22.08.1997 அன்று இல்லறத்தில் தவம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்திசாய நம
அன்புள்ள நண்பர்களே வணக்கம்
     அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சித்த தத்துவத்தைப் பற்றி பேசினோம். சித்த தத்துவம் என்பது கடினமான ஒன்று. அதைப்பற்றி பேசியிருக்கிறோம். ஆனால் ஆசான் ஆசியில்லாமல் உணர முடியாது.
     சித்தர் மொழி பேசவென்றால் வெகு நாள் செல்லும்
           சித்தரிடம் காத்திருந்து வெகு நாள் செல்லும்
     ஆகவே வெகு நாள் நாம் காத்திருக்க வேண்டும் என்றார். அது அப்படிப்பட்ட விசயம். எல்லோரும் அதை அறிந்து கடைப்பிடிக்க முடியாது.
     குருகுலவாசம் உள்ளவர்கள்தான் கடைப்பிடிக்க முடியும். இதை பூரணமாக சரணாகதி அடைவது என்றும் சொல்வார்கள், அர்ப்பணித்தல் என்றும் சொல்லலாம். நாம் சரணாகதி அடைந்தால்தான் குருகுலவாசத்திலிருந்து உண்மைப்பொருளை அடைய முடியும்.
     ஆக நேற்று பேசிய அந்த தத்துவங்கள் உடலும், உயிரையும் பற்றியவை. நமக்கு இந்த தேகத்தை அமைத்ததே கடவுளை அடைவதற்குத்தான். நமக்கு இந்த உடம்பு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதைப்பற்றி நேற்று பேசினோம்.
     அந்த உடம்பை முறையறிந்து, வகையறிந்து, தொகையறிந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டால் அந்த உடம்பே நமக்கு பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும். அது அளவிலாத பெருமை உண்டாக்கும் என்று நேற்று பேசினோம்.
     ஆக கடவுளை எப்படி அடைவது? கடவுள் நமக்கு கொடுத்த இந்த உடம்பை, காமத்திற்கு பயன்படுத்த கூடாதா? காமத்திற்குப் பயன்படுத்தலாம்.
     இல்லறம் நடத்தலாம். இல்லறம் நடத்திதான் அந்த இலட்சியத்தை அடைய முடியும். யோகிகள்தான் கடைசி எல்லைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் அந்த உடம்பை பயன்படுத்தும் முறையோடு பயன்படுத்துவார்கள்.
     சாதாரண தொடக்க நிலையில் உள்ளவர்கள் உடம்பின் துணையுடன் இல்லறத்தை நடத்தித்தான் அந்த இலட்சியத்தை அடையமுடியும். இல்லறத்தை நடத்தும்போது இந்த தேகம் போய்விடுமே? அப்படி அல்ல. இல்லறத்தான் சொன்னார்.
     இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
      முயல்வாருள் எல்லாம் தலை.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
உடம்பின் இயல்பு, பெண்ணின் இயல்பு, ஆணின் இயல்பு, இயற்கையின் இயல்பு, இதையெல்லாம் புரிந்து செயல்படுகின்ற வாழ்க்கை.
என்ன செய்வான்? வாழ்வில் போராட்டம் இருக்கும், மனப்போராட்டம் இருக்கும். சரி, இந்த போராட்டம் என்பது இயற்கையா? செயற்கையா? இது இயற்கைதான்.
இது உலகம் தோற்றுவிக்கும்போதே பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள தொடர்பை இப்படி அமைத்து வைத்திருக்கிறான். இந்த இயல்பு இயற்கைதான். இயல்பு என்றால் இயற்கைதான். அதைதான் இயல்பினான் இல்வாழ்க்கை என்றார்.
முறையறிந்த இயல்பு. அதன் போக்கிலேயே சென்று இயற்கையின் இயல்பையறிந்து கொள்ள வேண்டும். இயற்கை எப்படி உடம்பை அமைத்திருக்கிறது? என்று அறிந்துகொள்ள வேண்டும்.
உடம்புக்குள்ளேயே ஒரு சுடர் இருக்கிறது. உடம்புக்குள்ளேயே உள்ள ஜோதியை அறிந்து கொள்ளவேண்டும். அந்த ஜோதியை அறிந்து கொல்வதற்கு இந்த உடம்பை நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்த உடம்பை பயன்படுத்தும்போது தேகத்தை விடுவதா? ஆமாம் விடத்தான் வேண்டும். விகாரமான தேகம் நீங்கணும். ஆகவே இந்த தேகத்தை பற்றி ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
மாதர்தோள்சே ராததேவர் மானிலத்தி லில்லையே!
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 529
மாதர்தோள்சே ராததேவர் மானிலத்தி லில்லையே! – பெண்ணுறவு கொள்ளாதவன் கடைத்தேற முடியாது. அப்ப பெண்ணுறவு கூடாது என்று சொல்வது ஏன்? பெண்ணுறவு இல்லையென்றால், உடம்பில் கொழுப்பு மண்டிப்போய் அறிவு வேலை செய்யாது.
அறிவு வேலை செய்யாமல் போனால்? அதைத்தான் சொன்னார் அந்த அறிவு சிறப்பறிவாக மாறவேண்டும். சரி உடம்பில் விகாரம் அல்லது மனப்போராட்டம் இருந்தால், கடவுளை அடையமுடியாது.
கடவுளை அடைவதற்கு இந்த உடம்புதான் வேண்டும். இந்த உடம்பை விடுவதா? அல்லது வைத்திருப்பதா? என்றால், அது பெரிய பிரச்சினைதான். இதை அறிவதற்கு குருகுலவாசம் வேண்டுமென்று சொல்வார். அதன் போக்கிலேயே போகவேண்டும்.
மகான் வள்ளுவப்பெருமான் பெரிய யோகியல்லவா? இயல்பினான் இல்வாழ்க்கை என்றார். ஆக இல்லறத்தில் இருந்து கொண்டிருக்கிறான். கடவுளை அடைவதற்கு என்ன வேண்டும் என்றான்.
ஆக உடம்புதான் துணையாக இருந்தாலும், இந்த உடம்பல்ல அது. அப்ப மனைவியோடு இல்லறம் நடத்துகிறான். இல்லறம் நடத்தி பல ஆண்டுகள் ஆசான் ஆசி பெறுகிறான்.
பல ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து அதன் போக்கிலேயே இல்லறம் நடத்தி வந்து தினம் தியானம் செய்து, தினம் இல்லறத்தானுக்குரிய கடமையை செம்மையாக செய்கிறான். மனைவியிடம் அன்பு காட்டுவது, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வது, முறையறிந்து பொருள் ஈட்டுவது, பேராசை இல்லாதவனாக, பொறாமை இல்லாதவனாக, வஞ்சனை இல்லாதவனாக வாழ்வது, தினம் இல்லறம் முறையோடு நடத்தி வருவது இப்படி முறையாக இருக்க வேண்டும்.
பொருள் சேர்க்கும்போதுதானே ஒருவன் பாவியாகிறான். பொறாமை காரணமாக ஒருவன் பாவியாவான். இதெல்லாம் பலகீனங்கள்.
கடவுளை அடைவதற்குத் தடையாக இருப்பது பொறாமை, பேராசை, கொடுமை, வன்செயல், சினம் என்று சொல்வான். இந்த குணக்கேடுகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் தடையாக இருக்கிறது.
குணக்கேடுகளையெல்லாம் நீக்கினாலன்றி அந்த இடத்திற்கு போகமுடியாது. எனவே பேராசையை ஒழிக்கணும். அதற்கு ஆசான் ஆசி இருக்க வேண்டும்.
ஆக இப்படிப்பட்ட குணக்கேடு உள்ளவர்கள் கடவுளை அடைய முடியாது. சரி ஒரு பக்கம் போராட்டம் இருக்கிறது. மேலும் காம விகாரம் உடம்பில் இருக்கிறது.
காம விகாரத்தை மனைவி மூலமாக தணித்துக் கொள்கிறான். மனம் ஆறுதல் அடைகிறது. இதைத்தான் ஆசான் சிவவாக்கியர் சொன்னார்,
மாதர்தோள்சே ராததேவர் மானிலத்தி லில்லையே!
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
     இல்லையென்றால் சிறக்காது என்று அர்த்தம். இதுதான் இரகசியம். குருகுலவாசிக்கு தெரியும்.
     பெண்ணுறவு கொள்ளாதவனுக்கு கொழுப்பு மண்டிப்போய் அறிவு வேலை செய்யாது. அதன் போக்கிலேயே செல்கிறான். அதுமாதிரி இல்லையென்று சொன்னால் அந்த இயல்போடு கலந்து கொள்ளவேண்டும்.
     அதுதான் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்றான். அப்ப அந்த பெண்ணுறவு கொண்டு காமத்தை தணித்து, காம விகாரமில்லாமல் இருந்தால், இரத்த ஓட்டம் நல்லபடி இருக்கும், மூளை நன்றாக வேலைசெய்யும், அறிவு தெளிவாக இருக்கும்.
     ஒரு பக்கம் காமவிகாரத்தை தணித்துக் கொள்கிறான். ஒரு பக்கம்  நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்கிறான். சேர்க்கப்பட்ட பொருளை நல்ல காரியத்திற்கே பயன்படுத்துகிறான்.
     இப்படி ஈட்டுகின்ற பொருள் நீதிக்கு உட்பட்டும், செலவு செய்யும்போது பொது நோக்கு உள்ளவனாகவும், அற நெறிக்கு உட்பட்டும், செலவு செய்கிறான். அப்போது சிறந்த முயற்சி உள்ளவனாக இருக்கிறான்.
     பொருளை ஈட்டுகிறான், தன் மனைவி மக்களுக்கு கடமையை செய்கிறான். விருந்தை உபசரிக்கிறான், பிறருக்காக வாழ்கிறான். இப்படியே செய்கிறான்.
     ஆக இப்படியே ஒரு இயல்பு, அதன் போக்கிலேயே செல்கிறான். எத்தனை வருடம் என்றான்? அதுதான் “வெகுநாள் செல்லும்” என்றார். இதற்கு ஆண்டுகள் பல ஆகும். பத்து வருடம் ஆகலாம், பதினைந்து வருடம் ஆகலாம்.
     இதற்கிடையில் தியானமும் செய்து கொள்கிறான். தியானம் செய்வதற்கு தடையாக இருப்பது விகாரங்கள். காமவிகாரத்தை தணித்துக் கொண்டவுடன் மனது ஆறுதல் அடைகிறது.
     அடப்பாவி, பேராசைக்காரன், கொடும்பாவியப்பா, என்னய்யா பிறர் சொத்தை அபகரிக்கிறான் என்ற பெயரில்லாமல் இருக்க தலைவன் ஆசி பெற வேண்டும். பேராசை இல்லாதவனாகவும், பொறாமை இல்லாதவனாகவும் பண்புள்ளவனாகவும் இருக்கிறான்.
     தினம்தினம் தியானம் செய்கிறான். தியானம் செய்யச் செய்ய எல்லா வகையான குணக்கேடும் நீங்கி ஆசிபெறுகிறான். ஆசி பெறப்பெற அறிவு தெளிவடைகிறது.
     அப்ப அறிவு தெளிவடைவதற்கு எத்தனை வருடம் ஆகும்? என்றான். பல ஆண்டுகள் ஆகலாம்.
     அதுதான் இயல்பினான் இல்வாழ்க்கை என்றான். பல ஆண்டுகள் ஆகலாம். இப்படியே ஆசிபெறபெற, தலைவனுக்கும் இவனுக்கும் நெருக்கம் அதிகமாகும்.
     பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் இப்படி இருந்துதான் வரமுடியும். அப்படி இருந்தால்தான் இலட்சியத்தை அடைய முடியும். அப்போதுதான்,
    
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
அறத்தின் இயல்போடு இருந்து தினம் தியானம் செய்து, செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். பிறகுதான் ஆசான் ஆசியோடு வாசி வசப்பட வேண்டும். வாசி வசப்படும் வரையில் ஒரு முறையோடுதான் இருக்க வேண்டும். இதற்கு படிக்கட்டுகள் இருக்கு. இதை நான்கு படிக்கட்டுகள் என்பார்கள்.
இதை அறம், பொருள், இன்பம், வீடு என்பார்கள். இந்த நான்கு படிக்கட்டுகளை பின்பற்றித்தான் வரவேண்டும். இப்ப நாம் சொன்னது இல்வாழ்க்கை ஐந்தாம் அதிகாரம். இதற்கு முன்னே நான்கு அதிகாரம் இருக்கு. அறம் வலியுறுத்தல் என்று சொல்வார். அரனை திணித்தல் என்று சொல்வார். வலியுறுத்தல் என்றால் திணித்தல், திணிக்கிறான்.
ஒவ்வொருவரையும் நெறிக்கு உட்பட்டு வாழவேண்டுமென்று சொல்கிறான். அப்ப நாலாவது அதிகாரத்தை சொல்லிவிட்டு ஐந்தாவது அதிகாரத்தில் இந்த பாடல் இருக்கிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி கடைப்பிடித்து வந்தால்தான் நன்றாக இருக்கும்.
இந்த துறையில் வருகின்ற மக்கள் குடும்பத்தை விட்டுவிட்டால் முடியாது. குடும்பத்தை விட்டால் மனப்போராட்டம் இருக்கும். ஆக காலப்போக்கிலே இயல்பாகவே கசப்பு வர வேண்டும். குறிப்பிட்ட ஆண்டிற்கு அப்புறம் இயல்பாகவே அந்த கசப்பு வந்துவிடும். கசப்பு வரும் வரையில் அதன் போக்கிலேயேதான் போய்க்கொண்டிருக்க வேண்டும். இப்படித்தான் அமைத்திருக்கிறான்.
முயல்வாருள் எல்லாம் தலை – அவன் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு ஏதேதோ நூல்களைப் படிப்பான். மனைவி மக்களை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவான்.
அவன் காட்டில் போய் தவம் இருப்பான். பகல் நேரத்தில் ஒரு ஆர்வம் இருக்கும். மலையில் போய் உட்கார்ந்து கொண்டு, தவம் செய்யணும் என்று நினைப்பான். மாலைப்பொழுது வரை கூட உணர்வு இருக்கும்.
இரவு ஏழு மணி, ஏழரை மணிக்குப் பிறகு பயம் வந்துவிடும். திரும்பியும் வரமுடியாது. அப்படியே தடுமாறுவான். உயிரைப் பிடித்துக் கொண்டிருப்பான். ஒரு பக்கம் நரி ஊளையிடும், ஒரு பக்கம் புலி, முள்ளம்பன்றிகள், காட்டு மிருகங்கள் மிரட்டிக் கொண்டிருக்கும்.
ஒரு பக்கம் விஷஜந்துகள், ஆக விடிவதற்குள் இவன் நடுங்கி சில மிருகங்கள் கொன்றாலும் கொன்றுவிடும். அப்படி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்பக்கூட ஒரு அன்பர் போய் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவனுடைய வினைப்பயன் அது. அப்ப முயல்கிறான், கடவுளை அடைய முயற்சிக்கிறான்.
யாரய்யா சொன்னது உனக்கு? கடவுளை அடைய முயற்சிக்கும்போது எங்கே போவது? காட்டுக்குப்போவதா? காட்டுக்குப்போக முடியாது. அதுதான் சொன்னார், இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார்.
அறத்தின் இயல்பை அறிந்து கொண்டான். கடவுளை அறிந்து கொண்டான். உடலின் இயல்பு, இயற்கையின் இயல்பு, பெண்ணின் இயல்பு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்ட இயல்பு, பசியின் இயல்பு,  பசியினுடைய கொடுமையின் இயல்பு. பசிக்கு உணவு தந்தாள் ஏற்படக்கூடிய விளைவு இத்தனையும் அறிந்து கொள்ளவேண்டும்.
இத்தனையும் அறிந்து கொண்டவன் முயற்சிக்கிறான். அது குருகுலவாசத்தால்தான் முடியும். முயல்வாருள் எல்லாம் தலை – முயற்சிக்கிறான்.
மக்களெல்லாம் கடவுளை அடைய முயற்சிக்க வேண்டும். அதிலும் தமிழக மக்கள்தான் அதிகமாக கடவுளை அடைய வேண்டுமென முயற்சிப்பார்கள். ஆனால் முயற்சித்தாலும், இந்த மாதிரி மலையில் போய் உட்கார்ந்தால் என்னவாகும்? அங்குள்ள ஜீவராசிகள் தின்றுவிடும்.
கடவுளை நம்பித்தானே போகிறான்? கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? என்றால், யாரய்யா உன்னைப் போகச்சொன்னது? கடவுள் உன்னிடம் சொன்னாரா? கடவுளை அடையவேண்டுமென்றால் யாரிடம் போகவேண்டும்? குருகுலவாசம் இருந்தால்தானே போகலாம்.
இவன் இஷ்டத்திற்கு சென்று காட்டில் உட்கார்ந்திருக்கிறான். நாய் நரி அடித்து தின்றுவிட்டுப்போகுது. நோக்கம் நல்ல நோக்கம்தான். அதற்கு தகுதி இருக்கவேண்டும்.
வழிகாட்டுதல் இருக்க வேண்டுமில்லையா? இப்படி சிலபேர் இறந்துபோவது இயல்புதான். அப்ப முயல்வாருள் எல்லாம் தலை என்று சொல்லும்போது இதெல்லாம் புரிந்து முறையோடு வந்தால்தான் நன்றாக இருக்கும்.
புண்ணியத்தையும் செய்து கொள்ள வேண்டும், பூஜையும் செய்து கொள்ள வேண்டும். இல்லறத்தில் இருந்தால்தான் முடியும். உடம்பை விட்டுவிடக் கூடாது. நேரா நேரத்திற்கு நல்ல பசி எடுக்கிறது. எந்த உணவு சேர்க்க வேண்டுமோ, முறையறிந்து சேர்க்க வேண்டும்.
அது என்ன முறையறிந்து? உணவை சேர்த்து உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அப்ப உடம்பை காப்பாற்ற கற்றுக் கொண்டவன், தலைவனை அறிவான்.
ஆக உடம்பையும், உயிரையும் அறிந்தவன் இயல்பை அறிந்தவன் என்று அர்த்தம். இதெல்லாம் நாம் முன்பே சொல்லிக் கொண்டிருக்கிறோம். நேற்று பேசியதற்கு முன்னுரை இது.
அப்ப நேற்று தத்துவம் பேசியிருக்கிறோம். அதிலிருக்கும் இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த முறையை அவன் பின்பற்றனும். இயல்பு அறிய வேண்டும் என்று சொல்வான்.
அப்ப முயற்சிக்கிறோம். அப்ப முயற்சிப்பது சரி, முயற்சிக்கிறானய்யா, சரி தலைவனை அறியாமல் எப்படி முயற்சிப்பது? தலைவன் யார் என்று அறியணும். ஞானிகள்தான் தலைவன், நவகோடி சித்தர்கள் இருக்கிறார்கள். நவகோடி சித்தர்களும் ஆசான் சுப்பிரமணியரையும், ஆசான் அகத்தீசரையும் பூஜை செய்திருக்கிறார்கள்.
தலைவனை அறிந்து கொள்ளாமல் ஒருவன் முயற்சிக்க முடியாது. ஒருவன் இருக்கிறான். இல்லறத்தில் இருந்து முயற்சிக்கிறான்.
அய்யா, இவன் இந்த கூட்டத்திலேயே இருப்பான். ஆனால் தலைவனை அறிந்து பூஜை செய்வான். இப்ப நாம் என்ன செய்வோம்? தொகுத்துக் கொடுப்போம்.
இல்லறத்தானுக்கு அகத்தீசனை பூஜை செய்ய வேண்டும். இப்படித்தான் இருந்து கொள்ளவேண்டும். இப்படித்தான் அகத்தீசனை பூஜை செய்யவேண்டும். தொகுத்துத்தருவோம். தலைவனை அறிமுகப்படுத்தி தலைவன் திருவடியைப் பற்றவேண்டும் என்று சொல்லித்தருவோம்.
பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பூஜை செய்து அந்த இடத்திற்கு வரணும். முயற்சிப்பவரை எல்லாம் முயல்வாருள் எல்லாம் தலை என்று சொல்வார். அதே சமயத்தில் முயல்வாருள் எல்லாம் தலை என்கிறார். முயற்சிப்பவனுக்கு இவன்தான் மேலானவன். தலை என்றால் மேலானவன் என்று சொல்கிறார் இங்கே.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை என்றார். நீ அறிந்து கொண்ட உண்மையை, கடவுளை அடையக்கூடிய முறையை அறிந்தால், அவசரப்படாமல், ஆத்திரப்படாமல், பொருள் சேர்க்கும்போது, பழியஞ்சி பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை என்று சொன்னார் மகான் வள்ளுவப்பெருமான்.
பழிக்கு அஞ்சி பொருள் சேர்த்தலும், முறையோடு வாழ்தல், இனிமையாகப் பேசுதல், வஞ்சனையற்று இருத்தல், வீண் ஆரவார பொழுது கழியாது இருத்தல், மது மற்றும் சூதுக்கு அகப்படாது இருத்தல், முறையறிந்து வாழ்தல், அடக்கமாக அதே சமயத்தில் திறமையாக வாழ்தல் போன்ற கடவுளை அடையக்கூடிய இரகசியத்தை அறிந்தவர்கள், உண்மையை தெரிந்து கொண்டவர்கள் இல்லறத்தில் இருக்கலாம்.
யார் ஆசி பெற்றவன் என்றான். குருகுலவாசம் பெற்றவன், குருகுலவாசம் பெறுவதற்கு ஆசான் வழிவகுத்துக் காட்டுவார்.
நீ மனைவி மக்களை விடாதே, பல ஆண்டுகள் ஆகும். அவர்களிடம் அன்பு காட்டு, முறையுடன் நடந்துகொள்.
முழு பாசம் செலுத்திவிடாதே! பந்த பாசம் அற்று இருக்க வேண்டும். அதே சமயத்தில் குடும்பத்தோடு பொருந்தியும் இருக்க வேண்டாம். பொருந்தியும் பொருந்தாமலும் இருக்கவேண்டும்.
இப்படியெல்லாம் சொல்லி அவனுக்கு பயிற்சி கொடுத்திருப்பான். அந்த பயிற்சியை அவன் மற்றவர்களிடம் சொல்லியிருப்பான். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.
இவன் இல்லறத்தானை பார்த்து விந்து விட்டால் நொந்து கெடுவான் என்று சொல்லிவிடுவான். இதனால் வெகு குடும்பம் வீணாகப் போய்விட்டது.
அதெல்லாம் சொல்லக்கூடாது. அதுபோல எல்லாம் பேசக்கூடாது. மகான் வள்ளுவர் என்ன சொல்கிறார்? அறிந்த உண்மையை, இல்லறத்தான் தன் உடற்கூறு அறிந்தான், உயிரின் இயல்பை அறிந்தான்.
உடலையும், உயிரையும் சேர்க்க கற்றுக்கொண்டான். ஒரு முறையோடு தவம் செய்து வருகிறான். அவனுக்கு என்ன சொல்கிறார் மகான் வள்ளுவப்பெருமான்? நீ அறிந்தது மட்டும் போதாது.
நீ இயல்பை அறிந்தாய், அதன் போக்கிலேயே செல்கிறாய். ஆனால் நீ அறிந்த ஒன்றை மற்றவருக்குச் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டார். ஆற்றின் ஒழுக்கி என்று சொல்லிவிட்டார்.
இங்கே இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். இயல்போடு வாழ்க்கை நடத்த கற்றுக் கொண்டவன் என்பார்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
o   திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
o   திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை என்றார். ஆற்றின் ஒழுக்கி என்பது, தான் அறிந்த உண்மையை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். இதுதான் சட்டம் என்று சொல்லிவிட்டார்.
ஏனய்யா சொல்லவேண்டும்? அது நீ கற்ற கல்வி, இவ்வளவு தூரம் கற்றாய், அது ஒன்றும் சின்ன கல்வி இல்லை. நீ கற்ற கல்வி ஏட்டில் இல்லாதது. எழுத முடியாதது. அப்பேர்ப்பட்ட உயர்ந்த கல்வி கற்றிருக்கின்றாய்.
மனித இயல்பெல்லாம், மனித கூறு – ஆண்கூறு, பெண்கூறு, இயற்கையின் கூறு. இதை எல்லாவற்றையும் அறிந்து அடக்கமாக இல்லறம் நடத்தி வந்திருக்கின்றாய்.
தினந்தினம் ஞானிகளை தியானம் செய்திருக்கின்றாய். தலைவனை புரிந்து கொண்டாய். தலைவனிடம் உருகி தியானம் செய்திருக்கிறாய்.
நீ போகின்ற பாதை தெளிவான பாதை. ஆக என்ன காரணம்? அந்த உடம்பைப் பற்றி அறிந்ததனால் உடம்பைவிடவும் இல்லை. அப்படியென்றால் உடம்பை விடாமலும், உடம்பை கட்டிக் கொள்ளாமலும், தேக்குதலும் இல்லை. விடுதலும் இல்லை.
உடம்பை முறையோடு காத்து வருகிறாய். அசுத்த உணவாகிய புலால் உணவை நீக்கி, சைவஉணவை சாப்பிட்டு, உன்னை நீ காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய். நீ இதை மற்றவர்களுக்குச் சொல்லவில்லை என்றால் குருகுல வாசத்திற்கு அது ஆகாதா செயல், பாவச்செயல்.
ஆக நீ அறிந்த உண்மையை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். ஆற்றின் ஒழுக்கி என்றான். அப்படியென்றால் மற்றவர்களை நன்னெறிப்படுத்தி என்று அர்த்தம்.
ஆற்றுதல் – செய்தல். மற்றவர்களுக்கு நட்பை பெருக்கியும், அவனுக்கு இதைச் சொல்லியும், அவனையும் முறைப்படுத்தி, ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை என்றார்.
நீ மற்றவர்களை நெறிப்படுத்துவது இருக்கட்டும். மற்றவர்களை நெறிப்படுத்தியும், முறைப்படுத்தியும் அவர்களுக்கு இதைச் சொல்லியும் நீயும் வழுவாமல் இல்லறத்திலிருந்தும் வழுவாமல்,
 ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
 நோற்பாரின் நோன்மை உடைத்து.
o   திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
இங்கே நோற்பாரின் நோன்மை உடைத்து என்றார். அங்கே முயல்வாருள் எல்லாம் தலை என்றார். முயற்சிக்கிறவனுக்கெல்லாம் இவன்தான் மேலானவன் என்றார்.
ஒரு இல்லறத்தானைப் பார்த்து, நீதான் மேலானவன் என்று மகான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார். என்ன காரணம்? இயல்பை அறிந்து கொண்டாய். வாழ்க்கையின் இயல்பு அறிந்து, உடற்கூறு, உணவு, உறைவிடம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டாய்.
   நடைமுறை உனக்குத் தெரியும். யாரோடு பேசவேண்டும்? என்ன செய்ய வேண்டும்? அளந்து பேசுதல், புரிந்து பேசுதல், அடக்கமாக பேசுதல், செயல்பாடு வெளியே தெரியாமல் இருத்தல். இத்தனையும் அறிந்தவன் நீ.
அதனால்தான் சொன்னார், நீ அவனைவிட மேலானவன் முயற்சிப்பவன், தவ முயற்சியில் ஈடுபடுகின்ற எல்லோரையும் விட நீதான் மேலானவன் என்றார். இங்கே என்ன சொல்கிறார்? நீ மேலானவன் என்று நினைத்தாலும் மேலானவன்தான்.
மேல்நிலை அறிந்தவன்தான், உயர்ந்தவன். என்ன செய்ய வேண்டும்? மற்றவர்க்கு நீ சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாங்கள் (ஞானிகள்) எப்படி இவ்வளவு நூல் எழுதி வைத்திருக்கிறோம். நாங்கள் இருக்கும் வரையில் சொல்கிறோம்.
மற்றவர்களுக்கு அந்த முறையை சொல்லி வைத்து இல்லறத்தார்களை தெளிவுப்படுத்துகின்றோம். அது நான்கு படிக்கட்டுகள் உள்ளது. திருக்குறளில் முப்பால்தான், அதில் நாற்பால் உள்ளது.
ஆக நீங்கள் அறிந்தவர்கள். திருக்குறளை எல்லோரும் படித்து உள்ளே புகமுடியாது. இதெல்லாம் முக்கியமான செய்தி. இந்த நோற்பாரில் நோன்மை உடைத்து என்பது பெரிய வார்த்தை.
அப்ப நீ அறிந்து கொண்ட ஒன்றை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். ஆற்றின் ஒழுக்கி – மற்றவர்களின் நிலை உயர பாடுபட வேண்டும். ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை – வளர வேண்டுமென்ற சிந்தனை உனக்கு இல்லை என்றால் நீ கற்ற கல்வியில் பயனில்லை.
நாங்கள் இவ்வளவு நூல் எழுதி வைத்திருக்கின்றோம். நாங்கள் இருக்கும்வரை அற்புத நூல்கள் எழுதி வைத்திருக்கின்றோம். அறிந்தவர்கள், புரிந்தவர்கள், மற்றவர்களுக்கு இதை சொல்ல வேண்டும்.
நோற்றல் என்பது தவமுயற்சி. தவமுயற்சியில் உள்ளவனை விட மேலானவன், வலிமை பொருந்தியவன் என்று சொல்லிவிட்டான். அங்கே மேலானவன் என்றான். பொருளறிந்து, உடற்கூறு, உணவு, இயல்பு அத்தனையும் அறிந்து இல்லறத்தை செம்மையாக நடத்தி, ஜென்மத்தைக் கடைத்தேற்ற முயற்சிக்கின்ற ஒருவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட இவன், தலைவன்தான்.
உண்மைப்பொருள் தெரிந்தவன், அவன்தான் உயர்ந்தவன் எங்கிருந்தாலும் மற்ற எல்லோரையும்விட இவன் மேலானவன். அப்ப இவர் இங்கே சொல்லும்போது,
ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
o   திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
நோன்மை என்றால் வலிமை என்று அர்த்தம். தவமுயற்சி செய்பவனைவிட இவன் வலிமை பொருந்தியவன் என்றார். அவன் வலிமை இல்லாதவன்.
இவன் வலிமை உள்ளவன் என்று அர்த்தம். என்ன காரணம்? அறியாமை உள்ள மக்களுக்கு தவத்தின் இயல்பை அறிய முடியாது. தவம் என்பதே தவசிகள் திருவடியைப் பற்றுவதுதான்.
தவசிகள் யார் என்றால் ஞானிகள். ஞானிகள் திருவடியைப் பற்றுவதே தவம். தவம் என்பது வைராக்கியம் என்றும், நோன்பு என்றும் பொருளுண்டு.
திருவடியைப் பூசிக்காமல் நான் சாப்பிடமாட்டேன் என்று சொல்வதும் ஒரு தவம்தான். ஆக நோற்பாரின் நோன்மை உடைத்து வலிமை பொருந்தியவன் என்கிறார். ஆக தான் அறிந்த ஒன்றை மற்றவர்களுக்கு சொல்லி, மற்றவர்களையும் ஞானிகளின் ஆசியைப் பெற்றுக்கொள்ள செய்ய வேண்டும்.
அறியாமை உள்ளவனை நன்னெறிப்படுத்துவதே ஒரு சிறந்த தொண்டு. ஏன் என்றால் மற்றவர்களுக்கு தெளிவான பாதை காட்டுவதால் தெளிந்த பாதை காட்டுவதால், வலிமையுடையவன் நோர்பாரை விட ஆற்றல் பொருந்தியவன் என்றான். மற்றவர்களுக்கு சொல்வதன் மூலம் அதன் மூலமாக புண்ணியம் சேரும். ஞானிகளின் ஆசி கிடைக்கும்.
மற்றவர்க்கு என்ன பாதை காட்டுகின்றான்? அவன் என்ன பாதை காட்டுகிறான்? உப்பில்லாமல் சாப்பிடு என்பானா? அதுதான் இல்லை. மற்றவனுக்கு பாதை காட்டுவதற்கே ஆசான் அகத்தீசர் இருக்கிறார்.
மகான் அகத்தீசர் பெரிய மகான். நீ நல்ல கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகின்றாய். என்னதான் கடைப்பிடித்தாலும் ஆசான் அகத்தீசன் திருவடியைப் பற்றினால்தான் நீ ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியுமென்று பிறருக்கு சொல்லும்போது, அதை ஆசான் பார்க்கிறார்.
அப்படி ஆசான் பார்க்கும்போது அவருடைய பார்வை இவனுக்கு கிடைக்கிறது. இவன் ஒருவன் சொல்வதால் நூறு பேராவது தெளிவடைகிறான். ஒருவன் கருத்துக்களை நயமாக முறையோடு சொல்லிக் கொடுத்தால் நூறுபேர் தேறுவான்.
ஆற்றின் ஒழுக்கி என்பதனால் என்ன சொல்வான் என்றால் மற்றவனுக்கு மூச்சுக்காற்றைப்பற்றி சொல்வான் என்று நினைக்கக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஆற்றின் ஒழுக்கி என்பது தலைவனை புரிந்து கொண்ட இவன் ஆற்றல் பெறுகிறான். அவன் (கேட்பவன்) தெளிவடைகிறான். அவன் தெளிவடைவதற்கு இவன் துணையாக இருக்கின்றான். இதுபோல் செய்தால், நோற்பாரில் நோன்மை உடைத்து, தவ முயற்சியில் ஈடுபட்ட மக்களைவிட அதுபோல் உள்ளவர்களைவிட இவன் வலிமை பொருந்தியவன் என்று சொன்னான்.
இன்றைக்கு நாமெல்லாம் தவம் எது? மூச்சை மட்டும் அடக்குவதா? பட்டினி கிடப்பதா? ஊர் ஊராக சுற்றுவதா? மண்ணை தின்பதா? செடி கொடி மட்டுமே சாப்பிடுவதா? இது எதுவும் தவம் இல்லை.
நாம் இப்பொழுது சொல்லுகிறோமய்யா, தவம் எது என்றால் தவசிகளை ஞானிகளை உணர்ந்து தெளிவடைந்து மனம் உருகி தியானம் செய்வது ஒன்றுதானய்யா தவம்.
இதை அறிந்தவர்கள் சொல்லவேண்டும். இது சட்டம். சொல்லாவிட்டால் பாவம் வந்துவிடும் என்று சொல்லிவிட்டார்.
அதனால் நாம் என்ன செய்கிறோம்? மகான் வள்ளுவர் சொன்னதுபோல் மற்றவர்களுக்கும் சொல்லுவது நல்லது.
இப்படி தவத்திற்குரிய பத்திய முறையை சொன்னால், அவனால் கடைப்பிடிக்க முடியாது. பக்தி நெறியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பக்தி நெறி இருந்தால் பத்திய முறை தானே வரும். அப்ப பத்தியமுறை, உப்பில்லா உணவு சாப்பிடவேண்டுமய்யா, பொறிபுலனை அடக்கவேண்டுமய்யா.
உப்பில்லா உணவு சாப்பிடணும், பொறி புலனை அடக்கணும், கடவுளை அடையணும் என்றான்.
இதெல்லாம் உன்னுடைய அறிவால் முடியாது. நீ உப்பில்லா உணவு சாப்பிடுவதற்கும் ஆசி இருக்கவேண்டும். அதே சமயத்தில் பொறிபுலனை அடக்கவும் ஆசி இருக்க வேண்டும்.
தலைவன் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை அறிந்த ஒருவன் சொல்லாவிட்டால் அவன் கற்ற கல்வியெல்லாம் பயனில்லை என்று சொல்லிவிட்டார். அப்படி சொல்லவில்லை என்றால் அது பாவச்செயலடா என்று சொல்லிவிட்டார்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை என்று சொல்லிவிட்டார். தவசிகள் பெருமையை பேசவேண்டும். இப்ப 131 மகான்களின் நாமங்களை தொகுத்து வைத்திருக்கின்றோம்.
131 மகான்கள் நாமத்தை தொகுத்து வைத்ததின் நோக்கம் என்ன? போற்றித்தொகுப்பை படிக்கிறான், அப்படி படிக்கும்போது ஆசான் பார்க்கிறார். ஞானிகள் பார்ப்பதால் அவர்களின் ஆசியைப் பெறுகின்றான்.
ஆசியைப் பெற்றாலும், நேரடியாக வந்து பேசமுடியாது. அவர்களெல்லாம் பெரிய ஞானிகள். நாம் பாராயணம் செய்யச் செய்ய பெரியோர்கள் அளவில்லா மகிழ்ச்சியடைகார்கள்.
ஆனால் பொருள் சேர்க்கும்போது நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்க்கத்தெரியாது. இவன் பொய் சொல்வான், பொறாமைப்படுவான், விரைவாக முன்னேற வேண்டுமென நினைப்பான்.
இதை செய்து தங்கம் செய்யலாம், அது இது செய்யலாம், முன்னேற வேண்டுமென நினைப்பான். உடனே பிரபலம் ஆக வேண்டுமென்று நினைப்பான்.
அடே! இவன் சொல்வான், எவ்வளவு பிரபல்யம் ஆகி என்ன செய்யப்போகிறாய்? இப்ப கோடான கோடி மக்கள் உன்னை பாராட்டி என்ன செய்யப்போகிறாய்? எமன் வந்து உன்னை பிடரியில் அடித்து  கொண்டே போய்விடுவான்.
எவ்வளவோ புகழ் உனக்கு இருக்கலாம். அத்தனை புகழையும் உன்னை ஒரு நொடியில் உன்னை பிடரியிலடித்துக் கொண்டு போய்விடுவான். இந்த புகழ் உனக்கு அவசியமில்லை.
ஆக மனித வர்க்கம் என்ன செய்கிறது? விரைவாக விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும். விரைவாக தன்னை விளம்பரப்படுத்தி புகழோடு இருக்க வேண்டுமென்று நினைப்பான். இந்த புகழ் உனக்குப் பயன்படாது.
எமன் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு அடித்துவிடுவான். உன்னை கீழே தள்ளிவிட்டுப் போய்விடுவான். உனக்குள்ள புகழ், உன்னுடைய கல்வி, அறிவு புகழ் எல்லாம் கூற்றுவனுக்கு முன் நிற்குமோ? கூற்றுவனுடைய அடி, உன்னை கூற்றுவன் காலால் எட்டி உதைத்து இரும்புக்கரம் கொண்டு பிடரியிலேயே அடித்து கொண்டு போய்விடுவானே? அப்போது நீ என்ன செய்வாய்? இந்தப்புகழ் உன்னைக் காப்பாற்றுமா? அறிவு இல்லாதவனே? இப்படிப்பட்ட புகழ் உனக்குத் தேவையில்லை என்பார்கள்.
விரைவாக முன்னேற வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஒருவனை வாட்டும். இந்த எண்ணம் பூஜை செய்தாலும் உன்னை வாட்டும். எதற்காக நீ பிரபலமாக வேண்டும்? பிரபலமாகி நீ என்ன செய்யப்போகிறாய்? அது எதற்கடா ஆகும்.
உனக்கு எதற்காகும் இந்த பிரபலம்? இந்த ஊர் முழுவதும் உன்னை சிறந்த பேச்சாளன், சிறந்த எழுத்தாளன் என்று உன்னை புகழுகிறான்.
எமன் வருவான், கண் எல்லாம் பனங்கொட்டை மாதிரி இருக்கும். தக தக என்று இருக்கும். முரட்டு மீசை வைத்திருப்பான். அடே தம்பி! ஊரே உன்னை புகழ்கிறது. நாங்கள் உன்னைப் பாராட்டுகின்றோம்.
ஆனால் உன்னைப் இப்போது எமன் பிடரியில் அடித்து கொண்டு செல்ல போகிறான். உன்னுடைய புகழைக் கொண்டு அதை தடுக்க முடியுமா? ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பேர் உன்னை பாராட்டுகின்றானல்லவா, அந்த புகழைக் கொண்டு, வருகின்ற எமனை தடுக்க முடியுமா?
எமனாகிய நான் உன்னை அடித்துக் கொண்டு செல்ல போகிறேன். உன் புகழைக் கொண்டு தடுக்கச் சொல்லடா என்றான். அவர்களெல்லாம் ஓடியே போய்விடுவார்கள். அடே! அப்ப வந்து உன்னை  காப்பாற்றுவது எது? தக்க குருகுலவாசம்தான். நீ தக்க குருகுலவாசத்தில் இருந்தால், உனக்கு ஆசான் வகுத்துத் தருவார். இந்த புகழ் வேண்டாம் உனக்கு. நீ முன்னேறும் வரையில் நீ அடக்கமாக இருக்க வேண்டும் என்பார்.
நீ முன்னேறும் வரையில் அடக்கமாக இல்லாமல் பிரபலம் ஆகி விட்டால் உன்னால் கடைத்தேற முடியாது. நிச்சயம் உன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாது. உன்னைக் கொண்டுபோய் குப்பையில் போட்டுவிடுவான். உன்னைக் காப்பாற்றிக்கொள் என்று சொல்வார்கள்.
ஆக 131 மகான்களை பூஜை செய்து ஆசி பெற்றாலும், இது போன்ற எண்ணோட்டம் ஒருவனை நரகத்தில் தள்ளிவிடும் என்பார். பூர்வ ஜென்ம வாசனை இருக்கவேண்டும். பூர்வ ஜென்ம வாசனை இருந்தால்தான் உன்னை மனது கட்டுப்படுத்தும்.
உன்னைப் புகழ்ந்தால் உனக்கு என்ன ஆகப்போகிறது? அது எமன் வருவதை தடுத்துவிடுமா? எப்பேர்ப்பட்ட, சக்கரவர்த்தியையே அவன் அடித்துக் கொண்டு போகின்றவன் ஆயிற்றே? எருமைக்கடாவில் வந்து பார்த்தால் பெரிய கரிய மேகம் போன்று இருப்பான்.
கண் இரண்டும், நெருப்பு மாதிரி வைத்துக்கொண்டு வருவானே. நீ அவனிடம் என்ன செய்வாய்? ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? அவன்தான் ஏக சக்கரவர்த்தியையே அடித்துக் கொண்டு போகின்றவன் ஆயிற்றே. நீ என்ன செய்வாய்?
ஆக விரைவாக புகழ் அடைய விரும்புபவர்கள், பலஹீனமான இடத்திற்குப் போகப்போகின்றார்கள் என்று அர்த்தம்.
குருகுலவாசத்தில்தான் சொல்வார்கள், இந்த புகழ் உனக்கு தேவையில்லை என்பார்கள். எமனைத் தடுக்கும் வல்லமை இந்த புகழுக்கு கிடையாது. நீ ஏமாந்து போகாதே என்று குருகுலவாசத்தில் உறுதியாக சொல்வார்கள், கடுமையாக சொல்லி பார்பார்கள்.
இவனுக்கு முன் ஜென்ம வாசம் இருந்தால்தான் அந்த கசப்பு மொழியை ஏற்றுக்கொள்வான். இல்லையென்றால், என்னடா புகழோடு வாழ நாம் நினைக்கிறோம். இவர் என்னடா தடுக்கிறார் என்பான். நான் தடுக்கவில்லையப்பா, எமன் உன்னை அடித்துக் கொண்டு போய்விடுவான்.
ஆக இதெல்லாம் அவனுக்குச் சொல்ல வேண்டும். இப்படி சொல்லித்தான் அவனை தேற்ற வேண்டும். இப்படி நான் சொல்வது உங்களுக்கு கசப்பாக இருந்தாலும், இதில் ஒரு தாத்பரியம் இருக்கும்.
உண்மை என்னவென்று கேட்டால், ஒரு மனிதன் கடவுளாவதற்கு முதலில் என்ன செய்ய வேண்டுமென்றால், முதலில் நீ விளம்பரமாகதே. அப்படி விளம்பரமாகிவிட்டால் உன்னால் அதை கடைப்பிடிக்க முடியாமல் சந்தைக் கூட்டம் உன்னை சூழ்ந்துவிடும்.
ஆக கடவுளை அடைய முடியாமல் தடை வந்து சேர்ந்து போகுமென்று இவர்கள்தான் சொல்வார்கள். அதனால்தான் சொல்கிறார். மற்றவரையும் நன்னெறிப்படுத்த வேண்டும்.
ஆக பூஜை செய்கிறான், ஆசி பெற்றிருக்கிறான். உண்மைதான்! வகுத்துச் சொல்ல வேண்டுமல்லவா? குருகுலவாசத்தில்தான் இப்படியெல்லாம் சொல்வார்கள். இதை பயன்படுத்திக்கொள்.
சில ஆண்டுகள், சில ஆண்டுகளல்லா, பல ஆண்டுகள் ஸ்திரத்தன்மை வரும் வரையில் சரி, இனி எத்தனை புகழ் வந்தாலும் பொருள் வந்தாலும் நான் சலனப்பட மாட்டேன் என்ற நிலைக்கு வந்தான்.
அப்பா! வந்து விட்டானய்யா, கோடிக்கணக்கான பொருள் வந்தது, தேவையில்லை. அழகிய பெண்கள் வந்தாலும் எனக்கு அவசியமில்லை. என்னை இகழ்ந்து பேசினான், சிந்திக்க நேரமில்லை. புகழ்ந்து பேசினால் அதற்காக மயங்கவில்லை.
நான் மற்றவன் புகழுரையை கண்டும் மயங்கவில்லை. இகழ்பவரையும் கண்டு சோர்வடையவில்லை. நான் எதற்கும் தளர்ச்சியில்லாமல் சலனப்படாமல் வெற்றி கண்டவன். என்னைப் புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி கவலையில்லை என்று சொல்லும் காலம் வரும் வரையில் அவன் தன்னை விளம்பரபடுத்தக் கூடாது. அதுதான் உண்மையான தவம் என்றான்.
ஆக இதுபோன்ற கொள்கையை குருகுலவாசம் வகுத்துத தந்தாலன்றி ஒருவன் முன்னேற முடியாது.
இதெல்லாம் நாங்கள் இப்படி சொல்வதன் நோக்கம் மற்றவர்கள் முன்னேறக்கூடாது என்றில்லை. மற்றவர்கள் முன்னேற தடையாக இந்த கருத்துக்கள் இல்லை.
எடுத்துக் கொண்ட இலட்சியத்தை அடையும் வரையில், தேறும் வரையில் தெய்வமென செப்பவேண்டாம் என்பார் மகான் புஜண்டமகரிஷி.
நீ தெளிவு அடையும் வரையில் நீ தெய்வமென்று உன்னை நீ சொல்லாதே என்றார். ஏனென்றால் முற்றுப்பெற தடைபடும் என்பதனாலே மகான் புஜண்டமகரிஷி சொல்கிறார்கள்.
  ஆகவே, பேசியதன் நோக்கம் உடம்புக்குள்ளே ஒரு அற்புத சுடர் உள்ளது. அதை அறிய வேண்டும்.
உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
    திருமந்திரம் – அன்பு செய்வாரை அறிவன் சிவன் – கவி எண் 284
பக்தி செலுத்த செலுத்த அடக்கத்தோடும், தன்னடக்கத்தோடும், இலட்சியத்தை அடையும் வரையில் விளம்பரமில்லாமல் தன்னை பற்றுகின்றவனுக்கு, மகான் அகத்தீசர், தான் கண்ட சதகோடி சூரிய ஒளியை ஜோதியை இவன் உள்ளே இருந்து காட்டுகின்றார்.
உள்ளே இருந்து அவ்வப்போது உணர்த்துகின்றார். உணர்த்த உணர்த்த உணர்த்த உள்ளம் தெளிவடையும், கடவுளை அடைகிறான். இதுதான் மெய். ஆக இப்ப நம்மால் பேசப்பட்டது, ஒரு இலட்சியத்தை நீங்களெல்லாம் அடைவதற்காக.
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ – அடியார்கள் உருகி தியானம் செய்ய வேண்டும். உருகி தியானம் செய்தாலன்றி உள்ளுடம்பும், புற உடம்பும் தெரியாது.
உள்ளுடம்பையும் புறஉடம்பையும் பற்றி அறிவதற்கு ஆசான் ஆசி இருக்க வேண்டும், குருகுல வாசம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் மகான் வள்ளுவப்பெருமான் சொன்னதுபோல,
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 46
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
அறத்தைப் பற்றி அறிந்தான். அறம் எதுவென்று கேட்டான்? ஒவ்வொரு செயலும் அது பிறரை பாதிக்காது இருந்தால் அது அறம்.
ஒவ்வொரு செயலும் பிறருக்கு நன்மை தருமேயானால் அது அளவில்லாத பெருமை உண்டாக்கும். அப்படி பிறரை பாதிக்காமல் இருப்பது அதுவே அறமாகும்.
      பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற அறிவு ஒருவருக்கு வருவதே முன் ஜென்ம புண்ணியம்தான்.
      புண்ணியம் செய்த மக்களுக்குத்தான் இந்த அறிவு வரும். பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நிச்சயமாக புண்ணியவான்தான்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 46
பிறரை பாதிக்காமல் இருப்பதே அறம். அப்ப பிறருக்கு அன்னதானம் செய்வது, மனதில் பொறாமை இல்லாதிருத்தல் அவசியம் என்கிறார் மகான் திருவள்ளுவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
    திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 34
என்னய்யா என்னென்னமோ சொல்கிறான். அன்னதானம் செய்கிறான். கோதானம் செய்கிறான். தங்கம் கொடுக்கிறான். வெள்ளி கொடுக்கிறான். இப்ப நீர் என்னவென்றால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்கின்றீரே.
      ஓகோ! குற்றமற்ற ஒன்றே அறம் என்று சொன்ன ஒரே தலைவன் மகான் வள்ளுவப்பெருமான். அடே! குற்றம் இதுவென்று அறிந்தவன் கடவுள் ஆகிறான். இது போன்று யாருமே சொன்னது இல்லை.
      உலகத்திலேயே எவ்வளவோ மேதைகள் இருக்கின்றார்கள். மனதிலே குற்றமில்லாததே அறம் என்று சொன்ன ஒரே தலைவன் மகான் திருவள்ளுவப்பெருமான். முதுபெரும் தலைவன் மகான் வள்ளுவப்பெருமான்.
      அவர் சொன்ன கருத்து மனதில் குற்றமில்லாது இருப்பதே அறம் என்று சொல்லிவிட்டார். அப்பேர்ப்பட்ட தலைவர் சொல்லும்போது,


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
இங்கே சொல்லும்போது, அறத்தாற்றின் இல்வாழ்க்கையாற்றின், இங்கே அறத்திற்கு என்ன இயல்பு? என்றார். குற்றமற்ற மனமே அறம் என்றார். “மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்துஅறன்” என்றார். வெறுமனே அறம் என்று சொல்லாமல், அனைத்து அறன் என்றார்.
எல்லா அறமும் அதுவே என்று சொல்லிவிட்டார். அப்ப எந்தெந்த வகையில் மாசுப்படுமென்று அறிகின்ற அறிவு வந்தாலே ஞானிகள் ஆசி வந்துவிட்டது. குருகுலவாசம் வந்து விட்டது என்று அர்த்தம்.
குருகுலவாசம் வந்தால்தான் தெரியும் அவனுக்கு. அடே! இன்னும் நம்மிடம் பொறாமை குணம் இருக்கிறது. இன்னும் பலகீனங்கள் இருக்கிறது. பேராசை இருக்கிறது. எப்படியும் பொருள் சேர்க்க வேண்டுமென நினைக்கின்றோம். ஏதாவது செய்ய நினைக்கின்றோம்? என்ற அறிவெல்லாம் குருகுலவாசத்தால்தான் வரும்.
அப்ப குருகுலவசாம் பெற்றவர்களுக்குத்தான் தெரியும். தலைவன் ஆசியினால், திருக்குறளைப் படிக்கின்றோம். திருக்குறள் எல்லோருக்கும் தெரியுமா என்றால், தெரியவே தெரியாது.
மனது எந்தெந்த வகையில் மாசுபடும் என்பது சின்ன விசயமல்ல. அது தெரிந்து கொண்ட அப்போதே அந்த வினாடியே கடவுள் ஆகிவிடுவான் என்றான். அவ்வளவு பெரிய விஷயத்தை மகான் வள்ளுவர் திருக்குறளிலே அள்ளிக்கொட்டி இருக்கிறார். யோகிகளுக்காக சொன்னதப்பா இது. அப்ப உடல் மாசு இருந்தால் மனமாசு இருக்கும்.
தக்க ஆசான் உபதேசம் இல்லாதவன் பொருள் சேர்க்க நினைப்பான். எப்படியும் வாழ நினைப்பான். வந்தது சனியன், பிடிக்கப்போகிறது என்றான்.
     வேண்டாமப்பா, ஆசானிடம் “எனக்கு உன் ஆசியிருந்தால் போதும்” என்பான். உன் ஆசியினால் எனக்கு உணவு, உடை, என் மனைவி மக்களுக்கு நிச்சயம் பொருள் கிடைக்கும். நான் பொய்யும் புரட்டும் சொல்ல விரும்பவில்லை. இந்த உணர்வு வருவதற்கு ஒருவன் ஒருகோடி தவம் செய்திருக்கவேண்டும்.
இதெல்லாம் மகான் வள்ளுவர் திருக்குறளிலே, வகுத்து தொகுத்து சொல்லியிருக்கின்றார். மனமாசற்ற தன்மையே அறம் என்றார். மனமாசற்ற தன்மைக்கு என்ன வேண்டும்? குருகுலவாசம் என்ன சொல்லும்? இப்படித்தான் பூஜை செய்யவேண்டும் என்ற முறையை குருகுலவாசம் சொல்லித் தரும்.
ஆசான் நேரடியாக பார்த்து இவனிடம் பேசமாட்டார். எங்கள் மூலமாகத்தான் பேசுவார்.
இப்ப பூஜை செய்யும் முறை என்னவென்று கேட்டான். இவர்களுக்கு தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தி, “அடியேன் பாவியாகாது இருக்கவேண்டும், வஞ்சனையற்று இருக்கவேண்டும், பேராசை இல்லாது இருக்கணும், பொறாமை இல்லாது இருக்கவேண்டும், உன் திருவடியைப் பற்ற தகுதியுள்ளவனாக ஆகவேண்டும், நெறிக்குட்பட்டு வாழனும், நீர்தான் இதற்கு அருள் செய்யனும்” என்று தலைவனிடம் பூஜையில் கேட்க சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் அவன் தேரமாட்டான். இன்னென்ன இடத்தில் மாசு இருக்கும். மிக்க காமதேகம், அதைத்தான் உடைத்தெறிந்து விட்டோமே, மிக்க காமதேகமா? கவலைப்படாதே ஐயா, திருமணம் செய்து கொள், திருமணம் செய்து கொண்டு மனைவி மூலமாக விகாரத்தை தணித்துக் கொள்.
தினம் தியானம் செய். தியானம் செய்வதற்கு தலைவனை அறிமுகம் செய்திருக்கின்றோம்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் – அற நெறிக்கு பொருந்தி இல்வாழ்க்கை ஆற்றுவது, ஆற்றுதல் – செயல்படுத்துதல்.
அங்கே ஆற்றின் ஒழுக்கி என்றார். பிறருக்காக வாழ்தல், கற்றவர்கள், தான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லத்தான் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பாவம் வரும் என்று சொன்னதனால்,
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
    திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48
என்று சொல்லிவிட்டார். பிற வழியில் போய் என்னடா பெறப்போகின்றாய் என்று சொல்லிவிட்டார். சொன்னவர் மகான் வள்ளுவப்பெருமான். மனமாசு அற்றவர். உயிரைப்பற்றிய மாசை அறிந்தவர். உயிரைப்பற்றிய மாசை அறிந்து, உடல் உயிருக்கு மாசு வருவது உடலால்தான் என்று அறிந்தவர். இதைத்தான் மகான் திருமூலத்தேவரும்,
இறையடி தாழ்ந்து ஐவணக்கமும் எய்தி
குரியது கூறி குணங்கொண்டு போற்ற
சிறையுடல் நீஅறக் காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
·                திருமந்திரம் பக்குவன் கவி எண் 1701
எல்லாவற்றையும் புரிந்து கொள்ளலாம். தலைவனை புரிந்து கொண்டு தினம் தியானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு பூஜை செய்யத் தவறினால் அதை குற்றமாகக் கருதுபவருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இப்ப பேசப்படுகின்ற கருத்துக்கள் உலக மக்களுக்கு பயன்படும். உலக மக்கள் பாராட்டுவான். பாராட்டிக் கொண்டே இருப்பான். குணக்கேடு இவனுக்குத் தெரியாது. மக்கள் ஏற்றுப் பாராட்டுகின்றான். அவன் பெரிய மகான். அவர் ஆசி பெறவேண்டும் என்பதற்காக பாராட்டுவான். அவன் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் கொண்டு வந்து கொடுப்பான். அவன் வினையை தீரிப்பான் என்று நினைப்பான்.
நல்ல ஆசான் என்று பொருள் கொண்டு வந்து கொடுப்பான். அன்புள்ள ஆசான், இவன் பெரியோன் இவனுக்கு கொண்டுவந்து கொடுத்து நாம் ஆசி பெற்றுக் கொள்ளலாமென்று பொருளாதாரத்தை குவிப்பான். இவன் என்ன செய்வான்? புகழோடு சேர்ந்து பொருளும் வந்துவிடும். பொருளை என்ன செய்வான்? அறிவில்லாதவன் பொருளாதாரத்தின் இயல்பு தெரியாதவன்.
அவன் உழைத்து கொண்டுவந்து பொருளை கொடுக்கின்றான். பொருளாதாரம் சேரசேர, பொருளாதாரத்தை கண்டு மயங்கிவிடுவான். கொடுத்தவனுக்கும் பொருள் பயன்பட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் போகும். பொருளும், புகழும் வந்து சேர்ந்தால் அதன் விளைவுகள் என்னாகும்? இவனை நரகத்திற்கு கொண்டுபோய்விடும்.
இதையெல்லாம் அறிந்தவர்கள் புரிந்தவர்கள் சொல்லவேண்டும். இதையெல்லாம் நாங்கள் சொல்லிக்கொடுத்து ஆசான் ஆசியை பெற்றுக்கொள்ள சொல்லவேண்டும். இப்ப பேசப்பட்ட கருத்துக்களை நன்றாக தொகுத்துச் சொல்லியிருக்கிறோம்.
இந்த கருத்துக்களையெல்லாம் மனித வர்க்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருக்குமென்று சொல்லி, இதைக் கேட்பவர்க்கெல்லாம் ஆசான் வள்ளுவப்பெருமானும், மகான் அருணகிரிநாதரும், ஆசான் அகத்தீசன் போன்ற ஞானிகளுடைய ஆசி கிடைக்க வேண்டும். பூஜாவிதியை வகுத்து சொல்லியிருக்கின்றோம். எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.  எந்தெந்த கொள்கையை  கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம்.
வறுமை உள்ளவர்களெல்லாம் ஆசானைக் கேட்டு வறுமையற்ற வாழ்வு அமைய வேண்டும், அடியேனுக்கு செல்வ நிலை பெருக வேண்டும், நான் ஏழை மக்களுக்கு பயன் உள்ளவனாக வாழவேண்டும், பேராசை இல்லாதவனாக, வஞ்சனையற்றவனாக வாழவேண்டும், உன்னுடைய ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
பொல்லாத வறுமை சூழக்கூடாது. மிகுதியாக செல்வம் சேரக்கூடாது. நான் புகழை விரும்பக்கூடாது. புகழ் வந்தாலும் பொருளை விரும்பக்கூடாது. முறையோடு வாழவேண்டும் என்று ஆசானை கேட்கவேண்டும்.
இப்படி பூஜையில் ஆசானை தினந்தினம் கேட்டு வந்தால் நீங்கள் எல்லா நன்மையையும் பெறலாமென்று சொல்லி இதை பயபக்தியோடு கேட்கின்ற மக்கள் ஞானத்தைப் பெருவார்களென்று சொல்லி இத்துடன் முடித்துக்கொள்கிறோம் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 787
Total Visit : 185197

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version