03.01.1999 அன்று எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற தலைப்பில் பெருமாள்மலை அடிவாரத்தில் மகான் அரங்கர் அருளிய அருளுரை

 

பாரப்பா பிர்மனிட்ட லபியைத் தட்டிப்
பாழிலே தள்ளிவிடுங் காமங்கூறு
ஆரப்பா யிதையறிவார் கற்பமே தென்பார்
அசடனப்பா உரைக்கின்ற வார்த்தையாகுஞ்
சீரப்பா துறவியிலே சென்றால் கேளு
சித்திக்கும் பொதிகையப்பா ரிஷிகள்கோடி
பாரப்பா மிக்கால மடுத்தோர்கள் தான்
பதினாயிரம் வரைக்கும் துகையுன்டாமே.
    அகத்தியர் வகார சூத்திரம் 200 – பொதிகையில் சித்தர்கள் – கவி எண் 110
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்.
அன்பர்கள் அவர்களுடைய அனுபவத்தை கூறினார்கள். தாங்கள் அடைந்த நன்மைகளையும் சொன்னார்கள். இங்கே நாம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்தார் என்றும் 2800 பேருக்குமேல் இலவச திருமணம் செய்து வைத்தார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இதெல்லாம் தனி நபரால் செய்ய முடியாது. கடவுளே பொருளைக் கொடுத்தாலும் தனியாக யாராலும் செய்ய முடியாது.
     நாம் இங்கிருக்கக்கூடிய மக்களையும் அன்பர்களையும் பயன்படுத்திக் கொண்டோம். அவர்களுடைய அயராத உழைப்புதான் இவ்வளவு பெரிய காரியங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடிந்தது. நான் ஆசான் அகத்தீசனை வணங்கிக் கேட்டுக்கொண்டேன் எங்களுக்கு செல்வநிலை பெருகவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
     ஆசான் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்தது மட்டுமல்லாமல் தூய்மையான உயர்ந்த தொண்டர்களையும் கொடுத்தார்கள். இங்கு பதினைந்து இருபது வருடமாக தொண்டு செய்த அந்த அன்பர்கள் திருவடியை வணங்குகிறேன்.
     ஏனய்யா தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன்? அறப்பணி செய்ய வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான கரங்கள் இருந்தால்தான் செய்ய முடியும். என்னிடம் இருப்பது இரு கரங்கள்தான். அதனால்தான் என்னைவிட அவர்கள் உயர்ந்தவர்கள்.
     ஆகவே அவர்கள் திருவடியை நான் வணங்குவேன் என்று சொன்னேன். நான் சொல்லிய இந்த வார்த்தையெல்லாம் மிக உயர்ந்த வார்த்தை. இங்குள்ள தொண்டர்கள் எல்லாம் பெருமைக்குரியவர்கள். இது பெருமைக்குரிய சங்கம். இந்த சங்கம் தொண்டர்களை மதிக்கக்கூடிய சங்கம். அதனால்தான் இந்த வார்த்தையை சொல்கிறோம்.
     ஆசான், தொண்டர்கள் திருவடியை வணங்குவது சாதாரண விசயமில்லை. அதுதான் பண்பின் உச்சக்கட்டம். பண்புள்ள மக்கள்தான் அப்படி பேசமுடியும். இந்த பாரம்பரியமே அப்படித்தான் இருக்கும்.
     ஆசான் அகத்தீசர் வகார சூத்திரத்தில் 110வது கவியில் இங்கு நம்முடன் இருப்பவர்கள் பத்தாயிரம் பேர் கடவுள் ஆவார்கள் என்று சொல்வார்கள்.
பாரப்பா பிர்மனிட்ட லபியைத் தட்டிப்
பாழிலே தள்ளிவிடுங் காமங்கூறு
ஆரப்பா யிதையறிவார் கற்பமே தென்பார்
அசடனப்பா உரைக்கின்ற வார்த்தையாகுஞ்
சீரப்பா துறவியிலே சென்றால் கேளு
சித்திக்கும் பொதிகையப்பா ரிஷிகள்கோடி
பாரப்பா மிக்கால மடுத்தோர்கள் தான்
பதினாயிரம் வரைக்கும் துகையுன்டாமே.
    அகத்தியர் வகார சூத்திரம் 200 – பொதிகையில் சித்தர்கள் – கவி எண் 110
ஆக பத்தாயிரம் பேர் என்பது சின்ன விசயமில்லை. இங்கே நம் தமிழகத்தில் துறையூரிலும் மற்ற இடத்திலும் ஒரு ஆயிரம் பேர் நமது அன்பர்கள் இருப்பார்கள். மலேசியாவில் எப்படியும் ஒரு ஆயிரம் பேர் நமது அன்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசான் அகத்தீசர் பத்தாயிரம் பேர் ஞானியாவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியாவதற்கு நாம் எந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும்?
ஆக அதற்குத்தான் நாம் தெளிவான பாதையை காட்டுகிறோம். ஆசான் அகத்தீசரை வணங்குகிறோம். துறவு மேற்கொள்கிறார்கள். இதைத்தான் செய்ய வேண்டும். அப்படியென்றால் துறவு என்பது என்ன? எப்படி துறைவு மேற்கொள்வது?
மகான் பட்டினத்தார், மகான் மாணிக்கவாசகர், மகான் திருவள்ளுவப்பெருமான் போன்ற ஞானிகள் இல்லறத்தில் இருந்துதான் ஞானியானார்கள். ஆக எல்லோரும் இல்லறத்தில் இருந்திருக்கிறார்கள்.
இல்லறத்தில் இருந்து கொண்டு துறவை எப்படி மேற்கொள்வது? இல்லறத்தில் இருந்தாலும் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களெல்லாம் இல்லறத்தில் இருந்தாலும் ஆசான் அகத்தீசரை மானசீகமாக வணங்கினார்கள். எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அதற்குரிய அறிவை நீர் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆசான் அகத்தீசர் துறவுக்கு வேண்டிய அறிவை கொடுப்பார். அறிவை மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள்.
ஒரு இல்லறத்தானுக்கு நோயில்லாத உடம்பு, நோயில்லாத மனைவி, நோயில்லாத பிள்ளைகள், நல்ல சுற்றுப்புற சூழ்நிலை, எதுவும் இல்லை என்ற பேச்சே இருக்கக்கூடாது. இதற்கெல்லாம் ஞானிகள் பொருளுதவி செய்யவேண்டும். ஆசான் பொருளுதவி செய்வார்.
ஆசான் அகத்தீசரை வணங்கும்போது என் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும் என்று கேட்க வேண்டும். இப்படி அவன் கேட்கிறான். இப்படித்தான் இல்லறத்தார்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆக இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் வைராக்கியமும் வேண்டுமென்று கேட்கவேண்டும்.
     ஆக இப்படிப்பட்ட வேண்டுகோள் ஒரு உயர்ந்த வேண்டுகோள். இப்படி ஆசான் அகத்தீசரிடம் கேட்க, கேட்க, கேட்க தேவையான பொருளுதவியும் செய்து அருளும் செய்து உடல் ஆரோக்கியமும் தந்து எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவை தந்து வைராக்கியம் தந்து அவனை உயர்ந்த்தினார்கள்.
     நம் குடிலில் இருக்கின்ற அன்பர்கள் எல்லாம் தினமும் பூஜை செய்கிறார்கள். அவர்கள் இல்லறத்தில் இருப்பார்கள். இல்லறத்தில் இருந்தாலும் அவர்கள் நினைவு முழுவதும் தலைவன் மீது இருக்கும். இந்த துறைக்கு தலைவன் ஆசான் அகத்தீசர்தான்.
     இப்பொழுது உடன் இருக்கிற மனைவி, மக்கள், சுற்றத்தார் எல்லாம் காலப்போக்கில் போய்விடுவார்கள். ஆக அவர்கள் என்ன செய்வார்கள்? நான் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டுமென்று நினைக்கவேண்டும் அதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும்? சார்ந்தும், சாராமலும் இருப்பார்கள். பத்தாயிரம் பேர் ஞானியாவார்கள் என்று ஆசான் அகத்தீசர் சொல்லியிருக்கிறார்.
ஆக இந்த பத்தாயிரம் பேரும் திருவோடு எடுத்துக்கொண்டு கிளம்புவதா? என்று கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆக அதற்குப்பதில் சார்ந்திருந்தே சாராமல் இருக்கவேண்டும்.
பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தாதிருப்பர்
மனைவி, மக்களோடு இருப்பார்கள். ஆனால் சிந்தனை மட்டும் உயர்ந்திருக்கும். ஆனால் மனைவியையும், பிள்ளைகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள். மனைவி கணவனைப் பார்த்து இவன் நூறு வருடத்திற்கு இருப்பான் என்று நினைக்கமுடியாது. வாழமுடியும் அல்லது இல்லாமலும் போகமுடியும். அது ஒன்றும் குற்றமில்லை. இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆக மனைவி என்ன செய்ய வேண்டும்? கணவனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கு? கிடைப்பதற்கரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பன்னிரண்டு வருடம், பதினான்கு வருடம், இருபது வருடம் இருக்கலாம். தினம் தினம் அந்த அம்மையார் பூஜை செய்திருக்கிறார்கள். எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
ஆனால் இப்படி அந்த அம்மையார் பூஜை செய்யும்போது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும். அந்த பாதுகாப்பை கணவனை ஒரு படிக்கட்டாக வைத்து அவன் துணை கொண்டே ஜென்மத்தைக் கடைத்தேற்ற அந்த அம்மையார் நினைக்கவேண்டும். எதிலும் சார்ந்தும், சாராமலும் இருக்கவேண்டும்.
மகான் பட்டினத்தார் ஒரு வியாபாரி. ஆனால் அவன் ஒரு ஞானி. பெரிய வியாபாரம் செய்கிறார். அதுவும் கப்பல் வியாபாரம் செய்கிறார். அவ்வளவு பெரிய வியாபாரி ஞானியா? ஆமாம் அவர்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
பத்தாயிரம் பேர் ஞானியாக வேண்டும். இங்கேயே உழன்று கொண்டு இருக்கக்கூடாது. இதெல்லாம் காலப்போக்கில் மாறிவிடும். பெண்கள் தங்கள் கணவன் துணை கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும். அவரவர்கள் தான் ஞானியாக முடியும்.
அவரவர்களுடைய வினைக்கு தகுந்தவாறு தான் நடக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து ஞானியாக முடியாது. மோட்சலாபம் பெறமுடியாது. அவரவருடைய முயற்சிக்கு தக்கவாறு பலன் கிடைக்கும். அப்ப அவர்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்? இருக்கிற சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஞானியர்களை பூஜை செய்யவேண்டும்.
அதற்கு என்ன செய்யவேண்டும்? ஆசான் அகத்தீசரை வணங்கி, ஓம் அகத்தீசாய நம என்று ஐந்து நிமிடம் நாமஜெபம் சொல்லவேண்டும். பிறகு என்ன கேட்கவேண்டும்? நான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். ஞானியாக வேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அப்படியென்று அந்த அம்மையார் கேட்கவேண்டும்.
மேலும் என்ன கேட்கவேண்டும்? நல்ல வீடு வேண்டும் என்றும், நல்ல உணவு வேண்டும் என்றும், நல்ல சுற்றுப்புற சூழ்நிலை வேண்டும் என்றும் கேட்கவேண்டும். இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தால் அருள் செய்வார்கள்.
புலால் உணவு சாப்பிடக்கூடாது. ஒரு உயிரைக் கொன்று சாப்பிடுவது நல்லது அல்ல. அதைக்கடவுளும் ஏற்றுக் கொள்ளமாட்டான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புவார்கள் ஆடு, கோழி அறுத்து சாப்பிடக்கூடாது.
ஆக கணவுனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்? மனைவி கணவனை புரிந்து கொண்டு 10, 12 வருடம் அப்படியே மெதுவாக நகர்த்திக் கொண்டு செல்லவேண்டும். அதுபோல கணவனும் தன்னுடைய மனைவி பிள்ளைகளை பயன்படுத்திக் கொண்டு செல்லவேண்டும்.
இப்படி தொடர்ந்து சென்று தினமும் பூஜை செய்வதை மறக்கக்கூடாது. பூஜை செய்ய மறந்தால் எடுத்துக் கொண்ட இலட்சியம் தடைப்பட்டு போகும். ஒவ்வொரு நாளும் தடையில்லாமல் பூஜை செய்ய வேண்டும்.
ஆசான் திருவள்ளுவப்பெருமானும்,
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் என்பார். ஏனென்றால் மகான் வள்ளுவப்பெருமான் ஞானியல்லவா?
 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
 வாழ்நாள் வழியடைக்கும் கல்.
§  திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 38
மீண்டும் அவன் ஒரு கருப்பைக்குள் போகமுடியாது. வழியடைத்துக்கொள்ளும். இது மிகப்பெரிய ஒரு வார்த்தை. வழியடைக்கும் என்றால் புருவமத்தியில் காற்று அடங்கிவிட்டது என்று அர்த்தம். எனவே தடையில்லாமல் பூஜை செய்யவேண்டும்.
எல்லாவற்றிலும் கவனமாக இருக்கவேண்டும், வியாபாரம் செய்யவேண்டும், உத்யோகம் பார்க்கவேண்டும். மனைவி மக்களோடு இருக்கவேண்டும், விருந்தை உபசரிக்கவேண்டும், தாய், தந்தைக்கு செய்யவேண்டிய கடமையை செய்யவேண்டும். ஆனாலும் மனதில் மட்டும் இந்த கூட்டமெல்லாம் நிலையில்லாதது என்றும், நாம் நிலையான ஒன்றை நாடவேண்டுமென்ற நினைவு மட்டும் இருக்கவேண்டும். அப்படியிருந்தால்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியும். இதற்கு ஞானிகள் என்ன செய்கிறார்கள்? தவம் செய்கிறார்கள்.
ஞானிகள் நாமத்தை சொல்கிறோம், அதுதான் தவம். தவசிகள் திருவடியைப் பற்றுகிறோம். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர் இவர்களின் திருவடியைப் பற்றுகிறோம். அவர்கள் திருவடியைப் பற்றி பூஜை செய்தால் அதுவே தவம்.
அது காட்டிற்கு போகவேண்டியது இல்லையா? அலையவேண்டியது இல்லையா? அல்லல்பட வேண்டியது இல்லையா? இது எல்லாம் தேவையில்லை. உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஞானிகள் நாமத்தை சொல்கிறோம், அகத்தீஸ்வரா அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் ஐயா, என்று கேட்பது தவம். ஞானிகளின் திருவடியைப் பற்றி நாமத்தை சொல்லி வீழ்ந்து வணங்குவது தவமாகும். ஞானிகள் எல்லாம் மிகப்பெரிய தவசிகள்.
ஆக வேறு எந்த சடங்கும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற பயன்படாது. ஊர் ஊராக சுற்றுவது அங்கே சென்று மொட்டையடித்துக் கொள்வது, இங்கே சென்று உண்டியலில் போடுவது, இதுமாதிரி கதையெல்லாம் எதற்கும் ஆகாது.
என்ன காரணம்? நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களெல்லாம் ஆசானை பிடித்துக் கொள்ளுங்கள். நாங்கள் இந்தளவிற்கு வந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் எங்கேயும் சென்று மொட்டையடித்துக் கொள்ளவில்லை. எங்கேயும் சென்று உண்டியலில் காசு போடவில்லை.
ஆக எங்கேயும் நடந்து போகவில்லை, பட்டினி கிடைக்கவில்லை, தரையில் படுக்கவில்லை. ஆக எந்த சடங்குகளுக்கும் அகப்படாத கொள்கை இது. ஞானிகளை வணங்குவதற்கு எந்த தடையும் இல்லை. வெளியில் தெரியாது வணங்க வேண்டும்.
மனித வர்க்கம் எப்படியிருக்கிறது? விரைவாக முன்னேற வேண்டுமென்று நினைப்பான். எப்படி ஐயா முன்னேறுவது? இந்த உடம்பு தான் காமதேகமாக இருக்கும், தொட்டது துலங்கவில்லை, நீ மனம் அமைதியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாய். மனைவிக்கு நோய், உனக்கு நோய், பிள்ளைகளுக்கு பிரச்சனையிலிருகிறது. ஆக இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும், இப்படியெல்லாம் பிரச்சனைகள் இருக்கும்.
சடங்குகளுக்கு எல்லாம் அகப்படாத ஒன்று உண்டு. அது எது?
தியானம்.
தியானத்தை செய்ய செய்யத்தான் ஆரவாரங்கள் அடங்கும். ஆரவாரம் பேய்கள் அடங்கும். ஆக மனதினில் சாந்தம் இருக்கவேண்டும். மனச்சாந்தம் எப்பொழுது வரும்? தலைவன் ஆசியில்லாமல் மனச்சாந்தம் வராது. இல்லையென்றால் விரைவாக ஆரவாரம் செய்து கொண்டிருப்பான். ஆக ஒரு முறையை நாங்கள் சொல்கிறோம். உண்மை இப்படித்தான் இருக்கு. சரி இதை ஏற்றுக்கொள்ளுமா மனது? ஏற்றுக்கொள்ளாது.
சிலபேர் வருவான், பட்டினி கிடப்பான், ஏனய்யா பட்டினி கிடக்கின்றாய்? நான் கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடக்கின்றேன் என்பான். இப்படியிருந்தால் நீ அநியாயமாக இறந்து விடுவாய். கடவுளை அடைய உடம்பு நல்ல திடமாக இருக்கவேண்டும். உடம்பை காப்பாற்றிக் கொள்ள கற்றுக் கொண்டவன் ஆவான். உடம்பை இழந்தவன் கடவுளை அடையமாட்டான். அவன் இஷ்டத்துக்கு பட்டினி கிடப்பான்.
நாங்களும் வியாழக்கிழமை விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறோம். வியாழக்கிழமை காலையில் இரண்டு பழம் கால் லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளலாம். காலையில் விரதம் இருக்கவேண்டும். பசி உடம்பிற்கு நல்லது.
ஆக வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பது தலைவனின் ஆசியை பெறுவதற்குதான். ஆக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. புலால் உணவை மறுக்க வேண்டும். பட்டினி கிடக்காமல் இருக்க வேண்டும்.
உடம்பை அறிந்து கொள்கிறவன் கடவுள் ஆவான். உடம்பை இழந்தவன் கடவுள் ஆக முடியாது. ஆக இதையெல்லாம் புரிந்து கொண்டு இல்லறத்தில் வாழவேண்டும். இதையெல்லாம் புரிந்துகொண்டு வாழ்ந்தால் நிச்சயம் அவர்கள் கடவுள் ஆவார்கள், ஞானியாவார்கள்.
அடுத்து நாம் பேசுவது அன்றாட வாழ்க்கை முறை. வெளியில் தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும். இது போன்று பக்குவம் வருவதற்கு ஞானிகள் ஆசி வேண்டும். ஆனால் ஆர்வம் உடனே வந்துவிடும். உடனே காவி கட்டிக்கொள்ள வேண்டும், தாடி வைத்துக் கொள்ளவேண்டும், புலித்தோல் போட்டுக்கொள்ள வேண்டும், யோகத்தண்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று செயல்படுவான்.
அவனைப் பார்த்து ஞானிகள் எதுக்கு ஐயா இப்படி? நீ என்ன நரகத்திற்கு போகிறாயா? எதற்கு புலித்தோல்? ஏன் காவி? எதற்கு ஜடாமுடி வளர்க்கிறாய்? நீ நரகத்திற்கு போகப்போகிறாய் என்பார்கள்.
இப்படிப்பட்ட ஆரவாரத்திற்கு தலைவன் அகப்படமாட்டான். உன் புலித்தோல், யோகத்தண்டு, இந்த தாடி, இந்த காவி இதெல்லாம் அவனுக்கு தெரியும். இது மாதிரி எவ்வளவோ பார்த்திருப்பான். இதற்கெல்லாம் அவன் அகப்படமாட்டான்.
நீ கடவுள் ஆவதற்கு இந்த கோலமெல்லாம் செல்லாது. ஒரே ஒரு முறை ஆசானைப் பார்த்து நீங்கள் எல்லாம் பெரியவர்கள் ஐயா, நான் பாவி, நீர்தான் இரட்சிக்கவேண்டும். அடியேன் உன் திருவடியைப் பற்ற வாய்ப்பு தரவேண்டும் நீர்தான் என்னை இரட்சிக்கவேண்டும் என்று ஒரே ஒரு வார்த்தை கேட்டால் முன்னேறலாம்.
இதை விட்டுவிட்டு தாடி வைத்துக்கொண்டு ஆரவாரத்தில் இருந்தால் தலைவன் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுவான். ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் பத்தாயிரம் பேர் தேர்வதற்குரிய முறைகளை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆக தவம் செய்ய வேண்டும். அதுதான் உங்களுக்கு துணையாக இருக்கும். சரி ஐயா, இந்த ஜென்மத்துல முடியல, இளம் வயதாக இருந்தால் பரவாயில்லை, எனக்கு அறுபது வயதாகிறது. இனிமேல் நான் என்ன செய்வது? அதற்கு மகான் பட்டினத்தார் சொல்வார். அவர் முதுபெரும் ஞானி, அவரே சொல்வார், நீ கொஞ்சமாக கடுகளவு தவம் செய்தால் போதும் உனக்கு துணையாக இருப்பேன் என்பார்.
மகான் பட்டினத்தார், மகான் திருமூலதேவர் போன்ற மகான்களை, ஞானிகளை வணங்கி எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று அறுபது வயதிலேயும் கேட்கலாம். அப்படி வணங்கி கேட்டால் அந்த கேள்வி தலைவனுக்கு தெரியும்.
இந்த உலகத்தில் யார் எந்த மூலையில் மகான் பட்டினத்தார் என்று சொன்னாலும் சரி, மகான் பத்ரகிரியார் என்று சொன்னாலும் சரி, மகான் அருணகிரிநாதர் என்று சொன்னாலும் சரி ஞானிகள் எல்லோருக்கும் தெரியும். ஆக ஒருவன் ஒரு நாளில் ஒரு முறையாவது அகத்தீசா என்று ஆசானின் நாமத்தை சொல்லிவிட்டால் அப்பவே அவன் தேறிவிடுவான் என்று அர்த்தம். மகான் பட்டினத்தார் இந்த உலகத்தில் இயல்பை,
மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயான மட்டேவழிக் கேதுதுணை
தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந்
தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே
·         மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 12
மனைவி, மக்கள், தான் சேகரித்த பொருள், வீடு போன்றவை வீட்டு வாயிலோடு முடிந்துவிடும். செல்வம் இருக்கும், கல்வி இருக்கும், நன்றாக நடமாடிக் கொண்டிருப்பான் இவ்வளவு இருக்கும்போது அவன் மனிதனாக இருப்பான், அவனை எல்லோரும் பாராட்டுவார்கள்.
ஆனால், அவன் இறந்த பிறகு அவனைப் பிணம் என்று சொல்லிவிடுவார்கள். இதை ஏன் நாங்கள் இப்பொழுது சொல்கிறோம் என்றால், ஆண்களும், பெண்களுமாக பத்தாயிரம் பேர் கடைத்தேறவேண்டும் அதற்காக சொல்லிக்கொண்டிருக்கிறோம். மனிதனுடைய நிலையாமையைப் பற்றி பொது இடத்தில் பேசக்கூடாது. இப்பொழுது பேசவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் பேசுகிறோம். இப்பொழுது ஞானசித்தர் காலம் வந்துவிட்டது.
மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயில்மட்டே இனமான சுற்றம் மயான மட்டேவழிக் கேதுதுணை – சுற்றத்தார்கள் எல்லாம் சுடுகாட்டோடு நின்றுவிடுவார்கள்.
வழிக்கேது துணை?
தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந்
தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே – தினை என்பது சிறிய தானியம். எள்ளும் அப்படியே. ஆக இந்தளவு முன்பு செய்த தவம் வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அகத்தீசா எனக்கு ஞானம் சித்திக்கவேண்டும் என்று ஒருமுறை கேட்டால் போதும்.
அந்த கேள்வியே பல ஜென்மங்களுக்கு துணையாக இருக்கும். அப்படி ஆசானிடம் கேட்ட வேண்டுகோள் எங்கே போய் சேர்க்கும்? இனி பிறவாத தன்மை என்ற எல்லைக்கு கொண்டு போய் சேர்க்கும். பிறவாத தன்மையடைவது என்பது சாதாரண விசயமில்லை. ஆனாலும் ரொம்ப இலகுதான் ஐயா.
     இதற்கு யார் ஆசி இருக்க வேண்டும்? ஞானிகள் ஆசி இருக்கவேண்டும். நாம் பிறவாமல் இருக்கவேண்டும். நம்மை பிறப்பிப்பது எது? இயற்கையா? செயற்கையா?
      ஆசை கொண்டு நம்மை ஆட்டுதல் யாரடி
      அதை அக்கினி நீர் மகிமையே.
இந்த உடம்பை நம்மை தோற்றுவித்த இயற்கை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உடம்பை தோற்றுவித்தது மட்டுமல்லாமல் அதே இயற்கை இந்த உடம்போடு சேர்ந்தே இருக்கிறது, அதை வெல்ல வேண்டும். அதை வென்றால் அவன் இனி சாகமாட்டான். அதற்கு இந்த உடம்பைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.  உடம்பைப் பற்றி அறிவது சின்ன விசயமில்லை. அதை எளிது என்று நினைத்துவிடாதீர்கள். நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், அவர் சொன்னது நியாயம்தான் என்று சொல்வீர்கள்.
ஆனால் இந்த இடத்தை விட்டு வெளியில் போனவுடன் மாறிவிடும். ஏன் இப்படி ஒரு பலகீனம்? ஆக அதுதான் இயற்கை. இப்படி ஒரு பலகீனத்தை இயற்கை உண்டு பண்ணும். நாம் என்ன செய்யவேண்டும்? சித்தர்கள் போற்றித்தொகுப்பு என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் 131 மகான்களைப் பற்றி சொல்லியிருக்கிறோம். அதைப் படிக்கவேண்டும். அந்த சித்தர்கள் போற்றித்தொகுப்பைப் படித்து, படித்து படித்துக்கொண்டே வந்தால் அந்த இயல்பு வரும்.
தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந் தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே – ஆக அது நம் கூடவே வரும். இந்த காலகட்டத்தில் தலைவனை அறியவேண்டும். பொல்லாத வறுமை தீரவேண்டும். வருமையிருந்தால் மனம் அமைதி பெறாது. பூஜைக்கு தடையாக இருப்பது வறுமை, நோய். இவை போன்ற தாங்கமுடியாத தடுமாற்றங்கள் முதலில் ஒழியவேண்டும்.
இப்படிப்பட்ட தடுமாற்றங்கள் ஒழிந்தால் நிம்மதியிருக்கும். ஆனால் செல்வம் பெருகினவுடன் என்ன ஆகும்? இவன் வறுமையாக இருக்கும்போது என்ன செய்வான்? கடவுளை நாடிப்போவான், அவன் ஏதோ பெற்றதாக நினைப்பான், ஆசான் பட்டினத்தார் பலகோடி பொன்னை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். ஒன்பது கப்பல் என்று சொல்லலாம்.
அங்கே ஒரு எழுபதாயிரம் பேர் திரண்டிருக்கிறார்கள். அங்கே சென்று
சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறான். பிரச்சனைகள் தீரவேண்டும் என்று கத்தை கத்தையாக உண்டியலில் போடுகிறான். இப்படி செய்தால் பிரச்சனை தீரப்போகிறதா? பிரச்சனை தீராது. இதை எங்கள் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உன் பிரச்சனை தீரவேண்டும் என்று சொன்னால் நீ உண்டியலில் போடுகின்ற காசை ஏழைகளில் வயிற்றில் போட்டால் நிச்சயமாக உன் பிரச்சனை தீரும்.
     ஆக மக்கள் தங்கள் பிரச்சினை தீருவதற்காக கோவிலுக்கும், குளங்களுக்கும்தான் செல்கிறார்கள். அங்கே சென்று வந்தால் ஒரு ஆறுதல் தான் கிடைக்கும், பிரச்சனை தீராது. தலைவனை வணங்குகின்ற முறையை முதலில் சொல்லித்தர வேண்டும். அங்கேபோய் உண்டியலில் போடுவதை விட இங்கே இருக்கின்ற ஏழைகளுக்கு மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.
    
     மனைவியை கொடுமை செய்யக்கூடாது. மனைவி உன்னை பாவி பாவி என்று சொன்னால் நீ அகத்தீசனை எவ்வளவு முறை வணங்கினாலும் சரி! அகத்தீசர் அருளை பெற முடியாது.
     உன்னுடனேயே இருக்கும் மனைவியிடம் அன்பு காட்டாதவன் எப்படி வெளியிலே போய் அன்பு காட்டுவான்? மேலும் மனைவி கணவனிடத்தில் அன்பு காட்டவேண்டும். கணவன் தன் மனைவியை நல்லவன் என்று சொல்லவேண்டும். ஆக குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்.
     ஆசான் அருள் எப்படி கிடைக்கும்? மனைவியிடம் அன்பாய் நடக்கிறான். அவளும் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு உயிர்தான். பிள்ளைகளும் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு உயிர்தான். தாய் தந்தையும் கடவுளின் பிள்ளைகள்தான். கணவன் மனைவியை வாழ்த்தவேண்டும். அவன் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும்.
அப்படியென்றால் மனைவி என்ன செய்யவேண்டும்? என் கணவன் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தவேண்டும். இதுபோன்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் நீடு வாழவேண்டும் என்று வாழ்த்த வேண்டும்.
நீ இங்கே இவர்களிடம் முரண்பட்டு பாவி! என்று பேர் எடுத்துவிட்டு நீ கோவிலிற்கு சென்று உண்டியலில் எவ்வளவு பணம் போட்டாலும் சரி! அங்கம் புரண்டாலும் சரி! அலகு குத்திக்கொன்டாலும் சரி! மனைவியையும், பிள்ளைகளையும் கொடுமை செய்துவிட்டு கடவுளின் அருளை பெற முடியாது.
சிலபேர் மருமகளிடம் பிறந்த வீட்டிலிருந்து அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று சொல்லி கொடுமைப்படுத்திவிடுவார்கள். மருமகள் தற்கொலை செய்துகொள்கின்ற அளவிற்கு போய்விடுவாள். மருமகளை கொடுமை செய்ய, கொடுமை செய்ய அறிவே வேலை செய்யாது.
அவளை கொடுமை செய்ய கொடுமை செய்ய மருமகள் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்வாள். ஆக இவர்களுக்கு கடவுள் ஆசி கிடைக்குமா? ஆக அதற்குத்தான் சொல்கிறோம். ஒரு குடும்பத்தில் அமைதி வேண்டுமென்று சொன்னால் மருமகளை மாமியார் மதிக்கவேண்டும். மாமியாரை மருமகள் மதிக்கவேண்டும். முரண்பாடு வந்தது என்றால் நம்முடைய பாவத்தின் சின்னம் என்று நினைக்கவேண்டும்.
மாமியார் தன் மருமகள் மீது அன்பு காட்டுகின்றாள். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் இடறி பேசுகிறாள். நான் என்னப்பா செய்வேன்? நான் அன்பு காட்டுகிறேன் மருமகள் என்னை மதிக்கவில்லை. இப்படி ஆசானிடத்து கேட்க வேண்டும்.
மருமகள் மாமியாரை இகழ்ந்து பேசினாலும், மனம் நோகும்படி பேசினாலும் பாவத்தின் சின்னமே என்று நினைக்கவேண்டுமே தவிர இடறக்கூடாது. எதுவும் பேசிடக்கூடாது. கடவுளை அடைய விரும்பினால் இதை கடைப்பிடிக்கவேண்டும். தண்டித்தல், கொடுமை செய்தல், மருமகளை மாமியார் கொடுமை செய்தல், மாமியாரை மருமகள் கொடுமையாக பேசுதல் இவையெல்லாம் கடவுளுக்கு அடுக்கவே அடுக்காது. கணவனின் உடன்பிறந்தவர்கள் கொடுமை செய்துவிடுவார்கள். இதனுடைய விளைவுகள் அந்த குடும்பத்தில் அமைதி கெட்டுவிடும். ஆக கடவுள் அங்கே இருக்கமாட்டான்.
ஒரு குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமென்றால் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு காட்டவேண்டும். அரவணைக்க வேண்டும். மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மன்னிக்க கற்றுக்கொள்ளும் பண்பே ஒருவனை கடவுளாக்கும். இவற்றையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் பத்தாயிரம் பேர் ஆண்களும், பெண்களுமாக ஞானியாகவேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம்.
மருமகள் கோபத்தில் ஏதாவது பேசுவாள், பேசியவுடன் மாமியார் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். நீ ஏன் அம்மா பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்டான். நான் கடவுளை அடைய விரும்புகிறேன், மருமகள் ஏதோ அறியாமல் பேசுகின்றாள்.
ஆனால் எனக்கு புரியவில்லை. இப்படியே கடவுளை நினைத்து உருகவேண்டும். அப்படி உருகும்போது என்ன ஆகும்? மருமகள் இரண்டு, மூன்று முறை பேசிப்பார்ப்பாள், அதற்கு பிறகு சாந்தம் அவளுக்கு வந்துவிடும். சரி! மருமகள் திட்டி பேசும்போது ஆசான் அகத்தீசரை நினைக்கிறாள், அப்படி நினைக்கும்போது சாந்தம் வரும். சாந்தம் இல்லாத இடத்தில்  கடவுள் அருள் இருக்க முடியாது.
அதேபோன்று மாமியார் மருமகளை கடுமையாக பேசும்போது மருமகள் நான் என்னப்பா செய்வேன்? என்று ஆசான் அகத்தீசரை எண்ணி கண்ணீர் விட்டால் நிச்சயமாக ஆசான் அருள் செய்வார். குடும்பத்தில் உள்ளவர்களை கண்டிக்கவோ, திட்டவோ, கெடுக்கவோ கூடாது. ஆசான் அகத்தீசரை நினைத்து என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை ஐயா! நான் என்ன செய்யட்டும் என்று சொல்லி ஆசான் அகத்தீசரை நினைத்தால் பிரச்சனை தீரும்.
மருமகளை மாமியார் இகழ்ந்து பேசுதல், கொடுமை செய்தல், மாமியாரை மருமகள் இகழ்ந்து பேசுதல், நாத்தனார் கொடுமை இவையெல்லாம் மிகப்பெரிய பிரச்சனைகளாக குடும்பத்தில் இருக்கும். இவற்றையெல்லாம் உங்களுக்கு எதற்கு நாங்கள் சொல்கிறோம் என்றால் குடும்பத்தில் அமைதி இல்லையென்றால் யாரும் கடவுளாக முடியாது. இரண்டு நாளிலோ அல்லது மூன்று நாளிலோ யாரும் கடவுளாக முடியாது.
கடவுளை அடைய ஒரு பத்து வருடம் ஆகும். ஆக பத்து வருடம் அந்த குடும்பத்தில் இருக்கிற உறுப்பினர்கள், அதை சார்ந்தவர்கள் சாந்தமாக இல்லையென்று சொன்னால் பெண்ணும், கடவுளை அடையமுடியாது, ஆணும் கடவுளை அடையமுடியாது.
முரண்பட்ட குடும்பமாக இருந்தால் கடவுளை அடையமுடியாது. இதற்கு உபாயம் தலைவனை வணங்கி பிரச்சினை தீரவேண்டும் என்று கேட்க, கேட்க, கேட்க மெதுவாக பிரச்சினை தீரும். இந்த காலக்கட்டத்தில் ஆசானை தினமும் பூஜை செய்கின்ற மக்களுக்கு வறுமை இருக்காது.
இன்றைய தினம் நூற்றுக்கு அறுபது சதவீத மக்கள் நன்றாக உடை அணிந்திருப்பார்கள். உடை மட்டும்தான் நன்றாக இருக்கும். ஆனால் கடன்சுமை இருக்கும். இது எங்களுக்கு நன்றாக தெரியும். கடன் வாங்கி வீடு கட்டுவார்கள், கடனை கட்டமுடியாத தடுமாற்றம் இருக்கும்.
சிலபேர் கௌரவத்திற்காக வீடு கட்டுவான். விசயம் தெரிந்தவன் ஆசான் ஆசி உள்ளவன் என்னிடம் காசு இல்லை நான் வீடு கட்ட மாட்டேன் என்று சொல்லிவிடுவான். வீடு கட்டுவதற்கு முன்னே இருந்த தெம்பு, ஆறுதல் வீடு கட்டிய பிறகு இருக்காது. அப்படியே தடுமாறிக் கொண்டிருப்பான். வாங்கிய கடனுக்கு நாளுக்கு நாள் வட்டி ஏறிக்கொண்டே போகும். எல்லோரும் வீடு கட்டலாம் என்று நினைக்கவேண்டாம். வீடு கட்டுபவனும் முழுமையாக வீடு கட்ட முடியாது. தலைவன் ஆசியிருந்து வீடு கட்ட வேண்டுமப்பா.
எல்லோருக்கும் சொந்த வீடு வேண்டும். அது அவசியம்தானப்பா. வீடு கட்டுவதற்கு முன்பு என்ன செய்யவேண்டும்? ஆசான் அகத்தீசனிடம் வந்து அடியேனுக்கு சொந்த வீடு வேண்டுமப்பா, நீர்தான் அருள் செய்யவேண்டும் அடியேனுக்கு சொந்த வீடு வேண்டுமப்பா, நீர்தான் அருள் செய்யவேண்டும். நான் வீடு கட்டும் வேலையை மேற்கொள்ளப்போகிறேன். இது இடையில் தடைப்பட்டால் என்னிடம் இருக்கின்ற முதலும் போய்விடும், கடன்சுமை வந்துவிடும். வட்டி கட்டவேண்டிய சூழ்நிலை வரும். நீங்கள்தான் அருள் செய்யவேண்டும் என்று ஆசான் அகத்தீசனிடம் கேட்பான் விசயம் தெரிந்தவன்.
ஆனால் இவன் என்ன செய்வான்? கையில் மூன்று இலட்சம் வைத்திருப்பான் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்யவேண்டும் என்று திட்டமிடுவான். அவன் வந்து தருவான் என்று சொல்லி வீடு கட்ட ஆரம்பித்து இரண்டு வருடத்தில் வீட்டை கட்டி முடிப்பான். பிறகு கடன்சுமை வந்துவிடும்.
இப்படியெல்லாம் தலைவன் ஆசியில்லாத மக்களுக்கு கடன்சுமை வரும். இதையெல்லாம் உங்களுக்கு சொல்வதன் நோக்கம், அமைதியை கெடுக்கக்கூடியது இந்த கடன்சுமை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அமைதியை கெடுக்காத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
கடவுளை அடைய விரும்புகின்றாயா? சரி இப்ப வீடு கட்டவேண்டுமா? ஆசானைக் கேள் ஆசானைக்கேட்டு எனக்கு சொந்த வீடு அமையவேண்டும் என்று கேட்டுக்கொள். ஆசானை கேட்கும்போது அவர் அருள் செய்வார். நீயாக உன்னை பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு கையில் காசு இல்லாமல் வீடு கட்ட நினைப்பது, கடன் வாங்கி வீட்டை கட்டிவிட்டு கடைசியில் கையில் இருக்கிற பணத்தையெல்லாம் விட்டு விட்டால் கடன்சுமை வந்துவிடும். இந்த கடன்சுமை கடவுளை அடைய தடையாக போய்விடும்.
கடன் வாங்குவது, கடவுளை அடைய தடையாக போய்விடும். கையில் பணம் இல்லாமல் வீடு கட்ட முயற்சிப்பது கடவுளை அடைய தடையாக போய்விடும். ஆடம்பர வாழ்க்கை அவசியமில்லை. கடவுளை அடைய விரும்புகின்றவனுக்கு ஆடம்பரம் அவசியமில்லை. ஆடம்பரத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது. ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது? எல்லாவற்றையும் கடவுள்தான் கொடுக்கவேண்டும்.
நாம் உண்ணுகின்ற உணவு, உடுத்துகின்ற உடை, இருக்கின்ற இடம், கெளரவம் இதையெல்லாம் தலைவன்தான் கொடுக்கவேண்டும். இவனாகப்போய் தேடிக்கொண்டு இருக்கக்கூடாது. உலகத்தில் சிலபேர் கௌரவமாக இருப்பார்கள். அதை அவர்களுடைய அறிவு என்று நினைத்தீர்களா? இல்லை.
அவன் புண்ணியம் செய்திருக்கிறான். நல்ல உடல் ஆரோக்கியம், நல்ல தோற்றம், வறுமையில்லா வாழ்வு, நல்ல மனைவி, நல்ல சுற்றுப்புற சூழ்நிலை, கெளரவம், நல்ல பதவி, நல்ல கல்வி இவையெல்லாம் அவர்களுடைய சாமர்த்தியத்தால் வந்தது என்று நினைத்து ஏமாந்துவிடவேண்டாம். அவன் புண்ணியம் செய்திருக்கிறான். அந்த புண்ணியத்தால் தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நாம் அடைய நினைக்கும்போது நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
எனக்கு கெளரவம் வேண்டுமப்பா, இதை யாரிடம் கேட்கின்றாய்? உன் அறிவு கொண்டு உள்ளே சென்று பாரேன், ஒன்றும் அசைக்கமுடியாது. நாம் நல்ல கௌரவத்தை பெறவேண்டும். இந்த உலகம் நம்மை போற்றவேண்டும். நல்லபடியாக வாழவேண்டும். இதற்கெல்லாம் ஆசான் அகத்தீசரை கேட்கவேண்டும்.
ஆசான் அகத்தீசரிடம் எனக்கு வறுமையில்லாத வாழ்வு வேண்டும், நான் கௌரவமாக வாழ ஆசைப்படுகின்றேன், கடனில்லாத வாழ்க்கையை தரவேண்டும், அதற்கு நீர்தான் அருள் செய்யவேண்டும் என்று கேட்டால் அள்ளி அள்ளி கொடுப்பார்கள். அவர்களுக்கு என்ன வேலை? எதை வேண்டுமானாலும் செய்வார்கள். கேட்பதை கேட்கின்ற முறையோடு கேட்கவேண்டும்.
அடியேனுக்கு செல்வநிலை பெருகவேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் வேண்டும், கௌரவமாக வாழ வேண்டும், கடன்சுமை இருக்கக்கூடாது, நான் மேற்கொண்ட காரியமெல்லாம் வெற்றி பெறவேண்டும் என்று ஆசானிடம் வணங்கி கேட்டாய். நீ கேட்ட எல்லாவற்றையும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் கேட்பதையெல்லாம் தரக்கூடியவர்கள். யாரைக் கேட்டால் தருவார்கள் என்று அறிகின்ற அறிவு இருந்தாலே கடவுளை அடைவான்.
ஆக இந்த காலக்கட்டத்தில் பிரச்சனைகளை எல்லாம் ஆசானிடம் சொல்லவேண்டும். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்? எனக்கு கடன்சுமை இருக்கிறது ஐயா, சொந்தவீடு இருந்தால் பரவாயில்லை, வாடகை வீட்டிலிருந்து அல்லல் படுகிறேன். இப்படி இருக்கும்போது நீ ஆசானிடம் அடியேனுக்கு சொந்தவீடு அமையவேண்டும் என்று கேள், அப்படி கேட்டால் அமைத்து தருவார்கள்.
நாங்கள் கேட்கிறோம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். நித்தியம் அன்னதானம் செய்கிறோம், பண்புள்ள தொண்டர்கள் எல்லாம் வந்து சேரவேண்டுமென்று கேட்டோம், அன்னதானமும் செய்து கொண்டிருக்கிறோம். அன்னதானம் செய்து கொண்டு மரணமில்லாப் பெருவாழ்வு என்ற ஒன்றை அடைய அந்த இடத்திற்கு போய்க்கொண்டிருக்கிறோம். ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் பத்தாயிரம் ஆண்களும், பெண்களும் ஞானியாக வேண்டுமல்லவா?. ஆக இப்படி ஒரு முறையோடு திட்டமிட்டு அமைதியாக பிரச்சனையில்லாமல் இருக்கவேண்டும்.
ஆரவாரமில்லாமல் அடக்கமாக ஐந்து நிமிடம் தியானம் செய்யவேண்டும். தியானம் செய்யச் செய்ய தலைவனுடைய பார்வை நம்மீது படுகிறது.
தலைவனுடைய ஆசியிருந்தால் குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கிடையில் பிரச்சனை வராது.
தலைவன் ஆசியிருந்தால் நாத்தனார் கொடுமை இருக்காது.
தலைவன் ஆசியிருந்தால் வருமையிருக்காது.
தலைவன் ஆசியிருந்தால் உள்ளம் எப்போதும் மென்மையாக இருக்கும்.
ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம்? தலைவனை பூஜை செய்து ஆசி பெறவேண்டும். அதே சமயத்தில் உடல்மாசு தீரவேண்டும். இது மிகப்பெரிய வார்த்தை. உடல்மாசு தீரவேண்டுமென்பது சாதாரண விசயமில்லை.
இறையடி தாழ்ந்து ஐவணக்கமும் எய்தி
குரியது கூறி குணங்கொண்டு போற்ற
சிறையுடல் நீஅறக் காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
·         திருமந்திரம் – பக்குவன் – கவி எண் 1701
இறையடி தாழ்ந்து – இறைவன் யார்? யாரெல்லாம் தேகக்கசடை நீக்கினார்களோ, தொட்டதெல்லாம் துலங்கியதோ, வெற்றிமேல் வெற்றி பெற்றார்களோ, தடையில்லா வாழ்க்கை பெற்றார்களோ அவர்களெல்லாம் இறைவன். ஆக இறைவன் என்றால் மேலானவன் அல்லது கடவுள் அல்லது மன்னன் என்று வைத்துக்கொள்ளலாம்.
இறையடி தாழ்ந்து வணங்கவேண்டும். ஏனென்றால் கடவுள் என்ற ஒருவன் இருக்கிறான். ஆசான் அகத்தீசர், மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் திருமூலதேவர் இப்படி பெரிய பெரிய ஞானிகளெல்லாம் இருக்கிறார்கள். அவர்களை வணங்க வேண்டும்.
ஏன் வணங்கவேண்டும்? நாளைக்கு என்ன நடக்கபோகின்றது என்று ஒன்றும் உனக்கு தெரியாது, உனக்கு ஆயுள் கொஞ்சம்தான் இருக்கும். ஆனால் நீ நிறைய காலம் இருக்கப்போவதாக நினைத்துக் கொண்டிருப்பாய். ஞானிகளை பூஜை செய்தால்தான் நாம் நிலையில்லாத மனிதன், நமக்கு ஏதோ ஒன்று வரும் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.
கடவுளை வணங்கினால் வாழ்க்கையில் ஒரு பயம் இருக்கும். இப்படிப்பட்ட பயமில்லாதவன் யார்? கடவுளின் ஆசியே இல்லாதவன். ஆக வாழ்க்கையைப் பற்றி ஒரு பயமிருக்க வேண்டும். நமக்கு முதுமை வந்துவிட்டது. நாளெல்லாம் போய்க்கொண்டிருக்கிறது. முதுமை வந்துவிட்டது என்ன செய்வது? என்று ஏங்கிக் கொண்டிருப்பான். இவன் விசயம் தெரிந்தவன்.
ஆனால், அவனோ பொழுது போகவில்லை என்று சொல்லி அப்படியே போய்க்கொண்டிருப்பான். ஆனால் காலம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஞானிகளும், விசயம் தெரிந்தவர்களும் நேரம் நெருங்கிக்கொண்டு வருகிறது என்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அவன் எதைப்பற்றியும் நினைக்காமல் போய்க்கொண்டிருப்பான். இதையெல்லாம் உங்களுக்கு. எதற்கு சொல்கிறேன் என்றால் ஒரு முறையை பின்பற்றுகின்ற மக்களுக்கு தெளிவு வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறோம்.
எனவே இந்த காலகட்டத்தில் தெளிவான பாதையை புரிந்துகொண்டு தினம் தினம் தியானம் செய்தால் உங்களுக்கு புரியும். என்ன புரியும்? இந்த வாழ்க்கை நிலையில்லாதது. எண்பது, தொண்ணூறு வயதினிலே இறந்தவனைப்பற்றி கவலையில்லை. அதை விட்டு தள்ளுய்யா.
ஆனால் இடைப்பட்ட  காலத்தில் முப்பது வயதில் இறந்து விட்டான். அவனைப் பார்க்கும்போதே நமக்கு ஒரு பயம் வந்துவிடும். அடடே இந்த நிலை நமக்கும் வரும். முப்பத்தைந்து வயதில் இடப்பட்ட சாவு, இப்படி கணவனை பறிகொடுத்தவளையும், மனைவியை பறிகொடுத்தவனையும் பார்க்கும் பொழுது நமக்கு பயம் வரவேண்டும். எப்படிப்பட்ட பயம் வரவேண்டும்?
இப்படிப்பட்ட நிலைமை நமக்கு வரும். நிச்சயம் வரத்தான் போகிறது. நாம் எப்படியாவது முன்னேறிக் கொள்ளவேண்டும். நம்மை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட உணர்வு எப்படி வரும்? ஆக வாழ்க்கையைப் பற்றி இந்த உணர்வு, அச்சம் வருவதற்கு அருள் வேண்டும். இல்லையென்று சொன்னால் இவனுக்கு கடைசிவரைக்கும் தெரியாது.
பஸ்சுக்கு போவான், பத்து நிமிடத்தில் அடிபட்டு சாவான். ஆனால் அதுவரையில் இவன் அளவில்லாத கற்பனையிலும், ஆரவாரத்திலும் இருப்பான். சாவைப் பற்றிய பயம் வேண்டும். சாவைப்பற்றி ஏன் பயப்படவேண்டும்? அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும். அடியேனுக்கு ஞானவாழ்வு கைகூட வேண்டும். அடியேன் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்யவேண்டுமென்று தலைவனிடம் நீ கேட்டிருக்கிறாய்.
இப்படி கேள்வி கேட்பவனுக்கு பயம் நிச்சயம் வரும். ஆனால் அதைப்பற்றியே கேட்காமல் இருப்பவன் வெந்ததை சாப்பிடுவான் விதி வந்தால் சாவான்.
ஆக கடவுளை அடைய விரும்புகிறவர்களுக்கு அச்சம் வேண்டும், பயம் வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது, நாட்களை வீணாக்கக்கூடாது. ஞானிகள் எல்லாம் பெரியோர்கள். ஆசான் திருவள்ளுவப்பெருமான் வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – மெதுவாக நாட்களை கடத்திக்கொண்டு போகவேண்டும். இல்லறத்தான் சாவுக்கு பயப்படவேண்டும். சாவு வருவதற்கு முன்னே நீ ஏதாவது தேடி வைத்துக்கொள்ள வேண்டும். எதை தேடி வைத்துக் கொள்ளவேண்டும்? ஒரு பக்கம் புண்ணியத்தை தேடி வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் பூஜை செய்து அருளை தேடி வைத்துக்கொள்ள வேண்டும்.
     அருளும் புண்ணியமும் இருந்தால் இந்த ஜென்மத்தில் கைகூடும். அப்படி இல்லாவிட்டால், அடுத்த ஜென்மத்திலாவது கைகூடும் என்று சொல்வார்கள். நாங்கள் சாவைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்ன காரணம்? இந்த உடம்பை மாற்றிக்கொண்டோம்.
தாய், தந்தையால் எடுத்த காமதேகத்தை நீர்த்து ஞானதேகத்தில் இருப்பதால் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. ரொம்ப அடக்கமாக இருப்போம். ஆக நீங்களும் இந்த வாய்ப்பை பெறவேண்டும். இதை நீங்களெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கும் அந்த உறுதி வேண்டும்.
இந்த உறுதி உங்களுக்கு எப்ப வரும்? ஞானிகளை தினம் தினம் பூஜை செய்யாமல் இந்த உறுதி வராது. ஆக இந்த உறுதி வேண்டும். தினம் தினம் பூஜை செய்து ஆசி பெற்று வறுமையில்லாத வாழ்வை பெறவேண்டும்.
நீங்கள் எல்லாம் ஞானத்தை இப்பொழுது அடையவேண்டும். அதற்கு வாசி வசப்படவேண்டும். பத்தாயிரம் பேர் ஞானியாவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த பத்தாயிரம் பேரும் மூச்சுக்காற்று வசப்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். இது சாதாரண விசயமில்லை. நீ ஓடுகின்ற காற்றை புருவமத்தியில் செலுத்த வேண்டும். அதை நம்மால் செலுத்தி வைக்கமுடியாது.
மூச்சுக்காற்று இயக்கத்தை புருவமத்தியில் செலுத்தி வைத்தால் அது என்ன செய்யும்? கபத்தை அறுக்கும். உடம்பிலிருக்கிற கபத்தை அறுக்கும். ஒரு திடமான பொருளை உடம்பிற்கு தந்து அதனால் உடம்பு நன்றாக இருக்கும். நீங்களெல்லாம் ஞானியாகலாம். இந்த காலகட்டத்தில் நீங்களெல்லாம் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நாம் மக்களுக்கு தொண்டு செய்கிறோம்.
சென்ற பௌர்ணமியில் நாளாயிரத்து ஐந்நூறு பேர் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆயிரத்து ஆறுபேர் திருவிளக்கு பூஜை செய்திருக்கிறார்கள். பெண்கள் வருகிறார்கள். ஆசான் நாமத்தை ஓதுகிறோம்.
தினம் தினம் அன்னதானம் செய்கிறோம். இதுவரை சுமார் ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். தண்ணீர் இலவசமாக தந்திருக்கிறோம். 2800 ஏழை எளிய தம்பதிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்திருக்கிறோம்.
ஆக தொட்டதெல்லாம் வெற்றி. இப்படி வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன? நாங்கள் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடவில்லை. நீங்கள் என்னைப் பாருங்கள். நாங்கள் சொன்னது நியாயம்.
நீங்கள் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடாதீர்கள். புற்றுக்கு சென்று முட்டை வைப்பது, பால் ஊற்றுவது அவசியமில்லை என்று சொல்கிறோம். நாங்கள் அங்கு போகமாட்டோம். அப்படி செய்யக்கூடாது என்று சொல்கிறோம். நீங்கள் செய்வது உங்கள் இஷ்டம்.
இப்படிப்பட்ட பூஜை எதையும் நாங்கள் செய்யவில்லை. அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வாசி வசப்பட்டிருக்கிறது. மூச்சுக்காற்று ஒடுங்கியிருக்கிறது. அப்படி மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கியதால் உடம்பிலுள்ள மாசு நீங்கியது. ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்றோம். தொட்டது துலங்குது.
நீங்கள் உண்மையை அறிந்து கொண்டீர்கள், ஓங்காரக்குடிலாசானை பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள் என்று அன்பர்கள் சொல்கிறார்கள். நாங்களும் உங்களுக்கு சொல்கிறோம். நாங்கள் வஞ்சனையில்லாதவர்கள். வாக்குல ஒன்னு, மனசுல ஒன்னு வைத்துக்கொள்ள மாட்டோம்.
இப்ப உலகநடை எப்படியிருக்கு? பேசும்போது தேன் ஒழுக பேசுகிறான், நண்பனாகத்தான் இருக்கிறான், எப்பொழுது வாய்ப்பு வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். வாய்ப்பு கிடைத்தால் நசுக்கப்பார்க்கிறான். இதுதான் நண்பனுக்குள்ள யோக்கியதை.
நாங்கள் வஞ்சனையில்லாதவர்கள். எப்பொழுது இந்த வஞ்சனையில்லாத வாழ்க்கை வரும்? பொருளை விரும்பாத அறிவு வேண்டும். அந்த பொருளை விரும்பினால்தானே பொய் சொல்வான்? அந்த பொருளே எங்களுக்கு தேவையில்லை.
இந்த அறிவை யார் கொடுக்கவேண்டும்? ஆசான் அகத்தீசன் கொடுக்கவேண்டும். சரி இந்த பொல்லாத காமதேகம் இருக்கிறதே, ஆசான் ஆசியால் அதுவும் இல்லை. ஆக பொய் சொல்லமாட்டோம், பொறாமை படமாட்டோம், புறம் சொல்லமாட்டோம், பொருள் வேண்டுமென்ற ஆசை இருக்காது. மேலும் பெருந்தன்மை வந்தது, நல்ல சிந்தனை வந்தது, வஞ்சனையில்லாத வாழ்க்கை வந்தது.
இவையெல்லாம் எப்படி வந்தது? ஆசான் அகத்தீசரை கேட்டோம். அகத்தீசா அடியேனுக்கு வஞ்சனையில்லாத வாழ்வு தரவேண்டும், அடியேன் பொய் பேசாதிருக்க வேண்டும், அடியேன் புறம் கூறாதிருக்கவேண்டும், அடியேன் பொறாமை படாதிருக்கவேண்டும். அடியேன் தினம் உன் திருவடியைப் பற்ற தினம் வாய்ப்பு தரவேண்டும். அடியேன் மனிதனாக வேண்டும். என்னை நீர்தான் காப்பாற்ற வேண்டுமென்று இரகசியமாக வெளியே தெரியாமல் ஆசான் அகத்தீசரிடம் கேட்டால்தான் இந்த பண்புகள் எல்லாம் கிடைக்கும்.
ஆக நாங்கள் வஞ்சனையற்று வாழ்கிறோம், பொய் சொல்ல மாட்டோம். புறம் கூறமாட்டோம், ஜாதி வித்தியாசமில்லை, பகையில்லை, பழிவாங்கும் எண்ணமில்லை. இந்த பழிவாங்கக்கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பதே பெரிய புண்ணியமாகும். மனைவி குற்றம் செய்வாள், அதை மனசிலே வைத்துக்கொண்டிருப்பான். அதே மனைவி தான் கடைசிவரையிலும் அவனுக்கு துணையாக இருக்கப்போகிறாள், ஆனால் மன்னிக்க மாட்டான்.
நீ என்னதான் உன் மனைவியை அடித்தாலும், அவள் தன் கணவனை விட்டு கொடுக்கமாட்டாள். ஒரு பெண் என்னிடம் வந்து என் வீட்டுக்காரர் சாராயம் குடித்து, குடித்து வீணாய் போய்விட்டார் ஐயா, எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது, நீங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கதறுவதை நான் பார்த்தேன்.
எப்படிப்பட்ட உணர்வுகள் தினம், தினம் மனைவியை சித்ரவதை செய்கிறான், தினமும் கொடுமைதான், வார்த்தையெல்லாம் கீழ்த்தரமான வார்த்தை பேசுகிறான். ஆனாலும் அந்த பெண் வந்து என் வீட்டுக்காரரை காப்பாற்றுங்கள் என்று சொன்னது, இவ்வளவு பண்புள்ள மனைவியைக் கொடுமை செய்கிறான். இப்படிப்பட்ட பாவ ஜென்மம், பாவிகள் ஏன் வாழவேண்டும் என்று கேட்டேன்? உலகம் பண்புள்ள மக்களை அறியவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி இருக்கிறது என்றார்.
உனக்கு கடைசி வரையிலும் துணையாக இருக்கப்போவது உன் மனைவிதான். நீ அவளை தெய்வமாக பார்க்கவேண்டும். இந்த உலகத்தில் வேறு யாரு உனக்கு துணையாக இருப்பார்கள்? வேறு யாருமே இல்லை. கடைசிவரை துணையாக இருப்பது மனைவிதான்.
ஆக இப்படிப்பட்ட பண்புகள் வளர வேண்டும். அதே சமயத்தில் கணவனை மனைவி தெய்வமாக பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட பண்புகள் வரைவில்லையென்றால் யாரும் ஞானியாக முடியாது.
மனைவி குற்றம் செய்தால் கணவன் மன்னிக்கவேண்டும். ஆனால் எந்த பெண்ணும் கணவனை இகழ்ந்து பேசமாட்டாள். ஏதேனும் தவறி பேசிவிட்டால் பொம்பளைக்கு என்னடா அவ்வளவு திமிர் என்று சொல்வான். அவளும் நம்மை மாதிரி பத்துமாசம் தான்.
மகான் ஔவையார், மகான் காரைக்கால் அம்மையார், மகான் ஆண்டாள் போன்ற பெண்களெல்லாம் ஞானிகளாக இருக்கிறார்கள். பெண்கள் என்றால் என்ன அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? உன்னுடைய மகளை ஒருத்தன் அப்படி திட்டினால் பொறுத்துக் கொள்வாயா? உன் தங்கையை திட்டினால் பொறுத்துக் கொள்வாயா?
இந்த சமுதாயம் இப்படி கீழ்தரமாக இருக்கு, இது கொடுமையான சமுதாயம், இந்த சமுதாயம் என்றைக்குதான் திருந்துமோ? தெரியவில்லை. அவள் நம் சகோதரி மகளாய் இருப்பாள். ஆனால் இவன் கொடுமைபடுத்துவான். இந்த கொடுமைக்கு எல்லையே இல்லையா? என்று தான் வருந்துவேன்.
ஆனால் நிச்சயம் உண்டு. கல்வி பெண்களுக்கு வந்தால் இந்த அடிமைத்தனம் தீரும். ஆக இந்த அடிமைத்தனம் நீங்கவேண்டும். இந்த சமுதாயமே வாழவேண்டும். பெண்களுக்கும் அறிவு இருக்கும். அவர்களும் ஆசானை பூஜை செய்து ஆசி பெறலாம். அவர்களும் நீடுவாழ வேண்டும். நான் பெண்கள் தரப்புக்காக பேசவில்லை. இருதரப்பும் வாழவேண்டும். ஒருசாரார் மற்றொரு சாரரை அடிமைப் படுத்துதல், கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்களை கடவுள் மன்னிக்கவேமாட்டான். ஆனால் இந்த சமுதாயம் மன்னிக்கும்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று சொல்வான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பெண்களும் முன்னேற வேண்டும். அவர்களும் நீடுவாழவேண்டும் என்று சொல்ல வேண்டுமல்லவா? ஆனால் இயற்கைக் கடவுள் படிக்கும்போதே பெண்ணையும் ஆணையும் சமமாகத்தான் படைத்திருக்கிறான். ஆண் மக்களை பதினொரு மாசமும், பெண் மக்களை ஒன்பது மாசமும் ஆக்கியிருந்தால் நீ சொல்வதை ஒத்துக்கொள்ளலாம். ஆண் மக்கள் பேசுவான், பெண்களுக்கு என்னடா அதிகாரம் வேண்டும்? அவளை அடி என்பான்.
ஆனால் தலைவன் உன்னைப் பார்த்து கொண்டிருக்கிறான். அவனுக்கு பதில் சொல்லவேண்டும். பெண்ணினத்தை அடிமைப்படுத்துதல், கொடுமைபடுத்துதல், அதை நியாயப்படுத்தி பேசுதல் இப்படியெல்லாம் மனிதன் பேசலாம். ஆனால் தலைவன் படிக்கும்போதே இரண்டுபோரையும் சேர்த்துதான் படைத்தான். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இப்படித்தான் படைத்திருப்பான்.
இதையெல்லாம் எதற்கு பேசுகின்றோம் என்றால் மனித இனம் மகிழ்ச்சியாக வாழவேண்டும், பாவியாகக்கூடாது. மனைவியை கொடுமை செய்ய செய்ய நம் அறிவு வேலை செய்யாது. அதேபோல மனைவி கணவனை கொடுமை செய்தாலும் அறிவு வேலை செய்யாது. ஆக இதை உணர்வதற்கு நல்ல அறிவு வேண்டும். நல்ல அறிவு வருவதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனமில்லாதிருந்தால் அது பாவத்தில் சின்னம்.
இந்த உலகத்தில் பத்தாயிரம் பேர் ஞானியாவதற்கு வாய்ப்பு இருக்கு. நீங்கள் எல்லாம் நான் அடைந்த பேரின்பத்தை அடையவேண்டும். நீங்கள் எங்கள் தொண்டர்களை வாழ்த்தவேண்டும். நாங்கள் மேற்கொள்ளும் அறப்பணி நல்லபடி நடக்கவேண்டும் என்று நினைக்கவேண்டும்.
இங்கே இருக்கிற ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும். உலகமெல்லாம் அமைதி நிலவவேண்டும். ஆகவே அன்னதானம் செய்வோம். நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். நீங்கள் தொண்டு செய்யவேண்டும். இங்கு ஓங்காரகுடிலின் ஒரு பிடி உணவை சாப்பிட்டுப்பார் என்று சொல்வோம். நாங்கள் என்ன செய்வோம்?
அப்பா இந்த உணவை ஒரு பார்வை பாரப்பா, நீங்கள் எல்லாம் பெரியோர்கள், சாப்பாடு சுவையாக அமைய வேண்டும், சாப்பிடுகின்ற மக்களுக்கு நோய் தீரவேண்டும், உணவு பிரசாதமாக மாறவேண்டும் என்று ஆசான் அகத்தீசரை கேட்போம்.
     நீங்களும் அந்த உணவை சாப்பிடவேண்டும். நீங்களும் வந்து தொண்டு செய்யவேண்டும். இங்கே ஆண்களும், பெண்களும் தடையில்லாமல் தொண்டு செய்யலாம். யாருக்கும் தடையில்லை. ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை படமாட்டார்கள். என்ன காரணம்? எல்லோரும் தலைவன் சந்நிதானத்தில் இருக்கின்றோம். எல்லோரும் ஆசானின் பிள்ளைகள்.
     நாங்கள் என்ன செய்வோம்? இங்கே இருக்கிற தொண்டர்கள் எல்லோரும் ஆசான் அகத்தீசனுடைய பிள்ளை, நானும் பிள்ளை, அவர்கள் வந்து தொண்டு செய்கிறார்கள். அந்த பெண்ணும் வந்து தொண்டு செய்கிறார். நானும் வந்து தொண்டு செய்கிறேன். இதுல தலையிட வேண்டாம் ஐயா தலையிட்டால் தலைவனுக்கு கோபம் வரும்.
     இவ்வளவு பெரிய நிர்வாகாத்தையெல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கும் ஆசான் சுப்பிரமணியர் பரப்பிரம்ம சொரூபன், ஆசான் சுப்பிரமணியர் தான் இவ்வளவு பெரிய நிர்வாகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். அன்னதானத்திற்கு தேவையான பொருள்களெல்லாம் நிறைய குவிந்து கிடக்கிறது. நீங்கள் எல்லோரும் முடிந்த அளவிற்கு தொண்டு செய்து ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும்.
     நான் அடைந்த பேரின்பத்தை நீங்களும் அடைய வேண்டும். இந்த காலத்தில் பத்தாயிரம் பேர் ஞானியாவார்கள் என்று இருக்கிறது. நீங்கள் இந்த ஆரவாரத்தையெல்லாம் விட்டு விடுங்கள்.
     தினமும் ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம என்று சொல்லி பூஜை செய்து ஆசி பெற்றுக் கொள்ளவேண்டும். இங்கே வந்துள்ள மலேசிய அன்பர்களை நீங்கள் வாழ்த்த வேண்டும். அவர்கள் அங்கே ஆண்களும், பெண்களுமாக இருந்து தொண்டு செய்கிறார்கள். அவர்களுக்கும் உங்கள் ஆசி வேண்டும். எங்களுக்கும் உங்கள் ஆசி வேண்டும். நீங்கள் நீடுவாழ வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம்.
     இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய இந்த சங்கத்தின் செயல்பாடுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டது. மூடத்தனமே இருக்காது. அவன் சொல்வான் அது தீட்டு, அதை பார்க்காதே, இதை பார்க்காதே என்பான். இப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதையெல்லாம் போட்டு உலட்டிக்கிட்டு கிடக்காதே.
     இந்த தீட்டுங்கிற கதையெல்லாம் எங்ககிட்ட வைத்துக்கொள்ளாதே. இந்த உடம்பே பத்து மாத தீட்டுதான். இதை அறிந்தவன் சொல்கிறான். எங்க அன்பர்கள் தீட்டு என்கின்ற பேச்சே வைத்துக்  கொள்ள மாட்டார்கள்.
     பெண்கள் தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு தினம் பூஜை செய்கிறார்கள். ஏனென்றால் இந்த பெண் தீட்டு என்றான். இப்ப தீட்டு என்பது எப்ப நீ பூஜை செய்யவில்லையோ அப்பவே நீ தீட்டு. எந்த மாதமாவது அன்னதானம் செய்ய முடியாமல் போய்விட்டால் அது தீட்டு. மாதத்தில் இவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும்.
     நம்மை நோக்கி வரும் விருந்தினர்களுக்கு இருக்கக்கூடிய கஞ்சியை அன்போடு கொடுக்கவில்லை என்றால் அதுவே தீட்டு என்று சொல்வார்கள். ஆக இந்த தீட்டு, சடங்குகள், அலகு குத்துதல், அங்கம் பிரளுதல், உண்டியலில் போடுவது போன்றவற்றையெல்லாம் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
     தினம்தினம் தியானம் செய்வோம். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்வோம், தினம் தினம் விருந்தை உபசரிக்கிறான், மனைவி மீது அன்பு காட்டுவார்கள், பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வார்கள். இனிமையாக பழகுவார்கள், மனித தன்மையோடு நடந்து கொள்வார்கள்.
     ஆன்மீகத்தின் முழுமுதல் தன்மையே மனித தன்மையாய் நடந்து கொள்ளவேண்டும். கொடுமை இருக்கக்கூடாது. ஆக ஆசானை வணங்கிக் கேட்க வேண்டும், என்னிடம் அளவு கடந்த கோபம் இருக்குதய்ய, எல்லோரையும் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். எப்பவும் கோபமாக இருக்கிறேன். எனக்கு ஏன் கோபம் வந்தது? இந்த கோபமே என்னை பாவியாக்குகிறது.
     இந்த கொடிய குணக்கேடுகளெல்லாம் என்னை விட்டு நீங்குவதற்கு நீங்கள் தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்கவேண்டும். ஆக இப்படியெல்லாம் பூஜை செய்கிற முறையை சொல்லிக் கொடுப்போம்.
     ஆக இந்த சங்கம் காட்டுகின்ற பாதை தெளிவான பாதை, உண்மையான பாதை, சந்தேகமே தேவையில்லை என்ன காரணம்? நான் வாசி வசப்பட்டவன், மூலம் அறிந்தவன், தலைவனுடைய பூரண ஆசி பெற்றவன். இதை சத்திய வாக்காக சொல்கிறோம். நாங்கள் காட்டுகின்ற பாதை தெளிவான பாதை. ஆக எந்தவித மூடத்தனத்திலும் போய் மூழ்கவேண்டாம்.
     கொடுமை செய்து நூற்றுக்கு இருபத்தைந்து ரூபாய் வட்டி வாங்குவான். அங்கே கொண்டுபோய் சாமிக்கு உண்டியலில் போடுவான். இதயத்தில் கனிவு இல்லாத, தயை சிந்தையில்லாத மக்கள் உண்டியலில் போட்டால் அவனுக்கு நிச்சயம் அருள் காட்ட மாட்டான். இந்த மாதிரி கருணையே இல்லாத மக்கள் உண்டியலில் போட்டால் அவனுக்கு கடவுள் நெற்றியைக் கட்டுவான்.
     அங்கே நெற்றியில் நாமம் போட்டிருக்கும். சரி கருணையுள்ளவனாக இருந்தால் எதைக் காட்டுவான்? நெஞ்சத்தை காட்டுவான்.
     ஓகோ, கருணையுள்ளவர்கள் வந்தால், மனைவியிடம் அன்பு காட்டுகிறவன், ஜீவதயவுள்ளவர்கள் வந்தால் திருப்பதி வெங்கடாஜலபதி நெஞ்சைக் காட்டுவான்.
     தன்னிடம் வேலை செய்பவன் முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவன் சாப்பிடாமல் இருக்கிறான் என்று அவன் சாப்பிடுவதற்கு ஒன்றும் கொடுக்க மாட்டான். இங்கே வா, டீ குடி, பஜ்ஜி சாப்பிடு என்று சொல்லமாட்டான். அவனை அப்படியே கசக்கி சாறாய் பிழிந்து விடுவான், கொடிய வன்மனம் உள்ளவன். இப்படிப்பட்டவன் உண்டியலில் போட்டவுடன் என்ன கருணை காட்டுவானோ? அவர்களுக்கு நெற்றியை தான் காட்டுவேன் என்றார்.
     ஆக உடம்பு சரியில்லாதவனைப் பார்த்து என்ன சோர்வாக இருக்கின்றாய்? உடம்பு சரியில்லையா? ஒரு மாத்திரை சாப்பிட்டுக்கொள் என்று இதயத்தில் கனிவாய் பேசுகிறவனுக்கு என்ன காட்டுவான்? நெஞ்சைக்காட்டுவான் என்றான் திருப்பதி வெங்கடாஜலபதி.
     ஆக மனித வர்க்கம் உயரவேண்டும் என்று சொன்னால், தயை சிந்தை வேண்டும். கடவுளாக வேண்டும் என்றால் என்ன வேண்டும்? அறிவு வேண்டும் வெறும் வரட்டறிவு கொண்டு கடவுளாக முடியாது. தயை சிந்தை வேண்டும்.
     தயை சிந்தையில்லாதவன் கடவுளாக முடியாது. தயை சிந்தை எப்படி வரும். தயை சிந்தை எப்படி வரவேண்டும்?
     கருணையே வடிவான ஆசான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் திருமூலதேவர், ஆசான் ஞானபண்டிதன், மகான் நந்தீசர் போன்ற முதுபெரும் ஞானிகளை பூஜை செய்தால் கனிவு வரும், தயை சிந்தை வரும்.
     தயை சிந்தை முதிர்ச்சி அடைய அடைய அறிவு வேலை செய்யும். தயை சிந்தை முதிர்ச்சி அடைய அடைய அருள் வந்தது. தயை சிந்தை முதிர்ச்சி அடைய பக்குவம் வந்தது. ஆக இதற்கு ஞானிகள் மீது பக்தி செலுத்தவேண்டும்.
     ஞானிகள் மீது பக்தி செலுத்துகின்றோம், அறிவு வந்தது. பக்தி செலுத்துகிறோம், தயை சிந்தை வந்தது. பக்தி செலுத்துகிறோம், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகிறோம். இதைத்தவிர வேறு பாதையே இல்லை.
     ஆகவே, இனிமேலாவது சமுதாயத்தில் அவரவர்களும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்று சொன்னால் தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்யவேண்டும். அப்படி பூஜை செய்து என்ன கேட்கவேண்டும்? அடியேன் தயைசிந்தையுள்ளவனாக வாழ வேண்டும். அடியேன் பக்குவமுள்ளவனாக வாழவேண்டும். அடியேன் அருவருப்புள்ளவனாக இருக்கக்கூடாது என்று கேட்டு அருள் பெறவேண்டும்.
     சிலரை எப்பொழுது பார்த்தாலும் விகாரமாக இருக்கும். என்னய்யா அவ்வளவு கொடுமைக்காரனா? மனைவியின் முகத்தைப் பார்த்தால் கடுகடுப்பாக இருக்கும். கணவன் முகத்தைப் பார்த்தால் கடுகடுப்பாக இருக்கும். என்னய்யா இவர்கள் இரண்டு பேரும் இந்த உலகத்தை ஆளப்போகிறார்கள்? ஏன் இருவரும் சிடுசிடு என்று இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் என்ன காரணம்? அறியாமைதான்.
     கணவன், மனைவி முகத்தைப் பார்த்தால் சாந்தமே இல்லை, என்ன கொடுமையோ தெரியவில்லை. ஆக ஒவ்வொருவர் முகத்திலும் அருளே கிடையாது. ஆக, எங்குமே அமைதியில்லை. சாந்தமான முகமில்லை. அமைதியில்லாத வாழ்க்கை அங்கே அமைதியில்லை, இதயத்தில் அருளில்லை.
     இதயத்தில் அருளில்லை. அருள் என்றால் என்ன என்று கேட்பான். இதயத்தில் சாந்தம் அல்லது கருணை அல்லது தயை இந்த சிந்தனையிருந்தால் அருள் உள்ளது என்று அர்த்தம். அருள் என்றால் முகத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்று அர்த்தம்.
ஆகவே ஞானிகளை வழிபாடு செய்யாமல் நிச்சயமாக அருளை பெற முடியாது. மாதம் இருவருக்கு அன்னதானம் செய்யவேண்டும். பாவியாகாது இருக்கவேண்டும். இதற்கு முதலில் கடவுளிடம் கேட்கவேண்டும். அடியேன் பாவியாகாது இருக்கவேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்யவேண்டும் என்று கேட்கவேண்டும்.
     இங்கு பத்தாயிரம் பேர் ஞானியாவதற்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது  பத்தாயிரம் பேர் ஞானியாக வேண்டும்.
     அடியேன் பாவியாகாது இருக்கவேண்டும் என்று பெண்கள் கேட்கவேண்டும். நான் பாவியாகாது இருக்கவேண்டும் ஐயா, உன் மகன் நான், நான் பாவியாகாமல் இருக்கவேண்டும். மாமியாரை கொடுமை செய்தோ நாத்தனார் கொடுமை செய்தோ நான் பாவியாகாது இருக்கவேண்டுமென்று ஆசான் அகத்தீசனை கேட்டாலே புண்ணியம் வரப்போகிறது என்று அர்த்தம்.
     ஆக பாவியாகாத இதயம் வந்தது, தயை சிந்தை கருணை வந்தது என்று அர்த்தம். இந்த காலக்கட்டத்தில் நான் சொல்லிய சொல்லையெல்லாம் நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால், பத்தாயிரம் பேர் ஞானியாகும் வாய்ப்பு இருக்கு. அதற்கு ஒரே மூலதனம் அறிவு வேண்டும் ஆசி வேண்டும்.
     நீங்கள் எல்லாம் நிலையான நீடிய ஆயுள் பெற்று எல்லா வல்லமையும் பெறவேண்டும், உங்களுடைய குழந்தைகள் எல்லாம் நல்லபடி இருக்கவேண்டும். உங்கள் குடும்பம் தழைக்க வேண்டும், நீங்கள் தொட்டது துலங்கவேண்டும். அவரவருக்கு சொந்த வீடு இருக்கவேண்டும், கடன்சுமை இருக்கக்கூடாது, மன அமைதி இருக்கவேண்டும், நோயில்லா வாழ்வு பெறவேண்டும், கடவுள் ஆசி உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
     இதுவரை பத்தாயிரம் பேர் ஞானியாவதற்குரிய மார்க்கத்தை சொல்லியிருக்கிறேன். இங்கு இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பு இருக்கு. நீங்கள் எல்லாம் அதை படிக்கவேண்டும். நாலாவது படிக்கிற பையன் கூட படிக்கலாம். ஓம் அகத்திசாய நம, என்று பன்னிரண்டு முறை சொன்னால் கூட போதும். நீங்களெல்லாம் கடவுளை அடையலாம்.
நீங்கள் எல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும். மரணமில்லாப் பெருவாழ்வு பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாம் முன்னமே சொல்லியிருக்கிறோம், எங்கள் தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன் என சொல்லியிருக்கிறேன். என்ன காரணம்?
     நான் மேற்கொள்கின்ற அறப்பணிகளையெல்லாம் தொண்டர்கள் செம்மையாக செய்து முடிக்கிறார்கள். அவர்கள் வாழவேண்டும். அவர்கள் குடும்பம் தழைக்கவேண்டும். நான் மேற்கொண்ட அந்த பேரின்பத்தை அவர்கள் அடையவேண்டும், அவர்களெல்லாம் நீடு வாழவேண்டும், அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றவேண்டும். ஞானியாகவேண்டும் என்று இப்போது அருள்வாக்காக தருகிறேன்.
     இந்த அருள் வாக்கும், அவர்கள் திருவடியை வணங்கியே பெற்றதாகும். நான் இப்பொழுது கொடுத்த அருள் வாக்கு அவர்கள் திருவடியை வணங்கியே அருள் வாக்கு தருகிறோம். ஆகவே உலமெல்லாம் சுபிட்சமாக இருக்கவேண்டும். நாடெல்லாம் செழிக்கவேண்டும். எல்லா உயிரும் இன்புற்று வாழவேண்டும்.
ஓம் அகத்திசாய நம
    
    
    


    
    
          
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171984
Visit Today : 226
Total Visit : 171984

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories