள்.
     கட்டிலில் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பவர்களும் அந்த அளவு துன்பத்தோடு இருக்கிறான். நம்மால் முடியவில்லையே! ஒரு காலம் வருமா? என்று அவனும் கடவுளைக் கேட்டான். கடைசி எல்லைக்கு வந்து விடுவான். அவனும் ஓரளவிற்கு வாழ வேண்டுமென்று நினைக்கலாம். ஆனால் முடியாது.
     கை, கால் ஊனமாகவோ அல்லது கை, கால் இழுத்தோ வாதம் ஏற்பட்டு படுக்கையில் கிடந்து கிடந்து படுக்கைப் புண் ஏற்பட்டு, புழுவும் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் கொடுமை. இதைச் சகிக்க முடியாமல் தடுமாறுகிறான். பக்கத்தில் நெருங்க முடியவில்லை. இது போன்ற நபர்கள் வீட்டில் இருந்தால் அந்த வீடு நரகம்தான். இது போன்ற வயதானவர்களும் படுக்கப் புண். புழு வைத்தவர்களும் கொடுமையான சாபத்திற்குள்ளான மனிதர்கள்.
     ஒருவன் தன்னைப் பேசியதை தாங்காமல், “நீ என்னை இப்படிப் பேசுகிறாய். நிச்சயம் நீ புழு வைத்துதான் சாவாய்” என்று சாபம் விடுவான். நன்றியை மறைக்கின்ற செயலால் இந்த சாபம் வரும். அவன் நன்றாக உதவி செய்திருப்பான். அந்த நன்றியை மறந்தது மட்டுமல்லாமல், அவனுக்கே இடையூறு செய்வான். இடையூறை தாங்கிய அவன் மனம் வெதும்பி, புழு புழுத்துதான் சாக வேண்டுமென்று சாபம் விடுவான்.
     ஒருவன் மனமுவந்து செய்த நன்றியை மறந்தது மட்டுமல்லாமல், அவனுக்கே இடையூறு செய்ததால், அவன் கொடும் சாபத்திற்கு உள்ளானான். அவன் அல்லற்படுவதற்கு நியாயம் உண்டு. புழு புழுத்து சாக வேண்டிய நியாயம் உண்டு. ஆனால், அவன் கூட இருப்பவன் ஏன் நரகத்திற்கு உள்ளானான்? என்றான். அவனைப் பார்த்துக் கொண்டாய் அல்லவா, அவனோடு கூட பிறந்தாய் அல்லவா? அல்லது மகனாகவோ, உடன்பிறந்தவனாகவோ பிறந்தாய் அல்லவா? அதற்குத்தான் இந்தத் தண்டனை! என்பான்.
     இப்பேர்ப்பட்ட ஒரு கொடுமை. இப்படி ஒரு சாபம். அந்த உறவுக்காரர்களே மகிழ்ச்சி அடைவார்கள், இறப்பவன் மகிழ்ச்சி அடைவான். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டான். இன்னும் சிலர் தொநூற்றைந்து வயது வரை இருப்பார்கள். எந்தவிதமான தடயமும் இருக்காது. முதல் நாள் வரையிலும் நல்ல நினைவோடு இருப்பார்கள். மறுநாள் இறந்து விடுவார்கள். இப்படி ஒவ்வொரு சாவினையும் பார்க்கலாம். என்ன வயது? என்று கேட்பார்கள், எண்பத்தைந்து வயது. நியாயம்தான் குற்றமில்லை. அறுபது வயது என்றால் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழலாமென்று சொல்வார்கள். இருபது வயது என்றால், அடப்பாவி! தனித்து இருந்ஹ்டு செத்தால் கூடப் பாவி என்ற பட்டம் பெற மாட்டான். ஆனால் திருமணமாகி இரண்டு வருடம், கைக்குழந்தை இருக்கும். இப்படி ஒருவன் இறந்து விட்டால், இறந்தும் அவனுக்குப் பெருமை இருக்காது.
     பாவி! விட்டுவிட்டுச் செத்துப் போனான் என்பார்கள். தொண்ணூறு வயதில் இறந்தவனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். இது நியாயம் என்கிறான். திருமணம் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம் கழித்து இறந்து போனால் அது மிகுந்த கொடுமையென்று சொல்வான். ஆனால் உலகத்தில் இதுபோன்று நடக்கும்.
     ஒரு தெருவில், தொண்ணூறு வயது கிழவன் சாவான், மூன்று வயதுக் குழந்தை சாகும், இருபது வயது வாலிபன் இறப்பான், திருமணம் ஆகி இறப்பான், திருமணம் ஆகாமலேயே இறப்பான், ஒரு சில பெண்கள் பிரசவ காலத்திலேயே இறப்பார்கள் அல்லது முன்னமே இறப்பார்கள். இப்படி இறப்பு என்பது நிர்ணயிக்க முடியாத ஒரு பிரச்சனை.
     நாம் சொல்லுகின்ற எல்லா ஞானிகளும், எதையும் பொடியாக்கக் கூடியவர்கள். எந்தச் சாபமும் நம்மை அணுகாது. பத்தினிப் பெண்டிர்கள், ஞானிகள் இவர்கள் சபித்தால் தப்பிக்க முடியாது.
     ஞானிகளைச் சாபம் இடறாது. என்ன காரணம்? இவர்கள் அத்தனை பெரும் ஆசான் அகத்தீசரை வணங்குகிறார்கள். “ஓம் அகத்தீசாய நம” என்பார்கள். “ஓம் திருமூலதேவாய நம”, “ஓம் நந்தீசாய நம” என்பார்கள். இப்படி ஞானிகள் நாமத்தைச் சொன்னால், நம்மைப் பாவியாகாது ஞானிகள் பாதுகாக்கிறார்கள். ஒருவன் மனமுவந்து நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்திருக்கிறான். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
      வானகமும் ஆற்ற லரிது
                                                                -திருக்குறள் – செயந்நன்றி அறிதல் – குறள் எண் 101
                காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
                ஞாலத்தின் மாணப் பெரிது
                                                                -திருக்குறள் – செயந்நன்றி அறிதல் – குறள் எண் 102
                ஒருவன் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே சிறப்பறிவு என்பார். என்ன காரணம்? அவனிடம் சாபம் பெறாமல் இருப்பதற்கு இதுதான் உபாயம். இந்த அறிவு ஆசான் ஆசி இல்லாமல் வராது. அவன் ஆயுள் முழுவதும் நல்லது செய்திருப்பான். ஆனால் ஒரு சிறிய தவறு செய்வான். அதற்காக இவன் அந்தக் குடும்பத்தையே நாசப்படுத்திவிடுவான்.
     ஆனால் ஞானிகள்  ஆசியிருந்தால், நேற்றுவரை நமக்கு உதவி செய்திருக்கிறான். இன்று ஏதோ அறியாமையின் காரணமாக ஏதோ ஒரு கோபத்தில் பேசி விட்டான். அதை நாம் மறக்க வேண்டும். மீண்டும் அவன் செய்த உதவிக்கு வாழ்த்த வேண்டுமென்று நினைப்பான்.
     இருபது ஆண்டுகள் செய்த உதவியை மறந்து, ஒரே நாள் செய்த தீமைக்கு தீமை செய்து விடுவான். ஆக பாவிகள் கொன்று விடுவான். அதே சமயத்தில் கொடுமை செய்துவிடுவான். இது என்ன பலகீனம்? அவன் தான் சாபத்திற்கு உள்ளாவான்.
     நேற்று வரை நமக்கு நன்மை செய்த இவன் இன்று இடறுகிறான், பரவாயில்லை என்று போகவேண்டும். இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்,
      கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
      ஒன்றுநன்று உள்ளக் கெடும். 
