21.06.1997 அன்று | உடம்பின் பயன் | என்ற தலைப்பில் | மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


உடம்பின் பயன் மகான் ஆறுமுக அரங்கர்  அருளுரை சுப்பிரமணியர் ஞானசைதன்யம் திருமந்திரம்  உபதேசம் சிவஞான சித்தியார் சரீர சித்தி உபாயம்

உடம்பின் பயன்

என்ற தலைப்பில் 21.06.1997 அன்று அருளிய அருளுரை
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்
     மனிதனுக்கு மட்டும்தான் கடவுளை அடையக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மற்ற எந்த ஜீவராசிக்கும் இல்லை. ரொம்ப மென்மையான மானுக்கோ, மிருதுவான முயலுக்கோ, கடினமான காண்டாமிருகத்திற்கோ, புலி, சிங்கத்திற்கோ இல்லை. மனிதவர்க்கம் கடவுளை அடைய வேண்டுமென்றால், மனிதன் முன்னேற வேண்டும்.
     மனிதனுக்குள்ளே ஒரு சக்தி வைத்திருக்கிறான். அது மோட்சலாபம். அந்த மோட்சலாபம் பத்தாம் வாசல் என்று சொல்லப்படும். நெருப்பாறு, மயிர்ப்பாலம் உள்ளது என்றும் சொல்வார்கள். நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்று சொல்லப்படுகின்ற ரகசியம் எல்லோருள்ளும் இருந்தாலும் மனிதர்கள் செத்துதான் போகிறார்கள். இதை அறிவதற்கு ஆசான் உபதேசிக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் எல்லாம்வல்ல தாய், ஆதி சக்தியானவன் ஆசான் சுப்பிரமணியர் மீது கருணை கொண்டு அவருக்கு அருள் செய்தாள்.
     நரகத்திற்கு காரணமான இந்த உடம்பிற்குள் மோட்சம் என்ற ஒன்று இருக்கிறது. மனிதனை படைக்கும்போதே எல்லாம்வல்ல ஆதி சக்தி இப்படி படைத்திருக்கிறாள். அவள் என்று சொல்லப்படுவது சக்தி. அது குளிர்ச்சி. சிவம் என்று சொல்லப்பட்டது அக்கினி. முன்னே வந்தது அக்கினி இதை,

     அகரந்தான் பரவெளியி லொளிவுண்டாச்சு
            அதில்நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
      இகரந்தான் தண்ணீர்மண் தோன்றலாச்சு
            இதில்நின்றே ஜீவாத்மா தோன்றலாச்சு
      உகரந்தான் பூமிபரு வதமாச்சு
            உகந்ததொரு நான்குவித யோனியாச்சு
      ஒகரசுழி வட்டமெழு தோற்றமாச்சு
            உண்மைபரா பரத்தினுட செயல்தானாதி.

                                  அருள்மிகு சுப்பிரமணியர் ஞானசைதன்யம் – கவி எண் 83

                அகரம்தான் பரவெளியில் ஒழி உண்டாச்சு – ஆதி சக்தி, இந்த உலகத்தை படைத்த அந்த சக்தி, ஒரு உஷ்ணத்தை உருவாக்கினாள்.
     குளிர்ச்சியும், வெப்பமும் சேராமல் ஒரு உயிர் தோன்ற முடியாது. நம்மிடம் குளிர்ச்சியும் இருக்கிறது, வெப்பமும் இருக்கிறது. அதிக குளிர்ச்சி இருந்தாலும் செத்துப்போவான். அதிக வெப்பம் இருந்தாலும் செத்துப்போவான். இப்பேர்ப்பட்ட ஒரு சக்தியை, பத்தாம் வாசல் அல்லது மோட்சம் என்ற ஒன்றை உடம்பிற்குள்ளே வைத்திருக்கிறாள். அப்படி உடம்பிற்குள் வைத்து மக்கள் அதை அடைய வேண்டும் என்பதற்காக அவளே மனமிரங்கி வழிவகை செய்திருக்கிறாள்.
     உடம்பிற்குள்ளே மோகினியாக, காளியாக, விகாரியாக அந்த ஆதி சக்தி இருக்கிறாள். அவளே, மீண்டும் சாந்த சொரூபியாக மாறுகிறாள். அவள் ஜோதியாக இருக்கிறாள். அவள் இங்கே கதிரவனை உண்டாக்கினால் கதிரவனும் ஆதி காலத்தில் தோன்றிய சுடரில் ஒரு பகுதிதான். ஒரு பகுதிக்கே இவ்வளவு வல்லமை இருக்கிறது.
     ஒரு சுடரை உண்டாக்கி, நமக்குள்ளே ஒரு உஷ்ணத்தை ஆதி சக்தி உண்டாக்கிவிட்டால். அதே சூரியன், உள்ளே குளிர்ச்சியோடு சேரும்போது சதகோடி சூரியனாக மாறியது. ஞானிகளுக்கு சதகோடி சூரிய ஒளியாக, அந்த ஜோதிச்சுடர் தெரியும். இதை சதகோடி சூரியன் என்று சொல்வார். அதே அக்கினி நம் உடம்பிற்குள்ளே இருக்கும். அது அவ்வளவு ஒளி பொருந்திய சுடராக குளிர்ச்சியாக மாறும்போது, அந்தச் சுடர் சொல்லவொண்ணா பேரானந்தத்தைக் தருகிறது.
     வன்னி என்று அழைக்கப்படும் செந்நிறமான, கதிரவன் போன்ற சுடரும், ஒரு வட்டமான மதி சுடரும் நம்முள்ளே இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் அடைய வேண்டும். ஆசான் சுப்பிரமணியருக்கு அந்த ரகசியத்தை ஆதிசக்தி தை உணர்த்தினாள். இல்லையென்றால் அவரும் அந்தச்சுடரை மக்கள் காண அந்தச் சுடரை மனிதன் பார்க்க வேண்டும். அந்தச் சுடரை மக்கள் காண வேண்டும். அந்தச் சுடர்தான் மனிதனுக்கு பெரும் ஆற்றலை தருகிறது என்றார்.
     அது தண்ணீருக்குள் இருக்கிறது. இதை, “தண்ணீரில் விளக்கெரித்த தன்மை போல்” என்பார் மகான் இராமலிங்க சுவாமிகள்.
மகான் திருமூலதேவரும் இதை தனது பாடலில் சொல்வார்,
             
               வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
                கோயி லிருந்து குடிக்கொண்ட கோன்நந்தி
                தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந்
                தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

                                                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 118

                நாம் ஆசானை பூஜை செய்வோம். பூஜை செய்வதை இப்படி வேயின் எழுங்கனல் போலே என்றார். இது எடுத்துக்காட்டு. மலைப்பகுதியில் மூங்கில் புதர்கள் இருக்கும். மூங்கில் புதர்கள் வெயில் காலத்தில் ஒன்றோடு ஒன்று உரசும். அப்படி மூங்கில்கள் உராயும்போது அங்கே தீப்பிடித்துக் கொள்ளும். இதையும் எடுத்துக்காட்டாக சொல்கிறார்.
     வேய் என்றால் மூங்கில். வேயின் எழுங்கனல் பலே என்றார். அதுபோல உடம்புக்குள்ளே, தலைவன் இருந்துக்கொண்டு, முறையோடு அக்கினியை எழுப்புகின்றான். இவன் எந்த அளவிற்கு உருகி தியானம் செய்கிறானோ அந்த அளவிற்கு அருள் செவார்கள் ஞானிகள்.
     ஞானிகளில் யாரை வணங்கினாலும் சரி, அவர்கள் அத்தனை பேரும் ஒரே வல்லமை உள்ளவர்கள்தான். யாரை விரும்பி பூஜை செய்தாலும் அது ஆசான் அகத்தீசரையும் ஆசான் சுப்பிரமணியரையும் சேரும். பூஜை செய்ய சொல்லித்தர வேண்டும். சொல்லித்தந்தால்தான் பூஜை செய்வான். இல்லையென்று சொன்னால் பூஜை செய்ய மாட்டான்.
     வேயின் எழுங்கனல் போலே – மூங்கில் புதர்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதன் காரணமாக கனல் ஏற்படுவதுபோல, அவன் தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறான்.
     இம்மெய் எனும் கோயிலில் இருந்து குடிகொண்ட கோன் நந்தி – ஞானிகள் மீது அன்பு செலுத்தி ஆசான் அகத்தீசரையோ, ஆசான் நந்தீசரையோ மகான் திருமூலதேவரையோ பூஜை செய்கிறான். அதன் நோக்கம் ஒன்று நித்தியத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். சொல்லவொண்ணாப் பேரானந்ததத்தை தரும் அந்தச் சுடரை, அந்த ஜோதியை காண வேண்டும். இதற்கு பக்தி ஒன்றுதான் வழி, எல்லையில்லாப் பெரும் சுடரை நாம் அடைய வேண்டுமென்று மக்களுக்கு நாம் சொல்கிறோம். பக்தி செலுத்த வேண்டும் என்று சொல்கிறோம். பக்தி எந்தவிதமான சடங்கிற்கும் அகப்பாடது.
     ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூல தேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்று சொல்கிறோம். இவர்கள் எல்லோரும் அந்த ரகசியத்தை அறிந்தவர்கள். அவர்கள் உடம்பிற்குள் இருக்கக் கூடிய அந்தச் சுடரை, ஜோதியை ஆசான் துணை கொண்டு, தட்டி எழுப்பிய மக்கள், எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும், எல்லையில்லா பெரும் சுடரை அடைய வேண்டும், மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டுமென்று ஆசானை கேட்கிறோம். விடாது கேட்டுக்கொண்டே வருகிறோம். விடாது கேட்க கேட்க கேட்க அறிவு தெளிவடைகிறது. அறிவு தெளிவின் காரணமாகத்தான் அந்த ஜோதியை காண முடியும். அறிவில் தெளிவில்லையென்றால் இது தெரியாது. மனிதனுக்குள்ளே இப்பேர்ப்பட்ட சுடர் இருந்தும், ஏன் அந்தச் சுடரை அடைய முடியவில்லை, ஜோதியை காண முடியவில்லை. நாம் காணமுடியாதபடி அந்த ஜோதியை மூடி இருப்பது என்ன? நம் உடம்பில் இருக்கும் அந்த எல்லையில்லா பெரும் சுடரை நரகம் மூடிக்கொண்டிருக்கிறது. அதுதான் பெரிய பிரச்சனை. நரகம் குற்றமா? இல்லை, குற்றமில்லை. நரகம் என்று சொல்லப்பட்ட தூல உடம்பு கரைய கரைய உள்ளே ஜோதி தெரியும். உமி நீங்கினால்தான் அரிசி என்ற பெயர் வறு. உமி நீங்கவிட்டால் அரிசி என்ற பெயர் வராது. உள்ளே ஒரு உமி இருக்கிறது உள்ளே தவிடு இருக்கிறது.
     நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே
                            நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர்
      சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை
                            தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம்
      மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை
                            மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும்
      நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
                            நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே.

                                                                                – சிவஞான சித்தியார் – கவி எண் 314

                நெல்லிற்கு, தவிடும் உமியும் அனாதி. இயல்பாகவே அப்படி உள்ளது. நெல்லை படைக்கும்போதே இரண்டையும் சேர்த்துத்தான் படைத்திருக்கிறான். அந்த நெல், உமியும் தவிடும் நீங்காமல் அரிசி ஆகாது. அப்படி நீங்கி விட்டால், அரிசி ஆகிறது. அவை நீங்கி விட்டால் முளைக்காது. இப்பேர்ப்பட்ட ஒரு ரகசியம் இருக்கிறது.
     புற உடம்பாகிய உமியையும், உள்ளே இருக்கின்ற தவிட்டையும், தலைவன் ஆசியால்தான் நீக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக அந்தச் சுடரை காண முடியாது. புற உடம்பின் உள்ளே ஜோதியை காண்பதற்கு ஒரு அனல் ஏறுவதற்கு, உள்ளே சுடர் காண்பதற்கு, அனலைத் தூண்டுவதற்கு, கடவுள் புற உடம்பை கொடுத்தான். புற உடம்பு நமக்கு அவசியம். உங்கள் மீது மிகுந்த கருணைகொண்டு பேசுகிறேன். உள்ளே இருக்கக் கூடிய சுடரை தட்டி எழுப்புவதற்கு புற உடம்பு இன்றியமையாதது. புற உடம்பு இல்லையென்று சொன்னால், அந்த சுடரை காண முடியாது. அந்தச் சுடரை மறைக்கின்றது. அதே சமயத்தில் அறியாமையையும் உண்டாக்குகிறது. அறியாமையை உண்டாக்குவதும் அந்த புற உடம்புதான்.
 
     உள்ளுடம்பாகிய சூட்சும தேகத்தை தட்டி எழுப்பவும், அளவில்லா ஜோதியை உண்டாக்குவதற்கும் புற உடம்பு காரணமாகிறது. இந்த உடம்பைப் பற்றி அறிவதற்கு வேயின் எழுங்கனல் போலே என்றார். புற உடம்பின் துணைகொண்டு கனல் பிறக்கும். புற உடம்பு துணை இல்லாமல் அக உடம்பு ஆக்கம் பெறாது. இந்த உடம்பு கரைய கரைய கரைய அந்த ஜோதி தோன்றும், கனல் ஏறும். மூலக்கனல் தோன்றுவதற்கு புற உடம்பு அவசியம். அது இன்றியமையாத ஒரு செல்வம். அந்த உடம்பு கரையும் பொது ஜோதிச்சுடர் வெளிப்படுகிறது. ஆசான், அதற்குத் துணையாக இருக்கிறான்.
     புற உடம்பு அறியாமையை உண்டாக்கிறது. காமத்தை உண்டாக்கிறது. மீண்டும் பிறவிக்குக் காரணமாக இருக்கிறது. பிறவிக்குக் காரணமாக இருக்கக்கூடிய அந்த உடம்பினுள்ளே ஆசான் சார்ந்திருந்து,புற உடம்பு நீங்குவதற்கு காரணமாக இருந்து, ஜோதியை தட்டி எழுப்புகிறான். இந்த உடம்பு இல்லையென்றால் அது வராது. இந்த உடம்பை நாம் காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது? இதை மகான் திருமூலர் சொல்வார்,
     உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
      உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
                                                – திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724
                உடம்பை காப்பாற்ற நினைப்பான். ஆனால் உயிர் போய்விடும். உயிரை காப்பாற்ற நினைப்பான், உடல் போய்விடும்.
    
      உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
      உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
                                                – திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724
      எந்த உடம்பை வளர்ப்பது? எந்த உடம்பை நீக்குவது? இதை அறிய தலைவன் ஆசி வேண்டும். ஆசான் மீது பக்தி செலுத்தினாலன்றி ஒருவனுக்கு இந்த உண்மை தெரியாது. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார். உடம்பை வளர்க்கின்ற உபாயத்தை அறியாமல் உயிரை வளர்க்க முடியாது.
     உமியும் தவிடும் நீங்கினாலன்றி, அரிசி வெளிப்படாதது போல, மும்மலமாகிய புற உடம்பு நீங்காமல், உள்ளுடம்பு ஆக்கம் பெறாது. இதுதான், துணையாக இருக்கும். ஒன்று கரைய ஒன்று வெளியாகும். ஐஸ் கரைந்து குச்சி வெளியாவது போல, உடம்பு கரைய கரைய கரைய உள்ளே ஜோதி தோன்றும். இதை, உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் என்றார். பக்திதான் இதற்குக் காரணம். பக்தி அன்றி வேறு வழியே இல்லை. மகான் திருமூலர் சொல்வார்,
      உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
      உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
      உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
      உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.
                                                 – திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 725
               
                அறியாமை காரணமாக, உடம்பினை முன்பு நான் இழிவாக நினைத்தேன். இப்பொழுது உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன். இதை பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். காதால் கேட்பது நல்லதுதானே கேட்க கேட்க புண்ணியம்தான், கேட்க கேட்க நல்லதுதான். ஆக உடம்பை அசுத்தம் என்றும், இழிவானது என்றும் நான் நினைத்தேன்.
     தலைவன் ஆசி இருந்ததனால், “உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்” என்றார்.
     உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று – முன்னே இருந்தான். எனக்கு அதனுடைய பெருமை தெரியாமல், நான் அதை இழிவாக நினைத்தேன். அறிந்து கொண்டபின் உடம்பில் உத்தமன் இருந்தான். அதை ஆண்பாலில் சொன்னதற்கு என்ன காரணம்? ஆண்பாலாக இருப்பது ஆன்மாவும், பெண்பாலாக இருப்பது உடம்பும் ஆகும்.
     உத்தமன் என்பதை புருஷோத்தமன் என்று சொல்வார்கள். உத்தமன் என்று சொல்லப்பட்டது ஆண்மை அல்லது சுக்கிலம். விந்துதான் இங்கே இப்படி சொல்லப்படுவது. உத்தமன் அவன். இப்போது நமக்கு எப்படி இருக்கிறான்? அயோக்கியனாக இருக்கிறான். நம்மை நரகத்தில் தள்ளக் கூடியவனாக இருக்கிறான். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், புரிந்தவர்களுக்கு உத்தமனாக மாறுகிறான். அது சுத்த சுக்கிலம்.

      உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
      வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
      தண்மையான காயமே தரித்துரூப மானதும்
      தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
                                                                – மகான் சிவவாக்கியர் – கவி எண் 251

                உண்மையான சுக்கிலத்தை அறிந்த மக்கள், நிச்சயமாக உடம்பை கடைத்தேற்றிக் கொள்வார்கள். இதை உடம்பில் உத்தமன் இருந்தான் என்பார்.
     
      உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
      உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்.
     உறுதிப்பொருளாகிய மெய்ப்பொருளைக் கண்டேன்.
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
      தலைவன் உள்ளே கோவில் கொண்டான் உத்தமன் தங்கினான். முன்னே சுத்த அயோக்கியன் தங்கியிருந்தான். இப்போது அதை அறிந்தேன். ஆசான் நந்தீசரை நான் அறிந்தேன். அவர் என் சிந்தையில் தங்கினார். ஆசான் நந்தீசரை எப்போதும் என் சிந்தையில் நினைத்திருந்தேன். அவரை சிந்தையில் நினைக்க நினைக்க அவர் தங்கினார். ஆசான் தங்கியதால் அயோக்கியன் போய்விட்டான். இவன் சுத்த சுக்கிலம் ஆனான், சுத்த விந்து ஆனான், அயோக்கியன் மாறினான்.
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
     உத்தமன் தங்க வேண்டும். எப்படிய்யா தங்குவது? அதற்கு ஒன்றே ஒன்று பக்திதான். தலைவனை தினம் தியானம். நாமஜெபம் செய்ய செய்ய செய்ய அயோக்கியத்தனத்தை, மூர்க்கத்தனத்தை, மூடத்தனத்தை, வஞ்சனையை, விகாரத்தை உண்டாக்குகின்ற உடம்பு, வெளிப்பட்டுப் போகிறது. ஒளி வந்தால் இருள் நீங்குவதுபோல், அவர் தங்கினால் ஜோதி வெளிப்படும். தலைவன் திருவடியைப்பற்றி உருக உருக உருக அவர் உள்ளத்தில் தங்கி விடுகிறார். உணர்வோடும், உணர்ச்சியோடும், நாடி நரம்புகளோடும் ஊடுருவியிருக்கிறார். நாடி நரம்புகளோடும், உணர்வோடும், உணர்ச்சியோடும் கலந்து இருப்பதனால் இவன் வீழ்ந்து விடுகிறான். நமக்கு எதிரியாகிய, நமக்கு பிறவியை உண்டாக்கக் கூடிய தீயசக்தி விலகிப் போகிறது, உத்தமன் தங்குகிறான்.
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
     உத்தமன் கோவில் கொள்வதற்கு நாம் பாடுபடுகிறோம். வருங்காலம் ஞானசித்தர் காலம். ஏனய்யா, எப்போதும் இப்படி பேசுகிறீர்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்குதான் சொல்கிறான்.
     எதற்கு குடிலுக்கு வந்திருக்கிறோம், தொண்டு செய்யத்தான். இது உண்மைதான். லட்சியமென்ன தலைவன் ஆசியைப் பெற வேண்டும். இப்போது இருக்கக் கூடிய நச்சுத்தன்மையான உடம்பை, நமக்கு வஞ்சகம் செய்யக் கூடிய உடம்பை, ஆசான் துணை கொண்டு நீக்கினால், நம் ஆன்மா உத்தமனாகிறது. இப்போது எங்களுக்கு உத்தமனாக இருக்கிறான்.
     அவன் உத்தமனாக இல்லை? அயோக்கியத்தனத்தொடு இருக்கிறான். புருஷோத்தமன் என்று சொல்லப்பட்ட ஆன்மா, நச்சுத்தன்மையாகிய உடம்புக்குள்ளே தங்கி இருக்கிறான். நச்சுத்தன்மையுள்ள உடம்பில் தலைவன் வந்து தங்க வேண்டும். அப்படி தங்கினால், உமியும் தவிடும் நீங்கும்.
     தலைவனை நாம் நெருங்க நெருங்க நெருங்க நாம் அந்த இடத்திற்கு வருகிறோம். உத்தமன் நிலைக்கு வந்துவிட்டோம். ஆசான் திருமூலதேவரே சொல்வார்,
      உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
      உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
     என்னய்யா, உடம்புக்குள்ளே இப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது என்கிறாரே, இதை யார் அறிய முடியும்? திருமந்திரத்தில் 30 பாடல்கள் உபதேசம் இருக்கிறது. அதில்தான் இந்த பாடலும் வருகிறது.
     வேயின் எழுங்கனல் போல என்றார். ஆக, அப்படி சொல்வதற்கு நோக்கம் என்ன? உள்ளே அவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறது. கோடி யுகமும் நொடிப்பொழுதாக வாழலாம். கோடி யுகத்தை நொடிப்பொழுது என்று சொல்லும்போது, அப்புறம் பேச்சே இல்லை. இதை மக்கள் அறிய வேண்டும்..
     யுகம் கோடான கோடி கண்ட மூலனாயகன்(திருமூலர்) என்றார். கோடியுகம், கோடான கோடி யுகம் ஞானிகளுக்கு ஒரு நொடி என்றான். அப்பேர்ப்பட்ட ஒரு வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பை மனிதன் இழக்கிறான். மனிதன் இழப்பதற்கு என்ன காரணம்? தக்க ஆசான் இல்லை. அப்படியே ஆசான் இருந்தாலும் அவசரப்படுதலும், அவரிடமிருந்து எப்படியாவது விசயத்தைத் தெரிந்து கொண்டு முன்னேற நினைப்பதும் இந்தத் துறைக்கு ஆகாத ஒன்று. கடைசி வரையிலும் ஆசானுடைய ஆசி இருக்க வேண்டும். மகான் திருவள்ளுவர் சொல்வார்.
     முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
      சார்புஇலார்க்கு இல்லை நிலை.
                                – திருக்குறள் – பெரியாரைத்துணைக்கோடல் – குறள் எண் 449
                சொற்குரு ஆசியும், சற்குரு ஆசியும் இருக்க வேண்டும். சற்குரு ஆசி பெற்றவன்தான் சொற்குருவாக இருக்க முடியும். இதை நாம்தான் சொல்லித்தர வேண்டும். இந்த அற்புதமான ஒரு செயலை மக்களுக்கு சொல்லித் தர வேண்டும். அந்த லட்சியத்தை அறியக்கூடிய ரகசியத்தை, மக்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
     மெய் எனும் கோயிலில் இருந்து குடிகொண்ட கோன் நந்தி – கோன் என்றால் தலைவன் என்று அர்த்தம். தலைவன் உடம்பாகிய கோவிலுக்குள் தங்கி இருக்கிறான் என்பார். திருவருள் துணை கொண்டுதான் தங்குவான்.உருகி உருகி தியானம் செய்தால் உள்ளே இருப்பான். உருகி தியானம் செய்வதற்கு நாங்கள் சொல்லித்தர வேண்டும். நாங்கள் வகுத்து, சொல்லிக் கொண்டே இருப்போம்.
     ஞானிகள் ஆசி இல்லாமல், எத்தனை முறை நான் சொன்னாலும் புரியாது. நீ பூஜை செய். அவசரப்படாமல் பூஜை செய்தால், ஆசான் அருள் செய்வார். இப்பேர்ப்பட்ட ரகசியம் எப்போதைய வெளிப்படும் என்று சொன்னால்,
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
                                                                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
                போதம் என்பது ஞானம் அல்லது அறிவு. ஆசான் திருமூலர் உடம்பினுக்குள்ளே உத்தமன் தங்கினான் என்றும் சொன்னார். மேலும்,
    
      வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
                கோயி லிருந்து குடிக்கொண்ட கோன்நந்தி
      மெய் என்று சொல்லப்பட்ட உடம்பில் கோன் என்று சொல்லப்பட்ட தலைவன் தங்கினார் என்றார். இங்கே, போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். போதம் என்பது ஞானம், அறிவு. இப்போது நாம் சுட்டிக்காட்டக்கூடிய ஞானிகள், நாம் அறிமுகப்படுத்தும் ஞானிகள் எல்லாம் மிகப்பெரியவர்கள். ஞானிகளை “நிற்குமிடமற்ற நின்மலமாம் ஜோதி” என்பார்கள். ஞானிகள் எல்லோரும் ஜோதி சொரூபமாக இருப்பார்கள். நம்மை யாரும் அழைக்க மாட்டார்களா என்று எதிர்பார்ப்பார்கள். ஞானிகளுக்கு அருள் செய்வதே வேலை, வேறு வேலை இல்லை. இதற்காக நாம் தொண்டர்களுக்கெல்லாம் பெரியோர்களை அறிமுகப்படுத்தி, தொண்டர்களை பூஜை செய்ய வைக்கவேண்டாம். அவனுடைய வினைப்பயன் என்ன செய்யும், பூஜை செய்யவிடாமல் தடுக்கும். பூஜையில் ஈடுபடமுடியாத ஒரு தடையை உண்டாக்கும். சாது சங்கத் தொடர்பு உள்ளவர்கள் அடிக்கடி வந்து, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, அதே சிந்தனையாக இருக்க வேண்டும். சிறிது விலகினாலோ, ஒருநாள் ஓரிரு வாரம் விலகினாலோ, ஆசான் இவனை விட்டு விலகிவிடுவார்கள். அப்படியே ஒதுங்கி விடுவார்க்ள. சாது சங்கத் தொடர்புதான் தவறாது பூஜை செய்ய வைக்கும். ஒருவன் விடாமல் பூஜை செய்தால்தான் தெளிவடைய முடியும். தினமும் ஆசானை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாள் சுணங்கினாலும் முடியாது. ஆக, நழுவாமல் அவனைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு அவன் நழுவாமல் பூஜை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை ஆசான் வள்ளுவர் சொல்லும்போது,
      வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
      வாழ்நாள் வழியடைக்கும் கல்.

                                – திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 38

                தடையில்லாமல் பூஜை செய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். பக்தியை ஊட்ட வேண்டும். தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். ஞானிகள் நல்ல மனது உள்ளவர்கள். இதைதான் ஆசான் வள்ளுவர் சொல்வார்,
      அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
      பிறஆழி நீந்தல் அரிது.
                                                – திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 8
                ஞானிகள் அறக்கடலாக உள்ளவர்கள், அவர்கள் நல்ல சிந்தனையுள்ள மக்கள். சொற்குருவுக்கும் அதே சிந்தனைதான் இருக்கும். சற்குரு முற்றுப் பெற்றுவிட்டான், சொற்குரு இன்னும் முற்றுப்பெறவில்லை. ஞானிகளின் பெருமையை மக்கள் மத்தியில் சொல்லி சொல்லி சொல்லி, எல்லோரும், ஆசான் திருவடியைப் பற்ற வேண்டுமென்று நினைப்பார்கள். த்ரயுவடியைப் பற்ற நாம்தான் தூண்டிவிட வேண்டும்.
     போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். போதம் என்பது ஞானம், அறிவு. உடம்பிற்குள்ளே இருக்கும் தலைவனை அறிந்துகொள்வதற்கு ஆசி வேண்டும். சாது சங்கத் தொடர்பில் இருந்தால் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்டு கடைத்தேறிக் கொள்ளலாம்.
     இந்த துறையில் உள்ள மக்கள் ஊதியம் கேட்க மாட்டார்கள். சாதுசங்கத்தொடர்பு உள்ளவர்கள் யாரும் பொருளாதாரத்தை விரும்பமாட்டார்கள். வேண்டாமையா உன்னுடைய காசு. நீ இங்கே வந்து தேறிக்கொள் என்று சொல்வார்கள். மகான் திருமூலர் சொல்வார்,
      ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
      ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
      ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
      வேதியன் அங்கே வெளிப்படுந் தானே .
                                                – திருமந்திரம் – சந்திர யோகம் – கவி எண் 870
     ஞானியர்களது சிந்தனைகள் உயர்ந்ததாக இருக்கும். உங்களுடைய சொற்குரு காரண குரு, காரிய குரு அல்ல. காரண குரு இருக்கும் இடமெல்லாம் உண்மை விளங்கும். அதற்கு எடுத்துக்காட்டு அவர்களது செயல்பாடுகளே. அவர்களது செயல்கள் தூய்மையாக இருக்கும், பொய்யே பேசமாட்டார்கள். செயல்பாடுகளெல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டு விடாது அவர்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை வேதியன் அங்கே வெளிப்படும் தானே என்று சொல்வார்.
     ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் – தொடக்கமும் முடிவும் ஒன்று சேர வேண்டும். எந்த சக்தி நம்மை தோற்றுவித்ததோ அந்த சக்தியைக் கொண்டே அதை தொட முடியும் என்றார். ஆதியும் அந்தமுமாகவும், அடியும், நுனியுமாகவும் இருக்கிறான். தொடக்கமும் முடிவுமாக இருக்கிறான் என்றார்.
      ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
      வேதியன் அங்கே வெளிப்படுந் தானே
     இப்படியெல்லாம் ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் மூவாயிரம் பாடல் மட்டுமல்ல, முப்பது லட்சம் பாடல்கள் பாடினாலும் சரி, தலைவன் ஆசி இருப்பதற்குத்தான் பாடியிருக்கிறார்கள். இப்போது நாம் அதைத்தான் பேசிக்கொண்டு வருகிறோம். இங்கே ஆசான் போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். போதம் என்ற அறிவை, ஞானத்தை, ஞானத்திற்குரிய அறிவை ஆசானே தருவார். அங்கே வேயின் எழுங்கனல் போலே என்று சொன்னது போல, இங்கே போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். அதுவும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். ஏனய்யா, எங்கள் நந்தி என்றார். எப்போது நீ என் திருவடியை பற்றுகின்றாயோ, அப்போதே நீயும் நானும் ஒன்று என்றார். நாம் தலைவன் ஆசியைப் பெற வேண்டும்.
      போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
     தலைவன் ஆசியைப் பெற, ஆசியை பெறத்தான், ஒருவனுக்கு மேலும் மேலும் நம்பிக்கை வரும். தலைவன் ஆசியைப் பெற முடியாதபடி வினை இருக்கிறது. செய்த வினை ஆசியைப் பெற, தலைவனை நெருங்கவே முடியாதபடி செய்துவிடும்.
     ஞானிகளை அழைக்கும் போதே வந்துவிடுவார்கள். கிட்ட நெருங்கமுடியாதபடி உன் ஊழ்வினை உன்னை போட்டு அழுத்திவிடும், பல பிரச்சனைகள் உன்னை ஞானிகளிடம் நெருங்கவிடாதபடி செய்துவிடும். முன் ஜென்மத்தில் செய்த கோடான கோடி பாவங்கள் குவிந்து கிடக்கிறது. இவன் இரண்டடி எடுத்து வைப்பான், இவன் செய்த பாவம் காலை பிடித்து இழுக்கும்.
     ஒவ்வொரு ஜென்மத்தில் செய்த பாவங்கள் இவனை சுற்றி நிற்கும், யானை போன்று அப்படியே விகாரமாக இருக்கும். ஒரு அடி எடுத்து வைத்தாலும். காலை பிடித்து இழுத்துவிடும். இப்படி இருக்கும்போது இவன் என்ன செய்ய முடியும்? பாவம்.
     ஞானிகளுடைய சிந்தனைகள் உயர்ந்தது, அவர்கள் நல்ல மனதுடையவர்கள்தான். கருணைக்கடல்தான். அவர்களுடைய திருவடியைப் பிடிக்க முடியாதபடி வினை சூழ்ந்துகொண்டு நோயும், பிணியும், வறுமையும் போட்டு வாட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வான் பாவம்! இதையும் மீறி வர வேண்டும். இங்கே குடிலுக்கு வர வேண்டும்.
     தலைமை தாங்கி நடத்துபவனையே ஒரு கசக்கு கசக்கும். என்ன செய்வான்? பூஜை செய்கிறான், அவனையே போட்டு கசக்குகிறதே என்றால், வேறு வழியே இல்லை. அவர்களையே போட்டு கசக்கும்போது, அவன் எப்படி நான்கு பேருக்கு வழிகாட்ட முடியும்? இதையும் மீறி, அதையும் மீறி, வந்து கொண்டிருக்கிறான். இவன் எடுத்த ஜென்மமோ கணக்கில் அடங்காது, செய்த பாவமோ கணக்கில் அடங்காது, பாவிகளை நெருங்கவிட மாட்டார்கள். பாவிகளை நெருங்கவிடாமல் செய்து விடுவார்கள்.
     போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் – போதம் என்னும் மனதில் வைத்துக் கொண்டு புண்ணியர் ஆக வேண்டும். புண்ணியர் ஆகும் போதுதான் அவர்களுக்கு சிறந்த அறிவு வரும். இப்படி தலைவனை நினைக்க நினைக்க நினைக்க பாவச்சுமை தீரும். பாவச்சுமை தீர்ந்தால்தான் சிந்தையில் அவன் தங்குவான். இல்லையென்றால் சிந்தையில் விகாரம் இருக்கும், அவ நம்பிக்கை இருக்கும், கொடுமை இருக்கும். இதுமட்டுமன்று ஒரு பக்கம் பொறிபுலன் வாட்டும், ஒரு பக்கம் வறுமை வாட்டும், ஒரு பக்கம் நோய் வாட்டும். இப்படி பிரச்சனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும். இதற்கும் ஞானிகளுக்கும் சம்பந்தமே இல்லை. ஞானிகள் கூப்பிடுவார்கள், நீ வாய்யா என்று நெருங்கி கூப்பிடுகிறார். ஆனால் இவனால் நெருங்க முடியாது. இவனை நெருங்கமுடியாத அளவிற்கு வினை சூழ்ந்துகொண்டு தடுமாறிக்கொண்டிருப்பான்
     போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
     
      புண்ணியன் ஆவதற்கு சிந்தையில் ஆசான் நாமத்தைச் சொல்ல வேண்டும். இதுதான் உபாயம். எப்போது பார்த்தாலும் இதே சிந்தனையாக இருக்க வேண்டும். இப்போது என்ன கட்டளை வந்துள்ளது என்றால், கூட்டு வழிபாடு செய்ய வேண்டும். கூட்டுவழிபாடு அவசியம். உலகெங்கும் மக்கள் மத்தியில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும். ஆக எங்கு பார்த்தாலும், வழிபாடு நடத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். செயல் செய்வதற்கு வழிபாடு அவசியம். இங்கே வருபவர்கள் கூட்டு வழிபாடு செய்து கொள்ளலாம்.
     இங்கே தினம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசியாற்ற வேண்டியிருக்கிறது. இங்கே தொண்டு செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டு செய்து கொண்டே இருப்பார்கள். இங்கே உள்ள தொண்டர்கள் அத்தனை பேரும், தொண்டில் முழு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவும் வழிபாடுதான். வழிபாடும், தொண்டும் ஒன்றுதான்.
     ஞானிகள் ஆசியில்லாமல் உலக மக்கள் பாவத்திலிருந்து விடுபட முடியாது. இப்போது அராஜகம் மிகுதியாக இருக்கிறது, ஜீவதயவே இல்லை, அராஜகம் மிகுந்திருக்கிறது. மக்கள் மத்தியில் பிரச்சனைகள், ஒருவருக்கொருவர் பழி வாங்குதல், வீட்டிற்கு தீ வைத்துவிட்டு ரசித்தல், பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற கொடூர குணங்கள் உள்ளன. இப்படி பிறரை துன்புறுத்தி ரசிக்கிறான். இது போன்ற குணக்கேடு மிருகாதிகளுக்குத்தான் இருக்கும். இந்த கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. இது போன்ற குணக்கேடுகள் நாளுக்குநாள் மிகுதியாகிக் கொண்டே இருக்கிறது.
     “ஐயா! என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று நிறைமாத கர்ப்பிணி, கைக்குழந்தைகள், வயதானவர்களின் அலறல் சத்தம் கேட்கிறது. அலறல் சத்தம் கேட்கும்போது அதைக்கண்டு ரசிக்கிறான். அந்த ஓசையை ரசிக்கிறான். தீயில் கருகி சாகிறார்கள். எங்கு பார்த்தாலும் அராஜகம், எங்கு பார்த்தாலும் பிற உயிரை துன்புறுத்துதல் போன்ற செயல்கள் நடக்கின்றன.
     மிருகங்கள்தான் ஒன்றை ஒன்று தாக்கும். அதற்கு ரசிக்கத் தெரியாது. ஒரு உயிரைக் கொல்லும், உயிரக் கொன்று உண்ணும். உண்ணுவதற்காக கொல்லும். கொல்வது அதனுடைய வேலை. ஆனால், இவன் எந்த உயிரைக் கொன்று சாப்பிடுகிறான் என்று தெரியவில்லை. மிருகங்கள் ஒரு உயிரக் கொள்வதும் சாப்பிடுவதும் மிருகாதியின் இயல்பு. இவனுக்கு ஏன் அந்த எண்ணம்? பிறர் துன்பத்தை ரசிக்கிறான்.
     மனிதன் கொடூர காரியத்தை செய்து மகிழ்ச்சியடைகிறான். இப்படிப்பட்ட கொடுமையான செயல் இப்போது எங்கு பார்த்தாலும் நடக்கிறது. கூட்டம் கூட்டமாக சென்று தாக்குவான், தீ வைப்பான். வாயில்லா ஜீவன்களுக்கு வைக்கோல் தீவனமாக உள்ளது. ஆனால் வைக்கோல் போருக்கு நெருப்பு வைக்கிறான். அதை படைப்பு என்று சொல்வார்கள், இங்கே வைக்கோல் போர் என்பார்கள். வைக்கோலுக்கு நெருப்பு வைத்துவிட்டு ரசிக்கிறான். இது என்ன கொடுமை? இது தமிழகத்தில் நடக்க வேண்டிய அவசியமே இல்லை. முதுபெரும் ஞானிகள் நடமாடிய புண்ணியமான நாடு இது.
     நமக்கு ஆறாவது அறிவு இருப்பதே, ஒரு உயிர் மற்ற உயிருக்கு கருணை காட்டுவதற்குத்தான்.
     தலைவன் ஆசி இல்லையா? தலைவன் ஆசி இருக்கு. ஆனால் சொல்லித்தரா ஆள் இல்லை, ஜீவதயவை நாம் உண்டாக்க வேண்டும்.
     ஊருக்கு ஒருவர் இருந்தால்கூட அந்த எண்ண அலைகள், மக்கள் மத்தியில் கொடுமை செய்யக்கூடாது என்று நினைக்க வைக்கும். ஒன்று கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் நாட்டு மக்களுக்கு வழிபாட்டை சொல்லித்தர வேண்டும். அதே சமயத்தில் ஊருக்கு ஒரு பண்பாளர் இருந்தால் கூட மாற்றம் அடையும். இப்போது எங்கு பார்த்தாலும் வெறி பிடித்த மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்.
     நான் அவர்களை குறை சொல்லவில்லை. ஐயோ! இப்படி ஒரு குணக்கேடு கொண்டு வன்மனம் கொண்ட கூட்டம் நாளுக்கு நாள் மிகுந்து கொண்டே இருப்பதற்கு ஞானிகள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக வந்து இதை சொல்ல முடியாது. இப்போது நாம்தான் மக்கள் மத்தியில் வழிபாட்டை சொல்லித்தர வேண்டும். அப்படியே அவர்கள் வழிபாடு செய்தாலும், ஆடு, கோழி வெட்டி இருக்கின்ற புண்ணியத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். அங்கே இறை வழிபாட்டிற்கு வேலையே இல்லை. அங்கே கடவுள் தங்கமாட்டான். இதை ஜீவதயவு இல்லாத செயல் என்று ஞானிகள் சொல்வார்கள். ஆசான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
                – மகான் இராமலிங்க சுவாமிகள் – திருஅருட்பா ஆறாம் திருமுறை – கவி எண் 275
                புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் என்பது மிக நல்ல வார்த்தை. மனமெல்லாம் வெதும்புகிறேன்! மனமெல்லாம் வெதும்புதையா! என்றார். உயிரினங்களை வதை செய்வதை கண்டு மனம் வெதும்பி, தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஆசான் இராமலிங்கசுவாமிகள் சொன்னார். இதயத்தில் அந்த கருணை, இந்தப் பண்புகள் நாடெங்கும் பரவினாலன்றி உண்மை ஆன்மிகம் பரவாது. உண்மை ஆன்மிகம் பரவ நிர்வாகம் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். அரசாங்கம் நமக்கு சாதகமாக இருந்தால், ஆங்காங்கு கூட்டத்தைக் கூட்டு, ஞானிகள் பெருமையைப் பேசலாம்.
     சிறுதெய்வ கோவிலில், உயிர்வதை செய்வது பெருகி இருக்கிறதே தவிர, அவருடைய கொள்கையை நாட்டு மக்கள் விரும்பவில்லை. அவருடைய கொள்கை நாடெங்கும் பரவினால், தயவு சிந்தை நிச்சயம் வரும்.
     புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – மனம் வெதும்பி என்னால் தாங்க முடியாமல் நான் தடுமாறுகின்றேன் என்று சொல்லும் அந்த இறக்கம், அந்த கருணை, அப்படிப்பட்ட பண்புகள் நாட்டு மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. நாட்டு மக்களுக்குப் போய்ச்சேர்ந்தால்தான் பருவமழை பெய்யும், நாடு சுபிட்சமாக இருக்கும். உலகம் எப்படியோ போகட்டும் என்று ஞானிகள் நினைத்திருக்க முடியாது. அவர்கள் அப்படி நினைத்திருந்தால் இந்த பாடல்கள் வந்திருக்காது. ஞானிகள் அப்படி நினைக்கவே மாட்டார்கள். அதே சமயத்தில் வெளிப்படுகின்ற இந்த உடம்பு ஜோதி உடம்பானவுடன் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இருக்கக் கூடிய தொண்டர்கள் தியாக சிந்தையோடு இருந்து நாட்டு மக்களுக்கு சொல்லித்தர வேண்டும். ஊரெங்கும் பேச வேண்டும். பேச பேச பேச இந்த உண்மை யான பக்தி, நாட்டு மக்கள் மத்தியில் பரவும், பரவ வேண்டும்.
           போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
            போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
     புண்ணியர் ஆக வேண்டும். புண்ணியம் மேலோங்க, மேலோங்க, பக்தி நெறி பர பரவ, இதயத்தில் கனிவான சிந்தை வரும். இறைவன் சிந்தையில் தங்கிவிடுகிறான், ஞானிகளின் நாமத்தை சொல்கிறான். அதனால் இதயத்தில் கனிவு வந்தது. கனிவு வந்தால்தான் ஞானத்திற்குரிய அறிவு வரும்.
            போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
            போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
      தலைவனை சிந்தையில் வைத்தால்தான் புண்ணியர் ஆயினார். இல்லையென்றால் பாவம் வரும் என்றார் ஆசான் திருமூலதேவர்
     நாதன் நடத்தால் நயனம் களி கூர
      வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே
     புண்ணியமான ஞானிகளை வணங்க புண்ணியம் மிகுதியாகும். இந்த தத்துவம் நாட்டு மக்கள் மத்தியில் பரவ வேண்டும். ஞானிகள் வழிபாடு இருந்தால்தான், உங்களுக்கு அந்த புண்ணியம் பெருகும். இதை புண்ணியர் ஆயினர் என்பார்.
     நாதன் நடத்தால் – ஆசான் உள்ளே வாசியோடு, மூச்சுக்காற்றோடு கலந்து, குண்டலியில் தங்குகிறான்.
     நாதன் நடத்தால் – நாதன் என்றால் தலைவன் என்றொரு பொருள் உண்டு. நாதன் என்பதை நாதம் என்றும் வைத்துக்கொள்ளலாம் குற்றமில்லை. யோகிகள் புரிந்து கொள்வார்கள்.
     போதம்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் – போதம் தந்தான். போதம் என்ற ஞானம் தந்தான். ஞானத்தின் காரணமாக தன்னை உணர்ந்தான். தன்னை உணர்ந்ததனாலே தலைவன் ஆசி கிடைத்தது. பாவம் நீங்கி புண்ணியர் ஆயினார். ஆசானின் ஆசியின் காரணமாக பாவம் நீங்கி புண்ணியம் மிகுந்தது. புண்ணியம் மிகுந்ததனாலே உள்ளே வாசி வசப்பட்டது. வாசி வசப்பட்டதனாலே உள்ளே தசநாதம் கேட்டது. தசநாதம் தோன்றியபின் ஜோதி தோன்றியது, நரைதிரை மாறியது. யுகம் கோடானகோடி நொடிப்பொழுதாக வாழ்கின்ற வாய்ப்பு கிடைத்தது. வேதம் துதித்திட – வேதம் போற்றும்படியாக வாழ்க என்றார்.
                பூஜை செய்யாமல் புண்ணியம் பெருகும், உள்ளே தசநாதம் கேட்கும், பிறகு ஜோதி வெளிப்படும் என்று ஆசான் சொல்வார். சாதாரண மனிதனாக இருந்த இவன், வேதமெல்லாம் போற்றும்படியான அளவிற்கு நிலை உயர்ந்திருக்கிறான் என்பார்கள்.
     ஞானிகளை பூஜை செய்ததன் காரணமாக பாவம் நீங்கி புண்ணியம் பெருகும், அது கண் கொள்ளா ஜோதி தரிசனம் தரும், பிறகு அவன் வேதமெல்லாம் போற்றும் அளவிற்கு நிலை உயர்ந்தான் என்றும் சொல்வார்கள். நாம் ஞானிகளுடைய கருத்துகளை பரப்புகின்றோம். ஆசான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள், மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், மகான் நந்தீசர், மகான் திருமூலர், ஆசான் அகத்தீசர், ஆசான் சுப்பிரமணியர் போன்ற ஞானிகளெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் சற்றாகிலும் ஞானிகள் நாமத்தைப்பற்றி பேசும்போது, “ஒரு சொட்டாகிலும் தொட்டபேர், நல்லவர் நல்லவர் நாளும் நல்லவர்” என்பார்.
     எவ்வளவு குற்றம் செய்திருந்தாலும் சரி, எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் சரி, ஒருமுறை ஞானிகளின் நாமத்தை சொல்லிவிட்டால் நல்லனவாகி விடுகிறான். அப்போதே அவன் அசுர நிலையிலிருந்து தேவ நிலைக்கு வந்துவிடுகிறான். ஆக நாடெங்கும், ஊரெங்கும் இதை பரப்புதல் கொள்கை கோட்பாடாக இருக்க வேண்டும். மக்கள்பால் உள்ள கருணையின் காரணமாக நாம் இதை சொல்லத்தான் வேண்டும். சோர்வடையாமல் சொல்லத்தான் வேண்டும். அதற்காகத்தான் நம்மை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மகான் இராமலிங்கசுவாமிகளும் இதைத்தான் சொல்வார்.
    
அகத்தே கறுத்துப் புறத்து வெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
                                                – திருஅருட்பா ஆறாம் திருமுறை – கவி எண் 1273
                உலகமக்களுடைய அக இருள் நீங்கி ஒளி பெற வேண்டும், உலக மக்கள் இதயத்தில் அருள் பெற்று சிறப்பறிவு உண்டாக வேண்டும் என்பதற்காகத்தான் மகான் இராமலிங்கசுவாமிகள் வந்தார். அதனால் ஒளி பொருந்திய அறிவு உண்டாகும் என்று சொல்வார். இந்த உலகத்திலுள்ள மக்கள் உண்மைப்பொருள் அறியவே இறைவன் தன்னை வருவித்தான் என்பார்.
     பொருளாதாரத்திற்காக நாம் இங்கே வரவில்லை. நம் கூட்டம் அப்படி செய்யவே செய்யாது. நம்முடைய நோக்கம், உண்மைப்பொருளை உணர்தல். தலைமை தாங்குகின்றவர், சங்கத்தை நடத்திச் செல்கின்றவர் பொருளாதாரத்தை விரும்பாமல் நாட்டுக்கு அர்ப்பணம் செய்வதனாலே தொண்டர்களுக்கும் அந்த குணம்தான் தவிர வேறு சிந்தனை இருக்க முடியாது.
     நம் சங்கத்தார்கள் வினை நீக்கவும், வினையை வெல்லவும், தம்முள்ளே அருபெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு வணங்கவும், உண்மைப் பொருளை உணரவும் இருக்கிறார்கள்.
     நாங்கள் அன்பு வழியை சொல்வோம். சுத்த ஆன்மிகம் வரும்போது வெளிப்படும். சுத்த ஆன்மிகம் வெளிப்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் நம்மிடம் வந்தால்கூட நாம் இதைப்பற்றி சொல்லலாம். இல்லையென்றால் அது தேவையில்லை. நாம் நாட்டு மக்களுக்கு இதை பரப்புதல் வேண்டும், பசியாற்ற வேண்டும்.
     தலைவனை அறிவதற்கு ஒன்றே ஒன்று பக்திதான் தேவை. ஆசான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகளிடத்து பக்தி செலுத்த வேண்டும். பூம்புகார் பகுதியில் உள்ளவர்கள் மகான் பட்டினத்தார் மீது பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். அங்கு மகான் பட்டினத்தாரைப் பற்றி சொல்லலாம். எந்த ஞானிகளைப் பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம். எல்லோரும் ஒன்று தான். அவ்வளவு பேரும் ஒன்றுதான். மகான் இராமலிங்க சுவாமிகள் என்றால், மகான் இராமலிங்க சுவாமிகளைப் பற்றியும் சொல்லலாம். மகான் தாயுமானசுவாமிகளைப் பற்றியும் சொல்லலாம். நால்வராகிய மகான் அப்பர், மகான் சுந்தரர், மகான் திருஞானசம்பந்தர், மகான் மாணிக்கவாசகர் பெருமைகளை சொல்லலாம். எப்போதுமே மக்கள் உண்மைப்பொருளை அறிய, மக்களை தூண்ட வேண்டும்.
     மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் வஞ்சனை, பிரச்சனைகள், கொடுமைகள் இல்லாது நாடு இருக்க வேண்டுமென்று சொன்னால் நாம் கூட்டுவாழிபாடு நடத்த வேண்டும். வழிபாடு நடத்தி நாட்டு மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அதற்காகத்தான் நாம் வந்திருக்கிறோம். இன்றைய தினம் பூம்புகார் அன்பர்களும், துறையூர் அன்பர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஒரு தத்துவம் பேசியிருக்கிறோம். எந்த தத்துவமும் தலைவன் ஆசி இருந்தால்தான் புரியும். இந்த இடத்திற்கு வந்திருப்பதனால் இதை பேசியிருக்கிறோம். எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை நமது அன்பர்களும், நாட்டு மக்களும் அறிய வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கிறோம். இதற்கு, ஆசான் துணை உங்களுக்கு இருக்க வேண்டும்.
     ஐயா! தொடர் பூஜை என்றால் என்ன? என்று அன்பர்கள் கேட்டார்கள். தொடர் பூஜை என்பது காலையில் ஒரு ஐந்து நிமிடம் ஓம் அகத்தீசாய நம என்று சொல்லலாம்.
     ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்றும் சொல்லலாம்.
     காலையில் ஒரு ஐந்து நிமிடம், மாலையில் ஒரு ஐந்து நிமிடம், இரவு நடு ஜாமத்தில் பூஜை செய்யலாம். இதுதான் தொடர் பூஜை. பூஜை செய்ய வாய்ப்பில்லை என்று சொன்னால், நாமத்தை சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். எப்படியோ ஒரு பன்னிரண்டு முறை சொல்ல வேண்டும். வேலைக்குப் போகிறோம் அப்போது நாமத்தை சொல்லிக்கொண்டே போகலாம். “அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா” என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாங்கள் வியாபாரத்திற்குப் போகும்போது, ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லிக் கொண்டே போவோம். மகான் பட்டினத்தார் நாமத்தை சொல்வோம். மகான் பட்டினத்தார் நாமத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டு போவேன். வெளியூர் போகும்போதெல்லாம், ஆகாயத்தைப் பார்த்து ஞானிகள் நாமத்தை சொல்லிக் கொண்டே போவோம். உலக மக்களை பார்க்க மாட்டோம். வெட்டவெளி நோக்கி ஆகாயத்தை பார்த்துக் கொண்டே போவோம். இதுவும் ஒரு பக்திதான். தொடர் பூஜை. நாமும் பூஜை செய்யலாம். ஞானிகள் பெருமையை பேசுவதும் ஒரு பூஜைதான். மகான் திருமூலதேவர் சொல்வார்,
                சிந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
                சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
                வந்திப் பதுநந்தி நாமம் என் வாய்மையாற்
                புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
                                                – திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 141
                ஞானிகளை புகழ்ந்து பேசுவதே பூஜை என்று சொல்லிவிட்டார். நாம் என்ன செய்ய வேண்டும்? காலையில் எழும்போதே “ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம், ஓம் திருமூல தேவாய நம” என்று சொல்ல வேண்டும். இங்கு சந்திக்கிறோம் என்பது எதுகைக்காக வந்தது.
      சந்திப்பது நந்தி தன் திருத்தாளிணை – ஆசானுடைய திருவடியை நினைத்து தினமும் ஆசானின் நாமத்தை சொல்லும்போது சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பொருள்.
     சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி – திருமந்திரத்தை எடுத்து படிக்கிறோம். நமக்கு ஆசான் பெருமை புரியாது. என்ன சொல்லியிருப்பார் இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று நமக்கு புரியாது. மகான் திருமூலதேவரையே, “எனக்கு புரியவில்லையப்பா!” என்றால் சரி, “நான் அருள் செய்கிறேன்” என்பார் ஆசான் திருமூலர். ஆக ஆசானைப் பற்றி சிந்திக்கிறான், வேறு சிந்தனை இல்லை.
     சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி – செய்ய என்றால் செவ்விய திருமேனி. மேனி என்று முற்றுப் பெற்றால்தான் சொல்வார். ஞானிகளுடைய தேகம், குற்றமற்ற தேகம், சூட்சும தேகம். அவர்கள் ஒளி உடம்பு உள்ளவர்கள். அதனால் அவர்களுடைய உடம்பை மேனியென்றும், ஞானிகளின் உடம்பை திருமேனி என்றும் சொல்வார்கள்.
     சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி – நூலை படிக்கிறான். அதே சிந்தனையாக இருக்கிறான். வேறு சிந்தனை இல்லை என்பது இந்த வரியின் சாரம்.
     வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் – வந்திப்பது என்பது புகழ்தல் “மகான் திருமூலர் பெரிய மகான்”, “மகான் இராமலிங்கசுவாமிகள் பெரிய மகான்” “மகான் தாயுமானசுவாமிகள் பெரிய மகான், மகான் அகத்தீசர் பெரிய மகான்” என்று புகழ்ந்து பேச வேண்டும். வந்தித்தால் என்பது புகழ்தல். நிந்திப்பது என்பது இகழ்தல்.
     வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் – அப்படி புகழ்ந்து பேசுதல் என்பது, பிறரது பொருளாதாரத்தைக் கவர்வதற்காக இருக்கக் கூடாது. தன நிலையை உயர்த்துவதற்காக, நம்மை பிறர் மதிக்க வேண்டுமென்பதற்காக இருக்கக் கூடாது. மதிக்க வேண்டும்தான் குற்றமில்லை. நீங்கள் ஒன்றும் மதிக்க வேண்டாம். நாம் தினம் ஞானிகளின் பெருமையை பேச பேச தானே வந்துவிடும், புகழ் தானே வரும், தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பெரியோர்களின் பெருமையை பேசும்போது, அது பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்தால் என் பெயரை சொல்லி ஏன் காசு வாங்குகிறாய்” என்று தலைவன் கேட்பான்.
     வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் – உண்மையாகவே ஞானிகளை வணங்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், “எனக்கு அந்த அறிவு இல்லையப்பா. உன்னுடைய பெருமையை பேச நினைக்கிறான். அதற்குரிய அறிவைத் தர வேண்டும். நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆசான் அருள் செய்வார். நாங்கள் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும். தொடர் பூஜை என்பது இதுதான்.
     வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் – “நான் உன்னைப் புகழ்ந்து பேசுகிறேன். அதில் வஞ்சனை இருக்கக் கூடாது. உங்கள் பெருமைகளை பொருளாதாரத்திற்காக பேசுகின்ற நிலைக்கு நான் வந்து விடக்கூடாது. அதுபோன்ற ஒரு எண்ணம் எனக்கு வரக்கூடாது. அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும். பொருளை நீ கொடுத்துவிடு. ஏன் நான் மற்றவர்களிடம் சென்று உன் பெருமையை பேசி காசு வாங்க வேண்டும்? பொருளாதாரத்தை நான் விரும்பவில்லை. ஆன்மீகத்தை வியாபாரமாக்க நான் விரும்பவில்லை. நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும். இதுதான் உபதேசம். தொடர் பூஜை இதுதான். உண்மையாகவே இதயத்தில் சிறிது, கடுகளவு குற்றம் இருக்கலாம். ஆரம்பத்தில் அப்படி இருக்கும். தலைவன் ஆசி கொண்டே நீக்க வேண்டும் என்பார்.
     வந்திப் பதுநந்தி நாமம் என் வாய்மையாற்
                புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
     என்றார். ஆக சந்திக்கிறான், ஞானியை சிந்திக்கிறான், உண்மையை தூய மனதோடு புகழ்கிறான். அப்படி வணங்கியதால் இயல்பாகவே உடம்போடு தங்கிவிட்டான். என் அறிவோடு கலந்து விட்டான் என்றார் மகான் திருமூலதேவர். இதுதான் தொடர்பூஜையின் இயல்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 362
Total Visit : 209096

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version