05.07.1997 – சன்மார்க்க அன்பர்களுக்கான பூஜை முறையும் வாழ்க்கை நெறியும் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்திசாய நம
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்.
வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியுடன் 21 ஆண்டுகள் முடிகிறது. 21 ஆண்டுகளாக உப்பில்லா உணவு மேற்கொண்டிருக்கிறோம். இது நமது இஷ்டமில்லை. உப்பில்லா உணவு மேற்கொண்டால் மட்டுமே ஒருவன் கடவுளாக முடியாது.
சிலபேர் மௌனமாக இருப்பார்கள். சிலபேர் பேச மாட்டார்கள். அப்படி வாய்மூடி மௌனமாக இருந்தாலோ, பேசாதிருந்தாலோ, உப்பில்லாது சாப்பிடுவதாலோ கடவுளாக முடியாது.
கடவுளாவது அல்லது கடவுள் தன்மை அடைவதற்காக உப்பில்லாத உணவு சாப்பிடுவது என்றால், அவர்கள் வாசிப்பழக்கம், மூச்சுக் காற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்த மக்கள்தான் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். இது யோகநெறி.
அவர்கள் பிராணயாமம் செய்வார்கள். அப்போது உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தை தணிப்பதற்காக உப்பில்லாமல் சாப்பிடுவார்கள். அதற்கு சில மூலிகை வகைகளும், கற்பவகைகளும் இருக்கிறது.
எனவே எல்லோரும் பின்பற்றுவது என்பது சின்ன விசயமல்ல. இது மிகவும் கடினமான ஒன்று. அந்த சமயத்தில் உப்பில்லா உணவும் சாப்பிட வேண்டும், இரவில் சரியாக தூங்கவும் முடியாது. அந்த அளவுக்குக் கண் விழித்திருக்க வேண்டும். இப்படி ஒரு கஷ்டம். மேலும் பெண்ணுறவு கூடாது.
சிந்தைதனில் பெண் மயக்கம் கொண்டால் அன்றே
சிதறிப்போம் காயமுடன் யோக சித்தி.
    மகான் திருவள்ளுவர் அருளிய பஞ்சரத்தினம் 500 – கவி எண் 6
எல்லாமே சிதறிப்போய்விடும் என்று சொன்னார். ஆக அதற்கும் ஆசி வேண்டும்.      உப்பில்லாமல் சாப்பிடுவது என்பது சின்ன விசயமல்ல. சொல்லலாம் சாப்பிட முடியாது.
ஒருவன் சாப்பிடாமல் இருக்கலாம், பட்டினி கூட இருக்கலாம். ஆனால் உப்பில்லாமல் சாப்பிடுவது கடினம்தான். தலைவன் ஆசி இருக்கவேண்டும்.
அதே சமயத்தில் சிற்றின்பத்தில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபாட்டால் உடம்பு முழுவதும் வீணாகப்போய்விடும். உடம்பு அத்தனையும் நச்சுக்கிருமி ஆகிவிடும். அது மிகவும் கொடுமையாக இருக்கும்.
ஆக இந்தத் துறையில் வந்தவர்கள் நிச்சயமாக அப்படிப் போகமாட்டார்கள். அதற்கென்று வந்தவர்கள் பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தாலும் ஞானிகள் ஆசியாலும் ஞானிகள் திருவடியைப் பற்றி பூஜை செய்ததனால்தான் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
சரி, இப்போது இதை நம் மக்கள் அடையவேண்டும். இந்த வாய்ப்பை வைராக்கியத்தை மக்கள் அடையவேண்டும். வைராக்கியத்தோடு இருந்து உண்மை ஆன்மீகத்தை அல்லது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் அல்லது மோட்ச இலாபத்தை அடையவேண்டும்.
ஆனால், எடுத்தவுடனேயே இதை சொல்லக்கூடாது. 21 ஆண்டுகள் உப்பில்லா உணவு மேற்கொள்ள வேண்டும், சிற்றின்பத்தில் ஈடுபடக்கூடாது என்றெல்லாம் சொன்னால் மக்கள் மலைப்பார்கள். அவர்களுக்கு இலகுவாகச் சொல்ல வேண்டும்.
இதற்கெல்லாம் ஆசான் ஆசி இருக்க வேண்டும். உப்பில்லாமல் சாப்பிடுவது நமது விருப்பமல்ல. அதே சமயத்தில் சிற்றின்பத்தை நீக்கி பேரின்பத்தில் நாட்டம் கொள்வதும் நமது விருப்பமல்ல.
புண்ணியமும் அருள் பலமும் இருந்தால்தான் இந்த வைராக்கியம் வரும்.
“நாமென்று சொல்லற்றோ யோக ஞானம்” என்றார். நாமெல்லாம் செய்ய முடியாது. ஆசான் ஆசியில்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது. உப்பில்லாமல் சாப்பிட்டால் உடம்பில் சத்து இருக்காது. சத்தில்லாதவன் இறந்து விடுவான்.
ஆக இந்த உப்பில்லா உணவே நமக்கு (குருநாதர் அவர்களுக்கு) ஒத்துக்கொள்கிறது. ஆனால் சிற்றின்பத்தில் நாட்டமில்லை. ஆக இந்த நாட்டம் இல்லாது இருப்பதற்கும் ஆசான் ஆசி வேண்டும்.
இது ஒன்றும் சும்மா சாதாரணம் விசயமல்ல. எதை வேண்டுமானாலும் வெல்லலாம். இந்த உடற்கூறு அவ்வளவு கேவலமானது. கொடுமையானது.
ஆனால் அதைப் புரிந்து கொண்டவர்க்கு இந்த உடம்பு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
ஏனென்றால் இந்த உடம்பு துஷ்டத்தனம் செய்யும். நமது மனம் சண்டாள மனம், மிகவும் துஷ்டத்தனமானது.
உப்பில்லாமல் கூட சாப்பிடலாமைய்யா, ஆனால் பெண்ணுறவு இல்லாமல் இருக்க முடியுமா? மிகவும் கடினம்.
ஆனால் அதற்கென்று அமைப்புள்ளவர்கள் இருப்பார்கள். அதற்கென்று வந்தவன் இருப்பான்.
இந்த நிலையை மக்கள் அடைய வேண்டும். இதைப் பற்றி மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும்.
இப்படி சிற்றின்பத்தில் ஈடுபடக்கூடாது. உப்பில்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் மக்கள் ஓடிப்போய் விடுவார்கள். அவர்களுக்குப் பயத்தை உண்டு பண்ணக்கூடாது.
மக்களிடம் உயிர்வதை செய்யாதே, புலால் உணவு உண்ணாதே என்று முதலில் சொல்ல வேண்டும். ஆனால் இதை மேற்கொள்வது இல்லறத்தார்களுக்கு கடினம்.
அப்ப இல்லறத்தார்களுக்கு பக்தி நெறியைச் சொல்லவேண்டும். தினமும் நீ ஆசான் அகத்தீசனை பூஜை செய், அன்னதானம் செய் என்று சொல்லவேண்டும்.
பாவி என்று பிறரிடத்து பெயரெடுக்காதே, மனைவியிடம் அன்பு காட்டு. ஆக ஒரு மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் மனைவியிடம் அன்பு காட்டவேண்டும். சிறந்த முயற்சி உள்ளவனாக இருக்கவேண்டும்.
பேராசை இல்லாதவனாக இருக்க வேண்டும். வஞ்சனையில்லாதவனாக இருக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு அவசியம்.
மனைவியைக் கொடுமை செய்தல், அவளை மனம் நோகச்செய்தல் பொருள் சேர்க்கும்போது நீதிக்கு உட்படாமல் சேர்த்தல், இனிமையாகப் பழகாதிருத்தல், உயிர்வதை செய்தல், ஜாதி வெறி பேசுதல், பொறாமை, பழி வாங்குதல் போன்ற குணக்கேடுகள் இருந்தால் கடவுளை அடைய முடியாது.
     இதெல்லாம் கடவுளை அடையத் தடைதான். பொறாமை வஞ்சனை, சூது, பொருள் ஈட்டும்போது நெறி கடந்து பொருளீட்டல், பிறரை மதியாத தன்மை போன்ற குணக்கேடுகள் கடவுளை அடைய தடையாக இருக்கும்.
     சிலபேர் மற்றவரை மதிக்கவே மாட்டான். வசதி ஏற்பட ஏற்பட நின்று பேசக்கூட மாட்டான். என்னங்க என்றால், அவன் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பான்.
     அதற்காக ஒவ்வொருவரிடமும் நின்று பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
     நம்மை மதித்து ஐயா, என்று அழைத்தால் என்னய்யா விசயம் என்று கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அவன் ஆறுதல் அடைவான். மதிக்கத் தெரிந்தவன், கனிந்த பார்வையோடு அன்போடு பார்ப்பான். இல்லாவிட்டால் ஏளனமாக பார்ப்பான். அப்படி பார்த்தே கோபத்தை உண்டு பண்ணிவிடுவான்.
     பஞ்சபராரிகளிடம் அன்பு காட்ட மாட்டான். நாம் நிலை உயர்ந்திருக்கலாம், குற்றமில்லை, பெரிய உத்தியோகத்தில் இருக்கலாம். கோடீஸ்வரனாக இருக்கலாம், புகழ் வாய்ந்தவனாக இருக்கலாம். ஆனால் பஞ்சபராரிகளிடம் அன்பு காட்ட வேண்டும்.
     நமக்கு வேண்டியவன் வருவான், முன்னே பழக்கப்பட்டவன் வருவான். அவனிடம் போய் என்ன விசயம், என்று ஏளனபடுத்துவது போல கேட்டால் அவன் போடா என்று சொல்லிவிட்டு போய்விடுவான்.
     இவன் என்ன கடவுளா? ஏதோ நிலை உயர்ந்தவன், இவனிடம் நாலு வார்த்தை பேசலாம் என்று வந்தால், அதற்காக உதாசீனப்படுத்துவது போல் இவன் பேசினால் அவன் இலட்சியம் பண்ணாமல் போய்விடுவான்.
     எனவே நம்மை நோக்கி வந்த அவனிடமும் முடிந்த அளவிற்கு, வாய்யா உட்காரைய்யா, என்று அந்த ஒரு வார்த்தை அன்பாக பேசினால் போதும். அதற்காக மணிக்கணக்காக அவனிடம் பேச தேவையில்லை. இப்படி அவனிடம் பேசினாலே போதும். இதுவும் ஒரு புண்ணிய செயலாகும்.
     பிறரை மதிக்க வேண்டும். நம் நிலை உயர உயர பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரிடமும் இனிமையாகப் பேசவேண்டும். எல்லோரையும் மதிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்யவேண்டும். பிறரிடம் மனம் விட்டுப்பேச வேண்டும். இதுதான் சிறந்த செல்வம்.
     சொற்பொழிவு செய்பவர் அல்லல்பட்டு ஊர்ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருவார். அப்படி அல்லற்பட்டு வரும்போதுதான் இரண்டு பேர் வந்து எங்களுடைய ஊரில் சொற்பொழிவு செய்ய வாருங்கள் என்பார்கள்.
     அவர்களிடம் இதே வேலையாகப் போச்சு என்று கடுகடுத்தால் அவர்கள் மனம் சோர்வடையும்.
     அப்படி கடுகடுப்பாக பேசாமல், அவர்களிடம் இப்பொழுதுதான் பல ஊர்களில் சொற்பொழிவு செய்து விட்டு வந்திருக்கிறேன்.
     இரண்டு மூன்று நாட்களாக தூக்கம் இல்லை. கொஞ்சம் தயவு செய்து நாளை வந்து பாருங்கள் என்று சொன்னால் அவர்கள் போய்விடுவார்கள்.
     ஆக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களிடம் இப்படி சில வார்த்தைகள் ஆறுதலாக பேசினால் நல்லது. நமது துன்பத்தையெல்லாம் வெளிப்படுத்தக் கூடாது. நமக்கு உடல் சோர்விருக்கும், மன உளைச்சல் இருக்கும்.
     பல்வேறு பிரச்சனைகளில் அகப்பட்டுத் தடுமாறக் கொண்டிருக்கும்போது அவர்களிடத்தில் நான்கு வார்த்தைகள் இனிமையாக பேசுவது நல்லது. அவர்களிடம் கடுமையாக பேசாதிருத்தல் நல்லது என்பார் ஆசான்.
     இப்படிப்பட்ட பண்புகளெல்லாம் பொதுத்துறையில் வருகின்ற மக்களுக்கு மிக அவசியம். எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசிப் பழக வேண்டும்.
     நம் நிலை உயர்ந்ததால் அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டுமென்று அர்த்தமா?
     ஆக ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால் நல்ல கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலருக்குத்தான் அந்த ஆற்றல் இருக்கும். சிலருக்கு ஆசான் ஆசியிருக்கும்.
     ஆசான் ஆசி இருந்தால்தான் உணர்த்துவார்கள். இல்லையென்றால் என்ன சொன்னாலும் அந்த பண்பு வராது. இந்த கருத்தை எல்லா ஞானிகளும் சொல்லியிருக்கிறார்கள்.
     எல்லோரிடமும் அன்போடு பேசி பழக வேண்டும்.
     மகான் குமரகுருபரர் சொல்வார்.
     ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல்
ஓஒ கொடிது கொடிது – நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா விவரென்செய் வார்.
    மகான் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் – கவி எண் 67
ஈகையரிதெனினும் – கொடுக்க முடியாத போதும், முன்பு நிறைய பொருள் இருந்தது. மக்கள் வந்து பெற்றுச் சென்றார்கள். பிறகு இல்லை. அவர் சொல்கிறார்.
“ஈகை அரிது எனினும் இன்சொல் நல் கூர்தல் ஓ ஓ கொடிது கொடிது”
     அப்ப ஓ ஓ கொடிது கொடிது என்று சொல்லும்போது அளவில்லாத துன்பத்தை தரும் என்று சொல்கிறார்.
    
     கொடுக்க முடியாவிட்டாலும், இனிமையாக பேசு. அதன்மூலம் நன்மை கிடைக்கும் என்று இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லியிருக்கிறார். நம்முடைய செயல்பட்டு எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும்.
     செயல்பாடு தூய்மையாக இல்லாவிட்டால் சிந்தை தெளிவடையாது. அதற்காக நடிக்கக் கூடாது. பிறரிடம் மனம் விட்டுப் பேசுவதுபோல் நடிக்கக்கூடாது. இதை ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இவன் நடிப்பதை கடவுள் பார்ப்பான். கடவுளும் இவனிடம் நடித்துவிட்டு போய்விடுவான். கடவுளால் படைக்கப்பட்டவனிடம் மனம் விட்டு பேசுவதுபோல் நடிக்கக்கூடாது. அதை ஏற்றுக் கொள்ளமுடியாது. கடவுளும் ஏற்றுக் கொள்ள மாட்டான். எல்லோரிடமும் இனிமையாக பேசவேண்டும், நட்பைப் பெருக்கவேண்டும்.
ஆக மனைவியிடம் அன்பு காட்டுதல், நெறிக்குட்பட்டு பொருள் சேர்த்தல், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும். தாய் தந்தைக்குச் செய்யவேண்டிய கடமையை செய்யவேண்டும். இதையெல்லாம் நாங்கள் மக்களுக்கு சொல்லவேண்டும்.
கடவுள் ஆக வேண்டுமென்றால் எப்படி இருக்க வேண்டும்? நித்தம் நித்தம் மனைவியிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் மனைவி, பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள், மாமன், மாமி, மைத்துனர் இவர்களுடன் இருக்கிறோம். இவர்களிடமெல்லாம் அன்பு காட்ட வேண்டும். அப்படி அன்பு காட்டினால்தான் கடவுள் ஆக முடியும்.
ஆக நல்லவனாக நடந்து கொள்ளவேண்டும். சரி நல்லவனாக நடந்து கொள்ள முயற்சிக்கிறோம். நமது அண்டை வீட்டார்களோடு இனிமையாக பேச முயற்சிக்கிறோம்.
அனால் அவர்களோ நம்மைப் பழி வாங்கல் நினைக்கிறார்கள். இதற்கு ஆசான் திருவள்ளுவர் கூறுகிறார்.
கருத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
      செய்யாமை மாசுஅற்றார் கோள்.
    திருக்குறள் – இன்னா செய்யாமை – குறள் எண் 312
நமக்கு இடையூறு செய்த போதும் அவருக்கு தீங்கு செய்யாதிருத்தல் குற்றமற்றவர்கள் கொள்கை என்பார்.
ஆக இவையெல்லாம் பெரிய கருத்துக்கள். இந்த கருத்துக்களையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஆசான் நாமத்தைச் சொல்லி பூஜை செய்தால், நாமும் பக்குவத்தை அடையலாம்.
இது சரி முன்னே சொன்னது போல் இருபத்தொரு ஆண்டுகள் உப்பில்லா உணவு மேற்கொள்ளவேண்டும். இல்லற உறவு கூடாது என்றா பேசுவது? பெரிய விசயம்.
இதையெல்லாம் நாம் அறிந்து கொண்டோம். இதெல்லாம் நமக்கு புரியுது. கடவுள் ஆவதற்கு இந்த கொள்கை வேண்டும். புரிந்து கொண்டோம். புரிந்து கொண்டாலும் மற்றவரிடத்தில் சொல்லவேண்டுமல்லவா? இதுபோல் மகான் அகத்தீனை பூஜை செய்யுங்கள் என்கிறோம்.
அதற்கு அவன் சொல்வான். முன்பே நீ பூஜை செய்தாயே உனக்கு என்ன இலாபம்? என்பான். எடுத்தவுடனே கேட்பான். பத்து வருடம் பூஜை செய்தாயே? நீ என்ன கோடீஸ்வரனாகி விட்டாயா? என்பான்.
பூஜை செய்பவன், “நீ கோடீஸ்வரனாக ஆகபோவது ஒருபுறம் இருக்கட்டும். அதோ பார்த்தாயா? கோடீஸ்வரனாக இருந்தவன் கை, கால் வராமல் கட்டிலில் கிடக்கிறான் அதை நீ பார்த்தாயா?” என்கிறான்.
கோடீஸ்வரனாக ஆவதை விட சிறந்த குணவானாக ஆகவேண்டும் என்பதே முக்கியம். மகான் அகத்தீசனை பூஜை செய்தால் உடனே பலன் கிடைக்குமா? அது முடியவே முடியாது.
ஞானிகளெல்லாம் அவ்வளவு இலகுவாக பலன் தரமாட்டார்கள், நிச்சயம் கிடைக்காது.
அவர்கள் ஒன்றும் ஏமாளியல்ல. அவர்களெல்லாம் மிகப் பெரியவர்கள், அவர்களின் நாமத்தைச் சொல்ல வாய்ப்பு தந்ததே பெரிய விசயம்.
ஓம் அகத்தீசா என்ற நாமத்தை சொன்னால் ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒலி படரும். அவ்வளவு வல்லமையுள்ள ஆசான் நாமத்தை நம்மை சொல்ல வைத்தானே அதுவே பெரிது.
இதுநாள் வரையிலும் சிறு தெய்வத்தை வணங்கினால், சிறு தெய்வத்தை வணங்கி வந்த உனக்கு, மகான் அகத்தீசன் நாமத்தை சொல்ல வாய்ப்பு கிடைத்ததல்லவா? அதற்கே நூறுஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இது சாதாரண விசயமல்ல. அவர்களெல்லாம் மிகப்பெரியவர்கள். அவர்களின் நாமத்தை சொல்லவே அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட மிகப்பெரிய ஆசான் நாமத்தை சொல்ல வாய்ப்பு கிடைத்ததல்லவா? அப்படி கிடைத்த வாய்ப்பை செய்து பார், பயனை எதிர்பார்.
அவர்களெல்லாம் நிச்சயம் கைவிட மாட்டார்கள். ஆரம்பத்தில் இருந்த நிலையை விட தற்போது உன் நிலை உயர்ந்திருக்கும்.
ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது தெளிவு இருக்கும். இவன் என்ன செய்வான்? செய்த பூஜை சிறிதுதான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகள், நிறைய எதிர்பார்ப்பான். இப்படி எதிர்பார்ப்பவர்கள்தான் விரக்தியடைவார்கள்.
நல்வினை இருந்தால் அவர்களுக்கு நல்லபடி அமையும். தீவினை மிகுந்திருந்தால் நாம் சொல்வதை அவன் கேட்கமாட்டான். இருந்தாலும் அவனுக்கு சொல்ல வேண்டிய கடமை நமக்குள்ளது.
ஆக ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக உடனே ஆதாயம் கிடைக்காது. இருந்தாலும் ஆசான் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். புண்ணியவான்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பல்வேறு ஜென்மங்களில் செய்த பாவமே மன உளைச்சலாகவும், நோயாகவும், வறுமையாகவும், பிரச்சனைகளாகவும் அவனை வாட்டி வதைக்கும். அவன் செய்த பாவமோ கணக்கில் அடங்காதது, கோடான கோடி ஜென்மம் எடுத்து, கொடும் பாவச்செயல் செய்திருப்பான்.
வறுமையும், பிணியும், பிரச்சினையும் அவனை மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளாக்கும். அவனோ “ஆ” என்று அலைவான், ஏதாவது மாற்று கிடைக்குமா என்று ஜோசியக்காரனிடம் செல்வான்.
ஜோசியக்காரனிடம் போய்ப் பார்ப்பான். உனக்கு செய்வினை செய்து விட்டார்கள் என்று சொல்வான். உடனே நூறு, இருநூறு, ஐநூறு என்று பணத்தை கொடுத்து பிரச்சினையை தீர்க்கப் பார்ப்பான்.
அது தீராது. மறுபடி என்ன செய்வான், மந்திரக்காரனிடம் செல்வான். மந்திரக்காரனோ உனக்கு செய்வினை செய்து விட்டார்கள் என்பான். அவனிடமும் ஏமாந்து போவான்.
கடைசியில் காரியம் நடக்காது. அங்கே போவான். இங்கே போவான். குடும்பத்தில் பிரச்சினைகளும் நோயும் சூழ்ந்து கொண்டு அவனை வாட்டி வதைக்கும். கடைசியில் இங்கே வருவான்.
அவன் பல இடங்களில் தோல்வி அடைந்திருப்பான், தெரியும் எங்களுக்கு. இவன் தனது பிரச்சனைகள் தீருவதற்காக ஆடு, கோழி வெட்டியிருப்பான்.
இவன்தான் மடையனாச்சே, இவன்தான் பாவியாச்சே, பல்வேறு பாவங்கள்தானே அவனைப் போட்டு வதைக்கிறது.
இவனென்ன செய்வான். இவன் தன்னுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபட இன்னொரு பாவியிடம் செல்வான். ஒருவன் செய்வினை செய்திருக்கிறான் என்று சொன்னாலே பாவி!
நீ பட்ட துன்பத்திற்கெல்லாம் நீ செய்த வினைதான் ஐயா காரணம். நீ எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாயோ, அந்த பாவம் உன்னை வாட்டி வதைக்கிறது.
நீ ஏன் கவலைப்படுகிறாய்? போய் அன்னதானம் செய், அதன் மூலமாக உன் துன்பம் தீரும்.
ஆசான் அகத்தீசரை, பெரியோர்களை வணங்கவேண்டும் என்று சொல்லமாட்டான். உனக்கு செய்வினை செய்து விட்டார்கள் என்பான்.
இப்படி செய்வினை செய்திருக்கிறார்கள், மந்திரம் செய்து விட்டார்கள் என்று சொல்பவனெல்லாம் மிகப்பெரிய பாவி.
நாமென்ன செய்வோம், நமது சங்கத்தார்கள் அவன்கிட்டேயே போகமாட்டோம். அவன் முகத்திலேயே விழிக்கக்கூடாது.
இந்த இராகு, கேது என்பான். இராகுவும் இல்லை, கேதுவும் இல்லை. இதை அறிந்தவர்களுக்கு மட்டும் சொல்ல வேண்டும்.
அதே சமயத்தில் மற்றவர்கள் சொல்கிறார்களே என்றால் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நவக்கிரகத்தை எல்லாம் பற்றி சொல்லிக்கொண்டு இருக்க மாட்டான். அது சூரிய குடும்பம், சூரியனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டுள்ளது. அது நிற்கவே நிற்காது.
இவன் வீட்டில் வந்து நிற்கிறதா அது? அது நிற்காது, நவக்கிரகத்தை சொல்லுவது, இராகு கேதுவை சொல்லுவது எல்லாம், அது ஒரு பொழுதுபோக்கு. இந்த ஞானத்துறையில் வருபவனுக்கு அது அவசியமில்லை.
பிரச்சனை வந்ததா? அன்னதானம் செய். மேலும் மன உளைச்சல் வந்ததா? ஆசான் அகத்தீசனைப் பூஜை செய்.
இதைத்தவிர நவக்கிரகம் என்பது பிறதோஷங்கள் என்பது அந்த தோஷம், இந்த தோஷம் என்பதையெல்லாம் நமது சங்கத்தைச் சார்ந்தவர்களெல்லாம் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் சுவடி என்பது அதுவேறு அமைப்பு. முக்காலமும் உணர்ந்தவர்கள் சொல்வார்கள். இதெல்லாம் நம் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது அன்பர்கள் பிரச்சினை என்று வந்தால், அது நம் வினைப்பயன் என்று எண்ணுவார்களே தவிர, வேறு எண்ணமாட்டார்கள். இதை மக்கள் அறிய வேண்டும். உலகம் முழுவதும் அறிய வேண்டும்.
இப்போது எங்கு பார்த்தாலும் பேய் பிசாசு. அது ஒரு பிரச்சினை இருக்கய்யா, பேய், பிசாசு என்று சொல்கிறானய்யா, இருக்கய்யா, திருக்குறளில் கூட பேய் பிசாசை அலகை என்பார் ஆசான் திருவள்ளுவர்.
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
o   திருக்குறள் – புல்லறிவாண்மை – குறள் எண் 850
மகான் திருவள்ளுவப்பெருமானோ அலகை என்னும் வார்த்தையை, பேய் என்னும் வார்த்தையை பயன்படுத்தினார், அலகை என்றும் பேய் என்றும் வார்த்தையை மகான் வள்ளுவரே சொல்லியிருப்பதால் பேய் உண்டு.
இடைப்பட்டு இறந்து போகின்றவன், திடீரென்று இறந்து போகின்றவன் எல்லாம் பேயாக மாறுவான். நம் அன்பர்களை ஒன்றும் செய்யாது. நம் அன்பர்களிடம் கிட்டவே நெருங்க முடியாது.
பேய் வரவே வராது. நம் அன்பர்களை பேய் ஒன்றும் செய்யாது. நம் அனபர்கள் பக்கமே நெருங்கமுடியாது. பேய் வரவே வராது.
நம் அன்பர்களை பேய் ஒன்றும் செய்யாது. செய்வினை ஒன்றும் செய்யாது. தீய கிரகங்கள், ராகு கேது இந்த மாதிரி நவக்கிரகங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
நம் அன்பர்கள் அத்தனை பேருக்கும் ஒரே நோக்கம். காலை மாலை தியனாம் செய்வார்கள், அன்னதானம் செயவார்கள், மனைவி மக்களிடம் ஒழுங்காக நடந்து கொள்வார்கள்.
அப்படியே தியானமும், தானமும் செய்வார்கள். ஏதேனும் இடையூறு வந்தால், வினைப்பயன் என்று நினைப்பார்கள்.
ஆக நாம் சொன்ன இந்த தத்துவங்கள் உலகம் முழுவதும் இருக்கிறது. இப்போது எங்கே பார்த்தாலும் உயிர்வதை செய்கிறான்.தமிழகத்தில் இதுபோல் நடக்கின்றது என்கிறார்கள்.
ஏனய்யா உயிர்வதை செய்கிறாய் என்று கேட்டால், எங்களுக்கு துன்பம் வந்திருக்கு, அதனால் இப்படி செய்து கடவுளை ஆறுதல் படுத்துகிறோம் என்பார்கள். இதெல்லாம் கடவுளை ஆறுதல் படுத்துவதல்ல, இதை கடவுள் விரும்பவே மாட்டார்.
பேய் பிசாசுகள்தான் ஆடு கோழி இவைகளை கேட்கும். அதுவும் நாம் முடியாதென்றால் விட்டு விலகிவிடும். அதற்கென்ன இதுதான் வேலையா? அதுதான் பேயாக சுற்றுகிறதே, அதற்கெல்லாம் இந்த ஆடு, கோழி என்னும் பேச்சே இல்லை.
நம் தமிழக மக்களில் சிலர் ஏன் தம் பிரச்சினை தீர கோழி, ஆடு வெட்டுகிறார்கள், இதை ஞானிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 327
தன்னுடைய உயிரே போக நேர்ந்தாலும் இன்னொரு உயிருக்கு இடையூறு செய்ய மாட்டார்கள் என்று மகான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்.
ஆக உயிர் வதை செய்யாதிருத்தல் என்பதெல்லாம் அடிப்படை. மனித வர்க்கம் முன்னேற வேண்டும். சடங்குகள் எல்லாம் மன ஆறுதல்தான் தரும்.
நாம் விரதம் இருக்கலாம். வாரத்திற்கு ஒரு நாள் விரதம் இருக்கவேண்டும். எதற்கென்றால், உடல் உறுப்புகள் ஆரோக்கியத்திற்காக அதுவும் உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்களுக்கு விரதம் கிடையாது.
மூன்றுவேளை உணவு கிடைத்து, அதுவும் கொழுப்புச் சத்து உண்டாகக் கூடிய உணவாக புலால் உணவோ அல்லது பால் நெய் போன்ற உணவுகள் சாப்பிடுகின்ற மக்கள் வியாழக்கிழமை விரதம் கிடையாது.
வியாழக்கிழமைதோறும் விரதம் இருந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தினால் பாதிப்பு ஏற்படாது. ஒரு நேரம் கிடைத்து ஒரு நேரம் உணவு கிடைக்காமல் வறுமையில் வாடும் மக்களுக்கு வியாழக்கிழமை விரதம் என்பது தேவையில்லாத ஒன்று என்பார்கள்.
உணவில் அதிக சத்துள்ள உணவை சாப்பிடுபவர்கள்தான் விரத அனுஷ்டானம் கடைபிடிக்க வேண்டும்.
மூன்று வேளை சாப்பிட்டு கொழுப்பு சத்து மிகுதியாக இருப்பவர்களுக்குத்தான் விரதம், மற்றவர்களுக்குத் தேவையில்லை. ஆக இதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு வருகிறோம்.
உலகத்தில் இன்றைக்கு தலைவனைப் பற்றித் தெரியவில்லை. யாரை வணங்குவது? எப்படி வணங்க வேண்டும்? என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.
கடவுள் யார்? ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான தெய்வங்கள் இருக்கிறது. ஆனால் நாம் சுட்டிக்காட்டுவது முற்றுப்பெற்ற முனிவர்களைத்தான், மகான்களைத்தான், ஞானிகளைத்தான்.
ஆக ஞானிகளைப் பற்றிப் புரிந்து கொண்டு சொல்ல வேண்டும். மற்ற மற்ற நாடுகளில் ஏதேதோ சொல்கிறார்கள். மகான் இராமலிங்கசுவாமிகளும், அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சொல்லிவிட்டார்.
இப்போ நாம் என்ன சொல்கிறோம், அருட்பெருஞ்சோதி ஆண்டவரே அவர்தானய்யா! மான் இராமலிங்கசுவாமிகளே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
தமிழகத்திலேயே நாமும் நமது சங்கமும்தான் இதை சொல்கிறது, மகான் இராமலிங்க சுவாமிகள் ஆசியை பெற்றுக்கொள்.
அவரை தினம் பூஜை செய் என்று சொல்கிறோம், அவரைப் பற்றி சொல்கிறோம். மகான் மாணிக்கவாசகரைப் பற்றிச் சொல்கிறோம். மகான் தாயுமானசுவாமிகளைப் பற்றி சொல்கிறோம்.
ஞானிகளைத்தான் வணங்க வேண்டுமென சொல்கிறோம். மற்றவர்கள் எல்லாம் பல வகையாக சுட்டிக்காட்டிக் கொண்டு வருகிறார்கள். அதில் இலாபமில்லை, அவர்களுக்கு நல்வினை இருந்தால் நாம் சொல்லலாம்.
     நாம் சொல்வதை கேட்டு அவரவர்கள் ஞானிகளை வணங்கத்தான் போகின்றார்கள். மகான் இராமலிங்க சுவாமிகளையும், மகான் அருணகிரிநாதரையும், மகான் பட்டினத்தாரையும் சுட்டிக் காட்டத்தான் போகிறோம். அவர்களை மக்கள் வணங்கத்தான் போகின்றார்கள்.
     ஆசான் சுப்பிரமணியரை வணங்குவதென்றால், சின்ன விசயமல்ல. ஊரெங்கும், மலேசியாவில் கூட ஆசான் சுப்பிரமணியரை பிரபலமாக அமைத்திருக்கிறார்கள்.
     அது அவர்கள் அமைத்ததல்ல, ஞானிகளே கருணை கொண்டு அங்கே கோவில் அமைத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் சிறு தெய்வங்களுக்கும் அங்கே கோவில் இருக்கிறது.
     ஆக தலைவனை அறிமுகப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால் ஆன்மீகம் என்பதே அன்பு வழியில் நடத்தலும், அன்புடன் இருத்தலும் ஆகும்.
     அதே சமயத்தில் ஆசான் நாமத்தைச் சொல்லாமல் ஒருவன் அன்பு உணர்ச்சியோடு வாழ முடியாது.
     இப்போ காலையில் ஐந்து நிமிடம் ஓம் அகத்தீசாய நம என்று ஆசான் நாமத்தை சொல்லச் சொன்னோம். இப்படி சொன்னால்தான் அன்பு உணர்ச்சி என்றால் என்னவென்று தெரியும்.
     அன்பு உணர்ச்சி என்றால் மலர்ந்த முகமாக இருக்கவேண்டும், வஞ்சனை இல்லாமல் இருக்கவேண்டும், பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இந்த பண்புகள் அனைத்தும் எப்போது வருமென்றால், நாமஜெபம் செய்யசெய்யத்தான் வரும். இல்லையென்றால் வன்மனமாகத்தான் இருக்கும்.
     நாமஜெபம் செய்யும்போது என்னிடம் இருக்கும் குறைகளை உணர்த்த வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும்.
     ஆசான் அகத்தீசரிடம், “நான் பண்புள்ளவனாக வாழவேண்டும். அன்புள்ளவனாக வாழவேண்டும். பேராசைக்காரனாக இருக்கக்கூடாது” இப்படியெல்லாம் கேட்க வேண்டும்.
     அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டுமென்று கேட்கவேண்டும். இப்படிக் கேட்டால்தான் நடக்கும்.
     இவன் அழிய வேண்டும், அவன் அழிய வேண்டும். இவன் சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று கேட்டால், ஆசான் இவனிடமிருந்து ஒதுங்கிக்கொள்வான். ஆசான் இவனிடமிருந்து நீங்கி விட்டு ஏதோ பேய், பிசாசை விட்டு பூஜை செய்யும்படி செய்து விடுவான்.
ஆக ஆசானைக் கேட்கும்போது “நான் அன்புள்ளவனாக வாழவேண்டும். பண்புள்ளவனாக வாழ வேண்டும், அடியேனுக்கு செல்வநிலை பெருக வேண்டும், வறுமை சூழாதிருக்க வேண்டும், நான் பிறருக்கு பயனுள்ளவனாக வாழ வேண்டும்” என்று கேட்க வேண்டும்.
இப்படியெல்லாம் ஆசானிடம் கேட்பதோடு மட்டுமல்லாமல் மேலும் எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்க வேண்டும்.
ஆசானிடம் கேட்கின்ற முறையை உலக மக்களுக்கு சொல்லித்தருகிறோம். ஆசான் படத்தைக் கொடுக்கிறோம். மக்களிடம் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்டால், எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பான், ஆசானிடம் கேளய்யா, எனக்குத் திருமணம் ஆகவேண்டும் எனக்கேள்.
திருமணம் ஆகி மனைவி இறந்து விட்டான், மேலும் எனக்கு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு தாயில்லை என்பான்.
சரி நீ இப்பொழுது திருமணம் செய்ய விரும்புகின்றாயா? என்றால் “இந்தக் குழந்தையைக் காப்பாற்றக்கூடிய ஒரு பெண்ணாக அமையவேண்டும்” என்று ஆசானிடம் கேட்டுக்கொள்.
சகோதரனுக்கு திருமணம் ஆகவில்லை, அக்காவிற்கு திருமணம் ஆகி குழந்தையில்லை, எனக்கு திருமணம் ஆகி இன்னும் குழந்தையில்லை, உத்தியோகம் நன்றாக அமையவில்லை, அதுவும் ஆபீஸில் எனக்குப் பல பிரச்சினை இருக்கைய்யா
  இந்த பிரச்சனைகள் தீர எனக்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்” இதையெல்லாம் ஆசானிடம் குடும்பத்தலைவன் கேட்கத்தான் வேண்டும்.
ஆசானை பூஜை செய்யும்போது என்னென்ன உனக்கு குறையிருக்கிறது. அந்தக் குறைகளை ஆசானிடம் சொல்லி கேள். ஆசான் தீர்த்து வைப்பான் என்று நம்பு.
இப்போது நீ உன் அறிவைக்கொண்டு பார்க்காதே. எதையும் நாம் செய்வோம். நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைத்தால் கடவுள் ஒதுங்கிக் கொள்வான்.
நமக்கு மேல் ஒரு அதிகாரி இருக்கிறான், எப்போது பார்த்தாலும் இடறிக் கொண்டு இருக்கிறான். ஆபீஸில் எப்போது பார்த்தாலும் தொந்தரவாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நாம் அவனுக்கு இடையூறு செய்ய வேண்டுமென நினைக்காதே. இது முன் செய்த வினையாகவும் இருக்கலாம் அல்லது பொறாமையாகவும் இருக்கலாம். முன்  செய்த வினைகளே நமக்குப் பகையாக இருக்கும்.
வேண்டாமய்யா, அவன் அதுபோல் இருந்தாலும், நாம் ஆசானிடம் கேட்கிறோம், இப்படி என்னை இடறுகின்றவனுக்கு, நீர்தான் அருள் செய்ய வேண்டுமெனக் கேட்கிறோம். ஞானிகள் இறங்கிவிடுவார்கள்.
நீ ஏன் மூன்று ஆண்டுகளாக சிந்தித்துக்கொண்டு இருக்கிறாய்? என்னிடம் சொன்னால் நாங்கள் முடித்துக் தருவோம். ஞானிகளெல்லாம் உலக போக்கிரி, ஆசான் அகத்தீசரும், ஆசான் ஞானபண்டிதரும் உலகப்போக்கிரி.
ஒரு நொடியில் ஞானிகள் பகையை நட்பாக்குவார்கள், அநியாயமாக அவனைக் கொன்றுவிட மாட்டார்கள். பகையை நட்பாக்கி விடுவார்கள். இவன் வசப்படவேண்டுமென்று நாங்கள் கேட்போம். இவன் எப்போது பார்த்தாலும் முரண்படுகிறான்.
இவன் வசப்படவேண்டுமென்று ஆசானிடம் கேட்போம். ஆசான் இதுதானே கேட்டாய், அவன் அழிய வேண்டுமெனக் கேட்கவில்லை அல்லவா? அவன் அழிய வேண்டும் எனக் கேட்பதற்கு உனக்கு அதிகாரம் கிடையாது.
ஒரு உயிரை வாழ வைப்பதற்குத்தான் உனக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர அந்த உயிரை அழிய வைப்பதற்கு உனக்கும் அதிகாரமில்லை, எனக்கும் அதிகாரமில்லை என்பார் ஆசான்.
எல்லாம் வல்ல இயற்கையே அவன் செய்த வினைக்கேற்றபடி செயல்படுகிறது. அவனுடைய ஊழ்வினையை முடிக்க நம்மால் முடியாது. கடவுளுக்கு சக்தி கிடையாது. ஆனால் சக்தி இருக்கிறது அவர்கள் போய் அந்த வலையில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.
என்னய்யா, இப்படி அராஜகம் செய்கின்றானே, இவனெல்லாம் நடமாட வேண்டுமா என்று கேட்பான். இது நியாயமான கேள்விதான். இவன் நடமாடக் கூடாதுதான், இருந்தாலும் அவனாகவே முடித்துக் கொள்ள வேண்டும்.
அவன் அடாது செய்கிறான் என்றால் அவர்கள் அவனை என்ன செய்வார்கள்? கொடும் பாவிகளையெல்லாம் அளவு கடந்து குடிக்க வைப்பார்கள். இது வெளியே தெரியாது.
அவனிடம் அதிகாரம் இருக்கும், பணபலம் இருக்கும். அவன் கண்டவர்களையெல்லாம் மனம் புண்படுத்தி வைப்பான். இதை தாங்க முடியாமல் எல்லோரும் தடுமாறுவார்கள்.
இது என்னய்யா, அவனுக்கு தண்டனையே இல்லையா? என்று கேட்டால் அவனை முன் ஜென்மத்தில் பண பலத்தாலும், ஆள் பலத்தாலும் அடாது செய்திருப்பான்.
இந்த ஜென்மத்தில் அவனுக்கு என்ன நடக்குமென்றால் அளவு கடந்து குடிக்க வைப்பான். வேறு ஒன்றும் வேண்டாம். குடிக்க வைத்தே அவனைக் கொன்று விடுவான்.
அடுத்து சூதாட வைப்பான். சூதாடுதல், குடிப்பழக்கம் எல்லாம் வெளியே தெரியாத பாவிகளுக்குத்தான். வெளிய தெரியாது இரகசியமாக செய்த பாவிகளுக்குத்தான் உடம்பெல்லாம், சும்மா தொட்டால் உரிகிற அளவுக்கு குடிப்பான், சொன்னால் கேட்கவே மாட்டான்.
ஏன் கேட்கமாட்டான் என்றல், அவனை விட்டுவிடு என்பான் தலைவன். ஏன் கேட்க மாட்டான் என்றால், அவனிடம் ஞானிகளை வணங்கச் சொன்னால் கூட, கிட்டேயே போகமாட்டார்கள்.
அப்போ அவனுக்கு மன்னிப்பே இல்லையா என்றால், மன்னிப்பு இருக்கிறதுதான். ஆனால் அவன் கேட்கமாட்டான்.
அந்த மாதிரி இரகசிய பாவம் செய்தவன், வெளியே தெரியாது இரகசிய பாவம் அடாது செய்த பாவிகளெல்லாம் அளவு கடந்து காமத்தைத் தருதல், சூதாடுதல், அளவு கடந்து மது அருந்துதல், தட்டுத்தடுமாறுதல், அதே சமயம் போதைப் பழக்கம், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களைக் கொடுத்துவிடுவான்.
அப்படி கொடுத்தே அவனை அழகாக கசக்கிப் பிழிந்து கீழே விழும்போது உடம்பெல்லாம் அப்படியே காற்று மாதிரி இருக்கும், தொட்டால் செத்துப்போய்விடுவன்
 அந்த அளவுக்கு கொண்டுபோய் வைத்துவிடுவான். அவன் எங்கேயாவது விழுந்து சாவான். ஏனய்யா இப்படி என்றால் அவனுக்கெல்லாம் போதிக்க வேண்டாம் என்பார்கள்.
ஏன் போதிக்கக்கூடாது என்று சொன்னால், அவன் செய்த பாவம் அந்த அளவுக்கு இருக்கிறது. சரி அவனுக்கு விமோசனமே இல்லையா என்றால், அவன் எப்போது வருவான், அவனைக் கூப்பிட்டுப் பாரேன், போதை மருந்தில் அடிமையானவனைக் கூப்பிட்டுப் பாரேன், கிட்டேயே வரமாட்டான் அல்லது கெட்டு நலிந்து விடுவான்.
அவனுக்கு கருணை காட்ட வேண்டுமென்று கட்டளை வருது.
கெட்டு நலிந்து இப்பவோ, அப்பவோ என்ற நேரத்தில் வருவான். கையெடுத்துக் கும்பிட்டு ஒதுக்கி விடு. அதே சமயத்தில் நீ குடிப்பழக்கத்திற்கு வந்து விட்டாய், முன் ஜென்மத்தில் பாவம் செய்துவிட்டாய். அதனால் என்னிடம் வராதே என்று சொல்லக்கூடாது.
நம் மனதில்தான் இருக்கவேண்டும். அவன் குடிக்கிறான், சூதாடுகிறான், அபின் தின்கின்றான், நமக்கு அவசியமில்லை ஐயா.
அவனை வாய்யா, உட்காரு நல்லபடியா இருக்கியா? என்று கேட்கவேண்டும். நல்லபடியாக இருக்கிறாயா என்று கேட்பதற்குள் இறந்து விடுவான். அவனுக்கும் நான்கு ஆறுதல் வார்த்தை சொல்வதற்கு வாய்ப்பிருக்க வேண்டும்.
அவனைப் போய் பார்க்கும்போதே, இவன் இந்த அளவுக்கு கொடும் பாவி, இந்த அளவுக்கு போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறான் பாவி! என்று நினைக்காதே.
வந்து நான்கு வார்த்தை கேட்டுவிட்டு உயிர் போனாலும் சரி, நாலு வார்த்தையாவது அவன் மனதில் கவலைப்படாதே என்று சொல்லி அவனிடம், உனக்காக நான் கடவுளை, ஆசான் அகத்தீசரை வேண்டிக்கொள்கிறேன்.
ஏதோ பாவம் நீ போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டாய். உனக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று சொன்னால் அதில் அவள் ஆறுதலடைந்து சாவான்.
அவனிடம் இதெல்லாம் நீ முன் ஜென்மத்தில் செய்த பாவம், என்று சொல்லக்கூடாது. அவன் சொல்வான் நான் பாவம் செய்தேனோ, புண்ணியம் செய்தானோ எனக்குத் தெரியாது.
பாவ புண்ணியத்தைப் பற்றி அறியக்கூடிய ஆற்றல் அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்குத்தான் உண்டு. மற்ற யாருக்குமே கிடையாது.
பாவ புண்ணியத்தைப் பற்றி அறியக்கூடிய அறிவு அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்கு உண்டு. இப்போது, வந்த துன்பத்திற்கு காரணம் முன் செய்த வினைதான் என்றும், மற்றவர்கள் அல்ல என்றும், அதற்காக மந்திர தந்திரம் செய்ய முடியாதென்றும், யாரும் நமக்கு செய்வினை செய்யவில்லை என்றும், நம் துன்பத்திற்கு காரணம் நாம்தான் என்கிற அறிவு நமக்கு இருக்கவேண்டும். இதை நமது சங்கத்தார்கள்தான் சொல்வார்கள்.
ஆக ஆசான் ஆசியினால்தான் இந்த அறிவு நமக்கு வந்தது. நம் அன்பர்களிடம் குடிப்பழக்கம் இருக்காது. அப்படியே இருந்தாலும் காலப்போக்கில் அதை வெல்லுகின்ற வல்லமை இருக்கும்.
பொல்லாத காம தேகமாக இருக்கும். பொல்லாத காமதேகமாக இருப்பதை ஆசான் உடைத்தெறிவார்.
எழுகின்ற காம உணர்விற்கு மனைவி இருக்கிறாள். அதுதான் துணை இருக்கல்லவா? அவளுடன் கூடிவிட்டுப்போ! குற்றமில்லை. பொல்லாத காம தேகத்தையும் உடைப்பதற்கு துணையிருக்கு.
தினம் பூஜை செய்வதனால் கொடுமையான பொறாமைக்குணம் இருக்காது. தலைவன் ஆசி இருந்தால் பொறாமைக்குணம் இருக்காது.
மிக்க காமவெறி இருக்கிறது. குற்றமில்லை அய்யா, என்ன நட்டம்.
கடவுள்தான் கொடுத்தான் காமத்தை, கொஞ்சம் மிகுதியாக கொடுத்திருக்கிறான் அவ்வளவுதானே? குற்றமில்லை, மனைவி இருக்கிறாள், அவளிடம் காமத்தை தணித்துக்கொள்.
பொல்லாத காமம், குற்றமேயில்லை. நமக்கு நட்டமேயில்லை. கடவுள் கொடுத்திருக்கிறான். காமத்தையும் கொடுத்திருக்கிறான். பெண்ணையும் கொடுத்திருக்கிறான். அனுபவித்துவிட்டுப்போ என்பார்.
அப்போது மனதில் காமம் மிகுதியாக இருக்கும்போது மனம் இலயப்படாது. பெண்ணுறவு கொண்டால்தான் அந்த விகாரம் அடங்கும். பெண்ணுறவு கொள்கிறான் மனம் சாந்தமடைகிறது, தியானம் செய்கிறான்.
பொறாமைக்குணம் இருந்தது. ஆசான் அகத்தீசன் ஆசியால் பொறாமைக்குணம் நீங்கியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வருவார்கள். வறுமை தீர்வதற்கெல்லாம் சொல்வார்கள்.
பூஜை செய்து கொண்டே வந்தால்தான் இதுபோன்று காம தேகத்திலிருந்து விடுபடலாம். விடுபட வேண்டிய அவசியமில்லை, குறைந்திருக்கும். முழுமையாக நிற்கவேண்டிய அவசியமில்லை.
ஒருவன் முழுதாக காமத்தை நிறுத்தினால் அவன் பாவியாகி விடுவான். எப்படிய்யா பாவியாவான் என்றால் கொழுப்பு மண்டி செத்துப்போவான். ஏனய்யா பெண்ணுறவு என்றால் உனக்கு அந்த இரகசியம் தெரியாது. இரகசியம் தெரிந்தவன்தான் வைத்திருப்பான்.
பெண்ணுறவு கொள்ளாமல் இருப்பவனுக்கு நிச்சயமாக உடம்பு கெட்டே போகும். அவன் மனம் சாந்தமாகாது. அவன் கடவுளை அடையவே முடியாது. ஆக தன்னுடைய உடற்கூரைப்பற்றி அவன் அறிந்து கொள்ள வேண்டும். தினம் தியானம் செய்ய வேண்டும்.
இதெல்லாம் செய்து கொண்டே வந்தால், அதன் போக்கிலேயே சென்று பண்புள்ளவனாக வாழ்ந்து, பொறாமை இல்லாதவனாக, வஞ்சனை இல்லாதவனாக தியானம் செய்து வர வேண்டும். அப்போது தியனத்திலேயே கேட்கவேண்டும்.
காமதேகம் அற்றுப்போக வேண்டுமென்றால் சின்ன விசயமில்லை. அது பெரிய விசயம். காமத்திலிருந்து விடுபடுவது என்பது பெரிய விசயம். ஆசான் ஆசியிருந்தால் காமத்தையும் ஒழித்துவிடலாம்.
இப்படியெல்லாம் நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம். ஏனென்றால், ஒரு மனிதன் கடவுளை அடையவேண்டுமென்றால் என்ன பண்பு வேண்டும் என்று கேட்பான்.
எல்லாப் பண்பையும் பெற்றுத்தான் நீ பக்தி செலுத்த வேண்டுமென்றால் இன்னும் நீ முன்னூறு கோடி ஜென்மம் எடுக்க வேண்டும்.
இப்போது என்னய்யா செய்வது? குணக்கேடுகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பொறாமை இருக்கிறது. வஞ்சனை இருக்கிறது. அறியாமை இருக்கிறது. மிக்க காமவெறி இருக்கிறது. குடிப்பழக்கம் இருக்கிறது. சூதாடுகின்ற பழக்கம் இருக்கிறது. உயிரைக் கொன்று அதன் புலாலை சாப்பிடுகின்ற பழக்கம் இருக்கிறது. மற்றவரை அவமதிக்கிறோம், அடிக்கிறோம், கொடுமைப்படுத்துகிறோம், கர்வமிருக்கிறது.
இப்படி எல்லா குணக்கேடுகள் இருக்கிறது. இவ்வளவு குற்றங்களும் காமமும் இருக்கிறது.
இத்தனைக் கொடுமை இருக்கய்யா, இவர்களுக்கெல்லாம் ஆசியில்லையா? என்றால் ஆசி இருக்கிறது. அவர்கள் அல்லல் படும்போதுதானே வருவார்கள். துன்பப்பட்டு வரும்போது அப்படி லேசாக சொல்லவேண்டும்.
ஆசான் அகத்தீசனை பூஜை செய் அய்யா, வேறு வழியே இல்லை.
நாம் என்ன சொல்கிறோம். அன்போடு சம்பாதிக்க வேண்டும். நல்லபடியாக சம்பாதிக்க வேண்டும்.
ஆசான் அகத்தீசன் ஆசியிருப்பதால் தான் நாங்கள் எல்லாம் பாவியாகவும் இருக்கிறோம்.
எங்களிடம் பேராசை இல்லை, எங்களிடம் வஞ்சனை இல்லை, எங்களிடம் பொறாமை இல்லை. ஆனால் முன்பு இருந்தது. காலப்போக்கில் மறைந்துவிட்டது. இது ஆசான் ஆசியிருந்தால்தான் முடிந்தது. ஆனால் ஆசான் அகத்தீசரை வணங்கியதால் குணக்கேடுகளெல்லாம் ஒழிந்து விட்டது.
இல்லையென்றால் நாங்கள் இன்றளவும் பொறாமை உள்ளவனாக, வஞ்சனை உள்ளவனாக, பேராசை உள்ளவனாக, ஜாதி வெறி உள்ளவனாக பழி வாங்கும் உணர்ச்சி உள்ளவனாக, மிகுந்த கொடூர குணம் உள்ளவனாக இருந்திருப்போம்.
நீங்களும் பூஜை செய்துதான் குணக்கேடுகளை ஒழிக்க முடியும். இதற்கு வேறு வழியே இல்லை. நாம் பூஜை செய்யும் ஆசான் அகத்தீசர், அவருக்கும் எல்லா குணமும் இருந்தது. எட்டு குணமும் இருக்கிறது. இதுதான் சொல்வார், “எண் குணத்தான் தாளை வணங்காத்தலை” என்பார்.
தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 7
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 9
என்னய்யா எட்டு குணம் என்றால், உண்டுதானய்யா, நான்தான் முன்னமே சொல்லிவிட்டேன் அல்லவா? காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை, வேகம் இதுபோன்று எட்டு வகையான துஷ்ட குணங்கள் இருந்ததைய்யா.
கடவுளுக்கே இருந்ததென்றார் மகான் வள்ளுவப்பெருமான். அவன் நீக்கிக்கொண்டான். அவர்களிடம் இப்பேர்ப்பட்ட எட்டு வகையான கொடுமையான குணக்கேடுகள் இருந்தது. அவர்கள் நிர்க்குணம் ஆனார்கள்.
எந்த முறையில் என்று சொன்னால் தொடர் பயிற்சிதான். தொடர்ந்து பயிற்சி செய்கிறான். மனதோடு தினம் போராடிக் கொண்டுள்ளான்.
தினம் நூல் படிக்கிறான். சான்றோரோடு பழகுகிறான். இப்படி பழகி பழகி பழகி தினம் தியானம் செய்கிறான். நூலறிவு மட்டும் போதாது. ஞானிகள் திருவடியைப் பற்றினால்தான் முடியும்.
அவனும் எட்டு குணம் உள்ளவன். எல்லா வகையான குணக்கேடும் அவனிடம் இருந்தது. எண் குணத்தான் என்றான்.
என்னய்யா நிர்க்குணத்தான் அல்லவா? நிர்க்குணம் அல்ல. முன்னே நான் எட்டு வகையான குணத்துடன் இருந்திருக்கிறேன். ஆசான் வள்ளுவரே சொல்கிறார். எட்டு வகையான குணக்கேடும் என்னிடம் இருந்தது.
இப்போது குணமற்றவனாக இருக்கிறேன். சாந்த சொரூபியாக இருக்கிறேன் என்று சொன்னான். இப்பேர்ப்பட்ட எல்லா ஞானிகளும் குற்றங்கள் பல புரிந்தவர்களே, மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரியதே
மெய்யா நீசெய் உதவிக் கொருகைம் மாறு வேண்டுமே
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே.
o    திருஅருட்பா – ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு – கவி எண் 1796
`     நான் செய்த பாவங்கள் ஏழு கடலை விடப்பெரியது. ஐயா, நான் செய்த பிழைகள், குற்றங்கள் ஏழு கடலைவிட பெரியது என்பார்.
     ஆசானுடைய தயவினாலே இப்ப்பப் பேசுகிறோம்.
     யாரய்யா உன்னுடைய குற்றத்தை மன்னிக்கப் போகிறார்கள்? இந்த கோவிலில் இருக்கும் சிறு தெய்வமா? இப்ப செய்தி வந்து விட்டது. சிறுதெய்வத்தை வணங்குகிறாய்.
     அந்த தெய்வமா உனது குற்றத்தை மன்னிக்கப் போகிறான்?
     அவன் பாவம், பேயாக சுற்றுகிறானே, போர்க்களத்தில் வீர மரணமடைந்தவன் அல்லது அம்மை கண்டு இறந்தவன் இன்னும் பலத்தரப்பட்ட வகையில் இருக்கிறது.
     அதுதான் பலமுறை சொல்லியிருக்கிறேன். சிறு தெய்வமா நமக்கு அருள் செய்யப் போகிறார்கள்? உன் குற்றத்தை மன்னித்து அருள் செய்யப் போகிறதா?
     ஞானிகளும் எண்குணத்தோடு இருந்தவர்கள். ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்தான். ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்ததினால் குணக்கேடு நீங்கியது, பாவம் நீங்கியது. ஆக உன் குற்றத்தை மன்னித்து அருள் செய்யக்கூடியவர்கள் ஞானிகள்தான். அதனால்தான்
     தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
§  மகான் கொங்கண மகரிஷி  கடைக்காண்டம் – 491
தான் என்ற கொடும் பாவம் தீர்க்கும் ஆசான், சின்ன விசயமல்ல, பலமுறைச் சொல்லியிருக்கிறேன், குற்றமில்லை, பெரியவங்க பாடல்தான்.
ஆக உன்னுடைய குற்றத்தை மன்னித்து, பாவத்தை மன்னித்து, உன்னுடைய எல்லா பாவத்தையும் மன்னித்து உனக்கு நல்வழி காட்டக்கூடியவர்கள் ஞானிகள்தான். குற்றத்தை மன்னிப்பவர்களும் ஞானிகள்தான். உன்னை குணவான் ஆக்குபவர்களும் அவர்கள்தான்.
உன்னைக் குணவான் ஆக்குவார்கள். தனவான் ஆக்குவார்கள். தனவான் என்பது செல்வத்தையும் தருவார்கள். நல்ல பண்புள்ளவனாக உன்னை ஆக்குவார்கள். தினம் பூசை செய்தால்தான் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும். இல்லையென்றால் வேறு வழியில்லை.
உலக மக்களை குற்றவாளிகளாக நீ பார்க்கிறாய். உண்மைதானய்யா.
ஆசானே எட்டு குணம் என்கிறானே? எண் குணத்தான் தாளை வணங்காத்தலை, கடவுளே எல்லா வகையான குணக்கேடுகளும் உள்ளவன்தான் என்று சொல்கிறான். எட்டு குணம் உள்ளவன்.
     எல்லோரிடத்திலும் குணக்கேடு இருக்கய்யா, உயிர் வதை செய்கிறான். ஆயிரக்கணக்கான ஆட்டை, கோழியை வெட்டி கடவுளுக்கு பலி தருகிறான். இதைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதுபோன்ற மூடத்தனம் உலகில் உள்ள சிலரிடம் இருக்கிறது. கடவுளுக்கு உயிரைக் கொன்று பலி  கொடுத்தால் நம் வினை தீர்ப்பான் என்று சொல்கிறான். அது பாவத்தின் சின்னமென்று உணரவேண்டுமல்லவா?
                ஆக இந்த குணமும் தீரும். இந்த மூடத்தனமும் தீருமைய்யா. மனிதன் கடவுளாகிறான். எல்லா வகையான குனக்கேடும் உள்ளவன் கடவுள் ஆகி இருக்கிறான்.
    
     நம் குற்றத்தை அவன் மன்னிப்பான். நமக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் மகான் இராமலிங்க சுவாமிகளுக்கு உண்டு, மகான் அருணகிரிநாதருக்கு உண்டு.  மகான் தாயுமானசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் பட்டினத்தார், மகான் திருமூலதேவர் போன்ற ஞானிகளுக்கு உண்டு.
    
     இவர்கள் போன்ற ஞானிகளிடம் வேண்டி நம் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நமது பாவத்தைப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும்.
     மனம் அமைதி பெறவேண்டும். மோட்ச இலாபம் பெறவேண்டும். இப்படியெல்லாம் கேட்கின்ற அளவுக்கு நாம்தான் சொல்லித்தர வேண்டும். இந்த கருத்துகளை நமது சங்கம்தான் சொல்லியாக வேண்டும்.
     தலைவனை அறிமுகப்படுத்தி அவன் பாவத்தையெல்லாம் தலைவன் திருவடியில் சமர்ப்பிக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். அப்போது பூஜை செய்யும் முறையை சொல்லித் தரவேண்டும்.
     முன் ஜென்மத்தில் செய்த நல் வினையால் செல்வம் சேருமைய்யா. இவன் என்ன செய்வான். அடாது செய்து கொண்டே இருப்பான். இவனுக்குச் செல்வம் சேரச் சேர தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்பான். ஏனென்றால் வாய்ப்பு கிடைக்கிறது, தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்பான்.
     அவனிடம் சொல்லவேண்டும். “நான் சேர்க்கின்ற பொருளால் பாவம் வருமோ, நான் பேசும் பேச்சால் எனக்குப் பாவம் வருமோ? நான் செய்யும் செய்கையின் காரணமாகப் பாவம் வருமோ? எனக்கு புரியவில்லை.
     என்னமோ, நான் மனதிற்கு பட்டதெல்லாம் செய்து கொண்டுள்ளேன். முடிவு கொடும் பாவியாகும்படி வருமோ? எனக்கு தெரியவில்லை அப்பா” என்று ஆசானிடம் கேட்கச் சொல்லவேண்டும்.
     நிறைய செல்வம் சேரும். மனதில் பட்டதெல்லாம் செய்து கொண்டிருப்பான். வினை சூழப்போகிறது என்று அர்த்தம். அதே சமயத்தில் செல்வம் சேருகிறது. நல்ல வாய்ப்பு வசதி இருக்கிறது.
     உடல் ஆரோக்கியம் இருக்கிறது. இவன் ஞானிகளிடம் கேட்கிறான் “நான் சேர்க்கின்ற பொருளால் எனக்கு வினை சூழுமோ? அதனால் விபரீதம் ஏற்படுமோ? அந்த பொருள் நியாயத்திற்கு உட்பட்டப் பொருளோ? அல்லது பிறரை வஞ்சித்து வந்ததோ? எனக்குத் தெரியவில்லை.
     அதே சமயத்தில் நான் சேர்க்கின்ற பொருள் எனக்குப் பாவச்சுமையை உருவாக்குகிறது” என்று கேட்க வேண்டும். இதை எனக்கு நீர் உணர்த்தினால், அதை நான் புரிந்து கொள்கிறேன்.
     ஆக புரியாமல் நான் செய்து கொண்டு வருகின்றேன் என்னைக் காப்பாற்று என்று கேட்க வேண்டும். பொருள் சேர்ப்பதனால் நான் பாவியாகும்படி சூழ்நிலை வருமோ? என்பதை எனக்கு உணர்த்தினால் அதை நான் நிறுத்திக் கொள்கிறேன் அல்லது குறைத்துக் கொள்கிறேன் என்று ஆசானைக் கேட்கவேண்டும்.
                எனது பேச்சின் காரணமாக நான் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லினால் பிறர் மனம் புண்படுமோ? அதனால் எனக்கு வினை சூழுமோ? நரகம் என்னை சூழுமோ? அதிலிருந்து நான் விடுபடவேண்டுமென்று கேட்டால் பேச்சை அளந்து பேசுவதற்கு ஆசான் சொல்லித் தருவார். சரிய்யா, பொருளை சேர்ப்பதைப் பற்றி சொல்லிவிட்டோம்.
     அடுத்தது குணங்கள், பொறாமைப்படுகிறேன், நான் அவன் அழியனும், இவனை அழுத்தனும், அவனை அழுத்தனும் என்று நினைக்கிறேனே, அவன் உண்மையிலேயே பகை உள்ளவனா? அல்லது எனக்குத்தான் பகை சூழுமோ? என்னுடைய குணக்கேட்டின் காரணமாக முடிவில் எனக்கு வினை சூழுமோ? அல்லது நரகத்திற்குத்தான் போவேனோ, தெரியாது என்றான். அடேயப்பா, இதெல்லாம் ஒரு சாதாரண விசயமல்ல.
     பொருள் சேர்ப்பதில் பாவியாவேனோ? செய்கையால் பாவியாவேனோ? வேறு ஏதேனும் ஒரு வகையால் பாவியாவேனோ, எனக்குத் தெரியாது. நான் மனிதன்தான், நீர் எனக்கு உணர்த்தினால் அன்றி என்னால் உணரமுடியாது என்று சொல்லும் வரையில் ஆசான் உனக்கு அறிவு தரமாட்டான்.
     ஆக தியானம் செய்யும்போது எனக்குள்ள குணக்கேட்டை உணர்த்தினாலன்றி உணரமுடியாது என்பதை அறிகிறேன். நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கையேந்தி யாசிப்பவன், கை ஏந்தினால் ஆசான் நிச்சயம் அருள் செய்வார்.
     இப்போது நான் பேசுவதையெல்லாம் ஆசான் கேட்டுக்கொண்டிருக்கிறார். என்ன பேசுகிறேன் என்பது தெரியும்.
     இந்தக் கருத்தை திரும்ப திரும்ப சொல்வது போன்றிருந்தாலும், அது குற்றமில்லை, மனிதன் கடவுளாக வேண்டுமென்று நினைக்கும் போது, இதையே பொறுமையாகக் கேட்க முடியவில்லையென்றால், அவனை என்னய்யா செய்வது? நாங்கள் நிலை உயர்ந்தவர்கள் இல்லையா? விகாரமான தேகத்தைப் பொடியாக்கியவன், குணக்கேட்டையெல்லாம் நீக்கியவன், பேராசையெல்லாம் ஒழித்தவன்.
     இப்போது நாங்களே முற்றுப்பெறும் வரையில் நாங்களே கேட்டுக் கொண்டு வருகிறோம். அய்யா, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உலக மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டியது.
     ஆசான் அகத்தீசரை புரிந்து கொண்டோம். தினம்தினம் தியானம் செய்யும்போது எல்லா வகையாக நாம் விரும்பியவற்றைக் கேட்டோம். அடுத்து திருவடியைப் பற்றுகின்ற தகுதியையும், அதற்குரிய அறிவையும் கேட்டுக்கொண்ட வந்தோம். இப்படி செய்தால் அவர்கள் அந்த வாய்ப்பைத் தருவார்கள்.
     நாங்கள் திரும்பத் திரும்ப ஒரே மையக் கருத்தைதான் பேசியிருக்கிறோம். வேறு வழியில்லை, நிறைய கவிகளைப் பயன்படுத்தவில்லை. அதிக கவிகளைப் பயன்படுத்தி புரியாத தத்துவங்களைப் பற்றிப் பேசும்போது ஒருவகையான மயக்கம் வரும்.
     ஏன் ஆன்மாவிற்கு மாசு வந்தது? ஏன் அறிவிற்கு மாசு வந்தது? மாசு அறிவிற்கு வந்ததா? அல்லது ஆன்மாவிற்கு வந்ததா? அல்லது உடலிற்கு வந்ததா? என்பதைப் பற்றியும் இயற்கை ஏன் இப்படி செய்தது என்பதைப் பற்றியெல்லாம் நாம் நேற்று சொல்லியிருக்கிறோம். இந்த தத்துவங்களைப் பற்றி பேசும்போது ஒரு வகையான மயக்கம்.
     உடல் மாசு, உயிர் மாசு, அறிவு மாசு, ஆன்மா மாசு ஆகிய இதெல்லாம் வேண்டாமய்யா. ஒன்றே ஒன்று, நாம ஜெபம் செய். பூஜை செய்பவன் கைநாட்டாக இருந்தாலும் சரி, ஆசானைக் கேட்டுக்கொள்.
     “உன்னைப்பற்றி பூஜை செய்வதற்குரிய அறிவோ, ஆற்றலோ எனக்குக் கிடையாது. நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று” ஆசானிடம் ஐந்து நிமிடம் பூஜை செய்து கேட்க வேண்டும்.
     இப்படி பூஜை காலை மாலை யார் செய்கின்றார்களோ அவர்கள் ஆணானாலும், பெண்ணானாலும் சரி, அரசன் முதல் ஆண்டி வரை யாராக இருந்தாலும் சரி, ஆசானை பூஜை செய்து ஆசி பெற்றால், நிச்சயம் சிறப்பறிவு வரும்.
     சிறப்பறிவு என்பது சிறந்த நல்ல பண்புதான். சிறப்பறிவு என்பது விண்கலம் செய்வதற்காக இல்லை. மற்றவர்களை அரவணைத்து, அனுசரித்து  போவதே சிறப்பறிவு.
     சிறப்பறிவு என்பது தன் மனைவி குற்றம் செய்தாலும் மன்னிப்பது பிள்ளைகளோ, தாய் தந்தையோ, நண்பனோ அல்லது வேண்டியவர்கள் யாராவது இடறிப்பெசினால், மன்னிக்கின்ற மனப்பான்மைதான் சிறப்பறிவு. இதை மகான் வள்ளுவப்பெருமான் சொல்வார்,
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
    திருக்குறள் – பண்புடைமை – குறள் எண் – 997
சிறப்பறிவு என்பது,
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.
    திருக்குறள் – சுற்றந்தழால் – குறள் எண் 523
மற்றவரோடு மனம் விட்டுப் பேசிப்பழக கற்றுக் கொள்வது சிறப்பறிவு. நம்மிடம் இருக்கிறது என்பதற்காகப் புறக்கணிப்பவன் சிறந்த அறிவாளி அல்ல என்று சொல்வான்.
ஆகவே, நாம் எல்லாம் நிலை உயரவேண்டும். உலகம் செழிக்கவேண்டும். நல்லபடி வாழவேண்டும். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்றால், தினந்தோறும் காலை, மாலை ஓம் அகத்தீசாய நம என்று பன்னிரண்டு முறை நாமஜெபம் செய்ய வேண்டும்.
ஒரே மையக் கருத்தாக வைத்துப் பேசியிருக்கிறோம். அதே சமயம் அதிக கவிகளைப் பயன்படுத்தவில்லை, தத்துவங்களைப் பற்றிப் பேசவில்லை.
மனித நிலை உயர்வதற்காக கருத்துகளை சொல்லியிருக்கிறோம். இதைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரே மையக் கருத்து என்றாலும் கேட்டால்தான் புரியும். கேட்டு ஆசான் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லி இத்துடன் முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171780
Visit Today : 22
Total Visit : 171780

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories