19.04.2001 – மகான் ஔவையார் அருளிய விநாயகர் அகவலுக்கு மகான் ஆறுமுக அரங்கர் வழங்கிய அருளுரை
ஓம் அகத்திசாய நம
ஓம் அகத்திசாய நம
ஓம் அகத்திசாய நம
அன்புள்ள அகத்திய சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒவ்வொரு வாரமும் இங்கே வந்து ஞானிகள் இயற்றிய பாடல்களை பாராயணம் செய்யக்கேட்டு, நீங்களும் பாராயணம் செய்து ஆசி பெறுகிறீர்கள். இது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமே காரணம். இந்தத்துறை மிகக் கடினமான துறையாகும். யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் இது மிக கடினமானது. இல்லறத்தார்கள் இங்கே வந்து பாராயணம் செய்வதும், பாராயணத்தைக் கேட்பதுமாக இருந்தால் குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும், மன அமைதி இருக்கும். எப்போது பார்த்தாலும் மனக்கவலை, தேவையற்ற சிந்தனைகள், மன உளைச்சல், வறுமை இவையெல்லாம் பாராயணத்தை கேட்பதால் நீங்கும். தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.
திருமந்திரத்தில் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றைப்பற்றி சொல்லியிருப்பார் ஆசான் திருமூலர். அதேபோல் அருட்பாவிலும் அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு பகுதியாக இருக்கும். திருக்குறளிலும் அப்படியே இருக்கும். திருக்குறளில் முப்பத்தெட்டு அதிகாரம் அறத்துப்பால் ஒரு அதிகாரம் ஊழ். இது எல்லா அதிகாரத்திற்கும் பொருந்தும். எழுபது அதிகாரம் பொருட்பால், இருபத்தைந்து அதிகாரம் கமாத்துப்பால். ஆக இந்த மூன்றும் முப்பால். அந்த முப்பாலில் நாற்பால் உள்ளது, வீடுபேறு உள்ளது.
ஆனால் ஒளவையாரின் விநாயகர் அகவலில் மட்டும் வேறு பேச்சிற்கே இடமில்லை. யோகமும் ஞானமும் மட்டுமே பேசியிருப்பார். யோகம் கூட சொல்லவில்லை. எடுத்தவுடனே நான்காம்படியாகிய ஞானம்தான். ஆக நான்காம்படியாகிய விநாயகர் அகவலைப்பற்றி பேசுவது கடினம்தான். ஏனென்றால் அது அவரவர்கள் உணரக்கூடிய ஒன்று. இதை சொல்லி விளக்குவதும் அல்ல. ஒளவையார் சொல்லியிருக்கிறார்.
எல்லாம் வல்ல இயற்கை உயிர் தோற்றத்திற்கு முன் எப்படி இருந்தது என்றால் அப்போது சூரியன் இல்லை. அப்படியே நிசப்தமாக, அமைதியாக இருந்தது. இது ஆரம்பநிலை. நிசப்தமாக இருந்தது. எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. அதுதான் பிரம்மநிலை என்று சொல்வார்கள். பிறகுதான் அதிலிருந்து ஒரு இயக்கம் நடந்திருக்கிறது.
அகரம்தான் பரவெளியில் ஒளி உண்டாச்சு
அதில் நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
இகரம் தான் தண்ணீர் மண் இரண்டதாச்சு
இதில் நின்றே ஜீவாத்மா தோன்றலாச்சு
உகரம்தான் பூமி பருவதம் ஆச்சு
உகந்ததொரு நான்குவித யோனியாச்சு
ஒகர வழி வட்டம் ஏழு தோற்றமாச்சு
உண்மை பராபரத்தினுட செயல் தான் ஆதி.
– சுப்பிரமணியர் ஞானசைதன்யம் – கவிஎண் 108
என்பார். ஆரம்பகாலத்துல இருட்டாக இருந்திருக்கு. அசைவில்லை, காற்றில்லை, தண்ணீர் இல்லை, சூரியன் இல்லை. ஆரம்ப காலத்தில் வந்த அசைவு, அந்த பிரம்ம நிலைக்கு பிறகுதான் ஒரு இயக்கம் தோன்றியிருக்கு. எப்படி தோன்றியிருக்கிறது? இந்த சூரியன் போன்று ஆயிரக்கணக்கான சூரியன் போன்ற ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியில் காற்று உண்டாச்சு என்றார். பிரம்மாண்டமான ஒரு ஒளி வெளிச்சம், ஒரு எரிப்பிழம்பு அப்படிப்பட்ட ஒரு இயக்கம், ஒரு சுழற்சியின் காரணமாக காற்று உண்டாயிற்று.
அகரம்தான் பரவெளியில் ஒளி உண்டாச்சு
அதில் நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
ஆக அந்த சுழற்சியின் காரணமாக காற்று உண்டாச்சு. பிறகு காற்றின் காரணமாக கதிரவன் வந்தது. பிறகு ஒரு சுழற்சி அக்னி வந்தது.
இகரம் தான் தண்ணீர் மண் இரண்டாச்சு – பிறகு தண்ணீர், மண் வந்தது. ஆக மொத்தம் நான்கு பூதங்கள். அசைவற்ற ஒன்றில் இருந்து தோன்றி காற்றாக, கனலாக, புனலாக, நிலமாக இப்படி நான்கு பூதம் தோன்றியது. ஆக இதற்குக்கீழ், இந்த பூமிக்குக்கீழ் ஒரு சக்தி இருக்கிறது. இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான அண்டத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் விநாயகம் என்று பொருள்.
விநாயகம் இந்த பூமியை தாங்கிக்கொண்டிருக்கும் சக்தி. நம்முடம்பில் எப்படி இருக்கிறது விநாயகம்? கணபதி என்றாலும் விநாயகர் என்றாலும் ஒன்றுதான். நம் உடம்பில் கால் எழும்பும் கதிர் எழும்பும் கூடுகின்ற வினாத்தண்டு உள்ளது. அந்த கால் எழும்பும், கதிர் எழும்பும் கூடுகின்ற இடத்தில் சுக்கிலம் அல்லது சுரோணிதம் உற்பத்தியாகும். அந்த இடத்திற்கு காற்றுப்போகாது. அதுதான் குண்டலினி சக்தி என்பது. அந்த இடத்திற்கு இப்போது உள்ள சுவாசம் போகின்ற பாதியோடு போகமுடியாது. இந்த சுவாசம் மூச்சுக்காற்று வந்துபோகும். இது கீழ்பகுதியிலுள்ள மூலாதாரத்திற்கு போகவே போகாது. சுவாதிட்டானம் வரைதான் செல்லமுடியும். மூலாதாரத்திற்கு அது செல்லவே முடியாது. அதற்கு பின்புறமாக செல்லவேண்டும். அந்த கீழ்பகுதி இருட்டாக இருக்கும். அங்கே வெளிச்சத்திற்கு இடமில்லை. அது காற்று போகமுடியாத இருட்டறை. அங்கே உள்ள அதுதான் குண்டலி சக்தி. அதை எப்படி ஞானி எழுப்புகிறான்? என்ன செய்கிறான்?
மூச்சுக்காற்றை ஸ்தம்பித்து, நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகிறான். கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகிறான். இந்த காற்று இங்கேயும் அங்கேயும் போகமுடியாமல் பிடறிவழியாக சென்று குண்டலியில் தங்கிவிடும். அந்த சக்திக்குத்தான் விநாயகம் என்று பெயர். இது எல்லா ஞானிகளுக்கும் தெரியும்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீழ் திருவாடு துறையைப்பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
§ துறையறி விளக்கம்
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்பு என்பது இடைகலையும் பிங்கலையும் குறிக்கும். இடது பக்கம் வருகிற காற்றை இடகலை என்றும், கருஞ்சாரை என்றும், வலது பக்கம் வருகின்ற காற்றை பிங்கலை என்றும், வெஞ்சாரை என்றும் சொல்வார்கள். இந்த பாம்பை பிடித்துவைத்தல் என்று அர்த்தம்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
அதை எப்படி இயக்க வேண்டும்? எப்படி நிறுத்தவேண்டும்? எப்படி அந்தக்காற்றை இரேசிக்கவேண்டும்? இரேசித்து அந்தக்காற்றை எப்படி கும்பிக்க வேண்டும்? கும்பித்து எப்படி புருவமத்தியில் செலுத்த வேண்டும்? என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றையும், மூச்சையும் நன்றாக கட்டிக்கொள்வார்கள், கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்துவான். கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றிற்கு உகாரம் என்று பெயர். உகாரத்தை 2 என்பர். புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்றிற்கு ஆகாரம் என்று பெயர். ஆகாரத்தை 8 என்பர்.
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீழ் திருவாடு துறையைப்பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
அதுபோன்ற இடத்தில் அந்த மூச்சுக்காற்று ஒடுங்கினால் குண்டலினி தோற்றமாகும். அந்தக்காற்று குண்டலினியில் ஒடுங்கும். அதனுடைய இடம் மூலாதாராம். அதில் ஒடுங்கினால் அந்த இடத்தில் என்ன ஏற்படும்? ஒடுங்குகின்ற தேதியிலிருந்து ஒரு அசைவு தோன்றும், ஒரு இயக்கம் தோன்றும்,
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
தலைக்குள்ளாக தமர் கொண்டு இருத்திடில்
மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா
கலைக்கும் பொழுதில் கனல் பிறவாதே.
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை தலைக்குல்லாக தமர் கொண்டு இருத்திடில் மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா – மனக்குரங்கு சும்மா ஆட்டம் போடுமா? என்றார்.
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
– திருமந்திரம் – தாரணை – கவிஎண் – 591
இவையெல்லாம் யோகக்கருத்துக்கள். இந்தப்பாடல்கள் அத்தனையும் யோகப்பாடல்கள். ஆனால் விநாயகர் அகவல் பூரணமாக ஞானமே. அங்கே வேறு பேச்சிற்கு இடமேயில்லை. அதற்காகத்தான் பேசவேண்டி இருக்கிறது.
ஆக அந்தக்காற்று ஒடுங்கினால் ஒரு அசைவு ஏற்படும். ஓங்காரம் ரீங்காரம் கேட்கும். இதுதான் இயக்கம். அந்த இயக்கத்திற்கு ஔவையார் விநாயகம் என்று பெயர் வைக்கின்றார். அதுதான் மூலப்பொருள், அதுதான் மூலக்காரணம் அது விநாயகம். அதை தில்லைவாழ் அந்தணர் என்றும் சொல்வார். “தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்றும் சொல்லுவார்.
இங்கே ஔவையார் அதை விநாயகம் என்றும், முதல் அல்லது மூலப்பொருள் என்றும் சொல்லுவார். உண்மைதான் மூலாதாரத்தில் காற்று ஒடுங்கினால், ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு தும்பிக்கை போன்ற தோற்றம் மட்டும் நிற்கும். யானை முகமும் பக்கத்தில் ஒரு பெண்ணும் இருப்பாள். அவள் வல்லபை சக்தி ஆவாள். அந்த யானை முகம் மட்டும்தான் இருக்கும். உடம்பு தெரியாது. அந்த முகம் மட்டும் அகக்கண்களுக்கு யோகிகளுக்கு புருவமத்தியில் தெரியும். அந்த சக்தியை குண்டலி சக்தி என்று விநாயகர் அகவலில் பாடியிருக்கின்றார். அந்த குண்டலி சக்திக்கு காரணகர்த்தாவாக இருப்பது கணபதி விநாயகரும், வல்லபையும்தான். அது ஒரு இயக்கம். அந்த இயக்கத்திற்குத்தான் மகான் ஔவையார்,
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
– ஔவையார் – விநாயகர் அகவல்
அது உள்ளே ஒடுங்கியவுடன் என்ன ஆகும்? நாதமும் கீதமும் கேட்கும் என்றார்.
நாதமுங் கீதமுங் கேட்கும் – அந்த
நாயகன் சந்நிதி தன்னிடை சேர்க்கும்
மாதவ நன்னிலை யார்க்கும் – நல்ல
மாசறு தேசிகன் பொற்பதம் போற்றி.
– மகான் மஸ்தான்சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 25
அங்கே காற்று ஒடுங்கிவிட்டால் பத்து வகையான நாதங்கள் கேட்கும்.
மணி கடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.
– திருமந்திரம் – கவி எண் 606
மணி கடல் யானை வார்குழல் மேகம் – இடி ஓசை கேட்கும். மணி ஓசை கேட்கும், யானை ஓசை கேட்கும், கடல் அலை போன்ற ஓசை கேட்கும், புல்லாங்குழல் ஓசை கேட்கும், இடி நாதம் கேட்கும், தும்பி வண்டு நாதம் கேட்கும், சங்கு நாதம் கேட்கும், யாழ் சப்தம் கேட்கும். இவையெல்லாம் உள்ளே கேட்கும் நாதங்கள். இது நம்முடம்பில் கேட்காது. மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால் அப்போது கேட்பதுதான் இந்த தசநாதம்.
சிலம்பொ லியென்னக் கேட்கும டிமெத்த
சிக்குள்ள பாதை துடிக்குமடி
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே.
– மகான் கொங்கணர் வாலைக்கும்மி – கவி எண் 26
சிலம்பொலியென்ன கேட்கும் சிலம்பொலி பற்றித்தான். மூச்சுக்காற்று ஒடுங்கினால்தான் இந்த சிலம்பொலி கேட்கும். சப்தம் கேட்கும். தசநாதம் கேட்கும். அந்த தசநாதத்தைதான் ஔவையார்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
என்றார். சீதம் என்றால் குளிர்ச்சி, களப என்றால் நறுமணம், தாமரை சேற்றில் இருக்கும். தண்ணீரில்தான் இருக்கும். சீதக்களப என்றால் குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய செந்தாமரை மலர்கள் போன்ற விநாயகன் திருவடி என்பார்.
குளிர்ச்சி பொருந்திய தாமரை போன்றும் நறுமணம் உள்ள செந்தாமரை போன்று இருக்கிறது அவர் ஆடுகின்ற நடனம். ஏன் இதை விநாயகர் என்று சொன்னார்? இந்தப்பாடலில் எல்லாம் சிவபெருமானைத்தானே சொல்ல வேண்டும். பரம்பொருள் எல்லாம் ஒன்று, அதை விநாயகனாக பாடுவதும், ஈஸ்வரனாக பாடுவதும், முருகனாக பாடுவதும், சக்தியாக பாடுவதும் இயல்பு. எல்லாம் ஒரே சக்திதான். இந்த இடத்தில் சிவபெருமானாக பார்க்கவேண்டும். அவரைக் குறிக்கோளாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதச்சிலம்பு பல இசை பாட – பல இசை என்றால் நாதம் கீதம், பத்து வகையான நாதங்கள் பல இசை பாட.
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பொன்னரைஞானும் – இப்போதுதான் வர்ணிக்கிறார். இடுப்பில் அக்னி. அதுதான் பொன். அப்படி உருவகப்படுத்தி பாடுகிறார். அறையில் தங்கத்தால் செய்யப்பட்ட அரைஞாண் கயிறு, அரைஞான் என்று சொல்வார்கள். அப்ப தங்கத்தால் செய்யப்பட்டது எல்லோரும் வெள்ளியில்தான் போடுவார்கள். தங்கத்திலும் போட்டதாக அலங்கரித்துக்காட்டுகிறார்.
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் – ஆடைகள் பல வண்ணங்களாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டதாக மென்மையான ஆடை அல்லது பல பூ வேலைப்பாடான ஆடையாக வைத்துக்கொள்ளலாம்.
விநாயகபெருமானுக்கு தங்கத்தால் அரைஞாண் கட்டியும், மேலே பூந்துகில் ஆடை போன்ற பல வண்ண ஆடைகளை உடுத்தியும் அது போன்ற அந்த தோற்றம் ரொம்ப அழகு பொருந்தியதாக இருக்கிறது என்கிறார் மகான் ஔவையார்.
அந்த உடம்பு ஜோதி உடம்பு. இங்கு விநாயகரைப் பற்றி சொல்லவில்லை. மகான் ஔவையார் இங்கு குறிப்பிடுவது முற்றுப்பெற்ற முனிவர்களை. அது கடவுளுடைய தோற்றம்.
பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்ப – மருங்கு என்றால் உடம்பு.
மருங்கில் வளர்ந்தழகு எறிப்ப – எறிப்ப என்பது ரொம்ப வெளிச்சம், அழகு மென்மேலும் ஒளி தருகின்ற உடம்பாக இருக்கின்றான். விநாயகபெருமானுக்கு அழகு பொருந்திய ஒளி உடம்பு பிரகாசிக்கின்றது.
பேழை வயிறும் பெரும்பாரக்கோடும் – பேழை என்றால் பெரிய வயிறு அல்லது பெட்டி. விநாயகருக்கு பெரிய வயிறுதான். பெரும்பாரக்கோடு – விநாயகருக்கு பெரிய உடம்புதான். கோடு என்றால் தந்தம், பெரிய தந்தம் உள்ளவர்.
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் – வேழம் என்றால் யானை, விளங்கு செந்தூரமும் – இந்த புருவ மத்தியில் ஒரு செஞ்சுடர் தோன்றும்.
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி 131
புருவமத்தியில் ஒரு ஜோதி செஞ்சுடர் தோன்றும். வேழ முகமும் விளங்கு செந்தூரமும் என்று சொல்கிறார்.
அஞ்சுகரமும் அங்குச பாசமும் – இதை யானைக்காக சொல்லவில்லை. ஐந்து புலன்களும் யானை போன்றது. புலன்கள் அது இஷ்டத்திற்கு செயல்படும்.
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
– திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் 25
என்று புலன்களைப் பற்றி மகான் வள்ளுவரும் சொல்வார். புலன்கள் யானையைப் போன்று வல்லமுடையது.
அஞ்சுரமும் (ஐம்புலன்கள்) அங்குச பாசமும் – மூச்சுக்காற்று வசப்பட்டால்தான் பொறி புலன்கள் வசப்படும். இவ்வளவு பெரிய தத்துவங்கள் இதில் இருக்கிறது.
மூச்சுக்காற்று வசப்படாவிட்டால் நிச்சயம் அவனை கட்டுப்படுத்த முடியாது. காமவிகாரம் அவனை கொன்று விடும். எந்த உடம்பு நமக்கு இடையூறாக இருக்கிறதோ, எந்த உடம்பு நம்மை வஞ்சிக்கின்றதோ அந்த உடம்பை கொன்று விடலாம். அந்த உடம்பை கொல்லுவதற்குத்தான் இதைச் சொல்கின்றார்.
அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் – மூச்சுக்காற்று வசப்பட்டால் பொறி புலன் அடங்கிவிடும்.
