17.11.2013 அன்று பௌர்ணமி பூஜையில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை



பௌர்ணமி பூஜையில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
                முருகா!
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்சோதி அகத்தீசாய நம
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்சோதி அகத்தீசாய நம
     அன்புள்ள சன்மார்க்க அன்பர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சங்கத்திற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பொருளுதவியும், தொண்டும் மக்கள் செய்து வருகிறார்கள். அவர்க திருவடியை வணங்குகிறேன். ஆக நமது சங்கம் அருள் உள்ள சங்கம். அதனால் நற்காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
     அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகழ்.
    திருக்குறள் – அருள் உடைமை – குறள் எண் 243
ஆக அருள் என்றால் என்ன? உயிர்கொலை செய்யமாட்டேன் என்பது அருள். புலால் உண்ண மாட்டேன் என்பது அருள். பிறர்மீது பொறாமை கொள்ள மாட்டேன் என்பது அருள். ஆக அழுக்காறு (பொறாமை), பேராசை, கடிய கொடுமையான கோபம், பிறர் மனம் புண்பட பேசுதல். இந்த நான்கு பண்புகளும் அருள் இல்லையென்றும், இந்த நான்கு குற்றங்களும் இல்லாதிருப்பதுமே அருள் என்று மகான் திருவள்ளுவர் சொல்கிறார்.
                                                                                                                           
     அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
      இழுக்கா இயன்றது அரும்.
திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் குறள் எண் 35
                ஆக ஒவ்வொருவரும் அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.
     அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகல்.
    திருக்குறள் – அருள் உடைமை – குறள் எண் 243
எனவே அருட்செல்வத்தை எல்லோரும் பெற வேண்டும். ஆக அந்த அருட்செல்வத்தைப் பெறுவதற்கு ஒரே உபாயம் என்ன என்பதை மகான் அகத்தியர் சொல்கிறார்.
          
பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
            பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ
            வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
            அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
            சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
                                      மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 89
அறம் தழைக்கும் அறுமுகன் பாதம் போற்றி – முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! எனது தாயே! எனது தந்தையே! இந்த பாவியையும் ஒரு பார்வை பாரப்பா! என்றால் அறம் சிறக்கும். இப்படி சொன்ன உடனேயே நம்முடைய இதயத்தில் இருக்கும் மாசு தீரும். நம்மிடம் பொறாமை இருக்காது. வஞ்சனை இருக்காது. பிறர் சொத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது.
இப்படி ஆசானிடத்து கேட்பவர்கள், எல்லா இடத்திலும் இனிமையாக நடந்து கொல்வார்கள். ஆக அறம் தழைக்கும் அறுமுகன் பாதம் போற்றி – முருகப்பெருமான் ஆசியில்லாமல் ஒருவனுக்கு நல்ல சிந்தனை வராது. முருகப்பெருமான் ஆசியில்லாமல் தயைசிந்தை வராது. ஒருமனிதன் கடைத்தேறுவதற்கு ஒரே உபாயம். முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! நந்தீஸ்வரா! என்று ஆசான் நாமத்தை சொல்ல வேண்டும்.
மகான் கருவூர் முனிவரும் சொல்கிறார்.
குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜை செய்து
குருமூலர் சட்டைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
மகான் கருவூர் முனிவர் 11
      இந்த உலகில் உள்ள எல்லா ஞானிகளும், ஞானபண்டிதராகிய முருகப்பெருமானின் ஆசி பெற்றவர்கள். முருகப்பெருமானின் ஆசியில்லாமல் யாரும் ஞானியாக முடியாது. முருகப்பெருமான் ஆசியில்லாமல் யாரும் உண்மைப் பொருளை உணர முடியாது. முருகப்பெருமானின் ஆசியில்லாமல் உயிரைப் பற்றி அறிய முடியாது. முருகப்பெருமானின் ஆசியில்லாமல் உயிரின் இயல்பையும், அதன் இரகசியத்தையும் அறிய முடியாது. முருகப்பெருமான்தான் இந்த உலகத்திற்கே முதுபெரும் ஞானத்தலைவன். நாம் எல்லோரும் அவரை வணங்க வேண்டும். அவரை வணங்கி, அவரிடம் என்ன கேட்க வேண்டுமென்பதை நாங்கள் சொல்லித்தர வேண்டும்.
     முருகா! நான் மேற்கொண்ட இல்லறம் சிறக்க வேண்டும். மனைவி மக்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு உன் ஆசி வேண்டும். உன் ஆசியைப் பெறுவதற்கும் எங்களுக்கு உன் ஆசி வேண்டும். உன் ஆசியைப் பெறுவதற்கு நீயே எங்களுக்கு அருள் செய்ய வேண்டுமென்று முதலில் கேட்க வேண்டும்.
     பிறகு முருகா உன் திருவடியை பூஜிப்பதற்கு நீயே அருள் செய்ய வேண்டும். உன் ஆசியில்லாமல், உன் திருவடியை பூஜிக்க முடியாது. ஆக உன் திருவடியை பூஜிக்கவும், உன் ஆசியை முழுமையாக பெற்றிடவும் வேண்டும். உன் ஆசியில்லாமல் இந்த உலகத்தில் யாரும் ஞானியாக முடியாது. உன் திருவடியை பூஜித்தே நவகோடி சித்தரிஷிகள் சித்தி பெற்று ஞானிகளானார்கள்.
     மகான் அகத்தீசர், மகான் புஜண்ட மகரிஷி, மகான் அருணகிரிநாதர், மகான் மாணிக்கவாசகர், மகான் இராமலிங்க சுவாமிகள் போன்ற அநேக அநேக மகான்கள் அனைவரும் முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றவர்கள். ஆகவே அவர்களுடைய ஆசியைப் பெற வேண்டும். அதுவே நமக்கு உற்ற துணையாக இருக்கும்.
     ஆக திருமூலதேவா என்றாலும் அகத்தீசா என்றாலும் இராமலிங்கசுவாமிகள் என்று எந்த மகான்கள் நாமத்தைச் சொன்னாலும், அப்படி செய்த நாமசெபம் ஆசான் முருகப்பெருமானின் திருவடியைத்தான் சேரும்.
     எனது உலகத்தில் அத்தனை பேருக்கும் அவர்தான் உண்மை ஆன்மீகத்தை சொன்னார். மனிதா பிறந்தால் மோட்சகதி தேட வேண்டும். எனவே மோட்சகதி தேடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் என் திருவடியே மோட்சந்தான் என்பார் முருகப்பெருமான். எனவே முருகப்பெருமானின் திருவடியே வேதம். முருகப்பெருமானின் நாமமே மந்திரம் அகத்தீசர் திருவடியே வேதம். அவர் நாமமே மந்திரம். இப்படிப்பட்ட ஆற்றல் எல்லா ஞானிகளுக்கும் உண்டு. அவர்கள் எதைக் கேட்டாலும் அருள் செய்வார்கள். இதையே ஆசான் திருவள்ளுவர் திருக்குறளில் சொல்வார்.
                வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
        ஈண்டு முயலப் படும்.
    திருக்குறள் – தவம் – குறள் எண் 265
                ஆக நம்மிடம் உள்ள பொறாமை குணம், பேராசை, வஞ்சனை போன்ற குணக்கேடுகள் எல்லாம் நீங்குவதற்கு ஞானிகளின் திருவடிகளை வணங்க வேண்டும். ஏனென்றால் ஞானிகள் அத்தனைபேரும் குணக்கேடுகள் இல்லாதவர்கள். அவர்களுக்கு பொறாமை இல்லை, பேராசை இல்லை, வஞ்சனை இல்லை, காமம் இல்லை, கோபம் இல்லை. ஞானிகளெல்லாம் சாந்தமே வடிவானவர்கள்.
     ஞானிகள் திருவடிகளை நாம் பூஜை செய்ய வேண்டும், திருமூலதேவா, அருணகிரிநாதா, இராமலிங்கசுவாமிகளே, மாணிக்கவாசகர் ஐயா, கோரக்க மகரிஷி ஐயா, கருவூர் தேவா, நந்தீஸ்வரா இந்த பாவியையும் ஒரு பார்வை பாரப்பா, என்று யார் ஞானிகளை கேட்கிறார்களோ அன்றே அவர்கள் கடவுள் தன்மை அடைவார்கள். ஆக ஞானிகளின் நாமத்தை ஜெபம் செய்ய வேண்டும்.
      ஜெபமது செய்ய தேகமும் சித்தி
      கபமது அறுத்து கருத்தை உள்நிறுத்தி
      உபநிடத பொருள் உண்டென நம்பி
      தபமது செய்ய தான்அவன் ஆனார்.
      ஞானிகளின் நாமத்தை சொல்ல சொல்ல சொல்ல அவர்கள் பார்வை நம்மீது பட்டுக்கொண்டே இருக்கும். நாம் அவர்கள் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த தேகம் சித்தியாகும் என்பார். ஆக இந்த காமதேகத்தை நீக்க வேண்டும்.
     இந்த காமதேகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? காமதேகம் என்பது சின்ன விஷயமில்லை. எவன்    வென்றானோ, எவன் கோபத்தை வென்றானோ, எவன் பேராசையை வென்றானோ அவன் திருவடியை வணங்க வேண்டும். அப்படிப்பட்டவன் திருவடியை வணங்காவிட்டால் இந்த கொடுமையான குணக்கேடுகள் நீங்காது.
     இந்த உடம்பு காமதேகம். நமக்கு நமது உடம்பே எமன். ஆக எமன் என்பது வேறு யாருமில்லை. அப்ப அவனை எப்படி வெல்வது? எவன் காமத்தை வென்றானோ அவன் திருவடியை பற்றிக் கொள்ள வேண்டுமென்பார் ஆசான் திருவள்ளுவர்.
      பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு.
    திருக்குறள் – துறவு – குறள் எண் 350
                யாரொருவன் பற்றற்றானோ அவன் திருவடியை வணங்க வேண்டும். இல்லையென்றால் பற்றை அறுக்க முடியாதென்பார் ஆசான் திருவள்ளுவர். பற்றை ஒழிப்பதற்கு உபாயம் ஒன்றை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
      பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
      செம்பொருள் காண்பது அறிவு.
    திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 358
                ஆக அறியாமையே பிறவிக்கு காரணம். அறியாமைக்கு காரணம் உடம்பு. எனவே உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உயிர் மாசு நீங்கினால் மனமாசு நீங்கும். மனமாசு நீங்கினால் தாய்மை குணம் வரும்.
    
     நான் இன்று முதல் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன். நான் கனவிலும் தீங்கு செய்யாத அறிவு வேண்டுமென்று ஆசான் அருணகிரிநாதரையும், மகான் இராமலிங்க சுவாமிகளையும், மகான் மாணிக்கவாசகரையும் கேட்க வேண்டும். முருகா நான் கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருக்க வேண்டும். அதற்கு நீர்தான் ஐயா அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     ஆக பக்தி ஒன்றுதான் ஒருவனுக்கு சித்தியை உண்டாக்கும். இதை ஆசான் கடுவெளிச்சித்தர் சொல்வார்.
      பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
            பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
            சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
·         மகான் கடுவெளிச்சித்தர்
     உலகத்திலேயே சிறந்தது பக்தி ஒன்றுதான். அப்படியென்றால் யோகம் என்ற ஒன்று இருக்கிறது. அது யோகிகளுக்கு மட்டும்தான் சொல்லப்பட்டது. மற்றவர்கள் யோகம் செய்தால் இறந்துபோவார்கள். நாங்கள் யாருக்கும் யோகம் செய்ய சொல்ல மாட்டோம்.
     ஆக நாங்கள் முதலில் என்ன சொல்லி தருவோம்? உய்ரிகொலை செய்கின்றாயா? என்று கேட்டால் ஆமாம் செய்கிறேன் என்பான். அந்த பழக்கத்தை மாற்றிக் கொள். இதுவரை நீ உயிர்கொலை செய்திருக்கலாம். குற்றமில்லை. அறியாமை காரணமாக புலால் உண்டிருக்கலாம். இனிமேல் அவற்றையெல்லாம் நீகிக் கொள் என்போம்.
     சரி ஐயா, நான் குடிப்பழக்கம் உள்ளவன், என்ன செய்வது ஐயா? என்று கேட்டான்.
     அதற்கு நாங்கள் சொல்வோம். அந்த பழக்கமெல்லாம் இருக்கத்தான் செய்யும் அப்பா, அது இயற்கைதான். எல்லா ஞானிகளிடமும் அவர்கள் சித்தி பெறுவதற்கு மும் காமம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்ற எல்லா குணக்கேடுகளும் இருந்தது. முருகப்பெருமானின் திருவடி என்று சொல்லப்பட்ட தடாகத்தில், அந்த குளத்தில் மூழ்கி எழ வேண்டும். அப்பா முருகா! “நான் நாயினும் கேடுகெட்ட பாவி தாயே, நான் பாவிதான் தாயே என்னையும் ஒரு பார்வை பார் தாயே!” என்று சொல்லி முருகப்பெருமானின் பாத தடாகத்தில், திருவடியில், திருவடி என்று சொல்லப்பட்ட குளத்தில் மூழ்குகிறான். அது புனித நீர், அந்த புனித நீரில் மூழ்கி எழ வேண்டும். பின்பு உன் ஆசி பெறுவதற்கு உன் ஆசி வேண்டுமென்று ஆசான் முருகப்பெருமானை கேட்க வேண்டும். ஆசான் முருகப்பெருமானின் ஆசியில்லாமல் ஒன்றும் முடியாது. இதை மாணிக்கவாசகர் சொல்வார்.
     அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
திருவாசகம் – சிவபுராணம்
      ஆக முருகப்பெருமானின் திருவடியை பூஜிப்பதற்கு அவர் ஆசி வேண்டும். அவர் அருளைப்பெற வேண்டும். அப்பா முருகா! தினமும், உன் திருவடியை பூஜிக்க நினைக்கிறேன் தாயே! அதற்கு உன் ஆசி வேண்டுமப்பா! பல பிரச்சனைகள் என்னை போட்டு வாட்டுதப்பா. குடும்ப பிரச்சனை ஒரு பக்கம், கடன்சுமை ஒரு பக்கம், காமவிகாரம் ஒரு பக்கம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் என்னைப் பிடித்து வாட்டுகிறது என்பான். இவையெல்லாம் எங்களுக்கும் தெரியும் என்பார் ஆசான். உனக்கு உள்ள பிரச்சனை அத்தனையும் எனக்கு தெரியும் என்பார். உன் பிரச்சனை எல்லாவற்றையும் நானே தீர்த்து வைக்கிறேன். இந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு. இதை மகான் பாம்பாட்டி சித்தர் சொல்வார்.
      தூணைச்சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
      துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
      ஆணைப்பெண்ணும் பெண்ணையானும் ஆகச்செய்குவோம்
      ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே.
                மகான் பாம்பாட்டி சித்தர் – சித்தர் வல்லபங் கூறல் – கவி எண் 27
                ஆக இப்படிப்பட்ட எல்லா வல்லமைகளும் எங்களுக்கு இருக்கிறதப்பா. ஆகவே, என்னுடைய திருவடியை பூஜை செய். என்றைக்கு உனது குணக்கேடு தீருதோ அதுவரையில் என் திருவடியைப் பற்றிக்கொள். முருகா! என்று எனது நாமத்தை சொல்லிக் கொண்டே இரு. முருகா! சற்குருநாதா! இராமலிங்கசுவாமிகளே! மாணிக்கவாசகா! என்று சொல்லிக் கொண்டே இரு.
     இப்படி ஆசான் நாமத்தை சொல்ல சொல்ல, உனது நிலை உயரும். ஆக, எல்லா ஞானிகளுமே, இதைத்தான் பின்பற்றி செய்திருக்கிறார்கள். ஞானிகள் எல்லோரும் பக்திதான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
     ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு உபாயம். காலை எழும்போதே, முருகா! என்று சொல்லி சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும். அவன் குடும்பஸ்தனாக இருந்தாலும் இதை செய்ய வேண்டும். ஞானிகளுக்கு இவையெல்லாம் தெரியும், குடும்பத்தைப் பற்றியும் தெரியும்.
     உலகத்தை படைக்கும்போதே ஆணையும், பெண்ணையும் சேர்த்து தான் படைத்திருக்கிறான். ஆணையும் பெண்ணையும் தனித்தனியாக படைக்கவில்லை. ஆக எல்லோரும் குடும்பஸ்தன்தான். எல்லோரும் என்ன செய்ய வேண்டும்? முருகா! என்று சொல்லி அப்படியே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும். இந்த கைகளால் செய்த பாவம், சிந்தையால் செய்த பாவம், பார்வையால் செய்த பாவம், சொல்லால் செய்த பாவம், எல்லாமே உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்.
     ஆக கைகளாலும், உடம்பாலும், உணர்வாலும், சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும், பார்வையாலும் செய்த பாவங்களையெல்லாம் நீ நீக்க வேண்டுமென்று ஆசான் முருகப்பெருமானின் திருவடியை பணிந்து கேட்க வேண்டும். ஆக எல்லா பாவங்களையும் தீர்க்கக் கூடியவர் ஆசான் முருகப்பெருமான்.
     தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
            தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
      ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
            உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
      கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
            கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
      நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
            நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
    மகான் கொங்கண மகரிஷி கடைக்காண்டம் – 491
               
      மகான் கொங்கணர், பாவம் என்று சொல்லவில்லை, தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் என்று சொன்னார். ஆக, அவ்வளவு பெரிய வல்லமையா? அப்படிப்பட்ட வல்லமை யாருக்கு உள்ளது? ஆசான் முருகப்பெருமானுக்கு உண்டு. முருகா! இராமலிங்க சுவாமிகளே! திருமூலதேவா! அருணகிரிநாதா! என்று சொல்ல வேண்டுமென்றார். அப்படி சொன்னால் எத்தனை ஜென்மத்தில் செய்த கொடும்பாவம் இருந்தாலும் சரி அவன் தீர்ப்பான் என்றார். இதுதான் பாதை என்பார். இதுதான் தர்மம். இப்பொழுது, நீ போகின்ற பாதை சரியில்லை என்பார்கள் ஞானிகள். அப்படி உணர்த்தக்கூடிய ஆற்றல் ஞானியர்களுக்கு உண்டு.
      தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
      ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
    
     எல்லாவற்றிற்கும் இந்த உடம்புதான் காரணம். இது சாதாரண உடம்பு அல்ல. அப்பேர்ப்பட்ட உடம்பு இது. இதை ஆசான் திருமூலதேவர் சொல்வார்.
     நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
      வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
      ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
      தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
    திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
                ஆக உடம்பைப் பற்றி அறியக்கொடிய அறிவை ஆசான் முருகப்பெருமான்தான் தர வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள் தர வேண்டும். ஆக எந்தவொரு ஞானிகளை வேண்டுமானாலும் வணங்கலாம். ஞானிகள் அனைவரும் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் மரணத்தை வென்றவர்கள். அவர்கள் எல்லோரும் காமத்தை வென்றவர்கள். ஞானிகள் அனைவரும் தயவே வடிவானவர்கள். எந்தவொரு ஞானிகள் நாமத்தை சொன்னாலும் அவர்களை ஞானிகள் எல்லோரும் அறிவார்கள்.
      என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
            எதிரேறி முன்வருவாள் ஆத்தாலள்வாலை
      சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
            சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
      இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
            ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
      முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
            முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
§  திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
               
     எல்லாமே எனக்கு தெரியுமப்பா என்பார்கள் ஞானிகள். அருணகிரிநாதர் என்றாலும் எங்களுக்குத் தெரியும். இந்த உலகத்தில் உள்ள யார் ஒருவர், ஒன்பது கோடி ஞானிகளில் முருகா! என்றாலும் தெரியும். அகத்தீசா என்றாலும் தெரியும். ஆகவே ஆசான் அகத்தீசர் நாமத்தை சொன்னாலும் சரி அல்லது எந்தவொரு ஞானிகள் நாமத்தை சொன்னாலும் சரி எங்களுக்குத் தெரியும். ஒரு நொடியில் ஒன்பது கோடி ஞானிகளின் ஆசியைப் பெறலாம். ஏனப்பா அவ்வளவு ஆற்றலா? நீ அகத்தீசா என்றால் ஒன்பது கோடி ஞானிகள் உன்னை பார்க்கிறார்கள். என்னப்பா இது? அகத்தீசா என்று சொல்லி வாயை மூடும் முன்னே மகான் சட்டைமுனிவர், மகான் புஜண்டமகரிஷி, மகான் கருவூர்தேவர் போன்ற மிகப்பெரிய ஆற்றல் உடைய ஞானிகள் பார்க்கிறார்கள். யாரவன்? ஞானிகளை வணங்கக்கூடியவன் யார்? என்று எல்லா ஞானிகளும் பார்ப்பார்கள்.
     அங்கே ஆடு, கோழியை வெட்டுகிறான். ஏனய்யா? இது அவன் செய்த பாவம். தெய்வத்தின் பெயரால் ஆடு, கோழியை வெட்டுவான். எந்த தெய்வம் உயிர்களை படைத்ததோ, அதே தெய்வத்திற்கு ஆட்டை வெட்டினால் அந்த தெய்வம் இவனை பார்க்குமா? ஏனய்யா? நான் படைத்த உயிரை எனக்கே வெட்டுகிறாயா? இப்படி கொலை செய்கிறாயே பாவி. இதை பார்க்க சகிக்கவில்லை என்று தெய்வம் சொல்லும்.
     ஆக ஒரு ஆட்டை வெட்டுவான். அப்படியே துடிக்கும். அதைப் பார்த்தும் அவன் அப்படியே இருப்பான். ஆக இப்படி ஒரு வன்மனம். இப்படி ஒரு கொடுமை. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்லுவார்.
      அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்
      தம்நோய்போல் போற்றாக் கடை.                
                திருக்குறள் – இன்னா செய்யாமை – குறள் எண் 315
பிற உயிர் துடிக்கின்றது. பிற உயிர் படுகின்ற துன்பத்தை உணர முடியாத அறிவு என்னடா அறிவு? என்னடா அறிவை நீ வைத்திருக்கிறாய்?
               
      கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
                நற்றாள் தொழாஅர் எனின்.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2
                ஆக கற்றதன் பயனே பிறரிடம் அன்பு காட்ட வேண்டும். பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணர்கின்ற பக்குவம் வந்தால் அன்றே கடவுள் தன்மை அடைகின்றான். இதை அடைவதற்கு என்ன உபாயம்? அதற்கும் உபாயம் ஆசான் திருவள்ளுவர் சொல்லுவார்.
      பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
      தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 322
               
                ஓம்புதல் – போற்றுதல். ஒருவன் குளிக்க்ம்போது கூட ஒரு மரத்தின் அடியில் தான் குளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நீரானது மரத்திற்கும் பயனாகும். ஆக இப்படி எந்த வகையிலாவது நாம் ஒரு உயிருக்கு உபகாரம் செய்ய வேண்டும்.
     பகுத்துண்டு – ஆடு, மாடு மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளிக்க வேண்டும். அதுமட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் எல்லோரையும் நம்மை நோக்கி வந்த விருந்தினராக எண்ணி உபசரிக்க வேண்டும்.
     பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுதான் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
     அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
      மல்லல்மா ஞாலம் கரி.
    திருக்குறள் – தீவினை அச்சம் – குறள் எண் 210
                துன்பமே இல்லாதவன் யார்? அருளைப் போற்றுகின்ற மக்களுக்கு துன்பம் இல்லை. இதற்கு என்னப்பா சாட்சி என்று ஆசான் திருவள்ளுவரை கேட்டால், இந்த உலகமே சாட்சி என்பார். கரி என்றால் சான்று என்று அர்த்தம். ஆக துன்பமே இல்லாத வாழ்வு என்பார்.
     அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
      தீவினை செய்யான் எனின்.
    திருக்குறள் – தீவினை அச்சம் – குறள் எண் 210
                துன்பமே இல்லாதவன். கேடே இல்லாதவன் யார்? பிறருக்கு கேடு செய்யாதவனுக்கு கேடில்லை. பிறருக்கு துன்பம் செய்யாதவனுக்கு துன்பம் இல்லை. எந்த அளவிற்கு பிற உயிருக்கு துன்பம் செய்கின்றாயோ அந்த அளவிற்கு உனக்கு துன்பம் வரும்.
     ஆக இந்த மனித வர்க்கம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் அவனுக்கு பக்தி வேண்டும். அந்த பக்தியும் ஆசான் இராமலிங்கசுவாமிகள் மீது இருக்க வேண்டும். மகான் மாணிக்கவாசகர் மீது இருக்க வேண்டும். மகான் தாயுமானசுவாமிகள் மீது இருக்க வேண்டும். மகான் அருணகிரிநாதர் மீது இருக்க வேண்டும். இப்படி பக்தி இருந்தால் அவனுக்கு துன்பமில்லா வாழ்வு வரும்.
     எனவே ஞானிகளை வணங்க வணங்க தயைசிந்தை வரும். ஞானிகளை வணங்க வணங்க சிறப்பறிவு உண்டாகும். ஞானிகளை வணங்க வணங்க உடம்பைப் பற்றி அறிவான். ஞானிகளை வணங்க வணங்க உயிரைப்பற்றி அறிவான். ஞானிகளை அறிய அறிய பூஜை செய்ய செய்ய எல்லா குணக்கேடுகளும் நீங்கும். பொறாமை தீரும்.
     எனவே,
     அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
      தம்நோய்போல் போற்றாக் கடை.
    திருக்குறள் – இன்னா செய்யாமை – குறள் எண் 315
     நீ பெற்ற அறிவினால் என்ன பயன்? சிலபேர் அதிகம் கற்றிருப்பார்கள். பட்டதாரியாக இருப்பான். ஆனால் சாதாரணமானவர்களை மதிக்க மாட்டான். காற்றதன் நோக்கமே அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டுமென்பார் ஆசான் திருவள்ளுவர்.
     மேலும் ஆசான் திருவள்ளுவர்,
     அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
      மக்கட்பண்பு இல்லா தவர்.
    திருக்குறள் – பண்புடைமை – குறள் எண் 997
                கற்றதின் நோக்கமே தன்னை சார்ந்தவர்களை மதித்து பழக வேண்டும். நீ வீதியிலே போய் பேசவேண்டியதில்லை. உன்னை மதிக்கும் அன்பர்மீது அன்பு காட்டு என்பார். அப்படியில்லாவிட்டால் மரம் என்பார்கள்.
          
     அரம்போலும் கூர்மைய ரேனும் – நுட்பமான அறிவுடையவனாக இருந்தாலும் சரி. அவன் மரத்திற்கு ஒப்பானவனா? கற்றதின் நோக்கமே தன்னை சார்ந்தவரை மதித்து பழக வேண்டும். மற்றவரை மதிக்க கற்றுக் கொள்வதே அறிவுதான். இந்த பண்பு நமக்கு வருவதற்கு யார் ஆசி வேண்டும்? கருணையே பொருந்திய ஞானிகள் ஆசியில்லாமல் ஒருவன் பிறரை மதிக்க மாட்டான். மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
     நல்லா இருக்கீங்களா! என்று கேட்பதற்கு என்ன கஷ்டம். மேலும் மனம்விட்டு பேச வேண்டும். மனம்விட்டு பேச பிறரிடம் செல்ல வேண்டியதில்லை. நம்மை சார்ந்த தாய், தந்தை, மனைவி, மக்கள், நண்பர்கள் இவர்களிடமெல்லாம் மனம்விட்டு பேசி அன்பை காட்ட வேண்டும். இவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விருந்தை உபசரிக்க வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்வார்.
     வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
      பருவந்து பாழ்படுதல் இன்று.
    திருக்குறள் – விருந்தோம்பல் – குறள் எண் 83
                பரு – குற்றம். ஓம்புவான், ஓம்புதல் – போற்றுதல். வைகலும் – தினந்தினம். தினமும் விருந்தை உபசரிக்க வேண்டும். விருந்தை உபசரித்தால் நட்பு பெருகும். விருந்தை உபசரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நட்பை பெருக்கிக் கொள்ளுவது நல்லது. இல்லறத்தானாக இருந்தாலும் சரி. துறவறத்தானாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் ஒரு பத்து பேர் வேண்டும்.
     எனவே விருந்தை உபசரிக்க வேண்டும். அப்படி விருந்தை உபசரித்து நட்பை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்பார். விருந்தை உபசரிக்க நட்பு பெருகும். நட்பை வளர்க்கின்ற மக்களுக்கு வறுமை வந்தால் நிச்சயமாக நம்மிடம் விருந்து உண்ட மக்கள் நமக்கு துணையாக இருப்பார்கள். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
      மிச்சில் மிசைவான் புலம்?
    திருக்குறள் – விருந்தோம்பல் – குறள் எண் 85
                சிலபேர் தங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவார்கள். ஆக விருந்தை உபசரிக்கக்கூடிய பண்பு இருந்தால் நட்பு அவனுக்கு பெருகும். ஒரு கோடீஸ்வரனைப் பார்த்து திருவள்ளுவர் ஏழை என்றார். அவனே கோடீஸ்வரன். அவனை பார்த்து ஏழை என்கிறீர்கள்.
     ஆனால் இன்னொருவன் பலசரக்கு கடை வைத்திருக்கிறான். அவனுக்கு தினமும் இருநூறு ரூபாய் வருமானம் வரும். ஆனால் இவனைத்தான் மகான் திருவள்ளுவர் கோடீஸ்வரன் என்கிறார்.
     என்ன காரணம்? காக்கை என்ன செய்யும்? தனக்கு உணவு கிடைத்தால் தனது இனத்தை “கா கா” என்று கூப்பிட்டு உண்ணும். அதுபோல தனக்கு கிடைத்த வருவாயை தானும், தனது மனைவி, மக்கள், தாய் தந்தை, உறவினர்கள் நண்பர்களோடு கலந்து சாப்பிடுகிறான்.
    
     இப்படி உள்ளவன்தான் உயர்ந்த செல்வம் படைத்தவன். அந்த கோடீஸ்வரனைப் பார்த்து ஒன்றுமில்லாதவன் என்று சொல்வார்.
    
     காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
      அன்னநீ ரார்க்கே உள.
    திருக்குறள் – சுற்றம் தழால் – குறள் எண் 527
     
                ஆக வருகின்ற வருவாயை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடபாவி மனிதா! நிலையில்லாத வாழ்க்கையைப் பெற்றிருக்கிறாய் என்றைக்கு என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று தெரியாது. இதை ஆசான் திருவள்ளுவப் பெருமான் சொல்வார்,
      நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
      பெருமை உடைத்துஇவ் வுலகு.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 336
               
                நேற்று இருப்பான், இன்றைக்கு செத்துப் போய்விடுவான். நம்முடையது இப்படிப்பட்ட பலவீனமான வாழ்க்கை. ஆக விருந்தை உபசரித்து, பலபேர்க்கு அன்னதானம் செய்தாய் என்றால் நீ பிழைத்துக் கொள்வாய் என்பார். ஆக பலபேருக்கு உதவி செய்பவன்தான் செல்வம் உடையவன் ஆவான்.
     ஆக, எந்த வகையிலாவது மனிதன் கடைத்தேற வேண்டும். எப்படி ஐயா கடைத்தேறுவது? பூஜை செய்ய நேரமில்லையா? அது ஒன்றும் அவசியமில்லை. உட்கார்ந்து மணியடித்து பூஜை செய்ய வேண்டியது இல்லை. காலையில் எழுந்திருக்கும் போதே நீங்கள் எல்லாம் பெரிய மகான் தாயே, என்னையும் ஒரு பார்வை பார் தாயே! எத்தனையோ பாவிகள் உன் ஆசியைப் பெற்றிருக்கிறார்கள். என்னையும் பார் என்று இரகசியமாய் கேட்டால் ஆசான் அகத்தீசரின் பார்வை கிடைக்கும். அகத்தீசா என்றால் ஒன்பது கோடி ஞானிகள் பார்ப்பார்கள். அகத்திய மாரிஷி நமா என்றென்றோது என்று மகான் கொங்கணமகரிஷி அப்பொழுதே ஏட்டில் எழுதி வைத்திருக்கிறார்.
     அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
            அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
      அகத்தியரே காஷாய வேட மீவார்
            அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
      அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
            யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
      அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
            ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
    கொங்கணர் கடைக்காண்டம் 500ல் 76
               
                மேலும் சேல்பட்டு அழிந்தது என்பார் மகான் அருணகிரிநாதர்.
     சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
      மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
     வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
       கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
·         கந்தரலங்காரம் – கவி எண் 40
                பிரம்மதேவன் இவனுடைய தலையெழுத்தை எழுதினானா? அப்படி எழுதிய எழுத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் முருகப்பெருமானின் திருவடி இருக்கிறது அல்லவா? அந்த திருவடியை நினைத்தால் போதும்.
     முருகா வெனவோர் தரமோ தடியார்
     
          முடிமே லிணைதா …… ளருள்வோனே
            
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
                          
முதுசூ ருரமேல் …… விடும்வேலா
            
திருமால் பிரமா வறியா தவர்சீர்
                          
சிறுவா திருமால் …… மருகோனே
            
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
                         
திருவீ ழியில்வாழ் …… பெருமாளே.
                மகான் அருணகிரிநாதர் – திருப்புகழ் – திருவீழிமிழலை – கவி எண் 188
                முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதா ளருள்வோனே…” என்று மகான் அருணகிரிநாதர் சொல்வார். ஒருமுறை சொன்னால் போதும். அடியவர்களுக்குத் தான் சொன்னார்கள். எல்லோருக்கும் சொல்லவில்லை. முருகனின் அடியார்கள் என்று சொல்லப்பட்ட அடியார்களுக்குத்தான் இது. அடியாள்களுக்கு அவன் கை வைப்பானா? இல்லை வைக்க மாட்டான்.
     அவன் ஆயிரம் வேல் வைத்திருக்கிறான். வேல்படை இருக்கு, அது அடியார்களைக் காப்பதற்கு, அடியார்கள் என்றால் யார்? இந்த சங்கத்தில் சேர்ந்தோர்கள் எல்லோரும் அடியார்கள். நம்முடைய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்து, தொண்டு செய்தால் அவர்கள் அடியார்கள். ஆக இந்த சங்கம் உயர்ந்த சங்கம்.
     என்னய்யா? பொருளாதாரத்தில் உயர்ந்த சங்கமா? பொருளாதாரத்தைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். இந்த சங்கத்தை நோக்கி வருகின்ற யாராக இருந்தாலும் சரி, எளியவராக இருந்தாலும் சரி, இல்லை வசதியுடையவராக இருந்தாலும் சரி, வாங்க சாப்பிட்டீர்களா என்று கேட்போம். இந்த சங்கம் கோடிக்கணக்கான பேருக்கு அன்னதானம் செய்திருக்கு. இதையெல்லாம் ஞானிகள் தான் செய்திருக்கிறார்கள். அவர்கள் எதையும் செய்வார்கள்.
     எதை கேட்டாலும் கொடுப்பார்கள். இந்த சங்கத்திற்கு யார், யார் பொருளுதவி செய்திருக்கிறார்களோ, தொண்டு செய்திருக்கிறார்களோ அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்படி உதவி செய்தவர்களுக்கு எல்லாம் ஆசான் அருள் செய்து உதவுவார்.
     இப்பொழுது இந்த சங்கம் பேசிக்கொண்டிருக்கிறது. இந்த சங்கம் செயல்படுகின்ற காலம் வந்து கொண்டிருக்கிறது. நானும் எதிர் நோக்குகிறேன். நீங்களும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக இதுவரையிலும் பேசிக் கொண்டிருந்த இந்த சங்கம், செயல்படுவதற்கு வருகிறது. செயல்படுகின்ற காலம் வருகின்றது. அந்த காலத்தை நாம் எதிர்பார்ப்போம். அந்தக் காலம் எதிரில் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு கப்பல் வருகிறது என்றால் அதன் கொடிமரம் தெரிவது போல.
     ஆக செயல்படப் போகும் அந்த காலம் வரும் வரையில் நாம் காத்திருப்போம். ஆகவே, இந்த ஞானசித்தர் காலம் வருவதற்கு முன்னே நாம் என்ன செய்ய வேண்டும்? அவரவர்களை உயிர்கொலை செய்யாதே! புலால் உண்ணாதே என்று சொல்ல வேண்டும். மாதம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய சொல்ல வேண்டும்.
     என்னப்பா? மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய சொல்கிறாய் என்பார். அப்படி செய்து தான் பாரேன். உன் பிள்ளை உன்னை செய்ய விடுவானா? ஆகவே இப்பொழுதே செய்து கொள். உன் பிள்ளைகளுக்கு நான்கு வயது, ஆறு வயது இருக்கும் போதே அன்னதானம் செய்து கொள். இல்லையென்றால் அவர்களுக்கு இருபது வயது வந்து விட்டால், நீ என்ன பெரிய தர்ம பிரபுவா? நீ அன்னதானம் செய்கிறாய்? ஏன் நாங்களெல்லாம் இல்லையா? என்று சொல்லுவான். ஆகவே உன் பிள்ளைகள் தடுப்பதற்கு முன்னமே நீ தர்மத்தை செய்து கொள். காலம் உள்ளபோதே, இளமை இருக்கும்போதே, முதுமை வருவதற்கு முன்னே, சாவு வருவதற்கு முன்னே புண்ணியத்தை செய்து கொள்.
     ஆனால் பண்புள்ள பிள்ளைகள் இருக்கும். அப்பா தர்மம் செய்கிறார். நம்முடைய வளர்ச்சிக்கு செய்கிறார். இந்த குடும்பம் முன்னேறுவதற்கு, வளர்வதற்கு செய்கிறார். ஆக பண்புள்ள பிள்ளைகளாக இருந்தால் பிரச்சனையில்லை. ஒருவன் பெறத்தக்க பேறுகளில் உயர்ந்த பேறு எது என்று ஆசான் திருவள்ளுவரிடம் கேட்டால்,
     பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
      மக்கட்பேறு அல்ல பிற.
    திருக்குறள் – மக்கட்பேறு – குறள் எண் 61
                பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை? ஒருவன் பெற்ற பேறுகளில் யாம் அறிவது இல்லை. அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற. இதுதான் நான் அறிந்த உண்மையப்பா. ஒருவன் பிள்ளைகளைப் பெற்றால் அவனுக்கு குழந்தைகள் இருந்தால் அறிய வேண்டியவற்றை அறியக் கூடிய பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
     ஆக சான்றோராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தலைவனுக்கு, ஒரு மனிதனுக்கு சான்றோனாக குழந்தையிருந்தால் அவனுக்கு மட்டுமில்லை இந்த உலகத்திற்கே நல்லது என்று ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     ஆக ஒரு மனிதனுக்கு புத்திர பாக்கியம் உயர்ந்த பண்புள்ள பிள்ளையாக அமைய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? பிள்ளை பண்புள்ளவனாக இல்லை. மூர்க்கத்தனமாக இருக்கிறான். என்ன செய்வது? நீ தர்மம் செய். நீ செய்யக்கூடிய தர்மத்தால் உன் பிள்ளைகளுக்கு சாந்த குணம் வரும். நீ செய்யக்கூடிய தர்மம் பிள்ளைகளுக்கு சிறப்பறிவை தரும். நீ செய்யக்கூடிய தர்மம் பிள்ளைகளுக்கு ஞானத்திற்குரிய அறிவை தரும்.
     ஆக ஒரு மனிதன் புண்ணியவானாக வேண்டும். எப்படி ஐயா புண்ணியவானாவது? சொல்லாலேயே புண்ணியவனாகலாம். “வாங்க நல்லபடியா இருக்கீங்களா” இதுபோன்று பேசுவது குற்றமா? இதுபோன்று பேசுவது என்ன கடினமான காரியமா?
     ஆனால் சிலபேர் கடுகடுப்பாக பேசுவான். அவனைப் பார்த்து ஆசான் திருவள்ளுவர், என்னடா இனிமையான சொல் இருக்கும்போதே நீ இப்படி பேசுகிறாய்.
      இனிய உளவாக இன்னாத கூறல்
      கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
    திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 100
                சுவையுள்ள கனி இருக்கும்போது ஏனய்யா காய் சாப்பிடுகிறாய்? அட அங்கு கனிதானே இருக்கிறது. ஆக அதுக்கும் ஆசி வேண்டுமப்பா. முருகா! நான் இனிமையாக பேச நினைக்கிறேன். என்ன காரணமோ? தெரியவில்லை. எல்லோர் மனதையும் புண்படுத்துகிறேன்.
     ஆக இவன் பேசியே பாவியாகிவிடுவான். சிலர் பார்க்கும்போதே கண்ணை உருட்டி பார்ப்பான், முறைத்துப் பார்ப்பான். என்னடா நம்மை இப்படி பார்க்கிறான். பாவி என்று சிலர் மனதிற்குள்ளேயே புழுங்குவார்கள். ஆக இவன் பார்த்தே பாவியாவான்.
     ஒருவன் பேசியே பாவியாவான்.ஒருவன் செய்கையால் பாவியாவான். ஆக சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும் பாவியாகாதிருக்க வேண்டும். இதற்கெல்லாம் ஞானிகளின் கருணை வேண்டும். ஞானிகளெல்லாம் தயவுடைய மக்கள்தான். மகான் மாணிக்கவாசகர், மகான் அருணகிரிநாதர் இவர்களெல்லாம் தயவுடைய மக்கள், கருணையே வடிவான மக்கள். இதற்கெல்லாம் மூலகாரணம் முதுபெரும் ஞானத்தலைவன் ஆசான் முருகப்பெருமான்தான்.
     மனிதன் ஏன் சாக வேண்டும்? அவனுக்கு ஏன் நரை திரை வருகிறது. இதற்கான காரணத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் முதுபெரும் ஞானத்தலைவன் ஆசான் முருகப்பெருமான்தான்.
     முதலில் மனிதன் பார்ப்பதற்கு குழந்தை போன்று அழகாக இருப்பான். நாட்கள் செல்ல செல்ல காதோரம் உள்ள முடிகள் சில நரைக்கும். அதை கண்ணாடியில் பார்த்து அதை அப்படியே எடுத்துவிடுவான். ஒரு ஆறுமாதம் கழித்து இரண்டு, மூன்று நரை முடிகளும் பிறகு காதருகில் உள்ள எல்லா முடிகளும் நரைத்துவிடும். காதோரம் நரைச்சாக்கால் காலம் விழுக்காடு என்பார்கள்.
     ஏன் நரை திரை வந்தது? ஏன் முதுமை வந்தது? ஏன் ஈளை இருமல் வந்தது? அப்படியென்றால் முதுமை வந்ததற்கு நீயா காரணம்? ஆக பரிணாம வளர்ச்சிப்படி முதுமை வரும். இது இயல்பு. ஆக அந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும். முதுமை வராமல் இருக்க வேண்டும். இதை மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்,
     என்றே எண்ணினும் இளமையோடு இருக்க
            நன்றே தரும் ஒரு ஞானமாமருந்தே
    அருட்பெருஞ்சோதி அகவல் – வரி எண் 1331
               
     எப்போதும் இளமையோடு இருக்கலாம். யார் ஆசியிருந்தால்? அதற்கு முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் ஆசியிருக்க வேண்டும். என்றும் இளமையாக இருக்கலாம். இதற்கு யார் ஆசியிருக்க வேண்டும்? ஆசான் அகத்தீசர் ஆசியிருக்க வேண்டும். என்று இளமையாக இருக்கலாம், யார் ஆசியால்? ஆசான் இராமலிங்க சுவாமிகள் ஆசியால் இருக்கலாம். என்றும் இளமையாக இருக்கலாம். யார் ஆசியால்? மகான் மாணிக்கவாசகர் ஆசியால். என்றும் இளமையோடு இருக்கலாம், யார் ஆசியால்? ஆசான் பட்டினத்தார் ஆசியால்.
     போதவூர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில் வென்ற
      வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ?
      ஓட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப்
      பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர்வது எந்நாளோ?
     மகான் பட்டினத்தார் கப்பல் வியாபாரி. மகான் பத்திரகிரி மன்னன். இவர்களைப் பற்றி “ஓட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர்வது எந்நாளோ?” என்பார் மகான் தாயுமானவர்.
      ஆக ஞானிகளுடைய திருவடியைப் பற்றி பூஜை செய்தால் அவன் என்றும் இளமையோடு இருப்பான். மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். எக்காலத்தும் இருக்கலாம். எண்ணியதெல்லாம் கைகூடும். இதை மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.
     எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே
      எல்லாம் வல்லான் தாளையே ஏத்து.
     எல்லாம் செயல் கூடுமா? அவர் விரும்புவது அனைத்தும் கைகூடும். இதற்கு சாட்சி நமது சங்கமே இருக்கு. சில கோடி மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். கிட்டதட்ட 2750 இலவச திருமணம் செய்து வைத்துள்ளோம். இப்படி எல்லா காரியங்களும் செய்யலாம். ஆனால் அதில் சுயநலம் இருக்கக் கூடாது. நமது சங்கத்திற்கு இப்படிப்பட்ட வாய்ப்பை எனது ஆசான் முருகப்பெருமான் கொடுத்தார். எனது ஆசான் அகத்தீசர் கொடுத்தார். இந்த வாய்ப்பை யார் கொடுத்தார்? எனது ஆசான் அருணகிரிநாதர் கொடுத்தார். இந்த வாய்ப்பை யார் கொடுத்தார்? எனது ஆசான் திருமூலதேவர் கொடுத்தார். இந்த வாய்ப்பை யார் கொடுத்தார்? எனது ஆசான் காலங்கிநாதர் கொடுத்தார்.
     ஆக இவ்வளவு ஞானிகளுடைய ஆசி பெற்றவன் நான். இப்படி பல ஞானிகளுடைய ஆசி பெற்றால் இந்த சங்கம் எதை வேண்டுமானாலும் செய்யும். இன்னும் நிறைய எவ்வளவோ நற்காரியங்கள் செய்ய இருக்கிறது. அதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆக என்றும் இளமையோடு இருக்கலாம். மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று வாழலாம்.
           முதுமை வரத்தான் செய்யும். சாவு என்ற ஒன்று இருக்கிறதப்பா. அந்த ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்த உலகத்தை பிடிக்க முடியுமா? இதை மகான் மஸ்தான் சாகிபு சொல்வார்.
       நொங்குநுரையுமாகப் பொங்கும் – காமக்கடலுள்
            முங்கும்பாவியுடலைச் சொங்கும் – சொரிசிரங்கும்
       வங்கும்நமநமென்று திங்கும் – நரம்புந்தோலும்
            தொங்குமினுமினுப்பு மங்கும் – இல்லந்துறந்த
       சிங்கக்கட்கில்லைகாணும் பங்கம் – மேனியுயர்ந்த
            தங்கமயமாய்நின்றி லங்கும் – அவர்கட்கன்றோ
       தங்குஞ்சாயுச்யபதந் தேங்கும் – நமக்குமதிற்
            பங்குந்தந்துதவிப் பராபரமரு ளிரங்கும் போ.
·         மகான் மஸ்தான்சாகிபு.
      கடைசி காலத்தில் இவன் சாப்பிடும்போது வாயின் ஓரத்தில் இருந்து இரண்டு பக்கமும் அவன் சாப்பிடுகின்ற கஞ்சி ஒழுகும். இப்படி பொய் விழுந்து விட்டானே? என்னய்யா செய்வது?
     ஆக இல்லறத்தில் இருக்கக் கூடாதா? இல்லறத்தில் இருக்கலாம். மனைவியோடு கூடலாம். ஆனால் அதற்கும் ஒரு அளவிருக்கு. பதினைந்து நாளைக்கு ஒரு முறை கூட வேண்டும். அடிக்கடி கூடுகின்றவனுடைய விந்து வலுவில்லாமல் போய்விடும். சிலபேர் வருவார்கள், புத்திரபாக்கியம் இல்லை என்பார்கள். சுக்கிலத்தில் உள்ள அணுக்கள் ஆற்றல் பெற வேண்டுமானால் அடிக்கடி மனைவியோடு கூடக் கூடாது. பதினைந்து நாளைக்கு ஒரு முறைதான் மனைவியோடு கூட வேண்டும். சைவமாக இருக்க வேண்டும். உணவில் சின்ன வெங்காயம், முருங்கைக்காய் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் விந்து சக்தியை உண்டு பண்ணும். எனவே சின்ன வெங்காயம், முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆக விந்துவை கட்டி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பதினைந்து நாட்களுக்கு மேல் விந்துவை கட்ட முடியாது. எனவேதான் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட வேண்டும். ஆக விந்துவை கட்டாமலேயே கட்ட வேண்டும்.
      விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல் அந்தரத்தே கொலேரிந்த அந்தகன்போ லானேனே.
                தந்திரத்தை யுன்னித் தவத்தை மிகநிறுத்தி
                மந்திரத்தை யுன்னி மயங்கித் தடுமாறி
                விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல்
                அந்தரத்தே கோலெரிந்த அந்தகன்போ லானேனே.
                                மகான் பட்டினத்தார் – நெஞ்சோடு புலம்பல் – கவி எண் 36
                சில பேர் நாலு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஆண்குழந்தை வேண்டுமென்று வருவார்கள். இராமேஸ்வரத்திற்கு போனாயா? அங்கே கடலில் மூழ்கினாயா? என்றால் ஆமாம் என்பான். திருச்செந்தூர் போனாயா? ஆமாம் அங்கேயும் போனேன் என்பார்கள். ஏன் ஊர் ஊராக சுற்றுகிறாய்? இரவில் சாப்பிடாமல் இரண்டு பழம் ஒரு டம்ளர் பால் சாப்பிடு. கொஞ்சமாக அரை வயிராகதான் இருக்க வேண்டும். தூங்கும் போது இடது கை பக்கமாக படுத்து தூங்கு. அப்போ சூரிய கலை இயங்கும். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஆசானை வணங்கி பிறகு மனைவியோடு கூடினால் ஆண் குழந்தை பிறக்கும். இது இவ்வளவு இலகுவாக இருக்கு. எல்லோருக்கும் தெரியவில்லை.
     ஆக எளிய முறையில் இடது கை பக்கமாக படுத்து தூங்கினேன், சூரிய கலை இயங்கியது. ஆனால் மறுபடியும் பெண் குழந்தைதான் பிறந்தது என்பான். இதற்கு காரணம், வயிற்றில் உணவு இருக்கக்கூடாது. வயிற்றில் உணவு அரை வயிறாக இருக்க வேண்டும். அப்போ பசியாக இருக்க வேண்டும். பசியாக இருக்கும்போது இடதுகை பக்கம் படுத்து தூங்கி சூரியகலை இயங்கி மனைவியுடன் கூடினால் ஆண் குழந்தை. ஆனால் இது யாருக்கும் தெரியாது.
     ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்து விட்டது, ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்ட ஒரு அன்பருக்கு சொன்னேன். ஏன் கவலைப்படுகிறாய்? இரவில் அரை வயிறு சாப்பிடு, ஜீரணமாகிற அளவு. இடது கை பக்கம் ஒருபக்கமாக படுத்து தூங்கு. விடியும் வரை இதேபோன்று தூங்க வேண்டும். இப்படி தூங்கினால் அதிகாலையில் நாலரை மணிக்கு நன்றாக பசிக்கும். பசிக்கிற நேரத்தில் சூரியகலை இயங்கும் நேரத்தில் மனைவியுடன் கூடு என்றான். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆக இது உடற்கூறு.
     இப்போது நூறுக்கு அறுபது பெண் நாற்பது ஆண் இருக்கிறார்கள். இது உலக நடை. ஏனய்யா பெண் குழந்தைகள் அதிகமாக பிறக்கிறது, ஆண் வாரிசு குறைகிறது என்றால் சுக்கிலத்தை கட்டவில்லை. சுக்கிலத்தை கட்டணும். அப்ப சுக்கிலம் வலுவாக இருக்கணும். சூரியகலை இயங்கினால் ஆண் குழந்தை. இதெல்லாம் இரகசியம். இந்த இரகசியம் எங்களுக்கும் தெரியும்.
     எங்களுக்கு உடற்கூறு தெரியும் உயிரைப் பற்றியும் தெரியும். ஆணைப் பற்றியும் தெரியும். பெண்ணைப் பற்றியும் தெரியும். மனிதன் ஏன் இறக்கிறான்? இறப்பு வருவதற்கு காரணம் என்னவென்று யாரும் சொல்லவில்லை. என்னய்யா சாமியார் இதையெல்லாம் பேசுகிறார்? எங்களுக்கு உலகம் தெரியும். உன்னைத் தெரியும். உன் பாட்டனையும் தெரியும். எல்லாவற்றையும் அறிவோம். ஆக நூற்றுக்கு அறுபது சதவீதமாக பெண்கள், நாற்பது சதவீதமாக ஆண்கள் இருக்கிறார்கள். இந்த பெண் சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும்.
     அந்த காலத்தில் சொல்லுவான், ஒரு திருமணம் செய்வதற்கு ஊர் ஊராக பெண்ணுக்கு அலைவான். இப்போ பெண்கள் எண்ணிக்கை அதிகமாகிகிட்டே வருது. ஆண்கள் குறைஞ்சிகிட்டே வர்றாங்க. எனவே இது போன்ற ஒரு முறையை பின் பற்றினால் ஆண் வர்க்கம் அதிகமாகும். பெண் வர்க்கம் குறையும். ஆக பெண் வர்க்கம் ஆண் வர்க்கம் ஒரு சமமாக ஆகவாவது இருக்க வேண்டும். இதையெல்லாம் நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால்? எல்லாமே எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதை பெருமைக்காக பேசவில்லை. உடம்பைப் பற்றி தெரியும். உயிரைப் பற்றியும் தெரியும். மரணமில்லாப் பெருவாழ்வு என்ற ஒன்று இருக்கு.
     ஆண் குழந்தை எப்படி, பெண் குழந்தைக்கு எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். உடம்பை கட்டுப்படுத்துகின்ற முறையும் தெரியும். பொறு புலனை அடக்க வேண்டும்.
     பொறிபுல னடங்கிய காலே – பரி
            பூரணப்பொருள் வந்து வாய்க்குமப் பாலே
      அறிஞரு மறியாது போலே – காணும்
            ஆனந்த வெள்ளத்தி னாடின தாலே.
           மகான் மஸ்தான் சாகிபு – ஆனந்த களிப்பு – கவி எண் 19
                சொர்கடங் காச்சுக ஞானம் – தன்னிற்
            சும்மாவிருக்குஞ் சுகமதே மோனம்
      எட்கிடை யாயினும் பானந் – தன்னை
            எடுத்துன் டிருப்பதற் கிச்சித்தே யானும்.
           மகான் மஸ்தான் சாகிபு – ஆனந்த களிப்பு – கவி எண் 19
     ஆக யாராக இருந்தாலும் சரி. ஒரு மனிதன் கடவுள் தன்மை அடைய வேண்டுமென்றால், ஆசான் அகத்தீசரை வணங்க வேண்டும். ஒரு மனிதன் கடவுள் தன்மை அடைய வேண்டுமென்றால் அவன் புண்ணியவானாக இருக்க வேண்டும். அவனுக்கு சான்றோர் தொடர்பு இருக்க வேண்டும்.  சான்றோர் என்றால் பண்புள்ள மக்கள் என்று பொருள். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
     
      சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
      தாங்காது மன்னோ பொறை.
    திருக்குறள் – சான்றாண்மை – குறள் எண் 990
                சான்றோர்கள் தனது பண்பிலிருந்து மாறக் கூடாது. சான்றோனே நீ பண்பு மாறினால் இந்த உலகமே அழிந்துபோகும். சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் – இருநிலம் என்றால் பெரிய நிலம் என்று அர்த்தம். தாங்காது மன்னோ பொறை.
                   
     ஆக இந்த உலகத்தை காப்பாற்றுவதற்கு பண்புள்ள மக்கள் வேண்டும், சான்றோர்கள் வேண்டும், பக்திமான்கள் வேண்டும், ஞானிகள் வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்
      மண்புக்கு மாய்வது மண்.
    திருக்குறள் – பண்புடைமை – குறள் எண் 996
                இந்த உலகம் பண்புடையார்ப் பட்டு உண்டு என்பார். இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுநூறு கோடி பேரில் நூறுபேர் சாந்தமான, பண்புள்ள மனிதன் இருந்தால் போதும். அவனுக்காக இந்த உலகம் நீடித்து இருக்கும். இந்த உலகம் நீடித்து இருப்பதற்கு காரணமே அவன்தான். அப்படிப்பட்ட பண்புள்ள மக்கள் இருப்பதால்தான் இந்த மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அதை மகான் ஔவையார்.
        நெல்லுக்(கு) இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
          புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
            நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்(டு)
            எல்லார்க்கும் பெய்யும் மழை.
    மகான் ஔவையார் – மூதுரை – கவி எண் 10
                ஆக பண்புள்ள மக்கள் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை பெய்யும் என்றார். அப்படியென்றால், நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது எடுத்துக்காட்டு.
     ஆக பண்புள்ள ஒருவன், தயை சிந்தை உள்ள ஒருவன், ஒரு ஞானி இருந்தால் பருவமழை பெய்யும். பருவமழை பெய்வதற்கே இவர்கள்தான் காரணம். இந்த உலகம் செழிக்க வேண்டும். இந்த உலகம் வாழ வேண்டும். எல்லா நன்மையும் பெற வேண்டும். அதற்கு ஊருக்கு ஊர் சான்றோர்கள் இருக்க வேண்டும். ஊர், ஊருக்கு ஒரு சான்றோனா? யாரப்பா சான்றோன்? ஜீவதயவு உள்ளவன்தான்.
      கோடிக்கணக்கான பணம் இருக்கு, ஜீவதயவு இல்லையே. ஜீவதயவு வரவில்லையே. நீ செய்த பாவம் லோபித்தனமாக இருக்கு. கருணை இருக்க வேண்டும். நிறைய கோடிக்கணக்கான பொருள் இருந்தும் அன்னதானம் செய் என்றால், அவனுக்கு அந்த அறிவே வரவில்லையே ஏன்? கோடிக்கணக்கான பொருள் இருக்கு. ஆனால் கொடுக்க மனம் வரவில்லையே. ஒருவன் பசி என்று வந்தால் அவனுக்கு ஒருவாய் எடுத்துக் கொடுப்பதற்கு இவனுக்கு ஒரு வருஷம் ஆகிறது. இது எடுத்துக்காட்டுதான். ஆக கோடிக்கணக்கான ரூபாய் இருந்தும் ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாத அளவிற்குக் லோபித்தனம் ஏன் வந்தது என்றால் அது அவன் செய்த பாவம். அவன்தான் மிகப்பெரிய பாவி. இதை ஆசான் திருவள்ளுவர்,
      ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
      வைத்துஇழக்கும் வன்க ணவர்?
    திருக்குறள் – ஈகை – குறள் எண் 228
                ஒருவன் பசியோடு இருப்பான். அவனுக்கு ஐந்து இட்லி வாங்கிக் கொடுத்தான், கொடுத்தவுடன் அந்த மலர்ந்த முகத்தை பார்த்தான். இன்னொருவன் கிழிந்த வேஷ்டியோடு இருந்தான். அவனுக்கு ஒரு நல்ல வேஷ்டியைக் கொடுத்தான். ஆக, இவன் தன் கையில் உள்ளதை தன் மனம் உவந்து கொடுக்கிறான். அப்படிக் கொடுத்தவுடன், ஐயா புண்ணியவான், நீ நல்லா இரு என்பான். அவனுடைய மலர்ந்த முகத்தைப் பார். அங்கேதான் கடவுள் இருக்கிறார் என்பார் ஆசான் திருவள்ளுவப்பெருமான்.
     ஈத்துஉவக்கும்  இன்பம் அறியார்கொல் – கொடுத்து மகிழ்ச்சி அடையாதவர்கள் எல்லாம் தாம் உடைமை இழக்கும் வன்கணவர் – ஏன் ஐயா கொடுக்கக்கூடாது என்று இருக்கிறாய்? கொடுத்தால் இழந்து விடுவோம் என்றா? ஒரு நாளும் இழக்க மாட்டாய். இப்பொழுது பொருள் கையில் இருக்கு. அந்த பொருளைக் கொண்டு நல்லது செய்து கொள். நல்லவற்றை செய்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொள். இளமை இருக்கிறது. வாய்ப்பு உள்ளது. தளர்ச்சி வருவதற்கு முன்னே, ஈத்து உவக்கும் மற்றவர்க்கு கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
     ஏனய்யா மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்? நீ பிறவியை ஒழிக்க வேண்டும் மகனே! அதற்காகத்தான் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஆக ஒரு மனிதனிடம் செல்வம் இருக்கும்போதே, வாய்ப்பு இருக்கும்போதே, இளமை இருக்கும்போதே, துடிப்பு இருக்குமொபோதே நற்காரியத்தை செய்து கொள்ள வேண்டும். நாளைக்கு இருப்போம் என்பது நிச்சயம் அல்ல. ஆசான் திருவள்ளுவர்,
      ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
      கோடியும் அல்ல பல.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 337
                ஆக கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். என்னிடம் பல இலட்சம் பொருள் இருக்கு தாயே! கொடுக்க மனசு வரவில்லை ஐயா. அப்படியா நீ என் திருவடியை பூஜை செய்யப்பா. நான் ஜீவகாருண்ய தலைவன். ஜீவகாருண்ய வள்ளல் நான் என்பார் ஆசான் இராமலிங்கசுவாமிகள். ஜீவகாருண்யத்திருக்கே ஒரு காரண கர்த்தா வள்ளல் இராமலிங்கசுவாமிகள்.
     இராமலிங்க சுவாமிகளே எனது தாயே! தந்தையே! தயவுடைய தெய்வமே! தயாபரமே! தேவாதிதேவா! ஜீவகாருண்யத்திற்கே தலைவனாக இருக்கக்கூடிய இராமலிங்க சுவாமிகளே! எனது சிந்தையும் செயலும் சொல்லுமாக இருந்து அருள் செய்ய வேண்டுமென்று மகான் இராமலிங்க சுவாமிகள் திருவடி பணிந்து வேண்டிக் கேட்டால் கொடுக்கக்கூடிய மனம் வரும்.
     கோடிக்கணக்கான பொருள் இருந்தாலும் கொடுக்கக்கூடிய மனம் வரவில்லையே தாயே! இராமலிங்க சுவாமிகள் ஐயா! என்றால், என் திருவடியைப் பற்றி கொள்! என்னை அழைத்துப் பார்! என்பார் மகான் இராமலிங்க சுவாமிகள்.
     ஆக இராமலிங்க சுவாமிகளே என்று சொன்னாலே அண்டமெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும். இராமலிங்கசுவாமிகள் என்று சொல்பவர்களைக் கண்டு எமன் நடுங்குவான். கூற்றுவனை வெல்லக்கூடிய வல்லமை உண்டாகும், வாசி வசப்படும், வாசி வசப்படுவதற்கு மகான் இராமலிங்கசுவாமிகள் ஆசி வேண்டும். வாசி வசப்படுவதற்கு மகான் அகத்தீசர் ஆசி வேண்டும். வாசி வசப்படுவதற்கு ஆசான் முருகப்பெருமான் ஆசி வேண்டும்.
    
     ஆக எல்லா ஞானிகளும் வாசி வசப்பட்ட மக்கள். இடகலையும் பின்கலையும் சேர்த்தவர்கள்.
     பிறந்தவர்க்கு மோஷகதி தேடவேணும்
            பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
      மறந்தவர்க்கு மறலிவந்தால் வாழுவாருண்டோ
            வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
      அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
            அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
      துறந்துநின்று திருவாடு துறையைப் பார்க்கில்
            சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
    மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 89
     இந்த உலக மக்களுக்கு அறத்தை பற்றி முதன்முதலில் சொன்னவர் ஆசான் முருகப்பெருமான். முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! என் தந்தையே! எனது தாயே! தயவுடைய தெய்வமே! தயாபரனே! தேவாதிதேவா! உன் திருவடியைப் பூஜிக்கக்கூடிய வாய்ப்பை கொடு தாயே! என்று எவன் ஒருவன் கேட்கிறானோ அன்றே அவன் ஞானியாவான். என்று ஒருவன் கேட்கிறானோ அன்றைக்கே அவனுக்கே அவனுக்கு தயைசிந்தை உண்டாகும். என்று ஒருவன் கேட்கிறானோ அன்றே செல்வநிலை பெருகும். என்று ஒருவன் கேட்கிறானோ அன்றே எமனை வெல்லுகின்ற வல்லமை உண்டாகும். என்று எவன் கேட்கின்றானோ அன்றைக்கே அவனுக்கு அனைத்தும் சித்திக்கும். இந்த வாய்ப்பு ஆசான் முருகப்பெருமானுக்கு உண்டு. அவன் கருணைக்கடல் அவன் தயவே வடிவானவன்.
     தயாபர மேயும்மை நம்பி பேர்க்கொரு தாட்சியுண்டோ – முருகா! உன்னை நம்பினவர்க்கு ஒரு குறைவும் வராதப்பா.
     மயாபர மேயென் பிறவிக் கடலின் மருந்து சொல்லுந் – என் பிறவிப் பிணிக்கு மருந்து யார்ன்னு கேட்டால், உன் திருவடியே பிறவிப் பிணிக்கு  மருந்து. முருகா! சற்குருநாதா! என்றால் போதும்.
     தயாபர மேயும்மை நம்பின பேர்க்கொரு தாட்சியுண்டோ
      மயாபர மேயென் பிறவிக் கடலின் மருந்துசொல்லுந்
      தியாபர மேயுன் னிருதாள் வணங்கத் திருவருள்
      செயாபர மேயுந்தன் சேவடியே நம்பிச் சேவிப்பனே.
    சுப்பிரமணியர் ஞான சைதன்யம் – 108
                ஆக நம்ப வேண்டுமல்லவா? ஆக இவ்வளவு பேசியிருந்தாலும் நம்பிக்கை வருமா என்றால் வராது. ஞானியை கண்டு பிடிக்க முடியுமா? பார்த்தால் உலகத்தவர் போல் இருப்பார். ஞானியை கண்டே பிடிக்க முடியாது. இதை மகான் பட்டினத்தார் சொல்வார்.
     பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
      தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
      அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
      இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே.
o   மகான் பட்டினத்தார், திருஏகம்பமாலை 15
                ஆக ஒரு ஞானி என்றால், பொருள் பற்று இல்லாதவராக இருப்பார். ஒரு ஞானி என்றால், பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வார். ஒரு ஞானி என்றால் தொண்டு செய்கின்றவர்களை புரிந்து கொள்வார். ஒரு ஞானி என்றால் யார் மனமுவந்து தொண்டு செய்கின்றார்களோ அவனுக்கு அருள் செய்வார்கள் கருணை உள்ளவர்கள். அவர்கள் பேசும் சொற்கள் அனைத்தும் பிறவிப்பிணிக்கு மருந்தாக அமையும். இதை ஆசான் திருவள்ளுவப்பெருமான்.
     அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
      பெரும்பயன் இல்லாத சொல்.
    திருக்குறள் – பயன்இல சொல்லாமை – குறள் எண் 198
     ஒரு மனிதன் கடைத்தேற வேண்டுமென்றாலும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டுமென்றாலும் ஞானிகள் ஆசியில்லாமல் முடியாது. யாரோ ஒரு ஞானியின் திருவடியைப் பிடித்துக்  கொள்ள வேண்டும். அது இராமலிங்கசுவாமிகளின் திருவடியாக இருக்கலாம். அவர்களை எல்லாம் கண்டால் எமன் நடுங்குவான். யாரொருவர் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றாரோ அவருடையோ திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்வார்.
     கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
      ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
    திருக்குறள் – தவம் – குறள் எண் 269
                ஆக எமனை வெல்லலாம். பலசித்து விளையாடலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆக மரமில்லாப் பெருவாழ்வையும் பெறலாம். மேலும் மகான் திருவள்ளுவர் சொல்வார்.
         
    
     ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
      எண்ணின் தவத்தான் வரும்.
    திருக்குறள் – தவம் – குறள் எண் 264
                ஆக மகான் அகத்தீசரின் ஆசி பெற்ற மக்கள், ஞானிகளின் ஆசி பெற்ற மக்கள், பகைவனை கட்டுபடுத்த முடியும். அதே நேரத்தில் பண்புள்ள மக்களை கை தூக்கிவிட முடியும். ஞானிகள் நினைத்தால் பிச்சை எடுப்பவனை மன்னனாக்குவார்கள். அத்தகைய ஆற்றல் அவர்களுக்கு உண்டு. மகான் பட்டினத்தார் ஐயா! வள்ளல் இராமலிங்கசுவாமிகளே! என்று ஒருவன் சொன்னால், அவனைக் கடவுள் ஆக்கலாம். பெரும் மன்னனாக ஆக்கலாம். பிச்சை எடுப்பவனை சக்கரவர்த்தியாக ஆக்கலாம். எழுத தெரியாதவனை கல்வியில் வல்லமை உள்ளவனாக ஆக்கலாம். ஆக அவ்வளவு வல்லமை ஞானிகளுக்கு உண்டு. ஆக இந்த சங்கத்தை யார் நம்பி இருந்தாலும் சரி. அவர்கள் விரும்பிய அனைத்தையும் ஆசான் ஆசியால் செய்து தர முடியும்.
     இப்போது நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். இந்த சங்கத்திற்கு பொருளுதவி செய்கிறவர்கள், தொண்டு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் சரி நான் சொல்கின்ற இந்த கருத்தைக் கேட்க வேண்டும்.
     காலையில் எழும்போதே அகத்தீசா என்று சொல்ல வேண்டும்.
     அகத்தீசா! திருமூலதேவா! மாணிக்கவாசகா! அருணகிரிநாதா! நீர் பெற்ற பேரின்பத்தை அடியேன் பெற வேண்டும். தாயே முருகா! உன் திருவடியைப் பற்றி பூஜித்து நீர் பெற்ற மரணமில்லாப் பெருவாழ்வை அடியேன் பெற வேண்டும். அதற்கு தேவரீர் நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     இப்படியெல்லாம் ஞானிகளிடம் கேட்க வேண்டும். பூஜை செய்ய செய்யதான் ஒருவனுக்கு அந்த உண்மை தெரியும். ஆக இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வரும் காலத்தில் ஞானியாவர்கள். இந்த சங்கம், ஒரு பெரிய செயல் திட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கு. ஆனால் அதை இப்பொழுது சொல்லக்கூடாது. இப்ப சொல்லுவதற்கு வாய்ப்புமில்லை. இதை மகான் திருவள்ளுவர் சொல்வார்.     
     
                அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
      பெருமிறை தானே தனக்கு.
    திருக்குறள் – புல்லறிவாண்மை – குறள் எண் 847
      அறிவில்லாதவன், தான் மறைக்க வேண்டியதை மற்றவர்க்கு சொல்லுவான். ஆக இந்த சங்கம், மிகப்பெரிய ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அது என்னவென்று வரும் காலத்தில் தெரியும். அதைப்பற்றி இப்பொழுது சொல்ல முடியாது. அதை பிறகு உங்களுக்கு சொல்வேன்.
     ஆகவே இந்த சங்கத்தை சார்ந்து இருப்பவர்களுக்கும், தொண்டு செய்பவர்களுக்கும், பொருளுதவி செய்பவர்களுக்கும் எல்லா நன்மைகளும் உண்டாகும். நீங்களெல்லாம் குடிலை நம்பி வந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
     நான் கிடைத்திருப்பது உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஐயா!
     ஆசான் ஆசியால், நான் வாசி வசப்பட்டவன். மோனம் அறிந்தவன். மோனநிலை அறிந்தவன், எங்களுக்கு முதுமை வராது, 78 வயது ஆகிறது. வாய்ப்பு இருக்கிறது. என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
     நான் காட்டுகின்ற மகான்கள் அத்தனைபேரும் முதுபெரும் ஞானிகள் அப்பா. அகத்தீசன் பெரிய மகானப்பா, இராமலிங்கசுவாமிகள், புஜண்டமகரிஷி என்றாலே எமன் நடுங்குவான். முருகா! என்றால் எமன் நடுங்குவான். ஆக கூற்றுவனை வெல்லுகின்ற வல்லமை மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய வாய்ப்பு ஞானிகளை வணங்காமல் கிடைக்காது. நான் காட்டுகின்ற மகான்கள் அத்தனைபேரும் முதுபெரும் ஞானி தாயே, முதுபெரும் ஞானியப்பா. இவர்களைப் பிடித்துக் கொள்.
     ஆசான் அருணகிரிநாதர் சாதாரணமானவர் இல்லை. முருகப்பெருமானை முழுமையாக தன்னுள் உணர்ந்தவர். மகான் அருணகிரிநாதர் ஆசான் முருகப்பெருமானைப் பற்றி மட்டும்தான் பாடினார். வேறு யாரைப்பற்றியும் பாடவில்லை. மகான் அருணகிரிநாதருடைய ஒரே இலட்சியம் முருகப்பெருமான்தான். அருணகிரிநாதா என்று சொல்லிப்பார் எமன் நடுங்குவான்.
     முதுபெரும் தலைவன் முருகப்பெருமான்தான். இப்போது உங்களுக்கு சொல்கிறேன். முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! என் தந்தையே! நீர் பெற்ற பேரின்பத்தை அடியேன் பெற வேண்டும். அடியேன் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும். அடியேன் ஆற்றல் பொருந்தியவனாக இருக்க வேண்டும்.
     ஆக இப்படியெல்லாம் ஆசானிடம் கேட்க வேண்டும். முருகப்பெருமான் ஆசியிருந்தால் இல்லறமும் நன்றாக இருக்கும், துறவறமும் நன்றாக இருக்கும். துறவு என்றால் என்ன? துறவு என்பது மனதில் இருக்கும். மனதால்தான் துறவு. காவி கட்டினால்தான் துறவு என்பது இல்லை, அது ஒரு வாய்ப்பு.
     குடும்பத்தில் இருப்பான், அவன் ஞானியாக இருப்பான். இவன் காவி கட்டியிருப்பான், மடையனாக இருப்பான். இல்லையில்லை சுத்த மடையனாக இருப்பான். அவன் குடும்பத்தில் இருந்து ஞானியாகிறான். ஆனால் காவி கட்டினவன் மடையனாக இருப்பான்.
     குடும்பத்தில் இருந்து கொண்டே விஷயத்தை தெரிந்து கொண்டான். மனைவி, மக்களிடம் இருப்பான், வியாபாரம் செய்வான், விவசாயம் செய்வான், உத்தியோகம் பார்ப்பான். ஆனால் அந்தரகத்தில், “முருகா! அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் தாயே! முருகா! அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.
     ஆனாலும் இப்படி கேட்டுக் கொண்டே குடும்பத்தில் இருப்பான். வியாபாரம் செய்வான், நன்றாக சம்பாதித்துக் கொண்டிருப்பான். மகான் பட்டினத்தார் இப்படித்தான் கோடிக்கணக்காக சம்பாதித்துக் கொண்டிருப்பார். ஆனால் முருகப்பெருமான் மேல் அவர் அன்பு கொண்டு பூஜை செய்து கொண்டிருப்பார். கோடிக்கணக்கான பொருள் சேர்த்தார். அள்ளி அள்ளி கொடுத்தார், கை சிவந்து போகின்ற அளவிற்கு அள்ளி கொடுத்தார். அந்த அளவிற்கு செல்வம் குவிந்தது. அதுபோல் தான் பத்ரகிரிநாதரும் இருந்தார். ஆக ஒரு மனிதனுக்கு செல்வம் வேண்டும், தயைசிந்தை வேண்டும்.
     ஆலம் விதை சிறியதாக இருக்கும். ஆனால் இதே பூசணிக்காய் மாதிரி இருந்தால் என்ன ஆகும்? ஆலமரத்தின் கீழே ஒரு ஆளும் உட்கார முடியாது.
     ஆலுக்கும் பூசநிக்கும் ஆய்ந்து கொடுத்த ஞானம் அது என்ன ஞானம்…. என்பார் ஒரு மகான்.
     ஆக அது போன்று எல்லாவற்றையும் நுட்பமாக தலைவன் படைத்திருப்பான். ஆக உடம்புக்குள்ளே இவ்வளவு இரகசியமா? உடம்பைப் பற்றி அறிய வேண்டும். இதை ஆசான் திருமூலர் சொல்வார்.
     உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
      உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
    திருமந்திரம் – சரீரசித்தி உபாயம் – கவி எண் 724
                ஆக உடம்பின் இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆக ஒவ்வொருவரும் வாய்ப்பிருந்தால் வாரத்திற்கு ஒரு முறையாவது காலையில்  உப்பில்லாத உணவை உண்ண வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முடியாது. வியாழக்கிழமை அன்று காலையில் விரதம் இருக்க வேண்டும். காலையில் இரண்டு பழம் சாப்பிட்டுவிட்டு விரதம் இருக்க வேண்டும். ரொம்ப கஷ்டமாக இருந்தால் பால் சேர்த்துக் கொள்ளலாம். ஆக விரதம் என்று சொன்னால் பசியோடு இருக்க வேண்டும்.           
     வியாழக்கிழமை அன்று எதற்காக விரதம் இருக்க வேண்டும்? ஆசான் முருகப்பெருமானின் ஆசி பெற, ஆசான் அகத்தீசனின் ஆசி பெற விரதம் இருக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் பசி இருக்காது. இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
      கழிபே ரிரையான்கண் நோய்.
    திருக்குறள் – மருந்து – குறள் எண் 946
                ஆக எதையும் அளந்துதான் சாப்பிட வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
      துய்க்க துவரப் பசித்து.
    திருக்குறள் – மருந்து – குறள் எண் 944
     துவர என்றால் மிகுதியாக பசித்து என்று அர்த்தம். அற்றது அறிந்து – காலையில் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆனதா என்று பார்த்து சாப்பிட வேண்டும். கடைப்பிடித்து என்ற வார்த்தை மிக நுட்பமானது. எந்த உணவை சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமென்று நமக்கு தெரிய வேண்டும்.
     கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து – நன்றாக சாப்பிடு என்றால், நன்றாக பசித்தபின் சாப்பிட வேண்டும் என்று பொருள். பசியில்லாமல் உணவை சாப்பிடாதே. பசியில்லாமல் சாப்பிட்டால் பிரச்சனை வரும். இன்னும் சிலபேர் இரவு நேரத்தில் கறி, மீன் சாப்பிடுவான். அப்படி சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகாது. அது ஜீரணமாகாமல் வயிற்றுக்குள் இருந்து விஷமாக மாறிவிடும். பின்பு மறுபடியும் கறி சாப்பிடுவான். கடைசியில் அதுவே விஷமாக போய்விடும். அதுவே கிருமியாக மாறிவிடும். ஆக சைவ உணவுதான் மனிதவர்க்கத்திற்கு சிறந்தது. ஆக அந்த உணவையும் பசித்தபின்புதான் சாப்பிட வேண்டும்.
     ஞானிகளெல்லாம் சாதாரணமாக இருப்பார்கள். அவர்களை பார்த்தால் ஞானி என்றே கண்டுபிடிக்க முடியாது. இதை மகான் பட்டினத்தார் சொல்வார்.
     மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
      நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்புகொண்டு
      வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
      பார்த்தா லுலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே.
                           – மகான் பட்டினத்தார் பாடல் பொது கவி எண் 19
     பற்றற்றவர் எப்படி இருப்பார்? பார்ப்பதற்கு சராசரி மனிதன் மாதிரி இருப்பார். ஆனால் மிகப்பெரிய வல்லமை உள்ளவர். அவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். ஆனால் பற்றற்றவர்கள் தன்னை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்வதெல்லாம் நீங்கள் எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது கலிகாலமப்பா. எப்பொழுதும் டிவி போன்றவை மனிதனை ஆட்டிப் படைக்கும். ஆக இந்த காலத்தில் அதிலிருந்து தப்பிக்க வேண்டும். இந்த கலிகாலத்தின் ஏராளமான பேர்கள் ஞானிகளாக வாய்ப்பு உண்டு. ஆக அவ்வளவு பெரிய வாய்ப்பு உள்ளது. அதற்குத்தான் மிக எளிய முறையில் பூஜை செய்ய சொல்லியிருக்கிறோம்.
    
     நாங்கள் இது வரையில் சரியை, கிரியை, யோகம், ஞானம் அல்லது அறம் பொருள் இன்பம் வீடு என்ற இந்த நான்கை மட்டும் மையக் கருத்தாக வைத்து ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியிருக்கிறோம். அவற்றையெல்லாம் நன்கு கவனித்து நீங்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
     ஆக நீங்களெல்லாம் மிகப்பெரிய வல்லமைமிக்க ஞானிகள் தங்கியிருக்கும் ஊர்களில் உள்ள கோவில்களுக்கு வாரம் ஒரு முறை குடும்பத்தோடு செல்ல வேண்டும். திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, திருத்தணி, சுவாமிமலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் போன்ற இடங்களில் உள்ள கோவிலகளுக்கு செல்ல வேண்டும். நான் சொன்ன இந்த இடமெல்லாம் மிகப்பெரிய இடம்.
     ஆக இப்படி ஞானிகள் தங்கியிருக்கும் கோவில்கள் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டும். அது போன்ற கோவிலகளுக்கு சென்று அங்கு கோவில் வாசலில் பசியோடு அமர்ந்திருப்பவர்களுக்கு ஒரு ஐந்து இட்லி வாங்கி கொடுத்தால் மிகப் புண்ணியமாக இருக்கும். இப்படித்தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும். ஆக இது போன்ற கோவில்களில் புண்ணியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அது மிகப்பெரியதாகும்.
     ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு பக்தி வேண்டும். அடுத்து புண்ணியம் வேண்டும். புண்ணியம் இடது கை, பக்தி வலது கை என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். புண்ணியவான்களுக்குத்தான் ஞானிகள் அருள் செய்வார்கள். எனவே பக்தி செலுத்தினால் புண்ணியம் செய்யக்கூடிய அறிவு வரும். எனவேதான் அறம் தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என்றார்.
     முருகா என்றாலே உனக்கு தயை சிந்தை வரும். முருகா என்றாலே பிறரை மதிக்கக் கூடிய அறிவு வரும். முருகா என்றாலே பிள்ளைகளுக்கு கல்வி வரும். முருகா என்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். யாருக்கும் பிரச்சனை விபத்து வராது. முருகா சற்குருநாதா அகத்தீசா திருமூலதேவா இராமலிங்கசுவாமிகளே என்று சொல்லிக் கொண்டே வர வேண்டும். இப்படி சொன்னால் விபத்து நடக்காது. வாகனத்தை எடுக்கும்போதே அகத்தீசா என்று சொல்லிவிட்டு வாகனத்தை எடுக்க வேண்டும். இப்படி சொல்லிவிட்டு வாகனத்தை எடுக்கும்போது நம்முடன் வந்து ஆசான் நம்மை காப்பாற்றுவார்.
    
     பத்து வயது பையன் இருசக்கர வாகனத்தில் வேகமாக போகிறான். எதிரில் லாரி வேகமாக வந்தது. அந்த பையன் வாகனத்தில் இருந்து கீழே விழும்போது அந்த பையனை அப்படியே தூக்கிவிட்டான். வண்டி மட்டும் அடிபட்டது. நல்லவேளை என் பையனை தக்க சமயத்தில் காப்பாற்றினீர்கள் என்று அந்த பையனின் தந்தை சொன்னார்.
     அப்போது அந்த பையனின் தகப்பனிடம் உன் பையனை இன்று நான் காப்பாற்றிவிட்டேன். இப்படி சின்ன வயது பையனிடம் நீங்கள் வண்டி கொடுத்தால் ரோட்டில் சின்ன பிள்ளைகள், வயதானவர்கள் நடக்க முடியாது. அது ஆபத்து. பலலட்சம் பணமிருந்தாலும் இனி என் பையனுக்கு சைக்கிள் மட்டும்தான் தருவேன். வண்டி ஓட்ட தரமாட்டேன் என்றார்.
    
     ஆக விபத்து ஏன் நடக்கிறது? அவனுக்கு நிதானம் தெரியாது? ஒரு வாகனத்தை ஓட்டும்போதே எங்கே நிதானித்து  போக வேண்டுமென்று தெரியாது. எங்கே வேகமாக போக வேண்டும்? எங்கே மெதுவாக போக வேண்டுமென்பது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆர்வத்தின் காரணமாக இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுபவனுக்கு ஆபத்து, ரோட்டில் செல்கின்ற மக்களுக்கும் ஆபத்து. வயதானவர்களெல்லாம் வெகுவிரைவில் இவனால் மேலே போய்விடுவார்கள்.
                ஆக மனிதவர்க்கம் விபத்தின்றி வாழ வேண்டும். வாகனத்தை எடுக்கும்போதே நிதானித்து அகத்தீசா, நந்தீசா என்று ஆசான் நாமத்தை சொல்லிக்கொண்டே எடுக்க வேண்டும். ஆக ஒவ்வொரு செயலுக்கும் ஞானிகளின் துணையிருக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படை பக்தி. முதலில் பக்தி அடுத்துதான் அன்னதானம். பக்திதான் முக்கியம்.
     அன்னதானம் செய்யுங்கள். உயிர்கொலை செய்யாதீர்கள். அன்னதானம் செய்து சைவத்தை மேற்கொள்ளுங்கள்.
      சைவ உணவுதான் உங்கள் வாழ்க்கையை தரமானதாக ஆக்கும்.
     ஆக சைவ உணவை மேற்கொள்ளுங்கள். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் இரண்டு நிமிடம் அகத்தீசா என்று சொல்லுங்கள். அகத்தீசன் திருவடியே வேதம். அவன் நாமமே மந்திரம். அகத்தீசா நந்தீசா திருமூலதேவா என்று போகும் போதும் வரும் போதும் சொல்லுங்கள். இதுதான் தவம்.
     ஆசான் திருவடியே தவம். ஆசான் திருவடியே வேதம். ஆசான் நாமமே மந்திரம். ஆசான் நாமமே அறிவு. ஆசான் திருவடியே செயல். ஆசான் திருவடியே அறிவு.
     ஆகவே ஞானிகளின் திருவடியைப் பற்றுவோம். ஜென்மத்தைக் கடைத்தேற்றுவோம். விழாவிற்கு வெளிநாட்டு அன்பர்களும் தமிழ் நாட்டு அன்பர்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அத்தனைபேரும் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்தி முடிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0181547
Visit Today : 67
Total Visit : 181547

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories