07.06.1998 அன்று பக்தியே வினையை வெல்லும் உபாயம் என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்திசாய நம
     அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     வினையை அகற்றினால் விவேகம் வரும். விவேகம் என்பது அறிவு. வினை என்பது சின்ன விஷயமல்ல. அது ஒரு புரியாத புதிர்.
      ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.  
    திருக்குறள் – ஊழ் – குறள் எண் குறள் எண் 380
முன்பு செய்த வினைகள் நல்வினையாகவும், தீயவினையாகவும் இருக்கும். அவரவர்கள் செய்கின்ற வினைகள், அவரவர்களை சார்ந்தவர்களின் தன்மையை பொறுத்தே இருக்கும். சான்றோர்களிடம் நட்பு கொண்டிருந்தால், நல்வினையை பெருக்கிக் கொள்ளலாம்.
தீயவர்களோடு நட்பை இருந்தால், தீயவினையைப் பெருக்கிக் கொள்வான். தீயவினையைப் பெருக்கிக் கொள்வது என்பது மிகுந்த பாவம்தான்.
சான்றோர்களின் துணையிருந்தால் அன்னதானம் செய்வார்கள், தலைவனை புரிந்து பூஜை செய்வார்கள், அறப்பணி செய்வார்கள், பாவம் செய்வதற்கு அஞ்சி நடப்பார்கள். ஆனால் அதே சமயத்தில் ஒருசிலர் தீமைக்கு அஞ்ச மாட்டான். காரணம் இவனுடைய பழக்க வழக்கங்கள்.
இவனுடைய வினை, சார்ந்திருப்பவர்களின் தன்மையைக் கொண்டே அமையும். முன் செய்த வினை, எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியாதல்லவா? ஆகவே, அந்த வினையைப் பற்றி அறிவதற்கு இந்த ஜென்மத்தில் புண்ணியவான்களை சார்ந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், போகும் பாதை சரியா? தவறா? என்று இவனுக்குத் தெரியாது. அவன் இஷ்டத்துக்கு செல்வான். மேலும் தீயவினையை செய்து கொண்டே இருப்பான். இதை மகான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்,
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
    திருக்குறள் – பேதைமை – குறள் எண் 835
என்ன இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்கள்? ஏன் வலியுறுத்தி சொல்கிறீர்கள்? என்று கேட்டான்.
ஒரு ஜென்மத்தில் ஒருவன் அறியாமையின் காரணமாக தேடிக்கொண்டே பாவங்கள், ஏழு ஜென்மத்திற்கும் தேவையான நரகத்தை அவனுக்குத் தரும். ஆகவே, இதை வலியுறுத்தி சொல்கிறோம் என்று மகான் திருவள்ளுவர் சொன்னார்.
ஒருமை – ஒரு பிறப்பில்,
செயலாற்றும் – செயல்படுகின்ற,
பேதை –  அறியாமை உள்ளவன்.
ஏழு ஜென்மத்திற்குத் தேவையான நரகத்தில் சென்று சிக்கிக்கொள்வான். இது அவனுடைய வினைப்பயன். அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. இது சான்றோர்கள், பெரியோர்கள் துணை இல்லாததனால் வந்த கேடு.
அதே சமயத்தில் பாவிகளுடைய தொடர்பு இருந்தால்? கேட்க வேண்டியதில்லை. அதுவும் ஏழு ஜென்மத்திற்கும் தேவையான நரகத்தைக் கொடுக்கும் என்றார்.
வினையின் காரணமாக ஒருவன் தன் இஷ்டத்திற்கு செயல்களை செய்து கொண்டே இருப்பான். அவனது செயல்பாட்டில் உள்ள நன்மை தீமையை அவனால் அறிய முடியாது. ஆனால் முன்செய்த வினையின் காரணமாக இவனுக்கு இந்த உண்மை தெரியாது. அவன் செய்த பாவம், அவன் கண்ணை மறைத்துவிடும். இதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னால் சான்றோர்களின் துணை வேண்டும்.
நாம் போகின்ற பாதை சரியா? தவறா? அதில் ஏதும் குறைகள் இருக்கிறதா? அவைகளால் வினைகள் சூழுமா? இப்போது நம் செயல்பாட்டில் நன்மை இருக்கிறதா? இல்லை தீமை இருக்கிறதா? என்பதை சான்றோர்களின் துணை இருந்தால்தான் அறிய முடியும். பெரியவர்கள் ஆசியோடு இதையெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஞானிகளின் ஆசியோடுதான் முன் செய்த வினையை வெல்ல முடியும். முன் ஜென்மத்தின் வினையைப் பற்றி அறிந்து கொண்டால்தான், இந்த ஜென்மத்தில் வினை செய்யமாட்டான்,
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
§  திருக்குறள் – பேதைமை – குறள் எண் 835
ஊழ் என்பது முன் செய்த வினை. பெருவலி – வலி என்று சொல்லாமல் பெருவலி என்றார்.
ஊழின் பெருவலி யாவுள? – ஊழின் வலிமையை விட யாவுள? என்றார் மகான் திருவள்ளுவர். வினையின் வலிமைக்கு நிகரில்லை. முன் செய்த வினையைப் பற்றி, அதனுடைய வலிமையைப் பற்றி, யார் அறிந்து கொள்ள முடியும்?
ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.  
    திருக்குறள் – ஊழ் – குறள் எண் குறள் எண் 380
மற்றொன்று சூழினும் தான்முந் துறும் – நாம் முன் செய்த பாவத்தை நீக்குவதற்கு என்னதான் முயற்சித்தாலும், அது அதன் வழி வந்து நிற்கும்.  
பத்து வயது பையனுடைய கண்ணை ஒருவன் குத்தி விட்டான். ஒரு கண் பாழ்பட்டுப் போனது. அது அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவரிடம் சென்றார்கள். அந்த கண்ணை எடுத்தால்தான் சரியாகும் என்றும் மருத்துவர் சொல்லிவிட்டார். அதே சமயத்தில் இவனைக் கொண்டுபோய் அறுவைசிகிச்சைக்காக படுக்க வைத்திருந்தார்கள். எடுக்க வேண்டிய கண்ணை விட்டு விட்டு, மருத்துவர் அடுத்த கண்ணை எடுத்துவிட்டார்.
ஒருவன் முயற்சிக்கிறான். ஒரு கண்தான் போக வேண்டியது அமைப்பு. ஆனால் இரண்டு கண்ணும் போய்விட்டது. முன் செய்த வினையைத் தீர்க்க முயற்சிக்கிறான். ஆனாலும் அந்த முயற்சியில் ஊழ் வந்து நின்று கொள்கிறது.
ஊழின் பெருவலி யாவுள? – வலி என்று சொல்லாமல், பெருவலி என்று சொன்னார். யார் எதிர்க்க முடியும்? மற்றொன்று சூழினும் தான்முந் துறும் – ஒரு முறையைக் கையாண்டாலும், அதுமுன்னே வந்து நின்று கொள்ளும் என்றார். அவ்வளவு பெரிய நிலை, அவ்வளவு பெரிய சூழ்நிலை.
முன் ஜென்மத்தில் நீ இப்படியெல்லாம் இருந்தாய். உன்னுடன் தொழிலில் கூட்டாளியாக இருந்தவனுக்கு துரோகம் செய்தாய், முன் ஜென்மத்தில் உன்னை நம்பி வந்த மனைவியை சித்திரவதை செய்து கொன்று விட்டாய் என்று வினை சொல்லாது. வினைக்கு பேசத்தெரியாது. பேசவே தெரியாது. அப்படி வினை பேசினால்தான் தப்பித்துக் கொள்வானே?
வினைக்கு பேசத்தெரியாது. அது இனம் புரியாமலேயே உடன் இருந்து கொண்டே இருக்கும். அது எந்தெந்த நேரங்களில் வேலை செய்யும் என்றான்? ஏதாவது நல்ல காரியத்தை தொடும்போது குறுக்கே வந்து நின்று கொண்டு செய்யவிடாமல் தடுக்கும். ஆனால் தீய காரியத்திற்கு துணை போகும். இதைத்தான் முன் செய்த வினை என்றார். இதை எப்படி வெல்வது? ஞானிகளெல்லாம் வினையை வென்றிருக்கிறார்கள். உண்மைதான் இதை யாரும் மறுக்க முடியாது. முன் செய்த வினையை ஞானிகள் வென்று விட்டார்கள்.
முன் செய்த வினையை ஞானிகள் வென்று விட்டார்களா? ஆமாம் வினையை வென்றார்கள். வினையை வென்றால் சிறப்பறிவு வரும். முன் செய்த வினை நீங்கியது. சிறப்பறிவு வந்தது. சிறப்பறிவு வந்ததால் மேலும் வினையைச் சேர்க்காமல் இருக்கிறான்.
முன் செய்த வினையைப் பற்றி அறிந்து கொள்கின்ற அறிவின் துணை கொண்டு முன் செய்த வினையை நீக்கினான்.
முன் செய்த வினையை வெல்வதற்கு ஏதாவது உபாயம் இருக்கிறதா? என்றால் உபாயம் இல்லை, வினையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஒன்றும் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் அவர்களை வினை விடாது, மற்றவர்களுக்கு உயிர் போகும். ஆனால் ஞானிகளின் அருள் பெற்ற இவனுக்கு உயிர் போகாது அவ்வளவுதான். உயிரோடு இருந்து முன் செய்த வினையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது சட்டம்.
காமத்தால், பொருள் வெறியால், ஜாதி வெறியால், ஆட்படையால், உத்தியோகத்திரத்தால், மதிநுட்பத்தால், அகந்தையால், தன்னடக்கம் இன்மையால் வினை சூழும். முன் வினையால்தான் கேடுகள் வரும். அவனவன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லது செய்யாமல், தீமை செய்தான். ஆட்படை இருந்தால் ஏவி விடுவான், உத்தியோகத்தில் இருந்தால் தனக்கு கீழ் உள்ளவர்களை பழிவாங்குவான். அதுதான் அவன் வேலை.
கடவுள் உனக்கு ஏன் ஆட்படையை கொடுத்தார்? ஒரு பாதுகாப்பிற்காக கொடுத்தார். ஆனால் அடியாட்களை வைத்து தன்னிடம் முரண்பட்டவர்களை அடிப்பதற்கு அல்ல. ஆனால் இந்த உண்மை அவனுக்குத் தெரியுமா என்றால் அவனுக்கு தெரியாது.
    
     பணபலம் எதற்கு கொடுத்தான்? மற்றவனுக்கு உதவி செய்து நல்வினையை பெருக்கிக்கொள்வதற்காக.
     இவன், ஆள் வைத்து ஒருவனுடையை காலை வெட்டிவிட்டான். இதற்கு இவனுடைய பணம் பயன்பட்டது.
     நல்லவனுக்குப் பொருள் சேர்ந்தால் நன்மை செய்து ஆசி பெறுவான். அவன்தான் பாவி ஆயிற்றே? முடிந்தவரை பாவம் செய்துவிட்டான். கொஞ்சம் முன்கோபக்காரனுக்கோ, பிறரை பழி வாங்கி அதன் காரணமாக மகிழ்ச்சி அடைபவனுக்கோ, பொருள் பலமும், ஆள்பலமும் சேர்ந்து விட்டால்? அதோடு சரி, அடுத்த ஜென்மத்தில் அவன் கேட்பாரற்று மூலையில் கிடப்பான். இப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
     தீய வினையை வெல்வது எப்படி? அறியாமையின் காரணமாகத்தான் வினைகளும், கேடுகளும் வந்தன. ஆட்படையாலும் வினை வரும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
     ஆட்படை, பணபலம், உத்தியோகம், உடல் வலிமை, அறிவுத்திறன் அல்லது மதி நுட்பம் போன்றவை முன் செய்த நல்வினையால் வந்தது.
     ஆட்படை கிடைத்தது முன் செய்த நல்வினை.
     நல்ல நட்பு கிடைத்தது புண்ணியம்தான்.
     உடல் ஆரோக்கியம் இருக்கிறது என்றால் புண்ணியம்தான்.
     மதி நுட்பம் இருக்கிறது என்றால் புண்ணியம்தான்.
     பொருள் வளம் இருக்கிறது என்றால் புண்ணியம்தான்.
     உத்தியோகம் இருக்கிறது என்றால் புண்ணியம்தான்.
    
     புண்ணியத்தால் கிடைத்த இந்த வாய்ப்புகளை ஒருவன் தீமைக்கும் பயன்படுத்தினால், உள்ள புண்ணியமும் போய்விடும், வினையும் சூழ்ந்து கொள்ளும்.
     முன் செய்த தீயவினைகள் அறியாமையை உண்டாக்கியது, தான் செய்ததையெல்லாம் அவனுடைய மனம் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட பெரியவர்களையும், ஞானிகளையும் வணங்கச் சொல்கிறோம்.
     பெரியவர்களெல்லாம் வினையை நீக்கியவர்கள். வினை இருந்தால் முன்னேற முடியாது, பிறவி வந்துவிடும். வினையை நீக்கியவர்கள் அவர்கள்.
     இவன் வினையை நீக்குவதற்குப் பாடுபடுகின்றான். இவனால் வினையைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. இவன் தன்னுடைய செயல்பாட்டில் உள்ள நன்மை, தீமையை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்.
     ஆசான் அகத்தியர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர் போன்ற ஞானிகள் வினை இல்லாதவர்கள். வினை இல்லாதவர்களை இவன் பூஜை செய்கிறான். அவர்களிடத்து, “வினையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்கிறான்.
     “சரி, நியாயமான வேண்டுகோள்தான். அது வேண்டும். இது வேண்டும் என்று கேட்காமல் வினையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று கேட்கிறானே, இது நியாயமான வேண்டுகோள்தான். வினையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்கும்பொது, ஆசான் மனமிரங்கி, “இது சாதாரண வேண்டுகோள் அல்ல” என்று இவனுக்கு சிறப்பறிவு தருகின்றார். ஆசான் அகத்தியரும், ஆசான் சுப்பிரமணியரும் இவனுக்கு சிறப்பறிவு தந்து, வினை எப்படி சூழும்? எந்தெந்த வகையில் வினை சூழும்? என்பதை உணர்த்துகின்றார்கள்.
     மகான் திருவள்ளுவப்பெருமான் வினையைப் பற்றி நன்கு அறிந்தவர்.
     அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
    திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 366
கனிந்த வாழைப்பழத்தை உரித்து வைப்பதுபோல் லகுவாக சொல்
வார்கள். அஞ்சுவது ஓரும் அறனே – அஞ்சுவது அறன். ஆசைக்கு அஞ்சுவதே அறன் என்றார்.
     ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா – ஆமாம், ஒருவனை வஞ்சிக்கும். ஆசைதான் ஒருவனுக்குத் தீய வினையை உண்டுபண்ணும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
    திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 366
ஆசை ஒருவனை வஞ்சிக்கும் என்று மகான் திருவள்ளுவப்பெருமான் சொல்கிறார். வினையைப் பற்றி அறிந்தவர், விவேகி மகான் திருவள்ளுவப்பெருமான். அவர்கள் இப்படி லகுவாக எல்லோருக்கும் புரியும்படி சொல்வார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் சொன்னாலும், திருக்குறளை லகு என்று நினைத்து விடாதீர்கள், உள்ளே புகமுடியாது. அப்படி உள்ளே புக முடியாத ஒன்றை சொல்லியிருப்பார். ஏனோ தெரியவில்லை. பெரியவர்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.
     ஞானிகள் வினையைப்பற்றி அறிந்து, தங்களுடைய வினையை நீக்கிக் கொண்டார்கள். தன்னுடைய வினையை நீக்கியதால்தான் வினையைப் பற்றி அவர்களால் சொல்ல முடிந்தது.
     வினையைப் பற்றி சொல்வதற்கு அறிவு வேண்டும் அல்லவா? இது சாதாரண விசயமல்ல. பெரியவர்களெல்லாம் வினையைப் பற்றி அறிந்தவர்கள். வினையை நீக்கிக் கொண்டவர்கள். அவர்கள் எழுதிய நூல்களில் உள்ள கருத்துகள், வினையை நீக்குவதற்காகவே இருக்கும்.
     திருக்குறள் வினையை நீக்குவதற்காக சொல்லப்பட்ட நூலாகும். நாம் திருக்குறளைப் படிக்கிறோம். இனமே புரியாத பாஷை அதில் இருந்து கொண்டு இருக்கும். அது யோகிகளுக்குத்தான் தெரியும்.
     ஞானிகள் அனைவரும் வினையை நீக்கிய மக்கள். ஆசான்தான் கடவுள். கடந்த ஒருவன் கடவுள்.
     ஒரு சராசரி மனிதன், “வினையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்” என்று ஆசானிடம் கேட்கிறான்.
     இதைக் கேட்டு நீ என்ன செய்யப் போகிறாய்? என்றார் ஆசான்.
     “தாங்கள் என்ன செய்து வெற்றி கண்டீர்களோ, அதை நான் செய்யப் போகிறேன்” என்றான்.
     “ஓகோ! நான் வினையை நீக்குவதற்கு தவம் செய்தேன். நான் செய்ததெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?” என்றார்.
     “நீங்கள்தான் தவம் செய்ய வேண்டுமா? நாங்களெல்லாம் தவம் செய்யக்கூடாதா?” என்றான்.
    
     “அதற்குத் தடையில்லை. நாங்களெல்லாம் தயார்தான். நீ தவம் செய்வதற்கு நாங்கள் உதவி செய்கிறோம். இதற்கு ரொம்ப வைராக்கியம் வேண்டுமே?” என்றார்.
    
     “உங்களிடம் வைராக்கியம் இருந்ததல்லவா? அதுபோல் நானும் வைராக்கியம் உடையவன்தான்” என்றான்.
     “உன்னுடைய வினையைப் பற்றி நீ அறிந்துகொள்ள முடியுமா?” என்றார் ஆசான்.
     நானும் அறிந்து கொள்கிறேன் என்றான்.
    
     “வினையைப் பற்றி நீ அறிந்து கொள்ள என்னுடைய திருவடியைப் பற்று” என்றார் ஆசான்.
    
     ஆசான் அகத்தியரை தினமும் பூஜை செய்கிறான். “வினையைப் பற்றி அடியேன் அறிந்துகொள்ளவும், வினையை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்கிறான்.
     ஆசான் அகத்தியர், மகான் நந்தீசர் போன்ற ஞானிகள் அனைவரும் அருள் செய்யக் கூடியவர்கள். ஆசான் அகத்தியரை பூஜை செய்ய, பூஜை செய்ய, பூஜை செய்ய வினையைப் பற்றி அறிந்துகொள்கின்ற அறிவு பன்னிரண்டு வருடத்தில் வரும். வினையைப் பற்றி அறிந்துகொள்வது சின்ன விசயமல்ல.
     ஒருவனுக்கு வினை எப்படி வருகிறது?
     ஆசையினால்தான் வருகிறது.
     இதை அறிவதற்கு பன்னிரண்டு வருடமாகுமா? என்று கேட்டான்.
     ஆசையினால்தான் வினை சூழ்ந்தது.
     ஆசையில்லாமல் இருக்க முடியுமா?
     ஆசை இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
     செல்வத்தை சேர்க்காமல் இருக்க முடியுமா?
     சேர்க்கலாம், முறை அறிந்து சேர்க்கவேண்டும்.
     ஆசையினால்தான் வினை சூழ்கின்றது என்பதைப் பற்றி அறிந்தான், அதைப்பற்றி புரிந்துகொண்டான். இதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். ஆசையினால்தான் வினை சூழும் என்று தெரிந்து கொள்வதற்கு பத்து வருடமாகுமா? ஆமாம். பத்து வருடமாகும். ஆக புரிந்து கொண்டாய், அதை உன்னால் கடைப்பிடிக்க முடியுமா?
     பொருள் சேர்க்கும்போது முறை அறிந்து சேர்க்க வேண்டும். நாம் சேர்த்த இந்தப் பொருள் பிறரை வருத்தி வந்த பொருள், இது வேண்டாம் என்பதை அறிவதற்கே பத்து வருடமாகும். பிறரை வருத்தி வந்த பொருளால் வினை சூழும் என்று அறிவதற்கு பத்தாண்டுகள் ஆகும். ஆமாம் இதை அறிவதற்கே பத்தாண்டுகள் ஆகும்.
     நம்மால் ஈட்டிய இந்தப் பொருள் பிறரை வருத்தி, ஏமாற்றி சம்பாதித்த பொருள் என்று நீ சிந்திக்கலாம். அவன் அறிந்தோ அறியாமலோ வஞ்சிக்கப்பட்டிருக்கிறான், அதனால் வினை சூழ்கிறது. இதை அறிவது அவ்வளவு இலகுவல்ல.
     பொருள் சேர்க்கும்போது அதன் மூலமாக வினை சேர்கிறது என்பதை அறிந்து கொண்டான். ஆக தீதின்றி வந்த பொருளாக இருக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்கிறோம்.
     காமத்தால் வந்த கேடுகள்தான் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. தொன்றுதொட்டு கோடான கோடி சான்றோர்களையும், ஆன்மீகவாதிகளையும், காமம் பதம் பார்த்து வருகின்றது.
     கோடான கோடி சான்றோர்கள்! ஒரு கோடி இரண்டு கோடி அல்ல! கோடான கோடி சான்றோர்களை நரகத்தில் கொண்டு சேர்க்கிறது காமம்.
     பொருளினால் கேடு வருகிறது. அதை ஈட்டும்போது நெறிக்கு உட்பட்டு ஈட்டாததனால் கேடு வந்தது. அதனால் வினை சூழ்ந்தது. இப்படிப்பட்ட பொருள் வெறியையாவது ஒரு பக்கம் தீர்த்துவிடலாம். இந்த காமத்தை என்ன செய்வது? “ஒன்றும் செய்ய முடியாது” என்றார். ஞானிகள்தான் காமத்தை வெல்ல முடியும். காமத்தை வெல்ல நினைத்தால் வெல்ல முடியாது. அப்படி லகுவாக வெல்வதற்கு கேள்வி ஞானமா இது?
     பொருளின் மீது பற்றில்லாமல் இருப்பதற்கு பயிற்சி கொடுக்கிறான். என்னையா காசு? வேண்டாமையா என்று பயிற்சி கொடுத்துக் கொண்டே வந்தான். பொருள் மீதுள்ள வெறி தீர்ந்தது. ஆக பொருளின் தன்மையை தெரிந்தல்லவா நீக்க வேண்டும்? இவன் இஷ்டத்துக்கு நீக்கி வைத்துவிட முடியுமா? பொருளைப் பயன்படுத்தாமல் இருந்தால் ஆசை நீங்கிவிட்டது என்று அர்த்தமா? நாங்கள் பொருளாதரத்தில் புழங்குகின்றோம். ஆனால் அதை இருப்பு வைத்துக் கொண்டு இருக்கிறோமா?
     அறப்பணி செய்வதற்காக பொருள் வந்தது என்று அறிகின்ற அடிப்படை அறிவுதான் சிறப்பறிவு. பொருளின் இயல்பே அறப்பணியாகும். ஏனென்றால், நற்காரியங்களுக்காகத்தான் பொருள் வந்தது.
        
         தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
          வேளாண்மை செய்தல் பொருட்டு.
§  திருக்குறள் – ஒப்புரவு அறிதல் – குறள் எண் 212
    சேர்ந்த பொருளைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அறப்பணி செய்ய வேண்டும். இதற்காகத்தான் செல்வத்தை கடவுள் கொடுத்திருக்கிறான். சேர்ந்த செல்வத்தை அறப்பணிக்கு பயன்படுத்த வேண்டும்.
    நீதிக்கு உட்பட்டு வந்த பொருளால் பிறருக்கு கேடில்லை. தலைவன் அருளால் கிடைக்கப்பெற்ற அந்தப் பொருள் வஞ்சனையற்ற பொருள், நற்பொருள். ஆகவே, அதற்கு வினை இல்லை.
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
    திருமந்திரம் – அருளுடைமையின் ஞானம் வருதல் – கவி எண் 1645
தலைவன் ஆசியால் செல்வம் கிடைத்தது. அந்தப் பொருள் நற்காரியத்திற்காக வந்தது, நல்ல ஞானமும், செல்வமும் தலைவன் ஆசியால்தான் வந்தது என்பதனால்தான் பிரானருள் என்று சொல்வார்.
நல்ல செல்வம் தலைவன் ஆசியால் கிடைக்கிறது. ஆனால் ஞானம்?
“எந்த ஞானம் வேண்டும்?” என்றான் தலைவன்.
“ஆசையே இல்லாத ஞானம்” என்றார்.
“அட! அவ்வளவு லகுவானதா அது?” என்றான்
    
ஆசையே இல்லாதது ஞானம் என்பதை, அற்றது பற்றெனின் உற்றது வீடு என்பார் மகான் ஔவையார்.
அற்றது பற்றெனின் உற்றது வீடு – ஆசையே இல்லாத நிலை.
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே – இச்சையிலார்
இட்டமலம் பாட்டவிடம் எல்லாம் பொன்னாம்என்றால்
இட்டமதை விட்டற் கிசைந்திலையே.
    திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – நெஞ்சறிவுறுத்தல் – கவி எண் 414
இச்சையிலார் இட்டமலம் பட்டவிடம் எல்லாம் பொன் என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள்.
எந்த ஆசை? என்ன ஐயா இவ்வளவு பெரிய வார்த்தையாக இருக்கிறது? என்றான். காமத்தால் ஒருவனுக்கு கேடு வந்தது. சரி, காமத்தை விட முடியுமா? காமத்திற்குக் காரணம் பசிதான் என்றார். சரி, பசியைத்தான் விட முடியுமா? என்றால் முடியாது.
ஞானிகளெல்லாம் பொருள் பற்றற்று இருப்பார்கள், காமத்தையும் விட்டிருப்பார்கள், விகாரம் அற்று இருப்பார்கள்.
தலைவனை கூப்பிட்டு, “நீ அடைந்த நிலையை நான் அடைய வேண்டும்” என்று கேட்கிறான்.
முன் செய்த வினைதான் நல்வினைக்கும், தீயவினைக்கும் காரணமாக இருக்கிறது. நீ அடைந்த பேரின்பத்தை நானும் அடைய வேண்டுமென்று கேட்கிறான். அவர் கொடுப்பதற்குத்தான் இருக்கிறார்.
ஞானிகளை பூஜை செய்வதனாலே பொருள் வெறி நீங்கியது. காமவிகாரம் நீங்கியது. பொருள் வெறியும், காம விகாரமும் நீங்கினால் அவன் கடவுள் ஆகிறான். இந்த இரண்டும்தானே ஒருவனுக்கு நல்வினையை, தீயவினையை உண்டாக்குகிறது.
ஞானிகளுக்கு பொருள் வெறியும் இல்லை, காம வெறியும் இல்லை, ஜாதி வெறியும் இல்லை, பரசொரூபமாக, தெய்வீகமாக இருக்கிறான். அது போன்ற நல்ல பண்புகள் வந்திருக்கிறது, தெய்வீகமான அறிவு, தெய்வீகமான குணப்பண்புகள்.
ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு காமமும், பொருள்வெறியும் பகையாக இருக்கும். ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு இவை இரண்டும் கேடு செய்யும். துணையாக இருக்காது. பெரியவர்களுடைய ஆசி இந்ததனால்தான் வினை நீங்கியது. இரண்டுமே பகை.
இந்த உண்மையை அறிய பெரியவர்களுடைய ஆசி வேண்டும். இதை தெரிந்தவர்கள் ஆசானிடம் கேட்டு முறையாக பெற வேண்டும். “நீர்தானப்பா எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்றும் “வினையை வெல்ல நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று வினையை வென்றவனிடம் கேட்க வேண்டும்.
“பரவாயில்லை. நல்ல கருத்தைத்தான் கேட்கிறாய், நியாயம்தான், பிடித்துக் கரையேறிக் கொள். நான் வினையை வென்றவன். அதனால் நீ என்னை பூஜை செய்!” என்று சொல்கிறார். இவன் தொடர்ந்து பூஜை செய்கிறான்.
ஞானிகளை பூஜை செய்ய, பூஜை செய்ய அவனுக்கு வினையைப் பற்றி அறிகின்ற அறிவும், வினையை நீக்கிக் கொள்கின்ற அறிவும் வந்தது.
வினையை நீக்கிக் கொள்கின்ற அறிவுதான் சிறப்பறிவு என்று சொன்னோம்.
வினையை நீக்கிக் கொள்கின்ற அறிவு, அதனைவிட மேம்பட்ட அறிவு.
பெரியவர்களின் ஆசியினால் வினையைப் பற்றி அறிந்து, வினையை நீக்கிக் கொள்வதற்கு பாடுபட்டு வருகிறான்.
வினை எப்படி நீங்கும் என்பதைத்தான் பலமுறை சொல்லியிருக்கிறோம். வினை நீங்குவது எளிதல்ல. அப்படி ஒன்றும் அது கடைச்சரக்கு இல்லை. போ என்றால் போகாது. வா என்றால் வந்துவிடாது.  
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
    திருமந்திரம் – ஞானி செயல் – கவி எண் 2610
முன்னை வினைவரின் – முன் செய்த பாவங்கள்,
வினைவரின் – வந்தால்
முன்னுண்டே நீங்குவர் – சாப்பிட்டுத்தான் தீர்க்க வேண்டும். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பார்கள்.
எப்படி தின்றால் தீரும்? முன் செய்த பாவங்கள்தான் பல்வேறு நோயாகவும், வறுமையாகவும், மன உளைச்சலாகவும் வரத்தான் செய்யும். அதை உண்டுதான் தீர்க்க வேண்டும், அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்.
முன் செய்த வினை நோயாக வரலாம், வறுமையாக வரலாம். மன உளைச்சலாக வரலாம். இப்படி சாப்பிட்டு தீர்க்க வேண்டுமென்பது சட்டம்.
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளால்.
    திருமந்திரம் – ஞானி செயல் – கவி எண் 2611
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள் என்பது யோகிகளுக்கு மட்டும் புலப்படக்கூடிய அந்தரங்கச் சொற்கள்.
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பொறிபுலன்களெல்லாம் தீய பாதையில் சென்றதனால்தான், தீயவினை சூழ்ந்தது. ஞானிகள் இதைத் தெரிந்து கொண்டார்கள். ஆகவே பொறிபுலன்களை நன்மையில் செலுத்தினோம் என்றார்கள்.
வினையைப் பற்றி அறிந்து, நீக்க வேண்டுமென்று நாங்கள் சொன்னோம். வினையை நீக்குவதற்கு, வினையை நீக்கியவனுடைய ஆசி வேண்டுமென்று சொன்னோம். இதற்கெல்லாம் ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். இல்லையென்றால் முடியாது.
நாங்கள் ஆசான் ஆசியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு நமக்கு சிறப்பறிவு வந்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் இது எப்போது புலப்படும்? சுத்தமாக வினையே இல்லாத காலத்தில்தான் நாம் நம்மை அறிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியாது. நம்மைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கே பல ஜென்மங்கள் எடுத்தாக வேண்டும். அது ஒரு அமைப்புதான். அது ஒரு அமைப்புதான்.
முன் செய்த வினையைப் பற்றி அறிந்து கொல்வதற்கு ஞானிகளின் ஆசி வேண்டும்.
வினையைப் பற்றி அறிந்து கொண்டால் மட்டும் போதுமா?
நாம் செய்த பாவம் நோயாகவும், வறுமையாகவும், பகையாகவும், பிரச்சனையாகவும் வரும்போது, இதற்கெல்லாம் வேறு யாரையும் காரணம் என்று நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் நிச்சயமாக இன்னும் அந்த அறியாமையிலிருந்து ஒரு அங்குலம் கூட இவன் நகரவில்லை என்று அர்த்தம்.
நாம் செய்தது நம்மை விட்டுப் போகுமா? யார் மீதும் குறை இல்லை. நாம் செய்த வினையைத்தான், நாம் இப்போது அனுபவிக்கிறோம் என்று அறிவு வரவேண்டும். அந்தப் பக்குவம் வந்தபோது, வினையைப் பற்றி அறிந்து கொண்டான், பிறகு வினையை நீக்கிக் கொண்டான். மற்றவர்கள்மேல் குறை சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருப்பது நியாயமில்லை, அதை ஏற்றுகொள்ள முடியாது.
     வினைக்கு நாம்தான் காரணம். யார் மீதும் குறை இல்லை. நாம் செய்த பாவத்தால் நாம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம். இந்த உண்மையை உணரும்போதுதான், தலைவன் இவனுக்கு நோயையும், பிரச்சனைகளையும் தந்து வினையை தீர்த்து வைப்பான். இப்படித்தான் இந்த துறை இருக்கிறது.
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
    திருமந்திரம் – ஞானி செயல் – கவி எண் 2610
நல்வினையைப் பெருக்கினால்தான் அறிவு வேலை செய்யும். வினையை பற்றி ஆசான் ஆசியால் தெரிந்து கொண்டோம். நல்வினையைப் பெருக்க முயற்சிக்கிறோம். வினையைப் பற்றி அறிந்து, வினையை நீக்கிக் கொண்டு நல்வினையைப் பெருக்கவேண்டும்.
நல்வினை தீயவினைதானே பிறவிக்குக் காரணம்? ஒவ்வொரு நாளும் இதைப்பற்றி இப்படியே பேசி, விசாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
சான்றோர்கள், பெரியோர்கள், நூலறிவு என இப்படியே விசாரித்துக் கொண்டே போகிறோம். அந்த பெரும்பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
     ஒருவன் வினையை நீக்க முயற்சி செய்யும்போது, தலைவனும் கூடவே இருந்து அருள் செய்வான். பெரியவர்கள் அவனுக்கு துணையாக வந்து வினையைத் தீர்ப்பதற்கு உதவி செய்வார்கள், முயற்சிக்கிறான், புறப்படுகிறான், அவர்களும் கூடவே வந்துவிடுவார்கள். “வா மகனே! உனக்கு உதவி செய்கிறேன்” என்று சொல்வார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவன் முயற்சித்தால் அவர்கள் அருள் செய்வார்கள். யாரும் அதை தடுக்க முடியாது. வினையை வெல்வதற்கு முயற்சிக்கிறான். ஞானிகள் துணையாக இருந்து இவனுக்கு எல்லாவிதமான உதவியும் செய்வார்கள், வினையை நீக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆக இப்படியே இருந்து ஒரு முறையைக் கையாண்டு அதற்கு பிறகுதான் தலைவனை வந்து சந்திக்கிறான்.
தலைவன் திருவடியை பூஜை செய்து, ஆசி பெறுகிறான். வினையைப் பற்றி அறிகிறான், வினையை நீக்குகிறான்.
மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கும்வரையில் நல்வினை தீயவினையைப் பற்றி, இவனால் அறியமுடியாது. நல்வினையும், தீயவினையும் பிறவிக்குக் காரணம். நல்வினையும், தீயவினையும் அற்று இருக்க வேண்டும்.
அதற்கு ஒரு முறை இருக்கிறதா?
ஆமாம் இருக்கிறது.
சுவாசம் வெளியில் போனால் நல்வினை, உள்ளே வந்தால் தீயவினை. நல்வினை, தீயவினை வந்து போகின்ற காற்று.
நல்வினை தீயவினை என்பது வந்துபோகின்ற காற்று என்றும், இரவு பகல் என்றும், இடகலை பிங்கலை என்றும் சொல்வார்கள்.
வந்து போகின்ற காற்றை புருவமத்தியில் ஒடுக்கிவிட்டானென்றால் நல்வினை தீயவினை அற்றுவிடும். அவ்வளவு பெரிய ரகசியம் அதில் இருக்கிறதா? ஆமாம். வேறொன்றுமில்லை, நல்வினை, தீயவினை அற்று இருக்கிறான் என்று அர்த்தம். வந்து போகின்ற சுவாசம் புருவமத்தியில் ஒடுங்கிவிட்டது. நல்வினை தீயவினை என்பதை, இரவு பகல் என்றும் சொல்வார்கள். ஆக மூச்சுக்காற்று புருவமத்தியில் சென்று ஒடுங்கிவிட்டது.
புருவமத்தியில் நல்வினை தீயவினை ஒடுங்கி விட்டது. புருவமத்தியில் இந்துவும் ரவியும்தானே ஒடுங்க வேண்டும்? ஆனால் நல்வினையும், தீயவினையும் சேர்த்தே ஒடுங்கியதா என்றால், ஆமாம். நல்வினையும், தீயவினையும் சேர்ந்து ஒடுங்கியது. ஒடுங்கியது வெளியே வராது. வெளியே வராமல் இருந்தால்தான், அவன் நல்வினையும், தீயவினையும் அடக்கி விட்டான் என்று பொருள். தலைவந்தானே இதை செய்ய வேண்டும்? நம் இஷ்டத்திற்கு செய்ய முடியுமா? எல்லோருக்கும் செய்ய வாய்ப்பில்லையா? என்றால் வாய்ப்பில்லை.
இடகலை பிங்கலை அல்லது இந்து ரவி அல்லது சூரியகலை சந்திரகலை என்னும் ரகசியம் புருவமத்தியில் ஒடுங்கும்வரையில் நல்வினை தீயவினையைப் பற்றி அவனுக்குத் தெரியாது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 5
யோகி, தலைவனுடைய ஆசி பெற்ற மகன், தலைவனை அழைத்து, “வினையை நான் அனுபவித்துவிட்டேன். நான் சொல்லவொணாத துன்பபட்டேன், கடன் இருந்தது, மனஉளைச்சலும், தாளமுடியாத தடுமாற்றங்களும் இருந்தன. இவற்றிலிருந்து தப்பிப்பதற்கு நீர்தான் அருள் செய்தாய். ஆனால் இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒடுங்குகிற வாய்ப்பையும் எனக்கு தர வேண்டும்” என்றான்.
     சொல்லவொண்ணாத் துன்பத்தை அனுபவித்தான். அது ஆசானுக்குத் தெரியும். கூடவே இருப்பார்கள். வேறு வழி இல்லையப்பா, அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். கூடவே இருந்து வினையை அனுபவிக்கச் செய்வார்கள்.
     ஆனால் உயிர் மட்டும் போகாமல் காப்பாற்றி விடுவார்கள். உயிர்போகாமல் காப்பாற்றி அந்த இடத்திலிருந்து “தப்பித்தோம் பிழைத்தோம்” என்று மேலே வந்து விடுவான். இவர்களுக்கும் தெரியும் சிரித்துக்  கொண்டே இருப்பார்கள். அவர்களும் அப்படி இருந்தவர்கள்தானே? அவர்களும் அல்லற்பட்டவர்கள்தானே? “சரி, அனுபவி, ஒன்றும் பாதிப்பு இருக்காது” என்பார்கள்.
     ஞானிகள் அவனுக்கு துணையாக இருந்து, வினையை கடைசிவரை அனுபவிக்கச் செய்வார்கள். வினை நீங்கிவிட்டது. அங்கே நல்வினையும் இல்லை. தீயவினையும் இல்லை. இனிமேல் இவனுக்கு வாசி நடத்திக்கொடு என்பார்கள். இதற்கு ஆசான் சுப்பிரமணியர்தான் துணையாக இருந்தாக வேண்டும்.
வினையைப் பற்றி அறிந்து, வினையை நீக்கி ஆசி தந்த ஆசான் ஞானபண்டிதன் இவனுடைய இடகலையையும், பிங்கலையையும் சார்ந்திருப்பார்கள். ஆசான் இவனை சார்ந்திருந்து, வாசியோடு வாசியாக கலந்து விடுவார்கள். வாசியோடு வாசியாக கலந்து இவனது வினையை தீர்க்கிறார்கள்.
     இந்த உடம்பே நல்வினை, தீயவினைக்குத் காரணமானதுதானே? முன் செய்தது, நல்வினையாக இருந்தால் உடல் ஆரோக்கியம் இருக்கும். தீயவினையாக இருந்தால் நோய் சூழ்ந்த உடம்பாக இருக்கும். நல்வினை, தீயவினைக்கே காரணமானதுதான் உடம்பு.
     புருவமத்தியில் வாசி ஒடுங்கியபின் நல்வினை, தீயவினை அற்றுவிடும். இடகலை, பிங்கலை எனும் ரகசியத்தை புருவமத்தியில் ஒதுங்கியதால் நல்வினை, தீயவினை அற்று விட்டது. தலைவன்தான் இதற்கு அருள் செய்ய வேண்டும். ஆசான் மனம் மகிழ்ந்து, இவனுடைய வாசியோடு வாசியாக கலந்துவிடுவார்கள். பிறகு முன் செய்த நல்வினை தீயவினையால் எடுத்த தேகத்தை பொடியாக்கிவிடுவார்கள்.
     முன் செய்த பாவத்தால் நோய் சூழ்ந்த உடம்பும், முன் செய்த புண்ணியத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆக உடல் ஆரோக்கியம் பிறவியை நீக்குமா? அது எப்படி பிறவியை நீக்கப்போகிறது? உடல் ஆரோக்கியம் என்பது நிலையில்லாதது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஆரோக்கியம் கெட்டுவிடும். உடல் ஆரோக்கியத்தால் மட்டும் ஒருவனுக்கு பிறவி தீராது.
                உடல் ஆரோக்கியமாக இருக்கிறது, நல்வினைதான். ஒன்றும் குற்றமில்லை. ஆனால், இருவினை அற்றுப்போக வேண்டுமல்லவா?
      இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    திருக்குறள் – கவுள் வாழ்த்து – குறள் எண் 5
இறைவன் பொருள்சேர் – இறைவனுடைய திருவருள்தான் பொருள், இறைவனுடைய திருவருள்தான் அருள். அந்தப் பொருளுக்கு அருள் என்று பெயருண்டு. இறைவனுடைய அருளை அடைந்தவர்களுக்கு இருவினை இருக்காது. ஆசான் ஆசியால் அந்த வாய்ப்பு கிடைத்தது.
இருவினையை அறிந்தான், நீக்கிக் கொண்டான். இருவினையும் அற்றுப் போனதால் ஆசான், வாசியோடு வாசியாக கலந்து, அவனுக்குப் புரிய வைக்கிறார். அப்படி புரியவைத்து, தீயவினைக்குக் காரணமாக, தீயவினையை உண்டாக்கக் கூடிய தேகத்தை நீக்குகிறார்.
தீயவினைக்கு உரிய தேகத்தை நீக்கினால் என்ன மிச்சப்படும்?
இருள் நீங்கினால் அங்கே ஒளிதானே?
உமி நீங்கினால் அரிசிதான்.
ஆகவே, மலக்குற்றம் நீங்கியது. அங்கே ஒன்றுமில்லை.
நின்மலம் ஆகிவிட்டன.
ஞானிகளெல்லாம் நின்மலம் ஆனவர்கள், மளமற்றவர்கள். ஆகவே மலம் இலான் பாதமே என்பார் மகார் திருமூலதேவர்.
வாழ்கவே வாழ்க என்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
·         திருமந்திரம் – சர்வ வியாபி – கவி எண் 3047
தலைவனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும்போது, மலம் இலான் பாதமே என்று மகான் திருமூலதேவர் சொல்கிறார். மலம் இருந்தால்தானே ஐயா அவனுக்கு வினை சூழும்? இந்தப் பாடல்தான் நம்முடைய நிகழ்ச்சியில் நிறைவுப்பாடலாக வைத்திருக்கிறோம்.
மலமில்லாதவன்தான் வினையைத் தீர்க்க முடியும். மலம் அற்றால்தான் வினை அற்றுப்போகும். வினையை தீர்த்தவனுக்கு மலம் இருக்காது. 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் மலம் இருக்க வேண்டும். பெரிய காட்டெருமை முதல் சிறிய பூச்சி வரை மலம் இருக்கும். நுண்ணிய உயிரினங்கள் வரை மலம் இருக்கிறது. ஆனால் ஞானிகளுக்கு மலம் இருக்காது. எனவே மலம் இலான் பாதம் என்றார் மகான் திருமூலதேவர்.
தலைவனை அறிமுகப்படுத்தும்போது, ஆசானை அறிமுகப்படுத்தும்போது வினை இல்லாமல் இருக்கிறார் என்றார். ஞானிகள் எதைக் கேட்டாலும் கொடுப்பதற்குத்தான் இருக்கிறார்கள். நீ எதைக் கேட்டாலும் கொடுப்பார். ஆனால் மலமற்ற ஞானிகளிடம்  கேட்க வேண்டும்.
    அற்றது பற்றெனின் உற்றது வீடு – பற்று அற்றுப்போனது, வீடு வந்தது என்றார். இதெல்லாம் பெரிய வார்த்தை.
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே – இச்சையிலார்
இட்டமலம் பட்டவிடம் எல்லாம் பொன்னாம்என்றால்
இட்டமதை விட்டற் கிசைந்திலையே.
    திருஅருட்பா – முதல் திருமுறை – நெஞ்சறிவுறுத்தல் – கவி எண் 414
இங்கு இச்சையிலார் (ஆசையிலார்) இட்டமலம் பட்டவிடம் எல்லாம் பொன் என்றார் மகான் இராமலிங்கசுவாமிகள். இப்படியெல்லாம் பலவகையில் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரியாது, ஆனால் ரொம்ப லகுவாக இருக்கும்.
எல்லா உண்மைகளையும் பெரியவர்கள் உணர்த்த வேண்டும். தினம் பூஜை செய்கிறான். முதலில் வினையைப் பற்றிக் கேட்டான், வினையை நீக்கிக்கொண்டான். வினையைப் பற்றி அறிந்து கொண்டான், நீக்கிக்கொண்டான். ஆசான் வந்து உணர்த்துவார்.
மலம் இலான் பாதத்தை பணியவேண்டும். நாம் வணங்கக்கூடிய ஞானிகள் அனைவரும் மலம் இல்லாதவர்கள், நின்மலமானவர்கள், மலம் இல்லாததனால் காமம் இல்லை. அவனுக்கு சுக்கிலம் கிடையாது. சுக்கிலம் இருந்தால்தானே அவனை கொல்லும்? அதை நீக்கி விட்டார்கள்.
ஒருவனை நரகத்தில் தள்ளுவது எது?
உள்ளே இருந்து கொண்டு குடை குடை என்று குடைந்து கொண்டிருக்கிற சுக்கிலம்தான் அவனை நரகத்திற்கு தள்ளுகிறது. அவன் மேல் உள்ள குறையா? இல்லை. அது கொலைக்கருவி என்பது அவனுக்குத் தெரியாது. அதுதான் அவனை நரகத்திற்குத் தள்ளுகிறது.
அவன் வானளாவி பேசிக் கொண்டிருப்பான். வானத்தை வில்லாக வளைப்பேன் என்பான். ஆனால் நரகத்திற்குப் போகப்போகிறான் என்று அர்த்தம்.
சுக்கிலம் அற்றவன் மலம் அற்றவன். அங்கே வினையே இல்லை.
ஆசை இல்லாதவன் சுக்கிலம் அற்றவன்.
ஆசை இல்லாதவன் மலம் அற்றவன்.
ஆசை இல்லாதவன் பந்தபாசம் அற்றவன்.
ஆசை இல்லாதவன் அறிவாளியல்லவா?
இப்போது மிக நுட்பமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெரியோர்களுடைய ஆசியில்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். வினை இல்லாமல், மலம் இல்லாமல் இருக்க வேண்டும்.
மலம் இல்லாதவன் வினை இல்லாமல் இருப்பான். மலம் உள்ளவனை நிச்சயம் வினை விடாது. பூதக்கண்ணாடி வைத்து ஏன் காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறாய்? எப்படி தேடினாலும் அறிய முடியாது. யோகிகளுக்குத்தான் இது இப்படித்தான் இருக்கிறது என்று தெரியும்.
அதை அறிந்தவன் யார்?
யார் வினை இல்லாதவன்?
யார் மலம் இல்லாதவன்?
யார் விந்து இல்லாதவன்? என்று தேட வேண்டும்.
விந்து அற்றது. வினை அற்றது.
மலம் அற்றது, வினை அற்றது.
மலம் அற்றது, காமம் அற்றது.
அவனை சூழ்ந்திருக்கும் அறியாமையை எல்லாம் வென்று  விடுகிறான். அப்படிப்பட்ட ஓர் அறிவு அவனுக்கு வர வேண்டு. இல்லையென்றால் கிட்டே நெருங்க முடியாது. வினை இல்லாமல் இருப்பது என்பது என்ன கடைச்சரக்கா? வினை இல்லாமல் இருக்க வேண்டுமென்பது அவ்வளவு லகுவாகப்போய் விட்டதா?
வினை இல்லாதவன் மலம் இல்லாதவன்.
வினை இல்லாதவன் விந்து இல்லாதவன்.
விந்து ஜெயம் போக சர ஓட்டம் என்றார். நச்சுத்தன்மை உள்ள விந்து அற்றுப்போனது. ஆகவே வினை அற்றுப்போனது என்றார்.
நச்சுத்தன்மை உள்ளது இப்பொழுது இந்த உடம்பில் உள்ள விந்துவா? அல்லது உண்மையான விந்துவா? என்பது இவனுக்குத் தெரிய வேண்டுமல்லவா?
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
§  மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 251
வாக்கியறம் சிவவாக்கியம்.
நம்முடனே இருக்கக்கூடிய நச்சுத்தேகத்தைப் பற்றி அறிந்து, அந்த தேகத்தை நீக்கினால் அவனுக்கு பிறவி இல்லை. இதைப்பற்றி புரிந்து கொண்டல்லவா வினையைத் தீர்க்க வேண்டும்.
     அற்றது பற்று எனின் உற்றது வீடு – அற்றது பற்று, உற்றது என்றால் பொருந்தியது. இதையெல்லாம் புரிந்து கொண்டல்லவா, வினையைத் தீர்க்க வேண்டும்.
வினை இல்லாமல் இருக்க வேண்டும். மகான் சுப்பிரமணியர் வினையைப்பற்றி அறிந்தவர். அவர்களுடைய ஆசியை பெறுவதற்குதான் நாங்கள் சொல்கிறோம்.
     “அவர்களெல்லாம் பெரியவர்களப்பா! நீ அவரை விடாதே! அவரெல்லாம் மலமறிந்து, மலம் நீக்கினவர், நின்மலம் ஆனவர். நீ விடாதே பிடி” என்று அவனிடம் சொல்லி, அவனுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வந்த வேலை நிறைவேறாது. நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம்? இந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டுமல்லவா? இல்லையென்றால் எங்களுக்கு பாவம் சூழும்.
     இப்படி தலைவனைப் பற்றிப் பேசும்போதுதான், ஒருவன் தலைவனை புரிந்து கொள்கிறான், தலைவன் வினை இல்லாதவன். ஆனால் முன்னே அவனுக்கு வினை இருந்தது. இப்போது தவமுயற்சியால் நீக்கிக்கொண்டான். நீயும் அவருடைய திருவடியைப் பிடித்துக் கொண்டு வினையை நீக்கப் பாடுபடு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நஞ்சுதான் வினையைத் தூண்டியது. வினைக்குக் காரணம் நச்சுத்தன்மையான, நஞ்சு. அதுதான் வினைக்குக் காரணமாக இருந்தது.
நஞ்சு நீங்கியது! நஞ்செல்லாம் பஞ்சு பஞ்சாய்ப் போனது! என்றார் மகான் சிவவாக்கியர்.
அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.
§  மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 18
அஞ்சும் மூணும் எட்டு – அஞ்சு என்றால் பஞ்ச பூதங்கள், மூன்று என்றால் இடகலை, பிங்கலை, சுழுமுனை. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அநாதியான மந்திரம் – இரண்டுமே அனாதை. பஞ்சபூதங்களும் அனாதை. பஞ்சபூதங்களுக்கு தாய் தந்தை இல்லை. இடகலை, பிங்கலை சுழுமுனைக்கும் தாய் தந்தை இல்லை.
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல் – ஒரு முறை செபித்தாலே, அடுத்த உரு என்று தெரிந்துகொள்வான். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டால் வினையைத் தீர்க்கலாம்.
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும் – வினையைத் தீர்த்துக் கொள்ளலாம்.
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே – வினை சூழ்ந்தாலும், பஞ்சுபோல் பறக்கும், தூள் தூள் பட்டுப்போகும் என்றார்.
நஞ்சு எது? அமிர்தம் எது? என்று இவனுக்குத் தெரியாது. ஆனால் இவன் தெரிந்து  கொள்ள வேண்டும்.
இந்த உடம்பு நஞ்சா? அமிர்தமா?
“அறிந்தவனுக்கு அமிர்தம். அறியாதவனுக்கு நஞ்சு”
பற்று அற்றால் வினை இல்லை. எது பற்று? அது தெரிய வேண்டுமல்லவா?
பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.
§  திருக்குறள் – துறவு – குறள் எண் 349
பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்ஆசை அற்றபோதே பிறப்பு அறுக்கும். பிறவி அற்றுப்போனது என்று அர்த்தம். எல்லோரும் இதை உணர முடியுமா? ஆசை அற்றபோதே பிறவி அற்றுப் போகும். மகான் திருவள்ளுவர் இதற்கு உபாயம் சொல்வார். தொடர்ந்து சொல்லிக் கொண்டே போவார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
§  திருக்குறள் – துறவு – குறள் எண் 350
உன்னால் முடியாது. யார் ஆசையில்லாதவரோ அவரைப் பிடித்து கரையேறிக்கொள் என்றார்.
ஆசை இல்லாதவன் என்றால் நச்சுத்தன்மை நீங்கியவன் என்று அர்த்தம். அவன் உடம்பில் இருந்த ஆசை நீங்கிவிட்டது, நச்சுத்தன்மை நீங்கிவிட்டது. நஞ்சு நீங்கியது, வினை தீர்ந்தது.
நஞ்சு என்ற விஷம் நீங்கியது. அந்த விஷம் நீங்கியது விகேகம் வந்தது. விவேகம் வந்ததனால்தான் விஷம் நீங்கியது, வினை நீங்கியது.
நாங்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். வினையைத் தீர்ப்பதற்குரிய அறிவு எங்களுக்கு வந்துவிட்டது.
நீங்களெல்லாம் மேல்நாட்டில் சென்று படித்தீர்களா? என்று கேட்டார்கள். “அட ஒன்றுமில்லை ஐயா! ஆசான் அகத்தியரை பூஜை செய்தோம். ஏதோ முன் செய்த நல்வினை இருந்தது. ஆசான் அகத்தியரை பூஜை செய்தோம். வினையைப் பற்றி ஆசான் எங்களுக்கு உணர்த்தியதால் விவேகம் வந்தது. வினையைப் பற்றி உணர்த்தினார், அதை நீக்கினோம்”
இப்போது நஞ்சு நீங்கியது, வெற்றி உண்டாகியது. எங்களை தொடர்ந்து வஞ்சித்த, எங்களை மீண்டும் மீண்டும் நரகத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய தேகத்தை வெல்லுகின்ற வல்லமையை ஆசான் கொடுத்திருக்கிறார்.
எங்களை தொடர்ந்து வஞ்சித்த தேகத்தை ஆசானுடைய துணைக் கொண்டு நீக்கினோம். இன்று அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். நீங்களும் அந்த வாய்ப்பைப்பெற நாங்களும் விரும்ப வேண்டும். இதை சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
பெரியவர்கள் ஆசியால்தான் முன் வினையை வெல்ல முடியும். இதை நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தததனால்தான் சொல்கிறோம்.
இந்த உடம்பு எங்களுக்கு அமிர்தமாக மாற வேண்டும். இதற்கு நாங்கள் எந்த அளவிற்கு பாடுபட்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியாது. இது நாள் வரையிலும் விஷமாக இருந்த எனது உடம்பு அமிர்தமாக மாறி இருப்பதற்கு தலைவனை பூஜை செய்தோம்.
நாங்கள் சொல்வது ஒன்றும் கற்பனை அல்ல. நாங்கள் அனுபூதிமான்கள். எங்களது அனுபவத்தைச் சொல்கிறோம். எங்களுக்கு வினை தீர்ந்திருக்கிறது என்றால் நஞ்சு தீர்ந்திருக்கிறது, தொடர்ந்து வஞ்சித்த நஞ்சு நீங்கியது என்று அர்த்தம். இதுநாள் வரையிலும் எங்களுக்கு விஷமாக இருந்த உடம்பு இன்று அமிர்ந்தமாக மாறுகிறது.
இந்த வாய்ப்பைப் பெறும் வரையில் வினையைத் தீர்க்க முடியாது. ஏதோ பேசிக்கொண்டு இருக்கலாம். இந்த வாய்ப்பை அன்பர்கள் எல்லோரும் பெற்று, வினையைத் தீர்க்க வேண்டும். ஞானிகள் அத்தனைபேரும் தங்கள் நச்சுத்தன்மையான தேகத்தை நீக்கி, அமிர்தமான
தேகத்தைப் பெற்றவர்கள்.
     நாங்கள் ஆசான் அகத்தியரையும், மகான் திருவள்ளுவரையும், மகான் இராமலிங்கசுவாமிகளையும் பூஜை செய்தோம். அதனால் வினையைப் பற்றி அறிந்து, வினையை நீக்கிவிட்டோம். இன்றைக்கு எங்களுக்கு விரோதமான உடம்பை நீக்கி நட்பாக்கிவிட்டோம். எங்களுக்கு விரோதம் செய்யக்கூடிய உடம்பை நீக்கி நட்பாக்கிக் கொள்வதற்கும் ஆசான் அருள் செய்தார்.
ஆகவே நாங்கள் முன்னேறி கொண்டிருக்கிறோம். அந்த எல்லைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். இனி தோல்வி இருக்க முடியாது.
எடுத்துக் கொண்ட லட்சியத்தை முடிக்க நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்கிறோம்.
செத்தாலும் வைத்தடிபின் வாங்காது முன்னேறு
தீரமொன் றருள் புரியவும்
    மகான் மஸ்தான்சாகிபு – கவி எண் 6
செத்தாலும் வைத்த அடி பின் வாங்காது முன்னேறும் தீரம் ஒன்று அருள் புரிய வேண்டுமென்று ஆசானை கேட்டிருக்கிறோம்.
ஒரு நேரம் உணவு இல்லையென்றால் தாங்கமுடியுமா? இந்த உலகத்தில் ஒரு நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டோம். பசியில்லை, சாப்பிடாமல் இருக்கிறோம். இது ஆசான் கொடுத்த அறிவு. ஆசான் கொடுத்த வாய்ப்பு. அறிவு இருக்கலாம். ஆனால் பட்டினியாக கிடைக்க வேண்டுமே? அது எந்த அறிவு? என்றான்.
பட்டினியை அடக்குவது ஓர் அறிவு.
பட்டினி இல்லாமல் இருப்பதும், பசியை அடக்குவதும் அறிவு.
பசியே இல்லாமல் இருப்பது பேரறிவு.
ஆசான் ஆசியால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் அந்த இடத்திற்கு வந்து விட்டோம். நீங்களும் வினையைத் தீர்க்க வேண்டும்.
பசி இல்லாதவனுக்கு காமம் இல்லை.
பசி இல்லாதவனுக்கு பிறவி இல்லை.
நல்வினை, தீயவினையை வென்றவன்தான். அந்த இடத்திற்கு வருவான். ஞானிகள் ஒன்பது கோடிபேர் இருக்கிறார்கள். அத்தனைபேரும் இப்போது பதினாறு வயது பையன் போன்றிருப்பார்கள். இவன் இவ்வளவு சாப்பிடுகிறான். பார்த்தால் ஒன்றுமே இல்லை. உடம்பு பொற்சிலை போன்று இருக்கிறது. எல்லோரும் பதினாறு வயது பையன் போன்று பொற்சிலை போல் உடம்பு இருக்கும்.
அத்தனைபேரும் நிசப்தமாக இருக்கக் கூடிய ஒளி உடம்பை பெற்றவர்கள். தேகத்தில் மலமற்றதனால்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வினை அற்றது. அறிவு தெளிவடைந்தது.
மலம் அற்றுப்போனது, அறிவு விவேகம் வந்தது.
இப்படியெல்லாம் இருக்கிறதென்று அன்பர்களிடத்தில் சொல்ல வேண்டும். நீங்கள் யாரவது முயற்சிக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்திருக்கிறதல்லவா? நான்தான் இங்கே ஒருவன் இருக்கிறேனல்லவா? ஏதாவது முயற்சித்தீர்களா? வாரம் ஒருமுறைதான் வந்து போகிறீர்கள். அன்பு செலுத்துகிறீர்கள், அதில் ஒன்றும் குறையில்லை. இதற்காக என்ன பாடுபட்டிருக்கிறீர்கள்? என்றால் பதில் வராது. அவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக நினைத்தீர்களா? வேறு வழியில்லை, நீங்களும் அதற்கு பாடுபட வேண்டும், வினையை நீக்க வேண்டும்.
மலம் அற்றதால் நச்சுத்தன்மை அற்றுவிட்டது. சுக்கிலத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கிவிட்டது. விந்தில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கிவிட்டது. மலம் அற்றுவிட்டது.
மலம் அற்றால்தான் விந்தினுடைய நச்சுத்தன்மை தீரும். விந்தின் நச்சுத்தன்மை தீர்ந்தால் பற்று அற்றுப்போகும்.
அற்றது பற்று எனின் உற்றது வீடு என்று மகான் ஔவையார் லகுவாக சொல்வார்.
பற்றி விடாஅ இடும்பைகன் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
§  திருக்குறள் – துறவு – குறள் எண் 347
என்பார் மகான் திருவள்ளுவப்பெருமான். அப்படியே உள்ளே புகுந்து வருவார். அவர்கள் பெரியவர்கள். இப்படியெல்லாம் ரகசியத்தை உள்ளே வைத்திருப்பார்கள். நாமெல்லாம் உள்ளே புகுந்து வருவதற்கு முடியாது.
வாரந்தோறும் எங்கே போகிறீர்கள்?
ஓங்காரக்குடிலில் ஞாற்றுக்கிழமைதோறும் குடிலாசான் பேசுகிறார். அதைக் கேட்க போகிறோம் என்று அன்பர்கள் சொன்னார்கள்.
நாங்கள் அறிந்த ஒன்றை, உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பசியற்று இருக்கிறோம். பசி இருக்கிறது! உணவு கொடுத்தால்தானே? ஒன்றுமே இல்லை. என்ன செய்வது? இப்படித்தான் இருக்கிறது. நட்டமா என்ன? ஆனால் அந்த பசி எங்களைக் கொல்லவில்லை.
பசி உங்களுக்கும் இருக்கிறது, எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த பசியோடு 109 நாள் பட்டினி கிடந்திருந்தால் பசி உங்களைக் கொன்று இருக்கும். ஆனால் எங்களை பசி வாழ வைத்திருக்கிறது. அவ்வளவுதான், எங்களை பசி சாகடிக்கவில்லை.
பசி அற்றது, காமம் அற்றது.
பசி அற்றது வினை அற்றது.
பசி அற்றது வெற்றி! சிறப்பறிவு வந்தது.
அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். எங்களை பிடித்துக்கொள். இதுதான் பாதை என்று சொல்கிறோம். மறுபரிசீலனை செய்யக்கூடாது என்று சொல்கிறோம். மறுபரிசீலனை செய்யாதே, சொன்னதைச் செய் என்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்? கஷ்டமாக இருக்குமா? என்றான். கஷ்டம் இல்லாமல் இருக்குமா? அவ்வளவு லகுவா இது? அவ்வளவு லகுவாக இருந்தால் எல்லோரும் ஞானத்திற்கு வந்துவிடமாட்டார்களா?
ஒரு ஐந்து நிமிடம் மகான் அகத்தியரை பூஜை செய்கிறாய். அடியேனுக்கு ஞானம் சித்திக்க அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள். ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம என்று சொல்கிறாய். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.
ஞானம் என்பது என்ன?
வினையைப் பற்றி அறிவது. வினையை வெல்வது.
ஞானம் என்பது என்ன?
“விகாரமற்ற வாழ்க்கை. அதுதான் ஞானம்!”
தினமும் தலைவன் நாமத்தைச் சொல்கிறோம், பூஜை செய்கிறோம், அன்னதானம் செய்கிறோம். முடிந்தமட்டும் அன்னதானம் செய்கிறோம்.
வினையைத் தீர்க்க வேண்டும் என்றால், பொருள் பேராசை இருக்கக்கூடாது. அப்படியென்றால் பொருளை, கையாளக்கூடாது என்பதல்ல. பேராசை இருக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
முறையறிந்து வாழ்க்கையை நடத்த வேண்டும். அப்படியென்றால் திருமணம் செய்யக்கூடாதா? “யாரடா செய்யக்கூடாது என்று சொன்னது?” திருமணம் செய்யலாம். ஆனால், இந்த தேகத்தைப் பற்றி நீ புரிந்துகொள். தேகத்தைப் பற்றி புரிந்து கொண்டால் போதும். காலப்போக்கில் அதையும் வென்று விடலாம்.
நாங்கள் பேசிக்கொண்டு இருப்பது உங்களுக்கு ஒரு புரியாத புதிர். அப்படியே அதன் போக்கிலேயே போய்க்கொண்டு இருந்தால் காலப்போக்கில் புரியும்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
§  திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் உடல் இயல்பு என்று அர்த்தம். அறத்தின் இயல்பு, உடலின் இயல்பு, இயற்கையின் இயல்பைப் பற்றி அறிந்து இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். இல்லறத்தில் வாழ்பவன் நிச்சயம் ஞானி ஆகலாம்.
இதைத்தான் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்றார். அறத்தின் இயல்பு, உடல் இயல்பு, இயற்கையின் இயல்பு என்பதையெல்லாம் அவைகளின் போக்கிலேயே சென்று, வென்று விடுவான்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
§  திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
பிறவியை அறுக்க முயற்சிப்பவர்க்கெல்லாம், இந்த இல்லறத்தான் மேலானவன் என்றார். தலை என்றால் மேலானவன். அவன் பிறவியை அறுக்க முயற்சிக்கின்றானே தவிர, உடற்கூறு தெரியாது அவனுக்கு.
இல்வாழ்வான் உடற்கூறு தெரிந்தவன், இல்லறத்தில் இருந்து கொண்டே காலத்தை கடத்தி அந்த இடத்திற்கு வந்து விட்டான். அவனுக்கு அது தெரியவில்லை, உட்கார்ந்து இருக்கிறான். இவன் முன்னேறி விட்டான்.
பிறவியை வெல்ல முயற்சிப்பவனுக்கு அந்த இல்லறத்தான் தலைவன் ஆகிறான். அதன் கூடவே போகிறான். யாருடைய உபதேசம்? இல்லறத்தான் ஞானியா? என்று கேட்டான்.
“ஆமாம் இல்லறத்தான் ஞானிதான். நானல்லவா உபதேசம் செய்திருக்கிறேன்?” என்றார்.
என்ன உபதேசம் ஐயா?
“நீ பொருள் ஈட்டும்போது பிறர் பாவி என்று சொல்லாத அளவிற்கு ஈட்டிக்கொள். சிறந்த முயற்சி உள்ளவனாக இருந்து பொருளை ஈட்டிக்கொள். கடவுள் நினைத்தால் நீ பாவி ஆகாத அளவிற்கு நிச்சயம் பொருள் தருவார்.”
நீ பாவி ஆகும் அளவிற்கு உன்னை கைவிடமாட்டார்.
பூஜை செய்கிறாய், பொருள்வளம் இருக்கிறது. தினம் பூஜை செய்கிறான் பொருள் வளம் வந்தது. அது தீதின்றி வந்த பொருளாக இருக்கும். அதனால் வினை சூழாது.
தகுதியுள்ள பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்துகொள். அவ்வப்போது எழும் காம உணர்வை அவள் மூலம் அடக்கிக்கொள். அதனால் மனதில் சாந்தம் வந்தது, பூஜை செய்கிறாய். அவன் துணை கொண்டு தான தர்மம் செய்கிறாய், நட்பைப் பெருக்கிக் கொள்கிறாய், விருந்தை உபசரிக்கிறாய், அறப்பணி செய்து ஆசி பெற்றுக்கொள்கிறாய். இப்படியே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வா. அப்படியே அதன் போக்கிலேயே போ என்று சொன்னார். இப்படி உள்ளவன் வெற்றி பெறுவான்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
§  திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
எவன் பிறவிப்பிணியை வெல்வதற்கு முயற்சிக்கிறானோ, அவனுக்கு இந்த இல்லறத்தான் தலைவனாவான். மகான் திருவள்ளுவப்பெருமான் இப்படியெல்லாம் ரகசியத்தை வைத்திருக்கிறார். இது யோகிகளுக்குத் தெரியும்.
அப்படியே அதன் போக்கிலேயே சென்று அதை வெல்வான். இதை யார் அறிவது? திருமணம் செய்தால் மனைவி தடையாக இருப்பாளா? இல்லை. அவள் எப்படி தடையாக இருப்பாள்? அவளும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வந்திருக்கிறாள். நமக்குத் துணை ஒன்று கிடைத்திருக்கிறது. நாமும் பாவியாகாமல் முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அவள் நினைப்பாள்.
நீ அவளை துணையாக வைத்து முன்னேறு, அவளும் முன்னேறுவாள். இப்படியெல்லாம் ஒவ்வொரு நாளும் அவன் கடமையைச் செய்து கொண்டே வந்தால், இவனும் முன்னேறுவான், சந்ததிகளும் முன்னேறலாம்.
இதையெல்லாம் நாம் மக்களிடத்தில் சொல்ல வேண்டும். இல்லறத்தானுக்கு ஞானம் உண்டு.
உடல் இயல்பு தெரிந்தவன்.
உயிரின் இயல்பு தெரிந்தவன்.
இயற்கையின் இயல்பு தெரிந்தவன்.
இம்மை மறுமை தெரிந்தவன்.
காமம் அற்ற தன்மையை அறிந்தவன்.
இரவு பகல் அறிந்தவன்.
நல்வினை தீயவினையை அறிந்தவனுக்கு இது தெரியும். இவைகளின் இயல்பைத் தெரிந்தவன். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்குத் தெரியவில்லை ஐயா என்றான்.
“வேண்டாம். நீ தெரிந்து கொள்வதற்காக மணிக்கணக்காக உட்கார்ந்து படிக்காதே. மகான் அகத்தியரை பூஜை செய். அவர் உனக்கு உணர்த்துவார்.
எனக்கு நல்லது கெட்டது தெரியாதையா. ஏதோ செய்து கொண்டிருக்கிறேன். உன் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் தெரியும். அறத்தின் இயல்பைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அறத்தின் இயல்பு தெரியாமல் நான் பூஜை செய்கிறேன். நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால், கை கொடுத்து அழைத்துப் போவார்.
வினாடிக்கு வினாடி இவன் முன்னேறிக் கொண்டிருப்பான். தலைவனின் துணை கொண்டல்லவா முன்னேறிக் கொண்டிருக்கிறான்?
பொருளறியாமல் பிறப்பறுக்க நினைப்பவன் என்ன செய்தான்? காவி உடை கட்டினான், தாடி வைத்துக் கொண்டான். தன் கல்வியை, அறிவை துணை கொண்டு வெல்லலாம் என்று நினைக்கிறான்.
ஆசான் திருவடியே கதியென்று நினைப்பவன் முன்னேறிக்கொண்டு போகிறான். இதை இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்றார். அவன் தான் கற்ற கல்வி துணைக்கொண்டு போகிறான். ஆனால் கடைத்தேறவில்லை, அவன் மூலையில் கிடக்கிறான்.
இவன் ஆசானை துணையாகக் கொண்டு போகிறான், முன்னேறிக்கொண்டான். இதையெல்லாம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்து கொண்டு இல்லறத்தை நடத்திக்கொள்ள வேண்டும். மனைவி, மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்.
பொருளுக்காக பாவியாகாது இருக்க வேண்டும், கர்வம் கொண்டு திரியக்கூடாது. கர்வம் கொண்டு திரியாமல் இருக்க ஆசான் ஆசி இருக்க வேண்டும்.
ஆசானை வணங்க வணங்க, உனக்கு மென்மையான அறிவு வரும், விகாரம் அற்றுப்போகும், கர்வமில்லாமல் இருப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
இப்படிப்பட்ட கருத்துகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும், மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். சேர்ந்தால் போதுமா? மக்கள் தினம் பூஜை செய்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
முன் செய்த வினையைப் பற்றி அறிந்து கொண்டோம், நீக்கிக் கொண்டோம். ஆசான் ஆசியால் நல்வினை தீயவினையைப் பற்றி அறிந்து கொண்டோம். ஆக, பெரியவர்கள் ஆசியால்தான் எல்லாம் வரும்.
நான் சொன்ன வார்த்தையும் அவ்வளவு லகுவல்ல.  இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்என்பது அவ்வளவு லகுவல்ல. இதற்கு தலைவனுடைய ஆசி இருக்க வேண்டும். அவரவர்கள் தலைவனை பூஜை செய்து முன்னேற வேண்டும், நிலை உயர வேண்டும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும், இல்லையென்றால் முடியாது.
 வினை இல்லாமல் எப்படி வாழ வேண்டும்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வினையைப் பற்றி அறிவதற்கு தலைவனுடைய ஆசியும், விவேகிகளுடைய ஆசியும் இருக்க வேண்டும். நாமெல்லாம் கூடி வழிபாடு செய்ய வேண்டும்.
வினையைப் பற்றி அறிந்தவர்களும், வினையை நீக்கிக் கொண்டவர்களும் இருப்பார்கள்.
வினையை வென்றவன் யாரோ என்று நினைக்காதீர்கள்.
நான்தான் அய்யா அது!
எங்களுக்குத் தெரியும் வினையின் காரணம் தெரியும். வினையை நீக்கிக் கொள்ளும் அறிவு இருக்கிறது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
எங்களுக்கு துணையாக இருந்து, நாங்கள் அறப்பணி மேற்கொள்ளும்போது, எங்களுக்குத் துணையாக இருந்து, எங்களுடைய மனம் மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும்.
இங்கே அன்னதானம் செய்கிறோம். இந்த இடத்தில் பத்து நிமிடம் தண்ணீர் கொடுக்க வேண்டும், அன்னதானத்திற்கு பரிமாற வேண்டும்.
பௌர்ணமி பூஜைக்கு அன்பர்கள் ஆண்களும் பெண்களுமாக வருகிறார்கள். பௌர்ணமி பூஜைக்கு வருவார்கள், நாமெல்லாம் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், சாப்பாடு பரிமாற வேண்டும். அவரவர்களை நல்லபடி உபசரித்து, அறப்பணியை செம்மையாக செய்ய வேண்டும். ஞானிகள் பார்க்கிறார்கள், நல்லபிள்ளை என்பார்கள்.
நல்லபிள்ளை என்று ஞானிகள் ஆசி கொடுத்தால் அது மகிழ்ச்சிதான். நாங்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும். குடிலாசான் ஒருவர் மகிழ்ச்சி அடைந்தால் நவகோடி சித்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததற்கு ஒப்பாகும். அவ்வளவு பெரியவரா என்றான். ஆமாம், ஆமாம் ஐயா.
அதை ஏன் மறைக்க வேண்டும்?
குடிலாசான் மகிழ்ச்சி அடைந்தால் ஒன்பது கோடி ஞானிகள் மகிழ்ந்ததற்கு ஒப்பானது.
அவர் மகிழ்வதற்கு என்ன செய்வது?
அவன் மேற்கொள்கின்ற அறப்பணிக்கு தொண்டு செய். மனம் மகிழ்ந்து தொண்டு செய்தால் மனம் மகிழ்ச்சியடைகிறான். அந்த மகிழ்ச்சி உனக்குத் துணையாக இருக்கும்.
அந்த மகிழ்ச்சி உனக்கு செல்வத்தைப் பெருக்கும்.
அறிவு தெளிவடையும்.
வினையைப் பற்றி அறியலாம். வினையை நீக்கிக் கொள்ளலாம்.
ஆகவே, குடிலாசான் மனம் மகிழுமாறு நடந்து கொள்வதே நல்லது.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற குடிலாசான் செய்யும் அறப்பணிகளுக்கு, தொண்டு செய்து ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவே, வினையை நீக்கிக் கொள்ள துணை புரியும். வேறு எங்கும் இது போன்ற இடம் இல்லை. இதை இமயமலை உச்சியில் இருந்து சொல்லலாம்.
நித்தம்நித்தம் குடிலில் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு தொண்டர்களெல்லாம் வந்து தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். தினம் தினமும் அன்பர்கள் மதியத்தில் வந்து, தண்ணீர் கொடுக்கிறார்கள், கம்மஞ்சோறு, நீர்மோர் கொடுக்கிறார்கள். கம்மஞ்சோறு, நீர்மோர் கொடுப்பதற்கு இங்கிருந்து ஒரு மைல் நடந்தாக வேண்டும். கம்மஞ்சோறு, நீர்மோர் 300  பேர் சாப்பிடுகிறார்கள்.
அதன் மூலமாகக் குடிலுக்கு புண்ணியம் சேர்கிறது. அதைச்செய்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோல வாய்ப்பு வேண்டுமென ஆசானைக் கேட்க வேண்டும்.
குடிலில் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு நான் தொண்டு செய்ய அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். கம்மஞ்சோறு, நீர்மோர் ஊற்றலாம், தண்ணீர் ஊற்றலாம். அதற்கு அரைமணி நேரம் தொண்டு செய்யும்போது நமக்கு உடல் ஆரோக்கியம் வரும், நல்வினை பெருகுகிறது. குடில் ஆசானும், ஆசான் ஞானபண்டிதனும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதன்மூலமாக நன்மை உண்டாகிறது.
மதியம் அன்னதானம் நடக்கிறது. அதில் பங்குகொண்டு தொண்டு செய்கிறோம். நாளை மறுநாள் 9ம்தேதி பௌர்ணமி நிகழ்ச்சி இருக்கிறது. அதிலும் கலந்துகொண்டு தொண்டு செய்யலாம். இப்படி அறப்பணி செய்து கொண்டே இருக்கிறோம். என்ன நட்டமா? தொண்டு செய்து விட்டுப்போனால் என்ன? எங்களுக்கு வரும் செல்வத்தை வைத்தே தர்மகாரியம் செய்கிறோம், பௌர்ணமி பூஜை செய்கிறோம், கம்மஞ்சோறு, நீர்மோர் மற்றும் நித்திய அறப்பணி செய்கிறோம், நன்மை கிடைக்கிறது. குடிலாசானின் ஆசி கிடைக்கும். ஆசான் ஞானபண்டிதனின் ஆசி கிடைக்கும். இதுதான் வினையைத் தீர்ப்பதற்கு வழி என்று சொல்லி இருக்கிறோம்.
வினை முற்றும் தீர வேண்டுமென்றால், மலமற்றுப் போக வேண்டும். மலமற்றுப் போகாமல் வினை தீராது. நீங்கள் எல்லாம் அந்த வாய்ப்பை பெற வேண்டும், அந்த வாய்ப்பை அடைய வேண்டுமென்று உங்களை வாழ்த்துகிறோம்.
நாங்கள் மேற்கொள்ளும் அறப்பணிக்கு தொண்டு செய்யும் தொண்டர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் நீடு வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறோம். நீங்களெலாம் ஒவ்வொரு நாளும் தடைபடாது தொண்டு செய்து, ஆசி பெற வேண்டும். ஆக வினையைத் தீர்த்துக் கொள்வதற்கு என்ன உபாயம் என்பதை சொல்லியிருக்கிறேன்.
நாங்கள் அறிந்த, அடைந்த உண்மையை, அந்த ரகசியத்தை, பேரின்பத்தை நீங்களும் அடைய வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறோம். இந்த வார்த்தை தப்பாது. நீங்கள் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறோம். நீங்கள் மேற்கொள்கின்ற அறப்பணிகள், மேற்கொள்கின்ற எந்த செயலுக்கும் துணை புரிவோம். இது நன்றி உள்ள துறையாகும். வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208628
Visit Today : 720
Total Visit : 208628

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories