“அறம் செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கு நன்மை உண்டு” என்று திருவாசகத்தில் மகான் மாணிக்கவாசகர் மற்றும் வள்ளுவரும் அறம் செய்வதில் வழுவாது இருக்க வேண்டும் என்று அறன் வலியுறுத்தல் எனும் அதிகாரத்தில் அருளியுள்ளார்கள்.
தர்மம் சிறப்பையும், புகழையும் தரும். உயிருக்கு அறத்தை விட உயர்ந்த உபாயம் வேற எதுவும் இல்லை. இங்கு உடம்பை பற்றிக் கூறாமல் உயிருக்கு உபாயத்தைப் பற்றி கூறியிருப்பது ஏனென்றால் உடம்பிற்க்கு நரை,திரை, முப்பு உண்டு. இது உயிருக்கு கிடையாது. உயிர் குறுகாது, விரியாது, நலியாது, அழியாது. ஆகவே தர்மம் உயிருக்கு ஆக்கம் தரவல்லது. தர்மம் செய்யச் செய்ய தன்னைப் பற்றி அறியும் சிந்தையும், உலகைப் பற்றி அறியும் சிந்தையும், ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் அறியலாம் என்று ஞானகுரு, கலியுக ஞானி அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் மக்களுக்கு உபதேசித்து வருகின்றார். இளமை உள்ளபோதே அறப்பணி செய்ய வேண்டும். உடல் நலிந்து முதுமை அடையும் நாளில் துணை நிற்பதும், உதவுவதும் முன் செய்த அறமே ஆகும்.
“மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும்” என்றால் தர்மம், தடைபடாது செய்தும், ஞானிகள் மீது பக்தியும் செலுத்த வேண்டும். இந்த ஜென்மத்தில் செய்கின்ற புண்ணியம் தொடர்ந்து பல ஜென்மத்தில் உயிரைக் காக்கவல்லதாக இருக்கும். எனவே, அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தரவல்லது வேற எதுவும் இல்லை என்று முற்றுபெற்ற ஞானிகள் சொல்லிக் கொண்டே வருகின்றனர்.
– மகான் அரங்கர்