13.12.1998 – மகான் இராமலிங்க சுவாமிகள் காட்டும் உண்மை ஆன்மீகம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை


அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்.
     இன்று மகான் கருவூரார் இல்ல திறப்புவிழா நடைபெற்றுள்ளது. அன்பர்கள் எல்லோரும் இங்கே கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
     ஆசான் அகத்தீசர் மாபெரும் யோகி. ஆசான் கருவூர் முனிவர், ஆசான் இராமலிங்கசுவாமிகள் இவர்கள் எல்லோரும் நம்மைப் போன்று வாழ்ந்தவர்கள்தான். இவர்களும் மனிதனாக வாழ்ந்தவர்கள். இவர்கள் மனிதனாக வாழ்ந்து தம்மை உயர்த்திக் கொண்டார்கள்.
     எப்படி உயர்த்திக் கொண்டார்கள்? தவத்தால், விடாமுயற்சியால் வைராக்கியத்தால் வெற்றி கண்டு மும்மலத்தைப் பொடியாக்கி, எமனைப் பொடியாக்கிய மாபெரும் யோகிகள். அவர்களை வணங்கவேண்டும். என்பதற்காகவே இந்த பூஜையை நாம் செய்திருக்கிறோம். இன்று இந்த பூஜையில் நாம் கலந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம்.
     இன்று கிட்டதட்ட இரண்டாயிரம்பேர் சாப்பிடக்கூடிய அளவிற்கு உணவு சமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி சமைக்கப்பட்ட உணவை, மாபெரும் யோகி மகான் புஜண்டமகரிஷியும், மகான் கருவூர் முனிவரும், மகான் இராமலிங்கசுவாமிகளும், மகான் சுப்ரமணியரும், மகான் அகத்தியரும் இந்த உணவைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் அருட்பார்வை இந்த உணவில் இருக்கிறது.
     ஆக இந்த உணவே ஒரு பெருமைக்குரிய உணவு. நீங்கள் எவ்வளவோ நாள் இங்கு சாப்பிட்டிருக்கலாம். ஆனால் இன்று சாப்பிடக்கூடிய உணவு தனித்தன்மையானது. இந்த உணவு பொதுமக்களுக்கு போய்ச்சேரவேண்டும்.
     உண்மை எது என்று கேட்டால், நல்ல சிந்தனையை, தெளிவான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனை எது? ஆசான் அகத்தீசர் திருவடியைப் பற்றுவதுதான் தெளிவான சிந்தனை.
     எப்படி பூஜை செய்யவேண்டும்? எப்படியெல்லாம் பூஜை செய்தால் நாம் முன்னேறலாம்? என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மணியடிப்பதல்ல நமது பூஜை. மணியடித்து பூஜை செய்வதல்ல.
     மகான்களுடைய மனதை உருக்குவது எப்படி? அவர்கள் உருகுகின்ற முறையை அறிவது எப்படி? அவர்களை நம் வழிக்கு திருப்புவது எப்படி? அவர்களை நம்மை நோக்க செய்வது எப்படி? அவர்கள் தயவை பெறுவதற்கு என்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும்? என்பதையெல்லாம் பற்றி பின்னர் சொல்கிறோம்.
     இப்பொழுது உலகத்தில் இறையருள் பெறுவதற்காக என்னென்ன செய்கிறார்கள்? காவேரிக்கு செல்கிறார்கள், கங்கையில் மூழ்குகிறார்கள், அலகு குத்திக் கொள்கிறார்கள், அங்கம் புரளுகிறார்கள். ஆக இப்படியெல்லாம் செய்து இறையருளை பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மகான்கள் எல்லாம் இப்படியெல்லாம் செய்தா அருள் பெற்றார்கள்? என்றால் இல்லை.
     உலகத்திற்கு ஆதித்தலைவன் சுப்ரமணியர்தான். அவர் தன்னைத்தானே அறிமுகப்படுத்த முடியாது. ஏனென்றால் அவர் ஆதித்தலைவன். முன்னோர்கள் அவரை எப்படி அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்? வள்ளி, தெய்வானையின் கணவன் என்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நாமும் அந்த வழி சென்றுதான் பேசவேண்டும்.
ஏனென்றால் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். நாம் அதை மாற்றமுடியாது. நாம் ஆசான் அகத்தீசரை தினமும் பூஜை செய்யவேண்டும். அப்படி பூஜை வழிபடும் பொது எப்படி கேட்கவேண்டும்? அகத்தீஸ்வரா உன் பாதத்தை தினமும் பற்றி பூஜிக்க அருள் செய்யவேண்டும் என்று கேட்கவேண்டும்.
ஏனென்றால் ஞானிகள் பாதத்தைப் பற்றி பூஜிக்க அனுமதிக்க மாட்டார்கள். இது ஒன்றும் சின்ன விசயமில்லை. காளி, மாரி போன்ற சிறு தெய்வத்தை வணங்கிவிடலாம். ஞானியின் பாதத்தை பூசிப்பது சின்ன விசயமில்லை. அப்படி பூஜிப்பதற்கு ரொம்ப கல்வி வேண்டும்.
ஆக யார் ஞானியின் பாதத்தை பற்றுகின்றார்கள் என்றால், யாரெல்லாம் உயிர்களின்பால் கருணை காட்டுகின்றார்களோ, அன்பு காட்டுகின்றார்களோ அவர்கள்தான் ஞானியின் பாதத்தைப் பற்றமுடியும்.
கடிய மனமுள்ளவன், கொடிய மனமுள்ளவன், வஞ்சகம், சூது உள்ளவன் ஞானியின் பாதத்தை பற்ற முடியாது. அவனுக்கு சோதனைகளைத் தந்து வீழ்த்திவிடுவார்கள். ஆக, தயவைப் பெறவேண்டும். இதை மகான் இராமலிங்கசுவாமிகள்,
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.
    மகான் இராமலிங்கசுவாமிகள்
தந்தை இருக்கும்போது, தன் மகனுக்கு சேர்த்து வைக்காமல் எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டார். தந்தை இறந்தபின் எலும்பையெல்லாம் எடுத்துக் கொண்டுபோய் ஆற்றில் போட்டான் மகன்.
ஏன் அப்படி செய்தாய்? என்று ஒருவன் மகனிடம் கேட்டான். அதற்கு மகன், எனது தந்தை இருக்கும்போதே எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டான். அவன் மீண்டும் இந்த பகுதியிலே பிறக்கக்கூடாது என்பதற்காக அவன் எலும்பையெல்லாம் ஆற்றில் போட்டேன் என்றான் மகன். ஆக இப்படியெல்லாம் அவர்களுக்குள் ஒரு வழிமுறை இருக்கிறது.
ஆக இதற்கு அடிப்படை என்ன? காவிரியில் பொய் குளிப்பதோ? ஆஸ்தியைக் கொண்டு கரைப்பதோ? இதெல்லாம் இல்லை. அதற்கென்று ஒரு சாங்கியம் இருக்கும்.
அதற்கென்று ஒரு வேதம் என்ன? காவிரியில் போய் குளிப்பதோ? அஸ்தியைக் கொண்டு கரைப்பதோ? இதெல்லாம் இல்லை. அதற்கென்று ஒரு சாங்கியம் இருக்கும்.
ஆக இதெல்லாம் எவ்வளவு மூடத்தனமான ஒன்று? இப்படியெல்லாம் மகான்கள் செய்திருக்கிறார்கள்? ஞானிகள் தயவைக் கொண்டுதான் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறார்கள். நீங்கள் செய்கின்ற இந்த பூஜையால் எந்தவிதமான அருளாற்றலையும் பெறமுடியாது என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள். தீவிரமான கருத்தை ஆசான் இராமலிங்கசுவாமிகள் இங்கே சொல்லியிருக்கிறார்.
சாதாரணமான ஒரு கிராமத்திலே பிறந்த ஆசான் இராமலிங்கசுவாமிகள், நமக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி – ஒரு முறை அல்ல நூறுமுறை மூழ்கி,
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி – திருக்கோவில் என்று அவரே சொல்லிவிட்டார். திருக்கோயில் என்றால் சிற்ப சாஸ்திர முறையிலே கட்டியது. கோயில் எந்த முறையுடன் அமைக்க வேண்டுமோ, அந்த முறைப்படி அப்படியொரு முறையோடு அமைக்கப்பட்டது. அதிலிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் ஓர் இலக்கணத்திற்கு உட்பட்டது.
ஆக, சிற்ப இலக்கனத்திற்கு உட்பட்ட முறையோடு அமைத்திருக்கிறார்கள். அந்த அழகு பொருந்திய ஒன்றுக்குத்தான் “திரு என்ற வாரத்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி – ஆக அந்த அருளைப் பெறுவதற்காக தெய்வீக அருள் பெறுவதற்காக மனித வர்க்கம் பெறமுடியாத ஒன்றை, தான் உய்யலாம் என்று ஒரு கற்பனைவேண்டும், இப்படியெல்லாம் செய்தால் நமக்கு பெரும் ஆற்றல் கிடைக்கும், பெரிய அருட்செல்வம் கிடைக்கும் என்ற ஒரு மூடத்தனமான ஒரு நம்பிக்கையும் அவர் காலத்தில் இருந்துள்ளது, இன்னமும் இருக்கிறது.
இங்கே என்ன சொல்கிறார்? நூறுமுறை மூழ்கினாலும் வருமா?
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
அடுத்தபடியாக விரத அனுஷ்டானங்கள் மேற்கொள்வதைப் பற்றி சொல்வார்கள். வெள்ளிக்கிழமை, செவைக்கிழமை விரதம் இருப்பான். வியாழக்கிழமை விரதம் இருப்பார்கள். இரவு நேரம் சாப்பிடமாட்டார்கள். தன்னையே வருத்திக் கொள்வான். தன்னையே சாகடித்துக் கொள்வான்.
ஆக இப்படி செய்வதிலும் அருளில்லை என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள். ஆக அருளில்லை என்று சொல்லும்போது அதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? காவிரியில் மூழ்கி வருகிறோம். ஆடி பதினெட்டுக்கு காவிரியில் குளிக்கிறோம், பிறகு ஏதேதோ செய்கிறோம், அதற்கென்று ஒரு சடங்கு உள்ளது. அப்படியே ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறோம். விரத அனுஷ்டானம் செய்கிறோம். இவைகள் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார் ஆசான் இராமலிங்கசுவாமிகள்.
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து – யாகம் செய்து அதன்மூலமாக அருள் பெறலாம் என்று நினைத்தாலும் அதிலும் பயனில்லை என்கிறார்.
ஆக இவையெல்லாம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது, பாலாபிஷேகம் செய்வது, தேனாபிஷேகம் செய்வது, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ஆக இப்படியெல்லாம் செய்கிறான். இங்கிருந்தே நடந்து போகிறான் கோவிலுக்கு.
ஆக ஒன்றுமில்லை அவனிடம், இதை நான் சொல்லவில்லை, மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்கிறார். யாகம் செய்தும் பயனில்லை. இங்கிருந்து கால்நடையாக சென்றும் பயனில்லை. கங்கையில் மூழ்கியும் பயனில்லை. காவிரியில் மூழ்கியும் பயனில்லை.
         
ஆக எந்த பூஜையிலும் பயனில்லை என்று சொல்கிறார்.
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி – வெங்கொடிய பல நோன்பு என்றார், தன்னையே அர்ப்பணித்துக் கொள்வது, அப்படியே சாவது, தன்னையே சாகடித்துக் கொள்வது, கடுமையாக விரதமிருப்பான், உணவு உண்ண மாட்டான். ஆனால் அருள்பெற வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் அதிலேயும் ஒன்றுமில்லை என்றார்.
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து – எந்தெந்த வேதத்தில் என்னென்ன யாக முறையிருக்கிறதோ, அவ்வ்ளவையும் செய்வான். சந்டிஹோமம், கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் இன்னும் எத்தனையோ ஹோமங்கள் இருக்கிறது.
அந்த ஹோமத்தைச் சுற்றி ஆண்களும், பெண்களும் அமர்ந்து அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடைசியில் என்ன ஆகும்? அங்கே உள்ள நெய் மற்ற பொருட்கள்தான் வீணாய் போகும்.
ஒரு பெண் நான்கு லிட்டர் பால் கொண்டு வருவாள், வாசலிலே குழந்தையை வைத்துக்கொண்டு ஒருத்தியிருப்பாள். அம்மா! இந்த பிள்ளைக்கு பால் வேண்டும் என்று கேட்டால் அவள் கொடுக்கமாட்டாள், சாமிக்கு கொண்டு போகிறேன் என்பாள்.
கோவில் வாசலிலே பசியோடு நிற்கிறது குழந்தை, நீயும் தாய், அவளும் தாய், அவள் கையில் தன் குழந்தையை வைத்துக் கொண்டு இந்த குழந்தைக்கு பால் இல்லையென்று கெஞ்சிக் கேட்கின்றாள்.
ஆனால் இவளோ யாகத்தில் எரியும் நெருப்பில் ஊற்றுவதற்கு பாலைக் கொண்டு போகிறாள். ஆக யாகத்தில் பாலை ஊற்றுவாள், நெய்யை ஊற்றுவாள், இப்படியெல்லாம் செய்துகொண்டே இருப்பார்கள்.
நான் உண்மைப் பொருள் தெரிந்தவன். இந்த உண்மையை உங்களுக்கு சொல்லாமலேயே ஒரு கூட்டம் மறைத்துவிட்டது. அதை நாங்கள் சொல்லத்தான் வேண்டும்.
இன்னும் சிலபேர், கோயில் வாசலில் கேட்பவர்களுக்கு பொருள் கொடுக்காமல், அங்கே உள்ள உண்டியலில் போய் போடுவான். இன்னும் சிலபேர் சாமிக்கு மாலை வாங்கி கொண்டு வருவான். அவன் குடும்ப தலைவனாக இருப்பான். அப்படியே அந்த மாலையைப் பிடித்து கொண்டு  வருவான், கீழே வைக்கமாட்டான். அவ்வளவு பக்தி விசுவாசம் அவனுக்கு.
அவன் மனைவி நான்கு லிட்டர் பால் கொண்டு வருவாள், தேன் கொண்டு வருவாள், கோவில் வாசலில் இருப்பவன் ஐயா! எனக்கு பிச்சை போடு என்று கேட்டால் தரமாட்டாள். ஆனால் சாமிக்கு கொண்டுபோய் கொடுக்கிறாள்.
நீ ஏதோ தர்மம் செய்தால் அந்த ஆன்மா நீ நீடுவாழவேண்டும் என்று வாழ்த்தும். அப்படி உன்னை வாழ்த்துகின்ற ஆன்மா வெளியே இருக்கும்போது உணர்வற்ற ஒன்றுக்கு நீ மாலை போட்டு மகிழ்ச்சியடைகிறாயே, இப்படியிருந்தால் நீ என்றைக்கு அருள் பெறுவாய்? என்று நான் கேட்கவில்லை, மகான் இராமலிங்கசுவாமிகள் கேட்கிறார்.
அதில் ஒன்றுமில்லை. அங்கே வாசலில் பசி என்று கேட்பவனுக்கு கொடுக்காமல் இங்கே தெய்வத்திற்கு கொடுத்து அருள் பெற நினைக்கிறாயே? இதுபோன்ற ஒரு மடத்தனத்தை இங்கே உருவாக்கிவிட்டார்கள். அது மூடத்தனமான ஒன்று.
மற்ற ஆன்மா எனக்கு ஏதேனும் உதவி செய்! என்று கேட்டால் உதவி செய்ய வேண்டுமென்ற உணர்வு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னே இருந்தது. அதுதான் சுத்த ஆன்மீகம்.
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து              
    என்று மகான் அருட்பிரகாச வள்ளலார் சொல்லியிருக்கிறார்.
                கள்ளமகன்று கருத்தில் தெளிவு வரும்
                வள்ளலார் வழிபாட்டில் தான்.
                                குருநாதர் அரங்கமகாதேசிகர் அருளிய ஞானக்குறள் – கவி எண் 10
       என்று நாம் கவியமைத்திருக்கிறோம்.
     காலை எழும்போதே இராமலிங்க சுவாமிகளே, இந்த பாவியின் பால் கருணை காட்டுங்கள், இந்த கொடிய பாவியை மன்னித்து அடியேன் தொட்டது துலங்க அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் அப்பொழுதே அஞ்சேல் மகனே! என்று சொல்லக்கூடிய ஆற்றல் பெற்ற மகான் இராமலிங்கசுவாமிகள் ஆவார்.
இந்த கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். யாரோ கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகவாதி சொன்னார் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். நாத்திகவாதி சொல்லவில்லை.
ஆத்திகத்திலே திடமான, உறுதியான இரும்பு நெஞ்சம் படைத்தவர், ஆன்மீகத்தில் சிறப்பான அறிவுடைய, சுத்த ஆன்மீகவாதி மகான் இராமலிங்கசுவாமிகள் இதை சொல்லியிருக்கிறார்.
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து – யாகம் செய்து பயனில்லை, அதுமட்டுமல்ல, பங்கமில்லா வேதியர்களுக்கு பணம் அள்ளிக் கொடுத்தான் பயனில்லை என்றார்.
     ஆனால் இப்படி தர்மம் செய், இதை செய் என்று கட்டாயப்படுத்தி செய்ய நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களிடம் அள்ளிக் கொடுக்கலாம். தர்மமாக செய்யலாம்.
     ஆனால் இந்த சடங்கு செய்யத்தான் வேண்டுமென்று கட்டாயப்படுத்தி அதற்கு பணம் வாங்குவது குற்றமென்று சொல்லுவார்கள். இப்படி பேசுவதை நாத்திகம் என்று நினைக்கக் கூடாது. இதை நான் சொல்லவில்லை. மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்கள்.
     பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து – பங்கமில்லா என்று சொல்வதை கவனிக்க வேண்டும். பங்கமில்லா என்றால் குற்றமற்ற நெறிக்குட்பட்ட வேதியர்க்கு பணம் அள்ளிக் கொடுத்தபோதும் அதிலும் பயனில்லை என்று சொன்னார்.
     குற்றமற்ற வேதியர்க்கு பணத்தை அள்ளி அள்ளி என்று சொல்லும்போது அப்படியே எண்ணிக்கொடு என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுத்தான் பயனில்லை என்று சொன்னார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வருகிறார்.
அடுத்து பசுவதனைப் பூசித்து அதன்கழிவை உண்டு – பசு மாட்டுக்கு பூஜை செய்வான், உண்மைதான், பசு சிறந்ததுதான், யாரும் அதை மறுக்க முடியாது.
மகான் திருமூலர் சொல்வார்,
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவாரக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
திருமந்திரம் – அறஞ்செய்வான் திறம் – கவி எண் 252
                பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடு என்று மகான் திருமூலதேவர் சொல்வார். அதனுடைய மகிமையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உலகத்தில் எத்தனையோ தாய்மார்களுக்கு தாய்பால் இருக்காது. காரணம் போதிய சத்தான உணவு இருக்காது அல்லது சிலருக்கு உடற்கூராகவும் இருக்கலாம்.
     எல்லா பிள்ளைகளையும் காத்து இரட்சிக்கக்கூடிய தாய், பசுதான் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதை மறுத்து பேசுவதற்கில்லை. ஆனால் அதற்கு மஞ்சள் பொட்டு வைத்து, குங்குமம் வைத்து சூட, தீபம் காட்டுவான். பிறகு சாம்பிராணியும் போடுவான்.
                ஆனால் அந்த பசுவோ இவையெல்லாம் இருக்கட்டும், நீ சூட தீபம் காட்டியது போதும், சாம்பிராணி காட்டியது போதும், நான் ஈன்றெடுத்த கன்றுக்குட்டி என்னிடம் பால் குடிக்க கொஞ்சம் விடப்பா என்றதாம் அந்த பசு.
     எனக்கு சூடம் காட்டினது சரி, குளிப்பாட்டினாய் அதையும் ஏற்றுக்கொள்கிறேன், பொட்டு வைத்தாய் அதையும் ஒத்துக்கொள்கிறேன், வாரம் வெள்ளி, செவ்வாய்க்கு சாம்பிராணி போடுகிறாய் அதையும் ஒத்துக்கொள்கிறேன், நான் ஈன்றெடுத்த கன்றுக்குட்டிக்கு என்னிடம் பால் குடிக்க உரிமையில்லையா? கொஞ்சம் கருணை காட்டு என்றால் அதை மட்டும் ஒத்துக்கொள்ள மாட்டான். ஆனால் அந்த பசுவை இவன் பூஜிப்பான்.
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன்கழிவை உண்டு
     பசுவை பூஜிக்கலாம், இவனுடைய பூஜையை ஏற்று பசு இவனுக்கு அருள் செய்யுமா? ஆக அந்த பசுவின் பூஜைக்கு என்று ஒரு முறை இருக்கிறது. நேரா நேரத்திற்கு தீனி போடவேண்டும்.
     சிலபேர் என்ன செய்வார்கள்? அந்த கன்றுக் குட்டியை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு போகிறான். ஏனென்றால் இரண்டு அல்லது மூன்று மாதக் கன்றுக்குட்டி இறந்து போகும். அதில் பஞ்சு வைக்கோல் வைத்து திணித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு போகிறார்கள். இப்படியெல்லாம் செய்துவிட்டு இவன் பூஜை செய்கிறான் பசுவை.
     ஆக எவ்வளவு பெரியளவில் இவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். பசுவை நல்ல முறையில் பாதுகாப்பதுதான், அதை பூஜை செய்வதாகும்.
     அதன்மீது அன்பு காட்டுவது, அந்த உயிர்பால் கருணை காட்டுவது என்பதுதான் இவனுக்கு நன்மையைய் தரும் என்று சொன்னார். இதை நான் சொல்லவில்லை. வேறு நாத்திகவாதி சொன்னார் என்று நினைக்கிறீர்களா? மகான் இராமலிங்கசுவாமிகள்தான் சொல்கிறார்.
பசுவதனைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.
என்றார். ஆக முக்தியடைய மாட்டார்கள். முக்திக்கு அடிப்படை தயவு என்று சொல்லிவிட்டார். பிறப்பால் கருணை காட்டுகின்ற ஒன்றே ஒன்றுதான் முக்தியடைவதற்கு ஒரே வழி என்று மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்கிறார். இதை நான் சொல்லவில்லை. இதை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும்.
      இப்படித்தான் இந்த துறை உள்ளது. மகான் இராமலிங்கசுவாமிகள் எப்படி வழிபட்டார்?
      உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
திருமந்திரம் – சம்பிரதாயம் – கவி எண் 1778
                மகான் இராமலிங்கசுவாமிகள் காலை எழும்போதே மகத்துவம் பொருந்திய மகான் மாணிக்கவாசகரை அழைத்து “ஐயனே! தேனினும் இனிய தமிழ்ப்பாடிய தெய்வமே! திருவருளே திகட்டாத தெள்ளமுதே! இனிய தென்றலே! தாயினும் இனிய தயவே! ஆசானே மாணிக்கவாசகா! இந்த பாவியின்பால் கருணை காட்டு, என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்கிறேன். இந்த பாவியை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உள்ளம் உருக பூஜித்த காரணத்தால்தான் இந்த ஆற்றல் வந்தது.
     இந்த ஆற்றலையெல்லாம் பெறுவதற்கு அவர் என்ன செய்தார்? இந்த ஆற்றலையெல்லாம் பெறுவதற்கு காலை எழும்போதே ஆசானே மாணிக்கவாசகா! என்று எழுந்திருப்பார்.
     ஏதேதோ சடங்குங்கள் செய்து இறையருளை பெறலாம் என்று நினைக்கிறான். எப்படியாவது இறையருள் பெறவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவன் செய்தது எல்லாம் ஒரு மூடத்தனமான வேலை.
     ஆகவே, அவனுக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள் எப்படி இந்த பூஜையை செய்து முன்னேறினார்? மகான் இராமலிங்கசுவாமிகள் எந்த பூஜை செய்து இந்த ஆற்றலை பெற்றிருக்கிறார்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
         
     உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு – உதகத்தாற் என்றால் தண்ணீர் என்று பொருள். ஒரு சிறிய தட்டை வைத்துக்கொள்வார்கள். என் உடல், பொருள், ஆவி அத்தனையும் உனக்கே அர்ப்பணம் என்று மகான் மாணிக்கவாசகர் பாதத்திலே இந்த தண்ணீர் விழுவது போல மானசீகமாக பூஜை செய்வார்கள்.
     அப்படி மானசீகமாக நினைத்து அந்த தண்ணீரை ஊற்றினால் மகத்துவம் பொருந்திய ஆசான் மாணிக்கவாசகரின் பாதத்திலே அந்த தண்ணீர் விழும். இப்படி உறுதி மனப்பான்மையோடு, பக்குவத்தோடு,  பரிபக்குவமாகவும் செய்து தெய்வத்தன்மை வாய்ந்தது என்று அந்த தட்டில் உள்ள நீரை எடுத்து அருந்துவார்கள் . இப்படி செய்தல்லவா மகான் இராமலிங்கசுவாமிகள் சித்தி பெற்றார்.
     படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து – இவனுக்கு தகுதி என்ன? என்று பார்ப்பார்கள். ஒரு நாள் இரண்டு நாள் பூஜை செய்தா மகான் இராமலிங்கசுவாமிகள் இந்த ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்? விடாது தொடர்ந்து வைராக்கியதோடு இருந்து எத்தனையோ துன்ப, துயரங்கள் வந்தாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
     ஆக இதெல்லாம் மிக கடுமையான செயல்கள். அவர்கள் திருவடியை உறுதியாக, கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். மும்மலத்தை வெல்வது என்பது சின்ன விசயமில்லை. எல்லோருக்கும் தடையாக இருப்பது மும்மலம்தான். இப்படி பேசுவது சற்று கடினமாக இருக்கும்.
     ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன் றேயாம்
            ஆனாலும் பேதைகுணம் பெண்ணுக் குண்டு
      வீணுக்கே எடுத்தசன்மம் ஆனந்தம் கோடி
            விவேகமுத்தி யடைந்தவர்கள் அவரு ளுண்டு
      ஊனுக்குத் தேடியுண்டே உருங்கிச் செத்த
            உலுத்தருண்டு புருடரிலே யனந்தங்கோடி
      தாணுக்கே ஏகசரா சரந்தாம் நெஞ்சே
            சற்குருவுக் கப்படியே சார்ந்து பாரே.
    சிவானந்தபோதம் – கவி எண் 48
ஆண்களிலே ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பேர்கள் ஒன்றுக்கும் இலாயக்கியில்லாமல் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது பெண்களைப் பற்றி ஏன் பேசுகிறாய்?
ஊனுக்குத் தேடியுண்டே உருங்கிச் செத்த
            உலுத்தருண்டு புருடரிலே யனந்தங்கோடி
     ஆண்களிலே எவ்வளவோ கோடான கோடி பேர், தன் பிறவியை அறிந்து கொள்ளாமல் தன்னையறிந்து கொள்ளாமலேயே இறந்து போய்விட்டார்கள். இதை “உருங்கிச் செத்த” என்றார்.
உலுத்தரு என்றால் உலுத்துப் போனவன் என்று பொருள். இப்படிப் புருடரில் யனந்தங்கோடி என்றார். ஆக அவர் நம்மை அப்படித் தாக்கி பேசுவதின் நோக்கம் என்ன? நம்மீது அன்பு உணர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம்.
அவர் ஏன் நம்மை தாக்கி பேசவேண்டும்? அவர்களெல்லாம் செய்த பூஜையை நாம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் செய்த பூஜையில் கொஞ்சமும் சடங்கு இருக்காது. அவர்களெல்லாம் உள்ளம் உருக பூஜை செய்ததினால் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கு கூடியுள்ள பெண்கள் அனைவரும் அந்த வாய்ப்பைப் பெறலாம். நீங்களும் மகான் ஔவையார் போல் ஆகலாம். இதை மகான் ஔவையார்.
நித்தம் நினைத்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில்
முற்றுமவ னொளியே யாம்.
ஔவைக்குறள் – நினைப்புறுதல் – குறள் எண் 6
இதை சொன்னது மகான் ஔவையார். தத்துவக்கடல் அது. இதைப்பற்றியெல்லாம் நாங்கள் குடிலில் பேசிக்கொண்டிருப்போம். கேட்பதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
     இந்த கருத்துக்களையெல்லாம் பண்பட்டு தொன்றுதொட்டு அல்லது நீடிய பயிற்சி உள்ள மக்களுக்குத்தான் இதை விளக்கி சொல்லமுடியும் அத்தகைய நூல் இது. நீங்களும் பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஆசான் திருமூலர்,
     உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயாப் படலம் மெனப்பண்ணி
அத்தனை நீயென் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
திருமந்திரம் – அருளொளி – கவி எண் 1017
                இந்த கருத்துக்களையெல்லாம் நாம் பேசுவோம். இங்கே குடிலில் மட்டும் இந்த தத்துவத்தை பேசலாம். ஏனென்றால் அவ்வளவு கடினமான ஒன்று. அதை சொல்லவே முடியாது. அவ்வளவு பெரிய சிக்கல் நிறைந்த ஒன்று.
     இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒன்று எனக்கு எப்படி புரிந்தது? நான் காலை எழும்போதே ஆரவாரம் இல்லாமல் “ஓம் அகத்தீசாய நம” என்று பன்னிரண்டு முறை சொல்வேன். இவ்வளவுதான். இது போதும்.
     மற்றவர்கள் அறியமுடியாத ஒன்றை அறியலாம். மிக நுணுக்கமான அறிவு தானே வரும். இது இலகுவான பூஜை. ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். உங்களுக்கும் வாய்ப்பு இருக்கு. எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு.
     ஏனென்றால் துறையூர் ஒரு புண்ணியமான ஊர். நான் உங்களுக்கு சொல்வது வெறும் மணியடிக்கின்ற பூஜை என்று நினைக்காதீர்கள். மோனநிலை அறிந்தவன் நான், மோனநிலை என்றாலே மிகப்பெரிய தத்துவக்குவியல், மிகப்பெரிய இரகசியம், சூட்சுமம் அதில் அடங்கியிருக்கு.
     மோனநிலையறிந்தவன் நான். உலகத்திலே நான் ஒருவன்தான் மோனநிலையறிந்தவன் என்று அருள்மிகு அகத்தீசர் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புள்ளவன் துறையூரில் இருக்கிறேன். என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
     சாமி தலையில் அப்படியே குடம் குடமாக பாலை ஊற்றுவான். பஞ்சாமிர்தம் ஊற்றுவான், பாலாபிஷேகம் செய்வான், விபூதி அபிஷேகம் செய்வான், இதெல்லாமா பூஜை? நான் சொல்வதுதான் உண்மை. ஞானிகள் எல்லாம் எந்த பூஜையை செய்து இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்? மகான் இராமலிங்கசுவாமிகள் இந்த பூஜையை செய்தா இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்? ஒரு நாளும் இருக்கமுடியாது.
     
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
திருஅருட்பா ஆறாம் திருமுறை – உறுதிகூறல் – கவி எண் 1481
     என்றார் ஆசான் இராமலிங்கசுவாமிகள் நம்மை பார்த்து
    
                வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
      என்று சொன்னார். மனித வர்க்கத்தைப் பார்த்து உங்கள் வாழ்க்கையெல்லாம் உயர்ந்த வாழ்க்கையா? இது என்ன வாழ்க்கை என்று கேட்கிறார். இந்த வாழ்வு நிலையில்லாதது. இதை ஆசான் வள்ளுவப்பெருமான்.
      நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 335
                என்பார். மகான் பட்டினத்தாரும்,
      நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
மகான் பட்டினத்தார் – நெஞ்சோடு புலம்பல் – கவி எண் 17
               
            நம்முடைய வாழ்வை நீர்க்குமிழி என்றார். அவர் அப்படி சொல்வதற்கு நியாயம் உண்டு, அடுத்து,
      காற்றை துருத்தி கடியவினைக் குள்ளான
      ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து
            பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
      ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே.
மகான் பட்டினத்தார் பாடல், நெஞ்சோடு புலம்பல் – 16
                தேவர்களே உங்களுக்கு வாழ்க்கை நிச்சயமா? இப்படி கேட்பதற்கு எவ்வளவு ஆற்றல் வேண்டும்? இப்படி கேட்பது சின்ன விசயமா? இப்பொழுது மகான் இராமலிங்கசுவாமிகள் சொல்வதைப் பார்ப்போம்.
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கைஎலாம் – உங்களுடைய வாழ்க்கையெல்லாம் உயர்ந்த வாழ்க்கையா? எல்லாம் அழிந்து போகும். எல்லாம் ஒரு காலத்தில் வீழ்ந்து போகும். நீங்களெல்லாம் இறந்துவிடுவீர்கள். என்று தேவர்களைப் பார்த்து கேட்டாராம்.
மனிதர்களைப் பார்த்து கேட்பது நியாயம், ஆனால் தேவர்களை பார்த்து நீங்களெல்லாம் இறந்து விடுவீர்கள் உங்களுக்கு வாழ்க்கையில்லை என்பதை
மற்றகத்தீர் நுமது வாழ்க்கையெலாம் வாழ்க்கைஎன மதித்துமயங்காதீர் – நீங்கள் உங்கள் வாழ்க்கையெல்லாம் பெரிய வாழ்க்கையென்று நினைத்து மயங்காதீர்கள். உங்களுக்கு ஒரு காலத்தில் அழிவு உண்டு. மேலும்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
      என்றார். இந்த உலகத்தில் மும்மலத்தை வென்று பிறவிக்கு காரணமான ஆசையை தூள்படுத்தி மும்மலத்தை வென்று இருப்பதே வாழ்வு என்றார், மேலும்
           இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
          எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
     மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
          வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
     தெருளான சுத்தசன் மார்க்கம் தொன்றே
          சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
     அருளான வீதியில் ஆடச்செய் தீரே
          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
திருவருட்பா ஆறாம் திருமுறை – சிவானந்தழுத்தல் – கவி 9
இருளான மலம்அறுத் திகபரங் கண்டே என்னை வஞ்சிக்கக்கூடிய எனக்கு உண்மை பொருளையும் தெரியாமல் தடுக்கின்ற இரும்புச் சுவரை வென்றேன். எனக்கு தெளிவு தராமல் திரையாக இருக்கக்கூடிய மும்மலத்தை என்னை வஞ்சிக்கக்கூடிய மும்மலத்தை நீக்கினேன் என்றார்.
அறுத் திகபரங் கண்டே – இகத்திலே நான் பரத்தை கண்டேன் என்றார். எதற்கு? எல்லா உயிரும் இன்புற்று வாழ என்றார்.
எத்தனையோ கோடானுகோடி மக்கள் தோன்றி மறையலாம். ஆனால் அவனுடைய தோற்றமும் மறைவும் மற்றவர்களுடைய அறியாமையை நீக்க பயன்பட்டது. ஆனால் மகான் இராமலிங்கசுவாமிகள் எல்லா உயிரும் இன்புற்று வாழ்வதற்குரிய மார்க்கத்தை கண்டது எப்படி என்றால்? நாம் சொன்னோம் அல்லவா உள்ளம் உருகிய பூஜை, தயை சிந்தை இதைக்கொண்டுதான் அதை அடைந்தார்.           
           
     ஆக அந்த தயை சிந்தைதான் மென்மையான அறிவைத்தரும். மென்மையான அறிவுதான் தயை சிந்தையை தரும். இதை அடைவதற்கு விடா பயிற்சி வேண்டும். விடாது மனதிற்கு போதிக்க வேண்டும்.
     பிறருக்கு உதவி செய்ய நான் ஆசைப்படுகிறேன். என்னை நோக்கி யாரேனும் வந்தால் அன்போடு உபசரிக்க நான் ஆசைப்படுகிறேன். யாருக்கேனும் கொடுக்க ஆசைப்படுகிறேன்.
     எனக்கு நிறைய பொருள் வேண்டும். அந்த பொருளை பிறருக்கு கொடுக்க நான் ஆசைப்படுகிறேன். இப்படிப்பட்ட பயிற்சி மனதிற்கு கொடுக்க வேண்டும். அந்த உணர்வுகளை ஊட்டி வளர்க்கவேண்டும். இதையெல்லாம் பேசலாம். சின்ன விசயமில்லை.
      சொல்லுதல் யார்க்கும் எளிய அரியஆம்
      சொல்லிய வண்ணம் செயல்.
திருக்குறள் – வினைத்திட்பம் – குறள் எண் 664
               
என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். எல்லாம் நன்றாக பேசுவான், பிறருக்கு கொடுக்கவேண்டும் என்பான். பிறரிடம் அன்பு காட்டுங்கள் என்று பேசுவான், அடுக்கு மொழியால் பேசுவான், ஆனால் காரியத்தில் செய்ய வேண்டுமல்லவா?
           
            ஆக எதையும் சொல்வது எளிது. அதை செயல்படுத்துவது கடினம் என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். மேலும்,
      இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண
      நன்னயஞ் செய்து விடல்.
திருக்குறள் – இன்னா செய்யாமை – குறள் எண் 314        
இன்னாசெய் தாரை ஒருத்தல்தீமை செய்தவனுக்கு அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று அவர் எழுதி வைத்தார், இதை செய்யமுடியுமா?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்.
திருக்குறள் – வினைத்திட்பம் – குறள் எண் 664
            என்னப்பா நான் நூலிலே எழுதி வைத்திருக்கிறேன். நடைமுறைக்கு கஷ்டம் என்பார்கள். ஆனால் எல்லாம் செய்யலாம் என்பார், இதை ஆசான் இராமலிங்கசுவாமிகள்.
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.
திருஅருட்பா – ஆறாம்திருமுறை – கவி எண் 1
           
                இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
திருஅருட்பா – முதல் திருமுறை – கவி எண் 1
                என்பார். ஆக எல்லாவற்றையும் அறியலாம். அந்த சும்மா இருக்கின்ற இரகசியத்தை அறிவது என்பது சின்ன விசயமில்லை. ஆனால் அறியலாம்.
     ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன? நம்மை சார்ந்தவருக்கு அவர்கள் மீது அன்பு காட்ட பழகிக் கொள்ளவேண்டும். ஆக எங்கே அன்புணர்ச்சி மிகுதியாக இருக்கின்றதோ அங்கே பக்தி உணர்ச்சி மிகுதியாக இருக்கும்.
     பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
      பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
    மகான் கடுவெளிச்சித்தர்
தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்தவருண் மோன வள்ளலையே – நித்தமன்பு
பூனைக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்;
காணத் துடிக்குமிகு கண்.
மகான் தாயுமானவர் பாடல் – உடல் பொய்யுறவு – கவி எண் 29
தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்இவையெல்லாம் தேவையில்லை உங்களுக்கு அந்த அன்புணர்ச்சிதான் நம்மை உயர்த்தும். ஆக அன்புணர்ச்சி தான் நம்மை உயர்த்தும். அதற்கு ஒரே ஒரு உபாயம், இந்த பூஜை விதி தான்.
காலையிலிருந்து நீங்கள் இந்த விழாவில் பங்கு கொண்டீர்கள். மாலையில் மிகப்பெரிய இரகசியத்தை சொல்வேன் என்று நினைத்திருப்பீர்கள். இடகலை, பிங்கலை, சுழிமுனை என்றோ, அல்லது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞை என்றோ சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்றோ பிருதிவி, அப்பு, தேயு என்றோ, மெய், வாய், கண், மூக்கு, செவி என்றோ இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது. அது தேவையும் இல்லை உங்களுக்கு.
ஒன்றே ஒன்றுதான் நீங்கள் அறியவேண்டும். உள்ளம் உருக பூஜிப்பதுதான் உங்களை உயர்த்தும். ஆகவே நீங்கள் அத்தனை பேரும், நான் கடைப்பிடித்ததை நீங்களும் கடைப்பிடிக்கவேண்டும்.
நிச்சயமாக, சத்தியமாக காலை எழும்போதே மகான் அகத்தியர் நாமத்தைத்தான் சொல்லவேண்டும் அல்லது மகான் மாணிக்கவாசகர் நாமத்தை சொல்லலாம். மகான் இராமலிங்கசுவாமிகள் நாமத்தை சொல்லலாம். எல்லோரும் ஒரே அமைப்பு உள்ளவர்கள்தான், யாரும் வித்தியாசமில்லை.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சித்தி பெற்ற மகான் அகத்தீசரும், நூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே சித்தி பெற்ற இராமலிங்கசுவாமிகளும் ஒன்றே.
இவரும் இடகலை, பிங்கலை என்று சொல்லப்பட்ட இரகசியத்தை அறிந்தவர். அவரும் அறிந்தவர். அவரும் மும்மலத்தை வென்றவர், இவரும் மும்மலத்தை வென்றவர். அவரும் கருணையே வடிவானவர். இவரும் கருணையே வடிவானவர். அவரும் நரை, திரையை வென்றவர். இவரும் நரை, திரையை வென்றவர். அவரும் எமனை எட்டி உதைத்தவர், இவரும் எமனை எட்டி உதைத்தவர். ஆகவே அத்தனை பேரும் ஒரே அமைப்பு உள்ளவர்கள்தான். யாரிடமும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஆகவே மகான் இராமலிங்கசுவாமிகள் பாதத்தை தொட்டு வணங்கினாலும், ஆசான் அரங்கருக்கு தெரியும். இவரை வணங்கினாலும் அவருக்கு தெரியும். ஆகவே நாம் எல்லாம் ஒன்று கூடி இந்த பிறவியை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி இந்த பிறவியை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சடங்குகளில் ஏமாறக்கூடாது. இறையருள் பெறுவதற்காக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. ஆன்மீகம் என்ற பெயரில் நாமெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். நாமெல்லாம் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே அந்த வஞ்சனையிலிருந்து விடுபட்டு உண்மைப்பொருளை உணர்வதற்கு ஒரு சங்கம் உண்டு. அதுதான் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள், இகழ்ந்து பேசுவார்கள். அதைப்பற்றி சற்றும் சிந்திக்க நமக்கு நேரமில்லை. நாம் என்ன செய்யவேண்டும்?  அடுத்தடுத்து இந்த தத்துவத்தை நாட்டிற்கு பரப்பவேண்டும். பெண்களும், ஆண்களும் சேர்ந்து உழைத்து இந்த உண்மைத் தத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் கூட்டத்தில் நான் பேசும்போது தனித்தன்மையாக இருக்கும். பேசுவதற்கு முன்னே என்ன செய்வேன், மகான் ஔவையாரை அழைப்பேன். தாயே! பெண்ணினத்திற்கெல்லாம் பெருமை தேடித்தந்த பெருந்தகையே! கருணையே வடிவான தெய்வமே! அருட்கடலே! என் நாவில் தங்கி இங்கே இருக்கும் பெண்களுக்கு எந்த தத்துவத்தைப் பேசினால் அவர்களுக்கு புலப்படுமோ அதை சொல்வதற்கு எனக்கு அருள் செய்யவேண்டும் என்று மகான் ஔவையாரை கேட்பேன்.
அப்படி கேட்கும்போது நான் வீழ்ந்து வணங்குவேன், கூட்டத்தில் பேசுவேன், என்ன பேசுவேன்? என்பது எனக்கு தெரியாது, அப்போது உள்ள ஊழ்வினைக்கு ஏற்றவாறு உங்கள் தவப்பயன் எந்தளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நான் பேசுவேன். அந்த வாய்ப்பை பெண்களெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி உங்களுக்காகத்தான் அதிகம் பேசவேண்டும்.
நாம் எந்த தத்துவத்தை அடைய வேண்டுமோ, எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமோ, அதை அடைந்துவிட்டோம். பெண்களுக்கு இந்த தத்துவம் பூரணமாக தெரியும். ஏனென்றால் ஏழெட்டு ஆண்டுகளாக நான் பேசிய பேச்சைக் கேட்டு ஒரு ஸ்திர தன்மையான இடத்திற்கு வந்துவிட்டார்கள். உங்களுக்காக நான் பேசவேண்டும் என்று அவர் சொல்கிறார்.
ஆகவே ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று உங்களுக்காக (பெண்களுக்காக) என் நாவில் மகான் ஔவையாரும், மகான் காரைக்கால் அம்மையாரும் தங்கியிருந்து பேசுவார்கள் என்பதை நிச்சயமாக, உறுதியாக சொல்கிறேன். மகான் ஔவையார் பேசுவார், சத்தியமாக சொல்கிறேன் இது ஏமாற்று வேலையல்ல. வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நன்னெறியை கடைப்பிடித்துச் செல்வோம்.
பசிதான் நமக்கு தாய். நமக்கு பசித்தால் அவள் என்ன செய்வாள்? வேண்டிய உணவைத் தந்து நம்மை காப்பாற்றுவாள். ஆனால் அவளுக்கு உணவு தராவிட்டால் என்ன செய்வாள்? காளியாக மாறிவிடுவாள், நம்மை அழித்துவிடுவாள். பசிதான் தாயாகவும், காளியாகவும் மாறுகிறாள்.
அந்த பசிக்கு காரணம் மூச்சுக்காற்றே. இந்த மூச்சுக்காற்றுக்கு காரணம் உடம்பு. ஆக என்ன செய்வான்? உணவு சாப்பிடுவான், பசி வந்தபின் உணவு வந்ததா? உணவு வந்தபின் பசி வந்ததா? எப்பொழுது பசி வந்ததோ அப்பொழுதே அந்த உணவு வந்தது. அந்த உணவுப்பொருளை நாம் உட்கொள்கிறோம். உள்ளே கருவி, கரணங்கள் இயங்குகிறது.
நாம் சாப்பிடும்போது உடம்பிலுள்ள எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இயங்கும். உள்கருவி கரணங்கள் எல்லாம் சேர்ந்து உண்ட உணவை செரிக்க செய்யும். செரித்து சத்து, அசத்தாக பிரித்து கழிவு பொருளை வெளியே தள்ளும். அப்படி வெளித்தள்ளிய கழிவுபொருளுக்கு மலம் என்று பொருள்.
அப்படி ஏற்படுகின்ற சத்து என்ன செய்யும்? சுக்கிலத்தை உண்டு பண்ணும். மனிதனுக்கு தேவையான உதிரத்தை உண்டுபண்ணும். உதிரம் சுக்கிலாமாக மாறும். உடம்பில் தெம்பை உண்டுபண்ணும். ஆக மல, ஜல, சுக்கிலத்தை உண்டு பண்ணும். அந்த மல, ஜல, சுக்கிலத்திற்கு என்ன காரணம் என்றால் இந்த பசிதான்.
ஆக கழிவுப்பொருளை வெளியேற்றிவிட்டு சத்துப்பொருளை எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளுக்கு ஊட்டும். அப்படி ஊட்டும்போது அது என்ன செய்யும்?  அது மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களை இயக்கும். பின் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்த கரணங்களை இயக்கம்.
ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து, பொறி என்பதி மெய், வாய், கண், மூக்கு, செவி. கண் என்பது ஒரு பொருளைப் பார்க்கத்தான் செய்யும், பார்த்த பொருளை என்னவென்று இனம் பிரிப்பதற்கு உள்ளே புலன் ஒன்று இருக்கிறது. ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு, மொத்தம் பதினான்கு கருவிகள்.
இந்த பதினான்கு கருவிகளும் ஆணுக்கும் உண்டு, பெண்ணுக்கும் உண்டு. ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தபோதிலும் நுணுக்கமான பொருளை, உண்மைப்பொருளை அடைவதற்கு தடையாய் இருப்பது பசிதான். பசிக்கு உணவு கொடுக்காவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். ஆக அற்றார் அழிபசி தீர்த்தல் என்பார் மகான் திருவள்ளுவர்,
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
திருக்குறள் ஈகை – குறள் எண் 226
                நம்மை அழிக்கக்கூடிய இயல்பு உள்ளது பசிதான். ஆனால் இந்த பசியை மகான்கள் வென்றுவிடுவார்கள்.
     ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
      மாற்றுவார் ஆற்றலின் பின்.
திருக்குறள் – ஈகை – குறள் எண் 225
            பசியை ஆற்றுகின்ற ஆற்றல் மகான்களுக்கு உண்டு. எப்பொழுது வரும். அதற்கு மகான்கள் என்ன செய்கிறார்கள்? இடகலையையும், பிங்ககலையையும் சேர்த்து ரேசிக்கிறார்கள். பெண்ணுக்கும், ஆணுக்கும் இந்த வாய்ப்பு உண்டு.
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 571
யோகிகள் என்ன செய்கிறார்கள்? காலையில் எழவேண்டும். வெறும் வயிறாக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றை ஆசான் இயக்கவேண்டும். இவனுக்கு தெரியாது.
மூச்சுக்காற்றை ஆசான் இயக்கித்தருவான். இவன் அதை அப்படியே ரேசிப்பான். மூச்சுக்காற்றை அப்படியே நிறுத்தினால் மூச்சுக்காற்று இரண்டு பக்கமும் வரும். வலது பக்கம் வருகின்ற காற்றை புருவமத்தியில் நிறுத்தி விடுவார்கள். பிறகு என்ன செய்வார்கள்? காற்றை நிறுத்திவிடுவார்கள்.
அப்படி காற்றை நிறுத்தினால் உள்ளே அக்னி எழும். ஆக அப்பொழுது உடம்பினுள்ளே இயல்பாக இருக்கக்கூடிய 98.4டிகிரி பாரன்ஹீட் சராசரி வெப்பம் இருக்கும்போதே புதியதொரு வெப்பம் உருவாகும். யோகிகள் என்ன செய்கிறார்கள்? அணு அணுவாக இந்த வெப்பத்தின் துணைக்கொண்டே வளர்ப்பார்கள்.
இது சின்ன விசயமில்லை. மிகப்பெரிய தத்துவம். இதைப் படிக்கும்போதே உங்களுக்கு தடுமாறும், சந்தேகம் வரும். இப்படியெல்லாம் இருக்குமா? என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு.
ஆக உடலில் உள்ள அந்த வெப்பத்தின் துணைக் கொண்டே இந்த வெப்பத்தை வளர்க்கின்றான். ஆனால் அந்த வெப்பமும் குறையக்கூடாது. இந்த வெப்பமும் குறையக்கூடாது. அப்படியே அணு அணுவாக அந்த அனல் துணைக்கொண்டே இந்த அனலை எழுப்புகின்றான்.
எவ்வளவு பெரிய அறிவு. எவ்வளவு பெரிய ஆற்றல் அது. இது சின்ன விசயமில்லை. அந்தக்கனல் என்ன செய்யும்? இந்த கனலை அழித்துவிடும். அழித்து என்ன செய்யும்? உடம்புக்குள்ளே ஒரு திரவப்பொருள் இருக்கு. அந்த திரவப்பொருளை உண்டு பண்ணும்.
பின் என்ன செய்யும்? நம்முடைய மும்மலத்தை வெல்லச்செய்யும். இது சின்ன விசயம் அல்ல. ஞானிகள் தயவு இருந்தால்தான் இது உங்களுக்கு தெரியும். இதுதான் மும்மலத்தின் சாரம். இருந்தாலும் ஓரிருமுறை சொல்லி இதை விளக்கமுடியாது. தொடர்ந்து பயிற்சி பெறவேண்டும் அல்லது ஆசான் தயவு இருக்கவேண்டும். இதுதான் விளக்கம். இதற்குமேல் விளக்கம் ஒன்றுமில்லை.
ஆக மல, ஜல, சுக்கிலம் என்பதும், ஆணவம், கன்மம், மாயை என்பதும் ஒன்றுதானா? இரண்டும் ஒன்றுதான். ஆணவம், கன்மம், மாயை என்பது வடசொல்லாக இருக்கும். மல, ஜல, சுக்கிலம் தமிழ் சொல்லாக இருக்கும். நான் உங்களுக்கு புரியாத மொழியில் பேசமாட்டேன்.
இதுதான் பாதை என்போம். தினம் தினம் பூஜை செய். நீ உண்மையை தெரிந்து கொள்வாய் என்போம். உங்களிடம் எதையும் மறைக்க மாட்டோம். மறைத்து எதையும் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
காரணம் உங்களுக்கு புரியாத ஒன்று என்னிடம் இருப்பதாக ஒரு பிரம்மையை உண்டு பண்ணி உங்களிடத்தில் உள்ள பொருளாதாரத்தை கவர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு உணவு, உடை, நிச்சயம் உண்டு. ஏனென்றால் முன்ஜென்மத்தில் நான் மாபெரும் யோகிக்கு தொண்டு செய்தவன்.
ஆகவே எனக்கு உணவு உடைக்கு உத்திரவாதம் உண்டு. மற்றவர்கள் இகழ்ந்து பேசுவதைப் பற்றி சிந்திக்க அவசியமில்லை. நம்மை இகழ்ந்து பேசுகின்ற மக்கள் இருக்கத்தான் செய்வார்கள்.  நாம் பாடிய ஞானக்குறளில் இருக்கும்.
தகைசான்ற அகத்தியன் தாள்பற்றும் மக்களுக்கு
பகையில்லா வாழ்வளிக்கும் பார்.
குருநாதர் அரங்கமகாதேசிகர் அருளிய ஞானக்குறள் – கவி எண் 5
                இதிலுள்ள ஒவ்வொரு சொற்களும் நம் கருத்தில் ஏற்பட்டது. அதனால் இதை எழுதியிருக்கிறோம். தகைசான்ற அகத்தியன் தாள் பற்றும் மக்களுக்கு என்று சொல்லியிருக்கிறோம். ஆகவே இந்த துறையில் இருக்கின்ற மக்கள் வளர்ச்சி அடைய அடைய போட்டி, பொறாமை இருக்கத்தான் செய்யும்.
     அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. இகழ்ந்து பேசுபவனுக்கு பதில் சொல்லவேண்டிய கால சந்தர்ப்பம் இதுவல்ல. அது நமக்கு தேவையில்லா ஒன்று.
     நமது அன்பர்களிடம் அப்படி யாராவது இகழ்ந்து பேசினால் என்ன செய்ய வேண்டும்? ஆசான் அகத்தீசரிடம் சொல்லி என்னப்பா இன்றைய பொழுதில் இப்படி ஒரு கேவலமான மனிதனிடம் பேசுகின்ற சந்தர்ப்பம் போல் இனி என்றும் வரக்கூடாது என்று கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, அவனை இகழ்ந்து பேசக்கூடாது, பேசவேண்டிய அவசியமில்லை.
     அவர்கள் அப்படி இகழ்ந்து பேசிப்பேசி நம்முடைய பாவத்தை கொள்முதல் செய்கிறார்கள்.
 பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்கும்நாள் செய்யும் கர்மம்
 மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழிஏ தென்றால்
 சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்
 அறிவுளோர் அறிந்து பூசித்து அறம்எலாம் கைக்கொள் வாரே.
    கைவல்ய நவநீதம் – கவி எண் 97
ஞானியை இகழ்ந்து பேசி முன்செய்த பாவத்தை கொள்முதல் செய்வான். சிறப்பறிவு உள்ள மக்கள் என்ன செய்வார்கள்? ஞானிகளிடத்தில் அன்பு காட்டி ஞானிகளிடத்து உண்மையிருக்கிறது என்று எண்ணி அவர்கள் செய்த தவத்தையெல்லாம் கொள்முதல் செய்வார்கள்.
அறிவுளோர் அறிந்து பூசித்து அறம்எலாம் கைக்கொள் வாரே – ஆக அவன் இகழ்ந்து பேசி பாவத்தை கொள்முதல் செய்கிறான். இது போன்ற மக்களால்தான் ஞானிக்கு ஆதாயம் உண்டு. ஞானியை இகழ்ந்து பேசுவதாலும் ஒரு பெருமை உண்டு.
ஏனென்றால் அடுத்தபிறவி இல்லாத ஒரு வாய்ப்பை இகழ்ந்து பேசுகிறவன் தருகிறான். அவனைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். என்ன செய்ய வேண்டும்? மானசீகமாக அகத்தீஸ்வரா அவன் நீடுவாழ வேண்டும். மீண்டும், மீண்டும் அவன் என்னை இகழ்ந்து பாவத்தை சுமந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.
அவன் என்னை மேலும், மேலும் இகழவேண்டும். அவன்தான் நான் செய்த பாவத்தையெல்லாம் கருணையோடு பெற்றுக்கொள்கிறான்.
அடுத்து புகழ்ந்து பேசுகின்ற மக்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? நான் செய்த தர்மத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். ஆனாலும் நட்டம் இருவராலும்தான்.
இகழ்ந்து பேசுபவர்களால் நமக்கு இலாபமுண்டு, அவன் நீடுவாழவேண்டும். தொடர்ந்து என்னை திட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவன் நீடுவாழவேண்டும். அவன் நோய் வந்து இறந்துவிட்டால் பாவத்தை யார் தலையில் சுமப்பது? அவனல்லவா சுமக்கிறான் பிள்ளை, நம்மீது அன்புள்ள பிள்ளை அவன், பாவத்தை சுமக்கிறான்.
இவனிருக்கின்றான் நம் தர்மத்தையெல்லாம் வீணாக்கிக் கொண்டு போகிறான். ஆக அவர்களைப் பற்றிய சிந்தனை நமக்கு தேவையில்லை.
நமது இலட்சியம் மனிதன் தெய்வமாக வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு. எப்போது மனிதன் தன்னை அறிகின்றானோ? அப்போதே அவன் தெய்வமாகலாம். தன்னை அறிவது சின்ன விசயமில்லை. ரொம்ப இலகு என்று நினைக்க வேண்டாம்.
ஆனால் எல்லாம் நமக்குள்ளேயே ரொம்ப சுலபமாக சொல்லிவிட்டு போவான். அப்படியெல்லாம் நமக்குள்ளே என்கிறாயே அது என்ன? என்று கேட்டால் தெரியாது என்பான். ஆனால் நாம் அப்படி அல்ல.
எல்லாம் நமக்குள்ளேயே என்றால் எப்படி? என்று வகுத்துக் காட்டக்கூடிய சங்கம் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம். இந்த உலகத்தில் உள்ள எத்தனைக் கல்வியறிவு உடைய மக்களாக இருந்தாலும் சரி, எத்தனை தத்துவமேதையாக இருந்தாலும் சரி நமது சங்கத்தார் அவர்களைக் கண்டு சிறிதும் அஞ்ச அவசியமில்லை.
ஏனென்றால் அவன் கற்காத ஒன்று, அவன் அறிய முடியாத ஒன்று, அவன் உணர முடியாத ஒன்று, அவன் அணுகமுடியாத ஒன்றை அணுகியிருக்கிறோம். கற்க முடியாத ஒன்றை கற்றிருக்கிறோம். நான் என்ற கர்வத்தால் இப்படி சொல்லவில்லை.
ஆசான் அகத்தீசர் திருவருளால் அவரின் திருவடியே இந்த வாய்ப்பைத் தந்தது, பெருமையை தந்தது. அந்த பெருமையை நீங்களும் அடையுங்கள். ஆசான் அகத்தீசர் திருவடியை நீங்களும் பற்றிக் கொள்ளுங்கள். வாருங்கள் நாமெல்லாம் அகத்தீசர் திருவடியைப் பற்றி உய்வோம் என்று கூறி முடிக்கிறேன் வணக்கம்.
           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 263
Total Visit : 207788

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version