பெண்களுக்கு உபதேசம்
என்ற தலைப்பில் 22.12.1999 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
அன்பர்கள் எல்லோரும் ஓங்காரகுடில் அன்னதானம் செய்கின்ற இடம் என்றும், இங்கே ஒரு பிடி உணவு சாப்பிட்டால், நோய் தீரும் என்றும், இங்கே வந்து செல்வது நல்லது என்று சொன்னார்கள். உண்மைதான்! தினமும் பல ஆயிரகணக்கான மக்களுக்கு பசியாற்றுவிப்பது என்பது சின்ன விசயமல்ல! இது அற்புத செயல் தான்.
இதற்கெல்லாம் நாங்கள் ஆசான் அகத்தீசரை வணங்கினோம். “தினமும் அன்னதானம் செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்” என்று வேண்டினோம். நாங்களே ஒரு குடம் தண்ணீர் 25 பைசாவிற்கு தினமும் வாங்கினோம். பின்பு முப்பது பைசா, நாற்பது பைசா கொடுத்து வாங்கியிருக்கிறோம். நாங்களே அந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறோம். ஆகவேதான் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வந்தது.
நாங்கள் பசியோடு இருந்திருக்கிறோம், அன்ன ஆகாரம் இல்லாமல் உண்ணாவிரதமும் இருந்திருக்கிறோம். பசியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். நாங்கள் அன்னதானம் செய்திருக்கிறோம். என் கையால் சாப்பாடு போட்டிருக்கிறேன். ஆக, எதையும் செய்து பார்க்க வேண்டுமென்ற உணர்வு எனக்கு உண்டு. இதுபோன்ற அறப்பணிகள், புண்ணியபலம் இருந்தால்தான் நடக்கும்.
நாங்கள் 11.02.1988 அன்னதானம் ஆரம்பித்தோம். அப்போது மதியம் ஐந்து பேருக்கு அன்னதானம் செய்தோம். ஐந்து பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம், பிறகு பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது என வளர்ந்து இப்போது கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். உணவை பொட்டலமாக பதினேழாயிரம் மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்.
குடும்பத்திற்கு அருளும், பொருளும் வேண்டும். பொருள் சம்பாதிக்கலாம். ஆனால் அருளை சம்பாதிக்க முடியாது. பொருள் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் பொருள் கையில் தங்கி இருக்க வேண்டுமல்லவா. பொருள் கைக்கு வரும்போதே செலவும் வரும். பொருள் வரும்போதே செலவு! ஊசி, மருந்து, மாத்திரை, அபத்த செலவுகள் என்று செலவு செய்து கொண்டிருப்பான். இப்படி செலவாகிக் கொண்டே இருக்கும், பொருள் கையில் தங்காது.
சிலர் என்னிடம் வந்து ஐயா, “வருகின்ற காசு கையில் தங்கவில்லை” என்பார்கள். அது தங்குவதற்கு, புண்ணியம் செய்ய வேண்டும். மாதம் இறந்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். புண்ணியம் செய்தால்தான் பொருள் வந்தால் தாங்கும், இல்லையென்றால் தங்காது.
அருள் இருந்தால்தான் பொருள் இருக்கும். இல்லையென்றால் கையை விட்டுப் போய்விடும். பொருள் செலவாகிக் கொண்டே இருக்கும். ஆக பொருள் கிடைப்பதேற்கே புண்ணியம் வேண்டும். வருவாய் நிறைய வருவதற்கு புண்ணியம் இருக்க வேண்டும். வந்த வருவாய், வந்த செல்வம் கையில் தங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது நம்மை விட்டுப் போகும்.
ஆக புண்ணியம் செய்வதற்கு, ஆசான் அகத்தீசரை வணங்க வேண்டும். “எங்களுக்கு வறுமை இல்லாத வாழ்வு வேண்டும். சொந்த வீடு அமைய வேண்டும். நோய் நொடி இல்லாதிருக்க வேண்டும்” என்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். ஆசான் அகத்தீசர், “இன்னும் என்ன வேண்டும்” என்று கேட்டார்.
“எங்களை நோக்கி வருகின்ற பண்புள்ள விருந்தினர்களுக்கு எங்கள் கையால் சமைத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டுமென்று” கேட்க வேண்டும். இந்த எண்ணம் வந்தாலே விருந்தை உபசரிப்பார்கள். நல்ல பண்புள்ள விருந்தினர் வந்தால், அவர்களிடம் அன்பு காட்டி, அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து விருந்தினர்களை மகிழ்ச்சியடைய செய்தால் அங்கே புண்ணியம் வரும். இது ஒரு புண்ணியம்.
இன்னொரு புண்ணியம், அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் முடிந்தால் செய்யலாம். சரி, அடுத்து எது புண்ணியம்.
“வயதானவர்கள் இருமிக்கொண்டு கிடப்பார்கள். அது இயல்புதான். “வீட்டிலுள்ளவர்கள் அதை சகித்துக் கொள்வது புண்ணியம்” என்றார். ஆசான் அகத்தீசர். “ஏ! என்ன ஆச்சரியம்! வீட்டில் வயதானவர்கள் கிழவன், கிழவி மீது அன்பு காட்டுகின்ற இந்த புண்ணியவதிக்கு, புண்ணியம் உண்டாகட்டும். அருள் உண்டாகட்டும்” என்று சொல்வார். இது ஒரு புண்ணியம்.
அடுத்து என்ன புண்ணியம்? வீட்டில் சமைத்த உணவை வயதானவர்கள் மனம் மகிழும்படி சாப்பிட கொடுத்தால் அது ஒரு புண்ணியம்.
விருந்தை உபசரிப்பது புண்ணியம். வீட்டில் இருக்கும் கிழவன் கிழவியை அனுசரித்து, சாப்பாடு கொடுப்பது புண்ணியம்.
அடுத்து, இன்னொரு புண்ணியம் என்ன? வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்ட உடனேயே, பாத்திரத்தை கழுவி, துடைத்து கவிழ்த்து வைக்க வேண்டும்.
அப்படியே வைத்திருந்தால் உப்பு பிடித்துக் கொள்ளும். பாத்திரத்தை துடைத்து கவிழ்த்து வைக்க வேண்டும். பாத்திரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதே சமயத்தில் துணிகளையெல்லாம் துவைத்து மடித்து வைத்திருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆசான் அகத்தீசர் வருவார்!
அடுத்து கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளியலறையில் பாசான் பிடிக்கக் கூடாது. குளியலறையில் பாசான் பிடித்திருந்தால், குளிப்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து விடுவார்கள்.
“எங்கே ஐயா விழுந்தீர்கள் வெளியே சென்றீர்களா” என்று கேட்டால், “இல்லை, குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டேன்” என்று சொல்வார்கள். அடே! அந்த அளவிற்கு யோக்கியதை! குளியலறையில் வழுக்கி விழும் அளவிற்கு பாசான் பிடித்திருக்கிறது என்றால், அந்த அளவு சுத்தமில்லை. அது என்ன காரணம் என்று தெரியவில்லை! பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அடுத்து ஒரு புண்ணியம் செய்ய வேண்டும்! வீட்டில் சாப்பாடு சமைக்கிறோம், சாப்பிட்டது போக மீதப்பட்ட உணவை அக்கம்பக்கம் உள்ள ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த உணர்வு வர வேண்டும்.
ஆக இதுபோன்று புண்ணிய செயல்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்து அருள் வேண்டும். அருளை பெறுவதற்கு யாகம் வளர்க்க வேண்டுமா? யாகம் வளர்த்து என்ன செய்வது? ஏதோ அவர்கள் செய்கிறார்கள், குறை சொல்லவில்லை.
அதைப்பற்றி சிந்திக்க நேரமில்லை நமக்கு. நாம் பசியாற்றுவிக்கிறோம், நாம் யாகம் வளர்க்கிறோம். என்ன யாகம்? அருள் எனும் யாகத்தை வளர்க்கிறோம்.
கணவன் வேலைக்குப் போய்விட்டு, வியாபாரமோ, தொழிலோ செய்துவிட்டு வருவான். அவன் வீட்டுக்கு வந்தவுடன் மனைவி அப்படி மலர்ந்த முகமாக, முகத்தில் கடுகடுப்பு இல்லாமல், இனிமையாக பழகுவது அருள். அதுபோன்று கணவன் மனம் மகிழும்படி நடந்து கொள்வது அருள்! அவனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது கலிகாலம். எங்கே பார்த்தாலும் போட்டி, பொறாமைகள், வியாபாரத்தில் போட்டி, உத்தியோகத்தில் பிரச்சனைகள், வேலை வாய்ப்பில் பொறாமை, பிரச்சனைகள் என அல்லற்பட்டு வருவான். வரும்போது அவனிடம் இனிமையாக பேசுவதே அருள்!
அதேபோல் சிலசமயத்தில் மனைவிக்கு காய்ச்சல், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்திருக்கும். ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு போய்க்கொண்டிருக்கும். உடம்பு சோர்வாக இருக்கும்.
அந்த நேரத்தைப் புரிந்து, அவள் முகத்தைப் பார்த்து ரொம்ப சோர்வாக இருக்கிறாயா, “என்னம்மா குறை, நான் உனக்கு உதவி செய்கிறேன் கவலைப்படாதே!” என்று சொன்னால் அங்கு அருள் இருக்கும்!
மலர்ந்த முகமும், சகித்துக் கொள்ளுதலும் அருள். மேலும் சகிப்புத்தன்மை எங்கே இருக்கிறதோ அங்கே அருள் இருக்கும். சகிப்புத்தன்மை இல்லையென்றால் அருள் இருக்காது.
எப்போது பார்த்தாலும் இருமிக்கொண்டே இருக்கிறான், எப்போது பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருக்கிறான், இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்.
மாமியார் சில சமயத்தில் கடுமையாக பேசுவாங்க. அப்படி கடுமையாக பேசுபவர்களிடம் நீ இனிமையாக பேச வேண்டும்.
சரி, ரொம்ப முடியவில்லை. தொணதொணவென்று பேசிக்கொண்டு இருப்பாங்க. அப்போது என்ன செய்ய வேண்டும், “அகத்தீசா, அகத்தீசா” என்று சொல்ல வேண்டும். அந்த பேச்சில் கவனமே செலுத்தக் கூடாது. உடனே வீட்டில் டேப் ரெக்கார்டர் இருந்தால் போட்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
மனது புண்படும்படி மாமியார் பேசினால், நாம் அதில் கவனம் செலுத்தாமல் வேறு எதிலாவது கவனம் செலுத்த வேண்டும். ஆசான் அகத்தீசர் படம் இருந்தால் அங்கே கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பேச்சை காதில் வாங்கக் கூடாது. வாங்கினால்தானே பிரச்சனை. அதற்காக எதிர்த்துப் பேச முடியுமா? மாமியார் அதற்காகவே பிறந்தது, எதிர்த்துப் பேசினால் இன்னும் மேலே போய்விடும். ஆக, அவர்களிடம் நயமாக நடந்து கொள்ள வேண்டு. சிந்தனையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
இன்னொரு பிரச்சனை, நாத்தனார் கொடுமை. அது பெரிய பிரச்சனைதான். எல்லாக் கொடுமையும் சமுதாயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரிய்யா, பேசுகிறார்கள். என்ன செய்யலாம்? திருப்பி மறுபடியும் பேசினால் அது பிரச்சனையாகும்.
முன்னமே பிடாரி அது. நீ பேசினால் காளியாக மாறி விடுவாள். அப்போது ஆசானை நினைக்கின்றாய், “என்னப்பா, ஒன்றும் புரியவில்லை. எனக்கு தாங்கும் சக்தி இல்லை. எனக்கு அருள் செய்யப்பா” என்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
அகத்தீசா! அகத்தீசா! என்று சொல்ல வேண்டும். ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்லும்போது அவர்கள் அடங்கி விடுவார்கள்.
ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால் நாத்தனார் கொடுமை இருக்காது.
ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால் மாமியார் கொடுமை இருக்காது.
ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால் வறுமை இருக்காது.
ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால் உடல் தெம்பு இருக்கும்.
ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொன்னால் உடல் ஆரோக்கியம், வறுமையில்லா வாழ்வு, நல்ல பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும். ஒரு குடும்பத்திற்கு, பண்புள்ள புத்திரபாக்கியம், நல்ல அறிவுள்ள குழந்தை இருக்க வேண்டும்.
ஆசான் அகத்தீசர் ஆணை பென்னாக்கக் கூடிய வல்லமை பொருந்தியவர். ஆசான் அகத்தீசரும், மகான் நந்தீசரும், மகான் திருமூலதேவரும், மகான் கருவூர்முனிவரும் ஆணை பெண்ணாக்குவார்கள், அவர்களுக்கு எல்லா வல்லமையும் உண்டு.
என் பிள்ளை முரண்படுகிறான் ஐயா! எப்போது பார்த்தாலும் முரண்படுகிறார், எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான். நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும்.
நீ உன் பிள்ளையிடம் சொன்னபடி கேள் என்று சொன்னால், கேட்காது. நீ ஆசானிடம், நான் அவ்வளவு அன்பு காட்டினேன். ஆனால் என் பையன் என்னிடம் அன்பு காட்டமாட்டேன் என்கிறான்.
அப்பா! நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் அவர்கள் சரிப்படுத்தி விடுவார்கள். அவர்கள் ஆணை பெண்ணாக்குவார்கள், பெண்ணை ஆணாக்குவார்கள். மரப்பசுவை நிஜப்பசு ஆக்க முடியும். உண்மையான பசு மாடாக மாற்றி விடுவார்கள். அப்பேர்ப்பட்ட வல்லமை உள்ள ஆசான்.
ஆக, மகள் முரண்பட்டாலும், மகள் ஏதோ தவறாக பேசினாலும், சில பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அம்மாவை எதிர்த்து எதிர்த்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி பேசினால் மனது சோர்வடையத்தான் செய்யும்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “என்னப்பா, இப்படி பேசுகிறாள். நீர்தானப்பா அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்டால், மகளும் சாந்தமுள்ளவளாக மாறிவிடுவாள், மகனும் சாந்தமுள்ளவனாக மாறிவிடுவான்.
ஆகவே ஒரு குடும்பம் நல்லபடி இருந்தால்தான், மனம் அமைதியாக இருக்கும். குடும்பம் நல்லபடி இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆடு கோழி பலியிட வேண்டுமா? கூடாது. ஆடு, கோழி அறுத்தால் உள்ளதும் போய்விடும். எந்த உயிரை அறுத்து கொடுமை செய்தாலும், எந்த உயிரை நாம் வருத்தினாலும் அல்லது அறுக்கின்றோமோ, அதனால் குடும்பத்தில் அமைதி கெடுமே தவிர நிச்சயமாக அமைதி வராது.
ஏதோ அந்த காலத்தில் செய்திருக்கிறான். அவன் செய்துவிட்டு போகட்டும். நம் குடும்ப முன்னேற்றத்திற்கு, ஆடு, கோழி அறுப்பதனால் குடும்பம் முன்னேறாது.
ஒரு குடும்பம் நல்லபடி இருக்க வேண்டுமென்றால், கும்பாபிஷேகம் பார்ப்பதாலோ, கும்பாபிஷேகம் செய்வதாலோ, கோவில் கட்டுவதாலோ, அல்லது குளம் குளமாக சென்று மூழ்குவதாலோ அமைதி கிடைக்காது.
அப்போது எல்லோரும் குளிக்கிறார்களே என்றால், குளிக்கிறான். சோப்பு போடா விட்டால் தெரியும். அதுவும் பழைய காலத்து குளங்களை புண்ணிய தீர்த்தம் என்பான். அதில் சீலை பெண் இருக்கும். சேலை மேல் ஒட்டிக் கொள்ளும். அதில் புண்ணியம் கிடையாது. எங்கள் அனுபவத்தைச் சொல்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
ஆக, குளத்தையும், ஆற்றையும் புண்ணிய தீர்த்தம் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதில் குளித்தாலும் புண்ணியம் வராது. புண்ணியம் வருவதாக எனக்குத் தெரியவில்லை.
அது போல புண்ணிய தீர்த்தத்தில் குளித்து, தொழுநோய் நீங்கியதா? புற்று நோய் நீங்கியதா? வறுமை நீங்கியதா? மன அமைதி வந்ததா? நீடிய ஆயுள் பெற்றார்களா? வேறு என்ன நன்மை வந்தது என்று கேட்டால் பதில் இல்லை. ஏதோ செய்து கொண்டிருக்கிறான், கொண்டு போகட்டும். அது நமக்கு அவசியமில்லை.
ஆக, மன அமைதி பெறுவதற்கு குடும்பம் நல்லபடி இருக்க ஞானிகளைத்தான் வழிபாடு செய்ய வேண்டும்.
ஒன்றே ஒன்று. அன்னதானமதான். அன்னதானம் என்பது மாதம் இரண்டு பேருக்கு போடுங்கள். சரிய்யா, இன்னொரு புண்ணியத்தை தேட வேண்டும்.
வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கலாம். ரொம்ப பலகீனமான உடம்பாக இருந்தால் கால் லிட்டர் பால் சேர்த்துக்கொண்டு, வியாழக்கிழமை காலையில் உணவு சாப்பிடாமல், விரதம் இருக்க வேண்டும். கால் லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு பச்சைத்தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.
இல்லையென்றால் கால் லிட்டர் பால் சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது ஒரு டம்ளர் டீ சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது காபி சாப்பிட்டுக் கொள்ளலாம்.
சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு, வியாழக்கிழமை காலை விரதம் இருக்கலாம். நாங்கள்தான் வறுமையில் இருக்கிறோமே என்றால், வறுமைப்பட்டவனுக்கு நான் சொல்லவில்லை. வசதி வாய்ப்புள்ள மக்களுக்கு சொல்கிறோம்.
சிலர் சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பார்கள். அவர்களை விரதம் இருக்க சொல்ல முடியுமா? முடிந்தால் அவர்களும் விரதம் இருக்கலாம்.
வியாழக்கிழமை காலையில் கொஞ்சம் டீயோ அல்லது பால் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம். வியாழக்கிழமை காலையில் விரதம் இருப்பது ஆசான் அகத்தீசருடைய ஆசி பெறுவதற்காக.
ஆசான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் கருவூர் முனிவர் ஆசியை பெறுவதற்காக வியாழக்கிழமை காலையில் விரதம் இருக்கிறோம். விரதம் இருந்து ஆசான் அகத்தீசர் நாமத்தைச் சொல்கிறோம். அது ஒரு புண்ணியம். விரத அனுஷ்டானம், விரதத்தை கடைப்பிட்ப்பதனால் நமக்கு செல்வம் பெருகும்.
இரவில் இரண்டு பழம், கால் லிட்டர் பால் சாப்பிட வேண்டும். வியாழக்கிழமைகளில் காலை உணவு இல்லை. இரவும் உணவு இல்லை. இரண்டு பழம் சாப்பிடலாம், கால் லிட்டர் பால் சாப்பிடலாம். மதியம் மட்டும் ஒரு நேரம் உணவு, நல்ல உணவு தரமான உணவாக இருக்கட்டும். அறுசுவை சாப்பிடலாம், சாம்பார், ரசம், மோர் வைத்து சாப்பிடலாம்.
ஆக, வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். ஆசான் அகத்தீசருடைய ஆசி பெறுவதற்காக விரதம் இருக்க வேண்டும்.
எங்கள் குடும்பத்திற்கு வறுமை இல்லாத வாழ்வு அமைய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். திருமணமாகாத பெண்கள் வியாழக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். வியாழக்கிழமை காலை உணவு இல்லாமல் இரவு உணவு இல்லாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பண்புள்ள கணவன் அமைய வேண்டுமென்று வியாழக்கிழமை விரதம் இருந்து ஆசானை கேட்க வேண்டும்.
திருமணம் ஆனவர்களுக்கு என்னய்யா விரதம்? பண்புள்ள புத்திர பாக்கியம் அமைய வேண்டும். நல்ல அறிவுள்ள குழந்தைகள், அழகான குழந்தைகள், உடல் ஆரோக்கியமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டும்.
அடுத்தது சொந்த வீடு இருக்க வேண்டும். கணவனை புரிந்து கொள்கின்ற அறிவு வேண்டும், நோய் நொடியில்லாது இருக்க வேண்டும். வருமையில்லாது இருக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். ஆக, புண்ணிய பலம் வேண்டும், அருள் பலம் வேண்டும்.
மலர்ந்த முகமே அருள். இப்படி வியாழக்கிழமை விரதமிருந்து குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்க வேண்டும். எந்த பிரச்சனை இருந்தாலும், தாங்கி கொண்டு, சகிப்புத் தன்மையோடு இருந்தால் அதை அருள் என்று சொல்வார்கள். அன்பர்களும், பெண்களும் ஆண்களும், நாங்கள் கடைப்பிடித்த உண்மையை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
நாங்கள் சடங்கெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்ய மாட்டோம். அப்படி செய்வதைப் பற்றி நாங்கள் கவலையும் பட மாட்டோம். எங்கள் பிரச்சனை தீர்வதற்காக நாங்கள் முடி எடுக்க மாட்டோம், பால் குடம் எடுக்க மாட்டோம். அங்கம் புரள மாட்டோம், அலகு குத்திக் கோல மாட்டோம். மாற்றவர்கள் செய்வதை பொருத்து சிந்திக்க மாட்டோம்.
ஒரு கும்பம் முன்னேற்றம் அடைய வேண்டுமையா. வறுமை இல்லாத வாழ்வு அமைய வேண்டுமையா. இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால் பூஜை ஒன்றுதான் வழி! காலை எழுந்து, “ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூல தேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம” என்று நாமஜெபம் செய்ய வேண்டும். சில பெண்களுக்கு அகத்தீசா என்று சொல்ல முடியவில்லை என்றால் இப்படி மற்ற ஞானிகளின் நாமத்தை சொல்ல சொன்னோம்.
எல்லா ஞானியும் ஒன்றுதான். இந்த நான்கு ஞானிகளின் நாமத்தை சொன்னால், எல்லா நன்மையையும் அடையலாம். பெண்களுக்கு ஞானம் உண்டு. மகான் ஔவையார், மகான் காரைக்கால் அம்மையார் இவர்களெல்லாம் பெரிய பெரிய ஞானிகள். பெண்கள் ஞானி ஆகியிருக்கிறார்கள். சொல்லித்தர ஆள் இல்லை. அவர்களிடம் சொல்ல வேண்டும்.
அகத்தீஸ்வரா! உன் திருவடியைப் பற்ற வாய்ப்பு கொடு! வேறு எனக்கு ஒன்றும் வேண்டாமையா! உன் நாமத்தை தடையில்லாமல் சொல்வதற்கு அருள் செய்யப்பா! என்று பெண்கள், ஆசானை கேட்டாலே போதும். இப்படி ஆசானை கேட்டால், நாத்தனார் கொடுமை மாறும், மாமியார் கொடுமை மாறும், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது, பிள்ளைகள் நல்லபடி இருக்கும்.
நீங்களெல்லாம் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து, ஆசி பெற வேண்டும். இந்த சங்கம் மிகப்பெரிய உயர்ந்த சங்கம். என்ன காரணம் உயர்ந்த தொண்டர்கள்! உயர்ந்த தொண்டர்கள்! உயர்ந்த தொண்டர்கள் இங்கு இருக்கிறார்கள்.
இந்த காலத்தில் குனிந்து நிமிர்ந்தால் எவ்வளவு வருவாய் வரும் என்று எதிர்பார்கின்ற காலத்தில் இரவும் பகலுமாக தொண்டு செய்கிறார்கள், அப்படிப்பட்ட தொண்டர்களை மதிக்கிறேன். உங்கள் திருவடியை வணங்குகிறேன். அவர்கள் “நீடு வாழ வேண்டும்!” என வாழ்த்துகிறேன்.
ஆகவே நீங்களும் எங்களை வாழ்த்த வேண்டும். இந்த ஸ்தாபனம் நல்லபடி இருந்தால், ஏழை எளிய மக்கள் பசியாறலாம்.
உங்களுக்கு நோய் இருக்கிறதா, எந்த நோயாக இருந்தாலும் சரி, வறுமை இருக்கிறதா, பிரச்சனை இருக்கிறதா எதுவாக இருந்தாலும் சரி, இங்கே வந்து கையளவு உணவு சாப்பிட்டால் போதும்.
இங்கே உணவு சாப்பிட்டால், நோய் தீரும். என்ன காரணம்? இங்கே ஏழைகள் கடும் பசியோடு வருவார்கள். அப்படி பசியோடு வரும்போது அவர்களிடம் அன்பு காட்டி சாப்பாடு போடுவார்கள். தொண்டர்கள் சகிப்புத் தன்மையோடு, ரொம்ப இனிமையாக பேசி, சாப்பாடு போடுவார்கள், பரிமாறுவார்கள். அவர்கள் பசியாறி செல்வார்கள். அவர்கள் மனதில் ஒரு ஆறுதல் இருக்கும்.
ஆகவே இந்த உணவை கடவுள் பிரசாதமாக நினைக்க வேண்டும். ஓங்காரக்குடில், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக தருகின்ற உணவு அருட்பிரசாதம். எங்கள் தொண்டர்கள் மனமுவந்து பரிமாறுவார்கள். நாங்கள் சாப்பாடு போட்டிருக்கிறோம். குனிந்து நிமிர்ந்து சாப்பாடு போட்டிருக்கிறோம். அப்போது இடுப்பு வலி என்ன என்பதை தெரிந்து கொண்டேன். அப்படி எந்த வேலையையும் நான் செய்து பார்க்கின்றவன். கொத்து வேலை (கட்டிட வேலை) நடக்கும்போது, நானே ஐந்து கல்லை வைத்து தூக்கி கொண்டு போவேன். அப்போது சிரமத்தை புரிந்து கொள்வேன். அது தெரியும் எனக்கு.
ஒரு ஆள் சாப்பிட உட்கார்ந்தால், பத்து முறை குனிந்து நிமிர்ந்து பரிமாற வேண்டும். தட்டு வைப்பது, சாப்பாடு போடுவது என்று பத்து முறை ஒருவர் குனிந்து நிமிர வேண்டும் ஒரு ஆள் சாப்பிடுவதற்கு. இப்ப ஆயிரம் பேர் சாப்பிட்டால், எங்கள் தொண்டர்கள் 10,000 முறை குனிந்து நிமிர்ந்திருக்கிறார்கள். இங்கே ஆண்களும், பெண்களும் தொண்டு செய்கிறார்கள். இங்கே ஆண்களும், பெண்களும் தொண்டு செய்கிறார்கள். அத்தனை பெரும் கடவுள் தன்மை உள்ளவர்கள். அத்தனை பேரும் ஞானிகள்! அத்தனை பேரும் கடவுள்!
ஆகவே, இங்கே தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால், பெரும் பாக்கியமாக கருத வேண்டும். ஒரே லட்சியம் பசியாற்ற வேண்டும். தலைவனை வணங்க வேண்டுமென்று இலட்சியம் உள்ளவர்கள் எங்கள் தொண்டர்கள். ஆகவே அவர்கள் வாழ வேண்டும். எப்பொழுதும் மனம் உவந்து செய்வார்கள். கொஞ்சம் கூட முகத்தில் மாற்றம் இருக்காது. ஒரு நபர், அன்னதானம் முடிவதற்குள் கிட்டத்தட்ட 1000 முறை குனிந்து நிமிர்ந்திருப்பார்கள்! ஆயிரம் முறை குனிந்து நிமிர்ந்தாலும், மலர்ந்த முகத்தோடு, தொண்டு செய்கின்ற மக்கள். அவர்கள் நீடு வாழ வேண்டும். இந்த சங்கம் நீடு வாழ வேண்டும். இந்த சங்கத்தார்கள் நீடு வாழ வேண்டுமென்றும் நீங்களும் எங்களை வாழ்த்த வேண்டும்.
எந்த அளவிற்கு இந்த சங்கம் உயர்கின்றதோ, எந்த அளவிற்கு சங்க நீடித்து இருக்கின்றதோ, எந்த அளவிற்கு பெருமை அடைகின்றதோ, அந்த அளவிற்கு நாட்டுக்கு நன்மை நடக்கும். நாங்கள் மூடத்தனத்தை உருவாக்க மாட்டோம். இங்கே மூடத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. “அந்த கோவிலுக்கு போ! இந்த கோவிலுக்கு போ! அங்கே கும்பாபிஷேகம் பார்! அந்த குளத்தில் முழுகு!” என்று சொல்ல மாட்டோம்.
“அங்கே போய் அன்னதானம் செய்! இங்கே போய் அன்னதானம் செய்! அன்பாக நடந்து கொள்!” என்று சொல்வோம். அப்படி அன்பு உணர்ச்சியை சொல்கின்ற இடம். நோயைப் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆன்மாவைப் பற்றி எங்களுக்கு தெரியும். உடம்பைப் பற்றித் தெரியும். உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.
ஆகவே நீங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும், காலை எழும் போதே,
“ஓம் அகத்தீசாய நம! ஓம் நந்தீசாய நம!
ஓம் திருமூல தேவாய நம! ஓம் கருவூர் தேவாய நம!
என்று சொல்லி நாமஜெபம் செய்ய வேண்டும். மேற்கண்ட நான்கு மகான்களும் மிகப்பெரிய ஞானிகள், நான்கு பெரிய மகான்கள் நாமத்தைச் சொல்லி, நீங்கள் ஆசிபெற்றுக் கோல வேண்டும்.
உங்களுக்கு பண்புள்ள புத்திர பாக்கியம் அமையவும், பிள்ளைகளுக்கு தடையில்லாத திருமணம் அமையவும், சொந்த வீடு அமையவும், வறுமை இல்லாத வாழ்வு அமையவும், நோயில்லாத வாழ்வு அமையவும், நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தி முடிக்கிறேன். வணக்கம்.