02.01.1997 அன்று திருவடியே சிவமாவது என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்திசாய நம
அன்புள்ள நண்பர்களே வணக்கம்.
     நாம் வாரந்தோறும் ஆன்மீகம் பேசுகிறோம். ஆக தினமும் ஆன்மீகத்தை பேசி வருகிறோம். சுத்த ஆன்மீகம் என்பது, சுத்த சைவம். உப்பில்லாமல் சாப்பிடுவது வீர சைவம்.
     ஆக வேறு எந்த உணவும் இல்லாமல், உப்பில்லாத உணவு மட்டும் உண்ணவேண்டும். சுத்த சைவம் என்பது சுத்த ஆன்மிகம். எந்த உயிர்களுக்கும் இடையூறு செய்யாமல் இருப்பது சுத்த ஆன்மிகம். எந்த உயிர்க்கும் எப்படி இடையூறு செய்யாமல் இருக்க முடியும்? ஆக எந்த அளவுக்கு ஆசி இருந்தால், எல்லா உயிர்களுக்கும் இடையூறு செய்யாமல் வாழ முடியும்.
     கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
      எல்லா உயிரும் தொழும்.
    திருக்குறள் – புலால் மறுத்தல் – குறள் எண் 260
தலைவனை புரிந்து கொண்டு அவர் திருவடியைப் பற்றினோம். தலைவன் யார் என்று அறிந்தோம். ஆசான் அகத்தீசர், மகான் திருமூலர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர் முனிவர், ஆசான் ஞானபண்டிதரான சுப்பிரமணியர் இவர்களை போன்ற முதுபெரும் ஞானிகளைத்தான் தலைவன் என்று அறிந்தோம். இவர்களை வணங்கிதான் சுத்த சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கவேண்டும்.
சுத்த சன்மார்க்கம் என்பதே தலைவன் திருவடிதான். திருவடியைப் பற்றுவதே சுத்த சன்மார்க்கம். அப்படி இல்லையென்றால் மனது தடுமாற்றமாக இருக்கும். மகான் திருமூலர் திருவடியே சிவமாவது தேரில்என்றார்.
திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
ஆக திருவடியை நாம் பூஜை செய்கிறோம். ஞானிகளை பூஜை செய்கிறோம். ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறோம். ஞானிகள் என்பவர்கள் சிவன்தான். சிவனே சிவஞானி என்பார் ஆசான் திருமூலர். எனவே ஞானிகள் வேறு சிவபெருமான் வேறு அல்ல.
எவன் தன்னை வென்றானோ, அவனே கடவுள். எனவே தினந்தினமும் ஆசான் அகத்தீசரையோ அல்லது மற்ற ஞானிகளை வணங்கினால் அங்கே சுத்த ஆன்மீகம் வெளிப்படும். தினமும் ஞானிகள் நாமத்தை ஜெபம் செய்யவேண்டும். சுத்த ஆன்மீகம் என்பது மாசற்றது, தூய்மையானது என்று பொருள்படும். ஆக மாசற்ற, தூய்மையான, உண்மையான, மெய்யான, மேலான என்று சுத்த ஆன்மீகத்தை சொல்லலாம். நம்மால் எவ்வுயிர்க்கும் தீங்கில்லை. நம்மால் எவ்வுயிருக்கும் இடையூறு இல்லை. இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வதுதான் சுத்த சன்மார்க்கம். இதற்கு ஆசான் ஆசி இருந்தால்தான் முடியும்.
ஆசான் ஆசி இருந்தால் பொறாமை இருக்காது, பேராசை இருக்காது, சினம் இருக்காது, ஜாதிவெறி இருக்காது, மதவெறி இருக்காது, பழிவாங்கும் உணர்வு இருக்காது, நோய் இருக்காது, காமம் இருக்காது. இதுபோன்ற குணக்கேடுகள் மனிதனை மாசுபடுத்தும். இந்த குணக்கேடுகள் சுத்த ஆன்மீகத்தை அடைய தடையாக இருக்கும்.
எனவே ஆசானை வணங்குவதே சுத்த ஆன்மீகத்திற்கு இட்டுச்செல்லும். அதற்குத்தான் பூஜை செய்ய சொல்கிறோம். தலைவனை அறிந்து பூஜை செய்ய வேண்டும். தலைவனை அறிந்து பூஜை செய்தால், பேராசை அற்றவனாகவும், பொறாமை அற்றவனாகவும், வஞ்சனை அற்றவனாகவும், ஜாதிவெறி இல்லாதவனாகவும் ஆகிவிடுவான். இதை ஆசான்தான் செய்து தரவேண்டும். தினந்தினம் ஞானிகள் நாமத்தை நாமஜெபம் செய்யவேண்டும். அதே சமயத்தில் நாமஜெபம் செய்யவேண்டுமென்று ஆசானிடம் நாம் வேண்டிக் கொள்ளவேண்டும். மேலும் அடியேன் தூய்மையானவனாக இருக்கவேண்டும், அடியேன் உண்மையுள்ளவனாக இருக்கவேண்டும், உண்மையை உணரக் கூடியவனாக இருக்க வேண்டும், சுத்த சைவத்தை கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டும்.
உப்பில்லாத உணவு சாப்பிட்டால்தானே சுத்த சைவம்? அதுவே வீர சைவமாகும். இது இந்த துறைக்கு வருகின்ற மக்களுக்கு கடைசி எல்லை. ஆக அப்படியே படிப்படியாக சென்று,அந்த எல்லையை அடைய வேண்டும். ஆக சுத்த ஆன்மிகம் என்பதே சுத்த சைவம்தான்.
சுத்த ஆன்மீகம் என்பது ஞானிகள் திருவடியை பற்றுதல். சுத்த சைவம் என்பது உப்பில்லாமல் சாப்பிடுவது. சுத்த ஆன்மீகம் எப்படி வந்தது? சுத்த ஆன்மிகம் ஞானிகளின் திருவடியைப் பற்றியதால் வந்தது. ஞானிகளின் திருவடியைப் பற்றபற்றத்தான் அறிவில் தெளிவு வந்தது. அறிவு தெளிவடைந்ததால்தான் வஞ்சனை அற்ற வாழ்வு வந்தது. வஞ்சனை இல்லாத வாழ்வு வந்தபின் ஆசி கிடைத்தது. ஆசி கிடைத்தபின் சுத்த சைவத்தை மேற்கொண்டான். இதை வீர சைவம் என்பார்கள். வீரசைவம் என்பது உப்பில்லாமல் உணவு உட்கொள்வதுதான். இதற்கு ஆசான் ஆசிவேண்டும். அப்படியே ஞானிகளை எண்ணி உருக உருக உருக உள்ளம் தெளிவடையும். உருக உருக உருக உருக ஊழ்வினை நீங்கும். உருக உருக உருக உருக உண்மை வெளிப்படும். உருக உருக உப்பில்லா உணவு வரும். கடைசி எல்லை இதுதான். இதை தலைவன்தான் சொல்ல வேண்டும். நம் இஷ்டத்திற்கு உப்பில்லாமல் சாப்பிடக்கூடாது. நாம் உப்பில்லா உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்? நோய் சூழும். வாசி வசப்பட்ட மக்கள் உப்பில்லாமல் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அறுசுவை உண்டால் என்னவாகும்? இரத்தம் கெட்டுப்போகும். ஆக அறுசுவையை நீக்கி, உப்பில்லாமல் சாப்பிடுவதுதான் வீரசைவம் என்பார்கள். அதை அடைவதற்குத்தான் நாம் இப்பொழுது பாடுபடுகிறோம்.
இந்த சங்கம் எதற்கு இருக்கிறது? தினந்தினம் அன்னதானம் செய்கிறோம். இல்லறத்தான் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அன்னதானம் செய்கிறான். நாம் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டிருக்கிறோம். தியானம் செய்கிறோம், செய்வதன் நோக்கம், எடுத்துக்கொண்ட ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இதற்கு தலைவனின் ஆசியை பெற வேண்டும். ஆக தலைவனின் ஆசியை பெறுவதற்காக இதை நாமும் செய்கிறோம், சங்கமும் செய்யச் சொல்கிறது. தலைவனின் ஆசி பெற்றால், கடைசி வரையில் நோயில்லாமல் இருக்கலாம். இது மிகப்பெரிய பாக்கியமல்லவா? நோய்வாய்ப்படாமல் இருப்பதற்கு தலைவன் ஆசி வேண்டும். ஆக தலைவன் ஆசிபெற்று நோயில்லாமல் இருத்தலும், உப்பில்லா உணவு சாப்பிடுவதுமே கடைசி எல்லையாகும். உப்பில்லா உணவு சாப்பிடும்போது, உடலில் கனல் ஏறும், மூலக்கனல் ஏறும், வாசி ஒடுங்கும், வாசி ஒடுங்கினால் கனல் ஏறும், கனல் ஏறும்போது பால், பாசிப்பயறு, பச்சரிசி, பசுநெய், பழங்கள் சாப்பிட்டு, அந்த கனலை ஈடு கட்டவேண்டும். அப்படி உண்ணும்போது அந்த உஷ்ணத்தை கனி உணவு அடக்கிக்கொண்டு வரும். ஆக உஷ்ணத்தை முறைப்படுத்துவது சைவ உணவுதான்.
அடுத்தது தியானம். பிராணாயாமம் செய்யும்போது, இப்படி செய், இப்படி செய்யாதே என்று ஞானிகள் நம்முடன் இருந்தே சொல்வார்கள். ஒருவனுக்கு ஞானிகள் தீட்சை தருகிறார்கள். அன்றிலிருந்து உப்பில்லா உணவு சாப்பிடுவதுதான் தீட்சை என்பார்கள். நாற்பது வயதில் ஆரம்பித்தால், அறுபது அல்லது அறுபத்திரண்டு வயது வரை, ஆக இருப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகும். ஆக இந்த இருபத்திரண்டு வருடங்கள் சைவ உணவுதான் சாப்பிடவேண்டும். ஆனால் அதே ஆசான் ஆசி இருந்தால், பதினாறு வயதிலேயே வாசி வசப்பட்டுவிடும். முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிலே வெற்றி, மாபெரும் வெற்றி, அவனுக்கு நரைதிரையே இருக்காது. ஆக நாற்பது வயதில் ஒருவருக்கு வாசி நடத்திக்கொடுத்தால், அது உலக நலனுக்காகவே அப்படி செய்தார்கள். பதினாறு வயதில் வாசி நடத்திக்கொடுத்தால், முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிலேயே தவத்தை முடித்து விடுவான். அதற்கு பிறகு, அவனுடைய கவனமெல்லாம் மேல்நிலைக்குப் போகும். அவன் நாட்டு மக்களுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, அவனது தோற்றம் சிறு வயது பையனாகவே இருப்பான். என்றும் யௌவனப் பருவமாகவே இருப்பான். பெருவாரியாக நூற்றுக்கு எண்பத்தைந்து அல்லது தொண்ணூறு சதவீத மக்களுக்கு, இளமையிலேயே வாசி நடத்திக்கொடுத்து விடுவார்கள். ஒருசிலருக்குத்தான் அந்த வாய்ப்பு இருக்கிறது. என்னய்யா இவனுக்கு ஏன் இந்த வாய்ப்பு என்றால், பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தாலும், பூஜையாலும், ஞானிகளின் ஆசியாலும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநுங் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
    திருவருட்பா ஆறாம்திருமுறை – புனித குலம்பெறுமாறு புகவல் – கவி எண் 147
ஆக நரைமரண மூப்பறியா நல்ல உடம்பு என்றார். யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? ஆசான் திருவடியை நம்பி பாடுபட்டுக்கொண்டே போகவேண்டும். ஆக ஒரு ஜென்மத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். எல்லாம் விட்டக்குறை தொட்டக்குறை என்பார்கள். ஆக இப்போது பாடுபட்டு வைத்தால் வீண்போகாது.
     நரைமரண இல்லாத ஒரு வாய்ப்பு ஆசான் போன்ற சில ஞானிகளுக்கு கிடைத்தது. சிலர் அறுபது வயதுவரை போராடிக்கொண்டே இருப்பார்கள். நமக்கு பதினாறு வயதில் வாசி நடத்திக் கொடுத்தால்தானே இருபது, இருப்பதொரு வருடத்தில் முடியும். நாங்கள் இப்போது வயதான காரணத்தினால் உங்களுக்கு சொன்னால், வயதானவர் அனுபவப்பட்டவர் சொல்கிறார் என்று ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால் ஒரு இளைஞர் சொல்லும்போது, அவன் ஏதோ சிறுவயது பையன் என்று சொல்வார்கள்.
     ஆக அவர்கள் எல்லாம் விரும்பி மற்றவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் வருவார்கள், தவத்தை முடிப்பார்கள், போய்விடுவார்கள். அதுபோன்று ஒரு வாய்ப்பு உள்ளது. அதை நாம் அடைய வேண்டும். ஒருசில பேருக்கு இந்த ஜென்மத்தில் அந்த வாய்ப்பு இருக்காது. ஒருசிலருக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும். ஆக  மக்கள் அடையக்கூடிய அந்த ஆன்ம இலாபத்தை மரணமில்லாப் பெருவாழ்வை, நரைமரண மூப்பில்லாத நல்ல உடம்பை பெறுவதற்காக நாம் (குருநாதர்) எல்லா மக்களையும் வழிநடத்தி செல்கிறோம். தலைவனை அறிமுகப்படுத்துகிறோம். எத்தனையோ ஞானிகள் நவகோடி சித்தர்கள் இருக்கிறார்கள். நவகோடி சித்தர்களில் நூற்றுக்கு எண்பது பேருக்கு பதினாறு அல்லது  பதினெட்டு வயதிலேயே வாசி நடத்திக் கொடுத்து விடுவார்கள். அதுதான் நல்ல பருவம். அதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஆக அந்த வாய்ப்பை மக்கள் அடைய வேண்டும். வாசி நடத்தி கொடுத்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். நம் இஷ்டத்திற்கு ஒன்றும் செய்ய  முடியாது. தலைவனை வணங்குகிறோம். அப்படி இந்த ஜென்மத்தில் செய்த பூஜைகள் நிச்சயம் வீணாகாது.
     ஞானிகள் எல்லாம் யாராவது தொண்டர்கள் வருவார்களா? அவர்களை கை தூக்கிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஞானிகளுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாது. அவர்கள் தொண்டர்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தங்களை நோக்கி வந்தவர்களுக்கு வாசி நடத்திக் கொடுப்பார்கள். வாசி நடத்தி கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த தொண்டர் கூடவே இருப்பார்கள். ஞானிகள் அவர்களுக்கு தேவையானவைகளை எல்லாம் செய்து கொடுப்பார்கள். அப்படி ஞானிகள் செய்து கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களை உருகி உருகி வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் ஞானிகள் மனம் மகிழ்ந்து எல்லாவற்றையும் கொடுப்பார்கள். இதுதான் இந்த துறைக்கு தேவையான ஒன்று.
     பதினாறு வயதிலேயே வாசி நடத்தி கொடுக்கவேண்டும். இப்படி செய் என்று ஞானிகளிடம் கேட்க வேண்டும். ஆனால் செய்து வைத்த பூஜை வீண் போகாது. ஞானிகளின் திருவடியைப் பற்றினால், அது என்றைக்குமே வீண்போகாது. அவர்களின் திருவடியைப் பற்றுவதற்கு சொல்லித் தரவேண்டும். இப்படி பதினாறு வயதிலேயே வாசி நடத்திக்கொடுக்க வேண்டுமென்றால், அவன் பிறக்கும்போதே அறிவு தானே இருக்கும். சிறு பிள்ளையிலேயே அந்த உணர்வுகள் அவனிடம் வந்து தங்கியிருக்கும். அவன் கல்வியே கற்கமாட்டான். அவனுக்கு இயல்பாகவே கல்வி வரும். அவன் வருவான், தவத்தை முடிப்பான். போய்விடுவான். ஆக அவர்கள் நூறாண்டுக்கு ஒருமுறை வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் மூலமாக நாடு செழிக்கும், நல்ல மழை பெய்யும். அவர்கள் காலத்தில் உள்ள தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுதான் அவர்கள் உண்மை சொல்வார்கள். எப்படி பூஜை செய்ய வேண்டுமென்று சொல்லி தலைவனை அறிமுகப்படுத்துவார்கள். அதுபோல இப்பொழுது நாமும் அறிமுகப்படுத்துகிறோம். நாம் வெகுநாள் பாடுபட்டு வந்திருக்கிறோம். பூஜை செய்யும் முறையை சொல்லி வருகிறோம். வெளிநாடுகளில் கூட நம்முடைய கொள்கைகள் பரவயிருக்கின்றன.
     ஞானிகளைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆரவாரம் செய்ய மாட்டார்கள். காமமற்றவர்கள், பொருள் வெறியற்றவர்கள். ஜாதிவெறி அற்றவர்கள். இப்பொழுது நாம்தான் கல்கி என்று சொல்கிறோம். எப்படி கல்கி என்று சொல்கிறோம்? வாசி வசப்பட்டதினால் கல்கி என்று சொல்கிறோம். ஆசான் உருத்தரித்த நாடியில் ஒடுங்கியிருப்பதால், உந்திக்கமலத்தில் தங்கியிருப்பதால் கல்கி என்று சொல்கிறோம். கல்கி என்றால் இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒடுங்குவது என்று சொன்னோம். ஒடுங்கினால், அப்படி உந்திக்கமலத்தில் ஒடுங்குகின்ற காற்றோடு, தலைவனும் தங்கியிருப்பான். தலைவன் தங்கியதினாலே அறிவு தானே வரும். ஆக அப்படிப்பட்ட பக்குவத்தை உருவாக்காமல், ஞானிகள் வாசி நடத்தி தரமாட்டர்கள். மேலும் கல்கி அவதாரம் என்றால், குதிரை என்று அர்த்தம். இதை பலமுறை சொல்லியிருக்கிறோம். மூச்சுக்காற்றுக்கு குதிரை என்று பெயர் உண்டு.
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால் நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தால் ஆகாதோ.
o   மகான் அழுகண்ணி சித்தர் – கவி எண் 6
இப்படி யாருக்காக சொன்னீர்கள் ஐயா? நான் என்னய்யா சொன்னேன் இந்த உலகத்தை ஆளுவதற்கு? எங்களுக்கு இதுதான் வேலையா? வாசி வசப்பட்டவர்கள் இதற்கு வரவே மாட்டார்கள். வாசி வசப்பட்டவர்களுக்கு எட்டு திசையையும் ஆளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அட்டாள தேசமேன்றால் எட்டு திசை என்று அர்த்தம்.
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா ஆண்டிருந்தால் ஆகாதோ
      எதற்கய்யா இப்படி? இவர்கள்தான் பெரிய இடத்திற்கு வந்துவிட்டார்களே, பெரிய நிலைக்கு வந்தவர்களுக்கு ஏன் இந்த வேலை என்றால், இதுதான் தலைவன் கட்டளையாக இருக்கு, தலைவன் கட்டளைதான். இந்த கூட்டத்தில் உங்களிடம் சொல்கிறோம். நாங்கள்தான் இந்த உலகத்தை ஆளப்போகிறோம். எப்படி வந்தது அவ்வளவு பெரிய ஆற்றல்? அல்லது ஏதாவது பேராசை பிடித்துவிட்டதா? அப்படி இல்லை. இது தலைவனின் கட்டளை. உலக நலனை எண்ணியும், மக்களை நல்வழி நடத்திச் செல்வதற்கும், மக்களிடம் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் செயல்படுவோம். எங்கு பார்த்தாலும் அராஜகங்கள் மிகுதியாகிறது. மன்னர் காலத்தில் கூட இப்படி இருந்திருக்காது.
     எங்கு பார்த்தாலும் போலி சாமியார்கள். அவனவன் காவி கட்டிக்கொண்டு நாட்டையே சூறையாடுகிறான். நம்முடைய சங்கம் வளர்ச்சி அடையும்போது, இவற்றை எல்லாம் கட்டுப்படுத்திவிடுவோம். அவனை பார்க்கும்போதே எங்களுக்கு தெரியும். இவன் நிச்சயமாக ஞானி அல்ல. இவன் நாட்டு மக்களை குழப்புகிறான். ஆகவே அவனை கட்டுப்படுத்துவது நல்லது என்று அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டால் அவர்கள் கட்டுப்படுத்திவிடுவார்கள். போலி சாமியார்கள் எல்லாம் ஒன்றுகிடக்க ஒன்று பேசுவான். அவன் பெண் வெறியனாக இருப்பான் அல்லது பொருள் வெறியனாக இருப்பான். இதை நாம் ஆசான் ஆசியால் தெரிந்து கொள்ளலாம். ஆக நம் கட்டுப்பாட்டிற்குள் அரசாங்கம் வந்தால் அல்லது நம் சொற்படி அரசாங்கம் கேட்டால் ஒரே மாதத்தில் இதை சரிப்படுத்திவிடலாம்.
ஆக நம் சங்கம் வளரும்போது நாட்டில் பருவமழை பெய்யும். அதே சமயத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் நாட்டை சூறையாடுகின்ற மக்களை இனம் கண்டுகொள்ள முடியும், அடக்க முடியும். அவர்களுடைய செயல்பாட்டை எல்லாம் முடக்கி வைக்கலாம். அப்படியே நிறுத்தி வைக்கவும் முடியும். மிகப்பெரிய அற்புத செயல்களை இந்த சங்கத்தால் செய்யப்போகிறோம். இந்த சங்கம் அதற்குத்தான் வந்திருக்கிறது. மிகப்பெரிய அற்புத செயல்களை செய்யும். ஆசான் ஞானபண்டிதன் ஆசியால் செய்யக் காத்துக் கொண்டுள்ளது. இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? வாசி வசப்பட்டதால், மோன நிலை அறிந்ததால், தலைவன் உள்ளே இருந்து உணர்த்துவதால் நாங்கள் உணர்கிறோம்.
நாங்கள் எத்தனை ஆண்டுகள் பேசினாலும் சரி, ஒரே மையக்கருத்தைதான் பேசுவோம். திருவடியைப் பற்றுங்கள், செல்வத்தை பெறுங்கள். திருவடியைப் பற்றுங்கள் நோயற்ற வாழ்வை வாழுங்கள் என்றுதான் சொல்வோம். தலைவனை அறிமுகப்படுத்தி பேசுவோம். இப்பொழுது தலைவன் ஓங்காரக்குடிலை நோக்கி வந்துவிட்டான். ஞானிகள் இங்கே சூழ்ந்து இருக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியாது. நாம் உறங்கும்போதும் நம்முடனே இருந்து கொண்டிருப்பார்கள். அப்படி இருந்து அவ்வப்போது என்னை எழுப்பியும், தவத்தில் ஈடுபடச் செய்தும், என்னை முறைப்படுத்துவார்கள். ஆகவே இந்த சங்கம் ஞானிகளால் சூழப்பட்ட சங்கம். ஞானிகள் சூழ்ந்து செயல்படுகின்ற சங்கம்.
இங்குள்ள தொண்டர்கள் எல்லாம் மிக மிக புண்ணியம் செய்த மக்கள். பல ஜென்மங்களிலே செய்த புண்ணியத்தால் இங்கே இருக்கிறார்கள். மகான் இராமலிங்க சுவாமிகளுக்கும், மகான் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கும், மகான் தாயுமான சுவாமிகளுக்கும் மேலும் இதுபோன்ற ஞானிகளுக்கு தொண்டு செய்ததினாலே ஓங்காரக்குடிலைச் சார்ந்திருந்து ஆசி பெறுகிறார்கள்.
இங்குள்ள அன்பர்கள் எல்லோரும் மிகப்பெரிய பாக்கியத்தை பெற்றவர்கள். அது அவர்கள் முன் செய்த நல்வினை காரணமாக இங்கே இருக்கிறார்கள். ஆக இந்த சங்கத்திற்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தது எதற்கு? பெரிய பொறுப்புக்களை நம்மிடம் தலைவன் கொடுக்கப்போகிறான். தலைவன் கொடுக்கின்ற பொறுப்பை பயபக்தி விசுவாசத்தோடு ஏற்று செயல்பட வேண்டி இருக்கும்.
ஆக நம்பினோர் நிச்சயமாக கெட மாட்டார்கள். ஓங்காரக்குடிலை
நம்பி தொண்டு செய்த மக்களுக்கு நிச்சயமாக இடையூறு வரமுடியாது. ஆசான் கைவிட மாட்டார். இந்த சங்கம் நன்றி உள்ள சங்கம். என்ன காரணம்? ஆசான் இருப்பதனால். குடிலாசான் அல்லது நமது சங்கத்தார்கள் மேற்கொள்கின்ற அறப்பணிகள் மிக உயர்ந்ததாக இருக்கும், வஞ்சனையற்று இருக்கும். செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கும், தியாக சிந்தையோடு இருக்கும். இந்த சங்கத்தார்கள் மேற்கொள்கின்ற செயல்கள் அத்தனையும் உயர்ந்தது, உன்னதமானது. இப்படி பெருமை கொள்வது நியாயம்தான். யாரைய்யா இந்த கூட்டத்தை உருவாக்கினார்கள்? பல்வேறு ஜென்மங்களில் செய்த புண்ணியத்தால் இந்த கூட்டம் இங்கே கூடியிருக்கிறது. சுத்த ஆன்மீகவாதிகள் இங்கே கூடியிருக்கிறோம். ஆகவே நம் செயல்பாடுகள் தூய்மையாக இருக்கும். என்ன காரணம்? தலைவன் திருவடியைப் பற்றியதால். இல்லறத்தார்கள் வறுமைப்பட்டு இருக்கலாம், ஆனாலும் இல்லறம் தடையாக இருக்க முடியாது. இல்லறம் நமக்கு துணையாக இருக்கும். வறுமை இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆக உண்மையான நமது இலட்சியம் கடவுள் தன்மை அடைதல், ஆன்ம இலாபத்தை அடைதல், மரணமில்லாப் பெருவாழ்வு பெறுதல். ஆக இப்படிப்பட்ட உயர்ந்த வாய்ப்புகளை ஞானிகள் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள். நாம் இந்த குடிலுக்கு 03.12.1981ஆம் ஆண்டு வந்தோம். ஓராண்டுக்குப்பிறகு சொன்னோம் என்னவென்று?   
ஓங்காரக்குடில் உலகத்தை நோக்கும்
உலகம் ஓங்காரக்குடிலை நோக்கும்
நாம் சொன்னபோது இந்த குடில் ஒரு கீற்றுகொட்டகையாக இருந்தது. அப்போது உள்ள அன்பர்கள் இது என்ன விந்தையான பேச்சு என்று எண்ணினார்கள். ஓங்காரக்குடில் உலகத்தை நோக்கும், உலகம் ஓங்காரக்குடிலை நோக்கும் என்று சொன்ன வார்த்தை அன்று புரியாது. அப்போது சொன்னோம், இந்த பகுதி முழுவதும் பிரமாண்டமான கட்டிடங்கள் உருவாகும், இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பசியாருவார்கள் என்று சொன்னோம். அதே போல் நடந்தது, இப்பவும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுதும் சொல்கிறோம் அன்று சொன்ன அதே கருத்தை குடிசையாக இருந்தபொழுது சொன்ன அதே கருத்தை இன்றும் சொல்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் இன்று பசியாறுகிரார்கள். வருங்காலத்தில் உலகத்தலைவர்கள் எல்லாம் வாசலிலே வந்து நிற்பார்கள். உலகத்தை வழிநடத்தி செல்லக்கூடிய வாய்ப்பை ஆசான் ஞானபண்டிதனும், ஆசான் அகத்தீசனும் நமக்கு தருவார்கள்.
அவர்களாக இறங்கி செய்ய முடியாது. நாம்தான் செய்கிறோம்.
ஆசான் நம் மூலமாக செய்ய வைப்பார்கள்.
அது ஒரு பிரமாண்டமான பொறுப்பு.
அதே சமயத்தில் இது மட்டும் ஒரு முக்கிய இலாபமில்லை. ஆக பெரும் இலாபத்தை விரும்புகிறோம்.
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்;
 இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்;
மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே! எம்பெருமான்! எம்மானே
உன் அருள்பெறும் நாள்
 என்று?’ என்றே வருந்துவனே.
மகான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – திச்சதகம் – கவி எண் 12
உலக நடையை அறிந்து, உலகத்திற்கு வழிகாட்டுதல் அல்லது உலகத்திற்கு தலைமை தாங்குவது, இதைத்தான் மனித வர்க்கம் மிகப்பெரிய இலாபம் என்று நினைக்கும். ஆனால் இது முக்கியமல்ல. யானேதும் பிறப்பஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்பிறவியை நான் விரும்புகிறேன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மரணம் வருமே? இறப்பதற்கு என் கடவேன்? அதை கடக்க வேண்டுமே, அதை எப்படி கடக்க முடியும்? என்கிறார் மகான் மாணிக்கவாசகர்.
பிறவியை நான் விரும்புகிறேன் மகிழ்ச்சிதான். கருப்பையில் இருக்கும்போது சில துன்பங்கள் இருக்கலாம். ஆனால் மரணத்திற்கு என் செய்வேன்? வான் ஏயும் பெறில் வேண்டேன், இறப்பு அதனுக்கு என் கடவேன் – மேலான இந்திரனுக்கு நிகரான செல்வத்தை பெற நான் விரும்பவில்லை. மண் ஆள்வான் மதித்தும் இரேன் – இந்தத் துறையில் வருகின்ற மக்கள் பொருளாதாரத்தை விரும்ப மாட்டார்கள். சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி அவனை இலட்சியம் செய்ய மாட்டார்கள். காரணம் அவன் என்றும் இறந்து பிறப்பவன். ஞானிகள் என்றும் இறவாத தன்மை உள்ளவர்கள்.
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்;
 இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்;
மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே! எம்பெருமான்! எம்மானே
உன் அருள்பெறும் நாள்
 என்று?’ என்றே வருந்துவனே.
மகான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – திச்சதகம் – கவி எண் 12
        நான் உன்னுடைய ஆசியை பெறவேண்டும். உன் ஆசியை பெறுவதுதான் முக்கியமே தவிர, இந்த ஆட்சி முக்கியமல்ல. ஆக அதுபோன்ற வாய்ப்பை நாம் பெறுவதற்காகத்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திர – லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
            அரங்க மா நகருளானே.
    மகான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் – கவி எண் 372
ஆக இந்த இச்சைதான், இதுதான் நமக்கு, உலகமே நமக்கு தேவையில்லை. தேவலோகத்தை ஆளுகின்ற வாய்ப்பு எங்களுக்கு தேவையில்லை. நான் உங்களது ஆசியைப் பெற வேண்டும். அவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஞானிகள். அப்பேர்ப்பட்ட ஞானிகளே “அது வேண்டாமய்யா உனக்கு, அதுவும் பிறவிக்கு காரணமாக இருக்கும்” என்றார்கள். ஆக இந்திரலோகத்தை ஆளுகின்ற வாய்ப்பும் பிறவிக்கு காரணமாக இருக்கும்.
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள்பெறும் நாள்
என்று என்றே வருந்துவனே.
      ஆக இதுதான் அடிப்படை. இதைக் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டு மேலும்,
முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவா ரில்லையே.
    மகான் பட்டினத்தார் – திருத்தில்லை – கவி எண் 7
என்பார். ஆக சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி, ஒன்றும் செய்ய முடியாது. முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய் போவான். நாம் உலகை ஆள்வதற்காக வரவில்லை. அது நமது இலட்சியமுமில்லை. ஆக இடையில் வருகின்ற இந்த வாய்ப்பு, நாமும் (குடிலாசானும்) குடிலைச் சார்ந்த அன்பர்களும் ஒரு பொறுப்பை ஏற்று செய்கிறார்கள். அந்த செயலுக்கு பிறகும் தாண்டிப் போகவேண்டும். இந்த காலகட்டம் ஞானசித்தர் காலம் என்று இப்போது சொல்கிறோம்.
     ஞானிகள் திருவடியைப்பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். இந்த கருத்தைக் கூறுவதுதான் ஞானசித்தர் காலம். இடையில் ஆசான் நமக்கு கொடுக்கக்கூடிய பொறுப்பையும், வாய்ப்பையும்  செம்மையாக பயன்படுத்தி நாம் செம்மையாக செய்து முடித்துக் கொண்டு போய்விடுவோம்.
     பிற்காலச் சந்ததிகள் வெறும் பதவிக்கும், பொருளாதாரத்திற்கும் மட்டும்  மயங்காமல் இருக்க வேண்டும். பதவி, பொருளாதாரம் என்பது இடையில் வருகின்ற செல்வமே தவிர, அது நிரந்தரமல்ல. மீண்டும் பிறவாமையே பதவி மீண்டும் பிறத்தலாகாது. மீண்டும் மீண்டும் பிறப்பது பதவியல்ல. அப்படி பிறப்பதற்காக ஆசான் நமக்கு உதவி செய்யவில்லை. நமக்கு உதவி செய்வது மேலான பதவியை பெறுவதற்கு. மேலான பதவி என்பது மரமில்லாப் பெருவாழ்வு, மோட்ச இலாபம், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது ஆகும். ஜென்மத்தை எப்படி கடைத்தேற்றுவது? ஞானிகளை வணங்குகிற முறையோடு வணங்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆசானிடம் எதை கேட்டு வணங்குவது? நான் உலக நடையை விரும்பவில்லை. நிலையில்லாத ஒன்றை நான் விரும்பவில்லை. நிலையான ஒன்றை நான் விரும்புகிறேன். எனது விருப்பமே மீண்டும் பிறவாமைதான். மீண்டும் பிறவாமையைத்தான் நான் விரும்புகிறேன், அதைத்தவிர மற்ற பதவிகளையும், செல்வத்தையும் அல்ல.
  பொருள் அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
  மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
    திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் குறள் எண் 351
    
இந்த உலகத்தை தலைமை தாங்கி நடத்துதல் மற்றும் அதற்குரிய ஆரவாரங்கள், செயல்பாடுகள் இவையெல்லாம் பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்க முடியாது. இவை எல்லாம் நிலையில்லாதது. உலக மக்களோடு பேசுதல், கட்டிடம் கட்டுதல் ஆகியவை எல்லாம் நிலையில்லாதது. ஆனால் செய்ய வேண்டும் எப்படி? பொழுது போக்குக்காக. ஆக நமக்கு அது வேலை அல்ல. அதை உறுதி என்று நினைப்பவனுக்கு இது இழிந்த பிறவி, துன்பமான பிறவி. அந்த செயல் புண்ணியத்தை பெருக்குமே தவிர, ஆனால் இழிந்த பிறவியைக் கொடுக்கும். ஆக பிறவியை கடப்பது, கடப்பதற்குரிய செயல்களை செய்ய வேண்டும். பிறவிக்கு காரணம் என்று சொல்லி விட்டார். இதை பொருள் அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு என்பார். இது நமது நோக்கமல்ல.
     ஒரு மனிதன் ஜென்மத்தைக் கடக்கவேண்டும் என்றால், சில செயல்கள் இருக்க வேண்டும். தொடர்ந்து யாரும் பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மணிக்கணக்காக பூஜை செய்பவன் நிச்சயமாக ஏமாந்து போவான். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் வெகு விரைவில் தோல்வி அடையப் போகிறான். என்னய்யா கடவுளை பூஜை செய்கிறான், அவனுக்கா இப்படி? எவ்வளவு நேரம் பூஜை செய்கிறாய்? மனம் உனக்கு எத்தனை நொடிப்பொழுது இலயப்படும்? மணிக்கணக்காக பூஜை செய்து எதையும் பெற முடியாது. ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மன உளைச்சல் இருந்தால், சிறிது நேரம் வெளியே போய்விட்டு வரவேண்டும். மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பார்க்க வேண்டும். இப்பொழுது மனம் இலயப்படா விட்டால் பூஜையே செய்யக்கூடாது. இப்படி தினம் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடத்திற்கு மேல் போராடக்கூடாது. மணிக்கணக்காக பூஜை செய்யமுடியாது. ஆக மெதுவாகத்தான் போகவேண்டும். நாளுக்கு நாள் ஞானிகளின் திருவடியை பற்றப் பற்ற உண்மை தெளிவாகும். நோக்கம் இனி பிறவாமைக்குரிய மார்க்கத்தை அடைவதுதான். அதுதான் நமது இலட்சியம். ஞானிகளை கேட்க வேண்டும் “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அடியேனுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் கிடைத்துவிடும். அதனால் பிரச்சினை வந்துவிடும். ஞானிகளிடம் கேட்கலாம், யார்  கேட்கலாம்? ஞானத்துறையில் வெற்றி பெற்றவன் கேட்கலாம். அது  தேவை, இது தேவை என்று  கேட்கலாம், வெற்றி பெற்றவனிடம் கேட்கலாமே தவிர மற்றவரிடம் கேட்கக்கூடாது.
     கேட்பது ஒன்றே ஒன்று, அதுதான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். நீ எதை விரும்ப வேண்டும்? இனிமேல் பிறக்கக் கூடாது என்பதைத்தான் விரும்ப வேண்டும். இனி பிறக்கக் கூடாததற்கு என்ன உபாயம்? திருவடியைப் பற்றுவதுதான். திருவடியை, யாருடைய திருவடியை? ஆக ஒன்றே ஒன்றுதான் இலட்சியமாக இருக்க வேண்டும். ஞானிகளிடம் வேறு எதுவும் கேட்கக்கூடாது. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை. ஆக விரும்புவது பிறவாமையாக இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான் வள்ளுவப் பெருமானும் சொல்லியிருக்கிறார். ஆக ஒருவன் மற்ற எதை விரும்பினாலும், அது இனி பிறவிக்கு காரணமாக இருக்கும். ஆக இதுதான் மையக்கருத்து.
     தினம் தினம் தியானம் செய்ய வேண்டும். அப்படி தியானம் செய்யும் போது ஞானிகளிடம் கேட்க வேண்டியதை மட்டும் கேட்க வேண்டும். வேறு எதைக் கேட்டாலும் பயன்படாது. மனது என்ன சொல்லும்? அது வேண்டும் இது வேண்டும் என்று சொல்லும். ஆனால் ஆசானிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? என்பதை ஆசான்தான் சொல்லுவார். ஞானிகளிடம் எப்படி எதை கேட்க வேண்டும் என்றும் சொல்லுவார். எது வேண்டும் என்று எனக்கு தெரியாது. நீங்கள் கொடுக்கும் அமுதத்தை விட்டுவிட்டு, நான் வேறு ஏதேதோ உமியையும், தவிட்டையும் கேட்கக் கூடாது. இப்படி கேட்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவன் கையிலே உள்ள தங்கக் கலசத்தில் அமுதம் உள்ளது. அதை விட்டுவிட்டு இவன் உமியையும், தவிட்டையும், கரியையும் கேட்டால் அவன் என்ன செய்வான்? ஆக கேட்கச் செய்ய வேண்டும். ஆக இந்த துறை இப்படித்தான் இருக்கிறது. ஞானிகளை நம்பினால் நிச்சயம் அருள் செய்வார்கள். ஞானிகளை நம்புவதற்கு ஆசி வேண்டும். தொடர்ந்து நூல் அறிவு இருக்க வேண்டும். ஞானிகள் தொடர்பு இருக்க வேண்டும். சாது சங்க தொடர்பு இருக்க வேண்டும். ஆக ஆசானை நம்பினால் நிச்சயம் கைவிட மாட்டார்கள்.
         
தயாபர மேயும்மை நம்பின பேர்க்கொரு தாட்சியுண்டோஎன்றார். ஆசான் அகத்தீசர் மீதும், மகான் திருமூலதேவர் மீதும், மகான் போகமகாரிஷி மீதும், மகான் அருணகிரிநாதர் மீதும், ஆசான் ஞானபண்டிதன் மீதும் நம்பிக்கையை உண்டாக்குவதே பெரிது.
தயாபர மேயும்மை நம்பின பேர்க்கொரு தாட்சியுண்டோ
      மயாபர மேயென் பிறவிக் கடலின் மருந்துசொல்லுந்
      தியாபர மேயுன்னிரு தாள் வணங்கத் திருவருளும்
      செயாபர மேயுந்தன் சேவடியே நம்பிச் சேவிப்பனே.
    சுப்பிரமணியர் ஞான சைதன்யம் 108
     ஆக இப்படிப்பட்ட ஞானிகளின் திருவடியைப் பற்றவேண்டும் என்ற நம்பிக்கையே தடைப்படும். ஒரு பக்கம் வறுமை, ஒரு பக்கம் குடும்பத்தில் பிரச்சினை, ஒரு பக்கம் தடுமாற்றம், ஒரு பக்கம் காமவெறி, ஒரு பக்கம் குடிவெறி இப்படியே தடுமாறிக் கொண்டிருப்பான். இப்படி இருக்கும்போது நாம் போகின்ற பாதை சரியா, தவறா? என்ற அவநம்பிக்கை ஒரு பக்கம் இருக்கும். இப்படி எல்லாம் கிடந்து தடுமாறிக் கொண்டிருப்பான். அந்த நேரத்தில் தயாபரமே ஒரு தாட்சி யுண்டோ என்று கேட்க வேண்டும். தயாபரமே – மிக்க தயவுள்ளவன் என்று பொருள். உன்னை நம்பிவிட்டால் ஒரு தாழ்வு வருமோ? வரவே வராது. அவர் கேட்கிறார், உன்னை நம்பிவிட்டால் ஒரு தாழ்வு வருமோ? வரவே வராது. நீ தயவுள்ளவன், மிக்க கருணை உள்ளவன், கேட்பதெல்லாம் தரக்கூடியவன், கேட்கின்ற முறை எனக்கு தெரியாது. யாரேனும் அறிந்த ஒருவன் சொல்ல வேண்டும். சுட்டிக்காட்ட வேண்டும். சுட்டிக்காட்டாமல் யாருக்கும் நிச்சயமாக புரியாது. ஆசான் ஞானபண்டிதரால் சித்திபெறப் போகிறார்கள். இப்பொழுது கேட்பவர்கள் எல்லோரும் ஞானியாவார்கள். அவ்வளவு பெரிய பாக்கியம் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. நான் பேசுவதை ஆசான் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கிறார். பேசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது முறையும் பேசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
     யார் தயாபரம்? கருணையே வடிவானவன். தயவே உள்ளவன் என்று அதற்கு அர்த்தம். தயாபரமே – மிக்க கருணை உள்ளவன் என்று அர்த்தம்.
     தியாபர மேயுன்னிரு தாள் வணங்கத் திருவருளும் – உன்னை நான் வணங்குவதற்கு வாய்ப்பு தர வேண்டும்.
     மயாபர மேயென் பிறவி கடலின் மருந்து சொல்லுந் – பிறவி கடலென்றார் – பிறவியை கடக்கவே முடியாது. அது சின்ன விசயமல்ல. எட்டு ஜென்மங்கள் எடுக்க வேண்டுமென்று சொல்வார்கள். நம்மைப்பற்றி நமக்கு தெரியாது. எத்தனை ஜென்மங்கள் எடுத்து வந்திருக்கிறோமோ என்று நமக்கே தெரியாது. கணக்கில்லாத ஜென்மங்கள் எடுத்து வந்திருக்கிறோம். ஏதோ ஞானிகள் தொடர்பு கிடைத்தது, உபதேசம் கிடைத்தது. ஆக மயாபர மேயென் பிறவி கடலின் மருந்துசொல்லுந் – என் பிறவியை கடப்பதற்கு மருந்து சொல் என்கின்றார். நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், மயாபரமே என்று சொல்லியிருப்பார் அது எதுகைக்காக வந்தது.
           தியாபர மேயுன்னிரு தாள் வணங்கத் திருவருளும்
           செயாபர மேயுந்தன் சேவடியே நம்பிச் சேவிப்பனே.
     ஆக ஞானிகளை வணங்கினால் அதனுடைய விளைவுகள் இப்படித்தான் இருக்கும். அவர்களிடம் நாம், அடியேன் வஞ்சனையற்று வாழ்க்கை வாழவேண்டும், தூய்மையானவனாக வாழவேண்டும் என்று கேட்கவேண்டும். தலைவனை புரிந்து கொண்டு கேட்க வேண்டும். வேறு ஒன்றும் கேட்க வேண்டாம். இதனையே கேட்க வேண்டும். இதேபோன்று தினமும் காலையிலும் மாலையிலும் தலைவனிடம் கேட்டு வர வேண்டும்.
    
     மனைவி மக்களோடு பகைத்துக் கொள்ளாமல், மனைவி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து கொண்டு, நம்மை நோக்கி வந்த விருந்தை உபசரித்து தாய்தந்தையிடம் அன்பு காட்டி பாவி என்று பெயரெடுக்காமல், தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாக ஆசான் அருள் செய்வார். இது ஒரு தொற்று நோய் போன்றது. ஞானிகள் நமக்கு துணையாக, தொற்று நோய் போன்று பிடித்து விட்டால் விடமாட்டார்கள். இதே சிந்தனையாக இருக்கவேண்டும். ஆக குடிலைச் சார்ந்த அந்த மக்களுக்குத்தான் அந்த வாய்ப்பு இருக்கிறது. இங்கே சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக இருக்கும். தினம் தியானம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். திருமந்திரம் கேட்கிறோம், அருட்பா கேட்கிறோம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் இவை எல்லாம் பெரிய பாடல்கள். இவற்றை கேட்கிறோம். அதன் மூலமாக நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை கேட்கும் போது மனம் தெளிவடையும். ஆக தொடர்ந்து தியானம் செய்யவேண்டும். தடையில்லாத தியானம், ஆசானை வணங்கி வணங்கி பெற்றுக் கொள்ள வேண்டும். குடிலை சார்ந்திருந்தால்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
     ஆக 1999அல்லது 2000 ஆண்டில் ஓங்காரக்குடில் பிரபல்யம் ஆகும். ஞானிகள் எல்லாம் நம்மைப் பற்றி பல சுவடிகளில் சொல்லி வருகிறார்கள். கல்கி அவதாரம் என்றும், உலகத்தை தலைமை தாங்குபவன் என்றும், உலகத்தை காப்பதற்கே வந்தவன் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு உயர்ந்த செயல். சாதாரண மக்கள் இதை செய்யமுடியாது. பிரம்மாண்டமான கட்டிடங்களும், அதில் இலவச திருமணம் மற்றும் பொது மக்கள் திருமணங்களும் நடத்திக் கொள்ளலாம். இங்கே இப்படிப்பட்ட கட்டிடங்கள் கட்டி இருக்கிறோம். நித்திய அன்னதானம் செய்கிறோம். தினம் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு வியப்புக்குரிய செயல். இதை எல்லாம் கடவுளாசி இல்லாமல் செய்ய முடியாது. மனித சக்தியால் ஒரு நூல்கூட அசைக்க முடியாது. என்றாவது ஒரு காலத்தில் நாம்தான் செய்கிறோம் என்று நினைத்தால் அப்பொழுதே தோல்வி அடைவோம். ஆக செயல்கள் நல்லபடியாக இருக்கிறது. கோடீஸ்வரனாலும் செய்ய முடியாது, யாராலும் செய்ய முடியாது. சுருக்கமாக சொன்னால் அரசாங்கமே செய்ய முடியாது. நாம் முன்னமே ஆறு திருமணத்திலிருந்து படிப்படியாக முன்னூற்று எட்டு திருமணம் வரை செய்திருக்கிறோம். எனவே மக்கள் நம்மை நம்புகிறார்கள். நம்மிடம் வருகிறார்கள். வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று 508 இலவச திருமணம் செய்ய இருக்கிறோம். ஆக கட்டிடத்தையும் கட்டி, நித்திய அன்னதானம் செய்து, பொது மக்களுக்கு தண்ணீரும் தந்து, இப்படி ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். ஆக நம்முடைய செயல்பாடு எல்லாம் ஒழுங்காக செம்மையாக நடக்கும். ஆகவே இன்னும் 1008 திருமணமும் செய்வோம். ஆகவே இவற்றை எல்லாம் தலைவன் திருவருள் துணையால் செய்து கொண்டிருக்கிறோம்.
     இங்கே அன்பர்கள் நிறைய பேர் வர வேண்டும். தொண்டு செய்து ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். முன் செய்த நல்வினை காரணமாக நிறைய புண்ணியவான்களும், அன்பர்களும் இருக்கிறார்கள். ஆக காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். ஆக இந்த விழாக்கள் எல்லாம் நடத்துவதற்கு மிகுந்த பொருள் வேண்டும். ஆனால் எல்லா செயல்களும் தொடர்ந்து நடக்கும், நடந்து கொண்டே இருக்கும், தடை வராது. இதிலிருந்தே நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காரியத்தை செய்வதற்கு பொய் சொல்ல மாட்டோம்.
புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறாண்டி
பல்லைமிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என்கண்ணம்மா பொருளெனக்குத் தாராயே
§  மகான் அழுகண்ணிச்சித்தர் – கவி எண் 31
ஆக யாரிடமும் போய் கையேந்த மாட்டோம். தலைவனிடம் போய் கைஎந்துவோம், யாசிப்போம். நடைபெறுகின்ற நித்திய அன்னதானம் தடைபடாமல் நடைபெறவும், பொது மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதும், தடைபடாமல் இருக்க நீரே அருள் செய்யவேண்டும் என்று கேட்போம். மற்றவர்களிடத்தில் போய் கையேந்த மாட்டோம். பல்லிளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே செம்மையான வாழ்க்கை, பொய் சொல்லாது திடமாக எடுத்துக்கொண்ட இலட்சியம் தடைபடாமல் நடக்கும். வெளியில் ஒரு பத்து பேருக்கு சோறு போட முடியாது. அப்படி அன்னதானம் செய்தால் பெரிய தர்மபிரபு இவன், அன்னதானம் செய்கிறாய் ஏண்டா எனக்கு சோறு போடவில்லை என்று கேட்பான், வம்பிழுப்பான், ஆனால் இங்கே ஒன்றும் செய்ய முடியாது.
     தினமும் ஐந்தாயிரம் பேர் கூடுகிறார்கள். அத்தனை பேரும் பேசாமல் வருவான், குடிப்பழக்கம் உள்ளவன், பிரச்சனை உள்ளவன் எல்லாம் வருவான். ஆனாலும் ஒரு எல்லையோடு நின்றுவிடுவான். இங்கே வந்து தொல்லை தரமுடியாது. ஆக அப்படிப்பட்ட மிகப்பெரிய வல்லமை. ஆசான் இதை நடத்தி தருகிறார். தினமும்5000 பேருக்கு சோறு போட்டிருக்கிறோம். எந்த கயவர்களும், வஞ்சகர்களும் இடற முடியாது நம்மை. ஆசான் சூழ்ந்து கொள்வார். அவன் பிரச்சனை உள்ளவனாக இருந்தால் அங்கேயே முடித்துவிடுவார்கள். பண்புள்ளவனாக இருந்தால் இங்கே வந்த சாப்பிட்டு போவான். கொஞ்சம் வம்பிழுப்பான் அவ்வளவுதான். கடகளவுகூட இடையூறு செய்யமுடியாது.
     தினம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கிறோம். தண்ணீரும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே அறப்பணிகளுக்கு தடை இருக்க முடியாது. இதை எல்லாம் ஆசான் நடத்தி தருகிறார். இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நடக்கும் திருமணங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. திருமணம் நடப்பதற்கு முன்னமே ஆசானிடம் சொல்வோம், திருமணம் நல்லபடி நடக்க வேண்டும், உணவு நல்லபடி இருக்க வேண்டும், பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்று கேட்போம். ஆசான் அதை முடித்துக் கொடுப்பார்.
     தினசரி அன்னதானம் நடந்து கொண்டிருக்கும். காலையிலேயே ஆசானிடம் கேட்க வேண்டும், அன்னதானம் நடப்பதற்கு நீர் அருள் செய்ய வேண்டும். பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமென்று கேட்க வேண்டும். அப்பொழுதான் அருள் செய்வார்கள். ஆக ஒவ்வொன்றையும் கேட்க வேண்டும். கேட்டால்தான் தருவார்கள். கேட்டு கேட்டு பெற்றிருக்கிறோம். ஆக நாம் என்ன செய்திருக்கிறோம்? அறப்பணிகள் செம்மையாக நடக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஆக இப்போது என்னை பார்த்தால் சற்று தளர்ச்சி வந்தது போல் இருக்கும். ஆனால் அப்படி அல்ல. இது தவத்தின் உச்சகட்டம். இந்த சங்கம் நாட்டு நலனை மையமாக கொண்டது. தனி நபர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இல்லை. அன்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். தலைவனுடைய திருவருள் கடாட்சம் நமக்கு உண்டு. ஆசான் ஞானபண்டிதனும், ஆசான் அகத்தீசரும், மகான் திருமூலதேவரும் நமக்கு அருள் செய்வார்கள். சங்கத் தொண்டர்களுக்கும், சங்கத்தை தலைமை தாங்கி மேற்கொண்ட எனக்கும், உங்களுக்கும் ஆசான் ஞானபன்டிதர் அருள் செய்வார். நாம் மேற்கொள்ளும் எல்லா காரியங்களும் செம்மையாக நடக்கும். எந்த தடையும் வர வாய்ப்பில்லை. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். யார் ஒருவருக்கு வாசி வசப்படுகிறதோ? அவன் மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவான்.
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
    திருமந்திரம் – ஞாதுரு ஞானஞேயம் – கவி எண் 1611
     
மோனங்கை வந்தைங் கருமமும்எல்லா வேலையையும் செய்வார்கள். இவர்களால் ஆகாதது ஒன்றும் இல்லை. இவர்களுடைய செயல்பாடே தூய்மையாகத்தான் இருக்கும், நினைத்தது நடக்கும். யாரும் எதிர்த்து செய்ய முடியாது. செயல்பாடு நன்றாக இருப்பதற்கு காரணம் வழிபாடுதான். நம்பி செயல்படலாம். வெம்பிவிட அவசியமே இல்லை. ஆக விழா நடக்கும்போது கூட ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் தியானம் செய்யாமல் வெளியே வரமாட்டோம்.
      ஆசானை நம்புவோம். ஆசி பெறுவோம். ஆசானை நம்புவோம், முன் செய்த வினையை நீக்குவோம். ஆசானை நம்பி தெளிவான அறிவை பெறுவோம். நாம் மேற்கொள்ளும் எல்லா வகையான செயல்பாடுகளும் வீடு கட்டுதல், பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல், கல்வி, குடும்பத்தில் அமைதி ஆக நினைத்தது எல்லாம் கைகூடும். நாம்தான் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறோம்.
     குடிலாசான் ஓங்காரக்குடிலில் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் தடைபடாமல் நடைபெறுவதற்கு காரணம், தலைவனுடைய திருவருள் கடாட்சம்தான். ஆகவே நீங்களும் ஆசான் அகத்தீசரை தினம் தினம் வேண்டி கேட்டுக்கொள்ள வேண்டும். இல்லறம் நல்லபடி நடக்க வேண்டும், மனைவிக்கு நோய் இல்லாது இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். பிள்ளைகளுக்கு பண்புள்ள வரன் அமைய வேண்டும். மகனுக்கு நல்லபடி பெண் அமைய வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு அமைய வேண்டும் என்று கேட்க வேண்டும்.
     ஆகவே ஒவ்வொரு நாளும் நம்முடைய பிரச்சனைகளை சொல்லி அடையக்கூடிய இலட்சியமான மேல்நிலையான மோட்ச இலாபத்தை அடைவதற்கு ஆசான் அகத்தீசரை தினம் தினம் பூஜை செய்தும், குடிலாசான் மேற்கொள்கின்ற அரப்பநிகளுக்கு உற்ற துணையாக இருந்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசி கிடைக்கும். குடிலாசான் மேற்கொள்கின்ற அறப்பணிகளுக்கு தொண்டு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நன்றியோடு அவர்களுக்கு கை கொடுப்போம். அவர்கள் குடும்பத்தார்களுக்கும், அவர்களுக்கும் ஆசி உண்டு. தொடர்ந்து தொண்டு செய்தால் பாவத்தை பொடியாக்குவோம். தொடர்ந்து தொண்டு செய்தால் அவர்களுடைய பகையை உடைத்தெறிவோம். அவர்களுக்கு உள்ள பகையை உடைக்கும்போது, நம் பகையை உடைக்க முடியாதா? எதிர்த்து பேச முடியாது. இங்கே குடிலில் அறப்பணி செய்யும் குடிலாசானுக்கோ, அல்லது குடில் தொண்டர்களுக்கோ, இடையூறு செய்பவன் அவன் சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி, அல்லது அவர் யாராக இருந்தாலும் சரி, அவனை பொடிப்பொடி ஆக்கிவிடுவோம். இப்படி பேசுவது உங்களுக்கு ஒரு உற்சாகத்திற்கு, ஆனால் உண்மையும் அதுதான். எங்களை நம்பி செய்யலாம். அவ்வளவு வல்லமை இந்த குடிலுக்கு உண்டு. என்ன காரணம்? என்னய்யா, ஆள்படையா, பணபலமா, இல்லை அதிகாரமா இவை எதுவும் இல்லை. ஒன்றே ஒன்று ஞானிகளின் ஆசிபலம். ஆசான் ஞானபண்டிதரின் ஆசி பெற்ற மகன். ஆசான் ஞானபண்டிதரின் ஆசிபெற்ற தொண்டர்கள். ஆசான் ஆசி பெற்றதனால் இந்த ஆற்றல் வந்தது. உனக்கு இடையூறு செய்பவன் எவனாக இருந்தாலும் சரி, எமனாக இருந்தாலும் சரி உண்மையாக தொண்டு செய்கின்ற மக்களுக்கு துணையாக இருப்போம். அவனுக்கு வரும் இடையூறை எல்லாம் போடி செய்யும் வல்லமை நமக்கு உண்டு.
     ஆகவே அன்பர்கள் குடிலாசான் மேற்கொள்ளும் காரியங்களுக்கு துணையாக இருந்தும், தினம் தினம் தியானம் செய்தும், நமக்குள்ள துன்ப துயரத்தை நீக்கியும், வாசி வசப்பட்டும், ஆன்ம இலாபத்தை பெற்றுக் கொண்டும், மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கும், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, தினமும் காலை பத்து நிமிடம் ஓம் அகத்திசாய நம என்று நாமஜெபம் செய்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும்போது கொஞ்சம் கூட அப்பழுக்கு இருக்கக் கூடாது. கோவிலில் விழுந்து வணங்கும் போது கூட மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கலாம், ஆனால் ஆசானை விழுந்து வணங்குவதற்கு அப்படிப்பட்ட எண்ணம் அவசியம் இல்லை.
     ஆசானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். நான் இருகரங்களால் செய்த பாவங்கள் பொடியாக வேண்டும். நெஞ்சத்தில் நினைத்த பாவங்கள் பொடியாக வேண்டும். உடம்பால் செய்த பாவம், இரு கரங்களால் செய்த பாவம் இப்படி எனக்கு பாவங்கள் வந்ததே இந்த இரு கரங்களால்தான். நன்மை செய்ய வேண்டிய இருகரங்கள், தீவினை செய்ததினால் இரு கைகளையும் பூமியில் படும்படி வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறோம். எதற்காக வணங்குகிறோம்?
     இந்த இரு கைகள்தான் வாழ்க்கை என்றான். இரு கைகளால் பாடுபட்டு ஒரு கையால் சாப்பிடுகிறோம். இந்த இரு கரங்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்ற உறுதுணையாக இருக்கும். அதனால்தான் கைகூப்புகிறேன். இதில் வலது கை என்பது சூரியகலை, இடது கை என்பது சந்திரகலை. வலதுகை என்பது பரமாத்மா, இடதுகை என்பது ஜீவாத்மா. வலதுகை பகல், இடதுகை இரவு. ஆக இடகலையையும், பிங்கலையையும் சேர்க்க வேண்டும். கடவுளும் நாமும் சேர வேண்டும். பாவமும் புண்ணியமும் ஒன்றுசேர வேண்டும். இருளும் ஒளியும் ஒன்று சேர வேண்டும். ஆசானும் நாமும் ஒன்று சேர வேண்டும்.
     பல ஜென்மங்களில் செய்த பாவத்தால் நமது இருகரங்களும் கறைபட்டு இருக்கிறது. பல ஜென்மங்களில் பலரை அடித்தும், கொன்றும் இருப்போம். ஆகவே அந்த பாவங்கள் எல்லாம் பொடிப்பட்டு போக ஆசானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அந்த பாவத்தை எல்லாம் நீங்கள் மன்னிக்க வேண்டுமென்று கேட்க வேண்டும்.
கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்கு செய்தேன் அதுதீர்க்க வென்றே
நின்றேனின் சன்னான்திக் கேயத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றே உனைநம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே.
    மகான் பட்டினத்தார் – திருயேகம்பமாலை – கவி எண் 40
என்றார் மகான் பட்டினத்தார். ஆண்டவன் இரு கரங்களையும் கொடுத்தது, உன் திருவடியை பற்றுவதற்காகத்தான். நான் பாடுபட்டு இரு கரங்களால் உழைத்து, இரு கரத்தால் உண்டும், என் பிள்ளைகளுக்கும், மனைவி மக்களுக்கும், சான்றோர்களுக்கும் நான் உணவு தர இரு கரங்களையும் படைத்திருக்கின்றாய். மேலும் என் முயற்சியால் ஈட்டிய பொருளை என் கரங்களின் துணைகொண்டு ஈட்டிய பொருளை எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் என்னை நோக்கி வருகின்ற விருந்தினர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தான தருமம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட கரங்களை நான் தவறாக பயன்படுத்தியிருக்கிறேன். பல ஜென்மங்களில் அறியாமை காரணமாக நான் செய்த குற்றங்களை எல்லாம், பொறுத்துக்கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி வீழ்ந்து வணங்கினேன் என்பார். மேலும் மகான் பட்டினத்தார் சொல்வார், கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் – ஒன்றிரண்டு அல்ல. கொன்று கொன்று தின்றேன் – கொன்று என்று சொல்லாமல் கொன்று கொன்று தின்றேன் என்றார்.
அதன்றியும் தீங்கு செய்தேன் அதுதீர்க்க வென்றே
நின்றேனின் சன்னான்திக் கேயத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றே உனைநம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே.
     எத்தனையோ கோடானுகோடி ஜென்மங்களில் ஆண்டவன் இரு கரங்கள் கொடுத்திருக்கிறான். அந்த இரு கரங்கள் கொண்டு இருகரம் கூப்பி வணங்கியும், பொருள் ஈட்டியும், தானும் தன் மனைவி மக்கள் உண்டும், இரு கரங்கள் கொண்டு மக்களுக்கு பசியாற்றியும், கூப்பியும், குவிந்தும், வணங்கியும், ஆசிபெற்றுக்கொள்ள வேண்டும். ஆக வீழ்ந்து வணங்கவேண்டும். சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவேண்டும். உடம்பால் செய்த பாவம், கரங்களால் செய்த பாவம், நாவால் செய்த பாவத்தை எல்லாம் பொடியாக்கி அதிலிருந்து நீங்குவதற்கு ஆசானை வணங்கி ஆசிபெற்றுக் கொள்ளவேண்டும்.
     உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் எல்லாம் மேலும் மேலும் தொண்டு செய்து, பாவத்தை நீக்கி புண்ணியத்தை பெற்று ஆசான் அவர்களின் திருகடாட்சத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வருகின்ற சித்ரா பௌர்ணமியன்று 508 இலவச திருமணம் நடைபெறும். அது ஒவ்வொருதினமும் நூறு திருமணமாக ஐந்து நாட்கள் விழா நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இதெல்லாம் ஆசான் திருவருள்தான். ஆகவே அன்பர்கள் எல்லாம் தொடர்ந்து சலிப்பில்லாமல், களைப்பில்லாமல் தொண்டு செய்ய வேண்டும். நாம் இங்கே இருப்போம், அங்கே வரமுடியாது. ஆகவே அவரவர்கள் தம் சொந்த நிகழ்ச்சிபோல் எண்ணி செயல்பட வேண்டும். அவ்வாறு தொண்டு செய்யும்போது, ஆசான் பார்வை உங்கள் மீது படும். மகான் புஜண்ட மகரிஷியும், மகான் திருமூல தேவரும், மகான் காலாங்கி நாதரும், மகான் போக மகாரிஷியும், மகான் கருவூர் முனிவரும் உங்களைப் பார்ப்பார்கள். அவர்களுடைய திருகடாட்சமும் உங்களுக்கு கிடைக்கும். அவரவர்கள் முடிந்த அளவுக்கு தொண்டு செய்ய வேண்டும். நான் வந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.
     ஏழை எளிய மக்கள் பசியாறுகிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு திருமணம் நடக்கிறது. ஆகவே இந்த செம்மையான அறப்பணியை செம்மையாக செய்து, நீங்களும் ஆசானிடம் உமது திருவருள் கடாட்சத்தால் நடைபெறுகின்ற இந்த திருமணம், உன் ஆசி அனுகிரகத்தால் நடைபெறுகிறது அன்னதானமும், உமது ஆசி அனுகிரகத்தால் தொடர்ந்து செயல்படுகின்ற ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமும், நல்லபடி இருப்பதற்கும், அடியேன் அதை சார்ந்திருந்து தொண்டு செய்வதற்கும், தொண்டு செய்து ஆசிபெற நீர் அருள் செய்ய வேண்டும். இப்படி ஆசானை கேட்டும், நடக்கின்ற எல்லா நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு, வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தினால், ஞானிகளின் ஆசி கிடைக்கும், மரணமில்லாப் பெருவாழ்வு கிடைக்கும். அடுத்தது உங்கள் தொண்டை நாங்கள் அறிவோம். எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்கிறது. மேல் மாடியில் உள்ள குறையை இங்கிருந்தே தெரிந்து கொள்வோம். ஆக ஒவ்வொன்றையும் இங்கிருந்தே தெரிந்து கொள்வோம். அந்த வாய்ப்பை ஆசான் கொடுத்திருக்கிறார். ஆகவே உங்களைப்பற்றி நான் அறிந்து கொள்வேன். நீங்கள் மனமுவந்து தொண்டு செய்வதை அறிந்து கொள்வேன். நீங்கள் மனமுவந்து தொண்டு செய்வதை அறிந்து உங்கள் வாழ்க்கை முன்னேறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம். இன்று தலைவனைப் பற்றி பேசியிருக்கிறோம். தலைவனை வணங்குகின்ற முறையைப்பற்றி பேசியிருக்கிறோம். பாவத்தில் இருந்து விடுபடுகின்ற முறையை சொல்லியிருக்கிறோம். இதை கேட்பவர்கள் புண்ணியம் செய்த மக்கள் ஆவர். கேட்பவர்களுக்கு முன்செய்த வினை நீங்கி நல்வினை பெருகி ஞானிகள் ஆசி கிடைக்கும்.
    
    
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 700
Total Visit : 208608

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version