ஞானத்திருவடி
மவுன நிலை மௌன நிலை அல்லது மோன நிலை என்றால் என்ன?
மோன நிலை – மூச்சு கற்று இயக்கத்தை நிறுத்தி வைப்பது
நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்து முப்பது வருடமாக,
யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஆசான் அகத்தீசரின் பெருமைகளைச் சமுதாயத்திற்கு சொல்லிக் கொண்டே வருகிறோம் .
இந்தச் சமுதாய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் .
மற்றவர்கள் நிலையில்லாத ஒன்றை இந்தச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள் . ஆனால் நாங்கள் மட்டும் முற்றுப்பெற்ற ஞானிகளை மட்டுமே சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவோம் . எப்பொழுதும் மகான்களையே சுட்டி காண்பிப்போம் . இதனால்தான் இன்றைக்கு ஒரு பெரிய கூட்டமே உருவாகியிருக்கிறது . உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்கின்ற கூட்டமாக உருவாகியிருக்கிறது . இதுதான் நாங்கள் செய்கின்ற தொண்டு .
உற்றகலை வாசிசிவ யோகத்தேகி – தேகி என்றால் சென்று , சார்ந்து , ஒன்றுபட்டு என்று பொருள்படும் .
வழியான துறையறிந்து மவுனங்கொண்டு – வழித்துறை அறியாமல் முன்னேற முடியாது .
ஒரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் , அதற்கு வழித்துறை வேண்டும் . வழிமுறையை அறியாவிட்டால் ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய ஊருக்குப் பல மணி நேரம் பயணம் செய்து சுற்றுவழியில் செல்வான் . வழித்துறை இது அல்ல . எந்த ஊர் வழியாகச் சென்றால் நேர்வழி என்பதை அறிந்து அதன் வழியாகச் செல்ல வேண்டும் . நேர்வழி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா , அதுதான் வழித்துறை . அதை அறிய வேண்டும் .
வழியான துறையறிந்து மவுனங்கொண்டு –
மவுனநிலை என்பதே சும்மா இருப்பது . வாய் மூடி இருப்பது மவுனநிலை அல்ல . மவுனம் என்பதே இயக்கத்தை அப்படியே நிறுத்தி வைப்பது . யோகிகள் அத்தனை பேரும் மூச்சுக்காற்று இயக்கத்தை அப்படியே நிறுத்தி வைக்கிறார்கள் . அதுதான் மோனநிலை , அதுதான் ஞானவாழ்வு . இந்த நிலை உள்ளம் உருகப் பூஜித்தால் அன்றிக் கிடைக்காது .
யோகி போன்று உடை அணிந்து கொண்டு , பசப்பு வார்த்தை பேசுவதை எல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் .
ஆசானை வணங்கி , ” நான் பாவிதான் , நான் இந்தத் துறையில் முன்னேற ஆசைப்படுகிறேன் . எனக்கு வேறு யாரும் துணையில்லை . என்னை முன்னேற்ற உங்களால்தான் முடியும் . நீங்கள்தான் அருள் செய்ய வேண்டும் ” என்று கேட்க வேண்டும் . இப்படிப் பூஜை செய்துதான் இந்தத் துறையில் முன்னேற முடியும் .
மோன நிலையை அறிந்துவிட்டால் , அவன் வழித்துறையை அறிந்துவிட்டான் என்று அர்த்தம் . மோனநிலை என்பது ரகசியத்தில் ரகசியம் , சூட்சுமத்தில் சூட்சுமம் . சூட்சும தீட்சை என்றும் சொல்வார்கள் .