                                                திருக்குறள் – செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 109
                பலவகையான நன்மை செய்தவர்கள் கொலை செய்வதற்கொப்பான துன்பம் ஒன்று செய்த போதிலும், முன்னே செய்ததை நினைக்க வேண்டுமென்று சொல்வார். ஆக, ஞானிகள் ஆசியிருந்தால்தான் இந்தச் சிறப்பறிவு வரும். இல்லையென்றால் கடும் சாபத்திற்கு உள்ளாவார்கள்.
     ஆசானை வணங்குவதால், நன்றி மறக்காத தன்மை வரும். தன்னைப் பற்றி அறியக்கூடிய தன்மை வரும். சாவது எல்லோருக்கும் இயல்புதான். ஏனென்றால் சாபத்தால் சிலபேர் சாவான். இந்த சாவையெல்லாம் உடைத்தவர்கள் ஞானியர்கள். இப்படி சொல்வதற்குக் காரணம், எந்த வகையிலும் அவர்கள் பாவியாக மாட்டார்கள், சாபம் பெற மாட்டார்கள். ஆகவே ஆசான் அகத்தீசரை வணங்குவதன் நோக்கம், நாம் குணப்பண்பில் உயர வேண்டும். நாம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். பிறரைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. அது அவசியமுமில்லை. பிறர் செய்த நன்மையைச் சிந்திக்கக்கூடிய அறிவு இருந்தால் அவன் கடவுளாவான்.
     நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
      அன்றே மறப்பது நன்று.
           – திருக்குறள் – செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 108
     மனிதனை மனிதனாக்குவது, மனிதனைத் தெய்வமாக்குவது, மனிதனைக் கடவுளாக்குவது, முதுபெரும் ஞானி மகான் திருவள்ளுவப்பெருமானது திருக்குறள். இப்பேர்ப்பட்ட நூலைப் படிப்பதற்கும் அறிவு வேண்டும். ஆகவே மனிதன் சாபத்திற்கும், பாவத்திற்கும், மரணத்திற்கும் ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், 131 மகான்களது ஆசி இருந்தால்தான் முடியும்.
     இருபத்தைந்து வயது வாலிபன் இறந்து விட்டான். ‘ஓ” என்ற அலறல் சப்தம் கேட்டது. தொண்ணூறு வயது உள்ளவன் செத்தால், அந்த அளவிற்குச் சப்தம் கேட்காது. ஒரு சிலர் அழுவார்கள். அதுபற்றி அவசியமில்லை. ஆனால் இளம் வயது வாலிபன் இறந்து விட்டான். நேற்று துள்ளு காளை போல் துடிப்பாக இருந்தவன், இன்று இறந்து விட்டான். அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் அளவு கடந்து துடித்து அழுதார்கள்.
    
     மகான் இராமலிங்கசுவாமிகள் இதைச் சொல்வார்,
      “இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
            இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
      மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
            மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
      சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
            சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
      பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
            பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
                                               -திருஅருட்பா – ஆறாம் திருமறை – ஞானசரியை – கவி எண் 1554
     ஏனய்யா கஷ்டப்படுகின்றீர்கள்? மரணமிலாப் பெருவாழ்வு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? இதை ஏன் நீங்கள் அடையக்கூடாது? என்று கேட்டாராம் மகன் இராமலிங்கசுவாமிகள்.
     131 மகான்களும் மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்தவர்கள். ஆசான் அகத்தீசர் ஆசியால்தான் மூச்சுகாற்றைப் பற்றி அறிய முடியும். அந்த அறிவு அவர்களுக்குத்தான் உண்டு.
     ஆசான் அகத்தீசரை பூஜை செய்பவர்கள், முதலில் பாவியாகாமால் இருப்பார்கள், நன்றி மறவாதிருப்பார்கள், வஞ்சனையற்று இருப்பார்கள், புரங்கூராது இருப்பார்கள், பொறாமை அடையாமல் இருப்பார்கள், சிறந்த நல்ல பண்பு உடையவர்களாக இருப்பார்கள், ஞானியை வணங்குகின்றவராக இருப்பார்கள்.
     ஆக, ஞானிகள் மூச்சுக்காற்றை அறிந்தவர்கள். நாள் ஒன்றிற்கு இந்த சுவாசம் 21,600 முறை வந்து போகிறது. காலை எழுந்து மல ஜாலம் கழித்து வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆசான் அகத்தீசரை வீழ்ந்து வணங்கி, பத்மாசனம் இட்டு, அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேனுக்கு வாசி வசப்பட வேண்டும், அதற்கு நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்பான்.
     இப்படி யார் கேட்பார்கள்? இந்த அறிவு எப்போது வரும்? புண்ணியவான்களுக்கு மட்டும்தான் இந்த அறிவு வரும். இந்த மூச்சுக்காற்றை அறிந்தவன் இப்படிக் கேட்பான்.
     காலை எழும்போதே, எப்படி ஏமாற்றலாம்? யாருடைய பணத்தை இன்று கொள்ளையடிக்கலாம்? என்று சிந்திக்கின்றவன் இப்படிக் கேட்கமாட்டான்.
     வாசி வசப்பட்ட மக்கள் மட்டும், ஆசானை வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள். ஆசானை வீழ்ந்து வணங்கிவிட்டு, பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை இழுப்பான். இடகலையையும், பிங்கலையையும் இரேசித்து, இரண்டு காற்றையும் புருவ மத்தியில் செலுத்துவான்.
    
                ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
                காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
                காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
                கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                                 திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 571
                இரண்டு பக்கமும் வருகின்ற காற்றை பத்மாசனம் இட்டு வெளிக்காற்றை இழுப்பான். புருவமத்தியில் இழுத்து, கண்டஸ்தானத்தில் இருக்கின்ற காற்றோடு இரண்டையும் சேர்ப்பான். இப்படிச் சேர்ந்த காற்று உள்ளே தங்கி ஒரு புதிய செயல்பாட்டை ஆரம்பிக்கும். இதை நாம் செய்ய முடியாது. ஆசான் ஞானபண்டிதன்தான் இதைச் செய்யமுடியும்.
     இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
      துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம்
      உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
      இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே.
                                                – திருமந்திரம் – கேசரி யோகம் – கவி எண் 801
     
                ஆசான் அகத்தீசரை வணங்கினால், ஆசான் ஞானபண்டிதன் இரங்குவார், இரங்கி இவனுக்கு மூச்சுக்காற்றை நடத்திக் கொடுப்பார். அப்படி நடத்தி உள்பக்கம் வெளிப்பக்கம் என இரண்டு பக்கம் வருகின்ற காற்றை சேர்த்து விடுவார்.
         இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
       துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம்
     மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கி விட்டால் அவனுக்குச் சோர்வு கிடையாது, சாவு கிடையாது. இப்படி, உள்ளேபோன காற்று வெளியே வராது, வெளியே வந்தால்தான் எமன் பிடிப்பான்.
     ஒருவன் இறந்து விட்டான் என்று சொன்னால், எப்படி நம்புவது? மூக்கில் கை வைத்துப் பார்ப்பான். மூச்சு இல்லை ஆகவே இறந்து விட்டான் என்பான். மூச்சுக்காற்று வெளியே வந்தபோது எமன் பிடித்தான்.
     ஆசான் அகத்தீசரை வணங்கியவர்களுக்கு உள்ளேயே அந்தக் காற்று தங்கி விட்டது. அவன் சாக மாட்டான். இதை மகன் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
     “இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
            இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
      மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
     “இதை மறந்து விட்டீர்களே? சாக்காட்டிலும், நோயிலும் விருப்பமா?” என்று கேட்டார். புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்று உள்ளே அப்படியே ஸ்தம்பித்துவிடும். அப்படி ஸ்தம்பித்தால் மரணமில்லை. அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு ஆசான் ஆசி வேண்டும். ஞானசித்தர் காலம் என்பதால் யோகக்கருத்தைப் பற்றிப் பேசுகிறோம். இதைக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
     முன்னே மரணத்தைப் பற்றி சொன்னோம். பிறகு சாபத்தால் வருகின்ற துன்பத்தை சொன்னோம். பிறகு கட்டிலில் சில ஆண்டுகள் கிடந்தால் ஏற்படும் விளைவுகளைச் சொன்னோம், சாபத்தினாலும், பாவத்தினாலும் வருகின்றவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறோம். நன்றி மறந்தால், வஞ்சனைக் கொண்டால் என்ன என்று சொன்னோம்.
     பிறகு 131 மகான்களைப் பற்றிப் பேசினோம். இப்போது யோகத்தைப் பற்றி சொல்கிறோம். யோகம் என்பது மூச்சுக்காற்றைப் பற்றி அறிதலும், வாசி வசப்படுதலும் ஆகும். வாசி வசப்பட்ட மக்கள் மரணமிலாப் பெருவாழ்வை பெறுவார்கள்.
     புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
      உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
                                                                -திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 575
    
                புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவைவந்து போகின்ற காற்று என்று அர்த்தம்.
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் – வருகின்ற காற்று, போகின்ற காற்று முறைப்படி உள்ளே தங்கி விட்டால்.
      உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
      ஆசான் அகத்தீசரும், ஆசான் ஞானபண்டிதரும் மூச்சுக்காற்றோடு உள்ளே தங்கி இவனுடைய எல்லா வகையான பாவத்தையும் நீக்கி, இவனை வஞ்சிக்கக் கூடிய காம தேகத்தைப் பொடியாக்கி விடுவார்கள். தொடர்ந்து வஞ்சிக்கக்கூடியது காமதேகம், அந்த காமதேகம்தான் இவனைப் பாவியாக்கும்.
     அந்த காமதேகம் தற்கொலையில் கொண்டுபோய்விடும், காமத்தால்தான் கரம், சிரம் துண்டிக்கப்படும், எல்லா வகையான கொடுமையும் நடக்கும். தன்னுடைய காமதேகமே தன் தலை உருளுவதற்குக் காரணமாக இருக்கும். தன்னுடைய காமதேகமே ஒருவனை பாவியாக்கிவிடும்.
      அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
                                                -திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் – 366
     இந்த காமதேகத்தை ஆசான் பொடியாக்கி விடுவான். காமதேகம் பொடியானால், காமதேகம் நீங்கினால் நல்ல சிந்தனை இருக்கும், நல்ல சிந்தனை நல்ல அறிவு வரும். அது சிறப்பறிவை உண்டாக்கும்.
     சிறப்பறிவின் காரணமாக தன்னைப்பற்றி அறிவான். தன்னைப்பற்றி அறிவதன் காரணமாக வினையை நீக்குவான். வினையை நீக்கி நிர்மலமாவான். அப்படி நிர்மலமானதால் கடவுளாவான்.
     கடவுளாவதில் இப்படி ஒரு மர்மம் இருக்கிறது. இதுபோன்ற வாய்ப்பை ஒருவன் அடைய வேண்டும். எத்தனை ஆண்டுகளாகும்? பதினாறு ஆண்டுகளாகும். இவனை முறைப்படுத்தி, நன்னெறிப்படுத்தி பாவியாகாமல் காத்து, பொருள் பற்றற்று, விகாரமற்று, வஞ்சனையற்று, ஜாதி துவேசமற்று பழிவாங்கும் குணமற்று உயர்ந்த லட்சியத்தை அடைவதற்குரிய வாய்ப்பை ஆசான் உருவாக்கித் தர வேண்டும்.
     இப்பேர்ப்பட்ட வாய்ப்பிற்கு பதினாறு ஆண்டுகள் ஏன்? என்று கேட்பார்கள். பதினாறு ஆண்டுகள் என்பது ஒரு சின்ன விசயம் தொண்ணூறு வயது வரைக்கும் தொடர்ந்து இவன் ஆயுளை வீணாக்குவான், ஒன்று செய்ய மாட்டான்.
     இந்த வாய்ப்பை நீங்களும் பெற வேண்டுமென்றால் இப்படித்தான் பெற வேண்டும். எங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா? என்றால் நிச்சயம் உண்டு. மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள் உட்பட ஒன்பது கோடி பேர் ஞானியாகியிருக்கின்றார்கள். ஆசான் திருமூலர்,
     புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
      உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
     என்றார். இதையே மகான் சிவவாக்கியர் சொல்வார்,
      உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
      கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
      விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
      அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
                                -மகான் சிவவாக்கியர் பாடல் – யோக நிலை – கவி எண் 5
                இதுவும் அதே கருத்துதான். சொன்னது மகான் சிவவாக்கியர். இப்போது பேசும்போதே ஞானிகள் வந்து விடுவார்கள்.
     கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
      வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
      எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
      மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!
                                -மகான் கொங்கணர் வாலைக்கும்மி – கவி எண் 42
                சொன்னது மகான் கொங்கனமகரிஷி. ஏன் ஞானிகளின் பாடல்களை சொல்கிறோமென்றால், இவைகளையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும். இந்த வார்த்தையைக் காதால் கேட்டால் ஞானம் வந்து விடும். இது ஒரு பெரிய மர்மம்.
     எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ
      விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
      கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
      அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ
                                                -மகான் அழுகண்ணிச்சித்தர் பாடல்கள் – கவி எண் 6
                எட்டாப் புரவியடிபுரவி என்றால் குதிரை. இந்தக் குதிரையை மனிதவர்க்கத்தால் எட்டிப் பிடிக்க முடியாது. குதிரை என்பது மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றுக்கு குதிரை என்றொரு பெயர் உண்டு. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யோகத்தைப் பற்றியே இன்று பேசி வருகிறேன். இவரை சிவராஜயோகி என்றும், குருநாதர், ராஜரிஷி என்றும் சொல்கிறார்கள். ஆனால் எப்போதும் சமுதாயப்பேச்சே பேசிக்கொண்டு இருக்கிறாரே என்றான். அப்படி அவன் சொல்லியது எங்களுக்குத் தெரியும்.
     ஆனால் இந்தக் கருத்தை எப்போது சொல்ல வேண்டும்? ஆசான் கட்டளைப்படி இப்பொழுது சொல்கிறோம். எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ – நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனுக்கு (மூக்கின்) வலது பக்கம் ஆறுமுறை, இடது பக்கம் ஆறுமுறை மூச்சுக்காற்று மாறும். ஈராறு கால் – கால் என்பது சுவாசம். இரண்டு பக்கம் ஆறுமுறை மாறும். பகலில் ஆறுமுறை, இரவில் ஆறுமுறை மாறும். ஆக, இந்த மூச்சுக்காற்றை எட்டிப் பிடிக்க முடியாது.
     விட்டாலும் பாரமடி – இந்த மூச்சுக்காற்றை பிடிக்க முடியவில்லை என்று விட்டு விட்டால், மரணம் வந்து விடும்.
     வீதியிலே தான்மறித்துக் – இடகலையாகவும், பின்கலையாகவும் இரண்டு பக்கம் வரும் இந்தக் காற்றைச் சேர்த்துவிடுவான்.
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
      கட்டக் கயிறெடுத்துக் – கயிறெடுத்து என்பது இந்த ஜீவகலை நான்கு. இது மிகுந்த நுட்பமான கருத்து.
      கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
      அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ.
     இந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். எங்கள் அனுபவத்தைச் சொல்கிறோம். இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
     ஆரம்பத்தில் ரெங்கராஜதேசிக சுவாமிகள் என்று சொல்லியிருக்கிறார். என்னய்யா காரணம்? ஆசான் அகத்தீசர் சொன்னாரா? என்று கேட்பார்கள்.
     “உன் நாமத்தை முன்னே சொல்!” என்று சொன்னார். ஏன் ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்லாமல் இவர் நாமத்தை சொல்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.
     “ஓம் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி” என்று அன்பர்கள் சொன்னார்கள். இது அன்பர்களுக்கு ஒரு பெரிய புதிராக இருந்தது. ஆசான் அகத்தீசர் என்றாலே அகிலம் நடுங்கும், எமன் நடுங்குவான், பாவமெல்லாம் பொடியாகும். இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய ஞானிகள் நாமத்தை முன்னே சொல்லாமல், இப்பேர்ப்பட்ட ஆசான் நாமத்தை சொல்லாமல், ஓம் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், இதன் அடிப்படையை ஆசான் கிருபையால் நாங்கள் அறிந்திருக்கிறோம். தலைவனை வணங்கியிருக்கிறேன், விடாது தொடர்ந்து வணங்கியதால், இந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
     ரெங்கராஜ தேசிக சுவாமிகள் ஞானிகளின் பெருமையைப் பேசுவதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறார்.ஆசான் அகத்தீசர், மகான் நந்தீசர் போன்ற ஞானிகளின் பெருமையெல்லாம் பேசி, மக்கள் ஆசான் திருவடிகளைப் பற்றவும், பாவியாகாது இருக்கவும், புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளவும், மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்காகவே, என்னை ஞானிகள் அனுப்பியிருக்கிறார்கள்.
     இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு ரகசியத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். சிவராஜயோகி என்றும், உலகப்பேராசான் என்றும் சொல்கிறார்கள். இது சின்ன விசயமல்ல.
     சிவராஜயோகி என்றும், உலகப்பேராசான், ராஜரிஷி என்றும் சொல்வார்கள். அவ்வளவு பெருமை எப்படி குடிலாசானுக்கு வந்தது?
     ஆசான் சுப்பிரமணியர் மூச்சுக்காற்றை நடத்திக் கொடுத்திருக்கிறார்.
           வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
                  வாசியில் இங்கே வருவாண்டி
            ஆசில் கருணை உருவாண்டி – அவன்
                  அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி
                                -திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – சண்முகர் கொம்மி – கவி எண் 2987
                ஆசான் உள்ளே இருந்தால்தான் உண்மைப் பொருள் தெரியும் இல்லையென்றால் பஞ்சமாப் பாவியாகிவிடுவோம்.
     அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
                                                திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 366
                பாவத்தையெல்லாம் பொடியாக்கி விடுவான். அதுமட்டுமல்ல, செல்வத்தையும் பெருகச் செய்வான்.
     பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
      பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
      பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
      பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
        – திருமந்திரம் – அருளுடைமையின் ஞானம் வருதல் – கவி எண் 1645
                தலைவன் ஆசியிருந்தால் செல்வம் பெருகும், நற்காரியங்கள் நடக்கும். இவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் எல்லாம் தூய்மையாக நடக்கும். அங்கே வஞ்சனை இருக்காது. ஆசான் ஆசி இருந்தால் இந்த வாய்ப்பு கிட்டும். இன்று மூவாயிரம் பேருக்குச் சாப்பாடு கொடுத்திருக்கிறோம். எட்டு மூட்டை அரிசி தினம் சமைக்கிறோம். இரண்டாயிரம் குடும்பங்களுக்கு தண்ணீர் தருகிறோம். நூறு பேர் இங்கே இருக்கிறோம். நூறு பெரும் ஒருவருக்கொருவர் சகோதரர் போல பழகுகிறோம். எந்த வகையிலும் இங்கே வஞ்சனையோ, புகைச்சலோ இருக்க முடியாது. நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பேச மாட்டார்கள். எல்லாவற்றையும் ஆசான் பார்ப்பார்.
     ஆசான் ஞானபண்டிதன், “நீங்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. நானே பெரியோன். நீங்கள் யாரும் மரணத்தை வெல்லவில்லை. இன்னும் யாருக்கும் வாசி வசப்படவில்லை. நீங்கள் எல்லோரும் காமதேகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பெரியவர்கள் அல்ல. நானே பெரியவன். நீங்கள் எல்லாம், என் திருவடியைப் பற்றுவதற்குத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள்” என்று சொல்வார்.
     நூறு பேர் கொண்ட குடும்பம் அமைதியாக எப்போதும் சாந்தமாகவே இருக்கும். ஆனால் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் பிரச்சனைகள். பத்து பேர் கொண்ட சங்கத்தில் ஒரே ஆரவாரங்கள். அங்கே வஞ்சனைகள், பொய். ஆனால் இங்கே அது இல்லை. என்ன காரணம்? தலைவன் தலைமை தாங்குகிறான்.
     இங்கே வஞ்சகர்கள் வரமுடியாது. பண்புள்ள மக்கள்தான் இருக்க முடியும். இது மட்டுமல்ல. ஆசான் ஞானபண்டிதன் அங்கீகாரம் இல்லாமல் இங்கே ஒரு தொண்டனும் தொண்டு செய்ய முடியாது. பண்புள்ள மக்களாகத் தேர்ந்தெடுத்துத்தான் இங்கே அனுப்புவார்கள். அவர்கள் தன்னை அர்ப்பணிக்கக்கூடிய தகைமை உள்ளவர்களாக இருப்பார்கள். தன்னை அர்ப்பணிக்க கூடிய அந்தப் பண்பை கொண்டுதான், இந்தக் காரியம் செய்வார்கள், செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
     ஆகவே, ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், உலகப்பேராசான் என்றும், சிவராஜயோகி என்றும், ராஜரிஷி என்ற வாய்ப்பை, பட்டத்தை ஆசான் அகத்தீசர் நமக்கு அருள் இருக்கிறார். வாசி வசப்பட்ட மக்களைப் புகழ்வது இயல்புதான். என்ன காரணம்?
     ஆசான் புருவமத்தியில் ஒடுங்கி உந்திக்கமலத்தில் தங்கி இருக்கிறான். அதனால், எங்களுக்கு, பொருள் பற்றற்ற பண்பு, சாதிதுவேசம் அற்ற குணம் வந்தது. இதனால் குணம் செம்மைப்பட்டது. ஆகவே அன்பர்களுக்கு உதவி செய்கிறோம்.
     ஆகவே ஆசான் ஆசியால் இந்த வாய்ப்பு கிடைத்தது. தொண்டர்களுக்கும் அப்படித்தான். இந்த அளவிற்குப் பொருளுதவி கிடைத்ததும், தலைவன் ஆசிதான். ஆகவே அன்பர்கள் இந்த வாய்ப்பையும் பெற வேண்டும். நான் இதை அடிக்கடி சொல்லியிருக்கின்றேன். தினமும் ஆசான் அகத்தீசரை வணங்கும்போது, பொல்லாத வறுமையிலிருந்து விடுபட வேண்டும். கணவன் குடிப்பழக்கம் உள்ளவனாக இருக்கலாம். அவன் செய்த பாவம் அது. மனைவி வரவுக்கு மீறி செலவு செய்பவளாக இருக்கலாம். அவள் செய்த பாவம் அது. பிள்ளைகள் முரண்பட்ட பிள்ளைகளாக இருக்கலாம். இதையெல்லாம் ஆசானிடம் சொல்ல வேண்டும்.
    
     என்னிடம் சிலர் வருவார்கள். பிள்ளைகள் பிடிக்கவே இல்லை. நான் என்ன செய்வது? என்னென்னவோ முயற்சி எடுத்துப் பார்க்கிறோம். அவன் படிக்கமாட்டேன் என்கிறான் .நான் என்ன செய்வது? என்று ஒருவர் உண்மையிலேயே அழுகிறார். பிள்ளை மேல் இருக்கும் பாசம். ஆசான் திருமூலதேவர் அப்படியே பார்த்து சிரிப்பார். ஐயோ பாவம்! அதன் உண்மை அவருக்குத் தெரியவில்லை. அந்த அம்மையார் அழுகிறார்.
     இரண்டு வருடம், மூன்று வருடம் பையன் அதே வகுப்பிலேயே இருக்கிறானே? என்ன செய்வது? என்று அழுகிறார்.
     மகான் திருமூலதேவர், “அது அவன் மேல் குற்றமில்லையம்மா! அது உன்மேல் உள்ள குற்றம்” என்பார்.
     என்மீது என்ன குற்றம்? என்றார். வளர்த்ததில் குற்றமா? அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது குற்றமா? பிரைவேட் வைத்தது குற்றமா? என்ன குற்றம் என்னிடத்தில்? என்று அந்த அம்மையார் கேட்டார்.
     உனக்கு நீடிய மலச்சிக்கல் இருந்தது அம்மா. அது புரியாமல் நீ பேசுகிறாய். அதனால் பிள்ளை மக்காக இருக்கிறான். பிள்ளை மீதா குறை? மகான் திருமூலதேவர் சொல்கிறார்.
     மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
      மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
      மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
      மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
                        – திருமந்திரம் – கர்ப்பக்கிரியை – கவி எண் – 481
        உனக்கு நீடிய மலச்சிக்கல் ஏற்பட்டு இரத்தம் கெட்டு விட்டது. அந்த சமயத்தில் நீ கருத்தரித்தாய். அதனால்தான் மந்த புத்தி என்று சொன்னார் அவர்.
     இது எனக்குத் தெரியவில்லையே. எந்த மருத்துவனுக்கும் புலப்படவில்லை. நான் செய்த பாவம் என்றே நினைத்தேன், அழுதேன். என் கவனக்குறைவு என்றே நினைத்தேன். அது எனது தவக்குறைதான் என்றார் அந்த அம்மையார்.
      மாதா உதரம் மலமிகில் மந்தனாம் – தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்பட்டு இரத்தம் கெட்டுப் போயிருக்கும், அந்தச் சமயத்தில் கருத்தரிக்கும் குழந்தைக்கு மந்தபுத்தி இருக்கும் என்று சொல்லி விட்டார்.
     
      மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் – சில பேரன்கள் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். தண்ணீர் மனித வர்க்கத்திற்கு ஒரு வரப்பிரசாதம். சாக்கடைத் தண்ணீர் கலக்காமல் இருந்தால் மட்டும் வரப்பிரசாதம்.
     நல்ல தண்ணீர், மழைநீர் சாப்பிட்டால், சுத்தமான மழைநீர் சாப்பிட்டால் கிட்டத்தட்ட நூற்று இருபது வயது வரை வாழலாம். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும் அல்லது சுட வைத்துக் குடிக்க வேண்டும். முன்னமே சொல்லியிருக்கிறேன், சாக்கடை நீர் கலக்காமல் இருந்தால் மட்டும் என்று சொல்லியிருக்கிறேன். சாக்கடை நீர் கலக்காமல் இருந்தால் மட்டும் அது வரப்பிரசாதம். இல்லையென்றால் மஞ்சள் காமாலை வரும். இது அன்பர்களுக்குத் தெரியும். ஆக, பொறுப்பற்ற செயல்பாடுகள். அதுபற்றி இங்கே பேச நேரமில்லை. காலம் வரும் போது அப்போது பேசுவோம்.
     ஆகவே தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். அது உடம்பை முழுவதும் சுத்தம் செய்யும் என்று சொல்வார்கள். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் சிறுநீர் பிரியாது.
     மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
      மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
     ஊமைக்குழந்தை பிறக்கும். பிள்ளை பேசவில்லை என்பான். நீங்கள இரண்டு பேரும் நன்றாகப் பேசுகிறீர்கள் அல்லவா என்று கேட்டார். ஆம் நன்றாகத்தான் பேசினோம் என்றார்கள். பிள்ளை மட்டும் ஊமையாக இருக்கிறது என்றான். என்ன பாவம்?
     “பாவமாவது புண்ணியமாவது? உன்னுடைய கவனக்குறைவு” என்பார் மகன் திருமூலதேவர்.
     “நீ தண்ணீர் நிறையக் குடிக்கவில்லை. அதனால் கேடு வந்ததம்மா” என்றாராம் மகான் திருமூலதேவர். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுத்தமான தண்ணீராக இருந்தால் மட்டும். இல்லையென்றால் மஞ்சள் காமாலை வந்துவிடும்.
     துறையூர் நகருக்கு நாங்கள் கொடுக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் போரிலிருந்து (ஆழ்குழாய் கிணற்றிலிருந்து) எடுத்து அப்படியே கொண்டு வந்து தருகிறோம். சுத்தமான தண்ணீர்.
     “சுத்தமான தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஊமைக் குழந்தை பிறக்கும். ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்டார்.
     “பிள்ளை ஊமையாகப் பிறந்தால் உன்மேல் தான் குறை” என்று சொன்னார். பிள்ளை மந்த புத்திக்கு காரணம் உன்மேல் தான் குறை.
    
      மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
      மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
      மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
      மந்த புத்திக்குக் காரணம் தாய்தான். பிள்ளை ஊமையாய் பிறப்பதற்குக் காரணம் தாயின் குறையே.
     மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை – நீடிய மலச்சிக்கலும், நீடிய நாள் நீர் பிரியாமலும் இருந்து, இரத்தம் கெட்டு விட்டால், கண் இல்லாமல் குருட்டுப் பிள்ளையாகப் பிறக்கும்.
      மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
      மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
      மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
      மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
                        – திருமந்திரம் – கர்ப்பக்கிரியை – கவி எண் – 481
     மாதாவாகிய தாயின் குறைபாட்டிற்கு என்ன காரணம்? தனக்கு ஒரு மலச்சிக்கல் அல்லது உடம்பில் குறைபாடு இருக்கிறது என்றால், கவனிக்கக்கூடிய அறிவை யாரப்பா தருவார்கள்? அது மகான் திருமூலதேவர் ஆசி இருந்தால்தான் வரும். இல்லை, மகான் நந்தீசர் ஆசியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் குறைபாடு தெரியவே தெரியாது. மூர்க்கத்தனமாக, காட்டுத்தனமாக சில பேர் இருக்கிறார்கள். என்ன குறைபாடு? ஏன் இதுபோன்ற பிரச்சனை வந்தது? என்ன நம்மிடம் பலகீனம்? என்ன நோய்? கவனிக்கவில்லை.
     உனக்குத்தான் அறிவில்லையே, அறிவுக் கடலாக இருக்கும் ஆசான் அகத்தீசரை வணங்க வேண்டும். ஆசான் அகத்தீசரை வணங்கினால் நம்மிடம் இருக்கும் குறைகள் தெரியும். நம் உடம்பில் இன்ன பாதிப்பு இருக்கிறது. அதற்கு இன்ன உபாயம் என்று ஆசான் உணர்த்துவார்கள். ஆசானே அறிவாக மாறுவார். “ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபம் செய்து ஆசான் அகத்தீசரை வணங்குகிறோம்.
     மலச்சிக்கல் இருக்கும் அம்மையாரே! நீ கீரையைச் சேர்த்துக்கொள். இரவு நேரத்தில் அதிகநேர கண்விழித்து தூங்காமல் இருக்காதே, நன்றாகத் தூங்கு. உன்னை நீ காப்பாற்றிக்கொள். ஆரோக்கியமான உடம்பை நீ பெற்றுக்கொள் என்பார். ஆரோக்கியமான உடம்பு எது? என்று அறிவதற்கு ஆசான் அகத்தீசர் ஆசி வேண்டும், இல்லையென்றால் புரியாது.
    
     ஆசானை வணங்கினால் உண்மை தெரியும். என்ன காரணம்? சிறப்பறிவு வரும். ஒரு பெண்ணோ, ஆணோ தன்னைப்பற்றி அறிந்து திடமாக இருந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் பலகீனங்களான மலச்சிக்கல், நீர் பிரியாமல் இருப்பது, மாதப்பொழுது தூரமாகாமல் இருப்பது, போன்ற குறைபாடுகளையும், இதற்கு என்ன அடிப்படை என்பதை ஆசானை வணங்கினால் உணர்த்துவார்.
     ஆரோக்கியமான உடம்பு வரும். எப்போது வரும்? தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்ற சிறப்பறிவை ஆசான் அகத்தீசர் தருவார். இல்லையென்றால் ஊமைக்குழந்தையும், குருட்டுத் தன்மையான குழந்தையும், மிக மந்த புத்தி உள்ள குழந்தையும் பிறக்கும். இதற்குக் காரணம் நமது பலகீனமே!
     இந்தப் பலகீனங்களை தலைவன் உடைத்தெறிவான். இல்லையென்றால் எதுவும் முடியாது. ஆகவே, பிள்ளையைப் பார்த்து ஏங்கி அழுவதைவிடப் புண்ணியத்தை செய். பிள்ளையைப் பார்த்து ஏங்குவாள். ஐயோ! பிள்ளை பேசவில்லையே, பிள்ளை கண் குருடாக இருக்கிறதே, மந்த புத்தியாக இருக்கிறதே என்று ஏங்குவதைவிட ஒவ்வொரு மனிதனும் புண்ணியத்தை செய்ய வேண்டும். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.
     புண்ணியத்தைச் செய்தால் சிறப்பறிவும் வரும். புண்ணியத்தைச் செய்தால் பொருள் வளம் வரும். அறிவு வேண்டுமல்லவா? அது ஆசான் அகத்தீசரை வணங்கினால் வரும். ஆக புண்ணியம் செய்து, செல்வத்தினைப் பெற்றுக் கொள்வோம். செல்வத்தைப் பெற்றால் மேலும் மேலும் ஆசை வருமே? என்று கேட்டான். ஆசான் ஆசி இருந்தால் ஆசை வராது. போய் சொல்ல மாட்டான். ஒருவனுக்குப் புண்ணியத்தால் பொருள் வந்தது. ஆகவே பொய் சொல்ல மாட்டான். எனவே புண்ணியத்தை செய்ய வேண்டும்.
     புண்ணியம் செய்தால் எப்படி அறிவு வரும்? புண்ணியம் செய்த மக்களுக்குத் தான் ஆசான் அருள் செய்வார்.
               
     புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
      அண்ணல் அதுகண்டருள்புரி யாநிற்கும்
      எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
      நண்ணறி யாமல் நழுவுகின்றாரே.
                                                -திருமந்திரம் – சிவ பூசை – கவி எண் 1828
               
                புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டுபூ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. பூநீர் என்று பொருள் உண்டு. உடம்பைப் பற்றி அறிகின்ற மக்களுக்கு அது தெரியும். பூநீர் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியும். அது யோகிகளுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்லப்பட்டது ஆகும்.
        இங்கே பூமி, நீர் என்று பொருள்படும். ஆக புண்ணியம் செய்கின்ற மக்களுக்கு நல்ல நிலவளம் இருக்கும், நீர்வளம் இருக்கும். அது மட்டுமல்ல,
      புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
      அண்ணல் அதுகண்டருள்புரி யாநிற்கும்
     புரிந்தான் என்பது  இறந்த காலம். புரியா என்பது தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான். புண்ணியம் செய்கின்ற மக்களுக்கு செல்வநிலை பெருகும், மன அமைதி இருக்கும்.
     அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
      எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
      நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே .
     
     கணக்கில் அடங்காத பாவிகள் தலைவனை அறிய முடியவில்லை என்றார். புண்ணியம் செய்தால் தலைவன் நம்மைப் பார்க்கிறார். தலைவனுடைய ஆசி பெற்றால் செல்வம் பெருகும், அமைதி வரும். ஆசான் நாமத்தைச் சொன்னால் சிறப்பறிவு வரும். ஆகவே இதை  வேறு எந்தச் சடங்காலும், எந்த வகையாலும் பெற முடியாது.
     நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 26.04.1979 அன்று இரவு நேரப் பூஜைக்காக அன்பர் என்னை எழுப்புகிறார். அன்றுதான் ஆசான் ஞானபண்டிதன் எனக்கு வாசி நடத்திக் கொடுத்தார். வாசி நடத்திக் கொடுத்து உந்திக்கமலத்தில் தங்கி இருக்கிறார். அப்படி வாசி வசப்பட்டதால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்கு மேல் நான் பேச முடியாது. ஆகவே இந்த வாய்ப்பை நீங்கள் பெற வேண்டும்.
     ஆகவே இந்த வாய்ப்பை அன்பர்கள் பெற வேண்டுமென்றும், ஞானிகள் ஆசி பெற்றுக் கொண்டும், மரணமில்லாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தை நீங்களும் அடைய வேண்டுமென்றும் சொல்கிறோம்.
     இந்த வாய்ப்பை நாங்கள் பெறுவதற்கு ஒன்றே ஒன்று தியானம் செய்திருக்கிறோம், உருகி நாமஜெபம் செய்திருக்கிறோம். இதுதான் வழி. மொட்டை அடித்துக்கொள்வதாலோ, அழகு குத்திக்கொள்வதாலோ ஒன்றும் அடைய முடியாது.
     ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்று சொல்லியிருக்கிறோம். இதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோமே தவிர, வேறு எந்தச் சடங்கும் செய்து இந்த வாய்ப்பை நாங்கள் பெறவில்லை.
     ஆகவே நீங்கள் சடங்குகளில் அகப்பட வேண்டாம். உயிர்வதை செய்து பாவியாக வேண்டாம். உயிர்வதை செய்கின்ற குடும்பத்தில் நிச்சயமாகத் தோல்வி மேல் தோல்வி வந்து அடித்துக் கொண்டு போய் விடும். அவன் செய்யும் காரியம் எல்லாமும் தூள்பட்டுப் போகும்.
     உயிர்வதை செய்பவன், முன்னோர்கள் செய்தார்களே? என்பான். முன்னோர்கள் சிண்டு வைத்திருந்தான், நீ வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். முன்பு சிண்டு வைத்திருந்தான். கீழே படுக்க மாட்டான். திடீர் என்று சாய்வான். நீ அப்படிச் சாய்கிறாயா? என்று கேட்டோம்.
     முன்னோர்கள் மூடத்தனமாகச் செய்தால் நாம் இப்போது அதையே செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. அப்படிச் செய்யாதே. அதே சமயத்தில் வீண் ஆரவாரம் செய்யாமல், தினம் தியானம் செய்து, ஏதோ புண்ணியத்தை செய்து கொள். ஏதோ நான்கு பேருக்கு அல்லது இரண்டு பேருக்கு அன்னதானம் செய்து புண்ணியத்தைப் பெருக்கிக் கொள் என்றும், ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள் என்றும், நீங்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறோம்.
     அதே சமயத்தில் மன அமைதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த உடம்பு திடமாக இரும்பு போன்று இருக்க வேண்டுமென்றும் கேட்க வேண்டும். சிலபேர் பெரிய சட்டை போட்டிருப்பான். ஆனால் உடம்பை சட்டையின் உள்ளே தேடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு உடம்பை வைத்திருப்பான்.
     இந்த லட்சணத்தில் அவன் ஒரு டீ வாங்குவான். அதில் பாதியை குடித்து விட்டு பாதியை வைத்து விட்டுப் போய்விடுவான். ஏனென்றால் பார்க்கின்றவர்களுக்கு தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்வதற்காக இருக்கும். வயிற்றுப் போக்கு உள்ளவன் பாதி டீயை குடித்து விட்டுப் போனான் என்றால் நீ எதற்காகப் பாதி வைத்து விட்டுப் போகிறாய்?
     உனக்குதான் உடம்பிற்கு ஒன்றுமில்லையே, சட்டைதான் போட்டிருப்பான். உடம்பு எங்கே என்று தேட வேண்டும். இவன் ஒரு  டீ வாங்குவான். அந்த டீ பாதி டம்ளர்தான் இருக்கும். அதில் பாதி குடித்துவிட்டுப் பாதி வைத்து விட்டுப் போவான்.  
     எதற்காக வைத்து விட்டுப் போனாய்? என்று கேட்டால், அவன் ஏன் வைத்து விட்டுப் போனான்? என்பான்.
     அவன் வாந்தி எடுக்க வெளியே போனான். உனக்கு என்ன? ஏன் வைத்து விட்டுப் போனாய்?
     ஆக அதில் பெரிய கௌரவத்தை கண்டுபிடித்து விட்டான். இன்னும் சிலபேர் ஏழு அல்லது எட்டு ருபாய் மதிப்புள்ள குளிர்பானத்தை வாங்கி பாதி சாப்பிட்டு விட்டு மீதம் வைத்து விட்டுப் போவார்.
     ஏன் எங்கே கொள்ளையடித்த காசு இது? என்று கேட்போம்.
     பாதியை வைத்து விட்டுப் போகிறாய்? இதற்கு என்ன அர்த்தம்? இதைப் பார்த்து இன்னும் சில பேர் அப்படி செய்தான். இது ஒரு பழக்கம். பாதியை வைத்து விட்டுப் போவதில் ஒரு கெளரவம் இவருக்கு. எங்கேடா உடம்பு? என்றால் உடம்பினை சட்டைக்குள் தேடிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. அவ்வளவு பலகீனமாக இருப்பான்.
     இப்படி இருந்தால் எப்படி இவர்களெல்லாம் வாழ முடியும்? திடமான உடம்பு இருக்க வேண்டும். திடமான அறிவும், திடமான உடம்பும் இல்லாமல் எப்படி வாழ முடியும் இந்த உலகத்தில்? பெருங்காற்று அடித்தால் அவனை அடித்துக்கொண்டுப் போய்விடும், சைக்கிள் கீழே கிடக்கிறது, அவன் மேலே பறக்கிறான். அவ்வளவு பெரிய மனிதன்!
     ஆக அடிப்படை உடம்பை இரும்பு போல் வைத்துக் கொள்ள வேண்டும். மனதை வைரம் போல வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் அருள் பலமும், புண்ணிய பலமும் இருக்க வேண்டும்.
     ஆகவே நாம் பேசுவது எந்தச் சடங்கிற்கும் ஆட்படாத பேச்சுக்கள். இந்தச் சங்கம் உறுதி மிக்கது, வைரம் போன்றது, உருக்கு போன்றது. என்ன காரணம் சிறந்த கொள்கை. ஆசான் ஆசியால் கிடைத்திருக்கிறது. நாங்கள் சொல்கின்ற கருத்தை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது. என்ன காரணம்? நாங்கள் பேசுகின்ற கருத்தை, காட்டுகின்ற பாதையை, வகுத்துத் தருகின்ற கொள்கையை மாசுபடுத்துவதற்கு உலகத்தில் ஒருவனும் கிடையாது. இரும்பு வாழ்க்கை, இரும்பு போன்றது, உருக்கு போன்றது, வல்லமை உள்ளது, திண்மை உள்ளது.
     ஆகவே நாங்கள் காட்டுகின்ற பாதையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வருகின்ற 24.09.1995 ஞாயிற்றுக்கிழமை மகான் புஜண்டமகரிஷி மண்டபத்தில் விழா நடைபெறும். மண்டபத்தின் பேரே மகான் புஜண்டமகரிஷி மண்டபம், மகான் பதஞ்சலியார் இல்லம்.
     யாரேனும் பொருள் கொடுக்க விரும்பினால், அங்கே அன்பர்கள் இருப்பார்கள், அவர்களிடம் கொடுக்கலாம். மகான் பதஞ்சலியார் இல்லத்தில் நன்கொடை கொடுக்கலாம். அது பதஞ்சலியார் இல்லம், இது ஒங்காரகுடில், ஓங்கார இல்லம், மகான் கருவூரார் இல்லம், மகான் நந்தீசர் இல்லம், மகான் தன்வந்திரி இல்லம் இப்படி ஞானிகள் பெயரை வைத்திருக்கிறோம்.
     ஆகவே அன்பர்கள் மகான் புஜண்டமகரிஷி மண்டபத்தில் 24.09.1995 புரட்டாசி மாதம் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு நீங்களெல்லாம் வர வேண்டும். இன்றைய தேதி 8. இன்னும் 16 நாட்கள் இருக்கிறது. மறுபடி இதையே பேசுவோம்.
     எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டான்.
     மனிதனை மனிதனாக்கப் பேசுகிறோம்.
     பகுத்தறிவுள்ளவனாக்கப் பேசுகிறோம்.
     மூடத்தனத்தை வேரோடு கலைந்தெறியப் பேசுகிறோம்.
     ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கும் அராஜகத்தை அழிப்பதற்காகப் பேசுகிறோம், வருங்காலத்தைப் பேசுகிறோம்.
     ஆக இந்த காலகட்டத்தில் ஆன்மிகம் என்ற பெயரில் மனிதனை முட்டாளாக்கி அவனுடைய பொருளாதாரத்தைக் கவருகின்ற, திருடுகின்ற கயவரை நாங்கள்தான் சுட்டிக்காட்ட முடியும். வேறு யாருக்கும் அந்த யோக்கியதை கிடையாது. நாங்கள் வெளிப்படையாக பேசுகின்றோம். இங்கே அராஜகத்தைப் பற்றி பேசுவோம். ஆன்மீக அராஜகத்தில் இதுபோன்று நடக்கிறது என்று பேசுவோம்.
     ஆகவே இதை நாங்கள்தான் சுட்டிக்காட்ட முடியும். அந்த தகுதி எங்களுக்குத்தான் உண்டு. ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கக் கூடிய அல்லது வேறு வகையாக நடக்கக் கூடிய எல்லா வகையான அராஜகத்தையும் அணு அணுவாக பிரித்துக் காட்டக் கூடிய வல்லமை எங்களுக்கு உண்டு.
     யான் என்ற கர்வத்தோடு பேசுகிறோம் என்று நினைத்துவிடாதீர்கள், தலைவன் கொடுத்த ஆசி. கர்வமாகப் பேசுகிறார், தற்பெருமையாகப் பேசுகிறார் என்று சிலபேர் சொல்வார்கள். தற்பெருமை வேறு, இது வேறு. இது நம்முடைய கருத்துகளை வகுத்துச் சொல்லும் சுய விமர்சனம். மற்றவர்கள் கருத்துகளை பலகீனத்தைச் சொல்வது விமர்சனம். இது அவர்களுக்குத் தெரியாவிட்டால் அதுபற்றி எங்களுக்கு அவசியமில்லை.
     ஆக 24.09.1995, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் மறுபடியும் இங்கே வந்து விழாவில் கலந்து கொள்ளுங்கள். இது போன்ற நிகழ்ச்சியை நடத்த அன்பர்கள் வருவார்கள். மலேசியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வருகிறார்கள். அது பெரிய ஒரு வாய்ப்புதான்.
     ஆனால் இங்கு இருந்து கொண்டே வருவதற்கு நேரமில்லை என்பார்கள். மலேசியாவிலிருந்து செலவு செய்து கொண்டு இங்கே தொண்டு செய்ய வருகிறார்கள். ஆகவே நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள்.
     புனிதமான “ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி”, ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி” என்ற ஞானிகள் நாமத்தை, புனிதமான நாமங்களைக் காதால் கேட்டு பபுண்ணியவானாகுங்கள். அதுமட்டுமல்ல, பல்வேறு பிரச்சனைகளும், நோயும், பிணியும், வறுமையும் வாட்டி வதைக்கின்ற அந்தத் துரத்தையெல்லாம் உடைத்தெரியக்கூடிய ஆசான் அகத்தீசர், மகான் நந்தீசர் நாமத்தைச் சொல்லி நாமும் பூஜை செய்வோம், ஞானிகளின் ஆசியைப் பெறுவோம்.
     நீங்களெல்லாம் விழாவில் பங்கு கொள்ள வேண்டும். இங்கே உள்ள பிரசாதத்தை ஆசான் ஞானபண்டிதனும், மகத்துவம் பொருந்திய மகான் புஜண்டமகரிஷியும், கருணையே வடிவான ஆசான் அகத்தீசரும், மகான் திருமூலதேவரும் பார்க்க வேண்டுமென்று மானசீகமாக வேண்டியிருக்கிறேன். அந்த உணவை ஞானிகள் பார்ப்பார்கள். ஞானிகளின் அருட்பார்வை அந்த உணவின் மீது படும்.
     அந்த உணவைப் பிரசாதமாக நினைத்து, அதை ஆசான் ஞானபண்டிதன் கொடுத்ததாக நினைத்து, அந்த உணவு புனிதமானது என்று அந்தப் பிரசாதத்தை சாப்பிட்டு ஆசி பெற வேண்டும்.
     ஆசானை வீழ்ந்து வணங்கி “உணவுப்பொருள் பிரசாதமாக, புனிதத் தன்மையுள்ளதாக மாற வேண்டும்” என்று வேண்டிக் கேட்டோம்.
     “நீங்கள் தலைமை தாங்க வேண்டும்” என்றும், “நீங்கள் இந்த உணவை ஒரு பார்வை பார்க்க வேண்டும்” என்றும் மகான் திருமூலதேவரையும், ஆசான் அகத்தீசரையும் கேட்போம். ஞானிகள் பார்வை பட்ட அந்த உணவு நிச்சயமாக நோய் தீர்க்கும். என்ன காரணம்?
     நான் “இவ்வளவு செலவாகிறதே” என்று நினைக்கவே மாட்டேன். “நல்லபடியாக மக்கள் சாப்பிட வேண்டும். அவர்களுக்கு நோய் தீர வேண்டும். அவர்கள் பசியாற வேண்டும்” என்று நினைப்பேன்.
     நல்லமனதோடு தயாரிக்கப்பட்ட உணவு.
     நல்லமனதோடு கொடுக்கக்கூடிய வாய்ப்பு.
     நல்ல மனதோடு உணவை வழங்கும் கரங்கள்.
     ஆக எல்லாவற்றிற்கும் மேலாக ஆசான் திருவருள். ஆகவே, அந்த உணவும் பெருமைக்குரிய உணவை நல்லபடியாக நீங்கள் அந்த பிரசாதத்தை சாப்பிட வேண்டும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் நல்லபடியாக அமைய வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் என்னை வாழ்த்த வேண்டும். நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும், மனமார வாழ்த்த வேண்டும். குடிலாசானும், குடிலும், இந்தச்சங்கமும் நல்லபடி வாழ வேண்டுமென்று வாழ்த்த வேண்டும். நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்த வேண்டுமென்று ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்கிறேன்.
     ஐந்து வயது பிள்ளையாக இருந்தாலும் சரி, இவர்களெல்லாம் நல்லவர்கள், நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்தினால், அதற்குத் தனித்தன்மை உண்டு. அதற்கு மிகப்பெரிய வல்லமை உண்டு.
     ஆகவே நீங்களெல்லாம், எங்களை வாழ்த்தி, இந்தச் சங்கம் வாழ வேண்டுமென்று வாழ்த்தியும், எங்களுக்கு நீங்கள் துணையாக இருந்து, உங்களால் முடிந்த அளவிற்குப் பொருளுதவி செய்யுங்கள். எல்லாம் வல்ல ஆசான் அகத்தீசர் உதவுகிறார், பொருளுதவிக்கு அருள் செய்கிறார்.
     நாங்கள் மற்றவனைப்போல் அது செய்கிறோம், இது செய்கிறோம், மந்திரம் செய்கிறோம் என்று சொல்ல மாட்டோம். உனக்கு ஏவல் செய்து விட்டான். பில்லி சூனியம் செய்து விட்டான். நான் அதை அப்படிச் செய்கிறேன், இப்படிச் செய்கிறேன் என்று போய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
     ஆசானைக் கேட்கிறோம், “அன்னதானம் செய்ய வேண்டும், அதற்குரிய பொருளுதவி செய்ய வேண்டும்” என்றால் அவர் அருள் செய்கிறார். வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் பொருளுதவி கொடுக்கிறார்கள். ஆக, ஆசான் ஞானபண்டிதன் சுப்பிரமணியர் கொடுக்கிறார். அவர் கொடுத்த உணவைத்தான் நீங்கள் சாப்பிட்டுப்போகிறீர்கள்.
     அவர் உங்களுக்குத் கொடுத்த பொருளாதாரத்தை நீங்களும் கொடுக்கிறீர்கள், அவரும் கொடுக்கிறார். அவர் மூலமாகத்தான் நீங்களும் கொடுக்க முடியும். உங்களால் கொடுக்க முடியாது. ஆகவே சாப்பிடும் பொது, அவர் நின்று பார்த்துக் கொண்டே இருப்பார். ஆசான் சுப்பிரமணியரும், ஆசான் அகத்தியரும் மிகப்பெரிய ஞானிகள்.
           மக்கள் எல்லோரும் சாப்பிடும் போது, பிள்ளைகள் சாப்பிடட்டும் என்று சொல்லி அளவில்லா மகிழ்ச்சி அடைவார்கள். சாப்பிட்ட பிறகுதான் ஆர்கள் வெளியில் போவார்கள். ஆகவே அவர்கள் பார்வை உங்கள் மீது பட வேண்டுமென்று சொல்லி, இது போன்ற நிகழ்ச்சிகள் நல்லபடி நடக்க வேண்டுமென்றும், இந்தச் சங்கம் வாழ வேண்டுமென்று நீங்கள் வாழ்த்த வேண்டும். வருகின்ற 08.10.1995 ஞாயிற்றுக்கிழமை தேதியில் மறுபடியும் கூடுவோம்.
     24.09.1995 அன்றும் விழாவில் நீங்களெல்லாம் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் பங்கு கொண்டால் ஞானிகள் பார்வை உங்கள் மீது படும். வஞ்சமில்லாத வாழ்வு வரும். வறுமை இல்லாத வாழ்வு வரும். திடமான உடம்பு வரும். சிறந்த சிந்தனை வருமென்று சொல்லி, இது வரையிலும் அமைதியாக இருந்த உங்கள் திருவடியை வணங்கி முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0153495
Visit Today : 103
Total Visit : 153495

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories