05.10.1997 – மரணமிலாப் பெருவாழ்விற்கும், கடனில்லா இல்லறத்திற்கும் தலைவன் திருவடியே துணை


மரணமிலாப் பெருவாழ்விற்கும், கடனில்லா இல்லறத்திற்கும் தலைவன் திருவடியே துணை
ஓம் அகத்தீசாய நம
     அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     நாம் பேசிய கருத்துக்களெல்லாம் மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமான சுவாமிகள் போன்ற ஞானிகள் சொல்லிய கருத்துக்களைதான் சொல்லியுள்ளோம். திருமந்திரத்திலும் இந்தக்கருத்துக்கள் உண்டு. நாம் ஒன்றும் புதிதாக கற்றுக்கொள்ளவில்லை. ஆசான் அகத்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், மகான் காலாங்கிநாதரையும், மகான் போகமகாரிஷியையும், மகான் கருவூர் முனிவரையும் மனம் உருகி பூஜை செய்தோம். அப்படி பூஜை செய்யும்போது, நமக்கு நன்மை எது தீமை எது என்று உணர்த்துவார்கள். எந்தெந்த வகையில் மனிதன் பாதிக்கப்படுகிறான் என்பதை முதலில் உணர்த்துவார்கள்.
     உயிரினங்கள் தோன்றுவதற்கு “நாதவிந்து” தான் காரணம் என்று ஞானிகள் உணர்த்துவார்கள். நாதவிந்து என்பது ஆதியிலேயே உள்ளது. அது ஆணாகவும் பெண்ணாகவும் இருந்திருக்கிறது. அது ஒரு கூட்டுப்பொருள். பெண் ஆண் சேர்க்கை என்று சொல்லுவார்கள். ஆக கூட்டுப்பொருள் இல்லை என்றால் தோன்றியிருக்க முடியாது. இந்த பெண் ஆண் சேர்க்கை மனிதனை பலகீனப்படுத்துகிறது. இந்த பலகீனம் யாருக்கு?
     அந்த பலகீனத்தைப்பற்றி அறிந்து கொள்ளாதவர்களுக்கு அதுவே காமமாகவும், மாயையாகவும், அறியாமையாகவும், நரகமாகவும் இருக்கிறது. ஆனால் அந்த உண்மையை அறிந்தவர்க்கு அதுவே மோட்சமாகவும், மோட்சம் அடைவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.
     நம்முடைய தேகம் தாய் தந்தையின் காமத்தால் வந்தது. தாய் தந்தையின் குணங்கள் எல்லாம் இந்த தேகத்திலும் இருக்கும். அவர்களுக்கு இருந்த விகாரம், அறியாமை, குணக்கேடுகள் இந்த உடம்பிலும் இருக்கும். ஆக இந்த குணக்கேடுளெல்லாம் இயற்கையே. இது செயற்கை அல்ல. நமக்குள் கோபம் மனித வர்க்கத்திற்கே உள்ளதுதான்.
     தாய் தந்தைக்கு உள்ள கோபம், குணக்கேடுகள், காமம், இனம்புரியாத அறியாமை இவைகளெல்லாம் நம்மிடம் இருக்கிறது. இதைப்பற்றித்தான் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் இதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
     மனிதன் ஏன் பிறக்கிறான்? எப்படி பிறக்கிறான்? பஞ்சபூதங்களான பிருதிவி(மண்), தேயு(அக்னி), அப்பு(நீர்), வாயு(காற்று), ஆகாயம் இவற்றின் சேர்க்கையால் ஆனதுதான் இந்த உடம்பு. ஆண், பெண் , மற்ற ஜீவராசிகளும் இப்படித்தான் பஞ்சபூதங்களால் தோன்றுகிறது. பஞ்சபூதத்தால் வந்தது நாதவிந்து. அதே நாதவிந்து பெண்ணாகவும் ஆணாகவும் இருக்கிறது. இந்த உலகம் இப்படித்தான் உள்ளது.
     இந்த உண்மைகளை எப்படி அறிவது? ஏன் பிறந்தான்? அவனுக்கே காரணம் தெரியாது. ஏன் வளர்கிறான்? அவனுக்கே தெரியாது. ஏன் பருவம் வந்தவுடன் காமம் வந்தது? அவனுக்கே தெரியாது. எதற்காக சாப்பிடுகிறோம்? அவனுக்கே தெரியாது.
     ஆக பசி வருவதற்கு காரணம், உணவு வந்ததிற்கு காரணம், வளர்ச்சி வந்ததிற்கு காரணம், நரைதிரை வந்ததிற்கு காரணம், சாவு வந்ததிற்கு காரணம் அவனுக்கே தெரியாது. இதையெல்லாம் யார் அறிந்தார்களோ அவர்கள் சுட்டிக்காட்டினால்தான் தெரியும்.
     ஏன் நரைதிரை வந்தது? ஏன் சாவு வந்தது? ஏன் முதுமை வந்தது? ஏன் கபம் கட்டுகிறது? அதை எப்படி அறுப்பது? இதைப்பற்றி எல்லாம் தெரியுமா? என்றால் தெரியாது என்பான். இதையெல்லாம் அறியாதவரையில் அவன் செத்தவன். ஏன் செத்தவன் என்று சொல்லுகிறோம் என்றால்? சாகாதவனைப்பற்றி அவன் தெரிந்து கொள்ளும் வரையில் அவன் செத்தவன்தான்.
     ஆசான் ஞானபண்டிதரான சுப்பிரமணியர், மகான் அருணகிரிநாதர் இவர்களெல்லாம் வாசி வசப்பட்ட மக்கள், ஞானிகள், பிராணாயாமம் செய்தவர்கள்.
     மூச்சுக்காற்றை உயிர், ஆன்மா, பிராணன் என்பார்கள். ஞானிகளெல்லாம் மூச்சுக்காற்றை இலயப்படுத்தியவர்கள். ஆக இந்தக்காற்றை வசப்படுத்திய மக்கள் சாகமாட்டார்கள். அந்தக்காற்றை வசப்படுத்திய மக்களைப்பற்றி, என்று ஒருவன் அறிகின்றானோ, அன்றுவரை அவன் செத்தவன்தான். இதை ஒருவர் சுட்டிக்காட்ட வேண்டும். உலக மக்கள் வணங்குகிற தெய்வங்களெல்லாம் இறந்து பிறந்தவர்கள்.
     ஆசான் இராமலிங்க சுவாமிகள் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவரும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சுட்டிக்காட்டினார். எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சொன்னாலும் அவர்களும் எல்லாம்வல்ல இயற்கையை வென்றவர்கள். இதற்கு ஆதாரமாக நூல்கள் உள்ளன. ஆனாலும் அப்போது வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. காரணம் அன்றுள்ள சூழ்நிலை, மக்களிடம் போதிய கல்விஅறிவு இல்லை.
     இந்தக்காலத்தில் இந்த உண்மையை நாம் சொல்கிறோம். நீங்கள் வணங்கக்கூடிய தலைவன் இறந்தவனா? இறக்காதவனா? தனக்கு எதிரியாகிய கபத்தை அருத்தவனா? தனக்கு எதிரியாகிய உடம்பை வென்றவனா? தனக்கு எதிரியாகிய இயற்கையை வென்றவனா? என்பதை நீங்கள் அறிய வேண்டும். நாங்கள் சுட்டிக்காட்டும் ஞானிகளான மகான் அகத்தீசர், மகான் திருமூலதேவர் இவர்களெல்லாம் முதுமையை வென்றவர்கள். இவர்கள் எல்லோரும் பசியை வென்றவர்கள், காமத்தை வென்றவர்கள், முதுமையை வென்றவர்கள், கபத்தை அறுத்தவர்கள் எல்லாம்வல்ல இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டதை எல்லாம் வென்றார்கள். அதனால் இவர்களை நாம் வணங்கச்சொல்கிறோம். இவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள். இவர்களால் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டும். முதலில் யோகநெறியைப்பற்றி சொல்லக்கூடாது. ஒன்றுகிடக்க ஒன்று செய்துவிடுவார்கள்.
     முதுமையை வெல்லும் மார்க்கத்தை மகான் திருமூலதேவர் சொல்லியுள்ளார். அவர்,
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.
-திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 575
                வாயு என்பது மூச்சுக்காற்று. மூச்சுக்காற்று வந்து போகும். இதைப்பற்றி மக்களெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஞானிகளை நாம் அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் ஆசி இல்லாமல் அறிய முடியாது. அப்படியென்றால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? நாங்கள்தான் சொல்லவேண்டும்.
    
     நான் வாசிவசப்பட்டவன். மனிதனுக்கு சுவாசக்குழாயில் அடைத்துக் கொள்ளும் கபத்தை, அறுக்கக்கூடியது இந்த வாசி. மூச்சுக்காற்றை கட்டுகின்ற மக்களுக்கு இந்த வல்லமை உண்டு. அதற்கு பக்தி செலுத்தவேண்டும். ஆசான் ஞானபண்டிதன்தான் முதுபெரும் தலைவன் என்று புரிந்துகொண்டோம். மகான் அகத்தீசரையும், மகான் அருணகிரிநாதரையும் புரிந்துகொண்டோம். இவர்கள் அத்தனைபேரும் வாசியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள், புருவமத்தியில் ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். புருவமத்தியில் வாசியை ஒடுக்கி வைத்ததால் அனல் ஏறுகிறது. கனல் ஏற ஏற உடலில் இருக்கும் அசுத்தம் நீங்குகிறது.
     அசுத்தம் மட்டுமா நீங்குகிறது? நமக்கு எதிரியே கபம்தான். எமனே கபம்தான். அவனும் சாய்கிறான். நமக்கு கபம் நம்மைவிட்டு போகிறது. எனவே, தாய் தந்தையால் எடுத்த தேகத்தின் நச்சுத்தன்மை அகலும். இந்த வாசி வசப்படுவதற்கு நாம் மக்களிடம் அதைப்பற்றி சொல்லவேண்டும்.
     இப்போது முதலிலேயே யோக நெறியை சொல்கிறோம். இப்படி சொல்லிவைத்தால், என்றாவது மக்களுக்கு புரியும். ஆசானை வணங்குவான், ஆரம்பத்தில் தடுமாற்றம் இருக்கும், ஆசான் திருமூலதேவரை அழைப்பான் ஐயா, நீர் எந்த முறையை கையாண்டீர்? என்னுடைய குணக்கேடு என்னை வாட்டி வதைக்கிறது. ஒரு பக்கம் பசி, ஒரு பக்கம் காமம், ஒரு பக்கம் மலஜலம் கழித்தல், ஒரு பக்கம் உடல் நாற்றம் இப்படியெல்லாம் இருக்கிறது ஐயா. பசிக்கு உணவு தேடவேண்டி உள்ளது, சாப்பிட்டால் மலஜலம் கழிக்கவேண்டி உள்ளது, குளிக்க வேண்டி உள்ளது, இப்படியெல்லாம் உள்ள பிரச்சனைகளை சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் எனது மனதில் போராட்டம் இருக்கிறது. இதை நான் எப்படி சமாளிப்பேன் ஐயா என்று ஆசான் திருமூலரிடம் கேட்கிறான். திருமூலதேவர் மிகப்பெரிய மகான். “நீ தியானம் செய், என்னை(திருமூலதேவர்) நினைத்து தியானம் செய்” என்பார். எப்போது இப்படி சொல்வார்கள்?
     என்று ஒருவன் மகான் திருமூலதேவரையோ, மகான் போகமகாரிஷியையோ, மகான் காலாங்கிநாதரையோ, மகான் புஜண்டமகரிஷியையோ, மகான் சட்டமுனிவரையோ, மகான் கருவூர் முனிவரையோ, மகான் சண்டீசரையோ, மகான் சிவவாக்கியரையோ, மகான் கொங்கண மகரிஷியையோ பெரிய மகான்கள் என்று நினைக்காதவரை அவர்களுக்கு அருள்கிடைக்காது.
     இவர்களெல்லாம் மிகப்பெரிய மகான்கள் என்று மனதில் நினைத்து ஒருவன் பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யும் போதுதான் இவனுக்கு உடம்பின் பலஹீனத்தை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை தருவார்கள். தன்னைப்பற்றி அறிவதற்கே நூறுகோடி ஜென்மம் எடுக்க வேண்டும்.
     “இவர்கள் (மகான் அகத்தீசர், மகான் திருமூலதேவர்) எல்லாம் பெரியவங்க ஐயா, நீ அவர்களை பூஜை செய்து வழிபாட்டு அவர்கள் நாமத்தை சொல்லி தினமும் வீழ்ந்து வணங்கு,” என்று ஆசான் இவனுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி பூஜையில் சொல்லி வேண்டிக்கொண்டால் ஞானிகள் நம்முடைய பலகீனத்தை உணர்த்துவார்கள்.
     ஞானிகள் எல்லாம் மிகப்பெரியவர்கள். அவர்கள் எல்லோரும் வென்றவர்கள். எதை வென்றவர்கள்? தாய் தந்தையால் எடுத்த நச்சு தேகத்தை விஷதேகத்தை வென்றவர்கள். விஷத்தை நம்முடன் வைத்திருக்கிறோம். அதை யோகிகள் என்ன செய்கிறார்கள்?
     பூஜை செய்து பூஜை செய்து உடம்பிலிருக்கும் விகாரத்தை நீக்குகிறார்கள். விகாரம் அற்றுப்போகிறது. நச்சுத்தன்மை அற்றுப்போகிறது. நச்சுத்தன்மை அற்றுப்போனால், கபம் நீங்குகிறது. ஆக கபமும், நச்சுத்தன்மையும் நீங்குகிறது. இரண்டும் நமக்கு பகைவர்கள். இதனிடையே உஷ்ணமும் உடலில் ஏறிக்கொண்டு இருக்க வேண்டும்.
     “கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு,” என்றார். காற்று ஏற ஏற, அனல் ஏற ஏற அசுத்தங்கள் நீங்குகிறது. கபம் அற்றுப்போகிறது. கபம் அற்றுப்போனவுடன் கீழ்நோக்கி பாயக்கூடிய விந்துவானது, மேல் நோக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் சிவபெருமான் கழுத்தை உமாதேவி பிடித்தார்கள் என்பார்கள். அதற்கு அப்புறம் போக முடியாது. அப்ப கழுத்து வரையிலும் நச்சுத்தேகம். இந்த அக்னியானது உச்சியை வந்து அடையும்வரையில் அந்த தேகம் நச்சுத்தேகம்தான். ஆக அப்படிப்பட்ட தேகத்தைப்பற்றி இவன் தலைவனிடம் கேட்கிறான். ஆசானைக்கேட்டு பூஜை செய்து வருகிறான்.
     நாங்கள் சொன்ன ஞானிகள் எல்லாம் முதுபெரும் ஞானிகள். நடந்து போகும்போதே பெரிய மலையை தட்டிவிட்டுப் போவார்கள். அவ்வளவு வல்லமை உள்ள ஆசானைத்தான் நாங்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். நாங்கள் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். இப்போது கனலை ஏற்றிக்கொண்டிருக்கிறோம்.
     நாங்கள் வாசி வசப்பட்டவன். வாசி வசப்பட்டதால் அந்தக்காற்று உந்திக்கமலத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள உருதரித்த நாடியில் தங்கியிருக்கிறது. அங்கே தங்குகின்ற காற்று உடம்பிலிருக்கும் மாசை தீர்க்கிறது. உடல் மாசு தீரத்தீர உள்ளம் தெளிவடையும். இதைத் தவிர உள்ளம் தெளிவடைய வேறு வழியே இல்லை. அவன் என்ன முயற்சி செய்தாலும் சரி, ஒன்றும் நடக்காது. பட்டினி கிடந்தாலும் சரி, வெறும் பால் பழம் சாப்பிட்டாலும் சரி ஒன்றும் அசைக்கமுடியாது.
     இந்த நச்சுத்தேகத்தை சுத்தமாக பட்டினி போட்டால் செத்துவிடும். உணவு தந்தால் காமம் வந்துவிடும். ஆக இதில் இப்படி ஒரு போராட்டம் இருக்கிறது. இதற்கு ஞானிகள் என்ன செய்கிறார்கள்.
     உருதரித்த நாடியில், அந்த வாசி வசப்பட்டதும், அனல் ஏறிக்கொண்டே இருக்கும். அனல் ஏற ஏற நச்சுத்தேகத்தில் உள்ள விஷம் தீரும். இந்த விஷம் நீங்க நீங்க சிந்தனை தெளிவடைகிறது, கபம் அற்றுப்போகிறது, விகாரம் நீங்கியவுடன் சிந்தனை தெளிவடையும்.
     நம்முடையை தேகம் காமதேகம். விகாரமுள்ளது, மும்மலத்தால் ஆனது. மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்பார்கள். மல, ஜல, சுக்கிலம் உணவினால் வந்தது. உணவு பசியினால் வந்தது. பசி இயற்கையினால் வந்தது.
     இயற்கையின் காரணமாக பசியும், பசியின் காரணமாக உணவும் வந்தது. ஆக உணவுப்பொருட்கள் இயற்கை. எனவே இந்த உணவுப்பொருட்கள் நம்மை இரட்சிக்கிறதா? வாழவைக்கிறதா? அழியவைக்கிறதா? என்பதை அறிய வேண்டும். உனக்கு என்று அந்த இரகசியம் தெரிகின்றதோ, அன்று வரையில் இந்த உணவுப்பொருள் உன்னைக்கொன்றுவிடும்.
     “ஏனய்யா உணவுப்பொருள் என்னை கொன்றுவிடும்” என்று கேட்டான். நீ சாப்பிடாவிட்டால் செத்துவிடுவாய். சாப்பிட்டால் காமம் வந்துவிடும். அதற்கு என்ன செய்வது? இதுதான் இரகசியம். இந்த இரகசியத்தை எல்லோரும் அறிய வேண்டும்.
     இந்த இரகசியத்தை அறிய வேண்டும் என்றுதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதை பேசச்சொல்லி தலைவன் கட்டளை. பேசு! சொல்! என்று கட்டளை வந்திருக்கிறது. இப்போது ஞானசித்தர்காலம். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
     கலிகாலத்தில் சொல்லவேண்டும் என்று சொல்லியதால் நாகல் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் உண்மையை அறிந்துகொண்டோம். அதனால் உங்களுக்கு சொல்கிறோம்.
     ஆகவே முறையோடு கனல் ஏறவேண்டும். நம் இஷ்டத்திற்கு அனலை ஏற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆசான் பிராணாயாமம் செய் என்று சொன்னால் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த கனல் தெரியும். சாப்பிடும்போது நிறுத்து என்று சொல்வார்கள். அப்படி சொல்லும்போது உடனே நிறுத்திவிட வேண்டும்.. இந்த உணவைத்தான் சேர்க்க வேண்டும் என்று சொன்னால் அந்த உணவைத்தான் சேர்க்கவேண்டும்.
     ஆக இந்தக்கனலை ஏற்றத்தெரிந்தவர்களுக்கு ஞானத்தை விரும்புகின்ற மக்களுக்கு உபாயம் என்னவென்றால் பால், பழம், பாசிப்பயருதான் உணவாக இருக்க முடியும். இந்த உணவையும் ஞானிகள் சொல்லியபிறகுதான் உண்ணவேண்டும். பிறகு கனல் ஏறுகின்ற மார்க்கத்தைச் சொல்லி அந்த உடம்பையும் காப்பாற்ற வேண்டும். பிறகு கனல் ஏறுகின்ற மார்க்கத்தையும் சொல்வார்கள். அப்படி செய்து அந்த உடம்பையும் காப்பாற்ற வேண்டும்.
     நாம் நன்றாக சாப்பிட்டு உடம்பைக்காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் சாப்பிட்டால் காமம் வருமே, இப்படி ஒரு போராட்டம் இருக்கும். என்ன செய்வது? ஆசானிடம் கேட்டுக்கொள். அப்படி கேட்டால் இந்தப்போராட்டத்தை உடைத்துவிடுவார். விகாரதேகத்தில் பசி இருக்கும். பசி இருந்தால் உணவு சாப்பிடுகிறான். அதனால் காமம் வந்துவிடும். ஆசானை உருகி தியானம் செய்யும்போது பசி அற்றுப்போகும்படி செய்துவிடுவார். ஆக காமம் அற்றது, பசி அற்றது. அப்ப உணவையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் செத்துவிடுவோம். எனவே உருகி தியானம் செய்யவேண்டும்.
     முற்றுப்பெற்ற ஞானியை தியானம் செய்யவேண்டும். அவரது திருவடியைப்பற்றி பூஜை செய்யவேண்டும். ஆக இதையெல்லாம் மகான் திருமூலதேவர் திருவடியைப்பற்றி பூஜைசெய்து கேட்டு வந்தால் அந்த எல்லைக்கு வரலாம். ஆக அந்த எல்லைக்கு வரும் வரையில் நாம் போராடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
     சிலர் காமம் வருகிறது என்பதற்காக பசி பட்டினியாகக் கிடப்பான். ஆனால் அப்படி இருக்கக்கூடாது. என்ன செய்ய வேண்டும் என்பதை ஞானிகள் திருவடியைப்பனிந்து அவர்கள் கருத்தை கேட்க வேண்டும். இதை,
சோற்றைச் சுருக்காமல் தூய்மையாய்த் தானிருந்து
ஏற்றி இருகாலும் இன்பமாய்க் காற்று
வழியோடு ககன மார்க்கமே நுழைவோர்க்கு
அழியாது இக்காயம் அறி.
    மகான் திருவள்ளுவர் அருளிய பஞ்சரத்னம் 500– கவி எண் 494
என்பார். சோற்றை சுருக்கக்கூடாது. தூய்மையாகத் தானிருக்க வேண்டும் – எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும். எண்ண அலைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. தடுமாறுகின்ற இதயத்தை ஆசானிடம் சொல்லி கட்டுபடுத்தி வைக்க வேண்டும்.
அடுத்து ஏற்றி இருகாலும் இன்பமாய் – இடகலையும், பின்கலையும் சேர்க்கவேண்டும் என்பார். இதை ஞானிகள்
   “சேர்ப்பதுதான் இடைசமனமாய் சேர்த்துக் கொண்டால்”
  
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கரிவாரில்லை”
என்பார்கள். மேலும் “ஏற்றி, இருகாலும் இன்பமாய் காற்றின் வழியோடு ககன மார்க்கமே நுழைவார்க்கு அழியாது இக்காயம் அறி” இவைகளெல்லாம் ஞானிகள் சொல்லிய கருத்துக்கள்.
ஆக உணவை குறைக்கக்கூடாது, அசைவ உணவை உண்ணக்கூடாது. அசைவ உணவை உண்டால் வெறி பிடிக்கும். எனவே சுத்த சைவ உணவை சாப்பிட வேண்டும். நல்ல பால், பழங்கள், பாசிப்பயறு இவற்றை உண்ணவேண்டும். பழங்களை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பையும், உயிரையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஞானிகளின் திருவடியையும் பற்றி பூஜை செய்து கொள்ள வேண்டும். இல்லறத்தையும் நல்லபடி நடத்திக்கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் கடைப்பிடித்தால் அந்த வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் அந்த வாய்ப்பு கிடைக்காது என்பார்கள்.
வெளிக்காற்றும், உள்காற்றும் சேர்க்கக்கூடிய இடம் புருவமத்தி. அந்த இடத்தில் சேர்த்தால்தான் காற்று ஒடுங்கும். அப்படி ஒடுங்கினால்தான் விகாரம் அற்றுப்போகும். இதை மகான் அகத்தியர்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல்புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
கட்டியின்கீழ் திருவாடுதுறைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.”
    மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் – கவி எண் 86
என்பார்.
     பெட்டி என்பது வயிறு. வயிற்றில் உணவு எதுவும் இருக்கக்கூடாது. கால் வயிறு அளவுதான் உணவு இருக்கவேண்டும். அளந்துதான் சாப்பிட வேண்டும். பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.
     பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனை – பாம்பு என்றால் கருஞ்சாரை, வெஞ்சாரை. அல்லது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது எனப்படும். அப்படி அடைத்து வைக்கின்ற காற்று என்ன செய்யும்?
     பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் – ஆக அந்தக்காற்றை எப்படி ஆட்டுவது? அந்தக்காற்றை எப்படி இலயப்படுத்துவது? அந்தக்காற்றை எப்படி ஸ்தம்பிப்பது? எப்படி புருவ மத்தியில் செலுத்துவது? என்பது தெரியாது?
     எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் – எட்டு என்பது ஆகாரம். இரண்டு என்பது உகாரம். கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றையும், வெளிக்காற்றையும் சேர்க்க வேண்டும். இது நம்மால் முடியாது. தலைவன் ஆசி இருக்க வேண்டும். வெளிக்காற்று – பரமாத்மா, உள்காற்று – ஜீவாத்மா. இந்த உள்காற்றையும், வெளிக்காற்றையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தினால் அது என்னாகும்? வெளியே போகமுடியாது. இதை ஆசான் நயமாக சொல்லுவார்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல்புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
     வெளிக்காற்று, உள்காற்று இரண்டையும் சேர்த்து ஆட்டினாக்கால் இருபுறமும் ஆடிவர எதிரேயேறுங் – வேறு வழியே இல்லாமல் மேலே போய்விடும்.
     கட்டினுக்குள் நில்லாது சிரசிலேறும் – அதற்கு வேறு வழியேயில்லை சிரசில் ஏறும்.
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
கட்டியின்கீழ் திருவாடுதுறைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.”
      என்றார். எதற்கு ஆசான் அகத்தீசரும், மகான் திருவள்ளுவரும் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்? ஆக இப்படித்தான் யோகிகள் செய்திருக்கிறார்கள். இப்படி ஆசானின் ஆசி பெற தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்கிறவர்கள் உணவு அரை வயிறாக சாப்பிட வேண்டும். பாசிப்பயிறு, பச்சரிசி, பழங்கள் சேர்க்க வேண்டும். பசு நெய் சேர்க்க வேண்டும். முறையோடு பிராணாயாமம் செய்து, ஆசான் ஆசி பெறவேண்டும். ஆக ஞான சித்தர் காலம் வருவதால் இந்தக்கருத்துக்கள் ஊரெங்கும், உலகெங்கும் பரவவேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் மரணத்தை வெல்லலாம், ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நச்சுத்தேகமாகிய விஷதேகத்தை வீழ்த்தலாம். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நமது அந்திமக்காலத்தில் கட்டக்கூடிய கபத்தை இப்போதே அறுத்து எடுத்துவிடலாம்.
      செபமது செய்யத் தேகமுஞ் சித்தியாம்
      கபமது அறுத்துக் கருத்தையுள் ளிருத்தி
      உபநிட தப்பொருள் ளுண்டென நம்பி
      தபமது செய்யத் தானவ னாமே.
§  மகான் சட்டை முனிவர் தண்டகம் – கவி எண் 35
கபத்தை அறுத்தல், செபமது செய்ய தேகமுஞ் சித்தி என்றார். நாம் ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம என்று காலையிலும் மாலையிலும் அரைமணி நேரம் சொல்கிறோம். எதற்கு? தேக சித்திக்கு என்றான். எந்த தேகத்திற்கு சித்தி? இந்த தேகத்திற்கு உணவு தருகிறோம், இந்த உணவை வைத்துக்கொண்டு சித்தி எல்லாம் கிடைக்காது. இது நச்சுத்தன்மையைத்தான் உண்டாக்கும். இது சித்தி அல்ல. உடல் மாயையானது. தாய் தந்தையால் எடுத்த தேகம் மாறவேண்டும். அதற்கு ஆசான் ஆசி வேண்டும்.
எனவே செபமது செய்ய என்றார். ஓம் அகத்தீசாய நம, ஓம் சட்டைமுனிவர் தேவாய நம, ஓம் சண்டிகேசர் தேவாய நம என்று சொன்னால் தேக சித்தி வரும். அறிவு வரும். நோய் வராது. செல்வம் பெருகும். நல்ல நட்பு கிடைக்கும். எதைப்பற்றியும் உணரக்கூடிய சிறப்பறிவு உண்டாகும். முதுபெரும் ஞானிகள் நாமத்தை சொன்னால், அப்படி சொல்வதே செபமது செய்ய தேகமுஞ் சித்தி.
கபமது அறுத்து கருத்தில் நிறுத்தி – கபத்தை அறுப்பதும், தேகசித்தியாவதும் நாமஜெபம் செய்தால்தான் முடியும் என்கிறார் மகான் சட்டைமுனிவர். ஆக மனித வர்க்கம் அடையக்கூடிய லட்சியத்தை அடையக்கூடிய காலம் வந்துவிட்டதால் இதையெல்லாம் சொல்கிறோம். இந்தக்காலம் ஞானசித்தர்காலம். கருத்துக்களை சொன்னால் அப்படியே ஈயம்போல் பிடித்துக்கொள்ளும். அந்த அளவுக்கு இந்த சமுதாயத்தில் புண்ணியபலம் இருந்துள்ளது. பல ஜென்மங்களில் புண்ணியம் செய்ததனால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக முன்னேறுகிற வாய்ப்பு உள்ளதால் இப்படிப்பட்ட விளக்கத்தை சொல்லியுள்ளோம்.
எனவே வாசியைப்பற்றி, “கட்டினுக்குள் நில்லாது சிரசில் ஏறும்கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி என்றும், புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்” என்றும் சொல்வார்.
புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயு – வெளியிலும் உள்ளும் வந்து போகின்ற காற்று என்று பொருள். புக்கு – வருகின்ற அல்ல திரிகின்ற காற்று.
காற்றுதான் இந்த உடம்பில் ஆன்மாவாக இருக்கிறது. அந்தக்காற்றும் அது ஒடுங்குகிற இடமாக புருவமத்தியையும் ஆசான் அல்லது ஆதிதலைவன் அல்லது எல்லாம்வல்ல இயற்கை அல்லது ஆதிசக்தி இந்த உடம்புக்குள்ளே மோட்ச இலாபம் பெறுமிடமாக வைத்திருக்கிறாள். இது நம்மீது உள்ள கருணை, இதை யாரும் அறிய முடியாது.  
பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட அந்த ஊசிமுனை வாசலுக்குள் சென்றால் இந்த உடம்பிலுள்ள மாயை தீரும். ஆக புறப்பட்ட புக்குத் திரிகின்ற வாயுவை பத்தாம் வாசலுக்குள் செலுத்திவைத்தால், அந்தக்காற்று உடல் மாசை தீர்க்கும் என்றார். ஆக எல்லாம்வல்ல இயற்கை எல்லா ஆண் பெண் உடம்புக்குள்ளும் இப்படி ஒரு இரகசியத்தை வைத்திருக்கிறாள். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் முன்னேறுகிறார்கள். நமக்கு தெரியவில்லை தடுமாறுகின்றோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் – அது என்னாகும்? நெறி என்பது பாதை. நெறி என்பது ஒரு முறை நம் இஷ்டத்துக்கு செய்தால் ஆன்மா போய்விடும், செத்துவிடுவான்.
ஆசான் அகத்தீசரை இரகசியமாக வீழ்ந்து வணங்கி, “அடியேன் வாசியோடு வாசியாகக் கலந்து எனக்கு அருள் செய்யவேண்டும், ஞானம் சித்திக்க வேண்டும். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் வேண்டும்” என்று கேட்கவேண்டும். நாங்கள் கேட்டுக்கொண்டு வருகிறோம். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும் என்று கேட்டோம்.
ஆக தினம் தியானம் செய்கிறோம். தினம் அன்னதானம் செய்கிறோம். தினமும் இதைப்பற்றியே பேசுகிறோம். வேறு டி.வி.யோ அல்லது பாட்டோ அவசியமில்லை. ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுவதற்கு ஒரே சிந்தனையாக இருக்கவேண்டும். அதற்காக ஒரே சிந்தனையாக தொடர்ந்து இருக்க முடியாது. காலை மாலை புத்தகம் படிக்க வேண்டும், அதைப்பற்றி சிந்திக்கவேண்டும். இல்லறத்தில் இருந்து வியாபாரம் செய்வோம்.
ஆக சிந்தனை மட்டும் வந்துபோகின்ற காற்றைப்பற்றியே இருக்க வேண்டும். “நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்” – ஆக நெறி என்பது நல்ல பாதை. இப்ப நாம் சொன்னதுதான் நல்ல பாதை. “அடியேன் வாசியோடு வாசியாகக் கலக்க வேண்டும், அடியேன் மூச்சுக்காற்றோடு மூச்சுக்காற்றாக சார்ந்திருக்க வேண்டும். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை இரட்சிக்கவேண்டும். எனக்கு மரணமிலாப்பெருவாழ்வு வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென கேட்பதுதான் நெறி.
அப்படி கேட்கும்போது ஞானிகள் என்ன செய்கிறார்கள்? நம்முள்ளே வந்து அந்தக்காற்றை இயக்கித்தருவார்கள். அந்த இடத்திற்கு நம்மால் போகமுடியாது. அது மயிரிழை போன்ற இடத்தில் ஸ்தம்பிக்கிறான். அப்படி செய்யும்போது என்னாகும்? காற்று அப்படி இப்படி போகமுடியாமல் தடுமாறும். வெளிக்காற்றை இழுக்கும்போது உள்ளே புகுந்துவிடும். அப்ப இதுதான் நெறி என்றார்.
நெறிப்பட உள்ளே நின்மலக்கில் – அதை ஒன்றும் இல்லாமல் செய்துவிட வென்றும். முறையோடு, வகைதொகையோடு, ஆசான் ஆசியோடு அதை செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டார்.
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும். உடம்பு சிவக்கும் எப்போது? இந்த உடம்பு மாரும். நமக்கு இயல்பாக வரக்கூடிய நரைதிரை அற்றுப்போகும், கபம் அற்றுப்போகும், திரை நீங்கும், நரை நீங்கும், மீண்டும் இளமை பெறலாம்.
உறுப்பு சிவக்கும் – உடம்பு சிவந்துபோகும், உறுப்பு என்றால் உடம்பு என்று பொருள். மகான் சிவவாக்கியர்.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மை பாதமுண்மையே.
o   மகான் சிவவாக்கியர் பாடல்கள் – யோகநிலை – கவிஎண் 5
இப்படியெல்லாம் பலதடவை சொல்வது ஞானிகள் ஆசி பெறுவதற்காக. “நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்” – உள்ளே தங்குகின்ற காற்று வெளியே வராது. நின்மலமாச்சு என்றால் வெளியே வராது என்று அர்த்தம். எனவே வெளியே வராது என்றால் அதற்கு ஆசான் தயவு வேண்டும். ஆசான் தயவு இருந்தால்தான் வராது. இல்லையென்றால் புஸ்என்று போய்விடும். அடுத்து,
    
     உத்தமனே வாசியது நிலைக்காவிட்டால்
     சோதனைபார் தேகமது மாண்டு போகும்
    
என்பார். வாசிவசப்பட்டால்தான் இவனுக்கு உடம்பு நன்றாக இருக்கும். இல்லையென்றால் தேகம் மாண்டுபோகும், தீய்ந்துபோகும். இதை பால் காய்வது போல் செய்யவேண்டும் என்பார்கள் ஞானிகள். பாலை காய வைக்கும்போது அதிகமாக அனல் தந்தால் பொங்கிவிடும், அனலைக்குறைத்தால் காயாது. இதேபோன்று மெதுவாக செய்யக்கூடிய செயலாகும். ஆக இதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்றால் தலைவன் ஆசி இருக்க வேண்டும்.
“உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்” – அப்ப உடம்பு என்ன செய்யும்? மற்றவர்களுக்கெல்லாம் நரை வந்தால் வந்ததுதான். ஆனால் இவர்களுக்கு (ஞானிகளுக்கு) மட்டும் நரைதிரை மாறும். அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும். தொட்டது துலங்கும். எல்லா செயல்களும் தடையில்லாது நடக்கும். ஏனென்றால் அவர்கள் மோனம் அறிந்தவர்கள்.
தடையில்லாது எல்லாம் நடந்தாலே அங்கே இரகசியம் இருக்கிறது, ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பார்கள். வாசிவசப்பட்ட மக்கள், தலைவன் ஆசிபெற்ற மக்கள் எதைச்செய்தாலும் வெற்றி பெறுவார்கள். செயல்கள் எல்லாம் வியக்கக்கூடிய காரியமாக இருக்கும். இவனா செய்கிறான்? தலைவன் செய்கிறான். இவனுடைய உந்திக்கமலத்தில் தலைவன் தங்கி இருப்பதாலே எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுடைய செயல்களுக்கு ஈடே இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்புள்ள மக்கள்தான் செய்யலாம். மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு செயலை முதல் வருடம் செய்வான், அடுத்தவருடம் செய்ய முடியாமல் போய்விடும். ஆனால் இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள, செய்து கொண்டே இருப்பார்கள், செய்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
வாசிவசப்பட்ட மக்களுக்குத்தான் தொட்டது துலங்கும். கேட்டது நடக்கும். மற்றவர்களால் செயல்பட முடியாது. காரணம் ஒரு பக்கம் காமதேகம், ஒரு பக்கம் நோய் சூழும்.
ஆனால் வாசிவசப்பட்ட மக்களுக்கோ எந்தத்தடையும் இருக்காது. அவன் யாராக இருந்தாலும் சரி, மன்னனாக இருந்தாலும் சரி, உலகத்தையே ஆளுகின்ற சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி இவர்கள் பக்கம் வரமுடியாது. அப்படிப்பட்ட பெரிய ஆற்றல் பெற்ற மக்கள் இவர்கள்.
ஆக “உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டு போகான் புரிசடையோனே”. இவர்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். தடை இருக்காது. மன்னர்கள் செய்ய முடியாததை இவர்கள் போகிற போக்கில் சாதரணமாக செய்துவிடுவார்கள். ஆக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நல்ல நேரம் வந்துவிட்டது.
தலைவன் வந்துவிட்டான். தலைவன் வரவில்லை என்றால் இதுபோன்ற வாய்ப்பு இருக்காது. இவற்றை எல்லாம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். நாட்டு மக்கள் முன்னேற வேண்டும். இவையெல்லாம் பெரிய விஷயங்கள். சின்ன விசயம் அல்ல. பெரியவர்கள் ஆசி இருந்தால்தான் முடியும். மரணமிலாப் பெருவாழ்வு பெறுகின்ற மக்களுக்கு இது ஒரு பயிற்சி.
அதே சமயத்தில் தளர்ச்சி இருக்கிறது, பார்வை மந்தமாக இருக்கிறது. நட்டம் ஒன்றும் இல்லை. பார்வை மந்தமாகி நான்கு மாதமாகிவிட்டது. எங்களை ஞானிகள் அப்படியே தாங்கி பிடித்துக்கொள்வார்கள். நான் கீழே விழாமல் போய்க்கொண்டிருப்பேன். கீழே விழவே மாட்டேன். போகும்போதே அங்கே ஒரு பிரச்சனை இருக்கும். அங்கே போகாதே, இங்கே போகாதே என்று சொல்வார்கள். இந்த நரைதிரை இன்னும் இரண்டு வருடம் இருக்கலாம், ஆறு மாதம் இருக்கலாம், அல்லது நாளைக்கே மாறலாம். அதை இப்போது சொல்லக்கூடாது என்று தலைவன் சொல்லிவிட்டார். அதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உடம்பு நலிந்ததுபோல் நாங்கள் இருப்போம். பார்வை இழந்து நரைதிரை வந்து இருந்தாலும், எங்கள் செயல்பாடுகளை மன்னர்களாலும் செய்ய முடியாது. இத்தகைய மிகப்பெரிய ஆற்றல் ஞானிகள் ஆசியால் கிடைத்தது. சக்கரவர்த்தியே ஆனாலும் அவன் மேற்கொள்ளும் காரியங்கள் தடைபடும். ஆனால் நாங்கள் செய்தே முடிப்போம். தலைவன் ஆசிதான் காரணம்.
தலைவன் ஆசி இருந்தால் எல்லா வல்லமையும் கிட்டும். அந்த வல்லமை தலைவனை பூஜை செய்தால்தான் கிடைக்கும். இதையெல்லாம் மக்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். பெரியவங்க ஆசி இருந்தால் மரணமிலாப் பெருவாழ்வு கைகூடும்.
தினந்தினம் பூஜை செய்கின்ற மக்களுக்கு செல்வநிலை பெருகும், வறுமை தீரும், மன அமைதி கிட்டும். பொல்லாத வறுமை ஒரு பிரச்சனையாக இருக்கும். கடன் சுமை இருக்கும். இந்த பிரச்சனை எல்லாம் ஆசான் ஞானபண்டிதனிடம் கேட்டு வறுமையிலிருந்து விடுபடலாம். சரிய்யா, வயசாயிடுச்சு, எனக்கு மரணமிலாப் பெருவாழ்வு இப்ப வேண்டாம். இப்பொழுது ஞானத்தை விரும்பவில்லை. எனக்கு பிரச்சனைகள் உள்ளது. ஆசான் ஞானபண்டிதன் செல்வத்திற்கு தலைவன், ஞானத்திற்கு தலைவன். சரி, ஆசான் ஆசியைப்பெற்றால் மரணமில்லாப் பெருவாழ்வும் பெறலாம் என்று சொல்கிறோம். அடுத்து எங்களுக்கு வயசாயிடுச்சுய்யா இப்ப நாங்க என்ன செய்வது? ஞானம் அடைவது என்பது சில குறிப்பிட்ட காலத்திற்குள் முடியும். ஏனென்றால்
காலங்கழிந்து காயம் நெகிழ்ந்து
தோலுந்துருத்தியும் நாடி நரம்பும்
துவண்ட பின்பு சாலவும் கற்பம்                                                                             
சாராது சார்ந்தும் சற்றில்லை காண்
வாலிபப் பருவம் எய்திடுங் காலத்தில்
கற்பம் வசப்படும்.
காலங்கழிந்து – 28 வயது வாசிவசப்பட்டால் 40 முடித்து விடலாம். அவனுக்கு நரதிரையே வராது. என்ன காரணம்? அவன் புண்ணியம் செய்திருக்கிறான். அதே சமயத்தில் உலக மக்களுக்கு அவனால் எதுவும் செய்யமுடியாது. காரணம் தோற்றம் சிறுவயது பையன் மாதிரி இருப்பான். சிறுவயது பையன் ஞானம் பேசினால் கேட்க மாட்டார்கள். 40 வயதில் கருத்துக்கள் சொல்லும்போது அவர்களுக்கு இந்த உணர்வு அற்றுப்போகும்
ஆக 28 வயதில் வாசிவசப்பட்ட மக்கள் புண்ணியம் செய்த மக்கள். 40 அல்லது 42 வயதில் வாசிவசப்பட்டால் கிட்டத்தட்ட 22 வருடம், 24 வருடம், 25 வருடம் ஆகும். வேறு வழியே இல்லை. இவர்களுக்கு அப்படித்தான் வாய்ப்பு உருவாக்கித் தந்திருக்கிறார்கள். ஒருசிலருக்கு மட்டும், அப்பருக்கு (மகான் திருநாவுக்கரசர்) அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. மகான் திருஞானசம்பந்தர் 36 வயதில் தவத்தை முடித்துவிட்டார். ஆனால் அப்பர் ரொம்ப வயதானவர்.
ஆக, “காலம் கழிந்தது காயம் நெகிழ்ந்தது” என்றார். இளம் வயதிலேயே இந்த இரகசியத்தை எல்லாம் செய்து வைக்க வேண்டும். இளம் வயதில் வாசிவசப்பட்டால் நல்லதுதான். இல்லையென்றாலும் இந்த ஜென்மத்தில் பூஜை செய்கிறோம். தலைவன் காலங்காலமாக இருக்கக்கூடிய ஞானி. நாம் இடைஇடையே வந்து போய்விடுவோம். எப்போது வாசிவசப்படுகிறதோ, அன்று வரையில் நாம் இறந்தவன் என்று அர்த்தம். இதைத்தான் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்று ஒருவனுக்கு வாசிவசப்படுகின்றதோ அன்று அவன் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றுவிட்டான். அவன் ஆயிரங்கோடி பிரம்மப்பட்டம் பெற்றுவிட்டான். நரைதிரை அற்றுப்போகும், கபம் அற்றுப்போகும், காமதேகம் பொடியாகும். இதை அடையாதவரை அவன் செத்தவன்தான். ஆக இந்த வாய்ப்பை எல்லோரும் பெறவேண்டும். ஞானிகளை பூஜை செய்வதால் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஆக அதற்காக நாம் தோல்வி அடையக்கூடாது, பூஜை செய்து வைக்கிறோம். நடப்பது நடக்கட்டும். வாசிவசப்படும் காலம் வரும்போது செய்துகொள்ளலாம். ஆசானிடம் தொடர்ந்து கேட்கவேண்டும். இப்படி ஒரு முறை இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
எல்லா நூல்களும் மூச்சுக்காற்று அல்லது வாசியைப்பற்றித்தான் பேசியிருப்பார்கள். நமக்கே தெரியாது, ஆனால் அதில் இருக்கும் 28 வயதில் இல்லாமல் 40 வயதில் என்றால் நரைதிரை வரத்தான் செய்யும், ஒன்றும் செய்யமுடியாது. ஞானிகளுக்கு தொண்ணூற்று ஐந்து சதவீதம் 28 வயதில் வாசி நடத்திக்கொடுத்து 40 வயதில் ஞானத்தை முடித்து விடுவார்கள். ஆசான் இராமலிங்கசுவாமிகள் நரைதிரையே வரவில்லை என்று சொல்லுவார். ஏனென்றால் அவர் 28 வயதிலேயே வாசிவசப்பட்டவர்.
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநுங் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
    திருவருட்பா – ஆறாந்திருமுறை – உறுதி கூறல் 2– கவி எண் 7
ஆக நரை மரண மூப்பு அறியா நல்ல உடம்பு என்றார். மகான் இராமலிங்க சுவாமிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை என்றால் காலதாமதம் செய்யவேண்டி இருக்கும். ஆக 28 வயதில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையா, பூஜை செய்து கொண்டு வருவோம். அந்த வாய்ப்பு இருந்தால் 40 வயதில் வாசி நடத்திக்கொடுப்பார்கள். 40 வயதில் விட்டுவிட்டால் பின்னர் ஒன்றுமே செய்ய முடியாது. காரணம் அதற்குபிறகு உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தை தாங்கும் சக்தி, அந்த உடம்பிற்கு இல்லாமல் போகும். ஆக இதையெல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு பூஜை செய்கிறோம்.
வறுமையுள்ளவர்களுக்கு பிரச்சனை இருக்கும். ஒரு கஷ்டம் வரும். ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் கடன் வாங்கி இருப்பான். நியாயமான வட்டிக்கு வாங்கியிருப்பான். கட்டமுடியாத சூழ்நிலை வரப்போகுது, அந்த குடும்பத்தலைவன் திருமணத்திற்காகவோ, பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கடன் வாங்கியிருப்பான். அந்தக்கடனை தீர்ப்பதற்கு வேறு இடத்தில் கடன் வாங்குவான். அங்கே கடன் வாங்கி இங்கே கொடுப்பான், இங்கே கடன் வாங்கி அங்கே கொடுப்பான். வெளியே தெரியாமல் குடும்பத்தலைவன் நொந்து போய்விடுவான். படுக்கையில் படுத்து கவலையால் புரண்டுகொண்டு இருப்பான். பிள்ளைகளுக்கு தெரியாது, மனைவிக்கு மட்டும் தன் கணவர் கடன் சுமையில் தடுமாறிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியும். இதற்கு மாற்றே இல்லை. தூக்க மாத்திரை சாப்பிட்டால்தான் தூங்க முடியும். இப்படித்தான் அல்லல் படவேண்டும். இதற்கு மாற்று உபாயமே இல்லை.
அவனால் வாங்கப்பட்ட கடனுக்கு மாற்றே கிடையாது. என்ன காரணம்? அவன் தன்னுடைய முயற்சியாலே கடன் வாங்கியிருக்கின்றோம், திருப்பி செலுத்தி விடுவோம், இப்படி செய்வோம், அந்த வீட்டை விற்போம், இந்த நிலத்தை விற்போம், அப்படி செய்வோம், வியாபாரம் செய்வோம் என்று கற்பனை செய்து கொண்டிருப்பான். இப்படி எத்தனையோ குடும்பங்களில் குடும்பத்தலைவன் நிலைதடுமாறி, நோய்வாய்ப்பட்டு சித்தபிரமை உள்ளவர்களாக தடுமாறுவான். அவனை நம்பி அந்தக்குடும்பம் இருக்கும். அந்தக்குடும்ப தலைவி கணவரின் முகத்தைப் பார்க்கின்றாள், அடிக்கடி நம் கணவர் இப்படி இருக்கின்றாரே மேலும் பிள்ளைகள் இருக்கிறதே என்ன செய்வோம் என்று தடுமாறுவான் இவனும் தடுமாறுவான். இதற்கு மாற்றே இருக்காது.
என்ன காரணம்? உனக்கு அறிவு கிடையாது, திமிர் அதிகம், இங்கே வா உனக்கு எவ்வளவு கடன் இருக்கு? தீர ஒரு வழி உண்டு. ஆசான் ஞானபண்டிதனை பூஜைசெய். “எனக்கு கடன் வந்துவிட்டது அய்யா, ஒன்றும புரியவில்லை. நான் குடும்பஸ்தன். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டும். பிள்ளைகளின் கல்விக்கு பணம் வேண்டும். நான் என்ன செய்வேன்? நீங்கள் பார்த்து அருள் செய்யவேண்டும்” என்று ஆசான் ஞானபண்டிதனிடம் கேட்டால், உடனே கடனை எல்லாம் உடைத்து எரிந்துவிடுவார். ஆனால் இவன் கேட்கமாட்டான். காரணம், இவனுக்குள்ள திமிர். ஏன் இப்படி சொல்கிறோம் என்றால் அவன் மீதுள்ள கருணை.
இப்பொழுது உங்களுக்கு நாங்கள் சொல்லித்தருகிறோம். கடன் வாங்குவதற்கு முன்பே ஆசான் சுப்ரமணியரிடம், “ஐயா, இந்தக்கடனை திருப்பிக்கொடுக்க நீர் அருள் செய்யவேண்டும். நான் பிள்ளைக்குட்டிக்காரன், நான் எங்கு போவேன். ஏதாவது ஜப்தி என்று வந்துவிட்டால் நான் மானத்தோடு வாழமுடியுமா? வாழமுடியாது. பிறகு நான் பொய் சொல்லவேண்டிவரும். ஜப்தி நடவடிக்கைக்கு என்னை ஆட்படுத்திவிடாதீர்கள். எனக்கு கடன் வாங்காத வாய்ப்பைக் கொடுங்கள். கடன் வாங்காத ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள். அதே சமயத்தில் கடன் வாங்கினால் ஏதோ ஒரு வகையில் கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய அறிவையும், அதற்குரிய சூழ்நிலையையும் உருவாக்கிக்
கொடுங்கள்” என்று சொல்லவேண்டுமல்லவா? ஆனால் இவன் என்ன செய்வான்? அப்படி கேட்கமாட்டான்.
     இப்போது நான் சொல்வது வெகுகோடி பேர்களுக்கு தெரியாத உண்மை. ஆரம்பத்திலேயே கடன் சுமை வருவதற்கு முன்பே தலைவனை கடனில்லா வாழ்க்கை அமையவேண்டும் என்று கேட்கவேண்டும். மேலும் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் நடக்கவேண்டும். நான் யாரிடமும் போய் கையேந்தி நிற்கக்கூடாது, கைகட்டக்கூடாது. நான் பொய் சொல்லக்கூடாது. ஐயோ, கடன்காரன் வருகின்றானே, என்ன செய்வானோ என்று கதவை இழுத்து மூடக்கூடாது. இது ஒரு கோழைத்தனமான செயல்.
நாங்கள் எங்கள் தொண்டர்களிடம் இதைசொல்வோம். “உன் அறிவு, திறமையை எல்லாம் மூட்டைகட்டி வை. இப்பொழுது உன் சூழ்நிலை சரியில்லை. பிள்ளைகள் திருமணத்திற்கு கடன் வாங்கியிருக்கிறாய், பிள்ளைகள் கல்விக்காக கடன் வாங்கியிருக்கிறாய், வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருக்கிறாய் இப்பொழுது உன் நிலைமை சரியில்லை. நீ ஆசான் அகத்தீசரை பூஜை செய்து “கடன் சுமையிலிருந்து விடுபட அருள் செய்யப்பா” என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலம் உன்னை ஏமாற்றிவிடும். உன்னை நம்பி இருக்கும் மனைவி மக்களுக்கு நீ துரோகம் செய்துவிடுவாய். என்ன துரோகம்? நீ செத்து தொலைந்துவிடுவாய், அல்லது சித்தபிரம்மை உனக்கு வந்துவிடும்.
     உன் பிள்ளைகள் எல்லாம் உன்னை நம்பி இருக்கு. ஐயோ, அப்பா இப்படி இருக்கின்றாரே, ஐயோ, அப்பா இப்படி இருக்கின்றாரே, என்று பிள்ளைகளும் வீட்டுக்காரர் இப்படி இருக்கின்றாரே என்று மனைவியும் தடுமாறுவார்கள். வெகுபேர் இப்படியாகவே மாண்டுபோகிறார்கள்.
     நமது சங்கத்தை சார்ந்தவர்கள் இப்படி இருக்க மாட்டார்கள். நிச்சயம் நாங்கள் கைவிடமாட்டோம். நான் மட்டுமல்ல ஆசானே கைவிடமாட்டார். என்ன காரணம்? ஏனிந்த கருத்துக்களை பேசுகிறோம் என்றால் சமுதாயத்தில் தன்னுடைய ஆற்றலைக்கொண்டு, கல்வி, அறிவு, ஆற்றலைக்கொண்டு சுற்றுப்புற சூழ்நிலை, துணை, அண்ணன் தம்பி, மாமன் மச்சினன், நிலம்-, வீடுவாசல், வருவாய் இதை நம்பிதானே செய்கின்றானே தவிர ஆசான் ஒருவர் இருக்கிறார், இந்த பெரும் பாக்கியத்தை கொண்டு நாம் நல்லது செய்ய வேண்டும்.
     எத்தனைபேர் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யாமல் போனவன்? எத்தனை பேர் கல்விக்கு துணை இல்லாமல் போனவன்? எத்தனை பேர் இடைப்பட்டு மாண்டவன்? எத்தனை பேர் முழுதாக இறந்தவன்? சிலபேர்தான் இப்படி இருக்கிறார்கள். நல்லபடி பிள்ளைகளுக்கு திருமணம் செய்வான். எல்லா கடமைகளையும் முடிப்பான். கடன்சுமை இல்லாமல் பிள்ளைகளுக்கு பெரும் சுமை வைக்காமல் இறப்பான்.
அதிகமாக கடன் வாங்கி பிள்ளைகளுக்கு கடன் சுமை வைப்பான். பிள்ளைகளும் அப்பா இப்படி செய்துவிட்டாரே கடனை எப்படி அடைப்பது? எனத்தடுமாறுவான். இவ்வாறாக தந்தை செய்த தவறினாலே அந்தக்குடும்பத்தில் பிள்ளைகளும் தடுமாறி என்னடா செய்வோம்? என்று சொல்லும்படியாக கடன் சுமை இருக்கும். என்ன காரணம்? குடும்பத்தலைவனுக்கு சொல்லித்தரணும். இப்படி இருக்கிறதே நிலைமை நீ பிள்ளைக்குட்டிக்காரன், வயதுக்கு வந்த திருமணமாக வேண்டிய பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படி அதிகமாக கடனை வாங்குகிறாய். ஆசானை வணங்கி கேட்டுக்கொள். இதிலிருந்து விடுபட வேண்டுமென கேட்டுக்கொள். இப்படி தினம் பூஜைசெய்து கேட்டால் நிச்சயம் விடுபட முடியும்.
இப்ப நான் பேசுவதை ஆசான் கேட்டுக்கொண்டு இருக்கிறார். எங்களுக்குத்தெரியும். ஆசான் கேட்டுக்கொண்டே இருப்பார். எங்களை பேசு என்று சொன்னார்.
முதலில் பேசிய கருத்துக்கள் எல்லாம் மரணத்தை வெல்லுகின்ற மார்க்கம். அடுத்து பேசுவது மனிதன் வர்க்கத்திற்கு ஆசான் திருவடியைப்பற்றினால் என்ன நன்மை வரும்? என்பதாகும். ஆசான் திருவடியைப்பற்றினால் கடன் வாங்காத சூழ்நிலை வரும். ஆசான் அகத்தீசரையோ ஞானபண்டிதரையோ வணங்கி பூஜை செய்தால் தெளிவு வரும்; நோய் வராது; அபத்தமான நோயாகிய புற்றுநோயோ, எய்ட்ஸோ வராது. இந்தக்கொடுமை எல்லாம் வராது. நோய் வராது. கடன் சுமை இருக்காது. மனம் அமைதி இருக்கும். நல்ல நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம்  இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி வரும். எதை வேண்டுமானாலும் செய்யலாம். கடன் சுமை இருக்காது. அப்படியே கடன் சுமை இருந்தாலும் அதை பொடியாக்கக்கூடிய வல்லமை இருக்கும். இதெல்லாம் தலைவனுடைய ஆசி.
குடுமத்தலைவனுக்கு என்ன வேண்டும்? ஆசான் திருவடியைப்பற்றிக்கொள். வேறு வழியே இல்லை. தலைவனை ஆசான் அகத்தீசனை குடும்பத்தலைவன் பூஜைசெய்து கடனில்லா வாழ்வும், பிள்ளைகளுக்கு திருமணமும், பிள்ளைகளுக்கு கல்வியும், முன்னேற்றமடையவும் வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கெல்லாம் தலைவனுடைய ஆசியை பெற்றுக்கொள்ளவேண்டும். இதை குடும்பத்தலைவன் செய்ய வேண்டும். இதை செய்யாவிட்டால்தான் அவர்களை திட்டுவோம். ஏன் நான் அவர்களை திட்டுகிறேன் என்றால், எங்களுடைய நோக்கமே அவர்கள்மேல் உள்ள கருணைதான். இல்லையென்றால் நாங்கள் திட்டவேண்டிய அவசியமில்லை பாராட்டி பேசுவோம்.
அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு சிறு வதிலேயே “ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி கொடுக்கவேண்டும். ஞானிகளெல்லாம் பெரியவங்க சிறுபிள்ளைகள் ஓம் அகத்தீசாய நம என்று சொன்னால் ஈரேழு பதினான்கு உலகத்தில் உள்ள சித்தரெல்லாம் நடுங்கிப்போவார்கள். அப்பேர்ப்பட்ட நாமத்தை சிறு பிள்ளைகள் சொல்லவேண்டும். ஐந்து வயது, பத்து வயது பிள்ளைகளிடம் ஓம் அகத்தீசாய நம என்று சொல்ல சொல்கிறோம். இப்படி சொன்னால் அவர்களும் நிலை உயர்வார்கள். பிள்ளைகளுக்கு கல்வி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் எங்களையே நீங்கள் பார்க்கலாம். நாங்கள் சும்மா ஒரு சாதாரண இடத்தில் இருந்தோம். அவ்வளவு பெரிய வருவாய் இல்லை. கல்வி இல்லாதவன், பள்ளிக்கூடத்திற்கு போகாதவன். ஆனால் நாங்கள் படிக்கும் நூலை யாரும் படிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட நூலை படித்திருக்கின்றோம். கல்வி தந்தான், செல்வத்தை பெருக்கி இருக்கின்றான். நினைத்ததை எல்லாம் சாதித்து தருகின்றான். இப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
மகான் புஜண்டமகரிஷி மண்டபம் கட்டும்போது கையில் காசு இல்லை பதினைந்து, இருபதினாயிரம் கடன் இருந்தது இந்தக்கட்டிடமும் கட்ட கையில் காசு இல்லை. அந்த நேரத்தில் 108 திருமணம் செய்ய ஏற்பாடு செய்தோம். 108 திருமணம் என்று சொல்லும்போது மோர்சு நல்லப்பர் அவர்களும், எல். ராஜ் அவர்களும் என்ன அய்யா இப்படி நிலைமை? 108 திருமணம் என்று ஆரம்பித்துவிட்டு கட்டிடமும் கட்டிக்கொண்டு இருக்கிறாரே என்று நம்மேல் உள்ள பாசத்தாலே என்ன செய்யப்போகிறாரோ என்றனர். மோர்சு நல்லப்பரிடம் அப்பொழுது சொன்னேன் “இந்த 108 திருமணமும் செய்யவேண்டும், கட்டிடமும் கட்டவேண்டும். தினமும் அன்னதானமும் செய்யவேண்டும். இப்படி செய்தால் நான் போகின்ற பாதை சரியானது என்றும், நான் வணங்குகின்ற கடவுள் உயர்ந்தவன் என்றும் புரிந்துகொள்” என்று சொன்னோம்.
அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர் கூடவே இருக்கிறார் அல்லவா? அன்பர்களெல்லாம் கூட இருக்கின்றார்கள். ஆக குடிலாசான் மேற்கொள்கின்ற காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடப்பதற்கு காரணமென்ன? என்ன மந்திரமா? பொய்சொல்கிறேனா? என்றால் இல்லை.
ஆசான் அகத்தீசரை தினமும் பூஜை செய்கின்றோம். இந்த சங்கம் இந்த அளவிற்கு பொருளாதாரத்தில் உயர்ந்திருப்பதற்கு என்ன காரணம்? அன்பர்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. ஞானிகளுடைய ஆசி இருக்கிறது. ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் எதைகேட்டாலும் கொடுக்கக்கூடிய வல்லவர்கள் ஞானிகள். ஆசான் அகத்தீசரை கேட்கிறோம், கேட்டதால் நடக்கிறது. ஆகையால் மற்றவர்களால் ஏன் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் தலைவனை கேட்கவில்லை.
எடுத்துக்காட்டாக எங்களையே நாங்கள் காட்டுவதற்கு காரணம் நாங்கள் மேற்கொள்கின்ற காரியங்கள் தடையில்லாமல் நடக்கிறது. இதற்கு என்னய்யா காரணம்? அனைத்து செயல்களையும் ஆசான் தயவில் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் செய்வோம். இதையெல்லாம் நடப்பதற்கு முன்னே பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் அனைத்து செயல்களும் நடந்துகொண்டே இருக்கும்.
ஆக இப்படியெல்லாம் கூடவே பேசிக்கொண்டே இருப்பார்கள். இங்கே கம்மியாக இருக்கிறது. நான் அறையில் இருக்கும் பொழுது ஞானிகளெல்லாம் சூழ்ந்து கொண்டு இப்படி செய் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆக நாங்கள் பெற்ற இன்பத்தை, நான் அடைந்த இந்த உண்மையை மக்களுக்கு அறிந்துகொள்ளவேண்டும். மக்கள் அனைவரும் அறிந்து தெளிவு பெறனும். பெரியவர்கள் ஆசிபெற்று இல்லறத்தை நடத்த வேண்டும்.
ஞானியாவது இருக்கட்டுமய்யா அஞ்ஞானி ஆகாமல் இருக்கவேண்டும் அல்லவா! கடன் சுமையிலிருந்து விடுபடவேண்டும். பிள்ளைகளுக்கு கடன் சுமை வைத்துவிட்டு போகக்கூடாது. அப்படி கடன்சுமை பிள்ளைகளுக்கு வைத்தால் எனது தந்தை கல்விதந்தான், உத்தியோகம் வாங்கித்தர முடியவில்லை இரண்டு பேருக்கு உத்தியோகம் வாங்கி கொடுத்தான் எல்லா பணமும் அதிலேயே போய்விட்டது. இப்ப நமக்கு கல்வி இல்லை, உத்தியோகம் இல்லை, இப்படி ஒரு பெரும் சுமையை வைத்துவிட்டு போவதை எந்த குடும்ப தலைவனும் விரும்பவே கூடாது.
எனக்கு என்ன தெரியும்? என்னால் முடியுமா? என்று கேட்டால் உன்னால் முடியவில்லை என்றால் இதோ சொல்கிறோம் அல்லவா? குடும்ப தலைவன் என்ன செய்யனும்? தினமும் ஐந்து நிமிடம் நாமஜெபம் செய்யவேண்டும். உலக நடை அப்புறம் இருக்கட்டும். தினமும் “ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம” என்று ஐந்து நிமிடம் நாமத்தை சொல்லவேண்டும். இதை எதற்காக சொல்ல வேண்டுமென்றான்? உன்னை நம்பி மனைவி இருக்கின்றாள், பிள்ளைகள் இருக்கின்றது, பிள்ளைகளுக்கு திருமணம் செய்யவேண்டும். கடன் நிறைய வாங்கி வீடு கட்டி இருக்கின்றாய், கடனை வாங்கி கல்விக்கு துணை செய்திருக்கிறாய். எனவேதான் உன்னை நம்பி இருக்கிற பிள்ளைகளுக்குத்தான் உன்னை பூஜை செய்ய சொன்னேன். உனது நலனிற்காகத்தான் சொல்கிறோம். ஆரம்பத்தில் பூஜை செய்து பிள்ளைகளுக்கு பெரும் சுமையை வைக்காது போகவேண்டும் என்று இப்போது சொல்கின்றோம்.
ஆக குடும்பத்தலைவன் மேற்கொள்கின்ற காரியங்கள் தடை இல்லாமல் நடக்கவேண்டும் என்றால் ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். ஆகவே முதலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நரைதிரை அற்ற வாழ்க்கை வாழ்வதற்குரிய மார்க்கத்தைப் பற்றியும், அடுத்து சொல்லப்பட்ட கருத்துக்கள் குடும்பத்தலைவன் பூஜை செய்து ஆசிபெற்றுக் கொள்ளாவிட்டால் பிள்ளைகளுக்கு பெரும் சுமையாக இருப்பான் என்றும், அதே சமயத்தில் அமைதியிழந்து இருப்பான் என்றும் சொன்னோம்.
தினம் பூஜை செய்யாத மக்களுக்கு கடன் சுமை வரும், தடுமாற்றம் வரும், தூக்கமாத்திரை சாப்பிட்டுதான் தூங்கவேண்டி இருக்கும். அவனுடைய மனச்சுமையை தீர்ப்பதற்காகவும், இல்லறத்தில் செல்வநிலையை பெருக்குவதற்காகவும், நீடிய ஆயுளை குடும்பத்தலைவன் பெறவேண்டும் என்பதற்காகவும், இந்த பக்தியை சொல்லி இருக்கின்றோம். அதே சமயத்தில் இந்த பக்தி பிறவியை ஒழிக்கும்.
இல்லறம் நல்லபடி இருந்தால்தான் நாலுபேர் மதிப்பான். இல்லையென்றால் வெளியே தலைகாட்ட முடியாது. கடன் சுமை அதிகமாக இருந்து ஜப்தி நடவடிக்கை எடுத்து தொலைத்து விட்டால் வெளியே தலைகாட்ட முடியாது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு நல்ல வியாபாரி இருந்தார். அவருக்கு கடன்சுமை அதிகமாகி அவர் வீட்டை ஜப்தி செய்வதாக அறிவித்தார்கள். இதுபோன்று நாளை ஜப்தி செய்யப்போகின்றார்கள் என்று அறிந்தவுடன், ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தொங்கினார். இது பழைய ஆட்களுக்கு தெரியும்.
அடப்பாவமே! இந்த நிலைமை அவனுக்கு ஏன் வந்தது? அவன் அவனை நம்பினான். அவனது கல்வியை நம்பினான், அவனது வியாபாரத்தை நம்பினான், உற்றார் உறவினரை நம்பினான், அவன் தன்னையே நம்பினான். இதனால்தான் அவனது நிலைமை இப்படி ஆயிற்று.
இதை ஏன் சொல்கிறோம்? இதற்கு என்ன உபாயம்? என்றால் ஆசான் அகத்தீசரை வணங்கி “அந்த அறிவு எனக்கில்லை, உனது திருவடியைப் பற்றுகிறேன், எனக்கு வேறு கதியில்லை, நீர்தான் என்னை காப்பாற்ற வேண்டும், எத்தனையோ இல்லறத்தார்கள் உன் திருவடியைப் பற்றி இல்லறத்தை செம்மையாக நடத்தி இருக்கின்றார்கள். என்னுடைய இல்லறமும், எனது பிள்ளைகுட்டிகள் பேரப்பிள்ளைகள் கடன்சுமை இல்லாமல் நீடு வாழவேண்டும் என்று உன் திருவடியைப் பற்றுகிறேன்” என்று கேட்பதற்கு பயிற்சி கொடுக்கவேண்டும்.
     இல்லையென்றால் இடைப்பட்ட சாவு, தற்கொலை இதுபோன்று நடந்துகொண்டிருக்கும். உலக மக்கள் அமைதிபெற வேண்டும் என்றால் ஆசான் அகத்தீசரை புரிந்து கொண்டு தினமும் ஓம் அகத்தீசாய நம் என்று தினமும் ஐந்து நிமிடம் தியானம் செய்து, பிரச்சனைகளை ஆசானிடம் சொல்லி கேட்கவேண்டும்.
     குடும்ப தலைவன் நல்லபடி இருக்க வேண்டும். ஞானத்தை விரும்புகின்ற மக்களுக்கு அதே ஆசான் துணையாய் இருப்பார் என்று சொல்லி இன்று பேசப்பட்ட கருத்துக்கள் தலைவன் சொல்லியதால் இங்கே பேசியிருக்கிறேன். இல்லையென்றால் ஞானத்தைப்பாற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பேசு என்று சொன்னார். அதனால் பேசுகின்றோம். இரண்டையும் பேசியிருக்கிறோம். ஞானிகள் இல்லறத்திற்கும் துணை இருப்பார்கள், மரணமிலாப் பெருவாழ்விற்கும் துணை இருப்பார்கள் என்று சொல்லி நமது சங்க அன்பர்களின் நிலை உயர்கின்ற காலம் வந்துவிட்டது.
     நான் நலிந்துவிட்டேன் என்று நினைக்கக்கூடாது. நலிந்திருந்தால் காரியம் நடக்குமா? நான்கு வருடமாச்சு பார்வை இல்லை, கையெழுத்துப்போட்டால் தெளிவு இல்லாமல் இருக்கும். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆக இவ்வளவு நலிகிறான் பார்வை இழக்குது, நரைதிரை இருக்குது, நலிவு இருக்கிறது என்பது தெரிகிறது.
   ஆனால் இந்த உடம்பு நலிய நலிய பெரும் வல்லமையை உண்டாக்கும் என்பதை அன்பர்களுக்கு சொல்லி இருக்கின்றோம். வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு 1008 திருமணம் நடத்தவேண்டும். என்னய்யா கையில காசு இருக்கா? என்றால் ஒரு கொட்டகை ஆஸ்பெட்டாஸ் போடுகின்றோம். அதற்கு ஒரு லட்சரூபாய் பிடிக்கும். அடுத்து பக்கத்தில் ஒரு தாழ்வாரம் போடுகிறோம் அதற்கு முப்பதாயிரம் பிடிக்கும். இதற்கிடையில் அன்னதானம் செய்கிறோம். மூன்று வண்டி டிராக்டர் ஓடிக்கொண்டு இருக்கு. தண்ணீர் வண்டிகள், சின்ன வண்டிகள் போய்க்கொண்டிருக்கு. இரண்டு டாங்கர், ஒரு டிராக்டர் ஓடிக்கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட தண்ணீர் செலவே தினம் 1000ரூபாய் ஆகிவிடும். அதேசமயத்தில் தினம் 10மூட்டை, 12மூட்டை சாதம் வடிக்கின்றோம். இதற்கு 20,000 ஆகும். தினம் ஒன்றுக்கு 30,000 செலவு செய்கிறோம்.
     இதற்கிடையில் 1008 திருமணத்திற்கு விளம்பரப்படுத்தி இருக்கிறோம். இது எப்படி அய்யா முடியும்? ஒன்றே ஒன்று நான் ஆசான் திருவடிகளில் சரணடைகிறேன். பூரண சரணாகதி அல்லது கொத்தடிமை என்று இதை சொல்வார்கள். நானும் அன்பர்களும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்களும் மேற்கொள்ளும் அறப்பணிகள் தடையில்லாமல் நடக்க வேண்டும். 1008 திருமணங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்யவேண்டும். அதற்குரிய ஏழை எளிய தம்பதிகள் வந்து சேரவேண்டும். தடையில்லாமல் திருமணத்தை முடிக்க வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்யவேண்டுமென்று கேட்கவேண்டும். இப்படி கேட்டுக்கொண்டே வரவேண்டும். மேலும் நித்தியா அன்னதானமும், பொதுமக்களுக்கு தண்ணீரும் போய்சேர வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்போம். இதற்கு தடையில்லாமல் பொருள் வேண்டும் என்று கேட்போம். இப்படி கேட்டுக்கொண்டிருந்தால்தான் தருவார்கள். இல்லையென்றால் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், பெரிய மனிதர் என்று சொல்வார்கள்.
     ஆக இல்லறத்தானுக்கு சொல்லனும். ஆக இந்த சங்கம் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு, இந்த சங்கத்தால் மேற்கொள்ளும் செயல்கள் ஆசான் திருவருள் கடாட்சத்தால் செய்கின்றோம் என்றும், அவன் ஆசி இல்லாமல் செய்ய முடியாது என்றும், இதனால் அற்புத செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றும், இன்னும் அற்புத செயல்கள் செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறோமென்றும், நமது தொண்டர்களுக்கும், ஞானிகள் ஆசிகள் இருக்கிறது என்றும், எனக்கும் ஆசி இருக்கிறது, உங்களுக்கும் ஆசி இருக்கிறது, நமது தொண்டர்களுடைய மனைவி மக்களுக்கும் ஆசி இருக்கிறது, தடை வரும்போது நாங்கள் தாங்கி நிற்கின்றோம். எங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. இந்த ஆற்றல் எப்படி என்றால் தலைவன் ஆசியினால். நாங்கள் கேட்போம் என்னய்யா இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது ஐயா, நீர் பார்த்து செய்யுங்கள் ஐயா என்று கேட்கணும். அவர்களும் கேட்கணும் அல்லவா? நாங்கள் மட்டும் கேட்டால் முடியுமா? அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டுமப்பா. பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றது. கடன் சுமையில் இருக்கின்றோம். நீர்தான் அருள் செய்யவேண்டுமென்று கேட்போம்.
     ஆக தொண்டர்களும் உயர்வார்கள். நானும் உயர்வேன். நீங்களும் உயர்வீர்கள். இந்த நாடு உயர்வடைய வேண்டும். எங்கு பார்த்தாலும் சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவ வேண்டும். நாமெல்லாம் ஆசானை வழிபாடு செய்து ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டு முடிக்கிறேன் வணக்கம். ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம.
   
                                                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0153702
Visit Today : 83
Total Visit : 153702

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories