29.03.1998 அன்று காயமே இது பொய்யடா என்ற தலைப்பில் | மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


காயமே இது பொய்யடா

அனுபுள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்
     உண்மை ஆன்மிகம் ஒன்று இருக்கிறதென்றால் பொய் ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். அரிசி என்றால் மேலே உமி இருக்கும். உண்மை ஆன்மிகம் என்றால் பொய் ஒன்று இருக்கிறது.
     

உண்மை ஆன்மிகம் என்றால் என்ன?

     பைக்குள் மெய் இருக்கிறது என்று அர்த்தம். எது பொய்யோ அதில் மெய் இருக்கிறது. இந்த உடம்பு பொய்தான்.
     காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
     மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
     வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா
     காயமே இது பொய்யடா. காயம் என்றால் உடம்பு.
     காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா – காற்றடைத்த பைதான். மாயனார் குயவன் – மாயன் என்றால் திருமால் என்று அர்த்தம். இருவரும் சேர்ந்துதான் செய்யணும். மாயனார் குயவன் செய்து மண்ணு பாண்டம் ஓடடா – மண்ணு பாண்டம் ஓடு என்று சொன்னார். பானை என்று சொல்லவில்லை.
     வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா – ஆக இப்படித்தான் நமது தேகம் இருக்கிறது. இதை அறிந்தவர்கள் இந்த காயம் பொய் என்று சொல்லிவிட்டார்கள். சரி, காயம் பொய் என்றால் எங்கோ ஒரு உண்மை இருக்க வேண்டுமல்லவா? எங்கே இருக்கிறது அந்த உண்மை? உடம்பில்தான்.
     இந்த உடம்பு பொய்தான். யாருக்கு? ஆசான் அகத்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ, மகான் போகமகாரிஷியையோ பூஜை செய்யாத மக்களுக்கு இந்த உடம்பு பொய். ஞானிகளெல்லாம் பொய்யில் உண்மை கண்டவர்கள். பொய்யாகிய உடம்புக்குள் மெய்யைக் காண்பது என்று அர்த்தம்.
அந்த மெய்யைக் காண்பதற்கு என்ன செய்யலாம்? யாரொருவன் இந்த உண்மையை அறிந்தானோ அவனுக்குத்தான் இது புரியும். தலைவன் ஆசியிருந்தால்தான் இது போன்ற அறிவு வரும். தலைவன் ஆசியிருக்க வேண்டுமென்றார். பொய்யை மெய்யாக்கிக் கொண்டார் என்றார்.
பொய் எது? மெய் எது? புற உடம்பு பொய். உள்ளுடம்பு மெய். உள்ளுடம்பு மெய் என்பதை அறிந்து கொள்ளனும். புற உடம்பை பொய் என்று அறியாமல் உள்ளுடம்பை மெய் என்று எவ்வாறு அறிய முடியும்? புற உடம்பு தூல தேகம். காணக்கூடிய தேகத்தை தூல தேகம் என்று சொல்வார்கள். அதற்குள்ளே சூட்சும தேகம் இருக்கிறது.
எனவே தூல தேகத்தின் துணையில்லாமல் சூட்சும தேகத்தை அறிய முடியாது. தூலம் என்றால் உடம்பு என்று அர்த்தம். இந்த உடம்பு தோன்றுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இயற்கை அன்னை இந்த மனித தேகத்தில்தான் அந்த இரகசியத்தை அமைத்து வைத்திருக்கிறாள். தூல தேகத்தில் சூட்சும தேகம் இருக்கிறது.
சூட்சும தேகத்தை அறியும் வரையில் “காயமே இது பொய்யடா”

சூட்சும தேகம் எப்படி வெளிப்படும்? 


சும்மா பட்டினி கிடந்தால் முடியுமா? அப்படி பட்டினி கிடந்தால் சாக வேண்டியதுதான். யோகிகள் இந்த தூலதேகத்தை உடைத்தெறிகிறார்கள். தூல தேகத்தை பொடியாக்க வேண்டும். அதை புகையச் செய்ய வேண்டும். தூல தேகமாகிய புற உடம்பை உடைத்தெறிய வேண்டும். அப்படியென்றால் தூலதேகத்தை சாகடிப்பதா? இல்லையில்லை சாகாமல் சாகடிக்க வேண்டுமென்றார்.  
இந்த உடம்பின் இயல்பு எப்படி இருக்கிறது? சூட்சும தேகம் வெளியாவது என்றால் என்ன? நெல் முளைத்தால், அதை பார்க்கும்போது வெண்டாகி(முளைகட்டு நெல்) இருக்கும். அந்த நெல் முளைத்துவிடும். அந்த நெல் வெண்டாகி விடும்.
நெல் முளைத்து அதன் இலைகள் விரிய ஆரம்பிக்கும்போது அந்த நெல்லை அதுவரை பாதுகாத்து வந்த மேலே இருந்த உமி நெற்பயிரை விட்டு தானே கழன்று கீழே விழுந்துவிடும். இதை தஞ்சை பகுதியில் வெண்டாதல் என்பார்கள். அதுவரை நெல்லாயிருந்த அந்த அரிசியானது தக்க சூழ்நிலையில் முளைத்து நெல் என்ற நிலையிலிருந்து செடியாக மாறிவிட்டதால் அங்கே நெல் இல்லை, ஆக ஒன்றுமில்லாமல் ஆகி விடும்.
அது போன்று, இந்த புறதேகம் வீழ்ச்சியடைகிறது, வெண்டாகி விடுகிறது, ஒன்றும் வலுவில்லாமல் போய்விடுகிறது. பதர் போன்று ஆகிவிடும். வெண்டு – முளைத்ததற்கப்புறம் வெண்டாகி விடுமென்று சொல்வார். அது மாதிரி, முளைக்கக் கூடிய ஒன்று சூட்சும தேகம். இப்படி ஒரு உண்மை இருக்கிறது. எனவே முளைக்கக்கூடிய ஒன்றுதான் உண்மையான ஆன்மிகம். ஒவ்வொருவரும் அந்த தேகத்தைப் பற்றியே தெரியாமல் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு தேகம் நம்மிடம் இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்தணும்? யாருக்கும் ஆர்வம் இல்லை. இப்படி ஒன்று இருக்கிறது. பிடித்துக் கரையேறிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்காது. ஏனய்யா ஒரு  சிலருக்கு மட்டும்தான் அந்த ஆர்வம் இருக்கிறது. யாரொருவன் ஞானிகளை தினம் பயபக்தியோடு வணங்கி பூஜை செய்கிறானோ? அவர்களுக்கு இது கைகூடுகிறது. கழிக்கின்ற மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.
வீண்பொழுது கழிக்கும் மக்களுக்கு சூட்சும தேகத்தைப்பற்றியும் தூல தேகத்தைப்பற்றியும் தெரியாது. மேலும் காரண தேகம் ஒன்று இருக்கிறது. ஒரே தேகத்திற்குள் தூல தேகமென்றும், அதே தேகத்தினுள்ளே சூட்சும தேகமென்றும், அதுவே காரண தேகம் என்றும் சொல்வார்கள். அது காரான தேகம்.
காரண தேகமேன்றால் எல்லையில்லாப் பேராற்றால், உயிரினங்கள் தோற்றமாவதற்கு, உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமான ஒன்றுக்குக் காரணம் என்று பொருள். ஞானிகளை பூஜை செய்கிறவன் காரண தேகம் அடைகிறான்.
சரி, அந்த தேகத்திற்கு எது துணை? எதை நீ காமத்திற்கு பயன்படுத்துகிறாயோ, எந்த தேகம் நீடித்திருக்கும் என்று நீ மயங்குகிறாயோ அந்த தேகம் அழியணும். காமத்திற்கு பயன்படுத்தக் கூடிய தேகத்திற்குள் தான் இப்படி ஓர் அற்புதம் இருக்கிறது. தேகத்திற்குள் சூட்சும தேகமும், காரண தேகமும் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு சாது சங்கம் தொடர்பு இருக்க வேண்டும். தூலத்தையும், சூட்சுமத்தையும், காரண தேகத்தையும் அறிந்தவர்களுடைய நட்பு கிடைக்க வேண்டும். ஞானிகள்தான் இதை சொல்லிக் கொடுப்பார்கள்.
பிராணாயாமம் இப்படி செய், அப்படி செய் என்று சொன்னால் செத்துப்போவான். நாங்களெல்லாம் பிராணாயாம் செய்து இந்த வாய்ப்பைப் பெறவில்லை, தியானம் செய்திருக்கிறோம். யாரை குறித்து தியானம் செய்திருக்கிறோம்? தூலதேகத்தின் துணைக் கொண்டு, காரண தேகத்தைப் பெற்ற ஞானிகளை பூஜை செய்து பெற்றிருக்கிறோம்.
புற உடம்பின் துணைக் கொண்டு, அக உடம்பாகிய சூட்சும தேகத்தை ஆக்கம் பெறச்செய்து, முடிவில் அந்த ஆக்கம் பெற்ற உடம்பும் நிர்மலமாகி, ஜோதி உடம்பாகிறது. அப்படிப்பட்ட ஜோதி உடம்பானவர்களை நாங்கள் தியானம் செய்திருக்கிறோம்.
இதை வெகுபேர் பிராணாயாமம் செய்வதாக நினைக்கிறார்கள். அதை ஏன் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாதென்று நினைக்கிறார்கள். சொல்லிக் கொடுப்பதால் எதுவும் நடக்காது. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் வராது.
நாம் எந்த அளவுக்கு உருகி தியானம் செய்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் தூலதேகத்தின் பலகீனங்கள் உணர்த்தப்படும். தூலதேகம் என்பது புறஉடம்பு. இந்த புற உடம்பினுடைய இயல்பே நம்மை நரகத்துக்கு தள்ளக்கூடிய உணர்வுகளை உண்டுபண்ணும், பலகீனத்தை உண்டு பண்ணும். எவையெல்லாம் நாகத்தை தருமோ, அதற்கு இட்டுச் செல்லும்.
அப்போ தூலதேகத்தை என்ன செய்வது? கொன்று விடுவதா என்றால் கொல்லக்கூடாது. இதைக் கொன்றால் செத்துப்போவான். ஆக இந்த தூலதேகம் அற்புத தேகம். அதைத்தான் பெறுதற்கரிய மானுடப்பிறவியைப் பெற்றேன் என்பார். இந்த தேகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சரிய்யா! அப்பா பெண்ணுறவு கொள்ளக்கூடாதென்று யாரும் சொல்ல மாட்டார்கள். தூலதேகத்தின் போக்கிலேயே சென்றுதான் கொள்ள முடியும். சூட்சுமதேகத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டு. இந்த தேகமில்லாமல் அந்த தேகம் வராது.
சரி, இப்ப நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. இந்த தேகத்தை காப்பாற்றக் கூடாது என்று சொல்கிறீர்களா? காப்பாற்றணும். அப்ப பெண்ணுறவு கூடாது என்கிறீர்களா? அது குற்றமில்லை. இல்லையென்றால் கொழுப்பு மண்டி செத்துப்போவான். அவ்வாறு  இல்லையெனில் உடம்பு வீணாக போய்விடும்.

மாதர்தோள் சேராதவர் மானிலத்தி லில்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதவாழ் சிறக்குமே
மாதராகுஞ் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 529

ஆக இப்படியெல்லாம் இந்த தேகம் இருக்கிறது. இந்த தேகத்தைப் பற்றி அதிகமாக பேசக்கூடாது என்று எனக்கு கட்டளை.
இந்த உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நான் முக்கியமான விஷயத்தையெல்லாம் பேசக்கூடாது. என்ன காரணம்? அவரவர்கள் பூஜை செய்து அறிந்து கொள்ள வேண்டும். இது சொல்லி தெரிகின்ற விஷயமென்றால் வெகுபேர் ஞானியாகி இருப்பார்கள். பூஜை செய்துதான் ஆசி பெற வேண்டும். அப்ப பூஜை செய்து ஆசி பெறும்போதுதான், தூல, சூட்சும தேகத்தைப் பற்றி அறிவான். தூலதேகத்தைப் பற்றி அறிந்து, தூலதேகம் இருக்கும்போதே, ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்? காலை மாலை காரணதேகம் பெற்றவர்களை தியானம் செய்ய வேண்டும். காரண தேகம் பெற்றவர்களை, எல்லாம்வல்ல இயற்கையை அறிந்து இயற்கையோடு ஒன்றியவர்களை பூஜை செய்யவேண்டும்.
இயற்கையை ஒரு தோற்றமாகக் காட்ட முடியாது. இயற்கை ஆணாகவும், பெண்ணாகவும் காட்டும். ஆனால் ஆணாகவும், பெண்ணாகவும் காட்டுமே தவிர, சுடராகக் காட்டாது.
ஞானிகள் தேகம் ஜோதியாக இருக்கும், ஒளிமயமானதாக இருக்கும். அந்த ஜோதி தேகத்திற்கு காரணம் ஆசான் சுப்ரமணியர்தான். அவர்தான் இந்த இரகசியத்தை அறிந்தார். அந்த தேகத்தை அறிவதே உண்மை ஆன்மீகம். ஞானிகளெல்லாம் பொய்யுள் மெய்யைக் கண்டவர்கள், இருளில் ஒளியைக் கண்டவர்கள். ஞானிகளைப் பூஜை செய்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்.
     பூஜைதான் முக்கியம் என்பதை முதலில் அறிய வேண்டும். யோகநெறி என்பதெல்லாம் பிறகுதான். யோகநெறி என்பது, ஞானிகள் ஆசியில்லாமல் கைகூடாது. இதுதான் அடிப்படையாக இருக்கும்.
     ஆனால் மற்றவர்கள் ஒன்றும் தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று பேசி ஏதேதோ பிராணாயாமம் செய்து, செத்துப் போவார்கள். இவர்களுக்கு நட்டமில்லை.
     இதெல்லாம் செய்யாதைய்யா, பிராணாயாமம் செய்தால் செத்துப்போவாய் என்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள். இவர் மட்டும் செய்தாரே, நாம் செய்தாலென்ன? என்று கேட்பார்கள். நாம் தலையிடக் கூடாது, அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு நாம் என் செய்வோம்? என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
     நாம் பிராணாயாமம் செய்யாதே. அப்படி செய்தால் செத்துப்போவாய் என்று சொல்வோம். தினம் தியானம் செய். புலால் உணவு, மாமிசம் சாப்பிடாதே. உய்ரிவதை செய்து உண்ணாதே, முறையோடு இரு. உயிர்வதை செய்து அதன் புலாலை சாப்பிடக் கூடாது. தினம் தியானம் செய்ய வேண்டும். அளவறிந்து இல்லறம் நடத்த வேண்டும். உடம்பை ரொம்ப செலவு செய்து விடாதே. உடம்பை ரொம்ப செலவு செய்தால் வீணாகப் போகும். ஆகவே நீடிய ஆயுள் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
     மனதை சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி மனதை சாந்தப்படுத்திக் கொல்வதென்பது தியானத்தால்தான் முடியும், வேறு எந்த வகையிலும் மனதை சாந்தப்படுத்த முடியாது. இதை சாதுசங்கத்தை சார்ந்தவர்கள்தான் சொல்ல முடியும்.
     தினமும் பத்து பேர் ஓரிடத்தில் கூட வேண்டும். திருஅருட்பா, திருமந்திரம், திருக்குறள் அனைவரும் படிக்க வேண்டும். இதைப் பற்றியே பேச வேண்டும். வேறு எங்கும் போகக் கூடாது. ஆக இப்படி சாது சங்க தொடர்பு இருக்க வேண்டும்.
     அதிகமாக கிரிகெட் விளையாடுவதை பார்ப்பது, அதிக நேரம் டி.வி பார்ப்பது இதெல்லாம் இந்தத் துறையில் வருகிறவர்களுக்கு ஆகாது. டி.வி பார்ப்பது ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம்தான் இருக்க வேண்டும். அதிலேயே முழுகவனம் செலுத்திக் கொண்டிருந்தால் இந்தத் துறைக்கு அவர்கள் பயனற்றவர்கள்.
உணவுப் பழக்க வழக்கங்கள், செய்முறை பயிற்சிகள், அடுத்துப் பொருள் சேர்க்கும்போது பாவியென்று பேரேடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாவி பாவி என்று பலபேர் சொன்னால், எவ்வளவு பூஜை செய்தாலும் எடுபடாது. எனவே பொருள் சேர்க்கும்போது நெறிக்கு உட்பட்டுப் பொருள் சேர்க்க வேண்டுமென்பது ஆசான் தயவு இருந்தால்தான் முடியும்.
தயவு இல்லாவிட்டால் என்ன ஆகும்? பொருள் மீது வெறி வரும். பொருள் வெறி வந்ததென்றால் எப்படியும் பொருள் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அப்பொழுதே வினை சூழ்கிறது.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு இந்த பொருள் வெறி ஆகாதென்று மனது சொல்ல வேண்டும். இல்லையென்றால் கடைசி வரை பொருள் வெறியால் எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டுமென்ற என்ன இருக்கும்.
பொருள் சேர்க்க வேண்டுமென்று எண்ணும்போது, வினை சூழ்ந்ததென்றால் அறிவு வேலை செய்யாமல் போய்விடும். இந்த துறைக்கு ரொம்ப மிகப்பெரிய அறிவு வேண்டும். இந்த அறிவு சாதாரண விசயமல்ல.
டி.வி பார்க்கக் கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இருபத்திநான்கு மணி நேரம் யாரும் பூஜை செய்ய முடியாது.
டி.வி பார்க்கலாம், பாடல் கேட்கலாம். அப்படியே கடற்கரை பக்கம் போகலாம். எங்கேயும் ஒரு ஆறுதல் அடையலாம். ஆனால் மனதில் மட்டும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வந்திருக்கிறோம், என்ற எண்ணம் வேண்டும்.
இந்த மனிதபிறவி போனதென்றால் பிறகு வேறு எந்தப் பிறவி கிடைக்குமோ தெரியாது. கிடைத்தற்கரிய மானிடப்பிறவி கிடைத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிற உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் மனது கண்டபடி சுற்ற ஆரம்பித்துவிடும். இன்னும் ரொம்ப பிரச்சனை இருக்கிறதென்றால், எங்கே பெரிய சுடுகாடு இருக்கிறதோ, அங்கே வாரத்திற்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டும். அந்த எலும்புகள், மண்டை ஓடு, கை எலும்பு, கால் எலும்பு அந்தக் கோலங்களைப் பார்க்க வேண்டும். ஐயோ! இப்படி ஒரு நிலைமை நமக்கு வரக்கூடாது என்ற உணர்வு வேண்டும். மனதை ஸ்திரப்படுத்திக் கொள்ள இப்படி தொடர்ந்து அடிக்கடி சுடுகாட்டிற்கு போய்ப்பார்க்க வேண்டும்.
     நாங்களெல்லாம் அந்த காலத்தில் தினமும் ஐந்து மணிக்கு சுடுகாட்டிற்கு போவோம். அங்கே விகாரமாகக் கிடக்கக்கூடிய எலும்புகூடுகளையும் அள்ளி அள்ளி வெளியே போட்டிருப்பார்கள். இதையெல்லாம் நாங்கள் பார்த்தோம். உலக நடையில் கவனம் செலுத்தியவனுக்கு இது போன்ற மரணம் வரும். இந்த நிலைமை நமக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மனதை ஸ்திரப்படுத்திக் கொள்ள இது அவசியம்.
     பெரிய காரியத்திற்கு செல்லும்போதெல்லாம் நமக்கு இந்த நிலைமை வரக்கூடாதென்ற அச்சம் இருக்க வேண்டும். இந்த அச்சம் வருவதற்கு சாது சங்க தொடர்பு இருக்க வேண்டும். இந்த அச்சம் யாருக்கு வருமென்றால் சிலபேருக்குத்தான் வரும். எப்போது வருமெனக் கேட்டால், நோய் வந்ததற்கு பிறகுதான் அச்சம் வரும். நோய் வருவதற்கு முன்னே அச்சம் வராது. அதுவும் நோய் வந்த பின்பு தப்பித்துக் கொள்ளலாம் என்றால் அச்சம் இருக்கிறது.
     ஐயா, புற்று நோய் உனக்கு வந்து விட்டது, நீ செத்துப்போவாய் என்று சொன்னதற்கு அப்புறம்தான், பயம் வரும். கடைசி எல்லைக்கு வருவான். அதற்கப்புறம் பயம் வந்து எதற்காவது? இப்படி ஒருவகையான அச்சத்தை நாம் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். எப்பய்யா வரும்? புண்ணியமும், பூஜையும் செய்தால்தான் வரும்.
     புண்ணியவான்களுக்கும், பூஜை செய்கின்ற மக்களுக்கும்தான் சாவைப்பற்றிய ஒரு பயமிருக்கும். அந்த சாவைப்பற்றிய பயம் வருவதற்குதான் சுடுகாடு போவது, பெரியகாரியங்களுக்கு போவது, இறந்து போனவர்களை சென்று பார்க்கவேண்டும். இதெல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதற்குத் துணையாக இருக்கும்.
     திருஅருட்பா, திருமந்திரம் போன்ற ஞானிகள் அருளிய நூல்களெல்லாம் பெரிய நூல்கள். இந்த பெரிய நூல்களை படிக்கும்போதும், தொடும்போதும் ஞானிகள் பார்ப்பார்கள். அவர்களுடைய ஆசி கிடைக்கும். இந்த ஞானநூல்களை பயபக்த்தியுடன் தொட்டால்தான் ஆசி கிடைக்கும். இடது கையால் தொட்டால், ஞானிகளுக்கு கோபம் வந்துவிடும்.
     ஆகவே திருமந்திரம், திருக்குறள், தாயுமானசுவாமிகள் அருளிய பாடல்கள், ஆசான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் இது போன்ற ஞானநூல்களை தொட்டு வணங்கி படித்தால், நிச்சயமாக அவர்களுக்கு ஆசி கிடைக்கும். ஆகா இப்படி ஒரு முறையை கையாள வேண்டும்.
     தினம் காலை மாலை ஞானிகள் நாமத்தை பத்து நிமிடம் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு வியாபாரம் செய்ய வேண்டும், உத்தியோகம் பார்க்க வேண்டும், உலக நடையிலும் இருந்து கொள்ள வேண்டும், தனக்கு வருவாயை தேடிக்கொள்ள வேண்டும். ஆக எதைத் தொட்டாலும் சிந்தனை மட்டும் மேல்நிலையில்தான் இருக்க வேண்டும்.
     மேல்நிலையில் அறிவை செலுத்தாமல் ஒருவருக்கு இப்படி பூஜை செய்ய அறிவு வராது. ஆக எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். எல்லா இடத்தில் இருக்கும்போது இந்த உலகம் நிலையில்லாதது, நிலையில்லாத உலகம். நிலையான ஒன்றை அடைய வேண்டுமென்ற நினைப்பும் இருக்க வேண்டும்.
     இப்படி ஒரு நினைவு இருப்பதற்கு வாரத்திற்கு ஒருமுறை சுடுகாட்டிற்கு போக வேண்டும். பீச்சுக்கு (கடற்கரை) எப்படி போகிறோமோ அதேபோன்று சுடுகாட்டிற்கும் போக வேண்டும். அங்கே உள்ள கோலங்களைப் பார்க்க வேண்டும். மன ஆறுதல் அடைவதற்கு பூங்காவிற்கு போகலாம், அழகிய மலர்களை பார்க்க வேண்டும். சிறு குழந்தைகளைப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு ஆறுதல் அடைய வேண்டும்.
     இப்படி பல்வேறு காட்சிகளைக் கண்டு நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் எந்தக் காட்சிகளும் நிலையில்லாதது. இப்பொழுது நாம் காண்கின்ற காட்சிகள் குழந்தைகள் மற்றைய அழகான காட்சிகளெல்லாம் நிலையில்லாதது என்ற எண்ணம் வேண்டும்.
     காணுகின்ற இந்த காட்சிகள் என்றைக்கும் இருக்கும், நாம்தான் அழிந்துபோவோம். இதுபோன்ற வண்ண வண்ண காட்சிகள் என்றைக்கும் இருக்கும். ஆனால் இதை காணுகின்ற நாம்தான் இறந்து போவோம். இப்படிப்பட்ட உணர்வுகள் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
     இது போன்ற உணர்வுகள்தான் உண்மை ஆன்மீகத்திற்கு துணையாக இருக்கும். இந்த உணர்வு பூஜை செய்யாமல் வரவே வராது. இல்லையென்றால் அழகிய மலர்க்கூட்டங்கள், அழகிய காட்சிகள், அழகிய குழந்தைகள் இதுபோன்ற பலவகையான காட்சிகளை காணும்போது மனது அதிலேயே லயமாகும். காட்சிகள் இருக்கும் நாம் அழிந்து போவோம். இந்த அறிவு பூஜை செய்தால்தான் வரும். இதையெல்லாம் மனதில் சொல்லிக்கொண்டே வரணும். இல்லையென்று சொன்னால் நிச்சயமாக இதுபோன்ற குணம் வரவே வராது.
     ஆக இப்படியெல்லாம் செய்தால்தான் மனது ஒரு நிலைமைக்கு வரும். ஆக காட்சிகள் இருக்கும், நாம் அழிந்து போவோம். எந்த காட்சி அழியும்? உணர்ச்சியற்ற ஒன்றுதான் அழியாது. ஓவியமும், கற்சிலைகளும் அழியாது, அவைகள் உணர்ச்சியற்றவை.
     ஓவியம் அழகாக தீட்டி வைத்திருப்பான். உணர்ச்சியற்ற ஒன்று மட்டும் அழியாது. ஜடப்பொருள் என்றால் மண்ணால் செய்தது, கல்லால் செய்தது. ஆக ஜடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா காட்சிகளும் அழிந்தே போகும், நாமும் அழிந்து போவோம். காண்கின்ற கண்களும் திரையுண்டு போகும், காட்சிகளும் அழிந்து போகும்.
     உலகத்தில் எல்லாக் காட்சிகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். காண்கின்ற கண்கள் என்னாச்சு? கண்டு ரசித்த மனம் என்னாச்சு? என்ன நிலைமை வந்தது என்று இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். நம்மை நம் உணர்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆசான் அருணகிரிநாதர்தான் சொல்வார்.
    
முருகன் தனிவேல் முநிநம் குருவென்
     றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
     உருவன் றருவன் றுளதன் றிலதன்
     றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
    கந்தரநுபூதி – கவி எண் 13
            ஆக அருள் கொண்டு அறிய வேண்டுமென்பார். அதுவே என்ற வார்த்தையை பயன்படுத்துவார். இந்தப் பாடலில் ஒரு முக்கியமான இரகசியம் இருக்கிறது.
     அது என்று சொன்னார். தலைவனை அது அல்லது அக்றிணை என்று சொல்வார். உணர்ச்சியற்ற ஒன்றாக தலைவன் இருக்கிறான். முன்பு அவனிடம் உணர்ச்சி இருந்தது, இப்போது இல்லை. தவமுயற்சியாலும், விடாமுயர்ச்சியாலும் உண்மை ஆன்மீகத்தை அறிந்துதான் அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறான். உணர்ச்சியுள்ள ஒரு மனிதனாகப் பிறந்து, தவமுயற்சியால் உணர்ச்சியற்று, அது இது என்று சொல்லப்பட்ட ஜடப்பொருளாக மாறிவிட்டார்கள். ஜடப்பொருளாக மாறக்கூடிய ஒன்றுதான் அழியாது. இதைத்தான் அது இது என்று சொல்வான். இப்படியெல்லாம் தலைவன் இருக்கிறான். ஆசான் சுப்ரமணியரைத் துணையாக கொண்டுதான் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறான்.
     ஆசான் சுப்பிரமணியர்தான் உண்மை. உண்மைதான் ஆசான் சுப்பிரமணியர். வேறு வழியே இல்லை. அவர்தான் இந்த உலக மக்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டியிருக்கிறார். அவர் சோம்பேறித்தனப்பட்டிருந்தால் நாம் இதையெல்லாம் பேசக்கூட முடியாது. இப்ப உலகத்தில் இருக்கும் எல்லா அறிவும் ஆசான் சுப்பிரமணியர் கொடுத்ததுதான். ஆசான் சுப்ரமணியரை வணங்கியவர்கள்தான், வெளிநாட்டில் விஞ்ஞானியாகவும், மருத்துவமேதையாகவும் இருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளியாகவும் உள்ளவர்களெல்லாம் ஞானிகள் ஆசி பெற்றவர்கள்தான். ஞானிகளை பூஜை செய்வான், வெளிநாட்டில் பிறப்பான், விஞ்ஞானியாகி விடுவான். எனவே எல்லாத் துறைக்கும் அறிவு தந்தது ஆசான் சுப்பிரமணியர்தான். அவரை வணங்கவில்லையென்றால் நிச்சயமாக ஒருவனுக்கு உண்மை ஆன்மீகத்தைப் பற்றி தெரியாது. அதைத்தான் சொன்னார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே – எப்போது பாலனாவான்?
யாராலும் அறிய முடியாத இரகசியம்.
ஒரு பழம் மீண்டும் காய் ஆகாது. இது இயற்கை. ஆனால் ஆசான் சுப்பிரமணியர் காய் ஆனார். அதாவது பாலன் ஆனார். பாலபருவம் – குழந்தை பருவம் என்றார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே வணங்கினால் என்ன ஆகும்?
ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்கிறான். ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்தாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை பூஜை செய்தாலும் சரி! எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது. அத்தனை பேரும் அது, இது ஆனவர்கள். அது இது என்பது ஜடப்பொருள். அதை உணர்ச்சியற்ற ஒன்று என்று சொல்வார்கள். பாலனெனும் குமரனையே வணங்கு என்பார் ஆசான் சட்டமுனிநாதர். அப்ப ஆசான் சுப்ரமணியரை வணங்கு என்றார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே
வணங்கினால் சகலசித்தும் கைக்குள்ளாச்சு
“ஓம் சரவண பவ” என்றாலோ அல்லது “முருகா” என்று சொன்னாலோ போதும். இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம். அதே மாதிரி ஓம் அகத்திசாய நம என்று சொன்னாலும் சரி! எல்லாம் சாதிக்கலாம். இவர்கள் அத்தனை பேரும் ஒரே சாதனையை செய்தவர்கள்.
எது சாதனை என்றான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்கிற ஒரே சிந்தனையைத் தவிர, மற்ற எல்லா சித்திகளும் உலகநலனை மையமாகக் கொண்டதுதான்.
சகலத்திலும் கைக்குள்ளாச்சு. ஒரு மனிதனுக்கு தவத்திர்க்குரிய அறிவு வேண்டும். அதற்குத் தேவையான பொருள் வேண்டும், நல்லபடி பொழுது போக வேண்டும். நல்ல நட்பு வேண்டும். நல்ல தொண்டர் பலம் இருக்க வேண்டும். செயல்பட தேவையான எல்லா அமைப்பும் இருக்க வேண்டும்.
எதை நினைத்தாலும் கைகூடும். சகல சித்தும் கைக்குள்ளாச்சு. எல்லா சித்துக்கள் என்பது காரிய சித்திகள் ஆகும். காரிய சித்திகள் ஞானிகளை வணங்குகின்ற மக்களுக்குத்தான் கிடைக்குமே தவிர, எவ்வளவுதான் அறிவுள்ளவனாக இருந்தாலும் சரி, காரியசித்தியை பெற முடியாது, அவனால் ஒன்றும் அசைக்க முடியாது.
இதற்கு நாமே ஒரு எடுத்துக்காட்டு. இங்கே ஓங்காரக்குடில் எல்லாக் காரியமும் நடக்கிறது. என்னய்யா, அவரிடம் என்ன மந்திரம் இருக்கென்றால், ஒன்றுமில்லை. முதுபெரும் தலைவன் ஆசான் சுப்பிரமணியரையும், முதுபெரும் தலைவன் ஆசான் அகத்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் நந்தீசரையும், ஆசான் அருணகிரிநாதரையும் பூஜை செய்கிறோம். சகலசித்தும் கைக்குள்ளாச்சு, ஒரு முறை “ஓம் சரவண பவ” என்று சொன்னால் என்ன ஆகும் என்பதை,
முருகா யெனவோர் தரமோதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
“ஓம் சரவண பவ” அல்லது “முருகா” என்று ஒரு நாமத்தைச் சொல்லி வாய் மூடுவதற்கு முன்னே ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒழி படருமாம் – முருகா என ஓர் தரம் ஒதடியார் – முருகா என்று ஓதி முடிப்பதற்கு முன்னே – முடிமேல் இணைத்தாள் அருள்வோனே என்றார். அவனுடைய திருவடியை கொண்டுபோய் சிரசில் வைக்கிறான். சிரசு என்பது இடகலை, பிங்கலை என்று அர்த்தம். அது இன்னும் மேலே போக வேண்டும். ஆக சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
வணங்கினால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். யாரை வணங்கினால், ஆசான் சுப்ரமணியரை வணங்கினால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு. எத்தனைதான் அறிவாற்றல் இருந்தாலும் சரி! என்னதான் செல்வம் இருந்தாலும் சரி! தொண்டர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
தலைவன் யாரென்று அறிய, இப்பேர்ப்பட்ட இந்த இடம் ஓங்காரக்குடில் கிடைத்திருக்கிறது, பிடித்து கரையேறி கொள்ள நினைப்பார்களே தவிர, இதில் என்ன ஆதாயம் என்று நினைக்க மாட்டார்கள். கிடைத்தற்கரிய ஆதாயம் என்னவென்றால், இதுபோன்ற ஒரு அருள் ஸ்தாபனம் கிடைத்திருக்கிறது.
தொண்டர்கள் எங்கே ஒத்துழைப்பார்கள்? தொண்டர்கள் எங்கே உயிருக்கு உயிராய் இருந்து தொண்டு செய்வார்கள். எப்ப செய்வான்? இந்த அருள் ஸ்தாபனத்தில் பெறுவதற்கு வாய்ப்பிருக்கு என்று சொல்லி, மேலும் மேலும் ஒத்தகருத்துள்ள தொண்டர்கள் குவிந்து விடுவார்கள்.
அன்பர் கூட்டமிருக்கு. தேவையான பொருள் இருக்கிறது. காரியம் தடையில்லாமல் நடக்கும். இதெல்லாம் சகல சித்தும் கைக்குள்ளாச்சு. எதை நினைத்தாலும் சரி, அந்த செயல்பாடெல்லாம் உலகத்து இரட்சையாக இருக்கும். உலகநலனைக் குறித்துதான் அவர்கள் நினைப்பார்கள். இவர்களுடைய சுயநலத்திற்கு இவர்கள் செயல்படமாட்டார்கள். இவர்களுடைய செயல்பாடெல்லாம் மக்கள் சுபிட்சம், மக்கள் மகிழ்ச்சியடைதல், மக்கள் பிரச்சனை தீர்த்தல், மக்கள் பசியாறுதல், உலக இரட்சை என்பது அவர்களுக்கு விருப்பானவற்றை செய்து கொடுப்பது என்பதாகத்தான் இருக்கும்.
அவர்களுக்கு விருப்பமானவற்றை முடித்துக் கொடுக்கிற இடம் இதுதான். அப்ப தொண்டர் கூட்டம் இருக்கும். பொருள் வசதி இருக்கும். மனஅமைதி இருக்கும். பொழுது நல்லபடி போகும்.
கோடீஸ்வரனாக இருந்தால் கூட பொழுது போகாது. பல கோடிக்கு அதிபதியாக இருப்பான். ஆனால் தூக்கம் வராது. அங்கேயெல்லாம் வஞ்சனை சூழ்ந்திருக்கும். ஒருவருக்கொருவரை அழுத்தப் பார்ப்பான். அப்ப பலகோடி வசதியுள்ள அவனைக்கண்டு யாரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். பொறாமைப்படுவார்கள். இங்கே அப்படியில்லை. ஞானிகள் ஆசியிருப்பதனாலே தொண்டர்களிடம் அன்பு மிகுதியாகி அனைவரிடமும் அன்பாயிருப்பார்கள்.
ஆசான் வாழ வேண்டும், நல்லபடி வாழ வேண்டும். நாம் தொண்டு செய்ய வேண்டும். ஆசி பெற வேண்டுமென்ற உணர்வுதான் மேலோங்கி இருக்குமே தவிர, ஒருவருக்கொருவரை அழுத்துதல், பலகீனப்படுத்துதல் என்ற பேச்சே இருக்காது. தொண்டர்களுக்குள்ளே ஒற்றுமை மிகுதியாக இருக்கும்.
என்ன காரணம்? எல்லாவற்றையும் தலைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தலைவனுடைய ஆசி இல்லாமல் யாரும் இங்கே வரமுடியாது. பல்வேறு ஜென்மத்திலே செய்த புண்ணியத்தால்தான் ஒங்காரக்குடிலைச் சார்ந்திருந்து தொண்டு செய்ய முடியுமே தவிர, ஏதோ புண்ணியம் செய்யாத மக்கள், ஏனோதானோ என்று இங்கே யாரும் வரமுடியாது.                          
அப்படி இங்கு வரும்போதே தேடி, ஆழ்ந்து, சிந்தித்து இவனை இங்கே அனுப்பினால் ஜாதி வெறி உண்டாகுமா இல்லை வேறு பிரச்சனயை உண்டாக்குவானா, ஒருவருக்கொருவரை அழுத்துவானா? இல்லை இவனால் பிரச்சனை வருமா என்று ஆராய்ந்து பார்க்காமல் ஞானிகள் இங்கே விடமாட்டார்கள்.
இங்கே வந்திருக்கிறார்கள் என்றால் பல்வேறு ஜென்மங்களில் செய்த புண்ணியத்தால்தான் வந்திருப்பான். அன்பர் கூட்டம், பொருள் வசதி, மக்கள் பிரச்சனை தீர்த்தல், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருத்தல் என்று இங்கு இருக்கும்.
கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கிறோம். இந்த சங்கம் ஜாதி மதம் கடந்த சங்கம். அவரவர்கள் தன் கடமையைச் செய்வார்கள். அவன் ஏன் இங்கே இருக்கிறான்? இவன் ஏன் இங்கே இருக்கிறான்? அவனுக்கு ஏன் இந்த வாய்ப்பிருக்க வேண்டும்? இவனுக்கு என்ன வாய்ப்பு? அவன் ஏன் முன்னுக்கு போகிறான்? என்ற பேச்சே இருக்காது.
யாரோ வருகிறார்கள், செய்கிறார்கள், போகிறார்கள், நமக்கென்ன? அவரவர்கள் புண்ணியம் செய்திருப்பார்கள், தொண்டு செய்கிறார்கள், ஆசி பெறுகிறார்கள். நாம் ஏன் இதில் போய் தலையிட வேண்டுமென்ற உணர்வுதான் இருக்கும். இதுவும் கடவுள் கொடுத்த உணர்வு.
ஆக தகுதியுள்ள தொண்டர்கள் கூடுவார்கள். ஒருதாய் மக்கள் போல் பழகுவார்கள். அவரவர் முடிந்த அளவுக்கு தொண்டு செய்வார்கள். ஆசான் ஞானபண்டிதன் ஆசியையும், ஒன்பது கோடி ஞானிகளின் ஆசியையும் பெறுவார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் ஒருங்கே அமர்ந்த இடம் ஓங்காரக்குடில். வேறு எங்கேயும் இருக்க முடியாது.
      ஆக இங்கே உள்ள தொண்டர்களெல்லாம் தூய மனத்தவர்கள், தன்னை அர்ப்பணிக்கக் கூடியவர்கள், எல்லா வகையான குணப்பண்பும் உள்ளவர்கள் குணக்கேட்டிற்கே இடமிருக்காது.
சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். குணக்கேட்டிற்கே இடமிருக்காது. சகல சித்து என்பது என்ன? தொண்டர் படை இல்லாமல் முடியுமா? முடியவே முடியாது. தொண்டர்கள் படையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. என்னிடம் இருப்பது இரு கரங்கள். ஓராயிரம் கரங்கள் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். மக்கள் கூட்டமும், நல்ல அன்பர்களும் வருகிறார்கள். ஆக சகல சித்தும், அருபுத செயலையும் இந்த சங்கம் செய்கிறது. தனி நபர் கொண்டா? இல்லை. தொண்டர்கள் கூட்டம்தான் செய்கிறது.
இந்தத் தொண்டர்கள் கூட்டமும் ஞானிகள் ஆசியால்தான் வந்திருக்கிறார்கள். தொண்டர்கள் எல்லாமே புண்ணியவான்களாக இருப்பதால் இங்கே வந்திருக்கிறார்கள். இது சின்ன விசயமல்ல. எல்லோரும், ஒவ்வொருவரும் புண்ணியம் செய்ததால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
இதனிடையில் உடம்பைப் பற்றி அறியக்கூடிய இரகசியமும் கிடைக்கும். அப்ப உடம்பைப் பற்றி அறியக்கூடிய இரகசியத்தை அறிவது மட்டுமல்ல. வணங்கினால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். யாரை வணங்கினால்? ஆசான் சுப்ரமணியரை வணங்கினால், மைந்தனே அமுதமுது சிந்தும் சிந்தும் என்றார்.
சின்ன விசயமல்ல இந்த வார்த்தை. உலகத்தில் உள்ள மக்கள் வியக்கக்கூடிய காரியத்தை இவர்கள் செய்வார்கள். ஏனய்யா செய்கிறான் என்றால், எத்தனை காரியமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்குதானே ஐயா?
இன்றைக்கு பத்து மூட்டை முப்பது கிலோ அரிசி சமைக்கப்பட்டு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. முப்பத்தைந்து கிலோ கம்பஞ்சோறு சமைத்து நீர் மோர் பந்தலில் கொடுத்துள்ளோம். கிட்டதட்ட ஆறாயிரம் பேர் பசியாறியிருக்கிறார்கள்
இந்த வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுத்துள்ளோம். ஆக எவ்வளவு பெரிய அற்புதம் இது. இதுதான் அற்புதம். நாட்டு மக்கள் நலனைக் கருதிதான் இந்த சங்கம் தொண்டு செய்து வருகிறது. அதற்குதான் அவர்களும் பொருளுதவி செய்கிறார்கள்.
இப்ப நான் பொய் சொன்னால் போதும். இங்கே ஒன்றுமே இருக்காது. அப்படியே எல்லோரும் போய்விடுவார்கள். பொய் சொன்னால் தீர்ந்தது. முந்தி முந்தி பொய்யை நீக்கு என்றார். பொய் சொல்லுதல் இந்த துறைக்கு ஆகாது. ஞானிகளுக்குத் தெரியும், ஒருவனை தேர்ந்தெடுக்கும்போதே இவன் பொருள் தந்தால் நிச்சயமாக பொய் சொல்வானா? அல்லது பதுக்குவானா? இவனுக்கு தருகின்ற பொருள் நாட்டு நலனுக்கு பயன்படுமா? என்று பார்த்துதான் அருள் செய்வார்கள். இப்படித்தான் கொடுப்பார்கள்.
எங்களை என்னதான் சொன்னாலும் சரி! அந்த கோட்டிலிருந்து மாற மாட்டோம். நாங்கள் வந்ததே பொருள் சேர்க்க அல்ல. கொடுக்கிற பொருளை நாட்டு மக்களுக்கு பயன்படுத்துகிறோம்.
எல்லாம் ஆசான் ஆசியால், நாட்டு நலனுக்காகவே இந்த சங்கம் இருப்பதனால் பொய் சொல்ல மாட்டோம், பொய் சொல்லாதவர்களுக்குத்தான் ஞானிகள் ஆசி தருவார்கள். பொய் சொல்பவர்களுக்கு நிச்சயம் அருள் செய்ய மாட்டார்கள்.
ஆக இதெல்லாம் இந்த துறைக்கு அவசியம். தலைவன் ஆசி இல்லாவிட்டால் ஒருவனுக்கு பலகீனம் வந்துவிடும். தினம் பூஜை செய்தால்தான் பலகீனம் வராது.
ஆசான் அகத்தீசரை பூஜை செய்து, அடியேன் பொய் சொல்லாதிருக்க வேண்டும். அடியேன் பேராசைக்காரனாக இருக்கக் கூடாது. அடியேன் இந்தப் பொருளாதாரத்தை சேகரிக்க கூடிய பலகீனம் எனக்கு இருக்கக்கூடாது. அடியேன் பந்த பாசம் அற்றவனாக இருக்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும். பொய் சொல்லக் கூடாது உண்மையே பேச வேண்டும். அதற்கும் நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று இந்த துறையில் வருகின்ற மக்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும், அப்படி கேட்டே பெறுவார்கள்.
இந்த அற்பத்தனமான பொருள், நிலையில்லாத பொருள், இதைச் சேகரிக்க ஏனய்யா பொய் சொல்ல வேண்டும்? தலைவன் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு இந்த பொருள்மேல் உள்ள வெறி தீரவே தீராது. தலைவன் ஆசியிருந்தால் பொய் சொல்ல மாட்டான். தலைவன் ஆசியிருந்தால் வறுமை இருக்காது. தலைவன் ஆசியிருந்தால் தொண்டர் படை இருக்கும். தலைவன் ஆசியிருந்தால் விகாரமற்று போகும், தலைவன் ஆசியிருந்தால் அறிவு வரும், தலைவன் ஆசியிருந்தால் நல்ல நட்பு பெருகும். தலைவன் ஆசியிருந்தால் உடல் ஆரோக்கியம் இருக்கும். தலைவன் ஆசியிருந்தால் மேல்நிலை அடையலாம்.
அதுமட்டுமல்ல, மைந்தனே அமுதமுது சிந்துஞ்சிந்தும். அமுத பானம் என்ற ஒன்று இருக்கிறது. அது காரண தேகத்தை வெளிப்படுத்தக் கூடியது. காரண தேகம் – சூட்சுமதேகம். காரிய தேகம் – தூலதேகம்.
அந்த உடம்பு ஆக்கம் பெறுவதற்கு அமுத பானம் சிந்த வேண்டும். எந்த உடம்பு என்றான். காரண தேகம் – அப்ப ஒளி உடம்பு. அப்ப அந்த உடம்பு நிற்கும் பிடிபடாது. அந்த தேகம் வருவதற்கு அமிழ்தபானம் சிந்தும். அதுவும், குறிப்பிட்ட ஆண்டு வரை சிந்தியதற்கு பிறகு, அந்த உடம்பும் போய் விடும்.
இப்ப எங்கள் உடம்பு இருக்கிறது. தூலதேகம் நீங்கிய உடம்பு இது. அப்ப விகாரமான தேகத்தை நீக்கியிருக்கிறது. இன்னும் இருக்கிறது கொஞ்சம், அதை என்ன செய்வார்களென்றால், பட்டினி போடுவான். பட்டினி போட்டால் இந்த அனல் என்ன செய்யும்? உடம்பைப் பற்றும். உடம்பைப் பற்றி உள்ளதையும் கெடுத்துவிடும். இந்த புற உடம்பாகிய கருவி கரணங்களையெல்லாம், சுட்டுப் பொசுக்கிய விடும். அப்ப ஏனய்யா கருவி கரணங்களைச் சுட்டுப் பொசுக்குதென்றால், அமிழ்தபானம் உண்ணுவதற்காக இந்த உடம்பைச் சுட வேண்டுமென்றான். பட்டினிப் போடாமல் முடியவே முடியாது.
யாராக இருந்தாலும் சரி, கடும் பட்டினி போட்டாக வேண்டும். அப்ப அந்த பட்டினிதான் உடம்பை என்ன செய்யும்? அனல் ஏறிக் கொண்டிருக்கும். அனல் ஏற ஏற ஏற, என்ன ஆகும்? புற உடம்பாகிய தூலதேகம் பொடிபட்டுப் போகும். அப்ப அந்த அனல் என்ன செய்யும்? அமிழ்த பானத்தை உண்டுபண்ணும். அமிழ்தபானம் சாப்பிடச் சாப்பிட அதுவும் அற்றுப்போய் ஜோதியாகிவிடும். அதுதான் காரணதேகம். இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும், அதற்கு எவ்வளவு நாள் ஆகுமேன்றான்.
மனிதன் இயல்பு எப்படியிருக்கென்றால், அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும், இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று நினைப்பான். உன்னால் ஒன்றும் அசைக்க முடியாதைய்யா. நீ எந்தப் புத்தகத்தைப் படித்து எதற்காவது? நீ அப்படி நினைத்துவிடாதே. நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த பேச்சு பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீ எந்தப் புத்தகத்தையும் படிக்க முடியாது.
பெரியவங்க நூலைத் தொடுகிறோம். பெரியவங்களை வணங்குகிறோம். அது பக்தி. அப்ப நூலோட ஆசி கிடைக்கும். நூல் எழுதியவர்கள் காரண தேகம் உள்ளவர்கள். ஒளி உடம்பைப் பெற்றவர்கள் நூல் எழுதியிருக்கிறார்கள். திருமந்திரம் எடுக்கும்போது திருமூலதேவா, மாணிக்கவாசகா அல்லது அருணகிரிநாதா என்று தொடுகிறோம். தொடும்போது பெரியவர்களின் பார்வை கிடைக்கிறது.
நாமத்தைச் சொல்கிறோம், வணங்குகிறோம். அதன் மூலமாக ஆசி கிடைக்கும். ஆனால் அதிலிருக்கும் நுட்பங்களை அறியவே முடியாது. நூலறிவு எதற்கும் ஆகாது. ஆக நூல் படிக்கணும். ஆனால் நூல் ஒரு துணையே தவிர, ஒன்றும் அசைக்க முடியாது. ஆக இதெல்லாம் எதற்கு நாங்கள் சொல்கிறோமேன்றால், அந்த தேகத்தின் இயல்பை அறிந்து கொள்ள வேண்டும்.
அமிழ்தம் சிந்துமென்றால் எவ்வளவு நாளைக்கு சிந்தும்? இந்த உடம்பு அழியும்வரை சூட்சும தேகம் இருக்கும். சூட்சும தேகம் அழிந்தால் காரணதேகம் ஆகிவிடும். அமிழ்தபானம் சிந்தக்கூடியது. அதுதான் சொல்வார். அமுதமுது சிந்துஞ்சிந்தும்.
அமிழ்தபானம் சிந்துவதற்கு பெரியவர்கள், ஞானிகள் அத்தனை பேருமே தூல தேகத்தையும், சூட்சுமதேகத்தையும், காரண தேகத்தையும் அறிந்தவர்கள். நாங்களும் அறிந்திருக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ளனும். சங்கம் வைத்து தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த சங்கம் தத்துவ சங்கம், இதுதான் சத் சங்கம்.
சத் அசத்து என்பார்கள். இந்த உடம்பில் பசியைக் கொன்றவன் நான். இந்த பசிதான் உங்களுக்கு அமிழதபானத்தை உண்டாக்கும் என்ற தெளிவு இருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால், உடம்பு இளைக்கிறது, அப்படியே போனால் போய்விட்டு போகிறது. இப்ப என்ன நட்டமா? அவன்தான் உடம்பு இளைக்கட்டும், உடம்பில் அனல் ஏறட்டும் என்றுதானே பசியை கிடக்கிறான். பசி ஏறஏறதான் அமிழபானம் சிந்தும்.
அவர்கள் இந்த உடம்பைப் பற்றியே சிந்திக்க மாட்டார்கள். சராசரி மனிதன் உடல் இளைத்தால் ஐயோ என்னாகுமோ? என்பான். என்னய்யா ஆகிவிடப்போகுது? இவர்களுக்கு தெரியும் யோகிகளுக்கும் தெரியும். இந்த உடம்பைக் கொல்ல வேண்டும். இந்த உடம்பை சுட்டுப் பொசுக்க வேண்டும். சுடாமல் சுட வேண்டும்.
உடம்பைச் சுட்டுத்தான் ஆக வேண்டுமென்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்காக என்ன செய்வார்களென்றால், உலக மக்கள் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பார்கள். ஆனால் இவர்களோ அளவிலா மகிழ்ச்சியால் இருப்பார்கள்.
எதிரி ஒழியப்போகிறான். எதிரி ஒழியப்போகிறான். யார்? எதிரி. இதுநாள் வரையிலும், பல ஜென்மங்களாக நமக்கு கூடவே இருந்து குழிபறித்த எதிரி, இந்த ஜென்மத்தொடு சாகப்போகிறான். சுட்டுப் பொசுக்கிவிடுவான். இவனைப் பசி என்று சொல்லப்பட்ட, அக்கினிதான் இவனை சுடணும். இந்த பசி என்று சொல்லப்பட்ட அக்கினியால் சுட்டால்தான் இவனை ஒழிக்க முடியும். அனல் ஏறும், பட்டினி போடுவான், பாட்டினி போடப்போடபோட அனல் ஏறும். உடம்பெல்லாம் அனல் பொங்கும். உடம்பெல்லாம் பொங்கி, கீழ் நோக்கி கீழே இருக்கக்கூடிய திரவப்பொருள் அல்லது அமிழ்தம் மேல்நோக்கும். அமிழ்தம் சிந்தியதென்றால் பிரச்சனையில்லை. அந்த உடம்பு அழிந்துபோய் கடைசியில் ஜோதி உடம்பாகும். மைந்தனே அமுதமுது சிந்துஞ் சிந்தும் என்பார். என்ன சொன்னார்?
பாலனென்னுங் குமரனை வணங்குவாயே
வணங்கினாற் சகலசித்துங் கைக்குள்ளாச்சு
மைந்தனே அமுதமுது சிந்துஞ்சிந்தும்
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும்பாரு
புணங்கினால் மனம்நினைக்கக் கூடாதப்பா
புத்தியது அறிவுக்குட் புகுந்துதானால்
அணங்கினா லாத்மாவும் ஒன்றாய்ப்போகும்
அப்பனே அதிசயத்தை யரைகிறேனே.
                  – மகான் சட்டமுனி சூத்திரம்
    
     இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் – இந்த வாய்ப்பை எப்போது பெறலாமென்றால், இணங்குதல் – சேருதல், பொருந்துதல், கலத்தல், ஒன்றுபடும் என்றார். இணங்குதல் – வணங்கி போதல் என்று வைத்துக் கொள்ளலாம். அவர்களிடத்தில் போய் ஒன்றுபட முடியாது. இங்கே வணங்கினால் என்று சொல்வதற்காக சொல்கிறார். அப்ப,
     இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும்பாரு
     இப்ப ஏன் ஆசான் சட்டமுனி சொல்கிறார் என்றால், மூலக்காரனமாய் இருக்கக்கூடிய ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்துதான், மகான்கள் அத்தனை பேரும் இங்கே வந்திருக்கிறார்கள். தூலத்தின் பலகீனங்களையும் ஞானிகள் அறிகிறார்கள். தூலமாகிய புறஉடம்பில் பலகீனங்கள் அதற்குள்ள கேடுகளை அறிந்து, திருவருள் துணைக்கொண்டு சூட்சுமத்தை அறிகிறார்கள்.
     சூட்சுமத்தை பெற்று அதனுடைய துணைக்கொண்டு காரணதேகத்தைப் பெறுவார்கள். இப்படித்தான் இந்த துறை இருக்கிறது. ஆக அடிப்படை பக்திதானே தவிர வேறு வழியில்லை. இணங்கினால் நீயவனும் ஒன்றே ஆகும். இணங்குதல் – வணங்குதல் என்று வைத்துக் கொள்ளலாம். இணங்குதல் என்றால் சேர்தல் என்று அர்த்தம். இணைதல் – சேர்தல், ஒன்றுபடுதல், கலத்தல், பொருந்துதல். ஆனால் இங்கே வணங்கினால் என்பதனால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
     ஆக தலைவனும் நாமும் இணங்கணும், சேரனும், ஒன்றுபடணும். எப்பய்யா இப்படி ஆக முடியும். அதைத்தான் முன்னமே சொல்லியிருக்கிறோம். சுடுகாட்டுக்கு போக வேண்டும், அங்கே பல காட்சிகளை காண வேண்டும். அதே சமயத்தில் பலகீனங்களை தெரிந்து கொள்ள வேண்டும், பெரியவங்க ஆசிதான் முக்கியம் என்றும் சொல்லியிருக்கிறோம்.
தினமும் தியானம் செய்ய வேண்டும். ஞானிகள் நட்பு இருக்க வேண்டும். ஐந்து அல்லது பத்து பேர் கூடினால் இதைப் பற்றித்தான் பேசுகிறவர்களாக இருக்க வேண்டும். வேறு ஏதாவது வீண் வாரத்தை பேசுபவர்களாக இருந்தால் மெதுவாக அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் சம்மந்தமில்லை.
     அதேசமயத்தில் புலால் உணவு, மது, மங்கை என்று இருக்கின்றவர்களோடு சேரக்கூடாது, நாம் அவர்களோடு பேசக் கூடாது. அதற்கென்று அவர்கள் வந்திருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களை குறைசொல்ல வேண்டிய அவசியமில்லை.
     அவன் ஆடு வெட்டுகிறான், கோழி வெட்டுகிறான், நமக்கென்ன நட்டமா. இந்த உணர்வு பெரியவங்க ஆசியிருந்தால் வரும். உனக்கென்னய்யா? அவன் ஆடு வெட்டுகிறான், கோழி அறுக்கிறான், குடிக்கிறான், கும்மாளம் போடுகிறான் உனக்கு அவசியமில்லை. இது  தேவையில்லாத ஒன்று என்று நினைப்பதற்கே ரொம்ப நாளாகும்.
     இல்லாவிட்டால் அவன் அப்படி செய்கிறான், இவன் இப்படி செய்கிறான் என்ற எண்ணம் வரும். உனக்கென்ன நட்டம்? யாரோ எப்படியோ போகிறான்.
     நம் கூட்டம் இருக்கிறது. அன்பர் கூட்டம் இருக்கிறது. நமக்கென்று ஒரு பத்துபேர் இருப்பார்கள். மாலை பொழுதில் அருட்பா எடுப்பார்கள். திருமந்திரம் எடுப்பார்கள், பேசுவார்கள். சத்விசயத்திலேயே பொழுது போகும். அதிலேயே காலத்தை கழிப்பார்கள். ஆறு மணிக்கு கூடுகின்ற மக்கள் எட்டு மணிவரை இதைப் பற்றியே பேசுவார்கள். நாமஜெபம் செய்வார்கள். அவனும் இல்லறம் நடத்திக் கொண்டிருப்பான், எல்லாம் செய்து கொண்டிருப்பான். இது போன்ற சத்சங்க கூட்டத்தில்தான் சேரவேண்டுமென்று சொல்வார்கள்.
     ஆக இப்படி கூடினால் இணங்கினால் எப்ப வருமென்றான். இது ஆறு மாதத்தில் ஒரு வருடத்திலா என்றான். அதெல்லாம் சும்மா. அந்த கதையெல்லாம் இல்லை. ஆறுமாதம் ஒரு வருடத்தில் ஞானியாவது என்றால் முன்னமே போயிருப்பானே. அதுமாதிரி வழியேயில்லை. இப்படியே போக வேண்டும். அடுக்கடுக்காய் அணுவணுவாய் ஆசிபெற்று போக வேண்டும்.
     இணங்குதல் – தினம் தியானம் செய்தல், அன்பர் கூட்டம், சாது சங்கத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். தினம் தியானம் செய்ய வேண்டும். முன்செய்த வினையின் காரணமாக பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அப்படி வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். வறுமை வந்தால் வரட்டுமைய்யா வரட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். துன்பம் வந்தால் வரட்டும். ஏதோ முன் செய்த வினை. நான் இந்த ஜென்மத்தில் யாருடைய பிரச்சனையிலும் தலையிடவில்லை.
    
அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரன் வம்புக்கு போகமாட்டான். அவன் எங்கு போனான். இவன் எங்கு வந்தான். அவனுக்கு ஏன் இவ்வளவு வசதி வந்தது? என்ன கார் வாங்கினான். பங்களா என்ன வாங்கினான். அது எவனோ வாங்கினான். நல்வினை இருக்கிறது வாங்குகிறான். போறான் வருகிறான். அது எனக்கு சம்மந்தமில்லை. இருந்தாலும் என் வாழ்க்கையில் வந்து தலையிடுகிறான். சம்மந்தமே இல்லாமல் அவன் தலையிடுகிறான். ஆசான் அகத்தீசனே கதியென்று நினைப்பான்.
இதுபோன்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமைய்யா. யாரோ எப்படியோ போகிறானய்யா. பங்களா வாங்கினாலென்ன, கார் வாங்கினாலென்ன நமக்கென்ன நட்டம்? நமக்கு உள்ளது இருக்கிறது அதுவே போதும். ஏதோ ஆசான் கொடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக இப்படி ஒரு வகையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
அவனைப் பற்றி, இவனைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. கடைப்பிடித்து அதற்கப்புறம்தான் முன்னேற்றத்திற்கு வரவேண்டும். இதெல்லாம் எதற்கு சொல்கிறோமென்றால், பெரியவங்க ஆசியில்லை என்று சொன்னால், மற்றவனை கவனிப்பான். ஆசான் ஆசியிருந்தால் அவனைப் பற்றியும் இவனைப் பற்றியும் நினைப்பு இருக்காது.
பெரியவங்க ஆசியில்லை என்றாலே, இந்த மாதிரி எண்ணங்கள் சிதறும். பெரியவங்க ஆசியிருந்தால் அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு போவான். அப்படியே திரும்பாமல் வந்து கொண்டே இருப்பான். அதே சமயத்தில் யாராவது பேசினால் பேசுவார்கள். ஆனால் சிந்தனை முழுவதும் அப்படியே மேல் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும். எப்போதும் சிந்தனை மேல்நிலையில் உள்ள மக்கள்தான் தெளிவடைய முடியும். ஆனால் யாரோடும் பேசக்கொடாது என்று அர்த்தமில்லை, ஊருக்கு போகக்கூடாது என்றும் அர்த்தமில்லை.
விருந்தினர் வீட்டுக்கு போகலாம். திருமணத்தில் கலந்து கொள்ளலாம். எல்லாம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த நினைப்பு இருக்க வேண்டும். நாம் இந்த நேரத்தை வீணாக்கக்கூடாது. பஸ்ஸில் போகும்போது வரும்போது அகத்தீஸ்வரா அகத்தீஸ்வரா என்று சொல்ல வேண்டும். தூங்குவதற்கு முன்னர் அகத்தீஸ்வரா அகத்தீஸ்வரா என்று சொல்ல வேண்டும். ஆக வியாபாரம் செய்வான், திருமணத்திற்கு போவான், விருந்திற்கு போவான். ஊர் அக்கப்போரெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் சிந்தனை மட்டும் உயர்ந்திருக்கும். இப்படியிருந்தால் வணங்கினால் நீஅவனும் ஒன்றே ஆகும். இல்லையென்றால் உலக நடையில் முழுகவனம் செலுத்திவிட்டால், ஞானிகளுக்கும் நமக்கும் இணங்குதல் பொருத்தம் இல்லாமல் போகும். சேர்க்கையில்லாமல் போகும். இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் – யாரும் அவனும்? ஐம்பதாயிரம் வருடத்திற்கு முன் சித்தி பெற்றவரும், இந்த காலத்தில் பூஜை செய்பவரும் ஒன்றாகிவிடுவார்கள்.
இது எப்போது? அவன் காரண தேகமுள்ளவன். அதுதான் முன்னமே சொன்னோம். ஒரு முறை “ஓம் சரவண பவ” என்றாலோ “முருகா” என்றாலோ ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒலி படரும் என்று சொன்னோம். அதேபோன்று “அகத்தீசா” என்று சொன்னாலும் சரி!” “திருமூலதேவா” என்று சொன்னாலும் சரி! எல்லாமே ஒன்றுதான். இணங்கினால் நீயும்அவனும் ஒன்றேயாகும் – அவன் வேறு நான் வேறல்ல. 
என் மகனே நினைத்ததெல்லாம் கூடும் பாரு – ஆக பொருந்துதல் சேர்தல் இணைதல் கலத்தல். ஞானிகள் நாமத்தை சொல்ல சொல்ல சொல்ல நாமும் அவனும் ஒன்றாகிவிடுவோம். எப்படி ஐயா? அவ்வளவு பெரிய மனிதர் எங்கே? நான் எங்கே? என்று கேட்டான். நீ பெரிய மனிதன் இல்லைதான், நரகத்தில்தான் கிடக்கின்றாய், சிந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறாய், எப்போதுமே காமத்தில் உழன்று கிடக்கிறாய், தட்டுதடுமாறுவது எங்களுக்குத் தெரியும்.
நீ வணங்குபவன் மிகப்பெரியோன். அவர்களை சும்மா சாதாரணமாக நினைத்து விடாதே. இந்த அண்டத்தை நொடியில் பொடியாக்குவான். இந்த அண்டத்தை நொடிப்பொழுதில் பொடியாக்கக்கூடிய ஆற்றல் ஆசான் சுப்ரமணியருக்கு உண்டு. நொடிப்பொழுதில் அண்டத்தை தூள்படுத்துவான். ஆனால் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். இவ்வளவு வல்லமை உள்ள ஆசானை நீ பூஜை செய்கிறாய். சும்மா சாதாரண ஆளை நீ பூஜை செய்யவில்லை, மிகப்பெரியோன்.
காட்டேரி மாரியாயி போன்ற சிறுதெய்வங்களை நீ பூஜை செய்யவில்லை. பெரியவங்க என்று புரியாமல் அவர்களை பூஜை செய்கிறாய், அவர்கள் நாமத்தை சொல்கிறாய். ஆனால் நாமத்தை சொல்கிறாயே தவிர, ஆசானை என்ன கேட்க வேண்டுமென்று தெரியாது.
ஆசான் சுப்பிரமணியர் நாமத்தை “முருகா” என்கிறாய், “ஆறுமுகா” என்கிறாய் “அரோகரா” என்கிறாய். இது ஒரு வகை பண்புதான். என்ன கேட்கணும்? எதை கேட்கணும்?
ஆசான் சுப்ரமணியரை யாரென்று உனக்கு தெரியுமா? சும்மா சாதாரணமாக நினைத்து விட்டாயா அவரை? ஆசான் சுப்பிரமணியர் மிகப் பெரியவங்க. அவர்களை யாரென்று தெரியாமல் நீ வணங்குகிறாய். இப்போது இருப்பதைப் போன்ற கோடான கோடி அண்டத்தை உருவாக்குவார், கோடான கோடி அண்டத்தை தூள்படுத்துவார்.    
     ஆசான் சுப்பிரமணியர் ஆணை பெண்ணாக்குவார், தொழுநோய் இல்லாமல் செய்வார், புற்றுநோய் இல்லாமல் செய்வார். இந்த உலகத்தில் எல்லா வல்லமையும் உள்ள ஆசான் சுப்ரமணியரை நீ புரிந்து கொண்டு பூஜை செய்திருக்க வேண்டும்.
     ஏதோ சுப்ரமணியரை பூஜை செய்து, பொங்கல் புளியோதரை செய்து சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நினைக்காதே. இதற்கும் ஆசியிருக்கு.
     ஆனால் ஆசான் சுப்பிரமணியர் யார்?
     முதுபெரும் தலைவர், அழைத்தால் அக்கணமே வந்து அருள்செய்யும் ஆற்றல் பெற்றவர், மரணமில்லா பெருவாழ்வு தரக்கூடியவர், அதேசமயத்தில் புறஉடம்பாகிய தூலதேகத்தை நீக்கி, சூட்சும தேகத்தை ஆக்கம் பெற செய்கின்றவர்.
     ஆசான் சுப்ரமணியரை வணங்கினால் ஆக்கம் பெற்ற சூட்சும தேகமே காரண தேகமாகுமேன்றும் அறியலாம். அவரைத் தவிர வேறு வழியே இல்லை. அவரை வணங்குவதே முதற்கொள்கை. இப்படி உறுதியாக பூஜை செய்தாலன்றி அறியமுடியாது.
     ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும். அவரை யாரென்று நினைத்தாய்? அவரிடம் என்ன கேட்கிறாய்? உலகநடை போன்று பொருள் வேண்டுமென கேட்கிறாயா? கேள்! அதுவும் நடக்கும். பொல்லாத வறுமையிலிருந்து விடுபட வேண்டுமென கேள், கடன்சுமை இருக்கிறது, பல பிரச்சனை இருக்கிறது, மனம் அமைதியில்லாமல் இருக்கிறது, இவையெல்லாம் எனது தவத்திற்கு இடையூறாக இருக்கிறது. இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்.
     நோய் சூழ்ந்த மனைவி, நோய் சூழ்ந்த வாழ்க்கை, பிள்ளைகளுக்கு கல்வியில்லை இதுபோன்ற குறைகள் நீங்க ஆசானிடம் கேட்கலாம். ஆனாலும் கேட்க வேண்டிய ஒன்று இருக்கிறது. நீயும் நானும் ஒன்றாக வேண்டும்.
     அப்பா! என்னடா இவ்வளவு பெரிய வார்த்தை! நீயும் நானும் ஒன்றாக வேண்டும். இணங்கினால் நீயவனும் ஒன்றேயாகும் என்றார். இணங்குதல் – பொருந்துதல், வணங்குதல். வணங்கினால் நீயவனும் ஒன்றேயாகும் என்பது சாதாரண விசயமல்ல.
எல்லா ஞானிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆசான் அருணகிரிநாதர் சொல்வார்.
     யாமோதிய கல்வியும் எம்மறிவும்
      தாமேபெற வேலவர் தந்ததனால்
      பூ மேல்மயல் போயற மெய்ப்புணர்வீர்
      நாமேல் நடவீர் நடவீர் இனியே.
    கந்தரநுபூதி – கவி எண் 17
அப்பேர்ப்பட்ட அனைவரும், ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்துதான் வந்துள்ளார்கள். இணங்கினால் நீயவனும் ஒன்றே ஆகும் என்றார்.
ஏனய்யா! நான் எங்கேயோ சாக்கடையில் இருக்கிறேன். நீங்க நிலைஉயர்ந்த ஆசான், எண்ணிலடங்கா ஆற்றல் பெற்ற ஆசான் நீங்கள் எங்கே? நீயும் நானும் ஒன்று என்றான். இதற்குத்தானய்யா நான் வந்திருக்கிறேன் என்பார் ஆசான்.
இதற்கு ஆசான் சுப்ரமணியரை, உலகமக்கள் உய்யும் பொருட்டுதான் நான் வந்திருக்கிறேன். உலக மக்கள் நலம் பெரும் பொருட்டும் அவரவர்கள் வினையை தீர்த்து நான் அறிந்த உண்மையை, அந்த உண்மை ஆன்மீகத்தை நீங்கள் அறிய வேண்டுமென்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம், புரிந்து கொண்டு கூப்பிட்டால் நாங்கள் உனக்கு அருள் செய்வோம். இல்லையென்றால் சமுதாயம் போன்று அது வேண்டும், அது வேண்டுமென்றால் கேட்டதை, நாங்கள் அள்ளிக் கொடுத்துவிட்டு போவோம்.
என்ன கேட்க வேண்டுமென்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஒன்றுமே தெரியாது.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
    திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2119
சிவபெருமானும், சிவனும், ஆசான் சுப்ரமணியரும் எல்லோரும் ஒன்றுதான். அவர் வேறு இவர் வேறில்லை. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர், சிவமென்றாலே ஆசான் சுப்ரமணியரைத்தான் குறிக்குமே தவிர வேறு யாரும் சிவமாக இருக்க முடியாது. சவமாக போகக்கூடிய அத்தனை பேரையும் சிவமாக ஆக்கக்கூடியவர். சிவமென்றால் அழியாத ஒன்று என்று அர்த்தம். சக்திக்குள் சிவமென்றார்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழப்பட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டு என்ன செய்வான்? பூஜை செய்து எல்லோரையும் போல நிலையில்லாததை இவனும் கேட்பான். இப்படி நிலையில்லாத ஒன்றை கேட்டு பெற்றிருப்பான். கடைசியில் என்ன செய்வான்? அள்ளி அள்ளி செல்வத்தை குவித்து விட்டு மூச்சை விட்டுவிட்டு போயிருப்பான். அப்படி சேர்த்த பொருள் நெறி கடந்து வந்த பொருளா? நெறிக்குட்பட்ட பொருளா? இல்லை வஞ்சனையானதா? என்று இவனுக்கு தெரியாது.
தலைவனுடைய ஆசியில்லாமல் பொருளைப் பற்றி ஒருவன் சிந்திக்கவே முடியாது. அப்படி பொருளைப் பற்றி சிந்திக்கிறான் என்று சொன்னால், அவனுக்கு தலைவனுடைய ஆசியிருக்கென்று அர்த்தம்.
தலைவனுடைய ஆசையிருந்தால் முறையறிந்து பூஜை செய்கிறான் என்று அர்த்தம். முறையறிந்து பூஜை செய்தால்தான், பொருளின் பலகீனம் தெரியும். உலக நடையில் இருக்கிற பலகீனங்கள் பொருளறிந்து பூஜை செய்தால்தான் புரியும்.
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
தலைவனை பூஜை செய்ய வேண்டும். எப்படி பூஜை செய்ய வேண்டும்? இதை நாங்கள் சொல்லித் தரணும்.
நீ என்ன பூஜை செய்துவிட்டாய்? பூஜையில் என்னய்யா கேட்டாய்? நீயும் நானும் ஒன்றாக வேண்டுமென்று கேட்டாயா? அதை எப்படி கேட்பது? என்கிறான். தலைவன் அதற்குத்தானய்யா இருக்கிறான். ஏனென்றால்,
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 8
ஞானிகள் அனைவருமே கருணையே வடிவான மக்கள். எதைக் கேட்டாலும் கொடுக்கிறார்கள். எதைக்  கேட்டாலும் கொடுப்பார்கள் என்ற உணர்வை அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்ன செய்வான்? எவையெல்லாம் தேவையில்லையோ அவற்றையெல்லாம் கேட்டு கொண்டேயிருப்பான்.
குருநாதன் சொல்லித்தர வேண்டும். யாரய்யா குருநாதன்? தூலம், சூட்சுமம், காரணதேகத்தை அறிந்தவனாக குருநாதன் இருப்பார். காரணதேகத்தை அறிந்தவன் இப்படி இப்படி பூஜை செய், உலக நடையில் இருந்து கொள், உன்னைக் காப்பாற்றிக் கொள், தலைவனை அறிந்து கொள், பூஜை செய்துவா என்று சொல்வான்.
இவர்கள் சொல்லிக் கொடுத்தால்தான் தெரியும். இல்லையென்றால் இந்த உடம்பை பற்றி புரியாமலே அவன் இருப்பான். ஆக இதையெல்லாம் பெரியவங்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும்பாரு
அப்ப மகான் பட்டினத்தார் சொன்னது போல,
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
மகான் பட்டினத்தார் பாடல் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 12
                அற்புதமாம் இந்த உடல். எப்போது? தலைவன் ஆசியிருக்க வேண்டும். இல்லையென்றால் இது அற்ப உடலாகும். அற்புதமாம் இந்த உடல் ஆவியடங்கு முன்னே – சாவதற்குள்ளே இந்த உடம்பைப் பற்றி தெரிந்து கொள் என்று சொன்னார்.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
சற்குருவைப் போற்றாமல் தவம் பெற்று வாழ முடியாது. சற்குரு என்கிற வார்த்தையே ஆசான் சுப்ரமணிரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஆனால் ஞானிகள் அத்தனை பேருக்கும் உண்டு.
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
ஆசான் பட்டினத்தார் எதற்கு இதை சொல்கிறார்? ஆசான் பட்டினத்தார் மிகப்பெரிய கோடீஸ்வரன். ஆனால் அவர் உலகநடையில் இருப்பார், வியாபாரம் செய்வார், பணத்தை பயன்படுத்துவார், பெரிய வியாபாரி போன்று இருப்பார். ஆனால் விசயத்தில் முக்கியமானவர் சற்குருவைப் போற்றி வாழ்ந்தவர் ஆசான் பட்டினத்தார்.
சற்குரு, சற்குருநாதன், ஞானபண்டிதன் என்றெல்லாம் ஆசான் சுப்ரமணியரை சொல்வார்கள். ஆக அவர்களும் நாமும் ஒன்றாவதற்கு இப்படியெல்லாம் பல ஞானிகள் எழுதி வைத்திருப்பார்கள். இதை நீங்கள் பிடித்து கரையேறுவதற்கு நாங்கள் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும்.
சற்குரு என்று சொல்லப்பட்ட ஒருவர்தான் உண்மையானவர். அவரை யாரென்று அறிகின்ற அறிவுதான் உண்மையான அறிவு. அடுத்து தலைவன் யாரென்று அறிகின்ற அறிவுதான் உண்மையான ஆன்மீக அறிவு.
சற்குருவைப் போற்றி தவம் பெற்று வாழணும். சற்குருவாகிய ஆசான் பட்டினத்தார், சற்குருவாகிய ஆசான் அருணகிரிநாதர், சற்குருவாகிய திருமூலதேவர், சற்குருவாகிய ஆசான் அகத்தீசர் ஆகிய இவர்கள் அத்தனைபேரும் சற்குருவாகிய ஆசான் ஞானபண்டிதனை சேர்ந்தவர்கள்.
    
     இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் – எப்போதைய்யா? எங்கேயோ உள்ள பரப்பிரம்மத்திற்கும் எனக்கும் என்னய்யா தொடர்பு? நீ வணங்கும்போது நீயும் நானும் ஒன்றாகணும், நானும் நீயும் ஒன்றாகணும், என்னிடம் இருக்கின்ற பலகீனங்களையெல்லாம் புரிந்து கொள்ளணும். பாவத்திலிருந்து விடுபட வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறாய். இப்படியெல்லாம் கேட்க பெரியவங்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.
     இல்லையென்றால் அவன் போகவே முடியாது. இப்ப இந்த காலத்தில் சற்குருவைப் பற்றி விடாமல் பேசிக்கொண்டே வந்திருக்கிறோம். நாம் சொல்கின்ற கருத்து தூல, சூட்சும, காரண தேகத்தை அறிந்தும், அந்த இரகசியத்தை அறிந்ததனால் இந்த கருத்துக்கள் உலக மக்களுக்கு போய்ச் சேர வேண்டுமென்பதற்காக இந்த பதிவு செய்யப்பட்ட நாடா உலக மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்குமென்று நாங்கள் நினைக்கிறோம்.
     ஆக தலைவனைப் பற்றி புரிந்து கொள்வதற்கும், தலைவனை யாரென்று அறிந்து கொள்வதற்கும், எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்றும், பூஜையில் எதையெல்லாம் கேட்க வேண்டுமென்றும், எதையெல்லாம் கேட்டு ஆசானை பூஜை செய்ய வேண்டுமென சொல்லியிருகிறோம்.
     ஆக பெரியவர்களெல்லாம், பெரியோனாகிய ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்திருக்கிறார்கள், உண்மை ஆன்மீகத்தை அறிந்தார்கள். அக, உண்மை ஆன்மீகத்தை அறிவதற்கு, உண்மை ஆன்மிகம் உணர்ந்தவன் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உண்மை பொருள் தெரியாமல் போய்விடும்.
     இந்த காலத்தில் உண்மை ஆன்மிகம் வெளிப்படுவதற்கு விஞ்ஞானிகள் துணையாக இருக்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள் கருத்துக்கள் பதிவாகிக் கொண்டிருப்பது விஞ்ஞானி கண்டுபிடித்த ஒன்றாகிய இந்த பதிவுநாடாவில். இதை ஆசான் சுப்பிரமணியர்தான் கண்டு பிடித்தார்.
     உண்மை ஆன்மீகம் உலகமெங்கும் தழைப்பதற்கு விஞ்ஞானிகள் துணையாக இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் துணையில்லாவிட்டால் மெய்ஞ்ஞானம் உலகெங்கும் பரவாது. ஆகவே அவர்கள் வாழ வேண்டும். இந்த இரகசியத்தை அறிந்தவர்கள அந்த டேப் ரெக்கார்டரை கண்டு பிடித்தவர்கள் எல்லாம் நீடூழி வாழ வேண்டும்.
     எந்த உண்மையும் போகபோகத்தான் தெரியும். புண்ணியமும் பூஜையும் செய்ய வேண்டும். பூஜை செய்தாலும் புரிந்து பூஜை செய்ய வேண்டும். புண்ணியம் செய்தாலும் புரிந்து புண்ணியம் செய்ய வேண்டும். அதுதான்,
     தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
      வேளாண்மை செய்தல் பொருட்டு.
    திருக்குறள் – ஒப்புரவு அறிதல் – குறள் எண் 212
ஆக புண்ணியம் செய்வதும், பூஜை செய்வதும் புரிந்து அறிந்து உணர்ந்து செயதால் அது உண்மை ஆன்மீகமாக இருக்கும். இல்லையென்றால் ஏதோ பொழுதுபோக்கு ஆன்மீகமாக இருக்குமே தவிர, பயனில்லாமல் போய்விடும். சாரமில்லாத ஒரு ஆன்மீகமாக போகும் என்று சொல்லி, உண்மை ஆன்மீகத்திற்கு விளக்கம் தந்திருக்கிறோம்.
உண்மை ஆன்மீகம், சான்றோர் தொடர்பு, தினம் தியானம், முறையறிந்து, வகையறிந்து கேட்பது, தலைவன் யாரென்று அறிவது? எப்படி பூஜை செய்வது? என்னென்ன கேட்பது? என்னென்ன செய்வது? என்பதையெல்லாம் தொகுத்து பேசியிருக்கிறோம்.
     வாரம் ஒரு முறை இடுகாட்டிற்கு செல்வது, நம்மைப் பார்த்து நறநறவென்று பல்லைக் கடிப்பது போன்று பார்க்கக் கூடிய அந்த மண்டை ஓடுகளும், துடிப்பாக செய்து முடித்த எதையும் பராக்கிரமமாக செய்து முடித்த அந்த கை எலும்புகளும், பொருந்தி வைக்கப்பட்ட உடம்பு கூடுகளும் தனித்தனியாக பிரிந்திருக்கக் கூடிய அந்த காட்சிகளையும் பார்க்க வேண்டும்.
     நம்மைப் பார்த்து எள்ளி நகைப்பது போன்றும், நறநறவென்று பல்லைக் கடிப்பது போன்றும், ஏளனமாக சிரிப்பது போன்றும் இருக்கக்கூடிய அந்த மண்டை ஓடுகளையும், தனித்தனியாக இருக்கக்கூடிய கை எலும்பு, கால் எலும்பு அதையும் பார்த்து, அதே சமயத்தில் அழகிய காட்சியாய் உள்ள பெண்களையும் அல்லது வாலிபர்களையும் குழந்தைகளையும் பார்த்து, இப்படி இந்த இரண்டையும் சேர்த்து பார்த்து பார்த்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதுதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லியிருக்கிறோம்.
     ஆகவே எந்த அறிவுரையும் தினம்தினம் பூஜை செய்யாத மக்களுக்கு புலப்படாது என்றும், பூஜை செய்கின்ற முறையையும் சொல்லி இருக்கிறோம். ஆசான் ஞானபண்டிதனை, ஓம் சரவண பவ என்றோ, ஆசான் அகத்தீசரை ஓம் அகத்தீசா என்றோ தினம்தினம் நாமத்தைச் சொல்லவேண்டும், பூஜையில் எதையெல்லாம் கேட்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.
     அதேசமயத்தில் ஆசானிடம் “உங்களிடம் எதைக் கேட்பது என்று தெரியவில்லை ஐயா! ஏனென்றால் உண்மை ஆன்மீகத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. ஏதோ உன் நாமத்தை சொல்கிறோம், நீர்தான் கேட்டு அருள் செய்ய வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறோம். புரியாத மக்களும், இந்த பதிவு நாடாவை கேட்பதன் மூலம் தெளிவடையலாம்.
     இந்த பதிவு நாடாவை கேட்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் என்ன செய்யணும்? எனக்கு நல்லது கெட்டது தெரியாது ஐயா! எனக்கு நீர் உணர்த்தணும். இல்லையென்றால் எனக்கு தெரியாது. நான் போகிற பாதை நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால், அருள் செய்வார்கள்.
     தலைவன் ஆசியிருந்தால் பொருள் சேர்க்கும்போது நெறிக்குட்பட்டுதான் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். இல்லையென்றால் புரியாது. ஏனென்றால்,
     அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
      புல்லார் புரள விடல்.
திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 755
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
    திருக்குறள் – வினைத்தூய்மை – குறள் எண் 659
உண்மை ஆன்மீகவாதிகளுக்கு பொருள் கிடைத்தால் என்ன செய்வான்? அருளை வளர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்வான். அதுதான் உண்மை ஆன்மீகம். இப்ப நிறைய பொருள் இருக்கு. என்னய்யா செய்வது? ஆசான் திருவள்ளுவப்பெருமான் உண்மை ஆன்மீகத்தை அறிந்த பொருளாதார நிபுணன், மேதை. ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
    திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 757
அருளென்று சொல்லப்பட்ட குழந்தையை, அன்பு என்று சொல்லப்பட்ட தாய் பெற்றெடுப்பாள். அது பொருள் என்று சொல்லப்பட்ட வளர்ப்பு தாயால், வளர்க்கப்படுமென்றார்.
ஆசான் திருவள்ளுவர் பொருளாதார மேதை, பொருளாதார வல்லுநர், பொருளாதாரத்தில் கரை கண்ட உண்மை ஆன்மீகவாதி. ஆக திருக்குறளில் உண்மை ஆன்மீகத்தைப் பற்றி அணுஅணுவாக சொல்லப்பட்டுள்ளது. இவை ஆசான் திருவள்ளுவர் காரண தேகத்திலிருந்து சொன்ன கருத்துகள்.
தூல தேகமாகிய காரிய தேகத்தை விட்டு, காரண தேகமாகிய ஒழி உடம்பை பெற்றவர் ஆசான் திருவள்ளுவ பெருமான்.
அவர் சொன்னதில் மாற்றமே இருக்காது, மாசு மறுவே இருக்காது, குற்றமே இருக்காது. பொருளாதாரம் வந்து விட்டதா? வந்து விட்டது. என்ன செய்யணும்? அருளை சேகரி! அருளை வளர்ப்பதற்கு இந்த பொருளை பயன்படுத்து என்று சொல்கின்ற முதுபெரும் தலைவன் திருவள்ளுவப்பெருமான்.
       உண்மை ஆன்மீகத்தைப் பற்றி எல்லா நூல்களும் சொன்னாலும், அவரவருடைய வினைப்பயன் காரணமாக அதனுடைய உண்மை தெரியவில்லை.
     அந்த உண்மை ஆன்மீகத்தை, ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்லியிருக்கிறார். வந்த பொருளை வீணாக்கக் கூடாது. பொருளாதாரத்தை கையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
     சிலபேர் பொருளை தொடாதே! கையில் வைத்துக்  கொள்ளாதே! என்பான். இவனெல்லாம் அரைகுறை, உண்மையை அறியாதவன்.
     ஆசான் திருவள்ளுவப்பெருமான் சொல்கிறார், திருக்கூடாது என்றும் பிறரை ஏமாற்றாதே என்றும் சொல்வார். இதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை தொடக்கூடாது, வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லமாட்டார்.
     உனக்கு பொருள் வந்ததல்லவா! அருளை வளர்ப்பதற்கு அந்த பொருளை பயன்படுத்து என்று முதுபெரும் தலைவன் ஞானபண்டிதன் சொல்வார். இது உண்மை ஆன்மீகவாதிகளுக்கு அது தெரியும்.
     மகான் பட்டினத்தார் மிகப்பெரிய கோடீஸ்வரன், கப்பல் வியாபாரி. பொருளாதாரத்திலேயே புரள்வார். ஆனால் அந்த பொருளாதாரத்தை அன்னதானம் செய்தும், ஏழை எளிய மக்களுக்கு அள்ளிஅள்ளிக் கொடுத்தும் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டார்.
     ஆக புண்ணியவானாகிய திருவள்ளுவபெருமான் சொன்னது உயர்ந்த நூல். சேகரிக்கப்பட்ட பொருளை, அருளை வளர்ப்பதற்கு வளர்ப்பு தாயாக இந்த பொருளாதாரத்தை பயன்படுத்துவார்களே தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டார்கள்.
     ஆகவே இந்த உலகத்தை உண்மை ஆன்மீகவாதிகள் எப்படி பயன்படுத்துவார் என்று சொன்னால், இந்த உலகத்தை நன்கு புரிந்து கொண்டு, உலகத்தை நன்கு பயன்படுத்தி தன் நிலையை உயர்த்திக் கொள்கின்ற அறிவு வந்தால், அவன்தான் உண்மை ஆன்மீகவாதியாக இருக்க முடியுமே தவிர, வேறு யாரும் உலகத்தை விட்டு போயிருக்க முடியாது. போனால் அவன் உண்மை ஆன்மீகவாதியல்ல. ஏனென்றால்,
சருகருந்தி நீர்குடித்துக் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே.
   மகான் சிவவாக்கியர் பாடல் – கவி எண் 532
                இதை சொல்கிறார், உண்மை பொருளை அறிந்த ஆசான் சிவவாக்கியர், சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் என்றார். உண்மைப் பொருள் அறிந்தவன், தெரிந்தவன் காட்டுக்கு போக மாட்டான். உண்மை பொருள் தெரிந்தவன் வீட்டிலேயே இருப்பான்.
     இந்த வீட்டையும், மனைவி மக்களையும் உலக மக்களையும் நன்கு பயன்படுத்தி கொண்டவன்தான் உண்மை ஆன்மீகவாதியாக இருக்க முடியுமே தவிர, காட்டுக்குப் போகிறவன் மனைவி மக்களை விட்டுவிட்டு போகிறவன், உண்மை ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.
     ஆகவே, சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் என்றார். அப்போ சொல்வார், உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்வதற்காக, கடவுளை அடைவதற்காக என்ன செய்வான்? மலையடிவாரத்தில் வரக்கூடிய அருவிநீரை சாப்பிடுவான். வரக்கூடிய தண்ணீரை குடிப்பான், பச்சிலையை சாப்பிட்டால் ஒரு உயிரக் கொல்வதாக அர்த்தமாகும் என்று சொல்லி உதிரக்கூடிய சருகை சாப்பிடுவான்.
     சருகருந்தி நீர்குடித்துக் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
     
     நீ உண்மைப்பொருள் தெரியாமல் காட்டில் உட்கார்ந்து, சருகையும் தண்ணீரையும் சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வீணாக்கி விடாதே, வெறும் சருகையும் தண்ணீரையும் குடித்தால் உடம்புக்கு சஞ்சலமுண்டாகி விடும். உடம்பைப் பற்றி அறிந்து கொண்டவன்தான் உண்மை ஆன்மீகவாதி.
     வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் – விருந்தைப் போற்றுதல், மனைவி மக்களோடு இருத்தல், உலகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் இப்படியாக ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
     உடம்பை அணுஅணுவாக ஆராய்கின்ற மக்கள்தான் விருந்தை உபசரிப்பான். மனைவி மக்களோடு இருப்பான். நன்றாக உண்டு உலக மக்களோடு இருப்பான். அவன் உண்மை ஆன்மீகவாதியாக இருப்பான்.
     வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வலிக்குஞ் சிவாயமே – தலைவன் எங்கே போவானென்றால், உண்மை ஆன்மிகம் தெரிந்தவனிடம்தான் தலைவன் போவானே தவிர, மனைவி மக்களை விட்டுவிட்டு காட்டுக்குள் போய் உட்கார்ந்திருப்பவனிடம் போக மாட்டான்.
     காட்டில் பகல் நேரத்தில் அந்த அருவியெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். பொழுது இறங்க இறங்க நரி வரப்போகுது என்று அர்த்தம். இவனை பிடித்து கொன்று தின்றுவிட்டு போகப்போகிறது. ஆக அவனுக்கு யார் சொன்னார்கள் என்றால், ஏதோ நூல் படித்தான், போய்க்கொண்டிருப்பான். இப்படி அநியாயமாக செத்தவன் கோடானகோடி பேர். இன்னும் இப்படி சாகிறவன் வெகுபேர்.
     இன்னும் சிலபேர் என்ன செய்வான்? ஞானிகள் சொன்ன பரிபாஷையை புரிந்து கொள்ளாமல், பற்பம், சுண்ணம், செந்தூரம், மூலிகை சாப்பிடுவான். ஆயிரம் வருட வேப்பமர பட்டையை சாப்பிட்டால் உனக்கு மரணம் வராது என்று சொல்லியிருப்பான். அதையும் சாப்பிடுவான், ஆக அத்தனை பேரும் செத்தே போயிடுவான். ஆசான் பட்டினத்தார் சொல்வார்,
     காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பில்லாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.
    மகான் பட்டினத்தார் பாடல், திருவிடைமருதூர் – 1
ஆக அறிந்து கொண்டவர்கள், உண்மைப்பொருளை தெரிந்து கொண்டவர்கள், உண்மை ஆன்மீகத்தை அறிந்தவர்கள், இருக்கக்கூடிய வாய்ப்பை, இருக்கக்கூடிய உலகத்தை, சுற்றுப்புற சூழ்நிலையை பயன்படுத்தி ஜென்மத்தை கடைத்தேற்றுவதுதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி, இதை அறிவதற்கும் ஆசான் ஆசியிருக்க வேண்டுமென்று சொல்லி உண்மை ஆன்மீகத்தை பற்றி அன்பர் கேட்டதற்கு, உண்மை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
இதைவிட விசயம் தெரிந்த மக்கள் நிறைய சொல்வார்கள். என்னுடைய அறிவுக்குட்பட்டது, எனது கல்விக்கு அனுபவத்திற்கு உட்பட்டது, என்னுடைய கல்விக்கு ஏற்ப நான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் நாட்டு மக்களுக்கு பயன்படும் என்று நான் நினைக்கிறேன். அன்பர்கள் இந்த பதிவு நாடாவை பயபக்தியோடு கேட்டு பயனடைய வேண்டும்.
ஏனென்றால் போதிய கல்வியறிவு எனக்கு இல்லாததனால் நான் பேசிய கருத்துகளில் சில குற்றம் குறையிருக்கும், கற்றுணர்ந்தவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டு முடிக்கிறேன் வணக்கம்.
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 819
Total Visit : 208727

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version