13.01.2003 – குருநாதர் 78ஆம் அவதார விழா அன்று அருளிய அருளுரை

குருநாதர் 78ஆம் அவதார விழா அன்று அருளிய அருளுரை
பதஞ்சலி முனிவா   திருஞானசம்பந்தா
அருணகிரிநாதா      புஜண்டமகரிஷி ஐயா
கோரக்கமகரிஷி      கொங்கனமகரிஷி
ஓம் அகத்தீசாய நம
     அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம். இந்த சங்கம், இந்த அளவிற்கு வளர்ச்சி அடைவதற்கு காரணம், தலைமை என்று ஒன்றிருக்கு. அது ஆசான் ஆறுமுகப்பெருமான், அகத்தீசர், திருமூலதேவர், இராமலிங்கசுவாமிகள், மாணிக்கவாசகர் போன்ற ஞானிகளாகும். இந்த சங்கத்தை, பல ஞானிகள் தலைமை தாங்கி இருக்கிறார்கள். அந்த தலைமையின் கீழ் நான் இருக்கிறேன். நான் ஒரு தூசி தான். ஆனால் இந்த சங்கத்தில், தொண்டு செய்கிறார்களே, அவர்கள்தான் இந்த சங்கம் வளர்ச்சி அடைந்துள்ளது. என் இரண்டு கைகளால் அல்ல. ஆயிரக்கணக்கான கைகள், பல்லாயிரக்கணக்கான கைகள் தொண்டு செய்து, இந்த சங்கம் வளர்ந்துள்ளது. அவர்கள் திருவடியை நான் வணங்குகிறேன்.
     அடுத்து மனமுவந்து யார் பொருளதவி செய்கிறார்களோ, அவர் பாதத்தை சிரம் மேல் தாங்குகிறேன். முதலில் இந்த சங்கத்துக்கு யார் யார் தொண்டு செய்கிறார்களோ, அவர் பாதத்தை தொட்டு என் கண்களில் ஒத்திக்கிறேன். தொண்டர்கள் திருவடியை என் சிரமேல் தாங்குகிறேன். மனமுவந்து பொருளுதவி செய்தவர்கள் திருவடியை என் சிரம் மேல் தாங்குகிறேன். அப்படி ஒரு பண்பு இருந்தால்தான் இந்த சங்கம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. தொண்டர்களுடைய ஆற்றல் உழைப்பு, அவர்கள் மனமுவந்து செய்த தொண்டு தான் இந்த அளவுக்கு சங்கம் வளர்ந்துள்ளது. நான் என்ன செய்வேன் நான் ஒரு சாதாரண ஒரு மனிதன். ஆனால் தொண்டர்கள் தான் உயர்ந்தவர்கள். அவர்கள் நிலை உயரவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். அவர்கள் நீடு வாழவேண்டும். அவர்கள் வாழ்ந்தால் நான் வாழ்வேன். நான் வாழ்ந்தால் அவர்கள் வாழ்வார்கள்.
     ஆக இந்த சங்கம் அன்பின் பிடியில் உள்ளது. இந்த சங்கம் என்ன நன்மை செய்தது என்று கேட்டால், பல்லாயிரக்கணக்கான, ஆயிரக் கணக்கில்லை, பல்லாயிரக்கணக்கான இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்த சங்கம் இது. ஒரு சங்கம் என்றால் அங்கே புனிதம் இருக்க வேண்டும், அருள் பலமிருக்க வேண்டும். அந்த அருள் பலம் பசியாற்றக்கூடிய எண்ணம் இருந்தால் அன்றி வராது.
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே
யாரே என்னினும் இறங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே.
மகான் இராமலிங்க சுவாமிகள் – அருட்பெருஞ்சோதி அகவல் – 964
                ஆக ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே அன்பிருக்கனும். அதுக்கு யாருடைய தயவிருக்கனும்? ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். இராமலிங்கசுவாமிகளே இன்னும் வன்மனம் தீரவில்லை நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும் என கேட்க வேண்டும். அகத்தீசா நீங்கள் எல்லாம் பெரிய மகான்கள், அன்பில் கருணையே வடிவானவர்கள் அறக்கடலாக விளங்குகின்ற ஆசானே அடிமையை ஏற்று அருள் செய் என்று கேட்டால் அன்பு உணர்ச்சி வரும்.
     அன்பு உணர்ச்சி மட்டும்தான் இந்த ஸ்தாபனத்திற்கு மூலதனம். மற்ற மூலதனமெல்லாம் எதுக்கும் பயன்படாது.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
    திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் 80
ஏனப்பா உடம்புன்னு சொன்னா என்னா? பிணம் என்று சொன்னார். அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு, அப்ப என்னப்பா என்னை திட்டுகிறாயா என்றான்? அவன் நடமாடும் பிணம் என்று சொன்னார். அன்பு தான் ஒரு ஸ்தாபனத்திற்கு அடிப்படை. அந்த அன்பு என்ற ஒன்றிருந்தால் அது எல்லாவற்றையும் கைவசப்படுத்தும்.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
    திருமந்திரம் – அன்புடைமை – கவி எண் 270
     ஆக எல்லா ஞானிகளும் அன்பு என்ற மூலதனத்தைக் கொண்டுதான் ஜென்மத்தைக் கடைத்தேற்றி இருக்கிறார்கள். அன்பு இல்லாதவனுக்கு ஆசி கிடையாது. அன்பு உணர்ச்சி இல்லாதவனுக்கு அருள் கிடையாது. அன்பு உணர்ச்சி இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லை. அவன் மனிதனே அல்ல, அவன் நடமாடும் பிணம் என்று சொன்னார். அப்ப அடிப்படை அன்பு தான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறோம்.  
     ஆக இந்த ஸ்தாபன வளர்ச்சிக்கு நாங்கள் வணங்குகின்ற தலைவர் முதுபெரும் தலைவர் ஆறுமுகப்பெருமான், திருஞானசம்பந்தன், போகமகாரிஷி, அருள் மழைப் பொழியக்கூடிய அருணகிரிநாதர் இவர்கள் திருவடியை பூஜை செய்ததால் அந்த அன்பு உணர்ச்சி வந்தது.
     அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், ஒரு மனிதன் கடவுள் தன்மை அடைகிறான் என்று சொன்னால், அவன் அன்பு உணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். அன்பு உணர்ச்சி இருந்தால் அங்கே சுயநலம் இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி இருந்தால் பிறர் பசி உணருவான். அன்பு உணர்ச்சி இருந்தால் பிறர் முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வான். ஆக அன்பு தான் மூலதனம். அதை எப்படியப்பா பெருவதுன்னு கேட்டான். அதை அன்புக் கடலாக அன்புக்கு தலைவனாக இருக்கக் கூடிய கருணைக்குத் தலைவனாக இருக்கக்கூடிய ஞானிகள் திருவடியை வணங்கினால் அன்றி ஒருவனுக்கு அன்பு உணர்ச்சி வராது. நான் வணங்கினேன் இராமலிங்கசுவாமிகளை, நான் போற்றினேன் அகத்தீசரை நான் வணங்கினேன் ஆறுமுகப்பெருமானை, அருணகிரிநாதரை வணங்கினேன், அவர்கள் அன்பு உணர்ச்சி பெற்றவர்கள், அன்பு உணர்ச்சி உள்ளவனுக்கு சுயநலம் இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி இருப்பவனுக்கு பொறாமை உணர்ச்சி இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி இருப்பவனுக்கு வறட்டுதனமான லோபித்தனம் இருக்க  முடியாது. லோபித்தனமிருந்தால் அன்பு உணர்ச்சி அங்கே இல்லை.
     பொறாமை உணர்ச்சி இருந்தால் அங்கே அன்பு உணர்ச்சி இல்லை. பழிவாங்கும் உணர்ச்சி இருந்தால் அங்கே அன்பு உணர்ச்சி இல்லை. சுயனலமிருந்தால் அன்பு உணர்ச்சி இருக்க முடியாது.
ஆக கோடிக்கணக்கான பேருக்கு அன்னதானம் செய்ததற்கு ஒரே காரணம் இந்த அன்பு உணர்ச்சிதான் காரணம். ஏழைகளுக்கு பசியாற்றக்கூடிய எண்ணம் இருந்தால் அங்கே தலைவன் இருக்கிறான். எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே என்று சொன்னார் இராமலிங்கசுவாமிகள். திருமூலர் சொன்னார், அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் யாராக இருந்தாலும் சரி அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
ஒரு மனிதனுக்கு அன்பு உணர்ச்சி வேண்டுமென்றால் யார் அன்புக்குத் தலைவனோ, யார் ஞானத்திற்கு தலைவனோ, யார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றானோ, அவன் திருவடியினை, நாயினும் கடைகெட்ட என்னையும் ஏற்று அருள் செய்யணும் என்று கேட்கணும். நான் பாவிதான் தாயே, நீங்களெல்லாம் புண்ணியவான் என்னையும் ஏற்று அருள் செய்ய வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் அருள் செய்வார்கள். நான் பெரிய மனுசன் என்று நினைத்தால் போடா! என்று போய்விடுவார்கள்.
ஆக அவங்ககிட்ட கேட்கணும் நான் தினமும் உன் திருவடியை நினைத்துப் பூசித்து ஆசி பெற நீர் அருள் செய்ய வேண்டும். உனது ஆசி இல்லாமல் உன் திருவடியை பூஜை செய்ய முடியாது. நான் கேட்டேன், அகத்தியரை. பூரண ஆசி தரவேண்டும் என கேட்டேன். எந்த அளவிற்கு நீ பணிகிறாயோ, எந்த அளவிற்கு நீ கணிகிறாயோ அந்த அளவிற்கு நான் கணிவேன் என்பார்.
நீ காயாக இருக்கும்போது நான் காயாக இருப்பேன். நீ நாயாக இருந்தால் நான் நாயாக இருப்பேன். கடவுள் எப்படி இருப்பாருன்னு கேட்டான். கடவுள் எப்படி இருக்கார்? அன்பு உணர்ச்சி உள்ளவனுக்கு தாயாக இருக்கான், வம்பர்களுக்கு பேயாக இருக்கிறான். அன்பர்களுக்குத் தாயாக இருக்கிறான் வம்பர்களுக்கும் கயவர்களுக்கும் பேயாக இருக்கிறான். அவன் பேயாவதற்கு முன்னே நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு என்ன உபாயம்னு கேட்டான். ஒரு மனிதன், ஒரு நபர் மாதம் ஒருத்தருக்கு அன்னதானம் செய்தால் போதும். சில சங்கம் இருக்கும், இங்கே கொண்டுவந்து கொடு என்பான். நீ இங்கே எனக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு ஆசான் அகத்தீசர் இருக்கிறார், திருஞானசம்பந்தர் இருக்கிறார், போகமகரிஷி இருக்கிறார், புஜண்டமகரிஷி இருக்கிறார் அவரை நான் கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன். நீ எனக்கு குடுக்க வேண்டாம், மாதம் ஒருத்தருக்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய். ஏன் செய்ய சொல்கிறேன் என்றால், அந்த உணர்வு வரனும். நேற்றிலிருந்து பசியோடு இருப்பான், அவன்கிட்ட் உணவு கொடுக்கும்போது அந்த வயிறு குளிரும், அந்த ஆன்மா குளிர குளிர உனக்கு அறிவு வரும். எந்த அளவுக்கு பிற உயிருக்கு அன்பு காட்டுகிறாயோ அந்த அளவிற்கு நீ நிலை உயர்வாய் என்று சொல்வார்.
நான் இப்படி ஆசானைக் கேட்டிருக்கேன், நாயினும் கடையேனாகிய என்னையும் ஏற்று அருள் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் இப்படி கேட்க வேண்டும் உன்னுடைய அருளை நான் பூரணமாக பெற்றுவிட வேண்டும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் நீர் தரவேண்டும் என கேட்க வேண்டும். உன்னுடைய திருவடியை பெற்றுவிடுவது எளிதல்லப்பா, நீங்களெல்லாம் பெரிய மகான்கள், மாமேருகள், எதையும் செய்யும் வல்லமை உள்ளவர்கள், ஆணைப் பெண்ணாக்குவார்கள் பெண்ணை ஆணாக்குவார்கள். அப்பேர்ப்பட்ட ஆற்றல் பெற்ற உங்களை வணங்குவதற்கு எனக்கு ஆசி வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
    திருக்குறள் – தவம் – குறள் எண் 265
ஒரு மனிதன் விரும்பிய அனைத்தும் கைகூடும், யார் தயவால்? ஒன்று புண்ணியபலமிருக்க வேண்டும் மற்றொன்று அருள் பலமிருக்க வேண்டும். அருல்பலமும் புன்னியபலமும் இருப்பவர்கள் எதை நினைத்தாலும் கைகூடும். அதுமட்டுமா? மரணமில்லா பெருவாழ்வு கைகூடும். மரணமில்லா பெருவாழ்வு யாராலும் அடைய முடியாது, யாரைப்பற்றினால் முடியும். அது இராமலிங்கசுவாமிகள் திருவடியை பற்றி பூஜை செய்தால் அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வு வரும். கல்வி வேண்டுமா? அது அருணகிரிநாதரை கேளு. கல்விக் கடல் அருள் மழை பெய்யக்கூடிய ஆற்றல் பெற்ற அருணகிரிநாதரை வணங்கிக் கேட்டும் பார் கல்வியை. இராமலிங்கசுவாமிகளிடம், தயைசிந்தை வேண்டுமென கேட்டுப்பார். அகத்தீசரைக் கேளு, அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் தர வேண்டும், நான் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும் எனக் கேட்கணும். இருக்கிறான் ஆறுமுகப்பெருமான் அவனுடைய ஆசி.
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லினைதா ளருள்வோனே
முனிவோ ரமரோர் முறையோ வெனவோ
முதுசூ ருரமேல் விடும்வேலா.
மகான் அருணகிரிநாதர் – திருவீழிமிழலை – திருப்புகழ் – 857
     அடியார் என்றார். அவன் கண்டவன் தலையில் எல்லாம் கையை வைக்கமாட்டார். ஆக முருகனுடைய ஆசி பெறுவதற்கு “முருகன் தனிவேல் முடி மேல்” அவருடைய அடியார்களுக்குத்தான் அருள் செய்வான். ஆயிரம்கோடி ஞானிகளை வணங்குவதோட, ஆறுமுகப்பெருமானே முதுபெரும் தலைவனே முதல் முதலில் இந்த தமிழ்நாட்டில் பிறந்த மூத்தவனே முத்தனே அத்தனே அருளனே அன்பின் திருவருளே மலரினும் மெல்லிய தலைவனே என்னை ஏற்றுக்கொள் என்று சொல்லிக் கேட்டோம், அப்ப சொன்னார், எந்த அளவுக்கு ஆசான் நாமத்தை சொல்கிறாயோ அந்த அளவுக்கு நான் நெருங்கிக்கிட்டே வருவேன் என்றார். நெருக்கமிருக்க வேண்டும், இப்ப மனிதர்களுக்கு எப்படி இருக்கிறதென்றால், உயிர்கொலை செய்கிறான். உயிர்கொலை செய்து சாப்பிடும் மக்களுக்கு எப்படி அருள் செய்வார் என்று கேட்டார் வள்ளுவர். அவனுக்கு அருளே செய்யமாட்டார். என்ன காரணம் அவன் செய்வது கொலை, தின்பது கறி, குடிப்பது மது, பேசுவது பொய், செய்வது கொடுமை. இந்த மாதிரி ஒரு ஐந்து கொள்கையை வைத்திருக்கிறான். அப்ப செய்வது கொலை, தின்பது கறி, குடிப்பது மது, பேசுவது பொய், செய்வது கொடுமை, இப்படி இருப்பவனுக்கு எப்படி அருள் செய்வதுன்னு கேட்டார். அவனிடம் எப்படி போய் சேருவேன் என்றால், அவனிடம் நான் பேயாக போவேன். ஆக இந்த கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும், மது அருந்தாமலும், பொய் பேசாமலும், கொடுமை செய்யாமலும் இருந்தால், ஆசான் சுப்பிரமணியர் அவனுக்கு தாயாக வருவார், இது வேதம், இதுதான் வேதம், பஞ்சவேதம் என்று சொல்லுவார்.
     ஆக ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு உபாயம், எவன் முற்றுப்பெற்றானோ, எவன் கருணைக்கே வடிவானவனோ, அருள் கடல், கருணைக்கடல், பேராற்றல் பெற்ற பெருந்தகையாளர்களான ஞானிகளை வணங்கினால் நிச்சயம் அந்த கருணைமிக்க தலைவர்கள், கருணையே வடிவான மக்கள், உமக்கு மூலதனம் அன்புதான் பக்திதான் மூலதனம், இந்த பக்தி இல்லையென்றால் நிச்சயமாக அருள் செய்ய மாட்டார்கள். ஆகவே நீ ஆசானிடம் கேட்கணும், எனக்கு தயை சிந்தை இல்லை அய்யா கோடிக்கணக்கான பொருள் இருக்கு, கொடுக்க மனசுவரலை ஐயா என்று கேட்டான், நீ செய்த பாவம் என்றார்.
     கோடிக்கணக்கான பொருள் இருக்கு. ஆனால் கொடுக்க கூடிய மனம் இல்லையே என்றார். அது நீ செய்த பாவம் என்னைக் கேள் இராமலிங்கசுவாமிகளே தயை சிந்தை எனக்கு வேண்டும் என்று கேட்டால் அருள் செய்வார், எந்த அளவிற்கு நாமசெபம், முற்றுப்பெற்ற முனிவர்களும் கருணையே வடிவானவர்களும் அருள் கடலாக இருக்கக் கூடிய ஞானிகளை வணங்கினால் நிச்சயமாக பிறவிப்பெருங்கடல் நீந்துவார். சிருகடல்னு சொல்லலை.
     பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 10
ஆக பிறவிப் பெருங்கடல் என்றார். என்ன காரணம்? கோடானுகோடி ஜென்மம் எடுத்திருக்கிறான் அவன், அந்த கடலில் நீந்தி தான் போகணும்னு சொன்னார், ஏன் படகில் வேண்டாம் என்றார், படகெல்லாம் பிடிச்சால் எடுபடாது பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் பெருங்கடலை நீந்து என்றார். அப்ப எத்தனை கிலோமீட்டர்? அது கிட்டதட்ட 15 ஆயிரம் கிலோமீட்டர் இருக்கும், அப்ப எனக்கு முடியுமா? நீந்திதான் போகணும். எனக்கு நீச்சல் அடிக்க முடியாதைய்யா என்னை தாங்கி கொண்டுதான் போகணும் என்றார். ஓஹோ அப்படி ஒரு திட்டமிருக்கா? அவர் சொன்னார் நான் நீச்சல் அடிக்கிற யோக்கியதை கிடையாது. அதான் வயசு 78 ஆச்சு நான் நீச்சல் எப்படிப்பா அடிக்கிறது? நான் தாங்கிக்கிறேன் அப்பா, பிறவிப் பெருங்கடல் நீந்துவார், கைகளால் தான் நீச்சல் அடிச்சு போகனும். எனக்கு கடல் நீச்சல் தெரியும், ஆற்று நீச்சல் தெரியும், கிணற்று நீச்சல் தெரியும். இவ்வளவு நீச்சல் தெரிஞ்சுதே இவ்வளவு பெருங்கடலாக இருக்குதே எப்படி அய்யா? ஒன்றும் கவலைப்படாதப்பா! நானே படகாக இருக்கிறேன், நானே படகாக இருந்து கப்பலாக இருந்து உன்னை கூட்டிக்கிட்டு போறேன், இல்லை நீ விரும்பினால் விமானமாக மாறி உன்னை கொண்டு போவேன்னாரு. அவ்வளவு பெரிய கடல் பிறவிக் கடல். அதுக்கு என்ன காரணம்னா இந்த உடம்பு தாய் தந்தையால் எடுத்த காமதேகம், உன்னை விடாது அவ்வளவு லேசுன்னு நினைச்சுடாதே. வினாடிக்கு வினாடி உன்னை நசுக்குகின்ற நச்சுத்தன்மை உள்ள தேகம் இது. நச்சுத்தன்மை உள்ள தேகத்தைக்கொண்டு எப்படி கடலை கடக்க முடியும். அதுக்கு என்னய்யா உபாயம்? எவன் காமத்தை வென்றானோ, எவன் ஆசையை வென்றானோ, எவன் பொறாமையை வென்றானோ, எவன் கோபத்தை வென்றானோ எவன் மற்றவர்களை கொடுமைச் செய்யாத குணத்தைப் பெற்றானோ அவன் திருவடியை வணங்கினால் அன்றி ஒருவன் பிறவிப்பெருங்கடல் கடக்க முடியாது.
ஆக நாங்கள் பிறவிப்பெருங்கடல் கடந்திருக்கோம். யார் ஆசியால் ஆசான் ஆறுமுகப்பெருமான் ஆசியால், அருணகிரிநாதர் ஆசியால் திருஞானசம்பந்தர் ஆசியால், திருமூலதேவர் ஆசியால், எனது ஆசான் கருவூர் முனிவர் ஆசியால் பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை நீங்களும் பெற வேண்டுமென்றால், ஒன்றே ஒன்று புலால் மறுத்தல் வேண்டும், நான் பொய் சொல்லாது வாழ வேண்டும், பிறர் சொத்தை அபகரிக்க நான் நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைத்தால் நிச்சயமாக என்னுடைய வாழ்க்கை வீணாக போகும்.
சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.
    திருக்குறள் – வினைத்தூய்மை – குறள் எண்  660
இந்த பாட்டை மூன்று நாள் பயிற்சி பண்ணினேன். பச்சை பாண்டத்தில் தண்ணீர் ஊத்தினால் தண்ணியும் போய்விடும் பானையும் போய்தொலைஞ்சிடும், பெரிய வார்த்தை அது. அப்ப மூன்று குறள் இருக்கு, திருக்குறளிலே மூன்றே கவிதான் சகர வரிசையில்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
    திருக்குறள் – நடுநிலைமை – குறள் எண்  118
சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
    திருக்குறள் – குடிமை – குறள் எண்  956
ஆக இந்த துறைக்கு அதிகமாக பேசக்கூடாது இருந்தாலும், இது பிறந்த தினம், என் பிறந்த தினம் அன்றைக்கு 13/01/1936, இப்ப எனக்கு பிறந்த தினம்னு சொன்னா என்னய்யா வயசாயிடுச்சு இன்னும் கைக்குழந்தையான்னு கேட்டிடுவாங்க, நான் சொன்னேன் பிறந்த தினம் இல்லை நான் பிறந்த தினம் 13/01/1936 அன்றைக்கு தான் குழந்தை. இப்போ 78 வயசாயிடுச்சு இப்ப என்னை குழந்தைன்னு சொல்ல முடியுமா? சில பேர் குழந்தைன்னு பேர் வெச்சிருக்காங்க. அது வேற. குழந்தைன்னு பேர் வெச்சிருக்கலாம் ஆனால் குழந்தை இல்லை. சில பேர் இப்ப நான் வந்து இன்னைக்கு தான் பிறந்தேனான்னு கேட்டான். இப்ப தூக்கக் கூட முடியாது. ஆக வயசு 78 ஆச்சு. ஆக குழந்தையுடைய எண்ணம் வரணும். குழந்தைகளுக்கு ஜாதி தெரியாது, குழந்தைகளுக்கு பணவெறி இருக்காது, குழந்தைகளுக்கு பொறாமை உணர்ச்சி இருக்காது, குழந்தைகளுக்கு பிறரை பழிவாங்கும் உணர்ச்சி இருக்காது, குழந்தைகள் கறி தின்னாது.
ஆக அடிப்படை இந்த துறையில் வருகிறவன், கேட்கணும் ஆசானை, நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என் சிந்தையும் செயலும் சொல்லுமாக இருந்து என்னை வழி நடத்த வேண்டும். ஒரு வினாடி என்னைப் பிரிந்தாலும் நான் அராஜகம் செய்துவிடுவேன். நீ சிந்தையும் செயலும் சொல்லுமாக இருந்து என்னை வழிநடத்த வேண்டும். இல்லையென்றால் ஒரு வினாடி பிரிந்தால் முன்செய்த வினை வந்து சூழ்ந்திடும். என்னை விட்டு இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என்றார்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
           – மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்
அப்ப அதான் சொன்னார்
பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
    மகான் கடுவெளிச்சித்தர்
ஆக சிவம் என்றுச் சொல்லப்பட்ட ஒன்று எங்கும் வியாபித்த் பரம்பொருள் தான். அதுக்கு உருவமே இல்லை. அது உருவமில்லாத ஒன்று. இன்ன விஷயம் என்று சொல்ல முடியாது.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 94
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆக எதுக்கும் அகப்படாத ஒன்றுதான் தலைவன். ஆக என்னவென்று சொல்லு வேன் இலக்கணம் இலாததை.
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 4
என்னப்பா இதெல்லாம்னா? அவன் வணங்கின முறை சரியில்லை. ஒன்று சிவவாக்கியர் என்னைக் கூப்பிடு, அருணகிரிநாதரைக் கூப்பிடு, திருஞானசம்பந்தரைக் கூப்பிடு, யாராவது ஒரு மகானைக் கூப்பிடு அதைவிட்டு இப்படி அலைஞ்சிட்டு இருக்காதே. அதான் ஓடியோடி யோடியோடி உட்கலந்த சோதியை  இந்த உடம்புக்குள்ளே ஒரு ஜோதி இருக்கு. யார் ஆசியாலே ஆறுமுகப்பெருமான் ஆசியால, அவர் வந்து வாசி நடத்தித்தரவேண்டும். அவன் வாசி நடத்திக்கொடுத்தால் அன்றி உள்ளே இருக்கிற ஜோதி எழும்போது.
                                                                   ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 4
ஆக அடிப்படை ஒரு மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்பினால், எவன் முக்த்திபெற்றானோ, எவன் மரணமில்லா பெருவாழ்வு பெற்றானோ, எவன் கடவுள் தன்மை அடைந்தானோ, அவன் திருவடியை பூஜிக்க வேண்டும். கடவுள் எப்படி இருக்கிறார் என்றால், எங்கேயும் வியாபித்த பரம்பொருள், அதுக்கு உருவமில்லை ஆக
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.
    மகான் ஔவையார்
அருவம் என்றால் என்னான்னா? புலப்படாது போய்விடும் என்றான். நுட்பமான வார்த்தை அது. குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம். இருட்டில அப்படியே தடவிகிட்டே இருந்தால் எப்படி இருக்கும் இருட்டில தடவுவது போல் ஒன்னும் தெரியாதுன்னான்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டுங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டு காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
    திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2119
ஆமாறு என்றால் ஆக்கமில்லை என்று அர்த்தம் சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் கணக்கில் அடங்கா மக்கள் தேவர்கள், தேவர்னா யாரு? யாரும் மேலே இருந்து குதிச்சு வந்திடலை. நிலை உயர்ந்தவர், பண்புள்ளவர், சாந்தமே வடிவானவர் தான் தேவர்.
அண்டங்களையும், பலகோடி அண்டங்கள் இருக்கு. அண்டங்கள் எல்லாம் எங்கும் வியாபித்த பரம்பொருளை நீ அரியணும்னு சொன்னால் அது சிந்தையில் யாரொருவன் குருநாதன்? அவன் யார்? குருநாதன் என்று கேட்டால், எவன் ஆன்மாவை அறிந்தானோ, எவன் உடம்பு இரகசியத்தை அறிந்தானோ, அவன் தயவு வேண்டும். நீ இந்த உடம்பின் இரகசியத்தை அறியவேண்டும். இந்த தேகம் தாய் தந்தையால் எடுத்த காம தேகம். தாய் தந்தையின் காமத்தால் எடுத்த இந்த உடம்பில, காமம் இருக்கும், அந்த உடம்பின் தன்மையை அறிந்து செயல்படவேண்டும். உடம்பை அறிந்தவன் உயிரை அறிந்தவன் உண்மையை அறிவான்.
ஆக ஆன்மா, உடல் மாசு உயிர் மாசு, உயிர் மாசு மனமாக, மன மாசு உள்ளவரிடம் எப்படி பக்தி இருக்க முடியும். ஆக உடல் மாசு தீர வேண்டும். அதுக்கு யார் ஆசிவேண்டும் என்றால், எவன் உடல் மாசை நீக்கினானோ அவன் ஆசி பெற வேண்டும். எவன் உயிர் மாசை நீக்கினானோ அவன் ஆசி பெறவேண்டும். உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு. அப்ப உடல் மாசால் உயிர் மாசு, உயிர் மாசால் மனமாசு. ஆக உடல் மாசு, குற்றம். உயிர் குற்றம். மனக்குற்றம். அப்ப என்ன செய்யணும், இந்த இரகசியத்தை அறிந்தவன் தான் குரு, அந்த மாதிரி குருவை வணங்கினால் அன்றி ஒருவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது.
செத்துப்பிறக்கின்ற தேவரை துதிப்போர்க்கு முக்திதான் இல்லை யடி குதம்பாய் என்று சொன்னார். எவன் செத்து செத்து பிறக்கின்றானோ, சில பேர் புகழ்வாய்ந்திருப்பான், அவரை கேட்பான், ஒரு நூல் எடுத்து படிப்பான். அந்த முதல் வரியே தெரிஞ்சிகனும், ஓஹோ இவன் ஞானி. எங்களுக்கு தெரியும், பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும். முதல் வரி எடுக்கும் போதே தெரிஞ்சிக்குவோம். அவர் சொல்லுகிறார்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
    திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2
பெரிய பெரிய மேதைகளாக இருந்தாங்க கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் வாலறிவன் என்றால் தூய்மையான அறிவுடையவன் என்று பொருள். தூய்மை எப்போ வரும்? உடல் தூய்மை உயிர் தூய்மை செயல் தூய்மை, அப்ப கல்வியாளர்களைப் பார்த்து கல்வியாளர்களே நீ கற்றதனால் என்னப்பா பயன் என்று கேட்டான். ஏன்யா நீ கடவுள் வாழ்த்து சொல்ல வந்தியா எனக்கு அறிவுரை சொல்ல வந்தியான்னு கேட்டார், அவர் சொன்னார், முதல்ல தெரிஞ்சுக்கடா நான் யார்னு தெரிஞ்சிக்க, வள்ளுவப்பெருமான் யார்ன்னு தெரிஞ்சுக்க. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின், தூய்மையான அறிவுள்ளவன் திருவடியை பற்றாவிட்டால் நீ என்ன கற்று, என்ன பயன் என்று சொன்னார். அதோ போகிறான் பாரு, கைநாட்டு ஒருத்தன் அவன் கைநாட்டு, அவன் பேனா பிடிச்சா பேனா நிப்பை ஒடிச்சிடுவான், என்னவென்று கேட்டான் அவன் வந்து கத்துக்கிட்டான். யாரை வணங்க கத்துக்கிட்டான் ஞானியை வணங்க கத்துகிட்ட அத்தனைப்பேரும் கல்வியாளர்கள்தான். எவன் ஒருவன் முற்றுப்பெற்ற முனிவனை வணங்குகிறானோ, எவன் மரணமில்லா பெருவாழ்வை பெற்றவனை வணங்குகிறானோ, எவன் வள்ளுவன் திருவடியை பூஜிக்கிறானோ, எவன் அருணகிரிநாதன் திருவடியை பூஜை செய்கிறானோ, எவன் மாணிக்கவாசகர் திருவடியை பூஜிக்கிறானோ, எவன் திருஞானசம்பந்தர் திருவடியை பூஜை செய்கிறானோ, அவன்தான் கற்றவன், அவன் கைநாட்டாக இருந்தாலும் சரி இங்கே வாப்பா, படிப்பில்லையா அதைப்பற்றி அவசியமில்லை, சொல்லு அருணகிரிநாதான்னு சொல்லு, வாய்ல வரலையா திருஞானசம்பந்தான்னு சொல்லு, ஓம் அகத்தீசான்னு சொல்லு, ஓம் நந்தீசான்னு சொல்லு, ஓம் இராமலிங்கசுவாமிகள்னு சொல்லு, எது வாயில வருதோ அதை சொல்லு. அப்ப அகத்தியர் போனாரு, முருகா என்று சொல்லுன்னார், முருகா என்றதும் அருள் சனி பிடிச்சிடுச்சு அவனுக்கு, அவன் கைநாட்டு தான். இந்த மாதிரி கைநாட்டை ஒன்பது கோடிபேரை ஞானியாக்கின முதல் தலைவன் ஆசான் அகத்தீசன் தான். ஒன்பது கோடி ஞானிகளை, ஒன்பது கோடி கைநாட்டை, கல்வியாளர்களை அல்ல, கல்வி கற்றாலே, இது என்னா சொல்லுது அது என்னா சொல்லுது, இவன் சொல்வது உண்மையா, இப்படியா அப்படியானு சொல்லி பிரட்டிக்கிட்டு கிடப்பான். கைனாட்டைக் கூப்பிட்டு சொல்லு, முருகான்னு சொல்லுடா அகத்தீசான்னு சொல்லு என்றால் உடனே பிடிச்சுக்குவான். ஆனால் மறுபரிசீலனை இருக்கக்கூடாது.
     எவன் ஒருவன் முற்றுப்பெற்றானோ, எவன் வாசி வசப்பட்டானோ, எவன் மோனநிலை அறிந்தானோ அவனை வணங்க வேண்டும்.
     மோனமென்பது ஞானவரம்பு என்றார் ஔவையார். மோனநிலை என்பது ஆசான் உணர்த்தக்கூடிய ஒன்று, அதனால வெளியே சொல்ல முடியாது என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இல்லாததை
     ஆக ஒரு கைநாட்டு ஞானியாகலாம், உலகநடை ஏட்டுக்கல்வி மட்டும் கற்றவன் ஞானியாக முடியாது, என்ன காரணம்? இவன் சொல்லுவது உண்மையா? இந்த நூலில் இருக்கா? அந்த நூலில் இருக்கான்னு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பான். கைனாட்டைக் கூப்பீட்டு அகத்தீசான்னு சொல்லு திருமூலதேவான்னு சொல்லு இராமலிங்கசுவாமிகள்னு சொல்லு அருணகிரினாதர்னு சொல்லு என்றால் அவன் கைநாட்டாக இருந்தாலும் சரி கை தூக்கி கடைத்தேற்றுவார்கள்.
                ஆக பக்தி ஒன்றுதான் கல்வி. பக்தி ஒன்று தான் வாழ்க்கை, பக்தி ஒன்று தான் ஞானம். பக்தி ஒன்று தான் மனமாசை நீக்கும், பக்தி ஒன்று தான் உடல் மாசை நீக்கும், பக்தி ஒன்று தான் உயிர் மாசை நீக்கும், பக்தி ஒன்று தான் மனமாசை நீக்கும், பக்தி ஒன்று தான் ஞானத்தை தரும்.
     பக்தி ஒன்று தான் தயை சிந்தை தரும். தயை சிந்தை இல்லாதவர்களுக்கு இந்த துறையிலே வேலையே இல்லை. அப்ப தயை சிந்தை எப்படி வரும்? ஞானிகள் அத்தனை பேரும் தயைசிந்தைக்கு தலைவர்கள், ஞானிகள் அத்தனை பேரும் அன்பிற்கு தலைவர்கள், ஞானிகள் அத்தனை பேரும் தவத்தின் தலைவர்கள், ஞானிகள் அத்தனை பேரும் மரணமில்லா பெருவாழ்வுபெற்ற ஞானிகளை வணங்கிதான் மேன்மை அடைந்தார்கள். ஆகவே நீங்களும் ஞானிகளை வணங்க வேண்டுமென்று சொல்லி நீங்கள் விழாவிற்கு வந்திருக்கீங்க, அன்பர் கவனகர் ஐயா வந்திருக்காங்க. பல பேர் வந்திருக்காங்க, நீங்களெல்லாம் நீடு வாழவேண்டும், உங்களை வாழ்த்தக்கூடிய அந்த தகுதி இருக்கு எங்களுக்கு. ஆசான் ஆறுமுகப்பெருமான் இப்ப இதயத்தில் இருக்கிறான் இப்ப பேசிகிட்டிருக்கிறான். நான் கேட்டேன் காலையில் என் சிந்தையில் சார்ந்திருந்து பேச வேண்டும்ன்னு சொன்னேன், இப்ப அவர் தான் பேசியிருக்கிறார், நான் பேசினேன்னு நினைக்காதீங்க
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை……..
    திருஅருட்பா – இராமலிங்கசுவாமிகள்
நான் சொல்லவில்லை நான் பேசியிருப்பது எல்லாம் ஆசான் தான் பேசியிருக்கிறார், இராமலிங்கசுவாமிகள் கைநாட்டு. ஆனால் கவிமழையாய் பொழிவாங்க, இந்த துறையில் வருகிறவன் கல்வி கற்க பள்ளிக்கூடத்துக்கே போகமாட்டான். ஏன் படிச்சிருந்தால் ஏதாவது ஆராய்ச்சி பண்ணிகிட்டிருப்பான், அதனாலே இவனுக்கு கல்வியே தரமாட்டார். எந்த கல்வி தருவான்? ஞானக்கல்வி, ஞானக்கல்வி என்றால் என்னான்னு கேட்டான். முருகா சற்குருநாதா, சாந்த சொரூபா என் தாயினும் மிக்க தயவுடை தெய்வமே. இந்த பாவியைக் காப்பாற்று என்று சொன்னால் அது ஞானக்கல்வி. ஒரே வார்த்தை நீங்கள் எல்லாம் பெரியவங்க நீரே தலைவன் நீரே ஒப்பற்ற தலைவன், உனது ஆசி பெறுவது எளிதல்ல, நாயினும் கடைகெட்ட பாவி என்னையும் காப்பாத்து என்று ஆருமுகப்பெருமானைக் கேட்டால், அது சாகாக்கல்வி. மற்றதெல்லாம் சாகாகல்வி அல்ல, எவனொருவன் சாகாக்கல்வி கற்றானோ, அவனுக்கு தான் உண்மைப்பொருள் தெரியும்.
     எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
        எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
             வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
§  மகான் கடுவெளிச்சித்தர்
எட்டு என்பது அகாரம் புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்று, கண்டஸ்தானத்தில் ஓர்ந்து, வெட்ட வெளியில் என்பது ஆகாயம் அல்லது புருவமத்தி, ஆக இந்த இரகசியம் யார் அறிவார் என்றால், இடைபிங்கலையின் எழுத்தரிவாளர்க்கு தான் இந்த உண்மை தெரியும். அந்த இடை பிங்கலைன்னா எப்படின்னா, இந்த ஞானிகளை வணங்கினால் அன்றி தெரியாது. ஞானிகளை வணங்குபவன் ஞானியாவான்.
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 339
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே, ஏனப்பா இப்படி திட்டுகிறீர்கள்? ஞானியாவதற்கு ஞானிகள் திருவடியை பூஜை செய்கிறான். ஏதேதோ கண்ட தெய்வத்தை பூஜை செய்றான், நாங்கள் அப்படி போகமாட்டோம்.
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
மகான் இராமலிங்கசுவாமிகள் – திருஅருட்பா – ஆறாம் திருமுறை – 275
அந்த கோயிலைப் பார்ப்பதே மனசுக்கு பாரம்னு சொல்றாரு.
தங்கள்தேகம் நோய்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குல தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.
                     – மகான் சிவவாக்கியர் – கவி எண் 275
ஆக தெய்வம் என்றால், அது ஆசான் இராமலிங்கசுவாமிகள், தெய்வம் என்றால் அது ஆசான் மாணிக்கவாசகர், தெய்வம் என்றால் அருணகிரிநாதன், தெய்வம் என்றால் அகத்தீசர், தெய்வம் என்றால் ஞானபண்டிதன், திருஞானசம்பந்தன். இது போன்ற தெய்வத்தை வணங்கி நீங்கள் எல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றுங்கள். ரொம்ப சிக்கலானத் துறை இது. இந்த துறையே நுண்ணியது. அதி நுட்பமானது.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
    திருக்குறள் – ஊழ் – குறள் எண் 375
என்னப்பா இது நுட்பமான ஒரு கருத்து என்றான். ஆயிரக்கணக்கான நூல் கிடைக்கலாம் நுண்ணிய நூல்பல நுட்பமான நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்  உண்மை அறிவே மிகும். எந்த உண்மைன்னான் எந்த அளவிற்கு புண்ணியம் செய்கின்றாயோ, எந்த அளவிற்கு பூஜை செய்கின்றாயோ, அதெல்லாம் உனக்கு அறிவாக மாறும், நீ நுட்பமான நூல் படிச்சு பயனில்லை என்றான். ஆக இதில் யாரையும் தாக்கிட்டேன் என்று நினைக்காதீங்க. நீங்கள் நீடுவாழ வேண்டும். எங்கள் தொண்டர்கள் நீடுவாழ வேண்டும். பொருளுதவி செய்தவர்கள் வாழவேண்டும், நீங்கள் அனைவரும் நீடுவாழவேண்டும் என்று சொல்லி ஆசான் அகத்தீசரை வணங்கி முடிக்கிறேன் வணக்கம்.
அன்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரேகுரலில்
ஓம் அரங்கமகாதேசிகர் வாழ்க வாழ்க
ஓம் அரங்கமகாதேசிகர் வாழ்க வாழ்க
ஓம் அரங்கமகாதேசிகர் வாழ்க வாழ்க
ஓம் அரங்கமகாதேசிகர் வாழ்க வாழ்க
    
என்றென்றும் ஆசான் திருவடி பணிந்து, ஆசான் சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல், தொண்டு செய்து, ஆசான் திருவடியே சரணாகதி என்று நாம் இருப்போமாக. அதற்கும் ஆசான் அருள்புரிய வேண்டுமாய் ஆசான் திருவடி பணிந்து வேண்டுகின்றோம்.
குருநாதர் – என் வேண்டுகோள் அதுதான். நான் பாவிதான் தாயே. உன் திருவடியை பற்றுவதற்கு, எனக்கு அருகதை இல்லையப்பா என் சிந்தையில் சார்ந்திருந்து, காலையில் எழுந்த உடனே தொட்டு வணங்கிதான் எழுவேன், ஆசான் ஆசி இல்லாமல் அவ்வளவு எளிதில் ஆசி பெற முடியாது நான் சொன்னேன், நீங்களெல்லாம் பெரிய மகான்கள், உன் ஆசி பெறுவதற்கு உன் ஆசிதானப்பா முக்கியம், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, உன் ஆசி இல்லாமல் நான் ஆசி பெற முடியாது, நான் ஒரு வார்த்தைக் கேட்டேன் உன் அருளை  நான் பூரணமாகக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும், உன்னை வெறும் ஆளாக ஆக்கணும் என்றேன். ஏனப்பா இப்படி கேட்கிறாய், உன் அருளை நான் பூரணமாகப் பெற வேண்டும், உன்னை வெறும் ஆளாக்க வேண்டும், ஆசான் சொன்னார், என்னை நீ வெறும் ஆளாக்கமுடியாது ஆனால் அருள் செய்கிறேன் என்றார்.
ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம!
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 766
Total Visit : 185176

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version