உலக மாற்றத்தில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் பங்குஉலக மாற்றத்தில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் பங்கு

என்ற தலைப்பில் 03.07.1997 அன்று அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம

அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! உங்க அனைவருக்கும் வணக்கம்.
     மலேசியாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், துறையூரிலிருந்தும் பல அன்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அன்பர்கள் மிகப்பெரிய தியாகம் செய்து நமது சங்கத்தை வளர்த்து வருகிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட சுமார் இருபது வருடங்களாக இந்த சங்கம் பரவி இருக்கிறது.
     நமது சங்கம் 7.09.1976ல் துவங்கப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து படிப்படியாக சங்கம் வளர்ந்து வருகிறது. இந்த சங்கம் திடீரென வளரவில்லை. அப்படி வளர்த்தால் பிரச்சனை வரும்.
     இந்த சங்கம் மெதுவாகத்தான் வளர்ந்து வருகிறது. மெதுவாக வளர்ந்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மற்ற சங்கங்கள் திடீரென வளர்வதும், பிறகு காணாமல் போவதுமாக இருக்கிறது.
     ஆனால் நாங்கள் உண்மையைப் பேசுகிறோம். “பிறருக்கு பசியாற்றுங்கள், தியானம் செய்யுங்கள்” என்ற உண்மையைப் பேசுகிறோம். ஞானிகளின் நூல்களும் இதைத்தான் சொல்கிறது.
                அற்றார் அழிபசி தீர்த்தல் அக்துஒருவன்
                பெற்றான் பொருள்வைப் புழி.
                                                – திருக்குறள் – ஈகை – குறள் எண் 226       
                என்பார் மகான் வள்ளுவப்பெருமான். மகான் இராமலிங்கசுவாமிகளும் “பசியாற்றுங்கள்” என்றார். ஆக “பசியாற்றுவித்தல்” என்ற கொள்கையைத்தான் மகான் இராமலிங்கசுவாமிகளும் மற்றும் எல்லா ஞானிகளும் சொன்னார்கள்.
     மலேசியா போன்ற நாட்டில் பசியாற்றுவதற்கு ஏழைகள் இல்லை. இந்தியா போன்ற நாட்டில் ஏழை எளிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்/
     ஏனென்றால் மக்கள்தொகை மிகுதியானால், வறுமை இருக்கத்தான் செய்யும். எங்கு பார்த்தாலும் அன்னதானம் செய்ய வேண்டும்.
     எனவேதான் மக்கள் விரும்பி அன்னதானம் செய்ய இங்கே வருகிறார்கள்.
     இங்கே சாப்பிட வரும் மக்கள் பசிக்காகவோ, பிரசாதம் உன்ன வேண்டுமென்பதற்காகவோ வரலாம். இரண்டு தரப்பாகவும் இருக்கலாம்.
     நம் இந்தியா புண்ணியம் செய்ய, நல்ல வாய்ப்புள்ள நாடு. சுத்த ஆன்மிகம் இருக்கக் கூடிய இந்த நாட்டில்தான், வறுமையும் மிகுதியாக இருக்கிறது.
     கடவுள் தோன்றியதே இந்த நாட்டில்தான். கடவுள் தோன்றியது மட்டுமல்ல, கடவுளை அடையக்கூடிய வழியை சொன்னதும் இந்த நாடுதான். இந்த நாட்டிலுள்ளவர்கள் சுத்த ஆன்மீகத்தைப் பேசுவார்கள்.
     மற்ற நாடுகளில் இப்படி பேசியிருந்தாலும், கடவுளைப் பற்றி அறியாமல் பேசியிருப்பார்கள் அல்லது அவர்களுக்கு புரிந்திருக்கலாம், புரியாமலும் பேசியிருக்கலாம்.
     இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், கடவுளை அடையக்கூடிய மார்க்கத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடவுளை அடைதல் என்பது நாமே கடவுளாக ஆவதுதான். நாம் நிலை உயர்வது கடவுளை அடைவதற்குதான். மனிதனாகப் பிறந்த நமக்கு, மும்மலம் ஆகிய காமதேகம் நீங்கினால் கடவுளாகலாம்.
     கடவுளைப்பற்றி அறிகிறவன் தன்னைப் பற்றி அறிகிறான். ஆக, நமது  சங்கம் ஆரம்ப காலத்திலிருந்து ஞானிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நாம் மட்டுமல்ல, ஞானிகளும் தங்களது பாடல்களில் சொல்லியிருகிறார்கள்.
     அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
            அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
      அகத்தியரே காஷாய வேதா மீவார்
      அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
            அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
      யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
            அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
      ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
                             – மகான் கொங்கண மகரிஷி
லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்தி                                                                    திருமூலரையும்
லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சித்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய்
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
                                    – மகான் அழுக்கண்ணர் – 6
                போடுவது திலதமடா மூலர் மைந்தர்
                                போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
                நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
                                நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
                ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
                                எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
                தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
                                செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே
                                                                                              –மகான் சட்டைமுனிநாதர் 10.
                காப்பான கருவூரார் போகநாதர்
                              கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
                மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
                                 முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
                கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
                                 கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
                வாப்பன வாதத்திற்கு ஆதியான
                                வாசமுனி கமலமுனி காப்புத் தானே.
                                    – மகான் உரோமரிஷி
     ஞானிகள் தங்களது பாடல்களில், வழிபாட்டைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் வழிபாடுதான் முக்கியம் என்று சொல்வார்கள்.
      சிவனே சிவஞானி யாதலால் சுத்த
      சிவனே எனவடி சேரவல் லார்க்கு
      நவமான தத்துவ நன்முக்தி நண்ணும்
      பவமான தின்றிப் பரலோக மாமே.
                                                – திருமந்திரம் – சிவகுரு தரிசனம் – கவி எண் 1580
     சிவனே சிவஞானி, ஞானி என்று சொல்வார், கடவுள் ஞானிதான் என்று சொல்வார். ஞானி என்று சொன்னால் தன்னைப் பற்றி அறிந்தவன், இயற்கையை வென்றவன் என்று அர்த்தம். இயற்கையை வென்றவர்கள் ஞானிகள்.
     இயற்கை என்பது பசி, காமம், முதுமை. இதை வென்றவர்கள் ஞானிகள். பசியை வென்றவன் காமத்தை வெல்வான். காமத்தை வென்றவன் முதுமையை வெல்வான். முதுமையை வென்றவன் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வான். ஆக இப்படி ஒரு படிக்கட்டுகள். இப்படித்தான் ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
      நாங்கள் இதைத்தான் உங்களிடம் சொல்கிறோம். ஞானிகளை வணங்குங்கள், மகான் திருமூலதேவரை வணங்குங்கள், மகான் கருவூர்முனிவரை பூஜை செய்யுங்கள், ஆசான் அகத்தீசரை பூஜை செய்யுங்கள்.
     எல்லா ஞானிகளின் நூல்களிலும் இந்த கருத்து வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. எங்கேயோ கடவுள் இருக்கிறாரென்று நினைக்கிறான்.
     ஆனால் எங்கும் இருப்பது இயற்கை, பஞ்ச பூதங்கள்தான். அதுதான் நம்முள்ளும் இருக்கிறது, வெளியிலும் இருக்கிறது.
     அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம்
      அஞ்சு வசப்படுவ தாண்டதினில் – அஞ்சினையும்
      கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு
      விண்டறிய லாமே விதி.
                                                – மகான் திருவள்ளுவர் ஞானம் – கவி எண் 18
                அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம் என்பார் மகான் திருவள்ளுவர். கடவுளைப் பற்றிச் சொல்லுகின்ற எல்லோரும் ஒரு கற்பனையாகதான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஞானிகள்தான், உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.
     ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும்.
                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370
                ஆரா இயற்கை, இதற்கு மேலான வார்த்தையே இல்லை.
     பஞ்ச பூதங்களை, உள்ளும் புறமுமாக நம்மிடம் இருக்கக் கூடிய பஞ்ச பூதங்களை, யார் அறிந்து தன் வயப்படுத்துகிறானோ, அவனே கடவுளாகிறான். பூஜையில் தினமும் இதை கேட்டுக் கொண்டே வரவேண்டும்.
     மனிதன் சாப்பிடுகிறான், பசி இருந்து கொண்டே இருக்கும், செத்தால் சாப்பிட மாட்டான். மனிதன் பெண்ணோடு உறவு கொள்வான். இப்படி இருந்து கொண்டே இருப்பான். முதுமை வந்தாலும், எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். கடைசி வரியிலும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கும், அது ஒழியாது, பசியும் ஒழியாது, செயல்பட முடியாது. தொண்ணூறு வயது கிழவனுக்கும் அந்த எண்ண ஓட்டம் இருக்கத்தான் செய்யும். பசி இருக்கத்தான் செய்யும், செத்தால் காமம் ஒழியும். செத்தால் பசி ஒழியும் செத்தால் பரிணாம வளர்ச்சி நிற்கும்.
      பரிணாம வளர்ச்சி, அது வளர்ந்து கொண்டே இருக்கும். ஆரா இயற்கை என்றார். என்றும் நிரப்பவே முடியாது. பசி இயற்கை, உணவு இயற்கை, பெண் இயற்கை, ஆண் இயற்கை, காமம் இயற்கை, கூடுவதும் இயற்கை. கடவுள் இப்படி வைத்திருக்கிறான். பெண்ணையும் ஆணையும் கடவுளே படைத்திருக்கிறான். ஆண் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். உடலுறவு கொள்ளச் செய்வதும் அவன்தான். பின் கருத்தரித்து குழந்தை உருவாவதும் அவன்தான். ஆக நிரப்பவே முடியாது.
     எந்த மனிதனிடமும், எதையும் வேண்டுமா என்றால், வேண்டாமென சொல்ல மாட்டான். முடியாதபோதுதான் வேண்டாமென சொல்வான். ஆனால் மனதில் வேண்டுமென நினைப்பான். வயிறு நிறைய சாப்பிட்டிருப்பான், உணவு வேண்டுமா என்று கேட்பான், வேண்டாம் என்பான். பசி அடங்கி விட்டது என்று அர்த்தம்.
     ஆக பெண்ணுறவு கொள்வான். ஆனால் ஆசை தீராது, மனதில் சபலம் இருந்து கொண்டேயிருக்கும். என்றைக்கும் கடைசி வரையிலும், சாகும் வரையிலும், யாரும் உணவு வேண்டாமென சொல்ல முடியாது, யாரும் பெண்ணுறவு விரும்ப மாட்டேன் என்று சொல்ல மாட்டான். செத்தால்தான் முடிவுக்கு வரும்.
      ஆக நாம் பயன்படுத்தக் கூடிய எல்லா வகையான பொருளைக் கொண்டு, நம்மை நிறைவுப்படுத்த முடியாது. என்ன காரணம், இதுதான் இயற்கை. பசியில்லாமல் இருக்க முடியாது, அது இயற்கை. உணவு இயற்கை. யோகி அமிழ்தபானம் உண்ணுகிறான். பிரம்ம நாடி, ஈஸ்வர நாடி தேகத்தில் இருக்கிறது. அந்த இடத்தில்தான் இந்த கபம் கட்டியிருக்கும். யோகி முதலில் கபத்தை அறுத்து விடுவான்.
     யோகிகளுக்கு தவம் எது என்றால், கபத்தை அறுப்பதுதான் தவம்.
     யோகிகளுக்கு தவம் எது என்றால், உடம்பில் இருக்கும் விகாரத்தை அறுப்பதுதான். இதை புரிந்தவர்களே ஞானிகள்.
      ஆரா இயற்கை – ஆராத இயற்கை. ஆரவே ஆராது. காலையில் பசியாறுவான், ஆனால் மதியம் பசிக்கும். மதியம் பசியாறுவான், இரவு பசிக்கும். இன்று பெண்ணோடு கூடுவான், நாளைக்கும் கூடுவான். பேச்சே இருக்காது. கடைசி வரையிலும் அவானை நிரப்பவே முடியாது. ஆசான் ஆசி பெற்ற மக்கள்தான் இதை வெல்ல முடியும்.
     நிரம்பாத ஆசை, காமம் இருந்தால்தானே பெண், பசி இருந்தால்தானே உணவு, எண்ணம்தானே வெளியில் காண்கின்ற காட்சி. ஞானிகள் இசையை கேட்க மாட்டார்கள், வாசனையை விரும்ப மாட்டார்கள், சுவையை விரும்ப மாட்டார்கள், காட்சியை விரும்ப மாட்டார்கள், பெண்ணுறவை விரும்ப மாட்டார்கள். அத்தனையும் அப்படியே நின்று விடும். இதுதான் நாம் அடையக்கூடிய லட்சியம்.
     அத்தனை விருப்பமும் வெறுப்பாகும். உணவு தேவையில்லை, அமிழ்தபானம் உண்ணுவான். பெண்ணுறவு தேவையில்லை, காமம் இல்லை. அந்த வார்த்தையில் அவ்வளவு வல்லமை இருக்கிறது. அதை ஆசான் வள்ளுவப்பெருமான் அறிந்தவர். இதை யாரும் சொல்ல மாட்டார்கள். ஆசையை ஒழி! என்றுதான் சொல்வார்கள். ஆசையை ஒழி என்று சொல்லலாம். எப்படி என்று கேட்டால் பதில் வராது. இவன் சொல்வான், உன்னால் முடியாது. இயற்கை மிகப் பெரிய வல்லமை கொண்டது. எந்த உடம்பு காமம், பசி, முதுமை, நோய், பிணிக்கெல்லாம் காரணமாக இருக்கிறதோ, அந்த உடம்புக்குள்ளே ஒரு அற்புதச் சுடர், ஜோதி இருக்கிறது. இதை அறிகின்றவன்தான் இந்த ரகசியத்தை அறிகிறான்.
     ஆரா இயற்கை அவாநீப்பின் – நீத்தல் என்றால் ஒரு பொருளின் மீது நாட்டமில்லை, சுத்தமாக நாட்டம் இல்லாது போகும்.
     நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் – எந்த இயற்கை உனக்கு ஆசையை உண்டாக்குகிறதோ, எந்த இயற்கை உனக்கு காமத்தை உண்டாக்குகிறதோ, எந்த இயற்கை இன்னும் வேண்டும், வேண்டும் என்று கேட்கிறதோ, அது ஆறி விட்டது. அதே இயற்கை உனக்கு வஞ்சனை செய்கிறது. அதே இயற்கை உனக்கு வாழ்வு தருகிறது என்பார்கள் நமது ஞானிகள். அவன்தான் நமது தமிழன், இந்தியன். இப்பேர்ப்பட்ட இரகசியத்தை அறிந்து கொள்வதற்கு, ஞானிகள் துணை வேண்டும்.
   
     ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும்.
                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370
     மாறாத இயற்கை பெரும் சுகத்தைத் தரும். இந்த வாய்ப்பு மனிதனுக்குள்ளே இருந்தாலும், அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வதற்கு ஒரே வழி, ஞானிகள் திருவடியைப் பற்றுதல்தான்.
     ஞானிகள் திருவடியைப் பற்றி தியானம் செய்தல். நாம் சுட்டிக் கட்டக் கூடிய இந்த ஒன்றுதான், உலகமெல்லாம் நிற்கும். வேறு எதுவும் நிற்காது.
     நாம் மரணத்திற்கு உரியவர்களாக இருக்கிறோம். நம்மை தோற்றுவித்த இயற்கை, பசி, காமம், முதுமையை தந்து நம்மை கொன்று விடும். அதே இயற்கை பசி, காமம், முதுமையிலிருந்து விடுபட செய்து, நமக்கு மரணமிலாப் பெருவாழ்வையும் தரும்.
     திருவருள் துணையில்லாமல் மரணமிலாப்பெருவாழ்வு என்ற ரகசியத்தை அறிய முடியாது. நாம் ஞானிகளை வணங்க வேண்டும், ஞானிகளை வணங்காமல் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. இதைத்தான் நமது சங்கம் போதித்து வருகிறது.
     ஞானிகளை வணங்குங்கள், ஞானி ஆகுங்கள். ஆசான் அகத்தீசரை பூஜை செய்யுங்கள், அன்போடு நடந்து கொள்ளுங்கள்.
     இந்த வாய்ப்பை மனித வர்க்கம் எப்படி பெறுவது? அவன் தியாகம் செய்தாகணும். தியாகம் செய்யாமல் முடியாது. நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்கக் கூடிய அறிவு இருக்கிறது. அதுவும் இயற்கைதான். நிலையில்லாத பொருள், அதை அடைய வேண்டுமென்று நினைக்கிறான். நிலையான ஒன்றை அடைய வேண்டும் என்ற நினைப்பு வராது. நிலையான ஒன்றை அடைய வேண்டுமென்ற உணர்வு நாம்தான் சுட்டிக் காட்ட வேண்டும். அது என்ன நிலையான ஒன்று?
      பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
      செம்பொருள் காண்பது அறிவு.
                                                – திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 358
                பிறப்புஎன்னும் பேதைமை நீங்கபிறவிக்குக் காரணமான அறியாமை நீங்க வேண்டும். ஆரா இயற்கை அவா நீப்பதற்கு, செம்பொருள் காண வேண்டும். செம்பொருள் என்றால், எது ஒன்று அழியாது இருக்கிறதோ அதுதான் செம்பொருள். செம்பொருள் – செவ்விய பொருள்.
     செவ்விய பொருளை அடைவதற்கு பக்திதான் வழி. பக்தி இல்லையென்றால் செம்பொருளை அடைய முடியாது. எந்த இயற்கை நம்மை வஞ்சிக்கிறதோ, அதை வெல்ல முடியாது. வெல்லமுடியாத இயற்கையை வெல்லுவதற்கு ஞானிகள்தான் ஆசி தர வேண்டும். தலைவன் ஆசியில்லாமல் வெல்ல முடியாது.
     தலைவனுடைய ஆசியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று நமது சங்கம் சொல்லுகின்றது. நமது சங்கம் சுட்டிக்காட்டிய அத்தனைபேரும் பிறப்பென்னும் பேதைமை நீக்கியவர்கள். பிறவிக்குக் காரணமான மும்மல தேகத்தை உடைத்தெறிந்தவர்கள். காமம், குரோதம், மோகம் அல்லது மல ஜல சுக்கிலம் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த மும்மலத்தையெல்லாம் வென்றவர்கள். அவர்களுடைய ஆசியை பெற்று மும்மலத்தை வெல்லுங்கள் என்று நாம் சொன்னோம். ஞானிகளை பூஜை செய்ய செய்ய செய்ய ஒருவனுக்கு உடம்பில் இருக்கும் மாசு நீங்கும், பூஜை செய்ய செய்ய உடம்பில் இருக்கும் கபம் அற்றுப்போகும்.
     மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
      ஈசனைக் காட்டு முடம்பு.
                                – ஔவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 6
                “இந்த இயற்கையை வெல்ல வேண்டும். என்னைத் தோற்றுவித்தது மட்டுமல்லாமல் எனக்கு உணவு தந்து, அதே சமயத்தில், பசியையும் கொடுத்து, உணவையும் கொடுத்து, பெண்ணையும் படைத்து, பெண்ணோடு கூடுவதற்கு அறிவும் தந்து, பின்பு இயற்கை என்னைக் கொல்கிறது. ஆகவே இதை உடைத்தெறிய அருள் தர வேண்டும்” என்று ஞானிகளை பூஜை செய்து கேட்க வேண்டும். இதுபோன்ற அறிவை ஞானிகள்தான் தருவார்கள்.
     ஆக இதையெல்லாம் பெறுவதற்கு நாங்கள் உங்களுக்கு சொல்லித் தர வேண்டும். இதுதான் சாது சங்கத் தொடர்பு. சாது சங்கத் தொடர்பு இல்லையென்றால் ஒருவனுக்கு இது போன்ற அறிவு வராது. மகான் திருவள்ளுவர் இதை சொல்வார்,
                பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
                மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
                                – திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 351
                பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்குகிறான். நாம் காண்கின்ற உலகம் பசுமையாக இருக்கும், ரொம்ப அழகாக இருக்கும். மீண்டும் எல்லாம் மாறும்.
      அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
      அற்குப ஆங்கே செயல்.
                                – திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333
                நிலையில்லாத செல்வத்தைப் பெரும் போதே நிலையானதை செய்து கொள் என்று சொல்வார் மகான் வள்ளுவப்பெருமான். மகான் வள்ளுவன் ஞானியல்லவா, அதனால்தான், பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு என்று சொல்கிறார்.
     நிலையில்லாத செல்வத்தைப் பெறும் போதே நிலையானதை செய்து கொள் என்று சொல்வார் மகான் வள்ளுவப்பெருமான். மகான் வள்ளுவன் ஞானியல்லவா, அதனால்தான், பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு என்று சொல்கிறார்.
     நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்கி, அடைய நினைப்பதனால்தான் இழிந்த பிறவி வருகிறது என்பதை சொன்னது நமது மகான் வள்ளுவப்பெருமான். அதில் எவ்வளவு பெரிய ரகசியம் அடங்கியிருக்கிறது. உலகத்தில் காண்பதெல்லாம் நிலையில்லாதது, ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீகவாதிகள் இந்த உலகத்தை நல்லபடி பயன்படுத்துவார்கள். உணவு, உடை, தவத்துக்குரிய இடம், நல்ல பண்புள்ள மக்கள் இதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மயங்கக் கூடாது. மயங்கினால் நிச்சயமாக “மாணாப்பிறப்பு” என்பார்.
      இது இழிந்த பிறவியடா! என்பார். ஆக பொருளல்லவற்றை பொருளென்று மயங்குதல்.
    
     இந்த உடம்பு அழியக்கூடியதுதானே? நீ காண்கின்ற பெண் அழியக்கூடியதுதானே? நீ எதை செய்தாலும் அது அழியக்கூடியதுதானே? ஆனால் அழியக்கூடியது என்று சொல்லி விட்டுவிடாதே. அதுவே நமக்குத் துணையாக இருக்கிறது. பொருள், மக்கள், வீடுவாசல் எல்லாம் நமக்குத் தேவை. இதை பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவு என்றான்.
     பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு என்றார் ஆசான் திருவள்ளுவர். நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்குகின்ற தன்மை மாணாப்பிறப்பு. இதில் நீ மயங்காதே!
     இந்தப் பொருள், கட்டிடம், நாம் செய்யும் வேலை அத்தனையும் நிலை என்று நம்பாதே. நம்பினால் நிச்சயம் நீ ஏமாந்து போவாய். இதன் கூடவே இருந்து மக்களோடு மக்களாக, பொருளோடு பொருளாக இருந்து பொருளை சேர்ப்பார்கள், கட்டிடம் கட்டுவார்கள், காரில் போவார்கள், ஏ.சி. வைத்திருப்பார்கள், மெத்தையில் தூங்குவார்கள், சாப்பிடுவார்கள், மனைவி மக்களோடு பேசுவார்கள். ஆனால் தனியாக இருப்பார்கள்.
     காண்பவையெல்லாம் நிலைத்து நிற்கும் என்று மயங்குகின்ற மயக்கத்தால் இழித்த பிறவி வரும். யோகிகள் இந்த உலகத்தை விட்டுப் போக மாட்டார்கள். அவர்கள் இல்லறம் நடத்துவார்கள், வியாபாரம் நடத்துவார்கள், அரசியலில் இருப்பார்கள். விஞ்ஞானியாக இருப்பார்கள. மருத்துவனாக இருப்பார்கள், அனைத்தும் செய்வார்கள். ஆனாலும் நாமஜெபமும் செய்வார்கள்.
     ஆனால் அவனை பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஆடை ஆபரணத்தில் மாற்றமே இல்லை. பார்த்தால் உலக நடையில் இருப்பது போல் இருப்பான். உலக நடையில் இருந்து கொண்டே நாமஜெபத்தை செய்கிறான். எவ்வளவு அறிவு இருக்க வேண்டும்? உலகத்தின் மேல் அவனுடைய பார்வை எப்படி இருக்கிறது? மகான் வள்ளுவப்பெருமான், இவன் விசயம் தெரிந்தவன் என்று பாராட்டுவான்.
     என்ன விசயம் தெரிந்து கொண்டான்? நிலையில்லாதது என்று தெரிந்து கொண்டும் வெறுக்காமல் இருந்தான். ஒன்றை வெறுக்கவும் மாட்டான், ஒன்றை விரும்பவும் மாட்டான்.
     பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு – இங்கே நிலையில்லாத பொருளை நிலையென்று மயங்கினான். அதனாலே இழிந்த பிறவி என்று சொன்னார். கடவுளை அறிமுகம் செய்யும்போது, மறுபடி சொல்வார்,
                வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
                யாண்டும் இடும்பை இல.
                                                – திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 4
               
                கடவுளை அடைய விரும்புபவர்கள் ஒன்றை வெறுக்கவும் கூடாது விரும்பவும் கூடாது. வெறுத்தால் பிரச்சனை வரும். உலகப் பொருளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
     உலக மக்கள்தான் நமக்கு ஏணியாக இருப்பார்கள். நீயும் உயரலாம். அவர்களையும் உயர்த்தலாம். நீ புரிந்து கொண்டாய். வாழ்க்கையைப் பற்றி நீ புரிந்து கொண்டாய். உலகமென்றால் அழியும் என்று அறிந்து கொண்டாய். அழகு கேவலமாகும் என்று அறிந்துகொண்டாய்.
     எந்தப் பொருளும் நிலையானதல்ல என்பதை அறிந்து கொண்டாய். நிலையில்லாத பொருளை நீ உன் தவத்திற்கு அல்லது உன் ஆன்ம ஆக்கத்திற்கு அல்லது மோட்ச லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வது அறிவு என்பார். இந்த அறிவு மக்களுக்கு வர வேண்டும் எனபதற்கு நீ பாடுபட வேண்டும். நீ தெரிந்து கொண்டாய். அல்லற்படுகின்ற மக்களுக்கு நீ வழி காட்ட வேண்டும். இது சட்டம். உலகமக்களுக்கு வழிகாட்டி அவர்களையெல்லாம் தெளிவுபடுத்தி, அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். அப்படி நல்வழிப்படுத்தவில்லை என்றால், நீ கற்ற கல்வி, பயன் இல்லாமல் போய்விடும் என்பார்.
      வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல – அவன் ஒன்றை விரும்பவும் மாட்டான், ஒன்றை வெறுக்கவும் மாட்டான். அப்படி இருந்தால்தான் அவனுக்குத் துன்பமில்லை என்றார். இதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். ஆசான் அகத்தீசரை அறிந்து கொண்டோம்.
     ஆசான் அகத்தீசர் யாரையும் வெறுக்கவும் மாட்டார், யாரையும் விரும்புவதும் இல்லை. அவர் இந்த உலக மக்களோடு இருந்து கொண்டு, அப்படியே தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
     தன் கர்மாவை, தன் செயல்பாட்டை நிறுத்த மாட்டான். செயல்பாட்டை நிறுத்தினால் பிரச்சனை வரும். வேலை செய்வான், குடும்பத்தை காப்பாற்றுவான், அனைத்து காரியங்களையும் செய்வான். அவர்களுடன் இருந்துதான் தன் கடமையை செய்ய வேண்டி இருக்கும். கடமையை விட்டவன் இந்த இடத்திற்கு வரவே முடியாது. அந்த பாதை போய்க் கொண்டே இருக்கும்.
     இதற்கு எத்தனை வருடம் ஆகும்? இதென்ன ஆறு மாதம் ஒரு வருடமா? ஒன்றை வெறுக்கலாமா? அவசியமில்லை. கடமையை செய்து கொண்டே போக வேண்டும்.
     இல்லறத்தான் மனைவி, பிள்ளை, தாய் தந்தை, அண்ணன் தம்பி, மாமன் மாமி இவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வான். மேலும் நட்பையும் பயன்படுத்திக் கொள்வான். இப்படி பயன்படுத்திக் கொண்டு அதன் கூடவே போய்க் கொண்டிருப்பான்.
     ஆனால் அவன் சிந்தை மட்டும் இதெல்லாம் நிலையில்லாதாது, என்றைக்கும் அழிவது, நாம் இப்போது அன்பு செலுத்தும் மனைவி, பிள்ளைகள், தாய் தந்தை அத்தனை பேரும் அழியக் கூடியவர்கள்தான்.
     ஆனாலும் நாம் போகிற பாதைக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவு அவனுக்கு இருக்கும். அவன் அப்படியே போய்க்கொண்டிருப்பான். இது போன்ற அறிவை ஒருவன் பெற்றபின், அவன் மற்றவர்களுக்கு சொல்லத்தான் வேண்டும். இதைத்தான் மகான் திருவள்ளுவப்பெருமான் கூட சொல்வார்.
     ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
      நோற்பாரின் நோன்மை உடைத்து.
                                                – திருக்குறள் – இல்வாழ்கை – குறள் எண் 48
                ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைஞானிகளின் ஆசி பெற்று இல்வாழ்கை வாழ்கின்ற மக்கள், வெளியே தெரியாது இந்த உலகத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களுக்கும் இதை சொல்வார்கள். ஏன்? நமக்கு இந்த அறிவை ஆசான் தந்தார்.
     மூன்று நேரம் உணவு தந்து வளர்க்கப்பட்ட இந்த உடம்பு அழியும். அழிவதற்குள்ளேயே நிலையானதை செய்து கொள்ள வேண்டுமென்ற அறிவை தந்திருக்கிறார்.
     அந்த அறிவை மற்றவனுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் ஏன் சொல்லவில்லை என்றால், அது பாவச் செயலாகிவிடும்.
     பிள்ளைகள் மீது அன்பு காட்டி, பிள்ளைகளுக்கு ஆசான் நாமத்தைச் சொல்லி, மனைவியிடம் சொல்லி, மற்றவர்களுக்குச் சொல்லி நெறிப்படுத்துவான். ஆனால் கேட்கக்கூடிய மனைவியாக இருந்தால் சொல்வான். இல்லையென்றால் கருத்தை திணிக்க மாட்டான்.
     அண்ணன், தம்பி, மாமன், மச்சினன் போன்றவர்களில் கேட்கின்றவனிடம் அன்பு செலுத்துபவனிடம் மட்டும் சொல்லுவான். கருத்தைத் திணிக்க வேண்டிய அவசியமில்லை.
     இப்படியே இருந்து கொண்டு தன் கடமையையும் செய்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நாட்டு மக்களுக்கும் ஆன்மீகவாதிகள் உண்மையை சொல்லணும். இப்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
     ஆசானிடம் “உன்னுடைய பெருமையை அறிந்து பேச வேண்டும், உன் பெருமையை எடுத்துப் பேச வேண்டும்” அதற்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். ஆசான் பெருமையைப் பேச முடியாது. ஏனென்றால் அது அளவிலாத பெருமை உள்ளது. இதை மகான் திருவள்ளுவப்பெருமான் சொல்வார்,
      துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
      இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
                                – திருக்குறள் – நீத்தார் பெருமை  குறள் எண் 22
               
      ஆக, ஆசான் பெருமையைப் பேச முடியாது. ஆசானைக் கேட்கணும்.
     மனைவியிடம், மக்களிடம் அன்பு காட்டிக் கொண்டே, அவன் தன் கடமையை செம்மையாகச் செய்துதான் போயிருக்கிறான். அவன் பெருமையைப் பேச வேண்டுமென்றால், அவர் பெரிய மகான் என்று இவனிடம் சொல்ல வேண்டும்.
     உலக மக்களுடனே இருந்து, தன் வாழ்க்கையை செம்மைப்படுத்தி கொண்டு, ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு அறிவையும் பெற்று, நித்திய தவம் செய்து ஞானியாவார்கள். மக்களுக்கு அதை எடுத்துச் சொல்லணும். அப்படி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதுதான் நாம் ஜென்மம் எடுத்ததற்குப் பயன் என்றார்.
     இதுதான் பக்தி நெறி. மக்கள் மத்தியில் இது போக வேண்டும். இந்த சங்கம் மக்கள் மத்தியில் பயன் என்றார்.
     காட்டுக்குப் போகாதே, காவி கட்டாதே, பட்டினி கிடக்காதே, மனைவி மக்களை வெறுக்காதே, நித்திய கடமையைச் செய், வேலை வாய்ப்பைத் தேடிக்கொள், வேலை செய், நாலு காசு வரும், அதை வைத்து மனைவி மக்களை கொண்டு குடும்பம் நடத்திக் கொள். கடவுள் ஆவதற்கு இவர்களெல்லாம் வேண்டும். தொடர்ந்து செய்துகொண்டு வா. இதை அறிய வேண்டும்.
    
     இதை புரிந்து கொள். கடவுளை அடைவதற்கு இதுதான் பாதை.யாரையும் வெறுக்காமலும் விரும்பாமலும் கூடவே போய்க்கொண்டிருப்பதுதான் கடவுளை அடையக்கூடிய பாதை. ஆண்டு பல ஆகும், குற்றமே இல்லை. ஆண்டு பல கடந்தாலும் குற்றமே இல்லை. அதன் போக்கிலேயே யோக வேண்டும்.
     இது காமதேகம். கடவுளை அடைவது இலகு என்று நினைத்துவிடாதே. நரகத்தில் தள்ளக்கூடிய இதே சுக்கிலம்தான், விந்துதான் உன்னுடைய நிலையை உயர்த்துகிறது. உன்னுடைய நிலையை உயர்த்துவது இதே விந்துதான்.
     இந்த விந்துவை நிறுத்தினால்,இந்த விந்துவை கட்டினால் கொழுப்பு மண்டிப்போகும். கொழுப்பு மண்டிப்போனால் அறிவு வேலை செய்யாது. அதனால் இல்லறத்தான் பெண்ணுறவு வைத்துக் கொள்ளணும்.
     யோகிக்கு இது எட்டாவது ஜென்மம். இல்லறத்தானுக்கு மனைவியிடம் தொடர்பு கொள்ளவில்லையென்றால் அறிவு வேலை செய்யாது. இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.
                                                – மகான் சிவவாக்கியர் – கவி எண் 529
                மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே என்றார். இல்லறத்தில் இருந்து மனைவியிடம் உறவு கொள்ளவில்லையென்றால் அவன் அறிவு வேலை செய்யாது. இந்த சுக்கிலம் அல்ல அது! அந்த சுக்கிலம் வேறு!
                உண்மையான சுக்கில முபாயமா யிருந்தும்
                வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
                தண்மையான காயமே தரித்துரூப மானதும்
                தெண்மையான ஞானிகள் தெளிந்துரைக்க வேணுமே.
                                                – மகான் சிவவாக்கியர் – கவி எண் 251
                உண்மையான சுக்கிலம் இருக்கிறது. தலைவன் ஆசி இல்லாமல் அதை அறிய முடியாது. ஆசி பெறுவதற்கு சில ஆண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் ஆகும். ஞானிகள் திருவடியைப் பற்றி, குடும்பத்தை நடத்திக் கொண்டு நித்திய கடமையை செய்து கொண்டு, ஆரவாரம் இல்லாமல் காவி கட்டாமல், உலக மக்களுக்குத் தெரியாமல் (தெரிந்தாலும் குற்றமில்லை) இருந்து வந்தால் உண்மையான சுக்கிலத்தை அறியலாம்.
     சுக்கிலத்தைக் கட்டினால், என்ன ஆகுமென்றால், வாழ்க்கை வீணாய்ப்போகும். சிலபேர் துறவு மேற்கொள்கிறேன் என்பான். சிலர் திருமணம் செய்து கொண்டு, பெண்ணுறவு கொள்ளக் கூடாது என்று நினைக்கிறான். இது அறியாமை. குருகுல வாசத்திலிருப்பவர்கள்தான் தெளிவாக சொல்வார்கள். குடும்பத்தினர் உனக்கு பகை இல்லை என்பார்கள். நீ நினைக்கிற சுக்கிலம் அல்ல அது. இது நச்சுத்தன்மை உள்ளது. அது கழுத்து வரைப் போகும். நச்சுத்தன்மை உள்ள சுக்கிலத்தைக் கட்டினால் கொழுப்பு மண்டிப்போகும் என்று இவர்கள்தான் சொல்வார்கள்.
     எப்போது சுத்த சுக்கிலம் வரும்? அது சின்ன விசயமல்ல. நீ அவ்வளவு இலகுவாக நினைத்து விடாதே. அப்படியே போய்க்கொண்டே இருக்கணும், தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கணும். எந்த விதமான சடங்குக்கும் அங்கே வேலை இல்லை.
     இந்த கொள்கையை அறிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டியதில்லை, முடி எடுக்க வேண்டியதில்லை, அலகு குத்திக் கொள்ள வேண்டியதில்லை. அங்கம் புரளத் தேவையில்லை. உண்மைப்பொருள் தெரிந்ததனால் அவன் உலக மக்களுடன் இருப்பான். எந்த சடங்கும் செய்ய மாட்டான், விரதம் இருக்க மாட்டான். விரதம் இருந்தாலும் அது ஒரு வேளை இருப்பான். அதுவும் உடல் ஆரோக்கியத்திற்காக.
     அவனுக்கு விரத அனுஷ்டானங்களெல்லாம் தேவையில்லை. எதற்கும் போக மாட்டான். இப்படி இருந்துதான், அந்த இடத்திற்குப் போகவேண்டும். மனைவி மக்களை விடமாட்டான். அது இந்த சுக்கிலம் இல்லையென்று முன்னமே சொல்லி விட்டான். அது இந்த சுக்கிலம் இல்லையென்று முன்னமே சொல்லி விட்டேன். ஆக உண்மையான சுக்கிலம் ஒன்று இருக்கிறது. இதை குதம்பைச்சித்தர் சொல்வார்,
                மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
                                எண்ணளவு வில்லையடி குதம்பாய்
                                எண்ணளவு வில்லையடி.
                                                                – மகான் குதம்பைச்சித்தர் கவி எண்  32
                இந்த மண்ணை அளந்து விடலாம். வத்து (வஸ்து) என்பது விந்துதான். உலகத்தில் உள்ள எல்லா மண்ணையும் எண்ணினாலும், இந்த விந்துவைப் பற்றி அறிய முடியாது. இது என்ன செய்யும் அண்டத்தைப் பிளக்கும். ஆயிரம் அண்டத்தை உண்டாக்கும். அடேயப்பா! அண்டத்தையும் பிளக்கும், ஆயிரம் அண்டத்தையும் உண்டாக்கும். ஆணை பெண்ணாக்குவான், பெண்ணை ஆணாக்குவான். அணுவை அண்டமாக்குவான். அண்டத்தை அணுவாக்குவான். சிறியதை பெரிதாக்குவான், பெரியதை சிறிதாக்குவான்.
     துணைச்சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
      துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
      ஆணைப்பெண்ணும் பெண்ணையானும் ஆகச் செய்குவோம்
      ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே.
      எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம்
      ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்
      மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்
      மகாராசன் முன்புநீநின் றாடு பாம்பே.
                                                – மகான் பாம்பாட்டிச்சித்தர் – கவி எண் 27, 28
                எல்லாம் செய்யலாம். இந்த ரகசியத்தை அறிந்தவன்தான் தமிழன் வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். இவ்வளவு மர்மம் இருக்கிறதென்கிறார்கள். எதிலிருந்து இவ்வளவு அகதி பெறுகிறார்கள்.
     நீ காமத்திற்குப் பயன்படுத்துகிறாயே விந்து, காமத்திற்குப் பயன்படுத்தி அதன் போக்கிலேயே குடும்பம் நடத்தி திருவடி பற்றுகிறாய் அல்லவா, அவன் சொல்லணும் இதை! அதுதான் சுத்த சுக்கிலம் என்பான். அவன் சொல்லாமல் இவன் ஒன்றும் சொல்ல முடியாது.
     ஆக உலகத்தையெல்லாம் படைக்கலாம், இனி எதை வேண்டுமானாலும் செய்வான். இதற்கு நிகரே கிடையாது. அவ்வளவு வல்லமை உள்ளவன். அதுதான் எழுகடலையும் குடித்து ஏப்பம் விடுவோம் என்றார்.
     ஏழு கடல் தண்ணீரைக் குடித்து ஏப்பம் விடுகிறார் என்றால், அவனுடைய வல்லமையை என்ன சொல்வது? இந்த ரகசியம் இந்த உடம்புக்குத்தான் இருக்கிறது. இதை அறிவதற்குத்தான் மகான் திருவள்ளுவர் சொல்கிறார்,
         
     ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும்.
                                                – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370
                மாறாத, அழிவில்லாத இயற்கை. இந்த இயற்கைதான் சுக்கிலம். இது நம்முடையது அல்ல.
     நாத விந்து கலாதி நமோ நம என்பார் மகான் அருணகிரிநாதர். ஆரம்ப காலத்திலே நாத விந்து தோன்றியிருக்கிறது. அதைத்தான் மகான் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். அதுதான் நம்மை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறது. நாம் இதை அறியணும்.
     இதைப் பற்றி வெளியில் எப்படி பேச முடியும்? விரும்பி கேட்கிறவனிடம் சொன்னால் போதும். மற்றபடி அவசியமில்லை.
     இந்நிலையை அடைய, மனைவியிடம் அன்பு காட்டினாயா? மனைவியை மதித்தாயா? அவள் உன்னை பாவி என்று சொல்லக் கூடாதல்லவா. உன் தாய் தந்தையிடம் நீ அன்பு காட்ட வேண்டும். சகோதரனிடம் அன்பு காட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமையை செம்மையாக செய்ய வேண்டும்.
     அப்படி செய்தாயா? வருகின்ற விருந்தை உபசரித்தாயா? நல்ல முயற்சி உள்ளவனாக இருந்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்தாயா? ஏழைகளுக்கு பசியாற்றினாயா? புண்ணிய காரியம் செய்தாயா? இல்லை தியானமாவது செய்தாயா? இதெல்லாம் செய்தால்தான் வரும். இதையெல்லாம் சொல்ல வேண்டும். இப்படி சொல்லவில்லையென்றால் மக்களுக்கு புரியாது. ஆக, நீங்கள் இந்த கொள்கைகளையெல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லணும். ஆக தலைவன் ஆசி பெறாமல் முடியாது.
     இப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒன்றை மையக்கருத்தாக கொண்டிருக்கும். ஒன்றே ஒன்று நாமஜெபம்தான். நாமஜெபம் செய்கிறோம். நாமஜெபம் செய்தால்தான் அடைய முடியும். ஆசான் அகத்தீசர் நாமத்தை ஜெபம் செய்ய வேண்டுமென்று பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆசான் அகத்தீசர்தான் உலகத்திற்கே முதுபெரும் தலைவனென்றும், அவர்தான் நவகோடி சித்தர்களுக்குத் தலைவன் என்றும் சொல்லியிருக்கிறோம்.
     ஆகவே விந்துவைப் பற்றி பேசுவதெல்லாம் சின்ன விசயமல்ல. அதைப்பற்றி பேசும்போது உலக மக்களுக்கு என்னடா இது! இவ்வளவு நச்சுத்தன்மையுள்ள நாற்றம் பிடித்த ஒன்றைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களே என்பான். இதை நாம் பேசவில்லை, ஆதியில் மகான் அருணகிரிநாதர் நாத விந்து கலாதி நமோ நம என்றார். ஞானிகள் அத்தனை பேரும் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். இதுதான் ரகசியம் என்று சொல்லியிருப்பார்கள்.
     இதை உலக மக்கள், விரும்பியவன் கேட்டால் சொன்னால் போதும். விரும்பியவனுக்கு சொன்னால் போதும். அடிப்படை எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ, அந்த இயற்கையை அறிந்து கொண்டவன் கடவுள் ஆவான். அதற்கு ஞானிகளின் ஆசியும் இருக்கிறது. அதை மையக்கருத்தாக வைத்து பேசியிருக்கிறோம்.
     இருபதாம் நூற்றாண்டு முடிவிலோ, இருபத்தியோராம் நூற்றாண்டு தொடக்கத்திலோ இந்த சங்கம்தான் உலகத்தை ஆளும். நாம் அடிக்கடி பலமுறை சொல்லியிருக்கிறோம். இந்த சங்கம் உலகத்தை ஆளும்! என்னய்யா காசு ஆசை பிடித்துவிட்டதா? பேராசை வந்து விட்டதா? பதவி ஆசையா? பதவி ஆசை எங்களுக்கில்லையப்பா. பண ஆசையோ, பதவி ஆசையோ எங்களுக்கு கிடையாது.
     இந்த சங்கத்தார்கள்தான், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள்தான் உலகெங்கும் உண்மை ஆன்மீகத்தைப் பரப்பப் போகிறார்கள். என்ன காரணம்? எங்கு பார்த்தாலும் அராஜகம் நடக்கிறது. அழிவதற்குரிய கருவிகளுடன் அராஜகம் நடக்கிறது, முறைப்படுத்துவதற்கு முடியாது. அவன் இஷ்டத்திற்கு ஆயுதத்தை தயாரித்துக் கொண்டு பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.
     ஆக நம் சங்கம் ஆற்றல் பொருந்திய சங்கம். எதிரிகளால் செய்யப்பட்ட எல்லா ஆயதங்களையும் முடமாக்க முடியும். அதை நிறுத்தி வைக்க முடியும். அந்த ஆற்றல் நமது சங்கத்தார்க்கு உண்டு. ஆசான் ஆசியோடு, ஆசான் ஞானபண்டிதனாலும், மகான்  அகத்தீசர் ஆசியினாலும் இந்த உலகத்தை ஆளுவோம் என்று சொல்வது வெறும் பேச்சல்ல! நாங்கள் வெறும் பேச்சு பேச வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில் பேராசையுமல்ல. பதவி ஆசை அல்ல, பொருளாசை அல்ல. ஒன்றே ஒன்று. கடவுள் நமக்கு இந்த வாய்ப்பைத் தருகிறான். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத் தலைவனுக்கும் இந்த வாய்ப்பைத் தந்தான். என்ன காரணம்? ஏனய்யா இந்த வாய்ப்பைத் தருகிறான் என்று கேட்டான். உலகம் சேமமாக இருக்க வேண்டும்.
      உண்டான விதம் என்றன் குருவெனக்கு
            உணர்ந்திடவே ஓதிவைத்தார் உலகில் சொன்னேன்
      சண்டாள அந்தணரின் சவித்தாரம் போம்
            சார்வாகப் பதிணென்பேர் சித்தொன் றெய்தத்
      தெண்திசையில் வியாபித்து திடமாய் ஏய்தித்
            திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து
      மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்டி
            மன்னனென ஒருவர் உலகாள்வார் முற்றே.
                – மகான் கோரக்க மகரிஷி அருளிய சந்திர ரேகை – உலக மாற்றம் – கவி எண் 100
                அந்த வாய்ப்பு நமது சங்கத்தார்க்குண்டு. வேறு வழியே இல்லை. நம் சங்கத்தார்கள் பேராசைக்கார்கள் அல்ல, பொறாமைக்காரர்கள் அல்ல. பொருளாதாரத்தைப் பிறரிடம் கவர்கின்றவர் அல்ல. நாம் மற்றவர்கள் போல் பொருளாதாரத்திற்காக நாம் சங்கத்தை துவங்கவில்லை. நாட்டு நலனுக்காக, நாட்டு மக்களுக்கு உண்மை ஆன்மிகம் பரவ வேண்டும் என்பதற்காக சங்கத்தை நடத்துகிறோம்.
     ஞானசித்தர் காலம் என்பதனாலே, இப்போதுதான் சொல்கிறார்கள் “ஞானியை வணங்கச் சொல்” என்கிறார்கள். ஞானியை வணங்க, முன்னர் அனுமதிக்க மாட்டார்கள். மகான் போகமகாரிஷி “எங்களை அறிமுகப்படுத்தாதே” என்பார். இப்போதுதான் அறிமுகப்படுத்துகிறோம். நாம் சொல்கிறோம், இப்போது இந்த சங்கம், உண்மை ஆன்மிகம் பரவுவதற்கு வழி சொல்லும். அதே சமயத்தில் எங்கு பார்த்தாலும் அராஜம், பல்வேறு பிரச்சனைகள். ஒருவரை ஒருவர் மதியாமை போன்ற பிரச்சனை இருக்கிறது.
     சில பகுதியில் இனச்சண்டை, பணச்சண்டை எல்லா சண்டைகளும் இருக்கிறது. எல்லா சண்டைகளையும் ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தும் வல்லமை நம் சங்கத்தார்க்குத்தான் உண்டு. நாம் அதற்குத்தான் வந்திருக்கிறோம். இதுதான் நாம் வந்திருக்கும் நோக்கமே. நம்மை அனுப்பியிருக்கிறான் கடவுள்.
     பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால்தான் நாமெல்லாம் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் பொருள் வெறியனுமல்ல, ஜாதி வெறியனுமல்ல, எல்லோரையும் மதிக்கத் கற்றுக் கொண்டோம். ஆசான் அகத்தீசர் ஆசி பெற்ற மக்கள், திருவடியைப் பற்றுகின்ற மக்களை மட்டும்தான் மதிப்போம். அவனிடம் அன்பு காட்டு. மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசுவோமே தவிர மதிக்க மாட்டோம். அவன் தொண்டு செய்ய வேண்டும். அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தானா? என்ன செய்தான் அவன்? தியானம் செய்கிறானா அன்பு காட்டு. அந்த அகந்தை, திமிர், ஜாதிவெறி, மதவெறி, குழப்பங்கள் உண்டாக்குபவனிடம் கிட்டேயே போகாதே. அவனை போய் பார்த்தாலே பாவம் சூழ்ந்து கொள்ளும். நம் சங்க அன்பர்கள், இதுபோன்று தீவினை, செய்வினை இதெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டான்.
     திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
            திறலோங்கு செல்வம்ஓங்கச்
      செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
            திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
      மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
            வளர்கருணை மயம்ஓங்கிஓர்
      வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
            வடிவாகி ஓங்கிஞான
      உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
            ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
      உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
            உய்கின்ற நாள்எந்தநாள்
      தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
            தலம்ஓங்கு கந்தவேளே
      தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
            சண்முகத் தெய்வமணியே.
                                – திருஅருட்பா ஐந்தாம் திருமறை – தெய்வமணிமாலை – கவி எண் 2931
                திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு அன்பர்களுக்கு செல்வத்தை பெருகச் செய்வார்கள்.
     நம் அன்பர்கள் மலேசியாவில் அன்னதானத்திற்கு வசூல் செய்ய போவார்கள். வசூலுக்கு போகிற இடத்திலெல்லாம் தலைவன் கூடவே இருப்பார். அங்கே போனால் என்னப்பா? என்றால் உடனே அங்கே பதில் வரும். அப்போதே பதில் வரும். அன்பர்கள் நிச்சயம் பரிசோதனை செய்யலாம்.
     எங்கு பார்த்தாலும் மரங்கள் இருக்கும் ஒரு இடத்துல காடியை (காரை) நிறுத்திவிட்டு, “என்னப்பா உன் ஆசியிருக்கா” என்று கேட்டால், உடனே பதில் வரும். அந்த நேரத்தில் அந்த இடத்தில் “பயப்படாதே! நான் இருக்கிறேன்” என்று சொல்வார்.
     இதை மலேசிய அன்பர்கள் எங்கே வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இருக்கும் இடம் கட்டிடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி “என்னப்பா உன் ஆசி இருக்கா” என்றால் உடனே சொல்லும் பதில். நான் இங்கேதான் இருக்கிறேன், ஏன் கவலைப்படுகிறாய்” என்பார்.
     அன்பருள் திறலோங்கு – திறல் என்றால் கூட்டம் என்று அர்த்தம். அப்ப செல்வநிலை பெருகுது, புண்ணியம் மேலோங்குது. செல்வம் இல்லாமல் புண்ணியம் செய்ய முடியாது அல்லவா. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி என்றார். செல்வத்தைப் பெருக்குவார்கள்.
     அன்பர்கள் மலேசிய மக்கள் ஒத்துழைப்பாலும், அவர்கள் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து அன்னதானத்திற்கு வசூல் செய்கிறார்கள். நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஞானிகள் துணையாக கூடவே இருக்கிறார்களே! புறப்படும்போதே பயப்படாதே! என்பார்.
     எங்கு இருந்தாலும் ஆசி இருக்கு. அங்கே ஒரு நொடியில் உள்ளே புகுந்து செய்ய முடியும்.
     ஆக இங்கே உள்ள மக்களுக்கு அன்னதானத்திற்கு பொருள் தருகிறார்கள். இருந்தாலும் பெருவாரியாக பொருளுதவி செய்வதற்கு இங்கே வாய்ப்பில்லை.
     ஏனென்றால் இங்கே ஏழைகள், வசதி வாய்ப்பில்லை.ஒருவர், இரண்டு பேர் இருந்தாலும் எவ்வளவுதான் கொடுக்க முடியும்? தினமும் தண்ணீர் தானம். அன்னதானம் செய்கிறோம்.
     மலேசிய மக்களுடைய பொருளுதவியினாலும், தமிழக அன்பர்களின் ஒத்துழைப்பாலும் இங்கு அரும் பெரும் காரியத்தை செய்திருக்கிறோம். இப்படியெல்லாம் புண்ணியத்தை செய்யாமல் ஒரு இடத்திற்கு வர முடியாது.
     இதைத்தான், திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு என்றார். திறல் என்றால் கூட்டம் பெருகப் போகிறது. இந்த செய்தி போயிருக்கிறது. ஐந்து லட்சம் பத்திரிகையில் நமது சங்கத்தின் விளம்பரம் போயிருக்கிறது, முறைப்படி போடவில்லை, அதைப்பற்றி அவசியமில்லை, செய்தி போயிருக்கிறது.
     இருபதாம் நூற்றாண்டு முடிவிலும், இருபத்தியோராம் நூற்றாண்டு தொடக்கத்திலும் எங்கள் சங்கம் உலகத்தை ஆளும் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினோம். அப்படியே சொல்லியிருக்கிறோம். இதையே நோட்டீசிலும் வெளியிட்டிருக்கிறோம். எங்கள் சங்கம் உலகத்தை ஆளும் என்று நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறோம். இது சின்ன விசயமல்ல. இதை அப்படி இலகுவாக சொல்லிவிட முடியாது.
     ஏனென்றால், ஒரு நகராட்சித் தலைவர் என்று சொல்லும்போதே பிரச்சனை பண்ணுவான். இந்த வார்த்தையை நாம் உலக மக்களிடம் சொல்லிக்கொண்டே வருகிறோம். “நாங்கள்தான் உலகத்தை ஆளப்போகிறோம்” என்று சொன்னோம். என்னய்யா இது வீண் கனவு என்றான். இது உண்மை, உண்மையைதான் பேசுகிறோம் ஐயா!
     வீண் கனவுக்கு அவசியமென்ன? நாங்கள் என்ன கை நாட்டா? நாங்கள் என்ன பதவி வெறி பிடித்து அலைகிறோமா? பண வெறி பிடித்து அலைகிறோமா? உள்ளதைதான் சொல்கிறோமையா! நாட்டைத் திருத்துவதர்காகதான், உண்மை ஆன்மீகத்தைப் பரப்புவதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோமையா.
     இதை ஊரறிய உலகறிய சொல்கிறோம். ஆக இந்த சங்கம்தான் செய்ய வேண்டும். மனமுவந்து இரவும் பகலும் பாடுபட்டு அனுப்பிய அந்த பொருளை, தமிழக அன்பர்கள் கட்டுக் கோப்பாக இருந்து ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுத்த, தொண்டு செய்ய வேண்டும். இதுபோன்று பயன்படுத்தினால்தான் புண்ணிய காரியம் ஓங்கும். புண்ணியம் ஒங்கினால்தான் ஆசான் ஆசி பெற முடியும்.
     இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் புண்ணியம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழக அன்பர்களுக்கும், மலேசிய அன்பர்கள் பொருளதவி செய்கிறார்கள். அவர்களுக்கும் ஞானிகள் ஆசி இருக்கிறது.
     ஞானிகள் ஆசி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, நிறைய மரம் இருக்கும் பகுதியில் வண்டியை நிறுத்தி, காடியை(கார்) நிருத்தையா! உன் ஆசி இருக்கிறதா என்று கேள். அங்கேயே பதில் வரும். அப்போதே தெரிந்து கொள்ளலாம். இங்கேயே வந்து விட்டது. நொடிப்பொழுதில் வந்து விடுவார்கள். இப்பேர்ப்பட்ட வாய்ப்பு மலேசிய மக்களுக்கு இருக்கிறது. இன்னும் இன்னும் ஆறு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ வெளிநாட்டுக்காரர்களெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது. அதற்குரிய நேரம் இப்போது வந்து விட்டது.
     ஆக நமது சங்கம் இருபதாம் நூற்றாண்டு முடிவில் அல்லது இருபத்தியோராம் நூற்றாண்டு தொடக்கத்தில் நிர்வாகம் நமது கைக்கு வரும். பையபைய வந்து கொண்டே இருக்கும். ஆக நாம்தான் இந்த காரியத்தை செய்தாக வேண்டும். ஏனய்யா இந்த வாய்ப்பு என்றான். நமக்குதானய்யா தலையெழுத்து. தலைவன் நமக்கென்று அந்த வாய்ப்பை அமைத்திருக்கிறான்.
     ஆக, நாம் செயல்பட வாய்ப்பிருக்கிறது, தலைவன் பெருமையைப் பேசுகிறோம், உண்மை ஆன்மீகத்தைப் பரப்புகிறோம், மூடத்தனத்தை நாம் முறியடிக்கிறோம். மூடத்தனம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இவன் செய்வினை செய்தான், அவன் செய்வினை செய்தான் என்று நாட்டை குழப்பிக் கொண்டு கிடக்கிறான். ஆக அதையெல்லாம் உடைத்து, உனக்கு யாரும் செய்வினை செய்ய முடியாது, செய்வினை என்று நம்பாதே! இதை நாங்கள் சொல்லத்தான் வேண்டும். நாம் போகப் போக விளக்கம் தந்து கொண்டே போவோம்.
     ஆக, இந்த காலகட்டம் இப்படிதான் இருக்கிறது. இதை நாம் பின்பற்றி தினம் தியானம் செய்து வந்தால், ஆசான் நமக்கு பெரும் வாய்ப்பைக் கொடுப்பார். நமக்கு யாரும் பகையில்லை. அது தேவையுமில்லை. பகை அவசியமில்லை. பகையை சிந்திக்கவோ, பகையை முடிக்கவோ நாம் இங்கு வரவில்லை.
     அவன் ஏதாவது பேசினால் பேசிக்கொண்டு போகிறான். இன்றைக்கு வருகிறானா வாய்யா! கலந்து செயல்படலாம். அன்றைக்கு நீ இப்படி பேசினாயே, அதனால் நீ வராதே என்று சொல்லக்கூடாது. அன்று பேசினான், தெரியாமல் பேசிவிட்டேன், நான் இன்றிலிருந்து ஈடுபட்டு செயல்படுகிறேன் என்றால், வா ஆனால் வஞ்சனையில்லாமல் செயல்பட வேண்டும்.
     வஞ்சனையானால் நமக்குப் புரியும். அப்படி பேசிக் கொடிருக்கும் போதே “இவன் யார்” என்று கேட்டுவிடுவோம். அந்த வாய்ப்பு நமது சங்கத்திற்கு உண்டு.
     அவன் வரும் போதே, அவனைப் பற்றி ஞானிகளிடம் கேட்டால், அவர்கள் சொல்வார்கள். சரி வாங்க வாங்க என்று சொல்லி ரொம்ப மனம் விட்டு பேசுவதுபோல் நடிக்க வேண்டும். அவன் நடிக்கிறான், அவனிடம் நாமும் நடித்துவிட்டுப் போவோம். அதுபற்றி நமக்கு அவசியமில்லை.
     ஆக, நமக்குப் பகையில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம், வரும்போதே அவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பகை முடிக்க நாம் வரவில்லை. ஆகவே, எல்லோரையும் நட்பாகப் பார்க்கிறோம். இதுதான் நம் கண்ணோட்டம்.
     அவன் பகையாகப் பார்க்கிறான். அது பற்றி அவையமில்லை. ஆக, நமது சங்கத்தை தடுக்கவோ, நிறுத்தி வைக்கவோ, முடமாக்கவோ யாராலும் முடியாது.
     எங்கே இருந்தாலும் சரி, நமது சங்கம் மலேசியாவில் இருந்தாலும் சரி, இந்தோனேசியாவில் இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. எங்கே நமது சங்க அன்பர்கள் இருக்கின்றார்களோ, எங்கெல்லாம் ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்கிறார்களோ, எங்கெல்லாம் தான தர்மத்திற்கு உதவி செய்கிறார்களோ, அங்கே அவர்களை வெல்லவே முடியாது.
     அவன் கிடக்கிறான் பொடியன், நீ போ, நீ போய்யா, அவனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்போம். எப்படி ஐயா என்றால், இந்த வார்த்தையை பயன்படுத்த ஆசான் வல்லமை கொடுத்திருக்கிறார். நம் வல்லமை அல்ல. நம்மிடம் அவ்வளவு சக்தி இல்லை. உடனேயே ஆசானிடம் சொல்வோம். “இது போன்று அவன் பிரச்சனை செய்கிறான்” என்று ஆசானிடம் சொல்வோம். உடனே ஆசான் அடுத்த நொடி அங்கே போய்விடுவார்.
     இதை குடிலாசானிடம் சொல்லும்போதே தலைவனுக்குத் தெரியும். வேண்டுமானால் ஒரு பரிட்சை பண்ணிப் பார்க்கணும். ஒங்காரகுடிலில் இது போல் என் பிரச்சனை இருக்கிறது, எனக்கு எதிரி இருக்கிறான் அல்லது நோய் இருக்கிறது என்று சொல்லும்போதே அடுத்த வினாடியே, தலைவன் அங்கே இருப்பார். ஆசான் ஞானபண்டிதன் அங்கே இருப்பார். ஆசான் அகத்தீசரும் ஞானியர்களும் அங்கே இருப்பார்கள். உடனே பிரச்சனையைத் தீர்த்துவிடுவார்கள். அதனால்தான் சொல்கிறோம், நீ என்னிடம் சொல்லப்பா. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் சொல், அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
     நம்பு என்னை! குடிலாசானை நம்பு! அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் பகை முடிக்கவோ, பிறரை அழிக்கவோ விரும்பவில்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு நமக்கு ஆற்றல் உண்டு என்பதை வெளிப்படுத்தி காட்டுகிறோம். என்னிடம் சொன்னால் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆகா, எந்த வகையிலும் நமக்கு இடையூறு வராது. காரணம் வருகின்ற பொருளை ஏழைகளுக்காக பயன்படுத்துகிறோம்.
     எப்பொழுது இடையூறு வருமென்றால், அவரவர்கள் உழைத்து மனமுவந்து கஷ்டப்பட்டு இந்த பொருளை நம்மிடம் கொடுத்து, அதை நம் சொந்த விருப்பத்திற்காக அல்லது சொந்த சுய நலத்திற்காக பேங்கில் சேமித்தால், அத்போன்ற காரியம் எப்போது நம்மிடம் வந்ததோ அப்போதே முடிந்துவிட்டது. நம்மை விட்டு ஞானிகள் ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
     ஆனால் குடிலாசானோ தொண்டர்களோ, அப்படி அணுவளவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். வேண்டாமையா உன் காசு! நீ கொடுக்கின்றாய்! உன் முன்னே, ஏழைகளுக்கு அள்ளிப் போடுகிறோம். நீ கொடுக்கும் காசு பஞ்சபராரிகளுக்குப் பயன்படுகிறது. இருப்பு வைக்க மாட்டோம். இருப்பு வைத்தால்தானே ஞானிகளுக்கு எங்கள்மீது வெறுப்பு வரும். இருப்பு இல்லை! எங்கள் மீது ஞானிகளுக்கு வெறுப்பு இல்லை!
     ஆகவே நம்மிடம் அந்த கொள்கை இருக்கிறது. திடமான கொள்கை இருக்கிறது. தலைவனிடம் இருக்கிறது. தலைவனிடம் இந்தக் கொள்கை இருக்கும்போது தொண்டர்களிடம் நிச்சயம் இந்த கொள்கை வரத்தான் செய்யும். தலைவன், பொருளாசையுடனோ அல்லது காமுகனாகவோபேராசை உள்ளவனாகவோ அல்லது ஜாதி வெறியுள்ளவனாகவோ அல்லது மூர்க்கனாகவோ அல்லது முரடனாகவோ அல்லது வஞ்சகனாகவோ இருந்தால் சங்கம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அப்போதே அழிந்திருக்கும்.
     ஆக இந்த சங்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது, வளர்ந்து கொண்டே இருக்கிறது, வளர்ந்து கொண்டே இருக்கும். வளர வளர வளர வளர்ந்து கொண்டே இருக்கும். இதற்குத் தடையே இல்லை. இதற்கு மட்டுமல்ல, இந்த சங்கத்திற்கு மட்டுமல்ல, நம் சங்கத்தை நம்பியவனுக்கு தடையில்லை.
     சிறு சிறு துன்பம் வரும். ஆசான் கொடுத்த பயிற்சி நமக்கு. மலேசியாவில் பிரச்சனை வருகின்றது என்றால், ஆசானுடைய துணை உடனே அங்கேயும் இருக்கும், ஆசான் அங்கே இருப்பார்.
     சங்கத்தை அவ்வளவு மென்மையாக நடத்தலாம் என்று பார்க்கிறாயா? வம்பு வரத்தான் செய்யும், எதிர்ப்பு வரத்தான் செய்யும். ஆசான் துணை நிற்பார். தர்மத்திற்காக தொண்டு செய்தேன். வருங்காலத்தில் என்ன ஆகும் என்று சிந்திக்காதே.
     நீங்களென்ன சங்கத்தை மென்மையாக நடத்த முடியுமா? பகை வரத்தான். அரசாங்கப் பகை இருக்கும். மற்றப் பகை இருக்கத்தான் செய்யும். நீ ரகசியமாக வீட்டில் உட்கார்ந்து வாழைப்பழம் உரிப்பதுபோல் சங்கத்தை நடத்த முடியாது. பிரச்சனை வரத்தான் செய்யும். பகை உருவாகத்தான் செய்யும். அதை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இதெல்லாம் சட்டம். இதை நான் பேசவில்லை, தலைவன் பேசுகிறான். இப்படியெல்லாம் பயிற்சி கொடுப்பான்.
     நம் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நமது சங்க வளர்ச்சிக்காக, தர்மத்திற்காக எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆசான் துணை நிற்பார். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். பிரச்சனை வரத்தான் செய்யும். அதை சந்திக்கப் போகிறோம். சந்திக்கத்தான் வேண்டும், சந்திக்கும் சூழ்நிலை வரும்.
     அதற்காக மலேசிய அன்பர்கள் தளர்ச்சியடையக் கூடாது. “தர்மத்திற்காகப் பாடுபடுகிறேன். எதற்கும் நான் தயார், எது நடந்தாலும் நான் தயாராக உள்ளேன்” என்று சொல்ல வேண்டும். அதற்காக எல்லோரையும் பரிபக்குவப்படுத்துகிறோம். பயந்து விட்டாயா ஒதுங்கு! உன்னால் முடியவில்லையா தள்ளு. விருப்பம் உள்ளவன் வா! விருப்பம் உள்ளவர்கள் வந்து, தர்மத்திற்குப் பாடுபடு. இப்ப நான் பேசுவது புரட்சியல்ல! தர்மத்தை காப்பதற்கு.
     நாம் காமுகர்கள் அல்ல, பொருள் வெறியர்கள் அல்ல. நடக்கக்கூடிய தர்மத்திற்கு இப்படி செய்ய வேண்டி வரும், ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். வரத்தான் போகிறது. தெரியும் எங்களுக்கு. சொல்ல சொல்லி ஆசான் சொல்லியிருக்கிறார்.
     தர்மத்திற்கு பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி. அவர்கள் வாழ்வை உயர்த்துவோம், நிலை உயரச்செய்வோம். தர்மத்திற்கு பாடுபடுவோம்.
     இந்திய மக்களாக இருந்தாலும் சரி, மலேசிய மக்களாக இருந்தாலும் சரி, எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, சங்கத்திற்காக தியாகம் செய்பவர்களை எங்கள் இரு கண் போன்று காப்பாற்றுவோம். நிலை உயர்த்துவோம் என்பது சத்தியம்! சத்தியம் செய்திருக்கிறோம்.
     ஆகவே நம் சங்கம்தான் வருங்காலத்தில் உலகத்தை ஆளும். இது நிச்சயம். சத்தியமாக உலகத்தை ஆளும். அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். இந்த காலகட்டத்தில் வெற்றி. நமக்குத்தான் வெற்றி.
     நாங்கள் வருங்காலத்தில் பேசத்தான் போகிறோம். சும்மா ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசப் போகிறோம். பேசும்போதெல்லாம் உடம்பில் ரத்தம் விர்ரென்று மேலே பொங்கிக் கொண்டு வருகிற மாதிரி பேசுவோம். வருங்காலத்தில் அந்த அளவுக்குப் பேசுவோம். செய்யத்தான் வேணும், பேசத்தான் வேணும்.
     ஆக நம் அன்பர்கள் கட்டுக் கோப்பாக இருந்து ஆசான் அகத்தீசரையும், ஆசான் சுப்பிரமணியரையும் வணங்கி “இந்த உலக மாற்றத்திற்கு ஆசான் ஞானிகளுடைய ஞானசித்தர் காலத்தில் ஞானிகளால் ஏற்பட போகின்ற உலகமாற்றத்திற்கு என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்குத் தொண்டு செய்ய வாய்ப்புத் தர வேண்டும். துன்ப துயரம் வந்தாலும், உன் ஆசியால் வெல்லுகின்ற வல்லமை வேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டு போகாத மனவலிமையும், ஆற்றலும் தந்து, எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ள வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171992
Visit Today : 234
Total Visit : 171992

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories