எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தர வல்லதும், முடிவினில் மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றுத்தர வல்லதானதும், ஜீவதயவின் அடிப்படையிலானதும்,தானமும் தவமும் கொண்டதான ஆறுமுக அரங்கமகாதேசிகரின் ஞானவழிகளை எல்லோரும் தவறாது பின்பற்றி வரவர பின்பற்றுகின்றோர் மனச்சலனங்களை தருகின்ற வினைகளை வென்று சர்வபலத்தை பெறுவார்கள்.
உத்தம மகா ஞானயோகி ஆறுமுக அரங்கமகாதேசிகரின் திருவடிகளை தொடர்ந்து வணங்கி வரவர,வருகின்றோரெல்லாம் துன்பம் நீங்கி மேல்நிலை பெறுவார்களப்பா. மரணமிலாப் பெருவாழ்வான, நிலையான, நித்தியமான, சத்தியமான வாழ்வை பெற என்றும் மாறாத தன்மையை அளிக்கவல்ல அரங்கமகாதேசிகரின் ஞானவழி கொள்கைகளை பிழையின்றி கடைப்பிடித்து வரவர பிரச்சனைகளற்ற வாழ்வும், முழுமையான காப்பையும் எல்லா வகையிலும் குற்றமற்ற வகையிலே உயர் ஞான வாழ்வையும் பெற்று புகழ்பெற்ற தர்மவான்களாக ஆகி மாமாயை சூழ் கலியுக மக்களெல்லாம் அரங்கனருளாலே ஞானவான்களாக ஆகி ஞானலோகம் தன்னிலே வல்லமையோடு இடம் பெறுவார்களப்பா.
ஆறுமுக அரங்கமகாதேசிகர் தொடர்கின்ற அறம் தரும சேவைகளிலே அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் உதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும் அரங்கனின் தானதரும பணிகளுக்கு உதவியாக சேவைகள் செய்ய செய்ய, உலக மாற்றம் விரைந்து இனிதே வந்து அரங்கன் வழியிலே உலகம் சென்று உலகமெலாம் சத்திய தருமஉலகமாகமாறிநிற்பதையும்,தொண்டு செய்வோரெல்லாம் தேசநலம் காக்கும் மக்களாகி தெய்வீக சக்திகள் துணைபட இவ்வுலகமே ஞான உலக ஆட்சி நடந்திட உலகினில் முருகப்பெருமான் தயவினாலே அற்புதமாய் நிகழ்ந்திடுமப்பா இனிவரும் காலமெல்லாம் எனக் கூறுகிறார் தமது தவ சூட்சும நூல் மூலம் மகான் புகழ்த்துணை நாயனார்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மக்களை வழிநடத்துவோர் விஷ ஜந்துக்களாலும், இயற்கை சீற்றங்களினாலும், விபத்துகளாலும், வேறு வேறு விதமான ஆபத்துகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்களை வழிநடத்தும் அவர்கள், முதலில் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சைவத்தை கடைப்பிடித்தாலன்றி இயற்கை சீற்றங்களிலிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும், விபத்துகளிலிருந்தும் வரும் ஞானயுகத்தினில் தப்பிக்க இயலாது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
சைவத் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தாலன்றி எது உண்மை? எது பொய்? என்று புரியாது. மக்களை வழிநடத்த உண்மை அறிவே வேண்டும். ஆதலினாலே சைவத்தலைவன் முருகப்பெருமானை வணங்கிட உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். நாட்டினை வளமுள்ளதாக மாற்றிட முதலில் அதிகாரத்தில் உள்ளோரும், பதவியில் உள்ளோரும், நாட்டை வழிநடத்தும் அதிகாரிகளும், மக்களை காக்கின்ற பணிகளிலே, வழிநடத்தும் பணிகளிலே என நாட்டில் உள்ள அத்துணை அதிகாரிகளும் பாவசுமையற்றவராய் இருந்திடல் வேண்டும். குறைந்தபட்சம் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதவராகவாவது இருந்திடல் வேண்டும். இல்லையெனில் நாட்டினை, மக்களை இயற்கையிடமிருந்து காப்பது என்பது கடினமாகும் என்பதை உணரலாம்.
இன்பமாம் முருகனின் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துணையாம் இணையடி.
தஞ்சமாம் முருகனின் தாளினை போற்றிட
வஞ்சகம் இல்லை வாழ்வும் செம்மையே