எது திருக்கல்யாணம்
என்ற தலைப்பில் 08.11.1998 அன்று அருளிய அருளுரை
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்.
நாம் தினந்தோறும் ஆன்மீகத்தைப் பற்றி பேசி வருகிறோம். மற்றவர்கள் ஆன்மிகம் பேசுவதற்கும், நாம் ஆன்மீகம் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு.
கோவிலில் தெய்வங்களுக்கு பாலபிஷேகம், தேனாபிஷேகம் செய்யப்படுகிறது. கோவில்களில் தெய்வங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள். இதை நித்திய கல்யாணம் என்றும் சொல்வார்கள்.
நாமும் கல்யாணம் செய்கிறோம். அது எப்படி? இடகலையாகிய பெண் கலையையும், பின்கலையாகிய ஆண் கலையையும் புருவ மத்தியில் செலுத்துகிறோம். பின்கலையையும் ஆண் கலையையும் சேர்த்து வைத்தால் திருமணம்.
ஆக, இடகலையையும், பின்கலையையும் சேர்க்கக் கற்றுக் கொண்டவர்கள் சூரியனையும், சந்திரனையும் சேர்க்கக் கற்றுக் கொண்டவர்கள் ஆவார்கள்.
சூரியனையும், சந்திரனையும் சேர்த்தால் அமாவாசை என்று பொருள்படும். ஆண் கலையை சூரியன் என்றும், பெண் கலையை சந்திரன் என்றும் சொல்வார்கள். இதை எல்லோரும் செய்ய முடியாது.
இந்த உடம்பு கபத்தை உண்டு பண்ணும், நச்சுத்தன்மையாகிய சுக்கிலத்தை உண்டுபண்ணும், ஆணுக்கு சுக்கிலத்தையும், பெண்ணுக்கு சுரோணிதத்தையும் இந்த உடம்பு உண்டாக்கும்.
இந்த உடம்பு நமக்கு எதிரிதான். நமக்கு தொண்ணூற்றாறு தத்துவங்களும் எதிரிகளே. தத்துவக் குவியலும் எதிரிதான். ஆக இடகலையையும் பின்கலையையும் சேர்த்து வைத்தால் நமக்கு எதிரியாகிய உடம்பு நீங்கி விடும்.
நமக்கு எதிரியாகிய உடம்பு நீங்காமல், ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது. முதலில் எல்லா மனிதர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். மிருகாதிகளுக்கு இது தெரியாது. மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியது கபம். மனிதனுக்கு கடைசி காலத்தில் மூச்சுக்காற்றைக் கபம்தான் கட்டும். சிலபேர் கபம் கட்டாமலேயே சாகிறான், இளமையில் சாகிறான். எப்படி இருந்தாலும், அந்த கபம் என்று சொல்லப்பட்ட ஒரு அழுத்தமுள்ள, ஒரு சக்தி, ஒரு பொருள் சுவாசக்குழாயில் அடைத்துக்கொள்ளும்.
யோகிகள் கபத்தை அறுக்கிறார்கள். அதை மட்டுமல்ல, நச்சுத்தன்மையாகிய அசுத்தங்களையும் நீக்கிவிடுவார்கள். அப்படி இல்லையென்று சொன்னால் அவன் இந்த இடத்திற்கு வர முடியாது. அவனுடைய நோக்கம் உடம்பை அறிந்து, உயிரை அறிந்து, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள கேடுகளை அறிந்து நீக்குவதுதான். அதில் முதலாவது கபம்.
உடம்பும் நமக்கு விரோதிதான். ஆனால் உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தினம் சோறு சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், குளிக்கிறோம். இப்படியெல்லாம் செய்து உடம்பை காப்பாற்றிக் கொள்கிறோம். ஆனால் காப்பாற்ற வேண்டியது இந்த புற உடம்பு அல்ல.
இந்த புற உடம்பைக் காப்பாற்றிக் கொள்பவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. காப்பாற்றப்பட வேண்டியது உள்ளுடம்பாகிய உயிருடம்பு. அது சூட்சும தேகம். நாம் காண்கின்ற உடம்பு தூல தேகம், காண முடியாத உடம்பு சூட்சும தேகம். சூட்சும தேகத்தை அறிவால்தான் உணர முடியும்.
சூட்சும உடம்பை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் வாசி வசப்பட வேண்டும். வாசியாகிய மூச்சுக்காற்று லயப்பட வேண்டும். மூச்சுக்காற்று லயப்பட்டால்தான், கபத்தையும் அறுக்கும், அவத்தையும் (அவம்) அறுக்கும். இதை புரிந்து கொண்டவன்தான் ஆன்மீகவாதியாக இருக்க முடியும். மகான் திருவள்ளுவப்பெருமான் மிகப்பெரிய யோகி.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அக்திலார் மேற்கோள் வது.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 262
தவத்திற்கென்று ஒரு அறிவு இருக்கிறது. மற்றவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. அது என்ன அறிவு? அந்த அறிவு யாரால் கிடைக்கும்? அந்த அறிவு கொண்டு தவம் செய்வது? தவத்தின் நோக்கமே அவத்தை அறுப்பதுதான். அவம் என்கிற வினையை நீக்குவது.
உடம்பு தோன்றும்போது அவமும் சேர்ந்துதான் தோன்றுகிறது. அவம் என்றால் வீண். வீணான உடம்பும் சேர்ந்துதான் தோன்றுகிறது. இல்லையென்றால் உயிர் வளராது. ஆக தவமும் தவமுடையார்க்கு ஆகும். அவன்தான் அறிவுள்ளவன். இந்த ஏட்டு அறிவு பயன்படாது. ஏட்டு அறிவின்
துணை கொண்டு அவத்தினை அறுக்க முடியாது. அவம் என்ற வினையை நீக்க முடியாது. இதற்கு எந்த அறிவு வேண்டும்? அவத்தை நீக்கியவர்களுடைய அறிவு வேண்டும். மகான் திருவள்ளுவர், ஆசான் அகத்தீசர் இவர்களுடைய ஆசியை பெற வேண்டும். எல்லா ஞானிகளும் அவத்தை நீக்கியவர்கள்.
மகான் திருவள்ளுவப்பெருமான் அந்த வீணான உண்மையை அறிந்தார். ஏனென்றால் பெரியவர்களுடைய ஆசியில்லாமல், அவம் என்ற வீணான உடம்பை நீக்க முடியாது என்று அறிவதே சிறப்பறிவு. இதை ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்லுவார்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2
கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் என்றார். அவர்களுடைய திருவடிகள், நல்ல திருவடிகள் என்றார். வேறெந்த திருவடியும் நல்ல திருவடியாக இருக்க முடியாது.
வாய்மை – தூய்மை. ஆக தூய்மையான அறிவை உடையவனுடைய திருவடிகள்தான் நல்ல திருவடி. அந்த நல்ல திருவடி எமனை வெல்லும் வல்லமை உள்ளது, கபத்தையும் வெல்லும், அவத்தையும் வெல்லும். ஆக பெரியோர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆசான் ஞானபண்டிதர் போன்ற ஞானிகள்தான் பெரியோர்கள். இதை ஆசான் அருணகிரிநாதர் சொல்வார்,
கோழி கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுன்னவொட்ட டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 20
ஆக, பெரியவர்களை அறிமுகப்படுத்தினார். தான் அறிந்து கொண்டதனால்தான், ஆசான் ஞானபண்டிதரை பூஜை செய், ஆசான் அகத்தீசரை பூஜை செய் என்றார்கள். அவம் நீங்குவதற்காக ஆசான் அகத்தீசரை பூஜை செய்ய வேண்டும். இந்த உடம்பில் சொர்க்கமும், நரகமும் சேர்ந்தே இருக்கிறது. அவம் நீங்குவதற்கு தொடர்ந்து ஆசான் அகத்தீசரை பூஜிக்க வேண்டும்.
இந்த உடம்பில் நரகமும் சொர்க்கமும் சேர்ந்தே இருக்கிறது என்பதை அறிகின்றவன்தான் அறிவாளி. அவன்தான் ஆன்மீகவாதி. நரகத்தையும் சொர்க்கத்தையும் அறிந்து கொண்டு, நரகத்தை நீக்கி சொர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை உள்ளவன் எவனோ, அவன்தான் ஆன்மீகவாதி. இதை அறிந்து பேசுகின்றவர்தான் ஆன்மீகவாதி.
மற்றவர்கள்போல் அலங்காரப்பேச்சு பேசவும், பசப்பு வார்த்தை பேசவும் நாங்கள் இங்கே வரவில்லை. நாங்கள் அதுபோன்று பேசவும் மாட்டோம். எங்கள் வர்க்கமே அப்படி பேசாது. எங்கள் வர்க்கமல்ல, நமது வர்க்கமே அதை பேசாது.
ஆன்மாவைப் பற்றித் தெரியுமா? என்பர் அவனிடம் கேட்டால் அவனுக்கு தெரியாது. ஆன்மாவைப் பற்றி அறிந்தவன்தான் ஆன்மீகவாதி. ஆன்மாவைப் பற்றியிருக்கக் கூடிய நச்சுத்தன்மையை நீக்க வேண்டும். அந்த நச்சுத்தன்மயைத்தான் வீண், அவம் என்பார்கள். திருவடித்துனை இல்லாமல் நச்சுத்தன்மை நீங்காது. நச்சுத்தன்மையை நீக்க கற்றுக் கொண்டவன்தான் ஆன்மீகவாதி.
நாங்கள்தான் இதற்கு பாதை காட்ட வேண்டும். நாம் காட்டுகின்ற பாதை எமனை வெல்லும் வல்லமை உள்ளது, அது எவனையும் வெல்லும் வல்லமை உள்ளது. அவர்கள் எதுவும் செய்வார்கள். ஆக திருவருள் உண்டு. அதற்காக அகந்தையாக இருக்க மாட்டார்கள், எதையும் செய்வார்கள். இப்படி பேசுவது அகந்தை அல்ல. அவர்கள் பண்புள்ள மக்கள். ஆக திருவடி துணையைக் கொண்டு, தலைவனை எல்லா ஆண்மீகவாதிகளுக்கும் அறிமுகப்படுத்துவார்கள்.
ஆசான் அருணகிரிநாதர், மகான் திருவள்ளுவப்பெருமான், மகான் கொண்கனமகரிஷி தலைவன் திருவடியை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆக பெரியோர்களை வணங்குங்கள். ஆசி பெறுங்கள்.
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
– மகான் கொங்கணர் – கடைக்காண்டம் – கவி எண் 76
பொருள் திரட்டுவதற்கா? பொய்யான இல்லறத்திற்கா? தலைவனுடைய ஆசியைப் பெற வேண்டும். இதற்காக இல்லை. ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காக தலைவனுடைய ஆசியைப் பெற வேண்டும்.
அசுத்தமாகிய தேகத்தை அறிந்து, அதை நீக்கி அதை வெல்வதுதான் ஜென்மத்தை கடைத்தேற்றுவது என்றான். ஆன்மாவைப் பற்றி அறிவது உண்மையான ஆன்மிகம்.
தவமும் தவமுடையார்க்கு – புரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும். ஞானிகளிடத்து பக்தி செலுத்துகின்றார்கள். தலைவனிடத்து அன்பு செலுத்துகின்றார்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காக ஆசான் அகத்தீசர் மீது அன்பு செலுத்த வேண்டும். நீர் அடைந்த உண்மையை அடியேன் அறிந்துகொள்ள வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். தான் அறிந்த உண்மை எது என்று ஆசான் உணர்த்துவார். ஆசான் உணர்த்தினாலன்றி உணர முடியாது. அவம் நீங்க வேண்டும், தவம் சித்திக்க வேண்டுமென்று தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறான். அவம், தவம் என்பது என்னவென்று அறிந்து கொள்ள ஆசான் அகத்தீசரை கேட்டால், அவர்கள் உணர்த்துவார்கள்.
தவமும் தவமுடியார்க்கு ஆகும் அவம்அதனை
அக்திலார் மேற்கோள் வது.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 262
தக்க ஆசானுடைய வழிகாட்டுதல் இருக்க வேண்டும், இல்லையென்றால் பொங்கல், புளியோதரை வைத்து சாமி கும்பிட்டு சாப்பிட்டுப் போவான். கடவுளுக்கு திருமணம் செய்து வைப்பதல்ல நமது நோக்கம்.
நாம் திருமணம் செய்கிறோம். இடகலையாகிய பெண் கலையையும், பின்கலையாகிய ஆண் கலையையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தி வைக்கிறோம். அதுதான் உண்மையான திருமணம். ஆக இப்படி சேர்த்துக் கொண்டவன்தான், அமாவாசையை அறிந்தவன். அன்றிலிருந்து அவனுக்கு
வளர்பிறை என்று சொல்வார்கள். வளர்பிறை அது, தேய்பிறை அல்ல.
இதைப்பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும். எல்லோருக்கும் புரியுமா என்று கேட்டால், புரியாது என்பது எங்களுக்கும் தெரியும். எப்போது புரியும்? எந்த அளவிற்கு ஞானிகளிடம் நெருங்குகிறாயோ, எந்த அளவிற்கு உருகுகிறாயோ, அந்த அளவிற்கு உணர்த்தப்படும். வீண்பொழுது போக்க முடியாது. வீண்பொழுது போக்குகிறவர்களுக்கு அவமாகப் போகும். தவத்தினை உடையவர் யார்? தவத்தைப் பெறுகின்றவன் எப்படி இருக்க வேண்டுமென்று கேட்டான். ஒவ்வொரு நாளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நாட்களை வீணாக்கக் கூடாது.
வீண்பொழுது போக்கக் கூடாது என்பது ஒரே நாளில் வருமா என்றால் வராது. அதுவும் எங்களுக்குத் தெரியும்.
எப்படி ஒரு தலைவி, தலைவன் மீது அன்பு செலுத்துகிறாளோ அதுபோல தொடர்ந்து ஞானிகள் மீது அன்பு கொண்டு, இவன் உருக வேண்டும். இது எப்போது வரும்? தொடர்ந்து தினம் பூஜை செய்தால்தான் வரும். ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்ல வேண்டும். ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லி சொல்லி, தெளிவடைய வேண்டும். ஆசான் அகத்தீசர் நாமத்தை தினசரி சொல்லி வந்தால்தான் அந்த உண்மை புலப்படும், தெளிவு வரும். ஆக இதுதான் உமை.
தலைவனைப் பற்றி அறிந்தவர்கள், உயிரையும், உடம்பையும் சேர்க்க கற்றுக் கொண்டவர்கள். அப்படி உடம்பையும் உயிரையும் சேர்க்க கற்றுக்கொண்டவர்கள்தான் உண்மைப்பொருளை அறிவார்கள். உண்மைப்பொருளைஅறிந்தவன்தான் உடம்பையும் உயிரையும் சேர்ப்பான்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 340
இப்பொழுது உடம்புக்கும் உயிருக்கும் தொடர்பில்லை. ஆகவே புகுந்து கொள்ள இடமில்லையோ? என்றார் ஆசான் திருவள்ளுவர்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 338
உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள நட்பு, முட்டைக்கும் குஞ்சுக்கும், அந்த ஓட்டிற்கும், குஞ்சுக்கும் உள்ள தொடர்பு போன்றது என்றார். அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்படி சேர்த்துக் கொண்டவர்கள் ஞானிகளிடத்து பக்தி செலுத்து என்று சொல்கிறார்கள். ஆக நாம் இதையெல்லாம் ஒவ்வொரு நாளும் பேச வேண்டும். தொடர்ந்து இப்படி பேசும்போது தெளிவு வரும். அன்பர்கள் ஞானிகள் அருளிய நூல்களை எடுத்து தினம் படிக்க வேண்டும்.
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
– திருமந்திரம் – சற்புத்திர மார்க்கம் – கவி எண் 1496
தினம் திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள் படிக்க வேண்டும். ஞானிகள் அருளிய நூல்களை படிக்கும்போதுதான் பெரியவர்களை தொடுகிறார்கள் என்று அர்த்தம். பெரியோர்கள் ஆசி இருந்தால் உடம்பையும் உயிரையும் சேர்க்கலாம்.
திருமந்திரம், திருக்குறள் போன்ற ஞானநூல்களை படித்துத் தெளிவடைய வேண்டும். ஞானிகள் நூல்களை படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் தெளிவு வரும்.
திருக்குறள் முற்றுப்பெற்ற முனிவர் ஆசான் திருவள்ளுவர் எழுதியது. திருப்புகழ் எழுதியவர் மிகப்பெரிய ஆசான் அருணகிரிநாதர், திருமந்திரம் எழுதியவர் மிகப்பெரிய ஆசான் திருமூலதேவர். இவர்களுடைய திருவடியை வணங்கி, ஞானநூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். சும்மா படித்தால் புரியாது. அது என்ன அவ்வளவு லகுவாக இருக்கிறதா என்ன?
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே
– திருமந்திரம் – ஆகமச்சிறப்பு – கவி எண் 60
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் – தலைவன், தான் அறிந்த உண்மையை, அமுது போன்று படைத்து வைத்திருக்கிறான்.
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது – கல்வி, அறிவு, திறமைகள், செல்வம் இருந்த போதும் சரி, எல்லா அறிவும் இருக்கும் மேலான மக்களும் இதை அறியமாட்டார்கள்.
விண்ணில் அமரர் – அப்படியென்றால் அமரர்கள் என்பவர்கள் ஆகாயத்தில் இல்லை. அவர்கள் மேலான மக்கள், புண்ணியம் செய்த மக்கள் இவர்களுக்கு எல்லா வகையிலும் கல்வி, அறிவு, கேள்வி, திறமை, வியூகம், பண்புகள் அத்தனையும் இருக்கும், எல்லா செல்வமும் இருக்கும், உடல் ஆரோக்கியம் இருக்கும், உடம்பைப் பற்றி அறிந்து கொள்வான்.
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
அது எல்லாம் நீர் மேல் எழுத்து என்பார். அது போன்று இருக்கக் கூடிய நூலை, புரிந்து கொண்டு நீ படிக்க வேண்டும். நூலை படிப்பதற்கு தக்க ஆசான் துணை இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் உண்மை ஆசானை நாட முடியுமா? தேவையில்லை. உண்மையான ஆசானை இனம் கண்டு பிடிக்க முடியவில்லை. இனம் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு லகு அல்ல.
மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்புகொண்டு
வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
பார்த்தா லுலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே.
– மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 19
ஏனய்யா உலக ஆசானை நாடிக் கொண்டிருக்கிறாய்? தேவையில்லை. ஆசானாக யாரை அறிமுகப்படுத்த வேண்டும்? இதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகின்றோமே! எங்கு பார்த்தாலும் “ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! உலகமெல்லாம் போற்றும் தலைவன் உத்தமன், ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லியிருக்கிறோம்.
ஞானிகள் ஆசியில்லாமல் நூலறிவு நமக்கு வராது. இதை புரிந்து கொள்ள வேண்டும். பக்தி செலுத்தினால் பரம்பொருளை அறியலாம். ஞானிகளுடைய திருவடியே துணை! அதை நற்றாள் என்று சொல்வார்.
இந்த ரகசியம் திருக்குறள் படிப்பவனுக்குத் தெரியும். திருக்குறளை எழுதியவர் முதுபெரும் ஞானி என்றும், அவர் மரணத்தை வென்றவர் என்றும், எதையும் செய்யும் வல்லமை உள்ளவர் என்றும் எண்ணுகின்ற அறிவு வேண்டும்.
நற்றாள் – என் திருவடியே நற்றாள் என்று அவன் உணர்வான் என்பார். ஆசான் திருவள்ளுவருக்கு இது தெரியும். எனவேதான் அவர் சொல்கிறார்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2
திருக்குறளைப் பற்றி புரிந்து கொண்டவன், நிச்சயமாக என்னுடைய திருவடியைப் பற்றிய ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொல்வான் என்று சொல்வார்.
நற்றாள் – நல்ல திருவடி. நற்றாள் என்பது எங்கேயோ இல்லை. அவருடைய ஆசி, அவருடைய திருவடியே நற்றாள் என்பான்.
ஆக திருக்குறளைப் படிப்பார்கள் அறிந்துகொள்ள வேண்டியது, இது கடவுளால் செய்யப்பட்டது. கடவுளால் செய்யப்பட்ட திருக்குறளைத் தொடும்போதே, ஆசான் திருவடியை தொடுவதாக நினைக்க வேண்டும்.
நற்றாள் – நன்மை தரக்கூடிய தாள், எமனை வெல்லும் தாள், அவத்தையும், கபத்தையும் அறுக்கும் தாள், ஆசான் திருவள்ளுவருடைய திருத்தாள்.
ஆக திருவடித் துணை இருந்தால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை புரிந்து கொள்ளலாம்.
நமது சங்கம், சுத்த ஆன்மீகத்தைப் பற்றி பேசுகின்ற சங்கம். சுத்த ஆன்மீகம் என்பது, தோன்றும்போது அசுத்தமாகத் தோன்றியதை, முடிவில் சுத்தமாக்குவதாகும்.
இந்த சங்கம் ஆன்மாவைப் பற்றியிருக்கக் கூடிய, அசுத்தத்தை அறிகின்ற சங்கம். நாம் முற்றுப்பெற்ற ஞானிகளை, தலைவனை அறிமுகப்படுத்துவோம். இதுதான் உண்மையானது என்று சொல்வோம்.
ஐயனே போற்றி போற்றி அருள்பெற்ற தேவே போற்றி
மெய்யனே போற்றி போற்றி மெய்சுடர் அணிந்தாய் போற்றி
கையனே போற்றி போற்றி காசினி முனிவா போற்றி
உய்யனே எனையாட் கொண்ட உந்தியில் உதிக்குந்தேவே
உந்தியிலுதிக்குந்தேவே ஒருபொருள் உகந்தாய் போற்றி
சிந்தையில் நினைந்த போதே திருநாட மிட்டாய் போற்றி
வந்தித்தேன் உந்தன் பாதம் வானமுந் திறந்தாய் போற்றி
அந்தித்தேன் குருவே ஐயா அடியினைப் போற்றி போற்றி.
– மகான் புலத்தியர் – கவி எண் 3
சிந்தையில் நினைந்த போதே திருநாட மிட்டாய் போற்றி – சிந்திக்கும்போதே ஞானிகள் வந்து அருள் செய்வார்கள். நினைப்பதற்கு முன்பாக நிற்கும் அய்யன், சிந்தையில் நினைந்த போதே திருநடமிட்டாய் போற்றி என்றார். ஞானிகள் நினைப்பதற்கு முன்னே வந்து நிற்கக் கூடியவர்கள். இதுதான் உண்மை. ஞானிகள் கூடவே இருக்கிறார்கள். குடிலில் நாம் பேசும்போது, நிறுத்து என்று சொல்வார்கள். இதுதான் இந்த தன்மை, இதுதான் சுத்த ஆன்மீகம். ஏனய்யா என்றால், நான் இருக்கிறேன், என்ன விசயம் என்பார். இதை எப்படி மக்கள் அறிவது? அவர்களுடைய ஊழ்வினை காரணமாக அவர்களால் அறிய முடியாது. இதை ஆசான் அருணகிரிநாதர் சொல்வார்,
கோழி கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுன்னவொட்ட டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 20
மக்களுடைய வினைப்பயன், பாவம் மிகுதியானதனாலே, அறியாமை மிகுந்திருக்கும். அறியாமை மிகுந்திருப்பதனாலே, அவநம்பிக்கை இருக்கிறது. அவநம்பிக்கை இருப்பதனால் திருவடியைத் தொடமுடியாது. உண்மைப்பொருளை அவர்களாலே உணர முடியாது. சராசரி மக்களுக்கு இது எப்படி புரியும்? இது அவ்வளவு லகுவாக இல்லை. சராசரி மக்கள் அவ்வளவு லகுவாக உள்ளே போக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். சராசரி மக்கள் பூஜை செய்தால்தான் அந்த நிலைமையை அடைய முடியும். பூஜைக்கே மனம் லயப்படவில்லையே அய்யா. சராசரி மக்கள் பூஜை செய்கிறான். ஆனால் மனம் லயப்படவில்லை. இதற்கு என்ன செய்வது?
உங்கள் வல்வினை நோய் ஊழிற் பெருவலி யுன்னவொட்டாது என்கிறார் ஆசான் அருணகிரிநாதர். வல்வினை நோய் ஊழின் பெருவலி என்றார். முன் செய்த பாவங்கள் மிகுதியாக இருப்பதனால், சிந்திக்க விடாது. உன்ன ஒட்டாது என்றால் சிந்திக்க ஒட்டாது. ஆக சிந்திக்க முடியாது.
சராசரி மக்கள் இதுபோன்ற உண்மைப்பொருளை அறிந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை கேட்க வேண்டும். ஆனால் இங்கே வரமுடியுமா என்றால் அது முடியாது. நம்பிக்கை வருமா, வராது. அதுவும் எங்களுக்கு தெரியும்.
ஊழிற் பெருவலி யுன்னவொட்ட டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 20
உங்கள் அத்தமெல்லாம் என்று செல்வத்தைப்பற்றி சொல்வார். அத்தம் என்றால் செல்வம். செல்வம் பெருகியிருந்தால் இன்னும் பிரச்சனை.
செல்வமும், அதே சமயத்தில் உத்தியோகமும் நல்ல வாய்ப்பும் இருந்தால் போதும், சுத்தமாக அவனை மடக்கிவிடும். ஒரு பெரும் பதவி, பெரிய செல்வம். புகழ் வாய்ந்த வாழ்க்கை எப்படி கிடைத்தது என்று அவர்களுக்கு புரியவில்லை. அது நல்வினை காரணமாக வந்தது.
ஆக நாம் இப்போது பல இடங்களில் “ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம!” என்று எழுத சொல்லியிருக்கிறோம். இப்படி ஏனய்யா, எழுத வேண்டும்? சராசரி மக்களால் இதை அறிந்து கொள்ள முடியாது.
சராசரி மக்கள் அறிந்து பூஜை செய்து, தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியவில்லை. துன்பம் வருவதற்கு முன்னே, சிந்திக்கவொட்ட மாட்டேன் என்கிறான்.
தலைவனை நேசிக்க மாட்டேன் என்கிறான். கடைசி நேரத்தில் புண்ணியம் முடிந்து, உத்தியோகம் பாழ்ப்பட்டு, செல்வமும் இழந்து, உடம்பும் பாதிக்கப்பட்டு, சர்வமும் இழந்த பிறகு, வருகிறான். இவன் சிரித்துக் கொண்டிருப்பான். “நல்ல வாய்ப்பு இருந்தபோதே ஏன் இழந்துவிட்டாய்? நீ நாளை வீணாக்கிவிட்டாய்” என்பார்.
ல்வினை நோய் ஊழிற் பெருவலி யுன்னவொட்ட டாதுங்க ளத்தமெல்லாம் – வசதி வாய்ப்புள்ள காலத்திலே அவர்களால் அதைப் பிடிக்க முடியவில்லை. நலிந்து மெலிந்து அல்லற்பட்டு வந்து கேட்கும்போது, “நாம் ஒன்று செய்ய முடியாது” என்று தலைவன் சொல்வார்.
ஆக சராசரி மக்கள், ஓடி ஆடி திடமாக இருக்கும் காலத்தில், இளமையாக இருக்கும் காலத்தில் பக்தி செலுத்த வேண்டும். இளமை இருக்கும்போது யோகநெறியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் யோகம் செய்பவன், அழிந்தே போவான். பக்தி செலுத்தி, தினம் தியானம் செய்து ஆசான் நாமத்தை சொல்ல வேண்டும். ஆனால் அதுதான் முடியவில்லையே! எவ்வளவு நேரம் உட்கார்ந்து பூஜை செய்வது, ஐந்து நிமிடம் பூஜை செய்வதற்குள் மனதுக்குள் எத்தனை போராட்டம்! ஐந்து நிமிடம்தான் நாமத்தை சொல்லி பூஜை செய்வான். ஐந்து நிமிடம் சொல்வதற்குள் ஆட்டம் கண்டுவிடும்.
இரண்டு மூன்று வருடம், நாமத்தை சொல்லுவான். அப்படி சொல்வதற்குள்ளேயே பெரிய லாபத்தை எதிர்பார்ப்பான், வாசி வசப்படணும், ஞானியாக வேண்டுமென்பான். ஆகவே முன் செய்த பாவங்களால்தான், சராசரி மக்களால் இதனை நெருங்க முடியவில்லை. பல ஜென்ம வாசனை இருக்க வேண்டும். சான்றோருடைய தொடர்பு இருக்க வேண்டும். சான்றோர்களுடைய தொடர்பு இருந்தால்தான் சராசரி மக்கள் தலைவனுடைய திருவடியைப் பற்ற முடியும்.
ஆசான் திருமூலதேவர் ஆடுதுறையில் அடக்கமானார். அவர்கள் பல இடங்களில் இருப்பார்கள். அப்போது தொண்டர்கள், “ஐயா! நீரெல்லாம் ஒளி உடம்பு பெற்ற ஆசான், உமது தோற்றத்தைக் கண்டாலே, உம்மை பார்த்தாலே பாவம் தீரும். எத்தனையோ பஞ்சமாபாவிகள் உன் திருவடியை, உங்களை பார்க்கும்போதே, அருள் பெற்றிருக்கிறார்கள்” என்று ஆசானிடம் கூறினார்கள். இங்கு அருள் பெற்றிருக்கிறார்கள் என்றால், அறிவு பெற்றிருக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கே அறிவு, அருள், அன்பு என, ஆக உம்மைக் காணும்போதே அன்பர்கள் உண்மைப்பொருளை பெறுகிறார்கள்.
பெரும் ஆற்றல் பெற்ற நீர், எங்களை விட்டுப் பிரிந்தால் எங்கள் நிலைமை என்ன? என்று கேட்டார்கள். “உண்மைதான், எங்களால் நடமாட முடியாது. அமிழ்தபானம் உண்ணுவதால், கனத்த தேகம் நீங்கி, லேசாக, பறக்கக் கூடிய தேகமாகிவிட்டது. ஆகவே நாங்கள் கீழே நடந்தால், பாதங்கள் பூமியில் படாது, லகரியாகிறது உடம்பு. இயல்பாகவே, நாங்கள் அடங்கியாக வேண்டும். உங்களுக்காக ஆசான் சமாதியாகிவிட்டார் என்பதற்காக, உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக நான் இங்கே தங்குகிறேன்” என்றார் ஆசான் திருமூலர்.
“எங்களுக்கு வேறு கதியே இல்லையா, இப்பேர்ப்பட்ட ஆசான் தன்னலமற்ற ஆசான், மிக்க தயவுள்ள ஆசான், அறிவு பொருந்திய, அறிவில் சிறந்த ஆசான், அருள் பொருந்திய ஆசான், கேட்பதெல்லாம் தரக்கூடிய வல்லவர், நீர் இருந்து இந்த உலகத்திற்கு தொண்டு செய்யாமல், நீர் இப்படி மறைந்தால், நீர் எங்களை விட்டுப் பிரிந்தால், எங்கள் நிலைமை என்னாகும்” என்று அன்பர்கள் கேட்கிறார்கள்.
“அஞ்சேல் பிள்ளைகளே! நீங்கள் நினைத்தால் அப்போதே வருவேன்.” என்றார். அது கருணை! திருமந்திரத்தில் முக்கியமான ஒரு கவி இது.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங்
கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.
– திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2667
நீ எங்கே நினைத்தாலும், அந்த இடத்தில் நான் வருவேன் என்றார். அன்பர்கள் கேட்பதுபோல், சராசரி மக்கள் நினைத்தவுடன் ஆசான் வருவார். நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை – நீ எந்த வினாடி நினைக்கின்றாயோ அந்த நேரத்தில், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, கல்வி அறிவே இல்லாதவனாக இருந்தாலும் சரி, ஆசானை நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும்போது நான் வருவேன் என்றார். இதை நாம் உங்களுக்கு சொல்லத்தான் வேண்டும். நாங்கள் இதற்குதான் வந்திருக்கிறோம்.
“ஓம் அகத்தீசாய நம! ஓம் நந்தீசாய நம! ஓம் திருமூல தேவாய நம! ஓம் கருவூர் தேவாய நம! என்று எங்கு பார்த்தாலும் எழுத சொல்லியிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் ஆசான் நாமம் எழுதியிருக்கிறது. இதேபோன்று எல்லா இடத்திலும் எழுத வேண்டும். மேலும் ஆசான் திருமூலதேவர் “என்னை அழைத்தால் போதும்” என்றார்.
எண்ணவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாழைபதஞ் சித்தியாமே.
– திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
என்னை அழைத்தால் எனக்கு முன்பாக தலைவன் வருவாரென்று அவரே சொல்கிறார்.
எண்ணவே நீயழைக்க எனக்குமுன்னே எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை – இப்பொழுது அவள் நமக்கு நச்சுத்தன்மையை, துஷ்டத்தன்மையை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். துஷ்ட எண்ணத்தைக் கொடுக்கக் கூடிய அவள், நல்லது செய்ய வருவாள். ஆக அனைத்தும் எங்களுக்குத் தெரியும் என்பார்.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்று இங்கே சொன்னார். அது யாராக இருந்தாலும் சரி. எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, “ஓம் திருமூலதேவா” என்றால், அப்போதே ஆசான் வருவார். ஆனால் சொல்ல வைக்க வேண்டும். பத்தாயிரம் ஞானிகளின் திருஉருவப்படங்களை எங்கு பார்த்தாலும் ஒட்டியிருக்கிறோம், வெளிமாநிலத்திலெல்லாம் ஒட்டியிருக்கிறோம். ஆக எங்கு பார்த்தாலும், “ஓம் அகத்தீசாய நம! ஓம் நந்தீசாய நம” என்ற ஞானிகள் நாமம் இருக்கிறது.
“ஓம் அகத்தீசாய நம! ஓம் நந்தீசாய நம! ஓம் திருமூலதேவாய நம! ஓம் இராமலிங்க தேவாய நம! என்று இந்த நான்கு மகான்களின் நாமங்களையும் தினமும் நாமஜெபம் செய்தால், நினைத்ததெல்லாம் கைகூடும். இல்லறத்தான் நன்மை அடைகிறான். அவனுக்கு வறுமை இல்லாத வாழ்வு அமையும், அச்சம் இருக்காது, ஆசான் நாமத்தை சொன்னால், அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். எந்த வாகனத்தில் சென்றாலும் ஒன்றும் ஆகாது. அவனை துஷ்ட மிருகங்களோ, துஷ்ட தேவதைகளோ துஷ்ட ஜந்துக்கள் எதுவும் அவனை அசைக்க முடியாது. பகையெல்லாம் தொகையாக வந்தாலும், தூக்கி எறிந்துவிட்டுப் போவான்.
ஆக இந்த நான்கு நாமத்தை சொல்கின்றவனுக்கு அச்சமில்லை வறுமையில்லை, பகையில்லை என்றார். இந்த நான்கு மகான்கள் நாமத்தை மக்களை சொல்ல வைக்க போகிறோம்.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்றார். ஏனய்யா ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் என்ற பெயர் வைத்துள்ளீர்கள் என்றான். வருங்காலம் ஞானசித்தர் காலம் என்பதால்தான் அப்படி வைத்துள்ளேன். ஆக எல்லாமே ஒன்றுதான்.இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம் ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும் என்று சொல்வார்.
சராசரி மக்களாக இருந்தாலும் சரி, அவன் கற்றவனாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி ஆசானை வணங்க வேண்டும்.
மகான் பட்டினத்தார் கோடீஸ்வரர். ஒன்பது கோடி பொன்னை அள்ளித் தந்தவர். ஒன்பது கோடி பவுன் அல்லது ஒன்பது கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம்.
ஆக முன் செய்த நல்வினை காரணமாக, புண்ணியமும், தவமும் இருந்ததனாலே, செல்வத்தையும் தந்தார்கள், ஞானத்தையும் தந்தார்கள். இது எல்லோருக்கும் அமையாது. ஆனால் இங்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். செல்வமும் பதவியும் எல்லா வாய்ப்பும் இருக்கும்போது பூஜை செய்கிறான் என்றால் அவன் புண்ணியம் செய்திருக்கிறான்.
கோடீஸ்வரனாக இருப்பவன், பூஜை அறையில் உட்கார்ந்துகொண்டு நாமஜெபம் செய்வான். நீ எதற்காக பூஜை செய்கிறாய் என்று ஆசான் கேட்டார். அதற்கு அவன் செல்வம் பெருகவேண்டும் என்றான். சரி, இவன் உருப்படமாட்டான். இப்போதே நான்கு தலைமுறைக்கு தேவையான பொருள் இருக்கிறது. நான்கு தலைமுறைக்குத் தேவையான பொருள் இருந்தும் மீண்டும் கடவுளை செல்வம் வேண்டுமென்று கேட்பான். இவன் சுத்த மடையன் என்பார் ஆசான். இதை ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்வார்,
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றஅது
வேண்டாமை வேண்ட வரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362
கோடீஸ்வரனாக இருப்பான், ஆனால் பூஜை செய்வான். மகான் பட்டினத்தாரிடம் ஒன்பது கோடி பொன் இருந்தது. இதெல்லாம் உலக நடைக்காக வைத்திருக்கிறேன் என்றார், உலகநடைக்காக செல்வத்தைத் தந்திருக்கிறாய். ஆகவே, இந்த செல்வத்தை நானும் பயன்படுத்துகிறேன், மேலும் ஏழை எளிய மக்களுக்காகவும் பயன்படுத்துகிறேன் என்று ஆசானிடம் சொன்னார்.
இது போன்ற அறிவு, கேட்காமல் நமக்கு வர வேண்டும். செல்வம் இருக்கிறது போதும் என்று எண்ண வேண்டும். ஆசான் கைவிடமாட்டன். ஆசான் கைவிடமாட்டன், செல்வத்தை விரும்பாதே. ஆனால் மீண்டும் மீண்டும் செல்வமே வேண்டுமென கேட்காதே என்று சொல்லித்தர வேண்டும். ஒருமணி நேரம், அரைமணி நேரம் பூஜை செய்துவிட்டு, மக்கள் நிலையில்லாத செல்வத்தை விரும்புகிறார்கள்.
ஆசான் திருமூலதேவர், நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்றார். இவன் எதற்கு நினைக்கின்றான்? நினைக்கும்போதே அவருக்குத் தெரியும். கலையில் பூஜை செய்வது பற்றி நேற்றே அவருக்குப் புரியும். இந்த உலகத்தில் யார் யார் நம்மை நினைக்கிறான்? யார் யார் சுத்த பூஜை செய்கிறான்? சுத்த பூஜை செய்கின்றவன், திருவடியைப் பற்றுகின்றவன் என்பதெல்லாம் ஆசானுக்குத் தெரியும்.
ஆசான் திருமூலதேவரையோ, மகான் நந்தீசரையோ, ஆசான் அகத்தீசரையோ புரிந்து கொள்கின்றவன் சுத்த பூஜை செய்கின்றான். திருவடியைத் தவிர வேறு கதியில்லை என்று எண்ணுவதுதான் சுத்த பூஜை. “வேறு வழியே இல்லை, வேறு கதியே இல்லை, இவர்கள்தான் நம்மைக் காப்பாற்றுவார்கள், அறிவும் ஆற்றலும் தருவார்கள், அறியாமை நீங்கி தெளிந்த அறிவை தருவார்கள்” என்று உணர்ந்து திருவடியைப் பற்ற வேண்டும்.
ஆக, நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்று ஆசான் திருமூலர் சொல்வார். எப்படி நினைக்க வேண்டும் என்பதுதான் முன் செய்தவினை. அதை புரிந்தவர் சொல்கிறார். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை – எதற்காக நினைக்க வேண்டும்? இனி பிறவாதிருக்க வேண்டும். எந்த உடம்பைக் கொண்டு? இந்த உடம்பைக் கொண்டு பேசிக்கொண்டிருக்கலாம். இப்பொழுது நாம் தாங்கியிருக்கும் உடம்பு ஒரு உடம்பா? இது உடம்பல்ல. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் இந்த உடம்பில்லாமல் முடியுமா என்றால் அதுவும் முடியாது. இந்த உடம்பைத் தாங்கியா அங்கே போக முடியும்? இதை விட்டுவிட்டுதான் போக வேண்டும்.
ஆசான் அகத்தீசரை நினைக்க வேண்டும். ஆசான் அகத்தீசரை தினமும் பூஜை செய்கிறோம். அடியேன் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும், அடியேன் மனமாயை அற்றிட வேண்டும், உன் திருவடியை தொடர்ந்து பற்றி பூஜை செய்து வெற்றி பெற வேண்டும். இதற்கு நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும். இந்த அறிவையும் நீர்தான் தர வேண்டுமென்று கேட்க வேண்டும். இதுநாள் வரை, பல்வேறு ஜென்மங்களில் நான் பூஜை செய்திருக்கிறேன். ஆனால் உங்களிடம் நிலையில்லாத ஒன்றைதான் கேட்டிருக்கிறேனே தவிர, நிலையான ஒன்றை கேட்கவில்லை. அப்படி கேட்க யாரும் எனக்கு சொல்லியும் தரவில்லை. நிலையான ஒன்றை நினைக்க வேண்டும். இதைத்தவிர வேறு ஒன்றைப்பற்றி நினைப்பவர்களைப் பற்றி ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
– திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் குறள் எண் 351
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் – நிலையில்லாத பொருளை நிலை என்று உணருகின்ற மக்கள், அறியாமை உள்ளவர்கள் அவர்களுக்கு மாணாப் பிறப்பு உண்டு என்பார். மாணாப்பிறப்பு என்றால் ஈனப்பிறப்பு. ஈனப்பிறப்பு என்பது துன்பமான பிறப்பு என்பான்.
ஆக செல்வம் இருக்கும்போதே நிலையானதை ஆசானிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். நிலையில்லாத ஒன்றை கேட்பது மடமை. திருவடியைப் பற்றுகின்ற நோக்கமே, இனி பிறவாதிருக்க வேண்டும். இதை சொல்லித்தர வேண்டும்.
அப்போ உலக நடையில் இருக்க வேண்டாமா? மனைவி மக்கள் இருக்கக் கூடாதா? இருக்கலாம் அதற்கு தடையில்லை. அவர்களெல்லாம் நமக்குத் துணையாக இருக்கின்றவர்கள். மனைவி, மக்கள், சுற்றத்தார் எல்லாம் துணையாக இருப்பார்கள். அவர்கள் உன்னை பூஜை செய்யவிடாமல் கையை பிடித்துக் கொள்கிறார்களா? ஞானிகளெல்லாம் அப்படி இருந்தவர்கள்தான். அவர்களுக்குத் தெரியும் இந்த ரகசியம். கடல் நீச்சல் தெரிந்தவர்கள். அப்படியே போய்க்கொண்டே இருப்பார்கள். உலகமக்களோடு இருந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கற்றுக் கொண்டவன் திருவடியைப் பற்றியதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கற்றுக்கொண்டான். அந்த கல்வியை தலைவன் தர வேண்டும். உலகநடையில் இருந்தாலும், தான் விடுபட்டு இருக்க வேண்டும். பார்த்தால் உலகத்தவர் போல் இருக்க வேண்டும்.
புளியம்பழம் எப்படி இருக்கும்? புளியும் ஓடும் தனியாக இருக்கும். தாமரை இலை எப்படி இருக்கும்? தண்ணீரில் இருந்தாலும் தண்ணீர் ஒட்டாது. பிள்ளைபூச்சி எப்படி இருக்கும்? சேற்றிலேயே இருக்கும், ஆனால் உடம்பில் சேறு ஒட்டாது. ஆக ஒருவன் பூரணமாக சித்தி பெறும் வரையில் உலகத்தை விட்டு போகக் கூடாது. இந்த அறிவை ஆசான் தரவேண்டும்.
காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.
– மகான் பட்டினத்தார் – திருவிடைமருதூர் – கவி எண் 1
ஆக, அன்புள்ளவன் எங்கே வேண்டுமானலும் இருப்பான். உலகநடையில் இருந்துகொண்டே வெற்றிபெற வேண்டும். இந்த அறிவை ஆசான் தர வேண்டும். இல்லையென்றால் கற்பனை செய்துகொண்டு மனிவி மக்களை விட்டு விட்டு, காட்டில் சுற்றிக் கொண்டிருப்பான்.
பகலில் கொல்லிமலை ஏறுவான். இரவு நேரத்தில் விஷஜந்து அவனைக் கொன்றுவிடும். இப்படி எத்தனையோ ஜென்மங்கள். சாவு நல்ல சாவுதான். இருந்தாலும் விபரம் தெரியவில்லை. யார் பேச்சை அவன் கேட்டான். அவன் இஷ்டத்திற்கு போய்க்கொண்டிருப்பான்.
“ஐயா எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னுடைய நாமத்தை சொல்கிறேன். அதனால் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். ஆனால், உன்னிடம் என்ன கேட்கவேண்டுமென்று தெரியவில்லை. யாரும் எனக்கு சொல்லித்தரவில்லை. உலகமக்கள் எனக்கு உணர்த்தவில்லை. ஆன்மீகவாதிகள் சொல்லவில்லை. அவன் வெறும் ஜால்ரா பேர்வழியாக இருந்துவிட்டுப் போய்விட்டான். உலக ஆன்மீகவாதிகள் சொல்லாததனால் நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று ஞானிகளிடம் கேட்க வேண்டும். இப்படி வேண்டுகோள் வைக்க அவனுக்கு சொல்லித்தர வேண்டும்.
“ஓம் அகத்தீஸ்வரா! உன் நாமத்தை சொல்ல பெரும் பாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் உங்களிடம் என்ன கேட்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.” என்று ஆசானிடம் சொல்ல வேண்டும்.
“பிறவாதிருக்க வேண்டும். அதற்குள்ள அறிவும், பரிபக்குவமும் எனக்குத் தர வேண்டும். என்னை ரட்சிக்க வேண்டும்” என்று அவன் கேட்க வேண்டும். இதுபோன்று கேட்டால் சராசரி மக்களும் வந்து விடுவார்கள். இதுபோன்ற வேண்டுகோளை, தலைவன் திருவடியைப் பற்றி கேட்க வேண்டும். இது கேட்கக் கூடிய வேண்டுகோள். இப்படி கேட்டால் சராசரி மக்களும் முன்னேறலாம். நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்றார். அதே பாடலில் உலகமக்கள் அத்தனை பேரும், முன்னேறலாம் என்று சொல்லியிருக்கிறார். யாராக இருந்தாலும் நாம் காட்டுகின்ற பாதையை பின்பற்றிச் சென்றால், உலகமக்கள் அத்தனை பேரும் சித்தி பெறலாம்.
நம் சங்கம் காட்டுகின்ற பாதை, தெளிவான பாதை. இது சுத்த ஆன்மீக சங்கம். சுத்த ஆன்மிகம் எது? அசுத்த தேகத்தைப் புரிந்து அசுத்தத்தை நீக்கி, வெற்றி கண்டவர்கள் நாமெல்லாம். நான் மட்டுமல்ல, எல்லா அன்பர்களும் அந்த நிலைக்கு வருவார்கள். நமது சங்கம் இதைத்தான் சொல்லும். எனவே நமது சங்கம் சுத்த ஆன்மீக சங்கம்.
ஆசானை தொடர்ந்து நாமஜெபம் செய்து, தினமும் தொடர்பு கொள்கிறார்கள். சலிக்காமல் தொடர்பு கொள்கின்ற மக்கள் நிச்சயமாக தன் உடம்பை சலித்து எடுத்துவிடுவார்கள். ஆகவே ஆசானை கேட்க வேண்டும். “ஓம் அகத்தீஸ்வரா! நான் முன் செய்த வினையின் காரணமாக எனக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியவில்லை. அவைகளை உணர்ந்து கொள்ள நீரே அருள் செய்ய வேண்டும்” என்று ஆசானை கேட்க வேண்டும்.
ஆசான் அருணகிரிநாதர் சொன்னாரல்லவா!
கோழி கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுன்னவொட்ட டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 20
ஆசான் அருணகிரிநாதர், மகான் திருமூலதேவர், மகான் மாணிக்கவாசகர், மகான் பட்டினத்தார், மகான் தாயுமானசுவாமிகள் போன்ற ஞானிகளின் திருவடிகளை அவனால் பற்ற முடியவில்லை. இதற்கு காரணம், முன் செய்த பாவம் என்று ஆசான் அருணகிரிநாதர் சொல்கிறார். ஞானிகளிடம் திருவடியை பற்ற வாய்ப்புத் தரவேண்டும் என்று கேட்க வேண்டும்.
அதே சமயத்தில் தக்க ஆசான் சொன்னாலும் கேட்கமாட்டான். நாங்கள் சுத்த ஆன்மீகவாதி, தெளிவான ஆன்மீகவாதி. நாங்கள் அவத்தை நீக்கி தவத்தை செய்தவர்கள். நாங்கள் சொல்வதை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ கூடாது. எங்களை அப்படியே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக சித்தி பெறுவான். காரணம் நாங்கள் தெளிந்து, உணர்ந்து முற்றுப் பெற்றவர்கள். இப்படி அகந்தையாக பேசுகிறோம் என்று நினைக்கக் கூடாது. முற்றுப் பெற்றவர்களாகிய நாங்கள் சொல்வதை மறுபரிசீலனை செய்யாமல், உடனே செய். இதுதான் வழி.
“மனப்போராட்டங்கள், கடன் சுமை, தொட்டது துலங்கவில்லை, பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நான் என்ன செய்வது? மேலும் பூஜை செய்ய மனமா லயப்படவில்லை என்றான். இதெல்லாம் எங்களுக்குத் தெரியும். இதற்காக தடுமாற்றம் வேண்டியதில்லை என்றார்.
கவலைப்படாதே! ஆசானை பிடித்துக் கரையேறிக்கொல்ளலாம். ஆசான்தான் உன்னை ரட்சிப்பான், கடன்சுமையை தீர்ப்பான், மன அமைதியை தருவான், உடல்நோயை தகர்த்தெறிவான், நல்ல நட்பைத் தருவான், நோய்நொடியில்லாத மனைவியாக அமைவாள், அப்படியே நோய்நொடி இருந்தாலும் மாற்றிவிடுவார்கள், முரண்பட்ட பிள்ளைகள் பண்புள்ள பிள்ளைகளாக மாறுவார்கள், தொடர்ந்து துலங்கும்.
“ஆக மனம் லயப்படாமைக்கும், மன அமைதி இல்லாமைக்கும் காரணம் எங்களுக்குத் தெரியும். வறுமையும், பிணியும், பிரச்சனையும், கடன் சுமையும், தடுமாற்றமும், வஞ்சனை, பித்தலாட்டங்கள், பேயாட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனை அவனுக்கு இருக்கிறது. அதனால் மனம் லயப்படவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இத்தனைக்கும் இடையிலும் நீ ஆசான் நாமத்தைச் சொல்ல வேண்டும்” என்றார்.
இந்த குணக்கேடுகள் எல்லாம் ஆசான் நாமத்தை சொன்னால் வீழ்ச்சியடைந்துவிடும். ஆசான் நாமத்தைச் சொன்னால் பகை பொடிப்பொடியாகும். ஆசான் நாமத்தைச் சொன்னால் பல்வேறு பிரச்சனைகளெல்லாம் பொடிபட்டுப் போகும்.
ஆகவே, நாங்கள் சொல்வதை மாற்றக் கூடாது. இது கட்டளை! உத்தரவு! குடிலாசான் சொன்னால் அது கட்டளை, உத்தரவு என்று நினைக்க வேண்டும். ஆக, மென்மையாகத்தான் பேசுவோம். இதுதான் மார்க்கம். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
– மகான் கொங்கணர் – கடைக்காண்டம் – கவி எண் 76
இங்கே நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்றார். ஆக பெரியோர்களைப்பற்றி சொல்லி, நாங்கள் உங்களுக்கு காட்டுகின்ற பாதை தெளிந்த பாதை; இந்த பாதையை பின்பற்றி வாருங்கள் என்பது கட்டளை. எப்படி பூஜை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொடுப்போம். இப்படி ஆசான் நாமத்தை சொல் என்று சொவோம்.
ஆக நீங்கள் அத்தனைபேரும் அறியாமையிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முறையை கையாள வேண்டும், பூஜை செய்ய வேண்டும். மனது லயப்பட வேண்டும். மனம் லயப்படுகின்றவனுக்கு வாசி லயப்படும். வாசி லயப்பட்டவனுக்கு ஆன்மா லயப்படும். ஆன்மா லயப்பட்டவனுக்கு உடம்பு லயப்படும். உடம்பு லயப்பட்டவனுக்கு எமன் லயப்படுவான். எமன் இப்போது நமக்கு பகைவனாக இருக்கிறான். பகைவனானாலும் லயப்பட வேண்டும். அப்ப எமன் யார் என்று கேட்டால், உடம்புதான். உடம்பு லயப்பட்டால் எல்லாம் லயப்படும். ஆக இதுபோன்ற தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானை
நாங்கள் சொல்வதும் அதுதான். ஆசானை நினைக்க வேண்டும். யாரை நினைத்தாலும் உடனே வருவார்கள். இதை “நிமிடத்தில் அண்டமெல்லாம் பாய்வோம் நாங்கள்” என்று சொல்வார்கள்.
நிமிடத்தில் உலகத்தை வளம் வருவோம் என்றார். எந்த தேகத்தைக் கொண்டு வருவார்கள்? சூட்சும தேகத்தை, ஒளி உடம்பைக் கொண்டு வருவார்கள். அவர்கள்தான் அப்படி வர முடியும். இங்கே இருப்பார்கள், அமெரிக்காவில் இருப்பார்கள், ரஷ்யாவில் இருப்பார்கள், இப்படி போய்க்கொண்டே இருப்பார்கள். ஆக சராசரி மக்கள் நினைக்க வேண்டும்.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானை
தலைவனை அப்படி சொல்கிறார். என்னை நினைத்துப்பார் உடனே வருவேன். நினைப்பதற்கு முன்னே வந்து நிற்பேன். ஆனால் எதற்கு என்னை கூப்பிட வேண்டுமென்று உனக்குத் தெரியும். ஆசானே திருமூலதேவா என்று அழைப்பதன் நோக்கம், இனி நான் பிறவாதிருக்க வேண்டும். அதற்குரிய அறிவை நீர் எனக்கு தர வேண்டுமென்று நினைக்க வேண்டும். சராசரி மனிதன் போல் என்னை நினைத்தால், நான் என் செய்வேன்? என்பார்.
தொடர்ந்து கேட்டு கேட்டு செல்வத்தைப் பெற்றிருக்கிறாயே தவிர, என்னிடம் எதைக் கேட்க வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லை.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானை
நான் சத்தியமிட்டு சொல்கிறேன். எல்லாம்வல்ல பரம்பொருள், ஜோதி வடிவாக உள்ள பரம்பொருள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்னை நினையுங்கள். என்னை மட்டுமல்ல யாரை நினைத்தாலும் சரி, நீ நினைப்பது யாராக இருந்தாலும் சரி, எல்லோரும் அருள் செய்வார்கள்.
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
நீ அழைப்பது ஆசான் சட்டமுனியாக இருந்தாலும் சரி, அருள் செய்வார்கள். அவர் பெரிய ‘மம்மா’. சட்டமுனி என்றால் பயில்வான். உனக்கு பிரச்சனை என்றால் என்னை கூப்பிட்டுப்பார் என்பார்.
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம் என்பார். ஆகவே அவரை அழைக்க வேண்டும். ஆசான் திருமூலர், “ஜோதியின் ஆணை, தலைவன் மீது ஆணை, எல்லாம் வல்ல பரம்பொருள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்” என்றார்.
“நாங்கள் முன்னேறி விட்டோம். ஆசான் நந்தீசரை, ஆசான் அகத்தீசரை பூஜை செய்தோம், வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே, நீங்களும் என்னை அழைத்துப்பாருங்கள். நானும் ஆசான் நந்தீசரும் ஒன்று. ஆசான் நந்தீசர் வேறு, நாங்கள் வேறு அல்ல. நாங்கள் எல்லோரும் ஒன்றுதான். ஆகவே, நீங்கள் என்னை அழைத்துப்பாருங்கள், அருள்செய்வேன் என்றார்.
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
– திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 351
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 321
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும் அறிவுதான் புல்லறிவு என்பார். ஆசானை அழைத்து, நிலையான ஒன்றை கேட்க வேண்டும்.
இனி பிறவாதிருப்பது நிலையானது. பிறந்து வளர்ந்து இறப்பது நிலையானது அல்ல. பிறவாத தன்மை ஒன்றை அடைய வேண்டும். அதற்கு இந்த உடம்புதான் துணையாக இருக்கும். இதை நீக்க முடியாது.
இந்த உடம்பை விட்டு விடாதே. இதன் துணை கொண்டுதான் அதை வெற்றிபெற வேண்டும். இதை துணையில்லாமல், அந்த உடம்பைக் காப்பாற்ற முடியாது. இதுபோன்ற அறிவை தருபவர் ஒன்று, ஆசான் அகத்தீசராக இருக்க வேண்டும், மகான் திருமூலதேவராக இருக்க வேண்டும். ஆசான் திருமூலதேவர் சொல்வார்,
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங்
கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.
– திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2667
தினைப்பிளந் தன்ன – உன்னுடைய ஆன்மீக அறிவு, கல்வி, கேள்வி, அறிவு, திறமை ஒரு கடுகத்தனைதான் இருந்தாலும் சரி, அல்லது சிறிய அளவாக இருந்தாலும் சரி அல்லது தினைப் பிளந்தன்ன, சிற்றறிவுள்ள மனிதனாக நீ இருந்தாலும் சரி, அந்த அறிவு உனக்குப் போதும்.
என்னை நம்பு என்றார்.
என்னை நம்பு நிச்சயம் உன்னை நான் காப்பாற்றுவேன்.
என்னை நம்பு உனக்கு சிறப்பறிவை தருவேன்.
என்னை நம்பு முன் செய்த பாவத்தை பொடியாக்குவேன்.
என்னை நம்பு மரணமிலாப் பெருவாழ்வை தருவேன்.
ஆக தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் – ஒரு கடுகளவு சிறியதாக அறிவு இருந்தாலும், சிறிய மனிதனாக இருந்தாலும் சரி, கல்வி, கேள்வி, அறிவு, திறமையில் சிறிய அளவாக இருந்தாலும் அந்த அறிவு உனக்கு போதும்.
என் திருவடியை பற்றினால், அத்தனை பெருமை உண்டாகும் என்கிறார் ஆசான் திருமூலதேவர். ஆக அத்தனை ஞானிகளும் வல்லமை உள்ளவர்கள். அத்தனை பேரும் வாசி வசப்பட்ட மக்கள். அத்தனை பேரும் தோசி உடம்பை நீக்கியவர்கள்.
நற்பூச்சந் தனவந்தர் பூசி – மிக
நன்றாக வைத்தாலும் நாற்றமே வீசி
எப்போதும் கொடுமைசெய் தோசி – என்றே
இவ்வுடல் வாழ்வுக ளியாவையும் வீசி.
– மகான் மஸ்தான்சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 5
இறக்கத் துணிந்து விட்டேன் என்றார். இவ்வுடல் வாழ்வு யாவையும் வீசி என்றார். இப்படி சொல்வதால் அவர் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருப்பார்.இவ்வுடல் வாழ்வு – இந்த உலக வாழ்வு, யாவையும் வீசி என்றார். இதை மகான் மஸ்தான் சொன்னார்.
ஆக அத்தனை பேரும் இவ்வளவு வல்லாமை உள்ளவர்கள்.தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் – தினையளவு சிறிய அளவாக இருந்தாலும் சரி,கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே என்றார். உனது திருவடியைத் தவிர வேறு கதி இல்லை என்று எண்ணுகின்ற அறிவு, அந்த அறிவுதான் உறுதி மிக்க மனம். உன்னைத் தவிர என்னை ரட்சிக்க யாருமில்லை என்று எண்ணுகின்ற அறிவுதான் உறுதி மிக்க மனம். உன்னைத் தவிர என்னை ரட்சிக்க யாருமில்லை என்று எண்ணுகின்ற அறிவுதான் உறுதி மிக்க மனம். அதுதான் உறுதி. அந்த உறுதி, எப்போது வரவேண்டும்? இறுதியில் வந்து என்ன செய்ய? உறுதி தக்க காலத்தில் வர வேண்டுமல்லவா?
காலங் கழிந்து காயம் நெகிழ்ந்து காற்றுமழிந்
தோலுந் துருத்தியும் நாடி நரம்புந் துவண்டபின்பு
சாலவுங் கற்பஞ் சாராது சார்ந்துஞ் சற்றில்லைகாண்
வாலிப மெய்திடுங் காலத்தில் கற்பம் வசப்படுமே.
– ஞானவெட்டியான் – கவி எண் 15
இளமை காலத்தில் தக்க ஆசானை தேடிக்கொள்ள வேண்டும். தக்க ஆசான், நான் இப்போது சொல்கிறேன். நானே தக்க ஆசான். என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். என்னுடைய கருத்துகளை கேட்டுக்கொள்ளுங்கள். அதைப் பின்பற்றி நடந்து பாருங்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். ஆக, கனத்த மனம் இதுதான். இதை வாழ்க்கையில் பெற வேண்டும்.
ஆகவே, அன்பர்கள் திருவடியைப் பிடித்து கரையேற வேண்டும். கனத்த மனமும் அதுதான். நாம் காட்டுகின்ற பாதை தெளிந்தபாதை, தெளிவான பாதை. இந்த காலகட்டம் தவறினால், வேறு எந்த காலத்திலும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காது. இப்படி பேசுவதை தற்பெருமையாக நினைக்க வேண்டாம். உண்மையைப் பேசுகிறோம். பொருளாதாரத்திற்காக இப்படி பேசவில்லை. உண்மையைப் பிடித்து கரையேறிக்கொள்ள வேண்டும். ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு நாங்கள் காட்டுகின்ற பாதை தெளிந்த பாதையாக இருப்பதினாலே நீங்கள் பிடித்து கரையேறிக் கொள்ள வேண்டும். வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு ஒரு நாள் நிகழ்ச்சிதான் என்று சொல்லிவிட்டார் ஆசான். சென்ற தீட்சை விழா போன்று ஒரே நாள்தான் நிகழ்ச்சி.
ஆகவே, நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம, ஒங்காரகுடிலாசான் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.
இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை, பெறுவதற்கு நிறைய உண்டு. ஆனால், தொடர்ந்து வர முடியுமா? என்பதுதான் உங்களுடைய வினைப்பயன்.
இங்கு நடப்பதெல்லாம் சுத்த ஆன்மீகம். சுத்த அறப்பணி. அந்த அறப்பணிக்கு வந்து மதிய நேரத்தில் அல்லது நேரம் கிடைக்கும்போது வந்து தொண்டு செய்ய வேண்டும். ஆசான் ஞானபண்டிதர், ஆசான் திருமூலதேவர், ஆசான் புஜண்டமகரிஷி, ஆசான் போகமகாரிஷி போன்ற ஞானிகள் நடமாடுகின்ற இடம்.
அந்த நேரத்தில் பிள்ளைகளெல்லாம் சாப்பிடுவதை காண்கின்ற நேரம் அது. பெரியோர்கள் வந்து அந்த இடத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் உலக மக்கள் வந்து பசியாறும்போது, நீங்கள் தொண்டு செய்ய வேண்டும். அப்படி தொண்டு செய்யும்போது ஞானிகள் உங்களை பார்க்கின்றார்கள். ஞானிகள் பார்வை உங்கள் மீது படுகிறது. அதன் மூலமாக பாவ விமோசனம் ஏற்படும். அதுபோன்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, தொண்டு செய்து, ஞானிகள் ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும். தொண்டு செய்தால் கண்டு கொள்ளும் சித்தனைத்தும் என்றார்.
தொண்டு செய்தால் ஞானிகள் பார்க்கிறார்கள். ஏனென்றால், இவர்கள், மேற்கொள்ளும் காரியம் தடைபடாது. என்ன காரணம்? நாமெல்லாம் தலைவன் சன்னிதானத்தில் இருக்கிறோம். ஆக, நாம் மேற்கொள்ளும் எந்த செயல்களும் தடைபடாது, தடையே வராது!
ஆகவே இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற அறப்பணிகளுக்கு தொண்டு செய்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். சில சந்தர்ப்பத்தில் மனம் சோர்வடைந்தால், இங்கே என்னிடம் வரலாம். இங்கே வந்து, “ஐயா! நிலைமை சரியில்லை என்று சொன்னால் நாங்கள் அதைப் போக்க ஏற்பாடு செய்வோம். நாங்களும் தினம் பூஜை செய்கிறோம். சும்மா ஏதோ என்று நினைக்காதீர்கள்.
நாங்கள் அரைமணி நேரம் கபத்தை அறுப்பதாக, நிஷ்டை மேற்கொள்வோம். தலைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்போது நம் சங்கத்திற்கு ஒரு நாள் இங்கே வந்துவிட்டுப் போனால் போதும். அந்த நிழல் பட்டாலே போதும். ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து விடுபடலாம். பாவம் நீங்காமல் அறியாமை தெளிவடையாது. அறியாமை நீங்காமல் செல்வம் பெருகாது. அது எந்த செல்வம்? அறிவுச் செல்வம்.
ஆகவே, வருகின்ற இந்த காலக்கட்டத்தில் ஒங்காரகுடிலை சுற்றி வந்தாலே போதும். தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய பாக்கியம். ஆகவே, அன்பர்களுக்கு நல்லகாலம் வந்துவிட்டது. அதற்குரிய நேரமும் சூழ்நிலையும் அமைந்து விட்டது. ஏனென்றால் நான் பேசும்போதே ஆசான் என்னை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறார். என்ன பேச வேண்டுமென்று முன்னமே தெரியும் ஆசானுக்கு. இன்றைய தேதி 08.11.1998 கிழமை ஞாயிற்றுகிழமை. இந்த தேதியில் என்ன பேச வேண்டுமென்பது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசானுக்கு தெரியும். அதற்குத்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பெரியோர் பெருமையை பேசு, பெரியோர் பெருமையை பேச பேச உலகமக்கள் உண்மைப்பொருளை அறிந்து கொள்ளட்டும். பேசு! பேசு! என்று சொல்வார்கள். சில சமயத்தில் நிறுத்து! நிறுத்து! என்று சொல்வார்கள். அதுவும் நடக்கும், இதுவும் நடக்கும். அப்படி பேசிக்கொண்டே இருப்போம். இதற்கு மேல் பேசாதே என்று சொல்வார்கள்.
ஆகவே, பேசிய இந்த கருத்துகளெல்லாம் லகுவாக, எல்லோரும் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்கும், கடினமாக இருக்காது. பழனி, திருப்பதிக்கு நாமும் போவோம், திருச்செந்தூர் போயிருக்கிறோம், சுவாமிமலை போய் இருக்கிறோம். ஆனால் நடந்து போக மாட்டோம். நம் அன்பர்கள் நடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
மொட்டையடிப்பதோ, அகு குத்திக்கொள்வதோ, அங்கம் புரளுவதோ இதெல்லாம் நமக்கு அவசியமில்லை. மலையேற வேண்டிய அவசியமில்லை. அப்படி ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். அவன் மேல் குற்றமில்லை. அது அவன் செய்த வினை.
“ஓம் அகத்தீஸ்வரா! என்னைக் காப்பாற்று!” என்று சொல்கின்ற அந்த சொல், வேண்டுகோளில் இருக்கக்கூடிய லாபம் அவனுக்குத் தெரியாது. அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். கூடை கூடையாக மலர் கொட்டுவான். குடம் குடமாக பால் ஊற்றுவான், அதைப்பற்றி நமக்கு அவசியமில்லை, அதைப் பற்றி சிந்திக்கத் தேவை இல்லை. அது அவனுடைய வினைப்பயன். என்ன சொன்னாலும் கேட்கமாட்டான்.
பல ஆண்டுகள், இப்படி தொண்டு செய்து கொண்டே வந்தால்தான் அது புலப்படும். இதெல்லாம் தேவையில்லை போலிருக்கிறது. நாமத்தைச் சொன்னால் நன்மை நடக்கும் என்ற எண்ணம் பிறகு வரும் என்றார். அன்பர்கள் நாங்கள் சொல்கின்ற கருத்தை பின்பற்ற வேண்டும், உங்களுக்கு வாசி வசப்பட வேண்டும், ஆன்மா லயப்பட வேண்டும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இதற்கு ஒரே உபாயம் ஞானிகள் திருவடிதான் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.