12.12.2002 அன்று மகான் இராமதேவர் அருளிய முதல்நிலை யோகப்பயிற்சி பாகம் (2)க்கு மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


மகான் இராமதேவர் அருளியார் முதல்நிலை யோகப்பயிற்சி (2)
அருளிய அருளுரை
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே
ஓம் அகத்தீசாய நம
உங்கள் அனைவருக்கும் வணக்கம். இராமதேவர் அவர்கள் முதுபெரும் ஞானி. அவர் ஒரு ஜென்மத்தில் மகான் யாகோபுவாக இருந்து சித்தி பெற்றார். மீண்டும் மகான் இராமதேவராக அவதாரம் செய்து மறுபடியும் தொண்டர்களுக்கு அருள் செய்திருக்கிறார். ஆசான் யாகோபு என்றால் ஆசான் இராமதேவர். ஆசான் காலாங்கிநாதரும், ஆசான் கமலமுனிவரும் ஒன்று. இது இந்த மரபில் வருபவர்களுக்கு தெரியும்.
யோகப்பயிற்சி என்ற ஒன்று உண்டு. யோகம் இல்லையென்றால் சொல்லமுடியாது. அந்த யோகமும் ஆசான் ஆசியில்லாமல் செய்ய முடியாது. மூச்சுக்காற்றை வசப்படுத்துதல், மூச்சுப்பயிற்சி எனப்படும். ஆசான் ஆசியில்லாமல் பிராணாயாமம் என்று சொல்லப்பட்ட யோகப்பயிற்சி அல்லது வாசிப்பழக்கம் செய்தால் நிச்சயமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள்.
ஞானிகள் அத்தனைபேரும் ஒருவரிடம் இறந்து ஒருவர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்த பயிற்சி 1960ஆம் ஆண்டு துறையூர் அவல்ப்பட்டரை சந்தில் இருந்த, சித்த தத்துவமேதை சின்னசாமி சாஸ்திரி அவர்கள் எனக்கும் மற்றும் பலருக்கும் சொல்லிக் கொடுத்தார். ஆனால் ஆரம்பத்தில் என்னால் அதை கடைப்பிடிக்க முடியவில்லை. பிறகுதான் அப்பயிற்சியில் ஈடுபட்டேன்.
பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுந்து காலைக்கடனை முடித்துவிட்டு, ஒரு திருவிளக்கை ஏற்றி, வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போடலாம். ஆரம்பநிலைக்கு இது தேவையில்லை. ஆனால் உட்காரும்போது வினாத்தண்டு நிமிர்ந்திருக்க வேண்டும். கூன் விதுந்த மாதிரி உட்காரக்கூடாது. அப்படி கூன்விழுந்தது போல் வினாத்தண்டு வளைந்திருந்து பிரணாயாமம் செய்தால் வயிற்றில் உள்ள வாயு உள்ளேயே தங்கிவிடும்.
ஆசான் இராமதேவர் சொன்னதுபோல் பிராணாயாமம் வயிற்றில் உணவு இல்லாதபோது செய்யக்கூடாது. அதே சமயத்தில் சாப்பிட்டுவிட்டும் செய்யக்கூடாது, தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் இருந்தாலும் செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
பிறகு வயிற்றில் கடும்பசி இல்லாமல் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு கிழக்கு திசையாக இருந்தாலும் சரி, வடக்கு திசையாக இருந்தாலும் சரி, அந்த திசையை நோக்கி மகான் இராமதேவரை ஆசானாக ஏற்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பிறகு திருஅருட்பா, திருமந்திரம், மகான் மாணிக்கவாசாகர் அருளிய திருவாசாகம் இவர்கள் எழுதிய ஏதாவது ஒரு ஞானநூலை ஒரு பத்து நிமிடம் படிக்க வேண்டும்.
பிறகு மகான் இராமதேவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, “அடியேனுக்கு வாசியைப்பற்றி உணர்த்த வேண்டும். அடியேன் பிராணாயாமம் என்று சொல்லப்பட்ட வாசிப்பயிற்சியை செய்யப்போகிறேன். என் அகமும்புறமும் இருந்து நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று ஆசான் இராமதேவரையும் மற்ற ஞானிகள் அத்தனைபேரையும் வணங்கி கேட்கவேண்டும்.
இங்கு ஆசான் இராமதேவர் பெரியவர் என்றோ, மகான் புஜண்டமகரிஷி சிறியவர் என்றோ பொருள் அல்ல. ஞானிகள் அத்தனைபேரும் பிராணாயாமம் செய்தவர்கள் தான்.
வாசிப்பயிற்சியைப் பற்றி ஆசான் இராமதேவர் சொல்லியிருக்கிறார். அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் ஆசான் ஆசி பெறவேண்டும் என்று கூறுகிறோம்? ஆசான் சொன்னதெல்லாம் நமக்கு புரியவேண்டும் அல்லவா? அவையெல்லாம் ஞாபகத்துக்கு வரவேண்டுமல்லவா? அதுக்குத்தான் வாசிப்பயிற்சி செய்வதற்கு முன்னே ஆசானை வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் வெறும் வயிற்றில் பிராணாயாமம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். நாங்க என்ன செய்தோம்னா பக்கத்துல ஒரு கமண்டலத்தில் தண்ணீரை நிறைத்து வைத்துக் கொள்வோம்.
ஏனென்றால் வெறும் வயிறாக இருக்கும்போது பிராணாயாமம் செய்தால் உடலில் உஷ்ணம் ஏற்படும். அதற்காக தண்ணீர் பக்கத்தில் இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சிட்டு செய்யலாம். பிராணாயாமம் காலையில் செய்யலாம். காலைக்கடனை முடித்துவிட்டு குளிக்காமல் பிராணாயாமம் செய்ய வேண்டும். காலைக்கடனை முடித்துவிட்டு குளித்து விட்டால் ஒரு அரைமணி நேரம் (ஒரு நாழிகை) கழித்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.
ஏனெனில் குளித்தால் உடம்பில் உஷ்ணம் குறைந்து குளிர்ந்துவிடும். பிராணாயாமம் செய்யும்போது உடம்பு குளிர்ந்து இருக்கக்கூடாது. அதனால் உடம்பிலுள்ள குளிர்ச்சி குறைந்து உஷ்ணம் ஏற்படுவதற்காக, சுமார் அரைமணிநேரம் கழித்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.
சாப்பிடும் உணவு, சுத்த சைவஉணவாக இருக்க வேண்டுமென்றும், உணவில் அரை உப்புதான் சேர்க்க வேண்டுமென்றும் ஆசான் சொல்லியிருக்கிறார். மேலும் வாசிப்பயிற்சி செய்பவர்களுக்கு நவீன உணவு வகைகளான கேக், பிஸ்கட், சாக்லேட், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்களையும் சேர்க்காமல் இருந்து, தினமும் காலையில் எழுந்து பத்து நிமிடம் திருஅருபாவை படித்துவிட்டு ஆசான் இராமதேவரை விழுந்து வணங்கி அவர் ஆசிபெற்றுதான் வாசிபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.
இப்ப இந்த மூச்சுக்காற்றோடு ஏன் தொடர்பு வைக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்? இந்த மூச்சுக்காற்று மனிதனுக்கு வந்து பலலட்சம் கோடி வருஷமாச்சு.
எப்போது மனிதன் தோன்றினானோ, அப்போதிருந்தே மனிதனுக்குள் மூச்சுக்காற்று வந்து சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. நாம் எடுத்திருக்கிற பிறவியில எல்லாம், மூச்சுக்காற்று வந்து போவும். இந்த மூச்சுக்காற்று எப்படி வந்தது? தாயின் வயிற்றினுள்ளே உள்ள குழந்தையோட மூச்சு இயங்கிகொண்டு இருக்கும். தாயின் மூச்சின் இயக்கம் நின்றுவிட்டால், தாயின் வயிற்றின் உள்ளே உள்ள குழந்தை இறந்துவிடும். அப்ப மூச்சுக்காற்றின் இயக்கம் தாய்வழியாக வந்துள்ளது.
ஆகவே நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்முடைய மூச்சுக்காற்று தாய்வழி வந்த மூச்சுக்காற்றுதான். அப்ப நம்முடைய ஆன்மா தாயின் ஆன்மா. நம்முடைய உயிர் தாயின் உயிர். அப்ப தாயின் உயிர் இருந்தால்தான், தாயினுடைய மூச்சுக்காற்று, குழந்தையின் மூச்சுக்காற்றை இயக்கிக் கொண்டிருக்கும்.
குழந்தை பிறக்கும் வரையில் அவள்தான் நமக்கு துணை,  அவர் மூச்சுக்காற்றே நமக்குள் வந்திருக்கு. பிறகு வெளியே வந்தபின் நாமாகவே சுயமாக சுவாசிக்கிற அளவுக்கு வந்துவிடுகிறேன். ஆக நமக்கு ஆயுள் எழுபது, என்பது தொண்ணூறு வயசு இருக்கலாம். ஆனால் தாய் வயிற்றில் இருக்கும் வரையில் தாயின் மூச்சுக்காற்றுதான், குழந்தையின் மூச்சுக்காற்று, தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தபிறகுதான் மூச்சுக்காற்று நம்முடைய இயக்கமாகும்.
ஆக, அந்த மூச்சுக்காற்று இயக்கத்திற்கு காரணம் தாய்தான். பலலட்சம் கோடி ஆண்டுகளாக பலலட்சம் கோடி ஜென்மம் எடுத்திருக்கிறோம். பலலட்சம் கோடி ஜென்மங்களாக இந்த மூச்சுக்காற்று நம்மகிட்ட வந்துகிட்டு இருக்கும். மூச்சுக்காற்று இயங்கிகிட்டே இருக்கும்.
அப்ப பலலட்சம் கோடி ஜென்மங்களாக இந்த மூச்சுக்காற்றைப் பற்றி கவனம் செலுத்தாமல் இந்த ஜென்மத்தில்தான் இந்த மூச்சுக்காற்றைப் பற்றி, நாம் கவனம் செலுத்துகிறோம். இதற்கு காரணம், இந்த ஜென்மத்தில்தான் ஆசான் இராமதேவர் வாசிபயிற்சிக்கு அருள் செய்துள்ளார். அப்ப அந்த மூச்சுக்காற்றோடு தொடர்பு கொள்கிறோம்.
அப்ப மூச்சுக்காற்றைப் பற்றி நினைக்கும்போதே மூச்சுக்காற்று வேகமாக இயங்க ஆரம்பித்துவிடும். “என்னடா இவன் பலகோடி ஜென்மங்களாக நம்மீது கவனம் செலுத்தாமல் இந்த ஜென்மத்தில் கவனம் செலுத்துகிறான்” என்று மூச்சுக்காற்று நினைக்கும், மகான் இராமதேவரும் நினைப்பார்.
ஏன்னா மூச்சுக்காற்றைப் பற்றி சிந்தித்தாலே மகான் இராமதேவர் திருவடியை சிந்தித்ததாக அர்த்தம். ஆசான் திருவடியாய் தொட்டு விட்டோம். அவர் ஆசியில்லாமல் வாசிவசப்படாது. அவர் ஆசியில்லாமல் அதில் வெற்றிபெற முடியாது. முறைதவறி பிராணாயாமம் செய்தால் அல்லது ஞானியரின் ஆசியில்லாமல் பிராணாயாமம் செய்தால் இறந்துவிடுவார்கள். ஆகவே ஞானிகள் ஆசியில்லாமல் பிராணாயாமம் அல்லது வாசிப்பயிற்சி செய்யக்கூடாது.
 இப்ப மூச்சுக்காற்றை தொடுகிறோம். மூச்சுக்காற்றை தொடுகிறோமென்றால், ஆன்மாவை தொடுகிறோம் என்று அர்த்தம். மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்மஇயக்கம். ஆன்ம இயக்கமே மனதாக உள்ளது. அப்ப ஆன்மாவே மனமாக இருக்கு. அப்ப மூச்சுக்காற்றின் இயக்கமே, கருவிகரணங்கள் இயக்கமாக உள்ளது. கருவிகரணங்கள் இயக்கமே, பசிக்கு காரணமாக உள்ளது. அப்ப மூச்சுக்காற்று இயக்கம் நின்றுவிட்டால் இறந்துபோவான்.
மூச்சுக்காற்றை, பறவை என்று சொல்வார்கள், மூச்சுக்காற்றுக்கு குதிரை என்று பொருள் உண்டு. மூச்சுக்காற்றுக்கு பாம்பு என்று பொருள் உண்டு. இடதுபக்கம் வருகின்ற காற்றிற்கு கருஞ்சாரை என்றும், வலதுபக்கம் வருகின்ற காற்றிற்கு வெஞ்சாரை என்றும் சொல்வார்கள். அப்ப மூச்சுக்காற்றை பறவை என்றும், குதிரை என்றும், பாம்பு என்றும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட மூச்சுக்காற்றை இப்பதான் தொடுகிறோம். முன்ஜென்மத்தில் நமக்கு இந்த வாய்ப்பு இல்லை. யாரேனும் தேடிக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே பிராணாயாமம் செய் என்று சொல்லக்கூடாது. முதலில் ஞானிகள் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். ஞானிகள் ஆசியோடு மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்ய வேண்டும். முதல்ல புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லாமல் எடுத்தவுடனேயே பிராணாயாமம் செய் என்று சொல்லக்கூடாது. வெறுங்கையில் முழம் போட முடியுமா? அப்ப புண்ணியம் செய்யக்கூடிய எண்ணம் வந்தது. அடுத்தபடியாக எந்த உயிரையும் கொன்று உண்ணாதே! அது பாவம் என்று சொல்ல வேண்டும். உயிர்கொலை செய்யாதே என்று சொல்ல வேண்டும். உணவில் சைவத்தை மேற்கொள்ள வேண்டும். ஆகவே ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இங்கே (சன்மார்க்கத்தில்) இரண்டு பெரிய கொள்கைகள் உண்டு. ஒன்று உயிர்கொலை செய்யாதிருத்தல், இரண்டாவது புலால் உண்ணாதிருத்தல். அப்ப மாமிசம், மட்டன், ஆட்டுக்கறி, கோழிக்கறி இவைகளை சாப்பிடக்கூடாது.ஓர் உயிரைக் கொன்று சாப்பிட்டால், கொல்லப்படும்போது அந்த உயிர் ஏன்டா அளவுக்கு அல்லல்பட்டதோ அந்த அளவிற்கு நாமும் அல்லல்பட வேண்டியிருக்கும்.
ஆக, இந்த ஆன்மா நல்லபடியாக இருக்க வேண்டுமென்றால் மற்றொரு ஆன்மாவை கொன்று அந்த உடம்பை உண்ணக்கூடாது. அப்ப கோயிலுக்கு சென்று ஆடு, கோழியை அங்கு கொன்றால் அதனுடைய விளைவு எப்படியிருக்குமென்றால், அந்த ஆன்மா எந்த அளவுக்கு அல்லல்பட்டதோ அந்தளவுக்கு நமக்கு அறியாமை வந்துவிடும்.
அறியாமை என்பது புலப்படாத அறிவு. இப்ப உயிர்க்கொலை செய்ய மாட்டேன், புலால் உண்ணமாட்டேன் என்பது சிறப்பறிவு. மாதம் இருவருக்கு அன்னதானம் செய்வேன் என்பதும் சிறப்பறிவு. யார் மனமும் புண்பட பேசமாட்டேன். என் பேச்சால் பிறர் மனம் புண்படக்கூடாது. நான் புலால் உண்ணவில்லை. ஓர் உயிரையும் கொல்லவில்லை. ஆனால் பிறர் மனம் புண்பட பேசி, அவர்களை கொல்லாமல் கொல்கிறேன். என் பேச்சால் பிறர்மனம் புண்படக்கூடாது. இதற்கு ஆசான்தான் அருள்செய்ய வேண்டும். இதற்கு ஆசானைத்தான் கேட்கவேண்டும்.
மனைவி இருக்கிறாள், அவள்மீது சந்தேகப்பட்டு நீ தவறு செய்கிறாய். அவனை பார்த்து சிரிக்கிறாய் என்று நேராக அவளிடம் சொல்லமாட்டாள். ஆனா தினம்தினம் ஏதாவது குதர்க்கமாக பேசியே அவளை சித்திரவதை செய்வான். இதுதான் கொல்லாமல் கொல்வது. இது மிகக்கொடியது. ஓர் உயிரை கொன்றால் அதோடு அந்த உயிர் இறந்துவிடும். ஆனால் இவன் மனைவிமீது சந்தேகப்பட்டு பேசியே தினம்தினம் கொல்வான். அப்போது ஓர் உயிரை கொள்வதால் வரும் பாவம், இப்படிப்பட்ட பேச்சாலேயே வந்துவிடும். இது ஒரு வகை கொலைக்குற்றத்திற்கு ஒப்பாகும்.
அடுத்து நன்றி மறப்பது என்பது, உய்ரிக்கொலையைவிட பெரிய குற்றம் ஒருவன் தக்க சமயத்தில் செயத உதவியை மறக்கக்கூடாது.  உதாரணமாக திருமணத்திற்கோ, வீடு கட்டுவதற்கோ, நிலம் வாங்குவதற்கோ அல்லது நாம் நோய் வாய்ப்பட்டிருக்கும் போதோ ஒருவன் பொருளுதவி செய்திருந்தால் அந்த நன்றியை மறவாதிருக்க வேண்டும். அப்படி மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று ஆசான் திருவள்ளுவர் சொல்லுவார்,
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
               திருக்குறள் – செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 110
தக்க நேரத்தில் செய்த உதவியை மறக்கக்கூடாது. மறக்காதவன் நிச்சயாமாக திருப்பி செய்வான்.
         நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
          என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
          தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
          தலையாலே தான்தருத லால்.
    மகான் ஒளவையார் – மூதுரை – கவி எண் 1
ஐம்பது ரூபா கொடுத்தா, நூறு ரூபாய் செய்துவிடுவான். ஆனால் கையில காசு இல்லேன்னா, என்ன செய்றது? அது ஒன்றும் குற்றமில்லை. ஆனால் மனமுவந்து செய்த உதவியை மறந்து, அவன்மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வீட்டு திருமணத்திலேயோ அல்லது வீடு  கட்டுவதிலேயோ அல்லது நிலம் விற்பனையிலேயோ அல்லது அவன் வாழ்க்கைக்கு பாதிப்பு வருவது போன்ற இடையூறு செய்யக்கூடாது.
அப்படி செய்தால், “இந்த பாவிக்கு இவ்வளவு உதவி செய்தோம். படுபாவி இப்படி செஞ்சிட்டானே!” என்று தாங்கமுடியாத அளவு உள்மனதிலிருந்து துன்பம் வரும். அவன் படும் துயரின் விளைவை யாராலும் தாங்க முடியாது.
சிலபேருக்கு உதவி செய்றதே வேலை. மழை பெய்துக்கிட்டே இருக்கும். அதுபோல இவனும் உதவி செஞ்சிகிட்டே இருப்பான். நம்ம கடமையை நாம செய்றோம் என்று நினைப்பான். உதவி பெற்றவன், திருப்பி செய்றான், செய்யவில்லை என்பது பற்றி சிந்திப்பதுகூட அவசியமில்லை என்று சொல்லிவிட்டு போயிடுறான்.
இதை,
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு”.
திருக்குறள் – செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 110
                என்பார் ஆசான் திருவள்ளுவர்.
     ஆக, சிலபேர் உதவி செய்தால் பதிலுக்கு உதவியை எதிர்பார்ப்பார்கள். ஆனால் சிலபேர் எந்தவித பலன்களையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் உதவி செய்துகொண்டு போய்கிட்டே இருப்பார்கள். இவர்களுக்கு இடையூறு செய்வதைத்தான் ஆசான் திருவள்ளுவர் மிகப்பெரும் குற்றம் என்று சொல்லுவார். அப்படி செய்தால் அந்த வினையை யாராலும் தீர்க்க முடியாது.
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
               திருக்குறள் – செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 110
அவனுக்கு வாழ்க்கையே இல்லை என்று சொல்லிவிட்டார். அப்ப நன்றி மறப்பதாலும், ஆன்மா மாசுபடும். நன்றியை மறப்பது குற்றமில்லை. உதவி செய்தவனுக்கே இடையூறு செய்வது மிகக்கொடுமையான செயல். அடப்பாவி அவனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்தேன். என் மகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டான். அவனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்தேன், நான் வேலை செய்கிற இடத்தில் என்மீது குறைசொல்லி எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டான்.
    
     ஆக, நிலா விற்பனையை தடுத்தான். மகள் திருமணத்தை தடுத்தான். எனக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் செய்தான். ஆக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்கு நான் செய்த உதவிக்கு, இதுபோன்று நிர்கதியாக்கி என் குடும்பத்தையே கெடுத்த படுபாவி என்று, பாதிக்கப்பட்டவன் உள்மனதில் எழுகின்ற உணர்வுகளையும் அதனால் விளையும் விளைவுகளையும், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது கொடிய சாபம், அந்த கொடிய சாபத்திலிருந்து யாரும் மீள முடியாது.
     ஆக இதுபோன்ற குற்றம் செய்யக்கூடாது. வாசிப்பயிற்சி பெறுவதற்கு வெறும் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. அவன் பாவியாகாமல் இருக்க வேண்டும் அல்லவா?
     நம்முடைய உணர்வாலும், சொல்லாலும், நன்றி மறப்பதாலும் அல்லது வேறுவகையான செய்கையாலும் பிற ஆன்மா பாதிக்கப்பட்டால் நிச்சயம் நமது ஆன்மா பாதிக்கப்படும்.
விளைவு, அறியாமையை உண்டு பண்ணும். அதன் விளைவு பொல்லாத வறுமையை உண்டு பண்ணும், தீராத நோயை உண்டு பண்ணும். மேலும் தெளிவான அறிவு இல்லாமல் இருட்டில் கிடக்கின்ற சூழ்நிலையை உண்டாக்கும்.
தெளிவான அறிவு வேண்டுமென்றால், சுத்த சைவமாகவும், உயிர்கொலை செய்யாமலும், பிறர்மனம் புண்பட பேசாமலும், நன்றியை மறவாமலும், பிறர் சொத்தை அபகரிக்காமலும் இருக்க வேண்டும். இந்த பயிற்சியால் வெற்றி பெறுகிறவன்தான் யோகியாக முடியும்.
    
ஞானியாக வேண்டுமென்றால், பிறர் சொத்தை எந்த வகையிலும் அபகரிக்கக் கூடாது. எந்த வகையிலும் பொய் சொல்லக்கூடாது. என்னய்யா? இவ்வளவு பெரிய கொள்கைகளை ஒரே நேரத்தில் கடைப்பிடிக்க முடியுமா? என்று கேட்டால், ஒரே சமயத்தில் கடைப்பிடிக்க முடியாதென்று எங்களுக்கு தெரியும். அதற்கு உபாயம், மகான்களை வணங்கி கேட்க வேண்டும்.
ஆசான் இராமலிங்க சுவாமிகளையோ, ஆசான் இராமதேவரையோ, மகான் அருணகிரிநாதரையோ, மகான் பதஞ்சலி முனிவரையோ, மகான் திருஞானசம்பந்தரையோ இது போன்ற மகான்களிடம் தொடர்பு கொண்டு ஆசானை வீழ்ந்து வணங்கி, “அடியேனுக்கு ஞானத்திற்கு உரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும்” என்று விடாமல் கேட்க வேண்டும்.
கல்லானது சிற்பியின் உளியாலும், சுத்தியலும் பல இலட்சம் முறைகள் கொத்துப்பட்ட பின்னரே சிலையாக உருமாறுகிறது. அதுபோல கல்மனமும், வன்மனமும்  கொண்ட ஒருவன், முற்றுப்பெற்ற கருணையேவடிவான ஞானிகளின் நாமத்தை சொல்லச்சொல்ல கல்மனம் கரைந்து வன்மனம் நீங்கி மென்மையான மனமாக மாறும்.
ஐயனே! என் கைகளால் செய்த பாவம், சிந்தனையால் செய்த பாவம், காமத்தால் வந்த கேடு, பொருள் ஆசையால் வந்த கேடு, புலால் உண்ணுவதால் வந்த கேடு, யானென்ற கர்வத்தால் வந்த கேடுகள், இது போன்ற பாவங்கள் அத்தனையும் என்னை மலைபோன்று சூழ்ந்து கிடக்கிறது.
இத்தனை பாவங்களையும் நான் வெல்லாமல், இத்தனை பாவங்களும் என்னைவிட்டு நீங்காமல் நான் எதிலேயும் சித்திபெற முடியாது. நான் வாசிப்பயிற்சி செய்ய நினைக்கிறேன். உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை. உடல் எனக்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? ஏன் எனக்கு உடல் ஒத்துழைக்கவில்லை? நான் எத்தனையோ ஜென்மங்களில் எத்தனையோ, இலட்சோப லட்ச ஜென்மங்களில் உடம்பை தாங்கி வந்து, கோடானுகோடி குற்றங்கள் செய்திருக்கிறேன்.
அவ்வாறு செய்த குற்றம் இப்போது நோயாக இருக்கிறது. மனம் ஒரு நிலைப்பட்டு பூஜை செய்ய நினைக்கிறன். மனம் இலயப்படவில்லை. பிராணாயாமம் செய்ய முயற்சிக்கிறேன், முடியவில்லை. மனதில் அமைதி இல்லை. இது என் வினைப்பயன் என்று உணர்கிறேன். இப்படி எல்லாம் இருக்கும்போது எப்படி ஐயா உங்கள் ஆசி பெறுவேன்? என்று ஆசானை மனமுருகி கேட்க வேண்டும். இவை எல்லாம் ஆசானுக்கு தெரியும்.
“எத்தனையோ ஜென்மங்களில் அறியாமை காரணமாக ஆன்மாவைப் பற்றி அறியாமல் செய்த குற்றங்கள் வறுமையாகவும், மனம் இலயப்படாமலும் பல்வேறு குணக்கேடுகளாகவும் இருந்து உன்னை வாட்டி வதைக்கிறது” என்று அவனைப்பார்த்து ஆசான் சொல்வார்கள்.
ஆகவே இத்தனை பாவங்களையும் தீர்க்கும் ஆற்றல் உமக்கு உண்டு. உன் திருவடியை வணங்கி கேட்கிறேன், யாசிக்கிறேன். “தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்” என்று சொல்வார்கள். கொடிய பாவத்தை நீக்கக்கூடிய வல்லமை உமக்கு உண்டு. புண்ணியவான் நீ, உன் திருவடியை வணங்கி ஆசி பெறுவதை தவிர, எனக்கு வேறு வழியில்லை. உருகி தியானிக்க நினைக்கிறேன், முடியவில்லை.
வாசிப்பயிற்சியில் ஈடுபடுகிறேன், உடல் ஒத்துழைக்கவில்லை, நீங்கள் சொல்லிய உணவு நெறிமுறைகளை (டீ, காபி குடிப்பதை தவிர்ப்பது) என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. அவையெல்லாம் மிக எளிய கொள்கைகள். ஆனாலும் என்னால் பின்பற்ற முடியவில்லை. டீ குடிக்கக் கூடாது, காபி குடிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அந்த எண்ணம் என்னை வாட்டி வதைக்கிறது.
புலால் உண்ணக்கூடாது. அது பாவம் என்று நினைக்கிறேன். முன்பு உண்டதால், அந்த சுவை என்னை வாட்டி வதைக்கிறது. பொய் சொல்லாதிருக்க நினைக்கிறேன். என்னால் முடியவில்லை. பல்வேறு பிரச்சனைகள்,  நோய், வறுமை போன்றவைகளால் தாங்க முடியாமல் தடுமாறுகிறேன். இந்த சமயத்தில் நான் எப்படி ஐயா உன் ஆசி பெறமுடியும்.
“பயப்படாதே மகனே! என் திருவடியை மட்டும் நினை. என்னை வீழ்ந்து வணங்கு, தப்பித்துக் கொள்ளலாம்” என்பார்கள் ஞானிகள்.
“எத்தனையோ பாவிகள், இராமதேவ ஐயா உன் ஆசிபெற்றிருக்கிரார்கள். எனக்கும் அருள் செய்ய வேண்டும் தாயே! எனக்கும் மனம் இரங்கி அருள் செய்ய வேண்டும். இராமலிங்க சுவாமிகளோ, இராமதேவ ஐயா, திருமூலதேவா, காலாங்கிநாதா, நீங்களெல்லாம் பெரியவர்கள் ஐயா! எனக்கு மனம் இரங்கி அருள் செய்ய வேண்டும். உங்கள் ஆசியில்லாமல் என் பாவச்சுமை தீராது. உங்கள் ஆசிபெற பெற நான் செய்த பாவங்கள் தீரும். இல்லையென்றால் பாவங்கள் என்னை சூழ்ந்து என்னை தெளிவில்லாமல் செய்துவிடும்.”
இவ்வாறு ஞானிகளை கேட்க வேண்டும். கேட்டால், அருள் செய்வார்கள் ஞானிகள் தினமும் வீழ்ந்து வணங்க வேண்டும். அவர்கள் ஆசியை பெற்றுக்கொள்ள வேணும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேணும். சுத்த சைவஉணவை மேற்கொள்ள வேணும். இப்படியெல்லாம் செய்தால் வாசிப்பயிற்சிக்கு விதிக்கப்பட்ட கொள்கைகளை இலகுவாக கடைப்பிடிக்கலாம். டீ, காபி, சாக்லெட், கேக் இவைகளை தள்ள வேண்டும். சிகரெட்டை தள்ள வேணும். இதெல்லாம் உணவால் வரும் கேடுகள். இது உடம்பை பாதிக்கும்.
அடுத்து உணர்வாலும், செய்கையாலும் வரும் கேடுகள், நமது வளர்ச்சியை பாதிக்கும். இதையும் ஞானிகளிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
“எப்படியெப்படியோ, உன்னை உருகி தியானித்து அருள்பெற நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை. காலையில் எழுந்து உன் திருநாமத்தை சொல்லி ஆசிபெற நினைக்கிறேன். எனக்கு சோம்பல் வந்து உன் திருவடியை பற்றவிடாமல் செய்கிறது. எனக்கு அதிகமாக தூக்கம் வருகிறது. தடுக்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. அதிகாலை எழுந்து உற்சாகத்தோடு உன் ஆசி பெறவேண்டும்” என்று தினமும் பூஜையில் கேட்க வேண்டும். இவ்வாறு கேட்டால் அருள் செய்வார்கள்.
இதை இராமலிங்க சுவாமிகள் “ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெரும்ஜோதி” என்று சொல்வார்கள்.
இப்படி ஆசானை ஒவ்வொன்றாக வணங்கி வணங்கி கேட்டு பெற வேண்டும். இப்படி கேட்டு கேட்டு பெற்றாலன்றி ஒருவனுக்கு சிறந்த வாசிப்பயிற்சி அமையாது.
அதென்னய்யா வாசிப்பயிற்சி?
வாசிப்பயிற்சி என்பது ஒரு பழக்கம். அடித்தள கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போன்றது. வெறும் வாசிப்பயிற்சி மட்டும் செய்தால் நோய்வாய்ப்படுவார்கள். நோயில்லாமல் இருப்பதற்கு அன்னதானம் செய்ய சொல்லுகிறார்கள். சைவஉணவை கடைப்பிடிக்க வேண்டும். இந்த அடிப்படை கொள்கையில்லாமல், நிலைஉயர முடியாது. இது (வாசிப்பயிற்சியாகிய யோகம்) மூன்றாவது படியாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம். யோக மார்க்கம் என்பது மூன்றாவது படி.
“நான் உயர்ந்த எண்ணம் உள்ளவனாக இருக்க வேண்டும். உயர்ந்த எண்ணம் இல்லாமல் கடவுள் தன்மையை அடைய முடியாது. என் மனதில் பல்வேறு வகையான குணக்கேடுகள் உள்ளது. அதெல்லாம் உன் திருவருளால் மாற வேண்டும்” என்று தினமும் மகான் இராமதேவரை பூஜையில் கேட்க வேண்டும்.
மகான் இராமலிங்க சுவாமிகள் “கைக்கின்ற காயும் இனிப்பாம்” என்பார். நல்ல வேப்பங்காய், எட்டிக்காய் போன்றவற்றை உன் திருவருள் இருந்தால் இனிக்கும் படி செய்யலாம்.
    கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
    பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
    வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
    துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.
திருஅருட்பா – 6 திருவருள் முறையீடு – கவி எண் 225
                இப்படி எல்லாத்தையும் மாத்திடலாம். “என் உடல், பொருள், ஆவி அத்தனையும் உன் திருவடிக்கே சமர்ப்பிக்கிறேன். என்னிடமுள்ள குனக்கேடுகளைப் பற்றி எனக்கே தெரியாது. இந்த அடிமையை ஏற்று அருள் செய்ய வேண்டும். எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்.
     நான் பாவிகளுக்கெல்லாம் தலைவன். நான் ஒரு பஞ்சமாபாவி என்பது எனக்கு தெரியும். நீரும் அறிவீர்கள். இந்த அடிமையை ஏற்று, நாயினும் கேடான அடிமையை ஏற்று அருள் செய்ய வேண்டுமென்று பூஜையில் கேட்க வேண்டும்” இப்படி வீழ்ந்துவீழ்ந்து வணங்கிவணங்கி கேட்டுப் பெற வேண்டும்.
     ஒரே நாளில் அது முடியாது என்பது எங்களுக்கு தெரியும். இது அவர்களுக்கும் (ஞானிகளுக்கும்) தெரியும். இதுபோன்ற பக்குவம் வராவிட்டால் ஒருவர் வாசிப்பழக்கத்தால் சித்திபெற முடியாது.
     ஞானம் என்பது குழந்தை தவழ்ந்து செல்வது போல் படிப்படியாக செல்லனும். இதை, கவனிக்கவும், :சீசனாம் எனத்தேர்ந்தால் மௌனம்சொல்வார் சிற்றெறும்பு ஊரையிலே கற்குழிந்தாப்போல” என்றார்.
     குழந்தைகள் மண்டியிட்டு போகும். அப்படியே நெஞ்சிலே நகர்ந்து போகும். ஆக இதபோல மெதுவாகத்தான் போக வேண்டும். விரைவாக வாசிப்பயிற்சி யாரும் செய்ய நினைத்தால் நோய்வாய்ப்படுவார்கள்.
     ஆக மெதுவாகத்தான் செல்ல வேண்டும். நம்முடைய மனது எப்படியாவது விரைவாக ஞானம் அடையவேண்டும் என்று சொல்லும். ஆனால் இந்த துறை அப்படி அல்ல. ஆசான் என்று மனம் இரங்குகின்றாரோ, அன்றுதான் அருள் செய்வார். நம்முடைய முயற்சி எதுவும் இங்கே எடுபடாது. நமது வினைப்பயன் அது சித்திபெற பல ஆண்டுகள் கூட ஆகலாம். சிலருக்கு சில ஆண்டுகளில் ஆகலாம். அப்படியே சகிச்சுகிட்டு போய்கிட்டு இருக்கணும்.
     ஆசான் ஆசி பெறுவதற்கு, உணவு பழக்கம் முன்னமே சொல்லிவிட்டார். காலையில் எழுந்து குளிப்பதற்கு முன்பே காலைக்கடன் முடித்துவிட்டு வரவேண்டும். பின்பு நெஞ்சை விரைப்பாக வினாத்தண்டு நிமிர்ந்து இருக்குமாறு அமர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு படி.
     அடுத்து மூச்சுக் காற்றைப்பற்றி சொல்லபோறேன். இந்த ஆன்மா அல்லது மூச்சுக்காற்று பலலட்சம் கோடி ஜென்மங்களாக தொடமுடியாத இந்த வாசியை (மூச்சுக்காற்று) இந்த ஜென்மத்தில் ஆசான் இராமதேவர் அனுகிரகத்தால் கருணையால், தயவால் நமக்கு மூச்சுக்காற்றை தொடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கு. அப்படி வந்து போகின்ற காற்றை இவன் தொடுகிறான் (கவனிக்கிறான்).
     நீ நினைக்கும்போதே மூச்சுக்காற்று வேகமாக வந்துபோக ஆரம்பித்துவிடும். என்னடா, இவன் இத்தனை ஜென்மங்களில் தொடாது இருந்தான், பிறந்ததிலிருந்து சாகும்வரை நம்மைப்பற்றி (மூச்சுக்காற்று) அறியாமல் இருந்தான். இன்று யாரோ ஒருவன் மூச்சுக்காற்றைப் பற்றி உபதேசித்து இருக்கிறான்.
     ஆக மூச்சுக்காற்றை பார்க்கிறான். மூச்சுக்காற்றே ஆன்மாவாகும். மூச்சுக்காற்றை பார்த்தால் ஆன்மாவை பார்ப்பதாக அர்த்தம். இப்போது பார்க்கிறான். யாரெல்லாம் யோகநெறியில் வெற்றி பெற்றார்களோ? அவர்களிடம் கேட்கிறான்.
     “நீரே பக்தியாகவும், பக்திக்குரிய அறிவாகவும், பக்திக்குரிய முயற்சியாகவும், நீர் யோகமாகவும் இருக்கின்றீர். யோகத்திற்கு உரிய அறிவும் நீயே, பக்திக்கு உரிய அறிவு நீயே, பக்திக்குரிய முயற்சியும் நீயே, பக்தியின் சித்தியும் நீயே, யோக சாதனமும் நீயே, யோகசித்தியும் நீயே, ஞானசாதனமும் நீயே, ஞானசித்தியும் நீயே, மோனமும் நீயே, மோனமுதல்வனும் நீயே, மோனம் சித்திக்க அருள்வதும் நீயே, ஞான அனுபவமும் நீயே”
     ஆக அடிப்படையில் இத்தனை கோட்பாடுகளையும் கடைபிடிப்பதற்கு உரிய மனவலிமை எனக்கு இல்லை. நீர் புலால் உண்ணாது இருக்க வேண்டும் என்கிறீர், பொய் சொல்லாது இருக்க வேண்டும் என்கிறீர், நன்றியை மறவாது இருக்க வேண்டும் என்கிறீர், அன்போடு பேசவேண்டும் என்கிறீர். எனக்கு இதையெல்லாம் கடைப்பிடிக்க கூடிய மனவலிமை இல்லை.
     உமது திருவருள் கடாட்சத்தை கொண்டே அந்த மனவலிமை நான் பெற வேண்டும். உன் திருவருள் கடாட்சம் இல்லையென்றால் இந்த கொள்கையை கடைப்பிடிக்கவோ அல்லது வெற்றிபெறவோ என்னால் முடியாது. நீரே எனக்கு அருள்செய்ய வேண்டும் என்று ஆசான் இராமதேவரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் அருணகிரிநாதரையும் மனமுருகி கேட்கவேண்டும்.
     அவர்கள் ஆசியில்லாமல் இதுபோன்ற வைராக்கியம் வரவே வராது. தவம் என்பதே உறுதி அல்லது வைராக்கியம் ஆகும். அந்த உறுதியைத்தான் ஞானம் என்றார். அந்த தவம் அல்லது வைராக்கியம் அல்லது உறுதி என்பது ஆசான் திருவருள் துணையால் மட்டுமே வருவது ஆகும்.
     அந்த திருவருள் கடாட்சம் அல்லது அவர்களுடைய கருணையே நமக்கு உறுதியைத்தரும். அவர்களுடைய கருணையே நமக்கு அறிவாக இருக்கிறது. அவர்களுடைய கருணையே நம்முடைய செயல்பாடுகள் அனைத்துக்கும் சாதகமாக இருக்கும். அவர்களுடைய கருணையே நமக்கு உணர்வாக இருக்கும்.
     கருணையே வடிவான ஞானிகள் ஆசிபெறுவதற்கு ஒரேவழி அவர்களுடைய திருவடியை தியானிப்பதுதான். அவர்களுடைய நாமத்தை சொல்லுவதுதான். எங்கு சென்றாலும் அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா என்று சொல்லனும்.
     அகத்தீஸ்வரா என்று சொன்னால், ஆசான் இராமதேவருக்கு தெரியும். ஆசான் இராமலிங்க அடிகளே என்று சொன்னாலும் ஆசான் இராமதேவருக்கு தெரியும்.
     இதை ஆசான் திருமூலர், “நான் வேறு இராமலிங்கம் வேறு அல்ல. ஆசான் ஆறுமுகப் பெருமானும் நானும் ஒன்று, ஈசனும் நானும் ஒன்று” என்று ஆசான் திருமூலர் சொல்லுவார். இந்த சித்தர் வர்க்கத்தில் வித்தியாசம் பார்த்தாலே வினை சூழ்ந்திடும்.
     ஆசான் இராமதேவர் நேற்று வந்தவர், ஆசான் திருமூலர் முன்னரே வந்தவர். அதனால் அவர் பெரியவர் என்று நினைக்காதே. நாங்கள் அத்தனைபேரும் ஒரே தன்மை உடையவர்கள்தான். யாரை அழைத்தாலும் எங்களுக்குத் தெரியும்.
என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யென்னவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
    திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
இங்கே ஆசான் இராமலிங்க சுவாமிகள்ன்னு சொன்னால், ஒன்பது கோடி ஞானிகளுக்கும் தெரியும். ஆசான் இராமதேவர்ன்னா, ஒன்பது கோடி பேருக்கும் தெரியும். மகன் யாகோபு என்று சொன்னாலும் ஒன்பது கோடி பேருக்கும் தெரியும்.
இவர்கள் அத்தனைபேரும் உலகமக்கள் தங்களை அழைத்து ஆசிபெற மாட்டார்களோ, என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். தாம் அடைந்த பேரின்பத்தை உலகமக்களாகிய பிள்ளைகள் அடைய வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் உடையவர்கள். இவர்கள்தாம் “அறஆழி அந்தணர்கள்” என்பார் ஆசான் திருவள்ளுவர்.
     அறஆழி அந்தணன் தால்சேர்ந்தார்க்கு அல்லால்
      பிறஆழி நீந்தல் அரிது.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 8
என்றார். ஞானிகள் எல்லாம் கருணையே வடிவானவர்கள். அவர்களின் நாமத்தை சொல்லுதலும், அவர்களை வீழ்ந்து வணங்குதலும்தான் அருளை பெறுவதற்கு வழியாம். இது தவிர வேறு வழியே இல்லை. திருவருள் இல்லாமல் வாசிப்பழக்கம் செய்தால் நிச்சயமாக சித்திபெற முடியாது. அது ஏமாற்றத்தை தரும் சிலபேர் யோகா சென்டர் வச்சிருப்பாங்க. இங்கெல்லாம் செல்லலாம். ஆனா இதெல்லாம் பொருளாதாரத்திற்காக உள்ளது. நாம சொல்றது எல்லாம் பக்திதான்.
பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி
சீரிலுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பக்தி.
    மகான் கடுவெளிச்சித்தர்
சிவன் செயலினால் பக்தின்னார். உலகத்தில் சிறந்ததி பக்திதான். பக்தியில்லாமல் யோகம் செய்ய முடியாது. அப்ப பக்தி இருந்தால் மட்டும் போதுமா அன்னதானமும் செய்ய வேண்டும். பக்தி செலுத்தினாலே செல்வம் தானாக வரும். இதை எளிது என்று நினைக்கக்கூடாது.
     வள்ளுவபெருமானே, திருமூலதேவா, காலாங்கிநாதா, அருணகிரிநாதா, இராமதேவா ஐயா இப்படி உருகினாலே உனக்கு வறுமை தீரும். செல்வம் தானே குவியும். பக்தியே உனக்கு பொருள் தரும். பக்தியே உனக்கு உடன் ஆரோக்கியம் தரும்.
     பக்தியே சிறப்பறிவு தரும். பக்தியே நல்ல மனம் தரும். பக்தியே வாசியைப்பற்றி உணரச்செய்யும். பக்தியே யோகசாதனம் தரும். பக்தியே வைராக்கியம் தரும். பக்தியே தவத்திற்குரிய பக்குவம் தரும். இதனால்தான் “பாரில் உயர்ந்தது பக்தி” என்று சொன்னார். அடிப்படை இல்லாமல் மேலே போக முடியாது.
     பக்தி சரியை மார்க்கத்தையும், கிரியை மார்க்கத்தையும் கொண்டது. சரியை என்பது நன்னடத்தையும் நிற்பது. உயிர்கொலை செய்யாது, பண்புள்ளவன் என்று பெயர் எடுப்பது.
     கிரியை மார்க்கம் என்பது, குருவருள் துணைகொண்டுதான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியும் என்று எண்ணுவது பக்தி மார்க்கம். யோகமார்க்கம் என்பது ஆசான் ஆசியால் வாசிவசப்பட வேண்டும். ஆசான் ஆசியில்லாமல் வாசிவசப்படாது என்று அறிகின்ற அறிவு எதுவோ, அதுதான் கிரியை மார்க்கம்.
     மனிதவர்க்கமே உடனே முன்னேற வேண்டுமென்று நினைக்கும். வாசிப்பயிற்சி செய்து உடனே முன்னேற வேண்டுமென்று நினைக்கும்.
     ஆனால், உண்மைப்பொருள் அறிந்த இவர்கள் எடுத்தவுடன் வாசிப்பயிற்சி சொல்லி தரமாட்டார்கள். நாங்களும் பக்தி செலுத்தினான் முன்னேறி இருக்கிறோம். எடுத்ததும் ஆசான் யோகப்பயிற்சி எனக்கு சொல்லி தரவில்லை. ஆசான் அகத்தீசனை பூஜை செய்யாமல் வாசிப்பயிற்சி செய்யாதே என்று எனது ஆசான் சித்த தத்துவமேதை சின்னசாமி சாஸ்த்ரி அவர்கள் 1960-ல் உபதேசித்தார். இவரே என்னுடைய முதல் ஆசான்.
     ஆசானுடைய ஆசியில்லாமல் பிராணாயாம யோகம் செய்தால் உடல் கெட்டு பொய்விடுமென்றார். புலால் உணவு உண்ணக்கூடாது என்றார். பிராணாயாமம் செய்யும் போது வயிற்றில் முன்உண்ட உணவு இருக்கக்கூடாது என்றார். வினாத்தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். மூச்சுக்காற்றை லேசாக இழுக்க வேண்டும். இப்படியெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தார்.
     ஆனால் நான் ஆர்வத்தின் காரணமாக கவனக்குறைவாக வயிற்றில் முன்உண்ட உணவு இருக்கும்போதே மூச்சை கட்டிவிட்டேன். அதனால் முதுகுப்பக்கம் எல்லாம் பெரியபெரிய கட்டி வந்துவிட்டது. நான் அன்று பிழைத்ததே பெரும் புண்ணியம். முன் செய்த நல்வினை காரணமாக செத்துபிழைத்தேன். இதற்கெல்லாம் காரணம் நான் விரைவாக முன்னேற வேண்டும் என்று நினைத்ததுதான்.
     மகான் இராமதேவர் குழந்தை தவழ்வது போல் மெதுவாக வாசிப்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.
     மகான் கொங்கணமகரிஷி சிற்றெறும்பு ஊரையிலே கல் குழிந்தாற் போல என்பார். அதுபோல மெதுவாக செய்ய வேண்டும் என்று அறிவுரை சொன்னார். இப்படியெல்லாம் அறிவுரை சொன்ன போதிலும், வெகுபேர் சீக்கிரம் முன்னேற வேண்டுமென்று பிராணாயாமம் செய்து இறந்துவிட்டார்கள்.
     கை, கால், வயிறு வீங்கி இறந்தவர் பலபேர். ஆர்வத்தின் காரணமாக புண்ணியம் இல்லாமல், ஞானிகள் ஆசிபெறாமல் பிராணாயாமம் செய்தால் மலச்சிக்கல் வரும் என்று பலருக்கு தெரியாது.
     யோகநெறி சொல்லி கொடுப்பவனுக்கும் இது தெரியாது. ஆனால் பயிற்சி பெறுபவனுக்கு யோகபயிற்சியின் போது, ஏதேனும் பிரச்சனை வந்து யோகநெறி சொல்லிக் கொடுப்பவனிடம் கேட்டால், இப்படிப்பட்ட சோதனைகள் வரத்தான் செய்யும் என்று கூறி சித்த நூல்களை ஆதாரமாக காண்பிப்பார்கள்.
     சித்தநூல்களில் சில இடங்களில் யோகம் செய்யும்போது, சில சோதனைகள் வருவது பற்றி கூறி இருக்கும். அது உண்மைதான். ஆனால் அதன் உண்மை பொருளறியாது இவர்கள் தவறாக புரிந்து கொண்டு தவறான யோகப்பயிற்சியால் வரும் பாதிப்பையும், உண்மையான யோகப்பயிற்சியில் வரும் சிரமத்தோடு ஒன்றாக இணைத்து தம்மிடம் வருபவர்களிடம், இப்படிப்பட்ட சோதனைகள் வரத்தான் செய்யும் என்று சொல்லிவிடுவான்.
     ஆனால் நாம் இப்படி சொல்ல மாட்டோம். மலச்சிக்கல் இருந்தால் பிராணாயாமம் செய்யாதே. எண்ணெய் குளியல் செய்த காலத்தில், பிராணாயாமம் செய்யாதே. பெண்ணுறவு கொண்ட காலத்தில் பிராணாயாமம் செய்யாதே. காய்ச்சல், வயிற்றுவலி போன்ற நோய்கள் வந்தால் பிராணாயாமம் செய்யாதே.
     உடம்பு ஒன்றுதான் ஞானத்திற்கு துணை. உடம்புதான் ஆலயம். உடம்புதான் சுவர். சுவரில்லாமல் சித்திரம் எழுத முடியாது. அப்ப உடம்புதான் முக்கியம் ஆகும். “உடம்பால் அழியின் உயிரால் அழிவர்” என்பார்.
      உடம்புதான் மிக முக்கியமான மூலதனம். ஞானத்திற்கு உடம்புதான் வாகனம். கடலை கடப்பதற்கு கப்பல் வேண்டும். பறந்து செல்ல வேண்டுமானால் விமானம் வேண்டும். அதுபோல ஞானத்திற்கு செல்ல உடம்பே வாகனமாக இருக்கும். இதை வள்ளுவர்,
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
    திருக்குறள் – துறவு – குறள் எண் 345
இந்த பிறவி துன்பத்தை வெல்வதற்கு உடம்புதான் இன்றியமையாதது. பின்பு எதற்காக மற்ற தொடர்புகளை வைத்து கொள்கிறாய். பிறவி துன்பத்தை ஒழிப்பவனுக்கு இன்றியமையாத மூலதனம் உடம்பு. இந்த உடம்பை விட்டவிட்டால் என்ன செய்வாய். ஆர்வத்தின் காரணமாக பிராணாயாமம் செய்தால் நீ இறந்துவிடுவாய். ஆக உடம்பை கண்டிப்பாக காப்பாற்றி கொள்ள வேண்டும்.
நோய் வந்தால் பிராணாயாமம் செய்யக்கூடாது. மனம் இலயப்படாவிட்டால் என்ன செய்வது? காட்டுப்பக்கம் பொய் ஒரு ஐந்து நிமிடம் இயற்கை காட்சியை பார்த்துவிட்டு வந்து, பிராணாயாமம் செய்யலாம்.
நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அவர்கள் திருவாசகத்தையோ அல்லது திருஅருட்பாவையோ ஒரு பத்து நிமிஷம் படிக்கணும். எதை படிக்க முடியுமோ அதை படி. வீழ்ந்து வணங்கு.
நான் என்னய்யா செய்வேன். நான் பாவி, மனம் லயப்படல. இப்படி ஆசானிடம் சொல்ல வேண்டும். வெளியில் போகும்போது அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா என்று சொல்லிக்கிட்டே போகணும். குளிக்கும்போதும் இப்படியே நாமத்தை சொல்லிக்கிட்டு இருக்கணும். இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா, மூச்சுக்காற்றைப் பற்றி உணர்த்தப்படும். “நடக்கிலும் வாசிப்பாரு நாட்டமும் வாசிப்பாரு” என்றார்.
     மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேணும். பக்தி செலுத்த வேணும். இப்படியெல்லாம் பல ஆண்டுகள் செய்யணும். சீக்கிரம் அடையணும்னு ஆர்வம் படக்கூடாது. தளர்ச்சி அடையாம இருக்கணும். மெதுவாகத்தான் போகணும். விமானத்தில் சென்றால் வேகமாக போகலாம். ஆனால், இராமதேவர் குழந்தை தவழ்வது போல மெதுவாகத்தான் போகமுடியும் என்று சொன்னதற்கு பிறகு வேகமாக போக முடியுமா? முடியாது.
அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுந்து காலை கடனை முடித்துவிட்டு சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றில் முன் உண்ட உணவு இருக்கக் கூடாது. மிகுதியான உணவும் ஆபத்து. அதே சமயத்தில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பட்டினி போட்டா செத்து போயிடுவ. அதிகமாக சாப்பிட்டா மூச்சுக்காற்று இலயப்படாது. இதை,
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
    திருக்குறள் – மருந்து – குறள் எண் 944
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
       திருக்குறள் – மருந்து – குறள் எண் 942
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
       திருக்குறள் – மருந்து – குறள் எண் 945
இப்படியெல்லாம் திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் சொல்லியிருப்பார். இதெல்லாம் யோகிகளுக்காக சொல்லப்பட்டது. திருக்குறளில் உலகநடை இருக்கும். ஆனால் மிகப்பெரிய இரகசியம் உள்ளே இருக்கும். யாருக்கும் தெரியாது.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
  திருக்குறள் – ஆள்வினை உடைமை – குறள் எண் 612
     இதெல்லாம் அணுகுண்டு மாதிரி இருக்கும். எப்படியப்பா இந்த கவியெல்லாம் நினைப்பு வருது? நீ யாருடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?  கவியெல்லாம் உடனே வரும். நினைத்தவுடன் கவி வரும்.
     இவர்களெல்லாம் கல்விக்கடல். இராமதேவர் கல்விக்கடல் அல்லவா, இராமலிங்க சுவாமிகள் கல்விக்கடல் அல்லவா, அகத்தீசன் கல்விக்கடல் அல்லவா, வள்ளுவப்பெருமான் கல்விக்கடல் அல்லவா, திருமூலதேவர் கல்விக்கடல் அல்லவா. அவர்களுடைய கல்விக்கு ஈடு இணையே இல்லை.
     ஒரு ஞானியின் கல்விக்கு ஈடு இணையே இல்லை. அவர் கல்விக்கு எல்லையே இல்லை. அவர்களெல்லாம் எல்லையில்லா கல்வி கற்றவர்கள். நீ வணங்கியவர்களெல்லாம் எல்லையில்லாத கல்வி கற்றவர்கள், பேராற்றல் பெற்றவர்கள். நீ வணங்குகிறவர்கள் விரிந்தால் பூமிக்கும் ஆகாயத்திற்குமாக விரிவார்கள். எங்கும் வியாபித்து உள்ளவர்கள். அருட்கடலாக இருப்பவர்கள்.
     அவர்கள் அருளுக்கு எல்லையேயில்லை. அவர்கள் கல்விக்கு எல்லையேயில்லை. நல்ல குணத்துக்கு எல்லையே இல்லை. எல்லையில்லா பேராற்றல் பெற்ற பெருந்தகையாளர்களான ஞானிகளை அல்லவா நீ வநந்குகிறாய். உனக்கு உணர்த்தாமல் போவார்களா?
     ஆசான் இராமதேவரை அல்லவா கேட்கிறாய், எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா! வாசிப்பழக்கத்தைப் பற்றி நீரே என் அகமும் புறமும் இருந்து உணர்த்த வேண்டும். இப்படி கேட்க வேண்டும். இப்படி கேட்காவிட்டால் நம்மால் செயல்பட முடியாது.
     அதிகாலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடனை முடித்துவிட்டு இராமதேவரை வீழ்ந்து வணங்க வேண்டும். திருவிளக்கு வைத்திருக்கலாம். விளக்கு இல்லாவிட்டாலும் குற்றமில்லை. இப்போதுதான் மின்சார லைட் உள்ளது. வெளிச்சம் இருக்கும். வீழ்ந்து வணங்க வேண்டும்.
     பிராணாயாமம் செய்வதற்கு திசை முக்கியமல்ல. கீழ்திசையாகவும் இருக்கலாம். மேல்திசையாகவும் இருக்கலாம். ஆனால் வடதிசையாக இருப்பது நல்லது. வடதிசை நோக்கி பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது. அங்கு காந்த சக்தி அதிகமாக இருக்கும். மனம் லயப்படும். வடதிசை நோக்கி அமர்ந்து படித்தால் மனம் ஒருநிலைப்படும்.
     வெறும் வயிற்றோடு இல்லாமல் சிறிது தண்ணீர் குடித்து வீழ்ந்து வணங்க வடதிசை நோக்கி பத்மாசனம் இட்டு அமர வேண்டும். இராமதேவா, அகத்தீசா, நந்தீசா, திருமூலதேவா நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா. அடியேன் வாசியோடு வாசியாக கலந்து அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     உணவு பழக்கத்தையெல்லாம் முன்னமே சொல்லியிருக்கிறேன். இது தான் முதல் நிலை பயிற்சி.
     மூச்சுக்காற்று வசப்படுவது அல்லது மூச்சுக்காற்று பழக்கம் என்பது தொடர்பயிற்சி தான். இந்த வாசிப்பழக்கத்திற்கு மூலதனம் பக்தியும், புண்ணியமும் ஆகும். பாவம் செய்துவிட்டு வாசிப்பயிற்சியை மேற்கொள்ள முடியாது.
     இதுவரை நீங்கள் மாமிசம் உண்டிருக்கலாம். உயிர்கொலை செய்திருக்கலாம். இதையெல்லாம் ஆசான் இராமதேவரை வீழ்ந்து வணங்கி பாவியை மன்னித்து அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் அவர் மனம் இரங்கி அருள் செய்வார்.
     “நீ புலால் உண்டதெல்லாம் நான் அறிவேன். என்றைக்கு புண்ணியவானாகிய என் திருவடியை வணங்கினாயோ அன்றே நான் உனக்கு அருள் செய்வேன். நேற்று வரையில் நீ செய்த குற்றத்தை உணர்ந்துவிட்டாய் அல்லவா, என்று உன் குற்றத்தை உணர்கிறாயோ, அன்றே நீ என் திருவடியை பற்றுவதற்குரிய தகுதியை பெற்றுவிட்டாய்” என்று மகான் இராமதேவர் நமக்கு சொல்லி அருள் செய்வார்.
     “இராமதேவர் ஐயா, கடந்த காலத்தில் நான் செய்த பாவங்களை எல்லாம் உன் திருவடிக்கே சமர்ப்பிக்கிறேன். அன்றே நீ என்னை தடுத்து ஆட்கொண்டிருக்க வேண்டும். நான் புலால் உண்ணும்போது, பார்த்திருக்கலாம். நான் உயிர்கொலை செய்யும்போது பார்த்திருக்கலாம். நான் பொய் சொல்லும்போது தடுத்திருக்கலாம். நான் பிறர் மனம் புண்படுபடி பேசும்போது தடுத்திருக்கலாம். அன்றே நீ என்னை தடுத்திருக்கலாம். அன்றே நீ என்னை கைவிட்டு விட்டாய்”
     இதற்கு என்ன காரணம் என்று நான் மகான் இராமதேவரிடம் கேட்டேன்.
     மகான் இராமதேவர் அன்று நீ என்னை நினைக்கவில்லை. அதனால் உன்னை கைவிட்டேன். இன்று நீ என்னை நினைத்துவிட்டாய். என் திருவடியையே வணங்கிவிட்டாய். என் நாமத்தை சொல்லிவிட்டாய். அதனால் இனி நான் உன்னை கைவிடமாட்டேன்.
                என்னை நீ, “அன்னையே, கருணை பொருந்திய இராமதேவா, என் தாயே தயவுடைய தெய்வமே, தயாபரனே, தேவாதிதேவா, இராமதேவா என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் தாயே என்று கேட்டாய் அல்லவா. அதனால் நான் உன்னை என் பிள்ளையாக ஏற்றுக்கொண்டேன்.
     “நான் உயிர்கொலை செய்த பாவி, புலால் உண்ட பாவி, அடாது செய்த பாவி என்று என்னிடம் (இராமதேவர்) மனம் உருகி கேட்டாய் அல்லவா, அதனால் உன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டேன்”
     “இன்று முதல் நீ என் மகன். உன்னை கைவிடேன் மகனே. உன்னை இரட்சிக்கிறேன். குற்றத்தை மன்னிப்பதே எங்களுடைய இயல்பு. குற்றங்களை குணமாக கொள்ளும் பண்புடைய மக்கள் *ஞானிகள் வர்க்கம்). நான் மட்டுமல்ல எல்லா ஞானிகளும் குற்றங்களை குணமாக கொள்வார்கள்”.
     “ஐயா, நான் குற்றம் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. நான் தவறு செய்து விட்டேன் ஐயா. இதுநாள் வரையிலும் அறியாமையால் நான் செய்த பாவத்தை நீ (இராமதேவர்) மன்னிக்கக் கூடாதா ஐயா. என்னை தடுத்திருக்கலாமே” என்று இராமதேவரிடம் கேட்டான்.’
     “நீ என் திருவடியை தொடர்ந்து பற்றியிருந்தால் நான் தடுத்திருப்பேன் என்றார் மகான் இராமதேவர்.
     சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே.
திருமந்திரம் – அருளுடைமையின் ஞானம் வருதல் – கவி எண் 1649
சிவன் அருளால் வினை சேரகிலாமை – நீ தினமும் பூஜை செய்தால் அய்யோ! நமது மகன் தவறு செய்ய போகிறான், மனைவியை கொடுமை செய்ய போகிறான். அறியாமை காரணமாக அவள் மனதை நோக செய்கிறான். மகனே இதை செய்யாதே, என்று உடனே நான் சொல்லுவேன்.
எவ்வுயிர்க்கெல்லாம் நீ இடையூர் தரப் போகிறாயோ, அவற்றையெல்லாம் நான் தடுத்து ஆட்கொள்வேன். “சிவன் அருளால் வினை சேரகிலாமை” அப்ப இராமதேவர் வேறோ? சிவன் வேறோ? திருமூலதேவர் வேறோ? ஆறுமுகப்பெருமான் வேறோ? அகத்தீசன் வேறோ? எல்லாம் ஒன்று தான் இவர்களெல்லாம் சிவம்தான்.
சிவம் என்பது அக்னி என்று பொருள். உடம்பிலிருக்கும் குளிர்ச்சிக்கு சக்தி என்று பெயர். உடம்பிலிருக்கும் வெப்பத்திற்கு சிவம் என்று பெயர். நீ தினமும் பூஜை செய்தால் உன்னை மனிதன் ஆக்குவான். தினம் பூஜை செய்தால் உன்னை எந்தளவு காப்பாற்ற வேண்டுமோ, அந்தளவு காப்பாற்றுவேன்.
காலையில் எழும்போதே, “தாயே, இன்று என் பேச்சால், செய்கையால் உணர்வினால், வேறுவேறு வகையால் நான் பிறருக்கு பாவம் செய்யாதிருக்க அருள் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் உன் திருவடிக்கே சமர்ப்பிக்கிறேன் என்று கேட்கணும்.
“பயப்படாதே, மகனே” என்று ஆசான் திருமூலதேவர் சொல்லியிருக்கிறார்.
சிவன் அருள் கூறில் அச்சிவலோகமாமே – ஞானிகள் ஆசி பெற்றால் அது சிவலோகம். இல்லையென்றால் அது அவலோகம் (வீணான உலகம்)
சிவலோகம் என்றால் வறுமை என்று பேச்சே இருக்காது. சிவலோகம் என்றால் நோய் என்ற பேச்சே இருக்காது. சிவலோகம் என்றால் பகை என்ற பேச்சே இருக்காது. சிவலோகம் என்றால் பொறாமை என்ற பேச்சே இருக்காது. சிவலோகம் என்றால் பேராசை இருக்காது. சிவலோகம் என்றால் வன்சொல்லுக்கு (கடுஞ்சொல்) அங்கே இடமில்லை. சிவலோகம் என்றால் சினம் இல்லை. சிவலோகம் என்றதால் சாந்தமான மனமாக இருக்கும். சாந்தமே குடிகொண்டு இருப்பது எதுவோ அதுவே சிவலோகம். தீராத நோய், தீராத பகை, தீராத பிரச்சனைகள் இதெல்லாம் நரகம்.
பிரச்சனை இல்லாத மனிதன், எங்கு பார்த்தலும் அன்பர் கூட்டம், எங்கு பார்த்தாலும் நல்லோர்க கூட்டம், சாந்தமே குடிகொண்ட நெஞ்சம், நோயில்லா வாழ்வு, அச்சமில்லா வாழ்வு. இதுவே சிவலோகம்.
இந்த சிவலோகத்திலே இன்னொன்றும் உண்டு. யோகிகள் சொல்லொண்ணா ஆனந்தத்தில் இருப்பார்கள். ஜோதியில் கலந்திருப்பார்கள். இது சிவலோகம். இவ்வுலகம் ஞானிகளுக்கு பொன்னுலகம், பாவிகளுக்கு இது புண்ணுலகம்.
என்ன ஏற்படுமோ? எது ஏற்படுமோ? என்ற அச்சம் பாவிகளுக்கு இருக்கும். கடன்காரன் வந்து அவமானப் படுத்துவானே, நிலம், வீடு ஜப்திக்கு போய்விடுமோ, நாளைக்கு ஏலம் விடுவானோ அய்யோ! என்ன செய்வோம், என்ன செய்வோம் என்று ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டிருப்பது புண் உலகம் (துன்பமான உலகம்).
ஞானிகள் பொன்னுலகத்தில் இருக்கிறார்கள். எப்ப எல்லாம் பற்றற்ற நிலை வந்ததோ, அப்பவே அவன் சிவலோகத்தில் இருக்கிறான் என்று பொருள். இது கடினமானது என்பது எங்களுக்கும் தெரியும். கடினத்தையும் ஞானிகள் சுலபமாக்கி கொடுப்பார்கள். அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய மகான் இராமாலிக சுவாமிகள் நமக்கு கடினத்தையும் இலகுவாக்கி கொடுப்பார்கள்.
அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்று சொன்னாலே அருள் செய்வார்கள். அருட்பாவை படித்தாலே மூலக்கனல் தோன்றும் என்றார், இராமலிங்க சுவாமிகள். அருட்பா அவருடைய தன்மை இன்னது என்று வெளிப்படுத்துவது. அருட்பா அவருடைய கருணை, அதில் அவ்வளோ விஷயங்கள் இருக்கு.
என்னய்யா பிராணாயாமத்தை பற்றி பேசாமல் மறுபடியும் இதை பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். எல்லாவற்றிருக்கும் அடிப்படை பக்திதான், நல்ல மனசுதான். மனதில் சாந்தமும், சிந்தனையில் சாந்தமும் இல்லாமல் பிராணாயாமம் செய்து என்ன செய்ய போகிறாய்?
எப்ப வாசிப்பயிற்சி சொல்வேன் என்று ஏங்கித் தவிக்கிறார்கள். அந்த ஏக்கமெல்லாம் எங்களுக்கும் தெரியும். அடிப்படை இல்லாமல் பிராணாயாமம் செய்து என்ன செய்ய போரிரீர்கள்? நான் பேசுவதுதான் அடிப்படை. நான் பேசியது எல்லாம் உங்களுக்குத் தெரியும், மற்ற இடத்தில் எல்லாம் சொல்ல மாட்டார்கள்.
எடுத்தவுடன் பத்மாசனம் போடு என்பார்கள். இதுதான் பிராணாயாமம் என்பான். மூச்சுக்காற்றை இப்படி இழு, அப்படி இழு என்பான். இதெல்லாம் அவர் எதுக்கு சொல்கிறான்? அவன் ஆசானாக வேண்டுமென்று ஆசைப்படுகிறான். ஒரு ஆர்வத்தின் காரணமாக முதல்ல பத்து பேர் வருவாங்கள். அதில் நான்கு பேர் நோய் வாய்ப்படுவான். இது இப்படித்தான் இருக்கும்.
சில இடத்தில் பிராணாயாமம் என்று போர்டு வைத்திருப்பான். இங்கு போர்டை பார்த்துட்டு பத்து பெரு வருவான். இவன் செய்கையெல்லாம் அற்புதமாய் இருக்கும். இந்த செய்கையைப் பார்த்த உடனே இவன் மயங்கி விடுவான்.
என்ன அற்புதமான ஆசான், நமக்கு வந்தவுடனே யோகா பயிற்சி சொல்லி கொடுத்து விட்டார், என்று மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் இப்படி சொல்பவர்களை கண்டு ஏமாறக்கூடாது.
இவன் பக்தியை பற்றி பேசமாட்டான். புண்ணியத்தை பற்றி பேசமாட்டான். வயிற்றில் ஏற்கனவே உண்ட உணவு இருக்கும் போதும், மலச்சிக்கல் இருக்கும் போதும், வாசிப்பயிற்சியைச் செய்ய சொல்லுவான். பொதுவாக இளைஞர்களுக்கு இயல்பாவகவே உடம்பில் உஷ்ணம் இருக்கும். இப்படி மூச்சைக் கட்டும்போது மேலும் உஷ்ணம் அதிகமாகி மலச்சிக்கல் வரும்.
“உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு. ஐயா, உடம்பு எல்லாம் என்னவோ செய்யுது என்று சொன்னால் அதற்கு பிராணாயாமம் சொல்லிக் கொடுப்பவன். “இதெல்லாம் சகஜம்தான். இப்படி எல்லாம் சோதனை வரும், விடாதே பிடி” என்று சொல்வான். இப்படி ஒரு இருபது பேர் ஆஸ்பத்திரிக்கு போவான், கட்டில கெடப்பான்.
இவனுடைய நடிப்பை பார்த்துட்டு இன்னொரு நூறு பேர் வருவான். இவன் யோகி மாதிரி நடிப்பான். இப்படி நடிச்சே வேகுபேரை ஊருக்கு (சுடுகாடு) அனுப்பிடுவான். இதெல்லாம் பெரிய பாவம். நாம இப்படி எல்லாம் சொல்ல மாட்டோம்.
நாம் முதலில் பக்தியை போதிப்போம். அதன் பிறகு தானத்தையும் தியானத்தையும் சொல்லுவோம். பிறகுதான் யோகத்தை சொல்ல வேண்டும். இதுதான் முறை.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றுதான் அமைத்துள்ளார்கள். இப்ப யோகம் என்ற மூன்றாவது படியைப் பற்றி பேசுகிறோம். முதல் இரண்டு படியையும் தவிர்த்து விட்டு பேசி வருகிறேன்.
பேச்சின் சாரம் சரியை, கிரியை, யோகம், ஞானம் அடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்பது இந்த பேச்சின் சாரம். இதை ஏன் இங்கு பேசுகிறோம் என்றால் தமிழகத்தில் பிராணாயாமம் செய்வதில் ஆர்வமுள்ள தொண்டர்கள், மக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பேசுகிறோம்.
பிராணாயாமம் சொல்லித் தருகிறேன் என்று சொன்னால் அவனிடம் போகாதே. அவர்கள் உன் உடம்பை கெடுத்து விடுவார்கள். மலச்சிக்கல் வரும். மலச்சிக்கல் ஏற்பட்டால் இரத்தம் கெட்டுவிடும். இரத்தம் கேட்டுவிட்டால், அஜீரண கோளாறு வரும். அஜீரண கோளாறு வந்தால் அடிக்கடி பேதியாகும். பின் வெகு விரைவில் இறந்து போவான். “நீ இவ்வாறு கேட்டு விடாதே” என்று சொல்லுவதற்குத்தான் இவ்வாறு பேசிகிட்டு இருக்கோம்.
முதலில் பக்திநெறி கலந்த யோகத்தை சொல்லாமல் அன்பின் காரணமாக அவர்கள் நம்மை போற்ற வேண்டும் என்பதற்காகவும், அவருடைய பொருளாதாரம் நமக்கு கிடக்க வேண்டுமென்பதற்காகவும், நான் போக பயிற்சியை முதலிலே சொன்னால், நான் பெற்ற பயனை எல்லாம் இழந்து விடுவேன். நான் நரகத்துக்கு போவேன்.
முறை தவறி யோகப்பயிற்சி சொல்கிறவன் அடுத்த ஜெனம்த்தில் மலத்தில் மேய்கின்ற புழுவாக பிறப்பான். நாய், பன்றி, கழுதையாக பல ஜென்மங்கள் பிறக்க வேண்டி இருக்கும். ஊனமுற்ற நாயாகவும், பன்றியாகவும் பல ஜென்மங்கள் பிறந்து கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதற்கு பதிலாக கல்லியாகவும், எட்டியாகவும் பிறக்கலாம். தாவர வர்க்கத்தில் பிறப்பது நல்லதுதான். ஆனால், சந்தனம், தேக்கு, அகில் போன்ற உயர்ஜாதி மரமாக பிறப்பது நல்லது.
தாவர வர்க்கத்திலே கொடுமையானது கள்ளியும், எட்டியும் ஆகும். பிறந்தால் நல வாசனை திரவியமான மரூ, மரிக்கொழுந்து, மல்லிக, மனோரஞ்சிதம், மகிழம்பூ போன்ற வாசனை மலர்களாக பிறக்க கூடாதா அல்லது கனி தரும் மா, பலா, வாழையாக பிறக்க கூடாதா, அதெல்லாம் இல்லாமல் கேவலமான கள்ளியும், எட்டியுமாய் பிறப்பான். இப்படி பல ஜென்மங்கள் அல்லல்பட வேண்டியிருக்கும்.
இப்படி பல ஜென்மங்கள் அல்லல்பட்டு சாவதற்கா நான் பிராணாயாமம் சொல்லி தரவேண்டும். உங்களை மயக்கி அதன் மூலமாக நான் பொருள் திரட்ட வேண்டுமா. அதை கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ள மாட்டார். இராமதேவர் ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொள்ள மாட்டார்.
அவர் தயவால்தான், கருணையால்தான், ஆசியால்தான் உங்களுக்கு ஞானம் சித்திக்கும். எடுத்தவுடன் பக்திநெறியும் பின்பு மகான் இராமலிங்க சுவாமிகளையும், திருமூலதேவரையும், நந்தீசரையும், அகத்தீசரையும் திருவடி பூஜை செய்து பிராணாயாமம் செய்ய வேண்டுமென்று சொல்லாமலும், சுத்த சைவ உணவை மேற்கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டுமென்று சொல்லாமலும், ஜீவகாருண்யத்தை மேற்கொண்டு பிராணாயாமம் செய் என்று சொல்லாமலும், பக்தியை மேற்கொண்டு பிராணாயாமம் செய் என்று சொல்லாமல் நான் உங்களுக்கு பிராணாயாமம் சொல்லி கொடுத்தால் வருகின்ற கேடுகளை இங்கே சொல்லுகிறேன்.
தாவரங்களில் கீழ்தரமானது கள்ளியும், எட்டியும் ஆகும். நீர்வாழ் ஜந்துகளில் கொடூரமானது முதலையும். சுறாவும் ஆகும். அப்ப இவை இரண்டும் கேவலமானது. தாவரத்திலும் கேவலமான பிறவி, நீர்வாழ் ஜந்துக்களிலும் கேவலமான பிறவி பன்றி, நாயாக இருந்துதான் நான் செத்து மடிய வேண்டும். நாங்கள் இப்படி சாக விரும்புவோமா? மாட்டோம். இல்லை, உங்களைத் தான் இப்படி சாகவிடுவோமா? விடமாட்டோம்.
இங்கே உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கான பேர்கள் ஞானியாவர்க்ள. இங்கே உள்ளவர்கள் எல்லாம் முதலில் பக்தி செலுத்தி பிராணாயாமம் செய்வார்கள். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்வார்கள். சைவத்தை கடைப்பிடிப்பார்கள். எளிமையாக நடந்து கொள்வார்கள். இல்லையென்றால், திருவடிகளை வணங்கி என்னை பக்குவப்படுத்த வேண்டுமென்று கேட்டு கொள்ள வேண்டும். எனக்கு பக்குவம் அடைவதற்குரிய அறிவு இல்லை. என்னை பக்குவப்படுத்து என்று கேட்க வேண்டும்.
தேவரீர் திருவடிக்கு ஆளாகவும்
அட்டமா சித்தி தந்து அருள்புரியவும்
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும்
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும்
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு
நடனமிட அருள் புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள் புரியவும்
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.
                Q                                             -மகான் மஸ்தான் சாகிப் – அகத்தியர் சதகம் – 13
ஆசான் மஸ்த்தான் சாகிப் என்னை பக்குவ விசேடனாய் பக்குவப்படுத்தணும் என்று சொல்வார். பாவம் செய்யாது பக்குவப்படுத்து, பக்குவப்பட்ட தொண்டராய் இருந்தாலன்றி வாசிவசப்படாது. இப்போது பிராணாயாமம் சொல்லி தரப்போகிறோம். பிராணாயாமம் செய்தவுடனே ஞானி ஆயிடலாம் என்று நினைத்து ஏமாறவேண்டாம். குழந்தை தவழ்வது போல் இருக்க வேண்டுமென்று முன்னமே மகான் இராமதேவர் சொல்லிவிட்டார்.
சீசனாம் எனத்தேர்ந்தால் மௌனம்சொல்வார்
சிற்றெறுரும்பு ஊரையிலே கற்குழிந்தாப்போலே
பாசமங்கே வைக்கவைக்கப் பாவமெல்லாம்
பர்வதம்போல் பஞ்சுவைத்து அணுவளவுதீயை
நேசமுடன் வைத்தகதை போலேயாச்சு
நிலைத்துநின்ற குருவுக்கு மனங்கோணலாக
வேசைமனம் போலாகி அலையாதேநீ
வேதாந்த போலாகி அலையாதேநீ
மகான் கொங்கனமகரிஷி அருளிய கடைக்காண்டம் – 270
                நீ இப்ப இவ்வளவும் கேட்டு ஆசானுக்கே இடையூறு செய்தால் அதற்கு ஈடான கொடுமை இருக்கவே இருக்காது. யாரும் அப்படியிருக்க மாட்டாங்க “அடப்பாவி! இவ்வளவு உயர்ந்த பாதை காட்டிய நமக்கே இடையூறு செய்றானே” என ஆசான் நினைத்தால் அது அவனுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகிவிடும்.
     இப்ப வாசிப்பயிற்சி செய்றதை பார்ப்போம். காலையில எழுந்து காலைக்கடனை முடித்துவிட்டு பத்மாசனம் போட முடிந்தால் போடலாம். வினாத்தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். வலது பக்கம் மூச்சுக்காற்றை ஓம் அகத்தீசாய நம என்று மதிற்குள் சொல்லிக்கொண்டே மெதுவாக இழுக்க வேண்டும். பின்பு இடது பக்கம் மெதுவாக இழுத்து வலது பக்கம் மெதுவாக விடவேண்டும். இப்படி செய்தால் இதை ஒரு சுற்று என்று சொல்வார்கள். இப்படி செய்வதற்கு முன்னே ஆசானை வணங்க வேண்டும். சிறிது தண்ணீர் சாப்பிட வேண்டும், என்றெல்லாம் முன்னே சொல்லி இருக்கிறேன். இதன் பிறகு தான் மூச்சுக்காற்றை இழுக்க வேண்டும்.
    
பல இலட்சம்கோடி ஆண்டுகளாக ஆன்மாவை தொடவே இல்லை. இப்பதான் மூச்சுக்காற்றை இழுத்து ஆன்மாவை தொட்டு பார்க்கிறான். இப்படி செய்தவுடனே ஆசான் வந்துவிடுவார். இப்படி முதல்வாரத்தில் நாளொன்றிற்கு ஒரு சுற்று மட்டு செய்ய வேண்டும். அடுத்த வாரம் இரண்டு சுற்று வரணும். அடுத்த வாரம் மூன்றுசுற்று, அதற்கு அடுத்த வாரம் நான்குசுற்று செய்ய வேண்டும். இதுதான் ஆசான் இராமதேவர் எனக்கு சொலிக் கொடுத்தார். இது பொது வாசிப்பயிற்சியாக இருப்பதால் இராமதேவர் என்ன சொல்கிறாரோ அதுதான் செய்ய வேண்டும்.
ஆசானை வீழ்ந்து வணங்கி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நாம் சொல்றதவிட ஆசான் நமக்கு உணர்த்துவார். புண்ணியவானை வணங்கினால் புண்ணியவானாகலாம் உங்களுக்கு எல்லாம் பெரியவங்க ஆசியிருக்கு. நான் அறிந்த பேரின்பத்தை, கடந்து வந்த பாதையை இதில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் சில குறைகள் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் ஆசான் ஆசி இருக்க வேண்டும் என்று கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.
    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208993
Visit Today : 259
Total Visit : 208993

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories