ஞானிகள் பெருமை என்ற தலைப்பில் 14.11.1997 அன்று அருளிய அருளுரை



ஞானிகள் பெருமை
என்ற தலைப்பில் 14.11.1997 அன்று அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம
அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்
     ஞானிகள் பெருமையைப் பற்றி சொல்லுமாறு அன்பர்கள் கேட்டிருக்கின்றார்கள்.
     ஞானிகள் பெருமைகளை பேசவேண்டும். ஞானிகள், பெருமையை உணரச் செய்கின்றார்கள்.
     மகான் என்று ஒருவரை தெரிந்து கொள்வதே கஷ்டம். அவர் உண்மையான ஞானியா? இல்லை போலியா? இல்லை காமுகனா? இல்லை பொருள் வெறியனா? இவனிடம் சிறுமை குணம் இருக்கிறதா? இல்லை நடிக்கின்றானா? என்று அறிவதே கடினம். ஆனால் மகான் திருவள்ளுவர், “செயலைப்பார்த்து நீ தெரிந்துகொள்! செயல் நல்லபடி இருக்க வேண்டும். அப்போதுதான் யார் என்று தெரிந்து கொள்ளலாம்” என்பார். அதற்கு மகான் திருவள்ளுவரே சொல்வார்,
     கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
      வினைபடு பாலால் கொளல்.
                                                – திருக்குறள் – கூடாஒழுக்கம் – குறள் எண் 279
                அம்பு நேராக அழகா இருந்தாலும், அது கொலைக்கருவி என்றும், யாழ் வளைந்து இருந்தாலும், அது இனிமை தரக்கூடியது என்றும், இசைக்கருவி என்றும் சொல்லியிருப்பார்.
     ஞானிகளை அறிந்து கொள்ள முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் ஞானிகளை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும், இல்லையென்றால் கண்டுபிடிக்க முடியாது.
     
மத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார்தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்புகொண்டு
வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
பார்த்தால்உலகத்தவர் போலிருப்பார் பற்றற்றவரே.
                                             – மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 19
     
     உலகநடையில்தான் ஞானிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிப்பது கஷ்டம்.
     உலகநடையில்தான் ஞானிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் செயலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஞானிகளுடைய செயல் எப்போதுமே நாட்டு நலனை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். நாட்டு நலனை மையமாகக் கொண்டதே அவர்கள் சிந்தனை.
     அவர்களுடைய செயல், சிந்தனை அனைத்தும் அர்ப்பணித்தலாகவே இருக்கும். உலகை இரட்சித்தல் என்பார்கள். எல்லா மக்களும் நன்மை அடைய வேண்டுமென்றே ஞானிகள் எண்ணுவார்கள்.
     அதே சமயத்தில் ஞானிகளுடைய எண்ணம் உயர்ந்ததாக இருந்தாலும், பொருள் வேண்டுமல்லவா? தகுதியுள்ள மக்கள் பொருளை கொடுக்கவும், தொண்டு செய்யவும் வாய்ப்பை தருவார்கள். இதுபோன்ற ஞானிகள் இருப்பார்கள். எங்கேயாவது விசாரித்துப் பார்த்தால், அதுபோன்று ஒரு பண்புள்ள மக்கள், ஞானிகள் ஆசி பெற்றவர் இருப்பார், வாசி வசப்பட்டவர் இருப்பார். அவரைப் புரிந்து கொண்டு தொண்டு செய்தால், அப்போதுதான் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
     ஞானிகள், “காசாசை உள்ளவர்க்கு ஞானம் இல்லை” என்பார்கள். முதலில் காசாசை இருக்கக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, பிறரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது, பழி வாங்கும் எண்ணம் இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். இதையெல்லாம் ஆசான் நமக்கு உணர்த்துவார். இந்த பண்பு ஒரு ஜென்மத்திலா வரும்? பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தாலும், ஞானிகளின் ஆசியினாலும் ஒருவன் ஞானியாவான். அவன் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் நல்லவிதமாக நடக்கும்.
     இவர்களுக்கு எந்தத் தடையும் இருக்காது. இவர்களுக்கு, தடையில்லாமல் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம். காப்பாற்ற வேண்டும் அதுதான் அமைப்பு, அதுதான் முறை. சமுதாயத்தில் இவர்கள் தனது கடமையை செய்து கொண்டிருப்பார்கள். செயல் எல்லாம் உயர்ந்த செயலாக இருக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்கள். அதே சமயத்தில் உயர்ந்த பண்புள்ள தொண்டர்களை குவித்துவிடுவார்கள். முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்த மக்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். அறப்பணிகள் தடையில்லாமல் நடக்கும்.
     இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
      கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
      அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
      விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.
                                                – மகான் அருணகிரிநாதர் – கந்தர் அலங்காரம் – 100
                அன்பால் கெடுதல் இல்லாத அன்பர்களை சேர்த்திடுவார்கள். பார்த்தால், அற்புத செயல் நடக்கும். அற்புத செயலை வெறும் பணமா செய்யும்? ஆட்படை வேண்டுமல்லவா? பணம், தனி நபரை கூப்பிட்டு சோறு போடாது. எனவே பொருளையும் கொடுத்து, நூற்றுக்கணக்கான தொண்டர்களை கொண்டுவந்து குவித்துவிடுவார்கள். உண்மையான ஆன்மீகம் பரவ வேண்டும் என்பதற்காக, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாசி வசப்பட்ட ஒருவனுக்கு துணையாக இருப்பார்கள்.
     உண்மை ஆன்மீகத்தை தொண்டர்கள் பரவச் செய்வார்கள். இப்படிப்பட்டவர் நூறாண்டுக்கு ஒருவர்தான் வருவார்கள். அவர்களை புரிந்து கொண்டு சார்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஞானிகள் பெருமை பரவும். ஒருவன் ஞானி ஆகிறான் என்றாலே அவனுக்கு காசாசை இருக்காது. “காசாசை உள்ளவனுக்கு ஞானமில்லை” என்பார்கள். காமுகனுக்கு ஞானமில்லை. ஜாதி வெறி உள்ளவனுக்கும் ஞானமில்லை.
     சிறந்த பண்பாளனாக இருந்தால்தான் ஞானம் வரும். தியாக சிந்தை உள்ளவனாக இருக்க வேண்டும். இவன் என்ன அவ்வளவு பெரிய மனிதனா என்றால், இவனா செய்கின்றான்? அவனை முறைப்படுத்தியிருக்கிறார்கள். காயசுத்தி என்ற ஒன்று இருக்கின்றது. கபத்தை அறுத்து விடுவார்கள். கபத்தை அறுக்க வேண்டும்.
                செபமது செய்யத் தேகமுஞ் சித்தியாம்
                கபமது அறுத்துக் கருத்தையுள் ளிருத்தி
                உபநிட தப்பொருள் ளுண்டென நம்பி
                தபமது செய்யத் தானவ னாமே.
                                                – மகான் சட்டை முனிவர் 81 – கவி எண் 35
                ஒரு மனிதனுக்கு எமனாக இருப்பது கபம். காற்றை ஸ்தம்பித்து கபத்தை அருப்பதற்கென்று ஒரு பிராணயாமம். கனல் ஏறுவதற்கு ஒரு பிராணாயாமம். காயசுத்திக்கு ஒரு பிராணாயாமம். இப்படியெல்லாம் முறைப்படுத்தி, ஒரு பக்கம் அசுத்த தேகம் நீங்கி, கபத்தை அறுத்து விடுவார்கள். ஏன் இவனுக்கு இவ்வளவு நன்மை என்று கேட்டால், முன் ஜென்மத்தில் ஞானிகளுக்கு தொண்டு செய்திருக்கின்றான். பெருமையுற்ற தவத்தோனுக்கு இவன் வழுவாது தொண்டு செய்திருக்கின்றான். ஆகவே இவனைக் காப்பாற்ற வேண்டிய கடமை.
     ஞானிகளுக்கு தொண்டு செய்த பிள்ளைகள் அவர்கள். அதனால்தான் அவருக்கு எல்லா உதவிகளும் செய்வார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் ஆகும். அதற்காக சோர்வடையாமல் இருப்பதற்கு, கல்வியும் தருவார்கள்.
     ஆனால் இவரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் அந்த உலகநடை கல்வி வருமென்று சொல்லி, பள்ளிக்கூடத்திற்கு போகாமல் அடக்கி வைத்து, வறுமையை தருவார்கள், ஒருசிலருக்கு மட்டும், பக்குவம் வந்தபின் பிறகு கல்வி தந்து, அதனைச் சொல்கின்ற சிறந்த சொல்வன்மையையும் தருவார்கள்.
     இப்படி தந்து, தொண்டரையும் கொடுத்து, ஆண்டுகள் பல கடந்தாலும், தளர்ச்சி இல்லாமல், சோர்வு இல்லாமல், சலிக்காமல் இருக்க செய்வார்கள். அப்போது சலிப்பு வரக்கூடாது என்பதால், தொண்டர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள, பொருளதவி செய்வார்கள். அந்த காலக்கட்டத்தில்தான், ஞானிகளின் பெருமை பேசப்படும்.
     அப்போது, கூட இருக்கும் தொண்டனிடம் சொல்வார்கள். “ஏன் பணத்திற்காக பொய் சொல்கிறாய்? இது அவசியமா உனக்கு? இது உன் பிறவிப்பிணிக்கு மருந்தாகுமா? இல்லை இது உன்னைக் காப்பாற்றுமா? ஏன் இப்படி நாயாட்டம் அடித்துகொள்கிறாய்? ஏன் இப்படி போட்டு உழட்டிக்கொள்கிறாய்?” என்று கேட்பார்கள்.
    
     இல்லறத்தான்தானே? பொருளாதாரத்தின்மீது ஆசை இருக்கத்தான் செய்யும். பொருளாதாரத்தின் மீது ஆசை வரும் போதெல்லாம் ஞானியிடமிருந்து இந்த வார்த்தை வரும். “ஏன் உனக்கு இது? இது கருமம். யாரோ மனமுவந்து, கொண்டு வந்து கொக்டுக்கின்றான். அன்னதானம் செய் என்று சொல்வார்கள். இதில் நாட்டம் வைக்காதே! கடவுளுக்கு கோபம் வந்துவிடும். தாங்கமாட்டாய் நீ” என்று சொல்வார்கள்.
     இயல்பாகவே ஞானிகள் இவனை முதலில் பற்று இல்லாதவனாக ஆக்குவார்கள். காசு மீது பற்று இல்லாதவனாக ஆக்குவான். காசின் மீது ஆசை வந்தது என்றால், நிச்சயம் பாவியாகிவிடுவான் என்பது தெரியும். தலைவன் “என்னைப் பார்” என்பான். என்னைப்பார் லட்சக்கணக்கான ரூபாய் வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வருகிறது. எல்லாவற்றையும் நாட்டுக்கு பயன்படுத்துகிறோம்.
     நீங்களும் அப்படி இருந்தால்தான் தலைவனுடைய ஆசியைப் பெறலாம். ஆசான் நம்மைக் கைவிட மாட்டார். உணவுக்கும் உடைக்கும் நிச்சயம் அருள் செய்வார். தளர்ச்சி இல்லாமல் நீ தொண்டு செய். இதுபோன்று விடாமல் உபதேசம் செய்தால், கல்லும் கரையும், சொல்கின்ற முறையில் சொன்னால் கல்லும் கரையும். அப்படி அவனை முதலில் பக்குவப்படுத்தி, ஆசானை பூஜை செய்யச் சொல்வார்கள்.
     ஆசானை பூஜை செய்யும்போதே, “நான் தியாக சிந்தையோடு இருக்க வேண்டும். நான் பேராசை இல்லாதவனாக இருக்க வேண்டும். பொருள் பற்று உள்ளவனாக இருக்கக் கூடாது. பொல்லாத காமுகனாக நான் இருக்கக் கூடாது. நான் நல்ல பண்புள்ளவனாக வாழ வேண்டும்” என்று ஆசானை கேட்க வேண்டுமென்று பயிற்சி கொடுப்பான். அப்போதுதான் தியாக சிந்தை வரும்.
     தலைவன், வாசி நடத்திக் கொடுத்த தலைவன் கடவுள் தன்மை பொருந்தியவன். தலைவனிடத்து காம விகாரம் இல்லை, பொருள் விகாரம் இல்லை, பேராசை இல்லை. நல்ல குணப்பண்பு உள்ள தலைவனாக இருப்பார்கள்.
     தொண்டர்களுக்கு அந்த பயிற்சி கொடுத்துக் கொண்டே வருவார்கள். பயிற்சி கொடுக்க கொடுக்க பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத பண்பு வரும். தினம் தியானம் செய்வான். இந்த தொண்டர்கள் மூலமாகத்தான் ஞானிகள் பெருமை பேசப்படும். ஞானிகள் பெருமையை அவர்களாக நேரடியாக வந்து சொல்ல முடியாது. இருக்கின்ற தொண்டர்களின் துணை கொண்டுதான் அவர்கள் இந்த தத்துவத்தை பரப்ப முடியும். ஞானிகள் பெருமை பரவ பரவ, தியாக சிந்தை வரத்தான் செய்யும். இன்னும் ஒரு சில ஆண்டுக்குள்ளேயே, இங்கிருக்கும் அனைவருக்கும், பொருள் மீது நாட்டமில்லாமல் போய்விடும். அப்படியே யாரும் பொருள் கொடுத்தாலும், எனக்கு ஏன் கொடுக்கின்றீர்கள்? எனக்குள்ளது போதும். நான் இந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறேன்? நாளைக்கே இறந்தாலும், நிச்சயம் இல்லாத வாழ்க்கை இருக்கிறது.
     நான் இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்? இதன் மேல் எனக்கு ஒரு காலத்தில் நாட்டம் இருந்ததுதான். ஒரு காலத்தில், காசு இருந்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது. இதனால் பயன் இல்லை. ஆசிதான் முக்கியம். திருவருள் துணைதான் நமக்கு கை கொடுக்கும். இதெல்லாம் கை கொடுக்காது என்ற உணர்வு தலைவன் கொடுத்திருக்கின்றான். அப்படியே இரு. சில சந்தர்ப்பங்களில் சலனங்கள் வந்தாலும் சொற்குரு, அவ்வப்போது இடித்து இடித்து சொல்லி முறைப்படுத்துகிறான். ஆக ஞான வாழ்வு என்பதும், தியாக சிந்தை என்பதும் ஆசானால் உபதேசிக்கப்படுவதாகும்.
     தினம் தலைவனை பூஜை செய்ய வேண்டும். ஞானிகள் தன்னலமற்றவர்கள். இதை “அறவாழி அந்தணன்” என்று சொல்வார். தன்னலமற்ற தியாகிகளான ஞானிகளை பூஜை செய்தால்தான் இவனுக்கு தியாக சிந்த வரும். தியாக சிந்த என்பது சாதாரண விசயமல்ல. ஆனால் காந்தி போன்றவர்களுக்கு ஏதோ முன் செய்த வினியின் காரணமாக அவருக்கு தியாக சிந்தை இருந்தது. அவர் சிறந்த கல்வி அறிவுள்ளவர். பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத மனம் அவரிடம் இருந்தது.
     பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத மனமே ஒரு பெரிய அருள். அது பெரிய அருள்தான். ஆக பூஜை செய்கிறான். ஞானிகள் பெருமை இப்போது பரவுகின்றது. தொண்டர்களுக்கு தியாக சிந்த இருக்கிறது.
     மற்ற சங்கத்தில் எல்லாம், தலைமை தாங்குபவன், எப்படி வஞ்சனை செய்யலாம், எப்படி ஏமாற்றலாம் என்று தேனொழுக பேசுவான். கடவுளையே நேராக பார்த்ததாக பேசுவான். எல்லாம் அவன் திருவருளன்றோ! என்பான். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பான். உள்ளே ஏழெட்டு பேர், பேல்கட்டு புலி மூட்டை போல உட்கார்ந்து கொண்டு, நெய்யை ஊற்றி ஊற்றி குடிப்பான். ஆக தேனொழுக பேசி மக்களிடம் காசை வாங்கிவிடுவான். அந்த சங்க தலைவனிடம் பேச்சுத்திறமை இருக்கும், நன்றாக நடிப்பான். பார்த்தால் சாட்சாத் பரப்பிரம்ம சொரூபி போல இருப்பான்.
           மக்களையெல்லாம் கவர்ந்து மூட்டை கட்டுவான். ஆசான் அவனை பார்ப்பார். இவனையெல்லாம் நரகத்தில் கொண்டுபோய் போடு என்பார் . அப்படியே அவனை நரகத்தில் போட்டு விடுவான். பொது மக்களிடம் அடிக்கும் கொள்ளையை, ஊர் மக்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பான் பாவிகள். அவர்கள் முகத்திலேயே விழிக்கக் கூடாது.
    
     மகான் கருவூர் முனிவர் சொல்வார், அதோ வருகிறான் பார், ஒரு சாது வருகிறான் பார், புலித்தோல் வைத்திருக்கின்றான், கமண்டலம் வைத்திருக்கின்றான், பார்த்தால் பரப்பிரம்மம் மாதிரி இருப்பான், அவன் முகத்தில் விழித்திடாதே. முகத்தை பார்த்தாயானால் முன்னூறு நாளைக்கு பாவம் வந்துவிடும். அவன் பாவத்தை சுமக்கவே வந்திருக்கின்றான்.
    
     அரசாங்கம் சரியாக இருந்தால் அவனை கட்டுப்படுத்திவிடுவான். நீ போய் அவனிடம் மோதாதே! தவத்திற்கு இடையூறு வரும், அவனெல்லாம் கொலைக்காரன். கழுத்தை நர நறவென நசுக்கி கடித்தே கொன்றுவிடுவான். இப்படியெல்லாம் செய்தி வரும்.
     அரசு சரியாக இருந்தால் அவர்களுக்கு தலைவன் சொல்வார். ஐயா! எங்களுக்கு இந்த நாட்டில் உண்மையான ஞானிகள் யாரென்று தெரியவில்லை. நீர் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நாங்கள் என்ன செய்வோம், யாரப்பா என்று கேட்போம். இவன் சுத்த மடையன். இவன் எந்த அளவிற்கு நாட்டில் இருக்கின்றானோ, அந்த அளவிற்கு நாடு பாழ்படும் என்று அரசாங்கத்திடம் சொல்வோம்.
     இவன் கையிலிருந்து இந்த மான் தொலை வாங்கிக் கொள், இந்த யோகத்தண்டை வாங்கிக் கொள், யோகத்தண்டை அடுப்பு எரிக்க வைத்துக் கொள்ளலாம். மான் தோல் என்பது இவன் உயிர்வதை செய்திருக்கின்றான்.
     மான்தோலை இவன் தொட்டதனாலே, துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் போடு என்றான், இவன் கட்டியிருக்கும் காவியை யாரும் தொடக்கூடாது. அவ்வளவு அசூசையானவன். அவ்வளவு பெரிய பாவி.
     அதை நெருப்பில் போட்டு பொசுக்கிவிடு. அவன் கட்டிய காவி உடையும், அவன் வைத்திருந்த மான் தோலும், யோகத்தண்டும் நெருப்பில் போட்டு பொசுக்கு. அப்படி பொசுக்கினால்தான் ஊர் உலகம் செழிக்கும். இதை அரசாங்கம் செய்யணும். அந்த காலம் வரப்போகுது. நிச்சயம் வரும்.
     எவர் ஞானி? எவன் அஞ்ஞானி? என்பது தெரியவில்லை. ஞானிகள் பெருமையை பேசுதலைப் பற்றி அன்பர்கள் கேட்கிறார்கள்.
     தியாக சிந்தை இல்லாத ஒரு இழிவான மக்களைப் பற்றி திருக்குறளில் கயமை என்ற 108வது அதிகாரத்தில் இருக்கு. கயமை – கயவர்கள், சண்டாளப்பாவிகள். இவர்களை நாங்கள், இனம் கண்டு கொள்வோம், தெரியும் எங்களுக்கு, இரண்டு நிமிடம் அவனிடம் பேசினால் இவன் சமுதாயத்தை வஞ்சிக்கின்றவன் என்பதை கண்டுபிடித்துவிடுவோம்.
     நாங்கள் பக்திமானையும் அறிவோம். அவர்கள் யார் பேசினாலும் பேச மாட்டார்கள். அவர்களை அதிதிகள் என்று சொல்வார்கள். அப்படியே போவான், “அம்மா பசி” என்று கேட்பான், கொடுத்தால் சாப்பிடுவான். இல்லையென்றால், ஆசான் சுப்பிரமணியரிடம் “நீர் பார்த்து எனக்கு செய்” என்று கேட்பான்.’
     அவர்களெல்லாம் கடவுள்மேல் மிகுந்த பக்தி உள்ளவர்கள். பொய்யே சொல்ல மாட்டார்கள். ஊர் ஊராக போய்க்கொண்டிருப்பார்கள். ஆசிரமம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆங்காங்கே கை நீட்டி யாசகம் கேட்டு, சாப்பிட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள், நலிந்தவர்கள். அதிதிகள் கடவுள்பக்தி உள்ளவராக இருப்பார்கள், பொய் பேசமாட்டார்கள். காசு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்கள்பாட்டுக்கு ஆங்காங்கே சாப்பிட்டுவிட்டு கோவிலில் படுத்துக் கொள்வார்கள் பின்பு சென்று விடுவார்கள்.
     அவர்களைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும். இது போன்று கயவர்களைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும். இனம் கண்டுபிடிக்க எங்களால் முடியும். அரசாங்கம் இருக்கிறது. அவர்கள் கேட்கும்போது சுவடியில் சொல்வார்கள். குடிலாசானிடம் போய் ஆசி பெற்றுக்கொள் என்று சொல்வார்கள். அவர்கள் எங்களிடம் வந்ததும் நாங்கள் அவர்களுக்கு சொல்வோம். குடிலாசான் இதுபோன்ற திட்டம் சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வார்கள்.
     ஆக, அதிகாரிகள் அரசாங்கத்திலிருந்து வரும்போது நாங்கள் அவர்களுக்கு சொல்வோம். அதற்குரிய நேரம் வரும்போது அது தெரியும். ஆக அதற்கான நேரம் வந்துகொண்டிருக்கு. ஆசான் இறங்கி விடுவார், அது தெரியும் எங்களுக்கு. உண்மை ஆன்மீகத்தையும், ஞானிகளையும் அறிமுகப்படுத்துவது நம் கடமையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் செய்யவில்லையென்றால் யார் செய்ய முடியும்?
      ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
      ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
      ஞானிக ளாலே நரபதி சோதித்து
      ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
                                                                – திருமந்திரம் – இராசதோடம் – கவி எண் 242
                இதுபோன்ற கயவர்களை நாங்கள் இனம் கண்டுபிடித்துவிடுவோம். கண்டுபிடித்து அரசாங்கத்திடம் சொல்வோம். இவர்கள் இந்த நாட்டில் எத்தனை நாள் இருந்தாலும் சரி, அத்தனை நாளும் நாட்டில் பாவம் சூழும், பருவ மழை தவறும். பருவமழை தவறுவதற்குக் காரணம் இந்த பாவிகள்தான் வஞ்சகன் இருக்கிறான்.
     அதே சமயத்தில் பொய் சொல்கிறவன் இருக்கிறான். அவனையெல்லாம் கடவுள் மன்னித்துவிடுவான். பொய் சொல்பவன், கள்ள மார்க்கெட் செய்பவன், கலப்படம் செய்பவன், கள்ளநோட்டு மாற்றுபவன், கள்ள நோட்டு அச்சடிபவன், போதைப்பொருள் கடத்துபவன் அத்தனை பேரையும் கூட கடவுள் மன்னித்துவிடுவான்.
     ஆனால் இவனை ஏன் மன்னிக்கக் கூடாது என்று கேட்டான். அவன் ஏதோ சாப்பாட்டிற்கு செய்கிறான். இவன் வெகுபேரை, ஆன்மீகவாதிகளை வெகு ஆன்மீகவாதிகளை கெடுத்துவிடுவான் பாவி. அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பஸ்தனை கெடுத்துவிடுவான் பாவி. பேசுவதெல்லாம் பொய்.
     ஞானிகள் பெருமையை பேச வேண்டுமென்று அன்பர்கள் கேட்டார்கள். ஞானிகள் பெருமை பேசப்பட வேண்டும். நம் சங்கம் செய்யத்தான் போகிறது. என்ன காரணம் அவ்வளவு வல்லமை எப்படி வந்தது என்றால், வாசி வசப்பட்டதால் அந்த ஆற்றல் உண்டு. அதற்கு ஆசானை கேட்கிறோம்.
     ஏனப்பா, அரசாங்கத்திலிருந்து அதிகாரிகள் வருவார்கள். அப்போது நாம் தொண்டு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இப்போது நாம் இறங்கக் கூடாது. எப்போது இறங்குகிறோம் என்றால், 99 ஏப்ரல் மாதம் இருக்கலாம் அல்லது அதற்கு முன்னும் பின்னும் இருக்கலாம்.
     வாசி வசப்பட்டதனால் பூட்டு திறக்கும் காலம் வருகின்றது. அந்த காலத்தில்தான் நாங்கள் இறங்கி செயல்படுவோம். இப்போது நாங்கள் பேசமாட்டோம். இப்ப நாங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த காலம் வரும்போது நாங்களே பேசுவோம்.
     ஆக, நாம் இதை செய்யவில்லை என்று சொன்னால் கடவுள் நமக்கு ஆசி தந்ததும், வாசி நடத்திக் கொடுத்ததும் இவ்வளவு பெரிய சங்கத்தை உருவாக்கியதும், தொண்டர்களை உருவாக்கியதும், ஞானிகள் பெருமையை பேசத்தான், அராஜகத்தை அழிக்கத்தான்.
     நீங்கள் என்னமோ என்று நினைத்து விடாதீர்கள். என்ன இவ்வளவு திடகாத்திரமாக பேசுகிறீர்கள் என்றால், அராஜகத்தை அழிக்கத்தான் வந்திருக்கிறோம்.
     நம் சங்கம் அதற்குத்தான் வந்திருக்கிறது. நம் சங்கத்தார் அதற்குத்தான் வந்திருக்கிறார்கள். அவன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நமக்கு கடுகு மாதிரி இருப்பான் அவன்.
     எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. நம் சங்கத்தார்க்கு ஒரு கடுகு. ஒரு தூசு மாதிரி நாங்கள் நினைப்போம். இவ்வளவு வல்லமை எப்படி வந்தது என்றால், ஆசான் ஞானபண்டிதனால் வந்தது.
     இந்த வல்லமை எப்படி ஐயா வந்தது? என்று கேட்டான். பொருளை விரும்ப மாட்டோம், பொய் சொல்ல மாட்டோம், வருகின்ற பொருளாதாரத்தை நாட்டு மக்களுக்கு அப்படியே பயன்படுத்துவோம். பஞ்சபராரிகளுக்கு தாய் போன்று இருப்போம். தினமும் தியானம் செய்வோம்.
     நாம் மட்டுமல்ல, நம் தொண்டர்களுக்கும் அந்த வல்லமை உண்டு. நம் தொண்டர்களை கண்டாலே, நம் தொண்டர்களை பார்த்து சென்றாலே போதும், கலக்கம் தீரும், மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றியாகும். என்ன காரணம் என்றால், முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாக, இந்த வாய்ப்பு. அதனால் நம் தொண்டர்களை கண்டாலே போதும்.
     இங்கிருக்கும் அத்தனை பெரும் ஞானியாவார்கள். சத்தியமாக சொல்கிறோம். அவ்வளவு பெரிய வல்லமை உள்ள சங்கம். அதனால்தான் அரசாங்கம் வரத்தான் போகிறது. நாம் சொல்லத்தான் போகிறோம்.
     ஆக, ஞானிகள் பெருமை பேசப்படுகின்ற காலம் வந்துவிட்டது.
     ஞானிகள் அத்தனை பேரும், யோகிகள் மட்டுமல்ல தியாகிகள். தியாகிகள்தான் யோகிகளாக மாற முடியும். ஏன் தியாகி என்று சொன்னோம்? எல்லாவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணம் செய்யக் கூடியவர்கள். பொய் பேசமாட்டான். தூய மனது உள்ளவன். தூயமனதுதான் தன்னை அர்ப்பணிக்கும். அப்போது தியாகிதான் யோகி ஆகிறான். இப்ப இந்த பண்புகள் எப்ப வரும்?
     தொண்டர்களுக்கு தன்னை அர்ப்பணிக்க கூடிய பண்புகள் எப்போது வருமென்றான்? நாங்கள் சொல்லிக் கொடுப்போம். ஆசான் அகத்தீசரை பூஜை செய்யும்போதே என்னிடம் இருக்கும் குணக்கேட்டை அடியேன் அறிந்து கொள்ள நீர் அருள் செய்ய வேண்டும்.
     அப்படி குணக்கேடுகளைப்பற்றி தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நீக்கிக் கொள்வதற்கு அருள் செய்ய வேண்டும். உன் திருவடியைப் பற்ற நீர் எனக்கு வாய்ப்புத் தர வேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்க சொல்வோம்.
     நான் அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். எங்களுக்கு செல்வம் பெருக வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும்.
     இது போன்ற தலை சிறந்த கொள்கைகளை கடைப்பிடிக்க நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென கேட்க வேண்டும்.
     கோடீஸ்வரனாக இருந்தவனெல்லாம் என்ன ஆனான் என்பது தெரியுமா? பல கோடி பணம் வைத்திருந்தவனெல்லாம் எங்கே போனான்? ஒரு கோடியில் இறந்து போனான். பெரிய இந்திய கோடீஸ்வரன் ஒருவன் பிரிட்டனில் ஒரு பாலத்தில் போகும்போது இறந்து போனான். ஆக, கோடி கோடியாக இருந்தாலும் ஒரு கோடியில் போய் மூச்சு விடுவான். சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி எமனுக்கு ஒரு கடுகு போன்றவன்.
     ஆக பொருளாதாரத்தைக் கண்டு மயங்காமல், தினம் தியானம் செய்து கேட்க வேண்டியதை கேட்கணும், பெற வேண்டியதை பெற வேண்டும். யாரைக் கேட்கணும்? என்ன கேட்கணும்? என்பதை நாங்கள் சொல்லிக் கொடுப்போம்.
     நாங்கள் இப்படித்தான் கேட்கிறோம். மாதம் பத்து லட்சம், பதினைந்து லட்சம் வந்து சேர்கிறதல்லவா! நாட்டு மக்களுக்கு பயன்படுத்துகிறோமல்லவா!
     என்னைப்பார், நான் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று பார். இந்த கொள்கையை நீ கடைப்பிடி. ஆசான் உன்னை கைவிடமாட்டார். பின்னாடி என்ன செய்வது என்றால், இன்று என்னை பார்த்தாயல்லவா? எனக்கு பின்னாடி ஏதோ ஆகும், காசு வேண்டும் என்று நினைக்கின்றேனோ! திருவருள் இருக்கல்லவா! கடைசி வரையிலும் காப்பாற்றுவான் அல்லவா!
     கோடீஸ்வரனாக இருந்தவனை திண்ணையில் போட்டிருப்பார்கள். ஒரு கோடீஸ்வரனுக்கு, பேரப்பிள்ளை, மகன், மகள் என்று குடும்பத்தினர் பத்து பதினைந்து பேர் இருப்பார்கள். எல்லோரும் இருப்பார்கள், அவன் திண்ணையில் இருமிக்கொண்டு கேட்பாரற்றுக் கிடப்பான். என்ன காரணம்? கோடீஸ்வரனாச்சே?
     ஆனால் இங்குள்ள தொண்டர்களுக்கு கடைசி வரையிலும் உணவு உடை பாதுகாப்பு தந்து, முதுமை வந்தாலும், கூடவே அன்பர்கள் இருந்து காப்பாற்றுவார்கள். பத்து பதினைந்து பேர் கூடவே இருப்பார்கள்.
     பேரப்பிள்ளைகளும், மகனும், மகளும் இருந்தும், திண்ணையில் கிடக்கும் இவனை ஒருவரும் எட்டி கூட போய் பார்க்க மாட்டார்கள், நாறிக்கிடக்கும். கோடீஸ்வரன் நாறிக்கிடப்பான் கட்டிலிலே!
     ஆசான் ஆசி பெற்றதனால், சிறந்த அறிவும் உடல் ஆரோக்கியமும், துன்பம் வந்தால் தாங்கிக் கொள்கின்ற தொண்டர்களும் இருப்பார்கள். ஆகவே, பண்புள்ள தொண்டர்கள் தியாக சிந்தையாலும். ஞானிகளின் பெருமையாலும் கிடைக்கும். தொண்டர்களுக்கு இந்த வாய்ப்பு இருக்கிறது.
     ஞானிகள் பெருமையை பேசுகின்ற காலம் வந்துவிட்டது. ஆகவே தலைவன் இறங்கிவிட்டான். தலைவன் வந்துவிட்டானய்யா, காலம் வந்துவிட்டது, நெருங்கிக் கொண்டு வருகிறது, பொருளாதாரத்தை அள்ளித் தருகின்றான்.தலைவன் வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. அதிகாரிகள் எல்லாம் வருகின்ற காலம் வந்துவிட்டது.
     அரசாங்கத்திலிருந்து வந்தால், நாம் சொல்வோம். என்னய்யா இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதை கண்டிப்பார்கள்.
     ஆக ஆன்மிகம் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அராஜகத்தையெல்லாம் கட்டுபடுத்துகின்ற வாய்ப்பு நமக்கு வரும். நெருங்கி வந்துவிட்டால் எல்லா வகையான போலிகளையும் கோலியாக்கிவிடுவோம்!
     ஆனால் பண்புள்ளவனை மட்டும், பக்தி உள்ளவனை மட்டும் எங்களுக்குத் தெரியும். நடிப்பவனை அராஜகம் செய்பவனை மட்டும்தான் நாங்கள் கட்டுப்படுத்துவோம். முடிந்தால் அரசாங்க தயவு கொண்டு அவனை முடமாக்கிவிடுவோம். அந்த வல்லமை தலைவனுக்கு உண்டு.
     ஆகவே நாங்கள் இறங்குகின்றோம். நாங்களா இறங்குகின்றோம்? மகான் புஜண்டமகரிஷியும், மகான் போகமகரிஷியும், மகான் திருமூலதேவரும், ஆசான் அகத்தீசரும் இறங்கி செயல்படுகின்ற காலம் வந்துவிட்டது. இப்படி துணிச்சலான வார்த்தை வந்து கொண்டிருக்கிறது.
     ஞானிகளைப் பார்த்து, உன் திருவடியைப் பற்ற வாய்ப்பு இல்லாமல் தடுமாறுகின்றேன், மனம் ஒருநிலைப்படவில்லை. இதுபோன்ற பழக்கம் அவர்களிடம் உண்டு. “என்றைக்கடா மனம் ஒருநிலைக்கு வரும் உனக்கு? நாங்களே பூட்டு திறக்கும்வரை தடுமாறிக்கொண்டிருந்தோம். பூட்டு திறந்து ஜோதியைக் காணும்வரை நாங்களே தடுமாறினோம். அப்புறம் உனக்கு மட்டும் அவ்வளவு லகுவாக மனம் ஒரு நிலைப்படுமா? நீ தொடர்ந்து கேட்டுக்கொண்டே வா! “எனக்கு சித்திக்க வேண்டும். மனம் ஒரு நிலைப்பட வேண்டும். அதற்குரிய பண்பும் அறிவும் வேண்டும். முன்வைத்த காலை பின் வைக்காத தீரம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டே வா. நடப்பது நடக்கட்டும். அப்புறம்தான் ஆசான் மனம் இறங்கி நம் தொண்டர்களுக்கு வாசி நடத்தித் தருவார். வாசி நடத்திக் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு தடையே இல்லை. வாசி நடத்திக் கொடுத்தபின் தடை இல்லை.
                நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
                        வாட்டங்க ளேதுக்கடி குதம்பாய்
                          வாட்டங்க ளேதுக்கடி.
                                                              – மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் 9
               
      நாட்டம் என்பது கண். கண்கள் புருவ மத்தியை நோக்கி காண்கின்ற காலம் வரும்.
     நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
                        வாட்டங்க ளேதுக்கடி குதம்பாய்
      என்று சொன்ன வார்த்தையும்,
     
      வஞ்சக மற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
            சஞ்சல மேதுக்கடி – குதம்பாய்
            சஞ்சல மேதுக்கடி
                                                – மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் 4
      வஞ்சக மற்று வழிதன்னைக் கண்டோர்க்கு என்றார். வஞ்சகம் என்பது உடம்பு, காமதேகம்.
     காமதேகம் நீங்கியதற்கு பிறகு சஞ்சல மேதுக்கடி – குதம்பாய் என்றார். இதையெல்லாம் எதற்கு நாம் சொல்கிறோமேன்றால், இந்த வாய்ப்பு மனிதனுக்கு இருந்தும் அடையமுடியவில்லை.
     தொண்டர்களுக்கு எடுத்தவுடன் வாசிப்பயிற்சியை நாம் சொல்லித்தர முடியாது. அவன் செத்துப்போவான் என்பது தெரியும். வாசிப்பயிற்சி என்றால் முதலில் கபத்தை அறுக்கத் தெரிய வேண்டும். முதலில் கனல் ஏற்றத் தெரிய வேண்டும். எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
     ஆசானை எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று கேட்டால், விதிக்கப்பட்ட உணவிலிருந்து மீறவே முடியாது. அப்படியெல்லாம் இருக்க வேண்டும். அப்படியெல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுப்போம்.
     எடுத்தவுடனே நாங்கள் இதையெல்லாம் சொன்னாலும், வஞ்சக மற்றும் வழித்தன்னைக் காண்பது என்பது சின்ன விசயமல்ல. பெரியவங்க ஆசி இருக்க வேண்டும்.
     ஆகவே இந்த காலகட்டத்தில் உலகத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடிய வல்லமை நமது ஒங்காரகுடிலுக்கு உள்ளது. நமது ஓங்காரகுடில் குடிலாசானும், குடில் தொண்டர்கள்தான் இதை செய்ய முடியும். என்ன காரணம் என்று கேட்டான், வஞ்சனை இல்லை.
    
வஞ்சக மற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
            சஞ்சல மேதுக்கடி – குதம்பாய்
            சஞ்சல மேதுக்கடி
                                                – மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் 4
                பொய் பேசமாட்டோம். நாட்டுக்கு நம்மை அர்ப்பணிக்க கூடியவர்கள். அந்த தகைமை நம்மிடம் இருக்கிறது. அருள்பலம் உள்ள மக்கள். ஆனால் ரொம்ப அடக்கமாக இருப்போம். ரொம்ப நிதானமாக பேசுவோம். இனிமையாக பேசுவோம். உங்களிடம் தான் பேசுகிறோம். வெளியில் பேசும்போது யாராவது எங்களை அச்சுறுத்துவது போல பேசினால் “என்னய்யா, நாங்களெல்லாம் வயதானவர்கள். பெரியவங்க மன்னிக்க வேண்டும்” மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பேசுவோம்.
     ஆனால் தொண்டர்கள் மட்டும் உற்சாகப்படுத்துவோம். உண்மை! வெறும் வார்த்தை இல்லை! சொன்னதை செய்வோம். ஆகவே ஞானிகள் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல. தினம் பூஜை செய்ய வேண்டும்.
     அந்த வாய்ப்பை தொண்டர்கள் அடைய வேண்டும். இதைத்தான் மகான் சட்டைமுனிவர் சொன்னார்,
    
     தானேநீ யிடசூட்சங் காலைக்கண்டாற்
            றவறா எத்தொழிலுஞ் செய்வாய் பாரு
      நானேதான் சொன்னேன்கேள் சத்தியமாக
            நற்கால முனக்குவரு மித்தைப்பாரு
      தேனேசொல் லேன்பேச்சை யிகழ வேண்டாம்
            சித்தித்த பொருள்சொன்னே னருளைச்சொன்னேன்
      கானலைநீ ராமெனவே ஓடிநீயும்
            கால்தளர்ந்து வீழாதே கருவிப் பாரே.
                                                                – சட்டைமுனிவர் ஞான விளக்கம் 51 – கவி  எண் 25
                வாசி வசப்பட்டவனின் இயல்பு என்னவென்று கேட்டால், வாசி வசப்பட்டவனின் இயல்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதை மகான் பட்டினத்தார் சொல்வார், அவர் சும்மா கோவணம் கட்டியிருந்தார். ஆடம்பரமே இருக்காது. போலிகள் மான்தோல் போட்டுக்கொண்டு புலிதோல் போட்டுக்கொண்டு, கமண்டலம் வைத்துக் கொண்டு மேலே அப்படி ஒன்றரை முழம் ஒட்டு முடியெல்லாம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பான் கண்ணாடி முன்னாள் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்பான். ஞானிகள் எளிமையாக வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் எப்படிய்யா கண்டுபிடிப்பது என்று கேட்டான்.
      பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களுத்துந்
      தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
                அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
                இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
                                –  மகான் பட்டினத்தார் – திருஏகம்பமாலை – கவி எண் 15
                உங்களால் கண்டுபிடிக்க முடியாதுதான் எங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு வார்த்தை சொல்கிறேன், கேட்டுக்கொள். “அம்பு நேராக இருக்கும் ஆனால் கொலைக்கருவி என்றும், அதே சமயத்தில் யாழ் வளைந்து இருக்கும், வயிறு தள்ளிக் கொண்டிருக்கும், ஆனால் அது இனிமையான இசையை தரக்கூடியது” என்று மகான் திருவள்ளுவர் சொல்வார். செயலைப்பார்த்து தெரிந்து கொள் என்றார்.
     இவர் என்ன சொன்னார், பொருளுடையோரைச் செயலிலும் என்றார். ஞானிகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பொருளுடையோரைச் செயலினும் – வசதியிருந்தால் என்ன செய்வான் என்றால், இரண்டு காணி நஞ்சை நிலம் வாங்குவான். வீடு கட்டுவான். நிலபுலன் வாங்குவான். இதையெல்லாம் செய்துகொண்டே இருப்பான். நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சரி வசதி வாய்ப்பு இருக்கிறது என்று.
      பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களுத்துந் – வீரதீர பராக்கிரமம் பேசுவான். ஆனால் என்ன செய்வானென்றால், போர்க்களத்தில் வினாடிக்கு வினாடி தலை உருண்டு கொண்டே இருக்கும், கைகால் துண்டிக்கப்படும். ஆனால் அலறல் சப்தம் கேட்காது, அலறல் சப்தம் கேட்டால் அது போர்க்களம் இல்லை. அப்படியே சிரித்துக் கொண்டே சாவார்கள் வீரர்கள். ஆக வீரரை போர்க்களத்தில் பார்க்க சொன்னான்.
      தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – மகான் பட்டினத்தார் சொல்கிறார், ஞானிகளை நீ அறிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். பொருள் வசதி உள்ளவனை அவன் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம். வீரரைப் போர்க்களத்தும் என்றார்.
      தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – திட்பமுள்ளவன், ஆளை பார்க்கும்போதே அப்படி பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். ஆள் சிங்கம் போன்றவன். அந்த பேச்சு, நடை எல்லாம் பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். தெருள் என்றால் முகத்தில் திட்பம் உடையவன். ஒரு பராக்கிரமசாலியை முகத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
      தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
                அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
                இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
      அவனுடைய தன்மை சொல், செயல் இரண்டை பொறுத்தே அமையும். அவன் பேசும்போதே தெரிந்து கொள்ளலாம். அருளுடையோரை அவனது பேச்சு, செயல் இரண்டையும் பார்க்க வேண்டும்.
     இருளறு சொல் – பேசும்போதே மக்களுடைய அறியாமையை நீக்கும் பொருட்டே பேசுவான். என்ன காரணம்? அவன் மடையனல்ல. வாசி வசப்பட்டதனாலே, அவன் மடையனல்ல. பேசுகின்ற ஒவ்வொரு சொற்களும், மக்களுடைய அறியாமையை பொடியாக்கக் கூடிய வல்லமை உள்ள சொற்களை பேசுவான்.
      அதனால்தான் இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே என்றார். அவனைப் பார்த்து புரிந்து கொள் என்றார். ஆகவே ஞானிகள் பேசினால், அந்த சொற்கள் அத்தனையும் அறியாமையை நீக்கக் கூடிய சொற்களாக இருக்கும். செயலும் சொல்லும் ஒன்றாக இருக்கும் என்று ஆசான் சொல்வார்.
     ஆக ஞானிகள் பெருமையை பேசுவதும், தியாக சிந்தையும் வர வேண்டும். எங்கு பார்த்தாலும் ஆசான் பெருமையை பேசு என்றான். ஆசான் அகத்தீசரை பூஜை செய்யுங்கள். வறுமையில்லா வாழ்வு பெறுங்கள். ஆசான் அகத்தீசரை பூஜை செய்யுங்கள். நோயில்லா வாழ்வு பெறுங்கள்.
     இதையெல்லாம் மக்கள் மத்தியில் பேச வேண்டும், சொல்ல வேண்டும். இதற்கு நீங்கள் செயலாக இருக்க வேண்டும். இந்த இருபத்திரண்டு வருடமாக இதற்கு முன்னும், நாங்கள் உலக நடையில்தான் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து ஆசான் அகத்தியரை பூஜை செய்வோம்.
     இங்கிருந்து நான் போகும்போதே “அகத்தீஸ்வரா அகத்தீஸ்வரா” என்று சொல்லிக் கொண்டே போவேன். அந்த றோடு முனை திரும்பும் மட்டும் ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்வேன். அதற்கப்புறம் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே போவேன். ஆக ஞானிகள் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்கள்.
     நாம் ஐந்து நிமிடமாவது பூஜை செய்ய வேண்டும். நாங்கள் தேதி போட்டு எழுதிக்கொண்டே வருவோம். இன்று பூஜை செய்தோமா? செய்தோம். எழுதியிருக்கிறோம். தூங்கினோமா? தூங்கினோம். மனம் ஒரு நிலைப்பட்டதா? மனம் ஒருநிலைப்படவில்லலை. சலனப்பட்டதா? ஆமாம், சலனப்பட்டது. இன்னும் வஞ்சகம் நீங்கவில்லையா? நீங்கவில்லை. அப்படி தினம் குறிபெடுத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததனாலே இந்த இடத்திற்கு வந்திருகின்றோம்.
     நீங்களும் நாட்களை வீணாக்காமல், தினம் குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நோட்டு போட்டு இன்று பூஜை செய்தோமா? மனம் ஒருநிலைப்பட்டதா? இல்லை சாந்தமாக இருந்ததா? இல்லை அதைப்பற்றி அவசியமில்லை. நாமத்தை சொன்னோமா? மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்தோமா? நம்மிடம் இருக்கும் குணக்கேடு பற்றி நாம் புரிந்து கொண்டோமா? ஏனென்றால் மகான் திருவள்ளுவர் சொல்வார்.
      ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
      தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
                                                – திருக்குறள் – புறங்கூறாமை – குறள் எண் 190
                ஏதிலார் என்றால் பகைவர்கள். பகைவருடைய குற்றத்தை நன்கு ஆராயக்கூடிய நாம், நமது குற்றத்தை என்று ஆராயப்போகிறோமோ அன்றே நமக்கு நீடிய ஆயுள் கிடைக்கும் என்றார். தீதுண்டோ மன்னு முயிர்க்கு – நிலை பெற்ற உயிர்களுக்கு தீமை வராது என்று சொன்னார். இல்லாவிட்டால் தீது வரும் என்று அர்த்தம்.
     ஆக, மகான் திருவள்ளுவர் சொன்ன அந்த நூலின் சாரம் என்னவென்று கேட்டான். அதில் தியாகம் இருக்கும். அநூலில் தியாகம் , அதே சமயத்தில் பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை. ஆழ்ந்து சிந்தித்துப் பேசக்கூடிய திறமைகள், நிதானமாக பேசுதல், பேசும்போது மக்களுடைய அறியாமையை நீக்கும்படி பேசுதல் இருக்கும். இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
     அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
      நாடி இனிய சொலின்.
                                                – திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 96
                இனிய சொல்லை சொல் என்பார். ஆக சொல்லில் நிதானம் இருக்கும். அது சில சமயம் வேடிக்கையாக பேசலாம். ஆனால் சொன்னால் அது பொருளுடையதாக இருக்கும், வஞ்சனை இருக்காது.
     யோகிகளுக்கு மட்டும் பேசப்பட்டிருகின்றது திருக்குறள். இந்த நூல் எல்லோருக்கும் சொல்லவில்லை. நாங்கள்தான் இதை எடுத்து சொல்ல வேண்டும். திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது ஐயா! திருக்குறளை தொடும்போதே ஆசானை நினைத்து தொட்டு வணங்குங்கள். இல்லையென்றால் அதிலிருக்கும் நுட்பம் தெரியாது. படித்துக் கொண்டிருக்கலாமே தவிர உள்ளே நுழைய முடியாது. அது எங்களுக்குத்தான் தெரியும்.
      காரணம், அவ்வளவு உயர்ந்த நூல். அதற்கு ஈடே கிடையாது. யோகிகளுக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தரக்கூடிய திருக்குறள். அதைப் படித்து புரிந்து கொள்வதற்கு ஆசி இருக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். தினம் தியானம் செய்ய வேண்டும்.
     ஆக இந்த காலக்கட்டத்தில் உண்மை ஆன்மிகம் பரவுவதற்குரிய நேரம் வந்ததாலும், தினம் தியானம் செய்து ஆசி பெற வாய்ப்பு இருப்பதாலும், சந்தேகம் வரும் போதெல்லாம் என்னிடம் வந்து கேட்கலாம்.
      பிராணாயாமம் செய்யாதீர்கள். ஆசானாக பார்த்து வாசி நடத்தித் தர வேண்டும். வாசி நடத்திக் கொடுக்கப்பட்டால்தான் கபம் அறுக்கப்படும். வாசி நடத்தினால்தான் உடம்பு அசுத்தம் நீங்கும். வாசி வசப்படவில்லையென்றால் கடவுள் ஆசி இருக்காது.
     வாசி வசப்பட்ட மக்களுக்கு செல்வம் பெருகும் . நட்பு பெருகும், மனசாந்தம் உண்டாகும். இப்படி வாசி வசப்பட்டவனுக்கு ஈடு இல்லையென்றான். ஈடே இல்லை. ஏனென்றால் அவனுக்கு நிகர் சொல்லவே முடியாது. அவ்வளவு பெரிய வல்லமை. மகான் திருமூலர் திருமந்திரத்தில் இதை சொல்வார்,
      ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
      பேராமற் கட்டிப் பெரிதுன்ன வல்லீரேல்
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
                                                – திருமந்திரம் – கலை நிலை – கவி எண் 722
                ஈராறு கால்வலது பக்க சுவாசம் இரண்டு மணி நேரம், இடது பக்க சுவாசம் இரண்டு மணி நேரம். மொத்தம் இருபத்துநான்கு மணி நேரம் பன்னிரண்டு முறை மாறும். ஈராறு என்பது பன்னிரண்டு முறை.
     கால் என்பது காலம். அது சுவாசம். காலை ஆறு முதல் எட்டு மணி வரை சந்திர கலை. இன்று வெள்ளிக்கிழமை. இன்று சந்திர கலை இயங்க வேண்டும். ஆறு முதல் எட்டு வரை சந்திர கலை. நாளை சனிக்கிழமை சூரிய கலை. அப்ப இன்று காலை 6 முதல் 8 வரை சந்திர கலை, 8 முதல் 10  வரை சூரிய கலை, 10 முதல் 12 வரை சந்திர கலை. அப்படியே மாறி மாறி வரும். நாள்சி சனிக்கிழமை காலை 6 மணிக்கு சூரிய கலை இயங்க வேண்டும். சூரிய கலை இயங்கினால்தான் நல்லது. அதை ஆசான் பார்த்துக் கொள்வார்.
     ஆக நாளை சனிக்கிழமை காலை 6 முதல் 8 வரை சூரிய கலை இயங்க வேண்டும். அதே போன்று ஞாற்றுக்கிழமையும் சூரியகலை இயங்க வேண்டும். திங்கட்கிழமை சந்திரகலை இயங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை சூரியகலை இயங்க வேண்டும். புதன்கிழமை சந்திரகலை இயங்க வேண்டும். தேய்பிறை வியாழன் என்றால் அதற்கு மட்டும் சூரியகலை இயங்க வேண்டும். இதெல்லாம் பெரியவங்க நடத்தணும். இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே வருவோம்.
      ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
      பேராமற் கட்டிப் பெரிதுன்ன வல்லீரேல்
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
                                                – திருமந்திரம் – கலை நிலை – கவி எண் 722
      புரவி என்றல் குதிரை, ஈராறு என்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த சுவாசம் மாறும். ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் – எழுந்த புரவியை என்றால் எழுகின்ற குதிரை – சுவாசம். தலைவன் வந்து விட்டான். உங்களுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு அமைத்திருக்கிறது. குடிலாசான் பேச்சை ஒரு நாள் கேட்டால், அதற்கு நிகரே கிடையாது. அவ்வளவு ஆற்றல் பொருந்திய சொற்கள். ஞானவான் பேசுவது. தலைவன் உள்ளேயிருந்து பேசிக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் நினைக்க வேண்டும்.
     இது பக்தி விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டும் சொல்கிறோம். ஏதோ சொல்கிறார் என்று எண்ணினால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. தலைவன் பேசுகிறான். தலைவன் தங்கியிருந்து பேசுகிறான். குடிலாசான் தலைவனாக மாறியிருக்கிறான். தலைவா குடிலாசானாக மாறுகிறான், மாறியிருக்கிறான்.
     இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதோ பொருளாதாரத்திற்காக பேசுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். உண்மையை சொல்கிறேன், பிடித்து கரையேறிக் கொள்வோம்.
      ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
      பேராமற் கட்டிப் பெரிதுன்ன வல்லீரேல்
     பேராமல் கட்டி என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்று அப்படியே அடங்கிடும். அதற்கப்புறம் அது தடைப்பட்டால் அதை சரிப்படுத்திக் கொள்ளலாம்.
      பேராமற் கட்டிப் பெரிந்துன்ன வல்லீரேல் – பெரிது உன்ன வல்லீரேல் என்றால் சிந்தித்தல். நிச்சயமாக அது இரண்டு சுழி ‘ன” வாகத்தான் இருக்க வேண்டும், மூன்று சுழியாக இருந்தால் இருந்தால் பெரிது உண்ணுதல் என்பது பெரிய வயிறாக இருக்க வேண்டும், அதுவல்ல. நிச்சயமாக இரண்டு சுழி ‘ன’ போட்டிருப்பார்கள். பெரிது உன்ன வால்லீறேல் என்றால் நன்றாக சிந்தித்தல் என்று பொருள். ஆக,
     பேராமற் கட்டிப் பெரிதுன்னா வல்லீரேல்
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் – இந்த கடல் தோன்றி பல லட்சம் கோடி வருடமாயிற்று. கதிரவன் தோன்ற பல லட்சம் கோடி வருடமாயிற்று. காற்று மென்மையாகவும், திண்மையாகவும் தோன்றி, பல லட்சம் கோடி வருடமாயிற்று. ஆக இந்த மண் தோன்றி, பல லட்சம் கோடி வருடமாயிற்று. இன்னும் மாசுபடாது அப்படியே இருக்கிறது.
           நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
            பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. என்றார்.
     இந்த உலக இதுபோல் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான கோடிக்கணக்கான யுகங்கள் ஆனாலும் ஞானி அசையாது இருப்பான்.
     அந்த வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது. இந்த ஓடுகின்ற சுவாசத்தை புருவ மத்தியில் செலுத்தி நிறுத்த வாய்ப்பு இருக்கிறது. அதை எப்படி அடைவது, அதற்கு தலைவன் ஆசி பெற வேண்டும். தலைவன் ஆசி பெறாமல் அது முடியவே முடியாது.
     அதை நாம் செலுத்தி வைத்தால் அது என்ன ஆகும் என்றான்.
      உத்தமனே வாசியது நிலைக்காவிட்டால்
      சோதனைபார் தேகமது மாண்டு போகும்.
 
     வாசி நிலைக்கவில்லை என்றால் அதோடு சரி. உடம்பில் உஷ்ணம் ஏறிக்கொள்ளும். ஆக வாசி வசப்பட்ட மக்களுக்கு மலச்சிக்கல் இருக்காது. வாசி வசப்பட்ட மக்களுக்கு கபம் இருக்காது. வாசி வசப்பட்ட மக்களுக்கு அசுத்த தேகம் இருக்காது. வாசி வசப்பட்ட மக்களுக்கு சிறுமை குணம் இருக்காது. இதற்கு ஈடே கிடையாது.
      பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
     
     இந்த தேதியிலிருந்து நீங்களெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேதியிலிருந்து எல்லா ஞானிகளும் குடிலை நோக்கி வருவதாலும், எல்லோரும் ஆசி பெறுகின்ற வாய்ப்பு இருப்பதாலும், இந்த உண்மையை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வந்து விட்டதாலும் சொல்கிறோம்.
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
      என்று தலைவன் சொல்லியிருக்கின்றார். இப்படியே பல ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். என்னதான் சொன்னாலும் தினம் பூஜை செய்து ஆசி பெறாமல், முடியாது என்றும், அன்னதானம் செய்ய வேண்டுமென்று மறுபடியும் சொல்கிறேன். குடிலாசான் செய்யும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தால் போதும். அதை நாங்கள் உணர்ந்தால் போதும்.
     குடிலாசான் மேற்கொள்ளும் அறப்பணி, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தலைவனாகிய குடிலாசான், ஒங்காரக்குடிலாசன் மேற்கொள்ளும் அறப்பணிக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால், அது ஆறுமுகப்பெருமானுக்கு செய்யக் கூடிய தொண்டாகும். அது மகான் அகத்தீசருக்கு செய்யக் கூடிய தொண்டாகும். அது மகான் புஜண்டமகரிஷிக்கு செய்கின்ற தொண்டாகும்.
     மகான் திருமூலர், மகான் காலங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர்முனிவருக்கு செய்கிற தொண்டாகும். இதை பெரும் வாய்ப்பாக கருதி தொண்டு செய்து ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
     இதை நான் சொல்லவில்லை, ஆசானே சொல்கிறார். இன்று பேசப்படுகின்ற கருத்துகளெலாம் தலைவனே வந்து பேசுகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ குடிலாசான் பேசுகிறார் என்று, தற்பெருமை பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். காலம் வந்துவிட்டது. தலைவன் வந்து விட்டான். சுழிமுனைக்கதவு திறக்கின்ற காலம் வந்து விட்டது. மூலக்கனல் உச்சிக்கு வருகின்ற நேரம் வந்து விட்டது. நல்ல வாய்ப்பு வந்தது.
                ஆகவே, தொண்டு செய்து ஆசி பெற்று அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் பேசுகின்ற கருத்தை காது கொடுத்துக் கேட்டாலே அது ஆன்மாவை தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றது என்றும், அது ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணையாக இருக்கும் என்றும், நான் சொல்கின்ற கருத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு, ஞானிகள் பெருமையை பேச வேண்டிய காலம் வந்து விட்டது, பேசுவோம்! பேசுவோம்! மேலும் மேலும் பேசுவோம்! கலந்து உரையாடுவோம்.
     உங்கள் கருத்தை என்னிடம் சொல்லலாம். என் கருத்தை உங்களிடம் சொல்கிறேன். ஞானிகளின் ஆசி பெறுவதற்கும், இங்கே தங்கி எல்லா மக்களும் தொண்டு செய்வதற்கும் ஞானிகளின் ஆசியும் அனுக்கிரகமும் தர வேண்டும் என்று சொல்லி,
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம          ஓம் அகத்தீசாய நம
     இந்த உரையை கேட்பவர்களுக்கு ஜென்மத்தைக் கடைத்தேற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதே சமயத்தில் நமது சங்கத்தின் வலு, ஆற்றலைப் பற்றி பேசியிருக்கின்றேன். அது தொண்டர்கள் உற்சாகத்திற்காக பேசியிருக்கிறேன், உண்மையைத்தான் பேசியிருக்கிறோம். இந்த உரையை கேட்பவர்களுக்கு புண்ணியம் உண்டாகும், ஞானிகள் ஆசி கிடைக்கும் என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0198098
Visit Today : 84
Total Visit : 198098

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories