சித்திரா பௌர்ணமி மற்றும் மகான் அகத்தியர் கோவில் குடமுழுக்கு விழாவின் போது அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்,
இந்த சங்கம் பல நற்காரியங்களை செயல்களை செய்து வெற்றி பெற்றிருக்கிறது. ஆயிரத்தெட்டு திருமணம் என்று சொல்லி, ஆயிரத்தி நூற்றி ஐம்பது திருமணம் செய்திருக்கிறோம். காரணம் இந்த சங்கம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறது.
இந்த சங்கம் சில கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஐயா என்று கேட்டால், இத்தனை காரியத்தையும் கருணை, ஜீவதயவைக் கொண்டுதான் செய்திருக்கிறோம்.
எனவே தயவு, அன்பு, கருணை, அருள், அருள் சிந்தை, அன்பு சிந்தை அல்லது இரக்கம் காட்டுதல் இவையெல்லாம் ஒரே பொருளைத்தான் குறிக்கும்.
அந்த அருளைக் கொண்டுதான் எல்லா காரியங்களையும் செய்திருக்கிறோம். இங்கு மலேசியாவில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அன்பர்கள் வந்திருக்கிறார்கள்.
இவர்களிடம் நாம் அன்பு காட்டுகிறோம். அவர்களை மதிக்கிறோம். பிறரை மதிக்கக் கற்றுக் கொண்டோம். தயை சிந்தை உள்ளவர்களுக்குத்தான் இந்த பண்பு இருக்கும். ஏனென்றால் அவன் எவ்வளவு பணம் கொடுத்தான். இவன் எவ்வளவு பணம் கொடுத்தான். என்ன வரவு செலவு? என்று தயை சிந்தை இல்லாதவன் பார்ப்பான்.
வரவை எதிர்ப்பார்ப்பவன் தயை சிந்த உள்ளவனாக இருக்க மாட்டான். இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் கொடுக்க வேண்டியதில்லை. ஆகவே இன்று நடந்த விழாவில் கலந்து கொண்ட மலேசிய அன்பர்களுக்கும் தமிழ்நாட்டு அன்பர்களுக்கும் நீடிய ஆயுளும், குறைவில்லா செல்வமும் உண்டாக மனமார வாழ்த்துகிறேன். அவர்கள் செய்த தொண்டுக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் திருவடியை போற்றுகிறேன்.
தயை சிந்தைதான் ஒரு மனிதனை கடவுளாக்கும். தயை சிந்தை உள்ளவன் லோபியாக இருக்க முடியாது. தயை சிந்தை உள்ளவன் புலால் உண்ண மாட்டான். தயை சிந்தை உள்ளவன் ஜாதி வித்தியாசம் பேச மாட்டான். அவன் பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வான். தயை சிந்தை உள்ளவன், அன்புணர்ச்சி உள்ளவன், கண்ணோட்டம் உள்ளவன் ஆக இவர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சு, செயல் எல்லாம் தூய்மையானதாக இருக்கும்.
அருள் இல்லாதவனுக்கு அறிவு கிடையாது. அறிவு இருந்தால் அந்த அறிவு மென்மையாக இருக்க வேண்டும். பல பேருக்கு அறிவிருக்கு. அந்த அறிவைக் கொண்டு நவீன பொருளை செய்கிறான். ஆனால் அந்த நவீன பொருளை செய்பவன் மிகக் கடனமாக பேசுவான். காரணம் அவனிடம் தயை சிந்தை இல்லை. அவனிடம் உள்ள அறிவு மரத்திடம் உள்ள அறிவு. அதில் இனிமையில்லை. தயை சிந்தையை மூலதனமாகக் கொண்டுதான் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கே பல்லாயிரக்கணக்கானவர்கள் பசியாறியதற்கு காரணம் தயைசிந்தைதான். ஐந்தாயிரம் பேர் சாப்பிட்டுள்ளார்கள். என் சிந்தை முழுவதும் எவ்வளவு பேர் பசியாறினார்கள் என்பதில்தான் இருக்கும். ஒரு பக்கம் இனிமையாக பேசுவோம். தூய மனதோடு பேசுவோம். இங்கே வருபவர்களிடம் கையையும், பையையும் பார்க்க மாட்டோம். ஒரே வார்த்தை எல்லோரிடமும் அன்பு காட்டுவோம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியாற வேண்டும். அதற்கு சாப்பாடு சுவையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் விரும்பி உண்பார்கள். இப்படி எல்லோரும் பசியாற வேண்டுமென்று எண்ணுகின்ற அறிவு யாருக்கு வரும்? லோபிக்கு வருமோ? வராது.
ஆக எல்லாம் பசியாற வேண்டுமென்ற சிந்தைதான் ஒருவனை கடவுளாக்குகிறது. இதுபோன்ற சிந்தை எப்பொழுது வரும். ஆசானிடம் வேண்ட வேண்டும்.
தக்க ஆசான் இல்லையென்றாலும், ஆசான் இராமலிங்க சுவாமிகளே! நான் பிற உயிர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். எனக்கு ஜீவதயவு வேண்டுமென்று கேட்க வேண்டும். ஏன் ஜீவதயவு வேண்டும். வேறு எதனாலும் கடவுளை அடைய முடியாது? ஜீவதயவு அல்லது ஜீவகாருண்யம் என்ற மூலதனம் இல்லாதவன் கடவுளை கண்டிப்பாக அடைய முடியாது. குடும்பத்தலைவனுக்கு ஜீவகாருண்யம் இல்லையென்றால் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது.
குடும்பத் தலைவன் காமுகனாக இருந்தால், அவன் மனைவி பாவம்! மனைவியைப் பற்றி உணர்கின்ற அறிவு அவனுக்கு இருக்காது.
மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிறாள். அதைக்கூட புரிந்து கொள்ளக்கூடிய அறிவில்லை. எனவே மனைவி மேல் தயவு இல்லையென்றால் அது அறிவாக இருக்க முடியாது. அப்ப மனைவியின் முகத்தைப் பார்த்தே தன்னைத்தான் கட்டுப்படுத்திக் கொள்கின்ற ஆற்றல் ஜீவகாருண்யத்திற்குத்தான் உண்டு. தாய் தந்தை இருந்தால் அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். அவர்கள் மீது கருணை காட்டுவதென்பது சாதாரண விஷயமில்லை. அவர்கள் நல்லபடியாக இருக்கும் போது, அவர்களிடம் அன்பாக பேசுவார்கள். ஆனால் நோய்வாய்ப்பட்டால் அவர்களை உதாசீனப்படுத்தி விடுவார்கள்.
எனவே அவர்கள் வினைப்பயன் அவ்வாறு இருந்தால் என்ன செய்ய முடியும்? அவன் இளமையில் இருந்தபோது, பிறரிடம் தயவுடன் இருந்தாலல்லவா? மகன் இப்போது தயவு காட்டுவான்.
மனிதன் தயை அடைய வேண்டும், மோட்சம் அடைய வேண்டும். அதற்கு தேவை தயை சிந்தை, தயவு, ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் என்பதற்கு கருணை காட்டுதல் என்பது பொருள். இந்த சங்கத்தில் இருப்பவர்கள், எல்லோரும் எல்லா வகையான நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். இந்த சங்கம் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம், அன்பர்களின் உழைப்பும், அபார முயற்சியும்தான்.
அன்பர்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களுக்கும் நாம் துணையிருப்போம். பாவத்தை பொடியாக்குவோம், வாசி நடத்தி தருவோம்.
உலகத்தில் வாசி நடத்திக் கொடுக்கிற ஆற்றல் ஆசான் அகத்தீசருக்கு உண்டு. இவன் நல்ல தொண்டன். நல்ல பிள்ளை ஐயா! அவன் நீடு வாழ வேண்டுமென்று நாம் நினைத்தால், ஒன்பது கோடி ஞானிகளும் நல்ல பிள்ளையென்று சொல்வார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் பாராட்டுவார்கள். சரி செய்திட்டு போவென்று சொல்வார்கள்.
ஆக அடிப்படை எங்கள் மனது மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படி மனம் மகிழ்ந்து கொள்ளும்படி நடக்கும் அன்பர்கள் நிறைய பேர் இங்கே உள்ளார்கள். எனவே மனிதன் ஜென்மத்தை கடைத்தேற்ற வாய்ப்பிருக்கிறது. மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கு வாசிப்பயிற்சி அவசியமோ? மூச்சைக் கட்ட வேண்டுமோ? அங்கம் பிரளணுமோ? அலகு குத்திக்கணுமோ? பட்டினி கிடக்கணுமோ? இவையெல்லாம் தேவையில்லை.
நம்முடைய பேச்சால் பிறர் மகிழ்ச்சியடைய வேண்டும். நம்முடைய பார்வையால் பிறர் மகிழ்ச்சியடைய வேண்டும். ஆக கனித பார்வை, இனிமையான சொல் ஜென்மத்தை கடைத்தேற்றம்.
நம்மிடமுள்ள ஏதோ ஒரு உணவை, அந்த அன்போடு செய்து கொடுத்தால் அது ஜென்மத்தை கடைத்தேற்றும். தொண்டு செய்பவர் தொண்டை புரிந்து கொள்கின்ற அறிவில்லையென்றால், அவன் மனிதனல்ல மிருகம். இப்படி தொண்டை உணர்ந்து கொள்கின்ற அறிவெல்லாம் ஞானிகளை வணங்கினால்தான் வரும். ஒரு மனிதனுடைய செயல்பாடுகள் அவனுடைய மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் மனம் மகிழும்படியாக இருக்க வேண்டும். பிற உயிர்கள் மகிழ்ச்சி அடையஅடைய சிறப்பறிவு வரும். பிற உயிர்கள் பாவிபாவி என்று சொன்னால், நம்மிடம் உள்ள அறிவும் மங்கிவிடும். எல்லோரையும் நண்பனாக பார்க்க முடியாது. ஆசான் அகத்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ வணங்கினால் “ஏ! இவன் திருட்டு பயல் இவன் நம்ம ஆளில்லை” என்பார்கள். அதுதான் அருள் சிந்தை.
ஆசான் அகத்தீசரையோ, இராமலிங்க சுவாமிகளையோ, மாணிக்கவாசகரையோ வணங்கினால் அவர்கள் நம்மைச் சார்ந்திருந்து இவன் தகாதவன், இவனிடம் நெருங்கி பழகாதே! உன்னை வஞ்சித்து விடுவான் என்று உணர்த்துவார்கள். இங்கே உள்ள அன்பர்கள் எல்லோரும் உயர்ந்தவர்கள், நல்லவர்கள். நான் பொருள் பற்றுள்ளவனாகவும், காமுகனாகவும், ஜாதிவெறியுள்ளவனாகவும் அல்லது மதவெறியுள்ளவனாகவும் இருந்தால் அல்லது பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ளாதவனாக இருந்தால் இங்கே யார் இருப்பார்கள்?
பொருள் பற்றில்லாது இருக்க வேண்டும். ஜாதிவெறியில்லாது இருக்க வேண்டும். லோபியாக இல்லாது இருக்க வேண்டும். தயையே வடிவாக இருக்க வேண்டும். ஒரே நாளில் இதெல்லாம் வந்துவிடுமோ? மூச்சைக்கட்டினால் வருமோ? வேறுவகையான பேச்சினால் இந்த வாய்ப்பு வருமோ? வராது.
காலையில் எழும்போதே, ஐயனே! அகத்தீசா நீர் எந்த கொகையை கடைப்பிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றி கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னை சார்ந்திருந்து உணர்த்தினாலன்றி எனக்கு அந்த தயவு வராது என்று வணங்கி கேட்க வேண்டும்.
ஆசான் அகத்தீசர் தயை வடிவானவர், கருணை வடிவானவர், அன்பையே வாழ்வாக கொண்டவர், அருளையே வாழ்வாக கொண்டவர், இரக்கத்தையே வாழ்வாக கொண்டவர், கண்ணோட்டமே வாழ்வாக கொண்டவர், பரிவுகாட்டுவதையே வாழ்வாக கொண்டவர், பண்பையே வாழ்வாக கொண்டவர். ஆக அப்பேர்ப்பட்ட ஆசான் அகத்தீசரை கேட்டுதான் தயவை பெற வேண்டும்.
எனவே தயவுதான் ஒரு மனிதனை கடவுளாக்குகிறது. அந்த தயவுள்ளவர்களிடம்தான் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். பண்புள்ள மக்களின் தொடர்பு இருந்தாலன்றி இந்த தயவுள்ள வாழ்க்கை வராது. ஞானிகள் யாரும் கடுமையான வாழ்க்கை வாழ்ந்து ஞானிகள் ஆகவில்லை. நாளுக்குநாள், நாளுக்குநாள் தயவு சிந்தை காட்டுவார்கள். பார்வையில் கருணை, பேச்சில் கருணை, செய்கையில் கருணை, சிந்தையில் கருணை ஆக இந்த கருணையே அவர்களின் இதயத்தை நாளுக்குநாள் கனிந்த கனியாக செய்தது.
வறண்ட இதயம் கனிய வேண்டும். அந்த இதயம் கனிவதற்கு தலைவன் ஆசி வேண்டும். தலைவன் எப்ப அருள் செய்வான்? வணங்கியவுடனே அருள் செய்ய மாட்டான். உயிர்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்கொலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி. உயிர்க்கொலை செய்தவன் ஞானிகளை வணங்கினால் ஞானிகள் திரும்பிக் கூட பார்க்காமல் அப்படியே போய்விடுவார்கள். ஞானிகளை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் கருணையே வடிவானவர்கள். கருணையே வடிவான ஞானிகளுக்கு எல்லாம் தெரியும்.
மகான் அகத்தீசர் இந்த உலகத்தில் உள்ள ஒன்பது கோடி ஞானிகளுக்கும் ஆசான். மானிடர்களின் வன்மனம், குணக்கேடுகள் பற்றி எல்லாம் அவருக்குத் தெரியும். அவரை வணங்கி ஆசி பெற வேண்டும்.
ஐயா என்னிடம் என்ன குறை உள்ளதென்று எனக்கு தெரியவில்லை. இந்த தயவுதான் மனிதனை உயர்த்துமென்று சொல்லுகின்றீர். அந்த சிந்தை எனக்கு வரவில்லை. நான் தயவுடன் வாழ வேண்டும். அதற்கு உன் திருவடியை நாடுகின்றேன். கருணை பொருந்திய வாழ்வு வாழ, அன்பு பொருந்திய வாழ்வு வாழ அருள் பொருந்திய வாழ்வு வாழ அத்தகைய தயவை பெறுவதற்கு உன் திருவடியை நாடுகின்றேனென்று ஆசான் அகத்தீசர் திருவடி பணிந்து கேட்க வேண்டும்.
முன் செய்த வினையே வன்மனமாக, கோபமாக, பொறாமையாக இருக்கிறது. ஆக பொறாமை, பேராசை, வன்சொற்கள், கடியசொல், கோபம் போன்ற குணக்கேடுகள் மனிதனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது. ஆக பொறாமை, ஆசை, கோபம், வன்சொல் அல்லது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்று சொல்லப்பட்ட நான்கு குணக்கேடுகளும் அருள் இல்லாதவனுக்குத்தான் வரும். இந்த நான்கு குணக்கேடுகளும் பிறவியைத் தந்து கொண்டே இருக்கும்.
இதை எப்படி வெல்வது? பயிற்சியாலே வெல்ல முடியுமா? முடியாது. புலால் உண்ணாமலும், உயிர்கொலை செய்யாதிருக்க வேண்டும். இதுவரை செய்திருக்கலாம் குற்றமில்லை மாற்றிக்கொள்ளலாம்.
தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காக தேனொழுக பேசுவான். அப்படியே ஏதோ கருணை வள்ளல்போல் கருணை மழையாக பொழிவான், தத்துவமெல்லாம் பேசுவான். நல்ல சொற்களை அளவுடனும், சொல்வன்மையுடனும் பேசுவான். ஆனால் அவனிடம் பசிக்கிறது, சோறு போடென்றால் துரத்திவிடுவான். இவனது சொல்லிற்கும், செயலிற்கும் சம்பந்தமே இராது. இவனது யோக்கியதைப் பற்றி மகான் அகத்தீசருக்கும் தெரியும்.
பசியாற்றக் கூடிய எண்ணம் வந்ததுபோல் நடித்தால் தயவு வந்துவிடுமா? ஒருவேளை விளம்பரத்திற்காக ஒருவன் அன்னதானம் செய்தால், அது ஆசானுக்குத் தெரியும். தம்பி! யாரிடம் நடிக்கிறாய். என்ன நடிக்கிறாய் நீ. விளம்பரத்திற்கு அன்னதானம் செய்கிறாயா என்பார் ஆசான். அவருக்கு எல்லாம் தெரியும்.
சிலர் விளம்பரத்திகாக அன்னதானம் செய்கிறோம் என்று சொல்லி, ஊர் முழுக்க பிரம்மாண்ட விளம்பரம் செய்துவிட்டு, பசியாறுவதற்காக எல்லோரும் வந்தாலும், தலைவர் வரவில்லை, அவர் வரவில்லை, இவர் வரவில்லை என்று காலம் தாழ்த்தி மதியம் மூன்று மணிக்கு மேலும் சோறு போடாமல் பட்டினியாக கிடக்க விட்டு, கடைசியில் அவர்கள் வரவில்லை. அதனால் அன்னதானம் இல்லையென ஏமாற்றுவான், இப்படி எல்லோரையும் பசியுடன் திருப்பி அனுப்புவான், அடுத்த ஜென்மத்தில் சொறி பிடித்த நாயகத்தான் பிறப்பான் என மகான் அகத்தியர் கூறுகிறார்.
இன்னும் சிலர் நூறு பேருக்கு சமைத்துவிட்டு, பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டுவார்கள். அந்த நூறு பேரும் யாரென்றால், அவனும் அவனது உறவினர்களும் ஆகும். அவர்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு, பஞ்சபராரிகளுக்கு இல்லையென்று கூறிவிடுவான். அவர்கள் பாவம். அவர்களால் என்ன செய்ய முடியும்? அந்த பஞ்சபராரிகள் வயிறெரிந்தால் அன்னதானம் செய்கிறோம் என்று கூறி ஏமாற்றிய அவன் குடும்பத்தையே நாசப்படுத்திவிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே சக்த்திக்குட்பட்டு கூட்டத்தை கூட்டி, ஆசானின் திருவடி பணிந்து அன்னதானம் செய்ய வேண்டும். வீண் விளம்பரம் செய்யக்கூடாது. சிலர் சங்கம் என்ற பெயரில், அன்னதானம் செய்கிறோம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி, பொருள் பறித்து விளம்பரம் செய்து, கடைசியில் பேருக்கு ஏதோ அன்னதானம் செய்வார்கள். அதிலும் ஒரு சில சங்கம், எதுவுமே செய்யாமல் வருகின்ற பொருளையெல்லாம் கைப்பற்றி ஊரை ஏமாற்றுவார்கள். இவர்களெல்லாம் ஒரு பிடி சோற்றுக்கு ஓடி ஓடி இறுதியில் சோறு கிடைக்காமல் பட்டினியால் வாடுவார்கள் என்பது ஞானிகள் சாபமாகும்.
ஒரு சிலர் ஆடு, கோழியை அறுத்து அதன் மாமிசத்தை சமைத்து, அன்னதானம் என்ற பெயரில் எல்லோருக்கும் கறி விருந்து வழங்குவார்கள். அன்னதானம் என்பது ஜீவதயவினை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இவர்களோ உயிர்க்கொலை செய்து, ஜீவதயவே இல்லாது ஒரு கொடூரமான செயலை, செய்துவிட்டு அதை அன்னதானம் என்று சொல்லி, தானும் பாவியாகி, மேலும் அந்த புலாலை உண்பவர்களையும் பாவியாக்கிவிடுவார்கள். புண்ணியம் செய்கிறேன் என்ற பெயரில் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் முன் செய்த வினைக் காரணமாகும்.
தக்க ஆசானிருந்து அவர் உபதேசித்திருந்தால், இதெல்லாம் தவறு என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள். முற்றுப்பெற்ற ஞானிகளான மகான் அகத்தியர் மகான் இராமலிங்க சுவாமிகள் போன்றோரை பூஜித்தால், இது போன்ற குணக்கேடுகள் நீங்கி இச்செயல்கள் பாவம் என்பதை அவர்கள் உணர்வார்கள்.
ஆக அன்னதானம் உணர்வு பூர்வமாக செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அன்னையே என் தாயினும் சிறந்த தயவுடைய தெய்வமே நான் மனமுவந்து அன்னதானம் செய்வதற்கு வாய்ப்பு தர வேண்டும், மனமுவந்து அன்னதானம் செய்வதற்கு வாய்ப்பு தர வேண்டுமென்று கேட்டால் ஆசான் அகத்தீசர் அருள் செய்வார்.
லோபித்தனம்தான் பிறவிக்குக் காரணமாக இருக்கும். இந்த லோபித்தனமே பாவத்தின் சின்னம். இந்த லோபித்தனமே காமமாகவும், சினமாகவும் இருக்கும். தயைசிந்தை உள்ளவனுக்கு லோபித்தனம் வருமா? வராது. தயைசிந்தை வளர்ப்பதற்கு ஞானிகளின் திருவடியை பூஜிப்பதுதான் உபாயமாகும். திருவடி பூஜைதான் அந்த வாய்ப்பைத் தரும். அதை ஓரிரு நாட்களில் பெற முடியாது. அதை அப்படியே வளர்க்க வேண்டும்.
ஆக இந்த தயை சிந்தையை எப்படி வளர்ப்பது?
உன் கையால் ஒரு ஆளுக்கு ஒரு நாள் சாப்பாடு போடு, சும்மா கதையெல்லாம் வச்சுகிட்டு இருக்காதே?
நல்ல மனசோடு ஒரு அஞ்சு இட்லி சுட்டு பொட்டலமாக கட்டி எடுத்துக்கோ. ஆசான் அகத்தீசர் திருவடியில் வைத்து வீழ்ந்து வணங்கு.
ஒரு ஏழைக்கு இந்த இட்லி பொட்டலத்தை கொடுக்க போகிறேன். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை மீண்டும் வீழ்ந்து வணங்கி அந்த இட்லி பொட்டலத்தை தொட்டு வணங்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது இட்லி சுவையாக உள்ளதா என்று சாப்பிட்டு பார்த்து பிறகுதான் ஏழைக்கு கொடுக்க வேண்டும். மாதம் ஒரு ஆளுக்கு இட்லி பொட்டலம் கொடு.
மாதம் ஒருவருக்கு ஒரு அஞ்சு இட்லி கொடுப்பதற்கு உன் மனசு இடம் தருதான்னு பாரு. இந்தப் பாவி மனம் இடம் தருமா? மீண்டும் பிறவிக்குக் காரணமான இந்த லோபித்தனம் உனக்கு இடம் தருமோ? தராது.
மலேசியாவில் அன்னதானம் செய்வதற்கு வாய்ப்பில்லை. வாய்ப்பில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். வாய்யா தமிழ்நாட்டிற்கு, கோவில், குளத்திலே உட்கார்ந்திருப்பான். ஓட்டலுக்கு போ, ஒரு அஞ்சு இட்லி வீதம் அஞ்சு பொட்டலம் கட்டி, உன் கையால அந்த ஏழைகளுக்கு கொடு.
அப்ப பாரு, அவனுடைய மலர்ந்த முகத்தை. அப்படியே மலர்ந்த முகத்தை காட்டுவான். தெய்வீகமான இடம். அங்கேதான் கடவுள் இரங்குவான். உன் கையால் கொடுக்கும்போது அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
இப்ப நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கொடுக்க கொடுக்கத்தான் தயை சிந்தை வரும். அப்பதான் தெளிவான அறிவு வரும். கொடுத்தாலன்றி தயைசிந்தை வராது. அதற்கு பயிற்சி வேண்டும். அப்ப பயிற்சி பெறுவதற்கு தலைவன் ஆசி வேண்டும்.
தமிழகத்தில்தான் ஒன்பது கோடி ஞானிகள் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் ஆசான் அகத்தீசன் ஆசியால் ஞானி ஆகியுள்ளார்கள். மனிதனாக பிறந்தால் அவன் மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அதைப் பெறுவதற்கு என்ன உபாயம்? தயுவுதான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அவர் திருவடியைப் பற்றி பூஜை செய்ய வேண்டும்.
ஆசான் அகத்தீசர் திருவடி, தயவு திருவடி. அவர் திருவடி ஆற்றல் பொருந்திய திருவடி. பாவத்தைப் பொடியாக்கும் திருவடி. அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய திருவடி, பண்பை வளர்க்கும் திருவடி. பாவத்தைப் பொடியாக்கும் திருவடி. ஆபத்தை நீக்கும் திருவடி. அன்பான திருவடி. இவர் திருவடியைப் பற்றினாலன்றி ஒருவனுக்கு தயைசிந்தை வராது. இந்த சங்கம் இந்த அளவிற்கு வளர்ந்ததிற்கு காரணம் தயை சிந்தைதான்.
தயை இல்லாதவனுக்கு ஞானமும் இல்லை, வாழ்வே இல்லையென்று ஆசான் சொன்னார். தயை இல்லையென்றால் அவன் நடமாடும் பிணம் என்றார். பணம் இல்லாவிட்டால் தயவு காட்ட முடியுமா? பணம் இல்லாதபோது என்ன செய்வது? அப்பதான் ஆசான் அள்ளி அள்ளி கொடுத்தார். தயை செய், ஜீவகாருண்யம் செய், தயை தொண்டு செய், அன்பு தொண்டு செய் என்று சொல்லி செல்வத்தைக் கொடுத்தார்.
ஆக ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால், புலால் மறுக்க வேண்டும். உயிர்கொலை செய்யாதிருக்க வேண்டும். காலை, மாலை தியானம் செய்ய வேண்டும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
யாரொருவன் பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறானோ, அவன் தயை சிந்தை உள்ளவனாக இருப்பான். எவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருந்தாலும் அவன் சாவான். அப்ப தன்னை உயர்த்தி நினைக்கிறவன் தயைசிந்தை உள்ளவனாக இருக்க முடியாது. எல்லோரையும் சமமாக நினைக்கும் பண்பு வேண்டும். இந்த நினைவு வருவதற்கு தயைசிந்தை வேண்டும். பண்புள்ள மக்களோடு பழக வேண்டும்.
ஆக ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்கள், தங்களிடம் வேலை செய்பவர்கள், தங்களை சார்ந்திருப்பவர்கள், தம் மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை போன்றவர்கள் மனம் மகிழும்படியாக நடந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் வரும் இன்ப துன்பத்தில் உனக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் உன் வீட்டில் உள்ளவர்கள். இவர்களிடம் அன்புடன் பேசாமல் வெளியில் உள்ளவர்களிடம் அன்பு காட்டுவது யாரை ஏமாற்றுகிற வேலை? அதற்காக பிறரிடம் அன்பாக பேசக்கூடாது என்று சொல்லவில்லை. உனக்கு துன்பம் வரும்போது கைகொடுப்பவர்கள், தாங்கிக் கொள்பவர்கள் உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் நீ அன்பு காட்டி அவர்களின் ஆசியைப் பெற்றுக்கொள்.
என் கணவர் உயர்ந்தவர், என் மகன் உயர்ந்தவன், என் அண்ணன் உயர்ந்தவர், என் முதலாளி உயர்ந்தவர் என்று இவர்கள் எல்லோரும் பாராட்டினால் அதுதான் ஜென்மத்தை கடைத்தேற்றும் என்பார் ஆசான் இதற்கு ஆசான் அகத்தீசன் துணை வேண்டும்.
ஆகவே நீங்களெல்லாம் ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும், தயை காட்ட வேண்டும். ஆசான் ஆசியை பெறப்பெற தயை சிந்தை வரும். தயை சிந்தை மேலோங்க மேலோங்க ஆசான் திருவருள் தானே வரும்.
தயவு என்பது கடவுள். இது தயவை கொண்டு பெருந்தயவை பெறுதல் என்றார். எல்லாம்வல்லவர் உலகத்தையும் ஆட்டிப்படைப்பவன் கடவுள்.
மலைபோல கல் இருக்கும். அதற்குள் தேரை இருக்கும். அந்தகல்லில் உள்ள தேரைக்கும் கடவுள் உணவு தருவான். அவ்வளவு பெரிய கருணை உள்ளவன். நாம வெளியில இருக்கிறவனுக்கு தயவு காட்ட முடியல. ஆனால் அந்த கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் தயவு காட்டுகிறான் என்றால் அவன் பெரிய தயவாளி. அவன் ஆசி பெறுவதற்கு சிறிய தயவு வேண்டும். எனவே நம்மை சார்ந்தவர்களுக்கு அன்பு காட்டி தினமும் தியானம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்று உங்கள் திருவடி பணிந்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.