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
தலைக்குள்ளாக தமர் கொண்டு இருத்திடில்
மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா
கலைக்கும் பொழுதில் கனல் பிறவாதே.
§ நந்தீசர் நிகண்டு
கனல் ஏற ஏற ஏற நம்மை வஞ்சித்த உடம்பை வேகடித்துவிடலாம். வெந்தே போகும். அந்த உடம்பை மூலக்கனல் கொண்டு வேகடிக்கலாம், இந்த உடம்பை நன்றாக வேகடிக்க வேண்டும். மூலக்கனலை ஏற்றி ஏற்றி உஷ்ணத்தை ஏற்றி உடம்பை கொன்றுவிட வேண்டும். அதுபோன்று செய்தால், பொறிபுலன் அடங்கிவிடும்.
அஞ்சுரமும் அங்குசபாசமும் – யானையை வெல்லுவது, அடக்குவது அங்குசம். அங்குசம் என்பது அறிவுதான்.
திருவருள் துணை இருக்கவேண்டும். திருவருள் துணை இல்லாமல் பொறிபுலனை அடக்கவே முடியாது. அப்படியே ஆசி இல்லாமல் வாசி வசப்படாமல் பொறிபுலனை அடக்க முயற்சித்தால் எந்த பலனும் கிடையாது.
வாசி வசப்பட்டவன்தான் உப்பில்லாமல் சாப்பிடனும். அவன் அந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. உலக நடையில் இருந்து கொண்டே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். திருவருள் துணையால் பொறிபுலனை அடைக்க வேண்டும். தேவை இல்லாமல் பொறிபுலனை அடக்கக்கூடாது.
அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட்
டஞ்சு மடக்கா அறிவறிந் தேனே”.
– திருமந்திரம் – ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை – கவிஎண் 2033
ஆக பொறிபுலனை அடக்க வேண்டிய அவசியமில்லை.
எதை அடக்க வேண்டும்? தெரியுமா?
அஞ்சுகரமும் அங்குச பாசமும் – இந்த பொறிபுலனை அடக்கக் கூடிய ஒரு கருவி அங்குச பாசம், யானையை அடக்க. அதை கட்டுபடுத்தக்கூடிய ஒரு கருவி.
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும் – இதெல்லாம் விநாயகரைப் பற்றி பாடுவது போல இருந்தாலும், சுத்தமான ஞான காண்டம். ஞானம் தான் இருக்கும்.
எனவே பொறி புலனை அடக்குகின்றேன். விஷயார்த்தத்தோடு, காரணத்தோடு, பொறிபுலனை அடக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லை. அவனைத்தான், தவம் தவமுடையார்க்கு ஆகும் என்றார்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 262
தவம் என்றால் எது? பொருளறிந்து, உயிரை அறிந்து, உடம்பை அறிய வேண்டும்.
ஏன் காமம் வந்தது? ஏன் பசி வந்தது? ஏன் நரை திரை மூப்பு வந்தது? ஏன் சாக வேண்டும்? உடம்பை அறிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? இல்லையென்றால் பொறி புலனை அடக்குவதால் யாதொரு பலனும் இல்லை.
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நீல நிற ஒளியைத் தருவான். நீல நிற ஒளி தெரியும் கண்களுக்கு, விநாயகரை அறிந்தவர்களுக்கு சொல்கிறோம்.
வாசி ஒடுங்கினால் அந்த தோற்றம் கண்ணுக்கு புலப்படும். அதுதான் விநாயகர். ஞானிகள் மூலாதாரத்தில் எழுகின்ற குண்டலினி சக்தியில் தோன்றுகின்ற விநாயகனையும், வல்லபை சக்தியையும் வணங்குகின்றான். அப்படி வணங்கி உள்ளத்தில் மகிழ்ச்சியடைகின்றான்.
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
நான்ற வாய் – அகன்ற வாய். நாலிருபுயமும் – எட்டு. நான்கு திசைகளும் எட்டு திக்குகளும். அகன்ற நான்கு திசை, எட்டு திக்கு என்று பொருள்.
இப்போது கவியை பார்ப்போம். சுழிமுனையில் ஜோதியைப் பார்க்கின்ற மக்களுக்கு அகன்ற ஒரு ஜோதியும், அகண்டமாய் ஒரு வெட்டவெளியும், மிகப்பெரிய ஜோதியும் தெரியும். நான்கு திசைகளும் எட்டு திக்கும் புலப்படும். இவையெல்லாம் ஞானக்கருத்துக்கள்.
நான்ற வாயும். நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் – பெரிய வார்த்தை இதுதான். நம்மிடம் இருப்பது இரண்டுகண் தான். யோகிகளுக்கு புருவமத்தியில் ஒரு கண் இருக்கிறது. நெற்றிக்கண், அது சுழிமுனைக்கதவு.
நாம் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட மும்மலம், சுழிமுனைக்கதவு திறந்தவுடனேயே அந்த மும்மலம் அற்று விட்டது. சுழிமுனைக்கதவு திறந்தவுடன் என்ன ஏற்படும்? இந்த உடம்பு தெரியும். இதனுள்ளே எல்லாம் காலியாகிவிட்டது. இதனுள்ளே உள்ள காமதேகம் பொடிபட்டு விட்டது.
மும்மதச்சுவடு- ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்று சொல்லப்பட்டவை இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. சுவடு என்பது ஒரு மனிதன் நடந்து செல்லும்போது தடம் பதியும். புழுதியில் ஒரு குதிரை நடந்தால் அந்த இடத்தில் கால் பதியும், சுவடு அங்கே இருக்கு, குதிரையை காணவில்லை.
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் – மும்மதம் இருந்ததற்கு ஒரு அடையாளமாகத்தான் இந்த உடம்பு இருக்கு என்றார்.பெரிய விஷயத்தை சொல்கிறார். இந்த மும்மலத்தால் ஆன மும்மலச்சுவடு என்ற உடம்புதான் இருக்கே தவிர உள்ளே காயம் இல்லை, பசி இல்லை, இந்திரியம் இல்லை, பொறிபுலன் எண்ணம் இல்லை, ஒன்றை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லை. அப்படியே நிசப்தமாக இருக்கின்றது.
அது போன்று மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்- அப்ப மூன்று கண், சுழிமுனையை அறிந்தவர்கள். மும்மதசுவடு என்பது சுவடு என்றால் அடி வைத்து போகும் போது அந்த அடியின் சுவடு தெரியும்.
முன்னமே கண்ணும் மும்மதச்சுவடும், இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் – இரண்டு செவி இல்லாமல் பின்னே நான்கு செவியா இருக்கும்? இரண்டு செவி என்பது, ஒரு உலக நடையில் கவனம் செலுத்துகிறது. இன்னொரு செவியில் அந்தரங்கத்தைப்பற்றி ஆசான் உபதேசம் செய்து கொண்டிருப்பான்.
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் – அவருடைய பொறிபுலன்கள் எப்படி இருக்குமென்றால் விஷயார்த்தத்தோடுதான் சேகரிப்பார்கள் மற்றவைகளை சேகரிக்கமாட்டார்கள்.
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் – பொன்முடி – தலையில் கிரீடம் போன்று இருக்கிறது என்று வர்ணிக்கின்றார்.
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – திரண்ட முப்புரி என்பது இடகலை, பிங்கலை, சுழிமுனை. இந்த மூன்றும் நாடிகளும் ஒன்று சேரவேண்டும். இப்ப நமக்கு சேராது.
வலதுபுறம் ஒருமுறை வரும். இடதுபுறம் ஒருமுறை வரும். அவ்வளவுதான் இரண்டு சேர்க்கின்ற இடம் நமக்குத் தெரியாது. யோகிகள் இரண்டு பக்கம் வருகின்ற காற்றை இடது பக்கம், வலது பக்கம் வருகின்ற காற்றை இரேசித்து அப்படியே புருவமத்தியில் சேர்த்துவிடுவார்கள். புருவமத்தியில் செலுத்திவிட்டால், திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – இந்த இடைகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒன்று பட்டுவிட்டால் திகழொளி மார்பு – இதயத்திலே தெளிவு வந்துவிடும்.
திகழொளி மார்பு – மென்மேலும் ஒரு பெரிய ஆற்றல் நம்மிடம் இருக்கும். இது யோகக்கருத்து. ஆனால் விநாயகரை பாடியது போன்று இருக்கும். ஆனால் அது விநாயகர் அல்ல.
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – இதயத்தில் ஒரு தைரியம் வந்துவிடும். அச்சமில்லை வென்றுவிட்டோம். யாராலும் வெல்ல முடியாத ஒன்றை வென்றுவிட்டோம், ஆகவே நமக்கு அச்சமில்லை இதயத்தில் ஒரு தனித்தெம்பு இருக்கும்.
சீதக்களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப் பாடப்
பொன்னரை ஞாணும்
பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூலும் திகழொளி மார்பும்
இதுவரை முதல் பன்னிரண்டு வரிகளை பார்த்துவிட்டோம். இனிமேல்தான் அணுகுண்டு வரப்போகிறது. ஔவையாருடைய தன்மையை தெரிந்து கொள்ளலாம்.
சொற்பதம்கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே.
சொற்பதம்கடந்த – சொல்லுக்கே அகப்படாத.
இதைப்பற்றி ஔவையார் வேறு ஒரு பாடலில்,
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
மகான் ஒளவையார் – அங்கியிற் பஞ்சு – குறள் எண் 8
என்றார். இந்த துரியம் என்றால் என்ன? இதைப்பற்றி எல்லா ஞானிகளும் சொல்வார்கள்.
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 121
வித்தைக்கெடுத்து வியாக்கிரத்தே மிக, சுத்தத் துரியம் பிறந்து துடக்கற – இந்த துரியம் என்கிற வார்த்தையை எல்லா ஞானிகளும் பயன்படுத்துவார்கள். மகான் ஔவையாரும், “துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு” என்பார்.
அப்ப துரியம் என்பது என்ன? இங்கே
சொற்பதம்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே. என்பதற்கு என்ன பொருள்.
ஆக அது சொல்லுக்கும் பொருளுக்கும் அகப்படாது. சொற்பதங்கடந்த – சொலுக்கு அகப்படாதது என்று அர்த்தம். சொல்லுக்கு அகப்படாத ஒன்றைப்பற்றி பாடுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார் மகான் ஔவையார். ஔவையார் போன்று பாடுவதற்கு யாருமில்லை. அவ்வளவு கடினமான ஒன்றை இலகுவாக பாடுகிறார்.
மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தாக்கால்
ஈசனைக் காட்டும் முடம்பு.
ஔவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 6
அன்னத்தா லாய வுடம்பின் பயனில்லா
முன்னோனைக் காட்டி விடும்.
ஔவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 10
இதுபோன்ற பாடலையெல்லாம் அள்ளிக் கொட்டிவிட்டு போய்விடுவார். இங்கே துரியம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அது சொல்லுக்கு அகப்படாது என்கிறார் ஔவையார்.
“சொற்பதம்கடந்த துரிய மெய்ஞ்ஞானஅற்புதம் ஈன்ற கற்பகக் களிறே” என்கிறார். அப்ப சொல்லுக்கு அகப்படாத ஒன்றை சொல்லவேண்டும். அது எப்படி? இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்.
புருவ மத்திக்கு சாக்கிரதை, சாக்கிரம், லலாட ஸ்தானம், சுழிமுனை, நெற்றிக்கண் என்று சொல்வார்கள்.
சாக்கிரம், சொப்பன அவஸ்தை, சுழுத்தி, துரியம் என்பது பின்முகமாக இருக்கும். துரியம், அதிதுரியம் என்பார்.
துரியாதீதம் இங்கே மூச்சுக்காற்று (மூக்கு வழியாக) இந்த பக்கம்தான் வந்து போய்க்கொண்டிருக்கும். இதற்கு வேலை என்ன? இது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சுழுத்தியோடு நின்றுவிடும். இதற்கு மேலேயும் போகாது கீழேயும் போகாது. கீழே போகலாம்.
ஆனால் மூலாதாரத்திற்குப் போகாது. அங்கே போனவன்தான் அதை சொல்லமுடியும். சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான என்றார். அது எப்படி இருக்கும்? மூலாதாரத்தில் ஒடுங்கிவிட்டால் அது என்ன செய்யும், நம்மை வஞ்சிக்கக்கூடிய சுக்கிலமானது அந்த மூச்சுக்காற்று ஒடுங்கியவுடன் அசுத்தம் நீங்கி சுத்தமாகி மேலேற ஆரம்பித்துவிட்டது.
அது மேலே ஏறும்போதுதான் அளவுகடந்த உஷ்ணம் ஏற்படும். பிறகென்ன செய்யும்? அது மேல் நோக்க ஆரம்பித்துவிடும். அது துரியத்திற்கு வந்துவிடும். அது பிடரி வழியாக சென்று மூலாதாரத்தில் இருப்பதை மேல்நோக்கும். அது மேல்நோக்கும்போதுதான் அந்த மாதிரி ஒரு வாய்ப்பைப் பெற்றவர்கள்தான் மிகப்பெரிய ஞானிகள்,
உந்தி கமலத் துதித்துநின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே.
– பட்டினத்தார் பூரணமாலை – கவி எண் 2
அப்ப மூலாதாரம் என்பது காலெலும்பும் கதிரெலும்பும் கூடுகின்ற இடம். அதற்கப்புறம் நாலு விரற்கடை மேல்தான் (மூலாதாரத்திற்கு) சுவாதிட்டானம். அது மண்ணின் கூறு. மண் பிருதிவி எனப்படும்.
ஆக மூலாதாரம், சுவாத்திட்டானம், மணிப்பூரகம் இங்கேதான் இருக்கிறது அந்த துரியம். அதில் உந்திகமலத்திலிருந்து வரவேண்டும்.
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 47
இந்த உந்தி கமலம் உந்திக்கமலத்து உருகி பெருகி என்றார் அருணகிரிநாதர். இங்கே சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான சொல்லுக்கு அகப்படாது. சொல்லுக்கு அகப்படாததை நீர் எப்படி அய்யா பாடினீர்? யாராவது ஒருவன் என் நாமத்தைச் சொன்னால் போதும்.
இந்த விநாயகர் அகவல் பாடியிருக்கிறீர்களே, அம்மா உன்னுடைய ஆசி எனக்கு வேண்டுமென்று கேட்டால் அவனுக்கு அருள் செய்வேன் என்பார். நான்மட்டுமல்லப்பா எல்லா ஞானிகளும் அருள் செய்வார்கள்.
சொல்லுக்கு அகப்படாதது, கல்விக்கு அகப்படாதது, இலக்கணத்திற்கு அகப்படாதது ஞானிகள் ஆசியிருந்தால்தான் அறிய முடியும். அதைத்தான் சொற்பதங்கடந்த என்றார்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிக்கு அகப்படாதது. அகப்படாத ஒன்று.
என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 94
எழுத்து, சொல், பொருள், யாப்பு என்றார் தொல்காப்பியத்தில். அது இலக்கணத்திற்கு உட்படாதது. சொற்பதங் கடந்த – சொல்லுக்கு அகப்படாத.
துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே – இந்த வாய்ப்பை தலைவன் கொடுக்கின்றான். இது நம் உடம்பிற்கு சொல்வதாகும்.
காமம் அற்ற தேகம். காமம் அற்ற தேகம் என்றால் பசியற்ற தேகம். பசியற்ற தேகம் என்றால் காமம் அற்ற தேகம். காமம் அற்றதேகம் என்றால் மரணமிலாப் பெருவாழ்வு. அப்படிப்பட்ட அந்த உடம்பு அற்புதமான உடம்பு.
சொல்லுக்கு அகப்படாத ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது? பக்தி இல்லையென்றால் முடியவே முடியாது. பக்திதான் அதற்கு மூலம்.
பக்தி மட்டும் முடியுமா? பக்தி செலுத்தவே புண்ணியம் செய்ய வேண்டும். அதுதான் தானமும் தவமும் என்று சொன்னார். வள்ளுவரும் அதைத்தான் சொன்னார்.
தானமும் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
– திருக்குறள் – வான்சிறப்பு – குறள் எண் 19
அங்கேயும் தானம் என்று அதைத்தான் முதலில் சொல்லியிருப்பார். பசியாற்றுங்கள், ஜீவகாருண்யம் இல்லையென்றால், இந்த சொற்பதத்தை கடக்கவே முடியாது. அப்ப அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
புண்ணியம் செய்யச்செய்ய அறிவு வளரும். புண்ணியம் செய்யச்செய்ய பக்தி வரும். பக்தியாலும் செய்யலாம். இருந்தாலும் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள்.
தானமும் தவமும் தான் செய்வாராகில்
வானவர் நாடு வழிதிறந்திடுமே.
– மகான் ஔவையார்.
ஆக புண்ணியம் செய்கிறான், பக்தி செலுத்துகிறான். புண்ணியம் என்பது வலது கை. பக்தி என்பது இடது கை. புண்ணியம்தான் வலதுகை.
ஆக புண்ணியம் செய்யாமல் ஒருவனுக்கு பக்தி இருக்க முடியாது. இருக்கலாம். ஏதோ சிறிது இலாபம் இருக்கலாம். ஆனால் பக்தி செலுத்த செலுத்த செல்வம் பெருகும்.
யாரிடம் பக்தி செலுத்த வேண்டும்? ஆசான் ஔவையாராக இருக்க வேண்டும். ஆசான் அருணகிரிநாதர் மீதும், ஆசான் திருமூலதேவர் மீதும், ஆசான் அகத்தீசர் மீதும், ஆசான் இராமலிங்கசுவாமி மீதும், ஆசான் மாணிக்கவாசகர் மீதும் பக்தி செலுத்த வேண்டும்.
பெர்யோர்கள் ஆசி இருக்க வேண்டும். பெரியோர்களிடத்தில் அன்பு செலுத்தினால் என்ன ஆகும்? வறுமை இன்றி வாழ்வான், செல்வத்தைப் பெறுவான்.
அன்னதானம் செய்யலாம், புண்ணியம் செய்யலாம், பக்தி செலுத்தலாம். பக்தியும், புன்னியபலமும், அருள்பலமும் உள்ள மக்கள்தான் சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான, சொல்லுக்கு அகப்படாத துரிய மெய்ஞ்ஞானம். முன்னமே ஔவையார் சொன்னாரல்லவா?
“துரியங்கடந்து சுடரொளியைக்கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு” இங்கே மேலே உச்சிக்கு மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி விட்டால், அங்கே ஜோதி தெரியும்.
“சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே? சொற்பதத்திற்கு அகப்படாத ஒன்று அந்த இடத்திற்கு நாம் எப்படி போவது? நமக்கு வாய்ப்பே இல்லையா? ஏன் இல்லை? யார் இல்லையென்று சொன்னது? வைராக்கியம் வேண்டுமில்லையா? வைராக்கியம் நம்மால் முடியுமா? ஆசி வேண்டும்.
இப்போது நாங்கள் வெறும் பழங்கள்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். உணவை நிறுத்தி பதினேழு நாளாகிவிட்டது. முப்பழம் நுகரும் மூஷிக வாகனன் என்றார்.
மாம்பழம், பலாப்பழம், வாழப்பழம் சாப்பிடலாம். இப்ப அதையும் நிறுத்திவிட்டு எட்டு ஒன்பது நாளாக வெறும் வாழைப்பழம்தான் சாப்பிடுகின்றோம். இதற்கு வைராக்கியம் வேண்டுமல்லவா? அதற்கும் மகான் ஒளவையார்தான் அருள் செய்ய வேண்டும். மகான் அருணகிரினாதர்தான் அருள் செய்யவேண்டும். மகான் திருமூலதேவர் அருள் செய்யவேண்டும். மகான் அகத்தீசன் அருள் செய்யவேண்டும்.
அப்பொழுது அவர்களே வைராக்கியமும் கொடுக்க வேண்டும். பக்தியும் தரவேண்டும். புண்ணியத்தையும் தரவேண்டும். பொருளையும் தரவேண்டும். பாவத்தை நீக்க வேண்டும்.
புண்ணியம் செய்யச் செய்ய பாவம் தீரும். பாவம் தீரத் தீர அறியாமை தீரும். அறியாமை நீங்க நீங்க சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு தோன்ற தோன்ற பக்தி உண்டாகும். பக்தி தோன்ற தோன்ற உடம்பைப் பற்றி அறிவான்.
உடம்பைப் பற்றி அறிந்தவன் உயிரைப்பற்றி அறிவான். உயிரைப்பற்றி அறிந்தவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முயற்சிப்பான். அப்ப சொல்லுக்கு அடங்கா ஒன்றை நாம் அறிய வேண்டும். அதற்கு வைக்ராக்கியம் வேண்டும். வைராக்கியமும் ஞானிகள்தான் தரவேண்டும். நம்மால் முடியாது. சாதாரண விசயமல்ல அது.
ஐயே மெத்த கடினம் என்றார் மகான் நந்தனார். கடினமான ஒன்றுதான் இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது.
செத்தாலும் வைத்த அடி பின் வாங்காத
தீரமொன்றருள் புரியவும்
என்றார் மகான் மஸ்தான். அவர் ஆசியால் வைராக்கியம் வந்தது.
அவர் ஆசியால் பொருள் வந்தது.
அவர் ஆசியால் புண்ணியம் வந்தது.
அவர் ஆசியால் அறிவு வந்தது
அவர் ஆசியால் பக்தி வந்தது
அவர் ஆசியால் சித்தி வந்தது
“அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்பார் மகான் மாணிக்கவாசகர். இப்போது இங்கே என்ன சொல்கிறார்? சொல்லுக்கு அகப்படாத ஒன்றை அறிய வேண்டும். இதை “சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே” சொல்லுக்கு அடங்காத ஒரு சக்தியை அறிந்தவன் இந்த மூலாதாரமாகிய இரகசியத்தை அறிந்து கொள்வான். குண்டலினி சக்தியை அறிந்து கொள்வான். குண்டலி சக்தியை அறிந்து கொண்டவன்தான் இந்த இடத்திற்கு வரமுடியும்.
நுரையீரலுக்கு போகின்ற காற்றால் அடைய முடியாது. வாசி நடத்தித் தரவேண்டும். வாசி நடத்திக் கொடுத்தால்தான் அது முடியும். நம்மால் செய்ய முடியாது.
இதற்கு பாடுபட்டுக்கொண்டே போகவேண்டும். அப்படியே “அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா, இராமலிங்க சுவாமிகளே, மாணிக்கவாசகா, அருணகிரிநாதா நீங்களெல்லாம் பெரியவங்க அப்பா, எனக்கு அருள் செய்யக்கூடாதா? தடுமாறிக் கொண்டிருக்கின்றேன் பாவி என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒளவையார் அம்மா! நீங்களெல்லாம் பெரியவங்களாச்சே, எனக்கு அருள் செய்யக்கூடாதா? என்று கேட்கணும். இப்படி கேட்டுக்கொண்டே இருக்க இருக்க நன்மை உண்டாகும். ஏனென்றால் ஒளவையாரின் பெயர் சொல்லவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவ்வளவு பெரிய மகான். ஆண்கள் நெருங்கல் முடியவில்லை அங்கே. ஆண்கள் எப்படி எப்படியோ சொல்லிப் பார்க்கிறான் அசைக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய விஷயத்தை சுருக்கி சொல்லியிருக்கிறார்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தாக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
மகான் ஔவையார் – உடம்பின் பயன் – குறள் எண் 6
அப்படி போட்டால் அது வைரமாலை, மாணிக்கம், இவ்வளவு பெரிய வார்த்தையை இலகுவாக சொல்லிட்டுப் போகும் திறமை உள்ளவர் மகான் ஔவையார்.
மகான் ஔவையாரை அழைப்போமே? ஆசி பெறுவோம். அப்போது சொல்லுக்கு அடங்காத ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
“சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே” அது அற்புதம். சிறப்பறிவு உள்ளவர்கள்தான் அதை அறிந்து கொள்ள முடியும். மூலாதாரத்தை அறிந்து கொள்வதற்கு சிறப்பறிவு வேண்டும்.
வெறும் சிறப்பறிவு இருந்தால் மட்டும் போதுமா? புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியமும் சிறப்பறிவும் இருந்தால் மட்டும் போதுமா? பக்தி வேண்டும். பக்தி இல்லாமல் அங்கே போகமுடியுமா?
இந்த உடம்புக்குள்ளே உரு தரிக்கக் கூடிய நாடியில் உரு தரிக்கக் கூடிய இடத்தில் பெண்களுக்கு சுரோணிதம் ஊறுகின்ற இடத்தில், ஆணுக்கு சுக்கிலம் ஊறுகின்ற இடத்தில்தான் அந்த சக்தி இருக்கிறது. நமக்குள்ளே அப்படிப்பட்ட சக்தி இருந்தாலும் செல்ல முடியவில்லை. அப்ப அந்த சக்தியை எது மறைக்கிறது? மும்மலம் என்று சொல்லப்பட்ட ஒரு திரை அதை மறைத்துக் கொண்டிருக்கிறது.
“அற்புதன் ஈன்று கற்பகக் களிறே” வந்து விட்டார் இங்கே, ஞானிகள் என்ன சாப்பிடுவார்கள்? எதை விரும்பி சாப்பிட வேண்டும்?
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டி” முப்பழம் நுகரும் – மா, பலா, வாழை. கடவுள் வாசி வசப்பட்டவனுக்கு இது இன்றியமையாத உணவு. இப்படிப்பட்ட உணவு வேண்டும்.
உடம்பில் உஷ்ணம் ஏறும். கனிகள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். கனிகள் சாப்பிட சாப்பிட உஷ்ணம் அடங்கும்.
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி” – இப்ப என்ன சொல்கிறார்? முன்னே சொற்பதங்கடந்த சொல்லுக்கு அகப்படாத துரிய மெய்ஞ்ஞானத்தை மேலான அந்த ஞானத்தையும் பற்றி பேசிய அதே ஔவையார் தலைவனைப் பற்றி மறுபடியும் சொல்கிறார்.
முப்பழம் நுகரும் மூஷிக வாகன – மூஷிக என்று சொன்னால் மூஞ்சுறு எலி மாதிரி இருக்கும். மூக்கு கூறாக இருக்கும் மூஞ்சூறு. அதை சுஞ்சி என்று சில இடத்தில் சொல்வார்கள். சில இடத்தில் மூஞ்சுறு என்று சொல்வார்கள். எலி மாதிரிதான் இருக்கும். ஆனால் எலி மாதிரி கடிக்காது. சின்னப்பிள்ளை மாதிரி வந்துவந்து போகும். அழகாக இருக்கும்.
அவ்வளவு பெரிய உருவம், இவ்வளவு பிரம்மாண்டமான உருவத்தை அந்த சின்ன மூஞ்சுறு, சிஞ்சு வாகனத்தில் போனாராம், என்னய்யா இது? அவ்வளவு பெரிய உருவம் அந்த வாகனத்தில் போக முடியுமா? அப்படி அல்ல.
அவர் உடம்பு மென்மையானது, பாதங்கள் மலர் போன்று இருக்கிறதென்று முன்னமே சொன்னேன். பாதங்கள் மென்மையாக இருக்கிறது, அவன் பாதம் செந்தாமரை போல மென்மையான இருந்தால்லும் அப்ப உடம்பு எப்படி இருக்கும்? மிருதுவான உடம்பு, மென்மையான உடம்பு எப்படி வந்தது? காம தேகம் நீங்கி விட்டது.
காமதேகம் நீங்கினால் இந்த உடம்பிற்கு எடையற்ற தன்மை வந்து விடும். இந்த உடம்பின் எடை ஒரு சின்ன கடுகின் எடையளவு கூட இருக்காது. கடுகு எடை உள்ள இந்த உடம்பு ஒரு மூஞ்சுறு மேலே உட்கார்ந்தால் என்ன ஆகும்? பிரச்சனை இல்லை. ஆனால் அதன் மீது பிரம்மாண்டமான உடம்பு உட்கார்ந்தால் அந்த மூஞ்சுறு நசுங்கிவிடும்.
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கருட வாகனம். சுப்பிரமணியருக்கு மயில் வாகனம். என்னய்யா இவ்வளவு பெரிய மனிதன் மயில் மேல் உட்கார்ந்தால் என்னாகும்? இலகுவாக அந்த உடம்புதான் எடையற்றுப் போனதல்லவா? எனவே அது சாத்தியம்தான்.
அப்ப முப்பழம் நுகரும் – நுகர்தல் – விரும்புதல், சுவைத்தல், சாப்பிடுதல். மா, பலா, வாழை பழங்களை விரும்பி சாப்பிடுகிறான். அவனுக்கு வாகனம் ஒரு சின்ன மூஞ்சுறு எலி போன்றது. அதில்தான் உட்கார்ந்து போவான்.
அவ்வளவு எடையற்ற உடம்பு ஒன்று. ஆக ஒன்று மூஞ்சுறு பெரிதாக வேண்டும் அல்லது கடவுள் மென்மையாக இருக்க வேண்டும்.
இங்கு கடவுள் என்று சொல்லப்பட்டது விநாயகர். சிவபெருமானாக பேசலாம் அல்லது விநாயகராகவும் பேசலாம். தத்துவம் தானே இது.
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டி” – என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“தாயாய் எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமருத்து” – தாயாய் எழுந்தருளினான் என்றால், தந்தை இல்லாமல் தாய் வரமுடியுமா? ஒரே பொருளில் இன்னொரு பொருள் இருக்கிறது.
தந்தை இல்லாமல் தாய் வரமுடியாதல்லவா? அப்ப தாய் என்றால் தந்தையாகவும் வந்து அருள்புரிந்தான். “தானெழுந்தருளி” இங்கு வந்து என்று சொல்லவில்லை. தாய் என்று சொன்னபோது தந்தையும் கூட இருக்க வேண்டும். தந்தை இல்லாமல் தாயென்ற பேச்சுக்கே இடமில்லை.
“தாயாய் எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமருத்து” – இந்த மும்மலமாகிய தேகம் மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. இந்த மயக்கம் அல்லது மும்மலத்தை அருக்க வேண்டும். அப்படி அறுத்துவிட்டால் விகாரமற்ற தேகம், காமமில்லாத தேகம், பசி இல்லாத தேகம், வஞ்சனை இல்லாத தேகம், உண்மையான தேகம், பூப்போன்ற தேகம், உயர்ந்த தேகம் போன்ற தேகத்தை பெற நீ எனக்கு வாய்ப்பு தரவேண்டும்.
“தாயாய் எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமருத்து” – தாய் தந்தை என்று வைத்துக் கொள்ள வேண்டும். மாயாப்பிறவி மயக்கமருத்து – உடம்பை அறுக்க வேண்டும். ஆசான் வள்ளுவப்பெருமான்,
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.
திருக்குறள் – அவாஅறுத்தல் – குறள் எண் குறள் எண் 361
அவாவை அறுக்க வேண்டும். இந்த உடம்பை அருக்கணும். அப்ப உடம்பில் இருக்கும் விகாரத்தை அறுத்து ஏறிய வேண்டும். மாயாப்பிறவி மயக்கம் அறுத்து, தாயாய் எனக்கு தானெழுந்தருளி – தாய் என்பது சந்திரக்கலை, தந்தை என்பது சூரியக்கலை. தாய் என்பது உடம்பு, தந்தை என்பது உயிர்.
தாய் என்பது இரவு. தந்தை என்பது பகல். எல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கிறது. இரண்டும் சேர்ந்தே இருக்கும். ஆக தாயாய் எனக்கு என்பதில் தந்தையையும் சேர்த்து விடுவார்கள். இடகலை, பிங்கலை சேர்ந்தே இயங்க வேண்டும். இரண்டும் சேர்ந்து புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால், மாயாப்பிறவி மயக்கமருத்து, தேகத்தினுடைய களிம்பு அற்றுப்போக வேண்டும். அதைத்தான் சொன்னார் திருமூலர்,
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
– திருமந்திரம் – உபதேசம் – கவிஎண் 114
இங்கே ஆசான் திருமூலர் களிம்பை அறுத்தான் என்பார். அங்கே மகான் ஔவையார் மாயாபிறவி மயக்கமருத்து என்பார்.
ஆக இங்கு என்ன சொல்கிறார்? களிம்பை அறுக்க வேண்டும். நீ எனது களிம்பை அறுக்க வேண்டும். தாயாகவும் தந்தையாகவும் வந்து, என் முன்னே வந்து எழுந்தருளி என்னுடைய காம தேகத்தை நீ நீக்கிவிட வேண்டும். நீக்கினால்தான் நான் வெற்றி பெறுவேன்.
மாயாப்பிறவி மயக்கமருத்து திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய் – திருந்திய என்றால் அப்போது முதலில் திருந்தாமல் இருந்ததா? இந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார். இப்ப தாய் என்று சொன்னதால் தந்தை இருக்க வேண்டுமல்லவா? அப்படி தந்தை இருப்பது போன்று பொருள்படும். ஆக தந்தை என்று சொல்லாமல் சொல்கிறார்.
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய் – திருந்தாத எழுத்து ஐந்து இருக்கு. வெளியில் இருப்பது பஞ்சபூதம். ஐந்தெழுத்து – பஞ்சபூதம்.
மண் – ந
தண்ணீர் – ம
அக்னி (சூரியன்) – சி
காற்று – வ
ஆகாயம் – ய
ஆக அந்த ஐந்து எழுத்தும் வெளியில் பஞ்சபூதமாக இருக்கிறது. எல்லா உயிர்களையும் உற்பத்தி செய்திருக்கிறது. நம்மையும் உற்பத்தி செய்திருக்கிறது.
நம் உடம்பில் எலும்பு, நரம்பு, தசை மற்றும் சதைப்பிண்டமாக இருப்பது சக்தியின் கூறு. மண்ணின் கூறு, உள்ளே எலும்பாக இருப்பது. உயிர் சிவத்தின் கூறு. எலும்பு, தோல், சதை நரம்பெல்லாம் மண்ணின் கூறு. உள்ளே இருக்கும் உதிரப்பொருள் தண்ணீரின் கூறு.
உள்ளே இருக்கும் வெப்பம் சூரியன் கூறு. ஓடுகின்ற காற்று வாயுவின் கூறு. இப்படி வந்த உடம்பு திருந்த வேண்டும். எப்போது திருந்தும்? புருவ மத்தியில் காற்று ஒடுங்கினால்தான் திருந்தும். திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய் – திருந்தி விட்டது. எப்போது திருந்தியது? இந்த உடம்பு பஞ்ச பூதத்தால் ஆனது. இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடம்பின் விகாரம் நீங்கிவிட்டது. காமம் அற்ற தேகமானது.
திருந்திய முதலைந்தேழுத்தும் தெளிவாய் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து – திருந்திவிட்டது.
அஞ்சு பஞ்ச பூதமும் அறிந்தால் அனித்தியம் போம் அஞ்சும் வசப்படுவது ஆண்டதனில் – ஒரு ஆண்டதனில் சித்தி பெறலாம் என்றார். ஆண்டு என்றால் பன்னிரண்டு ஆண்டு என்று அர்த்தம்.
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய் பொருந்தவே
வந்தென் உளந்தனில் புகுந்து
அப்போது இந்த பஞ்ச பூதங்கள், பஞ்ச பூதத்தால் ஆன உடம்பை, அதன் விகாரத்தை நீக்கினால், பஞ்ச பூதங்கள் ஒன்றுபடும். இனம் புரியாது ஒன்றுபடும். அப்ப உள்ளத்தில் வந்து தங்கியிருக்க வேண்டும். காமம் அற்ற தேகமானது.
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய் பொருந்தவே
வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகி குவலயந்தன்னில்
வந்து விட்டார் அந்த இடத்திற்கு. குருவடிவாகி, குரு என்று சொல்லாமல் குரு வடிவாகி என்றார். பஞ்ச பூதத்தை வென்றுவிட்டேன். திருவருள் கடாட்சத்தால், தாய் தந்தையால் எடுத்த தேகத்தை வென்றுவிட்டேன்.
பஞ்ச பூதங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். பஞ்ச பூதங்களின் இலக்கணத்தை அறிந்து கொண்டேன். என்ன ஆட்டிப்படைத்த இந்த பஞ்ச பூதம், என்னை தோற்றுவித்தது, வாழ்வித்தது. என்னை சாகடிக்கும்முன் அதனை நான் வென்றுவிட்டேன். அதுதான் வள்ளுவன் சொல்வார்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் குறள் எண் 370
அப்ப வென்றுவிட்டார் அதை. இயற்கையின் துணைக் கொண்டே இயற்கையை வென்றுவிட்டார். எந்த இயற்கை நம்மை தோற்றுவித்து அழிக்க முற்பட்டதோ அந்த இயற்கையின் துணைக் கொண்டே அதனை வெல்வது என்று சொல்வார்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் குறள் எண் 370
என்று சொல்வார் ஆசான் திருவள்ளுவர். இங்கே மகான் ஔவையாரும்,
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகி குவலயந்தனில்
குருவடிவாகி குவலயம் என்றால் உலகம்.
திருவடி வைத்துத் திறமிது பொருளென – இதுதான் திறம். மற்றதையெல்லாம் குப்பை. தள்ளடா அதை. என்னுடைய திருவடியை உன்னுடைய சிரம் மீது வைக்கிறேன் என்றார். உன் திருவடியை என் சிரம் மீது வைப்பது எதற்கு என்றான். திருவடி என்பது இடகலை, பிங்கலை இரண்டையும் சேர்த்து சிரம் மீதில் வைப்பது என்றார்.
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
மேலும் ஆசான் திருமூலர்,
விண்ணின் றிழுந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணிற் தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 113
அப்போது என்ன செய்கிறான்? குருவடிவாகி வினைக்கு ஈடாக மெய் கொண்டான். மேலான நிலையில் இருந்து – விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய் கொண்டு, அப்ப அவன் வினைக்கு ஏற்றார்போல் மெய் என்றால் உடம்பு, உடம்பைக் கொண்டு உடம்பில் சார்கிறான். நல்ல புண்ணியாவான், மேல் நிலையில் இருந்த தலைவன் நமக்காக இறங்கி அவன் வினைக்கு ஏற்றார்போல் உடம்பில் தங்கி,
தண்ணின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து – குளிர்ச்சி பொருந்திய திருவடியை தன் தலைமீது வைத்து, தலைக்காவல் முன்வைத்து.
உண்ணின் றுக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
என்பார் ஆசான் திருமூலர்.
இங்கே “குருவடியாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து திறமிது பொருளென – இதுதான் திறம். இதற்குமேல் திறமான பொருள் ஒன்றுமில்லை. பிறவியை வெல்லுகின்ற ஒரே வழி திருவடிதான். நான்தான் உனக்கு வாசி நடத்திக் கொடுத்தேன். என்னிரு கால் கொண்டு உன்னிரு கால் ஆட்டினேன்.
நான் அசைத்தேன் மூச்சை, நீ அசைத்துவிட்டாய். ஆக என்ன செய்கிறேன்? இந்த இடைகலையையும்,பிங்கலையையும் புருவ மத்தியில் செலுத்தி விடுகிறான்.
குருவடிவாகி குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
இதுதான் திறமை. இனிமேல் உன்னை வெல்லும் சக்தி உலகத்தில் வேறொன்றுமில்லை என்றான். என்ன காரணம்? வென்று விட்டாய். இவ்வளவு வாய்ப்பு எப்படி அப்பா எனக்கு கொடுத்துவிட்டாய் என்றான்.
சலிக்காமல் பூஜை செய்தாய் அல்லவா? சலிக்காமல் பூஜை செய்து வைந்திருக்கிறாய், என் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆகவே உனக்கு இடகலை, பிங்கலை இரண்டையும் புருவ மத்தியில் செலுத்தி வைத்திருக்கிறேன், அதுதான் திருவடி வைத்து அதுதான் திறமான பொருள். இதற்கு மேலான பொருள் வேறொன்றில்லை.
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
தளர்ச்சி வரும்போதெல்லாம் அஞ்சேல் அஞ்சேல் என்று அருள் செய்வான். வாடா வகைதான் – உப்பில்லாமல் சாப்பிடுவது லேசு என்று நினைத்துவிடாதீர்கள். அவ்வளவு வறட்சி தாங்க முடியாது. அவ்வளவு கஷ்டம். உப்பில்லா உணவு சாப்பிட வேண்டும். பட்டினி போடுவார்கள். பட்டினி போட்டு கொல்வார்கள். அதற்கு தளர்ச்சி அடையக்கூடாது.
வாசி நடத்திக் கொடுத்திருக்கின்றான், இடகலை, பிங்கலை இரண்டையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்தி வைத்திருக்கின்றான். அந்த காற்று பிடறி வழியாக சென்று மூலாதாரத்தில் தங்கியிருக்கின்றது.
அப்படி தங்குகின்ற காற்று தச நாத ஓசையை உண்டு பண்ணுகின்றது. அது மட்டுமா செய்கிறது? உடம்பில் இருக்கும் களிம்பை எல்லாம் அறுத்து விட்டது. உடம்பின் களிம்பு, நச்சுத்தன்மைஎல்லாம் அறுத்து விட்டது. அறுத்து அறுத்து தேகத்தை பொன்னுடம்பாக்கி விட்டது. அப்படி செய்ததால்,
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
எனக்கு வாசி நடத்தி கொடுத்துவிட்டாய். நான் செய்த பாவம் எனக்கு பல துன்பங்கள் தருகிறது. மூலக்கனல் எழுகிறது. பசி தாங்க முடியவில்லை. இரவில் தூங்க முடியவில்லை. நிம்மதி இல்லாமல் தடுமாறுகின்றேன். நான் பிழைப்பேனா? நான் காய சித்தி பெறுவேனா? இந்த காயம் சித்தி பெறுமா? ஞானம் கைகூடுமோ? என்ன ஏற்படுமோ? என்று நான் தடுமாறுகின்றேன்.
வாடி வாடி வதங்குகின்றேன், என்னால் தாங்க முடியவில்லை, தூங்காமல் விழித்திருக்க முடியவில்லை. பட்டினி கிடக்க முடியவில்லை. எதையோ சாப்பிட வேண்டுமென்று நினைக்கின்றேன்.
இருபத்தைந்து ஆண்டுகளாக என்னை உப்பிலாமல் (உணவு) போட்டு கொல்கின்றாய், இப்போதாவது இங்கு சாப்பாட்டிற்கு வழி செய்வாயா? என்று ஏங்குகின்றேன். உணவைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உன் திருவருளால் நான் சாப்பிடுகின்றேன். தூங்கக்கூடாதென்று சொல்கின்றாய்,
தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் – ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
– திருஅருட்பா ஆறாந்திருமறை – கவி எண் 5500
என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை. தடுமாற்றம் இருக்கு. அதே சமயத்தில் மனம் போராட்டமாக இருக்கு. அதை வெல்ல முடியவில்லை. அப்படியெல்லாம் தடுமாறுகின்றேன் என்று தடுமாறும்போது
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
இதைப்பிடித்து கரையேறிக்கொள். ஏன் என்பால் கருணை கொண்டீர்? என்பால் கருணை கொள்வதற்கு என்னய்யா நியாயம்? என்றால் மகனே நீ பல ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கின்றாய், உனக்கு சான்றோர் தொடர்பிருக்கின்றது. என்னை சலிப்பில்லாமல் பூஜை செய்து வந்திருக்கின்றாய். அதனால்தான் உனக்கு இடகலையையும் பிங்கலையையும் சேர்த்து செலுத்தி வைத்திருக்கிறேன்,
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
தடுமாற்றம் வரும்போது என்ன செய்வது?
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி – வாடா வகைதான் நான் வாட்டம் கொள்கின்றேன், தடுமாறுகின்றேன். இது வேண்டாம் என்று நினைக்கின்றேன். வேண்டாம் ஞானம் அவசியமில்லை, நான் செத்தாலும் பரவாயில்லை.
ஏன் என்னை இப்படி வாட்டுகின்றாய்? கருணை இல்லாதவனா நீ? என்னை இப்படி வாட்ட வேண்டிய நியாயமென்ன? ஒரு பக்கம் போராட்டம், பொறிபுலனை அடக்க முடியாமல் தடுமாறுகின்றேன், ஒரு பக்கம் அறுசுவை உணவில் நாட்டம் கொள்கின்றேன். ஒரு சமயத்தில் பட்டினி போட்டு கொல்கின்றாய்.
எந்த ஒரு, சுவையான உணவையும் சாப்பிட முடியவில்லை, தடுமாறுகின்றேன். ஒரு பக்கம், காம விகாரம், போராட்டம். ஒரு பக்கம் பிரச்சனைகள் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னை வாட்டுகின்றாய்? உண்மையான கடவுளா நீ? கருணை இருக்கா உனக்கு? இல்லை என்னை கொன்றுவிடு என்றான்.’
பயப்படாதே மகனே, வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி – பயப்படாதே, இப்படித்தான் இருக்கும், ஐயே மெத்த கடினம், கடினமான ஒன்றுதான். இருந்தாலும் பயப்படாதே, சாவு வருமே, இதற்கு நீ பயந்துவிட்டால் சாவு வருமே, இதற்கு சோர்வு அடைந்துவிட்டால் சாவு வருமே, சாகாமல் இருக்க வேண்டுமல்லவா?
அதனை வெல்லுவதற்கு வேறு வழியில்லை மகனே, சோர்வடையாதே மகனே, நாங்களும் அப்படித்தான் கஷ்டப்பட்டிருக்கின்றோம், நாங்களும் அல்லற்பட்டிருக்கின்றோம். நீயும் அல்லற்படுவதனால் பிறவித்துன்பம் தீருமல்லவா? பிறவித்துன்பத்தை கடக்க வேண்டுமல்லவா?
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி.
– அருட்பெருஞ்சோதி அகவல் 15-16.
எல்லையில்லாத பிறவியை கடிக்க வேண்டுமல்லவா?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – படகில் போக முடியாது, கப்பலில் போக முடியாது,
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் – இருங்கடல் என்றால் பெருங்கடல்.
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி.
என்றார் மகான் இராமலிங்க சுவாமிகள்.
ஆசான் திருவள்ளுவபெருமான்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துதல் – நீச்சலடித்துதான் போகவேண்டும். அதை பெருங்கடல் என்றார். கடல் என்றால் நாலைந்து மைல் இல்லை. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திதான் போகவேண்டும். அப்படி ஒரு வார்த்தை அவ்வளவு பெரிய வார்த்தை அது.
இறைவனடி சேராதவன் நீந்த மாட்டான். இறைவனடி சேர்ந்தவன் நீந்துவான், அதுதான் அர்த்தம். அது ஒரே சொல்லில் இரண்டு அர்த்தம் இருக்கும். அப்போது நீந்துகின்றவன் திருவடி சேர்ந்தான். நீந்தாதவன் போய்விட்டான் என்றார், அவன் சோர்வடைவான், அவனுக்கு வைராக்கியம் இருக்காது என்றார்.
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யூகத்தால் கொடுவினை கழிந்தே
ஏன் இப்படி நான் வாட்டப்படுகின்றேன்? நான் என்ன பாவம் செய்தேன்? இது இப்படித்தான் இருக்குமோ? ஞானிகள் எல்லாம் இப்படித்தான் அல்லற்பட்டிருப்பார்களா? இராமலிங்கசுவாமிகள் சொன்னாரே?
நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.
திருவருட்பா ஆறாந்திருமுறை – சமரச நிலை – கவி எண் 1025
நோவாமல் நோன்பெனைப்போல் நோற்றவரும் – இராமலிங்கசுவாமிகள் எல்லாம் துன்பம் இல்லாமல் தவம் செய்தாரே? ஏன் எனக்கு அந்த வாய்ப்பு தரக்கூடாதா?
தீராது நான் பட்ட துன்பம் இரும்பும் உருகும் என்றார். கஷ்டப்பட்டுத்தான் இருக்கவேண்டும். எல்லாம் இந்த தேகம் அப்படியே நைய வேண்டும். அந்த தேகத்தை அனல் ஏற்றி ஏற்றி அப்படியே போட்டு பொசுக்க வேண்டும், சாகடிக்கணும்.
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு என்பார். கனல் ஏற ஏற ஏற போட்டு பிச்சுத் தின்னும். அவ்வளவு கொடுமை இருக்கும். அந்த துன்பத்தை பட்டுத்தான் ஆகணும். வேறு வழியில்லை.
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி – மகிழ்ந்து எனக்கு அருளி என்று சொல்லாமல் நான் வாட்டம் கொள்கிறேன் தடுமாற்றம் கொள்கிறேன் சோர்வடைகின்றேன் கவலை கொள்கின்றேன்.
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
அப்படி முன் செய்த வினையின் காரணமாக எனக்கு துன்பம் வந்த போதிலும், உன்னுடைய தந்தம் இருக்கல்லவா? அந்த தந்தத்தைக் கொண்டு கொடு வினையை தீர்ப்பார். வினை என்று சொல்லாமல் கொடுவினை என்று சொன்னார்.
கொடுவினை களைந்து, அப்ப வினையை நீ தீர்க்க வேண்டும். நான் வாட்டம் கொள்ளாதிருக்க வேண்டும். திருவடியை பூஜிக்க நினைக்கின்றேன் திருவடியை உருகி தியானிக்க நினைக்கின்றேன்.
கல்மனம் உருகவில்லையே, கடவுளே, கல் மனம் உருகாது இருக்கிறேனே பாவி, ஏனோ உருகி தியானிக்க நினைக்கின்றேன் என்னால் முடியவில்லை, கல்மனம் உருகவில்லையே என்ன அப்படி நான் பாவம் செய்தேன்?
அப்படிதானப்பா இருக்கும். ஆரம்ப நிலை அப்படித்தான் இருக்கும்.
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
உவட்டா – கசக்காத ஏற்றுகொள்ள முடியாதது அது துர்நாற்றமில்லை.
உவட்டுதல் – உமட்டுதல் அல்லது பொருத்தமில்லாதது என்று பொருள் இனிக்கக் கூடிய உபதேசத்தை சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சி தரக்கூடிய உபதேசத்தை எனக்கு செவியில் உணர்த்த வேண்டும்.
உவட்டா உபதேசம் புகட்டியென் செயவியில் – புகட்டுதல் என்றால் திணித்தல் என்று அர்த்தம். ஓதி என்று சொல்லாமல் புகட்டுதல் (திணிப்பது) என்றார்.
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி
அற்புதமான கருத்துக்கள். எல்லாமே ஞானக்கருத்துக்கள் எல்லாமே முழுக்க முழுக்க நூற்றுக்கு நூறு ஞானக்கருத்தாக பாடிவிட்டார். யாருமே இப்படி பாடியதில்லை. அப்படி நடக்கனும், இப்படி நடக்கனும், அன்பு காட்டனும், அன்னதானம் செய்யணும், இவையெல்லாம் சரியை. அறம், பொருள், இன்பம், இதில் அறம் என்பது அன்னதானம் செய்ய வேண்டும். அன்பு காட்டணும். எளிமையாக நடக்க வேண்டும்.
அறம், பொருள், சரியை, கிரியை மார்க்கம் எடுத்தவுடன் ஞானம் சொல்லவில்லை மகான் ஔவையார் பல படிக்கட்டுகள் கடந்து, இந்த கவியை நமக்கு அருளியுள்ளார்.
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி
ஆக ஒளவையாருடைய நோக்கம் நாம் இவற்றையெல்லாம் உணர வேண்டும்.
பிற்கால சந்ததிகளே!
ஏ பிள்ளைகளே!
நீங்களெல்லாம் இப்பேர்ப்பட்ட வாய்ப்பை நீங்கள் பெறவேண்டும். என் திருவடியை நீங்கள் பூஜை செய்யுங்கள்.
ஔவையார் என்று அழைத்தால். அகிலமும் நடுங்கும்.
ஔவையார் என்று அழைத்தால் அகத்தீசனுக்குத் தெரியும்.
ஔவையார் என்று அழைத்தால் திருமூலதேவனுக்குத் தெரியும்.
ஔவையார் என்று அழைத்தால் புஜண்டமகரிஷிக்குத் தெரியும்.
ஔவையார் என்று அழைத்தால் போகமகாரிஷிக்குத் தெரியும்.
ஔவையார் என்று அழைத்தால் காலாங்கினாதருக்குத் தெரியும்.
ஆகவே என்னை அழைத்துப்பார், பெறுதற்கரிய மானுடப்பிறவியை நீ பெற்றிருக்கின்றாய். அந்த பிறவியை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜெனமத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டுமென்ற விடாத வைராக்கியம் உனக்கு வேண்டும். அதற்கு என்னைக் கேள், வைராக்கியம் எனக்கு வேண்டும். உன் திருவடியை பூஜிக்க எனக்கு வைராக்கியம் எனக்கு வேண்டும் என்று என்னைக் கேள்.
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைய வேண்டும், நீக்க வேண்டும்.
ஆகவே எனக்கு கலக்கமில்லாத மென்மேலும் மகிழ்ச்சியடையக்கூடிய உபதேசத்தை தந்து உயர்த்த வேண்டுமென்று சொல்லி மகான் ஔவையார் அவர்கள் உலக மக்கள்பால் கருணை கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே! பிழைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!
உங்களுக்கு வேறு வழியே இல்லை. நீங்கள் பிராணாயமம் செய்வது பிறகு முதலில் திருவருளை பெற்றுக் கொள்ளுங்கள். புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அறிய தேகம் இது. பெறுதற்கரிய பிறவியை பெற்றிருக்கின்றீர்கள். ஆகவே எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். எல்லோரும் இதை பின்பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஞானிகள் திருவடியை வணங்கி எல்லாம்வல்ல ஆசான் ஆசியால் விநாயகர் அகவலுக்கு பேசியிருக்கிறேன். கேட்கின்ற நீங்களும் உங்கள் சந்ததிகளும் நீடு வாழவேண்டும்.
இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் ஆண்களும் பெண்களும் அறம் செய்து, அன்னதானம் செய்து, தர்மம் செய்து, அறம் செய்து உரம் ஏறிய கைகளை பெற்றிருக்கிறார்கள்.
அவர்களை பார்ப்பதே புண்ணியம். அவர் கையால் உண்பதே புண்ணியம். அவர் கையால் உண்ணுகின்ற பாக்கியம் கிடைத்திருக்கிறது. அது தாய் தரும் உணவு. இங்கிருக்கும் பெண்களெல்லாம் என் தாய் போன்றவர்கள். இங்குள்ள தொண்டர்களெல்லாம் என் உடன்பிறந்தவர்கள், என்னுடைய சகோதரர்கள் போன்றவர்கள்.
ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அவர்கள் கையால் உண்ணுகின்ற பாக்கியம் கிடைத்துள்ளது. அந்த உணவு ஆசான் ஞானபண்டிதனும், மகான் திருமூலதேவனும், மகான் போகமகரிஷியும், மகான் அருணகிரிநாதரும், மகான் வள்ளுவப்பெருமான், மகான் புஜண்டமகரிஷி போன்ற ஞானிகளால் பார்க்கப்பட்ட உணவாகும்.
அந்த உணவை நீங்கள் சாப்பிட்டு நீடிய ஆயுளும், குறைவிலாச் செல்வமும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மீது பக்தி செலுத்துங்கள். நீங்களெல்லாம் மரணமில்லாப்பெருவாழ்வு பெற்று எல்லா வளமும் நலமும் பெற வேண்டுமெனச் சொல்லி முடிக்கிறேன்.