15.03.2001 அன்று மகான் மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித்திரு அகவலுக்கு மகான் அரங்கர் அருளிய அருளுரைஅன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம். ஞானிகள் அத்துணை பேரும் தம்முள் ஒரு இயக்கத்தை, ஒரு நடனமாடும் இயக்கத்தை அறிந்தவர்கள். இந்த இயக்கம் அல்லது நடனம் நம் உடம்புக்குள் உள்ள மூச்சுக்காற்று அசைவால் நடந்து கொண்டிருக்கிறது.
     அப்படி மூச்சுக்காற்றின் அசைவால், நம் உடம்பினுள் உள்ளே உள்ள கருவிக்கரணங்கள் இயங்கும். நமக்கு நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகும். இந்த இயக்கம் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும். நாம் சிரித்தாலும், மகிழ்ச்சியடைந்தாலும் அல்லது எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த இயக்கம் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும்.
     நாம் ஏதோ ஒரு வேலையில் கவனமாக இருப்போம். ஆனால் பசிக்கும். ஆக இந்த இயக்கம் தொடர்ந்து இயங்கும். அதற்கு தடையே இருக்காது. இவன் சிந்தனைக்கும், அந்த இயக்கத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இந்த இயக்கம் உடம்பு நல்லபடியாக இருக்கும்வரை நன்றாக இருக்கும். ஆனால் இவன் கற்பனையில் இருப்பான். இவனுடைய கற்பனை அப்படியே இருக்கும். இருக்கட்டும் ஆனால் எல்லாம்வல்ல இயற்கை அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டே இருக்கும். உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்த இயக்கம் இருக்கும். இதை, 
     ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
      நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச் – சீரிய
      பந்தமாந் தேவர் பதினாலயன் படைத்த
      அந்தமில் சீர்த்தாவர நாலைந்து.
  
      ஊர்வ பதினொன்றாம் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எறும்பு, தேள், நட்டுவாக்கிளி போன்ற கணக்கிலடங்கா உயிரினங்கள் தரையில் ஊர்ந்துதான் செல்லும். அப்படி ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் பதினொரு இலட்சம் வகை உள்ளது.
     ஒன்பது மானுடம் – உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒன்பது இலட்சம் தோற்றபேதமுள்ளவர்களாக இருப்பார்கள். ஒரு மனிதனைப் போல மற்றவன் இருக்க மாட்டான். தோற்றபேதம் என்பது ஒருவரைப்போல மற்றவர் இருக்க மாட்டார் என்று பொருள். ஆக இந்த இயக்கம் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு.
     நீர்பறவை நாற்காலோர் பப்பத்து – தண்ணீருக்குள் பலவகையான உயிரினங்கள் இருக்கின்றன. அவைகள் பத்து இலட்சம் தோற்றபேதமுள்ளது. இதையெல்லாம் ஞானிகள் கணக்கெடுத்திருக்கிரார்கள்.
     ஆக அந்த நீரில் உள்ள உயிரினங்கள் ஜீவிக்கின்ற அளவிற்கு நடந்து கொண்டிருக்கும். எனவே தரையில் இருக்கின்ற உயிரினங்களுக்கு மட்டுமல்ல, தண்ணீரிலிருக்கும் ஜீவராசிகளுக்கும் அந்த இயக்கம் நடந்து கொண்டே இருக்கும்.
     ஆக எல்லாம்வல்ல இயற்கைக் கடவுள் அல்லது தில்லை அம்பலவாணர் என்று சொல்லப்பட்ட அந்த கடவுள் அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டே இருப்பார். நீர்பறவை நாற்காலோர் பப்பத்து – பறவை இனத்தில் பத்து இலட்சம் தோற்ற பேதமுள்ளது. அது பலவகையான கிளி, ஆந்தை, கூட்டான் இப்படியாக பத்து இலட்சம் பேதமிருக்கும். ஆக ஒரு பறவை போல மற்ற பறவை இருக்காது.
     ஆனாலும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஜீவன் ஒன்றுதான். தோற்றங்கள் வெவ்வேறாக இருக்கும். நாற்காலோர் பப்பத்து – கால்நடைகள் என்றால் ஆடு, மாடு, குதிரை, சிங்கம், புலி, கரடி போன்ற கணக்கிலடங்காத உயிரினங்கள் ஆகும். அவைகள் பத்து இலட்சம் பேதங்களாக உள்ளது. கால்நடைகள் நடந்து செல்பவைகள்.
      சீரிய பந்தமாந் தேவர் பதினாலயன் படைத்த – நம் கண்ணுக்கு புலப்படாத பதினான்கு இலட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஈரேழு பதினான்கு உலகத்திலும் இருக்கலாம். ஆக பதினான்கு இலட்சம் தேவர்கள் இருக்கிறார்கள்.
     அந்தமில் சீர்த்தாவர நாலைந்து – தாவர வகையில் 20இலட்சம் பேதங்கள் உள்ளது. தாவரத்தை புல், செடி, கொடி, மரம் என்ற பிரிவாக பிரிக்கலாம். புல்லை நீங்கள் பார்க்கலாம். ஆடு, மாடு மேயும். செடி வகைகளுக்கு கத்தரிச்செடி, கொத்தவரை, மிளகாய் செடி வகையாக இருக்கும். இதற்கெல்லாம் கணக்கே கிடையாது. அடுத்து கொடிவகை, கொடிவகையில் பூசணிக்காய், பரங்கிக்காய், அவரைக்காய், புடலங்காய் இப்படி பலவகையாக இருக்கும். அடுத்து மரம் தென்னை மரம், மாமரம், வாழைமரம் இப்படி பலவகையாக இருக்கும். ஆக தாவர வகையில் இப்படி இருபது இலட்சம் தோற்றபேதம் இருக்கிறது.
     ஆக இப்படி உலகிலுள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கும் கால்நடைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும், இந்த இயக்கம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இந்த இயக்கம் நின்றுவிட்டால் என்ன ஆகும்? அந்த இயக்கத்திற்கும் நமக்கும் தொடர்பிருக்காது. இதை ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். ஆக இப்படி உலகிலுள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கும் கால்நடைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் இந்த இயக்கம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இந்த இயக்கம் நின்றுவிட்டால் என்ன ஆகும்? அந்த இயக்கத்திற்கும் நமக்கும் தொடர்பிருக்காது. இதை ஞானிகள் அறிந்திருக்கிறார்கள்.
     இயக்கம் எல்லாம்வல்ல இயற்கை தோற்றுவித்தது. தோற்றம் ஆரம்பத்தில் சிந்தனையாக இருந்தது. ஒரு பெண்ணுடன் ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தது. கூடுகின்றபோது திரவப்பொருளாக சுக்கில சுரோணிதமாக மாறுகிறது. பின்பு பத்துமாத தீட்டு வெளியாகாமல் உடல் வளர்ந்து பத்துமாதம் ஆனபிறகு குழந்தை பிறக்கும். பஞ்சபூத சாரம்தான் தீட்டு. பத்துமாத தீட்டு ஒன்றுபட்டு ஒரு இயக்கம் காரணமாக தாய்க்கு உயிர் இருக்கவேண்டும். தாய் இயக்கம் நின்றுவிட்டால் குழந்தை இயக்கம் நின்றுவிடும். அப்போ அந்த குழந்தையின் உயிர் தாயின் உயிர்தான். பின் அந்த குழந்தை பத்து மாதத்திலோ, பத்து வருடத்திலோ, இருபது வருடத்திலோ, எண்பது வயதிலோ, தொண்ணூறு வயதிலோ இறக்கலாம். சிந்தனை அரூபமானது. பிறகு செத்தபின் இவனும் அரூபமாகிவிடுகிறான். ஆரம்பநிலைக்கே மறுபடி வருகிறான். சிந்தனையாக இருந்தான். பின் சேர்க்கையாக இருந்தான். பின் கருவாக மாறினான். பத்து மாத தீட்டு நின்று கரு வளர்ந்தது. பிறகு குழந்தை பிறந்தது. இப்படியாக இயக்கிக் கொண்டே இருக்கிறான். இந்த இயக்கம் நடனமாடுகின்றது. இந்த இயக்கம் நின்று விட்டது. அவன் செத்து விட்டான். சத்து போய்விட்டது.
                ஆக இந்த இயக்கத்தையெல்லாம் இயற்கை தோற்றுவித்திருக்கிறது. ஞானிகள் இதை புரிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டு அந்த இயக்கம் இருக்கும்போதே ஆன்மா இருக்கும்போதே அதை இலயப்படுத்திக் கொண்டார்கள்.
     ஆன்மா இருக்கிறது என்றால், மூச்சுக்காற்று அசைகிறது என்று பொருள். மூச்சுக்காற்று அசைந்தால் ஆன்மா இருக்கும். ஆக ஆன்மா இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாக இருக்கும். ஆன்மா இருப்பதால் உள்கருவி கரணங்கள் அசைகின்றன. ஆக உடம்பின் உள்ளே உள்ள எல்லா கருவிக்கரணங்களும் அசைந்து கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திற்கு தான் நடனமாடுதல் என்று பெயர். இந்த கருவிக்கரணங்கள் மூச்சுக்காற்றின் அசைவின் காரணமாக இயங்கும். அந்த அசைவு ஒரு இயக்கத்தை தரும். ஆக இப்படியொரு இயக்கம் மிக மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த இயக்கம் குழந்தைகளுக்கு வேகமாக இருக்கும். மூச்சுக்காற்றின் இயக்கமே அந்த இயக்கம்.
     அந்த இயக்கமே பசிக்கு காரணமாக இருக்கிறது. பசித்தவுடன் உணவுப் பொருளை சாப்பிடுகின்றோம். ஆக அந்த அசைவு உள்கருவி கரணங்கள் அசைத்துக் கொண்டிருக்கும். அப்படி அசைத்து நாம் உண்ட உணவிலுள்ள சத்தையும், அச்சத்தையும் பிரிக்கும். சத்து என்ன செய்யும்? உடம்பிலுள்ள எழுபத்துஇரண்டாயிரம் நாடி நரம்புகளையும் முருக்கேற்றிவிடும். அசத்தை மல ஜலமாக வெளியேற்றும். ஆக இப்படி இந்த இயக்கம் நடந்து கொண்டே இருக்கும்.
     ஆக எழுபத்துஇரண்டாயிரம் நாடி நரம்புகளும் உரமேறும். உரம் ஏறினபிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என அந்தகரணங்கள் நான்கு ஆகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி என பொறி ஐந்து, புலன் ஐந்தாகவும் மாறி மொத்தம் பதினான்கு கருவிகரணங்களாக இந்த இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும். ஆக மூச்சுக்காற்றின் அசைவால் இந்த பதினான்கு கருவிகரணங்களும் இருக்கிறது. அடுத்து தத்துவம் தொண்ணூற்றாறாக உள்ளது. அதில் முக்கியமான தத்துவம் முப்பத்தாறு என்பார்கள். ஆக இப்படிப்பட்ட இயக்கத்தை முதன்முதலில் அறிந்தவர்கள் மகான் ஆதித்தலைவர் ஆசான் சுப்பிரமணியர்.
     எல்லாம்வல்ல இயற்கைக் கடவுள் உயிரினங்களை இப்படி இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்திலிருந்து நீர் எப்படி தப்பித்தீர் என்று ஆதித்தலைவன் ஆசான் சுப்ரமணிரிடம் கேட்டார்கள்.
     நான் தூய மனதோடு இருந்தேன். கடவுளால் படைக்கப்பட்ட உயிரினிங்களின் மீது அன்பு காட்டினேன். ஆக அந்த உயிரினங்கள் என்னை மனதார வாழ்த்தியது. அதன் மூலமாக அருளைப் பெற்றேன், ஆசியை பெற்றேன், வல்லமையை பெற்றேன். நான் அந்த இயக்கத்திலிருந்து தப்பித்துக் கொண்டேன்.
     ஆக அந்த இயக்கத்திலிருந்து எப்படி தப்புவது? என் திருவடியை பூஜை செய் என்றார் ஆசான் சுப்பிரமணியர்.
     என் திருவடியை பூஜை செய், அருள் செய்கிறேன் என்பார் மகான் மாணிக்கவாசகர்.
     ஆக எல்லா ஞானிகளும் அவர்களின் திருவடியைப் பற்றினால் அருள் செய்வேன் என்பார்கள். ஆக எல்லா ஞானிகளும் உருகி தியானித்தார்கள். ஆசி பெற்றார்கள்.
     எல்லாம்வல்ல இயற்கை உயிர்களை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் உயிர்களுக்கு பசியையும், காமத்தையும், நரை, திரையையும் கொடுத்து அவர்களுக்கு உணவையும் கொடுத்து வளர்ப்பது போல் வளர்த்து பிறகு கொன்றுவிடுகிறார். ஆக அந்த இயக்கத்தை நமக்கு எல்லாம்செய்வது போல் செய்கிறார் இயற்கை அன்னை அல்லது கடவுள் அல்லது தில்லையம்பலவாணர் என்று வைத்துக் கொள்ளலாம்.
     ஆக எல்லாம்வல்ல கடவுள் நமக்கு எல்லாம் தருவது போல் தந்து உடலுறுப்புகளைத் தந்து ஆண்கள், பெண்களை தந்து, மகிழ்ச்சியை தந்து சுவையான உணவை தந்து வளர்ப்பது போல் வளர்த்து நம்மை அநியாயமாக கொன்று விடுகிறான். இதை ஞானிகள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
     அதை வெல்வதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றான்? என் ஆசியைப் பெற்றுக் கொள் என்றார் ஆசான் சுப்பிரமணியர். ஆக ஆசியைப் பெற்றார்கள், நல்ல மனம் வந்தது.
     நல்ல மனம் இருக்குமிடத்தில் சுயநலம் இருக்க முடியாது. அங்கே காமவெறி இருக்கமுடியாது. அங்கே ஜாதி வெறி இருக்கமுடியாது. நல்ல மனம் என்பதே தயைசிந்தைதான். ஆக தயைசிந்தை கொண்டுதான் அதை அறிந்தார்கள். எதை அறிந்தார்கள்? அந்த இயக்கத்தை அறிந்தார்கள். மூச்சுக்காற்று இருக்கும்போதே, ஆன்மா இருக்கும்போதே, உடம்பு திடமாக இருக்கும்போதே அவர்கள் என்ன செய்தார்கள்? ஞானிகள் மீது பக்தி செலுத்தினார்கள்.
     அப்படி பக்தி செலுத்தி இடகலையும், பின்கலையும் அதாவது இடது பக்கம் வருகின்ற காற்றையும், வலதுபக்கம் வருகின்ற காற்றையும் பொற்சபை அல்லது ஞானசபை என்று சொல்லப்படும் புருவமத்தியில் செலுத்தினார்கள். அப்படி செலுத்தியதின் காரணமாகவும், ஆசான் ஆசியாலும் விடாமுயற்சியாலும் உருகி தியானிக்கின்ற பக்தியினாலும் தயைசிந்தையாலும் ஆசான் ஆசியால் உள்ளே தங்கிவிட்டால், உடம்பிலிருக்கும் மாசு தீர்ந்துவிடும்.
     ஆக இது ஒரு அற்புதம். ஒரு இயக்கத்திற்குள் ஒரு இயக்கம். இப்போது அந்த இயக்கத்திற்குள் இன்னொரு இயக்கம் நடக்கும். ஆக ஒன்பது வாயில் இந்த உடம்பில் இந்த மூச்சுக்காற்று வந்து போகும். அதை பத்தாம்வாசலாகிய புருவமத்தியில் செலுத்தி வைத்தால், அந்த இயக்கம் தனி இயக்கம். அவன்தான் சாகமாட்டான். ஆக அவனுக்கு வாசி வசப்பட்டது. கபத்தை அறுக்கும், அவத்தையும் அறுக்கும், பாவத்தை பொடியாக்கும், எல்லா நன்மையையும் உண்டாக்கும். ஆக இப்படி இந்த வாசி வசப்பட்ட மக்கள்தான் இந்த திருநடனம்.
     ஆக இந்த வாய்ப்பை நாம் பெற வேண்டும். எப்படி பெற வேண்டும்? ஆசான் மாணிக்காவாசகரையும், ஆசான் இராமலிங்கசுவாமிகளையும், ஆசான் தாயுமான சுவாமிகளையும் உருகி தியானிக்க வேண்டும். ஆசான் சுப்ரமணியரையும், ஆசான் அகத்தீசரையும் பூஜிக்க வேண்டும். பூஜை செய்ய, பூஜை செய்யத்தான் நம்மிடமிருக்கும் குணக்கேடு நீங்கும். குணக்கேடு இருந்தால் நிச்சயம் அந்த இடத்திற்கு போகமுடியாது. குணக்கேடு நீங்குவதற்கு ஆசானை வணங்குகிறோம். அவரவர்கள் குணக்கேடு அற்றவர்கள். ஞானிகள் எல்லோரும் உயர்ந்தவர்கள், சாந்தமே வடிவான மக்கள். அப்படி ஆசி பெற, ஆசி பெறத்தான் இந்த உலகம் அநித்தியமானது என்று அறியமுடியும். இந்த உடம்பு இருக்கும்போதே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
     ஆக ஒரு இயக்கத்திற்குள் ஒரு இயக்கம் நடக்கிறது. இது முக்கியமான செய்தி. உடம்பு இயங்குகிறது, உடம்பு இயங்குவதற்கு காரணம் மூச்சுக்காற்றின் இயக்கமே. எல்லாவல்ல இயற்கை எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லாம்வல்ல இயற்கை இயங்குவதால் நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
     ஆக அதை புரிந்து ஆசான் ஆசியால் அந்த இயக்கத்திற்குள் இன்னொரு இயக்கத்தை அறிந்து, மூச்சுக்காற்றை அறிந்து, மூச்சுக்காற்றை புருவமத்தியில் செலுத்தி வைக்கிறான். இது ஒரு அற்புதமான செயல். இந்த வாய்ப்பை பெறுவதற்கு ஞானிகளின் திருவடியை பணிவதை தவிர வேறு கதியே இல்லை. வேறு எந்த சாங்கியமும் அங்கே எடுபடாது. எந்த ஆரவாரமும் செல்லாது. ஒன்றும் அசைக்கமுடியாது. நீ காவி கட்டினால் என்ன? இல்லை பட்டை போட்டால் என்ன? இல்லை மொட்டை அடித்தால் என்ன? இல்லை ஊர், ஊராக சுற்றினால் என்ன? இதெல்லாம் அங்கே எடுபடாது. அங்கே செல்ல என்ன செய்ய வேண்டும்?
    
     ஒன்றே ஒன்று தயைசிந்த வேண்டும். அந்த தயைசிந்தை எப்படி வரும்? தயைசிந்தையுள்ள ஆசானை வணங்கினால் வரும். ஆக மகான் மாணிக்கவாசகர் ஆதித்தலைவனை வணங்கி ஆசி பெற்றார். அதன் காரணமாக தன்னுடைய புருவமத்தியில் அந்த நடனத்தை பார்த்தார். அதனுடைய விளக்கம்தான் தில்லைமூதூர் ஆடிய திருவடி என்றார்.
     தில்லைமூதூர் ஆடிய திருவடி – மூதூர் என்றால் மிகவும் தொன்மையான ஊர், பழமையான ஊர் என்று பொருள். தில்லை
என்றால் சிதம்பரம். அங்கே மட்டும்தானா ஆடினான்? அவன் ஆட்டம் அல்லது அவள் ஆட்டம் உலகமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. அவன் அசைந்தால் அல்லது இயற்கை அசைந்தால் இந்த உலகம் அசையும். இயற்கை நின்று விட்டால், உலகம் நின்றுவிடும்.
     அவன் ஆடுகின்றான், ஒரு காலை கீழே ஊன்றியிருக்கின்றான், ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான். இதை மகான் கணபதிதாசர் சொல்வார்,
     ஒருபதம் தன்னைத் தூக்கி ஒருபதம் தன்னை மாற்றி
      இருபதம் ஆடுகின்ற இயல்பை நீ அறிந்தாயானால்
      குருபதம் என்று கூறுங் குறிப்புனக்குள்ளே யாச்சு
      வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
    மகான் கணபதிதாசர் – நெஞ்சறி விளக்கம் – கவி எண் 22
                ஒருபதம் தன்னைத் தூக்கி ஒருபதம் தன்னை மாற்றிஒரு பக்கம் வருகின்ற காற்றை மேலே இழுத்து.
      ஒரு பதம் தன்னை தூக்கி – தில்லை அம்பலவாணனைப் பார்க்க வேண்டும். அந்த யோகக்கருத்து அங்கே தெரியும். யோகத்தின் தன்மை அங்கே தெரியும். ஒரு காலை கீழே ஊன்றி ஒரு காலை மேலே தூக்கியிருப்பான்.
      இருபதம் ஆடுகின்ற – ஆடுதல் இதையே தில்லைமூதூர் ஆடிய திருவடி என்பார் மகான் மாணிக்கவாசகர்.
    
     இருபதம் ஆடுகின்ற இயல்பை நீ அறிந்தாயானால் – அந்த இருபதம் ஆடுகின்ற இயல்பை திருவருள் துணையில்லாமல் அடையமுடியாது. இருபதம் என்பது வந்து போகின்ற காற்று. இதைப்பற்றி மகான் திருமூலர் சொல்வார்.
                ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
                காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை
                காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
                கூற்றை உதிக்கும் குரியது வாமே.
    திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 571
               
     ஆக இதை அறிந்தால் கூற்று என்ற எமனை வெல்லுகின்ற வாய்ப்பு கிடைக்கும். ஆக ஒரு பதம் தன்னை தூக்கி ஒரு பதம் தன்னை மாற்ற வேண்டும். இது ஒரு பயிற்சி. இதற்கு விடாமுயற்சி தேவை. எடுத்துக்கொண்ட இலட்சியத்தை அடையும்வரை விடாமுயற்சி வேண்டும். இந்த இயக்கத்தைப் பற்றி மகான் பட்டினத்தார் சொல்வார்.
      காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
      காண்மனமே மாலயனுங் காணரிதை – காண்மனமே
      செம்பொன்னி னம்பலத்துள் சேருஞ் செஞ்சொல்லென்றும்
      அம்பலத்தில் ஆடுநட னம்.
§  பட்டினத்தார் ஞானம் 100ல் கவி எண் 84
    
     ஆக மகான் பட்டினத்தாரும் அந்த நடனத்தைப் பார்த்தவர்.
      காண் மனமே – மனதிற்கு சொல்கிறார்.
    
     சத்திசிவம் ஒன்றான காரணத்தை – சக்தி என்பது இடகலை அல்லது சந்திரகலை, சிவம் என்பது சூரியகலை அல்லது பின்கலை.
     காண் மனமே செம்பொன்னி னம்பலத்துள் சேருஞ் செஞ்சொல்லென்றும் அம்பலத்தில் ஆடு நடனம் –  அவரும் அந்த நடனத்தை கண்டவர். அவரும் அந்த நடனத்தை புருவமத்தியில் பார்ப்பவர்.
     அதனுடைய இயல்பு எப்படியிருக்கும்? பிள்ளைகள் தீபாவளி சமயத்தில் சங்குச்சக்கரம் விடுவார்கள். தார் ரோட்டில் விடும்போது விர், விர் என்று சுத்தும். அப்படியே பொறி பொறியாய் போகும். இந்த ஜோதியை புருவமத்தியின் உள்ளே கண்டு ஞானிகள் இரசித்திருக்கிரார்கள். சங்குச்சக்கரம் சுற்றும்பொழுது தூரத்திலிருந்து அந்த காட்சியை பார்க்க வேண்டும். சங்குச்சக்கரம் சுற்றும்பொழுது பொறி பொறியாக வரும். இது காந்தி. புருவமத்தியில் தோன்றுகின்ற ஜோதியை சுற்றிலும் ஒரு சுழல் இருந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு வாட்டம் செந்நிறமாக இருக்கும். இன்னொரு வட்டம் வெண்ணிறமாக இருக்கும். இன்னொரு வட்டம் சூரியனாக இருக்கும்.
     ஆக வெண்ணிறமாக சந்திர ஒளி இருக்கும். அடுத்து ஒன்று செவ்வொளியாக இருக்கும். அதை வன்னி ஒளி தீ காடு என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட காட்சியை ஞானிகள் புருவமத்தியில் கண்டு கொண்டிருப்பார்கள். ஆக இப்படியே அந்த மூன்று சுடர்களும் இயங்கிக் கொண்டே இருக்கும். அது சொல்லொண்ணா பேரானந்தத்தை தரும். அந்த வாய்ப்பை பெற்றவர்கள்தான் இந்த இரகசியத்தை அறிய முடியும்.
     இதை மகான் திருமூலர், வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட பூதங்கள் ஆட என்பார். இங்கே மகான் மாணிக்கவாசகர் தில்லைமூதூர் ஆடிய திருவடி என்றார். வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட என்றார். வேதங்கள் எல்லாம் – வேதத்தினுடைய அறிவு. வேதம் தன்னுள்ளே இருக்கிறது. ஆக அந்த வேதம். அசைவு என்பது நல்ல மனம், உருகி தியானிக்கக்கூடிய தியானமே உள்ளே வேதமாக இயங்குகிறது.
     வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட – வேதங்களும், ஆகமங்களும் கடவுளைப் பற்றி பேசுவதுதான்.
    
      வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாட – ஆக கீதங்கள் கேட்கும். இதை
      நாதமுங் கீதமுங் கேட்கும் – அந்த
      நாயகன் சந்நிதி தன்னிடை சேர்க்கும்.
    மகான் மஸ்தான் சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 25
               
                சிலம்பொலியென்னக் கேட்குமடி மெத்த
      சிக்குள்ள பாதை துடிக்குமடி.
     என்பார் மகான் கொங்கணமகரிஷி
      கீதங்கள் ஆட – கீதம் கேட்கும். நமது காதில் தசநாதம் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்படி கேட்கின்ற அவர்கள் சொல்லொண்ணா பேரானந்தத்தில் இருப்பார்கள்.
     கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாட – அவர்கள் கண்ணை மூடினால் எல்லா அண்டங்களும் தெரியும். மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.
    
     அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
          அடுக்கடுக்காய் அமைந்துள வறிவோம் ஆங்கே
     உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
          உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
     எந்தனைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
          எள்ளளவும் அறிந்திலோம் என்று
     முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
          முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
     திருஅருட்பா முதல் திருமறை மகாதேவாமாலை கவி எண் 174
     ஆக அப்படிப்பட்ட அந்தரத்தையெல்லாம் இங்கேயே இருந்து கொண்டு பார்ப்பார்கள். ஜோதியை மட்டும் பார்க்க மாட்டார்கள். இங்கே இருந்து கொண்டே இந்த அண்டத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்க முடியும். அவர்கள் பார்வை ஒரு கோடி மைலுக்கும் போகும் அதற்கு அப்பாலும் போகும்.
     கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாட பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட – எல்லா பஞ்சபூதங்களும் ஆடிக்கொண்டிருக்கிறது. புவனங்கள் ஆடு என்பார்.
    
     நாதங்கொண்டு ஆடினான் ஞானாந்தக் கூத்தே என்றார். ஆக இப்படிப்பட்ட ஒன்றை தில்லையில் நாம் பார்ப்பதற்காக வைத்திருக்கிறார்கள். இது ஒரு அடையாளம். ஆக இப்படிப்பட்ட காட்சியெல்லாம் உன்னுள்ளே இருக்குதைய்யா அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே வைத்திக்கிரார்கள்.
    
     ஆக இது போன்ற ஒரு இயக்கம் நடந்து கொண்டே இருக்கும். அதைப் பெரியோர்கள் தான் பார்த்தார்கள். இதை மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
     ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
            உன்னமுடி யாஅவற்றின்
      ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
            உற்றகோ டாகோடியே
      திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
            சிவஅண்டம் எண்ணிறந்த
      திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சக்தி சத்தர்தம்
            சீரண்டம் என்புகலுவேன்
      உருவுறும்இவ் வந்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
            உருசிறு அணுக்களாக
      ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
            ஒருபெருங் கருணை அரசே
      மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
            வரந்தந்த மெய்த்தந்தையே
      மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
            வல்லநட ராஜபதியே.
    திருஅருட்பா ஆறாம் திருமறை – நடராஜபதி மாலை – கவி எண் 1359
                ஆக அந்த இடத்தில் நடனமாடும் என்று சொன்னார். அதை மேலும் சொல்லும்போது உறுசிறு அணுக்களாக ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணை அரசே என்று சொல்வதிலிருந்து அங்கிருந்து அந்த அணுக்கள் ஒரே அண்டங்களாக இருக்கிறது என்ற இரகசியத்தை வெளிப்படுத்துவார். அதேமாதிரி இரகசியத்தை மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்.
                பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
                      பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
      வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
                      மலையளவும் கடலுளவும் மணலும் வானும்
      ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
                      உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
      ஆராலும் அளப்பரிந்தென் றனந்த வேதம்
                      அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
                திருஅருட்பா முதல் திருமுறை – மகாதேவ மாலை – கவி எண் – 166
                ஆக இப்படிப்பட்ட ஒன்றை யாராலும் அறிய முடியாது.       பேராய அண்டங்கள் பலவும் பிண்ட என்றார். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதன் உண்மையை தெரிந்து  கொள்ள முடியாது. ரொம்ப தூரமானது தான் தூராதி தூரமடி, தூரமும் இல்லையடி என்பார். ஆக இதையெல்லாம் அறிவது ரொம்ப கஷ்டம்தான். ஆக இப்படிப்பட்ட விஷயத்தை எப்படி அறிந்துகொள்வது? ஞானிகள் ஒன்றும் கஷ்டப்படாதே என்பார்கள்.
    
     மகான் மாணிக்கவாசகரை கூப்பிடுகிறோம். மகான் அகத்தீசரை கூப்பிடுகிறோம். இன்னும் பல ஞானிகளை கூப்பிடுகிறோம். அவர்களை பூஜை செய்கிறோம். இவ்வளவு விஷயத்தையும் எப்படி ஐயா தெரிந்து கொள்வது என்பான்? நீ என்ன தெரிந்து கொள்வது, அவர்கள்தான் அருள் செய்கிறார்கள். ஞானிகள் அருள் செய்கிறார்கள். இதை மகான் திருமூலர் சொல்வார்,
     மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
      மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
      ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
      பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே.
    திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 131
               
                ஆக இந்த மாதிரி இயக்கம் நடந்து கொண்டிருக்கலாம்.
     ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே – அதுபோன்ற காட்சிகளை காணுகிறவர்கள் நிலை உயர்ந்திருக்கிறார்கள் என்று பொருள். ஆக எல்லாம்வல்ல கடவுள் எப்படியிருக்கிறான்? அங்கே ஆடுகின்றான். இப்பொழுது மகான் மாணிக்கவாசகர் சொல்வதைப் பார்ப்போம்.
      தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி – எல்லா உயிரையும் அவனுக்குத் தெரியும். அவனுக்கு தெரியாத உயிரே இல்லை. ஏனென்றால் அவன் தானே படைத்தான் அல்லது அவள் தான் படைத்தாள். பல்லுயிர் என்றால் பல உயிர் என்று அர்த்தம். முன்பே சொல்லவில்லையா? எண்பத்து நன்கு லட்சம் வகை ஜீவராசிகள் உள்ளது. எல்லா உயிரையும் அவனுக்குத் தெரியும்.
     பூனைக்கு ஒரு குணமிருக்கும், யானைக்கு ஒரு குணமிருக்கும், எலிக்கு ஒரு குணமிருக்கும், புலிக்கு ஒரு குணமிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குணமிருக்கும். எறும்பு என்ன செய்யும்? ஏழாவது உப்பரிகையில் (மாடியில்) முன்னூறு அடிக்குமேல் உள்ள இடத்தில் சர்க்கரையை தூவினால் முன்னூறுக்கு அடிக்கு கீழே இருந்த எறும்பு அங்கே வந்துவிடும்.
     ஆக அவ்வளவு ஈர்ப்பு சக்தி. ஆக ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குணமுண்டு. எல்லா உயிரையும் தெரியும், எல்லா மனிதனைப் பற்றியும் தெரியும். எல்லாம்வல்ல இயற்கை கடவுளின் இயக்கம்தான் இந்த உலகம் என்றும் அவன் எல்லா உயிர்களின் குணங்களையும் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதை மகான் மாணிக்கவாசகர், பல்லுயிரெல்லாம் பயின்றனனாகிஎன்பார்.
     அவனுக்குத் தெரியாத உயிரினம் இருக்காது. அவன் என்ன செய்கிறான்? பயின்றனனாகி என்பார். நம்மோடு கலந்திருக்கிறான். நம்மோடு சார்ந்திருந்து இயங்குகின்றான். ஆணாக இருந்து இயங்குகின்றான், பெண்ணாக இருந்து இயங்குகின்றான், புலி, சிங்கமாக இருந்து கொண்டு இயங்குகின்றான். மென்மையான முயலாக இருப்பான். மானாக இருப்பான். மயிலாக இருந்து ஆடிக்கொண்டிருப்பான். அவன் ஆடுகின்ற இந்த ஆட்டத்தை ஞானிகள் பார்க்கின்றார்கள்.
     உலகத்தில் கரகாட்டம் ஆடுவார்கள். அதைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். இன்னும் காவடியாட்டம் , பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்றெல்லாம் ஆடுவார்கள். அதைக் கண்டு மற்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் ஆக ஆடுதல் என்பது அவனால் வந்தது.
     அவன் ஆடினான், யாருக்கு? ஞானிகளுக்கு மட்டும். புருவமத்தியில் சுழிமுனைக் கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அவன் ஆடிக் காட்டினான். அது சொல்லொண்ணா பேரானந்தத்தை தரும். ஆக ஒரு இயக்கம் இருக்கும்போதே நிலையானவற்றை செய்து கொள்ள வேண்டும் என்பது ஞானிகளின் கருத்து. மனிதர்களுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. மற்றவற்றிற்கெல்லாம் ஐந்தறிவுதான். ஏன் உனக்கு ஆறறிவை வைத்திருக்கிறான்? புருவமத்தியை புரிந்து கொள். பத்தாம்வாசலாகிய புருவமத்தியை நீ புரிந்து கொள்வதற்காகத்தான் உனக்கு ஆறறிவை வைத்தான். வேறு எந்த ஜீவராசிகளுக்கும் ஆறாம் அறிவு இல்லை.
     ஆண், பெண் அத்தனைப் பேருக்கும் உள்ளே ஜோதியிருக்கிறது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரும் சொல்லித்தரவில்லை. பெண்களுக்குள்ளும் உண்டு. ஆண்களுக்குள்ளும் உண்டு. வைராக்கியமில்லை. ஏன் ஞானிகளுக்கு மட்டும் இருந்தது? ஏன் நமக்கு இருக்கக் கூடாது? இதற்கெல்லாம் காரணம் நம்முடைய உணவு சரியில்லை.
     ஒரு உயிரைக் கொன்று அதை உணவாக சாப்பிடுவான். அறிவு வேலை செய்யாது. ஒரு உயிரைக் கொன்று சாப்பிடும்போது அறிவு வேலை செய்யாது. அதேசமயத்தில் பொருள் பற்றுக்கொண்டு பேராசைப்பட்டவனாக இருந்தாலும் அறிவு வேலை செய்யாது. அறிவு மழுங்கிப்போகும். அறிவு மழுங்க, மழுங்க நம்முடைய ஆறறிவு தீமைக்கே செயல்படும், நன்மைக்கு செயல்படாது.
     ஆக மனிதனுக்கு ஆறறிவை தந்ததே உள்ளே உள்ள ஜோதியை காண்பதற்காகவும், மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்காகவும்தான். எல்லாம்வல்ல இயற்கை முத்தொழில் தான் செய்யும். அவை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற ஐந்தொழிலையும் செய்வார்கள். ஆக அற்புதமான வல்லமை இது.
     அந்த மனிதனுக்கு ஆறறிவை தந்ததே உள்ளே உள்ள ஜோதியை காண்பதற்காகவும், மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்காகவும்தான். எல்லாம்வல்ல இயற்கை முத்தொழில் தான் செய்யும். அவை ஆக்கல், காத்தல், அழித்தல். ஆனால் அந்த இயற்கையை வென்றவர்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்வார்கள். ஆக அற்புதமான வல்லமை இது.
     அந்த வல்லமையைப் பெறுவதற்கு நாம் எந்த கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்? பட்டினி கிடக்க வேண்டுமா? அவசியமில்லை, நன்றாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.
     ஊர் ஊராக சுற்ற வேண்டுமா? அதுவும் தேவையில்லை.
     ஏதாவது காவி உடை தரித்தல் உண்டா? அதுவும் அவசியமில்லை.
    
     மான்தோல் ஆசனம்? புலித்தோல் உண்டா? அதுவும் அவசியமில்லை.
     மான்தோல் ஆசனம்? புலித்தோல் ஆசனம்? அது குப்பை அவசியமில்லை.
     அப்படியென்றால் என்னதான் அவசியம்? காலையில் பத்து நிமிடம் ஞானிகளை அழைத்து சித்தர்கள் போற்றித் தொகுப்பை படிக்கிறோம். ஆசான் அகத்தீசரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குகிறோம். பெண்கள் வெளியில் தெரியாமல் இரகசியமாய் வணங்கி பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய பூஜை செய்ய அவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஞானிகளை பூஜை செய்ய, பூஜை செய்ய அறிவு வரும். கல்விக்கடலாக இருக்கக்கூடிய ஞானிகளை வணங்கும்போதுதான் நல்லது, கெட்டது தெரியும். நன்மை, தீமையைப் பற்றி அறிவதற்கே ஆசான் ஆசி வேண்டும். நம்மிடமுள்ள குணக்கேடு நமக்குத் தெரியாது. நம்மிடம் பொறாமையிருக்கிறதா? வஞ்சனையிருக்கிறதா? ஏன் போட்டு உழட்டிக் கொண்டிருக்கிறோம் என்றே தெரியாது. ஆக இந்த விஷயமெல்லாம் ஞானிகளிடம் கேட்டுத்தான் பெறமுடியும். ஆக நம்முடைய குணங்களையெல்லாம் எல்லாம்வல்ல இயற்கைக் கடவுள் அறிந்திருக்கிறான். ஆக தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி என்றார். தில்லை என்றால், பழமையான ஊர் என்றும் ஆடிய திருவடி – ஆடுதல், பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி – எல்லா உயிர்களைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். ஆக நாம் விரும்பினால், அழைத்தால் அவன் அருள் செய்வான். அவன் நம்முள் இருக்கிறான். பின்பு ஏன் நமக்கு விளக்கமாக தெரியவில்லை? நல்ல சிந்தனையில்லை, பக்தியில்லை. பக்தி இருக்க இருக்கத்தான் அவன் நம்முள்ளே இருப்பதை அறிய முடியும். அப்படி அவன் நம்முள் இருந்தாலும் அவனை இனம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி இனம் கண்டுபிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? ஞானிகள் அருளிய திருவாசகம், திருஅருட்பா, திருமந்திரம் போன்ற நூல்களை படிக்கின்றோம். ஞானிகள் எல்லாம் இயற்கையை வென்றவர்கள். ஞானிகள் எல்லா இயற்கையை வென்றதினால் அவர்கள் நூலைப் படிக்கின்றோம். அவர்கள் நூலை படிக்கும்போது தான் நாம் யார் என்றும், நம்மிடம் என்ன குணக்கேடு உள்ளது என்றும் அறியமுடியும்.
     ஓகோ, நம்மை எல்லாம்வல்ல இயற்கை ஆட்டிப்படைக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வு ஞானிகளின் நூலை படிப்பதால் வரும். இதை மகான் திருமூலர் சொல்வார்.
     உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
      உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
      உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
      உள்ளம் அவனை உரு அறியாதே.
    திருமந்திரம் – திரோபவம் – கவி எண் 431
               
                உள்ளத்து ஒருவனைமனதில் இருக்கிறான், உள்ளுறு சோதியை – சோதி வடிவாகவும் இருக்கிறான். உள்ளம் விட்டோரடி அடி நீங்கா ஒருவனை – இந்த மனதை விட்டு ஓர் அடிகூட நகரமாட்டான்.  உள்ளமும் தானும் உடனே இருக்கினும் – கடவுளும், நாமும் இருந்தாலும், உள்ளம் அவனை உருவு அறியாதே – மனது அவனின் உருவத்தை தெரிந்து கொள்ளமுடியாது.
     ஆக அவனைப் பற்றி புரிந்து கொள்ள முடியாதா? சிந்தனை வளருகிறது. பக்தி வளருகிறது. சிந்தனை வருகிறது. தெளிவு வருகிறது. தெளிவு வந்தால் அறிவு வந்தது. தெளிவும், அறிவும் ஒன்றுதான். ஆக அப்படியே மெதுவாகத்தான் போகவேண்டும். ஆக மெதுவாக சென்று அதிலிருந்து விடுபடுகின்றோம். நம்முடைய தோற்றம் சரியில்லை. நம் உடம்பு காமதேகம். தாய், தந்தையால் வந்த இந்த காமதேகத்திற்கு புத்தி கீழ்நோக்கித்தான் இருக்கும். ஆனால் இந்த உடம்பை விட்டாலும் வேறு கதியில்லை. அதேசமயத்தில், இந்த உடம்பின் குணமும் சரிப்படாது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
     இதை நீக்க நீங்கள் என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த உடம்பின் இயல்பு இப்படித்தான் இருக்கும். அதற்காக யாரும் சோர்வடைய வேண்டியதில்லை. இந்த உடம்பின் போக்கிலேயே போகவேண்டும். மனைவியிடம் அன்பு காட்டு, தினம் தினம் தியானம் செய், நம்மை நோக்கி வருகின்ற விருந்தினரை உபசரிக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நல்ல சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தினம் திருமந்திரம் படிக்க வேண்டும்.
     இப்படியே தினந்தினம் செய்து கொண்டிருக்க வேண்டும். இப்படியே போகப்போக அந்த எல்லைக்கு போய்விடலாம். நாம் படிப்பது எல்லாம் ஞானிகள் அருளிய நூல்கள் அல்லவா? இவற்றையெல்லாம் எல்லாம்வல்ல இயற்கைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பார்.
     ஆக சிந்தனை வளர்ந்துவிட்டது பக்தியால், தெளிவு வந்து விட்டது. திருவருள் துணையால், ஆக இங்கே அருள் வந்துவிட்டது. இங்கே அருள் என்பது நல்ல மனம், அவர்களுக்கு அல்லல் இல்லை. ஆக நல்ல சிந்தனை வந்தபின் அருள் வந்துவிட்டது. அருள் வந்தபின் தீமை செய்யமாட்டான். எவ்வுயிர்க்கும் இடையூறு செய்யமாட்டான். பேராசை அற்றுப்போகும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
      அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
      மல்லல்மா ஞாலம் கரி.
    திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் 245
                துன்பம் இல்லை, அருளைப் போற்றுகின்ற மக்களுக்கு துன்பம் இல்லை. அருள் என்றால் என்ன? நல்ல சிந்தனையாக இருந்து செயல்படுவதுதான் அருள். நல்ல சிந்தனை திருவருள் துணையால் வரும். திருவருள் துணையால் நல்ல சிந்தனை வந்தது. இப்பொழுது அந்த குறளைப் பார்ப்போம்.
      அல்லல் அருளாள்வார்க்கு இல்லை – அருளைப் போற்றுகின்ற மக்களுக்கு, ஆளுதல், போற்றுதல்.
      இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலங் கரி – வளி என்றால் காற்று. காற்றால் இயங்கங்கக்கூடிய, மல்லல்மா – வளப்பம் பொருந்திய காற்று. ஆக இப்படிப்பட்ட உலகமே இதற்கு எடுத்துக்காட்டு என்று சொல்வார். அருள்செல்வம் என்ன கடைச்சரக்கோ? இல்லை. ஆடு, கோழி வெட்டி அருள் சேர்க்கமுடியுமா? அப்படி செய்தால் வந்தது சனியன் என்பார். ஆக அருளை சேகரிக்க வேண்டும். அருளை சேகரிப்பதற்கு உபாயம் என்ன? ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்வார்.
      அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
      பூரியார் கண்ணும் உள.
    திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் 241
                எத்தனை செல்வம் வந்தாலும் என்ன? அருட்செல்வத்தை சேகரிக்க வேண்டும். அது திருவருள் துணையால் தான் கிடைக்கும். அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் எப்படி பெறுவது அதை? அதை பெறுவதற்கு என்ன உபாயம்? ஒரே உபாயம் தயைசிந்தைதான். அருளைப் போற்றுகின்ற மக்களுக்கு துன்பமில்லை. இதற்கு காற்றால் இயங்கக்கூடிய உலகமே சாட்சி என்பார்.
     இங்கே அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்பார். ஏனென்றால் அது பிறவித்துன்பத்தை மாற்றும். இந்த அருளுக்கு அறம் என்ற பொருள் உண்டு. அறிவு என்ற பொருள் உண்டு. அந்த செல்வத்தைப் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட அருட்செல்வத்தை அணு, அணுவாகத்தான் பெறலாம். கடுகு, கடுகாக சேகரிக்கலாம். மிளகு அளவாகவும் சேகரிக்கலாம். புளியங்கொட்டை அளவும் சேகரிக்கலாம். வசதி, வாய்ப்புள்ள மக்கள் என்ன செய்வார்கள்? கடுகு, கடுகளவாகவே போவார்கள்.
     ஆக அந்த செல்வத்தை கடுகு, கடுகளவாகவே சேகரிக்கலாம். எப்படி? நல்ல சிந்தனையால் ஞானிகளின் மீது பக்தி செலுத்துகிறான். மாணிக்கவாசகா, திருமூலதேவா என்கிறான். தாயுமானசுவாமிகளே, இராமலிங்கசுவாமிகளே என்கிறான். பட்டினத்தார் ஐயா, பத்ரகிரியார் ஐயா என்கிறான். திருஞானசம்பந்தர் ஐயா, திருநாவுக்கரசர் ஐயா என்கிறான். பதஞ்சலி முனிவா, அருணகிரிநாதா என்கிறான். இப்படியெல்லாம் ஞானிகளை பக்தியோடு அழைக்கும்போது அருள் சேர்கிறது. ஆசான் அருள் கிடைக்கிறது. இதை ஆசான் திருவள்ளுவப் பெருமான் சொல்வார்,
     அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகல்.
    திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் 243
                அப்பப்பா அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை – அந்த அருள் எப்படி சேர்ந்தது? ஞானிகளின் திருவடியை தொடுகிறான் மானசீகமாய். அய்யனே! நீங்கள் எல்லாம் பெரியவர்கள் என்று போற்றி துதிக்கிறான். இப்படி செய்தவுடன் அருள் சேர்ந்து விட்டது. அதனால், அங்கே நல்ல சிந்தனை வந்துவிட்டது, அருள்சேர்ந்து விட்டது. தயைசிந்தை வந்துவிட்டது அருள் சேர்ந்து விட்டது. பக்தி வந்தது அருள் வந்தது. பண்பு வந்தது அருள் சேர்ந்தது. சிறப்பறிவு வந்தது அருள் சேர்ந்து விட்டது.
     அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை, என்ன இல்லை? இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல், இருள் என்றால் நரகம், அவர்களுக்கு இருள்சேர்ந்த இன்னா உலகம், துன்பமான உலகம் இல்லை. ஆக அருள்சேர்ந்த மக்களுக்கு இருள் இல்லை. அப்ப இருள் என்பது என்ன? அறியாமையா? அது பெண்ணா? இவையெல்லாம் இல்லை. இருள் என்பது காமம். நாம் வணங்குகின்றவன் காமமற்றவன். மாணிக்கவாசகா என்று சொன்னாலே அருள் சேர்ந்துவிட்டது. மாணிக்கவாசகா! நீர் எல்லாம் பெரியோர் ஐயா, என்னையும் ஏற்றுக்கொள் என்று சொன்னால் அருள் வந்துவிட்டது. அருள்சேர்ந்த மனம் வந்துவிட்டது. ஆக இதற்கு என்ன செய்ய வேண்டும்? சான்றோர்களின் நட்பும், அவர்கள் மீது பக்தியும் வேண்டும். ஆக
     அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு கில்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகல்.
    திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் 243
                அப்படிப்பட்டவர்களுக்கு நரகம் இல்லை. நரகம் என்றால் என்ன? பேராசை தான் நரகம். பொறாமைதான் நரகம், வஞ்சனையே நரகம். பொல்லாத காமமே நரகம். புலால் உணவே நரகம். உயிர்க்கொலை செய்வதே நரகம். ஜாதிதுவேசம் செய்வதே நரகம். மற்றவரை மதியாமையே நரகம். புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமையே நரகம். அவன் சான்றோன் நட்பு தேவையில்லை என்பான். ஆக இப்படி நரகம் இருக்கும். ஆக அருள்சேர்ந்த மக்களுக்கு துன்பம் இல்லை. இருள்சேர்ந்த மக்களுக்கு துன்பம் உண்டு. எப்படி விடுபடுவது இதிலிருந்து? சான்றோர்கள் நட்பு இருக்க வேண்டும்.
     ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள் அருள் சேர்ந்த மக்கள் இவர்களைப் பார்த்தாலே உங்களுக்கு அருள் சேர்ந்துவிடும். என்னையா? அவ்வளவு பெருமை? பலஜென்மங்களில் புண்ணியங்கள் செய்த மக்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தே அருள் சேர்த்துக் கொள். அருள் எப்படி இருக்கும்? ஒரு காரியம் நல்லபடி இருக்கிறது, அங்கே அருள் இருக்கும். அங்கே அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருள் இருக்கிறது. ஒரு மகிழ்ச்சியான காரியம். உதாரணமாக ஞானிகள் நூல் படித்துக் கொண்டிருக்கிறான். அப்படியென்றால் அங்கே அருள் இருக்கிறது. சான்றோர்கள் ஒன்று பட்டு இருக்கிறார்கள். அங்கே அருள் இருக்கிறது. பக்தியுள்ள இதயமே அருள். ஆக அருளை சேகரிக்க வேண்டும். ஆக அருள் சேர்ந்த நெஞ்சம் வேண்டும்.
     மகான் மாணிக்கவாசகர், அருளால் இயங்கிக் கொண்டிருக்கும். இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்கிறார். தில்லைமூதூரில் அருளால் இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆக அந்த அருள் இயக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆக அதற்கு தான் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். அந்த இயக்கம் ஆடிக்கொண்டே இருக்கும். ஆடிக்கொண்டிருக்கும்போதே அந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே நம்முடைய தொடர்பு கடவுளிடம் இருக்கும்போதே அருளை சேகரித்தால் அந்த காட்சியைக் காணலாம்.
     தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி – அப்படிப்பட்ட கடவுள் தன்மையை ஆசான்தான் சொல்வார். அருளைச்சேர்த்த மக்கள்தான் இதைப்பற்றி பேசமுடியும்.
     எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி – இது இரண்டாவது வழி கணக்கில் அடங்காதது. இங்கே பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி என்பார். இது அற்புதம். எல்லா உயிரையும் அவனே படைத்திருக்கிறான், அறிந்திருக்கிறான். அந்த இயக்கமும் தலைவனுடைய இயக்கம்.
    
     எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி – எழில் என்றால் அழகு. கணக்கில் அடங்காத குணங்கள் உயிர்களுக்கு இருக்கு. மீனுக்கு ஒரு குணமிருக்கும். நாய்க்கு ஒரு குணமிருக்கும். அந்தந்த உயிருக்கு ஒரு குணமிருக்கும். இதை பல்குணம் என்பார். உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுடைய குணங்களெல்லாம் அவனுக்குத் தெரியும், கடவுளுக்குத் தெரியும்.
      மண்ணும் விண்ணும் வானோருலகும் எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி – அவனே அங்கு மயிலாக இருப்பான். மயிலாக இருப்பதும் ஒரு அழகு. முயலாக இருந்து தாவித்தாவி குதிக்கும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதேசமயத்தில் இந்த உலகத்தில் அழகு என்றால் அது  மலர்கள், மலர்களாக இருந்து அழகு தந்து கொண்டிருக்கும். பெண்மையாக இருந்து அழகு தருவான். ஆணாக இருந்து அழகு தருவான். எல்லா உயிரினங்களும் முதலில் அழகாக இருந்து பின்பு நலிவடைந்துவிடும். இதுவும் அவனே.
     உயிரற்ற, உணர்ச்சியற்ற ஜடப்பொருளாக இருந்தால் அழகு அப்படியே இருக்கும். ஒரு பொம்மை எப்போதும் அழகாக இருக்கும். காரணம் அது ஒரு உயிரற்ற ஜடப்பொருள். ஆனால் நம்முடைய உடம்பு எல்லாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது தான். குறிப்பட்ட காலம் வரை மஞ்சள் வெயில் போன்று அழகாக இருக்கும். நீங்கள் பார்க்கலாம் மாலைப்பொழுதில் மஞ்சள் வெயில் அழகாக இருக்கும். புரட்டாசி மாதம், பீர்க்கன்பூ பார்க்க அழகாக இருக்கும். ஆனால் பிறகு வாடிவிடும். ஆக எல்லா குணங்களும் அவனுக்கு தெரியும். எல்லா உயிர்களையும் படைத்த்ருக்கிறான்.
     தேனுக்கு உள்ள சுவை அவனுக்குத் தெரியும். வேம்புக்கு உள்ள கசப்பும் அவனுக்கு தெரியும். தாவர வர்க்கத்தில் உள்ள எல்லா வகையும் அவனுக்கும் தெரியும். மிளகாயின் காரம் அவனுக்குத் தெரியும். புளிக்கு உள்ள புளிப்பு அவனுக்குத் தெரியும்.
      ஆக எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி – பல்வேறு தாவரங்கள் புல்லாகவும், செடியாகவும், கொடியாகவும், மரமாகவும் இருக்கும். அவ்வளவையும் புரிந்து கொள்வான். மாம்பழத்திற்கு உள்ள சுவை வேறு. வேப்பம்பழத்திற்கு உள்ள சுவை வேறு. ஒவ்வொரு கணிகளுக்கும் என்னென்ன சுவைக் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். படைத்தவன் அல்லவா பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி இங்கே எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி – எழில் பெற விளங்குதல் என்றால் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான். தேனாக இனிப்பான், அங்கே வேம்பாக கசப்பான், இங்கே மாம்பழமாகவும், பலாசுளையாகவும் இருந்து சுவை தருவான். இவற்றையெல்லாம் மற்ற ஜீவராசிகள் கண்டு கண்டு களிப்பதையும், பார்த்து சுவைப்பதையும் கண்டு ரசிப்பான். அங்கே பலா சுளையாக இருந்து சுவை தருவான், வேம்பாக இருந்து கசப்பு தருவான், அங்கே மாம்பழமாகவும், வாழைக்கனியாகவும் உயிரினங்கள் சுவைப்பதைப் பார்த்து இரசிப்பான். அளவில்லா மகிழ்ச்சியும் அடைவான்.
`     என் பிள்ளைகளே, சுவைத்துப் பாருங்கள் நான் உருவாக்கியிருக்கிறேன், கீரை வகைகளையும் காய்கறி வகைகளையும் உருவாக்கியிருக்கிறேன். சாப்பிட்டு பாருங்கள். இந்த நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், சுண்டைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் இவைகளை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் வெளிநாட்டு காய்கறிகளான காளிபிளவர், முட்டைகோஸ், காரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற வெளிநாட்டுக் காய்கறி எல்லாவற்றையும் கொண்டு வந்து குவித்திருக்கிறேன் சாப்பிட்டு சுவைத்துப் பாருங்கள் பிள்ளைகளே! எண்ணில் பல்குணம் காரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற வெளிநாட்டுக் காய்கறி எல்லாவற்றையும் கொண்டு வந்து குவித்திருக்கிறேன். சாப்பிட்டு சுவைத்துப் பாருங்கள் பிள்ளைகளே எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி – ஆக அங்கே எப்படியிருக்கிறான்?
     அங்கே சுவையாகவும் இருக்கின்றான், தோற்றமாக இருக்கின்றான், எல்லா உயிரினங்களையும் அவன் படைத்துவிட்டு எல்லோரும் சுவைப்பதைக் கண்டு ரசிப்பான் அவன். அளவில்லா மகிழ்ச்சியடைகின்றேன், சாப்பிடுங்கள் என்கிறான். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் குறையவே குறையாது என்கிறான். இந்த உலகம் தோன்றியதிலிருந்து இந்த மக்களும் மற்ற ஜீவராசிகளும் சேர்ந்து உண்டு அழித்துப் பார்க்கின்றது. ஆனால் அழிக்கவே முடியவில்லை.
     வித்தாகி முளையாகி விளைவ தாகி
                      விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
      கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
                      குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
      சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
                      சதாநிலையாய் எவ்வுயிருக்குஞ் சாட்சி யாகி
                முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
                                முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
திருஅருட்பா – மூன்றாம் திருமுறை – மகாதேவமாலை – கவி எண் 115
                என்றார். வித்தாகி முளையாகி விளைவ தாகி – வித்தாகி – நாம் பார்க்கக்கூடிய விதை, அதற்குள்ளே முளைக்கக்கூடிய சக்த்தியிருக்கின்றது. அந்த விதைக்குள் முளையும் இருக்கும். கீழே வேரும் இருக்கும். என்ன ஆச்சரியம்? ஒரு விதையை தோற்றுவித்த கடவுள் அது முளைப்பதற்கு தன்மையும், வேரும் வைத்திருப்பான். ஆக எல்லாம்வல்ல இயற்கை தில்லைமூதூர் ஆடிய திருவடி எப்படி இயங்குகிறது என்று பார்க்கவேண்டும். வித்தாக இருக்கிறான், முளையாக இருக்கிறான், விளைவிக்கும் பொருளாக இருக்கிறான். அவன் நீராக இருக்கிறான், நிலமாக இருக்கிறான், காற்றாக இருப்பான். இப்படியெல்லாம் செய்துவிட்டு,
     கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத – என்று இருந்து செயல்படுவான். ஒரு மரத்தில் நூறு மாங்காய் கூட கொத்துக் கொத்தாக இருக்கும். கொத்தவரங்காய் எல்லாம் பார்த்தால் கொத்துக் கொத்தாக இருக்கும். இப்படிப் பல வகையான தாவரங்கள் பார்த்தால் கொத்துக்கொத்தாக இருக்கும். இதையே கொத்தாகிப் பயனாகிக் கொள்வோனாகி என்பார்.
     பின்பு அவற்றையெல்லாம் விளைவிக்கும் பொருளாகி, அப்புறம் விதையாகி, விளைவிக்கும் தன்மையாகி, அதனுள் வேர் ஆகி, தூராகி, விளையும் முறையாகி பின்னே ஒன்றுக்கு பத்தாக விளைந்து கொத்துக்கொத்தாக விளைந்தும், கொத்துக்கொத்தாக மலர்களாகவும் இருக்கும். பார்ப்பதற்கு இப்படிப்பட்ட அற்புத காட்சி நடந்து கொண்டே இருக்கும். அந்த காட்சியை தான் தில்லைமூதூர் ஆடிய திருவடி என்றார். இப்படிப்பட்ட காட்சியை மாணிக்கவாசகர் காண்கின்றார். ஏ இயற்கைக் கடவுளே! என்னே அற்புதம்! நான் கண்டு அளவில்லா மகிழ்ச்சியடைகின்றேன். அந்த ஆட்டத்தைப் பாடுகின்றார்.
     அந்த இயக்கம் மலர்களாக, மான் கூட்டங்களாக, வன்புலியாக, மென்மையான குணங்குளுடைய ஆடாக இருப்பதும் அவன்தான். அப்பப்பா என்ன இயல்பு! என்ன இயற்கை! இந்த காட்சியை எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி என்றார். இவற்றையெல்லாம் ஞானிகள் அமைத்து தருகின்றார்கள். அதே இயக்கத்தைப் பற்றி மேலும் சொல்வார்.
      தில்லை மூதூர் ஆடிய திருவடி
      பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி
      எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி 
      மண்ணும் விண்ணும் வானோருலகும்
      எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி  இந்த பூலோகத்தில் மட்டுமல்ல, வானுலகம், தேவலோகம் என்று ஒன்று இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பேரானந்தத்தில் இருப்பார்கள். தேவர்களுக்கு கீழ் உலகம் ஒன்று இருக்கிறது. என்னய்யா இந்த உலகத்தில் தேவலோகம் என்றால் என்ன? கீழ்லோகம், மேலோகம் என்றால் என்ன? கொடிய பாவம் செய்து பல உயிர்களைக் கொன்று அவ்வுடம்பை உண்பவன் பொல்லாத பிணியையும், வறுமையும் சூழ்ந்து தடுமாறிக் கொண்டிருப்பான். இது கீழ்லோகம்.
     அவன் புண்ணியம் செய்து, உடல் ஆரோக்கியமும், அழகான மனைவியும், நல்ல பிள்ளைகளுடனும், நல்ல ஆரோக்கியமான இடத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவான். இது மேலான உலகம்.
     நாளைக்கு பிடி சோற்று உணவிற்கு எங்கே போவோம்? உடை இல்லையே, உடை கிழிந்துவிட்டதே, மாற்று உடை எங்கே? என்று ஏங்கிக் கொண்டிருப்பான். இப்படி ஏங்குபவனே கீழ்லோகத்தில் இருப்பவன் என்பான். நோய்வாய்ப்பட்டு ஐந்து, ஆறு வருடம் படுத்துக் கொண்டிருப்பான். இது நரகம், கீழ்லோகம்.
     அங்கே சாந்தமே வடிவான மக்கள், பண்புள்ள மக்கள், உடல் ஆரோக்கியம் வறுமையில்லாத வாழ்வு, தொட்டது நல்லபடி துலங்கிறது. இவர்களெல்லாம் புண்ணியவான்கள். இப்படியொரு  உலகம். இந்த இரண்டு உலகத்தை தவிர இன்னும் ஒரு உலகம் இருக்கிறது அது மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற ஞானிகள் வாழும் உலகம். விண்ணும், மண்ணும் வானோர் உலகும் என்பார் மகான் மாணிக்கவாசகர், மகான் திருமூலரும்,
           நான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
            வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
            ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
            தான்பற்றப் பற்றத் தலைபடுந் தானே.
    திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
               
                மகான் மாணிக்கவாசகர் முதல் எல்லா ஞானிகளும் நான் அடைந்த இன்பத்தை இந்த உலகம் அடைய வேண்டுமென்பார்கள். இதற்கு என்ன உபாயம்? அது உடம்பைப் பற்றி வந்தது என்பார். நான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் – உலகம் முன்னேற வேண்டும், உலகம் அடையவேண்டும் என்பார். ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் – ஊன் இரண்டு சுழி போட்டால் உடம்பு என்று அர்த்தம். ஊண் என்றால் உணவு என்று பொருள். ஊன்பற்றி நின்ற – உடம்பைப் பற்றி நிற்கக்கூடிய இரகசியத்தை நான் அறிந்திருக்கிறேன். உணர்வுறு மந்திரம் – இந்த உடம்பைப் பற்றிய இரகசியத்தை நான் புரிந்து கொண்டேன். இதுதான் நான் நீடித்திருப்பதற்கு காரணம்.
     எல்லையில்லா பேரானந்தத்தில் இருப்பதற்கு காரணம், மரமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு காரணம். உடம்பைப் பற்றி அறிந்தேன். அவ்வுடம்பிற்குள்ளே இருக்கும் சக்தியை, பக்தி விசுவாசத்தாலும், தயை சிந்தையாலும் புரிந்து கொண்டேன். அதை நீங்களும் பெறவேண்டும் என்றார். அடுத்து மேலான மறை என்றார். மறை என்றால் வேதம். வேதம் என்பது என்ன? உடம்பைப் பற்றி அறிகின்ற சிறப்பறிவு தான் வேதம்.
     வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைபடுந் தானே – ஆக மேலான மறை என்பதை அறிந்தோம். தலைப்படுதல் என்றால் முற்படுதல் என்று அர்த்தம். அதை விரும்பி, விடாமல் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும்? விடாமுயற்சி வேண்டும். உலகநடைக்கு போகாதே, உலக மக்களிடம் இருந்து கொண்டே இரு. உலகமக்கள் நடையிலே இரு. சிந்தனையில் மட்டும் தனித்திரு என்றார். சிந்தனை மட்டும் தனித்திருப்பது என்றால் என்ன? சிந்தனை மட்டும் தனித்திருக்க என்ன உபாயம்? அது உன்னால் முடியாது. நீ அவ்வளவு எளிதாக உள்ளே புகமுடியாது. ஆனாலும் இதற்கிடையில் உள்ளே போகலாம். வியாபாரம் செய்ய வேண்டும். அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும். எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும். போகும்போதே அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! என்று சொல்ல வேண்டும்.
     அப்படி சொன்னால், அது ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம். உடம்பைப் பற்றி அறிகின்ற இரகசியம். அதுதான் மந்திரம். உடம்பே மந்திரம், உயிரே மந்திரம், அறிவே மந்திரம், முயற்சியே மந்திரம், தயைசிந்தையே மந்திரம், பக்தியே மந்திரம், பயமில்லா வாழ்வே மந்திரம், அந்த ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம். உடம்பைப் பற்றி அறிகின்ற மந்திரம். தான்பற்றப் பற்றத் தலைபடுந் தானே – விடாது முயற்சிக்க, முயற்சிக்க தலைப்படும் தானே – முற்படும் தானே முன்னேறலாம் என்று சொல்வார்.
     ஆக இவற்றையெல்லாம் பெரியவர்கள் அறிந்திருக்கிறார்கள். அறிந்து கொண்டு தான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் வந்திருக்கின்றோம். எதற்கு வந்திருக்கின்றோம்? நாம் சாப்பிட்டு தூங்குவதற்காகவா வந்திருக்கின்றோம்? நாங்கள் வெகுநூல் படித்திருக்கின்றோம். தலைவன் அருளிய நூலைப் படித்திருக்கின்றோம். படித்து படித்து வந்திருக்கின்றோம். அவர்கள் எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு நூலை எப்படி ஐயா படிப்பது? இவ்வளவு நூலை ஏன் படித்துக் கொண்டிருக்கிறாய்? அது தேவையில்லை. அப்ப என்ன தான் செய்வது? நூலே வேண்டாம் தேவையில்லை. ஆனாலும் வேண்டும். திருமந்திரத்தில் சொல்லும் போது,
      பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
      ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
      நேசித்திட்ட அன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
      றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
    திருமந்திரம் – சற்புத்திர மார்க்கம் – கவி எண் 1495
                பூசிக்க வேண்டும், திருமூலதேவா காலாங்கிநாதா என்று பூஜிக்க வேண்டும். பூசித்தல், வாசித்தல், போற்றல், செபித்திடல் என்று சொன்னார். பூஜை செய்ய வேண்டும். மனம் தடுமாறும்போது பத்து நிமிடம் திருமந்திரத்தை படிக்க வேண்டும், அருட்பா படிக்க வேண்டும்.
     பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல், ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை, நேசித்திட்ட அன்னமும் நீ சுத்தி செய்து – இதுநாள் வரை நீ சாப்பிட்டாய் அல்லவா அறுசுவை? அதை சுத்தி செய்ய வேண்டுமென்றார். இதுநாள் வரை சாப்பிட்ட உணவை சுத்தி செய்ய வேண்டும். ஞானிகள் உப்பில்லாமல் சாப்பிடுவார்கள். அது வேண்டாம். சைவ உணவை சாப்பிட்டு நேசித்திட்ட அன்னமும் நீ சுத்தி செய்து என்றார். ஆக இப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்றார். ஆக இவையெல்லாம் ஒரு பெரிய மாறுதல். ஆக வானோர் உலகம் என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் பெரியவர்கள் உலகம். அது மரணமில்லாப் பெருவாழ்வுக்குரியது. மரணமில்லாப் பெருவாழ்வு பெறுகின்ற உலகம். அதை அடைவதற்கு எடுத்த காரியத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆக உடம்புதான் முக்கியமானது. இந்த உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உடம்பை வெறும் காமதேகம் என்று நினைக்க வேண்டாம். காமதேகம் என்று நினைத்து ஏமாறவேண்டாம். மகான் திருமூலதேவர் திருமந்திரத்தில்,
      உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
      உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
      உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
      உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.
    திருமந்திரம் – சரீரசித்தி உபாயம் – கவி எண் 729
               
                என்பார். அறியாமையால் உடம்பை இழிவாக நான் நினைத்தேன், உணர்ந்தேன், உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் என்றார், மேலும்,
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!
    மகான் அழுக்கன்னிச்சித்தர் பாடல்கள் – கவி எண் 8
                என்பார். மாற்றிப் பிறக்க மருந்து எனக்கு கிட்ட வேண்டும். அதை எங்கே போய் கேட்பது? உடம்பே நமக்கு மருந்தாக, அமிழ்தமாக இருக்கும், ஆக,
      மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை

     என்றார் இங்கே.
      நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்           என்றும்
      உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
      உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்றும் சொல்வார்.
                யாருக்கு? தெளிந்த அறிவுள்ள மக்களுக்கு, நல்ல சிந்தனையுள்ள மக்களுக்கு, தயைசிந்தனையுள்ள மக்களுக்கு, உள்ளே தலைவன் உத்தமனாக இருக்கின்றான். பொல்லாத காமமாக இருந்தால்? தலைவன் எப்படியிருப்பான், உத்தமனாகவா இருப்பான்? அவன் வஞ்சகனாக மாறிவிடுவான்.
     உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
     உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்று –  அங்கே நல்ல மனமிருந்தது.
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
      ஓம்புதல் – போற்றுதல், உடம்பை நான் காப்பாற்றி கொள்கிறேன். இந்த உடம்பை என்ன செய்ய வேண்டும்? உடம்பு அல்லது தேகம் இருக்கும்போதே நல்லகாரியம் செய்து கொள்ள வேண்டும். பெரியவர்கள் அதைத்தான் சொல்வார்கள். மகான் திருவள்ளுவரும்,
      நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
      மேற்சென்று செய்யப் படும்.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 335
               
                நாச்செற்று – நா அடங்கும்போது பேசமுடியாத சூழ்நிலை வரும். இவன் நினைக்கின்றான். ஐயோ! அவனிடம் பத்து இலட்சம் கொடுத்திருந்தோம். பிள்ளைகளிடம் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றான், சொல்லமுடியவில்லை. அப்பா என்று கண்ணீர் வர அழுகின்றான். என்ன செய்வான்? பிள்ளைகளை கூப்பிடுகிறான். அப்படியே கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. என்னப்பா சொல்லுங்கள் என்கிறான் மகன்.
     எங்கேயப்பா சொல்வது எனக்கு வாய் வரவில்லையடா கண்ணு. இந்த இடத்தில் இவ்வளவு பணம் கொடுத்திருந்தேன் அப்பா, பிள்ளைகளே அந்த பணம் உங்களுக்கு பயன்பட வேண்டுமென்று நினைக்கிறேன். பிள்ளைகளே என்னால் பேசமுடியவில்லை. இவனைப் பார்த்து கடவுள் சிரிப்பான். நல்லபடியாக இருக்கும்போதே பேசும்போதே நீ என்னை வணங்கவில்லை. என் நாமத்தை சொல்லவில்லை. இப்ப வாய் அடங்கிப் போனதடா, நாக்கு மட்டுமா அடங்கிவிட்டது? செவியும் கேட்கவில்லை.
      அவனைப் பார்த்து அப்பா, அப்பா என்கிறான். ஒன்றும் எடுபடவில்லை. அவன் காதில் எதுவும் விழவில்லை. கண்ணீர் மட்டும் கண்ணில் வந்து கொண்டிருக்கிறது. கண் பஞ்சடைந்து விட்டது. மகனைப் பார்க்க நினைக்கிறான், பார்வை இல்லை. கண் பஞ்சடைந்து விட்டது. காதும் கேட்கவில்லை. வாயும் பேசவில்லை. ஆக காலம் இருக்கும்போதே செய்துகொள்ள வேண்டும்.
     நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
      மேற்சென்று செய்யப் படும்.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 335
     நரை, திரை, மூப்பு வந்து கொண்டேயிருக்கிறது. பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுக் கொண்டே இருப்போம் ஒன்றும் செய்ய முடியாது. எதிர் தாக்குதல் தாக்க வேண்டும். உனக்கு இந்த நிலைமை வருவதற்கு முன்னே நீ எதிர் தாக்குதல் தாக்கிவிடு என்பார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். ஆசான் திருவள்ளுவப்பெருமான் இதை அறிந்திருக்கின்றார். அவ்வாறு அறிந்து கொண்டதால் நமக்கு சொல்கிறார். உனக்கு சாவு வரும், வரத்தான் போகிறது. வருவதற்கு முன்னே நீ தாக்கு. நல்வினையை செய்து கொள். அதையும் விரைவாக செய்துவிடு. இதுதான் எதிர்தாக்குதல்.
      எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
      அதிர வருவதோர் நோய்.
    திருக்குறள் – அறிவுடைமை – குறள் எண் 429
                என்பார். வருமுன்னே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எதிரதாக் காக்கும் அறிவு என்பார். வருமுன்னே காத்துக் கொள்ளுதல். இல்லை அதிர வருவதோர் நோய் – அஞ்சக்கூடிய நோய் வராது என்பார்.
      வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
      வைத்தூறு போலக் கெடும்.
    திருக்குறள் – குற்றங்கடிதல் – குறள் எண் 435
               
                இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. நமக்கு புரியும்படியாக பேசுவார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். காய்ந்த வைக்கோல் போர் இருக்கும். அதில் தீ வைத்தால் குபு, குபு என்று தீ பிடித்துவிடும். ஆக வருமுன்னே தடுத்துக் கொள்ள வேண்டும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை – சாவுக்கு பயப்பட வேண்டும். இல்லையென்றால் எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும் என்பார்.
     ஆக காக்கப்பட்டவனுக்கு துன்பம் வராது என்பார். இதையெல்லாம் ஏன் சொல்கிறார் என்றார் நாமெல்லாம் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிழைத்துக் கொள் பிள்ளைகளே! பிழைத்துக் கொள் பிள்ளைகளே! இந்த உடம்பில் உயிர் இருக்கும்போதே பிழைத்துக் கொள். அப்போது விட்டுவிட்டால் ஏமாந்து போவாய். ஒன்றுமே உன்னால் செய்ய முடியாது. பிறகு சிந்திக்காதே,
      அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றஅது
      பொன்றுங்கால் பொன்றாத் துணை.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 36
      என்பார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க –  பிறகு என்று நினைத்து ஏமாந்து விடாதே. இப்பொழுது இளமையாக இருக்கிறோம், பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்து ஏமாந்து விடாதே. உனக்கு நிச்சயம் மரணம் வரும். மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை –  நீ நலியலாம், உடம்புக்கு நரை, திரை வரத்தான் செய்யும். நீ சாகலாம்.
     ஆனால் நீ செய்த புண்ணியம் மட்டும் உறுதியாக நிற்கும் என்பார். என்ன கருணை ஆசான் திருவள்ளுவப்பெருமானுக்கு நம்மீது? என்ன கருணை? உலக மக்களே பிழைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்று நினைக்காதீறீர்கள். ஏனென்றால் இந்த காலம் சரியில்லை.
      நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
      பெருமை உடைத்துஇவ் வுலகு.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 336
ஆக,
     அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றஅது
      பொன்றுங்கால் பொன்றாத் துணை.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 336
      நீ நலிந்தாலும், நீ செய்த புண்ணியம் உற்ற துணையாக இருக்கும். ஆக நீ பொன்றலாம். ஆனால் நீ செய்த அறம் பொன்றாத் துணையாக இருக்கும். நீ தடைபடலாம், அது தடைபடாமல் இருக்கும். இவற்றையெல்லாம் ஞானிகள் எதற்கு சொல்கிறார்கள்? நெருநல் உளனொருவன் – நேற்று நல்லபடியாக இருந்தான், இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்பார். அவன் இன்றில்லாமல் போய்விட்டான். ஆனால் உலகம் நடந்து கொண்டிருக்கிறது.
     இதை பெருமையாக சொல்வார்கள். அட என்னய்யா ஆச்சரியமாக இருக்கிறதய்யா நேற்று தானே பார்த்தோம். அவர் அங்கே பேசினார், இங்கே துடிப்பாக பேசிக் கொண்டிருந்தாரைய்யா ஏன் திடீரென்று செத்துப் போய்விட்டார்? இப்படி உலகம் இதை பேசிக் கொண்டுதான் இருக்கும். இதுதான் உலகம் என்றார். நீ இதைப் புரிந்து கொள். அறிந்தவர், உணர்ந்தவர் சொல்கிறார் இப்படித்தான் உலகம் இருக்கிறது. ஏமாந்து விடாதீர்கள்.
     உங்கள் செல்வத்தை பெரிது என்று நம்பி விடாதீர்கள். செல்வத்தை பெரிது என்று நம்பினால் ஏமாந்து போவீர்கள். அது ஒரு காலத்தில் இருக்கும் பின்பு போய்விடும். புண்ணியத்தை தேடிக்கொள் என்றார். இன்னும் என்ன ஐயா சொல்கிறீர்கள் எங்களுக்கு?
      அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்
      அற்குப ஆங்கே செயல்.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333
                 அற்கா இயல்பிற்றுச் செல்வம்நிலையில்லாத செல்வத்தை பெற்றிருக்கின்றாய், ஏ பிள்ளைகளே உங்களுக்கு சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
     உலக  மக்களே! பேரறிவாளன் நான். முற்றுப்பெற்ற முனிவன் நான் உங்களுக்கு சொல்கிறேன், கேளுங்கள். அற்கா இயல்பிற்றுச் செல்வம் – நிலையில்லாதது செல்வம். அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் – அதை பெற்றபோதே நல்ல காரியம் செய்து கொள் என்பார். ஏன் ஐயா உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு கருணை? நான் மட்டுமல்லப்பா ஞானிகள் எல்லோருக்கும் இந்த கருணையிருக்கும். யாரைய்யா கேட்கிறார்கள்? சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை. ஆனாலும் இருப்பான் அப்பா, எங்கேயோ ஒரு பண்புள்ளவன் சொல்வான், திருக்குறளைத் தொடுங்கள், கடவுளின் திருவடியை தொட்டதற்கு ஒப்பாகும். திருக்குறளைப் படியுங்கள் கடவுளுடன் பேசுவதற்கு ஒப்பானது. திருக்குறளைத் தொட்டு வணங்குவதே பக்தி என்று சொல்வார்.
     திருக்குறளைப் பாருங்கள் அது முற்றுப்பெற்ற முனிவன் அருளியது. வீட்டிற்கு ஒரு திருக்குறள் இருக்க வேண்டும். அது தெய்வம் இருப்பதாக அர்த்தம். இப்படியெல்லாம் சொல் என்கிறார்கள் ஞானிகள். எப்படியாவது பிடித்துக் கொள்ளட்டும் பிள்ளைகள். உலக மக்கள் பிடித்துக் கொள்ளட்டும். நீங்களெல்லாம் பிழைத்துக் கொள்வதற்காக சொல்கிறார்.
     இங்கே சொல்லும்போது ஐயோ இது நிலையில்லாத செல்வம், இந்த செல்வம் இருக்கும்போதே நிலையானதை செய்துகொள் என்பார். இன்னும் நமக்கு புரியும்படி நம்முடைய மொழியிலேயே பேசுவார்.
      கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
      போக்கும் அதுவிளிந் தற்று.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 332
               
     கூத்தாடுகின்ற (நாடகம் நடக்கின்ற) இடத்தில் கூட்டம் கூடுவதைப் போல உனக்கு செல்வம் சேரும். அந்த செல்வம் சேருவது போல சேர்ந்து போய்விடும். கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் – பெருஞ்செல்வம், சிறு செல்வமல்ல, பெருஞ்செல்வம். போக்கும் அதுவிளிந் தற்று – இது போல தான் போய்க்கொண்டிருக்கும். ஆக செல்வம் இருக்கும்போதே நிலையான அறத்தை அறிவுள்ளவர்கள் செய்து கொள்வார்கள் என்பார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். இதை மட்டுமா சொல்வார்? உடம்புக்கும் உயிருக்கும் சம்பந்தம் இல்லையென்றார்.
         
      குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
      உடம்பொடு உயிரிடை நட்பு.
   திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 338
     குடம்பை என்றால் முட்டை. பறவையினங்கள் முட்டையிட்டு அடைகாக்கும். அந்த பறவை ஒரு கணக்கு வைத்து அடைகாக்கும். ஓடு அங்கேயே கிடக்கும். குடம்பை தனித்து ஒழிய – ஓடு கீழேயே கிடக்கும் குருவி பறந்து போய்விடும். ஆக அப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கும் என்பார். குடம்பை தனித்து ஒழிய புள்பறந்தற்றே – புள் என்றால் பறவை. முட்டை ஓடு கீழே கிடக்கிறது. உள்ளேயிருந்து குருவிக்குஞ்சு ஓடிப்போனது. இப்படித்தான் நீ செத்துக் கிடப்பாய். உன் உடலை விட்டு ஆன்மா போய்விடும் என்பார்.
     உடம்பொடு உயிரிடை நட்பு – உடம்புக்கும், உயிருக்கும் உள்ள நட்பை புரிந்து கொள்ளடா மகனே இப்படித்தான் இருக்கின்றது. பறவைக்குஞ்சு என்ன செய்யும்? முட்டையின் உள்ளே முதிர்ச்சியடைந்தவுடன் வெளியே வந்துவிடும். ஓட்டை திரும்பிக்கூட பார்க்காது. உன் உடம்பும் இப்படித்தான் இருக்கின்றது என்பார். சாவு எப்படி இருக்கிறது என்று கேட்டான்? அதற்கு ஆசான் திருவள்ளுவப்பெருமான்.
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 339
ஏன் இதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்? சாவு வரும், சாக்காடு ஒன்று உண்டு. இந்த உண்மைகளையெல்லாம் உணர்வதற்கு ஆசான் ஆசி வேண்டும். ஞானிகள் எல்லோரும் எல்லா உயிரையும் பற்றி அறிந்தவர்கள்.
விண்ணும் மண்ணும் வானோருலகும்
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
எல்லாவற்றின் குணங்களையும் அறிந்தவன், தெரிந்தவன். நமக்கு குணக்கேடு இருக்கு, அதை நீக்கிக் கொள்ள வேண்டும். ஆசான் திருவள்ளுவரும்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை என்பார். மகான் அகத்தியரும் அதைத்தான் சொல்வார்.
பிறந்தவர்க்கு மோட்சகதி தேட வேண்டும்
பின்கலையும் முன்கலையும் சேர வேண்டும்
மறந்தவர்க்கு மறலி வந்தால் வலு யாருண்டு
வருமுன்னே வலு கட்டிக்கொள்ள வேண்டும்
அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனை செய்தால் உதவி அகண்ட வாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
         அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் – கவி எண் 89
     பிறந்தால் மோட்சகதி தேட வேண்டும். எப்படி ஐயா தேடுவது? எனக்கு மனைவி, மக்கள் இருக்கே இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளாதே. உன் மனைவியும் மக்களும் உன் கையைப் பிடித்துக் கொள்கிறார்களா? விசயம் தெரிந்தவன் மனைவி, மக்களிடம் இருப்பான்.
     அவன் ஒரு பத்து நிமிடம் இரகசியமாய் பூஜை செய்வான். இரகசியமாய் உட்கார்ந்து, ஞானிகளை எல்லாம் அழைத்து எனக்கு ஞானம் சித்திக்கணுமப்பா! நீர்தான் அருள் செய்ய வேண்டும். மனம் தடுமாற்றமாக இருக்கிறதையா! நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்பான். அப்படி கேட்டால் ஞானிகள் என்ன செய்வார்கள்? மோட்சகதி தேடவேண்டுமென்று உணர்த்துவார்கள். மோட்சகதி, முக்திநெறி, வீடுபேறு எல்லாம் ஒன்றுதான்.
பிறந்தவர்க்கு மோட்சகதி தேட வேண்டும்
பின்கலையும் முன்கலையும் சேர வேண்டும்
     இதையே ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் என்பார் ஆசான் திருமூலதேவர். மகான் கணபதிதாசர்
     ஒருபதம் தன்னைத் தூக்கி ஒருபதம் தன்னை மாற்றி என்பார். இதையே இங்கு,
பின்கலையும் முன்கலையும் சேர வேண்டும்
மறந்தவர்க்கு மறலி வந்தால் வலு யாருண்டு
          
     இதை செய்ய மறந்தால் எமன் வருவானே.
     ஆசான் திருவள்ளுப்பெருமானும்
      வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
      வைத்தூறு போலக் கெடும்.
    திருக்குறள் – குற்றங்கடிதல் – குறள் எண் 435
               
     என்பார். ஏ மறலி (எமன்) வருவானே என்ன செய்வாய்? எப்படி தடுப்பாய்? அதற்கென்ன உபாயம்?
     அறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி – ஆசான் ஞானபண்டிதனின் நாமத்தை சொன்னாலே அறம் தழைக்கும் என்றார்.
     ஆறுமுகப்பெருமான் நாமத்தை சொன்னால் அறம் தழைக்கும் இதயத்தில் வன்மனம் இருக்காது, அறம் தழைக்கிறது. பொறாமை இருக்காது அறம் தழைக்கிறது. வஞ்சனை இருக்காது அறம் தழைக்கிறது. தயைசிந்தை இருக்கிறது அறம் தழைக்கிறது. சாந்தம் இருக்கிறது அறம் தழைக்கிறது. பிறரை மதிக்க கற்றுக்கொண்டோம் அறம் தழைக்கிறது. தினம் திருக்குறள் போன்ற நூல்களை படிக்கின்றோம் அறம் தழைக்கிறது. பெரியோர்கள் தொடர்பு இருக்க இருக்க அறம் தழைக்கிறது. அறுமுகவன் பாதம் போற்றி என்று சொன்னால் அறம் தழைக்கிறது. ஆறுமுகப்பெருமான் பெயரைச் சொன்னால் அறம் தழைக்கும். சொல்லுகின்ற இடத்தில் சாந்தமே இருக்கும்.
     அறம் தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி
     அர்ச்சனை செய்தால் உதவி அகண்ட வாசல்
    
     அகண்ட வாசல் – புருவமத்தி, ஞானிகளை பூஜை செய்தால் இரகசியத்தை அறியலாம்.
    
துறந்து நின்று திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே
      மலைவாயில் ரவி மதியும் அடையும்போது
            வன்னியொளி தீக்காடு மதியோ கோடி
     என்றார். இப்படி எவ்வளவோ நூல்கள் சொல்லியிருக்கின்றார்கள். இந்த இரகசியத்தை எப்படி கண்டறிவது. கண்டுபிடிப்பது யார்? இவையெல்லாம் அவ்வளவு கடினமானதா? இல்லை ரொம்ப சுலபம். அது ஒரு பெரிய விசயமில்லை. ரொம்ப ரொம்ப இலகுதான்.
     சந்திப்பது நந்தி தன் திருத்தாளிணை – பெரியவங்களை சந்திக்கின்றோம். மானசீகமாக சந்திக்கின்றோம். சந்திக்க, சந்திக்க சந்திக்க உனக்கு ஒரு நல்ல சிந்தனை வந்தது என்பார்.
     சந்திப்பது நந்தி தன் திருத்தாளிணை – மானசீகமாக நினைக்கின்றான். இதை மகான் கணபதிதாசர் சொல்வார்.
     ஆமை குளக்கரையில் முட்டையிட்டு தண்ணீருக்குள் சென்று குறிப்பாக நினைக்கும். அப்படி நினைக்கும்போது கரையில் வைக்கும் முட்டையிலிருந்து ஆமைக்குஞ்சு வெளிவரும்.
     குளத்தில் கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்
      குளத்து நீர்க்குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும்போது
      களத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற்போலுன்
      உளத்திலே நாகைநாதர் உருவறிந்துணர்வாய் நெஞ்சே.
    கணபதிதாசர் அருள்க்ய நெஞ்சறி விளக்கம் – கவி எண் 12
               
                ஆக குளத்து நீர்க்குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும்போது – குறிப்பாக நினைக்கும், புதைத்த முட்டை கருவுரு வானாற்போல் – மேலே வைத்த முட்டை கருவுறு ஆனாற்போல், உளத்துலே நாகைநாதர் உருவறிந்துணர்வாய் நெஞ்சே – ஆக நமக்கு தெரிந்த பாஷையிலே ஞானிகள் பேசுவார்கள்.
     ஆக ஞானிகளை வணங்க, வணங்க அவர்களை சிந்திக்க, சிந்திக்க அவர்கள் பார்வை நம்மீது படப்பட நமக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆக ஞானிகளெல்லாம் இப்படி அமைந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் சொல்லிவைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும். புரிந்து செயல்பட்டால் நல்லது  நடக்கும் என்று சொல்கிறோம். ஆக இப்படியெல்லாம் ஞானிகள் அந்த ஆடிய திருவடியை தம்முள் கண்டிருக்கிறார்கள். அது பழமையானது. அங்கே மட்டும் ஆடவில்லை. தில்லையிலே ஆடியது ஒரு அடையாளம். அதனால்தான் தில்லைமூதூர் ஆடிய திருவடி என்றார்.
     அந்த ஆடிய திருவடியை ஆசான் கண்டிருகிறார். அந்த திருக்கூத்தை கண்டிருக்கிறார். அதை நாமும் அறிய வேண்டும். அதற்கு பக்தி செலுத்த வேண்டும். காலம் இருக்கும்போதே, இளமை இருக்கும்போதே செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் எமன் வந்துவிடுவான். வருவதற்கு முன்னே செய்து  கொள்ள வேண்டும். அப்படி செய்து கொண்டால்தான் ஆன்மாவைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
     உடம்பும், உயிரும் தனித்தனியாக இருக்கிறது என்பார் ஆசான் திருவள்ளுவப்பெருமான். அதை என்ன செய்தார்கள் ஞானிகள்? வந்து போகின்ற அந்த காற்றை ஆன்மாவை புருவமத்தியில் செலுத்திவிடுவார்கள். புருவமத்தியில் செலுத்தியதாலேயே அவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றிருக்கிறார்கள். மகான் திருவள்ளுவர் ஆன்மாவைப் பார்த்து ஏ உயிரே! இதுநாள் வரை எத்தனை உடம்பு எடுத்தாய் என்று கேட்டார்? நான் என்ன செய்யட்டும் எனக்கே ஒன்றும் தெரியாது என்றது.
     
      எழுகடல் மணலை அளவிடல் அதிகம்
      எனதிடர் பிறவி
     என்றார் மகான் அருணகிரிநாதர். ஆக அவ்வளவு அதிகம் பிறவி எடுத்திருக்கிறாய். அத்தனை உடம்பு தாங்கியிருக்கின்றாய் என்றார். ஆன்மா சொல்கிறது, ஆணாக இருந்திருக்கிறேன், பெண்ணாக இருந்திருக்கிறேன், பலநாட்டில் பிறந்திருக்கிறேன். எத்தனையோ தேகம் தாங்கியிருக்கிறேன். ஆனால் தங்குவதற்கு ஒரு வீடு அமையவில்லை. ஆனால் ஞானிகள் மட்டும் தங்குவதற்கு வீடு அமைத்திருக்கிறார்கள்.
                புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
                துச்சில் இருந்த உயிர்க்கு?
    திருக்குறள் – நிலையாமை – குறள் எண் குறள் எண் 340
                ஏ உயிரே! இதுநாள் வரையிலும் எத்தனையோ உடம்பை நீ தாங்கியிருக்கின்றாய். ஆனாலும் தங்குவதற்கு ஒரு வீடு அமையவில்லையா என்று கேட்டார். யாருக்கு அமையும்? இந்த ஆடிய திருவடியின் இயக்கத்திற்குள் ஒரு இயக்கத்தை அறிந்தவர்கள் என்ன செய்வார்கள்? அந்த ஆன்மாவை, ஆன்மா என்று சொல்லப்பட்ட மூச்சுக்காற்றை புருவமத்தியில் செலுத்திவிடுவார்கள்.
     புக்கில் – புகுந்து கொள்கின்ற வீடு. துச்சில் இருந்த உயிர்க்கு – உடம்பில் நோய் இருக்கும், காய்ச்சல் வரும், தலைவலி வரும், பல நோய்கள் வந்திருக்கும் நமக்கே தெரியாது. இவ்வளவு நோய்கள் எல்லாம் வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது. அப்போது இந்த உயிர் இந்த உடலின் ஒரு பகுதியில் ஒதுங்கியிருந்ததாம். அதிலிருந்து தப்பித்துக் கொண்டோம் என்று இருந்ததாம். ஒதுங்கி ஒதுங்கியிருந்தது.
     ஆனால் புற்றுநோய் போன்ற கொடிய நோய் வந்தால் என்ன செய்ய முடியும்? உடம்பில் ஒதுக்குப்புறமாக இருந்த உயிரே, தங்கி வாழ்வதற்கு உனக்கு தெரியாதா? இப்படி கேட்பவர் ஆன்மாவை, உயிரை புருவமத்தியில் தங்க செய்த ஆசான் திருவள்ளுவப்பெருமான் அவர் நம்மை பார்த்து நீங்களும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பார்.
     திருமந்திரத்தில் சொன்னதுபோல யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எல்லா ஞானிகளும், தாம் அடைந்ததை நாம் அடைய விரும்புவார்கள். ஞானிகள் இவற்றையறிந்து தாங்கள் உணர்ந்ததை சொல்கிறார்கள். நாமும் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
     எந்த நூல் படித்து நல்ல சிந்தனை வளர்த்துக் கொள்வது? திருக்குறளை படித்தால்? படிக்கலாம். அருட்பா படித்தால்? படிக்கலாம். திருவாசகம் படித்தால்? படிக்கலாம். திருமந்திரம் படித்தால்? படிக்கலாம். இந்த நூல்களையெல்லாம் படித்தால் நல்ல மனது வந்து விடுமா? இந்த அறிவெல்லாம் அங்கே செல்லாது. படித்தால் மட்டும்வந்துவிடாது. பக்தி வேண்டும் அங்கே. திருமூலதேவா எனக்கு நல்ல மனது வேண்டும். மாணிக்கவாசகா உன் ஆசி வேண்டும். இராமலிங்கசுவாமிகளே உங்கள் அருள் வேண்டும். தாயுமானசுவாமிகளே உங்கள் அருள் வேண்டும். இதுதான் நல்ல மனது. இந்த நல்ல மனது படித்தால் வராது. பக்தியால் வரும். அன்னதானத்தால் வரும். இப்படி பக்தி விசுவாசத்தோடு படித்தால்தான் அருள் கிடைக்கும்.
    
     ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓர் உயர்ந்த புனிதமான சங்கம். ஏழைகளுக்கு பசியாற்றக்கூடிய சங்கம். தன்னை அர்ப்பணிக்கக் கூடிய சங்கம். பொருளாதாரத்தைக் கண்டு மயங்க மாட்டோம். எங்களிடம் ஜாதி வெறி, மதவெறி இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர்கள். தொண்டர்களை புரிந்து கொள்ள முடியும். இங்கு தொண்டர்கள் தொண்டு செய்கிறார்கள். அவர்கள் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
     ஆக இங்கே வருகின்ற பல்லாயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களுக்கு எல்லாம் அன்னமிட்டு பெண்களுக்கும், ஆண்களுக்கும் கை உரமேரியிருக்கிறது. புண்ணியம் என்ற உரமேறியிருக்கிறது, அவர்கள் கையால் சாப்பிடுகின்ற பாக்கியம் உங்களுக்கு கிடக்கின்றது. அந்த உணவை, பிரசாதத்தை நீங்கள் சாப்பிட்டு எல்லாம்வல்ல மாணிக்கவாசகர் ஆசியும், இராமலிங்கசுவாமிகள் ஆசியும், அருணகிரிநாதர் ஆசியும், அகத்தீசர் ஆசியும் பெற்று கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியை நன்கு பயன்படுத்தி நோயில்லாமலும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று எல்லா நலமும், வளமும் பெற்று நீங்கள் நீடு வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறேன்.
    
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171991
Visit Today : 233
Total Visit : 171991

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories