பூதாதி லயம்



மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் அருளுரை – 19.10.1996
ஓம் அகத்தீசாய நாம



அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்


உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளது. கடவுள் ஒருவன் உண்டு என்று நம்புகிறேன். அவன் அப்படி கற்பனை செய்கின்றான். கடவுள் இல்லாமல் முடியாது. கடவுள் இருக்கின்றான். இயற்கைதான் கடவுள் என்று ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். ஞானிகள் அப்படி அறிந்து, மனிதனுக்குள் இயற்கை இருக்கிறது என்றும், னாமே அதுவாய் வாழ்கின்றோம் என்று சொன்னார்கள் ஆசான் மெய்கண்ட தேவர்.

     அவையே தானே யாயிரு வினையிற்

      போக்கு வரவு புரிய வாணியின்

      நீக்க மின்றி நிற்கு மன்றே.

                  -சிவஞானபோதம் – இரண்டாம் சூத்திரம்

      என்பார். அவையே தானேயாய் – பஞ்ச பூதங்களே நாமாகவும், நாமே பஞ்ச பூதங்களாகவும் இருக்கின்றோம். பஞ்சபூதங்களுக்கு அப்பால் ஒன்று இல்லை என்பர் ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். ஞானிகளுக்கு மட்டும் இது தெரியும். நமக்குள்ளும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. பஞ்ச பூதங்கள்தான் மனித இனத்தையும் மற்ற இனத்தையும் தோற்றுவிக்கின்றன.

     நம்முடைய உடம்பு காமதேகம். பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கும் போதே இப்படித்தான் தோற்றுவிக்கிறது. பெண்ணையும், ஆணையும் காமதேகத்தையும் சேர்த்தே தோற்றுவிக்கும். காமதேகத்தை உண்டாக்கி, கருத்தரிப்பதற்குரிய அமைப்பை வைத்து, உடல் சேர்க்கையை உண்டாக்கி, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும், அதற்குரிய அமைப்பை இயற்கை படைத்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

     யானை முதல் எறும்பு வரை ஒரு நொடியில் அனைத்து உயிர்களையும் படைத்திருக்கிறது. பல்வேறு வகையான காய்கறிகள் பலவகையான கனி வகைகள், பலவகையான தானியங்கள், இப்படி எண்ணிலடங்காத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இனிமையான தேனை உற்பத்தி செய்த இயற்கை, அதற்கு நிகரான, கசப்பான வேப்ப எண்ணெயை உண்டாக்கியிருக்கிறது. அவை நாட்டிற்கும் தேவைப்படும். உயிரனங்களில்  84 இலட்சம் தோற்ற பேதம் உண்டு. சிறு பூச்சிகளுக்க்ம் தங்களுடைய இனத்தை பெருக்கிக்கொள்ள வாய்ப்பை அமைத்திருக்கிறான்.

     ஆனாலும் அந்த அமைப்புகள் எல்லாம் ஒரு வகையான அழுக்கு. ஒரு வகையான துர்நாற்றமுள்ள கழிவுப் பொருள். பெண்ணுக்கு ஊறுகின்ற சுரோணிதம், ஆணிடம் ஊறுகின்ற சுக்கிலம் போன்ற ஒரு அமைப்பை ஆணுக்கும், பெண்ணுக்கும் வைத்திருக்கிறான். அதே சமயத்தில் பல வகை நறுமணமிக்க மறு, மருக்கொழுந்து, மனோரஞ்சிதம்,மல்லிகை இப்படி நல்ல நறுமணம் உள்ள மலர்களை வைத்திருந்தாலும், துர்நாற்றமும் இருக்கிறது. எல்லாவகையான குணங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிர் மறையாக இருக்கும். ஒன்று ரொம்ப சுவையாக இருக்கும். மற்றொன்று கசப்பாக இருக்கும். இப்படியெல்லாம் அமைத்து இருக்கிறான்.

     மற்ற ஜீவராசிகள் தங்களைப் பற்றி சிந்திக்காது. அவை சாப்பிடும் இனப்பெருக்கம் செய்யும், யானை முதல் ஏறும்பு வரை இந்த அமைப்புக்கு உட்பட்டதுதான். ஆனால் மனிதனும் சாப்பிடுவான். மற்ற ஜீவராசிகளும் உண்ணும் உறங்கும், இனப்பெருக்கம் செய்யும். மனிதனும் உண்பான் உறங்குவான், இனப்பெருக்கம் செய்வான். ஆனால் இதற்கு காரணம் என்னவென்று மனிதன் மட்டுமே அறிவான். இதற்கு காரணம் இருக்கு என்று அறிந்து, அந்தக் காரணத்தை கண்டவர்கள் ஞானிகள். அந்தக் காரணத்தை அறிந்த ஞானிகள், இந்த உடம்பை அசுத்த மாயை என்று அறிந்தார்கள். அப்படி அறிந்து, அந்த இருள் நீங்கினால், அதன் உள்ளே ஜோதி இருக்கு என்று அறிந்தார்கள். ஜோதி இயற்கையா, செயற்கையா என்றால் சூரியன் நம் உடம்பில் வெப்பமாக இருப்பது போல் இதுவும் இயற்கை. இது நீர் கலந்த நெருப்பு. இதை தூய்மைப்படுத்தும் போது அது ஒரு ஒளி பொருந்திய, குளிர்ச்சி பொருந்திய ஜோதியாக மாறும்.

     எந்த இயற்கை காமதேகமாக இருக்கிறதோ, அதற்குள் ஒரு அற்புத சக்தி பெண்ணும், ஆணுமாக இருக்கிறது. அதை முறையறிந்து வேதியியல் செய்தால், அந்த உடம்பிலிருந்து ஒரு ஜோதி தோன்றும். அந்த ஜோதியை அறிந்த மக்கள்தான் கடவுள். ஆக அவர்கள் அறிவார்கள், ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது.  

     கண்டவர் விண்டிலர்

      விண்டவர் கண்டிலர்

      அறிந்து கொண்டவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. அது அப்பேர்பட்ட ஒரு இரகசியம். அப்பேர்பட்ட ஒரு சுடர். அதை அறியலாம் என்னவென்று சொல்ல முடியாது. யாரேனும் கேட்டல், அவர்கள் இது நம் அறிவுக்கு எட்டாது, அறிந்தவர்கள் உபதேசித்தால்தான் அறிய முடியும் என்பார்கள். அப்படி உபதேசித்தாலன்றி அது புலப்படாது.

     ஆசான் திருமூலதேவரிடம், ஐயா நான் முன்னேற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். இதற்கு என்ன வழி என்று கேட்டான். ஞானிகளுடைய ஆசி பெற்றால்தான் முடியும் என்றார்.

     ஞானிகள் ஆசி பெருவது எப்படி?

     புண்ணியவாகளுக்குத்தான் ஞானிகள் அருள் செய்வார்கள். நீ முதலில் ஞானிகளை வணங்கு. ஆசான் அகத்தீசரை வணங்கு. உலகத்திற்கே மிகப்பெரும் மகானாக, ஆசானாக முக்கிய ஞானியாக, விலங்கும் மகன் சுப்பிரமணியரை வணங்கு. அவருக்கு அப்படிப்பட்ட இரகசியத்தை எல்லாம் வல்ல இயற்கைத்தாய் சொன்னாள்.

     இயற்கை மனிதனை தோற்றுவிக்கும் போதே, உடம்பிற்குள், நரகத்தையும் சொர்க்கத்தையும் சேர்த்துதான் வைத்திருக்கிறான். நம் உடம்பிற்குள்ளே நரகமும் இருக்கு. சொர்க்கமும் இருக்கு. நரகம் நீங்கினால் சொர்க்கம் வெளிப்படும். காமதேகம் நீங்கினால், ஞான தேகம் தோன்றும். ஆதித்தலைவன், எல்லாம்வல்ல இயற்கை, கடவுள் சக்தி ஒருவனுக்கு மட்டும் அந்த வாய்ப்பைத் தந்தாள்.

     அந்த ஒருவன்தான் ஆதித்தலைவன் ஞானபண்டிதன். அவர் இந்த வாய்ப்பை மற்றவர்களுக்கு அறிய வைத்தார். இப்பேர்ப்பட்ட காம தேகம்,

இலட்சக்கணக்கான மக்கள் தோன்றுவதும், இறப்பதும், சாவதும், விழ்வதுமாக இருந்து கோடிக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். ஆனால் இறக்கும் போது நரகம்தான் இறக்கின்றது. சொர்க்கம் இறந்து போகவில்லை. அவனுக்குள்ளே இருந்த சொர்க்கம் அவனுடன் போகிறது. ஆதித்தலைவன் இதை அறிந்தார்.

     தேங்காயின் மேல் மட்டை இருக்கும். அந்தக் கடினமான நாரை நீக்கினால் உள்ளே கடினமான தேங்காய் இருக்கும். அதை நீக்கினால் உள்ளே ஒன்றும் இருக்காது தண்ணீர் இருக்கும். இதுபோல உடபுக்குள்ளே ஏழு வகையான தாதுக்கள், ஏழு  வகையான மதில் உள்ளது. ஒன்றாவது சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்று ஏழு வகையான மதிலை சுற்றித்தான் உள்ளே போகவேண்டும். இது மிகப்பெரிய தத்துவம், இதை உணர்த்துவதற்கு கோயில்களில் ஏழு மதில் சுவர்கள் கட்டி வைத்திருப்பார்கள். நம் உடம்பில் உள்ள ஏழு வகையான தாதுக்களையும் அந்த ஏழு மதில்கள் குறிக்கிறது. இந்த ஏழு வகையான தாதுக்களும் மும்மலம் என்று சொல்லப்பட்ட ஒன்றாகவும், ஏழு வகையான திரையாகவும் இருக்கும். இந்த ஏழு வகை திரையை நீக்கி, காம தேகத்தை நீக்கினால் உள்ளே ஜோதி தெரியும்.

     ஏழு வகையான திரை(தாது) நீங்கினால் ஜோதி தெரிகறது. ஏழு வகையான தாதுநீக்கின் தாது நீங்கினால், காம விகாரமான உடம்பு நீணினால் உள்ளே ஜோதியை பார்க்கலாம். ஸ்ரீ ரங்கத்தில் ஏழு மதில் இருக்கு. ஒவ்வொரு மதிலாக கடந்து போவான். அப்படி கடந்து உள்ளே போகும் போது தலைவனை பார்க்கின்றான்.

     இந்த உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? யாரேனும் அறிந்தவன் ஒருவன் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வெளியிலே மதிலை சுற்றிக்கொண்டுதான் இருப்பான்.

     இங்கே கோயிலுக்குள் ஏழு வாசலை கடந்து போகலாம். ஆனால் உடம்புக்கு உள்ளே உள்ள ஏழு வகையான திரைகளை நீக்கி உள்ளே போக முடியாது. ஆசான் திருமூலதேவர்,

    

    

 

  முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
      அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

      மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய

      சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே.

                  -திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் 2944

                நீ முகத்தில் கண் கொண்டு குறைப்பார்வை பார்க்கின்றாய், நீங்கள் எல்லாம் மூடர்கல்தான். யாரேனும் ஒருவன் தெரிந்துகொள்ள வேண்டும். உன் அறிவுக்கும் கல்விக்கும் எட்டாத ஒன்று. இது நீ பார்க்கின்ற குறைப்பார்வை அல்ல. இது அகப்பார்வை,உள்முகப்பார்வை, அதோ முகப்பார்வை உள்முகப்பார்வை. ஆக,

      முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

      அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

      அகக்கண் என்பது ஞானிகள் உபதேசித்த ஒன்று. அவர் அப்படி என்ன உபதேசித்தார். உன் கல்வி, அறிவு, திறமை எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ஆசான் ஞானபண்டிதனுக்கோ அல்லது ஆசான் அகத்தீசருக்கோ உன்னை பூரண கொத்தடிமை ஆக்கிக்கொண்டு வீழ்ந்து வணங்கிக்கொள். அவர்களை நீ வணங்க, வணங்க, உன்னை வணங்குவார்கள். உனக்கு புரியும்படியாக உன் இதயத்திற்கு தெரியும்படியாக உணர்த்துவார்கள். இதுதான் பெரிய ஞானிகளும் கேட்டு, கேட்டுதான் பயனடைந்திருக்கிறார்கள். வேறு வழி இல்லை. ஒன்று என்னுடைய ஆசி பெற வேண்டும் அல்லது என் திருவடியைப் பற்ற வேண்டும். என் திருவடியை பற்றினால் நான் உனக்கு உணர்த்துவேன். அப்படி உணர்த்துவது உன் மனதிற்கு மட்டும்தான் புலப்படுமே தவிர வெளியே சொல்ல முடியாதென்று சொல்வார்கள்.
     முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

      அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

     அகத்தில் கண்கொண்டு என்பது, ஒருவனால் உபதேசிக்கப்பட்ட அறிவின் துணைகொண்டு அறிவது அல்லது அவர் நமக்கு சொல்வது என்று அர்த்தம். அது பேரானந்தம் என்றார். இதை ஆசான் திருமூலர்,

     மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய

      சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே.

    

     நாங்கள் அறிந்தோம். ஆசான் நந்தீசர் திருவருள் துணைகொண்டு காம தேகத்தை உடைத்தெறிந்தோம். எங்களை தோற்றுவித்த இயற்கையோடு போராடி, இயற்கையை வென்றோம், வெற்றி கண்டோம். எங்களை தொடர்ந்து துரத்தி வந்த காம தேகத்தை உதைத்து எரிந்து தொடர்ந்து வந்த இயற்கையை வெற்றி கண்டோம். இயற்கை எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

     இயற்கை மூன்று தொழில் செய்யும். தோற்றுவித்தல், வாழ்வித்தல் அழிவித்தல் செய்யும். ஆனால் நாங்கள் மறைத்தல், அருளல் என ஐந்தொழில் செய்வோம். அந்த வல்லமை எங்களுக்கு உண்டு. இயற்கை ஆக்கள், காத்தல், அழித்தல் என்ற மூன்றோடு நின்று விடும். ஆனால் நாங்கள் அதே இயற்கையின் துணைகொண்டு ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றிருக்கிறோம். அப்பேர்பட்ட ஒரு வாழ்க்கையைப் பற்றி யாரும் சொல்ல முடியாது. என்ன காரணம்? அது அப்படித்தான் உள்ளது.

     மகளுக்கு திருமணம் செய்ய தாய் தந்தை முயற்சித்தார்கள். வயது வந்த பெண்ணுக்கு தாய் தந்தை திருமணம் செய்ய முயற்சிப்பது இயல்பு. மகள் தன தாயிடம், ஏன் அம்மா திருமணம் செய்ய வேண்டியது அவசியமா, அதனால் என்ன இலாபம், இந்த திருமணத்தால் என்ன இன்பம் என்று கேட்டாள். இப்படி மகள் கேட்ட கேள்விகளுக்கு அந்த தாயால் பதில் சொல்ல முடியவில்லை. எப்பொழுதுமே மகள் குறிப்பை தாய் அரிவாள், தாயின் குறிப்பை மகள் அரிவாள். இதுதான் உலக இயல்பு. மகன் குறிப்பை தந்தை அறிவான். தந்தையின் குறிப்பை மகன் அறிவான். ஆனால் மகளின் இயல்பை தாய் மட்டும்தான் அறிய முடியும். மகளின் முகத்தை பார்த்தே தாய் தெரிந்து கொள்வாள். இங்கு மகள் தாயிடம் திருமணத்தால் என்ன இலாபம், என்ன இன்பம் என்று கேட்டால். உனக்கு இப்போது புரியாது. திருமணத்திற்கு பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தாய் சொல்லிவிட்டாள். ஆசான் திருமூலதேவர்,

      மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய

      சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே.

என்பார். தன் கணவனிடம் அனுபவித்த இன்பத்தை, மகளுக்கே சொல்ல முடியாது. ஆனால் அவர்களால் உணர முடியும். இந்த சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு சொல்ல முடியவில்லை. திருமணத்திற்கு பின்பு, திருமணத்தின் தன்மையை புரிந்து கொண்டேன் என்றாள் மகள். இதை திருமணத்திற்கு முதல் நாள் சொல்ல முடியாது. திருமணத்திற்கு பின்பு தன் கணவனுடன் அடையக்கூடிய இன்பத்தை உணர முடியும்.

         

     அவரவர் தன அறிவின் துணைகொண்டு, அறியக்கூடிய ஒன்றுதான் இந்தத் துறை.

     கடவுள் என்பது அறிவின் முதிர்ச்சி, கடவுள் என்பது அறம், கடவுள் என்பது அறிவு. இது தான் கடவுள். இயற்கை இப்படித்தான் உள்ளது.

     இதை அவரவர் அறிந்துகொள்ள வேண்டியது, உணர்ந்துகொள்ள வேண்டியது, முயற்சி செயது தேட வேண்டியது ஒன்று. மேலும் ஞானிகளை உருகி உருகி வேண்டி பெற்று கொள்ள வேண்டியது.

     ஆசான் அகத்தீசரை யார் யார் உருகி வணங்கி அவர் ஆசியை பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆசான் அகத்தீசர் தான் அடைந்த பேரின்பத்தை, தான் கண்ட பெரும் சுடரை அப்படி உருகி ஆசிப்பெற்றவர்களுக்கு உணரச் செய்கிறார். ஆசான் தான் கண்ட ஒரு கோடி, சதகோடி சூரியனுக்கு ஒப்பான ஒரு ஒளிச்சுடரை அவர் திருவடியைப் பற்றுகின்ற மக்களுக்கு உணர்த்துகிறார்.

     ஆசான் அகத்தீசர் திருவடியைப் பற்ற இருள் நீங்கியது, ஒழி வந்தது. இந்த ஒளி அவனுக்கு மட்டுமே புலப்படும். இதை குரு பாரம்பரிய என்பார்கள். இந்தச் சுடரின் தோற்றத்தை எல்லா ஞானிகளும் வர்ணிப்பார்கள்.

     ஞானிகள் கண்ட அந்தச் சுடரை,ஜோதியை, கடவுள் தன்மையை, பேரின்பத்தை, மோட்ச இலாபத்தை, வீடு பேற்றை மரணமில்லாப் பெருவாழ்வை, பெரும் ஆற்றலை, அந்தப் பெரும் சுடரை அறிவதற்கு, ஞானிகள் திருவருள்தான் துணை என்பார்.

     ஆசான் திருமூலர், பதி பல வாயது பண்டு இவ்வுலகம் என்று சொல்வார். பதி என்பது ஒருவன் தான். பதி என்றால் தலைவன். தலைவன் ஒருவன்தான். அனால் பல்வேறு வகையான தோற்ற அமைப்புகளை வைத்திருக்கிறான். பண்டு உலகம் என்றால் தொன்மையான உலகம் என்று உண்டு என்று சொல்லியும், பல்வேறு விதமாக வழிபடுகிறார்கள். சூரியனை வழிபடுகிறார்கள். தண்ணீர் முக்கியமானது, அதனால் தண்ணீரை வழிபாடு செய்தார்கள். இந்த இரண்டும்தான் பூஜைக்கு உரியதானது. நிலத்தை யாரும் பூஜை செய்வதில்லை.

     கடவுளை நம்பினான், சூரியனை பார்த்தான், சூரியன்தான் கடவுள் என்றான், தண்ணீர்தான் உற்றத்துனை என்றான். தண்ணீர் இல்லாமல் உலகம் இருக்க முடியாது. இப்பொழுது கூட ஆடி பதினெட்டுக்கு ஆற்றில் தண்ணீர் வருகிறது. அதை வழிபாடு செய்கிறோம். அவர்களும் எதை எதையோ வைத்து பூஜை செய்கிறார்கள்.

     ஞானிகள் என்ன செய்தார்கள். அவர்கள் வழிபாடுகள் அக பூஜை, இது உணர்த்தக் கூடிய ஒன்று. அவர்கள் உருகினார்கள், அகத்தீசா நீங்கள் எல்லாம் பெரிய மகன். உங்கள் ஆசி இல்லை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இந்த பாவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் பாவிதான் நீங்கள்தான் அருள் செய்ய வேண்டும், அருள் செய்ய வேண்டும், அருள் செய்ய வேண்டும் என்று உருகினான். இஅன் உருக உருக ஆசான் உணர்த்தினார். உணர்த்த உணர்த்த அறிவு ஓங்கியது. அந்த அறிவின் முயற்சியால் அறிவின் துணைகொண்டு முயற்சித்தான். அந்த முயற்சிதான் அவனுக்கு ஜோதியாக தோன்றியது.

     இப்படி அவரவர் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றை, எப்படி ஒருமுகப்படுத்துவது என்று ஞானிகள் பாத்தார்கள். இவனுக்கு எப்படி சொல்ல முடியும்? எப்படி சொன்னாலும் கேட்க மாட்டான். என்ன காரணம், இவன் செய்த வினையின் காரணமாக, அவன் ஏதாவது ஒரு நூலை படித்துவிட்டு, அதுவே உண்மை என்று நினைப்பான்.

     எது உண்மை என்று நினைக்கக்கூடியவன் குருகுலவாசம் செய்பவனாகத்தான் இருக்க வேண்டும். குருகுலவாசம் இருக்கும் வாய்ப்பில்லை. நேரம் இல்லை. எப்போதும் மனைவி மக்கள், வியாபாரம் என்று தடுமாறுகின்றவனுக்கு குருகுலவாசம் இருக்க முடியாது. சரி இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் சரி, ஆனாலும் அப்பேர்பட்ட ஒரு பொருளை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது? அதை அவனே உணரட்டும். ஞானிகள் அதை புரிந்து கோயிலை அமைந்திருக்கிறார்கள். அந்த கோயில்தான் நாம் வணங்கக்கூடிய தெய்வங்கள் இருக்கிறது.

     விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்

      துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

      கோயில் கட்டுவதற்கு விதிகள் பல வைத்திருக்கிறார்கள். அப்படி பல விதிகளின்படி கோயில் கட்டினாலும், மெய்ம்மையை உணர முடியவில்லை. எப்படி உணர முடியும். கோயில் வழிபாடு வேண்டுமா? கோயில் வழிபாடு வேண்டும்.

     ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு எதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி சுட்டிக் காட்டுவதற்காக கோயிலினுள்ளே பரிகாரம் அமைத்திருப்பார்கள். கோயில் கட்டுவதற்கென்று ஒரு வரைமுறை இருக்கின்றது. ஏழு வகையான மதில் சுவர் இருக்கும். ஏழு வகையான பாதைகளை கடந்துதான் உள்ளே போக வேண்டும். இடது பக்கமாக சென்று வலது பக்கமாக வர வேண்டும். அப்படி வந்து பார்த்தால் உள்ளே தெய்வம் இருக்கும் இதைப் பார் என்பர் ஞானிகள் நமக்கு அமைத்துக் கொக்டுத்துவிட்டார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் இருக்கும். அதன் உச்சியில் மூன்று வகையாக கை போன்ற சக்கைகள் நீட்டிக்கொண்டு இருக்கும். அதில் மணி ஒன்றை கட்டி தொங்க விட்டிருப்பன். இடகலையும், பின்கலையும் சுழிமுனையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது உள்ளே மணி ஓசை கேட்கும். அது ஜெயகண்டி மணியோசை. இப்படிப்பட்ட மணியோசை கேட்கட்டும்.

     ஆசை இந்த உடம்பை எல்லாம் கொன்றுவிடும். இந்த உடம்பை வீசி எரிய வேண்டும். இந்த உடம்பை பலி கொடுக்காமல் உள்ளே போகமுடியாது. கொடிக்கம்பத்திற்கு விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்.

     இப்படி எல்லாம் கோயிலில் ஒரு அமைப்பு வைத்திருந்தாலும் நம்முள்ளே தலைவனை காணுகின்ற அறிவைப் பற்றி அவனுக்கு தெரியாது. கோயில் கட்டியவனுக்கும் தெரியாது. கோயில் இப்படித்தான் கட்ட வேண்டும் என்று தெரிந்த அவனும் போய்விட்டான். ஏன் இப்படி கோயில் கட்டி வைத்திருக்கிறோம் என்று அவனுக்கும் தெரியாது. இப்படி ஒரு சிவத்தொன்று, செய்திருக்கிறோம் என்று நினைத்துவிட்டான்.

     கடவுள் ஒன்றுதான் அவன்தான் தலைவன். அதற்கு பல வடிவத்தை தந்திருக்கிறான். கோயில் கட்டுவதற்கு பல விதிகள் செய்து கட்டியிருக்கிறான்.

         துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் –துதிபல என்று சொல்வார். இது மிகப்பெரிய வார்த்தை. துதிப்பாடல்கள் இருக்கின்றது. தேவாரம், திருப்புகழ், திருஅருட்பா போன்ற பாடல்களில் கடவுளைப் போற்றி பாடியிருப்பார்கள். கடவுள் மீது பக்தி கொண்டு இசையோடு அழகாக பாடுவார்கள். ஆனால் அவனுக்கும் தெரியாது. என்ன காரணம்? இவனுக்கு பாடத்தான் தெரியும். அவனுக்கு கோயிலை கட்டத்தான் தெரியும். சிலை எல்லாம் வைத்திருப்பான் அவ்வளவுதான் அவனுக்கு தெரியும்.

      மதி இல்லை நெஞ்சினுள் வாடுகின்றாரே – இறையை அறிய அறிவில்லை. அவன் நெஞ்சில் வாடுகின்றான். எத்தனையோ பேர்கள் இருந்தார்கள். கோயில் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், அன்னதானம் செய்தார்கள், கோதானம் செய்தார்கள், பூதானம், சொர்ண தானம் இவையெல்லாம் செய்தார்கள். இவ்வளவு செய்தும் என்ன ஆனது? அறுபது, என்பது வயது ஆகியும் ஒன்று புலப்படவில்லை. அவனுக்கும் தெரியவில்லை, யாரும் அவனுக்கு சொல்லவில்லை.     

     கடவுளுக்கு கோயில் கட்டினால் ஆசி கிடைக்கும். குளம் வெட்டினால் ஆசி கிடைக்கும் என்று நினைக்கிறான். தோத்திர பாடலை அமைத்தான், இசை அமைத்தான், பாடலை பாடினான். அவனும் பாடினான் கடைசியில் ஒன்றும் இல்லை.

     மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே. இதற்கு என்ன அடிப்படை? இதெல்லாம் ஒரு வகையான செயல்பாடுதான். பாராட்ட வேடியதுதான். கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல், அன்னதானம் செயதல், இதெல்லாம் சிறப்புதான், ஆனாலும் உடம்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

     இப்படி ஒரு முறை இருக்கிறதா?

     ஆமாம், உடம்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

     உடம்பைப் பற்றி அறியாவிட்டால் நிச்சயம் உனக்கு மரணம் வரும்.   

    

     உடம்பைப் பற்றி அறிய வேண்டும்.

     அதற்கு குருகுலவாசம் இருக்க வேண்டும்.

     குருகுலவாசம் இல்லை என்றால் உடம்பைப் பற்றி அறிய முடியாது. அதற்கும் ஞானிகளின் ஆசி இருக்க வேண்டும். உடம்பைப் பற்றி அறிந்தால்தான் உள் உடம்பைப் பற்றி அறிய முடியும். ஆசான் திருமூலதேவர்,

     

             காயப்பை யொன்று சரக்கு பலவுள

      மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு

      காயப்பைக் குண்ணின்ற கள்ளன் புறப்பட்டான்

      மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே.

                       திருமந்திரம் – உடலில் பஞ்சபேதம் – கவி எண் – 2122   

     என்பார். காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய என்பார்.

      காயப்பை ஒன்று சரக்குப் பலவுள – காயம் என்பது உடம்பு, சரக்கு பலபல என்பது நம் உடம்பில் தொநூற்றாறு தத்துவங்களும், எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளும் உள்ளன. இந்த புற உடம்பில் கருவிகரணங்கள் உள்ளன. இப்படிப்பட்ட புற உடம்பு ஒரு பை என்பார். இந்தக் காயத்தில் இருந்து கள்வன் புறப்பட வேண்டும். அசுத்தம் நீங்க வேண்டும். கள்வன் என்றால் திருடன் என்று அர்த்தம். பேசலாம், அழகாக பேசலாம், காவி உடை தரிக்கலாம். உருத்திராட்சம் அணியலாம், நெத்தியில் பட்டை இட்டிருக்கலாம், மொட்டை அடித்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றும் இருக்காது. அடிப்படையான காம தேகத்தை நீக்க முடியாது.         

     காம தேகம் நீங்காமல், ஒருவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, காம தேகத்தை நீக்காமல் எத்தனைப் பெரிய ஆளாக அவன் இருந்தாலும் சரி, ஞானிகள் அவனை மடையன் என்று கூட சொல்லமாட்டார்கள், சுத்த மடையன் என்று சொல்லுவார்கள்.

     மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே – உன்னுடைய அறிவு திறமையெல்லாம் சுத்ட குப்பை. என்ன ஐயா, இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கின்றேன், என்னை ஒன்றும் தெரியாதவன் என்று சொல்லிவிட்டீர்கள் என்றான். இதை யாரைக் கேட்டு செய்தாய், நீ யாரையாவது கேட்டு இருக்கின்றாயா, இல்லை உன்னை யாராவது செய்ய சொன்னார்களா? நீ என்றாவது ஞானிகளிடம் பணிந்து கேட்டு இருக்கின்றாயா? அவர்களைப் பணியாவிட்டால் அருள் செய்ய மாட்டார்கள், பணிந்தால்தானே அருள் செய்வார்கள். இப்படி பணிந்து கேட்டு இருந்தால்தான் அருள் செய்வார்கள். தொண்டு செய்வதற்கும் இப்படி பணிந்து கேட்க வேண்டும். இல்லையென்றால் செத்துப்போ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

     எங்களுக்கு வழியே இல்லையா என்பர் இல்லறத்தான் கேட்டான். இப்படி ஜென்மங்கள் தோறும் புண்ணியங்கள், வழிபாடுகள் செயஹ்டு வர வேண்டும். யாரேனும் ஒரு ஞானி வருவார். என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? என்று அந்த ஞானிதான் சொல்வார். அவருக்கு தொண்டு செய்து, நீ அவருடையை ஆசியைப் பெற வேண்டும், ஞானிகள்தான் நீ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்வார்கள்.

     நாங்கள் இப்பொழுது நேரடியாக தலைவனை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ஆனால் அப்படி செய்யக் கூடாது. சிவலிங்கத்தை சுட்டிக் காட்டி பூஜை செய்ய சொல் வேண்டும். சிவலிங்கத்தின் மீது பால் ஊற்றியும் தேன் அபிஷேகம் செய் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். தலைவனை நேரடியாக அறிமுகப்படுத்த கூடாது. இதுதான் பாடம்.

     இது கலி காலம். கலி காலத்தில்தான் ஞானிகள் மனம் இறங்கி அருள் செய்கின்றார்கள். ஞானியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி, அகத்தீசா என்று சொன்னால் போதும்.

     ஆசான் அகத்தீசா என்பர் சொன்னால் போதும். பெரிய இடத்திற்கு வந்த்விட்டான் என்று அர்த்தம். எடுத்த உடனேயே பிரதமரை நேராக பார்க்கிறான் என்பது போல் ஆகும்.

     இவன் என்ன செய்வான்? அங்காயி. மாரியாயி, மற்றும் பல சிறு தெய்வத்தை வழிபாடு செயது, நிறைய மலர்களை குவித்தும், ஆடு வெட்டி, மாடு வெட்டி அந்த தவத்தின் அருள் பெறுவதாக நினைப்பான். ஏதோ இப்படி எல்லாம் செய்து கடைசியில் அந்த ஜென்மம் போகும். இப்படி ஆயிரக்கணக்கான ஜென்மங்கள் உருவ வழிபாட்டில் இருந்துதான், ஞானிகளின் திருவடியைப் பற்ற செய்ய வேண்டும்.

     இந்த கலிகாலத்தில் பேசு என்று ஞானிகள் சொல்லுகின்றார்கள். அதனால் நான்களும் பேசி கொண்டிருக்கின்றோம். இல்லை என்றால் நானும் ஒன்றும் பேச முடியாது. நாங்கள் என்ன செய்வோம்? இதுபோன்ற பூஜையை நாங்களும் சொல்லுவோம், கோயில் கட்டவேண்டும். பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி, இதோடு இந்தக் கதையை முடித்து விடுவோம். இப்பொழுது தலைவனும் இறங்கி அருள் செய்கிறான். நாங்களும் இறங்கி சொல்லி கொண்டு வருகிறோம் தலைவனும் இறங்கி சொல்ல சொல்லுகிறோம்.

     ஆசான் அகத்தீசர் திருவடியைப் பற்றுங்கள். ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லுங்கள். ஆசான் இராமலிங்க சுவாமிகள், ஆசான் மாணிக்கவாசகர், ஆசான் அருணகிரிநாதர் இவர்களின் திருவடியைப் பற்றி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். இதன் விளைவு என்ன ஆகும். ஞானிகளின் திருவடி வழ்பாட்டில் ஈடுபடச் செய்து, அதன் மூலமாக பல ஜென்மங்கள் எடுக்க செய்து, கடைசியில் இங்கே வரவேடிய மனித வர்க்கத்தை, இப்பொழுது, ஆரம்பத்திலேயே ஞானிகளின் திருவடியைப்பற்ற வேண்டுமென்று சொல்லும் அளவிற்கு நாம் வந்திருக்கின்றோம். ஆனால் ஞானிகள் எல்லோரும் சிவ வழிபாடுதான் சொல்வார்கள். சிவத்தை பற்றியே பேசுவார்கள். தில்லை நடராஜப்பெருமான் என்பார்கள, திருவண்ணாமலை அப்படி இப்படி என்று சொல்லி விட்டு போய்விடுவார்கள். கடைசியில் ஒன்றுமே சொல்லாமல் போய்விடுவார்கள். தில்லை அம்பலவாணனை வணங்க வேண்டும் என்பார்கள். அப்படியும் சொல்லிவிட்டு இப்படியும் சொல்லுவார்கள். மகன் குதம்பைச்சித்தர்,

     தாவார மில்லை தனக்கொரு வீடில்லை

      தேவார மேதுக்கடி – குதம்பாய்

      தேவார மேதுக்கடி

                                         மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் – 30

                என்பார். தனக்கு இருப்பதற்கு தாவாரமில்லை, ஆனால் தேவாரம் எதற்கு என்பார். அவர்கள் எதற்காக பாடியிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மகன் மாணிக்கவாசகர் உடம்பைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார்.

     பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்

            பரிந்துநீ பாவியே னுடைய

      ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

            உலப்பிலா ஆனந்த மாய

      தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

             செல்வமே சிவபெரு மானே

      யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

            எங்கெழுந் தருளுவ தினியே.

                                                                -திருவாசகம் – பிடித்தபத்து – 9

      ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி  – நச்சுத் தன்மையான உடம்பை அனல் கொண்டு உருக்கி, உள்ளொளியைப் பெருக்கினார். அதை மட்டும் சொல்லியிருப்பார் மகன் மாணிக்கவாசகர். இப்படியெல்லாம் திருவாசகம் தேவாரம் இருக்கும். இதுவும் சான்றோர் நூல்தான். நால்வர்கள் காலத்தில் இப்படித்தான் பக்தி நெறி இருந்து உள்ளது, ஊர் ஊருக்கு போக வேண்டியது, பூஜை செய்ய வேண்டியது பின்பு வர வேண்டியது. அவர்கள் மட்டும் முன்னேறி வந்துவிட்டார்கள்.

     ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள். குரு பாரம்பரியம் என்று வந்தது, குருவிடம் ஆசி பெறுதல், திருவடியைப் பற்றி பூஜை செய்தல், தன்னிலையை உயர்த்திக் கொள்ளுதல், தவத்தை முடித்துவிடுதல், உள் உணர்வை தட்டி எழுப்புதல், ஜோதி காணுதல், பிரவாமைக்குரிய மார்க்கத்தை தேடுதல், வெற்றி பெறுதல் இப்படி ஞானிகள் இருப்பார்கள்.

     இல்லறத்தான் உருவ வழிபாடு செய்தால், பலவகையான உருவை அமைத்தல், கோயில் கட்டுதல், வழிபாடு செய்தல், பூஜை செய்தல், கும்பாபிஷேகம் செய்தல், புதிய புதிய் கோயில் கட்டுதல், இப்படி ஒரு போக்காக இருக்கும். இது அல்ல வழி என்று நாங்கள் சொல்ல முடியாது. நாங்கள் சொல்லக் கூடாது. அந்த இடத்திற்கு நாங்கள் வரமுடியாது.

     எப்படியாவது கடவுளை கும்பிட்டுக்கொள், எந்த காலத்திலேயாவது புண்ணியம் செய். பத்து பேருக்கு அன்னதானம் செய், ஞானிகளை வணங்கு, ஞானிகள் என்றாவது ஒரு காலத்தில் மனம் இறங்கி அருள் செய்தால், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இது அல்ல, அது அல்ல என்று சொல்லக்கூடாது.

     ஐயா, இன்று வரையில் நாங்கள் இந்த கொள்கையைத்தான் கடைப்பிடித்தோம் என்று சொல்லும் இல்லறத்தார்களைப் பார்த்து, இதுநாள் வரையிலும் நீ கடைப்பிடித்த கொள்கை உன்னுடைய ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கும் ஆன்மாவிற்கும் ஆக்கம் தராது என்று சொல்வோம்.

     இல்லறத்தானையோ நீ கடைப்பிடித்த கொள்கை ஜென்மத்தைக் கடைத்தேற்றவோ, ஆன்மா பெறவோ, இனி மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு உற்ற துணையாக இருக்காது என்றார்.

     என்ன காரணம் என்று இல்லறத்தான் கேட்டான்.

     முதலில் அவன் எங்கள் திருவடியைப் பணிய வேண்டும். அவன் பணிந்தால்தான், அவனுக்கு சொல்ல முடியும். அப்படி இல்லாவிட்டால் அவனுக்கு சொல் வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட முடிவை ஞானிகள் எடுத்துவிட்டார்கள்.

     திருவடியைப் பணிய வேண்டும். அப்படி பணியாவிட்டால், நீ யாரோ, நான் யாரோ, உனக்கு ஏன் சொல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள். அவனுக்கு ஏன் சொல்ல வேண்டும், அவன் குருகுலவாசத்தில் இருந்தானா, உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீ உன் கொள்கையை அப்படியே வைத்துக் கொண்டு போ என்று சொல்லிவிடுவார். இப்படி இந்தத் துறையில் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

     அதே சமயத்தில் குருகுலவாசம் பெற்றவர்கள், குருகுல வாசத்தை விரும்புகின்றவர்களும், ஆசான் அகத்தீசர் ஆசியைப் பெற்றவர்களுக்கு மட்டும் அந்தத் தொடர்பு கிடக்கும். ஞானிகளின் தொடர்பு புண்ணியவான்களுக்கும், ஆசான் அகத்தீசரின் திருவடியைப் பற்றுகின்றவர்களுக்குத்தான் கிடக்கும். குருகுலவாசம் இல்லை என்றால் கிடைக்காது.

     இந்த சமுதாயத்தில், இப்படிப்பட்ட பெருமைகளை சொல்வதை எல்லாம் ஒரு எல்லையோடு நிறுத்திக்  கொள்ள வேண்டும், விரும்பினால் சொல்லலாம். கிட்டத்தட்ட நான்காயிரம் ஆசான் அகத்தீசரின் திரு உருவப்படங்களை மக்கள் வாங்கி சென்று இருக்கிறார்கள். இது சாதாரண விசயமில்லை.

     எங்கெல்லாம் ஆசான் அகத்தீசர் திருஉருவப்படம் இருக்கிறதோ அங்கே எல்லாம் ஆசி பெற வாய்ப்பு உண்டு.

     மீண்டும் ஒரு புதிய சகாப்தம், சுத்த ஆன்மிகம் வெளிப்படுகின்ற காலம் இது. ஞானிகளே வெளிப்படுகின்றார்கள், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆக அந்த வழிபாடு சரியில்லை. இதுதான் உண்மை என்றார்கள். இந்தக் காலத்தை, இப்படிப்பட்ட சூழ்நிலையை ஞானிகளே உருவாக்குகிறார்கள். ஞானிகள்தான் இப்படிப்பட்ட காலத்தை உருவாக்க முடியும்.

    

     அதை ஞானிகளே செய்து கொண்டும் இருக்கிறார்கள். நம்மிடம் கேட்டால் சொல்லலாம், நாமாக முடிவு எடுத்து சொல்ல முடியாது.

     அவர் அந்த இடத்திலிருந்து வரமுடியாது. அவர்களுக்கு அதுதான் எல்லை. அதைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.

      பதிபல வாயது பண்டுஇவ் வுலகம் – பொன்னான உலகத்தில் பல தெய்வங்களை சொன்னாலும், ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்பார்.

     கடவுள் ஒருவன் தான். கடவுளை சுட்டிக் காட்டுவதற்கு பலவகையான தோற்ற உருவங்களை செய்திருப்பார்கள். இல்லறத்தார்களும் அங்கே வருவார்கள். ஆனால் அவர்கள் கடவுளை அடைய கால தாமதம் ஆகும். அவர்களுக்கும் பாதை இருக்கிறது. பலவகையான உருவழிபாடு செய்திருந்தாலும், கடவுள் உண்டு என்று நம்புகின்றான்.

     எப்படி பல நதிகள் கடலில் கலக்கின்றதோ, அப்படியே பலவகையான தோற்ற உருவங்களை செய்திருப்பார்கள். இல்லறத்தார்களும் அங்கே வருவார்கள். ஆனால் அவர்களை கடவுளை அடைய கால தாமதம் ஆகும். அவர்களுக்கும் பாதை இருக்கிறது. பலவகையான உருவழிபாடு செய்திருந்தாலும், கடவுள் உண்டு என்று நம்புகின்றான்.

     எப்படி பல நதிகள் போய் கடலில் கலக்கின்றதோ, அப்படியே பலவகையான கடவுள் வழிபாடும். கடவுளை அடைய துணையாக இருக்கும். அதுவும் கடவுளை அறிவதற்கான வாய்ப்பு. விரைவாக போக முடியாது. விரைவாக போகின்ற ஒரே பாதை, ஞானிகள் வழிபாடு தான்.

     ஞானிகள் வழிபாடுதான் விரைவாக சொல்லுகின்ற பாதை. அதை நமக்கு மகன் அழுக்கண்ணர்,

லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே                                                                 – நந்திதிருமூலரையும்

லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்

சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்

உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய

கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்

ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன்                                                                  – பூசைசெய்தால்

சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே

கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.

                                                -மகான் அழுக்கண்ணர் – கவி எண் – 6

     இந்த பாடல் ரொம்ப கருணையுள்ள பாடல். இது இயற்கை, இந்த பாடலை நாட்டு மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும். இப்படி எல்லாம் ஒரு அமைப்பு இருக்கிறது. பூஜை செய்யுங்கள் என்று மக்களிடம் சொல் வேண்டும்.

     லபிக்கவழி சொல்லியிருக்கிறேன் ஆத்தாளே என்றும், சித்திக்க வழி வேண்டுமா, உனக்கு கடவுள் ஆசி வேண்டுமா, நீ ஞானியாக வேண்டுமா அல்லது முன் செய்த பாவத்தை பொடியாக்க வேண்டுமா, வறுமை நீங்க வேண்டுமா, நல்ல இல்லறம் வேண்டுமா, சிறந்த அறிவு வேண்டுமா, எமனையே பொடியாக்க வேண்டுமா, அதை எல்லாம் கிடைக்க ஆசான் ஆசி செய்வார்.

     ஒரு மனிதனுக்கு, வெற்றி எது? சிறந்த சொல்வமா, ஆள் படையா, கல்வியா, வியாபாரமா, பொருளா, இன்னும் வேறு எது என்று கேட்டால் இவை அத்தனையும் முயற்சித்தால் அடைய கூடியதுதான். பின்பு எது நீ பெற்ற இலாபம் என்று கேட்டான்? ஆசான் ஆசி பெற்று இனி மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டும் என்று கேட்பது ஒன்று தான் வெற்றி பெரும். இதற்குதான் லபிக்கவழி சொல்லுகிறேன்.

     எனவே, லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும், லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்த போகரையும் என்று மகன் அழுக்கண்ணர் நம்மீது கருணையோடு சொல்லி இருக்கிறார்.

     ஞானிகளை நீ வணங்கு, உனக்கு வெற்றிதான். ஞானியை வணங்குகின்றவனுக்கு ஊனமில்லை, அவன் எதை தொட்டாலும் வெற்றி பெறலாம். தடையே இருக்காது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.

     ஆசான் திருமூலதேவர், பதிபல வாயது பண்டுஇவ் வுலகம், விதிபல செய்துஒன்று மெய்ம்மை உணரார் – பல தெய்வத்தை பல வகையாக கும்பிடலாம். ஆனாலும் மெய்ம்மை உணரார். துதிபல தோத்திரம் சொல்லவல்லாரும் –  அப்படியே வழியறியாமல் தடுமாறுகிறார்கள். அறுபது வயது வரை பாடுபட்டேன், பக்தி செலுத்தினேன், ஊர் ஊராக சுற்றினேன், அந்தக் குளத்தில் மூழ்கினேன், இந்த நதியில் மூழ்கினேன், ஆற்றில் குளித்தேன் என்றான். நீ இப்படி எல்லாம் செய்தாலும் அழுக்கு போகாது, உன் தேகத்தில் இருக்கும் அழுக்கு போகாது என்பார். மகன் சிவவாக்கியர்.

    

                அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே

      அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்

      அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்

      அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே.

                                            – மகன் சிவவாக்கியர் – கவி எண் – 215

    

                உடல் அழுக்கு, நீங்காமல், எந்த காவேரியில் குளித்தாலும், கங்கையில் குளித்தாலும் வெற்றி பெற முடியாது. உடல் மாசு ஒன்று இருக்கு. அதைத் தலைவன் ஆசி பெறாமல் அறிய முடியாது. ஆசான் திருமூலர்,

                களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

      களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

      களிபணு காத கதிரொளி காட்டிப்

      பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

                                            -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் – 114

                இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

     அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே – தினம் தினம் விதவிதமான சவுக்காரம் (சோப்பு) போட்டு தேய்த்து, குளித்தும் ஒன்றும் இல்லை.

    

     அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம் – நம் உடம்பில் எந்த இடத்தில் அழுக்கு இருக்கிறது, எந்த இடத்தில் அழுக்கு இல்லை என்று உனக்கு தெரியுமா என்பார்.

     அப்படி அறிந்தால் அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே என்பார். மேலும் ஆசான் சிவவாக்கியர்,

      மூலமாங் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை

      காலமே யெழுந்திருந்து நாலுகட் டறுப்பிரேல்

      பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம்

      ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே

                                                                     -மகான் சிவவாக்கியர் – கவி எண் – 155

                இதுதான் ஞானிகளுடைய பேச்சுக்கள். இதுதான் அவர்கள் வழிபாடுகள்.

      குருகுலவாசம் இருந்தாலன்றி எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. ஆகவே நாம் காட்டுகின்ற பாதை குருகுலவாசம்.

     இப்போது நாம் எல்லாம் என்ன செய்ய வேண்டும். நமக்கு குருகுலவாசமில்லை. ஒங்காரகுடிலையும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இருந்தாலும் இங்கு பேசப்பட்ட இந்த கருத்து உங்களுக்கும், நாட்டுக்கும் பயன்படும்.

     இந்த கருத்துகள் எங்கெல்லாம் பரவுகின்றதோ, அங்கெல்லாம் உண்மை தெரியும்.

     குருகுலவாசம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் தினமும் ஆசான் அகத்தீசரை வணங்குகிறோம். ஓம் அகத்தீசாய நம என்று 108

முறை நாமத்தை சொல்லுகிறோம். அப்படி சொல்லி, அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

     மேலும் உண்மையை அடியேன் அறிய வேண்டுமென்று கேட்க வேண்டும். உங்கள் ஆசி பெற்ற மகன் உலகத்தில் இருப்பார்கள். உங்கள் ஆசியால் நவகோடி சித்தர்கள் சித்திப் பெற்றிருக்கிறார்கள். மேலும் சித்தி பெற காத்திருக்கிறார்கள் என்பதை உங்கள் அருளால் அறிந்துகொண்டேன்.

     எனவே உண்மையான ஆசானை அறிந்து கொள்வதற்கு, தினமும் ஆசான் அகத்தீசரை இப்படியெல்லாம் பூஜையில் கேட்க வேண்டும். அப்படி தினம், தினம் கேட்டால், அந்த சந்தர்ப்ப சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கி தருவார்கள்.

     நீங்கள் உலக ஆசானை நம்பி ஏமாற வேண்டாம். ஆசான் அகத்தீசரே வந்து உதவி செய்வார்கள். அவர் எப்போதும் வந்து உணர்த்துவார்.

     அவர் உணர்த்த உணர்த்த உண்மைப் பொருள் தெரியும். ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். இதுவே உபதேசம் ஆகும். இதுவே சிறந்த வழிகாட்டியாக அமையும்.

     ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

    

     ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும்.

                                                -திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் –  370

                என்ற திருக்குறளின் சாரமே இந்த சொற்பொழிவின் சாரமாகும்.

     ஆலவாய் அண்ணலின் அருந்தவ புதல்வனே

     ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் போற்றவே

     மருதூரில் அவதரித்த மாமன்னர் வள்ளலார்

     அருளாட்சி புரிந்திடுவார் அகிலம் செழிக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 177
Total Visit : 208911

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version