அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கலியுகத்தினில் #குருநாதர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
சீடர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் A.A.தரணிபாலன், தென்னூர், திருச்சி
12.09.2018,
புதன்கிழமை
அருட்கனலை கொண்டிட்ட அரங்கனுக்கு
ஆறுமுகன் வாக்குதான் ஆசியோடு
ஒருமனதாய் அரங்கன் வாழ நடைமுறை ஆசி
உலகத்திற்கும் மக்களுக்கும் ஆசி சொல்வேன்
சொல்லுகிறேன் கலியுகத்தில் மெய் ஆன்மீகம்
சொல்லும்படி இல்லையப்பா பிழையே கண்டேன்
நல்லதொரு ஞானம் சொல்லா பிழைகளை சொல்லி
நாள் நாளும் பிழை செய்து வாழ்கின்றார்கள்
வாழ்கின்றோர் மத்தியில் வந்துதித்த
வள்ளல் நீ அரங்கன் நீ வாழிய என்றேன்
ஊழ்வினையால் உழன்றிட்ட மக்களுக்கு
உன்னுடைய வழிகாட்டல் தெளிவு தந்து
தந்ததப்பா ஞானத்தில் நிலைத்திருக்க
தரணியிலே குரு யார் என அறிய வேண்டும்
சுந்திரனே குருவால் மட்டும் தெய்வத்தை காணலாம்
சுத்த ஞானம் குருவால் மட்டும் காணலாகும்
காணவே கு என்றால் வெளிச்சம் ஆகும்
கண்டுரைக்க ரு என்றால் அறிவும் ஆகும்
காணுவாய் குருவைக் கண்டால் அறிவும் ஜோதி
காணாவிட்டால் அவனுக்கு முக்தி ஏது?
முக்தி பெற வழி சொல்வான் முனை திறப்பான்
மூர்க்கத்தை அழித்துதான் வாழ வைப்பான்
சக்திதனை தந்திடுவான் சன்மார்க்கம் தந்திடுவான்
#சாகாக்கலை என்னவென்று எடுத்துரைப்பான்
உரைத்திடுவான் மரணமற்ற வாழ்வு தன்னை
உரைத்திடுவான் சிவத்தினை அறிவதற்கு
உரைத்திடுவான் சிவத்தோடு சிவமுமாக
உரைத்திடுவான் சிவநிலையை அடையும்
மார்க்கம் மார்க்கத்தை சொல்பவனே மகா குருவும் ஆகும்
மாந்தர்களும் குருபதத்தை பிடிக்க வேண்டும்
சார்ந்திருத்தல் அவசியமே குரு அடி தன்னை
சன்மார்க்க நிலைமாறா சார்ந்திருக்க வேண்டும்
சார்ந்திருத்தல் எளிதல்ல கடினமப்பா
சஞ்சலங்கள் இடையிடையே வந்து ஆட்டும்
பார்க்க வேண்டும் குருபதத்தை இறுக்கமாக
பாங்காக குருவாக்கை அறிய வேண்டும்
அறிந்துதான் தர்மத்தினை செய்திட வேண்டும்
ஆசானை ஈசனாய் அறிய வேண்டும்
அறிவதுடன் தெளிந்துதான் நிற்க வேண்டும்
ஆசானே சிவவடிவம் என்று உணர வேண்டும்
உணர்ந்து உணர்ந்து வணங்கியோரே உயர்நிலை கண்டார்
உத்தமமாய் குருதேகம் பார்ப்பது நன்று
குணவான்கள் பார்த்தவுடன் பணிந்து கொள்வார்
குருதொண்டை சிவதொண்டாய் கருதி நிற்பார்
நிற்க வேண்டும் அரங்கனை ஆறுமுகனாய் எண்ணி
நிர்மலம் ஆனதொரு சண்முகன் என்று
அற்புதமாய் எண்ணிதான் வணங்க வேண்டும்
அரங்கனும் சுப்பிரமணியரும் வேறல்ல என்றேன்
என்றுமே குருவழி நடக்க வேண்டும்
இல்லையென்றால் #அஞ்ஞானம் பற்றிக் கொள்ளும்
நன்றான குருநாமம் சொல்ல வேண்டும்
நாள் நாளும் ஜெபமும் செய்ய நமனும் இல்லை
நமனேது துன்பமேது அவர்தமக்கு
நாள்நாளும் அவர் அடைவார் பேரின்பத்தை
சுமையேது குருநாமம் சொல்வோர்க்குத்தான்
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது
உரைக்கும்போது சிவத்தின் அருள் கிட்டும்
ஓங்காரக்குடில் ஆசான் வாழ்கவென்றால்
குறையேது அவன் வாழ்வில் அவனே ஞானி
குடில் பெருமை பேசுவதே தொண்டர் சேவை
தொண்டர்களுக்கு இது எந்தன் கட்டளையாகும்
தொண்டர்களை கேட்கின்றேன் என் மகன் பெருமை
கண்டு பேசல் குற்றமோ சொல்லுங்கள் இப்போ
கந்தனின் பெருமையை குடில் வந்து பார்ப்பீர்
பார்க்கவே ஆசானை சுப்பிரமணியமாய்
பாங்கான அரங்கன்தான் என் வடிவமாகும்
சார்ந்துதான் இருக்கின்றேன் சண்முகம் அரங்கனை
சஞ்சலங்கள் தீர்க்கத்தான் வாருங்கள் இங்கே
இங்கு வந்து குடில் பெருமை குடில் உணவைப்பற்றி
எடுத்துரைக்க வேண்டுமே சேவையாக
இங்கு வந்து ஓங்காரக்குடில் பெருமை அறிந்து
இவ்வுலகம் அறியவே எடுத்துரைக்க வேண்டும்
உரைக்க வேண்டும் குடில் உணவு மருந்து என்று
உரைக்க வேண்டும் குடில் உணவு அருள் உணவு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு மகேசன் தொண்டு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு வள்ளல் தொண்டு என்று
வள்ளல்பின் மாந்தர்கட்கு அன்னம் தன்னை
வழங்கியது யாரப்பா? நீதான் அரங்கா
வள்ளலும் அருள்கின்றார் இக்கணத்தில்
வாழ்கவென்று உன்னையும் வாழ்த்துகின்றார்
வாழ்த்தை நீ பெற்றுவிட்டாய் இக்கணம் தொட்டே
வள்ளலையும் அகத்தியரையும் என்னையும் கண்டாய்
ஊழ் அகல உனைக் காண வேண்டுமப்பா
ஒவ்வொரு தொண்டர்கட்கும் கட்டளையாய் சொல்வேன்
சொல்கின்றேன் குடில் தொண்டை செய்யுங்கள் என்று
சுத்த சேவை செய்யும்போது சுப்பிரமணியர் சேவை
பொல்லாத வினை அகல புண்ணிய சேவை
பொருந்தியே செய்வோர்க்கு புண்ணியம் கிட்டும்
கிட்டுமென்றே சுப்பிரமணியர் சொல்லி விட்டேன்
கூறுகிறேன் தேகத்தில் கனல் கூடி நிற்குதப்பா
சட்டென்று தேகத்தில் வலி தோன்றுமப்பா
சஞ்சலமே வேண்டாம் விலகிப் போகும்
விலகிவிடும் முருகன் என் அருள் பலத்தால்
விளம்புகிறேன் அகவல்தனை பாடிக் கேளு
நலமடைவாய் என்றுதான் வாக்குரைத்தேன்
நானிலத்தில் சுத்த ஞானக் குடிலமைத்து
அமைத்துதான் மாந்தர் சேவை செய்யும் உனக்கு
அருளோடு பொருள் தருவார் வாழ்வார் வாழ்வார்
சுமை நீங்க குடிலிற்கு தனம் தருவீர்
சுப்பிரமணியன் அருள் பெறவே தனம் தருவீர்
தனம் தந்து அருள் பெறுவீர் அழைக்கின்றேன் வேலன்
தவசியான அரங்கனை வந்து காண்பீர்
மனம்மகிழ ஞானம் பெற வந்து காண்பீர்
மாந்தர்களை அழைக்கிறேன் வேலவன் இன்றே
வேலனும் அரங்கனும் ஒன்றுதானே
வேறல்ல ஈசனும் அரங்கனும் ஒன்றே
மேலான குரு அரங்கன் ஈசன் அவதாரமாகும்
மேன்மையாய் நடைமுறையில் குருசேவை செய்ய வேண்டும்
குரு சேவை கோடி புண்ணியம் தந்திடும்தான்
குருதீட்சை பிறவியை அளித்திடும்தான்
குருவாக்கு விதியையே மாற்றி நிற்கும்
குரு ஆசி பெறுவதற்கு அழைக்கின்றேன் வேலன்
அழைக்கின்றேன் வாரீர் வாரீர் மக்களே இன்று
அரங்கர் மூலம் கண்டுதான் செய்வீர் இங்கே
அழைக்கின்றோம் நடைமுறையை சொல்லி விட்டேன்
அரங்கனே வாழிய வாழிய என்றேன் முற்றே.
-சுபம்
முருகப்பெருமான் துணை
மகான் சுப்பிரமணியர் அருளிய தற்கால ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் உண்மை ஆன்மீகவாதிகளுக்கான
நடைமுறை அறிவுரையும் ஆசியும் சிறப்பு நூல் :
சுவடி வாசித்தளித்தவர் A.A.தரணிபாலன், தென்னூர், திருச்சி
ஞானம் அளிக்கும் யோகக்கனலாம் அருட்கனலை கொண்டிட்ட ஆறுமுக அரங்கமகா தேசிகனுக்கு முருகப்பெருமான்
யான் ஆசிகளோடு சொல்லும் அருள் வாக்குதான் இதுவப்பா. ஆறுமுக அரங்கனும், அவர்தம் தொண்டர்களும்,
உலகோரும் ஒற்றுமையுடன் சிறப்பாய் வாழ்ந்திட கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஆசி அறிவுரை நூலாக
கூறுகிறேன் முருகப்பெருமான் யானுமே எனக் கூறுகிறார் மகான் முருகப்பெருமான். (நூல் வாசித்தளித்த நாள்
விளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் நாள் 12.09.2018, புதன்கிழமை)
தற்காலம் இவ்வுலகினில் உண்மை நெறிப்படி நடந்து கொள்கின்ற உண்மை ஆன்மீகமும் உண்மை ஆன்மீகவாதிகளும்
சொல்லிக் கொள்ளும்படி இல்லை. யாவரிடத்தும் குற்றம் உள்ளது எங்கு பார்த்தாலும் பிழையாகத்தான்
இருக்கிறதப்பா. நல்ஞானம்தனை உண்மை ஞானம்தனை, தம்மை நம்பி வரும் அன்பர்களுக்கு சொல்லித்தராமல்
அவரவரும் பிழைப்பிற்காக பிழையான ஆன்மீகத்தைச் சொல்லிக் கொடுத்து பிழையான ஆன்மீகவாதிகளாக ஆகி
பிழைபட்ட ஆன்மீகத்தைதான் வளர்த்து வருகின்றார்கள்.
இப்படிப்பட்ட பொருள் பற்றும், காமுக எண்ணம் உடைய ஆன்மீகவாதிகள், பிழையான பொய் ஆன்மீகவாதிகளுக்கு
மத்தியில் உண்மை ஆன்மீகம் போதித்து மக்களை வழிநடத்திடவே அவதாரமாக அவதரித்திட்ட வள்ளல் ஞானி
ஆறுமுக அரங்கனே உம்மை முருகப்பெருமான் யானும் வாழ்த்துகின்றேனப்பா.
ஊழ்வினைகள் காரணமாக மன உளைச்சலிற்கு ஆட்பட்டு, ஊழ்வினை துன்பங்களால் அவதியுறும் மக்களுக்கு அரங்கா
உமது வழிகாட்டல்கள் தெளிவு தந்து காத்திடும்.
உமது வழிகாட்டல்கள் மக்களுக்கு ஞானத்தை தந்ததப்பா. இவ்வுலகினில் ஞானத்தில் நிலைத்திருக்க வேண்டுமாயின்
முதலில் குரு என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அன்பர்கள் எல்லாம். ஏனெனில் குருவினால்
மட்டுமே, குருவின் மூலமாக மட்டுமே தெய்வத்தைப் பற்றி அறியவும், காணவும் முடியும். குருவின் துணையால்
மட்டுமே சுத்த ஞானத்தை அறியவோ உணரவோ முடியுமப்பா.
குரு என்பது யார்? குரு என்றால் என்ன? எனில் குரு என்ற சொல்லில் உள்ள ‘கு’ என்ற எழுத்து வெளிச்சம் என்பதை
குறிக்கும் எழுத்தாகும். ‘ரு’ என்ற எழுத்து அறிவினைக் குறிப்பதாகும். ஆக குரு என்பது பிரகாசமான அறிவு
என்பதாகும். அதாவது ஜோதி வடிவான அறிவு அல்லது அறிவும் ஜோதியும் என்பதாகும். குருவை தரிசனம் செய்தால்
அவனது அறிவு ஜோதி வடிவாக, அதாவது அறிவு விளக்கம் பெற்று செம்பொருள் அறிவாகும். குருவை காணாவிட்டால்
அவனது அறிவு மலஅறிவாக மூட அறிவாகப் போய் அறியாமைக்கு உள்ளாகி முக்தி அடையும் பேற்றினை இழந்து
விடுவான். குரு இல்லையேல் முக்தி என்பது இல்லையப்பா.
குரு என்பவர் என்ன செய்வார்? குரு எனப்படும் அறிவுச் சுடரானவர் தம்மை நம்பி குருவாய் ஏற்று பணிந்தவர்க்கு
அவர்தம் வினைகளை போக்கி முக்தியை அடையும் வழியை உணர்த்தி வழி நடத்துவார். பத்தாம் வாசலாகிய
புருவமத்தியை திறந்து அவனை வாசிவசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுப்பான். அவனுக்கு வாசி நடத்திக்
கொடுத்து அவனுள் இருக்கும் ஆன்ம குற்றமாகிய மூர்க்கத்தனத்தை, தான் எனும் ஆணவத்தை, மும்மலக்குற்றத்தை
நீக்கி அவனை மனிதனாய், தேவனாய், தெய்வமாய் வாழ வைப்பாரப்பா குருவெனும் பெருந்தாய்.
நம்பிய பக்தனுக்கு சகலமும் தந்து கடைத்தேற்றிக் கொள்ளும் சக்தியும் தந்து கடைத்தேற்றுவான்.
சகமார்க்கமாகிய எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரியும் #சன்மார்க்க நெறியினை போதித்து
சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியும் அதை அடைந்திடும் முறையையும் உணர்த்திடுவான்.
மரணமிலாப் பெருவாழ்வை கூறி அதை அடைய துணை புரிந்து சிவத்தினை அறிவதற்கும், சிவத்தோடு தம்மை
நம்பிய சீடனையும் சிவமாக ஆக்கிய சிவத்தோடு சிவமாக #குருவே ஆகி உரைத்திடுவான், சிவநிலையை அச்சீடன்
அடையும் வழிமுறைகளை.
இப்படிப்பட்ட வல்லமை மிக்கவரும் சிவத்தை அடையும் மார்க்கத்தை தெள்ளத்தெளிவாக சொல்பவனே உண்மை குரு
ஆவார். அவனே மகா குருவும் ஆவார்.
அப்படிப்பட்ட வல்லமையுள்ள மகா குருவின் திருவடிகளைப் பற்றி சரணடைந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்
கொள்ளலாம். அப்படிப்பட்ட உண்மை குருவை அவசியம் ஆன்மீகவாதிகளும் இல்லறவாசிகளும் துறவு
மேற்கொள்பவர்களும் சார்ந்திருக்க வேண்டுமப்பா.
உண்மை குருவின் திருவடி பற்றினோர் குரு உபதேசிக்கும் உபதேசமாகிய சன்மார்க்க நெறியினின்று வழுவாமல்
நடந்திட வேண்டுமப்பா. ஒரு மனிதன் சன்மார்க்க நெறியினில் வழுவாது நடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல,
கடினமான செயலாகும். ஏனெனில் கலியுகத்தின் மாமாயையினால் அந்த சீடனோ, அன்பரோ ஆட்பட்டு
சஞ்சலங்களுக்கு ஆளாகிட நேரிடும். இடையிடையே தாம் செல்லும் பாதை சரியானதா? தவறா? என தடுமாற்றமும்
உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாம் ஏற்ற உண்மை குருவின் திருவடிகளை மானசீகமாகப் பற்றிக்
கொண்டு மனம் உருகி பிரார்த்தனைகள் செய்திட வேண்டும்.
”எம்பெருமானே குருநாதா நான் பாவிதானப்பா, சந்தேகம் என்னை ஆட்கொண்டு வாட்டுகிறது. இந்த பாவி மீது
இரக்கம் காண்பித்து எம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என குருவடி பணிந்து மனம் உருகி
பிரார்த்தனைகள் செய்து குருவினை விட்டும், சன்மார்க்கத்தை விட்டும் நீங்காமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து
குருவையும் குருவின் தன்மையையும், சன்மார்க்கத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.
உங்களைத் தடுக்கும் மாயையினின்று விடுபடவும், வினைகளின் துன்பங்களில் இருந்து விடுபடவும், நீங்கள்
புண்ணியவானாக இருக்க வேண்டும். ஆதலினால் உங்களது புண்ணியத்தை பெருக்கும் வகையிலே தானதருமங்களை
தளராது தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் செய்திட்ட தர்மபலன் உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து
விடுவித்து நற்கதியில் செலுத்தும். புண்ணியங்களையும், பூஜைகளையும் குருமுகாந்திரமாக தொடர்ந்து செய்து செய்து
ஆசானாகிய குருவை ஈசனாக அதாவது சிவமாக அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும். “குருவே சிவம்”
என்பதையும் ஆசானே சிவம், சிவமே ஆசான் என்பதை உள்ளார்ந்து உண்மையுடன் உணர வேண்டும்.
குருவே சிவமென உணர்ந்து உணர்ந்து வணங்கி வருபவர்களே உயர்நிலையை அடைவார்கள். குருவின் திருமேனியை
காண்பதே நன்மை தரும் என்பதை உணர்ந்து குருவினை பார்த்தவுடன் பணிந்து நிற்பார்கள். பண்புள்ளவர்கள்
குருவிற்கு செய்யும் சேவைகள் அனைத்தையும் சிவதொண்டாக அவரெல்லாம் கருதி தொண்டினை திறம்பட செய்து
வருவார்கள் பண்புடையோர்.
ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிகனை முருகப்பெருமானாக எண்ணி வணங்கி வர வேண்டும். மும்மலக்குற்றம்
அற்ற நிர்மலனாகிய சண்முகப்பெருமானே அரங்கன் என்றே அற்புதமாய் எண்ணி வணங்கி வர வேண்டும். ஆறுமுக
அரங்கமகா தேசிகனும் சுப்பிரமணியராகிய யானும் ஒன்றன்றி வேறல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.
எனவே உலக மக்களே நீங்கள் என்றுமே குருவின் திருவடிகளைப் பற்றி குரு உபதேசத்தின் வழியினைப் பின்பற்றி
நடந்திட வேண்டும். இல்லையெனில் அவர்களை அஞ்ஞானம் ஆகிய அறியாமை பற்றிக் கொள்ளும். நன்மையே
தருகின்ற குருவின் நாமங்களை பயபக்தியுடன் நாமஜெபமாக நாளும் சொல்லி வருவதுடன் பணிந்து வணங்கி வர
அவர்களை எமனாகிய மரணமும் தீண்டாது விலகிப் போகும். அவர்களுக்கு எமபயம் இல்லை, அவர்கள் என்றும்
மாறா பேரின்பத்தை அடைவர், குருவின் திருநாமங்களை சொல்வோர்க்கு சுமைகள் ஏதும் இல்லையப்பா.
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது அவர்களுக்கு சிவத்தின் அருள் பூரணமாக கிடைத்திடும்.
ஓங்காரக்குடிலாசான் வாழ்க வாழ்க என்று சொல்லிட அவர்களது வாழ்வினில் குறைகள் ஏதும் வராது. அவர்கள்
ஞானிகளாகவும் ஆகிடும் வாய்ப்பை பெறுவர்.
உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனின் பெருமைகளையும், ஏழாம் படை வீடு அரங்கன் வாழும்
ஓங்காரக்குடிலின் பெருமையையும் பேசுவதே தொண்டர்களின் முக்கிய தொண்டாகும். இது முருகப்பெருமான் யான்
தொண்டர்களுக்கு கூறும் கட்டளையாகும்.
தொண்டர்களே உங்களை முருகப்பெருமான் யானும் கேட்கிறேன் என் மகன் அரங்கன் பெருமைகளை உலகறிய
பேசுவது குற்றமோ? சொல்லுங்கள் தொண்டர்களே! அரங்கன் புகழை அறிய வேண்டுமாயின் முருகப்பெருமானின்
பெருமையை குடிலிற்கு வந்து பாருங்கள் கண்டு கொள்வீர்கள்.
ஓங்காரக்குடிலிற்கு வந்து பாருங்கள் உலக மக்களே ஆங்கே வீற்றிருக்கும் குடில் ஆசான் அரங்கமகா தேசிகனை
சுப்பிரமணியராய் பாருங்கள். அரங்கனே நான்தானப்பா , அரங்கனே என் வடிவமப்பா, அரங்கனை சண்முகம் யானும்
அற்புதமாய் சார்ந்துள்ளேனப்பா.
ஆன்மீக தொண்டர்களே , அன்பர்களே வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு உங்களது சஞ்சலங்களை குடில் வந்து தீர்த்துக்
கொள்ளுங்கள். குடிலை நாடி வந்து குடில் பெருமை உணர்ந்து குடில் உணவின் அற்புதம் உணர்ந்து சொல்லுங்கள்
உலகிற்கு, உலகறிய எடுத்துரையுங்கள் குடில் பெருமையையும் குடில் உணவின் அற்புதத்தையும்.
தொண்டர்களே அன்பர்களே உலகமெலாம் அறியவே உரக்க கூறிடுங்கள், குடில் உணவு நோய் தீர்க்கும் மருந்து என்று,
குடில் உணவு அருள் தரும் அருள் உணவு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும்
தொண்டு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு வள்ளல் தன்மையுடையது என்று, வள்ளல் பெருமான்
ராமலிங்க சுவாமிகளுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள்.
இவ்வுலகினில் வள்ளல் ராமலிங்க சுவாமிகளுக்கு பின் அன்னதானத்தினை இவ்வுலகினில் சிறப்புடன் வழங்கியது
யார்? வள்ளலுக்கு பின் அன்னதானத்தினை அற்புதமாய் வழங்கியது அரங்கமகா தேசிகா நீதானப்பா. வள்ளல்
பெருமான் ராமலிங்கமும் அன்புடன் அருள் செய்து அரங்கா உம்மை வாழ்த்துகின்றாரப்பா. வாழ்த்தினை
பெற்றுவிட்டாய் அரங்கா நீயும், வள்ளல் ராமலிங்கத்தையும், அகத்தியம்பெருமானையும் முருகப்பெருமான் எம்மையும்
கண்டுவிட்டாய் அரங்கா இக்கணம் முதலாய்.
உலகினில் உள்ள தொண்டர்களே முருகப்பெருமான் யானும் உங்களுக்கு கட்டளையாய் சொல்லுகின்றேன் இப்போது,
உங்களது ஊழ்வினைகளை அகற்றிக் கொள்ள வேண்டுமாயின் அவசியம் அரங்கமகா தேசிகனை காண வேண்டும்.
அரங்கனை கண்டு பயபக்தியுடன் பணிந்து அரங்கன் ஆற்றும் தானதரும் பணிகளுக்கு தொண்டுகளை செய்திடுங்கள்.
தூய்மையான தொண்டுகள் செய்திட அது சுப்பிரமணியர் எனக்கு செய்யும் சேவையாக மாறிடும். அது பொல்லாத
வினைகளை புண்ணிய சேவையாக மாறிடும். பொல்லாத வினை அகற்றும் வல்லமைமிக்க அரங்கனின் சேவைகளை
மனம் விரும்பி செய்வோர்க்கு புண்ணியங்கள் பலவாறாய் கிட்டுமப்பா.
அரங்கா சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் இப்போ. இந்த காலச் சூழ்நிலையில் அரங்கா உமது ஞானதேகமதில்
மூலக்கனல் பெருகி நிற்குதப்பா. ஆதலினால் தேகத்தினில் சட்டென்று வலி தோன்றுமப்பா. சஞ்சலப்பட வேண்டாம்
அரங்கனே அது தானே விலகிப் போய்விடும். முருகப்பெருமான் எனது அருள்பலத்தினாலே அரங்கா உம்முள்
தோன்றிய வலிகள் விலகிடும். வள்ளல் பெருமானாரின் அகவல் பாராயணத்தினை பாடிடக் கேட்டால் விரைந்து
உமக்கு நலம் உண்டாகும்.
இவ்வுலகினில் உலக நன்மைக்காக உலகப் பெருமாற்றத்திற்காக முற்றுப்பெற்ற முனிவன் அரங்கனே நீ மீண்டும்
அவதரித்து மக்கள் நலன் கருதி மக்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஏதுவாக ஏழாம் படை வீடாய்
ஓங்காரக்குடிலினை சுத்த ஞானக்குடிலாக அமைத்து உலகினர்க்கு சேவைகள் செய்து வருகின்றாய். உலகோர்க்கு
தொண்டு செய்யும் உமது அறப்பணிகளுக்கு மனம் விரும்பி பொருள் தருகின்ற மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து
வளம் பெறுவார்களப்பா.
ஆதலினால் மக்களே உங்களது பாவச்சுமை நீங்கிட குடிலிற்கு தானம்தனை அளித்து புண்ணியம் பெறுவீர்
சுப்பிரமணியர் எனது அருளைப் பெற்றிட பொருளினை அளிப்பீர் அரங்கனுக்கு. பொருள் அளித்து எமது அருளை
பெற்றிடவே அழைப்பு விடுகின்றேன் முருகப்பெருமான் யானுமே, உலகோரே எனது அழைப்பை ஏற்று ஏழாம் படை
வீடு ஓங்காரக்குடிலினை நாடி வந்து அரங்கனை கண்டு தரிசியுங்கள். மனம் மகிழ ஞானம் பெற்றிட வந்து காணுங்கள்
அரங்கமகா தேசிகனை. இன்றே உடன் வந்து காண அழைக்கின்றேன் உலகோரே, உங்களை அன்புடன்
முருகப்பெருமான் யானுமே!
மகா ஞானி அரங்கனும் முருகப்பெருமானும் யானும் ஒன்றுதானப்பா. ஈசனும் அரங்கனும் வேறல்ல ஒன்றுதானப்பா.
மேன்மைமிக்க குரு அரங்கமகா தேசிகன் ஈசனின் அவதாரமாகும். ஆதலினால் பயபக்தியுடன் மேன்மையாய் குருவின்
சேவைகளை தொண்டுகளை செய்து வர வேண்டும் தொண்டர்களே.
குருவிற்கு செய்யும் தொண்டு கோடி புண்ணியங்களை தந்திடும்.
குருவிடம் பெறும் தீட்சை உபதேசம் பிறவித் துன்பத்தை போக்கிடும்.
குருவின் வாக்கு உங்களது மாறாத விதியையே மாற்றி நிற்கும்.
ஆதலினால் மக்களே உடன் விரைந்து வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு முருகப்பெருமான் அழைக்கின்றேன் அன்போடு,
வாரீர் வாரீர் மக்களே இன்றே விரைந்து வாரீர். ஓங்காரக்குடில் நாடி வந்துமே அரங்கதரிசனம் பெற்று ஆசி தீட்சை
ஏற்று குடில் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து அரங்கனுக்கு உத்தம் சீடர்களாக தொண்டுகளைச் செய்து
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்றே வழிமுறை உரைத்திட்டேன் முருகப்பெருமான் யானுமே.
எம் அவதாரமே ஆறுமுக அரங்கமகா தேசிகனே வாழிய வாழி எனக் கூறுகிறார் மகான் சுப்பிரமணியராகிய
முருகப்பெருமான்.
-சுபம்